“நிரந்தரம் எழுதிக்கொண்டே இருக்கிறேன்!” – முக்தேவி பாரதியுடன் ஒரு நேர்காணல்

நேர்காணல் – ராஜி ரகுநாதன்

எழுத்தாளர் முக்தேவி பாரதியைப் பற்றிய அறிமுகம்

கேள்வி: அம்மா! உங்கள் சிறுவயது வாழ்க்கை, உங்கள் ஊர், பள்ளிப் படிப்பு பற்றி கூறுங்களேன்:

பதில்: நான் பிறந்தது 1940ல் கிருஷ்ணா ஜில்லாவில் ‘பெடனா’ என்ற கிராமம். அங்கு என் தாத்தா சப் ரிஜிஸ்ட்ரார் ஆக இருந்தார். ஆனால் நான் வளர்ந்தது படித்தது பள்ளி கல்லூரி திருமணம் எல்லாம் பந்தர் என்றழைக்கப்படும் மச்சிலிபட்டினத்தில்தான். என் தந்தை பந்தர் இந்துக் கல்லூரியில் லாஜிக் லெக்சரராக பணியில் இருந்தார். பந்தர் இந்து கல்லூரி அன்றிலிருந்து இன்றுவரை மிகப்பிரபலமானது. முதன்முதலில் தொடங்கப்பட்ட கல்லூரிகளில் அதுவும் ஒன்று.

என் பால்ய வயது பற்றி கூற வேண்டுமென்றால்… உண்மையில் அந்த நாட்களில்… தற்போது உள்ள குல மத வேறுபாடுகள் எங்களிடையே இருந்ததில்லை. அண்டை அயலில் அனைத்துவித தோழிகளும் நண்பர்களும் எங்களுக்கு இருந்தார்கள். சேர்ந்து விளையாடுவோம். எல்லோரும் வேறுபாடின்றி எங்கள் வீட்டுக்கு வருவார்கள். நாங்களும் எல்லோர் வீட்டிற்கும் சென்று வருவோம். அவர்கள் ஏதாவது கொடுத்தால் நாங்கள் சாப்பிடுவோம். எங்கள் வீட்டில் அவர்களும் சாப்பிடுவார்கள். வித்தியாசம் தெரியாமல் வளர்ந்தோம். அந்த காலம் அவ்வாறு அற்புதமாக கழிந்தது.

ஆனால் ஒரு சம்பிரதாயமான குடும்பத்தில் எங்கள் பாட்டி மாமா போன்றோர் நடுவில் நான் வளர்ந்தேன். என் மிகச் சிறு வயதிலேயே என் தந்தையார் மரணமடைந்தார். எங்கள் தாய்தான் பொறுப்புடன் எங்களை வளர்த்து ஆளாக்கினார்கள். அக்கா, அண்ணா, நான், என் தம்பி என்று நாங்கள் நால்வர். அப்போதெல்லாம் எங்களுக்கு பூ வைத்து தலை பின்னி விடுவார்கள். வெயிற்கால விடுமுறையில் மல்லிகை பூவைத்து ஜடை பின்னிக் கொள்ள எனக்கு மிகவும் பிடிக்கும். எங்களுக்கு மட்டுமல்ல. அண்டை அயலில் இருந்த என் தோழிகளுக்கும் அம்மா பூ வைத்து ஜடை தைத்து விடுவார். பட்டுப் பாவாடை கட்டிக்கொண்டு பூ ஜடையோடு புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பது அப்போதெல்லாம் மிகவும் பிடித்த விஷயம்.

அதோடு ‘அட்ல தத்துலு, உண்ட்ரால தத்துலு’ போன்ற தெலுங்கு பண்டிகைகளின் போது கைக்கு மருதாணி இட்டுக் கொள்வது என்பதாக எங்கள் இளமைப்பருவம் மிகவும் அற்புதமானதாக இருந்தது. தற்போது அவற்றைப் பற்றி நினைக்கும்போது இக்கால பிள்ளைகளுக்கு அத்தகைய ஆனந்தம் பற்றி எதுவுமே தெரியாமல் போயிற்றே என்று வருத்தமாக உள்ளது.

அதே போல் லீவு நாட்களில் சுற்றத்தார் பலரும் வீட்டுக்கு வருவார்கள். நாங்கள் சிறுமிகளாக இருந்தபோது, “இந்த சதகம் செய்யுளைச் சொல்லு. உனக்கு ரெண்டு பிஸ்கட் தருகிறேன்” என்று சொல்லி உற்சாகப்படுத்துவார்கள். அதற்காகவாவது செய்யுட்கள் எல்லாம் மனப்பாடம் செய்வோம்.

தற்கால பிள்ளைகளுக்கு அத்தகைய பாக்கியம் கிடைக்கவில்லை என்றே கூற வேண்டியுள்ளது. செல்போன் பால்யம், சினிமா பால்யம் தவிர இவர்களுக்கு வேறு உலகமே இல்லை போல் ஆகிவிட்டது.

பிறகு நான் பந்தர் இந்து உயர்நிலைப் பள்ளியிலும் இந்து கல்லூரியிலும் கல்வி பயின்றேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்த விஷயம் என்னவென்றால் நான் படித்தபோது எனக்கு அமைந்த ஆசிரியர்கள். இப்போதும் அவர்களுக்கு தலைவணங்கி நமஸ்கரிக்கிறேன். அப்பேற்பட்ட ஜாம்பவான்கள் அவர்கள்.

நான் உயர்நிலைப்பள்ளியில் கற்றபோது லட்சுமண சுவாமி அவர்கள் எனக்கு தெலுங்கு மொழி ஆசிரியராக இருந்தார். கல்லூரியில் இளங்கலை பயிலுகையில் சோடவரபு ஜானகி ராமையா அவர்கள், வேமூரு வேங்கடராமையா அவர்கள், குப்பா ஆஞ்சநேய சாஸ்திரி அவர்கள் – இவர் சிறந்த சமஸ்கிருத பண்டிதர்… இவர்களிடம் கல்வி கற்றது என் பெரும் பாக்கியம்.

படிக்கும்போது அவர்கள் எவ்வாறு சொல்லித் தருவார்கள் என்றால்… தேர்வுக்காக பாடம் நடத்தியவர்கள் அல்ல அவர்கள். இப்போது நான் கல்லூரியில் முப்பது ஆண்டுகள் வேலை செய்துள்ளேன். என்னிடம் எம்.ஏ, படித்த மாணவர்கள் தேர்வில் கேட்கும் முக்கியமான கேள்விகளை மட்டும் சொல்லித் தாருங்கள் மேடம் போதும் என்பார்கள். அதாவது அவர்களின் குறிக்கோள் தேர்வில் தேர்வடைவது மட்டுமே. கல்வித் தாகம் அவர்களிடம் இல்லை. கல்வியோ இலக்கியமோ அவர்களுக்கு இலக்கு அல்ல.

ஆனால் எங்கள் காலத்தில் அவ்வாறு அல்ல. உதாரணத்திற்கு… வசு சரித்திரத்தில் ஒரு பத்தோ இருபதோ செய்யுட்கள் பாட புத்தகத்தில் இருக்குமாயினும் எங்கள் ஆசிரியர்கள் முழு வசு சரித்திரம் புத்தகத்தையும் வாங்கி வரச்சொல்லி முழுமையாக கற்றுத் தருவார்கள். அதன் மூலம் மொழி மீதும் இலக்கியத்தின் மீதும் எங்களுக்கு பிடிப்பும் திறமையும் வளர்ந்தன. அது பிற்காலத்தில் மிகவும் உபயோகமாக இருந்தது.

எழுத்தாளர் முக்தேவி பாரதியுடன் (வலது) , ராஜி ரகுநாதான்

கேள்வி: உங்கள் திருமணம் பற்றி கூறுங்கள் மேடம்:

பதில்: என் திருமணம் 1960 ல் நடந்தது. என் கணவர் முக்தேவி லட்சுமண ராவ் அட்வகேட் ஆக இருந்தார்.

அவர் வக்கீலாக ஹைதராபாத்துக்கு வேலைக்கு வந்த போது எங்களுக்கு குழந்தைகள் பிறந்திருந்தார்கள். நான் பி.ஏ படிக்கையிலேயே திருமணம் நடந்தது. என் கணவருக்கு இலக்கியத்தில் மிகவும் விருப்பம். தொழில் ரீதியாக வக்கீலாக இருந்தாலும் அவர் மனம் இலக்கியத்திலிருந்தது. ஆங்கிலம், தெலுங்கு இரண்டு இலக்கியங்களையும் பேரார்வத்தோடு   படிப்பார். அதற்கு ஏற்ப அறிஞர்களும் கவிஞர்களும் இலக்கியவாதிகளும் அவருக்கு நண்பர்களாக அமைந்தார்கள்.

நான் எம்.ஏ படிக்க வேண்டும் என்று விருப்பப்பட்ட போது உற்சாகத்தோடு ஊக்கமளித்தார். உஸ்மானியா யுனிவர்சிடியில் சேர்ந்த எம்.ஏ படித்தேன். பிஏ பாஸ் ஆகி பத்து ஆண்டுகள் கழித்து கல்லூரியில் சேர்ந்து எம்ஏ படித்தேன். அப்போது பந்தர் ஹிந்து உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் பெற்ற கல்வியறிவு வெகுவாக பயன்பட்டது. எம்.ஏயில் முதல் வகுப்பில் தேறினேன்.

எனக்கு அமைந்த ஆசிரியர்கள் மிகச் சிறப்பானவர்கள். திவாகர்ல வேங்கட அவதானி அவர்கள், கந்தவல்லி லக்ஷ்மி ரஞ்ஜனம் அவர்கள், சி. நாராயணரெட்டி அவர்கள் போன்றோரிடம் படித்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இன்றளவும் அவர்களை வணங்கித் தொழுகிறேன். அந்த ஆசிரியர்கள் அளித்த கல்வியறிவும் இலக்கியமும் இன்றைக்கு என்னை ஒரு இலக்கியவாதியாகவும் பல்வேறு இலக்கிய துறைகளில் புகழுடனும் விளங்குகிறேன் என்றால்… அதற்கு அவர்களுக்கு நான் தலைகுனிந்து வணங்கி கொண்டே இருக்கிறேன்.

கேள்வி: உங்கள் வீடு பற்றி கூறுங்கள் மேடம்.

பதில்: நான் கல்லூரியில் சேர்ந்து எம்.ஏ படித்து போது என் தாயார் சில ஆண்டுகள் எங்களோடு தங்கி என் குழந்தைகளை கவனித்துக் கொண்டார். குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்தபின் என் தாயார் என் சகோதரர்களின் இல்லங்களுக்குச் சென்றார். அப்போது குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வருவதில் சிரமம் எதுவும் இருந்ததில்லை. மேலும் என் கணவர் வக்கீலாக இருந்ததால் காலை 10 முதல் மாலை 5 வரை என்றில்லாமல் மாலை 3 மணிக்கே கூட வீட்டுக்கு வந்து விடுவார். அவர் மாலையில் சீக்கிரம் வந்துவிடுவதால் குழந்தைகள் பற்றிய திகில் எனக்கு இல்லாமல் இருந்தது.

தற்போது ஐம்பது, அறுபது  ஆண்டுகால கால வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும்போது வியப்பாக உள்ளது. அப்போது நானேதான் சமையலறை வேலைகளைச் செய்து கொண்டேன். தற்போது போல் சமையலுக்கு ஆள் வைத்துக் கொள்வது எல்லாம் அப்போது இல்லை. காலையில் எழுந்து சமையல் செய்வது குழந்தைகளை கவனிப்பது கல்லூரிக்குச் சென்று வருவது மாலை என் குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுப்பது என்று என் வேலைகளை நானேதான் பார்த்துக் கொண்டேன்.

குழந்தைகள் எல்லோரும் உறங்கியபின் விடியற்காலையில் எழுந்து டைனிங் டேபிள் மேல் நோட் புக்கை வைத்து கதைகள் எழுதுவேன். யாருக்கும் எந்த தொந்தரவும் இருந்ததில்லை. வேறு நேரம் எனக்கு கிடைக்காது. விடுமுறை நாட்களிலும் என் கணவருக்கு கிளையன்ட் வருவதும் உறவினர் நண்பர் என்றும் எப்போதும் வீடு நிறைய யாராவது மனிதர்கள் இருப்பார்கள். அதற்காக என் இலக்கிய தாகம் நின்று விடவில்லை.

1940ல் பிறந்தேன். 1960ல் என் முதல் தெலுங்கு கதை பிரசுரமானது. பந்தரிலிருந்து வெளியான ‘தெலுகு வித்யார்த்தி’ என்ற பத்திரிகையில் வெளியானது. அந்தக் கதையின் பெயர் ‘செல்லாயி பெள்ளி’ அதாவது ‘தங்கையின் திருமணம்’. தற்போது நான் 300க்கு மேல் சிறுகதைகள் எழுதி விட்டேன். சிறுகதை தொகுப்புகள் இதுவரை பத்து வெளிவந்துள்ளன. அத்தம்லோ அம்மா, தர்மகண்ட மோகது, மேடம் கதலு, முக்தேவிபாரதி கதலு, போன்ற வால்யூம்கள் இதுவரை பத்து வரை பிரிண்ட் ஆகி உள்ளன. அதைத் தவிர இன்று வரை எத்தனையோ அவ்வப்போது எழுதிக்கொண்டே இருக்கிறேன். இடைவிடாமல் எழுதிக்கொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு முறை எனக்குத் தோன்றும். ஏன் இத்தனை இலக்கியப் பித்து? என்று. ஆனால் மகாகவி ஸ்ரீஸ்ரீ கூறியதைப்போல கவித்துவம் ஒரு தீராத தாகம். கலையோ இலக்கியமோ கவிதையோ அது ஒரு முறை ஆரம்பித்தால் நிற்பதில்லை. நம்மை நிற்க விடாமல் முன்னுக்கு நெட்டிக் கொண்டே இருக்கும். அதுபோல் நான் சிறுகதை இலக்கியத்தில் மிகவும் உற்சாகம் கொண்டவளாக இன்றுவரை இருக்கிறேன்.

கேள்வி: காதல் கதைகள் எழுதி உள்ளீர்களா?

பதில்: (சிரிப்பினூடே பதில் கூறுகிறார்) ஆமாம், எழுதியுள்ளேன். ‘பாரதம்லோ பிரேம கதலு’ (மகாபாரதத்தில் காதல் கதைகள்) என்ற தொடர் எழுதி உள்ளேன். நானும் என் கணவர் முக்தேவி லக்ஷ்மண ராவும் சேர்ந்து எழுதினோம். அது  ஓராண்டுக்கு மேல்  செய்த முயற்சியால் விளைந்தது. எங்கள் இருவருக்கும் அவரவர் உத்தியோகம் இருந்தது. லீவு நாட்களிலோ மாலை நேரங்களிலோ விடியற்காலையில் எழுந்தோ மகாபாரதத்தில் தேடித்தேடி எழுதினோம். நிறைய பேர் நினைத்தார்கள்… நாங்கள் எழுதிய பிரேம கதைகள் மகாபாரதத்தில் கதைகளாக அப்படியே இருந்தன என்று. அதை எடுத்து எழுதி விட்டோம் என்று எண்ணினார்கள். அப்படியல்ல. சில கதைகள் மட்டும் மகாபாரதத்தில் கதை வடிவில் கிடைக்கின்றன. மீதி ஒரு சில கதைகள் நிகழ்வுகளாக அல்லது ஒரு சொற்றொடராக கோடி காட்டப்பட்டிருக்கும். அவற்றை வைத்து கற்பனை வளத்தோடு கதையை உருவாக்கினோம். ஓராண்டுகாலம் ஆந்திர பிரபா பத்திரிக்கையில் சீரியலாக வெளிவந்தது. வாராவாரம் ஒரு கதை வெளிவந்தது. பின்னர் நியூபாரதி பதிப்பகத்தார் புத்தகமாக வெளியிட்டனர். அதனை சாந்த சுந்தரி என்ற புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர் ஹிந்தியில் மொழி பெயர்த்தார். ஹிந்தி வார்த்தா என்ற பத்திரிக்கையில் வாரா வாரம் வெளிவந்தது. பின்னர் புத்தகமாகவும் வந்தது. அந்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் என் ஆசிரியர் திரு நாராயண ரெட்டி அவர்கள் அதனை வெளியிட்டு இவ்வாறு கூறினார், பாரதி வாங்மி. அதாவது இலக்கியவாதி. அவர் கணவர் வாதி. அதாவது அட்வகேட் என்று புகழ்ந்தார். இவர்கள் இருவரும் இலக்கிய தம்பதிகள் என்று என்று வாழ்த்தினார். அதனை நான் எப்போதும்  மகிழ்ச்சியோடு நினைவு கூறுவது வழக்கம். இத்தனை காதல் கதைகள் மகாபாரதத்தில் உள்ளனவா என்ற கேள்வி எழும். காதல் என்றால் இன்றைய முதிராக்காதல் அல்ல. என்னைக்  காதலிக்காவிட்டால் ஆசிட் ஊற்றுவேன் என்று மிரட்டும் காதல் அல்ல அவை. இன்றைய காதல் காதலே இல்லை. சுயநலம். கணநேர ஆவேசத்தில் முடிவெடுப்பது அல்ல காதல் என்பது. அது  உத்வேகம். காமம். பிரேமையல்ல.

உண்மையான பிரேமைக்கு உதாரணமாக அந்த 40 கதைகளுள் ஒன்றிரண்டு கூறுகிறேன். ‘பிரமத்வரா – ருரு’ கதை உள்ளது. தன் காதலி பிரமத்வரா பாம்பு கடித்து இறந்து விடுகிறாள் என்றறிந்து தன் ஆயுளில் பாதியைக் கொடுத்து உயிர்ப்பிக்கிறான் ருரு. காதல் உண்மையானது, சத்தியமானது என்பதை நிரூபிக்கிறது இந்த கதை. இந்தக் கதையை தற்கால இளைஞர்கள் படித்தால் சிறிதளவாவது காதலின் உண்மைத் தன்மையை உணர்வார்கள் அல்லவா? காதல் என்பது உடல் சம்பந்தப்பட்டதல்ல. உள்ளம் சம்பந்தப்பட்டது. அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று இளைஞர்கள் உணர வேண்டும். அதேபோல் காந்தாரியின் காதல் பற்றியும் அதில் எழுதி உள்ளோம். காந்தாரிக்கு காதல் எங்கே உள்ளது என்று பலர் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். காந்தாரி ராஜகுமாரியாக இருக்கையில் பீஷ்மரிடம் இருந்து அவளைப் பெண் கேட்டு வருகிறார்கள். அவர்கள் ஒரு சித்திரப் படத்தை காண்பிக்கிறார்கள். அவள் தந்தை அதைப்  பார்க்கிறார். இதையெல்லாம் கதவு மறைவிலிருந்து காந்தாரி கவனிக்கிறாள். இந்தப் படத்தில் உள்ள இளவரசன் சிறந்தவன். பலவான். அரசாளக் கூடியவன். நூறு குழந்தைகளைப் பெறுவான் என்று எடுத்துக் கூறுகிறார்கள். காந்தாரி மகிழ்ச்சியில் மிதக்கிறாள். ஆகா! இத்தனை உயர்ந்த அரசிளங்குமரன் என் கணவனாக போகிறார் என்று ஆனந்தம் அடைகிறாள். அவள் உள்ளம் அவனைக் கணவனாக வரித்து விட்டது. அவள் தோழிகள் அரச சபையில் மேலும் நடந்த விஷயங்களை அவளிடம் வந்து தெரிவிக்கிறார்கள். “அம்மா! ஒரு துயரமான செய்தி. அந்த அரசகுமாரன் பிறவிக் குருடன்”. உடனே தன் புடவைத் தலைப்பால் தன் கண்களை மறைத்துக் கொள்கிறாள் காந்தாரி. இதுதான் காதல் என்பது. உள்ளத்தைக் கொடுப்பதுதான் பிரேமை. பின்னர் அவள் அண்ணனும் பெற்றோரும் இந்த மண ஒப்பந்தம் வேண்டாம் என்று எத்தனை எடுத்துச் சொன்னாலும் அவள் கேட்கவில்லை. “என் மனதில் திருதராஷ்டிரனை என் கணவனாக ஏற்று விட்டேன். அவன் குழந்தைகளுக்கு என்னைத் தாயாக ஊகித்துக் கொண்டு விட்டேன்” என்று தீர்மானமாக கூறிவிடுகிறாள். காந்தாரி தன் 100 மகன்களையும் ஒரு மகளையும் தன் கண்களால் பார்க்கவே இல்லை. நாம் இன்று யோசித்துப் பார்க்கையில், “எதற்காக ஒரு குருடனை நான் மணக்க வேண்டும்? நானும் ஒரு அரசகுமாரி தானே!” என்று அவள் திருமணத்தை ஏற்காமல் இருந்திருக்கலாமே என்று தோன்றும். ஆனால் நான் கணவராக மனதால் வரித்துவிட்டவருக்கு உலகைப் பார்க்கும் வாய்ப்பு இல்லாத போது எனக்கு எதற்கு அந்த பாக்கியம் என்று எண்ணுகிறாள். கணவரோடு மனம் ஒன்றி விடுவது என்பது தாம்பத்திய தர்மம், பதிவிரதை தர்மம். பாரத நாட்டு ஹிந்து சித்தாந்தம் எத்தனை உயர்ந்தது என்று சுட்டிக் காட்டுவதற்காகவே  காந்தாரியின் திருமணத்தை, காதலை எடுத்து எழுதி அதில் சேர்த்தோம்.

அதேபோல் அர்ஜுனன் தீர்த்த யாத்திரையான விஜய் விலாச காவியத்தில் உலூசி என்ற நாக கன்னிகை இருக்கிறாள். அந்தப்  பெண் இந்த மகாவீரனின் கதையை யார் மூலமாகவோ கேட்டறிந்துள்ளாள். அத்தகைய வீரன்,  மத்ஸ்ய யந்திரத்தை வென்று திரௌபதியை மணம் புரிந்தவன் என்ற விவரம் எல்லாம் அறிந்தவள். அழகன், சிறந்தவன் என்று பூலோகத்திற்கு வந்து சென்ற நாகங்கள் கூற உலூசி கேட்கிறாள். அவனை நான் எப்படிப் பார்ப்பேன் என்று தவிக்கிறாள்.

ஒருமுறை அர்ஜுனன் தீர்த்த யாத்திரை செல்கையில் ஒரு நதி தீரத்தில் தவம் செய்கிறான். விரும்பிய உருவம் எடுக்கும் திறன் உள்ள அந்த நாக கன்னிகை பிறர் கண்ணிற்குத் தெரியாமல் வந்து அர்ஜுனனைக் காண்கிறாள். உடனே தன் மனம் கவர்ந்த மணாளனைக் கவர்ந்து செல்ல விழைகிறாள். அப்படியே அவனை அள்ளி எடுத்துக்கொண்டு பாதாள லோகத்திற்கு சென்று விடுகிறாள். அவன் கண் திறந்து பார்த்து வியக்கிறான். தான் இருப்பது எவ்விடம் என்று கேட்கிறான். அவள் தன் பிரேமையை விவரித்து அவன் தன்னை மணம் புரிய வேண்டுகிறாள். அவன் மறுத்தாலும் நீ இல்லாமல் உயிர் தரியேன் என்று கூறுவதால் மணக்கிறான். ஒரு மகனும்  பிறக்கிறான். “நான் செல்ல வேண்டும். எனக்கு கடமை இருக்கிறது. என்னைக் கேட்காமல் பலவந்தமாக என்னை எடுத்து வந்தாய்” என்கிறான் அர்ஜுனன். இங்கு உலூசியின் காதல் சிறப்பை நாம் காண வேண்டும். அவனை அவள் தடுக்கவில்லை. “பிள்ளையை வளர்த்தபடி மகிழ்ச்சியாக வாழ்ந்து விடுவேன். இது போதும் எனக்கு. சென்று வா!” என்று மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைக்கிறாள். இந்த நாகரீக உலகில் இப்படிப்பட்ட பிரேம கதைகள் எதற்கு பயன்படும் என்றால் பவித்திரமான காதலை இவை எடுத்துரைக்கின்றன. காதலுக்கு பலவித வக்கிரமான அர்த்தங்களைச் சித்தரிக்க வேண்டாம் என்று இந்த கதைகள் எச்சரிக்கின்றன. எங்கள் நண்பர்கள் பலர் தங்கள் உறவினர்களின் திருமணங்களின் போது மகாபாரதத்தில் பிரேம கதைகள் நூலை மணமக்களுக்கு அன்பளிப்பாக அளித்து மகிழ்ந்தார்கள். அது ஒரு சிறந்த மறக்கமுடியாத அனுபவம்.

கேள்வி: எப்போதிலிருந்து கதை எழுத ஆரம்பித்தீர்கள்?

பதில்: சிறுவயதிலிருந்தே அதிகமாக படிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. என் வீட்டுக்கு மிக அருகில் முனிமாணிக்க நரசிம்மராவு அவர்களின் வீடு இருந்தது. அவர் காந்தம் கதைகள் என்ற நூல் எழுதியுள்ளார். அந்நாட்களில் மல்லாதி ராமகிருஷ்ண சாஸ்திரி அவர்கள் சினிமாப்  பாடல்களும் கதைகளும் எழுதும் எழுத்தாளர். எங்கள் ஊரான பந்தரைச் சேர்ந்தவர். இது மட்டுமின்றி நான் சிலகமர்த்தி அவர்களின் இலக்கிய நூல்களைப் படிப்பது வழக்கம். கந்துகூரி வீரேசலிங்கம் போன்ற பெரியவர்களின் நூல்களை விரும்பிப் படிப்பேன். கொஞ்சம் என் வயது வளரவளர ஸ்ரீபாத சுப்ரமணிய சாஸ்திரிகள் நூல்கள் படிப்பது… இவ்வாறு கதைகளும் இலக்கியமும் மனதில் படிந்து போயின.

இப்போது நான் இன்றுள்ள நிலையில் ஏதாவது ஒரு கதை எழுதித் தாருங்கள் என்று நீங்கள் என்னிடம் கேட்டால் ஒரு அரை மணியில் நல்ல கதை ஒன்று என்னால் எழுத முடியும். இதனை பெருமைக்காக கூறவில்லை. அதாவது கதை எப்படி எழுதுவது என்ற கலை எனக்கு கை வந்துவிட்டது. எப்படி எழுத வேண்டும் என்ற டெக்னிக் எனக்கு புரிபட்டுவிட்டது. மகாபாரதத்தில் பிரேம கதைகள் என்று நாற்பதுக்கு மேல் ஓராண்டு காலம் எழுதிய பயிற்சி இதற்கு துணை செய்தது. அதோடு எத்தனையோ வார மாத பத்திரிகைகளில் பலப்பல கதைகள் எழுதி உள்ளேன். அப்போதெல்லாம் ஒரு பத்திரிக்கை விடாமல் என் கதைகள் பிரசுரமாயின.

அதாவது கதை எழுதுவதில் ஒரு விஷயம் என்னவென்றால்… பொதுவாக உண்மையில் நடக்கும் விஷயங்களையே நான் கதையாக எழுதுகிறேன். என் கண் முன்னே பார்ப்பவை, சமுதாயத்தில் நடப்பவற்றையே நான் எழுதுகிறேன்.

நான் எழுதிய முதல் கதை ‘செல்லாயி பெள்ளி’ (தங்கையின் திருமணம்). எழுத்தாளர் வாசிரெட்டி சீதாதேவி எனக்கு சிறந்த தோழி. சிறந்த எழுத்தாளர். அவர் எப்போதும் கூறுவார், “செல்லாயி பெள்ளி கதையை எழுதிய போது உனக்கு 18 வயது கூட இருக்காது. அந்த சின்ன வயதில் கல்லூரியில் படிக்கும்போது காதல் கதைகள் எழுதுவார்கள் எல்லோரும். நீ என்னடாவென்றால்… இத்தகைய சமூக சீர்திருத்தக் கதை எழுத வேண்டும் என்ற உணர்வு எவ்வாறு தோன்றியது?” என்று கேட்பார்.

அது உண்மையில் நடந்த கதை. என்னோடு பத்மா என்ற பெண் பத்தாம் வகுப்பு வரை படித்து வந்தாள். அந்த காலத்தில் பத்தாவது படித்த உடனே திருமணம் செய்து விடுவார்கள். பத்மாவுக்கும் அவ்வாறே நடந்தது. அவள் விதி சதி செய்ததால் அவள் கணவன் இறந்து போனான். வீட்டில் அவள் அண்ணன் கொஞ்சம் புரட்சிகரமான எண்ணம் கொண்ட தற்காலத்தவன். யாராவது தன் நண்பர்களையோ அல்லது மனைவியை இழந்தவர்களையோ தேடி தன் தங்கைக்கு மறுமணம் செய்ய வேண்டும் என்று தந்தையிடம் மன்றாடினான். தந்தை மட்டும் சமுதாயக் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துவராது என்று கூறி மறுத்துவிட்டார். அண்ணன் தங்கைக்கு திருமணம் செய்யாமல் தான் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டான். காலம் கடந்து கொண்டிருந்தது.  தங்கை அண்ணனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள். “அண்ணா! நீ எத்தனை பிரயத்தனம் செய்தாலும் எனக்கு திருமணம் நடப்பதை இந்த சமுதாயம் ஒப்புக் கொள்ளாது. தந்தையும் அங்கீகரிக்க மாட்டார். நீயாவது திருமணம் செய்துகொண்டு சுகமாக இரு. ஆயினும், திருமணம் மட்டுமே முக்கியமான நிகழ்வு அல்ல. இன்னும் எத்தனையோ உள்ளன. என்னை இப்படியே இருக்க விடு” என்று எழுதுகிறாள் என்று கதையை முடித்தேன். இது ‘தொலி தெலுகு கதலு’ (முதல் தெலுங்கு கதைகள்) என்ற வாரப் பத்திரிக்கையில் முதல் கதையாக வெளிவந்தது.

கேள்வி: இலக்கிய சேவையாக கதைகள் எழுத ஆரம்பித்தபோது உங்களை உற்சாகப்படுத்தியவர்கள் யார் யார்?

பதில்: என் கணவர் மிகவும் உற்சாகப்படுத்துவார். கதை கதை என்று ஏன் டைம் வீணடிக்கிறாய்? எதற்கு இதெல்லாம் வீண்வேலை? என்றெல்லாம் ஒரு நாள் கூட மறுத்தவரில்லை. வீட்டில் என் தாயாரும் என் குழந்தைகளும் கூட மிகவும் சந்தோஷப்பட்டார்கள். “அம்மா இலக்கியம் படிக்கிறார் இலக்கியம் எழுதுகிறார்” என்று பெருமையாக எண்ணினார்களே தவிர, கல்லூரிக்கு ஏன் செல்கிறாய்? ஏன் எழுதுகிறாய்? என்று வீட்டில் என்னை யாருமே தவறாகப் பேசவில்லை. என் தோழிகள் கூட யாருமே இது பற்றி தவறாக விமர்சித்தது இல்லை. என் கதை ஏதாவது பத்திரிக்கையில் வெளி வந்தால் உடனே அதை மெச்சிக் கொண்டு என்னைப் பாராட்டுவார்கள். நன்றாக எழுதியுள்ளாய் என்று உற்சாகப்படுத்துவார்கள். இவையெல்லாம் எனக்கு மேலும் எழுத வேண்டும் என்ற ஊக்கத்தை அளித்தன. கண்டுகொள்ளாமல் இருப்பது, அலட்சியப்படுத்துவது போன்றவை என் வாழ்க்கையில் நிகழவில்லை.

கேள்வி: நீங்கள் அனுப்பிய கதைகள் உடனே பிரசுரமாயினவா? திரும்பி வந்த அனுபவம் கூட உள்ளதா?

பதில்: நிறைய உடனே உடனே பிரசுரமாயின. அது எனக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது. ஆரம்ப காலங்களில் சில திரும்பி வந்தன. அப்போதெல்லாம் சுய விலாசமிட்ட ஸ்டாம்ப் ஒட்டிய கவர்கள் அனுப்பி வந்தோமல்லவா? அவற்றில் சில அனுப்பிய 15 நாட்களில் திரும்பி வந்தவையும் உள்ளன. அவற்றை மீண்டும் படித்து எங்கே சரியாக எழுதவில்லை என்பதை ஆராய்ந்து சரியாக எழுதி வேறு ஒரு பத்திரிகைக்கு அனுப்புவேன். அவற்றில் வெளிவந்துவிடும்.

உரையாடல் சரியாக இல்லையா? முடிவு சரியாக இல்லையா? ஏன் ஏற்கப்படவில்லை? என்று யோசித்து சரி செய்து அனுப்புவேன். சில சமயம் ஏமாற்றமாக இருக்கும். ஐயோ! இத்தனை நல்ல கதையை திருப்பி அனுப்பி விட்டார்களே என்று வருந்துவேன். ஆனாலும் உற்சாகத்தை இழக்காமல் முன்னோக்கி முன்னேறிக் கொண்டே இருந்தேன். வீட்டில் அதற்காக யாரும் என்னை கிண்டல் செய்தது இல்லை. ஊக்கப்படுத்துவார்கள். அது என் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். இன்றைக்கு முன்னூறுக்கும் மேல் சிறுகதைகள் எழுதி உள்ளேன்.

கேள்வி: நேராக எழுதி விடுவீர்களா? ரஃப் காப்பி, ஃபேர் காப்பி என்று இருமுறை எழுதுவீர்களா?

பதில்: இப்போது நேரடியாகவே எழுதிவிடுகிறேன். ஆரம்ப காலங்களில் முதலில் ரஃப்பாக எழுதி அடித்தல் திருத்தல் எல்லாம் செய்து பின்னால் நல்லபடி எழுதி அனுப்புவேன். ஆனால் தற்போது பல ஆண்டுகளாக நேரடியாக ஒரே தடவையில் எழுதி அனுப்புகிறேன்.

கேள்வி: எந்த நேரத்தில் எழுதுவீர்கள் அம்மா?

பதில்: நான் கல்லூரியில் எம்ஏ., பிஹெச்டி படித்துக் கொண்டிருந்த போது எனக்கு திருமணமாகி குழந்தைகள் இருந்தார்கள். விடிகாலையில் எழுந்து படிப்பதும் எழுதுவதும் என் வழக்கம். அச்சமயத்தில் எல்லோரும் உறங்குவதால் வீடு அமைதியாக இருக்கும். அதே போல் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றபின் வீட்டில் தனியாக இருக்கும்போது எழுதுவேன். வீடு பிரசாந்தமாக இருக்கும் நேரம் என் இலக்கிய வேலைகளுக்கு ஏற்ற நேரம். ஒரு கதை எழுத வேண்டும் என்று தோன்றினால் அதை பேப்பரில் எழுதுவதற்கு முன் பல நாட்கள் மனதில் சுற்றிக்கொண்டே இருக்கும். கதையை எழுதுவதற்கு அரை மணி நேரமே பிடித்தாலும் அதற்கு முன் கதை மனதில் எண்ண அலைகளாக தோன்றிக் கொண்டே இருக்கும்.

நான் ‘தர்ம கண்ட மோகது’ (தர்ம மணி ஒலிக்காது) என்று ஒரு கதை எழுதினேன். சிறுவயதில் நாம் கேட்டுள்ளோம்… அரண்மனை வாயிலில் ஒரு பெரிய மணி இருக்கும். அதன் பெயர் ‘தர்ம மணி’. யாராவது அதர்மம் நிகழ்ந்துவிட்டது என்று புகார் செய்வதற்கு அதை அடிப்பார்கள். அவரை உள்ளே அழைத்து விசாரிப்பார்கள் என்று கேட்டுள்ளோம். ஒரு நாள் ஒரு கழுதை வந்து அந்த மணியை அடித்தது. கழுதையை அழைத்து அரசன் என்ன பிரச்சினை என்று விசாரித்தபோது “எனக்கு வயதாகிவிட்டது. என் உடலில் தெம்பு இருக்கும் போது என் எஜமானன் என்னை நன்றாகவே வேலை வாங்கினான். மூட்டை தூக்கி உழைத்து நடந்து நடந்து தளர்ந்து மெலிந்து விட்டேன். இப்போது எனக்கு வயதாகிவிட்டது. ஆகாரம் கொடுக்காமல் துரத்தி விடுகிறான்” என்றது. அரசன் அந்த வண்ணானை அழைத்து, “கழுதை தன் சக்தி அனைத்தையும் உனக்கே செலவழித்தது. நாளை உனக்கும் வயதாகாதா? இவ்வாறு அதர்மம் செய்யாதே!” என்று சொல்லி கழுதைக்கு உணவளிக்கும்படி கட்டளையிட்டு அனுப்புகிறான். இந்த கதையை ஏன் எழுதினேன் என்றால் இதற்கு மூலம் ஒன்று உண்டு. என் வீட்டருகில் ஒரு பெண்மணி இருந்தாள். அவளுக்கு ஒரு மகன் இருந்தான். அவர்களுக்கு ஒரு வயதான வேலைக்காரன் உதவி செய்து வந்தான். குப்பையெல்லாம் அள்ளி வெளியே கொட்டி வந்தான். சிறிது காலம் சென்ற பின் அந்த வீதிக்கு   மணி அடித்துக்கொண்டு குப்பை அள்ளிச் செல்லும் வண்டி வந்தது. அதன் மூலம் அந்த கிழவனுக்கு ஆனந்தம் ஏற்பட்டது. ஏனென்றால் வீதி மூலை வரை குப்பையை தூக்கிச் செல்ல வேண்டியதில்லை. அதேபோல் வீட்டுப் பெண்மணிக்கும் ஆனந்தம். வயதான வேலையாளை விட  குறைந்த கூலிக்கே குப்பையை எடுத்துச் செல்ல ஒப்புக் கொண்டான் வண்டிக்காரன். வேலையாளுக்கு வயதாகிக் கொண்டே வந்தது. சரியாக குப்பையை அள்ளுவதில்லை. அவனை வேலையை விட்டு நீக்கி விட்டாள். ஆனால் இன்டர்மீடியட் படிக்கும் அந்த பெண்மணியின் மகன் இதை கவனித்து வருகிறான். சமுதாயத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் அது இளைஞர்களிடம் இருந்தே தொடங்கவேண்டும். கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு, குரஜாட அப்பாராவு போன்றவர்களும் இதையே கூரிவந்தார்கள். புரட்சிகளைக் கொண்டு வந்தார்கள். வயதான வேலைக்காரனைப் பற்றி அந்த பையன் தாயிடம் விசாரித்தான். “அவனுக்கு வயதாகிவிட்டது சரியாக வேலை செய்வதில்லை நீக்கிவிட்டேன்” என்று தாய் பதிலளித்தாள். மகனுக்கு வருத்தமும் கோபமும் ஏற்பட்டது. அந்த வயதானவனைத் தேடி புறப்பட்டான் அவன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பது தெரிந்தது. வீட்டிலிருந்து புதிய போர்வை ஒன்றை தாயின் மறுப்பைப் பொருட்படுத்தாமல் எடுத்துச் சென்று அவனுக்கு கொடுத்துவிட்டு திரும்பி வந்தபின் தாய்க்கு ‘தர்ம மணி’ கதை சொல்ல வேண்டும் என்று நினைத்தான். ஆனால் இவன் மருத்துவமனைக்குச் செல்வதற்குள் அந்த வயதானவன் மரணித்துவிட்டான். போர்வையை திரும்ப எடுத்து வந்து தாயிடம் கொடுத்து, ‘இனி தர்ம மணி ஒலிக்காது’ என்றான். அந்த சிறுவனுக்கு எத்தனை விவேகம் பாருங்கள். அவனுக்கு ஏன் அந்த வயதானவன் மேல் அன்பு என்றால் சிறு வயதிலிருந்தே அவனைத் தோளில் தூக்கி பள்ளிக்கு அழைத்துச் சென்றவன் என்ற மனிதாபிமானம். தற்போது முதுமை என்பது பெரிய பிரச்சனையாகிவிட்டது. ஏழையாயினும் செல்வந்தராயினும் இது பெரிய பிரச்சனையே! நிறைய பேரைப் பார்க்கிறோம். ஏன் முதியோர் இல்லத்தில் வசிக்கிறார்கள் என்று தோன்றும். அங்கு வந்து சேருபவர்கள் பெரிய பெரிய உத்தியோகம் பார்த்தவர்கள், செல்வந்தர்கள், சமுதாயத்தில் உயர் பதவி வகித்த கௌரவம் மிக்கவர்கள்… போய்ப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. இப்படிப்பட்ட சமுதாய நீதியை எடுத்துக் கூறுவதற்காக தர்ம மணி ஒலிக்காது என்ற கதையை எழுதினேன்.

கேள்வி: சம்பவங்களை கதைகளாக எப்படி உருமாற்றுவீர்கள்?

பதில்: ஒரு சம்பவத்தைப் பார்க்கும்போது… உதாரணத்திற்கு நான் ஒரு கதை எழுதினேன். ‘பால் டம்பளர்’ என்று. நம் வீடுகளில் சாதாரணமாக வேலை செய்பவர்களுக்கு ஒரு கப் தேநீர் கொடுப்போம். அவ்வளவுதான். வேறு ஏதாவது சாப்பிடக் கொடுப்பது எப்போதாவது நிகழும். ஆனால் வேலை எல்லாம் முடித்தபின் அம்மா என்றழைத்தால் டீ போட்டு கொடுப்போம். ஒரு வீட்டில் ஒரு சிறுமியை வேலைக்கு அமர்த்தினார்கள். பத்து வயதிருக்கும். சின்னப் பாவாடையும் தாவணியும் அணிந்து வந்தாள். பாத்திரம் தேய்த்து துணி துவைப்பாள். வீட்டு எஜமானி டீ கொடுக்க வந்தபோது அந்தச் சிறுமி, “அம்மா! நான் டீ குடிப்பதில்லை. பால்தான் குடிப்பேன்” என்கிறாள். எஜமானிக்குக் கோபம். பால் தர மறுத்து விடுகிறாள். வீட்டுக்காரர், “போனால் போகிறது. கொடு. சின்னக் குழந்தை” என்று சிபாரிசு செய்கிறார். அவள் கேட்கவில்லை. மகன் கூறுகிறான். ஆனாலும் கேட்கவில்லை. “சரி போ! அவளை வேலையை விட்டு நீக்கி விடலாம். பால் கொடுக்கும் வீடாகப் பார்த்து அவள் வேலை தேடிக் கொள்வாள்” என்று வீட்டுக்காரர் கூறுகிறார். வேறு வழியின்றி எஜமானி பால் கொடுக்கிறாள். இரண்டு மாதம் கழித்து அந்த பெண் இரண்டு டம்பளர்களை கழுவிக் கவிழ்த்து விட்டு, எஜமானியிடம், “அம்மா! நான் போகிறேன்” என்கிறாள். அவள் தாழ்த்தப்பட்ட குடும்பத்துப் பெண். பள்ளி விடுமுறையில் இரண்டு மாதம் வேலை செய்ய வந்தவள் நோட்டுப் புத்தகம் வாங்க பணம் தேவை என்பதால். லீவு முடிந்து தன்   தலித் ஹாஸ்டலுக்கு படிக்கச் செல்ல வேண்டும் என்று கூறுகிறாள். இரண்டு டம்ளர் ஏது என்றால், எஜமானியின் சிறிய மகன் தன் ஒரு டம்ளர் பாலையும் அவளுக்குக் கொடுத்து விடுவான் தினமும். “நான் தான் தினமும் போர்ன்விடா குடிடுக்கிறேனே, நீ குடி!” என்று அம்மாவுக்குத் தெரியாமல் கொடுத்துவிடுவான். சிறுவர்களுக்கு எத்தனை மனிதாபிமானம் பாருங்கள்!

சிறுமி கூறுவாள், :அம்மா! ஒரு வார்த்தை. நான் டீ குடிக்க மாட்டேன் என்பதல்ல. பொய் சொன்னேன். நீங்கள் தினமும் உங்கள் வீட்டு நாய்க்கு கிண்ணம் நிறைய பால் ஊற்றுவதை பார்க்கும்போது எனக்கும் அதுபோல் திக்கான பால் குடிக்க வேண்டும் போல ஆசையாக இருந்தது. அதனால்தான் அப்படி பொய் சொன்னேன்” என்கிறாள். இந்த கதையை பால் டம்பளர் என்ற பெயரில் எழுதினேன். அதை பார்த்தவர்கள் பால் டம்ளர் என்றதும் ஏதோ படுக்கையறைக் கதை என்று எண்ணினார்கள். தலித் பெண் பற்றி அமைந்ததால் யார் யாரோ எங்கெங்கிருந்தோ தொடர்புகொண்டு ஆந்திர பிரபா பத்திரிகையில் இது வெளிவந்ததால் அவர்களிடம் கேட்டு என் முகவரியை தெரிந்து கொண்டு எனக்கு கடிதம் எழுதினார்கள். தலித் கதை எழுதியதற்காக பாராட்டினார்கள். தலித் கதை, பெண்ணீயக் கதை, சுயமுன்னேற்றக் கதை போன்ற வேறுபாட்டு எண்ணங்கள் எனக்கு இருந்ததில்லை. மனிதாபிமானம் மட்டுமே இலக்காக இருந்தது.  மேற்சொன்ன அனைத்திலும் கூட மனிதாபிமானத்தை முன்னிட்டே அல்லவா போராடுகின்றனர்… அனைத்து நதிகளும் சமுத்திரம் நோக்கி செல்வது போல். சின்னப் பிள்ளைகள் பால் குடிக்க விரும்புவார்கள் அல்லவா என்ற சிறு எண்ணம் இந்த கதையாக உருவானது.

இன்னொரு கதை ‘காவல்’ எழுதினேன். அதில் ஒரு நாய் வளர்ப்பார்கள். தாய் ஒப்புக்கொள்ள மாட்டாள். பிள்ளைகள் விரும்புவதால் வளர்க்க அனுமதிப்பாள். நான் குளிப்பாட்டுவேன் என்று ஒருவரும் நான் பால் ஊற்றுகிறேன் என்று ஒருவரும் வீட்டில் போட்டி போட்டு பார்த்துக் கொண்டார்கள். ஆனால் எல்லாம் ஒரு பதினைந்து நாட்களுக்குத் தான். பின் அவரவர் தேர்வு என்றும் ஸ்கூல் என்றும் பிஸியாகி விட்டார்கள். நாயை தாயார்தான் கவனிக்க வேண்டி வந்தது. அனைவரும் எங்காவது வெளியூர் செல்ல வேண்டி வந்தால் தாய் வீட்டிலேயே இருந்த நாயை கவனிக்க வேண்டி வந்தது. தாய் எங்கே தானும் கிளம்பி விடுவாளோ என்று அனைவரும் பயந்தார்கள். அவர்கள் மனதைப் படித்த அம்மா கூறுவாள், “இந்த நாய் வீட்டுக்குக் காவல். நான் நாய்க்கு காவல்” என்பாள். “இந்த நாய்க்கு உள்ள ஒரே பந்தம் சங்கிலிதான். ஆனால் எனக்கு எத்தனை கட்டுப்பாடுகள்… பிணைப்புகள்!” என்கிறாள். இதனைப் படித்தவர்கள் இதை பெண்ணீயக்கதை என்றார்கள். “இது பெண்ணீயம் அல்ல. ஒரு நாய், ஒரு மனிதன் இடையே உள்ள மனிதாபிமானம். ‘நாயபிமானம்’ அவ்வளவே!. நான் இப்படிப்பட்ட ‘ஈ’யங்களுக்கு அப்பாற்பட்டவள். மனிதாபிமானத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டவள்” என்று பதிலளித்தேன்..

கேள்வி:- நீங்கள் எழுதிய நாவல்கள் பற்றி கூறுங்கள், அம்மா!

பதில்: சமுதாய நாவல்கள் நிறைய எழுதியுள்ளேன். அதைப்போல் புராண நாவல்களும் எழுதி உள்ளேன். ஆரம்ப தினங்களில் சமூக கதைகள் மட்டுமே எழுதினேன். என் நாவல்களில் பெண்கள் யாரும் அழமாட்டார்கள். கண்ணீர் விட மாட்டார்கள். என் கதைகளில் சோகம் இருக்காது. துன்பங்களை எதிர்த்து தன் வாழ்க்கையின் மார்க்கத்தை பெண்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். என் முதல் நாவல் ‘வாழ்க்கை கற்றுத்தந்த நீதி’ ஒரு சமூக நாவல். சுமாரான அழகுள்ள ஒரு பெண். ஆனால் செல்வந்தரின் மகள். நன்கு படித்து நல்ல வேலையில் உள்ள பையனைத் தேடி மகளுக்கு மணம் முடித்தார் தந்தை. செல்வதைப் பார்த்து அழகில்லாத அந்த பெண்ணை மணக்கிறான். அவன் வெளியே நிறைய பேசுவான். “பெண்களை மதிக்க வேண்டும், அவர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். தம் காலில் தாம் நிற்க வேண்டும்” என்றெல்லாம் பிரசங்கம் செய்வான். ஆனால் வீட்டுக்கு வந்த பின் நேர்மாறாக மனைவியை பலவிதத்திலும் துன்புறுத்தினான். உன் கருத்த முகத்திற்கு தலையில் கனகாம்பரம் பொருந்தவில்லை என்று கூறி அவமதிப்பான். தந்தை தன் பெண்ணின் தாம்பத்தியத்தை காப்பதற்காக மாப்பிள்ளை பெயரில் சொத்தை எழுதி வைத்து விடுவார். அவமானமும் ஏமாற்றமும் தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறாள் அப்பெண். வெகுதூரம் சென்று பெயரை மாற்றிக்கொண்டு வயதானவர்களுக்கு பணிவிடை செய்து பின் ஒரு முதியோர் இல்லம் அமைத்து சேவையாற்றி வருகிறாள். இவன் வேறு ஒரு பெண்ணை மணந்து வாழ்கிறான். இறுதியில் அவன் அதே முதியோர் இல்லத்தில் வந்து சேரும்படி நேர்கிறது. அவனை அடையாளம் கண்டு அவனுக்கு பணிவிடை செய்கிறாள். வாழ்க்கைக்கு கோர்ட் மூலம் நீதி கிடைப்பதில்லை. சட்டம் சொல்வதை கோர்ட் கேட்கும். அவ்வளவே! பெற்றோர், கணவர் யாருமே அவளுக்கு வாழ்க்கைக்கான நியாயத்தைச் செய்யவில்லை. அவரவருக்கான நியாயத்தை அவரவரே செய்து கொள்ள வேண்டும். வேறு ஒருவரை நம்பிப் பலனில்லை என்று என் முதல் நாவலில் எழுதினேன்.

பின் ‘மமதா’ என்று ஒரு நாவல் எழுதினேன். இது சுவீகாரம் எடுப்பது பற்றிய கதை. ஒரு தம்பதிகள் அனாதை இல்லத்திற்கு சென்ற ஒரு குழந்தையை சுவீகாரம் எடுத்துக் கொண்டு வந்து வளர்த்து வருவார்கள். நான் நிஜ வாழ்க்கையில் ஒரு சம்பவம் கவனித்தேன். எனக்கு தெரிந்தவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். அந்தச் சிறுவன் கால் ஊனமுற்றவன். சரி, அவனுக்குத் துணையாக விளையாடுவாள் என்று ஒரு பெண் குழந்தையை அனாதை இல்லத்திலிருந்து எடுத்து வளர்ப்பார்கள். ஆனால் சில நாட்களில் அவர்களுக்கு மனம் மாறிவிட்டது. யாரோ ஒரு பெண்ணுக்கு நாம் ஏன் சோறு போட வேண்டும்? தண்டச் செலவு என்று எண்ணி அவளை வேலைக்காரியாக நடத்தி வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டார்கள். அதைப் பார்த்த எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. சீ..! சீ…! அன்பாக வளர்க்க இயலாதவர்கள் ஸ்வீகாரம் செய்து எடுத்து வருவானேன் என்று எனக்கு கோபம் வந்தது. இதை வைத்து மமதா என்ற நாவலை எழுதினேன். அந்தக் கதையை அப்படியே எழுதிய பின், தந்தை அந்த குழந்தையை ஹாஸ்டலில் சேர்த்து நன்கு படிக்க வைத்து வளர்ப்பதாக முடிவை மாற்றி எழுதினேன். அந்தப் பெண் பெயர் மமதா.

உண்மையான தாய்மை உணர்வு இருந்தால் மட்டுமே தத்து எடுத்து வளர்க்க வேண்டும். உலகத்திற்காகவோ வேலைக்கு வைத்துக் கொள்வதற்கோ எதற்கு தத்து எடுத்து வளர்க்க வேண்டும்? சிறு குழந்தைகளை இவ்வாறு இம்சிப்பதைப் பார்க்கப் பிடிக்காமல் மமதா என்ற நாவலை எழுதினேன்.

கேள்வி: நீங்கள் எழுதிய பிற நாவல்கள் பற்றி கூறுங்கள்.

பதில்: எனக்கு முதலில் புராண நாவல்கள் எழுதும் உத்தேசம் இருக்கவில்லை. நான் முப்பது வருடங்கள் ஆசிரியராகப் பாடம் நடத்தியிருக்கிறேன். ஆனால் தரிகொண்ட வேங்கமாம்பா பற்றி ஒரு பாடமும் சிலபஸில் இருக்கவில்லை. பெண் கவிஞர் தரிகொண்ட வேங்கமாம்பா எத்தனை எழுதியுள்ளாள்? தீவிரமான வெங்கடேஸ்வர ஸ்வாமி பக்தை. அவள் பட்ட கஷ்டங்கள் அத்தனை இத்தனை என்று இல்லை. விதவையான அவள் கூறுகிறாள், “என் கணவர் வேங்கடேஸ்வர பெருமாள்! நான் சுமங்கலிதான்!”. தலைமுடியை எடுக்காததால் ஊரார் கொடுத்த தொல்லைகள் ஏராளம். அப்படிப்பட்ட பக்தை. எத்தனையோ காவியங்கள் எழுதியுள்ளாள். திருப்பதியிலும் அர்ச்சகர்கள் அவளுக்கு தொல்லை தந்தார்கள். ஆனால் இறைவன் அவளுடைய ஆரத்தியை ஏற்று அருளினான். திருமலையில் ‘முத்யால ஆரத்தி’ மிகப் பிரசித்தி. இன்று வரை ஆண்டவனுக்கு தொடர்ந்து நடக்கிறது.

வெங்கமாம்பா பற்றி அறியாமலேயே இருந்தேன். திருப்பதியில் வெங்கமாம்பா பிராஜக்ட் வந்தது. சுந்தரய்யா வித்யா பவனில் வெங்கமாம்பா பற்றிக் கிடைத்த ஒரு சில புத்தகங்களை எடுத்து வந்து அதனை ஒரு நாவலாக சில கதாபாத்திரங்களை உடன் சேர்த்து எழுதினேன். அது ஒரு பத்திரிக்கையில் தொடராக வெளிவந்தது. பின்னர் எமெஸ்கோ பதிப்பகம் அதனை புத்தகமாக வெளியிட்டது. அதோடு நிற்கவில்லை என் பாக்கியம். துரைசுவாமி ராஜு அவர்கள் அன்னமையா  சினிமா எடுத்தவர். அவர் ஒரு முறை எனக்கு போன் செய்து வெங்கமாம்பா பற்றி என் புத்தகத்தை எடுத்துக்கொண்டு நேரில் வர இயலுமா என்று கேட்டார். சரி என்று சென்றேன். அந்த புத்தகத்தைப்  பார்த்து மிகவும் மகிழ்ந்தார். அதில் உள்ள அனைத்து நிகழ்வுகளையும் திரைப்படத்தில் பயன்படுத்திக்கொண்டார். 75 எபிசோடுகள் நடிகை மீனா கதாநாயகியாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் வெளிவந்தது இந்தத் திரைப்படம். எனக்கும் ஒரு தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தார். அதோடு இந்த கதையை எந்த வடிவில் எந்த மொழியில் படம் எடுத்தாலும் அதில் உங்கள் பெயர் அக்னாலெட்ஜ் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

அண்மையில் ஒரு சில மாதம் முன்பு கேந்திர சாகித்ய அகாடமியில் இருந்து ஒரு விண்ணப்பம் வந்தது. தரி கொண்ட வேங்கமாம்பா பற்றிய மொனோகிராஃப் எழுதுங்கள் என்று கேட்டார்கள்.  எழுதிக் கொடுத்தேன்.

வெங்கமாம்பா பற்றிய என் தொடர் வெளிவந்தபோது மிகப் பிரபலமாக விளங்கியது. பலரும் விரும்பிப் படிக்கத் தொடங்கினார்கள். அப்போதுதான் எனக்கு தோன்றியது நம் புராணக் கதைகளை இந்த காலத்தில் யாரும் படிப்பதில்லை. மதிப்பு மிகுந்த அந்த பொக்கிஷங்களை இவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று எண்ணினேன். அல்லசானி பெத்தன்னா, ஸ்ரீகிருஷ்ண தேவராயர், ஸ்ரீநாத மகாகவி… இவர்களைப் போன்றோரைப் பற்றி தெரியாது என்று கூறுவது பெரிய தவறு. இளைஞர்கள் இவர்களைப் போன்றோர் பற்றி அறிய வேண்டும் என்ற எண்ணத்துடன் அல்லசானி பெத்தன்னா எழுதிய மனுசரித்திரம் என்ற பிரபந்தத்தை ‘காந்தர்வம்’ என்ற நாவலாக எழுதினேன். அது பத்திரிக்கையில் தொடராக வந்தது. புத்தகமாகவும் வெளிவந்தது. நான் புராண நாவல்கள் எழுதும் போது வெறும் பொழிப்புரையாக எழுதாமல் தேவையானபோது கேரக்டர்களை உருவாக்கிக் கொள்வேன். மனு சரித்ரம் பிரபந்தத்தில் பிரவரனின் தந்தை பற்றி ஒரு வரியில் இருப்பதை நான் இருபது பக்கங்களுக்கு விரிவாக எழுதினேன். பிரவரனின் மனைவி பற்றி ஒரு வரியில் சொல்லிப்  போவார் கவிஞர். நான் பல பக்கங்களுக்கு அதை விவரித்துச் சொல்வேன். அதேபோல் வசு சரித்திரத்தை ‘வசுராஜீயம்’ என்று எழுதினேன். தூர்ஜடி கவிதைகளை நாவலாக்கினேன். விஜய விலாசத்தை ‘விஜய யாத்ரா’ என்றும், ஸ்ரீநாத மகாகவியின் காசீ கண்டத்தை ஆனந்த கானனம் என்றும் நாவல்களாக்கினேன். இதுபோல் 12 புராண நாவல்கள் எழுதியுள்ளேன். தற்போது தரி கொண்ட வேங்கமாம்பா எழுதிய ஸ்ரீ வேங்கடாசல மகாத்மியம் என்ற நூலை ‘கோனேடி ராயுடு’ என்ற பெரிய நாவலாக எழுதி உள்ளேன். ருஷிபீடம் மாதப் பத்திரிகையில் தொடராக தற்போது வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதில் பல ஆன்மீக விஷயங்கள் உள்ளன. தற்கால இளைஞர்கள் அறியவேண்டும் என்பதற்காகவே எடுத்து எழுதுகிறேன். இது மிகவும் பிரபலமாக விளங்குகிறது. பலரும் போன் செய்து பாராட்டுகிறார்கள். கடவுள் அனுக்கிரகம் என்று நினைத்து மகிழ்கிறேன்.

கேள்வி: உங்கள் பிஹெச்டி பற்றி கூறுங்கள்.

பதில்: நான் உஸ்மானியா யுனிவர்சிட்டியில் படிக்கும்போது பிவி சுப்பிரமணியம் அவர்கள் ப்ரொபசராக இருந்தார். அவர் சென்ட்ரல் யுனிவர்சிட்டியில் ப்ரொபசராக இருந்து பின்னர் பொட்டி ஸ்ரீராமுலு தெலுகு யுனிவர்சிடி வைஸ் சான்சிலராக ஆனார். நான் சிலகமர்த்தி லட்சுமி நரசிம்மம் அவர்களின் இலக்கிய வரலாறு, வாழ்க்கை வரலாறு மீது பிஹெச்டி செய்தேன். தற்போது பிஹெச்டி செய்பவர்கள் ஒரு எழுத்தாளரின் ஒரே ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதுகிறார்கள். நான் சிலகமர்த்தி அவர்களின் இலக்கியச் சேவை முழுவதும் பற்றி, அவர் எழுதிய நாடகங்கள், அவர் எழுதிய வசன கவித்துவம், அவர் எழுதிய பிரஹசனங்கள்… மொத்தம் கம்ப்ளீட் ஒர்க். சிலககமர்க்தி பற்றி ஏதாவது தெரியவேண்டும் என்றால் இன்று வரை என் பெயர் தான் சொல்வார்கள். அத்தாரிடியாகக் கூறுவார்கள். என் பெயர் அவ்வாறு நிரூபணம் ஆயிற்று. எனக்கு எதனால் அவர் பற்றி எழுதவேண்டும் என்று தோன்றியது என்றால்… ஒன்று… அவருடைய தேசபக்தி எனக்கு மிகவும் பிடித்தது. சிலகமர்த்திக்கு கண் சரியாகத் தெரியாது. பார்வைக் கோளாறு இருந்தது. அவர் தனது சுயசரிதையில் எழுதுகிறார் இதுபற்றி. “மாணவனாக இருந்தபோதே கரும்பலகையில் எழுதியவை அவ்வப்போது சரியாக பார்க்க இயலாது. அப்போது பரீட்சைக்கு மதராசிலிருந்து கேள்வித்தாள்கள் வந்தன. அதனால் வந்து சேர்வதற்கு தாமதமாகியது. மாலை நேரத்தில்தான் வந்து சேரும். ஆளுக்கு ஒரு மெழுகுவர்த்தி கொடுத்து பதில் எழுதச் சொல்வார்கள். கண் சரியாகத் தெரியாததால் குனிந்து குனிந்து கேள்வியைப் படித்து எழுதியதால் முன்பக்கத்  தலைமுடி எல்லாம் நெருப்பு பட்டு எரிந்து விட்டது” என்று எழுதுகிறார் அந்த மகானுபாவர். பள்ளியில் படிக்கையில்… வெகு சாமானியமான பெற்றோர். நரசாபுரம் பள்ளியில் ஆரம்பக் கல்வி. தாய் சிறிது காலம் வந்திருந்து சமைத்து போட்டார். பின் உடல் நிலை சரியில்லாமல் ஊருக்குச் சென்றுவிட்டார். ஒரு ஒரு நாள் ஒரு ஒரு வீட்டில் உணவு ஏற்பாடு செய்து விட்டுச் சென்றார் தாய். அதற்குக் கூட கையில் காசின்றி ஒருவேளை கோதாவரி நதிக்கு சென்று கை நிறைய மிகச் சிறுவயதிலேயே நீரெடுத்து அருந்திவிட்டு ஒரு உளுந்து வடை வாங்கித் தின்று அந்த நாளைக் கழித்ததாக எழுதியுள்ளார். பின்னர் அவர் வாழ்க்கையில் சிறப்பம்சங்கள் என்னவென்றால்… அவர் அந்த நாளிலேயே ஹரிஜன பாடசாலையை நிறுவினார். இன்றைக்கு தலித் ஆதரவு என்று பேசுகிறார்கள். மகாத்மா காந்தியை விட முன்னரே இவர் ஹரிஜன ஆதரவாளர். அது ஒரு இரவுப் பள்ளி. இவருக்கு கண் சரியாகத் தெரியாது. யாராவது விளக்கைப் பிடித்துக்கொண்டு முன்னால் நடந்தால் இவர் அந்த பள்ளிக்குச் சென்று பாடம் நடத்துவார். தன்னிடம் இருந்த சிறு தொகையைக் கொண்டு அவர்களுக்கு நோட்டு, பென்சில், புத்தகம், சிலேட்டு வாங்கித் தருவார். ராம்மோகன் பாடசாலை, விவேகானந்தர் பாடசாலை என இரண்டு பள்ளிகளை நடத்தினார். அப்பள்ளியில் படித்த ஒரு மாணவன் வளர்ந்து தாசில்தாராக ஆனபின் இந்த குருவை மதித்து தன் பிள்ளைக்கு இலட்சுமி நரசிம்மன் என்று பெயர் வைத்தார் என்று எழுதுகிறார் தன் சுயசரிதையில்.

பின் எத்தனையோ பத்திரிகைகள் நடத்தினார். தேசமாதா போன்றவை. மாக்ஸ்முல்லர் கம்பெனியினர் பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்கள் எழுதித் தரச் சொல்லி இவரை கேட்டபோது மறுத்துவிட்டார். இவர் பணத்திற்கு என்றுமே ஆசைப்பட்டவர் அல்ல. இவர் சாதாரண மத்தியதர குடும்பம் ஆனாலும் கூட. நம் நாட்டிலிருந்து காப்பித் தோட்டங்கள், பழத் தோட்டங்கள், ரயில்கள் இவ்வாறு அனைத்தின் மூலமாகவும் வரும் தொகையை பிரிட்டிஷ் அரசு எடுத்துக்கொள்கிறது. புத்தகங்கள் மூலம் வரும் தொகையும் அவர்களுக்கே சேர வேண்டுமா? நம் சுதேசிகள் யாராவது புத்தகம் எழுதச் சொன்னால் எழுதுவேன் என்றார். ஐயா! அவர்கள் பணம் கொடுப்பார்கள். நீர்  ஏழ்மையில் உள்ளீர்கள். எழுதுங்கள் என்று நண்பர்கள் பலரும் வற்புறுத்தினாலும் அவர் இணங்கவில்லை. தேசபக்திக்கு முன் பணம் ஒரு பொருட்டல்ல என்று பதிலளித்தார்.

வங்காளப் பிரிவினையால் பிபின் சந்திரபால் நாடு முழுவதும் அலைந்தபோது ராஜமுந்திரிக்கும் வந்தார். பிரிட்டிஷாருக்கு எதிராக நாடு முழுவதும் பிரச்சாரம் பிரச்சாரம் செய்தார். பின் பிபின் ஐந்து நாட்கள் ராஜமுந்திரியில் சொற்பொழிவாற்றினார். அவற்றை ஐந்து நாட்களும் மேடையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சிலமர்த்தி இறுதி நாளன்று ஆசுவாக ஒரு கவிதையும் பாடினார். “பரத கண்டம்பு சக்கடி பாடி ஆவு…” பாரத தேசம் நல்லதொரு பசு. ஹிந்துக்கள் இளம் கன்றுகளாக இருக்கையில் வெள்ளையர்கள் பாலை சுரண்டிச் செல்கின்றனர் என்று பாடினார். இந்தப் பாடல் அந்த நாட்களில் மிகப் பிரபலமாக விளங்கியது.

இவர் மிக உயர்ந்த நாடகங்கள் எழுதியுள்ளார். இளைஞனாக 21 வயதாகும் போதே கீசகவத நாடகம் எழுதியுள்ளார். இம்மானேனி ஹனுமந்தராவு நாயுடு என்பவர் ஹிந்து நாடக சமாஜம்  அமைத்து, சிலகமர்த்தியை நாடகம் எழுதச்சொல்லி தூண்டுவார். கீசகவதம் நாடகத்தில் கீசகனாக ஹனுமந்தராவு நாயுடு நடிப்பார். திரௌபதியாக தங்குடூரு பிரகாசம் அவர்கள் நடிப்பார்கள். சிலகமர்த்தி, ‘கயோபாக்கியானம்’ என்று ஒரு நாடகம் எழுதி நடத்தியபோது அந்தக் காலத்தில் ஒரு லட்சம் காப்பிகள் விற்பனையாயின. நம் கற்பனைக்கு எட்டாத அளவு புகழ்பெற்றது அந்த நாடகம். சிலகமர்த்தி மரணித்த பின் அதனை சினிமாவாகக் கூட தயாரித்தார்கள். கிருஷ்ணார்ஜுன யுத்தம் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். இன்று வரை சிலகமர்த்தி என்றால்… அவர் எழுதிய புராண நாடகம் கயோபாக்கியானம் பற்றி நினைவு வரும். இதுபோல் பல நாடகங்கள் எழுதியுள்ளார். ஒரு நாடகத்தில் அவர் ஒரு கவிதை எழுதினார். அந்த கவிதையை பெண்கள் எப்போதும் மறக்கக்கூடாது. நாம் கர்வப்பட வேண்டிய கவிதை. ‘சதுவன் நேர்த்துலு…” பெண்களுக்கு அனைத்துக் கலைகளும் வரவேண்டும் என்று கூறும் கவிதை இது. சத்யபாமா கிருஷ்ணருக்கு ரதம் ஓட்டியதைப் பற்றி கேள்வி வரும்போது இந்தக் கவிதையை அதற்கு பதிலாக எழுதினார்.

கேள்வி: மேடம், சிலகமர்த்தி லட்சுமி நரசிம்மம் எழுதிய பிரஹசனங்களைப் பற்றி கூறுங்கள்.

பதில்: சிலகமர்த்தியின் நாடகங்கள் எத்தனை பிரபலமோ அவருடைய பிரஹசனங்களும் அதே அளவு புகழ் பெற்றவை. அதிகம் நகைச்சுவையாகவும் சிந்தனையை தூண்டுபவையாகவும் உள்ள  சடையர் பாணி எழுத்துகள் அவை. சமூகத்தில் நிகழும் தீமைகளை சுட்டிக்காட்டி திருத்தும் வகையில் எழுதுவார். ஏனென்றால் சிலகமர்த்தியின் காலத்தில் பெண்களுக்கு மிகச் சிறுவயதிலேயே திருமணம் செய்துவிடுவார்கள். பெண் திருமணத்தில் தாய் வருந்தி அழுவாள் என்று எழுதுகிறார். “கொண்டூரி ஜானகி ராமைய்யா பெள்ளி பிரஹசனம்” என்று ஒன்று எழுதினார். கிழவன் சிறு பெண்ணை திருமணம் செய்துகொள்வான். நீராடும் துறையில் பெண்கள் பேசிக் கொள்வார்கள்… “திருமண விசேஷங்கள் என்ன?” என்று ஒருத்தி கேட்க, “திருமண மண்டபம் உடைந்து கீழே விழுந்தான்” என்பாள் மற்றொருத்தி. “ஊர்வலம் விசேஷம் என்ன?” என்பதற்கு “ஒரேடியாக ஊர்வலம்தான்” என்பாள் இன்னொருத்தி என்று எழுதுகிறார். சமூக அவலங்களை சுட்டிக்காட்டும் நாடகங்கள்.

கேள்வி: நீங்கள் புராணக்கதைகள் எழுதுகையில் எக்ஸ்ட்ரா கதாபாத்திரங்களை உருவாக்கி கொள்கிறீர்களே! அது பற்றி கூறுங்கள்.

பதில்: தற்போது உள்ளவர்களுள்… நவலா சக்கரவர்த்தி முதிகொண்ட சிவபிரசாத், அதற்கு முன்பு இருந்தவர்களுள் நோரி நரசிம்ம சாஸ்திரி சரித்திர நாவல்களை எழுதினார். ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டால், கதாம்சம் மூலத்தை மாற்றாமல் கதாபாத்திரம், சூழல், கதை… எதையும் மாற்றாமல் கதைக்கு உபயோகப்படும் விதத்தில் புது பாத்திரங்களை உருவாக்கிக் கொள்ளலாம். இல்லாவிட்டால் ரீடபிலிடி கிடைக்காது. அவ்வாறு விஸ்தாரமாக எழுதினால்தான் கதைக்கு இன்பம். அதைப் பற்றி யாரும் குறை கூறியதில்லை.

கேள்வி: ருஷிபீடத்தில் பத்தாண்டுகள் மாதா மாதம் தொடர்ந்து எழுதிய தொடர் பற்றி கூறுங்கள்.

பதில்: ‘பக்தி தரங்காலு’ என்ற பெயரில் ருஷிபீடம் பத்திரிகையில் எழுதினேன். எப்படி எழுதினேன் என்று எனக்கே ஆச்சரியமாக உள்ளது. கடவுள் சங்கல்பம். சாதாரணமாக பக்தர்கள் கதைகளைப் படிப்பது உண்டு. ஒருமுறை சாமவேதம் சண்முக ஷர்மா அவர்கள் நம் பத்திரிக்கைக்கு ஏதாவது எழுதுங்கள் என்றார். உடனே சொல்லிவிட்டேன் பக்தர்களின் வாழ்க்கைத் தொடர் பற்றி எழுதுகிறேன் என்றேன். சரி எழுதுங்கள் என்றார். பிரகலாதன், துருவன் போன்ற புகழ்பெற்ற பக்தர்களைப் பற்றி மட்டுமல்லாமல் பலரைப் பற்றி எழுத வேண்டும் என்று மிகவும் முயற்சி செய்து தேடி மெனக்கெட்டு எழுதினேன். இந்தக் கால இளைஞர்களுக்காக நான் எடுத்துக்கொண்ட சிரமம் அது. ஏன் என்றால் சிவ புராணம், விஷ்ணு புராணம், காவியம், நாவல் இவற்றுள் எங்கெல்லாம் பக்தி பற்றிய பாத்திரங்கள் கிடைத்தாலும் எடுத்து விஸ்தாரமாக எழுதினேன். 95 பேரைப் பற்றி எழுதினேன். அது இன்னும் புத்தகமாக வர இருக்கிறது.

கேள்வி: நீங்கள் எப்போது பதவி ஓய்வு பெற்றீர்கள்?

பதில்: 1999ல். தற்போது இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன.

கேள்வி: ஓய்வு வாழ்க்கையை எவ்வாறு கழிக்கிறார்கள்?

பதில்: இப்போதும் எனக்கு நேரமே இருப்பதில்லை. மிகவும் உற்சாகமாக கழிக்கிறேன். ஏனென்றால்… நான் சஷ்டி பூர்த்தி கதைகள் என்று ஒரு தொடர் எழுதினேன். ‘ஆந்திரபூமி’ இதழில் தொடராக வந்தது. அறுபது வயதான ஆணோ பெண்ணோ வாழ்க்கையில் இனி என்ன இருக்கிறது என்று எண்ணுவது வழக்கம். ரிடைர்மென்ட் அரசாங்கம் அளித்ததே தவிர, நாம் வாழ்க்கையில் ரிடையர்  ஆகவில்லை அல்லவா? ஒரு கதையில் இது பற்றி எழுதினேன். ‘வீட்டிற்குள் வெற்றி’ என்று பெயர். அது உங்கள் தமிழ் மொழி பெயர்ப்பில் சினேகிதியில் வெளியானது. ரிடையரானவர்கள் உற்சாகத்தை இழக்கக்கூடாது. நிராசைபடக்கூடாது. ஏதாவது ஒன்றில் பொறுப்பெடுத்து நடத்த வேண்டும் என்பது என் அபிப்பிராயம். நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்வரை, நம் மனம் பிரசாந்தமாக இருக்கும்வரை… ஒருவருக்கு இலக்கிய ஆர்வம் இருக்கும், இன்னொருவருக்கு சங்கீதத்தில் ஆர்வம் இருக்கும், சிலர் நண்பர்களோடு குஷியாக பேசி பொழுதைக் கழிப்பது பிடிக்கும்… உற்சாகமாக இருக்க முடிந்தால் முதுமை நமக்குப் பெரிய எதிரி அல்ல. ரிடையர் ஆவதற்கு முன்பிருந்தே நான் எழுத்துப்பணியில் ஆர்வமாக இருந்ததால் ரிடையர் ஆன பின் அப்போதை விட மிக மிக அதிகமாக எழுதுகிறேன். இன்னும் இடைவிடாமல் எழுதிக்கொண்டே இருக்கிறேன். மேடை சொற்பொழிவுகளுக்கு அழைப்பார்கள். சென்று உரையாற்றி வருவேன். புத்தக விமர்சனம் கேட்பார்கள். படித்து சரி செய்வேன். அண்மையில் தியாகராஜ கானசபாவில் அரிச்சந்திரன் நாடகம் நடத்தினார்கள். என்னை தலைமை வகிக்க அழைத்தார்கள். அதில் அரிச்சந்திரனாக நடித்தவர் 50 வருடங்களுக்கு முன் என் மாணவராக இருந்தவர். அருகில் வந்து மேடம் என்னை நினைவிருக்கிறதா என்று கேட்டார். எனக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது.

நம் வாழ்க்கையை வெற்றிகரமாக்கிக் கொள்ள வேண்டும் என்றால் மனிதர்களின் நடுவில் இருக்க வேண்டும். நண்பர்களோடு கலந்து இருப்பதும் அளவளாவுவதும் எனக்கு மிகவும் விருப்பம். சிலர் சௌக்கியமா? என்று கேட்டால் கூட பதில் சொல்லமாட்டார்கள். ஊம்… என்பார்கள். இந்தக் காலத்தில் அன்பு இல்லை. பேச்சு இல்லை. போன், மொபைல், இன்டர்நெட்… இவையே வாழ்க்கையாகி விட்டது. அதனை மனதில் கொண்டு ‘நிசப்த சொர்க்கம்; என்று ஒரு கதை எழுதினேன். அந்தக் கதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் ஆனது. சுவாதி ஸ்ரீபாத என்பவர் என் 20 கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் சைலண்ட் ஹெவன் என்று. இந்தக் கதையை  ராஜி ரகுநாதன், நீங்களும் தமிழில் நிசப்த சொர்க்கம் என்ற பெயரில் மொழிபெயர்த்து தமிழ் பத்திரிகையில் வெளியிட்டுள்ளீர்கள்.

பெற்றோர் ஒரு பத்து நாள் சென்று இருந்து வருவோம் என்று மகள் வீட்டுக்குச் செல்வார்கள். பெண்ணும் மாப்பிள்ளையும் ஹலோ வாருங்கள் என்பார்கள். அதன்பின் மகள் கம்ப்யூட்டரே கதியாக பிஸியாகி விடுவாள். சமையலறைக்குச் சென்றாலும் யாரும் சாப்பிட்டீர்களா என்று கேட்கமாட்டார்கள். பின்னர் மகன் வீட்டுக்கு செல்வார்கள். மருமகள் ஏர்போர்ட்டுக்கு வந்து ஏசி காரில் வீட்டுக்கு அழைத்து வருவாள். அவள் செய்த உபசாரத்தில் இருவரும் மகிழ்ச்சி அடைவார்கள். மகளை விட மருமகள் மேல் என்று நினைப்பார்கள். கணவர் கூறுவார், “நீ பெரிதாக நினைக்காதே! இது விருந்தினர் அறை. நம்மை விருந்தினர் போல் உபசரிக்கிறார்கள். சொந்த மனிதர்கள் போல் அல்ல!” என்று கூறுவார். இரண்டு நாள் கழித்து தாய் சமையலறைக்குச் சென்று சமையல் செய்யும் பெண்ணிடம், “என் மகனுக்குப் பிடித்த சமையல் இன்று நான் செய்கிறேன்” என்பாள். அவள் பதில் ஏதும் பேச மாட்டாள். அதற்குள் மருமகள் வந்து, “அத்தை! அவளை டிஸ்டர்ப் செய்யாதீர்கள். அவளுக்கு எந்த எந்த நாளில் என்ன என்ன சமையல் என்று லிஸ்ட் எழுதி சுவரில் ஒட்டி உள்ளோம்” என்றாள். ஒருநாள் மருமகளுக்கு தெரிந்தவர்கள் யாரோ வந்தார்கள். பெற்றோர் அவரோடு சகஜமாக அளவளாவினார்கள். உங்களுக்கு எந்த ஊர் என்று கேட்டு பேசிக்கொண்டிருந்தார்கள். அதற்குள் மருமகள் வந்து மாமியாரிடம் சண்டை பிடித்தாள். “என் ப்ரண்ட்சோடு உங்களுக்கு என்ன பேச்சு? யாரைக் கேட்டு நீங்கள் பேசுகிறீர்கள்?” என்றாள் மருமகள். வீடு சொர்க்கம் போல் ஏசியும் சமையல்காரியமாக இருந்தாலும் அன்பு, பண்பு அங்கில்லை. அங்கிருந்தும் கிளம்பி விடுவார்கள் பெற்றோர். இதுதான் நிசப்த சொர்க்கம் என்று எழுதினேன். இந்த கதையைப் படித்துவிட்டு, வாரங்கலில் இருந்து ஒரு கடிதம் வந்தது. “வாஸ்தவமாக இப்படித்தான் உள்ளது ஒவ்வொரு வீட்டிலும்” என்று எழுதியிருந்தார்கள்.

கேள்வி: நீங்கள் எழுதிய கதைகளை கணவருக்கோ பிள்ளைகளுக்கோ கொடுத்து படிக்கச் சொல்லி அபிப்ராயம் கேட்டு பத்திரிகைகளுக்கு அனுப்புவீர்களா?

பதில்: அதெல்லாம் கிடையாது. ஆரம்ப காலங்களில் என் கணவரிடம் படிக்கச்சொல்லி அபிப்ராயம் கேட்டிருக்கிறேன். இப்படி மாற்று அப்படி மாற்று என்று ஏதாவது கூறுவார். அதன்படி செய்வேன். ஆனால் பின்பு அவர்களுக்கும் நேரமில்லை. உற்சாகமும் காட்டியதில்லை. அதனால் என் வேலையை நானே செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்த பின் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. அவர்களிடம் காட்டி கேட்பதை நிறுத்தி விட்டேன். என் குழந்தைகளிடம் படித்துச் சொன்னால், அவர்களும் பெரிய உற்சாகம் காட்டி காது கொடுத்துக் கேட்பதில்லை. அவர்கள் வேலையில் அவர்கள் பிசி. என் சின்ன மகன் மட்டும் இன்ஜினியர் வேலையில் இருந்தாலும் நாவல், கவிதை எழுதுகிறான். என் மகள் எம்ஏ., இங்கிலீஷ், பிஹெச்டி படித்துள்ளார். பிட்ஸ் ஹைதராபாத். இங்க்லீஷ் டிபார்ட்மெண்டில் வேலை பார்க்கிறார். சங்கீதம் கற்றுக் கொண்டார். நன்றாக பாடுவார். ஆனால் என்னைப் போல் இலக்கியத்தில் முழுமையாக அவர்கள் இறங்கவில்லை. அவர்கள் ஃபீல்டு வேறு.

கேள்வி: உங்கள் இலக்கிய சேவையில் உங்களை உற்சாகப்படுத்துபவர்கள் யார் யார்?

பதில்: அனைவரும் நான் எழுதுவதைப் பார்த்து மகிழ்வார்கள். என் வீட்டிலும் சரி, நண்பர்களும் சரி யாருமே குறை கூறியதில்லை. நன்றாக எழுதுகிறாய். எழுது என்று ஊக்குவிப்பார்கள். என் பெண்ணின் தோழிகள் வந்தால், அவர்கள் கூட, “ஆன்ட்டி! இந்த வயதிலும் எவ்வளவு பிசியாக இருக்கிறீர்களே!” என்று வியப்பார்கள். “ஆமாம்… எனக்கும் பொழுது போக வேண்டாமா?” என்று பதில் சொல்வேன்.

கேள்வி: நீங்கள் ரெபரென்ஸுக்காக லைப்ரரிக்குச் செல்வீர்களா?

பதில்: முன்பெல்லாம் எப்போது பார்த்தாலும் லைப்ரரியில்தான் இருப்பேன். “தெலுகு சாகிதீ சைதன்ய மூர்த்துலு” என்று ஒரு புத்தகம் எழுதி உள்ளேன். அதில் ‘சின்னய்ய சூரி’ முதல் ‘ஆருத்ரா’ வரை தற்கால கவிஞர்கள் அனைவரைப் பற்றியும் சுருக்கமாக எழுதியுள்ளேன். எதற்காக எழுதினேன் என்றால் என்னுடைய எம்.ஏ மாணவர்களுக்கு பாடம் நடத்துகையில் புரிந்து கொண்டேன்… அவர்களுக்கு நம் இலக்கிய கர்த்தாக்கள் பற்றிய முழு அறிவும் இருப்பதில்லை என்று. அவர்களிடம் ஸ்ரீஸ்ரீ என்ன எழுதியுள்ளார்? என்று கேட்டால், ‘மஹா பிரஸ்தானம்’ என்பார்கள். ஏதோ ஒரு பாராவை ஜெராக்ஸ் எடுத்து வைத்து மனப்பாடம் செய்து பரீட்சை எழுதி விடுவார்கள். இவர்களுக்கெல்லாம் எப்படி எடுத்துச் சொல்வது? நாங்கள் மாணவர்களாக இருந்த போது இவ்வாறு அல்ல. சரி. இலக்கியத்திற்கு என் முயற்சியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து அதே வேலையாக லைப்ரரிக்குச் சென்று விஷயங்களை சேகரித்து இந்த நூலை எழுதினேன். நிறைய பப்ளிஷர்களிடம் கேட்டேன் இந்த நூலை வெளியிடும்படி. ‘விசாலாந்திரா’ பதிப்பகம் போடுகிறேன் என்றார்கள். ஆனால் ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றியும் சின்னச் சின்ன புக்லெட்டாக போவதாக சொன்னார்கள். அப்படியல்ல முழுத் தொகுப்பாக முழுமையாக வரவேண்டும் என்று கூறினேன். அவர்கள் உற்சாகம் காட்டவில்லை. சாகித்ய அகாடமி பதிப்பித்தார்கள். இது மிகச் சிறந்த புத்தகம்.

“ஆ பாத்ர மதுரம்” என்ற ஒரு நூல் எழுதினேன். தெலுங்கு இலக்கியத்தில் நாவல் எழுதிய எழுத்தாளர்கள் ‘இல்லிந்தல சரஸ்வதி’ முதல் தற்கால எழுத்தாளர் வரை சிறந்த பெண் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு தொடர் எழுதினேன். ஆராய்ச்சி பூர்வமாக ஒரு நான்கரை ஆண்டுகள் நதி என்ற விஜயவாடா பத்திரிகையில் எழுதினேன். அதனை விசாலாந்திரா பதிப்பகம் புத்தகமாக வெளி கொண்டு வந்தார்கள். ‘சதகம் சாகித்யம்’ என்ற பெயரில் தெலுங்கு வித்யார்த்தி என்ற பத்திரிக்கையில் எழுதினேன். ஒரு ‘சதக பத்யம்’ எடுத்துக் கொண்டு கதை போல் எழுதி அதனை அந்தச் செய்யயுளோடு இணைத்து எழுதிய நூல். 35 அத்தியாயங்கள். மூன்றாண்டுகள் எழுதினேன். தற்போது விசாலாந்திரா பதிப்பகம் பதிப்பிக்க உள்ளார்கள். அதனால் நிரந்தரம் இலக்கிய  முயற்சியிலேயே இருக்கிறேன் இன்றுவரை. (மகிழ்வாக சிரிக்கிறார்)

கேள்வி: ‘கோனேடி ராயுடு’ தொடர் ருஷிபீடம் மாத இதழில் வருகிறதே! எத்தனை ஆண்டுகள் பிடித்தது அதை எழுதுவதற்கு?

பதில்: இந்த நூலை பலமுறை யோசித்து யோசித்து எழுத முயற்சித்து கை விட்டு பின் மீண்டும் எடுத்து எழுதி இதுபோல் பலமுறை நிகழ்ந்தது. சப்தகிரி தெலுங்கு மாதப் பத்திரிகை என்னை அழைத்து ஏதாவது தம் பத்திரிக்கைக்கு எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். கோனேடிராயுடு பற்றி எடுத்துச்சொல்லி இரண்டு அத்தியாயங்கள் முதலில் அவர்களுக்கு அனுப்பினேன். பதிலே வரவில்லை. சரி அவர்களுக்கு ஆர்வம் இல்லை போலும் என்று நினைத்துக் கொண்டேன். பின்னர் எட்டு மாதங்கள் அதே வேலையாக பல நூல்களைப் பரிசோதித்து அந்த நூலை முடித்தேன். அது தரிகொண்ட வேங்கமாம்பா எழுதிய ஸ்ரீ வெங்கடேஸ்வர மகாத்மியத்தை ஆதாரமாகக் கொண்டது. ஒரு காவியமாக நிறைய கதாபாத்திரங்களை உருவாக்கி எழுதியுள்ளேன். எந்தப் பத்திரிகைக்கு அனுப்பலாம் என்று யோசித்துப் பார்த்தேன். இத்தகைய மகத்துவம் மிகுந்த சப்ஜெக்ட்டை சாதாரண பத்திரிக்கைகள் போடமாட்டார்கள். அவர்களும் என் பல புராண கதைகளை போட்டுள்ளார்கள். காந்தர்வம், தரி கொண்ட வேங்கமாம்பா, தூர்ஜடி பற்றிய தக்ஷிண காசி போன்றவற்றை தொடராக பத்திரிகைகள் பல வெளியிட்டுள்ளன. ருஷிபீடத்திடம் கேட்டேன். அவர்கள் சரி என்றார்கள். முழு நாவலையும் கொடுத்துவிட்டேன். மூன்று ஆண்டுகள் ஆயிற்று. போடுகிறேன் என்றார்களே தவிர போடவில்லை. நான் ஒருமுறை ஸ்ரீ சாமவேதம் சண்முகசர்மா அவர்களை நேரில் பார்த்து கேட்டேன். நூல் நன்றாக உள்ளது. உடனே போடுகிறோம் என்றார். அப்போதிலிருந்து மாதாமாதம் வருகிறது. ஸ்ரீபீடம் பத்திரிகையில்  கூட மாதாமாதம் ஏதாவது ஒரு சப்ஜெக்ட் பற்றி எழுதுகிறேன். நான்கைந்து மாதங்களுக்கு சேர்த்து ஒரே தடவையாக அனுப்பி விடுவது என் வழக்கம்.

கேள்வி: சிறுவயதிலிருந்தே நீங்கள் கதை எழுத ஆரம்பித்த காலத்தில் அனுப்பிய கதைகள், திரும்பி வந்த கதைகள், வெளிவந்த கதைகள்… என்று ஏதாவது ஃபைல் போல் எழுதி வைத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளதா?

பதில்: ஃபைல் மெயின்டெயின் செய்யும் பழக்கம் எல்லாம் என்னிடம் இல்லை. கதை திரும்ப வந்து விட்டால் ஏன் அவர்களுக்குப் பிடிக்காமல் போயிற்று என்று யோசித்து அதனை சிறிது மாற்றி எழுதி வேற ஒரு பத்திரிக்கைக்கு அனுப்பி விடுவேன். அதில் வெளிவந்துவிடும். இல்லாவிட்டால் நாம் எழுதிய டெக்னிக் ஏதோ சரியில்லை போலும் என்று பார்த்து சரிசெய்து வேறு பத்திரிகைக்கு அனுப்புவேன். அது ஏதோ ஒன்றில் வெளிவரும் வரை சும்மா விடமாட்டேன்.

கேள்வி: இப்போது கூட போஸ்டில் தான் கதைகளை அனுப்புகிறீர்களா?

பதில்: எனக்கு டைப் செய்வது, மெயில் செய்வது இதெல்லாம் தெரியாது. கையில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறேனே தவிர அதில் டைப் அடிக்க எனக்கு வராது. தற்போது கொரியரில் அனுப்புகிறேன். சரியாகப் போய்ச் சேர்ந்ததா, இல்லையா என்று கவலைப்படத் தேவையில்லை என்பதால்… கொஞ்சம் விலை அதிகம் என்றாலும். அண்மையில் விஜயவாடாவில் இருந்து மகிளா  என்ற பத்திரிக்கை ஆசிரியர் ஒருவர் போன் செய்து கேட்டார், தரி கொண்ட வேங்கமாம்பா பக்திச் சிறப்பு பற்றி எழுதவேண்டும் என்றார். எழுதி அனுப்பினேன். சமீபத்தில் சீனியர் சிட்டிசன்ஸ் அமைப்பில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை ஏதாவது இலக்கியச் சொற்பொழிவு இருக்கும். என்னைப் பேசச் சொன்ன போது தரி கொண்ட வேங்கமாம்பா எழுதிய ராமாயணம் பற்றி பேசினேன். இதுபோல் நிரந்தரம் இலக்கியத்துடனே வாழ்கிறேன்.

கேள்வி: பெண் எழுத்தாளராக நீங்கள் எதிர்கொண்ட சிரமங்கள் என்ன? அனுகூலங்கள் என்ன?

பதில்: பெண் என்பதால் எனக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை. ஏனென்றால் என் வேலையை பார்த்துக்கொண்டு நான் போய்விடுவேன். எழுத்து என் வேலை. அதில் மும்முரமாக இருந்ததால் வேறு எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் தற்போது சிரமங்கள் இருப்பதாக கேள்விப்படுகிறேன். எங்கள் காலத்தில் வாசிரெட்டி சீதாதேவி, மாலதி சந்தூர் என்றால் எல்லோருக்கும் மிகவும் கௌரவம். அவர்களை அனைவரும் அன்போடு மதித்தார்கள். ரங்கநாயகி அம்மா, ராமலட்சுமி, ஆருத்ரா போன்றோர் என்றால் எல்லோருக்கும் ரொம்ப மதிப்பு அதிகம். அவ்வாறு பெரியவர்களை  கௌரவித்து வணங்கினோம். அவர்கள் பேச்சு என்றால் அத்தனை மதிப்பு. அவர்கள் பேசியதைக் கேட்டால் ஜென்மம் உய்வடைந்ததாக நாங்கள் நினைத்தோம். அப்படி ஒரு காலம் இருந்தது.. தற்போது அப்படி இல்லை. மாறிவிட்டது. யாரும் யாரையும் பொருட்படுத்துவதில்லை. தாங்களே உயர்ந்தவர்கள் என்று ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள்.

கேள்வி: நீங்கள் கல்லூரியில் உத்தியோகம் செய்துகொண்டே எழுத்து வேலை செய்ததில் தொந்தரவு எதுவும் இல்லையா?

பதில்: அப்படி எதுவும் இல்லை. ஏனென்றால் நமக்கு விருப்பமுள்ள வேலையை எப்படியாயினும் திறம்படச் செய்து விடுவோம் அல்லவா? முன்பு இரவு நேரத்தில் ஒரு கதை எழுதினேன் என்றால் அதனை ஃபேர் காபி செய்வதற்கு நேரம் வேண்டும். குழந்தைகள் எங்காவது வெளியில் சென்றபோது அந்த வேலையை முடித்துவிடுவேன். நானேதான் எழுதுவேன். யார் மீதும் நான் டிபெண்ட் ஆகவில்லை. நானே ரஃப் எழுதி நானே ஃபேர் எழுதுவேன். மற்றவர்களுக்கு அத்தனை ஆர்வம் இருக்காது. அவரவர் வேலை அவரவருக்கு. இப்போது கூட என் எழுத்து வேலையை நானே தான் செய்துகொள்கிறேன். திருப்பதியில் பத்மாவதி யுனிவெர்சிடியில் மாலதி சந்தூர் பற்றி செமினார் நடத்துகிறார்கள். மாலதி சந்தூர் நாவல்கள் பற்றி பேச வேண்டும் என்று என்னை அழைத்துள்ளார்கள். நான் எப்போது பயணம் செய்தாலும் யாராவது ஒருவரை டிக்கெட் சார்ஜ் செலவழித்து உடன் அழைத்துச் செல்வது வழக்கம். தனியாகப் போக மாட்டேன். என் பிள்ளைகள் தனியாகச் செல்ல அனுமதிக்கமாட்டார்கள். மாலதி சந்தூர் பற்றி எப்போதோ படித்துள்ளேன். தற்போது அந்த நூல்கள் கூட வீட்டில் இல்லை. உடனே நவோதயா புத்தகக் கடைக்கு போன் செய்தேன். ஆம் இருக்கிறது 15 நாவல்கள் என்றார். அத்தனை நாவல்களை எப்படி வாங்குவது? என்றேன். வாருங்கள் அம்மா! தள்ளுபடி செய்து தருகிறோம் என்றார்கள். போகவேண்டும். இன்றோ நாளையோ போய் வாங்கி வந்து படித்து செமினாருக்கு பேப்பர் தயார் செய்ய வேண்டும். டிக்கெட் வாங்கி விட்டேன்.

அதோடு இன்னொரு விஷயம். என்னிடம் பெரிய லைப்ரரி உள்ளது. இது என் மகள் வீடு. இங்கு எடுத்து வந்த புத்தகங்கள் மிகக்குறைவு. என் வீடு பத்மாராவு நகரில் உள்ளது. அங்கு என் மகனுடன் இருக்கிறேன். அவன் கிராமத்திற்கு அவ்வப்போது விவசாயம் பார்க்க சென்று விடுவதால் தனியாக இருக்கவேண்டாம் என்று இங்கு வந்திருக்கிறேன். அங்கிருந்த 500 புத்தகங்களை புத்தக அலமாரியோடு சேர்த்து ஆந்திர மகிளாசபை கல்லூரிக்கு கொடுத்துவிட்டேன். ஏதாவது புத்தகம் வேண்டுமென்றால் போய் எடுத்துக் கொள்வேன். அங்கு சரியாக பராமரிப்பதில்லை. சில உள்ளன. சில இல்லை. ஆனால் நான் கவலைப்படவில்லை. எனக்கு எந்த புத்தகம் வேண்டியிருந்தாலும் நேராக கடைக்குப் போய் காசு கொடுத்து வாங்கி வந்து விடுவேன். புத்தகங்களின் அருமை எனக்கு தெரியும் அல்லவா?

கேள்வி: இலக்கியத்தில் பெண்ணியவாதம் போன்ற வாதங்கள் பற்றி கூறுங்கள்.

பதில்: எத்தனையோ வாதங்கள் தற்போது எழுந்துள்ளன. ஆனால் நான் எந்த வாதத்திற்கும் கட்டுப்படவில்லை. என்னை இன்டர்வியூ செய்பவர்கள் எல்லோருமே நீங்கள் ஸ்திரீவாதியா?   பெண்ணியம் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்பார்கள். நான் சொல்வேன்… பெண்ணியம் என்பது புதிதல்ல. அதன் லட்சியம் என்ன? பெண் உரிமை, பெண் கல்வி, பெண் பொருளாதாரம் இவைதானே? இவை பற்றி நமக்கு கந்துகூரி வீரேசலிங்கம், குரஜாட அப்பாராவு போன்றவர்கள் அன்றே கூறிவிட்டார்கள். வடிவம், வழிமுறை தற்போது மாறியிருக்கலாம். பெண்கள் கல்விக்காக வீரேசலிங்கம் பத்திரிக்கையே ஆரம்பித்தார். குரஜாட அப்பாராவு பெண் சுதந்திரத்திற்காக போராடியுள்ளார். பெண்கள் அபலைகள் அல்லர் என்றார். இன்று பெண்கள் மிளகாய்பொடி எடுத்துச் செல்லவேண்டும். தீயவன் மேல் தூவ வேண்டும் என்றெல்லாம் கூறுகிறோம். குரஜாட அன்றே  சொன்னார், “பெண்கள் தம் சுய பாதுகாப்புக்காக கத்தி முதலிய ஆயுதங்களை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும்” என்றார். பெண்கள் தற்காப்பு குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்றார். இன்னும் பெண்கள் தம் நேரத்தையெல்லாம் சமையலறையிலேயே செலவழிக்க வேண்டாம். சமைப்பதற்கும் சூடுபடுத்துவதற்கும் சரியான சாதனங்களை பயன்படுத்த வேண்டும் என்றார். இன்று நாம் மைக்ரோவேவ் உபயோகிக்கிறோம். நம் குழந்தைகள் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். பார்த்தீர்களா? ஒரு கவிஞன் எத்தனை தீர்க்கதரிசியோ! வருங்காலத்தில் நிகழ இருப்பதை தூர திருஷ்டியாலும் சூட்சுமப் பார்வையாலும் பார்த்துச் சொல்வான் கவிஞன். அதையெல்லாம் பார்த்த எனக்கு இப்போது இவர்கள் கூறும் பெண்ணியவாதம் பற்றி எதுவும் எதிர்ப்பு கிடையாது. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு ஆணும் கூட பெண்ணியவாதி என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் ஒரு ஆண் தன் தங்கை, தன் மனைவி, நன்றாகப் படிக்கவேண்டும்… பொருளாதாரத்தில் முன்னேற வேண்டுமென்று நினைக்கிறான் அல்லவா? இருவர் கூறுவதும் அதுதானே! விபரீத தோரணையில் எதிர்ப்பு உருவாகிறதே தவிர பெண்ணியம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி ஆனது அல்ல. எல்லா வாதமும் மனிதாபிமான வாதத்தில் வந்து முடிந்தால்தான்    அது நிலைத்து நிற்கும் என்று நான் நம்புகிறேன். என் பால் டம்பளர் கதையை தலித்துகதை என்று முத்திரை குத்தினார்கள். நான் அவ்வாறு நினைத்து எழுதவில்லை. காவல் கதை எழுதிய போது அது பெண்ணீய கதை என்றார்கள். சாதாரணமாக எல்லா கதைகளிலும் இதுபோன்ற வாதங்கள் உள்ளன. தனியாகப் பிரித்துப் பார்க்க வேண்டிய தேவை இல்லை என்பது என் எண்ணம்.

கேள்வி: தற்சமயம் எழுதும் படைப்பாளிகள் பற்றி உங்கள் கருத்து?

பதில்: தற்போது நிறைய பேர் எழுதுகிறார்கள். நன்றாக எழுதுகிறார்கள். கவிதை, சிறுகதை, நாவல் என்று எழுதித் தள்ளுகிறார்கள். பத்திரிகைகள் கூட நிறைய வந்துள்ளன. ஆனால் இவர்கள் எழுதுவதற்கு முன் நிறைய படிக்க வேண்டும். நமக்கு முன்னுள்ள படைப்பாளிகள் என்ன எழுதியுள்ளார்கள் என்றெல்லாம் எதுவும் அறிந்து கொள்ளாமல் டக்கென்று பேப்பரில் பேனாவை வைத்து விடுகிறார்கள். காகிதத்தின் மேல் கலத்தைப் பதித்து விடுகிறார்கள். அப்படி எழுதப்படும் படைப்புகள் தாற்காலிகமானதாகவே இருக்கும். நிலைத்த மதிப்பினைப் பெறாமல் போகும். எனக்கு எப்போதும் தற்கால படைப்பாளிகள் பற்றி இந்த சந்தேகம் உண்டு. கொஞ்சம் எழுதிய உடனே பெரிய ரைட்டர் ஆகி விட்டதாக தம்மைத் தாமே மெச்சிக் கொள்கிறார்கள். இரண்டு கவிதைகள் எழுதி விட்டு கவிஞர் என்று போட்டுக் கொள்கிறார்கள். இது மிகவும் தவறு.

விசுவநாத சத்தியநாராயணா ஞானபீடம் வரை செல்வதற்கு முன் எத்தனை எழுதியுள்ளார்? எத்தனை நூல்கள், நாவல்கள், கவிதைகள், புத்தகங்கள்…! அப்பப்பா…! அவர் தொடாத இலக்கிய வகையே இல்லை. இராமகிருஷ்ண சாஸ்திரி, ஸ்ரீபாத சுப்பிரமணிய சாஸ்திரி போன்றவர்களுக்கு இலக்கியத்தில் ஒரு இடம் கிடைத்துள்ளது என்றால் அவர்கள் நிரந்தரம் முயற்சித்தார்கள். அது போன்ற அதிக முயற்சிகளை இளைய சமுதாயம் செய்வதில்லை என்பது என் சந்தேகம். மிகக் குறைவாகவே முயற்சிக்கிறார்கள். அது மாறவேண்டும். சிறிது எழுதிய உடனே அவர்களுக்கு ஏதோ விருது கொடுத்து விடுகிறார்கள். புகழ்ச்சியில் இவர்களும் மயங்கி விடுகிறார்கள். அதோடு அவர்கள் படைப்புத் திறனும் நின்றுவிடுகிறது. முன்னேறுவதற்கான வழி நிரந்தர முயற்சி, நிறைய வாசிக்கும் பழக்கம் இவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று இன்றைய படைப்பாளிகளைக்  கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி: உங்களுக்கு வந்த விருதுகள் பற்றிக் கூறுங்கள்.

பதில்: எனக்கு முதன்முதலில் ஆந்திரப்பிரதேச அரசு உத்தம உபாத்தியாய புரஸ்காரம் அளித்து கௌரவித்தது. அதன்பிறகு தெலுங்கு விஸ்வ வித்யாலயம் உத்தம எழுத்தாளர் விருது அளித்தது. மதராஸ் கேசரி குடீரம் அமைப்பு கிருகலக்ஷ்மி சுவர்ண கங்கணம் விருது அளித்தது. பின் சென்னை சாகித்திய சமிதி அமைப்பு உகாதி புரஸ்காரம் அளித்தார்கள். மன்மத உகாதி புரஸ்கார் சந்திரபாபு நாயுடு அளித்தார். பின் ஹூஸ்டன் அமைப்பினர் என்னை அமெரிக்காவுக்கு அவர்களே செலவு செய்து அழைத்து ஜீவன சாபல்யம் புரஸ்காரம் அளித்தார்கள். ஜாஷுவா விருது கிடைத்தது. ‘சுசீலா நாராயண ரெட்டி புரஸ்காரம்’ என் ஆசிரியர் சி. நாராயண ரெட்டி தன் மனைவி பெயரில் அளித்தார். நிறைய எழுதினால் விருதுகள் வரும். அதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆனால் அந்த கௌரவத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமென்றால் நாம் நிரந்தரம் முயற்சிக்க வேண்டும். சும்மா இருக்கக்கூடாது என்று என் மனம் எனக்கு சொல்லிக் கொண்டே இருக்கும்.

கேள்வி: தற்போது இணைய வசதிகளைப் பயன்படுத்தி யுடியூபில் கதை சொல்லுகிறீர்கள் அல்லவா?

பதில்: தெலுகு ஒன்டாட்காம் அமைப்பினர் வெளிநாட்டில் வளரும் தெலுங்கு குழந்தைகளுக்காக புராண கதைகள் ஒவ்வொன்றும் பத்து நிமிடம் வருவதுபோல் கூறச் சொல்லிக் கேட்டார்கள். சின்னச் சின்னதாக சரளமான மொழி நடையில் கிளியராக புரியும்படி கூறச் சொல்லிக் கேட்டார்கள். கதை அம்சத்தை பொருத்து 6 நிமிடம், எட்டு நிமிடம், 10 நிமிடத்தைத் தாண்டாமல் ஒவ்வொரு எபிசோடும் கதை சொல்லி வருகிறேன். இதுவரை அவர்கள் ஆபீசுக்கு சென்று பேசிவிட்டு வந்தேன். தற்போது என் வீட்டிற்கே வந்து ரெக்கார்ட் செய்து கொண்டு போகிறார்கள். அது ஒரு 100 எபிசோடு முடிந்து விட்டது. இப்போது பாரதம்லோ பிரேம கதலு ரெக்கார்ட் செய்து வருகிறார்கள். வாரத்திற்கு ஒன்று கூறி வருகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல வரவேற்பு இருக்கிறது. ஒருமுறை நான் மருத்துவமனை சென்றபோது ஒரு முதிய பெண்… அதிகம் படிப்பறிவில்லாதவர்… என்னை அடையாளம் கண்டு, “உங்கள் கதைகளை யூடியூபில் தினமும் பார்ப்பேன் அம்மா!” என்றார்.  

கேள்வி: தற்கால எழுத்தாளர்கள் எழுத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்த இயலுமா அம்மா?

பதில்: எழுத்தில் வரும் பணம் வாழ்க்கைக்குப் போதாது. ஜீவனத்திற்கு வேறு தொழில் செய்துகொண்டே எழுத்தையும் தொடர வேண்டியுள்ளது.

~0~

One Reply to ““நிரந்தரம் எழுதிக்கொண்டே இருக்கிறேன்!” – முக்தேவி பாரதியுடன் ஒரு நேர்காணல்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.