சிலாம்புகளும் சில்லுகளும் – பெண் வரலாறு, குழு சுயசரிதைகள் பற்றி

தமிழாக்கம்: மைத்ரேயன்

இந்த மதிப்புரையில் பேசப்படுவன கீழ்க்கண்ட நூல்கள்:

Square Haunting: Five writers in London Between the Wars, by Franscesca Wade, Tim Duggan Books. 432 pages.

The Equivalents: A Story of Art, Female Friendship, and Liberation in the 1960s, by Maggie Doherty, Knopf, 400 pages.

1928இல் வசதி படைத்த குடும்பம், ஆசையோடு கொண்டாடும் கணவன், மேலும் வெற்றிகரமான இலக்கிய வாழ்வு எல்லாம் கொண்டிருந்தவர் வர்ஜினியா ஊல்ஃப். ஆனால் அத்தனை வளங்களும் கொண்டிருந்த அந்தப் பெண்கூட அறிவார்ந்த வாழ்க்கையை வாழ்வதற்கு எண்ணற்ற தடைகளைச் சந்தித்தார். யோசனையில் ஆழ்ந்தபடி, கேம்ப்ரிட்ஜ் பல்கலையின் அமைதியான புல்வெளியின் குறுக்கே அவர் நடந்து போகையில், அலுவலர் ஒருவர் அவரைத் தடுத்து நிறுத்தி, ஆண்கள் மட்டுமே புல்வெளியின் குறுக்கே நடக்க அனுமதிக்கப்பட்டவர்கள் என்று நினைவூட்டுவது நடக்கும். கூட யாராவது வராமல், தனியே நூலகத்துக்குள் நுழைய அவர் முயன்றால், அவருக்குக் கதவுகள் திறக்காது. பெண்கள் கல்லூரிக்குத் திரும்பி வரும் அவருக்கு, அங்கே வெறும் மாட்டு மாமிசமும், வேக வைத்த களைக்கோசும், இனிப்பு வகையாக உலர்ந்த ப்ளம் பழங்களும்தான் கிட்டி இருக்கும். அதே நேரம் ஆண் ஆய்வாளர்களுக்கு உயர்ந்த ரகத் தட்டை மீன்களும், சமைத்த கவுதாரிப் பறவைகளும் கிட்டும், அதோடு கோப்பைகளில் வைன் ரக மதுவும் முடிவில்லாமல் கிட்டும்.

இறுதிக் கணக்கில் எது முக்கியம் என்றால், அது பணம்தான் என்பதை ஊல்ஃப் புரிந்து கொண்டிருந்தார். ஆண்கள் கல்லூரிகளில் நூலகங்கள் புத்தகங்களால் நிரம்பி வழிந்தன, சோதனைச் சாலைகளில் விலையுயர்ந்த சாதனங்கள் வரிசை வரிசையாக இருந்தன, அமர்ந்து உரையாடும் அறைகளில் வசதியான இருக்கைகளும் இருந்ததால் அவை வளம் கொழித்து இருந்தன. பெண்கள் கல்லூரிகளில் இவை ஏதும் இல்லை. “நம் அம்மாக்கள் நமக்கென்று எந்தச் செல்வங்களையும் விட்டுச்செல்ல முடியாதபடி என்னதான் செய்து கொண்டிருந்தனர்?” என்று ஊல்ஃப் கேட்கிறார், இது அவருடைய ‘எ ரூம் ஆஃப் ஒன்ஸ் ஓன்’ என்ற புத்தகத்தில். அது கேம்ப்ரிட்ஜ் பெண்கள் கல்லூரியில் அவர் ஆற்றிய இரண்டு உரைகளாக ஆரம்பித்து, புத்தக நீளக் கட்டுரையாக ஆன ஒரு நூல். அந்நூலில், பெண்கள் கலைப் படைப்பில் இறங்கினால் எதிர் கொள்ளும் எதார்த்தங்கள் பேசப்படுகின்றன. நமக்கு அந்தக் கேள்விக்குப் பதில் தெரியும்: அவர்கள் குழந்தைகளைப் பெற்று வளர்த்துக் கொண்டிருந்தனர், வீடுகளைப் பராமரித்தனர், ஆண்கள் கல்லூரிகளில் சுவர்களை அலங்கரித்துத் தொங்கிய உருவப்படங்களில் இருக்கும் ஆண்களுக்கு உதவியாக இருந்து கொண்டிருந்தனர். “ஆண்கள் வைன் அருந்துகையில் பெண்கள் ஏன் தண்ணீரைக் குடித்தனர்?” என்று ஊல்ஃப் கேட்கிறார். “ஒரு பாலினம் ஏன் அத்தனை வளமாக இருந்தது, இன்னொரு பாலினம் ஏன் அத்தனை வறுமையாக இருந்தது?” கடைசிக் கேள்வி, அதைவிட மேலும் நெருங்கி வாழ்வுப் பிரச்சினை பற்றியதானது: “கலைப் படைப்புகளை உருவாக்க என்ன சூழ்நிலைகள் தேவைப்பட்டன?”

அந்தப் புத்தகத்தின் தலைப்புதான் ஊல்ஃபின் கேள்விக்குப் பதில் என்று கருதப்பட்டது: புனைவிலக்கியம் எழுத வேண்டினால், ஒரு பெண்ணுக்குத் தேவையானவை, “பணமும், அவளுக்கென்று ஓர் அறையும்” – மாற்றிச் சொன்னால், மனதளவிலும், உடலளவிலும் வாழ்வில் ஊடுருவல்களைத் தடுக்கக்கூடிய பாதுகாப்பும், பொருள் உதவியும் தேவை. ஆனால் இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வது அவசியம் என்றாலும், அவை மட்டுமே பெண் எழுத்தாளர்களும், கலைஞர்களும் சந்தித்து வந்திருக்கிற பல நூற்றாண்டுகளின் அலட்சியம், அவநம்பிக்கையூட்டல், எதிர்ப்பு, மேலும் புறக்கணிப்பு ஆகியவற்றை மீறிவிடப் போதுமானவை அல்ல. வரலாற்றாளர்கள் எப்போதுமே ‘பெரிய மனிதர்களின்’ வாழ்வுகளிலேயே கவனம் குவித்து வந்திருப்பதால், பெண்கள் தங்களுடைய அறிவுப் பாரம்பரியம் பற்றி விரிவான விளக்கவுரைகள் ஏதும் இல்லாத குறையை எதிர் கொள்கிறார்கள். பெண்கள் கடந்த காலத்தில் எப்படி வாழ்ந்தார்கள் என்பது பற்றித் தனக்குத் தெரிந்திருப்பது மிகக் குறைவானதே என்று அறிகிற ஊல்ஃப், “பதிவு செய்யப்படாத வாழ்க்கை”எத்தனை சேர்ந்து குவிந்திருக்கிறது என்பதைப் பற்றி அங்கலாய்க்கிறார். தம் முன்னோடிகளான தாய்களைப் பற்றிய கதைகள் ஏதுமில்லாமல், பெண்களுக்குப் பின்பற்ற முன்மாதிரிகள் யாரும் இல்லை. “சாதனையான படைப்புகள் தனியாகவும், ஒற்றையாகவும் பிறந்தன அல்ல; அவை பொதுவில் நிகழ்ந்த பல்லாண்டுச் சிந்தனைகளின் விளைவுகள்,” என ஊல்ஃப் எழுதுகிறார். பெண்களாக, “நாம் நம் தாய்களின் மூலமே கடந்த காலத்தைச் சிந்திக்கிறோம்.”

ஊல்ஃப் இந்த சிந்தனைகளை உருவாக்கிக் கிட்டத்தட்ட ஒரு நூறாண்டு காலம் ஆகி விட்டது, பெண்களின் அறிவார்ந்த வாழ்வில் பெரும் புரட்சி நடந்தேறி இருக்கிறது. 1948இல் கேம்ப்ரிட்ஜ் பல்கலை பெண்களுக்குப் பட்டம் வழங்கத் தொடங்கியது; 2005ஆம் வருடத்தின்போது, அப்பல்கலையில் பட்டம் வாங்கியவர்களில் சரிபாதி (50%) பெண்களாக இருந்தனர். அமெரிக்க ஐக்கிய நாடுகளில், தற்போது பல்கலைப் பேராசிரியர்களில் 49% பேர் பெண்கள் (ஆனால், நிரந்தரமாக்கப்பட்ட பேராசிரியர் நிலைகளில் 38%தான் பெண்கள்.) VIDA என்கிற பெண்ணிய அமைப்பும், இதர அமைப்புகளும் பத்திரிகையாளர்களில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதைச் சுட்டி இருக்கின்றன, பல பிரசுர நிறுவனங்கள் இந்தக் குறைக்குப் பதில்வினையாக, தங்கள் அமைப்புகளில் வெளியாகும் விஷயங்களில் பெண் பத்திரிகையாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கத் துவங்கி உள்ளன. குறிப்பாக அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பொருத்தவரை – அதிலும் வெள்ளையரல்லாத பெண்களின் பிரதிநிதித்துவத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம் – நாம் போகவேண்டிய தூரம் மிக அதிகம். ஆனால் ஊல்ஃப் வர்ணிக்கிற மாதிரியான அமைப்பு ரீதியான, திட்டமிட்ட, இடைவிடாத, ஆன்மாவை நசுக்குகிற ஏற்றத்தாழ்வு ஓரளவுக்குக் குறைக்கப்பட்டிருக்கிறது.

ஒப்பீட்டில் மிக மெதுவாகவே மாறி வருவன எவை என்று பார்த்தால் பெண்களின் வரலாற்றையும், குறிப்பாக வாழ்க்கைச் சரிதங்களையும் எழுதுவது அதிகம் மாறவில்லை.  பெண்களின் வாழ்க்கைகள் “வரலாற்றில் அநேகமாக இல்லவே இல்லை,” என்று எழுதிய ஊல்ஃப், “ஜூடித் ஷேக்ஸ்பியர்” என்ற பெண்ணின் வாழ்வைக் கற்பனை செய்கிறார். அவளுடைய மேதமை அங்கீகரிக்கப்படாமல் விடப்பட்ட, ஷேக்ஸ்பியரின் சகோதரியாகக் கற்பனை செய்யப்பட்ட பாத்திரம் அது. 1970இல் நான்ஸி மில்ஃபோர்ட் , ஒரு முன்னோடியாகத் திகழும் புத்தகமான, ‘ஜெல்டா’ என்ற வாழ்க்கைச் சரிதத்தைப் பிரசுரிக்கிறார். ஜெல்டா ஃபிட்ஸ்ஜெரால்டின் வாழ்க்கைச் சரிதமான அது, அவருடைய அசாதாரணமான படைப்புத் திறமையை வெளிப்படுத்தியது. மேலும், அவருடைய கணவரான ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட் தன் நாவல்களில் ஜெல்டாவின் வாழ்க்கையைப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் குற்றம் சாட்டியது. மேலும் சில புத்தகங்கள் வெளியாகின: ஜீன் ஸ்ட்ரௌஸின்  ‘ஆலிஸ் ஜேம்ஸ்’ (ஹென்ரி ஜேம்ஸின் சகோதரியின் சரிதம்), ப்ளான்ச் வீய்ஸென் குக் எழுதிய எலியனார் ரூஸ்வெல்ட்டின் வாழ்க்கைச் சரிதப் பல புத்தகத் தொகுப்பு, ஸ்டேஸி ஷிஃப்ஃபின்  ‘வியெரா’ (திருமதி. விளாடிமீர் நபொகாவ்).  ஆனால், இந்தப் புத்தகங்கள் எல்லாம், அவை எல்லாமே முக்கியமானவை என்றாலும், இன்னமும் பெண்களை அவர்கள் புகழ்பெற்ற ஆண்களோடு கொண்டிருந்த உறவு என்ற சட்டகத்துக்குள் பொருத்தித்தான் பார்க்கின்றன; எழுத்தாளர் டியான் ஜான்ஸன் சொல்வதுபோல, அவர்களது வாழ்க்கைகள்,  (சற்று) “கீழானவர்களின் வாழ்க்கைகள்.” நான் ஒரு விமர்சகி, வாழ்க்கைச் சரிதம் எழுதியவள், என் அனுபவத்திலேயே நான் இதைப் பார்த்திருக்கிறேன், (பிரசுர நிறுவனங்களில்) பதிப்பாசிரியர்கள் பல நேரங்களிலும் பெண்களின் முழு நீள வாழ்க்கைச் சரித்திரங்களைப் பிரசுரிப்பதில் தயக்கம் காட்டுவார்கள். (அந்தப் பெண்கள்) எத்தனை சாதனையாளர்களாக இருந்தாலும், அவர்களின் பெயர்கள் அன்றாட உரையாடலில் சரளமாகப் புழங்கும் பெயராக இருந்தாலொழிய, அந்தப் புத்தகங்கள் பிரசுரிக்கப்பட்டதில்லை – இது உண்மையிலேயே தீர்வைக் கிட்டாமல் ஆக்கும் அணுகல்.

வளமும், சக்தியும் மிக்க,”ஸ்கொயர் ஹாண்டிங்’ மற்றும் ‘த எக்விவலெண்ட்ஸ்’ எனும் இரு நூல்களிலும், ஃப்ரான்ஸெஸ்கா (உ)வேட், மற்றும் மாகி டாஹெர்ட்டி ஆகிய இரு விமர்சகர்களும், அறிவுலக வரலாற்றைத் திருத்தி எழுதப் பெண்களின் வரலாற்றை எழுதும்படி ஊல்ஃப் விடுத்த அழைப்பை ஏற்றுச் செயல்பட்டிருக்கிறார்கள். இரண்டு புத்தகங்களும், குழுவின் வாழ்க்கை வரலாறு என்று சில சமயம் அழைக்கப்படும் வகையை எழுதும் நூல்கள். அவை பொதுவான ஓர் அம்சத்தைக் கொண்டுள்ள நபர்களை ஒரு குழுவாகத் திரட்டி அணுகுபவை. (உ)வேட் தன் புத்தகத்தில் ஒரே முகவரியைக் கொண்டவர்களையும், டாஹெர்ட்டி, சுயேச்சையான ஆய்வுகளுக்கான ராட்க்ளிஃப் இன்ஸ்டிட்யூட் அமைப்பின் துவக்கக் கட்டங்களில் பங்கெடுத்தவர்களையும்  திரட்டி, அந்தக் குழுவினரின் வரலாறுகளைப் பின்னிய கதைகளை எழுதி இருக்கின்றனர். பொதுவாக இந்த வகை வரலாறுகள், முதல் பரிசை வெல்ல முடியாதவர்களுக்கு வழங்கப்படும் ஆறுதல் பரிசு போன்றவை, முழு வாழ்க்கை வரலாறு எழுதப்படும் அளவு முக்கியம் அல்லாதவர்களுக்கு இந்த மாதிரிப் பலரின் வரலாறுகளை இணைத்து எழுதுவது நடக்கிறது. ஆனால் இந்த இருவரும் இப்படிப்பட்ட வரலாற்றிற்குச் சாதகமாக, வலுவான வாதங்களை முன்வைக்கின்றனர்.

பெண் ஆய்வாளர்கள் மற்றும் கலைஞர்களின் வாழ்க்கைக் கதைகளை எழுதிய முறையின் மூலம் – ஆய்வுகள் மற்றும் படைப்புகள் பற்றியும், கூடவே மண வாழ்வு, கூட்டாளி வாழ்வு, பெண்களிடையே நட்பு போன்றனவற்றையும் பற்றிய கதைகள் அவை – அவற்றின் கதை மாந்தர்களின் வாழ்வில் செயல்படும் சமூக மற்றும் கூட்டு வாழ்க்கையின் சக்தியை அவர்கள் முக்கியமாக்குகிறார்கள். (உ)வேட் மற்றும் டாஹெர்ட்டி, ஆண்களின் வாழ்க்கை வரலாறுகளின் மரபு வழியான,  தொட்டில் முதல் இடுகாடு வரை விவரிக்கும் முறை, பல நேரம் பெண்களின் வரலாறுகளுக்குப் பொருந்தாத முறை என்று சுட்டுகிறார்கள்: இது பெண்கள் வாழ்வுகள் இந்த வகைக் கதை சொல்லலுக்கு ஏற்றபடி சுவாரசியமானவை அல்ல என்பதால் அன்று, மாறாக, இந்த வகை விவரணை, ஆழமாக, எளிதில் மீட்டுவிட முடியாதபடி நுண்மையான பல்லுறவுப் பிணைப்புகளால் பின்னப்பட்ட வலையுலகில் நடக்கும் பெண்களின் வாழ்க்கைகளை விவரிப்பதற்குப் போதுமானதன்று என்பதாலேயே.

(உ) வேட் ‘ஸ்கொயர் ஹாண்டிங்’ புத்தகத்தை ஒரு நிலப் பகுதியை மையமாகக்கொண்டு அமைக்கிறார்: மெக்லென்பர் சதுக்கம் என்பது அது. லண்டனின் ப்ளூம்ஸ்பரி மாவட்டத்தில் அவர் நோக்கும் ஐந்து எழுத்தாளர்களும் தம் வாழ்வின் முக்கியமான பகுதியைச் செலவிட்டிருக்கிறார்கள். ஊல்ஃபைத் தவிர, எச்.டி (ஹில்டா டூலிட்டிலின் புனைப்பெயர் அது), கவிஞர்; டாரதி ஸேயர்ஸ், மர்ம நாவலாசிரியர்; ஜேன் எல்லென் ஹாரிஸன், செவ்வியலாளர்; ஐலீன் பவர், வரலாற்றாளர். இவர்கள் வாழ்க்கைக் கதையைத் தொகுத்திருப்பதும், முதல் தோற்றத்தில் பொருந்தாததாகத் தெரியலாம், ஆனால் மேலான தொகுப்பு முறையாகத்தான் இருக்கிறது. (உ)வேடின் கதை மாந்தர் அந்தச் சதுக்கத்தில் வெவ்வேறு கால கட்டங்களில், பல்வேறு கால அவகாசத்துக்கு வாழ்ந்திருந்தவர்கள், இவர்கள் ஒருவரோடொருவர் சந்திக்க வாய்ப்பேதும் எழுந்திருக்கவில்லை. ஆனால் ஒவ்வொருவரும் அவர்களுடைய அறிவுப் பயணத்தைத் தொடர உதவக்கூடிய வாழ்வாதார நிலையைத் தேடும் விதமாகத்தான் இந்தச் சதுக்கத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் முயன்றது எதற்கு என்று விவரித்து (உ)வேட் எழுதுகிறார்:

ஊல்ஃப், இவற்றை எல்லாம் தேடிப் பெறுமாறு பெண் எழுத்தாளர்களை ஊக்குவித்தார்: தூலமாகவும், ஒரு குறியீடாகவும் அவர்களுக்கென்று ஓர் அறை; அவர்கள் விருப்பப்படி வாழ, வேலை செய்ய, அன்பு செலுத்த மற்றும் எழுத உதவும் வகையான வீட்டுச் சூழல்.

இவர்களிடையே இருந்த ஒற்றுமைகளைக் கவனிக்கும் (உ)வேட் மெக்லென்பர்க் சதுக்கம் என்பதே, “தன் சரித்திரத்தினுள் ஊல்ஃப் என்ன தேடினாரோ அதை ஒத்த பெண்களுக்கான மரபு ஒன்றைக் கொண்டிருக்கலாம்,” என்று அறிகிறார்.

(உ)வேடின் மாந்தர்களில் பெரும்பாலானோர் விக்டோரிய சகாப்தத்தின் இறுதிக் கட்டங்களில் பிறந்தவர்கள், அது இங்கிலிஷ் சமூகத்தில் பெரும் மாறுதல்களைக் கண்ட காலம். அன்று வழக்கமாக வீடுகளில் வீட்டுக்கார ஆணுக்குத் தனக்கென்று ஒரு படிப்பறை, யாரும் உள்ளே புகக்கூடாத, அந்தரங்க வெளியாக இருந்தது; பெண்களின் புழங்குவெளியாக வரவேற்பறை இருந்தது, அங்கு அவர்கள் விருந்தினரை வரவேற்பார்கள், குடும்ப வாழ்வை வழி நடத்தினார்கள். ஆனால் 19ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து துவங்கி, முதல் உலகப் போருக்குப் பிறகு வளர்ந்துவந்த மக்கள் தொகையில் மாறுதல் ஏற்பட்டுப், பெண்களில் உபரியான தொகை இருந்தது. இந்த அதிகப்படியான பெண்களின் எண்ணிக்கையால், பெண் கல்விக்கும், வீடுகளுக்கு வெளியே வேலை வாய்ப்புகளுக்கும் என்று புதிய வாய்ப்புகள் தோன்றின. 1909 இல், வீடுகளில் வசிப்பது பற்றிய சட்டத்தில் ஏற்பட்ட மாறுதல்களால், மெக்லென்பர்க் சதுக்கத்தில் உள்ள வீடுகளிலும், இதர இடங்களிலும் வீடுகளில் வாடகைக்குக் குடி இருப்போர் அனுமதிக்கப்பட்டனர், இதனால் பெண்கள் தாம் மட்டுமோ அல்லது நண்பர் ஒருவர் அல்லது உடன் வேலை செய்பவரோடு வீடுகளில் தங்குவது சாத்தியமாயிற்று, இந்த வகை வாசத்தில், உணவும், வீட்டைப் பராமரிப்பதும், வீட்டுச் சொந்தக்காரர் குடும்பப் பெண்களால் கவனித்துக் கொள்ளப்பட்டன.

திருமணம் செய்து கொள்வதா, அப்படிச் செய்து கொண்டால் அந்த உறவின் தேவைகள் பற்றி எப்படி உடன்படிக்கை செய்து கொள்வது – போன்ற தேர்வுகள் ஒரு பெண்ணின் வாழ்வில் அவர் அறிவுசார் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய விஷயங்களாக இருந்தன. (உ)வேட் யாரைப் பற்றி எல்லாம் எழுதினாரோ அவர்கள் எல்லாரும், எப்படியோ இயங்கக்கூடிய உறவு ஒன்றை உருவாக்கிக்கொள்ள முடிந்தவர்கள், குறைந்தது தற்காலிகமாகவாவது அப்படி உறவுகளை அடைந்திருந்தனர். திறமை நிறைந்த அமெரிக்கக் கவிஞரான எச்.டி – துவக்கத்தில் எஸ்ரா பௌண்டின் ‘படிம’க் கவிதை இயக்கத்தோடு பொருத்திப் பார்க்கப்பட்டவர், அது அவருடைய விருப்பத்துக்கு எதிராக நடந்த விஷயம். எச்.டி சக கவிஞரும், செவ்வியலாளரும், தன்னைவிட ஆறாண்டுகள் இளைஞருமான ரிச்சர்ட் ஆல்டிங்டனை மணந்து கொண்டபோது, வழக்கத்துக்கு மாறான, இருவரிடையே சம உரிமை நிலவும் ஒரு திருமணமாக அது இருக்கும் என்று அவர்களின் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முதல் உலகப்போர் மூண்டெழுந்தபோது, ஆல்டிங்டன் அவர்கள் வசித்த அதே குடித்தன விடுதியில், பரண் அறை ஒன்றில் குடியிருந்த பெண் ஒருத்தியுடன் உறவுகொள்ளத் தொடங்கினார்; இறுதியில் எச்.டி அந்த மண வாழ்க்கைக்கான அடுக்ககத்தைக் கைவிட்டு விட்டு, தனியாக ஒரு அறையை மேல் மாடியில் எடுத்துக்கொண்டு பின்னொதுங்கினார். கார்ன்வால் நகரில் இருந்த அவருடைய நண்பர் ஸீஸில் க்ரே, தன்னோடு வந்து இருக்குமாறு அவருக்கு அழைப்பு விடுத்தபோது, சங்கடமான மண உறவிலிருந்து தப்பிக்க அவருக்கு வாய்ப்பு கிட்டியது. ஆனால் அந்த நண்பருடைய உறவால் எச்.டி கர்ப்பம் தரித்தபோது, அவர் எச்.டியைக் கைவிட்டுவிட்டார்.

அந்நாள்களில், மண வாழ்வில் இல்லாத, ஆதரவுமில்லாத பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பது என்பது பெரும் நாசத்தைக் கொணரும். ஏற்கெனவே மணமாகி இருந்தாலும், வேறு பெண்களிடம் உறவு கொண்டு ஒவ்வொருத்தியையும் கைவிட்டுப் போகும் வழக்கம் கொண்டிருந்த ஓர் ஆணுடன் கொண்ட உறவால் கர்ப்பம் தரித்த டாரதி ஸேயர்ஸுக்கு, அந்த நபரின் மனைவி, எதிர்பாராத விதமாக, மிக்க தாராள மனதோடு, கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்குப் பிறகும் பராமரிப்பை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார் – சகிக்க முடியாத சூழ்நிலையில் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு அளிக்க முன்வந்தது நம்ப முடியாதபடி ஓர் அதிசய நிகழ்வு. எச்.டிக்கு இதைவிடவும் அதிகமாக அதிர்ஷ்டமடித்தது, அவர், ஓர் செல்வந்தக் குடும்ப வாரிசும், கவிதைகளை நேசிப்பவருமான ஆன்னி வினிஃப்ரெட் எல்லர்மான் என்ற அமெரிக்கப் பெண்ணைச் சந்தித்தார். அந்தப் பெண் ப்ரெய்ஹர் என்ற ஒற்றைப் பெயரால் அறியப்பட்டிருந்தார். எச்.டி, ஃப்ரான்ஸெஸ் பெர்டிடா என்ற ஒரு பெண் குழந்தையைப் பெற்ற பின், ப்ரெய்ஹர் எச்.டியின் பராமரிப்பை மேற்கொண்டார், அவரது பிள்ளைப் பேறுக்கு அடுத்த காலகட்டத்தில் இந்த ஆதரிப்பு இருந்தது. அந்தக் குழந்தைக்கும், முதல் இரண்டு வருடங்களுக்கு அருகிலிருந்த ஒரு சேய் பராமரிப்பு நிலையத்தில் கவனிக்கப்பட ஏற்பாடு செய்திருந்தார். 1921 இலிருந்து, பெர்டிடா இந்த இரு பெண்களால் வளர்க்கப்பட்டார். (அவர்களுடைய நெருக்க உறவு அடுத்த 40 வருடங்கள் நீடித்தது.) அது, “எச்.டியின் படைப்பு வேலையைச் சுற்றியே அமைக்கப்பட்டிருந்த ஓர் அன்பான குடும்பம்,” என்று (உ)வேட் எழுதுகிறார். எச்.டி எழுத ஆரம்பிக்கும்போது, ப்ரெய்ஹர் எப்படித் தன்னை அந்த படிப்பறையின் வாயிலிலிருந்து தூக்கி எடுத்துப் போய்விடுவார் என்று பெர்டிடா நினைவு கூர்கிறார்; தன் அம்மா வேலை செய்யும்போது அவரைத் தொல்லை செய்யக் கூடாதென்று மிகச் சிறு வயதிலிருந்தே அந்தப் பெண்ணுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது. (சமகாலப் பெண் எழுத்தாளர்களில் எத்தனை பேருக்கு அப்படி ஒரு சுதந்திரம் அனுபவிக்கக் கிட்டி இருக்கும்?) எச்.டி அந்த வருடங்களில் சில சுயசரிதை போன்ற நாவல்களைத் தொடராக எழுதினார், அவற்றில் தன் திருமண வருடங்களில் தனக்கேற்பட்ட அவமதிப்புகளிலிருந்து மீண்டு வருவதைச் செய்தார், தன்னை ஒரு கலைஞராகப் புதுப்பித்துக் கொண்டார். (உ)வேட் கதைகளாக்கிய இதர பெண்களைப்போல, எச்.டியும், “நிஜமான சுதந்திரம் என்பது ஒருவர் தன் விருப்பங்களுக்கேற்ப வாழ முடிவதில்தான் பிறக்கிறது,” என்று புரிந்து கொண்டிருந்தார்.

புராணங்களையும், சடங்குகளையும் பற்றிய ஆய்வுகளில் படைப்பூக்கத்தோடு இயங்கிச் சாதித்த ஜேன் எல்லென் ஹாரிஸனும் அமைதியையும், ஆதரவையும் இன்னொரு பெண்ணோடு அவர் மேற்கொண்ட ஒரு குடும்ப வாழ்வில் பெற்றிருந்தார் – ஆனால் இது அவருக்கு வாழ்வில் பல காலம் கழித்துத்தான் கிட்டியது. “இங்கிலாந்தின் மிக புத்திசாலியான பெண்” என்று தன் வாழ்வின் துவக்கக் கட்டத்திலேயே பெயர் பெற்றிருந்த அவர், நியூனம்[i] கல்லூரியில் படிக்க கல்வி உதவித் தொகை ஒன்றை வென்றார், ஆனால் பல பத்தாண்டுகள் கழிந்தும் முக்கியமான கல்லூரிப் பதவிகள் இவருக்குக் கிட்டாமல் இருந்தன. ஹாரிஸனுக்கு ஐம்பதாவது வயது நெருங்கும்போதுதான் ஓர் ஆய்வு உதவித் தொகை கிட்டியதால் பல்கலைக்கு அவர் திரும்புகிறார். அடுத்த இருபது வருடங்களில், அவர் பல புத்தகங்களைத் தொடராகப் பிரசுரிக்கிறார், “ஆவியிறங்கியவராக, மாயங்கள் செய்பவராக, கையாளப்பட முடியாத ஆபத்து நிறைந்தவர்களாக – பெண்கள் கருதப்பட்டதால் அவர்கள் பண்டைச் சடங்குகளின் மையத்தில் பங்கு வகித்தனர் என்று நிறுவும் நூல்கள் அவை. ஊல்ஃப், பௌண்ட், டி.எஸ். எலியட், ஈ.எம். ஃபார்ஸ்டர், மற்றும் டி.எச். லாரன்ஸ் ஆகியோர் இவருடைய புத்தகங்களிலிருந்து படைப்பூக்கம் பெற்றவர்களில் சிலர். ஆண் வழிச் சமூகத்திற்கு இவரது திருத்தப்பட்ட செவ்வியல் வரலாறுகள் சக்திமிக்க சவாலாக இருந்தன, அந்தச் சமூகப் பார்வையின் வேர்கள் எத்தனை மெலிந்தவை என்பதை நிரூபித்தன என்று ஹாரிஸனின் வாசகர்கள் அறிந்தனர். பண்டைக் கிரேக்கத்தைத் தன் ஆய்வுப் பொருளாக அவர் தேர்ந்தெடுத்ததுமே – அதன் வார்த்தைகளின் எழிலுக்காகவே ‘இறந்த’ ஒரு மொழியைக் கற்பதற்கு ஏற்றதாகத் தான் தேர்ந்தெடுத்ததாக அவர் சொல்லி இருந்தார் – புரட்சிகரமான முடிவு, ஏனெனில் நெடுங்காலமாகப் பெண்களின் கல்வி ஒரு மனைவியாகவும், தாயாகவும் இருக்க எவை பயன்படுமோ அவற்றைக் கற்பிப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தது.

எச்.டி மற்றும் ஸேயர்ஸைப் போலவே, ஹாரிஸனும் காதலில் ஏமாற்றங்களால் துன்பப்பட்டவர், அவர் மணப்பதற்கு முடிவு செய்திருந்த ஒருவர் திடீரென்று இறந்து போனார். “திருமணம் என்பது, குறைந்தபட்சம் பெண்ணுக்காவது, அவளுடைய வாழ்வை உன்னதமாக்கும் இரு அம்சங்களுக்கு – நட்பு மற்றும் கல்வி ஆகியன அவை – தடைக்கல்லாக ஆகிறது,” என்று தன் சுயசரிதையில் அவர் எழுதினார். ஆனால் அவருடைய எழுபதுகளில், ஹோப் மெர்ர்லீஸ் என்ற, தன்னைவிட முப்பத்தி ஏழு வருடங்கள் இளையவரான ஒரு மாணவரைச் சந்தித்தார், அவர்கள் இருவரும் ஒரு கூட்டு வாழ்க்கையைத் துவங்கினர், அது ஹாரிஸனின் இறப்புவரை நீடித்தது. (உ)வேட் இந்த இருவரின் உறவு பற்றி எழுதுகையில் விவரங்களைத் தருவதில் தெளிவற்று எழுதுகிறார், ஆனால் அந்தக் காலகட்டத்தில், பெண்களிடையே தற்பாலுறவுகளை வருணிக்கப் போதுமான சொற்கள்கூட இருக்கவில்லை என்றும் சுட்டுகிறார். 1921 இல் பிரிட்டிஷ் பாராளுமன்றம், பெண் தற்பாலுறவுகளைக் குற்ற நடவடிக்கையாக ஆக்குவது பற்றி விவாதித்தது (அதோடு ஆண் தற்பாலுறவும் குற்ற நடவடிக்கையாக்கப்படலாம் என்று யோசிக்கப்பட்டது), ஆனால் (உ)வேட் எழுதுகிறார், “இந்தக் கேள்வி ஒத்தி வைக்கப்பட்டது, ஏனெனில் பெண்கள் இந்த வகை உறவை ஒரு கருத்தாகக்கூட யோசித்திருக்க மாட்டார்கள், அவர்கள் புத்தியில் இந்த யோசனையை நுழைக்காமல் இருப்பதே நல்லது என்று கருதி இது கைவிடப்பட்டது.” குறிப்பிட்ட விவரங்கள் எப்படி இருந்தாலும், அவர்கள் சந்தித்துச் சில காலம் ஆனபின்பு, ஹாரிஸன் கேம்ப்ரிட்ஜை விட்டு விலகிவிட்டார், பெண்களுக்குப் பட்டம் வழங்கப் பல்கலை மறுத்ததால் அவருக்குக் கோபம் எழுந்தது என்பதே காரணம். அந்த ஜோடி பாரி(ஸ்) நகரத்தில் மூன்று வருடங்கள் வாழ்ந்தனர், அங்கு ரஷ்ய மொழியைக் கற்றனர், ரஷ்யாவை விட்டுவந்து அங்கு குடியேறியவர்களின் சமூகம் ஒன்றில் நண்பர்களை அடைந்திருந்தனர். லண்டனுக்குத் திரும்பியபின், மெக்லென்பர்க் தெருவில், சதுக்கத்துக்கு அருகில் இருந்த ஒரு ‘வினோதமான சிறிய வீட்டில்’ குடியேறினர், அங்குதான் ஹாரிஸன் தன் இறுதிப் புத்தகத்தை எழுதினார். ‘த புக் ஆஃப் த பே(எ)ர்’, என்ற அது, ரஷ்ய நாடோடிக் கதைகளில் இருந்த குலமரபுச் சின்னங்களின் பயன்பாடுகள் பற்றிய ஆய்வு. ஹாரிஸனின் விசிறியான ஊல்ஃப், தன் ‘எ ரூம் ஆஃப் ஒன்ஸ் ஓன்’ புத்தகத்தில் அவரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். 77 வயதில் ஹாரிஸன் இறந்த போது, ஊல்ஃப்,  துக்க விசாரிப்புக்கென்று, ஒரு வரிக் குறிப்பை மெர்ர்லீஸுக்கு அனுப்பினார்: “ஆனால், உங்களுக்கு என்னவெல்லாம் கிட்டியிருந்தன என்று நினைவில் கொள்ளுங்கள்.”

(உ)வேடின் புத்தகத்தில் இருந்த வினோதமான விவரங்களில் ஒன்றில், ஹாரிஸனும் மெர்ர்லீஸும் உரையாடல்களில் தம்மிடையே ஒரு பதிலி உருவாகப் பயன்படுத்திய பொம்மைக் கரடி ஒன்றைச் சுற்றி விஸ்தாரமான புனைவுகளைப் பின்னியிருந்தனர் என்று குறிக்கிறார். இத்தகைய அந்தரங்கங்கத் துணுக்குகள் அபூர்வமாகவே கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த வாழ்க்கைக் குறிப்பில் (உ)வேடின் கதை மாந்தரின் படைப்புகள் மிக்க கனிவோடும், விரிவாகவும் அலசப்படும்போது, அவர்களின் தனிநபர் பண்புகள் கிட்டாதனவாக இருப்பது சற்று ஏமாற்றம் தருகிறது. இது முழுதும் (உ)வேடின் குறை அன்று: ஹாரிஸன் தன் சொந்த வாழ்வு குறித்த காகிதங்களை எல்லாம் எரித்திருந்தார். அவற்றோடு சேர்த்து அழிக்கப்பட்டவை ஐலீன் பவரின் ஆவணங்கள். பவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் ஒரு விரிவுரையாளராக இருந்தவர், மத்திய கால யூரோப்பில் அன்றாட வாழ்வு எப்படி இருந்தது என்பது பற்றி எழுதியவர். ஹாரிஸனைப் போல ஐலீன் பவரும்,

“வரலாறு என்பது “பிரபலமான ஆண்களின் வாழ்வுச் சரிதம்” என்பது பொதுவாக ஏற்கப்பட்ட கோட்பாடாக இருந்த நிலையை மாற்ற வேண்டுமெனவும், சாதாரண மனிதர்களைப் பற்றிப் பேசுவது வரலாற்றுக்குக் கண்ணியக் குறைவு என்ற கருத்தை உடைக்க வேண்டுமென்றும் தீவிரமான விருப்பம்” கொண்டிருந்தார், என  (உ)வேட் எழுதுகிறார்.

பவர் எழுதியவற்றில் தினசரி வாழ்வு பற்றிய குறிப்புகள் சில இன்னும் உள்ளன – காட்டாக, ஒரு விருந்துக்கான அழைப்பில், “சமையலறையில் நடனம்” என்ற உறுதிமொழியும், “காலை நேர ஆடைகள்” அணியச் சொல்லும் சுட்டுக் குறிப்பும் – மேலும் கிட்டுமா என்று ஆர்வத்தைக் கிளறுகின்றன.

“நாம் சிலாம்புகளும், சில்லுகளும்; அவர்கள் கருதி வந்ததுபோல, மாசற்ற, ஒற்றை உருவான, முழுதும் ஒத்தாற் போன்றவர்கள் அல்லர்,” எனத் தன் சுயசரிதையில் அவருடைய பல கவனிப்புகளில் ஒன்றில் எழுதுகிறார். அவர் மெக்லென்பர்க் சதுக்கத்தில் குடியேறுகையில் இரண்டாம் உலகப் போர் மூண்டது, அக்டோபர் 1940 இல், சூழலில் எங்கும் குண்டுகள் விழுந்து கொண்டிருந்தபோது, அவர் அங்கிருந்து தப்பித்து ஓடினார். இருந்தபோதும் அது அவருக்கு மிக்க பயனுள்ள வருடமாக இருந்தது: அவருடைய நண்பரும், ஓவியரும், அருங்காட்சியகத்தில் காப்பாளருமான ராஜர் ஃப்ரையின் வாழ்க்கை வரலாற்றை எழுதி முடித்தார்; தன்னுடைய இறுதி நாவல், ‘பிட்வீன் த ஆக்ட்ஸ்’ என்பதை எழுதி முடித்தார்; ஒரு நினைவுக் குறிப்பு நூலுக்கும், இங்கிலிஷ் இலக்கியத்தைப் படிக்கும் திட்டத்திற்கும் குறிப்புகளை எழுதி முடித்தார், ஆனால் அந்தப் படிப்பை அவர் பிறகும் முடிக்கவில்லை. இத்தனையையும் அவர் செய்ய முடிந்ததற்கு ஒரு காரணம் அவருடைய மணவாழ்வு, அபூர்வமாக அவருக்குப் பாதுகாப்பான, நிலையானதோர் ஏற்பாடாக, அவருடைய தேவைகளுக்கு இணக்கமானதாக அதை அவரால் அமைத்துக்கொள்ள முடிந்திருந்தது. லியொனார்ட் ஊல்ஃப் அவரை மணக்க விருப்பம் தெரிவித்தபோது, வர்ஜீனியா அவரிடம் அது ஒரு புது வகைத் திருமணமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். அதில், “நான் என் வழியைக் காண முடிய வேண்டும்….. நாம் இருவருமே அபாரமான ஜீவன் உள்ளதான ஒரு மண வாழ்வை விரும்புகிறோம், அது எப்போதும் உயிரோடு, எப்போதும் கதகதப்பாக இருக்க வேண்டும். அநேகத் திருமணங்களைப்போல உயிரற்றதாக, ஏதோ அகஸ்மாத்தாக நடந்ததுபோல இருக்கக் கூடாது.” லியோனார்டிடம் அவருக்கு உடல் ரீதியான கவர்ச்சி இல்லை – அவருடைய மிக நெருக்கமான உறவு எழுத்தாளரும், தோட்டங்களை வடிவமைப்பவருமான வீட்டா ஸாக்வில் -(உ)வெஸ்ட்டோடுதான் இருந்தது என்று தோன்றுகிறது – ஆனால் அவர்களிடையே இருந்த பகிர்மானம் கொண்ட வாழ்க்கையையும், பரஸ்பரம் இருந்த நம்பகத் தன்மையையும், ஊல்ஃப் நாளடைவில் மிக நேசிக்கத் தொடங்கினார். அவரும் லியோனார்டும் சேர்ந்து ஹாகார்த் பிரசுரம் என்கிற அவர்களுடைய சிறு பிரசுர நிறுவனத்தை நடத்தினார்கள்; லியொனார்ட் இவருடைய மன நலத்தின்மீது கவனமாக இருந்தார், ஊல்ஃப் ஏதேனும் ஆபத்தில் இருப்பதாகத் தெரிந்தால் உடனே மருத்துவர்களிடம் கவன ஈர்ப்புச் செய்தார். அவருக்குத் தான் எழுதிய தற்கொலைக் குறிப்பில் ஊல்ஃப் எழுதினார், “நாம் இரண்டு பேரும் கொண்டிருந்த சந்தோஷத்தைவிடக் கூடுதலான மகிழ்வோடு, வேறு எந்த இரண்டு பேரும் இருந்திருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.”

அவர் மெக்லென்பர்க் சதுக்கத்தில் வாழ்ந்த காலத்தில், ஊல்ஃப் ஒரு புது வகை இலக்கிய ஆய்வை எழுதுவதாகக் கற்பனை செய்து பார்த்தார். “பாலாடைக் கட்டியை அறுக்கும் கயிறு போல[ii],” இங்கிலிஷ் இலக்கியத்தின் வரலாற்றூடாகத் தாம் கடக்க வேண்டும் என நினைத்தார், அவரது குறிக்கோள், “ஒரு நூல்கண்டின் ஓர் இறுதி முனையைக் கண்டுபிடித்து, அந்த உருண்டையை முழுதும் பிரித்து விட வேண்டும். …விமர்சனத்திலிருந்து நகர்ந்து வாழ்க்கைச் சரிதத்துக்குச் செல்ல வேண்டும். மக்களின் வாழ்க்கைகள். எப்போதும் உண்மையான வாசத்தின் -அந்தக் கணத்தில் எழும் யோசனையின் – பின்னே செல்ல வேண்டும்.” மாகி டாஹெர்ட்டி, ‘த எக்விவலெண்ட்ஸ்’ நூலில் ஊல்ஃபின் மேற்படி மாதிரியைப் பின்பற்றுகிறார். அந்தப் புத்தகம் 1960இல் உருவான சார்பற்ற ஆய்வுகளுக்கான ராட்க்ளிஃப் இன்ஸ்டிட்யூட்டைப் பற்றியது. அது ராட்க்ளிஃப் கல்லூரியிலிருந்து தொடர்ந்த மேற்படிப்புக்காக நடத்தப்பட்டது. அந்த இன்ஸ்டிட்யூட்டின் தாக்கம் அதன் துவக்க கட்டத்து ஆய்வாளர்களான ஐந்து பெண்களின் வாழ்வுகளில் என்னவாக இருந்தது என்று அப்புத்தகம் கவனிக்கிறது. அவர்கள் ஆன் செக்ஸ்டன், மாக்ஸீன் குமின், மேலும் டில்லி ஓல்ஸன்; ஓவியர் பார்பரா ஸ்வான்; சிற்பி மரியான்னா பினேடா ஆகியோர் இந்த ஐவர். (விண்ணப்பப் படிவத்தின்படி, விண்ணப்பதாரர்களுக்கு ஒரு முனைவர் பட்டமோ அல்லது அதற்கீடான படைப்புகளோ[iii] இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. டாஹெர்ட்டி எழுதுகிற ஐவரும் தம்மை ‘த எக்விவலண்ட்ஸ்’ என்று அழைத்துக்கொள்ளத் துவங்கி இருந்தனர், ஏனெனில் இந்த ஐவரில் யாருக்கும் உயர்கல்விப் பட்டம் இருக்கவில்லை.) மறுபடி இந்தப் புத்தகத்திற்கும் அமைப்பு ஒரு வசதி கருதிப் பயன்படுத்தப்பட்ட கட்டமைப்பே தவிர, தானாக எழுந்த உருவமைப்பன்று. அந்த இன்ஸ்டிட்யூட்டில் அவர்கள் செலவழித்த காலம், அவர்களுக்குத் தங்கள் வாழ்வையே மாற்றி அமைத்தது. அது அவர்களுக்குக் கலைப் படைப்பில் நொதிநிலையைக் கொணர்ந்த காலம்.

நூற்றாண்டின் நடுவில் அமெரிக்காவில் ஒருவகைப் பொருளாதார நிலையைச் சேர்ந்த திருமணமான பெண்கள் “அறிவுப் புலத்தில் இடமிழந்தவர்கள்,” என நியூயார்க் டைம்ஸ், 1960 ஆண்டில் ஒரு கட்டுரையில் இந்த இன்ஸ்டிட்யூட்டின் அமைப்புப் பற்றி எழுதி இருந்தது. அவர்கள் கல்லூரிக்குப் போக ஊக்கம் கொடுக்கப்பட்டிருந்தனர் – அநேகமாக ஏழு சகோதரிக் கல்லூரிகள் என்று பெயர் வாங்கி இருந்த கல்லூரிகளுக்கே போயிருப்பார்கள் – அதன் பிறகு சிறிது காலம் வேலை செய்யவும் ஊக்கப்பட்டிருப்பார்கள், ஆனால் திருமணத்துக்குப் பிறகு சமூக அழுத்தங்கள் அவர்களை குழந்தைகளோடு வீட்டில் இருக்கும்படி செய்திருக்கும். 1962இல் இந்தப் பத்திரிகையில் பிரசுரமான ஒரு கட்டுரை,[iv] அமெரிக்கப் பெண்களை இப்படி வருணித்தது:

அவளுடைய அம்மா அல்லது பாட்டியிடமிருந்து அதிகம் வேறுபடவில்லை…. அவர்களைப் போலவே பெண்மைக்கான பண்டைய மதிப்பீடுகளை – பால் கவர்ச்சி, தாய்மையின் கடமையுணர்வு, மேலும் வீட்டிலும், சமூகத்திலும் அரவணைத்துப் போஷிக்கும் குணம். அவள் பொது வாழ்விலோ, தொழில் துறைகளிலோ குறிப்பிடத்தக்கவளாக இல்லை.

இப்படி ஒரு பெண்ணுக்கு அசல் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று டாஹெர்ட்டி, தீவிரமாக உணர்ந்து எழுதுகிறார்:

 “உன் வாழ்வு கனகச்சிதமாக இருக்கிறது: கைநிறைய சம்பாதிக்கும் கணவன், ரோஜாக் கன்னங்கள் கொண்ட குழந்தைகள், வீட்டுமுன் செல்வழியில் ஒரு ப்யூயிக் கார். ஆனால் ஏதோ சரியாயில்லை. வீட்டு வேலைகள் உன் கவனத்தில் நிற்கவில்லை; நீ குழந்தைகளிடம் சிரிப்பை அள்ளி வீசாமல், உறுமுகிறாய்…. ஒவ்வொன்றும், ஒவ்வொருவரும் நீ சந்தேகப்படுவதையே உறுதி செய்கிறார்கள்: நீதான் பிரச்சனை. உனக்குப் பால் வேட்கை மிகவும் அதிகம், உனக்குப் பால் விருப்பம் மிகக் குறைவு, நீ தேவைக்கு மீறிக் கல்வி பெற்றவள், நீ புத்தியே இல்லாதவள். உன் தலையைச் சோதித்துக் குறுக்க வேண்டும்; நீ தூக்க மாத்திரைகள் போட்டுக்கொள்ள வேண்டும். நீ இன்னும் மேலான சமையல்காரியாக ஆக வேண்டும் – எத்தனை அபூர்வமான சமையலறைக் கருவிகள் உன்னிடம் – இத்தனைக்கிடையில் நீ மனம் நிறைந்தவளாக, உன்னிடம் இருப்பவற்றுக்காக நன்றியுணர்வு உள்ளவளாக இரு. 1950களின் பண்பாட்டு அழுத்தங்கள் அத்தனை பெரிதாக இருந்ததால், தம் வாழ்வு நீடிப்பதற்காகப், பெண்கள் தம்மிடம் எதெல்லாம் சூழலுக்கு ஒத்துப்போக மறுத்தனவோ அவற்றை எல்லாம் கொன்றனர்.”

1963 இல் பெட்டி ஃப்ரீடன் எழுதிய, ‘த ஃபெமினின் மிஸ்டீக்’ என்ற நூலுக்கு நாம் நன்றி சொல்லலாம், இந்தப் புத்தகத்தால் மேலே வருணிக்கப்பட்ட பெருஞ்சலிப்பு இப்போது நமக்கு நன்கு புரிகிற ஒன்று. ஆனால் டாஹெர்ட்டி விளக்குகிறபடி, இரண்டாவது அலை பெண்ணியத்துக்கான அடிப்படை வேலைகள் முன்னமே துவங்கப்பட்டு இருந்தன, அந்த இன்ஸ்டிட்யூட்டில் ஆய்வாளர்களாக இருந்த, தம் வாழ்வின் கதி குறித்துத் திருப்தியில்லாத அந்தப் பெண் ஆய்வாளர்கள் தம் மதிக் கூர்மையைப் பயன்படுத்தும் வழிகளைக் கண்டுபிடித்திருந்தனர். ஸெக்ஸ்டன் கவிதை எழுதத் துவங்குமுன்பு, “கூண்டில் அடைபட்ட புலி” போல உணர்ந்திருந்தார், ஒவ்வொரு அறையாகக் குறுக்கும் நெடுக்குமாக உலாவியபடி, தன் “பயங்கரமான சக்தியை” எரித்து அணைக்க முயன்றிருந்தார். குமின், அவருடைய கல்லூரியில் கவிதை போதித்த ஆசிரியர் வாலஸ் ஸ்டெக்னரால் எழுத்துத் திறமையற்றவர் என்று தள்ளப்பட்டிருந்தவர், ’லேடீஸ் ஹோம் ஜோர்னல்’ மற்றும் ‘த சாடர்டே ஈவினிங் போஸ்ட்’ போன்ற பத்திரிகைகளில் இலேசான கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தார்.  இரண்டாவது பத்திரிகை (போஸ்ட்) அந்தக் கவிதைகளை எழுதியது குமின்தான் என்று சான்று வழங்கிய ஒரு கடிதத்தை, குமினின் கணவர், தன்னை வேலைக்கு அமர்த்தி இருந்தவரிடமிருந்து பெற்றுத்தர வேண்டுமென்று கேட்டிருந்தது. பாஸ்டன் பல்கலையில் குமினும், ஸெக்ஸ்டனும் ஒரு பயிற்சி முகாமில் சந்தித்திருந்தனர், நல்ல நண்பர்களாகினர், தாம் எழுதிய கவிதைகளைத் தொலைபேசி மூலம் ஒருவருக்கொருவர் படித்துக் காட்டிக் கொண்டனர், ஒரு தட்டச்சு எந்திரத்தை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குக் கொடுத்தபடி, மற்றவர் எழுதும்போது இருவரின் குழந்தைகளையும் இன்னொருவர் கவனித்துக் கொண்டும் உதவிக் கொண்டனர். (கவிதைகளைத் தவிர, இருவரும் குழந்தைகளுக்கான பல புத்தகங்களைக் கூட்டாக எழுதினர்.) இன்ஸ்டிட்யூட்டைப் பற்றிய நியூயார்க் டைம்ஸ் கட்டுரையைப் படித்தவுடன், இருவரும் அங்கு சேர்வதற்கு உடனே விண்ணப்பித்தனர். ”நான் ஏற்கெனவே நன்கு தேறிவிட்ட கவிஞர் என்று உணர்கிறேன்,” என்று தன் விண்ணப்பத்தில் எழுதிய ஸெக்ஸ்டன் மேலும் எழுதினார், “நான் இப்போது கேட்பது நெடுநாள் நீடிக்கக்கூடிய ஒரு கவிஞராக ஆவதற்கு ஒரு வாய்ப்பு.”

ராட்க்ளிஃப் நிறுவனத்தின் தலைவர், மேரி இங்க்ராம் பண்ட்டிங், அறிவியலாளர், நான்கு குழந்தைகளின் தாய், அமெரிக்கப் பெண்கள் தம் அறிவுப் படைப்புகளையும், குடும்ப வாழ்வையும் இணைத்துச் செயல்படும் வழியைக் கண்டு கொள்ள வேண்டும் என்று நம்பினவர். அதைச் செய்ய, அவர்களுக்கு வேலை செய்ய ஒரு இடம் வேண்டி இருந்தது, அந்த வேலைக்குத் தேவையான பணம் அவர்களுக்குக் கிட்டவேண்டி இருந்தது, இவை முப்பது வருடங்களுக்கு முன்பு ஊல்ஃப் எழுதிச் சுட்டியவைதான். மௌண்ட் ஆபர்ன் தெருவில் கூம்புக் கூரை கொண்ட ஒரு மஞ்சள் நிற வீடு, இருபத்தி நான்கு பெண்களுக்கு அலுவலறைகளைக் கொடுக்கும்: ஒவ்வொரு பெண்ணும் ஒரு வருடத்துக்கு 3000 டாலர்கள் வரை பெறுவார் (இன்றைய மதிப்பீட்டில் இது 25000 டாலர்களுக்கு ஈடானது), சில சமயம் கூடுதலாகவும் கிட்டும். இந்தப் பணம் வாழ்வு நடத்தப் போதுமானதாக இருக்கவில்லை; ஆனால் இது பகுதி-நேர வேலைக்கு மாற்றாகத்தான் கருதப்பட்டது, குடும்பத்தில் இன்னொருவர் சம்பாதிப்பவராக இருப்பார் என்று அனுமானிக்கப்பட்டிருந்தது. வியப்பு ஏதும் இல்லாதபடி, அநேகமாக எல்லாப் பெண்களும், தமக்குக் கிட்டிய உபகாரத் தொகையை வீட்டு வேலை செய்ய உதவியாட்களை வேலைக்கு அமர்த்தவே செலவிட்டனர். ஸ்வான் ஒரு பாத்திரம் கழுவும் எந்திரத்தை வாங்கினார், மற்றவர்கள் வீட்டைப் பராமரிப்பவர்களையோ, குழந்தைகளுக்குச் செவிலியரையோ வேலைக்கு அமர்த்தினர். லிலி மக்ராகிஸ், ஒரு வரலாற்றாளர், தன் உதவித்தொகையில் ஒரு பகுதியை காரை அத்துமீறி நிறுத்தியதற்காகப் போடப்படும் அபராதத் தொகைகளைக் கட்டுவதற்குச் செலவழித்திருந்தார் – கார் நிறுத்தக் கட்டணம் கேட்கும் மீட்டர்களில் காசு போடவென அவ்வப்போது நூலகத்தை விட்டுப்போக அவருக்கு விருப்பம் இருக்கவில்லை.

அந்த இன்ஸ்டிட்யூட்டில் அவர்களுக்குக் கிட்டிய சுதந்திரத் தனிமையோடு, இந்தப் பெண்களுக்கு மேலும் கிட்டியவை – தோழமை, ஆதரவு மற்றும் அறிவார்ந்த பரிமாறல்கள். அவர்கள் வாழ்வில் முதல் தடவையாக, அங்குதான் இவை அவர்களுக்குக் கிட்டின. ஸ்வானும், ஸெக்ஸ்டனும் ஒருவர் மற்றவர் படைப்புகளில் இருந்த படிமங்களால் உத்வேகம் பெற்றனர். த எக்விவலெண்ட்ஸ் குழுவினர், தாங்கள் பெரிதும் மதித்த எழுத்தாளர்களின் நூல்களைப் பகிர்ந்து கொண்டனர், பெண்களின் செவ்விலக்கியப் பட்டியல் ஒன்றை தமக்குள் நடந்த பகிர்தல்கள் மூலம் உருவாக்கினர், அதில் ஸாரா டீஸ்டேல், மற்றும் எட்னா செயிண்ட் வின்சென்ட் முல்லே போன்ற கவிஞர்கள் இருந்தனர். ஓல்ஸெனின் பதின்ம வயது மகள், மௌண்ட் ஆபர்ன் தெருவில் இருந்த அந்த மஞ்சள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போனாள். பின்னாளில் இதை நினைவு கூர்ந்தபோது, அங்கிருந்த “அறைகளிடையே அலைபாய்ந்த மின்சாரச் சக்தியை” தாம் உணர்ந்ததாக அவர் சொல்கிறார்.

இந்த ‘மின்சக்தி’ டாஹெர்ட்டியின் புத்தகப் பக்கங்களில் ஸ்பரிசிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆண்களைத் தவிர மற்றெல்லாவற்றையும் பற்றிப் பெண்கள் தமக்குள் உரையாடியவற்றை விவரிப்பதோடு, அவர்களிடையே நிலவிய உறவுகள் பற்றியும் பேசும் எந்த அ-புனைவுப் புத்தகத்தையும் நான் இதற்குமுன் அபூர்வமாகத்தான் படித்திருக்கிறேன். ஸில்வியா ப்ளாத்கூட இங்கு டெட் ஹ்யூஸ் இல்லாமல் காணப்படுகிறார், பாஸ்டனில் ஒரு கவிதைக் கூட்டமர்வில் அவர் ஸெக்ஸ்டனைக் கண்டு நட்புக் கொள்கிறார். சில சமயங்களில் நான் அவர்களின் வாழ்வுகள் பற்றி மேலும் தகவல்களை அறிய ஆசைப்பட்டேன் – ஸெக்ஸ்டனின் மண வாழ்வில் இருந்த பிரச்சனைகள், அவருடைய பல காதல் உறவுகள் எல்லாம் போகிற போக்கில் சொல்லப்படுகின்றன. ஆனால், டாஹெர்ட்டி ஏன் தன் குவிமையத்தை அத்தனைக் கருக்காக, குறுகலாகக் கொண்டிருந்தார் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். கலையையும், பெண்களிடையே நிலவிய நட்பைப் பற்றியதுமான ஒரு காதல் கதை அவருடைய புத்தகம்.

திருமணத்துக்குப் பிறகு எனக்கென்று அறை ஒன்று கிட்டியபோது எனக்கு 35 வயதாகி இருந்தது, கெடுநாள் தாண்டிவிட்ட ஒரு புத்தகத்தை எழுதிமுடிக்க நான் தவித்துக் கொண்டிருந்தேன். இருப்பிட வசதி தரும் யாடூ அமைப்பிடம் எனக்கு இரண்டு வார தங்க வசதி கிட்டி இருந்தது – அத்தனை நாள்களுக்கு மேல் என் இளம் வயதுக் குழந்தைகளிடமிருந்து பிரிந்து என்னால் இருந்திருக்க முடியாது. செயலர் ஒருவர் என் அறையை எனக்குக் காட்டியபோது, என் கண்களில் நீர் மல்கியது. பல வருடங்களாகப் பிறரின் தேவைகளைத் திருப்தி செய்ய நான் உழைத்தபின், எனக்கு உதவுவதற்கென்று எல்லாம் அமைக்கப்பட்டிருந்த ஓர் இடத்துக்கு வந்தது என்னால் நம்ப முடியாத அதிசயமாக இருந்தது. டாஹெர்ட்டி, தாம் ஹார்வர்ட் பல்கலையில் முனைவர் பட்டத்தை முடித்துக் கொண்டிருக்கையில், த எக்விவலெண்ட்ஸ் குழுவைப் பற்றிய தகவல்களைக் கண்டுபிடித்ததாகவும், அப்போது தாம் ஓர் ஆணோடு நட்பு கொண்டிருந்ததாகவும், “ அந்த ஆணுடைய தொழில் வாழ்க்கை தன் தொழில் வாழ்வைவிட முக்கியமானதாகக் கருதப்பட்டதாகவும்” தெரிவிக்கிறார். மக்ராகிஸ், வரலாற்றாளர், தன்னிடம் படித்த இளநிலை மாணவர்களிடம் சொல்லி இருக்கிறார், கல்லூரியைவிட்டு வெளியே வந்ததும் மணம் புரியாதீர்கள் என்று. “நீங்கள் செய்ய விரும்புவனவற்றைச் செய்ய உங்களுக்கு உங்கள் கணவர் அனுமதி கொடுப்பாரா என்று, உங்களுக்கு ஒரு போதும் தெரியாது…. அதனால் நீங்கள் சுதந்திரமாக இருப்பது மேல்.”

எனக்கு யாராவது இப்படிச் சொன்னார்களா? அவர்கள் சொல்லி இருந்தாலும், என் கணவர், அவர் யாராக இருந்திருந்தாலும், நான் விரும்புவனவற்றைச் செய்ய ‘அனுமதிக்கும்’ உரிமை அவருக்கு இருக்கும் என்று நான் நம்பி இருக்க மாட்டேன். நான் இரண்டாம் அலை பெண்ணியவாதியின் மகள், நான் எந்தத் தொழில் வாழ்க்கையை விரும்பினாலும், அதை அடைய முடியும் என்ற நம்பிக்கையோடு வளர்க்கப்பட்டேன். ஆனால், குழந்தைகளைப் பெற்றபின், பழைய பால் நியமங்கள் மடிந்துவிடவில்லை, அடங்கி இருக்கின்றன என்று கண்டுபிடித்தேன். மிகவும் துன்பப்பட்டுவிட்டு, எனக்குப் பிடித்ததும், வேண்டியதாக இருந்ததுமான ஒரு வேலையைச் செய்ய அனுமதிக்கும் ஓர் ஏற்பாட்டை நான் கண்டடைந்தேன். பெண்கள் தம் வரலாற்றை இன்னமும் அறியாதவர்களாக இருப்பதால், அப்போது ஒரு மரபு வகையான திருமணத்தில் எனக்குத் தேவையாக இருந்த அறிவுத் தேட்டைக்கான இடம் இல்லாமல் துன்பப்பட்டதில் நான் ஏதோ விதிவிலக்கல்லள், அந்த நிலைதான் சகஜம் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. கொரோனா நுண்கிருமித் தொற்றுநோய் எங்களில் பலரைத் தூண்டி பழைய நண்பர்களோடு தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ளச் செய்யுமுன், இந்த இரண்டு புத்தகங்களைப் படித்தது என்னை அரை டஜன் பெண்களைத் தொடர்பு கொள்ளும்படி தூண்டியது. நான் அவர்களோடு பேசிப் பல காலம் ஆகி இருந்தது. அப்போது அவர்களின் உறவுகள், மேலும் கருத்துகள் பற்றிக் கேட்டறிந்தேன். பெண்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது பற்றிய கதைகள் எத்தனை முக்கியமானவை என்பதை, நாங்கள் இப்போதுதான் உணரத்தொடங்கி இருக்கிறோம்.

டாஹெர்ட்டியின் கதை மாந்தர் சிரித்தார்கள், சண்டை போட்டார்கள், ஒன்றாகச் சேர்ந்து குடித்தார்கள், கருத்துகளையும், பரிவையும் பகிர்ந்து கொண்டனர். அவர்களுடைய உரைகளின் ஒலிநாடாக்களைக் கேட்டபோது, கூட ஒலித்த ஷெர்ரி கோப்பைகளின் கிளிங் சப்தங்களும், பாவாடைகளின் சலசலப்பு ஓசையும் கேட்டபோது, “இழந்த உலகம் ஒன்றைக் கண்டு பிடித்ததாகவும், ஏனோ தனக்கு நன்கு தெரிந்தது போலவும் அது இருந்ததாகவும்”  தான் உணர்ந்ததாக அவர் எழுதுகிறார்.  (உ)வேடின் புத்தகத்தின் பெண்கள், பெருமளவும் கற்பனை செய்யப்பட்ட ஒரு சமூகத்தில் வாழ்ந்திருந்தனர்; சில வார்த்தைகளே பரிமாறிக் கொள்ளப்பட்டிருந்தன, அதிகபட்சம் ஒரு கடிதம், அவர்களிடையே தொடர்பு என்பது அவ்வளவுதான் இருந்தது. ஆனால் கற்பனை செய்யப்பட்ட ஒரு சமூகத்திற்கும் நிறைய சக்தி உண்டு. (உ)வேட் எழுதுகிறார், தன் ஆய்வு, கடந்த காலம் பற்றிய அறிவுச் சேமிப்பு, சம காலத்தில் நமக்குத் தெம்பூட்ட முடியும்: எதிர்பாராத வகையில் உணரப்படும் ஒத்ததிர்வுள்ள உணர்வுகளும், அனுபவங்களும், காலத்தையும் வெளியையும் கடந்து, (நமக்கு) ஒன்றிணைந்து நிற்கும் உணர்வு கிட்டுவதை நம்பக்கூடியதாக்க முடியும்.

நான் (உ)வேட் மற்றும் டாஹெர்ட்டியின் புத்தகங்களை வெறியோடு நுகர்ந்தேன், பக்கங்களின் ஓரங்களில் வழக்கத்தை மீறிய தீவிரத்தோடு குறிப்புகளைக் கிறுக்கினேன், அவ்வப்போது நிறுத்தி, கருத்துகள் மனதில் இறங்கக் காத்திருந்தேன். அவர்களின் கதை மாந்தர்கள் – மொத்தம் பத்துப் பேர், இரண்டு புத்தகத்தையும் சேர்த்து, ஒரு நூற்றாண்டு இடைவெளியில் பரவி வாழ்ந்தவர்கள் – அறிவும் வாழ்வும் எழுப்பிய கேள்விகளை எதிர் நின்று அப்படி ஒரு வேகத்தோடு விடைகள் கண்டனரே, அது காலத்தை வென்ற ஒன்று.

ஒவ்வொரு தலைமுறையிலும் பெண்கள் இந்தச் செயல்திட்டத்தை புதிதாக நடைமுறைப்படுத்த வேண்டும், ஏனெனில் இந்தச் செயல்திட்டத்திற்கு ஆதரவு தரும் அமைப்புகள் எங்கும் இல்லை. நாம் இன்னமும் இதை எப்படிச் செய்வது என்று கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கிறோம்.

***

( ஹார்பர்ஸ் மாகஸீன் சஞ்சிகையின் ஜூன் 2020 இதழில்  ‘Splinters and Mosaics’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரை.)

இங்கிலிஷ் மூலம்: ரூத் ஃப்ராங்க்லின்; தமிழாக்கம்: மைத்ரேயன்


[i] Newnham college- நியூனம் என்று உச்சரிப்பு. கேம்ப்ரிட்ஜ் பல்கலையோடு சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் ஒன்று. 1871 இல் துவங்கப்பட்ட இது, பெண்களுக்கான கல்லூரியாகத் துவங்கிச் செயல்பட்டு வருகிறது.

[ii] A string through cheese என்பது மூலக் கட்டுரையின் வார்த்தைகள். இது பாலாடைக் கட்டியை அறுக்கும் நூலா (ஒரு மெல்லிய உறுதியான உலோகக் கம்பி) அல்லது பாலாடைக் கட்டியை தொங்கவிடப் பயன்படும் மெல்லிய கயிறா என்பது மூலக்கட்டுரையில் தெளிவாக இல்லை.

[iii] அதற்கீடான என்பதன் இங்கிலிஷ் சொல் எக்விவலண்ட் என்பது.

[iv] ஹார்பர்ஸ் மாகஸீன் பத்திரிகை. 1850களிலிருந்து பிரசுரமாகிறது.

One Reply to “சிலாம்புகளும் சில்லுகளும் – பெண் வரலாறு, குழு சுயசரிதைகள் பற்றி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.