தர்ம சங்கடம்

பணீஷ்வர்நாத் ரேணு

[தமிழாக்கம்: டாக்டர் எச். பாலசுப்பிரமணியம் நேஷனல் புக் ட்ரஸ்டின் கதைத் தொகுப்புப் பிரசுரத்தின் மறு பதிப்பு]

பணீஷ்வர்நாத் ரேணு

திக்விஜய் பாபுவுடன் நெருங்கிப் பழகியவர்கள் அவரை திக்கோ பாபு என்று அன்புடன் அழைப்பார்கள். அவரிடம் எல்லோருக்குமே அலாதியான மரியாதை. அஜாதசத்ரு- எதிரியே இல்லாதவர் என்று வருணிப்பார்கள். அப்படியே தப்பித் தவறி யாரேனும் எதிரியாகி விட்டால் கூட திக்கோபாபு அவரிடம் உரத்த குரலில் பேசினார் என்ற வரலாறு கிடையாது. அவருக்கு கடுமையான குரலில் பேசவே தெரியாது. கோபமே வராதவர் என்ற குணநலந்தான் அவரது வெற்றியின் ரகசியம். அப்பேர்ப்பட்ட திக்கோ பாபு கோபவெறியுடன் பைத்தியக்காரனைப் போல நடுத்தெருவில் நின்றுகொண்டு உரத்த குரலில் கெட்ட வார்த்தைகள் பேசி யாரையோ திட்டினார் என்றால் அவரை நன்கு தெரிந்தவர்கள் யாராவது நம்புவார்களா? 

ஆனால் உண்மையாகவே அது நடந்தது. கண்ணால் கண்டதைப் பொய் என்று ஒதுக்க முடியுமா? வேலைக்காரனைக் கண்டபடி திட்டிப் பிரம்பால் அடித்த மனிதர் திக்கோ பாபுவேதான். எல்லாரும் கண்களைக் கசக்கி விட்டுப் பார்த்தார்கள். சந்தேகமில்லை, அவரேதான். ஒருநாளும் இல்லாத திருநாளாக அவருக்கு வந்த மூர்க்கத்தனமான கோபத்தின் காரணத்தைக் கேட்க அருகே சென்றவர்களும் திக்கோ பாபுவின் வசைமாரியில் குளித்தார்கள். தன்னைச் சுற்றிக் கூடிய ஜனங்களை ‘ஸாலே!’ என்று திட்டினார். பிறகு, “எனக்கு எல்லாம் தெரியும். ஒருத்தனையும் விடமாட்டேன் நான்… பார்த்துக்கிட்டே இருங்க, பொறுமையா- எல்லாரையும் வழிக்குக் கொண்டு வருவேன்,” என்று உறுமினார். 

இப்படிச் சொல்லி விட்டு அவர் பங்களாவுக்குள் சென்றார். பங்களா வராந்தாவில் வரிசையாக உட்கார்ந்திருந்த பூச்சட்டிகளை காலால் உதைத்துக் கீழே உருட்டிய பிறகுதான் உள்ளே புகுந்தார். என்றும் சத்தமில்லாமல் திறந்து மூடும் கதவு இன்று அவர் கையில் அகப்பட்டு முதல் முறையாக ‘கீ கீ’ என்று கத்தியது. அடி வாங்கிய வேலையாள் ராம்டஹல் துண்டினால் உடம்பைத் தட்டிக் கொண்டு அவர் பின்னாலேயே சென்றான். ஜனங்கள் பொறுமையாக இருக்க வேண்டுமாம்? இன்னும் வேடிக்கை காட்ட அவர் திரும்பியும் எப்போது வருவாரோ? எத்தனை நேரம் பொறுக்க வேண்டுமோ? 

ஊர் மக்களைப் பற்றியும் திக்கோ பாபுவுக்கு நன்றாகத் தெரியுமாம். ஆனால் தாங்கள் திக்கோ பாபுவுக்கு என்ன தவறு இழைத்தோம் என்று ஜனங்களுக்குத் தெரியவில்லை. அவர் வீட்டுக்குள் தாராளமாகப் போய் வருபவர்கள் இன்று சாந்தி குடீரில் (அமைதிக் குடிலில்) கால் எடுத்து வைக்க அஞ்சினார்கள். அப்படியிருக்கையில் அவர் கோபத்தின் காரணத்தை எப்படித் தெரிந்து கொள்வது? 

வேறு வேலை உள்ளவர்கள் தங்கள் வேலையைப் பார்க்க நடந்தார்கள். வேலை இல்லாதவர்கள் தங்கள் நேரத்தை வீணாக்காமல் மணிக்கணக்காக எதிரே உள்ள பூங்காவில் அமர்ந்து சீட்டு விளையாடலானார்கள். ஆனால் வாசல் வழியாகவோ, சன்னல் வழியாகவோ யாரும் வெளியே வரவில்லை. எந்தப் பிராணியோ, பொருளோ அசையும் சத்தம் கேட்கவில்லை. பூச்சட்டிகளை உதைத்து விட்டு உள்ளே போன வேகத்தைப் பார்த்தால் அடுத்த வினாடியே வீட்டுக்குள்ளிருந்து பூகம்பம் வெடித்துக் கிளம்பி இருக்க வேண்டும். குறைந்த பட்சம் பட்டாசு வெடிக்கும் சத்தமோ, கண்ணாடி சாமான்கள் உடையும் ஒலியோ யாராவது விம்மி விம்மி அழும் ஓலமோ கேட்டிருக்க வேண்டும். ஆனால் இரண்டு மணி நேரமாகியும் எதுவும் நடக்கவில்லை. ரகசியம் இன்னும் செறிவடைந்தது. 

இரவு பத்து மணிக்கு இந்த ரகசியத்தைப் பிளந்து கொண்டு ஒரு செய்தி பரவியது. திக்கோ பாபுவின் வீட்டில் மௌனமாக மறியல் போராட்டம் நடக்கிறது. திக்கோபாபு தவிர வீட்டிலுள்ள அனைவரும் அவருக்கு எதிராக ஒத்துழையாமை அறப்போராட்டத்தில் இறங்கி விட்டார்கள். அவருடைய சகதர்மிணி தனது பருத்த தேகத்தைச் சுருட்டி எடுத்துக் கோண்டு புறக்கடைக் குச்சு வீட்டில் நுழைந்து விட்டார்களாம். பிரஜைகள், அதாவது புதல்வன் அராஜகத்தில் இறங்கி விட்டானாம். வேலையாள் சொன்ன பேச்சைக் கேட்பதில்லை. சமையல்காரர் தன்னிஷ்டம்போல சமையல் செய்கிறாராம். இத்தனைக்கும் மேலே வீட்டிலுள்ள பூனைகூட யாரைக் கண்டாலும் உர்…ரென்கிறதாம். அய்யோ பாவம். திக்கோ பாபுவின் அமைதி நிறைந்த உலகம் இப்படியாகிவிட்டதே. பாவம் அவருடைய ’சாந்தி குடில்’!  நியூ படேல்புரியில் புதிதாகக் கட்டிய திக்கோபாபுவின் பங்களா! 

மறுநாள் சூரியோதயத்துக்கு முன்பே வேடிக்கை ஆரம்பமாகி விட்டது. 

திக்கோ பாபுவின் அருமை மகன் ஸ்ரீஹர்ஷன் தன்னுடைய மென்மையான குரலை கரகரப்பாக்கிக் கொண்டு, சாதுவான முகத்தை கொடூரமாக வைத்துக் கொண்டு பேப்பர் போடும் பையனிடம் உறுமினான், “இனிமே தினமும் பேப்பர் ‘சின்ன பங்களாவில்’ தரணும், தெரிஞ்சுதா?”

’சின்ன பங்களா’ என்றால் ஸ்ரீஹர்ஷன் குடியிருக்கும் பகுதி. தினசரி, வார, மாத சஞ்சிகைகள் எல்லாவற்றையும் கையில் இடுக்கிக் கொண்டு ஸ்ரீஹர்ஷன் பகிரங்கமாக சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான். பிறகு சிகரெட் புகையை அனாயாசமாக ஊதியவாறு சின்ன பங்களாவைப் பார்த்து நடந்தான். 

சற்று நேரத்துக்கெல்லாம் ஸ்ரீஹர்ஷனின் தாயார் அதாவது திருமதி தர்மசீலை எதற்காகவோ தன் கணவனைத் திட்டியவாறு வராந்தாவுக்கு வந்தாள். ஊர் மக்கள், இந்த அம்மையார் பிரதி ஏகாதசியன்றும் சந்தியா காலத்தில் தன் கணவனின் கால்களைக் கழுவிப் பாத தீர்த்தத்தைப் பருகும் புனிதக் காட்சியையே கண்டிருக்கிறார்கள். இன்று அதே அம்மணி தலையில் அடித்துக் கொள்கிறார், “காலங்காத்தாலே எவனாவது இவர் பேரைச் சொன்னா அவனுக்கு அன்னிக்கு முழுவதும் ஒண்ணுமே விளங்காது!” 

நேற்று அடி வாங்கிய அதே வேலையாள் ராம்டஹல் முற்றத்துப் புல்வெளியில் ஈஸிசேரில் ஹாய்யாகப் படுத்துக் கொண்டு பீடி குடிக்கிறான். சமையற்காரர் பற்குச்சியால் தன் நீண்ட பற்களை சாவகாசமாக நோண்டித் தேய்த்தவாறு கண்ட இடத்தில் துப்புகிறார். “நான் யாருக்கும் வேலைக்காரன் இல்லை. யாருக்கு டீ குடிக்கணுமோ ஓட்ட்ல்லேயிருந்து வரவழைச்சுக்கட்டும். நான் இதோ கங்கையிலே ஸ்னானம் செய்து விட்டு, பிர்லா மந்திருக்குப் போகப் போகிறேன். ஆக்..தூ!”

ஆச்சரியம்தான்! திக்கோ பாபுவின் வாழ்க்கையில் நேற்றுத்தான் முதலும் இறுதியுமாகக் கோபம் வந்தது. இன்று அவர் மீண்டும் சாந்த கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். இதையெல்லாம் கண்டும் கேட்டும் கூட அசையாமல் உட்கார்ந்திருக்கிறார். 

தோளில் துண்டைப் போட்டுக் கொண்டு திக்கோ பாபு வெளியே உள்ள குழாயடிக்கு வந்தார். வீட்டுக்கு வெளியே உள்ள குழாயடியில் – வேலைக்காரி பாத்திரங்கள் தேய்க்கும் குழாயடியில் – குளிப்பார் என்று யாரும் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. 

தெருவெல்லாம் திரிந்து பூரிமசால் விற்கும் ஆளைக் கூப்பிட்டார் திக்கோபாபு. தெருவோரத்து வண்டிகளிலிருந்து வடை-பக்கோடா வாங்கித் தின்னும் இளவட்டங்களுக்கு தினமும் சுத்தம், சுகாதாரம் பற்றிப் பாடம் புகட்டும் திக்கோ பாபு இந்த மாதிரி ஆறின பூரி-மசாலா வாங்கித் தின்பதைப் பார்த்த அண்டை வீட்டுக்காரரின் மனம் உருகி விட்டது. அவர், “அடா..டா.. இதென்ன…” என்று ஏதோ சொல்ல வாயெடுத்தார். ஆனால் திக்கோ பாபு ஓர் ஆங்கில வாக்கியத்தை அப்படியே மொழி பெயர்த்து, “ஐயா! நீங்க உங்க வீட்டுக் கதவுக்கு எண்ணெய் போடுங்க!” என்று போலியான மரியாதையுடன் கூறினார். 

மதியம் அவருடைய அண்டை வீட்டுக்காரர் ‘பொருள் பொதிந்த’ ஒரு புதிய செய்தியை வெளியிட்டார், அதாவது ரூபாய் பைசா சம்பந்தமான செய்தி: “ஸ்ரீஹர்ஷன் ஐந்தாம் நம்பர் ரோடு ஃப்ளாட்டுகளில் குடியிருக்கும் வாடகைக்காரர்களுக்கு, இனிமேல் வீட்டு வாடகையைத் தன்னிடம் கொடுக்க வேண்டும் என்று நோட்டீஸ்.” 

திக்கோ பாபு இடைமறித்துக் கூறினார். “ஆமா, அதற்கென்ன? ஐந்தாம் நம்பர் பிளாட்டும் நிலமும் ஸ்ரீஹர்ஷன் பெயரில்தானே இருக்கிறது. வாடகை அவனுக்குத்தானே கிடைக்க வேண்டும்?”

ஸ்ரீஹர்ஷன் திக்கோ பாபுவுக்கும் நோட்டீஸ் விட்டிருக்கிறான் – “உங்க இன்சூரன்ஸ் பாலிஸியிலே இனிமே நான் ‘நாமினி’ இல்லை. எனக்கு அந்தப் பைசா வேண்டியதில்லை.

— அதாவது அவன் யாரையும் அண்டிப் பிழைக்கவில்லை.

திருமதி தருமசீலை இதே ராகத்தில்தான் பாடினாள். ‘திக்கோ பாபுவை அண்டியிருப்பதை நான் சாபமாகவே நினைக்கிறேன்’ என்பது அதன் பொருள். 

திக்விஜய் பாபு பேசவில்லை. மௌனமாக இருந்தார். அவருடைய இந்த அக்கிரமத்தனமான நெடிய மௌனத்தினால் தாயும், மகனும், வேலையாட்களும் மூண்டெழுந்தார்கள், “இவருக்கென்ன வந்தது? மௌனமாக இருந்தாலும் சரி, பேசினாலும் சரி – குஷாலாகத்தான் இருப்பார். கஷ்டம் எல்லாம் எங்க தலைமேலேதானே!” 

“தான் சௌக்கியமாக இருந்தாப் போறும் இவருக்கு. மத்தப்பேர் எக்கேடு கெட்டுப் போனா என்ன? யார் வாழ்ந்தாலும், யார் செத்தாலும் இவருக்கு ஒண்ணுமில்லை!” 

திக்விஜய்பாபு தன் விரலைக் கடித்துக் கொண்டு பார்த்தார். காண்பது கனவா? நிஜமா?

அப்படியாக ஊரெல்லாம் பலவிதமான செய்திகள் பரவின. ஊரெங்கும், ஒவ்வொரு ‘நகரிலும்’ ஒவ்வொரு ‘புரியிலும்’ செய்திகல் பரவின. இவற்றைக் கேட்டு திக்விஜய் பாபுவின் நண்பர்கள் – பல்வேறு சாதி இனத்தைச் சேர்ந்த நண்பர்கள் – ஒவ்வொருவராக வரலானார்கள். 

‘சாந்தி குடிலி’ல் நுழைபவர்களின் பார்வை முதலில் ராம்டஹலின் அழுக்குக் கோவணத்தின் மீதுதான் விழுந்தது. அவன் அதை சன்னல் மேல் போர்க்கொடி போல உயர்த்தியிருந்தான். 

திக்கோபாபுவின் ஒரு வக்கீல் நண்பர் குறுக்கு விசாரணைக்கு முன் வழக்கின் மூல காரணத்தைப் பிடிக்க முயன்றார். வேலையாளை அடித்த பிறகுதான் மனைவியும், மகனும் புரட்சியில் இறங்கினார்களா அல்லது அதற்கு முன்பா? வேலையாள், அதாவது ராம்டஹல், வெகுநாட்களாக இருக்கும் வேலையாள். திக்கோ பாபு கல்லூரியில் படிப்பதற்காக இங்கு வந்தபோது ராம்டஹலையும் உடன் அழைத்து வந்தார். திக்கோபாபுவின் படிப்பு முடிந்து, உத்தியோகம் ஆரம்பித்தது- அவர் ஓய்வு பெற்றார். இன்றும் ராம்டஹல் கூடவே இருந்தான். திருமணத்திலும், ’கௌனா’ விலும் (மணப்பெண் பூப்பெய்திய பிறகு கணவன் வீட்டுக்கு வரும் சடங்கு) அவன் திக்கோ பாபுவுடன் சேர்ந்து நின்றான். 

திக்கோ பாபுவின் இன்னொரு நண்பர் புலனாய்வுத் துறையில் வேலை பார்க்கிறார். உலகில் நடக்கும் குற்றங்கள், விபரீதங்கள் அனைத்தையும் துருவிப் பார்த்தால் அவற்றின் பின்னே ஒரு பெண்ணின் கரங்கள் இருப்பதைக் காணலாம் என்பது அவரது துணிவு- இந்த விவகாரத்திலோ, ஒரு மாது எதிர் நிற்கிறாள். ஆனால் இவளன்றி வேறொருவன் எங்கேனும் ஒளிந்து கொண்டிருக்க வேண்டும். 

திருமதி தருமசீலையிடம் நெடுநேரம் வேறுபல விஷயங்களைப் பற்றிச் சுற்றி வளைத்துப் பேசிப் பார்த்தார். உஹூம், அவருக்குத் தேவையான செய்தி வெளிவரவே இல்லை. கணவருக்கெதிராக இந்த ‘வைராக்கியமும்’ ஒத்துழையாமைப் போரும் வர வேண்டிய காரணத்தைப் பற்றி நேரடியாகக் கேட்டபோது, திருமதி தருமசீலை ராம்டஹல் பக்கம் பார்த்து வாளாவிருந்தாள். 

இதன் பிறகு திக்கோ பாபுவின் உளவுத் துறை நண்பர் – மறுமுனையிலிருந்து பணியை ஆரம்பித்தார்- அப்படியானால் திருமதி தருமசீலையே ‘அந்தப் பெண்ணாக’ ஏன் இருக்கக் கூடாது? ஆகவே கூரான கேள்வி அம்புகளைத் தொடுத்து ராம்டஹலின் உடலைத் துளைத்து ‘ஆழம் காணத்’ தொடங்கினார்- ஒரு தடவை இப்படித்தான், பலாக்காய்க்குள் இரும்புக் கொரடாவைச் செலுத்தி அவர், களவு போன தங்கத்தை வெளியே எடுத்தார். 

ஆனால் ராம்டஹல் முதலிலிருந்து கடைசி வரை ஒரே பாட்டைத்தான் பாடினான்: “எசமானியம்மா அப்பழுக்கில்லாத பதிவிரதை.”

அதன் பிறகு திக்கோபாபு காலால் உதைத்த பூச்சட்டிகளை ஆராய்ந்தார்; ஆனால் ஒன்றும் புலப்படவில்லை. 

மூன்றாம்நாள் பெயர் தெரியாத ‘நலன் விரும்பி’ ஒருவர் திக்கோ பாபுவின் மூத்த மகனுக்குத் தந்தி கொடுத்தார்-  “அப்பாவின் உடல்நிலை கவலைக்கிடம், உடனே வரவும்.”

திக்கோ பாபு அன்ன ஆகாரமின்றி மௌன விரதம் இருப்பது ஜனங்களைப் பெருவியப்பில் ஆழ்த்தியது. இவர்கள் செய்த குற்றங்களுக்காக வேறு யாரானாலும் மனைவி மக்கள் வேலையாட்களை வீட்டை விட்டுத் துரத்தி விடுவார்கள். ஆனால் திக்கோபாபு அனைத்தையும் பேசாமல் பொறுத்துக் கொண்டிருப்பதன் மர்மம் என்ன? இவருக்கு மூளை கெட்டு விட்டதா அல்லது அதோ அந்த சுவர்க்கடிகாரம் போல அதுவும் வேலை செய்யாமல் நின்று விட்டதா? 

துர்க்காபூரிலிருந்து திக்கோபாபுவின் மூத்த மகன் ஸ்ரீபார்த்தன் தன்னுடைய இல்லாள் திருமதி பவானியுடன் ஓடி வந்தான். அவனை வரவேற்க திருமதி தருமசீலையும் ஸ்ரீஹர்ஷனும் ஒரே நேரத்தில் ஓடினார்கள். ஸ்ரீஹர்ஷன் சொன்னான், “அண்ணா, டோண்ட்-”

“அப்பா எப்படி இருக்கிறார்?”

“அவருக்கு ஒண்ணும் வரலே அண்ணா! நாங்கதான் அகப்பட்டுக் கொண்டு விழிக்கிறோம்! அவர் குஷாலாகத்தான் இருக்கார்.”

ஸ்ரீபார்த்தனும், மனைவியும் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கியதுமே அப்பா ஆபத்தான நிலையில் இல்லை, அவருக்கு பித்துப் பிடித்திருக்கிறது என்று தெரிந்து கொண்டார்கள்- ‘பித்து’ பிடித்தது என்றால் பைத்தியமாகி விட்டாரா? இதைக் கேட்டதுமே திருமதி பவானியின் நெஞ்சும் மார்பும் படபடவென்று அடித்துக் கொண்டன. உடலெங்கும் நடுக்கம், தொண்டை அடைப்பு, தலை சுற்றல் – எல்லாம் ஏககாலத்தில் ஏற்பட்டது. ஸ்ரீபார்த்தன் அவளுக்கு ஆறுதல் கூறி ஒருவாறாகத் தேற்றி அவள் மனதை வலுப்படுத்தினான் – “பைத்தியமே பிடித்தால்தான் என்ன? நம்ம அப்பாதானே!”

ஆனால் பங்களா வாசலை அடைந்ததுமே எல்லாரும் வாசலை நோக்கி வரக் கண்டதும் பவானிதேவி மீண்டும் பயத்தினால் நிலை குலைந்தாள். ஸ்ரீஹர்ஷன் பரிதாபமாக, “அண்ணா, டோன்ட்,” என்கிறான். தருமசீலையின் அரண்ட கண்கள், சன்னலில் தொங்கும் ராம்டஹலின் எண்ணெய்ச் சிக்குப் பிடித்த கோவணம், கிசுகிசுத்த குரலிலும், சைகை மொழியிலும் ஏதேதோ பேச்சு இதையெல்லாம் கண்டு ஸ்ரீபார்த்தனின் நிலையும் கவலைக்கிடமானது. 

எல்லாரும் கூட்டமாக, ஆனால் சத்தமின்றி வராந்தாவுக்கு வந்தனர். எல்லாருக்கும் பின்னால் திருமதி பவானி. ராம்டஹல் திக்கோபாபுவின் அறைக்கதவைத் திறந்தான் – ஏதோ பயங்கரமான மிருகத்தின் அறைக்கதவைத் திறப்பதுபோல. அவன் முகத்தில் திகில். திக்கோபாபு ‘கீதா ரகசியத்தில்’ புதைந்த தன் கண்களை வெளியே எடுக்க முயலவே இல்லை. ஸ்ரீபார்த்தன் தொலைவிலிருந்தே மௌனமாக அவருக்கு வணக்கம் செலுத்தினான். திருமதி பவானி துணிவுடன் உள்ளே புகக் காலடி எடுத்து வைத்தாள். ராம்டஹல் ‘பட்’டென்று கதவைச் சாத்தி விட்டான். 

எல்லாரும் ஏக காலத்தில் பெருமூச்சு விட்டனர். 

திருமதி தருமசீலை சொன்னாள், ‘மகனே, நீ இவரை  ‘அண்டிப் பிழைப்பவன்’ அல்ல. உங்க ரெண்டு பேருக்கும் என்ன பயம்? நான் தான் சங்கடத்தில் மாட்டிக் கொண்டேன்.”

அந்த நேரத்தில் சமையலறையில் உட்கார்ந்து சமையல்காரர் ‘ஹனுமான் சாலிஸா’வை ராகம் போட்டு பாராயணம் செய்யத் தொடங்கினார், ‘சங்கட் மோசன் நாம தி ஹாரோ.’

ஐந்து நிமிடத்துக்குள் ஒவ்வொருவரும் ‘சங்கடம்’ என்ற வார்த்தையை 25 தடவையாவது உச்சரிக்கவே ஸ்ரீ பார்த்தன் மனதில் அது முள்போலத் தைத்தது. சங்கடம்… கடம்..சங்…கடம்! தரும சங்கடம்! அவன் கேட்டான், “என்ன சங்கடம்?”

ராம்டஹல் ஏதோ சொல்ல வாயைத் திறந்தபோது ஸ்ரீஹர்ஷன் அவனை அடக்கி விட்டான். ஸ்ரீஹர்ஷன் இந்த சங்கடமான நிலைமை வந்ததன் காரணங்களை தானே சாங்கோபாங்கமாக விவரிக்க ஆசைப்பட்டான். அதனால்தான் ராம்டஹலைப் பேச விடவில்லை. ஆனால் ஸ்ரீ பார்த்தன் தான் ஒவ்வொருவரிடமும் தனித்தனியே பேச விரும்புவதாக ஆங்கிலத்தில் தெரிவித்தான். ஆகவே, தாயைத் தவிர அனைவரும் அந்த அறையை விட்டு வெளியே வந்தனர். கூப்பிடுபவர் மட்டும் வந்தால் போதும், யாரும் யாரையும் சைகை மூலமாகவோ, வேறு விதமாகவோ அச்சுறுத்தக் கூடாது. 

பரபரப்புடன் எதிரேயிருந்து வந்தாள் பவானி. அவள் முகத்தில் மகிழ்ச்சியும் கலவரமும் மாறி மாறித் தாண்டவமாடின. வந்தவள் தன் கணவரை அணுகி, “அப்பா என்னைக் கூப்பிடறாங்க. நான் சன்னல் வழியாகப் பார்த்தபோது ‘மகளே!’ என்று அன்பாகக் கூப்பிட்டாங்க. போகட்டுமா?”

ஸ்ரீபார்த்தன் தாயைப் பார்த்தான்.திருமதி தருமசீலை இதற்கு எந்தவிதமான பதிலையும் கூறாமல் தன் வாக்குமூலத்தை அளித்துக் கொண்டிருந்தாள். பவானி என்ன செய்யவேண்டும் என்று புரியாமல் குழம்பிப் போய் அங்கேயே நின்றாள். 

திருமதி தருமசீலை, ஸ்ரீஹர்ஷன், ராம்டஹல், சமையல்காரர் எல்லாரையும் தனித்தனியாக விசாரித்த பின்னர் ஸ்ரீபார்த்தன், சிக்கலின் மூலகாரணத்தைக் கண்டு பிடித்தான். அப்போதுதான் தன்னுடைய தகப்பனார் எப்பேர்ப்பட்ட அபூர்வமான ஞானி என்ற உண்மை தெள்ளத் தெளிய விளங்கியது. தொடர்ந்து மூன்று-நான்கு தினங்கள் இந்த மாதிரி சிக்கலகள் சங்கடங்களுக்கு நடுவே இருந்தும் அவருடைய மூளை பிறழாமல் சரியாக இருக்கிறது என்றால் அவர் உண்மையிலேயே மகான்தான், ஞானிதான். 

ஸ்ரீபார்த்தன் துன்புறுத்தப்பட்ட தன் தந்தையின் சன்னிதி நோக்கி ஓடலானான். அவருடைய பாத தூளியைச் சிரமேற்கொள்வதற்காக. அதர்கு முன் அவன் பவானியை அழைத்து ஏதோ சொன்னான். இதைக் கேட்ட திருமதி பவானி அரண்டு போய் ஸ்ரீ ஹர்ஷன், ராம்டஹல், பிறகு தருமசீலை இவர்களைப் பார்த்தாள்… இத்தனை பைத்தியங்களுக்கு நடுவில்.. அட கடவுளே! 

திருமதி பவானி தன் கணவன் பின்னால் ஓடினாள். 

சிக்கலின் மூலக்கதை இப்படி ஆரம்பிக்கிறது. 

-எட்டுக் கிரகச் சேர்க்கையினால் விளையக் கூடிய ஆபத்துக்களைப் பற்றிய வதந்திகள் ஊரில் உலவிக் கொண்டிருக்கையில் ஒரு நாள் இந்த ஊரிலுள்ள ‘பூடி- சேடானி- சத்திரத்தில்’ முக்காலும் உணர்ந்த ஒரு சோதிடர் வந்தார். ‘நான் இந்த ஊரில் ஒரு பட்சத்துக்கு மேல் (பதினைந்து நாட்கள்) தங்க மாட்டேன். அதற்குள் என்னை வந்து சந்திப்பவர்களின் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால, உண்மைகளைக் கூறுவேன். கெட்ட காலத்தை நல்லகாலமாக மாற்ற வேண்டுமானால் விரைவில் வாருங்கள்,’ என்று அறிவிப்பு விடுத்தார். 

பக்திப் பாடல்களும், ‘பகவன் நாம பஜனை’களும், விதவிதமான வாத்திய கோஷங்களுடன், ரகரகமான ஒலிப்பெருக்கிகள் மூலமாக செவிகளைப் பிளந்தன. இடையிடையே மந்திர உச்சாடனங்களுடன் ‘ஹ-ஹ ஸ்வாஹா’ என்று வேள்வித்தீயில் ஆகுதி வழங்கும் ஒலிகள். ஓமப்புகையின் கடுமையான ஆனால் புனிதமான புகை மண்டலத்தால் சூழப்பட்ட இந்த நகரத்தில் முக்காலமும் உணர்ந்த ஞானி நம்பிக்கைக் கதிரைப் பரப்பினார் என்றால் போதாது, நம்பிக்கை என்ற சூரியனாக உதித்தார் என்று சொல்ல வேண்டும். மக்களுக்கு தங்கள் கேடுகாலம் நல்லகாலமாக மாறப் போகிறது என்ற நிம்மதி. 

அப்போது ஒரு நாள் நல்ல நேரம் பார்த்து திருமதி தருமசீலை தன் கணவரிடம், ”ஏங்க, இங்க பாருங்க, நீங்களும் ஒரு நடை போய் அந்த மகானை- முக்காலமும் உணர்ந்த ஞானியை- தரிசனம் செஞ்சுட்டு வாங்களேன்…” என்று வேண்டினாள். 

திருமதி தருமசீலை கணவரின் முகத்தைப் பார்த்து சற்றே பயந்தாள். ஆனால் திக்விஜயபாபு திட்டவில்லை. அன்பு கலந்த குரலில் கேட்டார், “புத்தியை விடப் பெரிசு உண்டா?” 

திருமதி தருமசீலை புன்னகை புரிந்தாள். ‘கருமயோகியான தன் கணவர் இப்படித்தான் சொல்லுவார் என்று அவளுக்குத் தெரியும். திக்கோபாபு அன்றைய செய்தித்தாளில் ஜவஹர்லால் நேருவின் அறிக்கையை வாசித்துக் காட்டினார். 

ஆனால் பி.ஏ. தேர்வில் மும்முறை படையெடுத்துத் தோல்வி கண்ட ஸ்ரீஹர்ஷனுக்குத் ‘தலையெழுத்தில்’ அபாரமான நம்பிக்கை வந்து விட்டது. அவன் மறுநாளே காசியிலிருந்து வெளியாகும் ஒரு பிரபல தினசரியிலிருந்து ஒரு செய்தியைக் கத்தரித்துக் கொணர்ந்தான், “இதப்பாரும்மா, நேருவுக்கு சம்பூர்ணானந்தர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். கொஞ்சம் அப்பாவுக்குக் காட்டு, படிச்சுப் பார்க்கச் சொல்லு.”

திக்கோபாபு மேலெழுந்தவாரியாக அந்தச் செய்தியைப் பார்வையிட்டார். பிறகு ராகம் போட்டு ஒரு பாட்டை முணுமுணுத்தார்; “எல்லாம் எனையாளுமீசன் செயலாமே…”

திருமதி தருமசீலைக்குச் சற்று தெம்பு வந்தது. ஆனால் ராம்டஹலும், சமையல்காரர் ஜாவும் காலையிலும் மாலையிலும் அஷ்ட கிரகச் சேர்க்கை பற்றிய பயங்கரச் செய்திகளுடன் வரலானார்கள். இதையெல்லாம் கேட்டு ஸ்ரீஹர்ஷன் இரவில் உறக்கம் வராமல் திண்டாடினான். தூக்கத்தில் கெட்ட கனவு கண்டு அலறுவான். 

திருமதி தருமசீலையின் கவலை அதிகரித்தது. ஸ்ரீஹர்ஷன் அவ்வப்போது செய்தி தெரிவித்து வந்தான். “இன்று முன்சீபும் வேறு சில அதிகாரிகளும் சோதிடரைப் பார்க்கப் போனார்கள்- சிவில் சர்ஜன் இரவுபகலாக அங்கேயேதான் முகாம் போட்டிருக்கிறார். கல்கத்தாவிலிருந்து ஒரு கொழுத்த சேட் தனி விமானத்தையே அமர்த்திக் கொண்டு குடும்பத்துடன் சோதிடரைக் காண வந்தார்.”

வாழ்நாள் முழுதும் கோர்ட்டில் பேஷ்கார் வேலை பார்த்த திக்கோ பாபு விதியை விட மதியில் அதிக நம்பிக்கை உள்ளவராயினும், பெரிய அதிகாரிகள் பெயரைக் கேட்டதும், கொஞ்சம் செவிசாய்க்க ஆரம்பித்தார். முன்சீபு, கலெக்டர், சிவில் சர்ஜன் இவர்கள் எல்லாரும் அந்த சோதிடரைக் காணச் சென்றார்கள் என்றதும் சிந்தனையில் ஆழ்ந்தார். பிறகு, “என்னிடம் ஜாதகமே இல்லையே, என்ன செய்ய?” என்றார் அக்கறையுடன். அதற்கு தருமசீலை, “அதனால் என்ன? ஏதாவது பூவின் பெயரைச் சொன்னால் போதுமாம். ஜாதகம் கணித்து விடுகிறாராம்,” என்றாள். “அது சரி, ஆனால் நான் ஜோசியம் பார்க்க சத்திரத்துக்கோ, சாவடிக்கோ போகத் தயாராக இல்லை,” என்று தீர்மானமாகக் கூறி விட்டார் அவர். “இரட்டிப்பு கட்டணம் கொடுத்தால் சோதிடர் நம்ம வீட்டுக்கே வருவாராம்.”

அப்படியாகக் கடைசியில் ஸ்ரீஹர்ஷனை இரு மடங்கு கட்டணத்துடன் குதிரை வண்டியில் அனுப்பி சோதிடரை உரிய மரியாதையுடன் பங்களாவுக்கு அழைத்து வருவது என்று முடிவெடுக்கப்பட்டது. 

அனைவருக்கும் பெருமகிழ்ச்சி.  ‘குடும்பத்தலைவரின்’ எதிர்காலம் நன்றாக இருந்தால் போதும், மற்றவர்களின் எதிர்காலம் அதில் அடக்கம்தானே- குடும்பத்தலைவர் தலையசைத்தாரே, அதுவே பெரிய காரியம் என்று எண்ணினார்கள்.

ஸ்ரீஹர்ஷன் சோதிடரை அழைத்து வர குதிரை வண்டியுடன் கிளம்பினான், திருமதி தருமசீலை ஒரு அருமையான யோசனை கூறினாள், “இரட்டிப்புக் கட்டணம்தான் கொடுக்கிறோமே, அதுக்கு ஏத்த மாதிரி பலனையும் இரட்டிப்பாகக் கேளுங்கள்.”

“இரட்டிப்பாக என்றால்?”

“அதாவது உங்களைப் பத்திக் கேளுங்க, கூடவே வீட்டிலே மத்தவங்க எதிர்காலத்தையும் கேட்கலாமே.”

சோதிடர் வந்தார். தாடி வளர்த்து நெற்றி நிறைய திருநீறு அணிந்த சோதிடர்களைப் பார்த்திருக்கிறோம். சூட்டும், கோட்டும் அணிந்த இந்த சோதிடரைக் கண்டதுமே எல்லாருக்கும் எதிர்காலம் ஒளிமயமாகத் தெரிந்தது. இவருக்கு நிச்சயமாக செப்பிடு வித்தை தெரிந்திருக்க வேண்டும். 

டாக்டர் போல ஒரு கையில் சிறிய  ‘பிரீஃப்கேஸ்’, காண்ட்ராக்டர் பாணியில் இன்னொரு கையில் பெரிய ‘ப்ரீஃப்கேஸ்’ சமேதராக குதிரை வண்டியில் இருந்து இறங்கினார் சோதிடர். எடுத்த எடுப்பிலேயே திக்கோ பாபுவை வியப்பில் ஆழ்த்தி விட்டார். “நான் சயன்டிஃபிக்கா பார்க்கிறவன். அதனாலே லென்ஸ், ஸ்டெதாஸ்கோப், பிளட்பிரஷர் அளவிடும் கருவி, தெர்மாமீட்டர் எல்லாம் தயாராக இருக்கும். சோதிடக் கட்டங்களை துல்லியமாகப் போட இன்ஸ்ட்ருமெண்ட் பாக்ஸ், அட்சாம்சம் மற்றும் தீர்க்க ரேகைகளைக் கணிக்க தேசப் படங்கள் எல்லாம் வேணும்தானே.”

 திக்கோ பாபுவின் சாந்தி குடில்வாசிகள் இறைவனை மனமார வாழ்த்தினர். ஆனால் திக்கோ பாபு திடீரென ஒரு நிபந்தனை விதித்தார், “நான் எதிர்காலத்தை ஆராயும்போது யாரும் உள்ளே வரக்கூடாது.”

திக்கோபாபுவின் அறைக்கதவு மூடப்பட்டது. வெளியே நிற்கும் பிரஜைகளின் நெற்றியும் புருவங்களும் குறுகுறுத்தன. தம்மையறியாமலேயே எல்லாரும் இறைவனை மீண்டும் வாழ்த்தினர். 

முழுதாக மூன்று மணி நேரத்துக்குப் பின் சிரித்த முகத்துடன் சோதிடர் வெளியே வந்தார். அவரைத் தொடர்ந்து வந்த திக்கோ பாபுவின் முகமும் மலர்ந்து காணப்பட்டது. அந்த முகமலர்ச்சியிலே எல்லாரும் ஒளிமயமான எதிர்காலத்தைக் கண்டு மகிழ்ந்தனர். ஆகவே ஸ்ரீஹர்ஷன் சோதிடருடன் குதிரை வண்டியில் அமர்ந்தபோது அவனது முகத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி காணப்பட்டது. 

திக்கோபாபுவிடம் முதலில் விசாரித்தது தருமசீலைதான். “கடவுள் கிருபையில் எல்லாம் நல்லாத்தான் சொல்லியிருப்பாங்க, இல்லை?” 

“உடைப்பிலே போடு, எல்லாருமே ஏமாத்துக்காரனுகதான்.”

“ஏன் சும்மா ஏதேதோ அளந்திட்டுப் போனாரா என்ன?”

“அவர் எதுக்காக அளக்கணும்? மேப்பையும் தெர்மாமீட்டரையும் வெச்சு எதிர்காலம் கணிக்கக் கூடியவருக்கு இது கூடத் தெரியாதா என்ன? இங்கே எல்லாமே வெட்ட வெளிச்சமாத் தெரியுதே! பென்ஷன், மூத்த பையன் கலெக்டர், இளையவன் நல்ல வாட்ட சாட்டமான, பார்க்க லெட்சணமான முட்டாள். பெண்டாட்டி பெயர் தருமசீலை.”

திருமதி தருமசீலை கணவரின் குறும்புப் பேச்சைக் கேட்டு புளகாங்கிதமடைந்தாள். “அப்ப உண்மையிலேயே முக்காலமும் உணர்ந்தவர்தான், இல்லே?”

வீடு திரும்பிய ஸ்ரீஹர்ஷன் அம்மாவிடம் சென்றான்; “அப்பாவின் எதிர்காலம் எப்படி?”

“அவரா? முப்பத்தஞ்சு ரூபாயை இப்படி இனாமா தூக்கிக் கொடுத்திட்டோமேன்னாரு.”

“அப்ப, ஒண்ணுமே சொல்லலியா?”

“ஏமாத்துக்காரனுங்க, அப்படீன்னாரு.”

“ஹும்… சமயம் பார்த்து இன்னொரு தடவை அப்பாகிட்டக் கேட்டுப் பாப்பியா? ஏன்னா, சோதிடரிடம் பேச்சுக் கொடுத்தப்ப எதிர்காலத்துலே ஏதோ ’கோளாறு’ இருக்கற மாதிரிதான் தெரிஞ்சுது…”

“கோளாறா?” திருமதி தருமசீலையின் களங்கமற்ற வதனத்தில் கவலையின் நிழல் படர்ந்தது. திகிலுடன் கேட்டாள், “என்னடா சொன்னார் கண்ணா?”

“அம்மா காலைத் தொட்டு வணங்கறப்ப அஞ்சு ரூபா காணிக்கை வைத்தும் கூட விளக்கமா ஏதும் சொல்லலே. ‘இருள்-வெளிச்சம் இரண்டும் சேர்த்து நெய்யப்படுகிறது மானுடர்களின் எதிர்காலம் என்ற மாயத் திரை. இருந்தாலும் இருட்டின் உபாதையிலிருந்து தப்பித்துக் கொள்ள வழியும் உண்டு,’ அப்படீன்னாரு.”

திருமதி தருமசீலையும், ஸ்ரீஹர்ஷனும் சோதிடரின் இந்த ‘ஐந்து வெள்ளி’ப் பொன்மொழியின் அந்தரங்கத்தில் முகிழ்ந்து கண்டு கொண்ட சாராம்சம் – எதிர்காலத்தில் ஏதோ கோளாறு வரப் போகிறது. இதைத் தவிர்ப்பதற்கான வழியையும் அவர் நிச்சயம் சொல்லி இருப்பார். ஒரு வேளை இதற்கான பரிகாரம் செய்ய நிறைய பொருள் செலவிட வேண்டியிருக்கும். அதனால்தான் குடும்பத் தலைவருக்கு அங்கலாய்ப்பு போல. 

தாயும், மகனும் ஒரே போல முகவாட்டத்துடன் இருப்பதைக் கண்ட ராம்டஹலும் முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டான். எசமானியம்மாள் மற்றும் சின்னதுரையின் கண்களைச் சந்திக்கும் போதெல்லாம் அவன் ஏதோ கேட்க விரும்புவது போல இருந்தது. கடைசியில் கேட்டே விட்டான், “சின்னதுரை – ‘அண்டியிருப்பவர்’ அப்படீன்னா என்ன? சொல்லுங்க.”

“என்னது? அண்டியிருப்பவரா, அண்டையிலே இருப்பவரா?”

ராம்டஹல் சற்றே யோசனை செய்து அந்தச் சொல்லை நினைவிற்குக் கொண்டு வர முயன்றான். பிறகு ‘அண்டியிருப்பவர்தான்’ என்றான். அக்கம்பக்கம் பார்த்து விட்டு மெல்லிய குரலில் கூறினான், “சோதிடருக்கு டீயும், வெற்றிலை பாக்கும் கொடுக்க உள்ளே போனப்ப சோதிடர் எசமானரிடம், “உங்களுக்கு அஷ்டகிரகத்தினால் எந்தத் தொல்லையும் இல்லை, நன்மையே கிடைக்கும். ஆனால், அண்டியிருப்பவங்களுக்குத்தான் தொல்லைகள் வரும்,” அப்படீன்னார்.”

“ஓ, அண்டியிருப்பவர்களுக்கா?”

ஸ்ரீஹர்ஷன் பெரிய அகராதியை எடுத்துத் தூசி தட்டி, அந்தச் சொல்லுக்கான பொருளைத் தேடத் துவங்கினான். திருமதி தருமசீலை தன் இஷ்ட தெய்வத்தின் பெயரை ஜெபிக்கலானாள். ராம்டஹல் மிரள மிரள விழித்தபடி நின்று கொண்டிருந்தான். 

ஐந்துநிமிடம் விடாமுயற்சியுடன் தேடிய பிறகு, ஸ்ரீஹர்ஷன் வெற்றியடைந்தான். “ஆமாம், அண்டியிருப்பவர்- பெயர்ச்சொல்- யாரையாவது அண்டி, அதாவது அடைக்கலமாகக் கொண்டு- பிழைப்பவர். தன் வாழ்க்கை, பிழைப்புக்காக இன்னொருவரை அடைக்கலமாகக் கொண்டவர்- மனைவி, மக்கள், பணியாட்கள்-”

திடீரென் நடுவில் ஒரு குண்டு விழுந்து பேரொலியுடன் வெடித்தது போல மூவரும் உணர்ந்தனர். நினைவு திரும்பியதும் விழுந்தது குண்டு அல்ல, ஸ்ரீஹர்ஷன் கையிலிருந்த பேரகராதிதான் என்பது புரிந்தது. இப்போது என்ன செய்ய? அண்டியிருப்பவர் என்றால், மனைவி, மக்கள், வேலையாட்கள்- எல்லாரும் மாட்டிக் கொண்டார்கள். இதிலிருந்து ராம்டஹலும் தப்ப முடியாது. சமையல்காரர் ஜாவும் தப்ப முடியாது. நரசிம்மப் பெருமாளே, நீயே துணை! 

அண்டியிருப்பவர்களுக்கு நேரவிருக்கும் தொல்லையைத் தவிர்க்க குடும்பத் தலைவர் ஏதாவது பரிகாரம் செய்யப் போகிறாரா இல்லையா என்பதை எப்பாடுபட்டாவது கண்டு பிடிக்க வேண்டும் என்று கிலி பிடித்த ‘அண்டியிருப்பவர்கள்’ முடிவு செய்தார்கள். 

மதியம் சாப்பாட்டு நேரத்தில் திருமதி தருமசீலை அன்புடனும், அக்கறையுடனும் விசிறியை எடுத்துக் கொண்டு கணவர் முன் அமர்ந்தாள். பிராணநாதர் முதல் கவளத்தை வாயில் போட்டுக் கொண்டதும் திருமதி தருமசீலை வினயத்துடன் ஆரம்பித்தாள், “ஏங்க… கோளாறாக ஏதாச்சும் நடக்கும்னா அதுக்குப் பரிகாரமும் சொல்லியிருப்பாரே, அதாவது உங்களை அண்…டி..யி..ரு..ப்..ப..”

திக்கோபாபுவின் முகம் கோபத்தினால் சிவந்தது, “த்ஸொ, த்ஸொ, ஒரே காரம். என்ன, கறியா இது? மிளகாய்ப் பொடியை அப்படியே அள்ளிப் போட்டுட்டார். இது சாப்பாடு இல்லை, விஷம்.. விஷம். எதிர்கால பலனைத் தெரிஞ்சுக்க இத்தனை பைத்தியமா இருக்கியே, சமையற்கட்டிலே கொஞ்சம் கவனிக்கக் கூடாது..? ஐயையோ- கொன்னுட்டாங்களே..”

திக்கோபாபுவுக்கு சாப்பிட முடியவில்லை. கோபப்படவும் முடியவில்லை. ‘சூ… சூ’ என்று நாக்கை நீட்டியவாறு எழுந்தார், வாயைப் பல முறை கொப்பளித்தார். 

சாயங்கால டீ வேளையிலும் முயற்சி வீணானது. டீயில் மிளகாய்ப்பொடி விழுந்திருக்கவில்லை. இனிப்பு சரியாகத்தான் இருந்தது என்றாலும் திக்கோபாபு முகம் கொடுக்கவில்லை. 

ஸ்ரீஹர்ஷன் இரவுச்சாப்பாட்டுக்கு முன்பு இந்த இக்கட்டிலிருந்து மீள ஒரு உத்தியைக் கண்டு பிடித்தான் – ஆம், அதைத் தவிர வேறு வழியில்லை. சாந்தி குடிலில் அண்டியிருக்கும் பிரஜைகளின் முன்பாக அவன் தன் இரகசியத் திட்டத்தை வெளியிட்டான். முக்கியமாக தாயிடம் எடுத்துக் கூறினான், “நமக்குத் தொல்லை வராமல் காக்க அப்பா எதுவும் செய்ய மாட்டார். அவரை நான் சுயநலக்காரர் என்று சொல்ல விரும்பவில்லை. ஆனால் நிச்சயமாகவே அவருக்குக் கல்மனதுதான், ஈவிரக்கமே கிடையாது. இதற்காக நாம் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூட அவர் தெரிவிக்கத் தயாராக இல்லை. அப்பா குஷாலாகத்தான் இருப்பார். எந்த விதத்தில் பார்த்தாலும் நாம் அவரை அண்டியிருப்பவர்கள்தான். இனியும் இதே கதியில் இருந்துதான் ஆக வேண்டும். நமக்கு வேறு வழியில்லை. ஆகவே ‘பாம்பும் சாகக் கூடாது, கழியும் உடையக் கூடாது’ என்ற முறையில் ‘சயன்டிஃபிக்’ உபாயத்தைக் கையாளவேண்டும். எல்லாரும் சரின்னு சொன்னா….”

அண்டியிருப்பவர்கள் அனைவரும் ஒரு மனதுடன் முடிவெடுத்தனர்- தற்காப்புக்காக குடும்பத் தலைவருக்கு எதிராக் ‘ஒத்துழையாமை’ இயக்கம் நடத்துவோம். அதாவது தற்காப்புக்காக அகிம்சை முறையில் அவரை எதிர்ப்போம். உண்மையில் அண்டியிருப்பவர்கள் ஆனாலும் அண்டிப் பிழைக்காதவர்கள் போல நடந்து கொள்வோம். எப்படியானாலும் குடும்பத் தலைவர் சுகமாகவே இருக்கப் போகிறார். அவருக்கு எந்தக் கஷ்டமும் வரப்போவதில்லை. 

இந்தத் தீர்மானம் எடுத்த பிறகு ஸ்ரீஹர்ஷன் தன் ‘செயல் திட்டத்தின் நேரடி நடவடிக்கை’ப் பகுதியை விளக்கினான். 

மறுநாள் காலையில் ராம்டஹல் போர்க்கொடி உயர்த்துவது என்று முடிவாயிற்று. ஏனெனில் விடிகாலையில் அவன் பெயரை உச்சரித்துக் கொண்டுதான் குடும்பத் தலைவர் எழுந்திருப்பார். திருமதி தருமசீலை தகுந்த விளக்கம் அளித்து ஐயப்பாடுகளை நீக்கியவாறு அறிவித்தாள், ‘அவருக்கு காலை ‘டீ’ நிச்சயம் கிடைக்கும், ஆனால் லேட்டாக. அவருக்குத் தொல்லை தருவதற்காக அல்ல, தொல்லையிலிருந்து நாம் விடுபட அவரை எதிர்ப்போம். எதிர்ப்பைத் தொடங்குவதற்கு முன் நாம் எல்லாரும் நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்வோம்.” 

ராம்டஹலுக்கு நெஞ்சைத் துழாவ வேண்டிய அவசியம் இருக்கவில்லை. 

காலையில் குடும்பத்தலைவர் அவன் பெயரைச் சொல்லி அழைத்ததும், உடனெ பதில் தர வாய் எழும்பியது. பற்களை இறுக்கிப் பிடித்து அவன் தன் நாவைக் கடிவாலமிட்டு அடக்கினான் – இருபத்தைந்து வருடப் பழக்கமல்லவா? 

மூன்று முறை எசமானர் குரல் கேட்டும் ராம்டஹல் வாய் திறக்கவில்லை. திக்கோபாபு சற்றே வியந்தார். உடலை ஒருக்களித்தவாறு தலையைத் தூக்கிப் பார்த்தார், ராம்டஹல் எதிரே வராந்தாவில்தான் படுத்திருக்கிறான், வழக்கமான இடத்தில். இந்தத் தடவை அவர் தொண்டையைத் திறந்து கத்தினார், “ராம்டஹல்!”

“காலங்கார்த்தால ராம்டஹல், ராம்டஹல்னு ஏன் கத்துறீங்க? சொல்லுங்க, என்ன வேணும்?”

திக்கோபாபுவுக்குத் தாம் இன்னும் தூங்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. அதனால் பேசவில்லை. ஆனால் ராம்டஹல் நிறுத்தவில்லை, தொடர்ந்து கூறினான், “டீ வேணும்னா சமையற்காரரைக் கூப்பிடுங்க, தெரியுமா?”

திக்கோபாபு கனவுலகத்திலிருந்து சாந்தி குடிலில் தன் அறையில் இறங்கினார். ராம்டஹல் தன் இடது உள்ளங்கை மீது புகையிலைத்தூளை வைத்துச் சுண்ணாம்புடன் சேர்த்து பெருவிரலால் அதை அழுத்தித் தேய்த்துக் கொண்டிருந்தான். முப்பதுகளில் கேட்ட ஏதோ ‘சுதேசி’ கீதத்தை நினைவுபடுத்திக் கொண்டான். நெஞ்சை உரத்துடன் வைத்திருக்க அந்தப் பாட்டை ராகமாக இசைத்தான் – “குரங்கைப் போல ஆட்டுவேனே அண்ணே, இந்த பிரிட்டிஸ்காரனை, குரங்குபோல ஆட்டுவேனே அண்ணே?”

ராம்டஹல் இப்போது கஞ்சா குடிக்க ஆரம்பித்து விட்டான் என்பது திக்கோபாபுவுக்குச் சந்தேகமில்லாமல் தெரிந்து விட்டது. அவமானம், கோபம், வருத்தம் எல்லாம் சேர்ந்து எதிர்பாராதவிதமாக ஒரே நேரத்தில் தாக்கியதால் உடம்பு பற்றி எரிவது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவர் எழுந்தார்; நீண்ட கழியைக் கையில் எடுத்துக் கொண்டு ஒரே பாய்ச்சல். ராம்டஹல் ஏற்கனவே ஓடத் தயாராக இருந்தான். எழுந்து ஓடலானான். ஆனால் வீதியைக் கடக்க முடியவில்லை. நடு வீதியிலேயே திக்கோபாபு அவனைப் பிடித்துக் கொண்டார். செம்மையாகப் புடைத்தார். அவர் பொழிந்த சரமாரியான திட்டுக்களைக் கேட்டு தெரு ஜனங்கள் விழித்து எழுந்தார்கள்; கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தார்கள். ஆமாம், சந்தேகம் இல்லை, திக்கோபாபுவேதான். 

அக்கம்பக்கத்தில் வந்து கூடிய ஜனங்களுக்கு எச்சரிக்கை விடுத்து, இன்னும் வேடிக்கை காட்டப் போவதாக அவர்களைப் பயமுறுத்தி விட்டு திக்கோபாபு பூச்சட்டிகளைக் காலால் உருட்டிக்கொண்டே உள்ளே போனார். விசுவாசமான பழைய வேலைக்காரனை இவ்வாறு தூண்டி விட்டது அண்டை அயல் வீட்டுக்காரர்கள்தான் என்பதைப் புரிந்து கொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை. இந்த அடாவடித்தனத்துக்காக அவர்களைப் பழி வாங்குவதைப் பற்றி யோசிக்கலானார். அப்போது சமையற்கார ஜா அறையினுள் நுழைந்தார். கையில் ஒரு நோட்டீசுடன் – அண்டியிருப்பவர்கள் சார்பாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நோட்டீசு – திக்கோ பாபு வாசிக்கலானார். – “இத்தனை காலமும் நம்பிக்கையுடனும், விசுவாசமாகவும் உழைத்து வந்த உங்கள் வேலையாள் மீது நீங்கள் இன்று கோபமடைந்து வன்முறையில் இறங்கியதைக் கண்டு வேதனையடைந்துள்ளோம். உங்களை அண்டி நிற்பவர்களாகிய நாங்கள் இந்தக் கொடூரச் செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன் இனிமேல்- ”

திக்கோபாபுவால் மேலே படிக்க இயலவில்லை. காரணம், சின்ன பங்களாவிலிருந்து கீச்சுக் குரலில் ஒரு பழைய பாட்டின் ரிக்கார்டு ஒலித்து அவர் கவனத்தைத் திருப்பியது – ‘ஹோ பாபி- ஜோபனா கா தேக்கோ பஹார்- ஹோ பாபி- ஹோ பாபி..!’

இந்த மாதிரி மூன்றாந்தர ரிக்கார்டுகளைப் போட்டுக் கொண்டும், கவர்ச்சிக் கன்னியர் படம் போட்ட புத்தகங்களை (ஆரோக்கிய நூல்களாம்!) படித்துக் கொண்டும், தன்னுடைய ஊர் சுற்றி நண்பர்களுடன் சீட்டாடிக் கொண்டும் ஸ்ரீஹர்ஷன் தன் எதிர்ப்பை வெளியிட்டான். அண்டிப் பிழைப்பவர்கள் எல்லாருக்கும் அவரவர் செய்ய வேண்டிய செயல்திட்டத்தை அவன் தயாரித்துக் கொடுத்திருந்தான்.

ஸ்ரீஹர்ஷன் தாய்க்கு நினைவூட்டினான், “அம்மா, இதப்பாரு, தப்பித் தவறி அப்பா காலைத் தொட்டு வணங்கி வைக்கப் போறே, அப்பாவின் படத்தை வைத்துக் கொண்டு பூசனையும் வழிபாடும் செய்து கொள், பாதகமில்லை. ஆனால் அப்பாவிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டால்தான் வரவிருக்கும் சங்கடத்தைத் தவிர்க்க முடியும்… ஆமா!”

அண்டியிருப்பவர்கள் மூன்று நாள் வரையிலும் உறுதியுடன் எதிர்ப்புத் தெரிவித்தனர். குடும்பத் தலைவரைச் சினமடையச் செய்ய புதுப் புது உத்திகளைக் கையாண்டனர். ஆனால் திக்கோபாபு மௌன விரதம் பூண்டு ‘கீதா ரகசியத்தில்’ தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். மெயின் ஸ்விட்சை அணைத்து விட்டால் ரேடியோவை எத்தனை உரக்க அலறவிட்டாலும் ஒலி கேட்காதல்லவா… ராம்டஹல் தன் நீண்ட கோவணத்தைப் பறக்கவிட்டு அவருடைய சினத்தீயை எழுப்ப மீண்டும் மீண்டும் முயன்றான். உஹூம், பயனில்லை. 

கடவுளுக்குச் சமானமான தன் மாமனாருக்குப் பணிவிடை செய்ய திருமதி பவானிக்கு இதுவரை வாய்ப்புக் கிடைத்ததில்லை. மருமகள் மீது ஏதாவது குறை கண்டு பிடித்து கணவரிடம் கோள் சொல்லிக் கொண்டிருப்பது திருமதி தருமசீலையின் வழக்கமாக இருந்தது. 

இந்தத் தடவை திருமதி பவானி தன்னுடைய நற்குணங்களால் திக்விஜய் பாபுவின் மனதை இரண்டே நாட்களில் கவர்ந்து விட்டாள். 

அன்று ஸ்ரீபார்த்தன் தகப்பனாருக்கு எதிராகக் கொடி பிடித்த  ‘அண்டிப் பிழைப்பவர்களை’ ஒன்று சேர்த்து தன் முடிவை வெளியிட்டான். “இன்றிலிருந்து நீங்கள் என் தந்தையை  ‘அண்டிப் பிழைப்பவர்கள்’ இல்லை. ஆகவே உங்களுக்கு ஆபத்து வரும் என்ற அச்சத்துக்கு இடமில்லை. அப்ப இனிமேல் துர்காபூரில் என்னுடன் இருக்கப் போகிறார். அவர் இனிமேல் மற்றவர் ஆதரவில் வாழ்வது நல்லது என்றும் சோதிடர் கூறியிருக்கிறார்.”

சமூகவேலையில் ஈடுபடச் சொல்லி அம்மாவுக்கும், வீட்டு வேலைக்காரர்களை ஒன்று திரட்டி தொழிற்சங்கம் நடத்தச் சொல்லி ஸ்ரீஹர்ஷனுக்கும், வேர்க்கடலை விற்கச் சொல்லி ராம்டஹலுக்கும், கங்கைக்கரையில் பிச்சை எடுக்கச் சொல்லி சமையற்கார ஜாவுக்கும், அவரவர் தகுதிக்கேற்ற பயனுள்ள அறிவுரைகள் கொடுத்த பிறகு ஸ்ரீபார்த்தன் துர்க்காப்பூர் திரும்புவதற்கான ஆயத்தங்களை தீவிரமாகச் செய்யும்படி தன் மனைவி பவானிக்குக் கட்டளையிட்டான். 

திக்விஜய்பாபு சின்னக் குழந்தை போல மகிழ்ச்சியுடன் தன் சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டு முற்றத்தில் ஆரவாரம் கேட்டது. திருமதி தருமசீலை கோபாவேசத்துடன் சமையற்கார ஜாவை அதட்டினாள், “சொல்லு, நீ வேணும்னுதானே இதையெல்லாம் செஞ்ச? இது உனக்கு அடுக்குமா? நாங்க சந்தோஷமா வாழறதை உன்னாலே பொறுத்துக் கொள்ள முடியலியா- இந்த மாதிரியெல்லாம் செய்தால் வீட்டிலே உள்ளவங்களுக்குப் பைத்தியம் பிடிக்காமல் வேறென்ன நடக்கும்-”

ஸ்ரீபார்த்தன் புறப்படுவதற்கு முன் சண்டையின் மூலகாரணத்தை அறிய விரும்பினான். திருமதி தருமசீலை கூறினாள், “மகனே, நீ கலெக்டர் உத்தியோகம் பார்க்கிறே. அதனாலே இந்த விஷயத்திலே நீதான் தீர்ப்புச் சொல்லணும். இந்தத் தடவை உங்கப்பா கீரை விதை வாங்கி வந்தார். இந்த ஜா கீரை விதையோடு கூட ஒரு சிமிட்டா அளவு பங்கி விதையையும் சேர்த்து விதைச்சுட்டாரு. இப்ப நாலஞ்சு நாளாக வேலைக்காரி கீரையோடு கூட தெரியாமலேயே பங்கி இலைகளையும் பறிச்சுட்டு வராளா, ஜாவும் கண்ணை மூடிட்டு அதைச் சமைச்சு வைக்கிறாரு. இந்த கதியிலே எல்லாருக்கும் பைத்தியம் பிடிக்காம எப்படியிருக்கும் சொல்லு.”

“அப்படியா சேதி, என்னடா இது எப்பப் பார்த்தாலும் தலை சுத்துதுன்னு தெரியாம தவிச்சிட்டிருந்தேன்!” என்றான் ராம்டஹல். 

“ராம்டஹல், போயி போலிசைக் கூட்டி வா,” என்றான் ஸ்ரீஹர்ஷன். 

சமையற்காரர் கைகூப்பிக் கொண்டு நடுங்கும் குரலில் மன்னிப்பு கேட்டார், “பெரிய ஐயாவும், அம்மாவும், சின்ன துரைங்களும், இந்த முறை மன்னிக்கணும். இனிமேல் இது மாதிரி தப்பு நடக்காது. தெரியாமல் செய்துட்டேன்.”

தர்மசங்கட நிலைக்கான காரணத்தைக் கண்டறிந்த பிறகு திருமதி தருமசீலை ஒரு டம்ளர் குளிர்ந்த நீருடன் கணவரின் அறையை நோக்கி நடந்தாள். 

(1965) 

~oOo~

தமிழாக்கம்: டாக்டர். எச். பாலசுப்பிரமணியம் 

இந்தி மூலம்: ‘பணீஷ்வர்நாத் ரேணு கி கஹானியான்’ புத்தகத்திலிருந்து எடுத்த கதை

நேஷனல் புக் ட்ரஸ்ட் 1998 ஆம் வருடம் பிரசுரித்த ‘பணீஷ்வர்நாத் ரேணு கதைகள்’ என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட கதை. 

நன்றி: நேஷனல் புக் ட்ரஸ்ட் மற்றும் டாக்டர் எச். பாலசுப்பிரமணியன்

2 Replies to “தர்ம சங்கடம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.