இரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள்

அமெரிக்க உணவு வங்கி- தோற்றமும்  வளர்ச்சியும் 

கோரா

1960-களின் இறுதியில், அரிசோனா மாநில போனிக்ஸ் நகரில் வாழ்ந்த ஜான் வான் ஹெங்கேல் என்னும் ஓய்வுபெற்ற தொழிலதிபர், அருகிலிருந்த  சிற்றுணவகத்தில்  (soup kitchen) தன்னார்வராக வேலையில் சேர்ந்தார்.  முழு ஈடுபாட்டுடன் உணவகத்துக்காக  உணவுப் பொருள்   நன்கொடை வசூலில் இறங்கிய அவரால்  அந்த கிச்சனின் தேவைக்கு மேல் உணவு சேகரிக்க முடிந்தது. தொடர்ந்து அவர்  மளிகைக் கடைகளிலும், உள்ளூர் வயல்களிலும் விரும்பப்படாத உணவுப் பொருட்களைக் கேட்டு வாங்கி இறுதியில் உருவாக்கிய புனித மேரி உணவு வங்கிதான் அமெரிக்காவின் முதல் உணவு வங்கி.  பின்னர் உணவு வங்கிகள்  பெருகி, அமெரிக்காவுக்கு உணவளிப்பு (Feeding America ) என்ற புது அடையாளம் பெற்று, 200 க்கும் அதிகமான உணவு வங்கிகள் இணைந்த நாடு தழுவிய பிணையமாக வளர்ந்து, உணவு வங்கிகளை  சார்ந்துள்ள பொட்டண உணவறைகள்  (food pantries), சிற்றுணவகம் (soup kitchens),  மற்றும் பிற சமுதாய முகமைகள் வழியாக 46 மில்லியன் மக்களுக்கு உணவளிக்கக் கூடிய லாப  நோக்கில்லா பசியாற்று (hunger relief) நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இது வருவாய் நோக்கில் அமெரிக்கத்  தொண்டு நிறுவனங்களில் இரண்டாமிடம் வகிப்பதாக  ஃபோர்ப்ஸ் கம்பெனியின் மதிப்பீடு கூறுகிறது. நாட்டின் உணவு மற்றும் மளிகை உற்பத்தியாளர்கள், சில்லறை வியாபாரிகள், உணவு சேவையளிக்கும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், ஏற்றுமதியாளர்கள், வணிகப்  பொதி கட்டுவோர் (packers), விவசாயிகள், அரசு முகமைகள், பிற நிறுவனங்கள் எனப் பலர் அமெரிக்க உணவளிப்பு நிறுவனத்திற்கு கொடையளித்து ஊக்கமூட்டுகிறார்கள்.  உணவு வங்கி சிறிதோ, பெரிதோ,  எந்த  அளவினதாய் இருப்பினும்,  அது தன்  அன்றாடப் பணிகளுக்காக   கொடையாளர்களையும், தன்னார்வர்களையுமே நம்பி இருக்கிறது.

உணவு வங்கி செயல்பாடு  

உணவு வங்கி அடிப்படையில் உணவுப் பொருள் கிடங்கு மட்டுமே.  பொட்டண உணவறைகளில் தேவைக்கேற்ப உணவுப் பொருட்களை இருப்பு வைப்பது அதன்  முக்கிய வேலை. பொதுவாக பசித்தவர்கள் உணவுக்காக போகவேண்டிய இடம் உணவு வங்கி அல்ல. பொட்டண உணவறைக்குத்தான் செல்ல வேண்டும். பொட்டண உணவறைகள் சமைக்கத் தேவையான எல்லா உணவுப் பொருள் பொட்டணங்களையும், வீடுள்ள, ஆனால் வீட்டாருக்கு உணவிடும் அளவுக்கு வருமானம் இல்லாத வறியவர்க்கு அளிக்கிறது. அவர்கள் தாமே வீட்டில்  உணவுப் பொருட்களை சமைத்து உண்பார்கள்.

சிற்றுணவகம் செயல்பாடு 

பசித்தோருக்கு  சிற்றுணவகங்களில் சமைத்த உணவு இலவசமாகவோ அல்லது தள்ளுபடி விலையிலோ தரப்படுகிறது. சிற்றுணவகங்கள்  பெரும்பாலும்  அடித்தட்டு மக்கள் குடியிருப்பின் அருகில் அமைந்திருக்கும். பெரும்பாலும் சர்ச் அல்லது சமூகக்குழு போன்ற  தன்னார்வ அமைப்புகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள். சில சமயம் சிற்றுணவகங்கள் நேரடியாக உணவு வங்கியிலிருந்து உணவுப் பொருட்களை இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ பெற்றுக்கொள்கிறார்கள். அவை தொண்டு நிறுவனங்கள் என்பதாலேயே இச்சலுகை பெற்று நிறைய மக்களுக்குச் சேவை செய்ய முடிகிறது.

உள்ளூர் சமூகத்தின் மனிதநேயம் 

உணவு வங்கி உருவானதுக்குக்  காரணமாய் இருந்த  அறக் கோட்பாடுகள் குறைகாண முடியாதவை. அதன் சேவைக்கு மக்களின் பேராதரவு கிட்டியிருப்பது  மனிதாபிமான முயற்சியின்  வெற்றியெனக் கருதலாம். அத்துடன் தம்மிடையே வாழும் வறியவர்களை அரவணைத்து,  அவர்களை    பாதுகாப்பாகவும் , சேவைக்கு உரியவர்களாகவும்   (inclusive) உணர  வைக்கக்கூடிய மனிதாபிமானமுள்ள உள்ளூர் சமூக சேவகர்களுக்கும் வெற்றியில் பெரும் பங்குண்டு. 

அதே சமயம் இந்த  உணவளிப்பு அமைப்பின் குறைபாடுகளையும் சொல்ல வேண்டியிருக்கிறது. அவையாவன:

1. முதலிய (capitalistic) சமுதாயத்தில் மக்களின் மதிப்பு, அவர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதைக் கொண்டே அளவிடப் படுகிறது. தான தர்மங்களை ஏற்பது இழுக்கு எனப்படுகிறது.  கருத்துக் கணிப்பின் படி, பெரும்பாலானோர் அனுகூலத்  தொகை வந்து சேராததால் உணவு வங்கியை  நாடுகிறார்கள் என்பதே உண்மை.  இருப்பினும்  முழுச் சம்பளத்தையும் குடித்தோ புகைத்தோ ஒழித்தவர்களும் , சமைத்து உண்ணத் தெரியாதவர்களுமே, இலவச  உணவைத் தேடிப் போகிறார்கள் என்பதே பெரும்பாலானோரின் முடிவு. சுருக்கமாகச்  சொல்வதென்றால் பணக்காரர்கள்  அவர்களுக்கு வேண்டாத உணவுப் பொருளை அதை மறுக்க இயலாத அளவுக்கு வறுமையில் உழலும் ஏழைகளுக்கு தானமாகக் கொடுக்க ஏதுவாக இருப்பதுதான்  உணவு வங்கி. அங்கே தன் இயலாமையும், சமூகப் படிநிலையும் ஏக காலத்தில் நிதர்சனமானதால் நொறுங்கிப் போகிறது  ஏழைகளின்  உள்ளம் . 

2. உணவு வங்கி வழங்கும் உணவுப் பொருட்கள் நேரடியாக  உண்ணத் தகுந்தவையாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதும்,  தானமாக வந்த பொருட்கள் அழுகக் கூடாததாக இருக்க வேண்டும்  என்பதும் உணவு வங்கியின் கோட்பாடுகள். அதனால்    உணவு வங்கிக்கு கிடைக்கும் உணவுப் பொருள் உலர்ந்ததாக   அல்லது புட்டிகளில் அடைக்கப்பட்டதாக இருக்கும். வறுமை  காரணமாக முழுதும்  உணவு வங்கியை மட்டுமே  நம்பியிருப்போருக்கு சத்துள்ள சரிவிகித உணவு தேவை. உணவுத் தொகுப்பில்  உள்ள பொருட்கள்   சத்துக் குறைவானதாக இருப்பதோடல்லாமல், பல நேரங்களில் அவற்றை ஒருங்கிணைத்து  ஒருவேளை உணவாக ஆக்கிக் கொள்ள முடியாததாக இருந்து விடுகின்றன.  எரிவாயு மற்றும் மின் கட்டணம் செலுத்தப் பணமின்றித் தடுமாறுகிறவர்களுக்கு சமைத்து உண்ண வேண்டிய உணவுப் பொருட்களைக் கொடுப்பதும்  சரியன்று. (அமெரிக்க விவசாயத் துறை பழம், காய்கறிகளை உற்பத்தியாளரிடம் வாங்கி  உணவு வங்கிக்குத் தரும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.)

3. உணவு வங்கிகள் இன்று கூட்டாண்மைக்கு உரியதாகி (corporatised) உணவற்ற வறுமையின் (Food poverty) முதன்மைத் தீர்வாகிவிட்டது.  அவற்றை  உணவு அமைப்பின் அடிப்படையான பகுதிகளாக  சீராக்குவது காலத்தின் கட்டாயம் என்றும் சொல்லப்படுகிறது. உணவு வங்கிகளின் வெற்றி, ஆளும் வர்க்கத்துக்கு வறுமை சார்ந்த பிரச்னைகளை விவாதித்து அவற்றைத் தீர்க்க  கட்டமைப்புச்சார் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம்  வராமல் பார்த்துக்கொள்கிறது. அதாவது உணவு வங்கிகளின் வெற்றியே உணவற்ற  வறுமை அதிகரிக்க  காரணமாகிவிட்டது.

இக்கட்டுரையின் பெரும்பகுதி நியூ ஜெர்சி மாகாணத்தின் அட்லாண்டிக் சிட்டியில்  மக்கள் வேலை இழப்பின் காரணமாக எழுந்துள்ள உணவு நெருக்கடியை எவ்வாறு எதிர் கொள்கிறார்கள் என்பதைச் சொல்கிறது. மாகாணத்தின் பிற பகுதி நிகழ்வுகள் மேலோட்டமக்ச் சொல்லப்பட்டுள்ளன. குறிப்புகளையும் அதே கிரமத்தில் எழுதியுள்ளேன். முதலில் அட்லாண்டிக் சிட்டி: 

நியூ ஜெர்சி மாகாணம்  இடைநிலை (median) குடும்ப வருமான அடிப்படையில் அமெரிக்காவின் இரண்டாவது பணக்கார மாகாணம். அட்லாண்டிக் நகரம், இந்த மாகாணத்தின் அட்லாண்டிக் கவுண்டியிலுள்ள உல்லாச நகரம். ஆடம்பரமான  சூதாட்ட விடுதிகளுக்கும், அழகிய கடற்கரைகளுக்கும் போர்டு வாக் – (Board Walk) கிற்கும் பெயர்பெற்ற இந்திர லோகம் .  கொரோனா வைரஸ் லாக்டௌன் அறிவித்த நொடியில் இழுத்து  மூடப்பட்ட  சூதாட்ட விடுதிகளிலும்,ஹோட்டல்களிலும், உணவகங்களிலும்  பணியாற்றிய  26000 பேருக்கு (கவுண்டியின் மக்கள் தொகையின் 10%)  வேலை போயிற்று. அவர்கள் கேசினோ மதுக்கடையில் மது விநியோகிப்போர், போக்கர் அட்டை விநியோகிப்போர், தூய்மைப் பணியாளர், உணவு சமைப்போர், இதர வேலை செய்வோராகப் பணிபுரிந்து மணிக்குச் சராசரி $12.50 -ம்  சிறு அன்பளிப்பும் (Tips ) பெறுபவர்கள். இதுவரை உணவுக்காக யார் தயவையும் தேடியிராதவர்கள். இப்போது அடுத்த வேளை சாப்பாடு எங்கே எப்போது யார் கொடுப்பார் என அறியமுடியாத உணவுப் பாதுகாப்பின்மை (food insecurity ) அவர்களை வாட்டி வதைக்கிறது.  10 மைல் தொலைவிலுள்ள எக் ஹார்பர் பொட்டண உணவறையில்,  கேசினோ தொழிலாளர்களுக்காகப்  புட்டிகளில் அடைக்கப்பட்ட உணவு,  பாஸ்தா மற்றும் அரிசி அடங்கிய 30 பவுண்ட்  உணவுப் பொட்டணம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை அறிந்து, கடந்த வாரம் ஒரு காலை நேரம் அவரவர் வாகனங்களில் புறப்பட்டனர். வாகனங்கள்  ஆயிரக்கணக்கில் சென்றதால் மூன்று பாதைகளில் ஒரு மைல் தூரத்துக்கு நெரிசலில் ஊர்ந்து செல்ல நேர்ந்தது. அத்துடன் சில விபத்துகளும் நேர்ந்தன. 4 பேர் கொண்ட குடும்பத்தின் 14 நாள் உணவுப் பற்றாக்குறையைத் தீர்க்கக்கூடிய அளவில் இருந்த 1500 உணவுப் பொருள் பொட்டணங்கள் தலைக்கு ஒன்றாக வழங்கப்பட்டன. உணவுப் பொட்டணங்கள் தீர்ந்துவிட  கிட்டத்தட்ட 1500 பேர்  வெறுங்கையோடு திரும்ப நேரிட்டது.  அப்போதும் சில கார்கள் உணவு வழங்கல் மையத்தைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருந்தன.  ஆறுதல் பரிசாக அதன் ஓட்டுநர் ஒவ்வொருவருக்கும் 5பவுண்ட் வெங்காயம், 3 சிவப்பு முட்டைக்கோஸ், ஒரு பச்சை முட்டைகோஸ் வழங்கப்பட்டது. எப்படி அவை ஒருவேளை உணவாகும்? யாரும்  அதை வாங்க மறுக்கும் மன நிலையில் இல்லை. 

இதுவரை எப்போதும் எந்த  உணவு வங்கியையும் அணுகியிராத  பல குடும்பங்கள் புதிதாக உணவு பெற வருவதைக் கண்டு,  எக் ஹார்பர் உணவு வழங்கல் மையத்தில்  உணவு பெறும் நான்கு  கவுண்டிகளுக்கும்  வழக்கமாகக்  கொடுக்கப்படும் 1000  உணவுப் பைகளை,  2500-ஆக   உயர்த்தி இனிமேல் அளிக்க உணவு வங்கியின் மேலாண்மை முடிவு செய்தது.  இதில் நெருடலான விஷயம் என்னவென்றால், ஹரிகேன் சாண்டி மற்றும் பெரும் பொருளாதாரப் பின்னடைவு (great recession) காலங்களில்கூட இதுபோல உணவுத் தட்டுப்பாடு எழவில்லை என்கிறார்கள். சில குடும்பங்கள் எப்போதும்  உணவுப் பொருட்களை உணவு வங்கியில் வாங்குவதை வழக்கமாக்கி அதனால் மிச்சப்படும் பணத்தில் வீட்டு வாடகை அல்லது இன்சூரன்ஸ் co-pay செலவுகளை சமாளித்து வருகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.  Monmouth மற்றும் Ocean கவுண்டிகளுக்கு உணவளிக்கும் Fulfill உணவு வங்கி, நீங்கள்  ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு findfood என்ற குறுஞ்செய்தி அனுப்பினால்,  உங்கள் அஞ்சல் குறியீட்டை வைத்து உங்களுக்கு அருகிலுள்ள அவசர உணவு தரக்கூடிய 3 பொட்டண உணவறைகளை அறிந்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.  இதைப் பயன்படுத்தி மேலே குறிப்பிடப்பட்ட குறை வருமானத்தினர்  கமுக்கமாகச் சமூகத் தூற்றலுக்கு ஆளாகாமல் நிலையான உணவுப்பொருள் பெறும்  ஏற்பாட்டைச் செய்து கொள்ளமுடிகிறது.

நியூ ஜெர்சி குறிப்புகள்

நியூ ஜெர்சியின் 40% குடும்பங்களில் குறைந்தது ஒருவர் வேலை இழந்திருக்கின்றனர். எதிர்பாராத வேலையிழப்பால் உணவுக்கே வழியில்லாமல், அவர்களுக்கு  வாழ்விலேயே  முதன் முதலாகப் பிறர் உதவியை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது.  உணவு மூட்டைகளை நீண்ட வரிசையில் பிறர் காண நெடுநேரம்  நின்று பெற வேண்டியிருக்கிறது. வேலையிழப்பு நிவாரணம் தேடுவோர் எண்ணிக்கை, கொரோனா லாக் டௌன்-க்குப்  பின்னர்  17 மடங்கு அதிகரித்துள்ளது. நெவார்க் உணவு வங்கியில் உணவு மூட்டை வேண்டுகோள் 50% கூடிவிட்டது. தெற்கு ஜெர்சியின் உணவு மூட்டை தேவைகள் 200% அதிகரித்திருக்கின்றன.  இதுவரை நியூ ஜெர்சியில் சுமார் 10000 பேரைச்  சாய்த்துள்ள கொரோனா பரவலை மந்தமாக்கும் முயற்சிகள் பொருளாதாரத்தை ஸ்தம்பிக்கச் செய்துவிட்டன.  வேலை இழப்புகள் தொடர்ந்தால் உணவு உரிமைக் குரல்கள் உச்ச ஸ்வரத்தில் எழும்பும். பட்டினிச் சாவுகள் கொரோனாவினதை விஞ்சிவிடும். கொரோனாவை மந்தமாக்க முயலாமல், அதன் வேகத்திலேயே எதிர்கொள்வதே விவேகம். 

இணைப்புக் கட்டுரை சுட்டி : https://www.nytimes.com/2020/04/30/nyregion/coronavirus-nj-hunger.html?action=click&module=Well&pgtype=Homepage&section=New%20York 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.