இசைக்கலைஞன்

ஸெல்மா லாகர்லவ்
(தமிழில்: கோவை தாமரைக்கண்ணன்)

உலுருட் நகரத்தில் லார்ஸ் லார்சன் என்ற பிடில் இசைக்கலைஞன் இருந்தான். அந்நகரில் வசிப்பவர்கள் யாராலும் அவனைப் பற்றி ஒரு குறை கூட சொல்ல முடியாது. ஏனென்றால் அவன் சாதுவானவன் மற்றும் தன்னடக்கம் கொண்டவன். ஆனால் அவன் சில வருடங்களாகத்தான் இப்படி இருக்கிறான், எப்போதுமே அப்படி இருந்ததில்லை. இளமையில் அவன் ஆணவக்காரன், தற்பெருமை கொண்டவன். இதனால் மக்கள் அவன் மீது மனக்கசப்பு கொண்டிருந்தனர். ஆனால் ஓர் இரவில் அவன் மாறிவிட்டான் எனச் சொல்கிறார்கள், இப்படித்தான் அது நடந்தது.

ஒரு சனிக்கிழமை பின்னிரவில் லார்ஸ் லார்சன் கையில் பிடிலுடன் வெளியே உலாவ சென்றான். அப்போது தான் அவன் ஒரு விருந்தில் இருந்து வந்திருந்தான். அவன் மிக பிரகாசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தான். அதற்கு காரணம் அவ்விருந்தில் அவன் வாசித்த இசை அங்கிருந்த இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் நடனம் ஆட வேண்டும் என்ற ஆசையை தூண்டியது. அவன் கையிலிருந்த பிடில் வாசிக்கும் வில் முன்னும் பின்னுமாக நகர்ந்துகொண்டிருந்த போது ஒருவரால் கூட அமர்ந்திருக்க முடியவில்லை என்பதை நினைத்துக் கொண்டே தனியாக நடந்து சென்றான். நடன அறையில் இருந்த இருக்கைகளும் மேசைகளும் கூட நடனமாடுகிறாதோ! என்ற மாயம் ஓரிருமுறை அவனுக்கு தோன்றிவிட்டது, அப்படி ஒரு சூறாவளி அந்த அறையில் நிலவியது. ”அவர்களுக்கு என்னைப் போல ஒரு இசைக்கலைஞன் இந்த பகுதியில் இதற்கு முன் கிடைத்திருக்கவே மாட்டான்” என தன்னை நினைத்து பெருமைப்பட்டான். ”ஆனால் நான் இப்படி திறமையானவனாக ஆவதற்கு முன்னால் என்னுடைய நாட்கள் மிகக் கடினமானதாக இருந்தன. நான் சிறுவனாக இருந்த போது என்னுடைய பெற்றோர் என்னை ஆடு மாடு மேய்க்க போட்டார்கள். ஆனால் அப்போதோ, உட்கார்ந்து என்னுடைய பிடிலை வாசிக்க வேண்டும் என்பதை தவிர எனக்கு வேறு எந்த ஞாபகத்தில் இருக்காது. அவர்கள் எனக்கு நிஜ வயலின் ஒன்று கூட கொடுத்ததில்லை, இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் கிடையாது. ஒரு பழைய மரப்பெட்டி மீது சில கம்பிகளை இழுத்துக் கட்டி இசைக்க வைத்துக்கொண்டேன், அதைத் தவிர இசைக்க வேறெதுவும் கிடையாது. பகலில், காட்டுக்குள் தனியாக மகிழ்ச்சியாக வாசித்துக்கொண்டிருப்பேன், என்னுடைய மந்தையே வீட்டுக்கு திரும்பிச் சென்றுவிட்டாலும் எனக்கு போகத் தோன்றாது. வீட்டுக்கு சென்றால் அம்மா அப்பாவிடமிருந்து அடிக்கடி கேட்கும் வார்த்தைகளான ’நான் ஒன்றுக்கும் ஆகாதவன், எதற்கும் உபயோகப்படாதவன்’ ஆகியவற்றை கேட்பேன்.”

லார்ஸ் லார்சன் உலாவிக் கொண்டிருந்த காட்டின் இந்த பகுதியில் ஒரு சிறிய ஆறு தன்னுடைய பாதையை கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருந்தது. நிலம் சிறுசிறு பாறைகளால் ஆனதாகவும் மலைப்பாங்காகவும் காணப்பட்டது. ஆற்றின் நீரோட்டம் முன்னோக்கிச் செல்ல மிகவும் சிரமப்பட்டது. அது அங்கும் இங்குமென வளைந்து சுழித்தோடி, சின்னச்சின்ன அருவிகளிலும் பாறைநிறைந்த செங்குத்துச் சரிவுகளிலும் உருண்டு சென்றது. ஆனால் அது எங்கும் தென்படவில்லை. பிடில் வசிப்பவன் நடந்து செல்லும் பாதை நேராக சென்றுகொண்டே இருந்தது. ஆகவே இந்த சாலை வளைந்து செல்லும் நீரோட்டத்தை பல இடங்களில் சந்தித்தது, ஒவ்வொரு முறையும் நீரோட்டத்தை ஒரு சிறு பாலம் மூலமாக கடந்து சென்றது. இசைக்கலைஞனும் அந்நீரோட்டத்தை திரும்பத்திரும்ப கடந்து செல்ல வேண்டியிருந்தது, அதில் அவனுக்கு மகிழ்ச்சிதான். அவன் இந்த காட்டில் ஒரு நண்பனைக் கண்டுபிடித்துவிட்டது போல உணர்ந்தான். 

அவன் சுற்றிக்கொண்டிருக்கும் இடத்தில் கோடை இரவின் வெளிச்சம் இருந்தது. சூரியன் இன்னமும் உதிக்கவில்லை, இருப்பினும் எந்த வேறுபாடுமே தெரியவில்லை. ஏனென்றால் வெளிச்சம் பகல் மாதிரியே இருந்தது. 

எனினும் வெளிச்சம் அப்படியே பகல் நேரத்தில் இருப்பது போல இல்லை. எல்லாமே வேறொரு நிறத்தில் இருந்தன. வானம் துல்லியமான வெண்நிறத்தில் இருந்தது, மரங்களும் தரையிலிருந்த புற்களும் சாம்பல் நிறத்தில் இருந்தன, ஆனால் பகல் நேரத்திலுள்ளது போன்றே அனைத்தும் தனித்தனியாக தெரிந்தன. லார்ஸ் லார்சன் எந்த பாலத்தில் நின்று கீலே பார்த்தாலும் அவனால் நீரின் அலைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக பார்க்க முடிந்தது. 

”காட்டிலுள்ள இது போன்ற நீரோட்டத்தைப் பார்க்கும் போதெல்லாம்  எனக்கு என்னுடைய வாழ்கை ஞாபகத்திற்கு வரும்” என்று அவன் நினைத்தான் ”இந்த நீரோட்டம் கொண்டுள்ள உறுதியைப் போலவே சென்ற காலத்தில் என்னுடைய பாதையில் தடையாக இருந்த அனைத்தையும் கடந்தேன். அப்பா எனக்கு முன்னால் பாறையாக இருந்தார், அம்மா என்னை தடுத்து நிறுத்த முயற்சி செய்தாள், என்னை பாசிகளுக்கும் புற்களுக்கும் இடையில் புதைக்க நினைத்தாள். ஆனால் நான் அவர்களை தாண்டி வந்தேன், அந்த உலகத்தில் இருந்து வெளியேறினேன். ஹேய்-ஹோ ஹை, ஹை! அம்மா இன்னமும் வீட்டில் உட்கார்ந்து எனக்காக அழுதுகொண்டிருப்பாள் என நினைக்கிறேன். ஆனால் நான் எதற்கு அவளைக் கண்டுகொள்ள வேண்டும்! அவள் என்னை தடுக்க முயற்சித்ததற்கு பதிலாக நான் என்றாவது எதிலாவது முன்னேறிவிடுவேன் என்பதை தெரிந்திருக்க வேண்டுமல்லவா!”

அவன் ஒரு கிளையிலிருந்த சில இலைகளை பொறுமையில்லாமல் பறித்து ஆற்றுக்குள் வீசினான். 

”பார்! இதே போலதான் என் வீட்டிலிருந்த எல்லாவற்றுடனும் என்னை கிழித்து பிரித்துக் கொண்டேன்” என இலைகள் நீரால் கொண்டு செல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டே கூறினான். ”நான் தான் வெர்ம்லாந்தின் சிறந்த இசைக்கலைஞன் என்பது அம்மாவுக்கு தெரியவருமா?” என யோசித்துக்கொண்டே அவன் சற்று தூரம் சென்றான். 

மறுபடியும் நீரோட்டத்தை அடையும் வரும் வரை வேகமாக நடந்தான். பின் நின்று நீரைப் பார்த்தான். 

இங்கு ஆறு பாறைகள் நிறைந்த செங்குத்துச் சரிவில் போராடிக்கொண்டிருந்தது, அதனால் மோசமான இரைச்சலை எழுப்பியது. அது இரவு என்பதால் பகல் நேரத்தில் வருவதை விட நீரோட்டத்தின் சத்தம் வித்தியாசமாக வருவதை ஒருவனால் கேட்ட முடியும். இசைக்கலைஞன் அசையாமல் நின்று அதைக் கேட்டவுடன் ஆச்சரியப்பட்டான். அங்கிருந்த மரங்களில் எந்த பறவையும் பாடவில்லை, தேவதாரு மரங்கள் ஓசை எதையும் எலுப்பவில்லை, இலைகளின் சலசலப்பு கூட இல்லை. வண்டிச்சக்கரங்கள் எதுவும் சாலையில் கிரீச்சிடவில்லை, மாட்டின் கழுத்து மணிகள் எதுவும் அக்காட்டில் கணகணவொலி எழுப்பவில்லை. இந்த பொழுதில், ஒருவன் அந்த செங்சரிவு பாய்ச்சலை மட்டுமே கேட்க முடியும், பகலில் இருப்பதை விட மிக நன்றாக கேட்க முடியும், ஏனென்றால் மற்ற அனைத்தும் நிசப்தமாக இருந்தன. சிந்திக்க இயல்பவை இயலாதவை என அனைத்தும் நீரோட்டத்தின் ஆழத்தில் கலவரம் செய்வது போலவோ ஆரவாரக் கூச்சலிடுவது போலவோ அது ஒலித்தது. முதலில், அது யாரோ ஒருவன் அங்கு உட்கார்ந்து கற்களுக்கு இடையில் தானியத்தை அரைப்பது போல ஒலித்தது, பின் மது அருத்தும் சமயத்தில் மதுக்கிண்ணங்கள் கலகல ஒலி எழுப்புவது போல ஒலித்தது, பிறகு பிராத்தனைக் கூட்டம் முடிந்து ஆலயம் விட்டு வெளியே வந்தவர்கள் தங்களுக்குள் ஆர்வமாக பேசிக்கொள்வதைப் போல முனுமுனுத்தது. 

”இதில் என்னால் பெரிதாக எதையுமே கண்டுபிடிக்க முடியவில்லை, இருந்தாலும் இதுகூட ஒரு வகை இசைதான். இதை விட சமீபத்தில் நான் வாசித்த இசை கேட்பதற்கு மிக நன்றாக இருக்கும்” என பிடில் கலைஞன் நினைத்தான்.

ஆனால் அந்த பாய்ச்சலின் இசையை கேட்க கேட்க அதன் ஓசை நன்றாக இருப்பதாக லார்ஸ் லார்சனுக்கு தோன்றியது. 

”நீ தேறி வருகிறாய் என நினைக்கிறேன்” என்று பாய்ச்சலிடம் கூறினான். ”வெர்ம்லாந்துடைய சிறந்த இசைக்கலைஞன் உன் இசையை கேட்கிறான் என்பதை நீ கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்!”

இப்படி சொன்னவுடனேயே தெளிவான இரு உலோக ஓசைகளை கேட்டது போல இருந்தது அவனுக்கு. அது ஒரு வயலின் கம்பி நன்றாக சப்தமெலுப்புகிறதா என பார்க்க ஒருவன் அதை சுண்டிவிட்டது மாதிரி ஒலித்தது.

”ஆ! நீர் தேவனே வந்துவிட்டான். அவன் வயலினை மீட்ட துவங்குவதை என்னால் கேட்க முடிகிறது. இப்பொது உன்னால் என்னை விட நன்றாக வாசிக்க முடியுமா என்று பார்க்கலாமா!” என சொல்லி லார்ஸ் லார்சன் சிரித்தான். “ஆனால் நீ வாசிக்க ஆரம்பிப்பதற்கு இந்த இரவு முழுவதும் என்னால் இங்கு காத்து நின்றிருக்க இயலாது” என்று நீரிடம் கூறினான். ”இப்போது சொல்கிறேன், ஆனால் நான் உறுதியாக அடுத்த பாலத்தில் நின்று கேட்பேன். நீ எனக்கு ஒத்துவருவாயா என்று பார்க்கலாம்”

நீரோட்டம் வளைந்து காட்டுக்குள் ஓடியது, அவனும் சற்று தூரம் சென்றான். மீண்டும் ஒருமுறை தனது வீட்டைப் பற்றி நினைக்கத் துவங்கினான். 

”எங்கள் வீட்டுக்கு அருகில் ஓடிக்கொண்டிருந்த சிறிய நீரோடை எப்படி அங்கு வந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதை மறுபடியும் பார்க்க விரும்புகிறேன். அப்பா இறந்ததில் இருந்து அம்மா கஷ்டப்படுகிறாளா இல்லையா என்பதே எனக்கு தெரியாது, அவளை ஒருமுறையாவது வீட்டுக்குச் சென்று பார்க்கவேண்டும். ஆனால் எனக்கு நேரமில்லாததால் அது கிட்டத்தட்ட சாத்தியமேயில்லை, என்னால் இப்போது பிடிலைத் தவிர வேறு எதிலுமே கவனம் செலுத்த முடியாமல் உள்ளது. வாரத்தில் ஒரு நாள் மாலைப் பொழுதுகூட நான் சுதந்திரமாக இருந்ததில்லை.”

சற்று நேரத்தில் அவன் மறுபடியும் நீரோட்டத்தை சந்தித்தான். அவனது யோசனைகள் வேறெங்கோ சென்றன. இங்கு ஆறு இரைச்சலுடன் வேகமாக பாய்ந்து வரவில்லை, தடையேதுமில்லாமல் அமைதியாக ஒழுகிச்சென்றது. இரவின் சாம்பல் நிற காட்டு மரங்களுக்கு கீழே அது துல்லியமாக கருப்பு நிறத்தில் மினுமினுத்தது. முன்பு வேகமாக பாய்ந்துவந்ததில் உருவான வெண்பனி நிற நுரைகள் ஒரு சிலவற்றை சுமந்து சென்று கொண்டிருந்தது. 

இசைக்கலைஞன் அந்த பாலத்திற்கு வந்தபோது நீரோட்டத்தில் இருந்து எந்த சத்தத்தையும் கேட்டகவில்லை. ஆனால் ஒரு மென்மையான உஸ்… மட்டும் இருந்தது. அதைக் கேட்டு அவன் சிரிக்கத் துவங்கினான். 

”நீர் தேவனுக்கு என்னை வந்து சந்திக்க தோன்றாது என்பது எனக்கு தெரியும்,” என அவன் கத்தினான். “அவன் மிகச்சிறந்த இசைக்கலைஞன் என்று தான் எப்போதுமே அவனைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் காலம்காலமாக ஒரு ஓடைக்குளேயே இருந்து கொண்டு புதிதாக எதையுமே கேள்விப்படாத ஒருவனுக்கு பெரிதாக ஒன்றும் தெரிந்திருக்காது. இங்கு அவன் முன் நிற்பவன் அவனை விட இசையை நன்கு அறிந்தவன் என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரியும், அதனால் தான் அவனுக்கு என்னிடம் வந்து வாசிக்க தோன்றவில்லை.”

இன்னும் சற்று தூரம் சென்றான், அப்போது அவனுக்கு ஆறு தென்படவில்லை. அவன் காட்டின் இன்னொரு பகுதிக்கு வந்துவிட்டான், அப்பகுதி எப்போதுமே மோசமாக இருண்டே இருப்பதாக தோன்றியது அவனுக்கு. அங்கு நிலம் கற்கலும் பாறையுமாக இருந்தது, வெட்டப்பட்ட தேவதாரு மரங்களின் அடிப்பகுதி வேரோடு பிடுங்கப்பட்டு அக்கற்களின் மீது போடப்பட்டிருந்தன. இக்கட்டில் பயங்கரமான எதாவது ஒன்றோ அல்லது மந்திரசக்தியோ இருக்குமென்றால் அது இங்குதான் இருக்கும் என்று இவ்விடத்தைப் பார்க்கும் ஒருவனுக்கு இயல்பாகத் தோன்றும். 

கரடுமுரடான அக்கற்குவியலுக்குள் இசைக்கலைஞன் நுழைந்தவுடன் ஒரு துணுக்குறும் பரவசம் அவனில் வந்து சென்றது. இதனால் நீர் தேவன் இருக்கும் போது அவன் முன்னிலையில் தன்னைப் பற்றி பெருமையாக பேசுவது சரியில்லையோ என நினைத்தான். அங்கு கிடந்த தேவதாருகளின் பெரிய வேர்கள் அசைந்து தன்னை அச்சுறுத்துகின்றனவோ என்ற மாயம் அவனுக்கு தோன்றியது. “ஜாக்கிரதை, நீர் தேவனை விட நீ திறமையானவன் என்று உன்னை நினைக்கிறாயா!” என்று அவை சொல்லவருவது போல இருந்தது. 

பயத்தால் தனது இதயம் சுருங்கியதை லார்ஸ் லார்சன் உணர்ந்தான். ஒரு பெரிய சுமை அவன் நெஞ்சைத் துளைத்தது போல் இருந்தது, அதனால் மூச்சுவிட சிரமப்பட்டான், அவனது கைகள் குளிர்ந்து விறைத்தன. காட்டின் நடுப்பகுதியில் நின்ற அவன் சுயநினைவுடன் தனக்குத்தானே பேசிக்கொள்ள முயற்சி செய்தான். 

“ஹா, அருவியில் இசைக்கலைஞன் யாராவது இருப்பானா! இவை அனைத்துமே வெறும் மூடநம்பிக்கைள் முட்டாள்தனங்கள். அவனிடம் நான் எதை சொன்னால் என்ன, சொல்லாவிட்டால் என்ன? அதனால் எனக்கு எதுவும் நேர்ந்துவிடாது” 

இப்படி சொல்லிக்கொண்டிருக்கும் போதே தான் சொல்லியது சரிதானா என்று உறுதி செய்துகொள்ள தன்னை சுற்றிலும் ஒருமுறை பார்த்தான். பகல் நேரமான இருந்திருந்தால் இந்த காட்டில் உள்ள சின்னச் சின்ன இலைகள் அனைத்தும் அவனை நோக்கி கண்சிமிட்டி இங்கு எந்த ஆபத்து இல்லை என்பதை காண்பித்திருக்கும். ஆனால் அப்போதோ, இரவு சமயம், மரங்களில் உள்ள இலைகள் ஆபத்தான ரகசியங்கள் அனைத்தையும் மறைத்து தங்களை மூடிக்கொண்டு அமைதியாக இருப்பது போல காணப்பட்டன.
 
லார்ஸ் லார்சன் மேலும் மேலும் எச்சரிக்கை கொண்டான். இதனால் மீண்டும் ஒருமுறை, இறுதியாக, நீரோட்டத்தை கடக்க வேண்டுமே என்ற அச்சம் பயங்கரமாக அதிகரித்தது. நீரோட்டத்தை கடந்த பிறகு சாலை பிரிந்து வேறுபக்கம் சென்றுவிடும். கடைசி பாலத்தின் மீது நடக்கும் போது நீர் தேவன் தன்னை எதாவது செய்துவிடுவானோ என்று பதற்றமடைந்தான் – நீரிலிருந்து ஒரு பெரிய கருப்பு கையை நீட்டி தன்னை அதன் ஆழத்திற்கு கொண்டு சென்றுவிடுவானோ!

இப்படியொரு பீதியில் அவன் திரும்பிச் சென்றுவிடலாமா வேண்டாமா என தனக்குள்ளேயே போராடிக்கொண்டிருந்தான். திரும்பிச்சென்றாலும் நீரோட்டத்தையே மறுபடியும் சந்திக்க வேண்டும். சாலையிலிருந்து இறங்கி காட்டுக்குள் சென்றால் கூட அதையே தான் சந்திக்க நேரிடும்.

என்ன செய்வதென்று தெரியாத அளவிற்கு மிகவும் பதற்றமாக உணர்ந்தான். அவன் நீரோட்டத்தின் தந்திரப் பொறியில் மட்டிக்கொண்டான், தப்பிப்பதற்கு எந்த வாய்ப்பும் தென்படவில்லை. 

எப்படியோ அவன் கடைசி பாலம் தனக்கு முன்னால் இருப்பதை பார்த்துவிட்டான். அவனுக்கு நேரெதிரில் நீரோட்டத்திற்கு மறுபக்கம் பழைய ஆலை ஒன்று இருந்தது. அது பல ஆண்டுகள் கைவிடப்பட்டதாக இருந்திருக்க வேண்டும். அந்த ஆலையின் பெரிய சக்கரம் அசைவற்று நீரின் மீது தொங்கிக்கொண்டிருந்தது; ஆலைக்கு செல்லும் வாய்க்கால் பாசி படர்ந்து காணப்பட்டது; அதன் ஓரங்களில் அடர்த்தியான பாசிகளும் புதர்களும் மண்டிக்கிடந்தன. 

“இந்த ஆலை இயங்கிக் கொண்டு மக்கள் நடமாட்டம் இருந்திருந்தால் நான் இப்போது எந்த ஆபத்துமில்லாமல் பாதுகாப்பாக இருந்திருப்பேன்” என இசைக்கலைஞன் நினைத்தான். 

எது எப்படியோ, மனிதர்களால் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தைப் பார்த்த போது அவனுக்குள் ஒரு உறுதி வந்ததை உணர்ந்தான். அதன் பிறகு அந்நீரோட்டத்தைக் கடந்தான், அப்போது அவன் அச்சத்தில் மிகவும் நடுங்கிக்கொண்டிருந்தான். ஆனால் பயப்படுமளவிற்கு எதுவும் நடக்கவில்லை. நீர் தேவனுக்கு அவனிடன் எந்த சண்டையும் இருப்பதாக தெரியவில்லை. ஒன்றுமேயில்லாமல் தனக்குத் தானே ஒரு பீதியில் உழன்று கொண்டிருந்தோமோ என நினைத்தான். 

அவன் மிக பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தான். அந்த ஆலையின் கதவு திறந்து ஒரு இளம் பெண் வெளியே வந்தாள், அதைப் பார்த்து மேலும் மகிழ்ச்சியடைந்தான். அவள் பார்ப்பதற்கு வழக்கமான ஒரு எளிய கிராமத்துப் பெண் போல தென்பட்டாள். அவள் ஒரு பருத்தி துணியை தலையில் கட்டிருந்தாள், குட்டைப் பாவாடையையும், மேல் சட்டையும் அணிந்திருந்தாள், ஆயினும் கால்கள் வெறுமனே இருந்தன. 

அவள் நேராக இசைக்கலைஞனிடம் வந்து எந்த முறைமையுமில்லாமல் “எனக்காக நீ வாசிப்பாயா, உனக்காக நான் ஆடுகிறேன்” என்று கேட்டாள்.

”நிச்சயமாக, கண்டிப்பாக, நடனமாட விரும்பும் ஒரு அழகிய பெண்ணுக்கு வாசிக்க மறுப்பதை என் வாழ்க்கையில் நான் செய்ய மாட்டேன்” என்று கூறினான். அப்போது அவன் தனது பயத்திலிருந்து விடுபட்டு தெளிவாக இருந்தான். 

ஆலை குளத்தின் விளிம்பிற்கு அருகில் ஒரு கல்லில் அமர்ந்து வயலினை தனது தாடைக்கு உயர்த்தி இசைக்கத் துவங்கினான். 

அந்த பெண் இசையுடன் சேர்ந்து தாளத்தில் சில அடிகளை எடுத்துவைத்தாள்; பின் நின்றுவிட்டாள். “நீ என்ன போக்லா வாசிக்கிறாய்? அதில் ஒரு தெம்பே இல்லையே,” என்று கூறினாள். 

இசைக்கலைஞன் தனது சுருதியை மாற்றினான்; அதில் அவன் மேலும் உயிரோட்டத்தைக் கொண்டுவர முயற்சி செய்தான். 

அவளுக்கு இதுவும் திருப்தியளிக்கவில்லை. “இப்படி ஒரு வறண்ட உயிரற்ற போக்லாவிற்கு என்னால் நடனமாட முடியாது,” என்றாள்.

லார்ஸ் லார்சன் மிகக் கடுமையாக ஆணவத்தால் தாக்கப்பட்டான், தனது வாழ்விலேயே இது போன்ற ஒரு தாக்குதலை அவன் சந்தித்ததில்லை. ”இந்த இசையை கேட்டும் நீ திருப்தியடையவில்லை என்றால் என்னை விட சிறந்த இசைக்கலைஞன் ஒருவனைத் தான் நீ இங்கு அழைக்க வேண்டும்,” என்றான்.

இதை சொல்லியவுடன் ஒரு கை தனது கையை பிடித்து கட்டுப்படுத்த துவங்கியதை உணர்ந்தான், அது வயலின் வில்லை வழிநடத்த துவங்கியது, இசையின் வேகத்தை அதிகரித்தது. பின் வயலினில் இருந்து விசை பெரும் பாய்ச்சலாக கிளம்பியது. இது போன்ற ஒன்றை அவன் இதற்கு முன் கேட்டதில்லை. அது மலையிலிருந்து உருண்டு ஓடும் சக்கரத்தால் கூட ஈடு கொடுக்க முடியாத அளவிற்கு மிக விரைவாக செல்கிறது என நினைத்தான். 

“இதுதான், இதைத்தான் நான் ஒரு போக்லா என்று சொல்வேன்,” என்ற அப்பெண் ஆடி சுழலத்துவங்கினாள். 

ஆனால் இசைக்கலைஞன் அப்பெண்ணைப் பார்க்கவில்லை. தான் வாசிக்கும் இசையைக் கேட்டு மிகவும் வியப்படைந்து, அதை தெளிவாக கேட்க கண்களை மூடி அமர்ந்திருந்தான். ஒரு கணம் கழித்து கண்களைத் திறந்த போது அப்பெண் அங்கு இல்லை, மறைந்துவிட்டாள். அனால் அவன் பெரிதாக திகைப்படையவில்லை. தொடர்ந்து நீண்ட நேரம் வாசித்துக்கொண்டே இருந்தான். ஏனென்றால் இதற்கு முன் இப்படியொரு வயலின் இசையை அவன் கேட்டதில்லை. 

இறுதியாக, ”நிறுத்திக்கொள்ள இது தான் நேரம்,” என தோன்றி வில்லை தாழ்த்த நினைத்தான். ஆனால் வில் தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருந்தது; அவனால் அதை நிறுத்த முடியவில்லை. அது கம்பிகளின் மீது முன்னும் பின்னும் ஓடியது, கூடவே கையும் சென்று கொண்டிருந்தது. வயலினின் கழுத்தைப் பிடித்திருந்த மற்றொரு கையும், கம்பிகள் மீதிருந்த விரல்களும் கூட தங்களை விடுவிக்க மறுத்தன. 

லார்ஸ் லார்சனின் நெற்றியிலிருந்து குளிர் வியர்வை வெளிவந்தது, அப்போது அவன் பயந்து பணிவோடு காணப்பட்டான்.

”எப்படி இது முடியுமோ? உலகின் இறுதிநாள் வரை இங்கு உட்கார்ந்து வாசித்துக்கொண்டிருப்பேனோ,” என விரக்தியில் தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். 

வில் மேலும் மேலும் ஓடிக்கொண்டே இருந்தது, ஒன்றன் பின் ஒன்றாக சுருதிகளை அதுவே வரவழைத்தது. அவை அனைத்துமே புத்தம்புதிதாக மிக அற்புதமாக இருந்தன. இவைகளுடன் ஒப்பிடும் போது தனது திறமைக்கு எந்த மதிப்புமே கிடையாது என்பதை பிடில் வாசித்துக்கொண்டிருக்கும் எளியவன் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும். களைத்திருந்ததை விட இதுதான் அவனை மிகவும் துன்புறுத்தியது. 

”என்னுடைய வயலினை வாசித்துக் கொண்டிருப்பவனே கலையை நன்கு அறிந்தவன். ஆனால் நானோ பிறந்ததிலிருந்து மூடனாக மட்டுமே இருந்துள்ளேன். இப்போது தான் முதல் தடவையாக இசை எப்படி ஒலிக்கும் என்பதைக் கற்றுக்கொள்கிறேன்.” 

தன்னுடைய கெட்ட விதியையும் மறந்து சில நொடிகள் இசையால் அடித்துச் செல்லப்பட்டான். பிறகு களைப்பால் தனது கை வலிப்பதை உணர்ந்து மீண்டும் விரக்தியால் பீடிக்கப்பட்டான். 

“இப்படி வாசித்துக் கொண்டே செத்த பிறகு தான் என்னால் இந்த வயலினைக் கீழே போட முடியுமோ. நீர் தேவன் அவ்வளவு சீக்கிரம் திருப்தியடையமாட்டான் என நினைக்கிறேன்.”

அவன் விசும்பத் துவங்கினான், ஆயினும் வாசித்துக் கொண்டேயிருந்தான். 

”எங்கள் சிறிய வீட்டிலேயே அம்மாவுடன் வாழ்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமல்லவா. இப்படி அனைத்தும் முடிந்துவிட்டால் நான் அடைந்த வெற்றிகளுக்கு என்ன மதிப்பிருக்க முடியும்?”

அவன் மணிக்கணக்காக அங்கு அமர்ந்திருந்தான். பொழுது விடிந்தது, சூரியன் உதித்தது, அவனைச் சுற்றி பறவைகள் பாடத்துவங்கின, ஆனால் அவனோ, இடைவெளியில்லாமல் வாசித்தான், வாசித்துக்கொண்டே இருந்தான். 

விடிந்தது ஞாயிற்றுக் கிழமை என்பதால் பழைய ஆலைக்கு அருகில் அவன் தனியாக அமர்ந்திருக்க வேண்டியிருந்தது. காட்டின் இந்த பகுதியில் எந்த மனித நடமாட்டமும் இல்லை. மக்கள் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள ஆலயத்திற்கும், திரும்பி கிராமங்களுக்கும் பெரிய சாலை வழியாக சென்றுவிடுவார்கள். 

உச்சிப்பொழுதானது, சூரியன் வானத்தில் உச்சிக்கு வந்தது. பறவைகள் அமைதியாயின, தேவதாருவின் ஊசியிலைகளுக்குள் காற்று முனுமுனுக்கத் துவங்கியது. 

கோடை நாளின் வெப்பம் தன்னைத் தடுத்து நிறுத்த லார்ஸ் லார்சன் விடவில்லை. அவன் வாசித்துக்கொண்டே இருந்தான். இறுதியாக மாலையும் வந்தது, சூரியனும் மறைந்தது. ஆனால் அவனுடைய வில்லுக்கோ ஓய்வு தேவைப்படவில்லை, அவனது கை நகர்ந்துகொண்டே இருந்தது. 

”இது எனக்கான முடிவாகத்தான் இருக்க வேண்டும், அதில் சந்தேகமேயில்லை! என்னுடைய ஆணவத்திற்கு இது சரியான தண்டனை,” என்றான் அவன். 

இந்த மாலைப் பொழுதில், காட்டில் ஒரு மனித உருவம் தொலைவில் சென்றுகொண்டிருந்தது. அது ஒரு வயதான ஏழை பெண், கூன் விழுந்து தலை நரைத்து காணப்பட்டாள். அவளது முகம் துயரங்களால் சுருங்கியிருந்தது. 

”இது வினோதமாக உள்ளது,” என அவன் கருதினான் “ஆனால் அந்த வயதானவளை என்னால் அடையாளம் காண முடியுமென நினைக்கிறேன். அது என்னுடைய அம்மாவாக இருக்குமோ? என் அம்மாவுக்கு அவ்வளவு வயதாகியிருக்குமா?” 
அவன் அவளை சத்தமாக கத்தி நிறுத்தினான். “அம்மா, அம்மா இங்கு வா, என்னிடம் வா!” என்று அழைத்தான். 

விருப்பம் இல்லாதது போல அவள் நின்றாள். “நீ தான் வெர்ம்லாந்தின் சிறந்த இசைக்கலைஞன். அதை இப்பொலுது என் காதாலேயே கேட்கிறேன். இனிமேல் என்னைப் போன்ற ஒரு வயதான ஏழை பெண்னை நீ கண்டுகொள்ள வேண்டியதில்லை, நான் புரிந்துகொள்கிறேன்” என்றாள். 

”அம்மா, அம்மா, என்னை விட்டு போகாதே!” என அவன் கதறினான். “நான் சிறந்த இசைக்கலைஞன் அல்ல, மோசமான ஒரு பாவி மட்டுமே. இங்கு வா, நான் உன்னிடம் பேச விரும்புகிறேன்!”
அம்மா அவன் அருகில் வந்து அவன் உட்கார்ந்து வாசித்துக்கொண்டிருக்கும் நிலையைப் பார்த்தாள். அவனது முகம் இறந்தவனின் முகம் போல வெளிறியிருந்தது, அவனது முடி வியர்வையால் சொட்டிக்கொண்டிருந்தது, அவனது நகக்கணுக்களில் இருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. 

”அம்மா, என்னுடைய கர்வத்தினால் நான் பெருந்துன்பத்தில் வீழ்ந்துவிட்டேன். அதனால் நான் வாசித்துக்கொண்டே சாகப் போகிறேன். ஆனால், அது நடப்பதற்கு முன், உன்னை இந்த வயதில் வறுமையில் தனியாக விட்டுவந்த என்னை மன்னிப்பாயா என்று சொல்!”

அவனது அம்மா தன் மகன் மீது மிகுந்த இரக்கத்திற்கு உள்ளானாள், மேலும் அவன் மீதிருந்த அனைத்து கோவங்களையும் வீசிவிட்டது போல உணர்ந்தாள். “நிச்சயமாக, நான் உன்னை மன்னிப்பேன்!” என்றாள் அவள். அவனின் வேதனையையும் குழப்பத்தையும் தான் சொல்லியதை புரிந்துகொள்ள துடிப்பதையும் பார்த்த போது, அவள் அதை கடவுளின் பெயரால் மறுபடியும் உரைத்தாள்.

“எங்கள் கடவுளான மீட்பவரின் பெயரால் சொல்கிறேன், நான் உன்னை மன்னிக்கிறேன்!”

இதை அவள் சொன்னவுடன் வில் நின்றுவிட்டது, வயலின் நிலத்தில் விழுந்தது, இசைக்கலைஞன் எழுந்து நின்றான், காப்பாற்றப்பட்டான். அவனுடைய வயதான அம்மா தன் மகன் படும் துயரத்திற்காக வருந்தி மகன் மீது கடவுளின் பெயரை உச்சரித்தவுடன் அவன் மாயப் பிடியில் இருந்து விடுபட்டான். 

மூலம்: The musician – by Selma lagerlof பதிப்புக் குழு குறிப்பு:

ஸ்வீடிய மொழி எழுத்தாளர் ஸெல்மா லாகர்லஃப் (1858-1940) இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரபலமாக இருந்தவர். 1909 இல் நோபெல் பரிசைப் பெற்றிருந்தார். பெண் எழுத்தாளர்களுக்குத் திறப்பு அதிகம் இல்லாத காலத்தில் இவர் இப்படி பிரபலமானது இவரை முன்னோடி என்று சுட்டுகிறது. தமிழில் இவரை அறிமுகப்படுத்தியது க.நா.சு என்று நினைக்கிறோம். இவரது நாவல் ஒன்றை க.நா.சு மொழி பெயர்த்திருக்கிறார். இருபதாம் நூற்றாண்டில் இவர் பிரபலமானாலும் இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் எழுத்தாளர் என்று சொல்வது பொருந்தும். அன்றைய யூரோப்பிய எழுத்தாளர்கள் நடுவே விவிலியத்தின் பாதிப்பு நிறையவே இருந்தது, அதை இந்தக் கதையிலும் நாம் காண்கிறோம். இன்று இந்த வகைக் கதைகள் நமக்குச் சற்று வியப்பைக் கொடுக்கக் கூடும். உலக இலக்கியத்திலோ ‘தேவதைக் கதைகள்’ சுலபத்தில் அழியாமல் தொடர்கின்றன.

விக்கிபீடியாவில் இவரைப் பற்றிய குறிப்புகளைக் காண இங்கே செல்லலாம். யூரோப்பியப் பெண்களுக்கு அரசியல் உரிமைகள் 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில்தான் கிட்டின. வாக்களிக்கும் உரிமையே போராட்டங்களுக்குப் பின்னர்தான் கிட்டியது. லாகர்லஃப் பெண்களுக்கு அரசியல் உரிமைகள் கோரும் இயக்கங்களில் பங்காற்றியவர். ***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.