நிவிக்குட்டியின் டெடிபேர்

செந்தில்குமார்

“நிவி, அப்படி குதிக்காதே. ஸடாப் இட் நெள”, என்று கத்தினாள்  சுமித்ரா. அந்தச் சத்தம் கேட்டு முழித்துக்கொண்ட போதுதான் முதுகில் பாரமாக உணர்ந்தான், நரேன். மேலே ஏறி குதித்துக் கொண்டிருந்த நிவேதிதாவைக் கண்ணைத் திறக்காமலேயே, கையால் வளைத்து அணைத்து அருகில் அமுக்கிகொண்டான். இன்று விடுமுறை என்பதை நினைவுபடுத்திக் கொண்டபின் மகிழ்ச்சியாக உணர்ந்தான்.  ஐந்து நாள்கள், மெட்ரோவில் நசுங்கி அலுவலகம் சென்று, இரவு குழந்தை தூங்கியபின் திரும்பி, என மாறாத வட்டத்தில் ஓடும் வாழ்க்கை, மாபெரும் சலிப்பைத் தந்தது. நரேன், சமயங்களில் கண்ணாடியில் முகம் பார்க்கும்போது, குட்டைபிள்ளை தெரிந்தார். கூடவே அந்த பெரிய துருத்தியும்.  

வீட்டுக்கு பக்கத்தில் இருந்த, லாடம் அடிக்கும் பட்டறையில் வேலை பார்த்தார் குட்டபிள்ளை. காலை எட்டு மணிக்கு, வெயில், மழை என்கிற பாகுபாடில்லாமல் தலையில் இறுக்கிய சுற்றிய பச்சை துண்டு முண்டாசும், கணுக்காலுக்கு மேலே ஏற்றி கட்டிய பழுப்பு நிற வேட்டியுமாய் அந்த பட்டறைக்கு வருவார்.  ஊனமுற்றோருக்கான சைக்கிளில் இருந்து உடைத்தெடுக்கப்பட்டு, ஓரமெல்லாம் துரு ஏறிய பச்சை நாற்காலிதான் குட்டபுள்ளையின் இருக்கை. அந்த நாற்காலிக்கு நேர்மேலே, துருத்தியின் மேல் பக்கம் கொக்கியில் இணைக்கப்பட்டு, சகடை வழியே தொங்கும் நைலான் கயிறு நிறமிழந்து ஆடும். லாடம் அடிக்கும் லத்தீப் பாய் வந்து, நெருப்பு உண்டாக்கியபின், குட்டபுள்ளை அந்த நைலான் கயிற்றை இழுக்க தொடங்குவார். ஒரு பெரிய ஒட்டகத்தின் வயிறு போல் இருக்கும் அந்த துருத்தி மேலும்,கீழுமாய் ஏறி இறங்கி காற்றை தள்ளி நெருப்பு கங்கை காக்கும். காலை எட்டு மணிக்கு ஆரம்பிக்கும் குட்டைபுள்ளையின் துருத்தி ஊதும் வேலை, சாயங்காலம் ஆறரை மணி வரை நீளும். சிறுபையனாக, நரேன் அந்த துருத்தியை பார்த்து நிற்பான். 

காப்பீட்டு நிறுவனத்திற்க்காக மென்பொருளை தயாரிக்க, நரேன் டோக்கியோ வந்து ஐந்து ஆண்டுகளாகி விட்டது. இரண்டாயிரத்தின் தொடக்கத்தில், இதே விதமான வேலையை செய்ய, இதுபோல் மூன்று மடங்கு ஆட்களை இந்திய நிறுவனம் பில்லிங் செய்திருக்கும். ஆனால், மாறி விட்ட சூழலில், சீன மென்பொருள் நிறுவனங்கள் பெரிய அச்சுறுத்தலாக இருந்தது.  நரேனின் இந்திய நிறுவனம், எப்படியும் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள முனைந்தது. எந்த குறுகிய கால சவால்களையும் ஒத்துக்கொண்டு, அதை மென்பொறியாளர்கள் மீது போட்டது. 

வாடிக்கையாளர்களிடம் பெயரெடுக்க, ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு வேலை செய்தார்கள். உண்மையில், வேலை செய்வதை விட, தினமும் நடக்கும் கூட்டங்களில், எப்படி, யாரும் சொல்லாத விஷயத்தை சொல்லி, காப்பீட்டு நிறுவனத்தின் மேலாளர் கமாதாக்கியின் கவனத்தை தன்பால் ஈர்ப்பது என்பதில் கவனமாக இருந்தார்கள்.எப்போதும், மற்றவர்களை விட, தான், கம்பெனிக்கு மிகவும் பயனுள்ளவன் என்று காட்டிக்கொள்ள பிரயத்தனப்பட்டனர்.  இன்னொருவர் சொல்வதை கூட்டங்களில் மட்டம் தட்டிவிட்டு, வெளியே வந்து தோளில் கைபோட்டுகொண்டு, நட்பு பாராட்டும் போலித்தனத்தை நினைத்தபோது, நா கசந்தது. வேலைக்கு வெளியேவும், ஏன் மனிதர்கள், எப்போதும் ஏதேனும் ஒரு வகையில், தாங்கள் மேம்பட்டவர்கள் என்று சதாசர்வ காலமும் நிருபித்துக்கொண்டே அலைகிறார்கள் என்று தோன்றியது நரேனுக்கு.  

ஏறக்குறைய மென்பொருள் நிறுவும் பணி முடிவடைந்துவிட்ட சூழலில், பராமரிப்பு பணிகளுக்கு, இவ்வளவு பேர் தேவையில்லை, என்று ஒவ்வொரு மாதமும் பில்லிங்கை குறைக்க சொன்னான், கமாதாக்கி. யாரை அடுத்தது அனுப்புவது என்கிற கண்ணுக்கு தெரியாத மியூசிக்கல் சேர் ஓட்டம் நடந்துக்கொண்டிருந்தது. பில்லிங் முடிந்துவிட்டால், டோக்கியோ ஆபிஸ் சென்று பெஞ்சில் இருக்கவேண்டி வரும். பெஞ்ச் பட்டியலில் இணைந்துவிட்டால், இன்னும் இரண்டு மாதங்களில் வரும் அப்ரைஸல் மீட்டிங், வெறும் கண்துடைப்பாக மாறி, இதே சம்பளத்தில், இன்னுமொரு ஆண்டு தொடரவேண்டியிருக்கும்.

”அப்பா எழுந்திரிங்கப்பா” என்ற நிவேதிதா நரேனின் சிந்தனையை கலைத்தாள். 
இன்னைக்கு சாட்டர்டேதானே? இன்னும் கொஞ்சம் நேரம் அப்பா தூங்குறேன்டா குட்டி, ப்ளிஸ்..
அப்பா, நேத்து, டூத் ஃபெயரி வந்து எனக்கு காசு தந்தாங்களே..
அப்படியா? நிஜமாவா சொல்றே?

“ஸீ,” என்று கூறி நூறு யென்னை காட்டி சிரித்தாள், நிவிக்குட்டி. அழகான கன்னக்குழி. முத்தம் கொடுத்தபோது எப்போதும் நிவிக்குட்டியிடம் எழும் பேபி க்ரீம் வாசனை.  
முந்தின நாள் பள்ளியில் விழுந்த கீழ் பல்லை பத்திரப்படுத்தி எடுத்துவந்தாள். “உனக்கு தெரியுமா பா? இந்த டூத்தை நான் பில்லோவுக்கு கீழே வைச்சு தூங்குனா, நைட் டூத் ஃபெயரி வந்து கிப்ட் தருவாங்க.” 

இரவு மறக்காமல், அந்த பல்லை டிஷ்யூ பேப்பரில் சுற்றி, தலையணைக்கு கீழே வைத்துவிட்டு படுத்தாள். அவள் தூங்கியவுடன், காசு வைக்கவேண்டும் என்று நினைத்தான் நரேன். ஆனால் மறந்து விட்டது. சுமி, அவனை பார்த்து கண்ணடித்தாள். அவள் நூறு யென் வைத்திருக்கவேண்டும். 
“டூத் ஃபெயரி வந்தப்ப நான் தூங்கிட்டேன் அப்பா. என்னை ஏன் எழுப்பலை?”
“டூத் ஃபெயரி குட்டியா இருப்பாங்கடா. அவங்களை பார்க்காம இருந்தாதான், நிவிக்குட்டிக்கு காசு தருவாங்க. அதான், எழுப்பலை.”

“நான், இந்த காசை வச்சு கேண்டி வாங்கணும். வாங்கப்பா , ஷாப்பிங் மால் போலாம், ப்ளீஸ்.” 

“எப்போ பார்த்தாலும் கேண்டி வாங்கி கொடு. உன்னாலதான் இவ கெடுறா. ஓவர் செல்லம் கொடுக்குறே நீ. அதனாலதான், ஹோம் ஒர்க் கூட ஒழுங்கா பண்ணாம ஸ்கூலிருந்து மெயில் வருது,” என்றாள் சுமித்ரா.

“பர்ஸ்ட் கிரேடு பிள்ளைக்கு ஹோம் ஒர்க் கொடுக்குறதே அதிகம். நீ வாடா செல்லம்,” என்று நிவியை அணைத்துக்கொண்டு எழுந்தான் நரேன். 

காலை டிபனாக, வாட்டிய ப்ரெட்டை ஜாம் தொட்டு தின்றான்.  நிவிக்குட்டியை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த பூங்காவுக்கு சென்றான். சறுக்குப்பலகையில் ஜாக்கிரதையாக ஏறிச்சென்று, மேலிருந்து சறுக்கி, கீழே வந்துவிட்டு சிரித்தாள் நிவி. இப்போதே, தலைமுடி இடுப்பைத் தொடுகிறது. சுமியைபோலவே, நிவிக்கும் முடி அடர்த்தி.  வாரவிடுமுறைகளில் மட்டுமே நிவியுடன் செலவழிக்கமுடிகிறது. ஐ போன் அதிர்ந்தது. அம்மாதான் ஊரிலிருந்து அழைக்கிறாள். வாரவிடுமுறையென்றால் நிவிக்குட்டியை விடியோ காலில் காட்ட சொல்லி அழைப்பாள். கேமராவை ஆன் செய்து விளையாடிக்கொண்டிருந்த நிவியை காண்பித்தான். 
ஊரிலிருந்தால், நிவிக்குட்டிக்கு  தாத்தா பாட்டியின் அருகாமை, கிடைத்திருக்கும். அம்மாவும், பேரக்குழந்தையை இப்படி போனில் கொஞ்சிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. டோக்கியோ முதலில் வந்தபோது, இரண்டு வருடத்தில் திரும்பிவிடவேண்டும் என்று முடிவு செய்திருந்ததை, இப்போது நினைத்துக்கொண்டான். இந்த ஊர், ஒரு மாயச்சுழல். கொஞ்சம் கொஞ்சமாக, இதில் விழத்தொடங்கிவிட்டோம். ஆரம்பத்தில் சீக்கிரம் ஊருக்கு போய்விடலாம், என்று சொல்லிக்கொண்டிருந்த சுமியும், இப்போதெல்லாம்  அதை மறந்துவிட்டாள். சென்னையில் வாங்கிய வீட்டிற்க்கான இஎம்ஐ, இங்குள்ள சூழலில் குழந்தைக்கு கிடைக்கக்கூடிய எதிர்காலம், அப்ரைசல் என்று ஒவ்வொருமுறையும் ஒரு கேரட் கண் முன் தொங்கவிடப்பட்டு, நடக்கவைக்கபடும் தூரம் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. இனி நாமாக திரும்புவது கானல் நீர்தான். எந்த முடிவும் எடுக்க முடியாமல் தவிக்கும், நம்மை போன்றவர்களுக்குதான் இந்த பிரச்சினையெல்லாம் என்று நினைத்துக்கொண்டான், நரேன். 

பதினொரு மணி வாக்கில், “ போதும்டா நிவிக்குட்டி, வா போகலாம்,” என்றான். “இன்னும் டூ மினிட்ஸ்ப்பா,” என்று ஐந்து விரலை காட்டினாள் நிவி. ஒரு வழியாக அவளை  கிளப்பி, வீட்டுக்கு சென்று குளித்து மதிய உணவை சாப்பிட்டு குட்டித்தூக்கம் போட்டான் நரேன். 

மாலை எழுவதற்குள், ஆறு முறை வீடியோ காலில் அழைத்திருந்தாள் அம்மா. இந்த வாரம் விட்டால், இனி அடுத்த வாரம்தான் நிவிக்குட்டியை பார்க்க முடியும் என்கிற ஏக்கம் அவளுக்கு. சுமித்ரா, வெளியே செல்ல தயாராக இருந்தாள். வாரந்திர மளிகை வாங்குவதற்கு என்ற பெயரில் சென்றாலும், அந்த மாலில் உள்ள ஜீன்ஸ் மார்ட்டில் நிவிக்கு ஜீன்ஸ் டிஷர்ட் வாங்கினாள், சுமித்ரா. மணி எட்டு அடித்தபோது, ”திரும்பிபோய் சமைக்கவேண்டும், வா கிளம்பலாம்” என்றாள். ”ஏய் இங்கேயே சாப்பிட்டுவிடலாம்” என்றான் நரேன். மூவரும் அருகிலிருந்த தாய் உணவகத்தில் நுழைந்தனர். சுமித்திராவுக்கு பிடித்த தொம்யொம் சூப், கீரின் சிக்கன் கறி, நிவேதிதாவுக்கு பீட்சா ஆர்டர் செய்தனர். 

சாப்பிட்டு முடித்து, கார் நிறுத்தியிருக்கும் பார்க்கிங் செல்ல எஸ்க்லேட்டரில் ஏறி, நான்காவது தளம் வந்தார்கள். அந்த தளம் முழுவதும் விதவிதமான கிரேன் மெசின்கள் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு இயந்திரத்துக்குள்ளும் விதவிதமான பொம்மைகள், சிலவற்றுள் ஜெம்ஸ் சாக்லேட் பாக்கெட்டுகள், சிப்ஸ் பெரிய பாக்கெட்டுகள் என விதவிதமான வண்ணத்தில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது. இயந்திரங்களுக்குள் பொம்மையை எடுத்து தரும் கிரேன் கைப்பிடிகள் இருந்தது. காசு போட்டால் பக்கவாட்டிலும், மேலும் கீழுமாக நகரும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான இயந்திரங்கள் நூறு யென் போட்டால் விளையாடும் வகையில் இருந்தது. நூறு யென் போட்டால், கைப்பிடி அசைய தொடங்கும். அந்த கைப்பிடியை கொண்டு பொருட்களை எடுத்து, மூலையில் உள்ள குழியில் தள்ள வேண்டும். குழியில் சரியாக பொருளை விழவைத்துவிட்டால், கீழே உள்ள பெட்டி திறக்கும். பொருளை எடுத்துக்கொள்ளலாம். பொருளை எடுக்க தவறினால், நூறு யென் அவ்வளவுதான். உள்ளே இருக்கும் பொருட்களின் மதிப்பு, விளையாட வருபவர்களின் ஆர்வத்தை தூண்டுவதாக இருந்தது.  ஜப்பானிய பள்ளி மாணவன் ஒருவன் பள்ளி சீருடையுடன் முதுகில் புத்தகப்பை தொங்க, கிரேன் மெசினுக்குள் இருக்கும் ஹீயர்போனை எடுக்க போராடிக்கொண்டிருந்தான். கூட நின்ற மாணவி அவன் தோளில் தொங்கிக்கொண்டிருந்தாள். 

அந்த தளம் வந்தவுடன், நிவேதிதாவின் நடை தானாகவே நின்றது. ஒவ்வொரு வரிசையிலும், நின்று பார்த்தபடி வந்தாள். அப்போதுதான் அந்த கரடி பொம்மையை பார்த்தாள். அழகான பிங்க் நிறத்தில் கழுத்தில் சுற்றிய கட்டம் போட்ட ரிப்பனுடன், சிரித்தபடி, கிரேன் மெசினுக்குள் அமர்ந்திருந்தது. ”அப்பா, அப்பா எனக்கு டெடிபியர் எடுத்துக்கொடு அப்பா” என்றாள் நிவி. 

நரேன், கொஞ்சம் யோசித்தான். அவன் யோசிப்பதை பார்த்த நிவி, அதை சாதகமான அம்சமாக உணர்ந்து, இன்னும் பலமாக நரேனின் கையை பிடித்து இழுத்தாள். ”அப்பா, எனக்கு டூத் ஃபெயரி கொடுத்த காசு இருக்குலே, அதை தரேன்ப்பா ப்ளிஸ்”, என்றாள் நிவிக்குட்டி.   நரேன் அவளிடம் வாங்காமல், பர்ஸை திறந்து நூறு யென்னை எடுத்தான். நூறு யென் போட்டவுடன், முதல் அம்புகுறியிட்ட பொத்தான் விளக்கெரிந்தது. அந்த பொத்தானை அழுத்தினால் முன், பின்னாக மேலிருந்த கைப்பிடியை நகர்த்தமுடிந்தது. மிகச்சரியாக அந்த கரடிபொம்மை இருக்கும் நேர்கோட்டில் கொண்டு நிறுத்தினான் நரேன். பிறகு இரண்டாவது அம்பு குறியின் விளக்கெரிந்தது. அந்த பொத்தானை அழுத்தினால், இடம் வலமாக நகர்ந்தது கைப்பிடி. இப்போது நேராக கரடிபொம்மையின் மேல் கொண்டு நிறுத்தினான். நிவேதிதா மூன்றாவது பொத்தானை அமுக்கும் முன்னரே மகிழ்ச்சியில் குதித்தாள். மூன்றாவது பொத்தானை அமுக்கியவுடன், கைப்பிடியிலிருந்த இரண்டு கம்பிகளும் சரியாக கரடிபொம்மையின் அளவுக்கு விரிந்த பின் ஒரு சுற்று சுற்றி கீழே இறங்கியது. 

கரடிபொம்மையின் முகத்துக்கு நேரே கீழே இறங்கி, சேர்ந்திணைந்து பொம்மையை கவ்வியது. நிவிக்குட்டியின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. கைகளை விரித்துக்கொண்டு குதித்தாள். “அப்பா தேங்க்ஸ்ப்பா” என்று கத்தினாள். பொம்மையை கவ்விய கைப்பிடி, மேலே உயர்ந்தபோது பொம்மையை நழுவவிட்டு, கம்பி மட்டும் மேலே போனது. 

அப்ப்பா.. என்று சிணுங்கினாள் நிவி. ”முகத்தில் பிடிக்காதே நரேன். உடம்பில் பிடித்தால் மேலே கவ்வி வரும்” என்றாள், சுமித்ரா. ”இரு,, இரு இப்போ பாரு” பர்ஸில் துளாவி இன்னொரு நூறு யென்னை எடுத்தான் நரேன். இந்த முறை கழுத்தை தாண்டி, குண்டாக இருந்த கைகளில் கோர்த்து பிடித்தான். இடது பக்க கம்பி மட்டும் சரியாக இடக்கையின் கீழே மாட்டியிருந்தது. கரடிபொம்மை மேலே ஒரு பக்கமாக தொங்கியபடி மேலே எழுந்தது.  பாதி மேலே வந்தவுடன், பொம்மையின் கனம் தாங்காது ஒரு பக்கமாக கீழே விழுந்தது.

ஏமாற்றத்தில் நிவியின் முகம் சுண்டிப்போனது. சுமித்ரா, ”ஏய் சரியா இரண்டு ஹூக்கும் மாட்டுறதுக்கு முன்னாடியே உன்னை யாரு எடுக்க சொன்னா?” என்றாள். 

மூன்றாவது நூறு யென்னை, உள்ளே போட்டான் நரேன். இந்த முறையும் சிறிது தூரம் மேலே எழும்பி, ஒரு பக்கமாக சாய்ந்து கீழே விழுந்தது. இப்போது நிவி அழுதுவிடுவாள் போலிருந்தது. கரடிபொம்மை, என்னை எடுத்துட்டுபோயேன் என்பதுபோல் பரிதாபமாக குப்புற விழுந்துகிடந்தது. 

”நரேன், இது வேஸ்ட். உனக்கு எடுக்க தெரியலை. சும்மா தேவையில்லாம காசை வீணாக்காதே. இதோட விலையே ஆயிரம் யென் தான் இருக்கும். வா போகலாம்.  இப்பவே முன்னூறு யென், நம்ம காசுக்கு இரு நூறு ரூபாய் காலி” என்றாள் சுமித்ரா. 

டெடிபியர் என்று ஆழத்தொடங்கினாள் நிவி. ”மித்ரியோட அப்பா இதே மாதிரி எடுத்துக்கொடுத்தாங்க. நீங்கதான் வேஸ்ட். நீங்கதான் எடுக்கலை”, என்றாள். ”இப்போ வாயை மூடலை, ஸ்கூலுக்கு மெயில் அனுப்பிடுவேன். சும்மா, எங்கே வந்தாலும் அதை வாங்கு இதை வாங்குன்னு” என்று கத்தினாள் சுமித்ரா . அவர்கள் நின்ற இயந்திரத்துக்கு பின்பக்கம்,  அன்பான்மேனை எடுக்க ஒரு குறுந்தாடி வைத்த ஜப்பானிய ஆண் தனது மனைவியுடன் முயற்சித்துக்கொண்டிருந்தான். கூடவே ஒரு குட்டிப்பையன். சுமியின் சத்தம் கேட்டு, தலையை நீட்டி பார்த்து, தமக்குள் ஏதோ பேசி சிரித்துக்கொண்டனர். 

”நிவிக்குட்டி இருடா, எப்படியும் உனக்கு இந்த டெடிபியரை எடுத்து தர்றேன்” . பர்ஸை திறந்துபார்த்தான் நரேன். நூறு யென் எதுவுமில்லை. ஆயிரம் யென் நோட்டை எடுத்துக்கொண்டு, காயின் சேஞ்சரிடம் சென்றான். ஆயிரம் யென் தாளை உள்ளே தள்ளியவுடன், பத்து நூறு யென்களை கொட்டின. அதை பொறுக்கிக்கொண்டு வந்து திரும்பவும் நூறு யென்னை உள்ளே போட்டான். 

ஒருவேளை, இப்போது பொம்மை வந்துவிட்டால் கூட, லாபம்தான் என்று நினைத்துக்கொண்ட சுமி, நரேன் காசுபோடும் வரை பேசாமலிருந்துவிட்டு, ”சொன்னா கேட்கமாட்டேங்குற நீ” என்று அலுத்துக்கொண்டாள். இந்த முறையும் பொம்மை வயிற்றை தடவிகொடுத்து நின்றுக்கொண்டது கைப்பிடி. 

நரேன், திரும்ப திரும்ப நூறு யென்னை போடுவதை பார்த்தவுடன், அங்கிருந்து அந்த செலவில் தனது பங்கை செலுத்தவிரும்பாதவளாக சுமித்ரா மற்ற பொருட்களை பார்க்க சென்றாள். அங்கிருந்தபடியே , பொம்மை தொடர்ந்து கீழே நழுவுவதை ஓரக்கண்ணால் பார்த்தாள். திரும்பவும், பர்ஸை நரேன் திறப்பதை பார்த்தவுடன், அருகில் வந்தாள். 

”நரேன் லூசா நீ? எத்தனை நூறுயென் போடுவே?” என்றாள். அவள் சொல்வதை கவனிக்காமல் நூறு யென்னை உள்ளே போட்டான் நரேன். 

இப்போது, சுமித்ரா உண்மையில் பயந்தாள். ”சனியனே, எப்போ பார்த்தாலும் செலவு வைச்சிட்டு இரு” என்றாள் நிவியை பார்த்து. நிவிக்குட்டி வாயை கோணி காண்பித்துவிட்டு, அப்பாவிடம் ஒண்டிக்கொண்டாள். 

அனைத்து, நூறு யென்களும் தீர்ந்து திரும்பவும் ஆயிரம் யென்னுடன் காயின் சேஞ்சரிடம் சென்றான் நரேன். ”ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிற நரேன்” என்று கோபமாக கத்தினாள். அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் நூறு யென்களை மாற்றிக்கொண்டு வந்து திரும்பவும் உள்ளே போட்டான். இப்போது நரேனின் முகம் மாறியிருந்தது. இந்த இயந்திரமும் தன்னை கேலி செய்கிறது என்று நினைத்தான். நீ அவ்வளவு ஈசியா என்னை தோற்கடிக்கமுடியாது என்று வாய்விட்டு சொல்லிக்கொண்டான்.  

உள்ளே இருப்பது வெறும் கரடி பொம்மை அல்ல என்று தோன்றியது அவனுக்கு. வேர்வை பொங்கியது. இந்த முறை, பொம்மையை சரியாக கவ்வியது கிரேன். மெதுவாக நகர்த்தி, குழிக்கு மேலே கொண்டு வந்து விட்டால் போதும். ஒவ்வொரு அங்குலமாக, வலதுப்பக்கம் நகர்த்தினான். ஒவ்வொரு அசைவும், உயிரின் கயிற்றை பிடித்திருப்பவன் போல் நகர்த்தினான். தனது முப்பத்தி நான்கு வயது வாழ்க்கையை பணயம் இட்டவன் போல் தெரிந்தான் நரேன்.  மூன்றாவது அசைவில், பொம்மை ஆடி, கம்பியிலிருந்து நழுவி கீழே விழுந்து அமர்ந்தது கரடிபொம்மை. இப்போது பொம்மையின் முகத்திலிருந்த புன்னகை தன்னை நோக்கிதான் என்றுணர்ந்தான் நரேன். 

வேகமாக, பர்ஸை திறந்தான். பணமெல்லாம் தீர்ந்திருந்தது. ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு,  தளத்தின் மூலையில் மாடிபடி அருகே இருந்த இயந்த்திரத்தை நோக்கி ஓடினான். பத்தாயிரம் யென் நோட்டை எடுத்து வந்து திரும்பவும் காயின் சேஞ்சரில் மாற்றினான். 

அவன் ஓடியதை பார்த்து, திகைத்து நின்றாள் சுமித்ரா.  சுதாரித்துக்கொண்டு, அவன் திரும்பியதும், அவனிடமிருந்த பர்ஸை பிடுங்க முயன்றாள். ”நாயே, உங்கப்பன் வீட்டு காசா? உன் வேலையை பாருடி” என்று உறுமினான், நரேன். இப்போது, இரண்டு வரிசைகளில் இருந்தவர்களும் ஒரு கணம் நிதானித்து, என்ன நடக்கிறது என்று பார்த்தார்கள். ஒரு தாத்தாவும் பாட்டியும், என்ன இது? என்பதுபோல் இவர்களை பார்த்தார்கள். சுமியின் முகம் அவமானத்தில் சிவந்திருந்தது. கண்களில் நீர் பொங்கியது. அந்த வழியே போன  இந்திய குடும்பம் நின்று தன்னை பார்ப்பதை உணர்ந்தாள். அந்த பெண் சுமியின் முகத்தை பார்த்தாள். கண்கள் சந்தித்தவுடன், வேறு எங்கோ பார்க்கும் பாவனையில் முகத்தை திருப்பினாள். 

அம்மா அழுவதையும், அப்பா திட்டியதையும் கண்ட நிவிக்குட்டிக்கு இப்போது பயம் வந்தது.  அப்பாவின் காலை கட்டிக்கொண்ட நிவிக்குட்டி, ”அப்பா எனக்கு இது வேணாம்ப்பா. ” என்றாள், ஒருகையால் அவளை ஒதுக்கிவிட்டு, காசை போட எத்தனித்தான், நரேன். ”அப்பா, நெஜமாவே எனக்கு டெடிபியர் வேண்டாம்ப்பா. இது நல்லாவே இல்லை” என்று சொல்லியபடி நரேனின் காலை பிடித்திழுத்தாள் . மீறி, காசை போட முயற்சித்த நரேன், ஒருகணம் தடுமாறி, பர்ஸை நழுவவிட்டான். பர்ஸை கீழே குனிந்து எடுத்தவுடன், திரும்பி நிவியின் கன்னத்தில் அறைந்தான்.  வீறிட்டு அழுதாள் நிவி. சன்னதம் வந்தவன் போல் நூறு யென்னை உள்ளே போட்டு அம்புகுறியிட்ட பொத்தானை அமுக்கினான் நரேன்.  ***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.