பிரகாசமான எதிர்காலம்

This entry is part 8 of 17 in the series 20xx கதைகள்

2016-2

அமர்நாத்

வெள்ளிக்கிழமை காலை யம்மி விழித்தபோதே க்ரிஸ் கிளம்பிப் போய்விட்டான் – வேலைக்கு. வேலை என்றால் தொழில், அதற்குத் தகுந்த சம்பளம், அத்துடன் நிறைய உபரி வருமானம், ஐந்து நாட்களுக்குப் பிறகு வரும் வாரக்கடைசி என்கிற அர்த்தம் எல்லாம் இல்லை. பல மாதங்களுக்கு முன் காதல் பருவம் முடிந்து, கோடைமுடிவில் திருமணநாள் நிச்சயிக்கப்பட்ட ஒப்பந்தத்தின்போது அவனுக்கு நிஜமான வேலை. ப்ளாக்வெல் ஃபார்மாவின் ஆராய்ச்சிப் பகுதியில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள் பிரிவின் தலைவன். முப்பத்தியிரண்டு வயதிலேயே அப்பதவி அவனுக்குக் கிடைத்ததில் அதிசயம் இல்லை. ப்ரின்ஸ்டனில் மருந்துகள் உடலை பாதிக்கும் துறையில் பிஎச்.டி. அதைத் தொடர்ந்து லன்டனில் எம்.பி.ஏ. அவனுடைய குளிர்பதன அலுவலகத்தில் ஒருபக்கத்துச் சுவர் முழுக்க ஒரு படம். இரண்டு குதிரைகள் ஆவேசத்துடன் இழுத்துச்செல்லும் ரதத்தில் கத்தி சவசங்களுடன் ரோமப் படைத் தலைவன். புதிய மருந்துகளின் குணங்கள் பற்றிய ஆராய்ச்சிகள் மற்றும் அவற்றின் வெற்றிகரமான விற்பனை இரண்டையும் வழிநடத்தும் தலைவன் அவன். பிரகாசமான எதிர்காலம். தினம் உடைமாற்ற வேண்டுமே என்கிற கட்டாயமே தவிர, அதில் அழுக்கு சேராது. ஆடை வேர்வையில் நனைய ஆசைப்பட்டால் உடற்பயிற்சிக் கூடம். 

இப்போதைய க்ரிஸ்ஸின் வேலை, யம்மியைப் பொறுத்தவரை, அநாவசியமாக ஆடையை அழுக்காக்கிக் கொள்வது. வெட்டவெளியில் கால் வைத்ததுமே முகத்தில் வேர்வை, உடலில் கசகசப்பு, நாக்கில் உலர்ப்பு. அந்த அழகான வேலைக்கு, கேம்ப்ரிட்ஜில் அவர்களின் தாற்காலிக வசிப்பிடத்தில் இருந்து அவள் ‘க்ரோயிங் சர்க்ல்’ நிதிநிறுவனத்தின் பாஸ்டன் கிளைக்கு அகநகர் நோக்கிப்போக, அவன் எதிர்ப்பக்கம் நாற்பது மைல்கள். அவர்கள் வாழ்க்கைப் பாதைகளே எதிர்த் திசைகளிலோ என்ற சந்தேகம் சிலநாட்களாக அவளுக்கு.

‘இன்வெஸ்ட்மென்ட் பாங்க்கிங்’ பகுதியில் யம்மி ஒரு முக்கிய புள்ளி. மந்திரவாதி காலித்தொப்பியில் இருந்து முயலை எடுப்பதுபோல முதலீட்டுப் பணத்தை உருவாக்க வேண்டும். அதற்கு எவ்வளவோ தந்திரங்கள். கடன் வாங்குதல், இரு நிறுவனங்களை இணைத்தல், ஒரு நிறுவனத்தின் நிர்வாகத்தையோ அமைப்பையோ மாற்றியமைத்தல், டாலர், யூரோ, யென், யுவான் நாணயங்களை ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு சமயம் பார்த்து மாற்றுதல். எல்லாம் மின்னணுக்களின் தாவலில் எண்கள் செய்யும் வித்தை. அந்த எண்கள் யம்மி சொல்கிறபடி ஆடும் அடிமைகள். 

குளிப்பதற்குமுன் உற்சாகம் தர கே-கப் காப்பி. அதை யம்மி அனுபவித்துக் குடித்தபோது…

என்.ஓ.ஈ.டி.-8 (நைட்ரிக் ஆக்ஸைட் என்ஹான்ஸிங் ட்ரக், அடையாள எண் எட்டு) இரத்த அழுத்தத்திற்கு எதிரான சோதனையின் முதல்கட்டம் தொடங்க இருந்தது. அந்த மருந்தின் முழு உரிமைகளையும் வாங்கிய ப்ளாக்வெல் நிறுவனத்தில் முதலீடு செய்வது சரியா என்று தீர்மானிக்க,’க்ரோயிங் சர்க்ல்’ நிதிநிறுவனத்தின் ஸ்டாம்ஃபோர்ட் அலுவலகத்தில் இருந்து விஷ் வைத்யா வந்தான். அவனை யம்மி ப்ளாக்வெல் தலைமையகத்துக்கு அழைத்துப் போனாள். நடந்தே, பாஸ்டன் அகநகரில் அடுத்த சாலை. அப்போது தான் க்ரிஸ்ஸை சந்தித்தாள். அவனுடைய ஆழ்ந்த அறிவும் எதிர்கால நோக்கும் வைத்யாவை நூறுமில்லியன் கணக்கில் முதலீடு செய்ய வைத்தன. அவன் உடற்கட்டும் உற்சாகமான பேச்சும் யம்மியைக் கவர்ந்தன.  

குளித்ததும் காலை உணவு. சீரியலில் கொழுப்பு கலவாத பாலை ஊற்றினாள்.

க்ரிஸ்ஸிடம் இந்த மனமாற்றம் எப்போது நேர்ந்தது?

ஏற்கனவே பெய்த பனியை சாலைகளின் ஓரத்தில் குமித்து முடிப்பதற்குள் அடுத்த பனிமழை. அதை வாருவதற்குள் இன்னொன்று. எப்போது எல்லாம் உருகும் என்ற ஏக்கம். ஒரு வெள்ளிக்கிழமை மாலை.

“சம்பளத்துடன் மூன்றுவார விடுமுறை.”

எதிர்பாராத அறிவிப்பினால் யம்மி அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள். 

“எனக்கு ஓய்வு தேவை.”

“நீண்டுகொண்டே போகும் குளிர்காலத்தினால் வந்த மனபாதிப்பா?”

“அதனால் இல்லை. வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் என்.ஓ.ஈ.டி.-8- இன் இரண்டாம் கட்ட சோதனைகள் முடிந்துவிட்டன.”

“அப்படியென்றால் அது அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்று சொல்!”

“முடிபுகள் நமக்கு சாதகமாக இராது.”

சோதனைகளில் வெளிப்பட்ட எண்களை அவன் அலசியிருக்க வேண்டும். அவன் கணிப்பு தவறாகப் போகாது.

“அதனால் என் நிறுவனத்துக்கு முன்னூறு மில்லியன் டாலர் நஷ்டம்.”

அந்த மருந்தின் குணங்களை ஆராய்ந்து அது எதிர்பார்த்த பலன் தரும் என்ற நம்பிக்கையில் அதன் உரிமைகளை வாங்கத் தீர்மானித்தவன் அவன். அதனால் வருத்தமோ? 

“எல்லா புதிய மருந்துகளும் ‘ப்ளாவிக்ஸா’க இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஒருசில தோல்விகள், நிறைய வெற்றிகள். என் அப்பா அனுப்பிய வான்டர்பில்ட் ரிபோர்ட்டில் இதே துறையில் வெற்றிகரமான ஆராய்ச்சி செய்யும் டாக்டர் ஹாரிசன் பற்றி ஒரு கட்டுரை. அவருடன் தொடர்புகொண்டு…”

அவன் அக்கறை காட்டவில்லை. அவனை உற்சாகமூட்ட,

“என்னால் மூன்று வாரம் முடியாது, அதில் பாதி. கவலைகளையும் பாஸ்டன் குளிரையும் மறக்க சூடான அரூபா தீவுக்குப் போனால் என்ன?”

“அதனால் பெட்ரோலியம், மணல் என பல இயற்கை வளங்கள் வீண்.”

அது தான் அவன் எண்ண ஓட்டத்தின் ஆரம்பமாக இருக்க வேண்டும்.

“மார்லோ ஆடம்சன் ஞாபகம் இருக்கிறதா?”

ப்ரின்ஸ்டனில் க்ரிஸ்ஸின் சக-மாணவன். சில வாரங்களுக்கு முன் ஒரு சனிக்கிழமை காலை வந்தான். தடியான கட்டம்போட்ட சட்டையிலும் சாயம் இழந்த நீல ஜீன்ஸிலும் பிஎச்.டி. பட்டம் காணாமல் போனது. டௌன்சென்ட் போகும் வழியில் ஒரு பண்ணை வீட்டின் சொந்தக்காரன் என்ற அறிமுகம். சிறு உணவுக்குப் பிறகு க்ரிஸ்ஸை மட்டும் அவன் தன் இருப்பிடம் அழைத்துப் போனான். பழைய மாணவர்கள், பழங்கதை பேச… என யம்மி நினைத்தாள்.

“மார்லோவின் நிலத்தில் பாதி சும்மா கிடக்கிறது. இரண்டரை ஏக்கர். அதில் ஒரு பழைய காலி வீடும், பலநாளாக பராமரிக்கப் படாத தோட்டமும். வாங்கலாம் என நினைக்கிறேன்.”

“எவ்வளவு?”

“எண்பதாயிரம் டாலர்.”

அவன் நான்குமாத வருமானம்.

“திங்கள் காலை அங்கே மறுபடி போகப் போகிறேன். நீ வந்து பார்க்கிறாயா?”

வீடு எப்படி இருந்தாலும் நிலத்துக்கு மதிப்பு. நிச்சயம் உயரும். 

“உனக்குப் பிடித்தால் சரி.”

விடுப்பு நாட்கள் சோம்பேறித்தனமாகக் கழியவில்லை. தினம் புழுதியுடன் திரும்பிவந்து மண் கொத்தினேன், வேலி அடித்தேன் என்று க்ரிஸ் சொன்னபோது, அவன் மனம் தேற தோட்டக்கலை என நினைத்தாள். ஒருசில நாள் வேலை இழுக்கடித்ததால் இரவு அங்கேயே தங்கினான்.

மூன்று வாரம் முடித்ததும் சம்பளம் இல்லாமல் இன்னொரு மூன்று வாரங்கள். அதுவும் முடிந்தபோது,

“பணக்கார அமெரிக்கர்களுக்கு மருந்து விற்கும் விளையாட்டில் எனக்கு நம்பிக்கை போய்விட்டது…”

அப்போது தான் அவன் மனமாற்றம் தாற்காலிகமானது இல்லை என்பதை அவள் உணர்ந்தாள். அவள் காதல் வாழ்க்கையில் புதிய அனுபவம். கல்வி அல்லது தொழில் நிமித்தம் ஊர் மாறியதால், இன்னொரு பெண் அபகரித்ததால், பழக்கம் புளித்துப் போனதால் உறவுகள் முறிந்திருக்கின்றன. அவனிடம் நிகழ்ந்த மாற்றங்கள் அவள் எதிர்பாராதவை. உலர்சலவை செய்த வர்த்தக ஆடைகளுக்கு பதில் சுருங்கிய சட்டையும் பான்ட்ஸும். கடைகளில் வாங்காமல் அவனே தயாரித்த மதிய உணவு. முகத்தில் தீவிர சிந்தனையின் ஆழம். ஆனால் அவளைப் பொறுத்தவரை அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. எப்போதும் போல அன்பான வார்த்தைகள். வாரக் கடைசியில் தன்னுடன் வந்து மண்ணை அள்ளிப்போடு என்று அவளை அவன் கேட்டது இல்லை. அவளாகவே ஒருதடவை அவனுடன் அந்த இடத்தைப் போய்ப் பார்த்தாள். அது ஒரு தனி சமுதாயம், அமெரிக்காவில் பிறந்துவளர்ந்து இருந்தாலும் அவள் அறிந்திராத நிலப்பரப்பு.

அவளுடன் கல்லூரியில் படித்து பெல்மான்ட்டில் கணவனுடன் க்ளினிக் நடத்திய தோழி நான்ஸி.

“க்ரிஸ் டௌன்சென்ட் பக்கம் அடிக்கடி போவதைப் பார்க்கிறேனே…”

“அந்தக் கதையை ஏன் கேட்கிறாய்? அவனுக்குக் காலத்தில் பின்னே போக விருப்பம்.”

“ஏன்?”

“வரப்போகும் காலம் எப்படி இருக்குமோ என்ற கவலை…”

“அப்படி அறுபது வருஷம் பின்னால் போக ஆசைப்பட்டால், ஏர்கண்டிஷனரை அணைத்தால் போதும்.”

“க்ரிஸ் போவது அதற்கும் முன்னால்.”

“அதாவது, ‘லிட்டில் ஹௌஸ் ஆன் த ப்ரெய்ரி’ காலம் மாதிரியா?”

“கிட்டத்தட்ட…”

“வீட்டில இருந்து தள்ளி கழிப்பிடம்…”

“அதைப் பயிருக்கு உரமாக மாற்ற காம்போஸ்ட்.”

“அந்தக்காலத்தில் கருத்தடை மாத்திரை கிடையாதே. அவ்வளவு பின்னால் போக என்னால் முடியாது.” 

“என்னாலும் தான்.”

“கவலைப்படாதே! மிஞ்சிப் போனால் ஒரு மாதம். அதற்குமேல் தாக்குப்பிடிக்க மாட்டான். இம்மாதிரி நவீன ஹிப்பிக்கள் பற்றி ‘பாஸ்டன் க்ளோபி‘ல் படித்தேன். ஒரே மாதிரியான நகர வாழ்க்கையில் சலிப்பு வந்து கிராமப்புறம் போகிறார்கள். நிலத்தைக் கொத்துவது கடும் உடல் உழைப்பு, என்பது தெரிந்ததும் மறுபடி நகரம். க்ரிஸ்ஸும் காலையில் எழுந்ததும் காற்றின் வெப்பத்துக்கும் காப்பியின் சூட்டுக்கும் ஏங்குவான். தரையில் படுத்து உடம்பின் ஓரங்கள் வலிக்கும்போது மெத்தையின் அருமை தெரியும். திரும்பி வந்தால் பழைய வேலை மறுபடி கிடைக்குமா?”

“அது சந்தேகம். ஆனால் அவன் திறமைக்கு யாராவது அவனை அள்ளிப்போட்டுக் கொள்வார்கள்.”

பனி உருகி புது இலைகள் தோன்றிய பிறகும் நான்ஸி எதிர்பார்த்தது நடக்கவில்லை.

யம்மி அலங்காரத்தில் அதிக கவனம் எடுத்தாள். விலையுயர்ந்த வர்த்தக ஆடை, அதற்குப் பொருத்தமான காலணிகள். அன்று ‘க்ரோயிங் சர்க்லி’ல் சேர விரும்பும் ஒருவன். அவனை அளவிடுவதில் அவளுக்கும் ஒரு பங்கு. காலை ஒருமணி நேரம் நிறுவனத்தின் நான்கு உதவித்தலைவர்களுடன் அவளும் சேர்ந்து அவனை அளக்க வேண்டும். பிற்பகல் அரைமணி அவள் அலுவலகத்தில் தனியாக, அவன் மற்றவர்களுடன் எப்படி ஒத்துப்போகிறான் என்று கணிக்க.

கிளம்புமுன் வீடுதிரும்ப நேரமாகும் என க்ரிஸ்ஸுக்கு ஒரு தகவல். 

தினம் பஸ்ஸில் இருபது நிமிடப் பயணம். அப்போது அலைபேசியில் மின்னஞ்சல்கள் பார்ப்பாள். தலைப்புச் செய்திகள் பார்வையிடுவாள். வர்த்தகச் செய்திகள் கவனமாக வாசிப்பாள்.

அன்று கீழ்த்தளத்தில் நிறுத்தியிருந்த இன்ஃபினிடியில் சொகுசான சவாரி. மாஸசூஸெட்ஸ் அவென்யுவில் பஸ்களுக்கு வழிவிட்டு, போக்குவரத்து விளக்குகளில் நின்றுநின்று ஊர்ந்தபோது மனம் ஊர்தியைவிட வேகமாக ஓடியது. 

அவள் யார்?

பள்ளிப்படிப்பு முடிக்கும்வரை ப்ரியம்வதா பெற்றோர்களின் நிழலில். புறநகரில் சொந்தவீடு, கடனில் வாங்காத கார்கள் என்பவை தவிர ஆடம்பரம் என்று சொல்ல அதிகம் இருந்தது கிடையாது. மாதச் சம்பளத்துடன் திருப்தியடைந்த தந்தை. இலக்கண ஆங்கிலம் தெரியாத இந்தியப் பெண்கள் கூட சாமர்த்தியமாக ஒரு வேலையில் அமர்ந்து பணம் சம்பாதித்தபோது, நிலையாக வருமானம் தரும் பாதையில் கால்வைக்காத தாய். வீட்டுவேலை, எழுத்து, ஆவணப்படங்கள் போன்ற அவள் முயற்சிகள் டாலர் கணக்கில் பூஜ்யம். அதனால், குடும்ப வாழ்க்கை நிதானமாக நகரும் நதியில் பயணிக்கும் படகு. எதிர்பார்ப்பு என்பது அடுத்த ஆண்டு உயரமாக வளர்ந்திருப்போம், இன்னும் நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும், சுருங்கிச் சிறிதாகப் போன பழைய ஆடைகளுக்கு பதிலாக அதேபோல பெரிதான ஆடைகள். புதிய நண்பர்கள், புதிய புத்தகங்கள் அவ்வளவுதான். சரியாகச் சுடாத அடுப்பு, சுற்றாத துணிதுவைக்கும் இயந்திரம், எதுவானாலும் அவள் தந்தை அவற்றின் பாகங்களை மாற்றி சரிப்படுத்தி விடுவார். நினைவு தெரிந்ததில் இருந்து ஒரே வீடு, அவளுக்கென ஒரே அறை. அதன் க்ளாசெட்டில் பாதி எப்போதும் காலி. பட்டுப்பாவாடைகளோ டிசைனர் ஆடைகளோ அதில் தொங்கியது இல்லை. மாதத்தில் ஒருமுறை மட்டுமே வெளியில் சாப்பாடு. அதுவும் வாடிக்கையாளர்கள் தாங்களாகவே பரிமாறிக்கொள்ளும் உணவு விடுதிகளில். மற்ற வேளைகளில் தாயின் கைவண்ணம். அதன் தயாரிப்பில் யம்மி உதவ வேண்டும். வீட்டில் ஒரேயொரு இருபத்தைந்து அங்குல (நாற்பது செமீ) தொலைக்காட்சி. மற்றவர்கள் வீட்டில் அது முப்பது நாற்பது ஐம்பது என வேகமாக வளர்ந்து, இரண்டு மூன்று குட்டிகள் போட்டபோது, எப்போதாவது தடங்கல் கொடுக்கும் ஒன்றை எதற்குத் தூக்கியெறிந்து இன்னொன்று? பதினாறு வயதில் அவள் கார் ஓட்டத்தொடங்கிய போது அவளுக்குக் கிடைத்த ‘சிவிக்’குடன் அவளுக்கு ஏழுவயதில் இருந்தே உறவு.  

கல்லூரியில் நுழைந்ததுமே மெல்லமெல்ல அந்த ப்ரியம்வதா மறையத் தொடங்கினாள். ஆண்டுக்கு ஆண்டு சம்பள உயர்வுடன், வர்த்தக நிறுவனங்களில் ஆலோசகர் என்ற பெயரில் மேல்வரும்படியும் அனுபவித்த பேராசிரியர்களின் மாணவி யம்மி. முதலில் ஒரு டாலர் மதிப்பு இழந்தது, போகப்போக ஐந்தும் பத்தும்.

மத நம்பிக்கை போல அடுத்த ஆண்டு நிச்சயம் இந்த வருஷத்தைவிட சிறப்பாக இருக்கும் என்கிற நிச்சயம். தினம் பார்த்து அலுத்துப்போன ஊர்தியை நான்கு ஆண்டுகளில் மாற்ற வேண்டும். பழுதான கணினியையோ இல்லை பழுது ஆகாத அலைபேசியையோ மாற்றும்போது இன்னும் சக்தி வாய்ந்த சாதனங்கள். பட்டம் வாங்கி இரண்டாவது ஆண்டு முடிவதற்குள் அவள் தந்தையைவிட அவளுக்கு அதிக வருமானம். அமெரிக்க வாழ்க்கைமுறையின் இலக்கணம்.

விற்பனை, வருமானம் மற்றும் சந்தையில் பங்கு, இவை காலத்தோடு ஏறுமுகமாக மாறுவது அவள் தொழிலுக்கு அழகு. எக்செல் வரைபடத்தில், உச்சி தெரியாமல் ஏறிக்கொண்டே போகும் கோடுகள், படிப்படியாக உயரும் தூண்கள், கல் விழுந்த நீர்ப்பரப்பு போல விரியும் வட்டங்கள், வட்டத்தில் ஒரு துண்டு மற்ற துண்டுகளைச் சாப்பிடுவதால் வரும் பெருக்கம் – அவளுக்கு இனிய காட்சிகள். புதிய க்ரிஸ்ஸின் எதிர்பார்ப்போ இறக்கம். கல்தடுக்கித் தடுமாறாமல், சரிவில் விழுந்துவிடாமல் கீழே சாமர்த்தியமாக இறங்குவது அவன் குறிக்கோள். அவனுக்குத் தேவையான பொருட்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. தொலைக்காட்சி வேண்டாம், சர்க்கரை வேண்டாம், பிளாஸ்டிக் எதுவுமே வேண்டாம்…     

முப்பத்தோரு வயதில் எதிர்பார்க்க ஒரு வளமான எதிர்காலம் இல்லாமல் எப்படி ஒருத்தி வாழமுடியும்? நாளைக்கும் நிச்சயம் என்ற நினைப்பு இல்லாவிட்டால் இன்றைய தினத்தின் சௌகரியங்களை அனுபவிப்பது எப்படி?

அலுவலகக் கட்டடத்தின் வாசலில் ஊர்தியை நிறுத்திவிட்டு இறங்கினாள். அவளிடம் காரை அடையாளப்படுத்தும் அட்டையைக் கொடுத்துவிட்டு அதை ஒரு பணியாளன் வேகமாக ஓட்டிப்போனான். 

அலுவலக அறையில் கணினியுடன் உறவாடல்.

உணவகங்களில் வாடிக்கையாளர்கள் சாப்பாட்டுக்கு ஆர்டர் செய்ய, உணவு வரும்வரையில் விளையாட்டில் காசு செலவழிக்க, சாப்பிட்டபின் பணம் செலுத்த என சகல காரியங்களுக்கும் ஒவ்வொரு மேஜையிலும் ஒரு குட்டிகணினி. உயிருள்ள பரிசாரகரைவிட கடைக்கு அதிக வருமானம் தேடித்தரும் தொட்டுணர்வுத்திரை. அதைத்தயாரித்து விற்பனை செய்த ‘ஈ-ஈட்’ கம்பெனியை வாங்கலாமா என்று ‘அலிபாபா’வுக்கு யோசனை.

கடந்த இரண்டு ஆண்டுகளில் உணவக-குட்டிகணினிகளின் விற்பனை வளர்ச்சி யம்மிக்கு பிடித்தது. ‘யோசிக்கவே வேண்டாம்’ என பரிந்துரைத்தாள்.

நேர்காணலுக்கு வரவிருக்கும் ஆலிவர் வீவர்ஸின் விவரங்கள் திரையில் தோன்றின.

எம்ஐடியில் பிஎச்.டி. (இரசாயனப் பொறியியல்), ‘ஆரியோகார்ப்’ நிறுவனத்தின் பொருளாதாரப் பிரிவில் மேல்மட்ட ஆராய்ச்சி. கடந்த ஐந்து ஆண்டுகளாக நியுயார்க் பல்கலைக் கழகத்தில் உதவிப்பேராசிரியர்.

படத்தை உற்றுப் பார்த்தால் தெரிந்த சீனக்களை. தாய் சீனத்துப்பெண்ணாக இருக்கும்.

கூந்தலை இலேசாக வாரி, ஆடையை சரிசெய்து ஆலோசக அறைக்கு வந்து காத்திருந்தாள்.  பத்துமணிக்கு பாஸ்டன் கிளையின் தலைவர், உதவித்தலைவர்களுடன் நுழைந்த ஆலிவர்.

அறிமுகத்தின்போது அவன் பலநாள் பழகியதுபோல அவள் கைகளை அழுத்திக் குலுக்கினான். 

எல்லாரும் அமர்ந்ததும் தலைவர்,

“ஆலிவர்! எனக்கு சுற்றிவளைத்துப் பேசத் தெரியாது. நீ இருப்பது பாதுகாப்பான கல்லூரிச் சூழலில். புதிதாக நாங்கள் ஏற்படுத்திய இப்பதவிக்கு உலகமுழுதும் போட்டிகள். உன்னால் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை ஐந்து நிமிடங்களில் சொல் பார்க்கலாம்!” 

அவர் குரலின் சந்தேகத்தைத் தன் புன்னகையால் மாற்றி…

“நான்கு ஆண்டுகளுக்குமுன் அரசாங்க மானியத்துக்கு நான் விண்ணப்பித்தேன். பலகாலமாக தங்கத்தின் விலை சந்தையின் எதிர்பார்ப்புகள், ஏற்றஇறக்கங்கள், நிச்சயமின்மை… இவற்றின் அடிப்படையில் மாறி யிருக்கிறது. ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக அகழ்ந்து எடுக்கப்படும் தங்கத்தின் மதிப்பு அதற்குத் தேவைப்படும் சக்தியின் விலையைப் பொறுத்தது. அதனால்… அதன் எதிர்கால விலையை சரியாகக் கணக்கிட முடியும் என்பதைக் காட்டுவது என் விண்ணப்பத்தின் நோக்கம். அது சாத்தியம் இல்லை என நினைத்த ஒரு அதிமேதாவி, ‘அப்படி உனக்கு நம்பிக்கை இருந்தால் உன் பணத்தை நீ முதலீடு செய்!’ என்று அலட்சியமாக எழுதியிருந்தான். அதை சவாலாக ஏற்றேன். வீடு வாங்க முன்பணமாக என் பெற்றோர்கள் கொடுத்த ஐம்பதாயிரம் டாலர். அதைவைத்து தங்கத்தை வாங்கி விற்றதில் ஆண்டுக்கு பதினெட்டு சதம் வருமானம்.”

சுவரில் ஐம்பதாயிரம் இரட்டித்ததைக் காட்டிய படம். 

“பணம் செய்ததைவிட அதிகமாக என் கொள்கையை நிரூபித்த சந்தோஷம். பெரிய அளவிலும் அப்படிச் செய்ய முடியும் என்கிற தன்னம்பிக்கை வளர்ந்தது. நாம் எவ்வளவு மரியாதை கொடுத்தாலும் தங்கத்தின் உபயோகம் என்ன? அணிகலன்கள், மின்பூச்சு, சில மின்னிணைப்புகள். எல்லாவற்றுக்கும் மாற்று இருக்கிறது. அரிய உலோகங்கள் அப்படி இல்லை. நியோடிமியத்துக்கு பதிலாக நிக்கலைப் பயன்படுத்த முடியாது. கால்லியம் நைட்ரைட் இல்லையென்றால் ‘எல்ஈடி’யும் இல்லை. இது அரிய உலோகங்களின் காலம். நீங்கள் தொடங்க இருக்கும் ‘லாந்த்தனம் ஃபன்ட்’டை என் நிரூபிக்கப்பட்ட வழியில் நடத்தி அதன் மதிப்பை நான் பெருக்க முடியும்.” 

சுவர்க் கடிகாரத்தைப் பார்த்த தலைவர்,

“வெரி குட்! முப்பது நொடிகள் பாக்கி. நீ இன்னும் எதாவது சொல்ல விரும்பினால்…” 

“எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் ஸ்டீவன் பிங்க்கர் எழுதிய ‘என்லைட்டன்மென்ட் நௌ’. நேரிய சிந்தனை இருந்தால், ஆரோக்கிய வாழ்க்கை, எந்தப் பிரச்சினையையும் தீர்க்கமுடியும் என்கிற தைரியம், இரண்டும் சாத்தியம்… என்பது அதன் சாரம். அதற்கு நானே ஒரு சான்று. அதிலிருந்து எனக்குப் பிடித்த மேற்கோள்…”

அவன் அலைபேசியை எடுத்துப் படித்தான். 

இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு எண்பது ஆண்டுகளையும் தாண்டிய வாழ்க்கை காத்திருக்கிறது. எப்படிப்பட்ட வாழ்க்கை? கடைகளில் வேண்டிய அளவுக்கு உணவுப்பண்டங்கள், குழாயில் சுத்தமான நீர். ஒரு விரலின் சொடுக்கில் கழிவுப்பொருட்கள் காணாமல்போகும் சௌகரியம். எந்த நோய்க்கும் மாத்திரைகள், அது மட்டுமா? உலகின் அத்தனை அறிவும் கலாசாரமும் ஒரு சட்டைப்பாக்கெட்டில் அடங்கும் அதிசயம்.

“ஒரு நிமிடம் அதிகம் எடுத்ததற்கு மன்னிக்கவும்!”

தலைவர் எழுந்து கைநீட்டினார்.

“யு ஆர் த மேன்.”

“தாங்க்ஸ். என் சாதனை உங்களுக்குப் பெருமை.” 

“மிச்சம் ஐம்பது நிமிடங்கள் என்ன செய்யலாம்?” என்று யம்மி சிரித்தாள். 

“நான் நன்றாக ப்ரிட்ஜ் ஆடுவேன்…” என்று பையில் கைவிட்டு ஆலிவர் வெளியே எடுத்தான். ஒரு சீட்டுக்கட்டு.

“இன்னொரு சமயம். இன்றில் இருந்து உனக்கு சம்பளம். நேரத்தை வீணாக்காமல் எழுந்திரு! உனக்கு இரண்டு உதவியாளர்கள். நீயே அவர்களைத் தேர்ந்து எடுக்கலாம்.”   

மறுபடி அலுவலக அறை.

உலகின் பல இடங்களில் இருந்து இறங்கிய எண்களை ஜீரணித்ததில் யம்மியின் நேரம் நகர்ந்தது. மூன்று மணிக்கு ஆலிவரை உதவித்தலைவர் கொண்டுவந்து விட்டார்.

“யம்மி! நீங்கள் பேசிமுடித்ததும் ஆலிவரை நிதி அலுவலகத்துக்கு அழைத்துப்போக முடியுமா?”

அவர் வெளியேறி மற்ற இருவரும் அமர்ந்ததும்,

“காலை அறிமுகத்தில் இருந்து இதே யோசனை. உன்னை பார்த்திருக்கிறேன். எங்கே என்றுதான் தெரியவில்லை.”  

ஆலிவரின் நிரந்தரப் புன்னகையில் இன்னுமொரு மாற்று கூடியது.  

“எனக்குத் தெரியும். நான் சொல்லட்டுமா?”

“சொல்லாதே! என் ஞாபகசக்திக்கு ஒரு பரீட்சை. நீ எம்ஐடி, நான் பென். கல்லூரியில் சந்தித்து இருக்க முடியாது.”

“அதற்கும் முன்னால்…”

“ப்ரென்ட்வுட் மேநிலைப்பள்ளி.”  

“நெருங்கிவிட்டாய்.” 

“நீ அங்கே படித்ததாக ஞாபகம் இல்லையே.” 

“அதுவும் சரி. நான் ஃபாதர் ரயனில். ஆனால், என் தங்கை…”

“ஆ! ஞாபகம் வந்துவிட்டது. மியா டெங்.”

“கரெக்ட்! அவள் என் ஸ்டெப்-சிஸ்டர்.”

“கொஞ்சம் ஜாடை தெரிகிறது.” 

“நாலைந்துபேராகச் சேர்ந்து கணக்கு ப்ராஜெக்ட் செய்த போது, நீ முக்கால்வாசி போட, மியா மிச்சத்தை முடிக்க… மற்றவர்கள் அரட்டையடித்து நீங்கள் செய்ததைக் காப்பியடிக்க… அப்போதே தெரியும், நீ எண்களை மேய்க்கப்போகிறாய் என்று.”

புகழ்ச்சியில் மகிழ்ந்துவிடாமல் அவன் வேலையின் தேவைகளுக்கு யாரை அணுகவேண்டும் என்று அறிவுரை கொடுத்தாள்.  

மாலை ஏழுமணி. வீட்டிற்குத் திரும்பிய க்ரிஸ் அனுப்பிய படங்கள். இரண்டு மாத உழைப்பு வீணாகிவிடவில்லை எனக் காட்டுவதற்கு.

சமதளமான நிலப்பரப்பில் நான்கு பாத்திகள், காய்கறிச் செடிகள் வளர்க்க. அவற்றைச் சுற்றி அலைந்த நாலைந்து கோழிகள். காயோட்டிகளோ மான்களோ வராதபடி பாதுகாப்பான வேலி. நான்கு சின்ன அறைகளுடன் சதுரமான ஒரு தள வீடு, புதிய வர்ணத்திலும் புராதனத்தை விட்டுக்கொடுக்கவில்லை. அதைச் சுற்றிலும் நான்கு பிருமாண்டமான அண்டாக்கள். மழைநீரை சேமித்துவைக்க. 

திருமணம் முடிந்ததும் குடிபோக அவளும் க்ரிஸ்ஸும் ‘வெல்ஸ்லி’யில் வீடு பார்த்திருந்தார்கள். புதுப்பிக்கப் பட்டதும் முன்பணம் கொடுப்பதாக ஏற்பாடு. அதன் படத்தைத் திரைக்குக் கொண்டுவந்தாள். மூன்று மில்லியன் டாலர். கடனும் வட்டியும் மாதம் பன்னிரண்டு ஆயிரம், இருவர் சம்பளமும் சேர்த்தால் அது அதிகமில்லை. ஐந்து படுக்கையறைகள், நான்கு குளியலறைகள், அடுப்புப் பக்கம் போகாதவர்களையும் சமைக்கத் தூண்டும் சமையலறை. சுற்றிலும் தோட்டத்தொழில் வித்தகர்கள் பராமரித்த புல்வெளி, பூச்செடிகள், குட்டைமரங்கள், கலையுணர்வுடன் வெட்டிய புதர்கள்.  

இரண்டு இல்லங்களும் அவள் பார்வையில் புகுந்து மனதைக் குழப்பின.

அறைக்கதவு தட்டும் ஓசை.

“கம் இன்!”

தலைவருக்குப் பின்னால் ஆலிவர்.

“ஆலிவரை நீ அழைத்துப்போக முடியுமா?”

நிறுவனத்தின் புதிய ஃபன்ட் மேனேஜரை டாக்ஸியில் அமர்த்தி திரும்பிப்போகச் சொல்வது மதிப்புக்குறைவு.

“அதை எதிர்பார்த்து நான் இன்று கார் எடுத்துவந்தேன்.”

“எனக்குத் தெரியும், நீ எதற்கும் தயார்!”

“இந்த நாள் பயனுள்ளதாக முடிந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி” என்று ஆலிவரிடம் விடைபெற்றார்.

“எனக்கும் தான்.” 

“தாங்க்ஸ், யம்மி! பை!” 

யம்மி கைப்பையையும் மேல்ஜாக்கெட்டையும் எடுத்துக்கொண்டாள். அவளும் ஆலிவரும் கட்டடத்தின் வாசலுக்கு வந்தார்கள். அடையாள அட்டையை வாங்கிய பணியாள் காரை எடுத்துவரப் போனான்.

“உன் விமானம் எத்தனை மணிக்கு?”  

“நான் இன்று நியு யார்க் திரும்பிப் போவதாக இல்லை.”

“உனக்கு இங்கே வேலை நிச்சயம் கிடைக்கும் என்கிற தன்னம்பிக்கை.”

அவன் பெருமையுடன் புன்னகைத்தான்.

“அது. அத்துடன் என் பெற்றோருக்கு டால்ட்டன் டவரின் நாற்பத்தைந்தாவது தளத்தில் ஒரு சின்ன யூனிட்.”

“செய்தித்தாளில் அந்த கோபுரம் பற்றி பிரமாதமாகப் போட்டிருந்தார்கள். நான் உள்ளே போனது இல்லை.”

“நானும் தான். இருவருமே சேர்ந்து பாஸ்டனை அங்கிருந்து பார்த்து ரசிப்போமா?”

யம்மியின் கார் வேகமாக வந்து நின்றது. ***

Series Navigation<< 2016 – எண்கள்நிஜமான வேலை >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.