குமரன்
மாலை நேர மழையால் சுத்திகரிக்கப்பட்ட மாசுற்ற பெங்களூர் சாலைச் சந்திப்பு ஒன்றில் பச்சை வேண்டிக் காத்திருந்த போது சத்தமின்றி காரின் முன் கண்ணாடி மீது விழுந்தது செக்கச் சிவந்த இதழ் ஒன்று. குமிழ், உடைய எத்தனிக்கும் குமிழ், சற்று முன் உடைந்த குமிழ் வழியே நனைந்த மென்தேகம் என மழையின் வடிவங்களை தன் மேல் தாங்கி என்னை நோக்கிச் சாய்ந்திருந்தது இதழ். சிதைக்க மனமின்றி சட்டென்று வைப்பரை நிறுத்தினேன் நான். பூஜ்யத்திற்கு பக்கத்தில் இருக்கும் என் தாவரவியல் அறிவு அது பற்றிய கூச்சமின்றி, நினைவில் நிற்கும் பூக்களின் பெயர்களை வேகமாகப் பரிசீலனை செய்தது. அது குல்மொஹராகவோ காந்தளாகவோ இருக்கலாம். குறிஞ்சியில் செழிக்கும் காந்தள் சிலிக்கான் சிட்டியின் சாலைகளில் வளரும் வாய்ப்பு குறைவு எனினும் மனது காந்தள் பக்கமே சாய்ந்தது. இல்லாத ஒன்றின் மீது சாய்வது தானே நினைப்பின் இயல்பு!
நினைவுகள் விசித்திரமானவை. நிகழ்வுகளை வித்தியாசமான சித்திரங்களாய் உள்வாங்கும் மனது என்பதால் தான் “விசித்திரம்” என்ற சொல் தோன்றியதோ? பெருங்காட்டுப் பாதையில் நடக்கையில் ஆங்காங்கே எழும்பி செவிக்குள் விழுந்து மறையும் பறவைகளின் ஒலி போன்றது நினைவுகளின் செயல்பாடு. சில பறவைகள் குறிலையும் குறுக்கி தமிழ் மாத்திரைகள் அறியாமல் “க்க்” என்று முடித்து விடும். சிலவை நெடில் பயின்றவை, அடர்காட்டில் ஒலியலை அனுப்பித் தொடுவானம் தேடுவது போல் பல நொடிகள் நீடிப்பவை. எழும் திசை, கால அளவு, ஆழம் என எந்தவொரு பரிமாணத்திலும் முன்னறிவிப்பின்றி தோன்றி மறைவது கான் பறவையின் ஒலிக்குரிய இயல்பு மட்டுமல்ல, நினைப்பின் இயல்பும் கூட… விசித்திரமே இயல்பானதால், நினைவின் விசித்திரங்களும் மனதின் இயல்பே. எனின், நினைவிலேறிய காந்தளின் மெல்விரல் எப்பொழுது வேண்டுமானாலும் மனதை தீண்டுவதும் இயல்பன்றோ!

பள்ளிப் பருவத்துப் பயணங்களில், கொடைக்கானலில் இருந்து பேரிஜம் செல்லும் சாலையில்தான் முதன் முதலாக காந்தள் மலரை நான் பார்த்தது. அது ஒரு செங்காந்தள். தன் நண்பர் குழாமுடன் பெருமழைக்குப் பிந்தைய முத்துக்களை ஒவ்வொன்றாய் மண்ணில் மெல்லச் சிந்தியபடி பள்ளத்தாக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது செங்காந்தள் கூட்டம். மதிகெட்டான் சோலையைத் தாண்டியவுடன் வரும் திருப்பத்தின் இறக்கத்தில் இருந்த பாறைகள் முழுவதும் கொத்துக் கொத்தாய்…பி.பி.எஸ் “இதயத்தில் நீ”யில் பாடிய “பூ வரையும் பூங்கொடியே” பாடலில் வரும் “வடிவங்கள் மாறிவிடும் வண்ணங்கள் மாறாதே” என்னும் வரியின் பொருள் போல் அக்காட்சி என்னுள் இயற்கையின் கரங்களால் சட்டம் போட்டு மாட்டப்பட்டிருக்கிறது. அன்று நான் பார்த்தது காந்தள் என்றறிய சில ஆண்டுகள் ஆயின என்பது வேறு கதை.
நான் பார்த்ததைப் போலவே மிளைவேள் தித்தனும் காந்தளைப் பார்த்திருக்கிறார். என்னைப் போல் என்ன மலர் என்றறியாமல் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு சும்மாவும் இருக்கவில்லை. யார் இந்த மிளைவேள் தித்தன்? நம் மண்ணில் நாம் கவனியாது வந்து போன சங்க காலப் புலவர்களில் ஒருவர். “வேள்” என்பதற்கு வள்ளல் என்று பொருள் உண்டு என்பதால், இவர் வள்ளலாக இருந்திருக்க வாய்ப்புண்டு. படைப்பில், எண்ணிக்கை முக்கியமில்லை என்பதற்கு இவர் ஒரு உதாரணம். ஒட்டு மொத்தச் சங்க இலக்கியத்திலும் ஒரே ஒரு பாடல் மட்டுமே எழுதியிருந்தாலும், அந்தப் பாட்டு, ஆயிரம் ஆண்டுகள் கடந்தும், நம்மைப்
போன்று இயற்கையிடமிருந்து வெகுதொலைவில் வாழ்க்கைப்பட்டவர்களுக்கு காந்தளை அறிமுகப்படுத்துகிறது. எப்படி?
“பொருத யானைப் புகர்முகங் கடுப்ப
மன்றத்துறுகன் மீமிசைப் பலவுடன்
ஒண்செங்காந்த ளவிழு நாடன்…”
என்று போகிறது பாடல்.
அதாவது, அம்புகள் தாக்கியதால் உண்டாகும் புள்ளிகள் உடைய, போரில் பங்கேற்ற யானையின் முகத்தைப் போன்ற கல்லின் மீது பல காந்தள் மலர்கள் ஒருசேர மலரும் வனப்புடைய நாட்டின் தலைவன் என்கிறார். துடைத்தெறிய முடியாத இரண்டு காட்சிப் படிமங்களை நம்முள் இறக்கி வைக்கிறது இப்பாடல். ஓன்று, இது வர்ணிக்கும் பாறையும் அதன் மீது கொத்தாய் சாய்ந்து நோக்கும் காந்தள் கூட்டமுமாய் அன்றி வேறு யாதொரு காட்சி வடிவத்திலும் பெரும்பாலும் காந்தள் நம் கண்ணில் படுவது இல்லை. இரண்டு, போர் செய்த யானை மட்டுமல்ல. வயது முதிர்ந்த யானையின் முகத்திலும் புள்ளிகளுண்டு. இப்பாடலை படித்த பின் நாம் பார்க்கும் அத்தகைய யானையின் முகத்தில், ஒவ்வொரு புள்ளியின் மீதும் இல்லாத காந்தள் இருப்பது போன்றதொரு நினைப்பை தவிர்க்க இயலாது. இப்பாடலை முதன் முறையாக கண்டடைந்த போது, என் சிறு வயதில், மதுரை மீனாட்சி கோயிலில் இருந்த “பெரிய யானை”யின் பழுப்பேறிய புள்ளிகள் உடைய முகமும் அதன் மீது பல காந்தள் மலர்கள் அசைந்தாடியதும் நினைப்பின் விசித்திரங்களுக்கு மட்டுமல்ல சங்கம் நமக்குள் வரைந்து போகும் ஆழமான சித்திரங்களுக்கும் சான்று. முகபடாம் போல் காந்தள் பூத்திருக்கும் யானையின் முகத்தைச் சற்றே கற்பனை செய்து பாருங்கள்!
ஒரு மலரை, அதன் அழகுக்கோ, இயற்கை எழிலுக்கோ, காதலுக்கோ, வேறு யாதொரு மகிழ்வுறு உணர்வுக்கோ சற்றும் சம்பந்தப்படுத்தாமல், திகைக்க வைக்கும் உவமை கொண்ட பாடல் ஒன்று காந்தள் அரும்பு மலரும் நிலை குறித்து உண்டு. குன்றம் பூதனார் என்பவர், பரிபாடலில் மலைப்பகுதியின் காட்சி ஒன்றை விவரிக்கையில்,
“போர்தோற்றுக் கட்டுண்டார்கைபோல்
கார்தோற்றும் காந்தள் கவிந்த கவின்”
என்கிறார்! விலங்கால் பிணைக்கப்பட்ட கைகளின் குவிந்த நிலை போலிருக்குமாம் மலராகப் போவதற்கு முந்தைய காந்தள்…ஒத்த இயல்பினையோ உணர்வினையோ தருவனவற்றை உவமையாக்கிப் பார்த்திருக்கிறோம். மலர்தலின் மகிழ்வையும் தோல்வியின் துயரையும், எதிரெதிர் உளநிலையை உருவாக்கும் காட்சியை இணைக்கும் உவமை அரிது.
பெண்ணை வர்ணிக்காமல் இருந்தால் தன்னை படைப்பாளி என்று கருதமாட்டார்களோ என்ற கவலை எழுதுகோல் பிடிப்பவர்களுக்கு இருக்கும் போலும்…சங்க காலம் துவங்கி தற்போதைய சினிமா கவிஞர்கள் வரை பெண்ணையும் பூவையும் விட்டு வைத்ததில்லை. ஆனால் இக்காலத்தில் அழகைப் பாடுவதாக நினைத்துக் கொண்டு வரும் அர்த்தமற்ற குப்பைகள் போலின்றி இதில் கூட பொருட்பொலிவுடன் இருந்தன இலக்கியங்கள்.
“மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கயம் என்றெண்ணிப் படிவண்டைச் செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தளைக் காணென்றான் வேந்து”
என்பது ஒரு நளவெண்பா பாடல். வெண்பாவை வாசித்தல் என்பது முந்திரி நிறைந்திருக்கும் சர்க்கரைப் பொங்கலை பல்லிற்கும் நாவிற்கும் இடையில் நகர்த்துவதை ஒத்தது. நளன் தமயந்தியுடன் தோட்டத்தில் நடந்து கொண்டிருக்கையில், பெண்ணொருத்தி மலர் பறித்துக் கொண்டிருக்கிறாள். அவளின் முகத்தை தாமரை என்றெண்ணி வண்டொன்று மொய்க்கிறது. உடனே அவள் முகத்தைப் பாதுகாக்க கைகளால் மூடிக் கொள்கிறாள். இப்போது வண்டு அவளின் கைவிரல்களை காந்தள் என்றெண்ணி அதை நோக்கிப் பாய்ந்ததால் வியர்த்துப் போகிறாள் அவள். வெண்பாவின் எந்த இடத்தையும் இலக்கணத்திற்காக சொல்நிரப்பி வீணடிக்கவில்லை இதை எழுதியவர். சாதாரண முகம் இல்லையாம் வாள்முகமாம். புகழேந்திப் புலவரின் கைவண்ணம் இது.
இப்படிப்பட்ட இலக்கியமெல்லாம் சீண்டுவார் இன்றிப் போகிறதே என்று கண்ணதாசன் நினைத்திருக்கக் கூடும். “தமிழ் தமிழ்” என்று நாவில் மட்டும் கூவும் தமிழனின் தமிழ்ச் செறிமான அளவை அறியாதவரா அவர்? எனவே தான் இந்த வெண்பாவை நாம் புசிக்கும் வண்ணம் இலகுவாக்கி “நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்” என்ற “இருவல்லவர்கள்” பாடலில்
“…பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட…”
என்றெழுதினார். நளவெண்பா என்றொன்றுண்டு என்பதையும் அறியாத, கண்ணதாசனையும் தெரியாத தலைமுறைக்குள் நாம் நுழைந்து கொண்டு இருக்கிறோம் என்பதை ஆழ்ந்து யோசிக்கத் துவங்கினால் தூக்கம் தொலைக்கும் அபாயமுண்டு.
காந்தளை கன்னிக்கும் காதலுக்கும் கையுறைக்கும் மட்டும் உரியதாக பாடவில்லை நம் இலக்கியங்கள். அதை தெய்வத்திற்கு உரித்தானதாக சொல்லும் இடங்களும் மிக உண்டு. உதாரணமாக,
“சுரும்பும் மூசாச் சுடர்ப் பூங்காந்தள்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்”
என்கிறது திருமுருகாற்றுப்படை. அதாவது வண்டு மொய்க்காத, தீ போன்ற, காந்தள் மலர்களை மாலையை சூடுபவன் என்று பொருள். வாசிப்பவர் தன் பார்வைக்கேற்ற பொருளை எடுத்துக் கொள்ளும் வண்ணம் இப்பாடல் உள்ளது. சுடரென்று நினைத்து வண்டு நெருங்காத காந்தள் என்று கொள்ளலாம். அல்லது முருகனே சூடுவதால் நெருப்பின் தூய்மை கொண்டு வண்டு தொட நினைக்காத காந்தள் என்றும் கொள்ளலாம்.
உவமைகள் பலவிதம். ஆனால் ஒரு மலரில் நிகழும் மாற்றத்தை மானுட உயர் பண்புக்கு ஒப்பெனச் சொல்லும் பாடலை நாம் பார்த்திருக்கிறோமா? சங்கத்தில் அதுவும் உண்டு. காந்தள் சார்ந்த மிகமிக நுட்பமான இந்தப் பாடல் குறுந்தொகையில் வருகிறது. புலவர்கள் வெறும் கற்பனை உலகில் சஞ்சரித்து மிகையுணர்வை மட்டுமே புனைபவர்கள் என்னும் பொது நினைப்பை தகர்த்தெறியும் பாடலிது.
“காந்தளங் கொழுமுகை காவல் செல்லாது
வண்டுவாய் திறக்கும் பொழுதிற் பண்டும்
தாமறி செம்மைச் சான்றோர்க் கண்ட
கடனறி மாக்கள் போல…”
அதாவது, நன்கு வளர்ந்த காந்தள் மொட்டு வண்டு அருகில் வந்தவுடன் தானாகவே இதழ் அவிழுமாம். எதைப் போல? சான்றோரைக் கண்டவுடன் சற்று நகர்ந்து இடம் தரும் அவர்களை அறிந்த மனிதர்களைப் போல… இதை எழுதியவர் கருவூர்க்கதப் பிள்ளை என்பவர். இவர் “வரைந்த” புறநானூற்று ஓவியம் ஒன்றை பாருங்கள்…பிட்டங்கொற்றன் என்ற மன்னனுடைய மக்களின் விருந்தோம்பல் பற்றிய பாடலிது. ஒவ்வொரு காட்சி அடுக்காக சொல்லடுக்கின் வழியே கட்டுமானம் செய்து ஒரு மிகப்பெரிய நிலக்காட்சியையும் வாழ்வியலையும் ஒருசேர உச்சப்புள்ளியில் இணைக்கும் அற்புதம் இப்பாடலில் இருக்கிறது.
“அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்
கறிவளர் அடுக்கத்து மலரந்த காந்தள்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக், கிளையொடு,
கடுங்கண் கேழல் உழுத பூழி,
நன்னாள் வருபதம் நோக்கிக், குறவர்
உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்,
மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்,
மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கேழ் இரும்புடை கழாஅது, ஏற்றிச்,
சாந்த விறகின் உவித்த புன்கம்,
கூதளங் கவினிய குளவி முன்றில்,
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ…”
மிளகுக் கொடிகள் சுற்றிப்படர்ந்திருக்கும் மூங்கில் காடு. அருவி புகுந்தோடும் அத்தகைய காட்டின் நிலமெங்கும் காந்தள் மலர்ந்திருக்கும். காந்தளின் கிழங்கை உண்ண காட்டுப் பன்றிகள் நிலத்தை தோண்டியதால், உழுவதற்கு தேவையின்றி அப்படியே அந்நிலத்தில் தினை விதைப்பார்களாம். அதை பசுக்கள் மேயுமாம். தினை மேய்ந்த பசுக்களின் பால் கறந்து அதை மான்கறியில் கலந்து, சாதாரண விறகல்ல, சந்தன விறகில் தீ மூட்டி சமைப்பார்களாம். அப்படி தயாரான உணவை, கூதளம் பூக்கள் தரையெங்கும் பரவிக் கிடக்கும் வீட்டு முற்றத்தில் வாழை இலையிலிட்டு வருபவர்களுக்கெல்லாம் விருந்தோம்புவார்களாம்!
இப்படி பாடப்பட்ட பிட்டங்கொற்றனின் குதிரை மலை எங்கிருக்கும் என தற்போதைய கூகுள் வரைபடத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன்.
குறிஞ்சிக்கோர் கபிலர் என்றறிந்தபின் கபிலரைத் தொடாமல் கட்டுரை முடியுமோ? கபிலர் பாடாமல் காந்தளும் நாறுமோ? இவர் ஒரு குறிஞ்சி ஸ்பெஷலிஸ்ட். நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கும் இவர், அவற்றில் பத்துக்கும் குறைவானவற்றைத் தவிர மற்ற அனைத்தையுமே குறிஞ்சி சார்ந்தே இயற்றியிருக்கிறார். இதன் உச்சம் பத்துப்பாட்டில் உள்ள குறிஞ்சிப்பாட்டு. 250க்கும் மேற்பட்ட அடிகளைக் கொண்ட இப்பாட்டில் இருந்து ஒரே ஒரு சிறுபகுதி:
“பழு மிளகு உக்க பாறை நெடுஞ்சுனை
முழு முதற் கொக்கின் தீங்கனி உதிர்ந்தென,
புள் எறி பிரசமொடு ஈண்டி பலவின்
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல்
நீர் செத்து அயின்ற தோகை, வியல் ஊர்ச்
சாறு கொள் ஆங்கண் விழவுக் களம் நந்தி
அரிக்கூட்டு இன்னியம் கறங்க ஆடுமகள்
கயிறு ஊர் பாணியின் தளரும், சாரல்
வரையர மகளிரின் சாஅய் விழைதக
விண் பொரும் சென்னிக் கிளைஇய காந்தள்
தண் கமழ் அலரி தாஅய் நன் பல
வம்பு விரி களத்தின், கவின் பெறப் பொலிந்த
குன்று கெழு நாடன்”
தலைவன் இருக்கும் நாடு எப்படிப்பட்டது என்று தலைவிக்குத் தெரிய வேண்டாமா? அதை வர்ணிக்கிறார் கபிலர்.
விழாக் களத்தில் ஒலிக்கும் இசைக்கேற்றவாறு கயிற்றின் மீதேறி நடனமாடி களைப்புற்ற பின் தோன்றும் மங்கையின் மெதுவான அசைவுகள் போல் மயிலொன்று ஆடிக்கொண்டிருக்கிறதாம். என்னாயிற்று மயிலுக்கு? பழுத்த மிளகுகள் விழுந்த பாறையில் கிடக்கும் மாங்கனிகள் உடைந்து, வண்டுகள் போகும் வழியில் இறைத்த தேனுடன் கலந்து, மலையின் மேலிருந்து கீழ் விழுந்து நசிந்த பலாவின் சுளைகளும் இணைந்து பாறையின் சுனை நீருடன் சேர்ந்ததில், கள்ளாய் மாறிய நீரைக் குடித்த மயில் அப்படித்தான் ஆடுமாம்! எந்த இடத்தில் ஆடுகிறதாம்? இத்தனை வளம் மிக்க மலையின் உச்சியில் உள்ள பெண் தெய்வங்கள் ஆடுவதால் மலையெங்கும் பூத்திருக்கும் காந்தள் மலர்கள் அதன் கிளைகளிலிருந்து கீழ்விழுந்து, காந்தளால் ஆன ஆடைவிரிப்பு போன்ற தளத்தை மேடையாக்கி ஆடுகிறதாம் மயில். இப்படிப்பட்ட வனப்புமிகு இடத்தைச் சேர்ந்தவனாம் தலைவன். குறிஞ்சிக்கோர் கபிலர் என்றால் சும்மாவா?
பச்சைக்கு மாறிய சிக்னலின் பரபரப்பில் நகர்ந்த வாகனத்திலிருந்து வழுக்கி விழுந்தது இதழ். மனதில் ஒட்டிக் கொண்டிருக்கும் பழங்காந்தள் மெல்லெழுந்து “பார்க்க வேண்டும் போலிருக்கிறதோ?” என்றது. காந்தள் இடைவெளியின்றி படர்ந்து அதுவே வேலியாகி, அதனுள் வீடுகள் அமையப் பெற்ற சங்கம் சொல்லும் “காந்தளஞ் சிறுகுடி” பார்த்திடவும் முடிந்தால் எழில்மிகு மலைச்சாரலின் மடியிலுள்ள அத்தகையதொரு சிற்றூரில் வசித்திடவும் விருப்பம் தான்.
என் செய்வது? மென்”பொறி”யில் சிக்கி, கான்கிரீட் காடுகளில் கட்டுண்டு, பச்சையை கண் பார்க்கவே சுற்றுலா போகவேண்டிய நிலையில் கிடக்கும் என் போன்றவர்களுக்கு, காகித எழுத்திலோ கைபேசித் திரையிலோ காந்தள் பற்றி படித்து மகிழ்வது மட்டுமே இப்பிறவிக்கான ஊழ்.
***
Excellent. We need more articles like this to enable our generation as well as the future generations to appreciate the width and depth of our wonderful Tamizh literature. Look forward to more!
அருமை. மேலும் இது போன்ற கட்டுரைகள் தாருங்கள். நன்றி.
கண்ணதாசன் பழம் இலக்கிய வரிகளை திரைப்படப் பாடல்களில் பயன்படுத்தியுள்ளது குறித்த கட்டுரைகள் வந்துள்ளன.
நீங்கள் எடுத்துக்காட்டியிருக்கும்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்” என்ற “இருவல்லவர்கள்” பாடலில்
“…பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட…”
என்ற எனக்கு மிகவும் பிடித்த இந்த திரைப்படப் பாடல் நளவெண்பாவிலிருந்து எடுக்கப் பட்டது என்ற தகவலுக்கு நன்றி.
நளவெண்பா என்றொன்றுண்டு என்பதையும் அறியாத, கண்ணதாசனையும் தெரியாத தலைமுறைக்குள் நாம் நுழைந்து கொண்டு இருக்கிறோம் என்பதை ஆழ்ந்து யோசிக்கத் துவங்கினால் தூக்கம் தொலைக்கும் அபாயமுண்டு என்று கூறுகிறீர்கள்.
சங்க இலக்கியப் பாடல்களையும் அதன் மூலம் நமது பாரம்பரியத்தையும் அறிந்துகொள்ள இத்தகைய கட்டுரைகளை எழுதிக்கொண்டிருங்கள் குமரன். முடிந்தவரை அது பரவட்டும்.
கவிதை என்றால் பெண்களையும் காதலையும் எழுதுவது என்ற புரிதலுக்கு மாறாக செங்காந்தள் பூவை யானையின் நெற்றிச் சுருக்கத்திற்கும் கூம்பியிருந்த மலர் வண்டு வந்தவுடன் மலருவதை அறிஞர்கள் வந்தவுடன் அவர்களுக்கு இருக்கை தர எழுந்திருக்கும் மக்களுக்கு ஒப்பிடுவதையும் எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள். சங்க இலக்கியம் மக்கள் வாழ்க்கையோடு ஒட்டியிருந்தது என்பதை இது போன்ற கட்டுரைகள் காட்டுகின்றன.
கபிலரின் குறிஞ்சிப் பாட்டின் ஒரு பகுதியை கட்டுரையின் நிறைவுப் பகுதியில் தந்திருக்கிறீர்கள்.அற்புதமான சித்தரிப்பு.
இந்தக் கட்டுரையை படித்தவுடன் செங்காந்தள் பூ குறித்து நான் எழுதிய பழைய பதிவொன்றை தேடி எடுத்தேன்.
செங்காந்தள் மலர்
இது ஏதோ சங்கப் பாடல்களில் வரும் ஒரு பூ என்று எண்ணியிருந்தேன்.தமிழ் நாட்டின் மாநில மலர் என்றும் படித்திருந்தேன்.ஆனால் இது திண்டுக்கல் சுற்று வட்டாரத்தில் விளைவிக்கப்படும் ஒரு பயிர் என்று இன்றய (03/12/2017) தீக்கதிர் பத்திரிக்கையில் படித்தேன்.பல மருத்துவக்குணங்கள் உள்ள இதற்கு கண்வலிப் பூ என்றும் கலப்பைப் பயிர் என்றும் பெயர்கள் உண்டாம்.இந்தப் பூவை நீண்ட நேரம் பார்த்தால் கண் வலிக்குமாம்.இந்த வருடம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கிறதாம்.
நீங்கள் மென்பொறியாளர் என்று தோன்றுகிறது.
மென்பொறியாளர்கள் இலக்கியம் குறித்து எழுதுவது சிறப்பு. இலக்கியவாதிகள் மென்பொறி குறித்து எழுதுவார்களா?
மிக மிகச் சிறப்பான பதிவு அய்யா!
வாசிக்க வாசிக்க இன்பம் ஊற்றெடுகிறதே..
– செ.கு.வேள்.