சிலப்பதிகாரத்தின் காலம்

தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுள் முதலாவதும் முதன்மையானதும் சிலப்பதிகாரமே. சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவகசிந்தாமணி ஆகியவற்றுள் வளையாபதியும் குண்டலகேசியும் நமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்துள்ள மூன்று காப்பியங்களுள் காலத்தாலும், தகுதிப்பாட்டாலும் முன்னிற்பது சிலப்பதிகாரம்தான். சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலம் கி.பி. 2 அல்லது 3ஆம் நூற்றாண்டு என்பது தமிழ்ப் புலவர்கள் பலரின் கருத்தாக உள்ளது.

ஆனால், ‘காவியகாலம்’ என்ற தமது நூலில் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்கள் காவியங்கள் தோன்றுவதற்கான சமூகச் சூழல் அடிப்படையிலான ஆய்வினையும், மொழியியல் அடிப்படையிலான ஆய்வினையும் மேற்கொண்டு சிலப்பதிகாரத்தின் காலம் கி.பி. 7 அல்லது 8ஆம் நூற்றாண்டு என்று வரையறுத்தார். சிலப்பதிகாரம் பற்றிய ஆய்வுக்கு வையாபுரிப் பிள்ளை அடித்தளமிட்டார் என்றாலும், வேறு சில புதிய கருத்துகள், பொருள்கோடல் ஆகியவற்றின் அடிப்படையில் சிலப்பதிகாரத்தின் காலத்தைக் கி.பி. 5ஆம் நூற்றாண்டு என்று கமில் சுவலபில், கார்த்திகேசு சிவத்தம்பி போன்ற அறிஞர்கள் வரையறுத்துள்ளனர்.

சிலப்பதிகாரக் கதைக்கு அடிப்படையாக அமைந்தவை நற்றிணையிலும், புறநானூற்றிலும், யாப்பருங்கல விருத்தியுரையிலும் இடம்பெற்றுள்ள செய்திகளே என வையாபுரிப் பிள்ளை விவரித்துள்ளார். எடுத்துக்காட்டாகச் சிலப்பதிகாரம், வஞ்சிக்காண்டம், குன்றக்குரவை, உரைப்பாட்டுமடை 4 முதல் 7 வரையிலான, “குறிஞ்சி நில மரமாகிய வேங்கை மரத்தின் நிழலில் ஒரு முலையை இழந்த நிலையில் கொடிபோல நடுங்கும் வண்ணம் நிற்கின்றீர்களே, நீங்கள் யார் என்று குன்றக் குறவர்கள் கண்ணகியிடம் வினவவும், கண்ணகி சீற்றமின்றி…” என்று பொருள்படும் வரிகள் பின்வருமாறு அமைந்துள்ளன:

மலைவேங்கை நறுநிழலின்
வள்ளிபோல்வீர் மனநடுங்க
முலையிழந்து வந்துநின்றீர்
யாவிரோவென முனியாதே

சங்க இலக்கியமான நற்றிணை 216ஆம் பாடல் பின்வருமாறு அமைந்துள்ளது:

எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும்
ஒருமுலை அறுத்த திருமாவுண்ணிக்

தீப்போன்ற மலர்கள் நிறைந்த வேங்கை மரத்தில் உறைகின்ற தெய்வத்தால் காக்கப்படுகின்ற திருமா உண்ணி என்ற பெயருடைய பெண்மணி ஒரு முலையை அறுத்துக்கொண்ட நிலையில் நின்றாள் என்ற தொன்மக்கதை இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.

மேற்குறித்த சிலப்பதிகார வருணனைக்கு நற்றிணை வரிகளே அடிப்படை என்பது வையாபுரிப் பிள்ளை கருத்தாகும்.

அடுத்ததாகப் பொதினி (பழனி) மலைத் தலைவன் வையாவிக் கோப்பெரும் பேகன் தன் மனைவி கண்ணகி யென்பாளைப் பிரிந்து பரத்தையர் ஒழுக்கத்தில் ஈடுபட்டிருந்த செய்தி புறநானூறு 143 முதல் 147 வரையிலான பாடல்களில் கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்க் கிழார் போன்ற புலவர்களால் பாடப்படுகிறது. கணவனின் பரத்தை ஒழுக்கம் காரணமாகக் கலங்கிய கண்ணகி என்ற படிமம் இவ்வைந்து புறப்பாடல்களிலும் இடம்பெற்றிருப்பதை வையாபுரிப் பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.

யாப்பருங்கல இலக்கண நூலின் செய்யுளியல், புறநடை, “மிக்கும் குறைந்தும்” எனத் தொடங்கும் நூற்பாவிற்கான விருத்தியுரையில் பத்தினிச் செய்யுள் என்ற குறிப்புடன் மேற்கோள் காட்டப்படும் வெண்பா:

கண்டகம் பற்றிக் கடக மணிதுளங்க
ஒண்செங்குருதியுளோஒ கிடந்ததே பண்டே
கெழுதகைமை இல்லேன் கிடந்தூடப் பன்னாள்
அழுத கண்ணீர் துடைத்த கை

இது, கையில் கண்டகம் என்ற அணிகலனைப் பற்றியவாறு கொலையுண்டு கிடக்கும் கணவனைப் பார்த்து அவன் மனைவி அழுது அரற்றும் ஆரிடப் போலிச் செய்யுள் (ரிஷி ஒருவரால் இயற்றப்பட்டது போன்று தோற்றமளிக்கிற செய்யுள்) ஆகும். இது மூன்றாவது ஆதாரம் எனக் கூறும் வையாபுரிப் பிள்ளை, இத்தகைய நிகழ்வுப் பதிவுகளை இணைத்து விரிவுபடுத்திக் கதை வடிவமாக எழுதப்பட்ட இலக்கியமே சிலப்பதிகாரம் என்கிறார்.

சிலப்பதிகாரம் ஒரு முழுமையான கட்டுக்கதை என்று சொல்லிவிட இயலாது. சிலப்பதிகாரக் கதைக்கு அடிப்படையான சில நிகழ்வுகள் உண்மையில் நிகழ்ந்தேறி இருக்கவேண்டும். பூம்புகாரைச் சேர்ந்த கண்ணகி என்ற வணிகர் குலப்பெண் ஒட்டுமொத்தத் தமிழ்ப் பெண் இனத்தின் அடையாளமாக உருவாகி இருக்கிறாள். கற்பின் அடையாளமாகவும், பத்தினித் தன்மையின் அடையாளமாகவும் அவளை முன்னிறுத்துகிற காவியமே சிலப்பதிகாரம் ஆகும்.

ஒரு வணிகர் குலப்பெண், வீரக் குடியினைச் சேர்ந்த பாண்டிய மன்னனின் ஆட்சியையே வீழ்த்துகிறாள். மற்றொரு பேரரசனால் கோயில் எடுத்து வழிபடத்தக்க பத்தினித் தெய்வமாக உயர்கிறாள். இது ஒரு முதன்மையான சமூக இயக்கப் போக்கு. சங்க இலக்கியங்களில் ஒட்டுமொத்தமாகத் தேடினாலும் இத்தகைய ஒரு நிலையைப் பார்க்க இயலவில்லை.

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் மனைவி பெருங் கோப்பெண்டு உடன்கட்டை ஏறியதைப் புறநானூறு 246ஆம் பாடலின் அடிக்குறிப்பில் (பாடல்கள் நூல் வடிவில் தொகுக்கப்பட்டபோது எழுதப்பட்ட குறிப்பில்) பார்க்கிறோம். ஒரு பெண், குறிப்பாக உயர்குடிப் பெண் தெய்வமாக வழிபடப்பட வேண்டுமென்றால் அவள் இறந்த கணவனுடன் உடன்கட்டை ஏறியிருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆதர்சமான தலைவியராகத்தான் சங்க இலக்கியத்தில் வரும் பெண்டிரைப் பார்க்கிறோம். ஆனால், கண்ணகி உடன்கட்டை ஏறிய பெண் அல்லள். தன் கணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்துப் பாண்டிய அரசனுடன் வழக்காடி வென்றவள். இத்தகைய ஒரு நிகழ்வு, பாண்டிய அரசனால் நிறுவப்பட்ட தமிழ்ச் சங்கம் போன்ற ஒரு நிறுவனத்திலோ அரசவையிலோ அரங்கேறிய சங்க இலக்கியத் தொகுதியுள் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை.

அரசர்களால் வழிபடப்படும் நிலைக்குக் கண்ணகி உயர்த்தப்பட்டாள் எனில் அதன் பின்னணிச் சமூகச் சூழல் எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்? சிலப்பதிகாரத்தைக் குடிமக்கள் காப்பியமென்று தெ. பொ. மீனாட்சிசுந்தரம் போன்ற அறிஞர்கள் குறிப்பிட்டதுண்டு. அரச குலத்தவர் அல்லாதவர்களைத் தலைமக்களாகக் கொண்ட காப்பியமாதலால் அதனைக் குடிமக்கள் காப்பியம் என்று வரையறுப்பர்.

ஆனால், ஒன்றை நாம் இங்கு கவனிக்க வேண்டும். காப்பியத் தலைவியாகிய கண்ணகி, “பெருங்குடி வாணிகன் பெருமடமகள்” என்றுதான் சிலம்பில் குறிப்பிடப்படுகிறாள். கோவலனின் தந்தையாகிய மாசாத்துவான், அரசர்களையே ஆட்டிப்படைக்கும் அளவுக்குச் செல்வமும் செல்வாக்கும் கொண்ட வணிகர் குலத்தவன். சோழ நாட்டின் துணைத் தலைநகர் என்று குறிப்பிடத்தக்க பூம்புகார் என்ற துறைமுக நகரின் பொருளாதார வலிமையே இத்தகைய வணிகர்களைத்தான் சார்ந்து இருந்தது.

கோவலன் கண்ணகி திருமணம், உயர்நிலைக் குடிகளுக்கு உரிய ‘பிரசாபத்தியம்’ என்ற முறையில் நடந்ததாக உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார்i. பிரசாபதி என்றால் குடித் தலைவன் என்று பொருள். பெருங்குடி மக்களுக்கு இடையே நிகழும் திருமண நடைமுறையே பிரசாபத்தியம் ஆகும். அப்படி என்றால், வணிகர்கள் நிலை உயர்ந்து, செல்வாக்குப் பெற்று, ஒட்டு மொத்தத் தமிழகத்தின் இயக்கத்தை நிர்ணயிக்கின்ற அளவுக்கு வலிமை பெற்று எழுச்சி அடைந்த காலகட்டம் எது? இதுதான் நமது முதன்மையான கேள்வி.

சங்க காலத்தில், அதாவது மூவேந்தர்கள், அதியமான் போன்ற மன்னர்கள், வேளிர்கள் ஆகியோரின் ஆட்சி தமிழகம் முழுவதும் வியாபித்திருந்த காலக்கட்டத்தில், தமிழகத்தின் அதிகாரத்தையே ஆட்டிப் படைக்கும் அளவிற்குச் செல்வமும், செல்வாக்கும் பெற்றவர்களாக வணிகர்கள் எழுச்சி பெற்றிருக்கவில்லை என்பதை நாம் பொதுவாகவே அவதானிக்கலாம். சங்க காலத்தில் நிச்சயமாகப் பன்னாட்டு வணிகம் போன்ற பெருந்தர வாணிகம் நடைபெற்றிருக்கிறது. எடுத்துக்காட்டாகப் பல அரசர்களின் வணிகத் தொடர்புகள் கடல் கடந்து பல நாடுகளுடன் இருந்திருக்கிறன. இது பற்றிப் பல்வேறு அறிஞர்களும் விவாதித்திருக்கிறார்கள்.

பிளைனி எழுதிய நூல், ‘பெரிப்புளூஸ்’ என்ற நூல், மற்றும் கிரேக்க நிலநூல் வல்லுநரான தாலமி எழுதிய குறிப்புகள் யாவும் தமிழ்நாட்டில் இருந்த பல மன்னர்கள் வெளிநாட்டினரோடு கொண்டிருந்த வணிகத் தொடர்புகளைக், குறிப்பாக முத்து வணிகம் பற்றிய பல செய்திகளைச் சொல்கின்றன. ஆனால், வணிகர்கள் எழுச்சி என்பது வெறும் தொழிலால் மட்டும் அமைவதன்று. அதற்கு வேறு பல காரணங்கள், பின்னணிகள் இருக்கின்றன. அதாவது அரசர்களையே ஆட்டிப் படைக்கும் அளவிற்கு வணிகர்களிடையே எழுச்சி ஏற்பட்ட காலம் எது?

உயர்குடி வணிகப் பெண்மணி, தமிழ்நாட்டின் பத்தினித் தெய்வமாக, அரசர்களே கோயில் எடுத்து வழிபடும் அளவிற்கு மேன்மையடைவது, சங்க கால நிகழ்வன்று என்று நாம் உறுதிபடக் கூறலாம். ஆனால் இதற்குப் பின்புலமான சில நிகழ்வுகள், அதாவது ஒரு வணிகர் குலப் பெண் வாழ்வில் நிகழ்ந்த அவலங்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் நடந்திருக்கலாம். அதனால்தான் கோவலன் – கண்ணகி கதையின் சில கூறுகள் சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன. ஆனால், இந்த நிகழ்வு ஒட்டு மொத்தத் தமிழகத்தையே பாதிக்கக்கூடிய வகையில் ஒரு பெருங்காப்பியமாக உருவெடுக்கும் அளவுக்கு முதன்மை பெறுகிறதென்றால் அது சங்க காலத்திற்குப் பிறகு களப்பிரர்கள் எழுச்சி பெற்று ஆண்டு கொண்டிருந்த காலக்கட்டத்தில், கி.பி. 5ஆம் நூற்றாண்டளவில்தான் நிகழ்ந்திருக்க வேண்டும்.

காப்பியங்களுக்கே உரிய கற்பனை கலந்ததுதான் சிலப்பதிகாரம் என்ற போதிலும், இக்காப்பியத்திற்கு அடிப்படையான சில நிகழ்வுகள் சங்க காலத்தில் நிகழ்ந்தேறியிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஒரு தலைமகளது கணவனின் பரத்தைமை ஒழுக்கம், அவன் அநியாயமாகக் கொல்லப்படுதல், அதன் காரணமாக அவள் வீறு கொண்டெழுந்து நீதி கேட்டமை, ஆகிய அனைத்துமே கற்பனை என்று ஒதுக்கி விட முடியாது. ஆனால், சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் வர்ணனைகளைக் கவனித்தால் அவை சிலப்பதிகாரம் எழுதப்பட்டதாகப் பெரும்பாலான புலவர்கள் கூறும் கி.பி. 2 – 3ஆம் நூற்றாண்டுக்குப் பொருந்தாதவையாக உள்ளன. பூம்புகாரில் நடந்த பிரம்மாண்டமான நிகழ்வாக இந்திர விழா சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படுகிறது. ஆனால் அதே கி.பி. 2 – 3ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பட்டினப்பாலையில் இந்திர விழா நடந்ததற்கான ஒரு குறிப்பு கூட இல்லை! இது ஏன்?

பட்டினப்பாலை என்ற இலக்கியமே பூம்புகாரை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதுதான். அதில் காவிரியின் சிறப்பும், சோழ நாட்டு ஆட்சிச் சிறப்பும், வணிகச் சிறப்பும், மக்களின் வாழ்க்கை முறையும், விளையாட்டுகளும் மிகச் சிறப்பாக வர்ணிக்கப்படுகின்றன. ஆனால், ஒர் இடத்தில்கூட இந்திர விழாவைப் பற்றிய குறிப்பு இல்லை. வேண்டுமென்றே சொல்லாமல் விடப்படவும் காரணமில்லை. இந்திர விழா என்பது பூம்புகாரின் மிகப் பழமையான ஒரு நடைமுறை. அப்படியென்றால் கி.பி. 2ஆம், 3ஆம் நூற்றாண்டிலேயே இந்திர விழா நிகழ்வுகள் முற்றிலும் மறைந்து போயிருக்க வேண்டும். எனவே, சிலப்பதிகாரம் அதைச் சமகாலத்து நிகழ்வாக வர்ணிப்பதை வைத்து அதன் காலம் கி.பி. 2 – 3ஆம் நூற்றாண்டு என்று நிர்ணயம் செய்வது தவறாகவே முடியும். சங்க காலத்திலேயே வழக்கொழிந்து போய்விட்ட ஒரு நிகழ்வினைச் சிலப்பதிகாரம் பதிவு செய்கிறது என்று பொருள் கொள்வதே சரியாகும்.ii

சிலப்பதிகாரம் என்பது சிலம்பின் அதிகாரம். அதிகாரம் என்று சொல்லும் போதே அதில் ஓர் அரசியல் பின்னணி இருந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் என்றால் இலக்கியத்தின் பாடு பொருளை நிர்ணயிக்கிற இலக்கண வரையறை என பொருள்படும். திருக்குறளில் இடம் பெறுகிற கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு முதலானவற்றை அதிகாரங்கள் என்று குறிப்பிடுவது நீதி நெறிகளை நிர்ணயிக்கிற வரையறை என்ற பொருளில்தான். எனவே, அதிகாரம் என்பது தெளிவாகவே சட்டம் அல்லது வரையறை சார்ந்தது. இன்றும் அரசு அலுவலர்களை அதிகாரி என்று வழங்குவது இந்த அடிப்படையிலேயே ஆகும். எனவே, சிலப்பதிகாரம் என்பது கண்ணகியின் சிலம்பை வைத்து ஒரு வாழ்வியல் அதிகாரம் அல்லது வரையறை எப்படி நிகழ்ந்தேறுகிறது என்பதைப் புலப்படுத்தும் கதையாகும். அப்படிப் பார்க்கும்போது இக்காப்பியம் கண்ணகியின் சிலம்பை மையமாக வைத்து ஓர் அரசியல் போராட்டம் அல்லது நிகழ்வு நடந்தேறியதைக் காட்டுகிறது.

கண்ணகி சோழ நாட்டில் பிறந்த, சமணம் சார்ந்த ஒரு வணிகக் குலப் பெண். இவள் முதன்மை பெற்று, ஒரு தெய்வமாக மாறுகிற நிகழ்வு, சங்க காலத்தில் நிகழவில்லை. நாம் முன்னரே குறிப்பிட்டதைப் போலச் சிலப்பதிகாரக் கதையின் மூல நிகழ்வுகள் சில, கி.மு. 2ஆம் நூற்றாண்டிலேயே நிகழ்ந்திருக்கலாம். சிலப்பதிகாரம் மதுரைக் காண்டத்தின் இறுதியில் இடம்பெறுகிற,

வடவாரியர் படை கடந்து
தென்தமிழ்நாடு ஒருங்கு காணப்
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
நெடுஞ்செழியனோ டொரு பரிசா
நோக்கிக் கிடந்த……………………………

என்ற வரிகளின் மூலம், ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனே நீதி தவறியதால் மதுரை அழிவதற்குக் காரணமானவன் என்ற செய்தி உணர்த்தப்படுகிறது. இம்மன்னனின் காலமான, அதாவது கி.மு. 2ஆம் நூற்றாண்டில்தான்iii பாண்டிய நாட்டில் உள்நாட்டுக் குழப்பங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

அதே நேரத்தில், சிலப்பதிகாரம் என்ற காவியத்தை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அதில் இடம்பெறும் வருணனைகள், சமூகச் சூழல், எவ்வெக் குலங்கள் எத்தகைய ஆதிக்க நிலையில் இருந்தன என்பவற்றையெல்லாம் ஆராய்ந்தால் வணிகர்களின் ஆதிக்கம் முதன்மையாகப் பேரரசர்களுக்குச் சவால் விடுகிற ஆதிக்கமாக வளர்ச்சியடைந்து வேரூன்றிவிட்ட நிலையைத்தான் காண்கிறோம்.

இந்த ஆதிக்க நிலை எப்படித் தோன்றிற்று என்பது குறித்தும், இதற்கான தடயங்கள் என்ன என்பது குறித்தும் முதலில் நாம் ஆய்வுத் தேடல் மேற்கொள்வோம். சிலப்பதிகாரத்தின் கதைப் போக்கையே மாற்றி அமைக்கின்ற ஓர் எதிர்நிலைத் தலைவன்தான் அரண்மனைப் பொற்கொல்லன். அவனைப் பற்றிச் சிலம்பு பேசுகிறபோது “தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற பொன்வினைக் கொல்லன்” என்கிறது. அதாவது பாண்டியனின் பட்டப் பெயரைத் தன் பெயரோடு இணைத்துக்கொள்ளும் நிலையில் இருந்தவன் அந்தப் பொற்கொல்லன். அவனைக் கோவலன் சந்திக்கும் காட்சியை வர்ணிக்குமிடத்தில் சிலப்பதிகாரம் (மதுரைக் காண்டம், கொலைக்களக் காதை, வரிகள் 106 – 110) பின்வருமாறு குறிப்பிடுகிறது :

நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர
மெய்ப்பை புக்கு விலங்கு நடைச் செலவின்
கைக்கோல் கொல்லனைக் கண்டனனாகி
தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற
பொன்வினைக் கொல்லன் இவனெனப்
பொருந்தி…

‘தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற’ என்ற தொடரைக் கி.பி. 9ஆம் நூற்றாண்டுப் பாண்டியர் செப்பேடுகளில் வருகிற “பாண்டி மாராயப் பெருங்கொல்லன்” என்ற தொடரோடு பொருத்திப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். அச்செப்பேடுகளில் பிரசஸ்தி எனப்பட்ட அரசனுக்குரிய புகழ் மொழிகளை சமஸ்கிருதமும் தமிழும் கலந்த பாக்களால் புனைந்தவன் (ஆரியத்தோடு செந்தமிழ் விராய்ப் பாத்தொடை தொடுத்தோன்) பாண்டி மாராயப் பெருங்கொல்லன் என்ற செய்தி காணப்படுகிறது.iv

இங்கு ஒரு கேள்வி எழக்கூடும். கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பட்டயங்களில் காணப்படுகிற ஒரு நடைமுறை குறைந்தபட்சம் சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட சிலப்பதிகாரத்தில் எப்படி இடம்பெற்றிருக்க இயலும் என்பதே அக்கேள்வி.

தொல்காப்பியம் புறத்திணையியலில் வஞ்சித் திணையின் துறைகளைப் பற்றிச் சொல்லும்போது,

இயங்குபடை அரவம், எரிபரந்தெடுத்தல்,
வயங்கல் எய்திய பெருமையானும்,
கொடுத்தல் எய்திய கொடைமை யானும்,
அடுத்தூர்ந்து அட்ட கொற்றத் தானும்,
மாராயம் பெற்ற நெடுமொழி யானும்…

எனும் வரிகள் இடம்பெறுகின்றன. மகாராஜன் என்ற சமஸ்கிருதச் சொல்லின் தமிழ் வடிவமே மாராயன் என்பதாகும். இப்பட்டத்தை ஒருவனுக்கு வழங்கும் நிகழ்ச்சியையே ‘மாராயம் பெற்ற நெடுமொழி’ என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

எனவே, சங்க காலத்திலேயே இந்த மரபு இருந்துள்ளது எனத் தெரிகிறது. ஏனாதி, எட்டி, காவிதி என்ற பட்டங்களைத் தக்கவர்களுக்கு அரசர்கள் வழங்கி இருக்கிறார்கள். இவை சேனாபதி, சிரேஷ்டி (அல்லது செட்டி), கிருகபதி (அல்லது கஹபதி – காபிதி) என்ற வட சொற்களின் தமிழ் வடிவங்கள் ஆகும். பிற்காலச் சோழர் கல்வெட்டுகளில் ‘வாச்சிய மாராயன்’, ‘நிருத்தப் பேரரையன்’ போன்ற பட்டப் பெயர்கள் இடம் பெறுகின்றன. அதாவது, வாத்தியங்கள் இசைப்பதில் சிறந்தவனுக்கு வாச்சிய மாராயன் என்ற பட்டமும் நடனத்தில் சிறந்தவனுக்கு நிருத்தப் பேரரையன் என்ற பட்டமும் வழங்கப்பட்டிருக்கின்றன.v இன்றும் கேரள மாநிலத்தில் இசை வேளாளர் சமூகத்தவர் மேற்குறித்த பட்டப் பெயர்களின் ஒரு பகுதியான மாராயர் என்ற சொல்லின் திரிபான மாரார் என்ற பெயராலேயே அழைக்கப்படுகின்றனர். எனவே, மாராயம் என்ற பட்டம் வழங்குகிற மரபு சங்க கால நடைமுறையே என்பது புலனாகிறது. அந்த மரபைத்தான் இளங்கோவடிகள் பதிவு செய்திருக்கிறார் என்பதையும் நாம் புரிந்துகொள்ளலாம்.

சிலப்பதிகாரம் கொலைக்களக் காதையில் (வரி: 106 – 108) அந்தக் கொல்லனைப் பற்றிச் சொல்லும்போது இளங்கோவடிகள் பயன்படுத்துகிற,

நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர மெய்ப்பை புக்கு விலங்கு நடைச் செலவின் கைக்கோல் கொல்லன்

– என்ற வருணனை ஆராயத்தக்கது. அரும்பதவுரையாசிரியரும், அடியார்க்கு நல்லாரும் உயர்குல வணிகனாகிய கோவலனைக் கண்டவுடன் தாழ்ந்த குலத்தவனாகிய பொற்கொல்லன் விலகி நடந்ததாகப் பொருள் கொள்கின்றனர். இந்தப் பொருள்கோடல் சரியன்று. சூழமைவைப் பார்க்கும்போது, இளங்கோவடிகள் அந்தப் பொருளில் அத்தொடரைக் கையாளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

கையில் கோலைப் பிடித்துக்கொண்டு, மேற்சட்டை அணிந்தவனாய், நுண்ணிய அணிகலன்கள் செய்வதில் வல்ல பொற்கொல்லர்கள் நூறு பேர் தன்னைத் தொடர்ந்துவர ஒரு விலங்கு அதிரடியாக நடந்து வருவதைப்போல் அப்பொற்கொல்லன் நடந்து வருகிறான் என்பதே இதன் பொருளாகும். வள்ளுவர் வாழ்க்கைத் துணைநலம் அதிகாரம் 9ஆம் குறட்பாவில் “ஏறுபோல் பீடு நடை” என்ற உவமத் தொடரைப் பயன்படுத்துவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

அரும்பதவுரையாசிரியரும், அடியார்க்கு நல்லாரும் கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு சிலப்பதிகாரத்துக்கு பொருள் விளக்கம் எழுதியவர்கள். அவர்களது காலக்கட்டத்தில் பொற்கொல்லர்களின் சமூகப் படிநிலை தாழ்ந்துவிடுகிறது. சிலம்பு எழுதப்பட்ட காலக்கட்டத்திலேயே கொல்லர், தச்சர் முதலிய கைவினைஞர்களுள் ஒரு பகுதியினர் வணிகர்களின் பணிமக்களாக மாறிவிடுகிறார்கள் என்பது உண்மைதான். பொற்கொல்லர்கள் தங்கள் வர்ண அந்தஸ்தாகிய விஸ்வ பிராமணர்கள் என்ற நிலையை இழந்து, வணிகர்களுக்குக் கீழ்ப்பட்ட தாழ்ந்த நிலையை எய்திவிடுகின்றனர். ஆனால், வணிகர்களின் வர்ண அந்தஸ்து எவ்விதத்திலும் தாழ்ச்சியடையவில்லை.

சிலப்பதிகாரத்தில், பல இடங்களில் வணிகக் குலத்தவர் எத்தகைய உயர்ந்த சடங்காச்சாரத் தகுதி பெற்றிருந்தனர் என்பதைக் குறிப்பிடும் வரிகள் இடம்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாகக் கொலைக்களக் காதையில் வரிகள் 41 – 45 இல் இடம்பெற்றுள்ள ஒரு வருணனையைக் குறிப்பிடலாம். கோவலன் கண்ணகியின் சிலம்பை விற்பதற்காக மாதரியின் வீட்டிலிருந்து புறப்படும் முன்னர், கண்ணகி தன் கையாலேயே சமைத்து அவனுக்கு உணவு பரிமாறுகிறாள். அந்த உணவை உண்ணும்முன் வணிகச் சமூகத்தவர்க்கு விதிக்கப்பட்ட வர்ண ரீதியான சடங்குகளையெல்லாம் கழித்த பின்னரே அவன் உணவு உண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்
குமரிவாழையின் குருத்தகம் விரித்தீங்கு
அமுதம் உண்க அடிகள் ஈங்கென
அரசர் பின்னோர்க்கு அருமறை மருங்கின்
உரியவெல்லாம் ஒரு முறை கழித்தாங்கு

அரசர் பின்னோர் என்பது அரச வர்ணத்தவரை அடுத்து வருகின்ற வைசிய வர்ணத்தாரைக் குறிக்கும். “அருமறை மருங்கின் உரிய எல்லாம் ஒரு முறை கழித்தாங்கு” என்ற சொற்றொடருக்கு, உணவு உண்கையில் அனுசரிக்கப்பட வேண்டிய வைதிகச் சடங்குகளை எல்லாம் அனுசரித்து என்று பொருளாகும். எனவே உரையாசிரியர்கள், வணிகச் சமூகத்தவரின் சடங்காசாரத் தகுதி உயர்வுடையதாகக் கருதப்பட்டதென்ற யதார்த்த நடைமுறையினைத் தெளிவாகப் புரிந்துகொண்டே பதிவு செய்திருக்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. மாறாக “விலங்கு நடைச் செலவு” என்ற சொற்றொடருக்குக் கொண்ட பொருள் மட்டுமே பொருத்தமானதாக இல்லை.

சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலத்தில் பொற்கொல்லர்களின் நிலை பிராமண வர்ணப் பிரிவினர் என்ற நிலையிலிருந்து தாழ்ந்துவிட்ட போதிலும், இவர்களுள் ஒரு பிரிவினர் பாண்டியனின் பட்டப் பெயரைத் தாமும் தரித்துக்கொண்டு அதிகார அமைப்பில் அங்கம் வகிக்கும் நிலையில் இருந்திருக்கின்றனர். சிலம்பிலேயே (5:157; 26:38) எண்பேராயம், ஐம்பெருங்குழு போன்ற அதிகார மையங்கள் இருந்தமைக்கான குறிப்பு உள்ளது. எண்பேராயத்துள் ‘கனகச் சுற்றம்’ என்ற பெயருடைய அதிகார வர்க்கத்தார் இருந்தனர் எனத் திவாகர நிகண்டு (12ஆவது – பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி – அரசர்க்கு மூவகையிற் பதினெண் கிளைவகை), சிலம்பிற்கான அடியார்க்குநல்லார் உரைvi ஆகியவற்றால் தெரியவருகிறது. கனகச் சுற்றம் என்பது பொற்காசுகள் அடித்து வெளியிடுகிற அக்கசாலை அதிகாரிகளைக் குறிக்கும். அக்கசாலையர் என்ற பெயர் கொல்லர் சமூகத்தவரின் பெயர் எனத் திவாகர நிகண்டால் (2ஆவது – மக்கட்பெயர்த் தொகுதி) தெரியவருகிறது.

சங்க காலத்தில் கொல்லர் சமூகத்தவரின் நிலையென்பது, தனித்த ஆய்வுக்குரியது என்றாலும் இங்கு ஒரு குறிப்பைக் கவனத்தில் கொள்ளலாம். நக்கீரர் மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கே தலைவராக இருந்தவர் என்றும், அவர் சங்கறுத்து வளையல் செய்கிற கொல்லர் சமூக உட்பிரிவினர் என்றும் வேம்பத்தூரார் திருவிளையாடற் புராணத்தால் (கிழியறுத்த திருவிளையாடல்) அறிய முடிகிறது. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது பாண்டி மாராயப் பெருங்கொல்லன், கோவலன் என்ற வணிகன்மீது பொய்க் குற்றம் சுமத்தி அவன் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்திருக்கிறான் என்பது தற்செயலான நிகழ்வாகத் தெரியவில்லை.

கொல்லர் சமூகத்தவர்களுக்கும் வணிகர்களுக்கும் இடையே நிலவிய பகைமையின் வெளிப்பாடாக இதனைக் கொள்ளலாம். சிலப்பதிகாரக் கதையின் தொடகத்தில், உரைபெறு கட்டுரையில் பாண்டிய நாடு சந்திக்க நேர்ந்த அத்தனை அழிவுக்கும் காரணம் அந்தப் பொற்கொல்லன்தான் என்பதால் கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன், பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று கண்ணகியின் அம்சமான பெண் தெய்வத்திற்குப் பலி கொடுத்தான் என்ற குறிப்பு பின்வருமாறு இடம்பெற்றுள்ளது :

அன்று தொட்டுப் பாண்டியனாடு மழைவறங்
கூர்ந்து வறுமையெய்தி, வெப்பு நோயும் குருவும்
தொடரக் கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன்
நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக்
கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய
நாடு மலிய மழை பெய்து நோயும், துன்பமும் நீங்கியது

எனவே, சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலக்கட்டத்தில் வணிகர் சமூகத்தவர்க்கும் கொல்லர் சமூகத்தின் ஓர் உட்பிரிவினர்க்கும் இடையே நிலவிய ஆழ்மனப் பகைமை உணர்வின் வெளிப்பாடாகவே இதனைக் கருதிட இயலும். அத்தகைய ஆழ்மனப் பகைமைக்குக் காரணம் என்ன?

இப்படிச் சிந்திக்கும்போது, அடிப்படைச் சமூக மாற்றத்தின் இயக்கப் போக்கு குறித்து நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. பொதுவாக, அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் பெரும் வணிக நிறுவன முதலாளிகளுக்கும் இடையே இருக்கும் உறவினை இன்றைய கண்ணோட்டத்தில் பார்த்தாலே இதனை நாம் புரிந்துகொள்ளலாம். மிகப் பெரிய தொழில்நுட்ப வல்லுநர்கள் தொழில் – வணிக நிறுவன முதலாளிகளால் விலைக்கு வாங்கப்படுகின்றனர். தொழில் – வணிக நிறுவனங்களின் வலிமையே அவற்றின் தொழில் தொடர்புகளால்தான் உருவாகிறது. உலகளாவிய தொழில் தொடர்பு, அதற்கான பட்டறிவு ஆகியவற்றின் மூலமே பெரிய தொழிற் பேரரசுகள் உருவாகவும் செயல்படவும் இயல்கின்றன. அத்தகைய தொழிற் பேரரசு முதலாளிகளின் ஆணைப்படிதான் அரசாங்கங்களையே நடத்த வேண்டியிருக்கிறது.

இந்தப் பின்னணியில் பார்த்தால் சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலக்கட்டத்தில் வணிக வர்க்கத்தாருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களான கைவினைஞர்களுக்குமிடையில் தீவிரமான முரண்பாடு உருவாகியிருக்கவேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கே தலைவர்களாக இருந்து எழுத்து வடிவங்களை உருவாக்கிக் கல்வி கற்பித்தவர்களாகவும், தமிழ் நெடுங்கணக்கு எனும் எழுத்து வரிசையையும், கீழ்க்கணக்கு எனப்படும் எண் கணிதத்தையும் கற்பித்த கணக்காயர்களாகவும், அறிவியல் – தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் இருந்த கொல்லர் சமூகத்தவர்களைப் பணிமக்களாக மாற்றியவர்கள் இந்த வணிக சமூகத்தவர்தாம்.

அந்த வகையில் கோவலன் சார்ந்திருந்த வணிக வர்க்கத்திற்கும், ஒரு காலத்தில் அரச குருக்களாக இருந்து பணி மக்களாக மாறுகின்ற நிலையை எய்தி விட்ட தொழில்நுட்ப வல்லுநர்களான பொற்கொல்லர் சமூகத்திற்கும் இடையே உருவாகியிருந்த காழ்ப்புணர்வு அல்லது ஆழ்மனப் பகைமையே சிலப்பதிகாரத்தில் இடம்பெறுகிற இந்நிகழ்வு மூலம் வெளிப்படுகிறது எனக் கொள்ளலாம்.

சிலப்பதிகாரக் கதைக்கு அடிப்படையான மூல நிகழ்வுகள் உண்மையிலேயே வணிகக்குல நாயக நாயகியர் வாழ்வில் நடந்தேறியவையாக இருந்த போதிலும், சிலப்பதிகாரக் காப்பியம் முற்றிலும் உண்மையான நிகழ்வே என்று சொல்லிட இயலாது. கி.மு. 2ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஒரு நிகழ்வின் அடிப்படையில் சங்க காலத்திற்குப் பிறகு இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட கற்பனைக் காப்பியமாகவே இருக்கவேண்டும். இடைப்பட்ட நூற்றாண்டுகளில் எத்தகைய சமூக மாறுதல்கள் ஏற்பட்டிருக்கலாம்?

சிலப்பதிகாரம் எழுதப்பட்டபோது அரண்மனைப் பொற்கொல்லனை எதிர்நிலைத் தலைவனாகச் சித்திரிக்கிற அளவுக்குக் கதையினுடைய போக்கு அமைகிறது. கி.மு. 2ஆம் நூற்றாண்டளவில் அநியாயமாகக் கொல்லப்பட்ட தன் கணவனுக்காக வணிகக் குலப் பெண்ணொருத்தி நீதி கேட்டுக் கிளர்ந்தெழுந்திருக்கலாம். ஆனால், அப்போது ஒரு பொற்கொல்லனே அவளது கணவன்மீது வீண்பழி சுமத்தி அவன் கொலை செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்தானா என்பதை நம்மால் உறுதிப்படுத்த இயலாது. கி.பி. 5ஆம் நூற்றாண்டுச் சமூகச் சூழலுக்கு இக்கதைப் போக்கை பொருத்திப் பார்த்தால்தான் அதன் பொருத்தப்பாடு விளங்கும்.

ஓர் அரசுக்கு அடிப்படையாக அமைவதே உலோகத் தொழில்நுட்பம்தான். அரசு உருவாகத்தின் தொடக்கக் காலத்தைப் பார்த்தோம் என்றால் உலோகத் தொழில்நுட்பம் எந்த அளவிற்கு அதற்கு முதன்மையான ஊக்கியாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். போர்க் கருவிகள், விவசாயக் கருவிகள், தொழிற் கருவிகள் ஆகிய அனைத்துமே இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியைச் சார்ந்தே இருக்கின்றன.

இந்திய வரலாற்றில் ஜனபதங்கள் எனப்பட்ட பழங்குடிக் குடியரசுகளின் (tribal republics) பங்களிப்பு முதன்மையானது. ஜனபதங்கள், மிக எளிமையான தொழில்நுட்பம் கொண்டவை. மருத நிலம் சார்ந்த பண்ணை நல்லூர்களின் தலைமக்கள் என்று சொன்னால் ஓரிரு ஊர்களின் விவசாயத்தை நிர்வகிக்கின்ற தற்சார்புடைய சிற்றூர்த் தலைமக்களாகவே இருந்திருப்பார்கள். தகவல் தொடர்பும், நீர்ப்பாசன வலைப்பின்னல் தொடர்புமுடைய ஒரு பெரிய நிலப்பகுதியைத் தொழில்நுட்ப வல்லுநர் குழுவின் மேலாண்மை அதிகாரத்தின் துணையுடன் நிர்வாகம் செய்கின்ற, பெரும் உள்கட்டுமானம் கொண்ட அரசாங்க அமைப்பாக அது இருந்திருக்க வாய்ப்பில்லை. ஜனபதங்களின் தொழில்நுட்ப வல்லுநர்கள் எளிய கிராமியத் தன்மை கொண்டவர்களே.

ஆனால், பேரரசு என்பது பல ஜனபதங்களை வென்று அடிப்படுத்தி இணைத்து வலுவான ஆட்சி அமைப்பாக எழுந்து நிற்கும்போது அதற்குப் பிரம்மாண்டமான ஒரு கட்டமைப்பு தேவைப்படும். ஆறுகளிலிருந்து வாய்க்கால்கள் வெட்டிப் புதிய நீர்ப்பாசன முறைகளை அறிமுகப்படுத்தி அவற்றின் மூலம் பல ஊர்களை இணைத்து விவசாய விரிவாக்கம் செய்தல், தகவல் தொடர்பு, சாலை வசதிகள் போன்றவையே ஒரு பேரரசின் கூறுகளாக வடிவம் பெறுகின்றன. இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து நிர்வாகம் செய்யக்கூடிய பெரிய தொழில்நுட்ப வல்லுநர் படையும் அவர்களது ஆலோசனையும் உதவியும் அரசின் இயக்கத்திற்குப் பின்புலமாக இருந்திருக்க வேண்டும். சங்க கால மூவேந்தர் அரசமைப்பு, குறிப்பாகப் பாண்டியரின் அரசமைப்பு, விஸ்வ கர்ம சமூகத்தவரைக் குலகுருவாகக் கொண்டு எழுச்சியுற்ற அமைப்பே.

கி.பி. 5ஆம் நூற்றாண்டளவில் சங்க கால இறுதிக் கட்டத்து நூல்களான பரிபாடல், கலித்தொகை ஆகியவை எழுதித் தொகுக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் நிலவிய சமூக – அரசியல் நிலவரம் எப்படிப்பட்டது? அரச வம்சத்தவர் அல்லாத களப்பிரர்களின் ஆட்சி நடந்துகொண்டிருந்த காலம் அது. களப்பிரர்கள் விவசாயம் சார்ந்த வேளத்துப் பிள்ளைகள் என்ற குழுவினர்களாகவே இருந்திருக்கவேண்டும். சேர – சோழ – பாண்டியர்கள், அதியமான் மரபினர், மிகப் பழமையான வேளிர்கள் போன்ற அரச மரபினர்களையெல்லாம் வீழ்த்தி ஒரு புதிய அரசை நிறுவியவர்களே களப்பிரர்கள் ஆவர். இவர்கள் யாருடைய பக்கத் துணையுடன் தங்களை நிலைநிறுத்திக் கொண்டிருப்பார்கள் என்று சிந்தித்தால் அவர்களுக்கு வணிகர்களுடைய ஆதரவு இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் ஊகித்துணர முடியும். அவ்வாறு இல்லையெனில் களப்பிரர்களால் பொருளாதார ஆதிக்கத்தை அடைந்திருக்கவே இயலாது.

அடுத்ததாக விவசாயச் செயல்பாடுகளில் புதிய முறைகளை அறிமுகப்படுத்தி மன்னுயிர் காக்கும் அத்தொழிலில் விரிவாக்கம் கண்டு தமிழகம்vii தன்னிறைவு எய்தச் செய்தவர்கள் களப்பிரர்களே எனலாம். அவ்வகையில் பார்த்தால் வணிகர்களின் பொருளாதாரப் பின்புலத்தோடு நடந்த வேளாளர்களின் ஆட்சியென்றோ, வணிகர் – வேளாளர் கூட்டணி ஆட்சியென்றோ களப்பிரர் ஆட்சியைக் குறிப்பிடுவது தவறில்லை.

இந்தக் காலக்கட்டத்தில் வட இந்தியாவில் குப்தர்களின் ஆட்சி நடைபெற்று வந்தது. குப்தர்கள் வணிக மரபினர். இன்றுவரை வணிகர்களிடையே குப்தா என்பது குலப் பட்டப் பெயராக நிலவி வருவதைக் காணலாம். குப்தர்கள் காலத்தில்தான் மிகச் சிறந்த சமஸ்கிருத இலக்கியங்கள் தோன்றின. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இவர்கள் ஆட்சி முதன்மையான ஊக்கியாகச் செயல்பட்டதென்பதற்கு மெஹரூலியில் உள்ள துருப்பிடிக்காத இரும்புத் தூண் சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது. இத்தகைய சாதனைகளின் அடிப்படையில்தான் குப்தர்கள் காலத்தைப் பொற்காலமென்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

குப்தர் காலத் தொழில்நுட்பச் சாதனைகள், வணிக சமூகத்தின் பொருளாதார வலிமையின் மூலம் ஏற்பட்ட வளர்ச்சியாலும் கூட்டு இயக்கங்களாலும்தான் சாத்தியமாயின. அவ்வகையில் தமிழ்நாட்டிலும் அதற்குச் சமகாலத்தில் அதே நிலைமைதான் இருந்திருக்கிறது.

களப்பிரர்களின் ஆட்சியும், வணிகர்களின் எழுச்சியும் இணையாகச் சேர்ந்து எழுந்ததன் பின்னணியில்தான் சிலப்பதிகாரம் என்றொரு காவியம் பிறக்கிறது. அக்காலக்கட்டத்தில் வணிகர்களுக்கும், வீழ்ச்சியடைந்துவிட்ட அரச வர்ணத்தவரைத் தொடர்ந்து ஆதரித்து வந்த, கொல்லர் சமூகத்தவருள் ஒரு பிரிவினருக்குமிடையே நிலவிய ஆழ்ந்த பகைமை உணர்வு இவ்வாறு கதை வடிவில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். சிலப்பதிகார ஆசிரியரின் பெயரான இளங்கோ என்பதே வணிகர்களைக் குறிக்கும் பெயரென்று பிங்கல நிகண்டு (5ஆவது, ஆடவர் வகை, 48ஆம் நூற்பா) குறிப்பிடுவது கவனத்திற்குரியது.

கொல்லர் சமூகத்தவருள் சங்கறுத்து வளையல் செய்கிற சமூகப் பிரிவினரை அகநானூறு (பா:24) “வேளாப் பார்ப்பனர்” எனக் குறிப்பிடுகிறதுviii இத்தொடருக்கு வேள்வி செய்யாத பிராமணர் என்று பொருள். இன்றிருக்கும் நிலையில் பிராமண வர்ணம் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினரை மட்டுமே குறிப்பிடுவதாகப் பொதுப் பிரக்ஞையில் ஒரு புரிதல் உள்ளது. ஆனால், பல சாதிகள் அடங்கிய கூட்டமைப்பே வர்ணம் ஆகும். “வேற்றுமை தெரிந்த நாற்பால்” என்று ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் புறநானூற்றுப் பாடலில் (183:8) குறிப்பிடுகிறான். அந்த அடிப்படையில் பார்க்கும்போது பால்கள் அல்லது வர்ணங்கள் என்பவை நான்குதாம். இந்த நான்கு பால்களுக்கு உட்பட்டவையாக ஒவ்வொரு பாலுக்குள்ளும் பல்வேறு சாதிகள் இருக்கக்கூடும்.

சாதி என்பது பிறப்பினால் அமையப் பெறுவது; அகமண உறவுமுறை கொண்டது. ஆனால், வர்ணம் என்பது பிறப்பினால் மட்டும் வருவதன்று. பல சாதிகளின் கூட்டமைப்பே வர்ணம் ஆகும். இவ்வரையறைப்படி பார்க்கும்போது பிராமண வர்ணத்திற்குள் பல சாதிகள் இருந்திருக்க இயலும். எடுத்துக்காட்டாக, மருத்துவர் என்று இன்று சொல்லப்படும் சமூகத்தினரை மகாமாத்திர பிராமணர்[8]ix என்றும் சவர்ணர் என்றும் இலக்கியங்களும் கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன. பிராமணத் தந்தைக்கும் சத்திரியத் தாய்க்கும் ஏற்பட்ட உறவில் தோன்றிய சாதிப் பிரிவினரே இவர்கள்.x உயர்ந்த அதிகாரம் படைத்த குலப் பிரிவினருக்கு நம்பகமான மருத்துவ சிகிச்சைகளையும், உயர்குலப் பெண்டிர்க்கு மகப்பேறு பார்ப்பது போன்ற அந்தரங்கச் செயல்பாடுகளையும் மேற்கொண்ட ஆயுர்வேத மருத்துவ அறிவு பெற்ற ஒரு வர்க்கத்தவராகவே இவர்கள் இருந்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது.

பிராமண வர்ணத்திற்கு உட்பட்ட ஒரு சாதியாகத்தான் கொல்லர் சாதியை, குறிப்பாகப் பொற்கொல்லர் சாதியைப் பார்க்க வேண்டியிருக்கிறது. தொழில்நுட்பங்களால் உயர்ந்திருந்த ஒரு சாதிப் பிரிவினர் குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தாரால் அடிமைப்படுத்தப்பட்டோ, விலைக்கு வாங்கப்பட்டோ தங்கள் பணிக்குப் பயன்படுத்தப்படுகையில், தொழில்நுட்பச் சாதியினர் சார்ந்திருந்த வர்ணத்தில் குழப்பங்கள் தோன்றுவது இயல்பே. அவர்கள் தங்கள் வர்ண அந்தஸ்தினை இழப்பதும், அவர்கள் சேர்க்கப்பட்டிருந்த வர்ணத்தின் பிற சாதியினர் அவர்களை ஏற்க இயலாமலும், மண உறவு கொள்ளாமல் போவதும் இயல்பே. இந்நிலைமை களப்பிரர் ஆட்சிக் காலத்தில் விஸ்வகர்ம சமூகத்தவருக்கு நேர்ந்திருக்க வேண்டும்.

கி.பி. 6ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தென் தமிழகத்தில் பாண்டியர் ஆட்சி மீண்டும் உருவாகிவிடுகிறது. அப்போது பொற்கொல்லர் சமூகத்தவர் பிராமண வர்ண அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொண்டனர் எனக் கூற இயலவில்லை. சங்க காலத்தில் நக்கீரர் போன்ற தமிழ்ச் சங்கத் தலைவர்களையும் ஆசார்யர்களையும் தன்னகத்தே கொண்டிருந்த, வேளாப்பார்ப்பனர் என்று அழைக்கப்பட்ட விஸ்வகர்ம சமூகம், சூத்திர வர்ணத்திற்கு உட்பட்ட ஒரு சாதியாகவே இக்காலக்கட்டத்தில் கருதப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவனின் இளவலாகச் சொல்லப்படுகிறார். சிலப்பதிகாரப் பதிகத்தில் (வரி: 1-2) “குணவாயிற் கோட்டத் தரசுதுறந் திருந்த குடக்கோச் சேர லிளங்கோ வடிகட்கு” என்ற செய்தி காணப்படுகிறது. இது காப்பிய ஆசிரியராகிய இளங்கோவடிகளைப் படர்க்கையில் குறிப்பிடுகிறது. எனவே, சிலப்பதிகாரப் பதிகம் இளங்கோவடிகளால் எழுதப்பட்டதன்று என்பதை உணரலாம். ஆனாலும், வஞ்சிக் காண்டத்தின் இறுதியில் உள்ள வரந்தரு காதையில் (வரி: 171) “யானும் சென்றேன்” என்று இளங்கோவடிகளே கண்ணகி கோட்டத்திற்குத் தாம் நேரில் சென்றதாகக் கூறும் குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. அப்போது தேவந்திமீது கண்ணகித் தெய்வம் சன்னதமாகி, இளங்கோவடிகள் சோதிடத்தைப் பொய்யென நிறுவுவதற்காகவே அரசு துறந்தார் எனக் கூறியதாகவும், இக்காதையில் (வரி: 172-183) கூறப்பட்டுள்ளது. இளங்கோவடிகள், சேரன் செங்குட்டுவனின் தம்பியே என்பதற்கு இது அகச்சான்றாகக் கொள்ளப்படுகிறது.

சூழமைவுகளை வைத்துப் பார்க்கும்போது இக்கருத்து ஏற்புடையதாக இல்லை. இளங்கோவடிகள், சேரன் செங்குட்டுவனின் சமகாலத்தவராக இருக்க வாய்ப்பில்லை. மட்டுமின்றி, அவர் சமண சமயத்தைப் பின்பற்றிய ஒரு வணிகராக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இப்படி இருப்பினும் காலம் காலமாகச் சேரன் தம்பி இளங்கோதான் சிலம்பை இயற்றினார் என்ற மரபு தெளிவாகப் பதிவு செய்யப்பட்டு வந்திருக்கிறது. எனவே, இது தவறு என்று எவ்வாறு நிறுவுவது?

இதற்கான தீர்வு இருக்கவே செய்கிறது. சமண சமயம் சோதிடத்திற்கு எதிரானது. சோதிடத்தை மூட நம்பிக்கையென்றே சமணம் கருதிற்று.xi சமண சமய நீதி நூலான நாலடியாரில் (அறத்துப்பால், துறவு : பா. 2),

நிலையாமை, நோய், மூப்பு, சாக்கா டென்றெண்ணித்
தலையாயார் தங்கருமம் செய்வார் – தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங்கவை பிதற்றும்
பித்தரிற் பேதையாரில்

– என்ற பாடல் இடம்பெற்றுள்ளது.

திருவெள்ளறை ஸ்வஸ்திகக் கிணற்றுக் கைப்பிடிச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள, கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண நீதி சார்ந்த பாடல் கல்வெட்டிலும் சோதிடம் பார்ப்பது பழிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

கண்டார் காணா உலகத்திற் காதல் செய்து நில்லாதேய்
பண்டேய் பரமன் படைத்த நாள் பார்த்து நின்று நைய்யாதேய்
தண்டார் மூப்பு வந்துன்னைத் தளரச் செய்து நில்லாமுன்
உண்டேல் லுண்டு மிக்கது உலகம்மறிய வைம்மினேய்[11]xii

எனவே, இளங்கோவடிகள் சேர அரச பதவியைத் துறந்தார் என்பது சோதிட நம்பிக்கைக்கு எதிரான ஒரு புனைவே என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

சிலப்பதிகாரம், செங்குட்டுவனின் சமகாலத்தில் இயற்றப்பட்டதன்று என்பதற்கு ஓர் அகச்சான்றும் உள்ளது. அண்டை நாடான பாண்டிய நாட்டின் அரசன் அரியணையிலேயே உயிர் துறந்தமை, மதுரை நகர் எரியுண்டது முதலான எந்த நிகழ்வும் இவை நிகழ்ந்து 15 நாள்கள் வரை சேரன் செங்குட்டுவனுக்கு தெரிந்திருக்கவில்லை. மலை நாட்டுக் குன்றக் குறவர்கள் முலை ஒன்றையிழந்த பெண் ஒருத்தி விண்ணுலகம் சென்ற அதிசயக் காட்சியைக் கண்டு அறிவிக்க, அப்போது அவ்வறிவிப்பைக் கேட்ட தண்டமிழ் ஆசான் சாத்தன், ஒவ்வொரு நிகழ்வையும் வரிசைப்படுத்திச் சேரன் செங்குட்டுவனிடம் சொன்ன பிறகே சேரனுக்கு இது பற்றித் தெரியவருகிறது.

அண்டை நாடுகளிலெல்லாம் பெரிய ஒற்றர் படையையே வைத்திருந்ததாகச் சிலம்பில் புகழப்படுகிற சேரன் செங்குட்டுவனுக்குத் தற்செயலாகத்தான் இந்நிகழ்வுகள் பற்றித் தெரியவந்ததென்ற பொருளில் சிலம்பு, காட்சிக் காதை, வரி 57 – 90இல் குறிப்பிடப்படுவது நம்பத்தகுந்ததாக இல்லை.xiii எனவே, இவ்வருணனைகள் காப்பிய ஆசிரியர் இளங்கோவடிகளின் கவித்துவக் கற்பனையே என நாம் உணரலாம்.

சேரன் செங்குட்டுவனின் காலமாகிய கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இளங்கோவடிகள் வாழ்ந்திருந்தால், அவர் இயற்றிய சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவனின் புகழ்பாடுகிற, பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்தின் சாயல் சிறிதாவது இருந்திருக்கவேண்டும். ஆனால், சங்க கால மரபிலிருந்து மாறுபட்ட, வளர்ச்சியுற்ற பல பண்பாட்டுக் கூறுகளையும், சமூக நடைமுறைகளையும் சிலம்பில் காணமுடிகிறது. சிலம்பில் இடம்பெறுகிற பல்வேறு விதமான தொழில்நுட்பச் செய்திகளை எடுத்துக்கொண்டால்கூட நாம் சங்க இலக்கியங்களோடு ஒப்பிட்டு இதனைக் கூறிவிடமுடியும்.

முதன்மையாக ஒப்பிட்டு ஆராயப்படத்தக்கது, செங்குட்டுவனின் தம்பி இளங்கோ பற்றியோ, கண்ணகி பற்றியோ, கனகவிசயர் பற்றியோ பதிற்றுப்பத்தில் ஒரு சிறு குறிப்பு கூட இல்லாதிருப்பதுதான். பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்தின் பதிகத்தில் செங்குட்டுவன் கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டி ஆரிய அண்ணலை வீட்டியதாக (அழித்ததாகச்) சொல்லப்பட்டுள்ளது. இப்பதிகம் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் தொடங்கிய சோழ அரசர்களின் மெய்கீர்த்தியின் பாணியில் அமைந்திருப்பதால் கி.பி. 10ஆம் நூற்றாண்டளவில் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர். எவ்வாறாயினும், சிலப்பதிகாரக் காலத்திற்கு பிறகுதான் இப்பதிகம் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், சிலப்பதிகாரத்தின் மதுரைக்காண்ட இறுதியில் குறிப்பிடப்படுகிற ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்க வேண்டுமென்று இக்கட்டுரைத் தொடக்கத்தில் கண்டோம். சேரன் செங்குட்டுவனின் காலமோ, கி.பி.2ஆம் நூற்றாண்டாகும்.xiv கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் வட எல்லைப் பகுதியில் சாத வாகன அரசின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. சாத வாகனர்களின் முதன்மையான ஆட்சிப்பகுதி என்பது ஆந்திரம், கர்நாடகம், மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் ஆகும். தொண்டை மண்டலத்தின் தலைநகராகிய காஞ்சியைக் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் சாதவாகனர்கள் கைப்பற்றி ஆண்டிருக்கிறார்கள். அவர்கள் வெளியிட்ட சில காசுகளும், காசு வார்க்கின்ற அச்சும் காஞ்சியில் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் சில காசுகளில், ‘ராக்ஞோ வசிடி புதஸ ஸிரி சதகணிஸ’ என்ற பிராகிருத வாசகம் ஒரு புறமும், அதே பொருளுடைய, ‘அரசன்கு வசிடி மகன்கு திரு சதகணிகு’ என்ற தமிழ் வாசகம் மறுபுறமும் பிராமி எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளன.xv இச்சாதவாகன அரசர்களே நூற்றுவர் கன்னர் என்ற பெயரில் சேரன் செங்குட்டுவனின் நட்பரசர்களாகச் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகின்றனர்.

கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் கண்ணகி வழிபாடு தொடங்கியிருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால், அயிரை என்ற பெண் தெய்வம் சேர நாட்டில் வழிபடப்பட்டது என்பதற்குப் பதிற்றுப்பத்தில் ஆதாரமுள்ளது. இப்பெண்தெய்வ வழிபாட்டு மரபில் கண்ணகி கதைக் கூறுகள் களப்பிரர் ஆட்சிக்காலத்தில் கலந்திருக்க வாய்ப்பிருக்கிறது. சிலப்பதிகாரக் குன்றக் குரவையிலேயே (உரைப்பாட்டுமடை, வரி: 3) மலைக் குறவர் தெய்வமாகிய வள்ளியுடன் கண்ணகியை ஒப்பிடுகின்ற குறிப்புகள் காணப்படுகின்றன. அயிரை என்பதும் குறிஞ்சி நிலத் தெய்வமேயென்பது கருதத்தக்கது.

சேர நாட்டில் உள்ள பகவதி கோயில்களில் இன்றும் கண்ணகி கதைப் பாடல்கள் பாடப்படுகின்றன. இப்பாடல்களைச் செட்டியாரென்ற சாதிப் பட்டம் புனைகிற வணிகர்கள், தமிழும் மலையாளமும் கலந்த மொழி நடையில் பாடிவருகின்றனர் என்பதை பி.எல். சாமி போன்ற ஆய்வறிஞர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

பதிற்றுப்பத்து எழுதப்பட்ட காலத்தில், சேர நாட்டில் சிவன், திருமால் கோயில்களும், வழிபாட்டு மரபுகளும் இருந்தன எனக் கொள்வதற்கோ, சேர மன்னர்கள் சிவன் அல்லது திருமாலின் அடியார்களாக இருந்தார்கள் எனக் கொள்வதற்கோ இடமில்லை. திருமால் கோயில் பற்றியும், திருமால் வழிபாட்டு மரபு பற்றியும் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடிய பதிற்றுப்பத்துப் பாடலில் ஓரிடத்தில் (31:7-10) கூறப்பட்டிருப்பது உண்மையே.

வண்டூது பொலிதார், திருஞெமரகலத்துக்
கண்பொரு திகிரி கமழ் குரல் துழாஅய்
அலங்கல் செல்வன் சேவடி பரவி
நெஞ்சுமலி உவகையர் துஞ்சு பதிப்பெயர

திருமகளை மார்பிலும், திகிரியைக் கையிலும் தாங்கிய தெய்வம் திருமாலே. ஆயினும், இத்தெய்வத்தினைப் பொது மக்கள் வழிபட்டதாகக் கூறப்பட்டுள்ளதே தவிர இத்தெய்வத்தின் அடியார்களாகச் சேர மன்னர்கள் சித்திரிக்கப்படவில்லை.xvi மாறாக, இளஞ்சேரல் இரும்பொறையைக் குறிப்பிடும்போது,

குருதி விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றோடு
உருகெழு மரபின் அயிரை பரைஇ
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக்
கொற்ற மெய்திய பெரியோர் மருக

– என்று பெருங்குன்றூர் கிழார் (பதிற்று. 88:12) கூறுகிறார்.

அயிரை என்ற பெண் தெய்வப் பெயர், அசுரை என்ற சொல்லின் திரிபாக இருக்கக்கூடும். கி.பி. 12ஆம் நூற்றாண்டிற்குரிய கொங்கு நாட்டு கல்வெட்டு ஒன்றில் “அசுர மலைப் பெருவழி” என்ற வணிகப் பெருவழி குறிப்பிடப்படுகிறது. இந்த அயிரை மலை பழனிக்கு மேற்கில் அமைந்துள்ளது.“ நேர் உயர் நெடு வரை அயிரைப் பொருந” (பதிற்று. 21:29) என்று பல்யானைச் செல்கெழுகுட்டுவன் குறிப்பிடப்படுகிறான்.“ அயிரை நெடுவரை போல” வாழுமாறு செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கபிலர் (பதிற்று. 70:26) வாழ்த்துகிறார். எனவே ,அயிரை என்ற பெண் தெய்வத்தின் பெயரே இம்மலைக்குச் சூட்டப்பட்டிருந்தது எனத் தெரிகிறது.

சிலப்பதிகாரத்திலோ, அயிரை முதன்மைப்படுத்தப்படாமல் சிவன், திருமால் ஆகிய இரு பெருந்தெய்வங்களிடத்திலும் பக்தி பூண்டவனாகவே சேரன் செங்குட்டுவன் சித்திரிக்கப்படுகிறான். வஞ்சிக் காண்டத்தில் (கால்கோட் காதை, வரி: 62-67) செங்குட்டுவன் வடதிசை நோக்கிப் படையெடுக்கும்போது, சிவன் கோயில் சேடத்தைத் தலையிலும், திருமால் கோயில் சேடத்தைத் தோளிலும் சூடினான் என்ற குறிப்பு இடம்பெறுகிறது.

ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம் கொண்டு சிலர் நின்றேத்தத்
தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச்சேவடி மணிமுடி வைத்தலின்
ஆங்கது வாங்கி, அணிமணிப் புயத்துத்
தாங்கின னாகி….

பதிற்றுப்பத்தில் (44:7-9), சேரன் செங்குட்டுவன் விறலி ஒருத்தியொடு உறவு கொண்டமை குறித்த சூசகமான குறிப்பு உள்ளது.

ஆடுநடை அண்ணல் நின் பாடு மகள் காணியர்
காணிலியரோ நிற் புகழ்ந்த யாக்கை
முழுவலி துஞ்சும் நோய் தபு நோநன் தொடை

சேரன் விறலியுடன் களவுப் புணர்ச்சியில் ஈடுபட இருப்பது குறித்து இடக்கரடக்கலாக, “நோய் அணுகாத, கட்டுறுதி மிக்க, உன் உடலை விறலி காணட்டும்” எனப் புலவர் குறிப்பிடுவதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.xvii

தலைமக்கள், விறலியரோடு கொள்ளுகிற இத்தகைய களவு மண உறவில் ஒரு புதிய வம்சாவளி தோன்றிவிட்டால், அவ்வம்சத்தவர்களுக்கு அரச அந்தஸ்து கிட்டாது. ஆயினும், பல்வேறு வகையான மானியங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. அவ்வம்சாவளியினர் பாணர் – விறலியர் போன்றும், பொருநர் முதலான கழைக்கூத்தர் போன்றும் ஊர் ஊராகச் சென்று ஆடிப்பாடிப் பிழைக்கின்ற ஒரு குழுவினராக இல்லாமல் அரண்மனைப் பாடகர் – ஆடலர்களாகவும், கர்நாடக இசை மரபைப் பின்பற்றுபவர்களாகவும் மாறியிருக்க வேண்டும்.

இதற்குச் சிலப்பதிகாரத்திலேயே ஆதாரம் இருக்கிறது. சேரன் செங்குட்டுவன், தனது வட திசைப் படையெடுப்பு தொடங்குகிற வேளையில், ஆடல் பாடல்களைக் கண்டும் கேட்டும் மகிழ்கிறான். அகத்திணை சார்ந்த ஆடல் பாடல்கள் அங்கு நிகழ்த்தப் பெறுகின்றன. அவற்றை நிகழ்த்தியவர்கள் கொங்கணக் கூத்தரும், கொடுங் கருநாடரும் ஆவர். (சிலம்பு. 26:106-119.)

கொங்கணம் என்பது கர்நாடக மாநிலத்தின் வட பகுதியும், மராட்டிய மாநிலத்தையும் சேர்ந்த மேற்குக் கடற்கரைப் பகுதியுமாகும். கொடுங் கருநாடர் எனப்பட்டோர் கருநாடக இசை – கூத்து இவற்றை நிகழ்த்துபவர்கள். சேரன் செங்குட்டுவனின் காலமாகிய கி.பி. 2 ஆம் நூற்றாண்டிலிருந்து, சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலகட்டத்திற்குள் இம்மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். இடைப்பட்ட இம்மூன்று நூற்றாண்டுகளில், சேர அரச மரபினருடன் களவு மண உறவு பூண்ட விறலியர் வம்சத்தார் கர்நாடகக் கூத்தியர் மரபினராக அல்லது அரண்மனை சார்ந்த வேத்தியல் (cosmopolitan) நடன மரபினராக உருவாகியிருக்க வேண்டும். பல்வேறு வட்டார மரபுகளின் ஊடாட்டம் காரணமாக அரண்மனை சார்ந்த செவ்வியல் – கலப்புக் கலை வடிவம் (கர்நாடக இசை – கூத்து வடிவம்) பரிணமித்திருக்க வேண்டும்.

இவ்விடத்தில் சில கல்வெட்டு ஆதாரங்களை இதனுடன் இணைத்து ஆராயலாம். சேரர்களின் தலைநகர் கரூவூர் வஞ்சியாகும். இங்கிருந்து மேலைக் கடற்கரைவரை சேரர் ஆட்சி நிகழ்ந்து கொண்டிருந்தது. கரூவூருக்கு அருகில் இருக்கும் புகளூரில் உள்ள சமணக் குடைவரைகளில்தான் கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேர மன்னர்களின் கல்வெட்டுகள் இரண்டு கண்டறியப்பட்டுள்ளன. அவை கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.xviii

புகளூரில் இருந்து சற்றொப்ப 140 கி.மீ. தொலைவில் ஈரோடு – காங்கேயம் சாலையில் அமைந்துள்ளது அறச்சலூர். அறச்சலூரை அடுத்து அமைந்துள்ள நாகமலையில் ஆண்டிப்பாறை எனுமிடத்தில் புகளூரை ஒத்த சமணக் குடைவரை ஒன்று உள்ளது. சமண முனிவர்களுக்கான கற்படுக்கைகளுக்கிடையே கி.பி. 4ஆம் நூற்றாண்டுக்கு உரியதான தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்றும், இசைக் குறிப்பு அட்டவணைகள் இரண்டும் பொறிக்கப்பட்டுள்ளன. “எழுத்தும் புணருத்தான் மறெய் வண்ணக்கன் தேவன் சாத்தன்.”

என்பது இக்கல்வெட்டின் வாசகமாகும்.xix இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ள ‘வண்ணக்கன்’ என்ற சொல் ஆராயத்தக்கதாகும். புறநானூற்றில் (152:13) “பாடுவல் விறலியோர் வண்ணம்” என்ற தொடர் இடம்பெற்றுள்ளது. வர்ணம் பாடுதல் என்ற பெயரில் இன்றும் இது வழக்கில் உள்ளது. எனவே, இசை ‘வண்ணக மறை’ என்று குறிப்பிடப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. தொல்காப்பியம் (எழுத்ததிகாரம், 33ஆம் நூற்பா) இசையை “நரம்பின் மறை” எனக் குறிப்பிடுகிறது. நரம்புக் கருவியாகிய வீணை இசைக் கருவிகளுள் தலைமை சான்றது என்பதால் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கலாம். “கந்தர்வ வேதம்” என்ற தொடர் கி.பி. 7ஆம் நூற்றாண்டிற்குரிய மகேந்திர பல்லவனின் மண்டகப்பட்டுக் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. இத்தகைய தொடர்கள் போன்றே வண்ணக மறை என்ற தொடரும் பயன்பாட்டில் இருந்திருக்கலாம். வண்ணக மறைவல்லான் என்பது மறைவண்ணக்கன் என இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கக்கூடும். இக்கல்வெட்டின் அருகே பொறிக்கப்பட்டுள்ள இசைக் குறிப்பு அட்டவணையை உருவாக்கியவன் என்ற பொருளிலேயே “எழுத்தும் புணருத்தான்” என்ற தொடர் இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது.

வண்ணக்கக் கோத்திரத்து வேளாளர்கள் இன்றும் அறச்சலூர்ப் பகுதியில் உள்ளனர். சேர அரச மரபினருடன் கொண்ட களவு மணத்தில் உருவாகி வேத்தியல்மரபினராகப் பரிணமித்த பாணர் – விறலியர் வம்சத்தவர்களே இவர்கள் எனலாம்.xx

இத்தகைய பின்னணியையெல்லாம் சமூக வரலாற்று நோக்கில் நாம் ஆராய்ந்தோம் என்றால் சிலப்பதிகாரம் காட்டுகிற சமூக அமைப்பு, களப்பிரர் காலத்தில் நடைமுறையில் இருந்த ஒரு சமூக அமைப்பே என்பதையும், பதிற்றுப்பத்து காட்டுகின்ற சங்க காலச் சமூக அமைப்பு அன்று என்பதையும் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

இந்த இடத்தில் வேறொரு கேள்வி எழுகிறது. சிலப்பதிகாரப் பதிகத்தில் “குணவாயில் கோட்டத்து அரசு துறந்திருந்த குடக்கோச் சேரல் இளங்கோவடிகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் கவிஞரின் கற்பனை என்று தள்ளிவிடுவதா அல்லது இப்படிப்பட்ட ஒரு பின்னணி உருவாக்கப்படுவதற்கு அடிப்படை ஏதாகிலும் இருந்திருக்கக் கூடுமா?

கி.பி. 5ஆம் நூற்றாண்டளவில், பாண்டிய நாட்டில் மூர்த்தி நாயனார் என்ற வணிகர் ஆட்சி செய்திருக்கிறார் என்ற வரலாற்று உண்மை தெரியவருகிறது.xxi சமூக வரலாற்றுப் பரிணாம வளர்ச்சி நிலைகளைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்தால் வணிகர் – வேளாளர் கூட்டணி ஆட்சியாகிய களப்பிரர் ஆட்சியின் இறுதிக் கட்டத்தில், ஒரு வணிகர் பாண்டிய நாட்டை ஆண்ட நிகழ்வு இயல்பான ஒன்றே எனப் புலப்படும்.

இளங்கோக்கள் என்ற பெயர் வணிகர்களுக்குரியது என்று நிகண்டுகள் குறிப்பிடுவதை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்தால், கி.பி. 5ஆம் நூற்றாண்டளவில், சேர நாட்டிலும் வணிக மரபினர் ஆட்சியின் வியாபகம் இருந்திருக்க இயலும் எனப் புரிகிறது. இளங்கோவடிகள் இக்காலக்கட்டத்தில் சேர நாட்டை ஆட்சி செய்த வணிக மரபினரோடு நெருங்கிய உறவுடைய ஒரு சமணத் துறவியாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

இங்கு, மற்றொரு குறிப்பும் சிந்திக்கத் தக்கதாகும். குப்தா என்பது வட இந்திய வணிகர்களுடைய சாதிப் பட்டமாக உள்ளது. கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் குப்தர்களின் ஆட்சி நடைபெற்று வந்தது. குப்தா என்ற பட்டப்பெயர் குத்தன், குத்தனார் எனத் தமிழில் வழங்கிற்று. ஐப்பெருங்காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசியை இயற்றிய புலவர் பெயர் நாதகுத்தனார் என்பதாகும். நற்றிணைப் பாடல்கள் 329, 352 ஆகியவற்றை இயற்றியவரின் பெயராக “மதுரை (மதுரைப் பள்ளி) மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்” என்பது அப்பாடல்களின் அடிக்குறிப்பில் இடம்பெற்றுள்ளது. சேரகுத்தனார் என்பதே சொகுத்தனார் எனத் தவறாக வாசித்து பதிப்பிக்கப்பட்டுள்ளது எனத் தோன்றுகிறது.xxii

இவ்விவரங்களையெல்லாம் தொகுத்து ஆராயும்போது, அரச குலச் சத்திரியர்களின் வீழ்ச்சி, வேளத்துப் பிள்ளைமார்களால் அரசர்கள் சிறைப்படுத்தப்பட்ட நிகழ்வு, வணிகர்கள் எழுச்சியுற்று வேளாளர்களுடன் கூட்டணி அமைத்துக்கொண்ட நிகழ்வு ஆகிய சமூக மாற்றங்கள் நிகழ்ந்து வந்த காலப்பகுதியில்தான் சிலப்பதிகாரம் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பது புலனாகும்.

களப்பிரர் ஆட்சி என்பது வணிகர் – வேளாளர் கூட்டணி ஆட்சிதான் என்பதை வரையறுப்பது எவ்வாறு? இதனைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், வேற்றுமை தெரிந்த நாற்பால்களுள் வைசிக வர்ணம் என்பதன் வரையறை குறித்த புரிதல் நமக்குத் தேவை. தொடக்கத்தில் வைசிக வர்ணம் என்பது வணிக வர்க்கத்தைக் குறிக்கவில்லை. சுதந்திரத் திணைக் குடிகளே வைசிகர் எனப்பட்டனர். குறிஞ்சி நிலக் குறவர்கள், முல்லை நில ஆயர்கள், மருத நிலக் களமர்கள், நெய்தல் நில நுளையர்கள் – என்ற நானிலத் திணைக்குடிகளுமே வைசிகர்கள்தாம். உலகு எனப் பொருள்படும் ‘விஸ்’ என்ற சொல்லிலிருந்தே வைசியர் அல்லது வைசிகர் என்ற சொல் தோன்றிற்று. உலகோர் என்பதே இதன் பொருளாகும். அடிமை அல்லாத அனைத்துக் குடிகளும் வைசிகரே.

பின்னாள்களில், பண்டங்களின் பரிவர்த்தனை மூலம் எழுச்சியுற்ற வணிக வர்க்கத்தவர், வைசிக வர்ணத்தவராகத் தம்மை நிலை நிறுத்திக்கொண்டனர். இக்காலக்கட்டத்தில், வணிக வர்க்கத்தவர், சூத்திர வர்ணத்தவரான வேளாள வர்ணத்தவருடன் பல்வேறு தளங்களில் உறவு கொண்டனர். இந்த உறவின் தடயங்கள் தொல்காப்பியத்திலும் காணப்படுகின்றன.

ஒவ்வொரு வர்ணத்தவருக்கும் உரிய தகுதிப்பாடு, தொழில் இவற்றை வரையறுக்கும்போது, தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணையியல் (26ஆவது நூற்பா) பின்வருமாறு குறிப்பிடுகிறது;

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்…

பிராமண வர்ணத்தவர்க்குரிய, ஆறு வகையாகப் பகுக்கப்பட்ட தொழில்கள், அரச வர்ணத்தவர்க்குரிய, ஐந்து வகையாகப் பகுக்கப்பட்ட தொழில்கள் என்று கூறிய தொல்காப்பியர், வைசிக வர்ணத்தவர்க்கும், வேளாள வர்ணத்தவர்க்கும் உரியனவாகப் பகுக்கப்பட்ட ஆறு வகைத் தொழில்கள் என்று வைசிகர் வேளார் ஆகிய இரு வகை வர்ணத்தவரையும் இணைத்தே கூறுகிறார். இதற்கான காரணத்தை உரையாசிரியர் இளம்பூரணர் தெளிவுபடுத்தியுள்ளார். வணிகர்களுக்கும் வேளாளர்களுக்கும் தொழில் விகற்பம் இல்லை; அதாவது அவர்களிடையே தொழில் அடிப்படையிலான வேறுபாடு இல்லையென்றும், இருவரும் ஓரியற்படுவர் என்றும் இளம்பூரணர் கூறுகிறார்.xxiii “வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என்ற தொல்காப்பிய நூற்பாவின் அடிப்படையில் வைசிக வர்ணத்தவரை வணிகர் என்று கொண்டு இளம்பூரணர் தொல்காப்பிய நூற்பாவின் உண்மைப் பொருளுக்கிணங்க விளக்கமளித்துள்ளார்.

நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவரான மூர்த்தி நாயனார் வணிகக் குலத்தவர் எனக் கண்டோம். ஆனால், கி.பி. 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த அரித்துவார மங்கலம் வேளாளர் செப்பேட்டின் மெய்க்கீர்த்திப் பகுதியில், முன்கையைச் செஞ்சந்தனமாகத் தேய்த்துப் படைத்த மூர்த்தி நாயனார் குறித்த புகழ் மொழியும் இடம்பெறுகிறது.xxiv இவ்வாறு மூர்த்தி நாயனாரை, வேளாளர் குல முன்னோராகக் குறிப்பிடுவது இளம்பூரணரின் பொருள்கோடலுக்கு ஆதரவாக உள்ளது.

இவ்வாறு வணிகர் – வேளாளர்களிடையே நெருங்கிய உறவு இருந்ததால்தான் கி.பி. 10ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு ஐந்நூற்றுவர் என்ற வணிகர் குழுவும், சித்தர மேழிப் பெரிய நாட்டார் என்ற வேளாளர் அமைப்பும் இணைந்து செயல்படத் தொடங்கின. இவ்விரு அமைப்புகளிடையே இணக்கமான போக்கு இருந்தமைக்குக் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. இத்தகைய வரலாற்று இயக்கப்போக்கு களப்பிரர் ஆட்சியால் தொடக்கி வைக்கப்பட்டதே ஆகும்.

வணிக எழுச்சியின் விளைவாக ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிய பதிவுகளை இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையிலும் காணமுடிகிறது. சிறைக்கோட்டம் அறக்கோட்டமாகிய காதையில் 107 முதல் 115ஆம் வரிகள் வரை பின்வரும் வருணனை இடம்பெற்றுள்ளது:

மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடிக்
கொண்டினி தியற்றிய கண்கவர் செய்வினைப்
பவளத் திரள் கால் பல் மணிப்போதிகை
தவள நித்திலத் தாமம் தாழ்ந்த
கோணச் சந்தி மாண் வினை விதானத்துத்
தமனியம் வேய்ந்த வகைபெறு வனப்பின்
பைஞ்சேறு மெழுகாப் பசும்பொன் மண்டபத்து…

இந்தியத் தீபகற்பத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் வந்து குவிந்த தொழிற் கலைஞர்கள் பலர் சேர்ந்து அமைத்த மண்டபம் இவ்வரிகளில் குறிப்பிடப்படுகிறது.

மணிமேகலைக் காப்பியத்தில் (சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை, வரி: 87) “சைவ வாதி” என்றொருவன் குறிப்பிடப்படுகிறான். சைவ பக்தி இயக்க எழுச்சியின் விளைவாகவே சைவம் என்ற சொல் சமயம் சார்ந்த தத்துவ நெறியாக உருப்பெறுகிறது. எனவே, பக்தி இயக்கத் தொடக்கக் காலத்தில் தமிழகத்தில் நடைமுறையில் இருந்த தத்துவ நெறி குறித்த பதிவு என்ற அடிப்படையில், மணிமேகலையின் காலத்தைக் கி.பி. 6ஆம் நூற்றாண்டாக நிர்ணயிக்க இயலும்.

சிலம்பு, காட்சிக் காதையில் (வரி: 157-158) “கொங்கணர் கலிங்கர் கொடுங்கருநாடர் பங்களர் கங்கர் பல்வேல் கட்டியர்…” போன்ற பல சிற்றரச வம்சத்தவர் இடம்பெறுகின்றனர். கங்கர், பங்களர் முதலான சிற்றரச வம்சங்களும் கங்க நாடு, பங்கள நாடு போன்ற நாட்டுப் பிரிவுகளும் கி.பி. 5ஆம் நூற்றாண்டு அளவிலேயே வரலாற்றில் இடம்பெறத் தொடங்குகின்றன.

இத்தகைய வரலாற்று இயக்கப் போக்குகளின் விளைவாகக் கி.பி. 5 – 6ஆம் நூற்றாண்டுகளில் ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகத்தின் அமைப்பே முற்றிலுமாக மாறத் தொடங்கிவிடுகிறது. பக்தி இயக்கத்தின் வளர்ச்சி, அதன் விளைவாக உருவான சைவ – வைணவக் கோயில்கள், கோயிற் கலைகள் சார்ந்த சமூக அமைப்பு என்று தமிழ்ச் சமூகத்தின் கட்டமைப்பே சங்க கால அமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவில் உருவாவதை நம்மால் உணர முடிகிறது. இம்மாற்றங்களின் தோற்றுவாயைத் தெளிவாகப் பதிவு செய்திருக்கும் ஓர் இலக்கியமாகவே சிலப்பதிகாரத்தினைக் காண முடிகிறது. எனவே, மணிமேகலைக் காப்பியத்திற்குச் சற்று முற்பட்ட காப்பியம் என்ற அடிப்படையில் சிலப்பதிகாரத்தைக் கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியமாக நிர்ணயிக்க இயலும்.

அடிக்குறிப்புகள்:

iசிலம்பு 1:60-68க்கான உரை, சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும். ப.41, டாக்டர் உ.வே.சா. பதிப்பு, உ.வே.சா. நூல் நிலையம், சென்னை-600090, 2008.

iiசிலப்பதிகாரத்தில் இந்திர விழா, எஸ்.இராமச்சந்திரன், சிலப்பதிகாரம் ஆய்வு (கட்டுரைத் தொகுப்பு), பதிப்பு : சிலம்பு. நா. செல்வராசு, புதுச்சேரி, 2014.

iii கல்வியின் சிறப்பை வலியுறுத்தி, ‘உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும், பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே’ என்ற புறநானூறு 183ஆம் பாடலை இயற்றியவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆவான். மதுரைக்கு அருகிலுள்ள மாங்குளம் – மீனாட்சிபுரத்தில் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் சமணப்பள்ளி ஒன்றை நிறுவி எழுத்தறிவு கற்பிப்பதற்கு ஊக்கமளித்தவன் இந்நெடுஞ்செழிய மன்னனே. இவனுடைய பெயர் இப்பள்ளிக் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. (இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிற நெடுஞ்செழியன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கு மிகவும் முற்பட்டவனாக இருக்கவேண்டும் என்று ஐராவதம் மகாதேவன் அவர்கள் வாதிடுகிறார். அவருடைய வாதம் ஏற்கத்தக்கதாக இல்லை. – பார்க்க : Early Tamil Epigraphy, P. 116, Cre-A : Chennai, India and Department of Sanskrit and Indian Studies, Harvard University, U.S.A., 2003)

ivபாண்டியர் செப்பேடுகள் பத்து, எண் 4, வரிகள்: 234 – 235. தமிழ் வரலாற்றுக் கழகம், சென்னை. 1967.

vகல்வெட்டுச் சொல்லகராதி, பக்.68, 100, ஆசிரியர்: தி.நா.சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை-600008, 2011.

viசிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும். ப. 166, டாக்டர் உ.வே.சா. பதிப்பு, உ.வே.சா. நூல் நிலையம், சென்னை-600090, 2008.

viiவடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறா அடிப்படையில் களப்பிரர்களால் வெற்றி கொள்ளப்பட்ட மூவேந்தர்களின் ஆட்சிப் பகுதியினைத் தமிழகம் என்று இக்கட்டுரையில் குறிப்பிடுகிறோம்..

viii“வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த வளைகளைந்தொழிந்த கொழுந்து” அகம் 24:1-2, மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர் நக்கீரருக்கும் சிவபெருமானுக்கும் நடந்த வாதத்தின்போது நக்கீரரின் குலம் குறித்து “அங்கங்குலுங்க அரிவாளில் நெய் தடவி” எனத் தொடங்கும் பாடலைச் சிவபெருமான் உரைத்ததாக வேம்பத்தூரார் திருவிளையாடற் புராணம் (16:22) கூறுவது இதனோடு பொருத்திப் பார்க்கத்தக்கது.

ixபெரிய புராணம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பா:26-27, வேம்பத்தூரார் திருவிளையாடற் புராணம், 27:6

xகமலை ஞானப்பிராசகரின் சாதிநூல், பதிப்பு : சந்திரசேகர நாட்டார் சண்முக கிராமணி, சென்னை. (உ.வே.சா. நூலகத்தில் இந்நூலின் அச்சுப் பிரதி உள்ளது.)

xiசோதிடத்தை அடிப்படையாகக் கொண்ட ஆசீவக சமயம், சமண சமயத்தில் இணைந்து கலந்துவிட்ட பின்னர், கி.பி. 8ஆம் நூற்றாண்டளவில் சமண சமயம் சார்ந்த சோதிட நூல்களும் உருவாயின. சந்திராபரணம் என்னும் சமண சமயம் சார்ந்த சோதிட நூல், சீவகசிந்தாமணி பா. 621க்கான உரையில் நச்சினார்க்கினியரால் குறிப்பிடப்படுகிறது. பார்க்க : சீவகசிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், ப. 304, உ.வே.சாமிநாத ஐயர் பதிப்பு, கபீர் அச்சுக்கூடம்,1969.

xii‘திருவெள்ளறை’, வெ. வேதாசலம், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை, சென்னை – 28, 1976.

xiiiசிலம்பில் விரிசல், பேராசிரியர் சாமி. தியாகராசன், அமுதசுரபி, தீபாவளி மலர், நவம்பர் – 2015.

xivEarly Tamil Epigraphy, pp. 116 – 117.

xvibid pp. 201 – 202.

xviஇத்திருமால் கோயில் திருவனந்தபுரத்தில் உள்ள கோயிலே எனப் பதிற்றுப்பத்தின் பழம்பதவுரை குறிப்பிடுகிறது. (பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும், ப. 74, உ.வே. சாமிநாத ஐயர் பதிப்பு, 1980). இதனைச் சரியான பொருள் விளக்கமாகக் கொள்வதற்கு ஆதாரமில்லை.

xviiபண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம், கார்த்திகேசு சிவத்தம்பி (மொழிபெயர்ப்பு: அம்மன் கிளி முருகதாஸ்), ப. 228, குமரன் புத்தக இல்லம் (2005), கொழும்பு / சென்னை.

xviiiEarly Tamil Epigraphy, pp. 404 – 407.

xix“எழுத்தும் புணருத்தான் மலைய் வண்ணக்கன் தேவன் சாத்தன்” என்று ஐராவதம் மகாதேவன் அவர்களால் வாசித்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளது (E.T.E. op.cit. p.441). மறெய் வண்ணக்கன் என்று என்னால் வாசிக்கப்பட்டுள்ளது. எகர உயிர் மெய்யைக் குறிக்கின்ற ஒற்றைக் கொம்பினை ஐகார உயிர் மெய்யைக் குறிப்பிடுகிற இரட்டைக் கொம்புக்கு மாற்றாகப் பயன்படுத்துகிற வழக்கம் பல்லவர் சாசனங்களில் காணப்படுகிறது. அந்த வழக்கமே இக்கல்வெட்டிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஐகார உயிர் மெய்க்குப் பிறகு யகர மெய் இடம் பெறுவதும் கல்வெட்டுகளில் இயல்பே.

xxஇவ்வண்ணக்கர்கள் போன்ற வேளத்துப் பிள்ளைகள் பிரிவினர் பலரின் எழுச்சியோடு இணைந்த உடன்நிகழ்ச்சியே களப்பிரர் ஆட்சி என்ற இக்கருதுகோள், தமிழக வேளாளர்கள் வரலாறு என்ற, இக்கட்டுரை ஆசிரியரின் தொடர் கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது. (http://www.sishri.org)

xxiபெரியபுராணம், மூர்த்தி நாயனார் புராணம்; வேம்பத்தூரார் திருவிளையாடற் புராணம், மூர்த்தியாருக்கு அரசளித்த திருவிளையாடல்.

xxiiகி.பி. 17ஆம் நூற்றாண்டு வரை எகர ஏகார உயிர்மெய்களுக்குரிய குறியீடுகள் வேறுபாடின்றி ஒற்றைக் கொம்பாகவே எழுதப்பட்டு வந்தன. உயிர்மெய் நெடிலுக்குரிய காலும், ரகர உயிர்மெய் எழுத்தும் ஒரே வடிவில் எழுதப்பட்டு வந்தன. அதன் காரணமாகவே ஓலைச் சுவடிகளிலிருந்து படியெடுக்கப்படும்போது ‘சொகுத்தனார்’ என இப்பெயர் தவறாக வாசித்துப் பதிப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

xxiiiதொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணர் உரை (செய்யுளியல் நீங்கலாக) ப. 225, பதிப்பாசிரியர் : அடிகளாசிரியர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010, 2008.

xxivதமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் தஞ்சை மாவட்டப் பதிவு அலுவலராகப் பணிபுரிந்த திரு. கு. தாமோதரன் அவர்களால் 1980ஆம் ஆண்டில் வாசித்து பதிவு செய்யப்பட்டது.

10 Replies to “சிலப்பதிகாரத்தின் காலம்”

  1. சிலப்பதிகாரம் நாகர் பற்றி பேசுகிறது, அரசர் முறையா பரதர் முறையா.அரச குமாரரும் பரத குமாரரும் என்ற சொல் பற்றி நீங்கள் ஏதும் சொல்லவில்லை.

    கடல் வணிகம் பரதர் குல தொழில், மா பெரும் நாவாய் வைத்து இருந்த மாநாயக்க என்ற கண்ணகி அப்பா வணிக குலம் என்பது தவறு. மீகாமன் வெடியரசன் காதை இலங்கை போர் பற்றி பேசுகிறது அதில் மீகாமன் மாநாயக்கன் கேட்டு கொண்டதால் போர் செய்தான் என்று சொல்கிறது அவனின் வம்சாவளி கண்ணகியை வணங்கவும் செய்கிறார்கள், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கரையாள பரதவர் மற்றும் முக்குவர் மட்டக்களப்பு போர் இது அனைத்தும் சிலப்பதிகாரம் தொடர்ப்பு கொண்டது தான். நீங்கள் பரதவர் என்ற சொல்லை இதில் பயன் படுத்த வில்லை எங்கும்,காரணம் என்ன?

    1. பரதர்-பரதவர் உறவு விரிவாக ஆராயப்பட வேண்டியதே. ஆனால் கோவலன்-கண்ணகி இருவரும் கொல்லாமை என்ற அறநெறியை அடிப்படையாகக் கொண்ட சமண சமய சிராவக நோன்பிகள் என்பது சிலம்பில்(கொலைக்களக்காதை வரி. 18) குறிப்பிடப்பட்டுள்ளது. பரதவர், சமண சமயத்தவரால் இழிகுலத்தோராகக் கருதப்பட்டனர் என்பது சீவகசிந்தாமணியால்(பா. 2751) புலனாகிறது. சௌத்ராந்திக பௌத்தம் பரதவர்களை ஏற்றது; இழிகுலத்தாராகக் கருதவில்லை. இலங்கையின் நடைமுறைகள் பௌத்தம் சார்ந்தவை. அனுராதபுரம் பிராமிக் கல்வெட்டில் “தமெட கரவா மகாநாவிக” (மாநாய்கனான தமிழ்க் கரையான்) முதன்மையாகக் குறிப்பிடப்படுவது இந்த அடிப்படையிலேயே.

      1. சிலப்பதிகாரம் 7-7 Silappathikaram 7-7
        கடல் புக்கு, உயிர் கொன்று, வாழ்வர் நின் ஐயர்;
        உடல் புக்கு, உயிர் கொன்று, வாழ்வைமன் நீயும்;
        மிடல் புக்கு அடங்காத வெம் முலையோ பாரம்;
        இடர் புக்கு இடுகும் இடை இழவல் கண்டாய்!

        கொடுங் கண் வலையால் உயிர் கொல்வான் நுந்தை;
        நெடுங் கண் வலையால் உயிர் கொல்வைமன் நீயும்;
        வடம் கொள் முலையான் மழை மின்னுப் போல
        நுடங்கி உகும் மென் நுசுப்பு இழவல் கண்டாய்!

        ஓடும் திமில் கொண்டு உயிர் கொல்வர் நின் ஐயர்;
        கோடும் புருவத்து உயிர் கொல்வைமன் நீயும்:
        பீடும் பிறர் எவ்வம் பாராய்; முலை சுமந்து
        வாடும் சிறு மென் மருங்கு இழவல் கண்டாய்!

        “திணைநிலை வரி ”
        “புணர்ச்சி நீட, இடந்தலைப்பாட்டில் புணர்தலுறுவான் ஆற்றாமையால் கூறுதல்”

        உன் ஐயன்மார் கடலில் புகுந்து மீன்களீன் உயிரைக் கொன்று வாழ்கின்றனர். நீயோ என் உடலுக்குள் புகுந்து உயிரைக் கொன்று வாழ்கின்றாய். உன் முலை பாரமாக இருக்கிறது. இடை ஒடிந்துவிடக் கூடாதே

        உன் ஐயன்மார் கொடிய மீன் வலையால் உயிர்களைக் கொல்கின்றனர். நீயோ உன் நீண்ட கண் வலையால் என்னைக் கொல்கிறாய்.

        உன் ஐயன்மார் ஓடும் திமிலில் சென்று உயிர்களைக் கொல்கின்றனர். நீயோ வளையும் புருவத்தால் என்னைக் கொல்கிறாய். – அவளைத் தொட அவன் கூறும் சாக்கு போக்கு.

        இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்

        மேற்குறிய பாடலின் மூலம் கண்ணகி மீனவ பெண் என்பது தெளிவாக உள்ளது.

        பரதர் என்ற சொல் பட்டினவர் மக்களை குறிக்கும் கடல் வாணிகம் முகுவதும் அவர்களின் கட்டு பட்டிலே இருந்தது.

        சமண சமயம் வேட்டை மக்களை தாழ்த்தி உள்ளது. அதே நேரத்தில் கடலன் வழுதி என்ற தளபதி சமண துறவிக்கு கோவில் அமைத்து கொடுத்து உள்ளதை மாங்குளம் கல்வட்டு காட்டுகிறது. இலஞ்சிவேல் பெரிய பரவன் மகன் சமண துறவிகள்க்கு உதவி செய்வதை இலஞ்சி கல்வட்டு காட்டுகிறது.

      2. சிலப்பதிகாரம் 7-7 Silappathikaram 7-7
        கடல் புக்கு, உயிர் கொன்று, வாழ்வர் நின் ஐயர்;
        உடல் புக்கு, உயிர் கொன்று, வாழ்வைமன் நீயும்;
        மிடல் புக்கு அடங்காத வெம் முலையோ பாரம்;
        இடர் புக்கு இடுகும் இடை இழவல் கண்டாய்!

        கொடுங் கண் வலையால் உயிர் கொல்வான் நுந்தை;
        நெடுங் கண் வலையால் உயிர் கொல்வைமன் நீயும்;
        வடம் கொள் முலையான் மழை மின்னுப் போல
        நுடங்கி உகும் மென் நுசுப்பு இழவல் கண்டாய்!

        ஓடும் திமில் கொண்டு உயிர் கொல்வர் நின் ஐயர்;
        கோடும் புருவத்து உயிர் கொல்வைமன் நீயும்:
        பீடும் பிறர் எவ்வம் பாராய்; முலை சுமந்து
        வாடும் சிறு மென் மருங்கு இழவல் கண்டாய்!

        “திணைநிலை வரி ”
        “புணர்ச்சி நீட, இடந்தலைப்பாட்டில் புணர்தலுறுவான் ஆற்றாமையால் கூறுதல்”

        உன் ஐயன்மார் கடலில் புகுந்து மீன்களீன் உயிரைக் கொன்று வாழ்கின்றனர். நீயோ என் உடலுக்குள் புகுந்து உயிரைக் கொன்று வாழ்கின்றாய். உன் முலை பாரமாக இருக்கிறது. இடை ஒடிந்துவிடக் கூடாதே

        உன் ஐயன்மார் கொடிய மீன் வலையால் உயிர்களைக் கொல்கின்றனர். நீயோ உன் நீண்ட கண் வலையால் என்னைக் கொல்கிறாய்.

        உன் ஐயன்மார் ஓடும் திமிலில் சென்று உயிர்களைக் கொல்கின்றனர். நீயோ வளையும் புருவத்தால் என்னைக் கொல்கிறாய். – அவளைத் தொட அவன் கூறும் சாக்கு போக்கு.

        இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்

        இந்த பாடல் மூலம் கண்ணகி மீனவ பெண் என்றும் ,சமண மதம் அப்போது தூங்கி கொண்டு இருந்தது என்றும் சொல்ல முடியும்.

        கல்வட்டு இலஞ்சி வேல் மா பரவன் மகன் சமண துறவிகள்கக்கு படுக்கை கொடுத்த செய்து கல்வட்டு மூலம் அறிய முடியும்.

        கடலன் வழுதி என்ற ஒரு தளபதி சமண துறவிக்கு கல்வட்டு கொடுத்த செய்தி மாங்குளம் கல்வட்டு மூலம் அறிய முடிகிறது.

        கடலன் என்றால் பரவர் என்று பொருள்.

      3. கடல்புக் குயிர்கொன்று வாழ்வர்நின் ஐயர்
        உடல்புக் குயிர்கொன்று வாழ்வைமன் நீயும்
        மிடல்புக் கடங்காத வெம்முலையோ பாரம்
        இடர்புக் கிடுகும் இடைஇழவல் கண்டாய்

        மேலே உள்ள சிலப்பதிகார வரிகள் மூலம் கண்ணகி மீனவ பெண் என்று அறிய முடியும். பட்டினவ செட்டியார் என்ற பரதவ மக்கள் உள்ளனர். மற்றும் முக்குன கட்டா என்ற ஒரு ஆவணம் கரையர்( பட்டிணவர்) ஈழத்தில் அவர்கள் கொண்ட வெற்றியை போற்றி பாடுகிறது.

        நடுநிலை என்ற ஒன்று உடன் இருப்பது தான் சரியான பார்வை.

  2. வரலாறு, இலக்கியம், தொல்லியல் இத்துறைகளில் பரிச்சயம் இல்லாத என் போன்றோரும் படித்து வரலாற்றை எப்படிப் பார்ப்பது என்பதை விளக்கும் சிறப்பான ஆய்வு.

  3. எத்தனை இருக்கலாம்’கள்? வழக்கம் போல ராமச்சந்த்ரனுக்கு வேளாளரை பற்றி மட்டமாக எழுத, ஒரு தலைப்பு தேவை.ஊகங்களின் அடிப்படையில் கட்டப் பற்ற ஒன்று இந்த கட்டுரை. போகிற போக்கில் அவரது கருத்துக்களை வரலாற்று உண்மை போல் அடித்து விடுகிறர். வண்ணம் என்கிற பொதுவான வார்த்தையை எப்படி எல்லாம் திரிக்கின்றார்?

    It is sad that Solvanam also has fallen prey to his machinations. I am surprised that he does not bring Sanror in this article. Otherwise, VeLaLar and Sanror are his pet subjects and he will link any similar word to them. This article is mix of some facts, half-truths, assumptions and lies when it comes the approach taken to derive the period of Silappathikaram. Please compare this with the learned professor Vaiyapuri Pillai’s approach.

    Disgusting; Will try and pinpoint his assumptions, lies and half-truths one of these days. Hope Solvanam will publish it.

  4. வஞ்சிக் காண்டம் சிலம்பில் – கேரளத்தின் திருவஞ்சிக்களத்தைக் குறிக்கும் வகையில் பாடப்பட்டுள்ளது.
    கொடுங்கல்லூர், மற்றும் திருவஞ்சிக்களம் உள்ளிட்ட பகுதியில் மிகவும் பெரிய அகழ்வாய்வு 1970 நடக்க முடிவு, அப்பகுதி முழுவது கடல் அடியில் இருந்தது, கன்னி மண் 8ம் நூற்றாண்டு இறுதி வரை. மக்கள் முதல் குடியேற்றம் 9 ஆம் நூற்றாண்டு ஆரம்பம் தான். எனவே சிலம்பை முன் தள்ளுவது வாலாற்றில் சரியாகா இருக்காது

  5. Pingback: Nakkeran

Leave a Reply to S S PandianCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.