காண்பவை எல்லாம் கருத்துகளே – 2

This entry is part 2 of 6 in the series உலக தத்துவம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மாபெரும் கருத்துமுதல்வாதப் பள்ளி ஒன்று இயங்கியது. மீபொருண்மை ஊகங்களின் உச்சக்கட்ட காலம் அது. மானுட பகுத்தறிவின் மீது பெருநம்பிக்கை கொண்டிருந்த அந்த கருத்துமுதல்வாதப் பள்ளி மானுடத்தின் பல அடிப்படை கேள்விகளுக்கு பதில்சொல்ல முயன்றது. காண்பவை சிந்திப்பவை அனைத்தையும் ஒரு தத்துவ அமைப்புக்குள் கொண்டு வர நினைத்தது. இவையனைத்தும் ஜெர்மானிய அறிஞர்களால் நிகழ்த்தப்பட்டதால் அந்த தத்துவத் தரப்பு ஜெர்மானிய கருத்துமுதல்வாதம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த தத்துவப் பள்ளி காண்டில் இருந்து தொடங்குகிறது. காண்டின் தத்துவங்கள் தத்துவ வரலாற்றிலேயே ஒரு திருப்பு முனை. அதற்குப்பின் வந்த அனைத்து தத்துவச் சிந்தனைகளிலும் அது தாக்கம் செலுத்தியது. காண்ட் பகுத்தறிவு வாதத்திற்கும் புலனறிவு வாதத்திற்கும் (rationalism and empiricism) உள்ள முரணை முடித்துவைக்க நினைத்தார். அதனால் அவர் மீறுநிலை கருத்துமுதல்வாதத்தை (transcendental idealism) உருவாக்கினார்.

மேற்கத்திய தத்துவத்திற்கு அன்றைய நிலையில் ஒரு ஊக்கப் பின்புலமாக இருந்தவை புதிய அறிவியல் பார்வைகளும், மதம் சார்ந்த பார்வைகளும். புதிதாக வளர்ந்து வந்த அறிவியல் தரப்பானது பலவகைகளில் அன்றைய மனிதர்களின் பார்வையில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த அனைத்துப் பார்வைகளையும் ஒழுக்கவிதிகளையும் அது கேள்விக்குள்ளாக்கியது. இரு தரப்புகளுக்கும் தோன்றிய இந்த முரணை சரிசெய்யும் விதமாகவே நாம் நவீன தத்துவத்தின் பெரும்பகுதியைப் பார்க்க முடியும். டேக்கார்ட் அதைச் செய்வதைப் பார்க்கலாம், பார்க்லியும் அதைச் செய்தார், காண்டும் அதற்காக தனது தத்துவ கருத்துக்களை உருவாக்கினார். 

அடிப்படையில் கிறித்துவ மதத்தில் உள்ள சுதந்திர செயலூக்கம் (free will) என்ற சிந்தனையை அன்று வளர்ந்துவந்த அறிவியல் மிகவும் சந்தேகிக்க வைத்தது. உலகில் பல்வேறு வகையான பொருட்களும் அறிவியல் கொள்கைகளுக்கு இணங்க நடக்கும்போது மனிதனின் செயல்கள் தன்விருப்பத்தால் நடத்தப்படுவதா இல்லை அதுவும் ஏதோ முன்நிர்ணயிக்கப்பட்ட விதியினால் நிகழ்த்தப்படுவதா என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு தத்துவவாதிகள் பலவகையான பதில்களை முன்வைத்தனர். காண்ட் இதற்கு பதில்சொல்லும் விதமாக reality என்பதை இருவகையாகப் பிரித்தார். ஒன்று, நாம் காண்பது. அது நமக்கு வெளியே இருப்பவை மூலமாகவும் நம் அகவுருக்களாலும் நமக்கு உண்டாக்கி அளிக்கப்படுவது. அதை தோற்றப்பிரதி(Phenomenon) என்கிறார். இன்னொன்று, நாம் உணராமல் அதுவாகவே உள்ள ஒன்று Noumenon. தோற்றப்பிரதியில் அனைத்தும் இயந்திர பௌதீகப் பார்வைக்கு ஏற்றாற்போல் இயங்குகின்றன. ஆனால் Noumenon என்பதில் சுதந்திர செயலூக்கத்திற்கு இடமிருக்கலாம் என்கிறார் காண்ட்.

இதில் Noumenon என்பதை ஒரு விளக்கத்தின் பொருட்டே காண்ட் முன்வைக்கிறார். அதற்கு அவர் தர்க்கபூர்வமான நிரூபணம் ஏதும் கொடுப்பதில்லை. அதை விசுவாசத்தின் பேரில் ஒழுக்க நடவடிக்கைகளுக்காக ஒருவர் ஏற்றுக்கொள்ளலாம் என்று சொல்கிறார். 

ஜெர்மானிய தத்துவவாதிகள் காண்டின் தத்துவத்தை மதித்தபோதிலும் அதில் சில குறைகளைக் கண்டார்கள்.  அவர்கள் ஒரு கருத்தாக்கத்தை உருவாக்கிவிட்டு வேறொன்றுக்குச் செல்லும் நோக்கம் கொண்டவர்கள் அல்ல. தத்துவத்தின் பல பிரிவுகளை இணைத்து ஒரு குறிப்பிட்ட அமைப்புமுறைக்குள் பொருத்த (systematize) நினைத்தார்கள். காண்டின் தத்துவம் ஒரு அமைப்பாக முழுமை அடையவில்லை என்று அவர்கள் கருதினார்கள். அதனால் அதை  முழுமையான ஒரு தத்துவ அமைப்பாக மாற்றிட முற்பட்டார்கள். அந்த மொத்த தத்துவ அமைப்பையும் ஒரு அடிப்படைக் கொள்கையிலிருந்து துவங்க நினைத்தார்கள். 

இதை முதலில் தொடங்கிவைத்தவர் ரயின்ஹோல்ட்(Karl Leonhard Reinhold) என்ற தத்துவவாதி ஆவார்.இவர் தத்துவத்தை பொதுமக்களிடம் எடுத்துச்செல்ல நினைத்தார். தத்துவம் வெறும் கோட்பாட்டு அளவில் சுருங்கிவிடாமல் அது மக்களுக்கு அறத்தையும் ஒழுக்கத்தையும் உருவாக்கிக்கொடுக்கும் அடிப்படையாக அமையவேண்டும் என்று கருதினார். அறிவொளி காலகட்டத்தில் பகுத்தறிவிற்கு முக்கியத்துவம் அதிகரித்து மத நம்பிக்கைகள் பின்செல்லத் தொடங்கிய காலத்தை கணக்கில் கொண்டால் இதன் அவசியம் நமக்குப் புரியும். மத விழுமியங்களால் வழிநடத்தப்பட்ட மக்கள் அவற்றை விமர்சனத்துக்கு உள்ளாக்குகையில் அவர்களை வழிநடத்த வலுவான தத்துவ அடிப்படை அவசியமானது.

ரயின்ஹோல்ட் தத்துவம் ஒழுங்கமைவுடன் அமையவேண்டும் எனக் கருதினார். முழுமையான ஒரு தத்துவ அமைப்பு உருவாவதன் அவசியத்தைச் சொல்லி அது அடிப்படைக் கருத்தில் இருந்து வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்று கருதினார். அவரின் சிந்தனைகளில் ஊக்கம் பெற்று அந்தச் செயலை மேற்கொண்டு எடுத்துச் சென்ற முக்கியமான தத்துவவாதி ஃபிஷ்ட (Johann Gottlieb Fichte).

 காண்டின் தத்துவம் மீபொருண்மை அறிதல் முறையை விமர்சித்து அதன் போதாமைகளை முன் வைக்கிறது. இருப்பினும் அது மீபொருண்மை ஊகங்களை அடிப்படையாக கொண்ட ஜெர்மானிய தத்துவத்துக்கு எவ்வாறு அடிப்படையாக ஆக முடியும்? அந்த அடிப்படை மாற்றத்தைச் செய்தவர் ஃபிஷ்ட. 

காண்டின் தத்துவத்தில் இருக்கும் ஒரு முரணைக் களைவதன் மூலம் ஃபிஷ்ட தனது தத்துவத்தை உருவாக்கினார். காண்டின் thing-in-itself என்ற கருத்து அவரது தத்துவத்தில் பொருந்தாத ஒன்றாக ஃபிஷ்ட நினைத்தார். Thing-in-itself என்பது தான் நாம் புலன் வழியாகவும் அகம் வழியாகவும் தோற்றப்பிரதியாக திரித்து அறிகிறோம். இப்படிச் சொல்லும் போது thing-in-itself என்பது நாம் காண்பதை உருவாக்கும் காரணமாக ஆகிவிடுகிறது. ஆனால் காண்ட் காரண காரிய உறவு என்பது மனித அகத்தில் உள்ளவை என்கிறார். நமக்கு வெளியில் இருப்பவை காரண-காரிய உறவுகள் அற்றுக் கிடந்தாலும் அவற்றை அவ்வாறு நாம் காண இயலாது. காண்பவைகள் அனைத்திலும் காலம்-வெளி, காரண-காரிய உறவு போன்ற அகவுருக்களை ஏற்றியே நம்மால் அறியமுடியும்.

காரண-காரிய உறவு மனித அகத்துக்கு உட்பட்டது எனும்போது மனித மனத்திற்கு அப்பாற்பட்டு இருக்கும் thing-in-itself என்பது மனித அகத்தின் ஈடுபாடு இல்லாமல் ஒரு செயலுக்குக் காரணமாக அமைகிறது என்று சொல்வது முரண். அதனால் ஃபிஷ்ட thing-in-itself என்ற கருத்தை காண்டின் தத்துவத்தில் இருந்து விலக்கிவிட நினைத்தார். ஆனால் அந்தக் கருத்தை எடுத்தால் நாம் காணும் அனைத்தையும் விளக்குவதற்கு ஒரு மாற்றுமுறையை வைத்தாக வேண்டும். அப்படி மாற்றாக ஃபிஷ்ட முன்வைத்தது Absolute ego என்ற பெருஞ்சுயத்தை.

காண்டின் கவனமான அறிவியங்கியல் சார்ந்த கருத்துமுதல்வாதத்தை எடுத்து மீபொருண்மை கருத்து முதல்வாதமாக மாற்றினார். அறிவியங்கியல் கருத்துமுதல்வாதம் என்று சொல்வது காண்டின் அகவுருக்களை குறிக்கும். நாம் அறிவது வெளியே இருப்பனவற்றுடன் நம் அகம் சேர்க்கும் உருக்களை. அதனால் காண்பவை அனைத்தும் வெளியே இருப்பவை என்று சொல்ல முடியாது. அதில் நம் அகத்தின் பங்கும் உண்டு. ஆனால் ஃபிஷ்ட செய்த மாற்றம் வெளியே ஒன்றுமில்லை இருப்பது ஒரு சுயம் மட்டுமே, அந்த சுயத்தின் வெளிப்பாடே அனைத்தும் என்று மாற்றினார்.

 ஃபிஷ்ட காண்டின் தத்துவத்தில் அடிப்படையான மாற்றங்களைச் செய்தபோதிலும் அதன் பிறபகுதிகளின் பெருமதிப்பை உணர்ந்திருந்தார். ரயின்ஹோல்ட் எண்ணியதுபோல காண்டின் தத்துவத்தை ஒரு அடிப்படையான கருத்தில் இருந்து தர்க்கப்பூர்வமாக வளர்த்தெடுக்க நினைத்தார். அவர் தத்துவமானது அனைத்து அறிவுத்துறைக்கும் அடிப்படையானது; அதனால் தத்துவத்தின் ஆதார கருத்தானது பிற அறிவுத்தரப்புகளைச் சார்ந்து இருக்கமுடியாது. தத்துவ அமைப்பை உருவாக்கும் முறையானது கணித தேற்றங்களை உருவாக்கும் முறையைப் போன்று தர்க்கப்பூர்வமாக அமையவேண்டும் என்று நினைத்தார். ஸ்பினோஸா தனது தத்துவ கருத்துக்களை யூக்லீடின் கணித தேற்றங்களைப்போல் தர்க்கமுறையில் முன்னரே வெளிப்படுத்தியிருக்கிறார். ஃபிஷ்ட அதே போன்ற முறையைக் கையாள நினைத்தார்.

அனைத்துக்கும் அடிப்படையான கருத்தை எங்கிருந்து எடுப்பது? இந்த பிரச்சினைக்கு இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று காண்பவை அனைத்தும் நம் அகம் உண்டாக்கித் தருவது என்ற கருத்தைக் கொண்டு அனைத்தையும் விளக்கவேண்டும் அல்லது நாம் காணும் அனைத்தும் வெளியிலிருப்பவை நம் புலன்களில் உண்டுபண்ணும் தாக்கங்களே என்ற எண்ணத்திற்குச் செல்லவேண்டும். காண்ட் இவை இரண்டுக்குமான சமரசப்புள்ளியைத் தொட்டு தனது தத்துவத்தை உருவாக்கினார். ஆனால் ஃபிஷ்ட அகம் தோற்றுவிப்பதே அனைத்தும் என்ற கருத்துமுதல்வாதத் தரப்பை எடுத்து தத்துவத்தை உருவாக்கத்தொடங்கினார்.

நம் சிந்தனைகள் எல்லாவற்றுக்கும் பின் ஒரு சுயம் இருக்கிறது. நம் எண்ணங்கள் அனைத்தும் ஏதோ ஒன்றினைக் குறித்து நிகழ்கின்றன. ஏதோ ஒரு விஷயத்தைக் குறித்து நம் மனது எண்ணுகிறது. நாம் எந்த விஷயத்தைப் பற்றி எண்ணுகிறோமோ அது நம் அகத்தில் ஒரு அறிபடுபொருளாக(Object) ஆக்கப்படுகிறது. நமது சுயத்தைப் பற்றி சிந்தித்தாலும் சுயம் ஒரு அறிபடுபொருளாக ஆக்கப்பட்ட பின்னரே  சிந்திக்கப்படுகிறது. இருப்பினும் சுயம் முழுமையாக அறிபடுபொருளாக ஆக்கப்படுவதில்லை. சுயத்தை எவ்வளவு தான் நாம் அறிபடுபொருளாக ஆக்க முயற்சித்தாலும் அந்த மாற்றத்தை அடையாத சுயம் எஞ்சி நிற்கிறது. இதை மீறுநிலை சுயம் (transcendental ego) என்கிறார் ஃபிஷ்ட.

உதாரணத்துக்கு ஒரு நாற்காலியைப்பற்றி சிந்திப்பதாகக் கொள்வோம். இங்கு சிந்தனைசெய்யும் சுயத்தை புறவயப்படுத்தி சிந்திக்க முயல்வோம். அதனால் நாற்காலியை பற்றி சிந்திக்கும் உங்களைப்பற்றி சிந்தியுங்கள். இப்போது நாற்காலியைப்பற்றி சிந்திப்பவரைப்பற்றி சிந்திக்கும் உங்களைப்பற்றி சிந்தியுங்கள். மீண்டும் நாற்காலியைப்பற்றி சிந்திப்பவரைப்பற்றி சிந்திப்பவரைப்பற்றி சிந்திக்கும் உங்களைப்பற்றி சிந்தியுங்கள். இப்படியே முடிவில்லாது சுயத்தை புறவயப்படுத்திக் கொண்டே செல்லலாம் எவ்வளவு தான் நாம் சுயத்தை புறவயமாக எடுத்து சிந்திக்க நினைத்தாலும் புறவயத்துக்கு வராது எஞ்சி நிற்கும் சுயம் இருக்கவே செய்யும்.

இந்த சுயத்தைப்பற்றி நாம் எப்படி அறிகிறோம்? அறிபவை எல்லாம் புறவயப்படுத்திய பின்னரே அறிய முடிகிறதென்றால் புறவயப்படுத்துதலுக்கு உள்ளாகாதது பற்றி நாம் எவ்வாறு அறிய முடியும்? அது இருக்கிறது என்று எதை வைத்துச் சொல்ல முடியும்? ஃபிஷ்ட இந்த சுயத்தை அதன் செயல்பாட்டின் வழியாக நாம் அறிவதாக சொல்கிறார். நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ணத்திலும் இந்த சுயத்தின் செயல்பாடு பொதிந்திருக்கிறது என்கிறார்.

தன்னுணர்வு என்பது ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் இன்றியமையாதது. அந்த தன்னுணர்வை ஏற்படுத்துவது இந்த மீறுநிலை சுயமே. அச்சுயத்தின் செயல் வெளிப்பாடே தன்னுணர்வு ஆகும். இச்சுயத்தை ஒரு போதும் நாம் அறிந்துவிட முடியாது ஆனால் அதன் செயல்பாட்டை உணராது நாம் பிரக்ஞையுடன் இருந்துவிட முடியாது என்கிறார்.

இப்படிச் சொல்வதற்கு என்ன ஆதாரம் என்று ஒருவர் கேட்டால், ஃபிஷ்ட கேட்பவர் அவரது அக இயக்கத்தையே கூர்ந்து கவனித்து இதற்கு ஆதாரம் தேடச் சொல்வார். அறிபடுபொருளாக மாற்றமுடியாத சுயத்துக்கு எந்தவித தர்க்க பூர்வமான நிறுவுதலையும் தர முடியாது. அது உணரப்பட வேண்டியது. அதே சமயம் இது பக்தி, நம்பிக்கை ஆகியவற்றால் உணரப்படவேண்டியது என்று சொல்லவுமில்லை. அவ்வகையில் இது மதங்கள் முன்வைக்கும் ஞானத்தைப்போல் இல்லை. இது தத்துவார்த்த ரீதியிலான அறிதல். ஒவ்வொருவரும் தம் அகத்தில் உணரக்கூடியது. ‘நாம் பிரக்ஞையுடன் இருக்கும் போது நமக்கு தன்னுணர்வு இருக்கிறது. இந்த தன்னுணர்வு நமது ஒவ்வொரு எண்ணத்திலும் பொதிந்திருக்கிறது. இந்த தன்னுணர்வு நாம் அறியாத சுயத்தின் செயல் வெளிப்பாடு’. 

ஒரு முழு தத்துவ அமைப்பிற்கான அடிப்படையாக விளங்கக்கூடிய ஒரு தோற்றுகைக் கருத்தை வளர்த்தெடுக்க வேண்டும்  எனும் கனவுக்கு, மேலே கூறிய வாதம் ஒரு அடிப்படையாக அமைந்தது. அதாவது மேலே சொன்ன இந்தப் புள்ளி தத்துவத்திற்கே ஆதாரப்புள்ளியாக அமையக்கூடியதாகும். அடுத்த தத்துவ கருத்தையும் அவர் மனதை அவதானிப்பதிலிருந்தே எடுத்து முன்வைக்கிறார். 

ஆனால் அனைத்துக்கும் அடிப்படையாக விளங்குவது ஒரு தனிப்பட்ட மனிதரின் சுயமோ அகமோ அல்ல. ஒரு வரம்புக்குட்பட்ட தனி அகம் உண்டாக்குபவையே இவையனைத்தும் என்னும் வாதம் Solipsism என்று சொல்லக்கூடிய குறுகலான கருத்துமுதல்வாத பார்வைக்கு இட்டுச் செல்லும். அது பல தர்க்க முரண்களுக்கு எடுத்துச் செல்லக்கூடியது. அதனால் இவை அனைத்தையும் உண்டு செய்வது வரம்பில்லாத ஒரு பெருஞ்சுயமாக இருக்கவேண்டும். வரம்புக்குட்பட்ட அனைத்து சுயங்களுக்கும் வேராக அமைந்திருக்கும் பெருஞ்சுயத்தின் இயக்கத்தையே நாம் உணர்கிறோம்.

பெருஞ்சுயம் படைத்தளிப்பதே நாம் உணரும், நாம் காணும் விஷயங்கள் அனைத்துமாகும். ஜெர்மானிய கருத்துமுதல்வாதிகள் நாம் நம் மனதில் தோன்றும் எண்ணங்களையே வெளியில் பார்க்கிறோம் என்று சொல்லவில்லை. அதற்குப் பதிலாக ஒரு பெரும் அகத்தின் ஒரு பெரும் எண்ணத்தின் வெளிப்பாட்டையே நாம் காண்கிறோம் என்கிறார்கள்.

இந்த பெருஞ்சுயம் சில காரணங்களால் தன்னை இவ்வாறு வெளிப்படுத்திக் கொள்கிறது. பெருஞ்சுயம் தன்னை posit செய்து கொள்வதாகக் கூறுவார்கள். அதாவது அது தன்னையே முன்வைக்கிறது. பெருஞ்சுயம் வரம்புக்குட்பட்ட சுயமாகவும், சுயத்துக்குமுன் விரிந்து கிடக்கும் சுயமல்லாத அனைத்தாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. நாம் காண்பவை அனைத்தும் பெருஞ்சுயம், சுயமல்லாத ஒன்றாக வெளிப்படுத்தப்பட்டு, சுயத்துக்கு காண்பிக்கப்படுவதே. ஆனால் அறிவதும் அறியும் பொருளும் ஒன்றிலிருந்து வெளிப்படுபவைகளே. அதனால் வரம்புக்குட்பட்ட சுயமாக(subject) இருந்து நாம் காணும் இப்பிரபஞ்சம் அனைத்தும் பெருஞ்சுயத்தின் வெளிப்பாடே. நாமும் பெருஞ்சுயத்தின் பகுதியே. அதனால் ஜெர்மானிய கருத்துமுதல்வாதத்தை நாம் ஒற்றையிருப்புவாதம் (Monism) எனலாம்.

***

Series Navigation<< காண்பவை எல்லாம் கருத்துகளேஒருவரை தத்துவவாதியாக ஆக்குவது எது? >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.