யோகாப்பியாசம்: நன்மை, தீமைகள்

இந்துக்களின் ஆறு முக்கியமான சாத்திரங்கள், மீமாம்சம், நியாயம், வைசேஷிகம்,  சாங்கியம் , யோகம், வேதாந்தம் ஆகியவையாகும். இச்சாத்திரங்களை இவ்வுலகிற்கு அளித்தது முறையே ஜைமினி,,கௌதமர்,, கணாதர், கபிலர், பதஞ்சலி, வியாசர் என்ற ஆறு முனிவர்கள்.  யோகம் என்றால் உடல் மனம் ஆன்மா ஆகிய மூன்றையும் அணைத்தல் ,கட்டுதல் ,அல்லது ஓருமுகப்படுத்துதல் என்பதாம். யோகத்தின் கடைசி அங்கமான ஹயோகத்தை முதன் முதலாக உபதேசித்தவர்  ஆதி நாதர் என்றழைக்கப்படும் சிவா பெருமானேயாகும் என்று இந்து மதம் கருதுகிறது. 

Hatha yoga pradipika

ஸ்ரீ ஆதிநாதாய நமோஸ்து தஸ்மை 

யேனோபதிஷ்டா  ஹடயோகவித்யா 

விப்ரஜாதே  பரோன்னதராஜயோகம்

ஆரோடுமிச்சோரதிரோஹிணீவ

(வி-ம்)  எவரால் ராஜயோகத்தில் முன்னேற விரும்பும்  ஸாதகர்களுக்கு ஏணியாக விளங்கும் மிக உயர்ந்த  ஹடயோக வித்தையானது உபதேசிக்கப்பட்டதோ அந்த ஆதி  நாதராகிய சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள் 

என்ற  மங்கள சுலோகத்தோடுதான்  15 ம் நூற்றாண்டில் யோகி  ஸ்வாத்மராமர் எழுதிய ஹடயோகா  ப்ரதீபிகா எனும் சம்ஸ்க்ருத நூல்  ஆரம்பமாகிறது.   

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை 

நெறிப்படவுள்ளே நின்மலமாக்கில்

உறுப்புச் சிவக்கும் உரோமங்கறுக்கும் 

புறப்பட்டுப் போகான் புரிசடையோனே

                                               ( திருமந்திரம் 556)

உள்ளிருந்து  புறப்பட்டு வெளியே சென்று  பிறகு மீண்டும் உள்ளே சென்று திரிகின்ற காற்றினை, மூச்சுப்பயிற்சி முறைப்படி உள்நிறுத்தி,  அருளால் தூய்மையாக்கி ஒழுகவல்லார்க்கு உடல் ஒளிபெறும், நரை தோன்றாது உயிருக்கு உயிரான சடைக்கடவுளான சிவபெருமான் நீங்காமல் உள்ளத்தில் நிலைத்திருப்பார்  என்று திருமூலரும் இதையே வலியுறுத்துகிறார் 

              இந்த  ஹடயோகம் கடல் கடந்து   மேலைநாடுகளுக்குச் சென்று கடந்த  நாற்பது ஐம்பது வருடங்களாக கொடி கட்டிப்  பறக்கிறது. இந்தியாவின் மிகச் சிறந்த யோகிகள்  மேலைநாடுகளில் யோகசாலைகளை நிறுவி புகழ் பெற்று  விளங்குகிறார்கள். பல புதிய கண்டுபிடிப்புகளும் யோகம் என்ற அடைமொழியினால்  பிரபலமடைந்துள்ளன. உதாரணமாக, சூட்டு யோகம் (Hot yoga) எனும் யோகப்பயிற்சி 90* F உள்ள சுற்றிலும்  மூடப்பட்டுள்ள அறைகளில் செய்யப்படுகிறது. இந்த அளவு சூட்டில் மூட்டுகள் விரிவடைவதால் அதிகமாக உடலை   வளைக்க முடிகிறது என்று யோகப் பயிற்சியாளர்கள் கூறுகின்றனர் எனது 37 வயது மருமகளும் 73 வயதுநண்பரும் கடந்த  சில மாதங்களாக இப்பயிற்சியின் மூலம் உடல் நலம் உயர்ந்துள்ளது என அடித்துச் சொல்கின்றனர். மூளை சக்தியை அதிகரிக்கும்  யோகம் (Superbrain Yoga) எனும் யோகம் புதிய புட்டியில் ஊற்றிய பழைய மதுவாகும் .. நாம் விநாயகர் முன்னிலும் பள்ளிகளில் செய்யும் தவறுகளுக்கு தண்டிப்பாகவும் செய்யப்படும் தோப்புக் கரணமேதான்  அமெரிக்காவில் இப்புதிய பெயருடன் உலாவுகிறது . லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் ஒரு மருத்துவர் பிணியாளர் நினைவு சக்தியை அதிகரிக்கவும், ஆட்டிசம் போன்ற மனநிலை மாற்றங்களையுடைய குழந்தைகளின் ஆசிரியர்கள்  அவர்களது கவனச் சக்தியை அதிகரிக்கவும் மற்றும் பள்ளி மாணவர்கள், வயோதிகர்களுடைய ஞாபக சக்தியைத் தூண்டவும் மிக உபயோகமாகவுள்ளது என்று அமெரிக்க சி.பி எஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒன்றில் பார்த்தேன்  யேல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நரம்பியல்உயிரியலர் (Neurobiologist) இரண்டு காதுகளையும் அழுத்துவதன் மூலம் நரம்பினுள்ளே சாலைவழிகள் அக்குபஞ்சர் முறையில் இயக்கப்படுகின்றன என்கிறார் இப்பயிற்சியினபோது மூளை மின்னலை பதிவில்(E. E. G.)  மூளையின் இரண்டு பக்க இயக்கங்களும் சமன்படுவது தெரிய வந்துள்ளது என்கிறார். எனது தமையனார் முதுகுப் பிடிப்பினால் அவதியுற்று எலும்பு மருத்துவரை சென்று பார்த்தபோது பரிசோதனைகளுக்கு பின் அவர் “உன் வயது முப்பதாக இருக்கலாம் ; ஆனால் உன் கீழ்  முதுகிற்கு எழுபது வயதாகி விட்டது” என்று சொல்லி யோகப்பயிற்சி செய்யுமாறு சொன்னாராம். யோகமண்டலி எனும் புகழ் பெற்ற யோகப்பள்ளியில் கற்று கடந்த 50 வருங்களாக தொடர்ந்து செயது வருவதால் முதுகு பிடிப்பு அல்லது முதுகு வலி என்ற பேச்சே அவரிடமில்லை. மறைந்த  தமிழ் அமைச்சர் சி. சுப்பிரமணியம் அவருடைய மாமா ஸ்ரீ.சித்பவானந்தாவின் ஆசிரமத்தில் வந்து தங்கும்போது விடிகாலையில் எழுந்து 80 ஆசனங்களை செய்வார் என்று சித்சபாவானந்தாவின் சீடர் ஸ்ரீ.ஓம்காரானந்தா சொல்லி கேட்டிருக்கிறேன். முதிய வயதிலும், அவருடைய கட்டு தளராத உடலுக்கு இதுவே காரணம் என்று தோன்றுகிறது.  25 வயதிலிருந்து தொடர்ந்து யோகப்பயிற்சி செய்து வந்த நான் சில வருடங்களாக நேரக்குறைவினால் இதை நிறுத்தி விட்டேன் என்பது வருந்தத்தக்க விஷயம்.

நற்பலன்கள்:

 ஹடயோக ப்ரதீபிகா மனதை அலைபாயாமல் இருக்கச் செய்வதே அனைத்து ஆசனங்களின் முக்கிய நோக்கமும் பலனுமாகும் என்கிறது  அதன் பிறகே ஆசனங்கள் உடலை உறுதியாகவும் நோயில்லாமலும் பாரமின்றி எடை குறைவாக வைத்திருக்கவும் உதவுகின்றன என்றுரைக்கிறது

“ ஹடஸ்ய  பிரதமங்கத்வாதாசனம் பூர்வமுச்யதே

குர்யாத்  ததாசனம் ஸ்தைர்யமாரோக்யம்  சாங்கலாகவம்”

அமெரிக்க ஆஸ்டியோபதி மருத்துவ மன்றத்தின் யோகத்தைப் பற்றிய அறிக்கையில் குடும்பநல  மருத்துவரும் குந்தலினி யோகத்தில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளருமான நெவின் சொல்வதாவது  யோகப்பயிற்சியின் முக்கிய அம்சம் உடலை திடப்படுத்துவதும் உடலையும் மனதையும் ஒருங்கிணைப்பதுதான் என்கிறார். மேலும்   ஆஸ்டியோபதி மருத்துவத்தில் வியாதி வருமுன் தடுக்கும் முறைகளுக்கே முக்கியத்துவம் என்றும் யோகப்பயிற்சியும் அதையே வலியுறுத்துகிறது  என்கிறார். நூறு விதமான யோக முறைகளை கற்பிக்கும் பள்ளிகள் இருந்தாலும் பெரும்பான்மையான பள்ளிகள் சுவாசக் கட்டுப்பாடு, தியானம், ஆசனம் ஆகிய மூன்றிற்கே   முக்க்கியத்துவம் கொடுக்கிறது என்கிறார் நீண்ட நாள் வலியுபாதைக்கு காரணமாயுள்ள இடுப்புவலி, மூட்டுவலி தலைவலி போன்றவைகளுக்கு இப்பயிற்சி சிறந்த நிவாரணம் என்கிறார். யோகப் பயிற்சியின் இதர பலன்கள்  அயர்ந்த தூக்கம், உடல் நெகிழ்வு( Flexibility), வலிமை, ஆற்றல், புத்துணர்வு, சீரான உடலியக்கம், எடைக்குறைவு இதய இரத்தஓட்ட முன்னேற்றம், மற்ற விளையாட்டு துறைகளில் முன்னேற்றம், அடிபடுவதில் குறைப்பு ஆகியவையாம் . இவையெல்லாவற்றையும்  விட யோகப்பயிற்சி மன அதிர்ச்சியையும் சோர்வையும் நீக்கி வாழ்க்கையை எதிர் நோக்கும் கண்ணோட்டத்தை நேர்த்தி செயகின்றது என்று கூறுகிறார் மருத்துவர் நெவின். 

மேயோ க்ளினிக்   வெளிக்கொணரும் மருத்துவசஞ்சிகையின்  மார்ச் மாத இதழில் யோகத்தினால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தமுடியுமா என்பதை அறிவதற்காக முன்பு பிரசுரிக்கப்பட்ட தேர்ந்த 49  ஆராய்ச்சி முடிவுகளைஅலசி யின் வு (Yin Vu) என்பவர் மற்றவர்களுடன் சேர்ந்து ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியுள்ளார். இதன் முடிவு  வாரம் மூன்று முறை தியானம் சுவாசக் கட்டுப்பாடு இவற்றுடன் சேர்ந்து யோகாப்பியாசங்களை செய்வதன் மூலம் இரத்த அழுத்தத்தை 11/6 குறைக்கலாம் என்பதாகும் 
மேலும் யோகப்பயிற்சி தூக்கமின்மையையும் மூட்டு வலியையும்  குறைப்பதற்கு உதவுவதாக சிலகட்டுரைகள் அறிவிக்கின்றன  

தீய விளைவுகள்:
எந்த உடற்பயிற்சியுமே  உடல் நலத்தைதான்கொடுக்கும் வூறு  விளைவிக்காது என்று கூற முடியாது.  யோகப்பயிற்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. யோகாசனங்கள  செய்வதன் மூலம் ஏற்படும் நற்பலன்கள் வெளி வந்த வேகத்திலேயே  அவ்வாசனங்களால் ஏற்படும் உபாதைகள் முக்கியமாக வயதானவர்களிடம் தெரியவந்தன  இதன் காரணம் ஒரு சில ஆசனங்களையே திரும்பத் திரும்ப செய்வதும், கழுத்து தோள் , கீழ் முதுகு,  கால், முட்டி ஆகிய பாகங்களை அதிக அளவில் வளைப்பதுமேயாகும் சதை எலும்பு வலியம் யோகாசனங்களின் மூலம் ஏற்படலாம் 

ஆஸ்திரேலியாவில் யோகாசனம்  செய்பவர்களியிடம் நடத்திய விசாரணையில்  80 சதவீதத்தினர் எவ்வித உபாதையும் அடையவில்லை என்று  தெரிவித்துள்ளனர. மீதி 20 சதவீதத்தினர் யோகாசனத்தினால்  மிகச் சிறிய உபாதைகளே உண்டாயின என்று தெரிவித்துள்ளனர். ஆனாலும் பல உறுப்புகளிலுள்ள தசைநாண்(டெண்டன்)  குருத்தெலும்பு(கார்டிலேஜ்) காயங்களும் யோகாசனத்தில் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது 

மேலே  குறிப்பிடப்பட்ட மேயோ மருத்துவ  சஞ்சிகை இதழிலேயே யோகாசனத்தினால்  விளையும் எலும்புக் காயங்களை பற்றிய  கட்டுரையும் பிரசுரமாயுள்ளது. 2006லிருந்து  2018 வரை யோகப்பயிற்சியினால் தசை எலும்பு காயமடைந்த 82 நபர்களின் மருத்துவ பதிவேடுகளை ஆராய்ந்ததில்  15 நபர்களின் முதுகெலும்பு பின்பக்கமாக வளைந்தும் ஒருபக்கமாக சாய்ந்தும் (Kyphoscoliosis)இருப்பதையும், 15 நபர்களின் முதுகெலும்பு ஒன்றின் மேலொன்று சரிந்திருப்பதும் (Spnodylolisthesis)  16 நபர்களின் முதுகெலும்பு முன் பாகம் சாய்ந்திருப்பதும் (Wedging) 13 நபர்களின் முதுகெலும்பில் முறிவு இருப்பதும் தெரிய வந்தது. முதுகெலும்பை முன்னாலோ அல்லது பின்னாலோ மிக அதிக அளவில் வளைத்துச்  செய்யும் ஆசனங்களே இந்த முதுகெலும்பு காயங்களுக்கு காரணமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. முதுகெலும்பு அடர்த்திக் குறைவாகவோ (Osteopenia) தேய்ந்திருந்தாலோ ( Osteoporosis) மேற்சொன்ன முதுகெலும்புக்   காயங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதால் மருத்துவர்கள் யோகாப்பியாசத்தை பயில விரும்பும் வயோதிகர்களுக்கு சரியான ஆலோசனயை அளிக்க வேண்டும். தலையிலோ, தோளிலோ உடல்பாரம் முழுவதையும நிறுத்தும் ஆசனங்களும் அபாயகரமானதாகும்.  இளைஞர்களும் ஆரம்ப காலத்தில் உயர்நிலை ஆசனங்களை தவிர்ப்பது நல்லது. அளவுக்குமீறி உடம்பை வளைத்தும் திரும்பத் திரும்பச் செய்யும் ஆசனங்களும் யோகாப்பியாசத்தில் ஏற்படும் உபாதைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதால் இவற்றை தவிர்ப்பதே சிறந்த நிவாரணியாகும். யோகப்பயிற்சியாளர்களிடையே மேற்கூறிய உபாதைகள் அதிக அளவில் காணப்படுவதற்கு இதுவே காரணம்.  மேலும் மன அழுத்தத்தையும் சோர்வையும் குறைப்பதற்காக யோகப்பயிற்சியை மேற்கொள்பவர்கள் மேற்சொன்ன உபாதைகளுக்கு ஆட்பட்டால் அவர்களது மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புமுள்ளது  

பயிற்சியாளர்களுக்கு அளிக்கப்படும் 200 மணிநேரபயிற்சியில்   6-10 மணிநேரமே ஆசனங்களினால் ஏற்படும் தீங்குகளையும் அவற்றை தவிர்ப்பதைப் பற்றியும் சொல்லித் தரப்படுகிறது  இது போதவே போதாது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். யோகாசனம் கற்க விரும்புவர்கள் தங்களது உடற்கோளாறுகளை முன்கூட்டியே  பயிற்சியாளர்களிடம் சொல்வதன் மூலம் யோகத்தின் தீய விளைவுகளை தவிர்ப்பதுடன் ஆசனங்களை தொடர்ந்து செய்து உடல் நலத்தை பெறக்கூடும்.   .பயிற்சியளிப்பவர்களுக்கும் ஆசனங்களை மாற்றியமைக்க இது உதவும் 

முக்கிய  குறிப்புகள்:

1.யோகப்பயிற்சி உடல் வலிமையையும், மன அமைதியையும்  அளிக்கும் 

2. யோகாசனங்களை  தியானம், சுவாசக்   கட்டுப்பாடுடன் வாரம்  மூன்று முறையாவது செய்தால்  இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்.

 3.மற்ற  தேகப்பயிற்சிகளை  போல யோகாப்பியாசத்திலும்  தீங்கு விளையும் வாய்ப்புள்ளது. இவைகளை  தவிர்க்கும் முறையாவன :

1.ஆரம்ப  காலத்தில்  கடினமான ஆசனங்களை  தவிர்த்தல்,  

2.உடலை, குறிப்பாக முதுகை,  அளவுக்கதிகமாக வளைக்காதிருத்தல்     

3.பயிற்சி பெறுவோருடன் ஒத்துழைக்கும் தன்மை படைத்த     பயிற்சியாளர்களை தேர்ந்தெடுத்தல்,  

4.உள்ள உபாதைகளை முன்கூட்டியே பயிற்சியாளரிடம் அறிவித்து அதற்கு தக்கவாறு ஆசனங்களை மாற்றியமைத்து கொள்ளுதல் ஆகியவையாம் 

*** ***

ஆதாரம்:
“ஹடயோக  ப்ரதீபிகா “  ஸ்ரீ ஓம்காரானந்தாவின்  யோகா சாஸ்திர விளக்கவுரை.

“Benefits of Yoga” Information by American Osteopathic Association

“Yoga as antihypertensive Lifestyle therapy by Lin Yu et al: Mayo Clinic Proceedings; March 2019; Vloume 94;, Issue 3;  432-446

Soft tissue and bony injuries attributed to the practice of yoga: A biomechanical analysis and implications for management by  Melody Lee,MD et al: Mayo Clinic proceedings: March 2019;94;3; 424-31

Yoga: Safe for all by Raza Awan, MD, MHSc; Mayo Clinic Proceedings: March 2019;94;3;385-87

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.