டெட் சியாங்கின் பேட்டி- டொச்சி ஒனெய்பச்சி – எலெக்ட்ரிக் லிட்

பேட்டியாளர்: டோச்சி ஓன்யெபுச்சி [1]

லைஃப் ஸைகிள் ஆஃப் சாஃப்ட்வேர் ஆப்ஜெக்ட்ஸ்,” (என்ற சிறுகதையில்) நீங்கள் எழுதுகிறீர்கள், “நுழைவுக்கு இருக்கும் பெரும் தடையைத் தவிர, க்ஸீனோதேரியன்களை [1a] வளர்ப்பது, மார்க்கோவைப் பார்த்துக் கொள்வதில் ஆனாவும், டெரெக்கும் பெற்ற மகிழ்ச்சியைப் போன்ற எதையும் கொடுக்காது. கிட்டும் பயன்கள், அறிவு சார்ந்தவையாக மட்டுமே இருக்கும், நீண்ட காலத்து அளவில் அது ஒன்றே போதுமானதாக இருக்குமா?”

இது டிஜியெண்ட் [2]களைப் பற்றிய கதையில் வருவது, தானாக க் கற்கும் செயற்கை அறிவர்களைப் பற்றியது, அவர்கள் டாமகாட்சிகள் [3] பிரக்ஞையோடு இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருப்பவர்கள்; மார்க்கோ மனிதரைப் போன்ற ஒரு டிஜியெண்ட், க்ஸீனோதேரியன்கள் வேற்று கிரகத்தினர் போன்றவர்கள். இவை குறிப்பான அறிவியல் கருத்துகள், உங்கள் கதைகளில் சிலவற்றில் இவற்றை நீங்கள் கவனிக்கிறீர்கள்: ‘த மெர்ச்சண்ட் அண்ட் த அல்கெமிஸ்ட்ஸ் கேட்’ கதையில் வரும் நோவிகோவ் சுய சீர்நிலைக் கோட்பாடு, ”ஸ்டோரி ஆஃப் யுவர் லைஃப்” கதையில் வரும் சேபிர்உவார்ஃப் கருதுகோள் ஆகியன. சில அறிவியல் கோட்பாடுகளுக்கு நீங்கள் சதையும் தசையும் சேர்த்து நீங்கள் அளித்திருப்பதாகத் தெரிகின்றவை. இவை நீங்கள் எழுதும்போது உங்களுக்குத் தோன்றுவனவா? அல்லது எழுதத் துவங்கு முன்னர் இவை யோசிக்கப்பட்டு விட்டனவா?

டெட் சியாங்: அந்த சுவாரசியமான மேற்கோளை இந்தக் கேள்வியைக் கேட்க ஒரு உந்து விசையாகப் பயன்படுத்தினீர்கள். மேற்கோளான வாக்கியம், பிரக்ஞையுள்ள ஒரு ஜீவராசியைச் சிறுகுழந்தைப் பருவத்திலிருந்து வளர்ந்தவராகும் வரை வளர்க்கத் தேவையாக இருக்கும் முயற்சியைப் பற்றியது, உணர்வு ரீதியாகத் தொடர்பு கொள்ளாமல் யாரும் அத்தகைய முயற்சியை நன்கு செய்ய முடியுமா எனும் கேள்வியைக் கேட்கிறது. நீங்கள் அதைப் போன்ற ஒரு முயற்சி நான் கதை எழுதும்போது தேவையாகிறதா என்று கேட்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை, அறிவியல் கருத்து ஒரு கதைக்கான துவக்க நிலை உந்துதல், ஆனால் அது ஒன்றே எழுத் துவங்குவதற்கு எனக்குப் போதுமானதல்ல; முடிவு தெரியும் வரை நான் முதல் வரைவு ஒன்றை எழுதத் துவங்குவதில்லை, அதாவது அந்தக் கதைக்கரு எப்படி முடியும் என்பதும், கதை நாயகரின் இயக்கப் பாதை எப்படி உள்ளது என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு கருத்தைத் துருவும் விதமாக புனைவல்லாத கட்டுரை ஒன்றை எழுத முயற்சிக்கலாமா என்று, ஒவ்வொரு சமயம் நான் யோசித்திருக்கிறேன், ஆனால் இன்றளவில் அது எப்படி இருக்கும் என்பது பற்றி எனக்குத் தெளிவில்லை. நான் கைக்கொள்ளும் சிந்தனைச் சோதனைகளுக்கு புனைவுதான் சிறப்பான வடிவம் என்று நான் நினைக்கிறேன்.

டோ.: ‘லைஃப் சைகிளுக்கு’ திரும்பலாம், டிஜியெண்ட்களில் இருவரான மார்க்கோவும் போலோவும், வாய்ல் என்கிற இன்னொரு டிஜியெண்டைப் போல ஒரு கார்ப்பொரேஷனாக ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள். 2017 ஆம் வருடம் நீங்கள் எழுதிய ஒரு பஸ்ஃபீட் கட்டுரையில் [4], செயற்கை நுண்ணறிவைப் பற்றிய நமது மிகப் பெரிய அச்சம் அது மனிதர் போலவே ஆகிவிடும் என்று நாம் சொல்லும்போது, செயற்கை நுண்ணறிவு ஒரு கார்ப்பொரேஷன் போல, ஒரு ஹைபர் முதலிய அமைப்பாக, எந்த அறவுணர்வு பற்றியும் அக்கறை இல்லாத, தடை செய்யப்பட முடியாத நிறுவனமாகி, மனிதர்களை கற்பனை சுகங்களில்[5] புதைத்து விடும் என்று நாம் அச்சப்படுகிறோம் என்றுதான் அர்த்தம் என்று எழுதினீர்கள். (இமானுவெல்) கான்டின் வழியே நிரந்தரப் பேரழிவு. செயற்கை நுண்ணறிவுடைய வளர்ச்சி பற்றிய கருத்தைப் பற்றிப் பேசுவீர்களா?

டெ.சி: அந்தக் கதையும், அக்கட்டுரையும் செயற்கை நுண்ணறிவை எதிரெதிர் கோணங்களிலிருந்து அணுகுகின்றன. அந்தக் கதை எடுத்தாள்கிற ஒரு கேள்வி, மானுடரல்லாத ஓர் இருப்பு, பிரக்ஞை உள்ளதாகவும், இன்ப துன்பங்களை அனுபவிக்கக் கூடியதாகவும் இருந்தால், அதற்கு நாம் எப்படி சட்டவழி பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பது. சிம்பன்ஸீக்களை சட்டப்படி ஒரு நபர் என்று அறிவிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, ஆனால் இதுவரை அவை எதுவும் வெற்றி பெறவில்லை. மாறாக, மனித ஜீவன்களுடையவை என்று நாம் கருதுகிற பல உரிமைகள் இப்போது கார்ப்பொரேஷன்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. கார்ப்பொரேட்டிய நபர்த் தன்மை என்பது மிருக- உரிமைக்குப் போராடும் செயலர்கள் கேட்கும் பாதுகாப்புகள் அனைத்தையும் கொணராது என்றாலும், ஒருக்கால் சுய உணர்வைக் கொண்ட மென்பொருளை நாம் உருவாக்குகிற நிலை எழுந்தால் செயற்கை நுண்ணறிவுகளுக்கு உரிமை கோருவதற்கு இந்தப் பாதையை நாம் பின்பற்றலாம். ஆனால் நான் இதைச் சொல்ல வேண்டி இருக்கிறது, அப்படி ஒரு மென்பொருளை உருவாக்குவது எப்படி என்று நமக்குச் சிறிதும் தெரியாது, அது நல்ல விஷயம்தான், ஏனெனில் அப்படி ஒரு மென்பொருளை நாம் உருவாக்கி விட்டால், அதன் மீது ஏராளமான துன்பங்களை நாம் நிச்சயம் சுமத்துவோம் என்று நான் நினைக்கிறேன்.

அக்கட்டுரை வேறொரு கேள்வியைப் பற்றியது: ஒரு அதிபுத்திசாலி செயற்கை நுண்ணறிவு உருப்பெற்று வந்தால்- அது நடக்கும் என்பதில் எனக்குச் சிறிதும் நம்பிக்கை இல்லை- அத்தகைய நுண்ணறிவு பிரபஞ்சத்தைக் கைப்பற்றி ஆள விரும்பும் என்று இத்தனை மனிதர்கள் ஏன் நினைக்கிறார்கள்? இந்த எண்ணம் ஸிலிகான் பள்ளத்தாக்குடைய முதலியத்தைப் பார்த்து எழுகிறது என்று எனக்குத் தோன்றுகிறது: தொழில்நுட்ப முன்னோடிகள் தாம் அறிவு பூர்வமாக யோசிப்பவர்கள் என்று நம்புகிறார்கள், வளர்ச்சியை மற்றெதற்கும் மேலே வைக்கிறார்கள், அதனால் அதிபுத்திசாலி ஜீவராசியும் அதையேதான் செய்யப் போகிறது என்ற கருத்து இது. கார்ப்பொரேஷனாகிய சட்ட அமைப்பு என்ற கருத்தின் உள்ளர்த்தம் அது அல்ல, ஆனால் இன்று அமெரிக்க சமூகம் லாபத்தைத் துரத்துவதைப் பெருமிதப்படுத்துகிறது, அதனால் கார்ப்பொரேஷன்களுக்கு மேன்மேலும் அதிகாரங்களைக் கொடுக்கவும், அவை தம் செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியதைக் குறைக்கவும் முன்வருகிறது. செயற்கை நுண்ணறிவு என்பது உணர்ச்சியற்ற, சிறிதும் இரக்கமற்ற ஒன்றாக இருக்கும் என்ற நினைப்பு தொழில் நுட்பம் பற்றிய நம் அச்சத்திலிருந்து எழுவது. தொழில் நுட்பத்தைப் பார்த்து நாம் அச்சம் கொள்வதற்கான காரணங்களில் ஒன்று, இருப்பதிலேயே மிகவும் இரக்கமற்றதும், உணர்ச்சியற்றதுமான எந்திரமான முதலியத்தால் அந்தத் தொழில் நுட்பம் நமக்கு எதிராக எப்படிப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதுதான்.

டோ.ஒ: உங்கள் கதைகளில் ஓர் ஆழ்ந்த மனிதநேயம் புலப்படுகிறது, அதனால் எந்திர மனிதர்களும், கிளிகளும் கூட ஏதோ அடிப்படையான விதங்களில் நம்மைப் போலவே இருக்கிறார்கள். குறிப்பாக புத்தகத்தின் தலைப்பைக் கொண்ட கதையில், ஒரு எந்திர மனிதன், தன் சுய உணர்வுடைய மூலாதாரம் பற்றி அறியும் ஆர்வத்தை மேற்கொள்கிறான். இருந்தாலும், இந்தக் கதைகளில் எழும் மோதல்களில் அனேகமும் இவற்றின் நாயகர்கள் மனிதர்கள் இல்லை என்ற விவரத்திலிருந்துதான் எழுகின்றன. நான் சொல்லப் போவது அர்த்தமுள்ளதாகத் தெரிகிறதா என்று பார்க்கலாம், இக்கதைகள் திரும்பும் விதத்துக்கு எதிராக அவை சுழல்வதாகத் தோன்றுகிறது. மேலும், கதை நடத்தலின் உந்து விசை மனிதரல்லாதவை மனித குணாம்சங்களை வெளிப்படுத்துவதிலிருந்து பிறக்கிறது என்பது பற்றி நீங்கள் ஏதும் சொல்வீர்களா என்று நான் யோசிக்கிறேன்.

டெ.சி: அதெல்லாம் குறிப்பிட்ட கதையைப் பொறுத்தது. கதை சொல்லியை மனிதரல்லாத ஒன்றாக வருணிப்பது சிறிது தவறானது, ஏனெனில் அப்போது ஒப்பீட்டுக்கு அங்கு மனிதர்கள் இருப்பது போல ஒரு சுட்டல் வரும். ஆனால் ‘எக்ஸ்ஹலேஷன்’ கதை நம் பேரண்டத்திலேயே நடப்பதல்ல, அதனால் அங்கு நம் போன்ற மனிதர்களே இல்லை; இன்னொரு விதமாகச் சொன்னால், அந்தப் பேரண்டத்தில் மனிதர்கள் என்பார் இருந்தால், அந்த குலத்தில் கதை சொல்லி ஒரு உறுப்பினராக இருப்பார். அவற்றை ரோபாட்டுகள் என்று சொல்வதும் சரியில்லை, ஏனெனில் ரோபாட்டுகளின் குறிப்பிட்ட லட்சணம் அவை உற்பத்தி செய்யப்படுவன என்பதுதான், இவையோ அத்தகையன அல்ல. அவை உலோகத்தால் ஆனவை என்பது இருக்கிறது, ஆனால் அது ஒரு ஒப்பனை போன்ற குணம்; அந்தப் பேரண்டத்தில் அவற்றுக்கு இருக்கும் ஸ்தானம், நமக்கு நம் பேரண்டத்தில் இருப்பதை ஒத்தது. அதனால்தான் அவை நம் போலத் தொனிக்கின்றன.

டோ.ஒ: உங்கள் கதைகளில் ,”ஹெல் ஈஸ் த ஆப்ஸென்ஸ் ஆஃப் காட்” மேலும் “ஓமாஃஃபாலோஸ்”, ஆகிய இரண்டும்m எனக்கு மிகப் பிடித்தவை. அந்த இரண்டிலும் நான் மிக மெச்சுபவை, முதல் கதையில் ஆன்மிகத் தன்மைகளும், இரண்டாவதில் நம்பிக்கையும் மிகத் தீவிரமாகவும், நான் இதைச் சற்று துணிச்சலாகச் சொல்வேன், கருணையோடும் எடுத்தாளப்பட்டிருக்கின்றன என்பது, ”ஓமஃபாலோஸ்” கதையில் குறிப்பாக, மத நம்பிக்கை என்பது அறிவியல் விசாரணைக்குத் துணை நிற்பதாக உள்ளதோடு, அதற்கு இயக்கச் சக்தி தருவதாகவும் உள்ளது. அறிவியல் விசாரணை என்று நாம் கருதுவதற்கும், இதர வகைச் சிந்தனைகளின் செயல்முறைகளுக்கும் -அவை சான்று இல்லாதவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை என்று சிலர் வாதிடுவார்கள்- உள்ள தொடர்பு பற்றி ஏதும் சொல்வீர்களா?

டெ.சி: அறிவியலாளர் (சைன்டிஸ்ட்) என்ற சொல் உருவாக்கப்படுமுன், பேரண்டத்தை ஆராய்ந்தவர்கள் இயற்கைத் தத்துவவாதிகள் என்று அழைக்கப் பட்டார்கள், அவர்களில் பலர் பாதிரிகளாக இருந்தவர்கள். அவர்கள் இறைவனின் மகிமையைக் கொண்டாட, அவர் படைத்த உலகு பற்றி மேன்மேலும் அறிவதைப் பயன்படுத்தினர், அறிவியல் கண்டு பிடிப்பு ஏதும் நடந்தால் அவர்களுக்கு அதில் கிடைத்த உணர்ச்சி மதநம்பிக்கையில் கிட்டும் பிரமிப்பை ஒத்திருந்தது. சிலர் அதிசய உணர்வு என்பது புரிதலோடு இசையாது என்றும், அதற்கு மர்ம உணர்வுதான் தேவை என்றும் நினைக்கிறார்கள், ஆனால் அறிவியல் ஆய்வுகளில் அதிசய உணர்வுக்கு நீண்ட மரபு உண்டு.

மதமும் அறிவியலும் அமைதியாக அருகருகே இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன், அதற்கு அவை இரண்டும் வெவ்வேறு கேள்விகளுக்குப் பதில்களைத் தேடுகின்றன என்று நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்; அறிவியல் “பேரண்டம் எப்படி இயங்குகிறது?” என்ற கேள்வியை ஆராய்கிறது, மதமோ “என் வாழ்வை நான் எப்படி வாழ வேண்டும்?” என்ற கேள்வியைத் துருவி நோக்குகிறது. என் கருத்தில், இவை இரண்டையும் பிரித்துப் பார்ப்பது சாத்தியமாக இருக்கும். ஒருவர் எப்படி நல்ல மனிதராக இருப்பது என்பது ஒரு சோதனைக் கூடத்து ஆய்வின் முடிவுகளை நம்பி இருக்கத் தேவை இல்லை. நான் இப்படி ஒரு நிலைபாட்டை எடுப்பது எனக்கு முடிவதற்கு நான் நாத்திகன் என்பது காரணமாகும் என்பது தெளிவு. சரியாக எப்படி வாழ்வது என்பது குறித்து மக்கள் ஒன்றுபடாமல் இருப்பது எப்போதும் நடப்பதுதான், ஆனால் அவர்கள் பிரபஞ்சத்தின் வயது பற்றியும், ஜீவராசிகள் எப்படித் தோன்றின என்பது பற்றியும் தம் நம்பிக்கைகளை வலியுறுத்தி அந்த வாதப்பிரதிவாதங்களைச் செய்யாமல் இருப்பதை நான் விரும்புகிறேன்.

டோ.ஒ: “த ட்ரூத் ஆஃப் ஃபாக்ட், த ட்ரூத் ஆஃப் ஃபீலிங்,” கதையில் ஒரு அருமையான வரியைக் கொடுக்கிறீர்கள்: “மேலும் வார்த்தைகள் பேச்சின் துண்டுகளாக மட்டுமல்ல, சிந்தனையின் துண்டுகளாகவும் இருந்தன.” வேறெந்தக் கதையையும் விட, இந்தக் கதை என்னை அறிதல் முறைகளைப் பற்றியும், எப்படி எழுதுவது என்ற செயலே உலகைப் பற்றிய ஒருவரின் புரிதலை மாற்றி அமைக்கக் கூடும் என்பதையும் பற்றி யோசிக்க வைத்தது. அது “ஓம்ஃபாலோஸ்” கதையை ஒரு பகுதியில் பிரார்த்தனை போல ஏன் அமைத்தீர்கள் என்பதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள எனக்கு ஆர்வமூட்டியது. அந்த பிந்தைய கதை படிப்பதற்கு எழுத்து முறைக் கல்வி இன்னம் எழாத சமூகத்தில் கதை சொல்லல் எப்படி இருந்திருக்கும் எனும் கேள்விக்கான ட்ரோஜன் குதிரை விடை போல [6] தெரிகிறது. “ஓம்ஃபாலோஸ்” கதையின் கட்டமைப்பு உங்களுக்கு எப்படித் தோன்றியது?

டெ.சி: [நீங்கள் சுட்டும்] அது ஒரு சுவாரசியமான தொடர்பு. ஏனெனில் நான் அந்த இரண்டையும் தொடர்புள்ளவையாகப் பார்த்திருக்கவில்லை. “ஓம்ஃபாலோஸ்” எழுதிப் படிக்கும் ஒரு சமூகத்தில் நடக்கிறது என்பது தெளிவு, மேலும் எனக்குத் தெரிந்த வரையிலும் எழுத்துத் தொடர்பு முறை புழங்கும் சமூகத்திலும், வாய்வழித் தொடர்பு புழங்கும் சமூகத்திலும் கவனிக்கப்படுமளவு பிரார்த்தனையின் பங்கு அத்தனை வேறுபட்டிருப்பதாகத் தெரியவில்லை. “ஓம்ஃபாலோஸ்” கடவுளோடு ஒரு தனிப்பட்ட உரையாடல் போல அமைக்கப்பட்டிருக்கிறது, ஆனால் வழக்கமாக பிரார்த்தனை என்பதோடு தொடர்பு படுத்தப்படும் வேண்டுகோள் அல்லது முறையீடு போல அது இல்லை; அன்றாட வாழ்வில் இறைமையோடு கொள்ளும் தொடர்பு பற்றிய உணர்வைப் பற்றியது. முந்தைய கேள்விக்கு அளித்த பதிலில் நான் சொன்னதைப் போல, ஒரு காலகட்டத்தில் அறிவியல் செயல் முறை மதப் பழக்கங்களோடு முழுதுமே ஒத்துப் போவதாக இருந்தது. “ஓம்ஃபாலோஸ்” நடக்கும் உலகில் அறிவியலாளர்கள் கடவுளின் இருப்பைப் பற்றித் தொடர்ந்து நினைவூட்டப்படுகிறார்கள், அதனால் கதையின் மையப் பாத்திரம் தன் எண்ணங்களைக் கடவுளிடம் எடுத்துரைப்பதாக கதைநடப்பை அமைப்பது பொருத்தமானதாகத் தோன்றியது.

டோ.ஒ: அறிவியல் புனைவுகளில் சமீபத்து மாறுதல்களில் ஒன்று இதர மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்படும் நூல்கள் அமெரிக்கச் சந்தையில் அதிகரித்துள்ளதுதான். சீனச் சிறு கதைகளில் கென் லியூவின் முயற்சிகளும், லியூ ட்ஸூஷீனின் மூன்று நாவல் தொகுப்பான ‘ரிமெம்பரன்ஸ் ஆஃப் எர்த்’ நூல்களும், ஹாஸ்ஸன் ப்ளாஸிமின் ஈராக்+100 சிறுகதைத் தொகுப்பும். இப்படி இங்கிலிஷ் மொழியில் துவங்காமல் வேற்று மொழிகளிலிருந்து கிட்டும் கதைகளால் இந்த வகை புனைவிலக்கியத்தில் என்ன தாக்கம் இருக்கும் என்று நீங்கள் பார்க்கிறீர்கள்?

டெ.சி: லீயூ ட்ஸுஷீனின் த்ரீ பாடி ப்ராப்ளம் (புத்தகம்) இங்கிலிஷில் வெளி வந்த போது, அந்தப் புத்தகத்தைப் படிக்க முடியவில்லை, ஏனெனில் அதன் மொழி பெயர்ப்பு மோசமாக இருந்தது என்று சொன்ன பலரை நான் பார்த்தேன். அதைப் படிக்கும்போது இங்கிலிஷில் எழுதப்பட்டது போல இல்லை என்கிறார்கள் என்று அதை நான் புரிந்து கொண்டேன். உதாரணமாக, உம்பர்த்தோ எக்கோ எழுதிய த நேம் ஆஃப் த ரோஸ் என்ற நாவல் முதலில் இத்தாலிய மொழியில் எழுதப்பட்டது என்று உங்களுக்குத் தெரிந்திராவிட்டால், வில்லியம் வீவரின் (இங்கிலிஷ்) மொழி பெயர்ப்பைப் படிக்கையில் அது உங்களுக்குத் தெரிய வந்திராது. த்ரீபாடி ப்ராப்ளம் அப்படி இருக்கவில்லை. அது தெளிவாக அன்னியமானதாகத் தெரிகிறது, அது அறிவியல் புனைவுகளில் அயல் மரபு ஒன்று பற்றிய ஒரு காட்சியைக் கொடுக்கிறது. நான் இராக்+100 புத்தகத்தைப் படிக்காவிட்டாலும், அது பற்றிய ஒரு மதிப்புரையைப் படித்தேன், அதில் விமர்சகர் சொல்கிறார் அந்தக் கதை, “இங்கிலிஷில் அதன் வழக்கத்துக்கு மாறான உருவமும், வளைந்து நெளிந்து அலையும் நடையும் என்னைத் திண்டாட வைத்தாலும், அந்தக் கதை அரபிய மொழியில் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டால், வேறொரு வகை கதைக்கும் பின்னணிக்கு நகர்ந்து, முற்றிலும் பொருத்தமானதாகத் தெரிந்தது.”

கோட்பாட்டளவில், அறிவியல் புனைவைப் படிப்பவர்கள் எதையும் பலவேறு கோணங்களில் பார்ப்பதில் ஈடுபாடுள்ளவர்களாக இருக்க வேண்டும், பல மொழிகளில் இருந்து மொழி பெயர்க்கப்படும் அறிவியல் புனைவுகள் அதை நிச்சயம் நமக்கு அளிக்கின்றன. அமெரிக்க வாசகர்கள் அன்னிய மொழிகளின் கதை சொல்லும் பாணிகளுக்குப் பழகிக் கொள்ள இன்னும் கொஞ்ச காலம் ஆகலாம்.

டோ. ஒ: ஆன்னி டில்லர்ட் 1989 இல்,“ரைட் டில் யூ ட்ராப்” என்னும் ஒரு கட்டுரையில் எழுதுகிறார்: “[எழுத்தாளர்களாகிய] நீங்கள் ஆக்கப்பட்டு இங்கு பொருத்தப்பட்டிருக்கிறது இதற்குத்தான், உங்களுடைய சொந்தப் பெருவியப்புக்குக் குரல் கொடுக்க.” இந்த செயல்திட்ட அறிவிப்பு, உங்களுக்கும், உங்கள் படைப்புகளுக்குமான சரியான விளக்கமாக இருக்கிறது என்று சொல்வீர்களா?

டெ.சி: க்ளாரியன் பட்டறையில் மாணவனாக இருந்த போது, அந்தக் கட்டுரையிலிருந்து ஒரு எடுகோளை என் மாணவ விடுதியறையின் கதவில் ஒட்டி வைத்திருந்தேன், அதில் இந்த வாக்கியம் இருந்தது, எழுதும் கலை பற்றிய வகுப்பில் படிக்கும் இந்நாள் மாணவர்களிடம் நான் பேசுகையில், அந்த வாசகத்தை நான் எப்போதும் மேற்கோளாகக் கொடுக்கிறேன். உதாரணமாக, இன்னோரிடத்தில் அவர் சொல்கிறார், “பெயர் பெற்ற எழுத்தாளர் ஒருவரை பல்கலை மாணவர் ஒருவர் இடை மறித்துக் கேட்டார், ‘நான் ஓர் எழுத்தாளனாக முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?’ ‘அதுவா,’ அந்த எழுத்தாளர் சொன்னார், ’எனக்கு அது தெரியல்லை…. உங்களுக்கு வாக்கியங்கள் பிடிக்குமா?’” ஓர் உரைநடையாளனாக என் திறமையைப் பற்றி எதையும் நான் சொல்லிக் கொள்ளவில்லை, ஆனால் எனக்கு வாக்கியங்கள் பிடிக்கும். சில எழுத்தாளர்களுக்கு காட்சிகள் அல்லது சம்பவத் தொகுப்புகள் அல்லது பாத்திரங்கள் எழுத உந்துதல் பெறுகிறார்கள் என்றாலும், என் தலையில் ஒரு வாக்கியம் எழும்போது எனக்கு ஒரு கதை எழுத வேண்டும் என்று தோன்றும். வேறோரிடத்தில் அவர் சொல்கிறார், “நான் ஒரு புத்தகத்தை எழுதுகிறேன் என்பதை விட, மரணப் படுக்கையில் இருக்கும் ஒரு நண்பருக்குத் துணையாக அமர்கிறேன் எனலாம். அதன் கையைப் பிடித்துக் கொண்டு, அது நலமடையும் என்று எதிர்பார்த்திருக்கிறேன். பார்வையிட வரும் நேரங்களில், அதிருக்கும் அறையில் அச்சத்தோடும், அதன் பல கோளாறுகள் பற்றிப் பரிவோடும் நுழைகிறேன். அதன் கையைப் பிடித்துக் கொண்டு அது நலம் பெறும் என்று நம்புகிறேன்.” எழுதுவது எனக்கு மகிழ்ச்சி தருவதில்லை, ஆனால் நான் செய்ய வேண்டிய வேலைகளில் அது ஒன்று.

டோ.ஒ: உங்கள் கதைகளில் வரும் மனித இயல்பு இருண்ட விளிம்புகள் கொண்டதாக இருக்கிற போதும், அவற்றூடே நம்பிக்கைச் சரடு ஒன்று ஓடுகிறது. இது உங்களுடைய நடைமுறையில் ஒரு சுபாவமானதா, அல்லது எதிலும் குற்றம் காணும் நோக்குக்கு எதிராக உங்கள் வேலையில் நீங்கள் முனைந்து போராடுகிறீர்களா? “வாட்ஸ் எக்ஸ்பெக்டட் ஆஃப் அஸ்” மற்றும் “ஆன்க்ஸைடி ஈஸ் த டிஸ்ஸினெஸ் ஆஃப் ஃப்ரீடம்” ஆகிய கதைகளைக் குறிப்பாக இங்கு நினைக்கிறேன்.

டெ.சி: பதின்ம வயதினனாக நான் இருக்கையில், அடிக்கடி நான் ஒரு குறை சொல்லி என்று என்னைப் பழி சாட்டி இருக்கிறார்கள், அதற்கு நான் அவநம்பிக்கையாளனே அன்றி எதிலும் குறை காண்பவன் அல்ல என்பது எப்போதும் என் பதிலாக இருந்தது. என்ன வித்தியாசம் என்றால், மோசமான விளைவுகள் நேரும் என்று நான் அடிக்கடி எதிர்பார்த்தேன் என்றாலும், மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள், அல்லது குறைந்த பட்சம் தம் உள்நோக்குகளை வெளிப்படையாகவே காட்டுபவர்கள் என்று நான் நம்பியிருந்தேன். அதற்குப் பிறகு நான் நிறைய முறை பார்த்து விட்டேன் – தொலைவிலிருந்தும், அருகாமையிலும்- எப்படி அனேக நேரம் மனிதர்களின் நடத்தை கெடு நோக்கிலும், பொய்மையிலும் வேரூன்றி இருக்கிறது என்பதை. அதனால் நான் குறை சொல்லி என்று இப்போது என்னைச் சொன்னால் அது நியாயமானதாக இருக்கும். (மயக்கங்கள் உதிர்ந்து விட்ட லட்சியவாதியை விடக் கூடுதலான குறைசொல்லியைப் பார்க்கவியலாது என்று சொல்வார்களே.) பல எழுத்தாளர்கள் இப்படிப் பட்ட அனுபவங்களிலிருந்து தம் புனைவுகளுக்கு சக்தியைப் பெறுகிறார்கள், ஆனால் என் கற்பனை அப்படி வேலை செய்வதாகத் தெரியவில்லை. எதிலும் குறை காணும் நோக்குக்கு எதிராக இயங்க என் படைப்புகளில் நான் பாடுபடுகிறேன் என்பதை விட, குறை காண்பதையே மேன்மேலும் ஊக்குவிக்கும் கதைகளில் இப்போது நான் அதிக ஈடுபாடு கொள்ளவில்லை என்று சொல்லலாம்.

டோ.ஒ: “ஓம்ஃபாலோஸ்” கதையைப் படிக்கும்போது எனக்கு ஒன்று தோன்றியது, உங்கள் கதைகள் அறிவியல் தாவல்களைப் பற்றியவை போலத் தெரிகின்றன. ஆனால் அந்த அறிவியல் விசாரணையின் குறிக்கோள் ஒரு சாதனமாகவோ அல்லது பிரபஞ்சத்தின் வேறு தூலமான எதையும் பற்றியோ அல்லாமல், குறிக்கோளாக இருப்பது சுயத் தன்மைதான். உங்கள் கதைகளை இணைக்கும் முதுகெலும்பு ஒன்று உண்டென்றால் அது இதுதான்.

டெ.சி: ஃபாக்னர் சொன்னதாகப் பிரபலமாக ஒன்று உண்டு, “எழுதப்படத் தக்க கரு ஏதேனும் ஒன்று உண்டானால் அது மனித மனம் தன்னோடே போராட்டத்தில் இருப்பதுதான்.” நான் அறிவியலை மிக நேசிக்கிறேன், ஆனால் நாம் புனைவைப் பற்றிப் பேசுகிறோம், அபுனைவை அல்ல, அறிவியல் அந்த வகைக் கதைப்பைத் தாங்கி நிறுத்தக் கூடியதல்ல. அறிவியல் புனைவு அறிவியலைப் பயன்படுத்தி, மனித நிலையை ஒளியூட்டிக் காட்டுகிறது, என் நோக்கில் அதுதான் அந்த வகைப் புனைவுகளை எழுதுவதையும், வாசிப்பதையும் பயனுள்ளதாக ஆக்குகிறது.

***

பின்குறிப்புகள்:

[1] டோச்சி ஒன்யேபுச்சி ஒரு புனைவெழுத்தாளரும் கூட ( Tochi Onyebuchi ) இவரைப் பற்றிய சிறு குறிப்பை இங்கே நமக்கு அளிப்பது Uncanny Magazines என்னும் பதிப்பு.

Tochi Onyebuchi is a graduate of Columbia Law School and L’institut d’études politiques in Paris. Prior to law school, he attended Yale University and New York University’s Tisch School of the Arts. His fiction has appeared in IdeomancerAsimov’s Science FictionSeven ScribesObsidian, and Omenana, and is forthcoming from Tor.com. His debut young adult novel, Beasts Made of Night, was published October 2017 by Penguin Random House’s Razorbill imprint. Its sequel, Crown of Thunder, hits shelves October 2018. He tweets, on occasion, at @TochiTrueStory.

[1a] Xenotherian- xeno+therian= Foreigner or stranger+ belonging to a mammalian subspecies.

அன்னிய பாலூட்டி ஜீவராசி.

[2] Digient – ஒரு வகையான தானியங்கி சக்யர்கள், அல்லது துணைவர்கள். ரோபாட்கள் போன்றன. ஆனால் இவை எந்திரங்களா, வளர்ப்பு மிருகங்கள் போன்றனவா, அல்லது சிறு குழந்தைகள் போன்றனவா என்பது ‘த லைஃப் சைகிள் ஆஃப் சாஃப்ட்வேய்ர் ஆப்ஜெக்ட்ஸ்’ என்கிற கதையின் மையத்திலிருக்கும் கேள்வி.

[3] Tamagotchi = ஜப்பானிய விளையாட்டுப் பொம்மை. 1990களில் குழந்தைகள் உலகைப் பீடித்தாட்டிய ஒரு எலெக்ட்ரானிக் கருவி. இது பற்றிய குறிப்பை விக்கி கொடுக்கிறது. இதன் சமீபத்திய அவதாரத்தை பிபிசி இங்கு சுருக்கமாகத் தருகிறது. https://www.bbc.com/news/business-48362289 . ஆனால் உலகம் இப்போது கட்டு மீறிய நுகர்வுப் பண்பாட்டில் பித்துப் பிடித்து அலைகிறதால், இந்தக் கருவிக்கும் மதிப்புரை எழுதச் சிலர் உண்டு, அதைப் பிரசுரிக்கவும் பத்திரிகைகள் உண்டு. பணம் படுத்தும் பாடு, வேறென்ன? அப்படி ஒரு கிறுக்குக் கட்டுரை இங்கே. ஆனால் கடைசி வரியில் கட்டுரையாளர் கொஞ்சம் புத்தி இருப்பதாகக் காட்டுகிறார். https://www.engadget.com/2019/05/13/tamagotchi-on-virtual-pet-hands-on/

[4] டெட் சியாங் எழுதிய பஸ்ஃபீட் கட்டுரைக்கான சுட்டி இங்கே: https://www.buzzfeednews.com/article/tedchiang/the-real-danger-to-civilization-isnt-ai-its-runaway

[5] கற்பனை சுகங்கள் என்று இங்கு எழுதப்பட்ட சொல்லுக்கு இங்கிலிஷ் மூலம் ஸ்ட்ராபெர்ரி ஃபீல்ட்ஸ் என்ற சொல். இது இங்கிலிஷில் பற்பல பொருட்களைக் கொடுக்கக் கூடிய அடர்ந்த சொல். இதன் ஒரு பொருள் பாப் இசைக் கலைஞர்களில் பிரக்யாதி பெற்ற பீட்டில்ஸ் என்ற குழுவினரின் ஒரு பாடலோடு பொருந்துவது. ஜான் லென்னான் என்ற பாடலாசிரியரின் இப்பாடல் பற்றி மேலும் அறிய இங்கே செல்லவும். https://en.wikipedia.org/wiki/Strawberry_Fields_Forever

இதன் உட்பொருளாக இங்கு கொடுக்கப்பட்ட சொல் கற்பனை சுகம் என்பது. முதலியம் போலி சுகங்களை மக்களுக்குக் கொட்டிக் கொடுத்து, அசல் வாழ்வின் அருமைகளை அவர்கள் அறிய விடாமல் செய்வதையே தொடர்ந்து செய்யும், அப்படி ஒரு செயலின் அற்பத்தனம், அறப்பிறழ்வு குறித்து பெரும் கார்ப்பொரேஷன்களுக்குச் சிறிதும் நாணமோ, கூச்சமோ இராது என்று இந்தக் கேள்வியின் வரி சுட்டுவதாக என் எண்ணம்.

[6] ட்ரோஜன் ஹார்ஸ் என்ற பதம், இங்கிலிஷில் ஒரு போர் முறை, அல்லது தந்திரச் செயலைக் குறிக்கும். ட்ராய் நகரை முற்றுகை இட்ட கிரேக்கர்கள் நீண்ட முற்றுகைக்குப் பிறகும் ஏதும் முன்னேற்றம் காணாது, தந்திரம் ஒன்றை முயற்சிக்கிறார்கள். பெரும் மரக்குதிரை ஒன்றை உருவாக்கி, அதனுள் சில கிரேக்கப் படைவீரர்கள் ஒளிந்து கொள்கின்றனர். அக்குதிரையை நகர் மதில்களுக்கு வெளியே நிறுத்தி விட்டு கிரேக்கக் கப்பல்கள் தம் நாட்டுக்குத் திரும்புவது போலச் சென்று விடுகின்றன. மரக்குதிரையை நகருக்குள் இழுத்துக் கொண்ட ட்ராய் நகர மக்கள் வெற்றியைக் கொண்டாடி விட்டு உறங்குகிறார்கள். இரவில் அந்தக் குதிரைக்குள்ளிருந்து வெளியே வரும் கிரேக்க வீரர்கள் நகரத்து வாயில் கதவுகளைத் திறந்து விடவும், இடையில் திரும்பி வந்து விட்ட கிரேக்கக் கப்பல்களிலிருந்து வீரர்கள் நகரைத் தாக்கி அழித்து போரை வெல்கிறார்கள்.

அதிலிருந்து ட்ரோஜன் குதிரை என்பது தந்திரமான முறையில் போரை, இழுபறிகளை வெல்வது என்ற பொருளில் வழங்கப்படுகிறது.

டெட் சியாங் பற்றிய ஒரு கட்டுரை: https://stories.californiasunday.com/2015-01-04/ted-chiang-scifi-perfectionist/

One Reply to “டெட் சியாங்கின் பேட்டி- டொச்சி ஒனெய்பச்சி – எலெக்ட்ரிக் லிட்”

  1. அறிவார்ந்த தளத்தில் நிகழ்ந்துள்ள நேர்காணல்.கேட்பவர் ஆழமாகவும், நுட்பமாகவும்கதைகளுக்குள் சென்றிருந்தால்தான் இத்தகைய பேட்டி எடுக்க முடியும்.சுய உணர்வு பெறக்கூடிய வாய்ப்புகள் செயற்கை நுண்ணறிவுகளுக்கு அமைந்தால் அவைகளின் உரிமைகளுக்காகவும்,அவற்றின் மேல் துன்பங்களை நாம் சுமத்தாது இருப்பதற்காவும் டெ.சி சொல்வது கடவுளையும் மனிதர்களையும் ஒரு கோணத்தில் காட்சிப் படுத்துகிறது. நல்ல மொழி பெயர்ப்பு. நன்றிகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.