அம்பையின் முறியாத சிறகுகள்

ஒரு வெளிநாட்டு எழுத்தாளரிடம் நீங்கள் எப்படிக் கதை எழுதுகிறீர்கள்? என்று கேட்டார்களாம். 

அவர் , ‘என் ஜன்னலகளைத் திறந்து வைக்கிறேன், பறவைகளைப் போல கதைகள் உள்ளே நுழைகின்றன,’ என்றாராம். அவர் அப்படிச் சொன்னதை அம்பையிடமும் சொல்லி ‘உங்களுக்கு எப்படி? ‘ என்று கேட்டிருக்கிறார்கள் 

அதற்கு அம்பை சொன்ன பதில் : 

“ஜன்னல், பறவை என்பதெல்லாம் ரொம்பவும் கவித்துவமானதுதான். ஆனால் பெண்களுக்கு அப்படி அமைவதில்லை. மேலும் ஜன்னல் இருப்பதும் அதைத் திறக்கும் அதிகாரமும் அப்படியே திறந்தாலும் அதில் பறவைகள் உள்நுழைய அனுமதிக்கும் அதிகாரமும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டுமே!” என்றாராம். 

சமூகத்தில் பெண்ணின் நிலையை இவ்வளவு தெளிவாக முன் வைக்கும் அம்பை தான் எக்காலத்தும் தன்னை ஒரு பெண் எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தப்படுவதை எதிர்த்தே வருகிறார். பெண் எழுத்தாளர்களில் சிறந்த எழுத்தாளர் அம்பை என்ற அடையாளத்தில் இருக்கும் நுண் அரசியலையும் அம்பை மிகத் தெளிவாக அறிந்திருக்கிறார். அதனால் தான் ஆண் பெண் அடையாள மறுப்பை ஏற்ற மகாபாரதக் கதைப் பாத்திரமான அம்பை என்ற கதைப்பாத்திரம் அம்பைக்கு மிகவும் நெருக்கமானதாகிறது. 

அம்பை தன் புனைப்பெயருக்கான காரணத்தைச் சொல்லும்போது மகாபாரத அம்பையுடன் சேர்த்து இன்னொரு அம்பையையும் முன் வைக்கிறார். அவர் தன் 9 வயதில் வாசித்த ஒரு புதினத்தின் கதைப் பாத்திரம் தன்னை மிகவும் பாதித்தாக பதிவு செய்திருக்கிறார். சென்னையில் வசிக்கும் கணவன் மனைவி இருவரில் வழக்கம்போல கணவன் எப்போதும் மனைவியை மட்டம் தட்டிக்கொண்டே இருக்கிறான். ஒரு நிலையில் அவளை விரட்டி விடுகிறான். அப்பெண் தனித்து நின்று வாழ்க்கையை எதிர் கொள்கிறாள். 

டீச்சராக வேலைப் பார்க்கிறாள். எழுத ஆரம்பிக்கிறாள். அவளின் எழுத்து அவளுக்கு அடையாளத்தையும் புகழையும் கொடுக்கிறது. காலப்போக்கில் அவன் வேலை இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிடுகிறான். அவனைத் தேடிவரும் அவள் அவனுக்கு ஒரு வேலை வாங்கிக்கொடுக்கிறாள். அவன் மீண்டும் அவளுடன் பழைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அழைக்கிறான்.  இன்னும் ஒரு படி மேலே போய் அவள் இனி எழுதுவதை விட்டுவிடவேண்டும் என்றும் சொல்கிறான். அவனிடம் அவள் எதுவும் சொல்லாமல்ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு வெளியேறுகிறாள். 

“உனக்கு வேலை கிடைத்தாகிவிட்ட து. உன்னோடு மீண்டும் அந்தப் பழைய வாழ்க்கைக்கு திரும்ப விருப்பமில்லை.“ 

இந்த முடிவை எழதிய அந்தக் கதைப்பாத்திரத்தின் பெயர் “அம்பை” . தன்னை மிகவும் பாதித்த ஒரு பெண்ணின் கதை என்று சொல்லும் அம்பை இதுதான் லஷ்மி என்ற பெண் அம்பையாக மாறியதன் முதல் அத்தியாயம். இந்தக் கதைப் பாத்திர அம்பையின் தாக்கம் எழுத்தாளர் அம்பையின் மன ஓட்டத்தையும், திடமான முடிவு எடுக்கும் பெண்ணாகவும் பெண்களை அடிமைப்படுத்தும் மரபுகளுக்கு எதிராக எழுத்திலும் வாழ்க்கையிலும் போராடும் அடையாளமாகவும் மாற்றி இருக்கிறது. 

அம்பையின் சிறுகதை “வெளிப்பாடு ” கதையில் அம்பை தான் ரிப்போர்ட் எழுதும் பெண்ணாகவருகிறார் . டில்லியிலிருந்து ஒத்தையாக வந்திருப்பவள், வேகமாக நடப்பவள் இப்படியாக பல அடையாளங்களில் கதை எழுதிய அம்பை தான் நமக்குத் தெரிகிறார், இக்கதை அம்பையின் பெண்வெளி குறித்த அக்கறையை ஆண் பெண் சமுக நிலை குறித்த புரிதலை மிகத் தெளிவாக முன்வைக்கும் கதை. 

என்ன ரிபோர்ட் எளுதனும்? 

பொம்பளங்களைப் பத்தி 

பொம்பளங்களப் பத்தி எளுத என்ன இருக்கு? 

“அதாவது அவுங்க எப்படி வாழறாங்க, என்னவெல்லாம் வேலை செய்யறாங்க, அவங்க தங்களோட வாழ்க்கையைப் பத்தி என்ன நெனைக்கிறாங்க…” 

‘என்ன நெனைக்கிறாங்க, பிள்ள பெறுதோம், ஆக்கிப் போடுதோம்” 

“எப்ப பாரு பிள்ள பெறலியே? நடுவில எதாவது யோசிச்சிருப்பீங்க, இல்ல?” 

“ஆமா.. ரோசிச்சோம், போங்க…” 

கதையில் வரும் இந்த உரையாடல் ரொம்பவும் மென்மையான குரலில் வெளிப்படுகிறது. ஆனால் கதைப் பரப்பில் இந்த வரிகள் ஏற்படுத்தும் அதிர்வலைகள் அளப்பரியது. சிறுகதைப் பரப்பில் அம்பையின் தனித்துவமாக இதைக் கருதலாம். பெண் உரிமைகள் என்றொ அவளைக் காலமெல்லாம் அடுப்படியில் தோசையாகவும் இட்லி வடையாகவும் மட்டுமே வைத்திருக்கிறார்கள் என்பதையும் அம்பை உரக்கச் சொல்லவே இல்லை. ஆனால் கதை இக்கருத்துகளை உரக்கவே வாசகனிடம் கொண்டு சென்றுவிடுகிறது. 

இந்தப் பெண்களுக்கு நல்லவனா பார்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்கு அப்பால் அப்படி என்னதான் பெரிய ஆசைகள் இருக்கிறது என்று பார்த்தால் … 

தெருவில் நடக்கனும், ஓட்டலில் பலகாரம் சாப்பிடனும், கடைக்குப் போய் தானே புடவை எடுக்கனும், சினிமா போகனும், நிறைய ஊர்ப் பாக்கனும், சமுத்திரம் பார்க்கனும்… 

இப்படியான சின்ன சின்ன ஆசைகளால் திருப்தி அடைகிறது பெண்ணின் வாழ்க்கை என்பதை “வெளிப்பாடு “ கதை முன்வைக்கிறது. 

அம்பையின் கதைகளில் சற்று வித்தியாசமான இன்னொரு கதை “ஒரு கட்டுக்கதை” 

பன்றியுடன் ஒரு சம்பாஷணை தான் கதை. 

“ஆணவப் பன்றிகளுக்கு அடுத்தபடி என்னால் பொறுக்க முடியாதது வேதாந்தப் பன்றிகள்,“ என்று கதை முழுக்க எள்ளலும் கிண்டலுமாக .. 

சாவப்போகிற பன்றி கறுப்பானால் என்ன, ரோஜா வண்ணமானால் என்ன என்றது.. 

ஒரு கட்டுக்கதை என்ற இச்சிறுகதை கட்டுக்கதையல்ல. இக்கதை நம் சாதி வர்க்க சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம். அம்பையின் கதைகளில் இக்கதை சற்று வித்தியாசமானது. 

அம்பை எழுத்தாளர் மட்டுமல்ல, ஒரு விமர்சகரும் கூட. மிகவும் நுணுக்கமாக அவர் பிறரின் படைப்புகளையும் அணுகி விமர்சனம் செய்வார். 

அம்பை அவர்கள் ஸ்பேரோவின் 25 ஆண்டு நிறைவை ஒட்டி பல எழுத்தாளர்கள் களப்பணியாளர்களின் உரையாடல் நிகழ்வை நட த்தினார். என்னுடனான உரையாடலின் போது 

“நீங்கள் உங்கள் தந்தையைக் குறிப்பிடும் அளவுக்கு உங்கள் அம்மாவைப் பற்றி எதுவும் எழுதவில்லையே? ஏன்? “என்ற கேள்வியை முன்வைத்தார். யாருமே என்னிடம் கேட்காத கேள்வி இது. அம்பை கேட்ட பிறகுதான் நானே அந்த வெற்றிட த்தை உணர்ந்தேன் என்றும் சொல்ல வேண்டும். பெண்கள் எழுத வரும் போது ஏற்படும் அக புற பிரச்சனைகளை தெளிவாக அறிந்தவர் அம்பை. அதனால் தான் அவருக்குப் பின் எழுத வந்திருக்கும் எழுத்தாளர்களுக்கும் அம்பை வழிகாட்டியாக மட்டுமல்ல, நட்பாகவும் இருக்கிறார். 

தன்னைப் பெண் எழுத்தாளர் என்ற அடையாளத்திற்குள் கொண்டுவருவதை அம்பை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். ஆண் எழுதினால் அவரை ஆண் எழுத்தாளர் என்று அடையாளப்படுத் தாத இச்சமூகம் ஒரு பெண் எழுத வரும்போது மட்டும் பெண் எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தப்படுவதை கேள்விக்குட்படுத்தி வருகிறார். 

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை‘ தொகுப்பைப் பற்றிய அறிமுகத்தில் நான்கு கதைகள் பெண்களைக் குறித்தவை. மீதிக்கதைகள் சோதனைக் கதைகள் என்றார் நண்பர் ஒருவர். ஆமாம் யாருக்குச் சோதனையாக இருக்கிறது அக்கதைகள் என்று நானே அவரிடம் கேட்டேன். ஆண்களைப் பற்றி ஆண்கள் எழுதினாலும் பெண்கள் எழுதினாலும் அவை எல்லாம் வாழ்க்கையைப் பற்றியதாகப் பார்க்கப்படுகிறது. 

இச்சமூகத்தில் ஆணே சமுகத்தின் ஒட்டுமொத்த அடையாளமாகப் பார்க்கப் படுகிறான். ஆண் செய்வதும் ஆண் எழுதுவதும் சமூகத்தின் பொதுமைப் பண்புகளாக அடையாளப்படுத்தப் படுகின்றன. 

அம்பை இச்சம்பவத்தை பல்வேறு தருணங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஆணின் ஒவ்வொரு அசைவும் சமூகத்தின் அசைவாகவும் பெண்ணின் பெருவெடிப்பு கூட பெண்ணுக்கானதாக மட்டுமே சுருக்கிவிடும் சமூகத்தில் பெண்ணியம் என்பது என்ன? 

பெண்ணியம் என்பது பெண்களைப் பற்றிப் பேசுவதோ பெண் உரிமைகளைப் பேசுவதோ மட்டுமல்ல, பெண்ணியம் என்பது பெண் சார்ந்த அனைத்துமே சமூகம் சார்ந்த தாக , சமூகத்தின் பெண்ணியப் பிரச்சனைகள் நலன் கள், வளங்கள் உரிமைகள் அனைத்தும் சமூகத்தின் பிரச்சனையாகவும் இருக்க வேண்டும். இதைச் செய்வதற்கு எழுத்து மட்டுமே போதாது. ஆவணங்களே வரலாறு. ஆவணப்படுத்தல் இல்லை என்றால் வரலாறில்லை. 

வரலாறு இல்லை என்றால் நினைவு அடுக்குகள் இல்லை. நினைவுகள் இல்லை என்றால் வாழ்க்கையின் பெருமித தருணங்கள் இல்லை. பெருமிதப்பட எதுவுமில்லை என்றால் பெண்களின் முன்னேற்றம் சாத்தியமே இல்லை. எனவே பெண்களை பெண்களின் உலகத்தை ஆவணப்படுத்த வேண்டும் என்ற அடுத்தக் கட்ட த்திற்கு நகர்கிறார் அம்பை. 

பாதிதூரம் வந்தப் பின் அவள் திரும்பிப் பார்த்தாள். 

காணவில்லை 

அவள் கடந்து வந்த பாதையை. 

……. 

எங்கிருந்து அவள் புறப்பட்டாள் 

என்பதற்கான எந்தத் தடயங்களும் இல்லை. 

யாரோ அவளுக்குப் பின்னால் கவன மாக 

அவள் வாழ்வின் அடையாளங்களைத் 

துடைத்துச் சென்றிருக்கக் கூடும். 

ஜியோட்சனா மிலன் இந்தி மொழிக்கவிஞர் 

‘அவளுக்குப் பின்னால்’ என்ற இக்கவிதை புனைவோ உயற்வு நவிற்சியோ அல்ல. மனித இன வரலாற்றில் நாடு மொழி இன ங்களைக் கடந்து ஒட்டுமொத்தமாக மறைக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட வரலாற்றை கேள்விக்குட்படுத்தி இருக்கும் கவிதை. 

நாகரிகத்தின் கதை எழுதிய வில் டூரண்டும் மேற்கத்திய நாகரிகத்தின் வரலாறு எழுதிய எச். இ. பர்ன்ஸ்சும் தங்கள் எழுதிய வரலாற்றுப் புத்தகங்களில் ஒரு பெண்ணின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை 

(Will Durant’s “The Story of Civilization” and H. E. Barnes’ “The History of Western Civilization). வரலாற்றை எழுதுபவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருப்பதால் ஏற்பட்ட தவறா என்றால் அந்த த் தவறை அவர்கள் ஓர்மையுடன் செய்தார்கள் என்று சொல்வதற்கில்லை. ஏனேனில் அவர்களின் ஓர்மையில் பெண்களைப் பற்றிய எண்ணங்களே இல்லை . எனவே அது பற்றிய குறிப்புகளும் அவர்களிடமிருந்துவரவில்லை. காரணம் பெண்களை ஆவணப்படுத்தல் என்பது வரலாற்றின் நினைவுகளில் கூட எப்போதும் இருந்தது இல்லை, 

1940களில் WCWA (– World Centre for Women Archives) அமைப்பின் முதன்மையானவரான மேரி ரிட்டர் பியர்ட் (Mary Ritter Beard) பெண்களை ஆவணப்படுத்துவதன் அவசியத்தை உலக அரங்கில் முன்வைத்தவராக இருக்கிறார். இந்திய வரலாற்றில் வேதகாலம் சங்க காலத்தில் பெண்கள் எழுதினார்கள் அவர்களின் பெயர்கள் என்ற விவரங்கள் இருக்கின்றன. வரலாறு என்று எழுத வரும்போது அந்தப் பக்கத்தில் பெண்களின் பெயர்களும் அவர்களின் பங்களிப்பும் இருட்டடிக்கப்படுகின்றன. 

பெண்கள் அதிகமாக கலந்து கொண்ட இந்திய சுதந்திரப் போராட்ட த்தில் பெண்களின் வரலாறு முறையாகத் தொகுக்கப்படவில்லை. ஆண் ஆளுமைகளைச் சார்ந்தும் அவர்களின் உறவுகளாகவும் மட்டுமேபெண்களின் முகங்கள் வந்துப் போகின்றன. 

இந்திய வரலாற்றில் இந்த ஆவணப்படுத்துதல் என்ற கருத்துருவாக்கம் எழாதக் காலம். அதற்கான அவசியத்தை சமூகம் உணராதக் காலத்தில் அம்பை என்று தமிழுலகம் அறிந்த சி எஸ் லஷ்மிக்கு பெண்களை ஆவணப்படுத்தும் எண்ணம் ஏற்படுகிறது. அம்பையுடன் இப்பயணத்தில் துணை நின்றவர்கள் கல்வியாளர்களான நீரா தேசாய் மற்றும் மைத்ரேயி கிருஷ்ணராஜ். 

1988ல் அம்பையின் வீட்டு படுக்கையறை ஸ்பேரோவுக்கும் இடம் கொடுத்த து. பின் மும்பை வெர்சோவா பகுதியில் சின்ன ஒரு கார் ஷெட், அந்தேரி பகுதியில் ஒரு சின்ன அபார்ட்மெண்ட் என்று ஸ்பேரோ கொஞ்சம் கொஞ்சமாக தன் சிறகுகள் விரித்த து. இறுதியாக 2008 இன்று தகிசர் பகுதியில் இருக்கும் கூடு ஸ்பேரோவுக்கு வசப்பட்ட து என்பதும் இந்தப் பயணத்தில் நடுரோட்டில் நின்று பேசி முடிவெடுத்து கடந்து சென்ற நாட்களும் உண்டு. ஆனால் அவை அனைத்துமே இன்று அர்த்தமுள்ள பயணங்களாகி இருக்கின்றன. 

87 எழுத்தாளர்கள் (பெண்கள்), + 23 மொழிகள் =5 மொழியாக்க தொகுதிகள் இந்தியப் பெண்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்துவதில் ஸ்பேரோவின் பங்கு. பெண்களை ஆவணப்படுத்துவது என்பதில் அம்பையின் கவனம் மிகவும் நுணுக்கமானது. சினிமா போஸ்டர்களில் ஆரம்பித்து பெண்கள் எழுதிய கடிதங்கள், டைரிகள் வரை.. எந்த ஒரு சிறு தடயங்களையும் அவர் ஒதுக்கவில்லை. 

ஒரு பெண் புத்தகம் வாங்கிய ரசீது என்பது வெறும் காகிதமல்ல. அது அப்பெண்ணின் வரலாறு. அப்பெண்ணின் வரலாறு மட்டுமல்ல, அவள் காலத்தின் இன்னொரு வரலாறு. புத்தகம், புத்தகத்தின் 

விலை, புத்தகத்தின் உள்ளடக்கம், அதை வாசிக்கும் பெண் என்று ஒவ்வொரு தளமாக ஒரு காகித ரசீது ஆவணமாகி ஒரு காலத்தின் வரலாறாக தன்னை இருத்திக் கொள்கிறது. 

பெண்களின் ஒலி நாடாக்கள், ஒலி ஒளி காட்சிப்படங்கள், ஆவணப்படங்கள் என்று இன்றைய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி எல்லாவற்றையும் தனக்குள் காட்டும் மாயக்கண்ணாடியாக வித்தைகள் செய்ய முனைகிற ஸ்பேரோ. இப்படியாக ஆவணப்படுத்துவதுடன் நின்றுபோனால் ஸ்பேரோ ஒரு கல்வெட்டு, ஒரு செப்பேடாக மாறி இருக்கும். 

ஆனால் இந்த ஆவணப்படுத்துதல் என்பது அறிவுசார்ந்த ஒரு தளத்தை விரிவுப்படுத்தவும் வளர்த்தெடுக்கவும் கட்டிய கூடாக இருக்க வேண்டும். அதனால் தான் ஸ்பேரோ தொடர்ந்து பயிற்சிப் பட்டறைகளைத் திட்டமிட்டு நட த்திக் கொண்டே இருக்கிறது. இப்பயிற்சி பட்டறைகள் இளம் தலைமுறைக்கு ஒரு வரலாற்றை முன் வைப்பதுடன் அவர்கள் வாழும் காலத்தில் ஊடக வெளிச்சங்கள் எட்டாத பக்கங்களையும் பார்வைக்குரியதாக்குகின்றன. 

இந்தியாவின் முதல் புகைப்படப் பத்திரிகையாளர் ஹோமை வியரவாலா (HOMAI VYARAWALLA) பற்றி ஸ்பேரோ ஆவணப்படுத்தவில்லை என்றால் இன்றைய தலைமுறைக்கு எப்படி தெரியும்? யார் சொல்வார்கள் 1940களிலேயே ஒரு பெண் காமிராவைத் தூக்கிக்கொண்டு பத்திரிகையாளர்கள் உலகத்தில் பயணித்தாள் என்பதை. வாழும் காலத்திலேயே இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பயணித்து பெண்களைத் தேடி அவர்களின் கதைகளை வாய்மொழியாகவும் பதிவு செய்து ஆவணப்படுத்துகிறார் அம்பை. 

பெண்களின் வரலாறு என்று வரும்போது வரலாறுகள் எப்போதுமே மேலடுக்கு சார்ந்தவையாகவும் ஆட்சி அதிகாரத்தின் எல்லைக்கோடுகளாகவும் இருக்கின்றன. வரலாற்றில் எப்போதுமே சாமனியமானவர்களுக்கு இடமில்லை. இன்றுவரை வரலாறு என்பது தனக்கான எல்லைக்கோடுகளை இப்படித்தான் வகுத்திருக்கிறது. யாரை ஆவணப்படுத்த வேண்டும், 

யாரை ஆவணப்படுத்தக் கூடாது என்பதில் வரலாறும் கவனமாக இருக்கிறது என்பது வரலாற்றின் இன்னொரு வரலாறு. ஆனால் மரபார்ந்த இந்த வரலாற்றின் பக்கங்களை உடைத்து பயணித்த தில் அம்பையின் பங்கு அளப்பரியது. 

லாத்தூரில் வாழும் பெண் சுனிதா அரலிக்கர். (SUNITA ARALIKAR) தலித் குடும்பத்தில் பிறந்த சுனிதா உயிருடன் புதைகுழியில் புதைக்கப்பட்டவர். அவர் பிறந்து 15 நாட்களில் தாய் இறந்து போகிறார். 16 நாட்களே ஆன அப்பெண் சிசுவை ஆற்றுப்படுகை அருகில் உயிருடன் புதைத்துவிடுகிறார் அவர் தந்தை. 

செய்தி கேள்விப்பட்ட சுனிதாவின் தாய்வழி தாத்தா அக்குழந்தையைப் புதைகுழியிலிருந்து எடுத்து கொண்டுபோய் வளர்த்திருக்கிறார். அந்த சுனிதா பிற்காலத்தில் லாத்தூர் பஞ்சாயத்து தேர்தலில் நின்று வெற்றி பெற்று தன் அரசியல் பயணத்தை தொடர்கிறார். சுனிதாவின் வாழ்க்கையில் இந்தியாவில் எமர்ஜென்சி காலத்தின் சிறைவாசம்அவருக்கு இன்னொரு திருப்புமுனையாக அமைகிறது. 

அவர் தன் நினைவுகளை நாட்குறிப்பில் எழுத அதுவே விரிவாக்கம் செய்யப்பட்டு புத்தகமாக வெளிவந்தது. ஸ்பேரோ ஏற்பாடு செய்திருந்த சுனிதாவின் அந்த உரையாடல் நிகழ்வில் நானும் சாட்சியாக அந்த அரங்கத்தில் இருந்தேன். சுனிதா என்ற ஒரு பெண்ணின் அரசியல் பயணமும் எழுத்துப்பயணமும் இல்வாழ்க்கைப் பயணமும் எந்தப் புரட்சிக்கும் குறையாத உணர்வலைகளை எழுப்பியது. இதை எல்லாம் அம்பை சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கிறார். 

அம்பையின் “தேகம்” ஆவணப்படம் திரு நங்கைகளின் உடல் சார்ந்த பிரச்சனையை மட்டும் முன்வைக்கவில்லை. அவர்கள் தங்களின் உடலைக் கடந்து பயணிக்க நினைப்பதும் அதற்கான அவர்களின் தேடலையும் பொதுவெளிக்கு எடுத்துச் செல்கிறது. 

இந்தியப் பெண்களின் ஆவணக்காப்பகம் அம்பையின் கூடு மட்டுமே. அம்பையின் பயிற்சிப் பட்டறைகளும் ஆடியோ பதிவுகளும் அதற்காக அவர் தேடித் தேடி பயணிப்பதும் ஸ்பேராவின் எல்லைகளை நம் கற்பனைகளுக்கும் அப்பால் விரித்திருக்கிறது. 

கனகா மூர்த்தி என்ற சிற்பி பேசுகிறார். சிலை வடித்தல் கனகா என்ற பெண்ணுக்கும் தலைமுறையாக பழகிய ஒரு தொழிலாகவும் கலை வெளிப்பாடாகவும் இருக்கிறது. சிற்பி என்று சொன்னவுடனேயே ஆண் பிம்பத்தை மட்டுமே கட்டமைக்கும் நம் நினைவுகளைப் புரட்டிப் போடுகிறார் கனகா மூர்த்தி. 

இந்திய விடுதலைப் போராட் ட்த்தில் எண்ணற்ற பெண்களின் பங்களிப்புகள் இருந்திருக்கின்றன. அதன் சாட்சியாகத்தான் கலா சஹானியின் போராட்ட வரலாறு இன்று நம்முடன் பேசுகிறது. 

விஞ்ஞானிகள் என்றாலே ஆண்களை மட்டுமே பள்ளிக்கூடம் காலம் முதல் கல்லூரி வரை சொல்லிக்கொடுக்கிறார்கள். 

பெண் விஞ்ஞானி என்றவுடன் மேடம் க்யூரி நினைவுக்கு வருகிறார். அவருக்கு அப்பால் நம்மால் யாரையும் எழுத முடியவில்லை. ஆனால் பெண்கள் இத்துறையில் சாதனைகள் நிகழ்த்தி இருக்கிறார்கள். அதுவும் இந்தியாவில் விஞ்ஞானத்தை ஒரு பெண் தேர்வு செய்து படிப்பதும் படித்தாலும் அது சார்ந்த பணியில் ஈடுபடுவதும் அதற்கான காரணங்கள், கனவுகள், ‘வழிகாட்டிகள் உத்வேகங்கள் என்று பெண் விஞ்ஞ்சானிகள் பேசுகிறார்கள். 

கார்ட்டுனிஸ்ட் என்றால் யாரும் அத்துறையில் பெண்களை நினைப்பதில்லை.. ஆனால் மாயா காமத் என்ற கார்ட்டூனிஸ்டின் 1000 கேலிச்சித்திரங்கள் அடங்கிய புத்தகமும் 8000 கேலிச் சித்திரங்களும் ஸ்பேரோ பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. 

ஆதிவாசிகளின் வாழ்க்கையும் நம்பிக்கைகளும் பொதுச்சமூகத்தில் இருந்து மாறுபட்ட து. அவர்களில் ஒருத்தியாகவும் அவர்களுடன் களப்பணி செய்யும் சக்குபாய் காவிட் நமக்கு அறிமுகம் ஆகிறார். மதக்கலவரங்களோ அல்லது அரசியல் ரீதியான கலவரங்கள் நடக்கும் போது அதில் பாதிக்கப்படும் பெண்களுக்கு நிவாரணம் கொடுப்பதுடன் அரசின் கடமையும் சமூகத்தின் அறமும் முடிந்துவிடுகின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட அப்பெண்கள் அதை எப்படி அணுகினார்கள், அவர்களின் அனுபவம் அதனால் தொடரும் பாதிப்புகள் இவற்றை பாதிக்கப்பட்ட பெண்களின் வாய்மொழியில் பதிவு செய்திருக்கிறார்கள். 

அரசியல் என்பது எப்போதுமே ஆண் பலத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. இந்தியாவில் அரசியலுக்கு வந்திருக்கும் பெண்களும் கூட ஆணின் மனைவியாகவோ அவன் விதவையாகவோ அவன் காதலியாகவோ மகளாகவோ சகோதரியாகவோ இப்படியாக யாரோ ஒருத்தியாக இருந்தால் மட்டுமே அரசியலில் நுழைவது எளிது என்ற நிலையில் விதிவிலக்கான சில பெண்களின் அரசியல் பயணத்தை நம் முன் காட்சிப்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக பானிவாலி பாய் என்ற பெண் கோரேகான் பகுதியில் தண்ணீருக்காகப் போராடியவள். எப்போதும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போராட்ட வழிமுறைகளைக் கொண்ட அரசியல் பெண்ணின் வரலாறு ஆவணமாகி இருக்கிறது. 

பொன்னம்மா சுப்பம்மா நீலம்மா என்று 3 தலைமுறைப் பெண்களின் கதைகளை 4வது தலைமுறை பெண் எழுதுகிறாள். கூர்க் பகுதியின் மலைகள், குன்றுகள், காடுகள், அவர்களின் பழமொழிகள் பழக்க வழக்கங்கள் என்று சரித்திரமாக அப்பெண்களின் கதை மாறுகிறது. 

“நீங்கள் பார்க்கும் பெரும்பான்மையான பெண்கள் கிரண் பேடி. அல்லது இந்திரா நூயி போன்றவர்களைப் போலானவர்கள். ஆனால் நான் எனது வாழ்வில் என்னென்ன வேண்டுமோ அதையெல்லாம் செய்துள்ளேன் என்று என்னால் சொல்ல முடியும். நான் அவற்றை பெரும் சிரமங்களுக்கு மத்தியிலேயே செய்தேன், ஆனால் நான் அவற்றை மிக்க மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் செய்துள்ளேன். எனது முயற்சிகளில் கிடைத்த தோல்விகள் எனக்குப் படிப்பினையாக அமைந்தன. ஆய்வுள் எழுத்துகள் என்னால் மேற்கொள்ளப்பட்வை, அவற்றை என்னால் தனித்தனியாகப் பிரிக்கமுடியாது, ஏனெனில் நான் மேற்கொண்ட பெண்கள் பற்றிய ஆய்வுகள் மற்றும் எழுத்துகள் எனது மனித வாழ்க்கை பற்றிய எண்ணங்களேயாகும்.” என்று சொல்கிறார் அம்பை. [எழுத்தாளர் மல்சௌமி ஜேக்கப் அவர்களால் தொடுக்கப்பட்ட கேள்விக்கு விடையளிக்கும்போது.] 

இக்கட்டுரை எழுதுவதற்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் அம்பையுடன் பேசிக்கொண்டிருந்தேன். எங்கள் பேச்சின் ஊடாக மராத்தி எழுத்தாளர் கவிதா மகாஜன் பற்றிப் பேசினோம். எதிர்ப்பாராத விதமாக ஏற்பட்ட கவிதா மகாஜனின் மறைவுச் செய்தி தன்னை ரொம்பவும் பாதித்துவிட்ட தாக அம்பை சொன்னார். 

கவிதா மகாஜன் எனக்கும் தோழி. அவர் கவிதைகளைத் தமிழாக்கம் செய்திருக்கிறேன். ஆனால் அம்பையின் வருத்தம் இன்னும் ஆழமானது. வித்தியாசமானதும் கூட… 

“மும்பையில் தானே இருக்கிறார். எப்போது வேண்டுமானாலும்\ அவரைப் பேச வைத்துக்கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் அவருடைய ஆடியோவை பதிவு செய்துக் கொள்ளலாம் என்று நாளைக் கட த்திவிட்டேனே.. இவ்வளவு சீக்கிரம் அவர் போய்விடுவார் என்று நினைக்கவே இல்லையே… எவ்வளவு பெரிய இழப்பு நமக்கு!” என்று வருத்தப்பட்டார். இது தான் அம்பை. 

அம்பையின் தொடர் பயணம் இதுதான். எழுத்துகளையும் தாண்டி எழுத்தாளர் அம்பை என்ற அடையாளத்தையும் தாண்டிய அம்பையின் ஆகாயம் பரந்து விரிந்தது. 

கணக்கிலடங்கா விண்மீன் களையும் கோள்களையும் தேடித்தேடி பயணித்து வரலாற்றில் இருள்வெளிக்கு வெளிச்சத்தைக் கொடுக்கும் அம்பையின் கூடு எங்களுக்கு – பெண்களுக்கு – மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்திற்கும் பறக்கும் சிறகுகளைக் கொடுத்திருக்கிறது. இனி வானம் வசப்படும்.

2 Replies to “அம்பையின் முறியாத சிறகுகள்”

Leave a Reply to ம.காமுத்துரைCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.