மனத்துக்கினியவள்

ஆர். சூடாமணி குறித்து யாராவது எழுதவோ பேசவோ கூறினால் முதலில் மனத்தில் தோன்றும் சொல் மனத்துக்கினியவள்தான். அது அவள் முதல் நாவலின் பெயர். அதுதான் நான் அவளை உணர்ந்த விதமும்.

நான் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் எம். ஏ. படிக்க வந்தபோது பாலப்ரியா என்ற எழுத்தாளர் மூலம் சூடாமணி எனக்கு அறிமுகமானாள். பத்தொன்பது வயதிலிருந்து அவள் மரணம் நேரும் காலம் வரை என் இலக்கிய முயற்சிகளுக்கும் என் வாழ்க்கையின் பல்வேறு போக்குகளுக்கும் ஏற்ற இறக்கங்களுக்கும் என் உற்ற துணையாய் இருந்தவள் சூடாமணி. நான் எம்.ஏ படிக்க வரும் முன்பே சூடாமணியின் கதைகளைப் படித்திருந்தேன். மனத்துக்கினியவள் நாவல் முதல் பல கதைகளைப் படித்திருந்தேன். சூடாமணியின் இருவர் கண்டனர் , 1961இல்
ஆனந்தவிகடனில் வெளிவந்துகொண்டிருந்தது என்று நினைக்கிறேன். மகவு ஒன்று பிறப்பதைப் பார்க்கும் இருவரை இரு வேறு விதங்களில் அந்த நிகழ்வு எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய நாடகம். மனோதத்துவ ரீதியில் அமைக்கப்பட்ட கதை. ஒருத்தியிடம் உவகையையும், இன்னொருத்தியிடம் பயத்தையும், வெறுப்பையும் உண்டாக்கும் நிகழ்வாக நாடகத்தில் அது அமையும். பதினேழு வயதில் அந்த நாடகம் என்னை வெகுவாகப் பாதித்தது. அவளிடம் நான் பழக ஆரம்பித்த பின் அவள் இலக்கிய ருசிகளையும், அவள் வாழ்க்கை குறித்த நோக்குகளையும் நான் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பங்கள் பல அமைந்தன. காலச்சுவடு பத்திரிகையில்அவளுக்கு நான் அஞ்சலி ஒன்றை எழுதியபோது, அவளுடனான என் ஆரம்ப கால நட்பு குறித்துச் சில விவரங்களை எழுதியிருந்தேன். அதை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்:

”…அப்போது ஆனந்தவிகடன்    பத்திரிகையில் காற்று என்றொரு கதை எழுதியிருந்தேன். வீட்டை விட்டு வெளியே படிக்க வரும் பெண் தன் அம்மாவின் நினைவு வந்து பிறகு வீட்டுக்கே திரும்பிப் போவதுபோல் கதை. கதை நன்றாக இருக்கிறது என்ற சூடாமணி, அந்தப் பெண் எடுத்த முடிவு உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு என்றும், ஒரு பெண் சுதந்திரமாக இருக்க முயலும்போது வரும் உணர்ச்சிகளை எதிர்கொள்ள அவளுக்குத் தெரிய வேண்டும் என்றும் சொன்னாள். நானே வீட்டை விட்டு வெளியே வந்து இனிமேலும் தனியாகவே உலகை எதிர்கொள்ள நினைக்கும்போது இத்தகைய பாத்திரங்களைப் படைப்பது முரணாக இருக்கிறது என்றாள். இப்படி என் கதைகள் பற்றியும் அப்போது வெளியாகும் கதைகள் பற்றியும் நிறையப் பேசுவோம். தமிழை அவள் முறையாகப் பயின்றிருந்ததால் சில நாட்கள் தமிழ் இலக்கண விளக்கங்கள் தருவாள் எனக்கு. தேமாங்காய், புளிமாங்காய் மர்மங்களை அவள்தான் விளக்கினாள்.

சூடாமணி எனக்கே எனக்குத்தான் இருக்க வேண்டும் என்று ஒர் உணர்வு எனக்கு இருந்தது. அதை அவளிடம் சொல்வேன். கேட்டுக்கொள்வாள். சிரிப்பாள். ஒவ்வொரு முறை சந்தித்த பின் நான் போகும்போதும் சன்னலருகில் நின்று கையாட்டி அவள் விடைதர வேண்டும். இல்லாவிட்டால் மேலே திரும்ப ஓடி வந்து, ‘ஏன் கை ஆட்டலை?’ என்று சத்தம்போடுவேன். மத்தியான வேளைகளில் ஐஸ்க்ரீம் வண்டிக்காரன் குரல் கொடுத்ததும், ஐஸ்க்ரீம் வரவழைப்பாள். எனக்குப் பிடிக்கும் என்று தெரியும். அவளுக்கும் பிடிக்கும். ஐஸ்க்ரீம் சாப்பிட்டபடி, கடற்கரையில் அமர்ந்தபடி, சில மாலைகளில் வீட்டின் மொட்டைமாடியில் என்று எழுத்து பற்றியும், இலக்கியம் பற்றியும் பேசியபடி பொழுது கழியும்.

எம்.ஏ படித்த பிறகு நான் பள்ளி ஆசியராக ஆனபோதோ, மீண்டும் சென்னை வந்து கல்லூரியில் வேலை செய்தபோதோ, அல்லது டெல்லி செல்ல தீர்மானித்தபோதோ, சரி, தவறு என்று எந்த விவாதங்களையும் சூடாமணி எழுப்பவில்லை. என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது கவனமாகக் கேட்பாள். உறவுகள் பற்றி எனக்கிருந்த எண்ணங்களையும் அவளுடன் பகிர்ந்துகொள்ளும் போது என் நோக்கிலிருந்து அதைப் பார்ப்பாள். ஒரே ஒரு முறைதான் நான் ஏதோ வகையில் பாதிக்கப்படுவேன் என்று தோன்றியபோது, தன் எண்ணத்தைக் கூறினாள். அந்த முறை ரயிலடிக்குப் போகும் முன் அவளைப் போய்ப் பார்க்க முடியவில்லை. அண்ணாதுரை மரண ஊர்வலம் அன்று. ரயிலடியிலிருந்து தொலைபேசியில் விடைபெற்றுக்கொண்டேன். ’போய்விட்டு வா’ என்றவள், ’ஜாக்கிரதையாக இரு. அவசரப்படாதே,’ என்று மட்டும் கூறினாள்.

அவளையும் அவள் கதைகளையும் ஆராதிப்பவளாக இருந்த நான், அவள் எழுத்தை விமர்சன நோக்கில் பார்ப்பவளாக பின் வந்த ஆண்டுகளில் மாறியபோது, அதையும் ஏற்கும் பரந்த மனமும் பெருந்தன்மையும் அவளுக்கு இருந்தது. பிற்காலத்தில் நான் எழுதிய ஆராய்ச்சி நூலான The Face Behind the Mask புத்தகத்தை அவளுக்குச் சமர்ப்பணம் செய்திருந்தேன். ஆனால் உள்ளே அவளுடைய சில எழுத்துகளை விமர்சனமும் செய்திருந்தேன். இரண்டையும் அவளால் ஏற்க முடிந்தது.

மனித உணர்வுகளில் உள்ள சிக்கல்களையும், நெருடல்களையும் மிகவும் நுண்ணிய முறையில் நோக்கியவள் சூடாமணி. அந்த நோக்கு அவள் கதைகளில் நுட்பத்துடனும், நயத்துடனும் வெளிப்பட்டது. மனித மனங்களின் ஆழத்தில் உறையும் உணர்வுகளை, பயங்களை, குரூரங்களை மிகவும் துல்லியமாகப் பார்க்கும் திறன் அவளுக்கு இருந்ததால்தான் தொடர்ந்து மிகவும் வித்தியாசமான கருத்துகள் கொண்ட நாவல்களையும் கதைகளையும் அவளால் எழுதமுடிந்தது என்று நினைக்கிறேன். தனியாக வீட்டைவிட்டு வெளியேறும் பெண் ஒருத்தி விடிவை நோக்கி கதையில் வந்தால் மீண்டும் மீண்டும் கருவைத் தரும் அதைச் சுமப்பவளாகத் தன்னைக் கருதும் கணவனைப் பார்த்து அர்த்தம் பொதிந்த புன்னகை ஒன்றை வீசும் பெண் டாக்டரம்மாவின் அறை கதையில் வருவாள். அவள் இன்னொரு குழந்தை வேண்டாம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளாத கணவன் அவன். டாக்டரம்மாவிடம் அதைத்தான் சொல்லியிருப்பான். திரும்பிவரும்போது சாமான்களைச் சுமந்து வருவான். வீட்டுக்கு வந்து கதைவைத் திறக்கும்போது அத்தனைச் சாமான்களையும் அவளிடம் தந்து எவ்வளவு கனம் அவை, சுமக்க முடியவில்லை என்பான். அவள் எதுவும் கூறாமல் புன்னகைப்பாள் அவனை நோக்கி. “அந்தப் புன்னகை ஒரு காவியம்” என்று கதை முடியும். பெண்ணின் அத்தனை காவியச் சோகங்களும் அந்த ஒரு வரியில் வந்துவிடும். இப்படிப் பல கதைகள் என் மனத்தை நிறைப்பவை. இருந்தாலும் தொடர்ந்து என் மனத்தைத் தொட்டுக்கொண்டே இருப்பது இரவுச் சுடர் குறுநாவல்தான். அது மறுபதிப்பாக வந்தபோது பின்னட்டையில் நான் எழுதியது அவள் படைப்புகளை நான் நோக்கும் விதத்தைக் குறிப்பதாக அமைந்தது:

”1974இல் இரவுச்சுடர் வெளி வந்தபோது பெண் எழுத்தாளர்களைப் பற்றிய என் ஆராய்ச்சி தொடங்கியிருந்தது. பாலுறவு, கற்பு மற்றும் காதல் என்ற கோணத்திலிருந்து அதைப் பார்த்தபோது, உடலுறவு என்பது தூய்மையைக் குலைக்கும் ஒரு தாக்குதலாக நோக்கப்படுவதுபோல் தோன்றியது. 1975இல் மீண்டும் தூயவை தொடர என்ற தலைப்பில் சதங்கை பத்திரிகையில் சூடாமணி எழுதிய கதையில் உடலுறவு பூவைக்  கசக்குவதுபோல் ஓர் அழிக்கும் செயல் என்ற தொனி இருந்தது. 1972இல் எழுதிய நான்காம் ஆசிரமம் கதையில்  உடலுறவு என்பது உடலின் தெய்வீகத்தன்மைக்கு மேலும் மெருகூட்டும் செயல் என்ற நோக்கிலிருந்து இரவுச்சுடர் நாவலும்  அடுத்து வந்த கதையும் மாறுபட்டன. மூன்றையும் சேர்த்துப் பார்த்தபோது இரு வேறு அதீதங்களாக அவை எனக்குப் பட்டன அப்போது. அவளை அறியாமல் அவள் மனத்தில் புதைந்துகொண்டு அவளை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளுடன் சமரிடும் பெண்ணாக, இரவின் மௌனத்திலும், தாரகைகளின் ஒளியிலும் ஒன்றி இயற்கையுடன் ஓர் அந்தரங்க உறவு பூணும் பெண்ணாக இரவுச்சுடர் நாவலின் நாயகி யாமினியைப் பிறகு வந்த ஆண்டுகளில்  பார்த்தபோது அதிலுள்ள உணர்வுச் சிக்கல்களும், இதுதான் சரி என்று உலகம் நிர்ணயித்த ஒன்றிலிருந்து ஒருத்தி மாறுபடும்போது அவளுக்கு ஏற்படும் மன உளைச்சல்களும், அவளுடைய அந்த விலகலே அவளை மனப்பிறழ்வு கொண்ட ஒருத்தியாக மற்றவர்கள் பார்க்கும்படி மாற்றுவதும், மஞ்சு விலகியபின் தெரியும் காட்சியாக எனக்குத் தெரிந்தது. மன ஆழத்தில் ஊன்றிக்கொண்ட தூய்மை பற்றிய எண்ணங்கள் ஒரு வெறியாகக் கிளர்ந்து, பின் ஓர் உன்னத உன்மத்தமாக மாறிவிடும் கதை இரவுச்சுடர். ஏ.கே.ராமானுஜத்துடன் ஒரு முறை சூடாமணியின் கதைகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது அவளுடைய கதைகளில் அவருக்கு மிகப் பிடித்தது எது என்று கேட்டபோது அவர் இரவுச்சுடர் நாவலைத்தான் குறிப்பிட்டார். அவருக்கே உரிய கவிதை தோய்ந்த நடையில் இரவில் ஒளிரும் சுடராக யாமினியைப் படைத்திருக்கிறார் சூடாமணி. மற்றவர்கள் பாதை மறந்துவிடும்  கருமையான இரவும் யாமினிதான். அதில் ஒளியைச் சிந்தும் சுடரும் யாமினிதான். இருட்டும் வெளிச்சமும் இரண்டறக் கலந்த படைப்பு அவள்.”

இப்படிப்பட்ட ஒரு மனுஷியாகவும் எழுத்தாளராகவும் அவள் உருவாக உதவியது எது என்று நான் யோசித்ததுண்டு. அவள் குடும்பச் சூழ்நிலை ஒரு காரணம் என்றாலும் ஏராளமான புத்தகங்களை அவள் தமிழிலும் ஆங்கிலத்திலும் படித்ததுடன் பல மொழிபெயர்ப்புகளையும் தொடர்ந்து வாசித்துவந்தாள் என்பது மிக முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். அவள் மரணத்துக்குப் பின்பு அவளுடைய பழைய பல புத்தகங்களை நான் எனக்காகக் கேட்டு வாங்கிக்கொண்டேன். அவற்றைப் புரட்டும்போது சரத் சந்திரர் முதல் பல எழுத்தாளர்களை அவள் படித்திருப்பது தெரிந்தது. அந்தப் புத்தகங்களில் ஒரு புத்தகம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் எழுதிய ஹிந்தி எழுத்தாளரான சியாராம் சரண் குப்தரின் நாவலான பெண். நவயுகப் பிரசுராலயம் வெளியிட்டது. முன்னுரை எழுதியிருப்பது கு.ப. ராஜகோபாலன். அதில் கணவனிடம் வதைபடும் பெண் கடைசியில் தன் மகனின் கையைப் பற்றிக்கொண்டு வெளியேறுவாள். அதை ஆசிரியர் கீழ்க்கண்ட வரிகளில் வர்ணிப்பார்:

”ஹல்லீயின் கையைப் பிடித்துக்கொண்டு அவள் நடந்து சென்றாள். ஆகாயத்தில் மேகங்கள் வந்து சூழ்ந்திருந்தன. நாற்புறமும் ஒரே இருள். எங்கும் ஒன்றும் புலப்படவில்லை. ஆயினும் அவள் மகனின் கையைத் தாங்கி மேலே சென்றுகொண்டிருந்தாள்…. அவளுக்கு எவ்வித அச்சமும் இல்லை; ஒரு கவலையும் இல்லை.”

அந்த நாவலின் நாயகியின் ஓர் அம்சமாக விடிவை நோக்கி கதையின் நாயகி எனக்குத் தெரிந்தாள். இப்படி மனித வாழ்வின் பல கூறுகளை எந்தவித பாரபட்சங்களும் காழ்ப்பும், உள்நோக்கும், உபதேசிக்கும் தன்மையும் இல்லாமல் தூய மனிதத்தன்மையுடன் நோக்குவதற்கான விதைகளை சூடாமணியின் மனத்தில் ஊன்றியது, அவள் படித்த புத்தகங்கள் மட்டுமில்லை அவற்றிலிருந்து அவள் கிரகித்துக்கொண்டு உள்வாங்கிக்கொண்ட அவற்றின் ரசங்கள்தாம் என்று நான் நினைக்கிறேன். அந்த ரசங்களிலிருந்து, அவற்றைச் சுவைத்தபடியும் அவற்றைத் தன்போக்கில் அமைத்தபடியும்   சூடாமணி தன்னை எழுத்தாளராய் உருவாக்கிக்கொண்டாள். அவள் கடைசிவரை,  நிறுத்தாமல், தொடர்ந்து தன்னை உருவாக்கிக்கொண்டே இருந்தாள் என்பதுதான் அவள் சிறப்பு.

சூடாமணியின் கதைகளைக் காலச்சுவடு பதிப்பகம் ஒரு பெரிய தொகுப்பாகக் கொண்டுவந்தபோது பின்னட்டையில் நான் இவ்வாறு எழுதியிருந்தேன்:

”பெரு மழை வந்து பெரிய ஆல மரம் விழுந்துவிடும். பழங்களும், காய்களும், குச்சிக் கொம்புகளும், நீள் விழுதுகளும், திறந்த பொந்துகளும், கலைந்த கூடுகளும், அவற்றிலிருந்து பறக்கும் பறவைகளுமாய், வேர்கள் வானத்தைப் பார்த்தபடி கிடக்கும். சூடாமணியும் ஓர் ஆலமரமாய் இருந்தவர். காயாய், பழமாய், பூவாய், கனத்த விழுதுகளாய், ஆழமான வேர்களாய், கலைந்த கூடுகளிலிருந்து பறக்கும் கிளிகளாய், பொந்துகளிலிருந்து வெளிப்படும் அணில்களாய் சிதறிக்கிடக்கும் அவருடைய கதைகளை அவருடைய நண்பர்கள் பலர் இன்னும் பொறுக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த முயற்சியில் அமைந்த தொகுப்பு இது. ஓர் ஆலமரமாய் விழுதுகளை பூமி மேல் தழைய விட்டவர் சூடாமணி. பலருக்கு நிழல் தந்தவர். தன் கிளைகளில் கூடு கட்டிக்கொள்ள இடம் தந்தவர். அந்த ஆழ்ந்த வாஞ்சையும், மனித நேயமும் எல்லாக் கதைகளிலும் பொதிந்திருக்கும். எந்தக் கதையை யார் திறந்தாலும் அந்த உணர்வுகள் அவர்களை எட்டும். இக் கதைகளில் உள்ள அவருக்கே உரித்தான அந்த உணர்வுகள் அனைவரையும் தொடட்டும். தொட்டு வளர்த்தட்டும். இருத்தட்டும்.”

சூடாமணி என் வாழ்க்கையின் பெரும் பகுதியாக இருந்தவள். இருப்பவள். அவள் கதைகளும் அவளைப் போலவே பலர் வாழ்க்கையைத் தொடுபவை என்று நான் உறுதியாக நம்புகிறேன். கதைகள் செய்ய வேண்டியது அதைத்தான். சிலரின் கதைகள் அதைச் செய்கின்றன. பலரின் கதைகள் செய்வதில்லை. சூடாமணியின் சில கதைகளால் நாம் தொடப்பட்டோம் என்பதுதான் இலக்கியம் செய்யும் மாயம்.

[தடம்: 1, மார்ச் 2017 இல் முன்பு பிரசுரமாகியது.]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.