சந்தையில் புத்தகங்கள்

 என் தலைமுறையினருக்கு பலதரப்பட்ட புத்தகங்களை ஓரிடத்தில் குவித்து, விரும்புவோர் வந்து வாங்குவதற்கான ஓர் ஏற்பாட்டைச் செய்வது மிகவும் உகந்ததுதான். காரணம் சி.சு.செல்லப்பா போன்றவர்கள் தங்கள் புத்தக மூட்டைகளைத் தாங்களே சுமந்து கல்லூரிகளுக்கும் கடைகளுக்கும் அவற்றை விற்ற அனுபவங்களை அறிந்தவர்கள் நாங்கள். குறிப்பிட்டப் பதிப்பகங்களுக்கு எழுதியோ அவற்றுக்கு நேரில் சென்றோ புத்தகங்களை வாங்குவதுதான் எங்கள் அனுபவமாகப் பல ஆண்டுகள் இருந்தது.

  புத்தகங்களைப் பதிப்பிப்பதும் அப்போது வேறு மாதிரி சூழ்நிலையில் நடந்தது. என் கதைகளை பி.கே. புக்ஸ் பதிப்பகத்துக்குத் தரும்படி வெங்கட் சாமிநாதன்  என்னிடம் சொல்லிவிட்டார். அவர் என்னைப் பலவாறு ஊக்குவித்த நண்பராதலால் உடனே அனுப்பிவிட்டேன். பலகாலம் அது கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது. பிறகு தஞ்சை பிரகாஷ் தான் இப்போது தஞ்சாவூரில் இருப்பதாகவும், பதிப்பக விஷயங்களை குமாரசாமி பார்த்துக்கொள்வார் என்றும் ஒரு கடிதம் போட்டார். அதன்பின் மீண்டும் கிணற்றில் கல். ஒரு முறை டெல்லியிலிருந்து சென்னை வந்ததும் மறு ரயிலில் உடனே ஏறி மதுரை போய் நேரே வடக்கு மாசி வீதியிலிருந்த அச்சகத்துக்குப் போனேன் கையில் பெட்டியுடன். அச்சகத்திலிருந்தவர்கள் கொஞ்சம் அசந்துபோனார்கள். “என் புத்தகத்தின் படிகளைத் திருத்தணும். குமாரசாமி இல்லையா?” என்று கேட்டேன். ”என்னது? படிகளைத் திருத்தணுமா?” என்று இரண்டு முறை கேட்டார்கள். “ஆமாம். Proof பார்க்கணும்” என்றேன் விடாப்படியாக. “இங்க ஒண்ணும் கிடையாது” என்று துரத்தாத குறையாக அனுப்பிவிட்டார்கள். வெளியே வந்து வெங்கட் சாமிநாதனையும் பி.கே. பதிப்பகத்தையும்  மனத்திற்குள் சாபமிட்டேன். இருந்தது மதுரையாக இருந்தாலும் என் சாபம் எல்லாம் பலிக்கவில்லை. முலையைத் திருகிப் போடாததால் இருக்கலாம்.

பிறகு 1976ல் அச்சிட்ட பக்கங்கள் வந்தன. பிழையில்லாத பக்கங்களே இல்லை. “இந்த புத்தகத்தை நீங்கள் வெளியிடாமல் இருக்க முடியுமா?” என்று கேட்டு எழுதியபோது இதுவரை ஆன பத்தாயிரம் ரூபாய் செலவைத் தந்தால் வெளியிடாமல் இருக்க முடியும் என்று பதில் வந்தது. அத்தனை பணம் கையில் இருக்கவில்லை. புத்தகம் வந்தது கண்கொண்டு பார்க்கமுடியாத வடிவத்தில். இதற்கு ராயல்டி கூட வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்தேன். சுந்தர ராமசாமிதான் இத்தகைய தமிழ்த் தியாகம் எல்லாம் செய்ய வேண்டாம் என்று கூறி அவர் மதுரை போனபோது ரூ. 500 வாங்கிவந்தார். அதை ஏதாவது நல்ல காரியத்துக்குத் தந்துவிடுங்கள் என்றதும் புரசைத் தம்பிரான் குழுவில் ஒருவர் டெல்லி செல்ல நிதி உதவியாக இதைத் தந்துவிட்டதாகக் கூறினார்.

சென்னை வந்தபோது ஒரு முறை க்ரியா ராமகிருஷ்ணனைப் பார்க்கச் சென்றபோது அவருடன் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். “இவரைத் தெரியாதா? இவர்தான் குமாரசாமி,” என்று அறிமுகம் செய்துவைத்தார் ராமகிருஷ்ணன். அப்படியா என்று விட்டு புத்தகங்கள் இருந்த வெளி அறைக்கு வந்துவிட்டேன். புத்தகங்கள் போடுவது எவ்வளவு நஷ்டத்தைத் தரும் வேலை என்று உரக்கப் பேசிக்கொண்டிருந்தார் குமாரசாமி. “இப்போ பாருங்க; அம்பையோட புஸ்தகம் சிறகுகள் முறியும் போட்டோம். யாரு வாங்கறாங்க? அப்படியே கிடக்கு. விக்க முடியல. அத்தனையும் நஷ்டம்,” என்றார் என் காதில் விழும்படி. விற்காத புத்தகத்தை எழுதியதற்காகக் கீழே இறங்கிப் போய் தெருவில் மனம் போன போக்கில் நடக்க ஆரம்பித்தேன்.

  இந்த அனுபவங்கள் இருப்பதால் சமூக ஊடகங்களில் தங்கள் புத்தகங்கள் பற்றி எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதுவதும் அமர்க்களமான புத்தக வெளியீடுகளும் எழுத்தாளர்களின் பலவகைத் தோற்றங்களுடன்  பிரம்மாண்டமான பதாகைகளும் திருவிழா போல நடைபெறும் புத்தகச் சந்தைகளும் சற்று பிரமிப்பைத் தருகின்றன. ”இந்தப் புத்தகத்தைப் படிக்காவிட்டால் வாழ்வே வீண்” என்பதுபோல் பிரகடனப்படுத்திய, அற்புதமாக அச்சிட்டச் சில புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தபோது பேசாமல் வாழ்வை வீணாக்கியிருக்கலாமோ என்று தோன்றியது. அதிகம் மார் தட்டிக்கொள்ளாமல் அமைதியாகக் கிடந்த சில புத்தகங்கள் மனத்தைத் தொட்டன.

மற்றபடி புத்தகங்கள் நிறைந்திருக்கும் கடைகளூடே நடப்பது மனத்துக்குச் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. பல புத்தகங்களை வாங்கவும் முடிந்தது. அதைப் படிக்கும் உற்சாகமும் இன்னும் இருக்கிறது. செவிக்குணவாக ”என் தமிழ்த் தாயே” என்ற கூச்சலும் விடாமல் கேட்டது வெளி அரங்கிலிருந்து. கிருஷ்ணா ஸ்வீட்ஸிலிருந்து உணவை வாங்கிக்கொண்டு தமிழ்த் தாயை விட்டுக் கொஞ்சம் விலகிப் போய்ச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் புத்தகங்களூடே நடப்பது தினமும் நடந்தது. இடையிடையே  கைகுலுக்கி அல்லது அணைத்து, “எங்க வீட்டுல எங்க பாட்டியும் அம்மாவும் உங்களை விரும்பிப் படிப்பாங்க. நீங்க ஆப்ரிக்காவிலிருந்து எழுதின கதைகள் பிரமாதம்னு சொன்னாங்க,” என்று கனிவுடனும், “உங்க ‘சமையலறை மூலையில்’ கதை அற்புதம். நிறைய எழுதுங்க. இப்போ எழுதறீங்கதானே?” என்று அக்கறையுடனும் “உங்க ‘கொலை செய்துவிட்டாள் அம்மா’ என்னை ரொம்ப பாதிச்சுதுங்க” என்று நெகிழ்ச்சியுடனும் சொல்லும் பல வாசகர்களை ஒருசேரப் புத்தகச் சந்தைகளில்தான் ஒவ்வோர் ஆண்டும் பார்க்க முடிகிறது. இந்த ஆண்டும் பார்த்தேன். என் புத்தகத்தில் கையழுத்திட காலச்சுவடு அரங்கில் அமர்ந்திருந்த என்னிடம் சிலர் வந்து சில புத்தகங்கள் எங்கே இருக்கின்றன என்று விசாரித்தார்கள்; சிலர் சில புத்தகங்களைக் கொண்டுவந்து ‘பில்’ போடச் சொன்னார்கள். ஒரு வேளை மதுரை வடக்கு மாசி வீதியிலும் பின்பு க்ரியா அலுவலகத்திலிருந்து வெளியேறி ராயப்பேட்டையிலும் நடந்த நாட்களில்தான் இன்னும் இருக்கிறேனோ என்று தோன்றியது.   

தலை நரைத்துவிட்டால் பலர் அஞ்சலி எழுதிவிடுகிறார்கள் மனத்தினுள் போலும். விடுவிடுவென்று நடப்பவளை நிறுத்தி “உடம்புக்கு ஒன்றுமில்லையே? நலம்தானே? ஏதாவது புஸ்தகம் உண்டா?” என்று அன்புடன் விசாரித்தவர்கள் உண்டு. “ஒரு சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கு” என்றதும் “யார் போட்டிருக்காங்க?” என்று கேள்வி தொடரும். “காலச்சுவடு” என்றதும், ”பெருமாள் முருகனை வெளியிடறாங்களே அந்தக் காலச்சுவடா?” என்று கேள்வி வரும். “அதே காலச்சுவடுதான்” என்றதும் தயக்கத்துடன் புன்னகைத்துவிட்டு நகர்வார்கள். நான் என் முன்னுரையில் கூறியிருப்பதுபோல் நான் இன்னும் எழுதுவேன் என்று கூறுவதை காலச்சுவடு நிறுவனம் உறுதிமொழியாக எடுத்துக்கொள்கிறதா அல்லது எச்சரிக்கையாக எடுத்துக்கொள்கிறதா என்பது இன்னும் தெரியவில்லை எனக்கு. காலச்சுவடுக்கு நான் சொல்லக்கூடியது எல்லாம் ஒன்றுதான்: விதி வலியது!

3 Replies to “சந்தையில் புத்தகங்கள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.