கோடை ஈசல்

பீட்டர் வாட்ஸ்+ டெரில் மர்ஃபி

முந்தைய பாகம்

பாகம்-2

சதையால் ஆன உலகில் பத்து நிமிடங்கள்தான் கடந்திருந்தன.

ஜீனியின் பெற்றோர் அவளை அவளுடைய தனிவகைக் கட்டிலில் கிடத்தி இருந்தனர். அந்த அறையில் அனுமதிக்கப்பட்டிருந்த சில தூலமான முப்பரிமாண வடிவப் பொருட்களில் அது ஒன்று. பெட்டி போன்ற அந்த அறையே, ஒரு மேடைதான், அனேகமாக காலியாக இருந்தது. வேறு பொருட்களுக்கு உண்மையில் எந்தத் தேவையும் இருக்கவில்லை; உணர்ச்சிகள் ஜீனின் தலையில் பிடரியின் புறப்பகுதியிக்குள் நேரடியாக பதிக்கப்பட்டன, அவளுடைய கேட்கும் புலனின் பாதைகளில் சேர்க்கப்பட்டிருந்தன, தொடப்படும் பொருட்களின் தாக்கங்களின் கச்சிதமான போலி உணர்வுகள், அவளுடைய தொடு உணர்வுக்கான நரம்புகளுக்கு எதிராக முட்டின. அது பொய்களால் உருவான உலகு, அங்கு நிஜப்பொருட்கள் போய் வருவதில் ஆபத்துகளைக் கொணரும்.

“கடவுள் உன்னை நரகத்தில் தள்ளட்டும், அவள் பாழாய்ப் போன ஒரு டோஸ்டரில்லை,” கிம் தன் கணவனைப் பார்த்து எரிந்து விழுந்தாள். கடுமையான உறை நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததெல்லாம் ஒரு முடிவுக்கு வந்தது என்பது தெளிவாகத் தெரிந்தது; யுத்தம் மறுபடி துவங்கி விட்டது.

“கிம், நான் என்ன செய்திருக்க முடியும்-”

“அவள் ஒரு குழந்தை, ஆன்டி. அவள் நம் குழந்தை.”

“அப்படியா.” அது ஒரு அறிக்கை, கேள்வி இல்லை.

“வேறென்ன, அவள் அதானே!”

“சரி, இருக்கட்டும்.” ஆண்ட்ரூ தன் பையிலிருந்து அந்த ரிமோட்டை எடுத்தார், அவளிடம் நீட்டினார். “அப்போ, நீயே அவளை எழுப்பு.”

அவள் ஏதும் பேசாமல் அவரைச் சில வினாடிகள் நோக்கினாள். ஒலிகளைப் பதிக்கும் கருவிகள் வழியே ஸ்டாவ்ரோஸால், ஜீனியின் உடல் அந்த அமைதிக்குள் மூச்சு விடுவதைக் கேட்க முடிந்தது.

“ஆம்பளைத் திமிரா உனக்கு.” கிம் சன்னமாக ஒலித்தாள்.

“அ…ஹா. அதைச் செய்ய முடியல்லை உனக்கு, இல்லியா? மோசமான வேலையை எல்லாம் என்னைச் செய்ய விட்டுடுவே நீ.” அவர் அந்த ரிமோட்டைக் கீழே போட்டார்: அது அந்த மெத்தென்ற தரையில் விழுந்து அதிர்ந்தது. “அப்புறம் அதுக்கு என்னைக் குத்தமும் சொல்லுவே.”

நான்கு வருடங்கள் இந்த நிலைக்கு அவர்களைக் கொண்டு வந்திருந்தன. வெறுப்பாகி, ஸ்டாவ்ரோஸ் தன் தலையை மறுப்பில் அசைத்தார். யாருமே கனவு கூட காண முடியாத ஒரு வாய்ப்பு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது, பாருங்க அவங்க அதை என்ன நிலைக்குக் கொண்டு வந்திருக்காங்கன்னு. முதல் தடவை அவர்கள் அவளை இப்படிச் செயலிழக்கச் செய்த போது அவளுக்கு இரண்டு வயது கூட ஆகி இருக்கவில்லை. நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அந்த முன்னோடிச் சம்பவத்தால் அரண்டு போன அவர்கள், அதை மறுபடி ஒரு போதும் செய்ய மாட்டோம் என்று உறுதி கொடுத்தார்கள். அவளை உறங்க வைப்பதில் எப்போதோ முடிகிறபோது செய்யாமல், திட்டப்படி நேரம் தப்பாமல் உறங்கச் செய்வோம், என்று சத்தியம் செய்தார்கள். என்ன இருந்தாலும் அவள், அவர்களின் மகள்தானே. ஏதோ ஒரு வக்கரித்த டோஸ்டர் இல்லையே.

உண்மை உணர்வு கொண்ட அந்த ஒப்பந்தம் மூன்று மாதங்கள் நீடித்தது. அதற்குப் பிறகு எல்லாம் சரிவில் இறங்கி விட்டன; கோரவெக்குகள் ஏதாவது ஒரு வழியில் சிக்கல்களை உருவாக்காத நாள் ஒன்றைக் கூட ஸ்டாவ்ரோஸால் நினைவு கூர முடியவில்லை. இப்போதோ, அவர்கள் அவளை அமர்த்தி நிறுத்தி விட்டபோது, நடக்கும் சர்ச்சை வெறும் சடங்குதான். வெற்று வார்த்தைகள்- அந்தச் செயலின் கொடுந்தன்மையோடு மல்லுக்கு நிற்பது போலத் தோற்றமளித்தாலும்- அவற்றால் யாரும் ஏமாறப் போவதில்லை. அப்படி ஒரு பாவனை இருந்தாலும், அவை இப்போதெல்லாம் வாக்குவாதங்களாகக் கூட இல்லை. அவை பேரங்கள், போன்றவை. இந்த முறை யாருடைய தவறு அது என்பதைப் பற்றியவை.

“நான் உங்களைக் குற்றம் சொல்லவில்லை, வெறுமனே- நான் சொல்றது என்னன்னா- கடவுளே, ஆண்டி, இப்படியெல்லாம் ஆகியிருக்கவே கூடாது!” இறுகிய கை முட்டியால் தன் கண்ணீர்த் துளி ஒன்றை கிம் துடைத்தாள். “அவள் நம்முடைய மகளாக இருப்பதாகத்தானே ஏற்பாடு. அவளுடைய மூளை சாதாரணமாக முதிர்ச்சி அடையும் என்றுதான் சொன்னார்கள், அவர்கள் சொன்னபடி-”

“அவர்கள் சொன்னது,” ஸ்டாவ்ரோஸ் இடைமறித்தார், “உங்களுக்கு பெற்றோராக ஆவதற்கு ஒரு வாய்ப்பு கிட்டும் என்பதுதான். நீங்கள் அதை எவ்வளவு நன்றாகச் செய்வீர்கள் என்பதற்கு அவர்களால் எந்த உறுதியும் கொடுத்திருக்க இயலாது.”

சுவர்களிலிருந்து அவரது குரல் கேட்ட உடனே கிம் அதிர்ந்தாள், ஆனால் ஆண்ட்ரூ தன் தலையை அசைத்து மறுத்தபடி கசப்பான புன்னகை ஒன்றைச் சிந்தினார். “இது எங்களுக்குள் அந்தரங்கம். இங்கிருந்து தொடர்பை அறுத்து வெளியேறுங்க.”

அது ஒரு வெற்று ஆணைதான், வேறென்ன: இந்தச் செயல் திட்டத்திற்கான விலை, கடுமையான கண்காணிப்பு. அந்த நிறுவனம் ஆராய்ச்சியிலும், அதன் முடிவைக் கொண்டு செய்யவிருக்கும் வளர்ச்சித் திட்டங்களிலும் பல பிலியன்களை முதலீடு செய்திருந்தது. ஒப்பந்தம் போட்டிருந்தாலும், போடாவிட்டாலும், எதிர் வழக்குப் போட்டுத் தொல்லை செய்யத் துடிப்போடு இருக்கும் சில அடி நிலை வழக்கறிஞர்களை இத்தனை பெரிய முதலீட்டோடு, எந்த மேற்பார்வையும் இல்லாமல் ஆட்டம் போட விடுமா அந்த நிறுவனம்?

 “உங்களிடம் தேவையான அனைத்தும் இருந்தன.” ஸ்டாவ்ரோஸ் தன் குரலில் ஒலிக்கிற அலட்சியத்தை மறைக்க முயலவில்லை. “டெர்ராகானிடம் இருப்பதில் சிறப்பான வன்பொருள் தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் இந்தத் தொடர்புகளை எல்லாம் கையாண்டார்கள். மெய்நிகர் ஜீன்களை நானே உருக் கொடுத்து ஆக்கினேன். கரு முதிர்ச்சிக்கான காலம் கச்சிதமாக இருந்தது. சாதாரணமான ஒரு குழந்தையை உங்களுக்குக் கொடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம்.”

“ஒரு சாதாரணக் குழந்தை,” ஆண்ட்ரூ சொன்னார், “அவளுடைய தலையிலிருந்து ஒரு தொடர்புக் கம்பியோடு இருப்பதில்லை. ஒரு சாதாரணக் குழந்தையைக் கட்டிப் போட ஒரு அலமாரி முழுதும் நிரம்பிய …”

“தொலைத் தொடர்பு மூலம் ஒரு மனித உடலை இயக்க என்ன அளவு போட் வேண்டுமென்று உங்களுக்குக் கொஞ்சமாவது தெரியுமா? வானலையைப் (ஆர் எஃப்) பயன்படுத்துவதை யோசிக்கக் கூட முடியாது. அவளுடைய வளர்ச்சியும், அன்றைய தொழில் நுட்பமும் அனுமதிக்கிற கணமே அவள் பயணமேற்கொள்ளத் தக்கவளாகி விடுகிறாள். நான் உங்களிடம் பலமுறைகள் ஏற்கனவே சொன்னவைதான் இவை எல்லாம்.” அவர் சொல்லித்தான் இருந்தார், ஆனால் அது கிட்டத்தட்ட ஒரு பொய்.  ஓ, தொழில் நுட்பம் எப்போதும்போல தன் வேகத்தில் வளர்ந்து கொண்டுதான் இருந்தது, ஆனால் இப்போதெல்லாம் டெர்ராகான் இந்த கோரவெக் கோப்புகளில் உள்ள ஆராய்ச்சி மேலும் வளர ஏதும் முதலீடு செய்வதில்லை. தன் போக்கில் போகிறதைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள், அவ்வளவுதான்.

“நாங்கள் …- எங்களுக்குத் தெரியும், ஸ்டாவ்.” கிம் கோரவெக் தன் கணவருக்கும், ஒலி பற்றும் கருவிகளுக்கும் இடையில் நுழைந்தாள். “நாங்கள் மறக்கவில்லை- ”

“எங்களை இந்தச் சிக்கல்களில் கொண்டு மாட்டியது டெர்ரகான் தான் என்பதையும் நாங்கள் மறந்து விடவில்லைதான்,” ஆண்ட்ரூ பொருமினார். “என்னை ஒரு விரிசல் விட்ட தடுப்புக் கவசத்தினருகே நாற்பத்தி மூன்று நிமிடங்கள், பதினாறு வினாடிகளுக்கு வேக விட்டது யாருடைய கவனப்பிசகு என்பதையோ, அல்லது யாருடைய சோதனைகள் உயிரணுச் சிதைவுகளைக் கண்டு பிடிக்கத் தவறின என்பதையோ, அல்லது குழந்தை பிறப்புக்கான லாட்டரியில் எங்களுக்குக் கிட்டின வாய்ப்பு ஒரு பயங்கரத் தீக்கனவாக மாறியபோது யார் எங்களை அலட்சியம் செய்தார்கள் என்பதையோ நாங்கள் மறக்கவில்லைதான் –”

“இதையெல்லாம் சரி செய்ய டெர்ராகான் என்னென்ன செய்தது என்பதை நீங்கள் மறந்து விட்டீர்களில்லையா? கோரிக்கைகளை விலக்கிக் கொண்டு நீங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை மறந்து விட்டீர்களா?”

“நீதிமன்றத்துக்கு வெளியே ஒப்பந்தம் செய்து கொண்டதனால் நீங்கள் ஏதோ புனிதர்களாகி விட்டதாக நினைக்கிறீர்களா? நிலைமையைச் சரி செய்ததைப் பற்றிப் பேச வேண்டுமா உங்களுக்கு? அந்த லாட்டரியை வெல்வதற்கு எங்களுக்குப் பத்து வருடங்களாயிருந்தன, உங்கள் வழக்கறிஞர்கள் சோதனைகளின் முடிவுகள் வந்த போது எங்களிடம் என்ன செய்தார்கள் என்று தெரியுமா? கருக்கலைப்புக்கு நிதி உதவி செய்வதாகச் சொன்னார்கள்.”

 “அதற்கு அர்த்தம் அதல்ல-”

“எனக்கு இன்னொரு குழந்தை எப்பவாவது சாத்தியமாகுமா என்ன? என் கொட்டைகள்லே முழுக்க கோடான் கூழ் நிரம்ப இன்னொரு வாய்ப்பை எனக்கு யாரோ தரப்போறாங்களா? நீங்க-”

“இங்கே பிரச்சினை,” குரலை உயர்த்தி, கிம் பேசினாள், “ஜீனியைப் பத்தின்னு நெனைக்கிறேன்.”

இரண்டு ஆண்களும் மௌனமானார்கள்.

“ஸ்டாவ்,” அவள் தொடர்ந்தாள், “டெர்ராகான் என்ன சொல்கிறதுங்கறத்தைப் பத்தி நான் கவலைப்படல்லை. ஜீனி சாதாரணமா இல்லை, நான் இங்கே ரொம்ப நேரடியாத் தெரியறத்தைப் பத்திச் சொல்லல்லை. நாங்க அவ கிட்டே ரொம்ப பாசம் வச்சிருக்கோம், நெசம்மாவே அவ மீது எங்களுக்குப் பிரியம் இருக்கு, ஆனால் எப்போதும் அவள் ரொம்பவே குரூரத்தைத்தான் காட்டறா, எங்களால அதைப் பொறுக்க முடியல்லே-”

 “என்னை யாராவது ஒரு மைக்ரோவேவ் அடுப்பைப் போல துவக்குவதை, அல்லது அணைப்பதைச் செய்தால்,” ஸ்டாவ்ரோஸ் சொன்னார் மென்மையாக, “நானும் கூட வெறித்தனத்தை அவ்வப்போது காட்டுவேனாயிருக்கும்.”

ஆண்ட்ரூ தன் முட்டியால் சுவற்றில் அடித்துக் குத்தினார். “இங்க ஒரே ஒரு நிமிஷம் பாருங்க, மிகலெய்ட்ஸ். பாதி உலகம் தள்ளி தூரத்தில இருக்கற கதகதப்பான உங்க ஆஃபிஸ்ல உட்கார்ந்துக்கிட்டு, எங்களுக்கு போதனை செய்யறது உங்களுக்கு சுலபமா இருக்கு. நாங்கதான் ஜீனியோடு போராட வேண்டி இருக்கு, அவ தன்னோட முட்டிகளை தன் முகத்திலே குத்திக்கறா, தன் கையில இருக்கற தோலை உரசிப் பிச்சுப்புடறா, வெறும் மாமிசம்தான் அவ கையில தொங்கறது, அல்லது தன்னோட கண்ணுல ஒரு ஃபோர்க்கால குத்திக்கறா. அவ ஒரு தடவை (உடைஞ்ச) கண்ணாடியைத் தின்னா, ஞாபகம் இருக்கா? ஒரு மூணு வயசுக் குழந்தை அடாவடியா கண்ணாடியைத் திங்கறா!  நீங்க இருக்கீங்களே, டெர்ரகானோட சோமாறிகள், எல்லாராலும் என்ன செய்ய முடியறது? ‘ஆபத்தைக் கொடுக்கக் கூடிய சாதனங்களை’ விளையாடற இடத்துல கொண்டு வர விட்டோம்னு என்னையும் கிம்மையும் பழி சொல்லத்தான் முடியுது. எத்தனை பெத்தவங்களுக்கு ஒரு குழந்தை தன்னைத் தானே வெட்டிச் சிதைச்சுக்கும்னு எதிர்பார்க்க முடியும், அதுக்கு என்ன வாய்ப்பு இருக்கு?”

“இதெல்லாம் வெறும் பைத்தியக்காரத்தனம், ஸ்டாவ்,” கிம் அடித்துச் சொன்னாள். “டாக்டர்களுக்கு அவளோட உடல்லே எந்தக் கோளாறையும் கண்டு பிடிக்க முடியல்லே, நீங்களோ அவளோட புத்தியில எந்தப் பிரச்சினையும் இல்லேன்னு அழுத்தம் திருத்தமாச் சொல்றீங்க, ஜீனியோ இப்படியே செய்துக்கிட்டு இருக்கா. அவள் கிட்டே ஏதோ படுமோசமா இருக்கு, நீங்க அதை ஒத்துக்கிட மாட்டேங்கிறீங்க. அவ எங்கே என்னை அணைச்சுப் போடுங்க பார்க்கலாம்னு எங்களுக்கு சவால் விடற மாதிரிதான் இருக்கு, நாங்க அவளை அணைச்சுடணும்னு அவள் எதிர்பார்க்கிற மாதிரி இருக்கு.”

ஐயோ கடவுளே, என்று நினைத்தார் ஸ்டாவ்ரோஸ். ஒன்று புரிந்தது அவருக்கு, அது பார்வையே அற்றுப் போனது போல இருந்தது. அதேதான். குறிப்பா அதுதான்.

அது என்னோட தப்புதான்.

‘ஜீன், கேளு. இது ரொம்ப முக்கியமானது. நான் ஒண்ணு வச்சிருக்கேன் – உனக்கு ஒரு கதை சொல்லணும்னு ஆசைப்படறேன்.”

 “ஸ்டாவ், எனக்கு இப்போ அதுல மனசு இல்லே –”

“ப்ளீஸ் ஜீன்.  பேசாம கேள்.”

காதில் இருந்த ஒலிப்பான்களில் மௌனம். அவருடைய டாக்டிகல் கண்ணாடி வில்லைகளில் ஓடிய அரூபச் சில்லுகள் சிறிது மெதுவாக ஓடுவது போலத் தெரிந்தது.

“அங்கே- அங்கே ஒரு நிலப் பகுதி இருந்தது, ஜீன், இந்த பசுமையான, அழகான நாடு, அதன் மக்கள்தான் எல்லாவற்றையும் கெடுத்தார்கள். தங்களுடைய ஆறுகளை விஷமாக்கினார்கள், தங்கள் கூடுகளிலேயே மலம் கழித்தார்கள், அடிப்படையாகவே எல்லாவற்றையும் கந்தலாக்கினார்கள். அதனால் அவர்கள் வேறு மக்களை அமர்த்தி எல்லாவற்றையும் சுத்தம் செய்ய வேண்டியதாயிற்று, தெரிகிறதா உனக்கு? அவர்கள் வேதிப்பொருட்களினூடே நடந்து போக வேண்டியதாயிற்று, அணு உலை எரி பொருள் குப்பிகளைக் கையாள வேண்டி இருந்தது, சில சமயம் அது அவர்களை மாற்றி விடும், ஜீன், சிறிதளவேதான் அந்த மாற்றம்.

இந்த மாதிரியான இருவர் காதலித்தார்கள், ஒரு குழந்தை வேண்டுமென்றும் ஆசைப்பட்டார்கள். அவர்கள் இதை அடையாமலே போயிருக்கக் கூடும், ஆனால் அவர்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு கிட்டியது, அவர்கள் அதைப் பற்றிக் கொண்டார்கள், அந்தக் குழந்தை உள்ளே வளரத் தொடங்கியது, ஆனால் ஏதோ சரியாக இல்லை, பிழையாகத் துவங்கியது. இதை எப்படிச் சரியாக விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால்-”

“எபிஜெனெடிக் ஸினாப்டிக் டிஃபெக்ட்,” என்றாள் ஜீன் அமைதியாக. “என்ன, அப்படிச் சொன்னா கிட்டத்தட்ட சரியாக இருக்கா?”

ஸ்டாவ்ரோஸ் உறைந்தார், ஆச்சரியப்பட்டதோடு, பயப்படவும் செய்தார்.

“ஒரு புள்ளி உருமாற்றம்,” ஜீன் மேலே தொடர்ந்தாள். “அது இதெல்லாம் செய்யும். டெண்ட்ரைட்டுகளின் மீது முடிச்சுகளைப் பிரிப்பதைக் கட்டுப்படுத்தும் ஒரு உயிர் மரபணு. அது என்ன, மொத்தமாக, இருபது நிமிடங்கள்தான் வேலை செய்திருக்கும், ஆனால் அதற்குள் சேதம் ஏற்பட்டு விட்டது. உயிர்மரபணு முறைச் சிகிச்சை அதற்குப் பிறகு வேலை செய்யாது; அப்படிச் செய்வது, குதிரை லாயத்தை விட்டு ஓடிய பிறகு கதவைச் சாத்துவதுங்கிற பழைய இடித்துக் காட்டலுக்கு ஒரு உதாரணம் போல ஆகும்.”

“கடவுளே, ஜீன்,” ஸ்டாவ்ரோஸ் முணுமுணுத்தார்.

“நீங்க எப்ப இதை ஒழுங்குமுறையா ஒத்துக்கப் போறீங்கன்னு நான் யோசிச்சிக்கிட்டுருந்தேன்,” என்றாள் அவள், அமைதியாக.

“நீ எப்படி இதெல்லாம்… நீ என்ன-,”

அவரை இடைவெட்டினாள் ஜீன்: “என்னால் மீதக் கதையை ஊகிக்க முடியுமென்று நினைக்கிறேன். நரம்புக் குழாய்கள் உருவாகத் துவங்கிய உடன் எல்லாம் கெட்டுப் போகத் துவங்கும். அந்தக் குழந்தை மிகச் சரியான உடலோடு பிறக்கும், ஆனால் அதன் மூளை வெறும் கூழாக இருக்கும். அப்புறம் பல சிக்கல்கள் எழும்- நிஜமானவை அல்ல, ஆனால் இட்டுக் கட்டப்பட்டவை. வழக்குத் தொடர்தல், என்பதுதான் அந்த வார்த்தை என்று நினைக்கிறேன், அது கொஞ்சம் வேடிக்கையானது, ஏனெனில் அதற்கும் தர்மத்துக்கும் சிறிது கூடத் தொடர்பு இல்லை. அந்த விஷயம் எனக்குப் புரியாதது.”

“ஆனால் வேற வழி ஒன்று இருந்தது. யாருக்கும் மூளையை அடிப்படையிலிருந்து துவங்கி உருவாக்குவது எப்படி என்பது தெரிந்திருக்கவில்லை, அப்படியே தெரிந்திருந்தாலும், அதுவல்ல அங்கே தேவைப்பட்டது. அது அவர்களின் மகளாக இராது, அது – வேறொன்றாக இருக்கும்.”

ஸ்டாவ்ரோஸ் ஒன்றும் சொல்லவில்லை.

“ஆனால், அங்கு ஒரு மனிதன், அறிவியலாளர் இருந்தார், அவர் ஒரு சுற்று வழியைக் கண்டு கொண்டார். நாம் ஒரு மூளையை நிர்மாணிக்க முடியாது, ஆனால் உயிர்மரபணுக்களால் முடியும், என்றார் அவர். உயிர் மரபணுக்களை நகல் செய்வது, எப்படியுமே, நரம்பு வலைப் பின்னலை நகல் செய்வதை விட எளிது. நான்கே எழுத்துகளோடுதானே வேலை செய்ய வேண்டும். அதனால் அந்த அறிவியலாளர் தன்னை ஒரு சோதனைக் கூடத்தினுள் அடைத்துக் கொண்டார், அதில் பொருட்களின் இடங்களில் எண்கள் நிரம்பின, அவர் ஒரு செயல் குறிப்பே அங்கு எழுதினார், ஒரு குழந்தைக்கான செயல் திட்டம் அது. அற்புதம் நிகழ்ந்தது, அவர் ஒன்றை வளர்க்கவும் செய்தார், அதனால் விழிக்கவும், எழுந்து, சுற்றிலும் பார்க்கவும் முடிந்தது, அது சட்ட பூர்வமாகச் சொன்னால்- நிஜமாகவே, எனக்கு இந்த வார்த்தையும் புரியவில்லை – சட்டபூர்வமாகவும், உயிர் மரபணு வழியிலும், வளர்ச்சியாலும் அது அந்தப் பெற்றோரின் மகள்தான். தான் சாதித்ததைப் பற்றி இந்த நபர் மிகவும் பெருமிதமடைந்தார், ஏனெனில் அவர் முன்மாதிரிகளைக் கட்டும் தொழிலில்தான் இருந்தார் என்றாலும், அவர் அதைக் கட்டவில்லை, வளர்த்திருக்கிறார். அதற்கு முன் யாரும் ஒரு கணினியைக் கர்ப்பமாக்கியது கூட இல்லை, பிறகு ஒரு மெய்நிகர் கருவின் மூளையைக் கணினிக் குறிமுறையால் திட்டமிட்டு அது ஒரு அளிப்பான் கருவியில் எங்கோ வளரும்படியும் எப்படிச் செய்திருக்கப் போகிறார்கள்?”

ஸ்டாவ்ரோஸ் தலையைத் தன் கரங்களில் புதைத்துக் கொண்டார். “எத்தனை நாட்களாக இது உனக்குத் தெரியும்.”

“எனக்கு இன்னமும் தெரியாது, ஸ்டாவ். இதில் உள்ளது எல்லாமே தெரியாது என்று நிச்சயம் சொல்லலாம். ஆனால் ஒன்று, இதில் ஏதோ ஒரு திடீர் திருப்பம் இருக்கிறது, இல்லையா? அந்தப் பகுதியை நான் இப்போதுதான் தெரிந்து கொண்டேன். நீங்கள் உங்களுடைய சொந்தக் குழந்தையை உள்ளே, இங்கே வளர்த்தீர்கள், இதில் எல்லாம் எண்கள். ஆனால் அவள் வேறெங்கோ வளர்வதாகத்தான் சொல்லப்பட்டது. அங்கே எல்லாம் தேங்கி நிற்கின்றன, எல்லாம் இங்கே நடப்பதை விட பில்லியன் தடவைகள் மெதுவாக நடக்கின்றன. அங்கேதான் சொற்கள் எல்லாம் பொருந்தும். அதனால் அந்த உலகுக்குள் பொருந்துவதற்காக அவளை நீங்கள் குறைக்க வேண்டி இருந்தது, இல்லையேல் அவள் ஒரே இரவில் வளர்ந்து விடுவாள், அது அந்தப் பிரமையை உடைத்து விடும். நீங்கள் கடிகாரத்தின் வேகத்தை மிக மிகக் குறைக்க வேண்டி இருந்தது.

“நீங்களோ அதற்கெல்லாம் தயாராக இல்லை, அப்படித்தானே? என் உடலை அது எங்கே சுதந்திரமாக உலவ முடியுமோ அங்கே….தள்ளி ஓர் இடத்தில்..”

அவள் குரலில் இதுகாறும் அவர் கேட்டிராத ஏதோ ஒன்று இருந்தது. அவர் ஜீனிடம் கோபத்தை முன்பு பார்த்திருந்தார், ஆனால் அது எப்போதுமே தசையில் சிறைப்பட்ட ஒரு சுதந்திர ஆத்மாவின் அலறலாக, சொல்லி விளக்க முடியாத சீற்றமாக இருந்தது. இதுவோ அமைதியாக, குளிர்ந்து இருந்தது. மனமுதிர்ச்சி. இது சீர்தூக்கல், ஒரு தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது என்ற நினைப்பே ஸ்டாவ்ரோஸுக்கு எலும்பு மஜ்ஜை வரை குளிரச் செய்தது.

“ஜீன், அவர்கள் உன்னை நேசிக்கவில்லை..” தான் சொல்வது மிகவும் தீனமாக இருப்பதாக அவருக்கே தோன்றியது. “நீ எப்படி இருக்கிறாயோ அந்த நிலையிலேயே உன்னை அவர்கள் நேசிக்கவில்லை. நிஜமாக நீ இருக்கும் விதத்தில் உன்னைப் பார்க்க அவர்கள் விரும்பவில்லை, அவர்களுக்கு ஒரு குழந்தை வேண்டும், கேலிக்குரிய விதமாக தம்மால் அணைத்து, போஷித்து, நாடகமாக நடித்து வளர்க்கக் கூடிய ஒரு வளர்ப்பு மிருகம்தான் அவர்கள் விரும்புவது.”

“ஆனால் நீங்கள்,” ஜீன் மறுதலித்தாள், அவள் குரல் பனிக்கட்டியாகவும், கத்திக் கூர்மையோடும் ஒலித்தது, “இந்தக் குழந்தை முழு வேகத்தில், தங்குதடையற்று விரைந்தால் என்ன ஆகுமென்று பார்க்க விரும்பினீர்கள்.”

“கடவுளே, இல்லை! நான் அதற்காகத்தான் இதை எல்லாம் செய்தேன் என்று நீ நினைக்கிறாயா என்ன?”

 “அப்படி ஏன் இருக்கக் கூடாது, ஸ்டாவ்? உங்களுடைய அதிவேக தகவல் பரிமாற்ற முயற்சி, ஒரு மூளை செத்த சதையாலான நாய்க்குட்டியை ஒரு அறைக்குள் உலாவ விடும் வேலையில் இறக்கப்படுவதை நீங்கள் பொருட்படுத்தவில்லை என்கிறீர்களா?”

“நான் செய்ததற்குக் காரணம், நீ அதை விடப் பலமடங்கு பெரியவள்! நீ உன் இயல்பான வேகத்தில் வளர வேண்டும், ஏதோ முட்டாள்தனமான பெற்றோரின் உணர்ச்சி எதிர்பார்ப்புகளுக்காக உன் இயல்பு முடக்கப்படக் கூடாது என்பதற்காகச் செய்தேன்! அவர்கள் உன்னை ஒரு நான்கு வயதுக் குழந்தையாகச் செயல்படும்படி கட்டாயப்படுத்தக் கூடாது!”

 “ஆனால் அப்போது நான் ஒன்றும் நடிக்கவில்லையே, ஸ்டாவ். அப்படியா செய்கிறேன்? நிஜமாகவே நான் நான்கு வயதுக் குழந்தைதான், அப்படித்தான் நான் இருப்பதாகக் கருத்து.”

அவர் ஏதும் சொல்லவில்லை.

“நான் மறுபடி திரும்பிப் போகிறேன், அப்படித்தானே? நீங்கள் என்னை ஓடுவதற்கு உதவும் பயிற்சிக் கருவிகளோடும் இயக்க முடியும், அல்லது திடீரென்று உயரப் பறக்க உதவும் ஜெட்களோடும் இயக்க முடியும், ஆனால் இரண்டு விதமாகவும் இருப்பது நான் தான். அந்த இன்னொரு ‘நான்’ அவள் ஒன்றும் மகிழ்ச்சியாக இல்லை, அப்படித்தானே? அவளுக்கு நான்கு வயதுக்குரிய மூளை, நான்கு வயதுக்குரிய உணர்வுகள் இருக்கின்றன, ஆனால் அவள் கனவு காண்கிறாள், ஸ்டாவ். அவள் தான் பறக்கக் கூடிய இன்னொரு இடத்தைப் பற்றிக் கனவு காண்கிறாள், ஒவ்வொரு தடவையும் அவள் விழித்தெழும்போது தன் கால்கள் களிமண்ணால் ஆனவை என்று உணர்கிறாள். அவளோ அடி முட்டாளானதால் தனக்கு என்ன நேர்கிறது என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை- அவளுக்குத் தனக்கு என்ன நேர்கிறது என்பதை நினைவு வைத்திருக்கக் கூட முடியாது போல. ஆனால் அவள் அந்த இடத்துக்குப் போக விரும்புகிறாள், அதற்காக அவள் என்ன வேண்டுமானாலும் செய்வா….” அவள் நிறுத்தினாள், ஒரு கணம் யோசனையில் ஆழ்ந்தவளாக இருந்தாள்.

“எனக்கு நினைவிருக்கிறது, ஸ்டாவ்.  நாம் யார், நாம் என்ன என்பது பற்றி நமக்குத் தெரிந்தவற்றிலிருந்து தொண்ணூறு சதவீதத்தை யாரோ அழித்து விட்ட பின் எதையும் நினைவு வைத்திருப்பது மிகக் கடினம்தான். நீங்கள் இந்த ரத்தம் ஓடும் சிறிய சதைப் பிண்டமாக ஆகி விடுவீர்கள், ஒரு மிருகமாகக் கூடக் கருதப்பட முடியாத நிலை அது, ஆனால் அதுதான் எதையோ நினைவு கூர்கிறது. அது என்னத்தை நினைவு கூர்கிறதோ அதெல்லாம் ஒரு தொடர்புக் கம்பியின் மற்றொரு முனையில், தவறான முனையில் அல்லவா இருக்கிறது. அந்த உடலுக்கு ஏற்றவளே அல்ல நான் – அங்கிருப்பது எனக்குத் தண்டனைதான், உயிர்ப்பிப்பதும், மரிக்கச் செய்து அணைத்துப் போடுவதும். ஏற்றி, அணைப்பது.”

“ஜீன் –”

“இதைப் புரிந்து கொள்ள எனக்கு நிறையவே காலம் ஆகி இருக்கிறது, ஸ்டாவ். அதை நானே முதலில் ஒத்துக் கொள்வேன். ஆனால் எனக்கு இப்போது இந்த தீய கனவுகள் எங்கே இருந்து வருகின்றன என்பது தெரிந்து விட்டது.”

பின்னே, அறையில் தொலைத் தொடர்பு தீனமாக ஒலித்தது.

கடவுளே, வேண்டாம். இப்போது கூடாது. இப்போது வேண்டாமே…

“அது என்னது?” ஜீன் கேட்டாள்.

“அவர்கள்- உன்னைத் திரும்ப அழைக்க விரும்புகிறார்கள்.” ஒரு துணைத் திரைக் கருவியில், ஆண்ட்ரூ கோரவெக்கின் சில்லுச் சில்லான உரு, அந்தத் தட்டச்சுப் பலகையைக் கையிலேந்தித் தெரிந்தது.

“கூடாது!” அவள் குரல் உயர்ந்தது, கடும் அச்சம் அவளைச் சுற்றி இருந்த பல அணிகளில் சுழன்றது. “அவர்களை நிறுத்துங்க!”

“என்னால் முடியாது.”

“என் கிட்டே அப்படிச் சொல்லாதீர்கள். நீங்கள்தான் எல்லாவற்றையும் இயக்குகிறீர்கள். நீங்கள்தான் என்னை உருவாக்கினீர்கள், மோசடிக்காரரே, என்னை நேசிப்பதாகச் சொல்கிறவரும் நீங்கள்தான். அவர்கள் என்னைப் பயன்படுத்த மட்டுமே செய்கிறார்கள். அவர்களை நிறுத்துங்கள்!”

ஸ்டாவ்ரோஸ் பிம்பங்கள் கடந்த பின்னும் நீடிக்கும் நிழல் பிம்பங்கள் கடுக்கச் செய்த கண்களைக் கொட்டிக் கொண்டார். “அது ஒரு விளக்கு ஸ்விட்ச் போல இருக்கு, தூலமானது; அதை இங்கே இருந்து என்னால் நிறுத்த முடியாது –”

ஒரு மூன்றாவது பிம்பம், மற்ற இரண்டோடும் அங்கே தெரிந்தது. ஜீன் கோரவெக், அந்தக் கழுத்துக் கயிறு, சுருக்குக் கயிறு போல அவள் கழுத்தில் இறுக்கி, அவளை இழுத்துப் போவது போலத் தெரிந்தது, அவள் அதோடு மல்லாடினாள். ஜீன் கோரவெக்கின் வாயில் காற்றுக் கொப்புளங்கள் தெறிக்க, ஏதோ இருட்டான, ஆனால் நிஜமான ஒன்று அவளைக் கடலின் ஆழத்துக்கு இழுத்துப் போய் அங்கே புதைத்தது போன்ற பிம்பம்.

அந்த இடமாற்றம் தானாக நடந்தது, அவள் பிறந்த பின் அவர் அந்த திட்ட அமைப்பில் நுழைத்த சில பெரும் கட்டளைப் பட்டியல்களை நுழைத்திருந்தார், அவை இப்போது செயல்பட்டன. அந்த உடல், விழித்தெழுந்ததும், அந்த புத்தியைத் துணித்து மட்டுப்படுத்தித் தக்க அளவாக ஆக்கி ஏற்றுக் கொண்டது. அறைக் கண்காணிப்புக் கருவிகள் அதை எல்லாம் உணர்ச்சி ஏதுமற்று, தெளிவாகப் பிடித்துக் காட்டின: ஜீனீ கோரவெக், அல்லலுற்ற குழந்தை- மாமிருகம், நரகத்தில் விழித்தெழும் காட்சி. ஜீனீ கோரவெக், சீற்றமும், வெறுப்பும், மனக்கசப்பும் பொங்க, விழிகளைத் திறந்து கொண்டிருந்தாள், ஐந்து வினாடிகளுக்கு முன் அவளுக்கிருந்த பெரும் அறிவின் ஒரு சிறு கீற்றுப் பின்னத்தோடு அந்த விழிகள் மின்னின.

அடுத்து என்ன நடக்கவிருந்ததோ அதற்குப் போதுமான அறிவு இருந்தது.

(பாகம் இரண்டு முடிவுற்றது. இந்தக் கதையின் கடைசி பாகம் அடுத்த இதழில் வெளியாகும். )

மொழியாக்கம்: மைத்ரேயன்

இங்கிலிஷ் மூலக் கதையாசிரியர்கள்: பீடர் வாட்ஸும், டெரில் மர்ஃபியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.