புள்ளரையன் கோவில்

‘’மறக்காம வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டுட்டு வாடா. உனக்கு அங்கதான் முதல் முடி இறக்கினது.’’ அம்மா கிளம்பும் போது சொல்லி அனுப்பினாள். அம்மா ஏதோ ஒரு விதத்தில் என்னுடைய சொந்த வளையத்துக்குள் வந்து விடுகிறாள். எனக்குச் சொல்ல வேண்டிய ஆலோசனை ஒன்று அவளிடம் எப்போதும் இருக்கிறது. அவள் திட்டமிடுவதெல்லாம் இல்லை. வகுத்து விட முடியாத ஏதோ ஒரு கூறு எனது இருப்பில் அவளது அம்சமாக இருக்கிறது என்று நினைப்பேன். மனித உடல் வேகமாக வளர்ச்சி அடைகிறது. மனித அகம் மெல்ல மிக மெல்லவே வளர்ச்சி அடைகிறது. என்னைத் தன் வயிற்றில் சுமந்த போது தன் உடலாகவே எண்ணியிருக்கிறாள். நான் உருவாவதற்கு முன்பிருந்தே என்னைக் கற்பனை மூலம் அறிந்திருக்கிறாள். நான் அவளது கனவும் விருப்பமும் எண்ணமும் பெற்ற உடல் வடிவம் தானா?

மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் சென்று காத்திருந்தேன். முன்பதிவு எழும்பூரிலிருந்து இருந்தது. ஆனால் எழும்பூர் சென்று விட்டு மீண்டும் வந்த வழியே கடக்க வேண்டும். பெரும்பாலும் அதனைத் தவிர்த்து விடுவேன். பழக்கம். இவ்வாறான பழக்கங்கள் தான் நமது செயல்பாடுகளின் எல்லையைத் தீர்மானிக்கின்றன இல்லையா?

ஆதித்யா சி.ஐ.டி-யில் இருக்கிறான். ‘’விஸ்வநாதன்! நெறைய அரசியல் கொலைகளோட இன்வெஸ்டிகேஷன்ல இருந்திருக்கன். அது எல்லாத்திலயுமே சுவாரசியமான ஒரு அம்சம் அவங்க பெரும்பாலும் கொலையாளிகளால ஒரு வாரமோ பத்து நாளோ ஃபாலோ செய்யப்பட்டிருப்பாங்க. பத்து நாள்ல அவங்க செயல்பாடுகள்ல பெரிய மாற்றம் இருக்காது. காலைல அஞ்சே காலுக்கு வெளிய வருவார். கேட் திறக்கற சத்தம் கேட்கும். ஒரு குறிப்பிட்ட டீக்கடைக்கு நடந்து போய் டீ குடிப்பார். தினமும் எங்கெங்க வாக்கிங் போவாறோ அந்த இடங்களை மாத்தாம வாக்கிங் போவார். ஒரு வாரம் கவனிச்சோம். எட்டாவது நாள் கொன்னுட்டோம்.’’

ஒன்றாக மாநகராட்சி மைதானத்தில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தோம். தெருவில் இருந்த விநாயகர் கோவிலின் பக்தன். பள்ளி விடுமுறையாயிருக்கும் சனி ஞாயிறு நாட்களில் எங்கெங்கோ சென்று அருகம்புல் எடுத்து வந்து மாலையாய்த் தொடுத்து விநாயகருக்குச் சாத்துவான். புல் அறுத்து வர நானும் அவனுடன் போவேன். அவன் செல்லும் இடங்கிலெல்லாம் அவனுக்கு நண்பர்கள். தெரிந்தவர்கள். அப்போது அவன் மட்டுமே எனக்குத் தெரிந்தவன்; நண்பன்.

ஆதித்யா தொடர்ந்து சொல்வான்: ‘’இதுல பல பேரு உயிர் ஆபத்து இருக்குன்னு டிபார்ட்மெண்டால எச்சரிக்கை தரப்பட்டவங்க.’’

கணிதம் படித்தேன். எம். எஸ். சி. காஞ்சிபுரத்தில் ஒரு தனியார் கல்லூரியில் உறவினர் வேலை பார்த்தார். அவர் பரிந்துரைப்படி, பாடத்தைத் தேர்வு செய்தேன். ஒன்றைப் பலவாகவும் பலவற்றை ஒன்றாகவும் எண்ணிக் கொள்ளும் எனது மன அமைப்புக்கு சில சமயங்களில் அண்மையதாகவும் சில சமயங்கள் தொலைவிலும் கணிதம் இருந்தது. தீர்வும் காரணமும் அனைத்துக்கும் உண்டு என்ற அடிப்படையையும் விடை காண முடியாதவை முடிவிலியின் வரையறைக்குள் பொருந்தும் தர்க்கத்தையும் கொண்ட பாடம். கரும்பலகையில் வலது பகுதியிலிருந்து தொடங்குவார் ஒரு பேராசிரியர். ஒற்றை வரி கணித கூற்று. அதிலிருந்து விரிவாக்கிக் கொண்டே செல்வார். கரும்பலகையை மானசீகமான ஒரு கோடால் மூன்றாகப் பிரித்திருப்பார். வலது பக்கம் துவங்கி நடுப்பகுதிக்கு வந்து இடது பக்கம் சென்று முடிப்பார்.

‘’கார் ஓட்டும் போது ஐரோப்பாவில் ஸ்டியரிங் இடது பக்கம். இந்தியாவில் வலது பக்கம். ஒரு விஷயத்தை இரண்டு விதமாகவும் அணுக முடியும். பழக்கம் காரணமா ஒண்ணு மட்டுமே எல்லாம்னு சொல்றது புத்திசாலித்தனம் இல்ல’’

தென்கலை ஐயங்கார் பையனான அனந்தராமன் கை உயர்த்துவான். பேராசிரியர் மேடையில் நிற்கும் இடத்திலிருந்து விழியை அவனை நோக்கித் திருப்பியதும் ‘’எது இடது எது வலது என்பது பாயிண்ட் ஆஃப் ரிஃபரண்ஸ் பொறுத்து தானே சார்’’

பேராசிரியர் புன்னகையுடன் தொடர்வார். ‘’பேசறவறும் கேக்கறவறும் ஒரு பொது அடிப்படையை உருவாக்கிக்காம எந்த விஷயமும் பேச முடியாது. விவாதிக்க முடியாது.’’

நான் வேலை பார்ப்பது புதிதாக துவங்கப்பட்டிருந்த ஒரு தமிழ் வார இதழில். கற்பனையும் எழுத்தும் தான் எனக்கான களம் என்ற நம்பிக்கையால் எடுத்த முடிவு. கணிதம் படிக்கச் சொன்ன உறவினர் சொன்னார்.

‘’கணிதத்தை உன்னால விட்டுற முடியாது. நீ விட்டாலும் அது உன்னை விடாது. ரொம்ப சீக்கிரம் நீ திரும்பி வருவ. நம்ம சமூகத்துக்கு இன்னைக்கு வரைக்கும் கணக்குன்னா பயம். நீ மேத்ஸ் டியூஷன் எடுத்தா கூட பொழச்சுக்கவ’’

இதழை நடத்துபவருக்கு விரல் விட்டு எண்ண முடியாத அளவு நிறுவனங்கள். அமெரிக்காவில் மேற்படிப்பு படித்த அவரது இளைய மகனுக்கு இதழியலில் ஆர்வம். தொழிலதிபருக்கு நஷ்டமாகும் என்பது தெரியும். அவருக்கு அது பெரிய நஷ்டமில்லை என்பதால் தடை ஏற்படுத்தாமல் இருந்தார். எங்கள் பாடு கொண்டாட்டமானது.

திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ் ஆனைக்காரன் சத்திரத்தைக் கொள்ளிடம் பாலத்தைக் கடந்து நெருங்கிக் கொண்டிருந்தது. ஆற்றின் வடகரையை ஒட்டி ஓடிக் கொண்டிருந்த ஏற்ற இறக்கமான நீரலைகளில் நிகழ்ந்து கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான சூரிய பிரதிபலிப்புகளை ரயிலிலிருந்து கண்டேன். வல்லம்படுகையில் கூடியிருந்த வாரச்சந்தையை தூரத்தில் தெரிந்த தலைகளாகக் காண முடிந்தது. சொந்த ஊரை விட்டு அப்பா காலத்திலேயே சென்னைக்குப் போயாயிற்று. இப்போதும் கொள்ளிடத்தைத் தாண்டி விட்டால் சொந்த பிரதேசத்துக்கு வந்து விட்டதாக ஓர் உணர்வு. வயல்களுக்கும் ஓடைகளுக்கும் ஆறுகளுக்கும் இடையே நீர்மையின் கருணையால் சூழப்பட்டிருப்பதாக ஓர் எண்ணம். பிராந்தியத்தின் முகம் இப்போது மாறிக் கொண்டிருக்கிறது. மாறி எதை அடைகிறோம் மாறாமல் எதைப் பெறுகிறோம் என்று அறுதியிட முடியாத நிலை.

சீர்காழி ரயில் நிலையத்தில் விக்னேஷ் காத்துக் கொண்டிருந்தான். காத்திருப்பு கணேசன் பிள்ளையின் பேரன். பிள்ளை குடும்பம் தாத்தா காலத்திலிருந்து பழக்கமான குடும்பம்.

’’அண்ணன்! எப்படின்ணன் இருக்கீங்க? ஆச்சி நல்லா இருக்காங்கங்களா?’’

‘’விக்கி! அம்மா உன்னை ரொம்ப விசாரிச்சதா சொல்ல சொன்னாங்க. மெட்ராஸ்ல நம்ம வீட்டு மாடில இருக்கற ரூம்ல தங்கிகிட்டு அங்கேயே உன்னை வேலை தேட சொல்றாங்க.’’

‘’எது இருக்கோ இல்லயோ இங்க இருக்கும் போது ஒரு சந்தோஷம் இருக்கு. அத இழக்க நான் விரும்பல.’’

’’நீ டிபிகல் தஞ்சாவூர்க்காரன் டா’’

’’சில விஷயம்லாம் நம்ம கூடவே வரும்ணன்’’

சில ஆண்டுகளுக்கு முன் புதிதாகப் போடப்பட்டிருந்த சீர்காழி புறவழிச்சாலையில் விக்கியின் என்ஃபீல்டு பாய்ந்து சென்று கொண்டிருந்தது. சற்றே விலகியிரும் பிள்ளாய் என பரமன் நந்தியிடம் கேட்டுக் கொண்டதைப் போல தள்ளியிருந்தது நகர். சட்டநாதபுரம் தாண்டியதும் கொஞ்ச தூரத்தில் கூப்பிடுவான் உப்பனாறு பாலத்தின் மேலே சென்றோம்.

‘’விக்கி! சின்னக் குழந்தையா இருக்கும் போது வீட்ல எல்லாரும் பஸ்ல போவோம். அப்ப அப்பாவோ அம்மாவோ தாத்தாவோ சில சீட் பின்னால ஒக்காந்துகிட்டு என் பேரை சொல்வாங்க. நான் திரும்பிப் பார்ப்பன். நாங்க கூப்பிடலை; ஆறுதான் உன் பேரை சொல்லுது. அதுக்கு யாரை ரொம்ப பிடிக்குமோ அவங்க பேரைச் சொல்லி கூப்பிடும். ஒவ்வொரு தடவையும் அது உன் பேரைச் சொல்லுதுன்னு சொல்வாங்க. பிடிச்சவங்க பேரை சொல்லி கூப்புடுறதால அந்த ஆத்துக்கு கூப்பிடுவான் உப்பனாறுன்னு பேருன்னு என்கிட்ட சொன்னதை நான் பல வருஷமா நம்பியிருக்கன்’’

காத்திருப்பில் உள்ள பூர்வீக வீட்டில் இப்போது பள்ளி ஆசிரியர் ஒருவர் குடும்பத்துடன் வாடகைக்குக் குடியிருக்கிறார். திருக்கோவிலூர் சொந்த ஊர். மாத்வர்கள். அவரது தந்தை அருகில் இருக்கும் நாங்கூரில் தினம் ஒரு பெருமாள் கோயிலுக்குச் சென்று சேவித்து வருவார். குடும்பமே பெரிய சந்தோஷத்தில் இருந்தது.

விக்கி தன் நண்பர்களைச் சந்திப்பதற்கு என ஒரு இடத்தில் கூரை வேய்ந்து வைத்துள்ளான். ஒரு சிறு சமையலறை. கேஸ் அடுப்பு. ஜே.சி.பி வைத்து ஒரு கிணறு தோண்டியுள்ளான். அதில் கோடையிலும் வற்றாமல் தண்ணீர் இருக்கிறது. வீட்டுக்கு முன்புறம் ஒரு கயிற்றுக் கட்டில். சுற்றிலும் நெல் வயல்கள். இதைத் தாண்டி விக்கி வர வேண்டும் என்றால் அவனுக்கு இதை விடப் பெரிய இன்பம் சென்னையில் இருக்க வேண்டும் அல்லது இங்கே அவனால் இருக்க முடியாத அளவுக்கு பெரும் நெருக்கடி வர வேண்டும். இரண்டுக்குமே வாய்ப்பில்லை. அன்று மதியம் விக்கி வீட்டிலிருந்து வந்த மதிய உணவைச் சாப்பிட்டு விட்டு நன்றாக உறங்கினேன். மாலை கிணற்று நீர்க் குளியல். குளிர்ந்த கிணற்று நீர் மனதில் நிறையும் இன்சொல் போல இதமாக இருந்தது. ஒரு குழந்தையைப் போல குதூகலமான மனநிலையைத் தந்தது. விக்கிக்கு வேண்டியவர்களும் நண்பர்களும் வந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். நான் அடுத்த நாள் செல்ல வேண்டிய இடம் பற்றிய குறிப்புகளை ஒரு முறை பார்த்து மனதில் ஓட்டினேன்.

கருவி முக்கூட்டுக்கும் பல்லவனேஸ்வரத்துக்கும் இடையில் இருந்தது புள்ளரையன் கோவில். மெயின் ரோட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தெற்காக உள்ளே சென்றால் இருபது முப்பது குடும்பம் இருக்கும் ஒரு தெருவிலிருந்து இன்னும் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது புள்ளரையன் கோவில். உள்ளூரில் யாரும் அந்த கோவிலுக்குச் சென்றிருக்கவில்லை என்பது வழி சொல்ல அவர்களுக்கு ஏற்படும் தயக்கத்தால் தெரிந்தது. கோயிலுக்குச் செல்லும் பாதை ஒற்றையடிப் பாதையாய் இருப்பது அங்கே வாகனங்கள் ஏதும் வருவதில்லை என்பதை உணர்த்தியது.

கோயிலைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பூந்தோட்டத்தில் சிட்டுக்குருவிகளும் கரிச்சான்களும் தவிட்டுக் குருவிகளும் அமர்ந்தும் பறந்தும் சுற்றிக் கொண்டிருந்தன. எழுபது வயது என பார்வையில் தெரியும் முதியவர் கூனல் இல்லாத முதுகுடன் செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார். நான் என்னுடைய தோள்பை கேமரா சமாச்சாரங்களை வண்டியின் மேல் வைத்து விட்டு சன்னிதிக்குச் சென்றேன். தன் கைகளால் விண்ணைச் சுமக்கும் உணர்வுடன் கருடன் வாகனமாகக் காத்திருந்தார். கண்களில் விண்ணவனின் வாகனம் என்னும் பீடு. பெருமிதம். கருடனுக்கு இருபுறமும் இருக்கும் விளக்கு மாடத்தில் தீபச் சுடர்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. சுடரசைவு கருடன் முகத்தை வெவ்வேறு உணர்வுகளுடன் காட்டியது.

பெரியவர் சந்நிதிக்கு முன் இருந்த சிறு மண்டபத்துக்கு வந்தார். நான் என்னுடைய பெயரையும் எங்கள் இதழின் பெயரையும் சொன்னேன். அவர் மேலே என்ன என்பது போல முகபாவம் காட்டினார்.

‘’திருப்பாவையில புள்ளரையன் கோவில்னு ஒரு வார்த்தை வருது. புள்ளும் சிலம்பின காண்; புள்ளரையன் கோவில் வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ’’ நான் சரியாகவே ஆரம்பித்தேன். பெரியவர் சகஜமாகி பேசத் துவங்கினார்.

’’நாங்கூர் திவ்யதேசம் இங்க பக்கத்துல தான் இருக்கு. இந்த சின்ன சந்நிதி எப்படி இந்த இடத்துல வந்துதுன்னு தெரியல. எனக்குத் தெரிஞ்சு எங்க குடும்பம் ஆறு தலைமுறையா கோவிலுக்கு சேவை செஞ்சுகிட்டு இருக்கோம். அதுக்கு முன்னாடி வேற வேற குடும்பங்க சேவை செஞ்சுருப்பாங்க’’

நான் அந்த சிறு சன்னிதியையும் சுற்றியிருக்கும் பூந்தோட்டத்தையும் விதவிதமாக புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

‘’பத்திரிகைகள் செய்தியா போட்டு நல்லா இருந்த பல ஸ்தலங்கள் வியாபார மையங்களா ஆகியிருக்கு.’’ பெரியவர் கசந்து சொன்னார்.

நான் அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன்.

பறவைகளின் ஒலி மட்டும் அங்கும் இங்குமாகக் கேட்டது. ஒரு பெரு மௌனம் அங்கே சூழ்ந்து இருப்பதாகத் தோன்றியது. அப்பெரு மௌனத்தில் புள்ளரையனும் பெரியவரும் மட்டும் இருப்பதாக நினைத்துக் கொண்டேன்.

என் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டவராக ‘’இதெல்லாம் என்னன்னு எனக்குத் தெரியலை. மிலிட்டரிக்கு பதினெட்டு வயசுல போனேன். முப்பது வருஷம் இருந்தன். இங்க வந்து முப்பத்து ஆறு வருஷம் ஆகுது. இங்க வந்ததுல இருந்து எங்கயும் வெளிய போகலை. எதுவும் திட்டம் போட்டு முடிவு பண்ணினது இல்லை. தன்னிச்சையா நடந்துறுச்சு. தேவையான மளிகை சாமான், தோட்டத்துக்கு தேவையானதை மட்டும் மூணு கிலோ மீட்டர் தள்ளி இருக்கற கடைத்தெருவுக்குப் போய் வாங்கிட்டு வருவன். மத்தபடி இங்கதான். சனி, ஞாயிறு லீவுல குழந்தைங்க வெளையாட வரும். எப்பவாவது யாராவது ஆலோசனை கேட்டு வருவாங்க. தம்பி மகன் மெட்ராஸ்ல இருக்கான். மூணு மாசத்துக்கு ஒருதரம் ரெண்டு நாள் வந்துட்டு போவான்.’’ அவருக்கு வாழ்க்கை குறித்து எந்த கசப்பும் இருக்கவில்லை.

அவர் அலைபேசிக்கு அறிமுகமாகியிருக்கவில்லை. இரண்டு கிலோ மீட்டர் தள்ளியிருந்த ஒரு வீட்டின் தரைவழித் தொலைபேசி எண்ணை என்னிடம் சொன்னார். நான் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதால். ’’நாலு நாளைக்கு ஒரு தடவ அவர் இங்க வருவார். ரொம்ப முக்கியமான சங்கதின்னா உடனே தகவல் கொடுப்பார்.’’ சென்னையில் இருக்கும் அவரது தம்பி மகனின் எண்ணை வாங்கிக் கொண்டேன். விக்கியை பெரியவரை வாரம் ஒருமுறை சென்று பார்க்கும்படி சொன்னேன். கட்டுரை நன்றாக வந்திருந்தது. விக்கி இப்போது புள்ளரையன் கோவிலுக்கு வாரம் இரண்டு பேராவது புதிதாக வருவதாக பெரியவர் சொன்னதாக சொன்னான். அதன் பின் ஒரு வருடம் ஊர்ப்பக்கமே செல்லவில்லை. விக்கி இரண்டு முறை சென்னை வந்து விட்டு சென்றான். அவனுடன் திருவான்மியூரில் இருக்கும் பெரியவரின் தம்பி குடும்பத்தைச் சென்று பார்த்து வந்தேன்.

பெரியவரின் தம்பி மகன் ஒருநாள் ஃபோன் செய்தான். விபரம் சொன்னான். பெரியவர் புள்ளரையனுக்குச் செய்த சேவை முடிவு பெற்றது. ஊரை விட்டு பல ஆண்டுகள் கிளம்பாதவர் சென்னை மருத்துவமனை ஒன்றில் உயிர் விட்டார்.

ஒரு டயர் வண்டியின் மேல் இருந்த ஒரு கண்ணாடிப் பெட்டியில் துயின்று கொண்டிருந்த அவரது இறுதி ஊர்வலம் சென்னைப் போக்குவரத்தின் நெரிசல்கள் மற்றும் சந்தடிகளினூடாக பதினைந்து பேருடன் நடைபெற்றது.

நானும் கலந்து கொண்டேன். டிராஃபிக் ஜாம் ஆகி இருபது நிமிடங்கள் ஒரு மரத்தடியின் நிழலில் நிற்க வேண்டிய சூழ்நிலை உண்டான போது பெரும்பாலானோர் சலித்துப் போய் சாலையிலிருந்து பிளாட்ஃபாரத்துக்கு வந்தனர். அப்போது சட்டென ஒரு கருடன் விரைந்து வந்து கண்ணாடிப் பெட்டியில் அமர்ந்து அதனை மூன்று முறை கொத்தி விட்டு பறந்து சென்றது.

***

4 Replies to “புள்ளரையன் கோவில்”

  1. புள்ளரையன் கோயிலுக்கு நாமே போய்வந்த உணர்வைக் கதை ஏற்படுத்தி உள்ளது. காட்சி வருணனைகள் அருமை . கதையின்இறுதியில் கருடன் வந்து கொத்துவது இத்தனை நாள் வேறு எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காத அவரின் கைங்கர்யத்தை ஆசிர்வதிப்பது போல அருமையாக இருக்கிறது

  2. ￰கதையின் முடிவு கண்ணீரை வரவழைத்தது. சொந்த வளையத்திற்குள் அம்மா நிதர்சனமான உண்மை. கணிதத்தின் வரையறை அருமை. புள்ளரையன் கோவிலுக்கும் , பெரியவர் வாழ்க்கைக்கும் , தஞ்சாவூர் மண்ணிற்கும் ஏங்குகிறது உள்ளம். சிறந்த படைப்பு.

    ஆதித்யா பாத்திரத்தின் தேவை புரியவில்லை. விளக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.