கசாப்புக்கடையில் குறும்பாட்டுக்குட்டி

ரோல்ட் டால்

இளம்சூட்டுடன் அறை சுத்தமாக இருந்தது. ஜன்னலின் சீலைகள் இழுத்து மூடப்பட்டிருந்தன. இரண்டு மேஜை விளக்குகள், அவளுடையதும், எதிரே காலி நாற்காலிக்கருகே மற்றொன்றும், எரிந்து கொண்டிருந்தன. அவளுக்குப் பின் சைட்போர்டில், இரண்டு நீண்ட கண்ணாடி குவளைகள்,  சோடா, விஸ்கி. புது ஐஸ் கட்டிகள் தெர்மோஸ் பக்கெட்டில்.

மேரி மலோனி கணவர் அலுவலகத்திலிருந்து திரும்பி வருவதற்காக காத்திருந்தாள். அவ்வப்போது, கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டாள், ஆனால், பதற்றமேதுமின்றி, கடந்து சென்ற ஒவ்வொரு நொடியும் கணவனின் வீட்டு வருகையை இன்னமும் நெருங்கச் செய்தது என்ற திருப்தியுடன். அவளையும், அவள் செய்து கொண்ட அனைத்துக் காரியங்களைச் சுற்றியும் ஒருவிதமான மந்தகாசச் சூழல் நிலவியது. தைத்துக் கொண்டிருக்கையில் அவள் தலையை கீழே சாய்த்த விதம் அசாதாரண அமைதியுடன் காட்சியளித்தது– கருத்தரித்து ஆறு மாதமாகியிருந்த அவளது சருமம் அற்புதமான ஒளியூடுருவும் தன்மையைப் பெற்றிருந்தது. மென்மையான உதடுகள், புதிதாய் கிட்டிய  மெல்லமைதியால் முன்னதை விட பெரிதாகவும் மேலும் கருமையாகவும் காட்சியளித்த விழிகளுடன் அவள் காணப்பட்டாள். கடிகாரம் ஐந்து மணி ஆவதற்கு இன்னமும் பத்து நிமிடங்களே இருக்கிறது என்று காட்டிய உடனேயே அவள் செவிமடுக்கத் தொடங்கினாள். சில நொடிகளுக்குப் பின், எப்போதும் போல் மணியடித்தாற் போல், வெளியே சரளைக்கல் மீது கார் டயர்கள் எழுப்பிய ஓசையையும், அவன் கார் கதவைச் சாற்றி, ஜன்னலைக் கடந்து, பூட்டில் சாவியை இயக்கிய சத்தத்தையும் அவளால் கேட்க முடிந்தது. தைத்துக் கொண்டிருந்ததை கீழே வைத்துவிட்டு எழுந்தாள், உள்ளே வருகையில் அவனை ஒரு முத்தத்துடன் எதிர்கொள்வதற்காக.

“ஹலோ டார்லிங்,” அவள் கூறினாள்.

“ஹலோ டார்லிங்,” அவன் பதிலளித்தான்.

அவன் கோட்டை வாங்கி கிலாசெட்டில் தொங்கவிட்டாள். அதன்பின் அறையைக் கடந்து சென்று  ட்ரிங்க்ஸ், அவனுக்கு சற்று காத்திரமாகவும், தனக்கு லேசான ஒன்றையும், தயாரித்தாள்; சற்று நேரத்திலேயே அவள் மீண்டும் தன் நாற்காலிக்குச் சென்று தையல் வேலைகளை தொடர்ந்தாள். எதிர் நாற்காலியில், நீண்ட குவளையைப் பற்றியிருந்த அவன் கைகள், ஐஸ் கட்டிகள் கண்ணாடியின் மீது கணகணக்கும்படியாக அதை அங்குமிங்குமாக மெதுவாக ஆட்டிக் கொண்டிருந்தன.

ஒவ்வொரு நாளிலும், அப்பொழுதே அவளை மிகவும் மகிழ்விக்கும் பொழுதாக இருந்தது. முதல் ட்ரிங்கை பருகி முடிக்கும் வரையில் அவனுக்குப் அதிகம் பேசப் பிடிக்காதென்பதை அவள் நன்கறிவாள். வீட்டில் துணையற்று அவ்வளவு நேரம் தனித்திருக்கும் அவளுக்கும் ஏதும் பேசாமல் அவனுடன் உட்கார்ந்திருப்பதே போதுமாக இருந்தது. அம்மனிதனின் இருப்பில் லயித்திருப்பது அவளுக்குப் பிடித்திருந்தது. சன்-பேத் செய்பவர் வெய்யிலை சுகித்துணர்வது போல், அவர்கள் இருவரும் தனித்திருக்கையில் அவரிடமிருந்து அவளை நோக்கி கிளர்ந்தெழும் கதகதப்பான அந்த ஆண்-ஒளிர்வை அவளால் உணர முடிந்தது. அவன் நாற்காலியில் தளர்ந்து உட்கார்ந்து கொள்ளும் விதமும், கதவைக் கடந்து அறைக்குள் நுழையும் விதமும், நீளெட்டுகளுடன் மெதுவாக அறைக்குள் நடக்கும் விதமும் அவளுக்குப் பிடித்திருந்தது. மும்முரத்துடன் தொலைநோக்கும் அவன் கண்களையும், குறிப்பாக அவை தன்மீது படிந்திருக்கும்போது, நகைப்பூட்டும் அவன் வாயமைப்பும், களைப்பை வெளியே காட்டிக் கொள்ள விரும்பாது, விஸ்கி அதைச் சற்று மறக்கச் செய்யும்வரை ஏதும் பேசாது அமைதியாக இருப்தையும் அவள் நேசித்தாள்.

“களைப்பாக இருக்கிறதா, டார்லிங்?”

“ஆமாம், மிகக் களைப்பாக இருக்கிறது” என்று பதிலளித்தான். அப்படி பதிலளிக்கையிலேயே வினோதமாக, குவளை பாதி நிரம்பிருந்ததையும் பொருட்படுத்தாது, அதை உயர்த்தி ஒரே மடக்கில் காலி செய்தான். நாற்காலியிலிருந்து முன்னே சாய்ந்தபடி ஒரு கணம் அசைவற்று இருந்தான். அதன்பின் எழுந்துகொண்டு, இன்னுமொரு குவளை மதுவை ஊற்றிக் கொள்வதற்காக மெதுவாக நடந்து சென்றான்.

“நான் கொண்டு வருகிறேன்” என்று அவள் சட்டென எழுந்தாள்.

“உட்கார்” அவன் கட்டளையிட்டான்.

அவன் திரும்பி வந்தபோது, அவன் புதிதாய் கலந்து கொண்ட டிரிங்க் அதிலிருந்த விஸ்கியின் அளவையால் முன்னதைவிட இன்னமும் இருண்ட ஆம்பர் நிறத்திலிருந்ததை அவள் கவனித்தாள்.

“டார்லிங், உன் காலணிகளை எடுத்துவரவா?”

“வேண்டாம்.”

ஆழ்ந்த மஞ்சள் நிறத்திலிருந்த அந்த மதுபானத்தை அவன் மெதுவாக அருந்துவதை அவள் பார்த்திருந்தாள். மிகவுமே காத்திரமாக இருந்ததால் அதில் எண்ணையைப் போல் பிசுபிசுத்திருக்கும் சிறு சுழல்களைக் அவளால் காண முடிந்தது.

“உன்னைப் போன்ற மூத்த போலீஸ்காரரை அவர்கள் கால் நடையாக இப்படி அலையவிடுவது கொஞ்சம்கூட சரியில்லை” என்று ஆதங்கப்பட்டாள்.

அவன் பதிலளிக்காததால் தலையைச் சாய்த்துக்கொண்டு மீண்டும் தையல் வேலைகளைத் தொடர்ந்தாள். ஆனால் குடிப்பதற்காக ஒவ்வொரு முறையும் அவன் உதடுகளுக்கு கோப்பையை உயர்த்தியபோது, ஐஸ்கட்டிகள் கண்ணாடியில் மோதிக் கிணுங்குவதை அவளால் கேட்க முடிந்தது.

“டார்லிங், கொஞ்சம் சீஸ் எடுத்து வரவா? வியாழக்கிழமை என்பதால் நான் இரவு உணவேதும் தயார் செய்யவில்லை,” என்று கூறினாள்.

“வேண்டாம்,” என்று மறுத்தான்.

“வெளியே உணவருந்தச் செல்ல களைப்பாக இருந்தால், இன்னும்கூட நேரமிருக்கிறது. ஃப்ரீசரில் ஒரு வண்டி மாமிசமும் வேறு உணவுப் பொருட்களும் இருக்கின்றன. இங்கேயே, நாற்காலியை விட்டு எழுந்திருக்காமலே நீ சாப்பிடலாம்,” என்று அவள் தொடர்ந்தாள்.

பதிலையோ, புன்முறுவலையோ, சிறு தலையசைப்பையோ எதிர்பார்த்து அவள் கண்கள் அவன் மீது பதிந்திருந்தன. ஆனால் அவன் எந்த சமிக்ஞையையும் செய்யவில்லை.

“எதற்கும் முதலில் நான் கொஞ்சம் சீசையும் கிராக்கர்களையும் எடுத்து வருகிறேன்” என்று கூறினாள்.

“எனக்கு வேண்டாம்” என்று பதிலளித்தான்.

தன் அகன்ற விழிகளால் அவன் முகத்தை கண்ணுற்றபடியே அவள் நாற்காலியில் கவலையுடன் நெளிந்தாள்.

“ஆனால் நீ சாப்பிட வேண்டுமே! நான் எதற்கும் தயார் செய்கிறேன், அதன்பின் சாப்பிடுவதும் சாப்பிடாததும் உன் இஷ்டம்.”

எழுந்து, தையல் பொருட்களை மேஜை மீது விளக்கிற்கருகே வைத்தாள்.

“உட்காரு, ஒரு நிமிஷம் உட்காரு” என்று வர்புறுத்தினான்.

அதுவரையிலும் இல்லாத பயம் அவளை ஆட்கொள்ளத் தொடங்கியது.

“சொல்றேன்ல, உட்காரு!” என்று மீண்டும் கூறினான்.

அதிர்ச்சியுற்ற அந்த அகன்ற விழிகள் அவன்மீது பதிந்திருக்க, மெதுவாக நாற்காலியில் தன்னை இருத்திக் கொண்டாள். இரண்டாவது மதுக்கோப்பையை குடித்து முடித்து அதனுள் முகத்தை சுளித்தபடியே பீறிட்டான்.

“இங்க பாரு, உங்கிட்ட ஒன்னு சொல்லனும்” என்று கூறினான்.

“என்ன சொல்லனும் டார்லிங்? என்ன விஷயம்?”

இப்போது அவன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டே அசையாதிருந்தான். அவனருகே இருந்த விளக்கிலிருந்து ஒளி அவன் முகத்தின் மேற்பகுதிகள் மீது மட்டும் விழுந்ததால் அவன் தாடையும் வாயும் நிழலில் ஆழ்ந்திருந்தன. இடது கண்ணிற்கருகே சிறிய தசையொன்று அசைந்து கொண்டிருப்பதை அவளால் பார்க்க முடிந்தது.

“இது உனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் நிறைய யோசனைக்குப் பிறகு உன்னிடம் உடனே சொல்லிவிடுவதுதான் சரி என்று பட்டது. ரொம்பவும் தப்பாய் எடுத்துக் கொள்ளமாட்டாய் என்று நினைக்கிறேன்.”   

அதன்பின் அவளிடம் கூறினான். அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டான்.

ஒவ்வொறு வார்த்தையும் அவனை அவளிடமிருந்து பிரித்துச் செல்வதை மலையவைக்கும் அதிர்ச்சியுடன், அவனைப் பார்த்தபடியே, அசையாது, அவன் பேசியதனைத்தையும், கேட்டிருந்தாள்.

“இதுதான் நான் சொல்ல வந்தது”  அவன் தொடர்ந்தான். “இதைச் சொல்வதற்கு உகந்த நேரம் இதுவல்ல என்பதும் எனக்குத் தெரியும். என்ன செய்வது வேறு வழியில்லை. எப்படியும் உன் தேவைகளுக்கான பணத்தை கண்டிப்பாக நான் கொடுத்து விடுவேன். அதனால் ஆர்ப்பாட்டம் செய்து பெரிதுபடுத்த மாட்டாயென நம்புகிறேன். அது என் வேலைக்கு பாதகம் விளைவிக்கக்கூடும்.”  

அவளால் முதலில் எதையுமே நம்ப முடியவில்லை அனைத்தையும் நிராகரிக்கும் எண்ணமே மேலோங்கியது. ஒருகால் அவன் எதுவுமே பேசாதது போலும், தான்தான் பிரமையில் அனைத்தையும் கற்பனை செய்து கொண்டோமா என்றும் சந்தேகப் பட்டாள். செவி மடுக்காதது போல் பாவித்து காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால் சிறிது நேரத்திற்குப் பிறகு உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டது போல்,  இவை எதுவுமே நிகழாதது போல் ஆகிவிடுமோ என்னவோ.

“ராச்சாப்பாட்டை நான் எடுத்து வருகிறேன்” என்று அவளால் முணுமுணுக்க முடிந்தது. இம்முறை அவன் அவளைத் தடுக்கவில்லை. அறைக்கு குறுக்கே நடந்து செல்கையில் கால் தரையில் பாவியிருப்பதைக் கூட அவளால் உணர முடியவில்லை. சிறிது குமட்டலையும் வாந்தி எடுக்கும் உணர்வையும் தவிர அவளால் வேறெதையுமே உணர முடியவில்லை. யந்திரகதியில் இயங்கியபடியே நிலவறைப் படிகளில் இறங்கி, விளக்கைப் போட்டு,  டீப் ஃப்ரீஸ் பெட்டியில் கைவிட்டு, கைக்கு முதலில் எட்டியதை வெளியிலெடுத்து, உற்று நோக்கினாள். அது பேப்பரால் மூடப்பட்டிருந்ததால், அதைப் பிரித்து மீண்டும் பார்வையிட்டாள்.

சரிதான், இரவு உணவிற்கு குறும்பாட்டுக் குட்டியைத்தான் உண்ணப் போகிறோம் போல… மெலிதாக இருந்த அதன் எலும்பு முனையை இரு கைகளாலும் பற்றியபடியே அதை மேல்தளத்திற்கு தூக்கிச் சென்றாள். ஹாலைக் கடக்கையில் முதுகைக் காட்டியபடி அவன் ஜன்னலருகே நின்று கொண்டிருப்பதைக் கவனித்தவுடன் அவள் நடை தளர்ந்தது.

அவள் நடவடிக்கைகளை அவனால் காதாலேயே யூகிக்க முடிந்தது. எனினும், திரும்பாமலே, “தயவு செய்து எனக்காக இரவு உணவு தயாரிக்காதே. நான் வெளியே போகப் போகிறேன்.”

அந்தத் தருணத்தில், மேரி மலோனி அவனருகே சென்று, சற்றும் தாமதிக்காமல், அந்தக் குறும்பாட்டுக்குட்டியின் காலை உயர்த்திச் சுழற்றி பலம் கொண்ட மட்டும் அவனது பின்மண்டையைத் தாக்கினாள்.

இதற்கு பதிலாக இரும்புத் தடியைக் கொண்டே அவள் தாக்கியிருக்கலாம்

ஓரடி பின்வைத்து காத்திருந்தாள். இதில் வேடிக்கை என்னவென்றால் நான்கைந்து நொடிகளுக்கு அவன் அங்கேயே நின்றிருந்தான், சற்று ஊசலாடியபடியே. அதன்பின் தரைவிரிப்பில் சரிந்து விழுந்தான்.  

மூர்க்கமான வீழ்தலும் அது ஏற்படுத்திய சத்தமும், குறுமேஜையின் நிலைகுலையலும் அவளது அதிர்ச்சி நிலையிலிருந்து அவளை வெளிக் கொணர்ந்தன. குளிரையும் ஆச்சரியத்தையும் ஏகத்தில் உணர்ந்தபடியே அவள் மீண்டு வந்தாள். இரு கைகளாலும் கிறுக்குத்தனமான அந்த மாமிசத் துண்டத்தை இறுகப் பற்றியபடி, கண் சிமிட்டாமல் சிறிது நேரம் அவ்வுடலையே பார்த்திருந்தாள்.

சரிதான், அவனைக் கொன்று விட்டேன் போலிருக்கிறது என்று தனக்கே சொல்லிக் கொண்டாள்.

அப்பொது அபூர்வமான வகையில் அவள் சிந்தனை திடீரென தெளிவுற்றது. மிக துரிதமாக சிந்திக்கத் தொடங்கினாள். துப்பறிவாளனின் மனைவி என்பதால் தான் செய்த காரியத்திற்கான தண்டனை என்ன என்பதை அவள் நன்றாகவே அறிந்திருந்தாள். அதனால் தன் செய்கைகளில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை என்பதையும் உணர்ந்தாள். சொல்லப் போனால் அது தனக்கு நிம்மதியளிக்கும் என்று தனக்கே சொல்லிக் கொண்டாள். அதெல்லாம் சரி, ஆனால், குழந்தைக்கு என்னாகும்? கர்ப்பிணிக் கொலைகாரர்களைப் பற்றி சட்டம் என்ன சொல்கிறது? வயிற்றிலிருக்கும் குழ்ந்தையையும் தாயுடன் கொன்று விடுவார்களா? அல்லது பத்தாவது மாதம் வரையிலும் காத்திருப்பார்களா? அவர்கள் என்ன செய்வார்கள்?

மேரி மலோனி அறிந்திருக்கவில்லை. ஆனால் நடக்கவிருப்பதை தற்செயலின் அதிகாரத்திற்கு விடவும் அவள் தயாராக இல்லை.

மாமிசத் துண்டத்தை சமையலறைக்கு எடுத்துச் சென்றாள். அதை ஒரு தட்டிலிட்டு, அவன் அடுப்பிற்குள் திணித்தாள். பின் கைகளைக் கழுவிக் கொண்டு மேலே படுக்கையறைக்கு ஓடினாள். கண்ணாடி முன் அமர்ந்து கூந்தலை சரிசெய்து கொண்ட பின், உதட்டிலும் முகத்திலும் சாயம் பூசிக் கொண்டாள். முறுவலிக்க முயன்றபோது விநோதமான ஒரு முறுவலையே அவளால் வரவழைக்க முடிந்தது. மீண்டும் ஒரு முறை முயற்சித்தாள்.

“ஹலோ சாம்,”  என்று உற்சாகத்துடன் சத்தமாய் சொல்லிப் பார்த்தாள்.

குரல் விநோதமாய் ஒலித்தது.

“உருளைக்கிழங்குகள் கிடைக்குமா சாம். அப்படியே ஒரு டப்பா பட்டாணியும்”.

இப்போது சற்றுப் பரவாயில்லை. குரல், சிரிப்பு இரண்டுமே சற்று சகஜமாக வருவது போலிருந்தது. இன்னம் பல முறை ஒத்திகை பார்த்துக் கொண்டாள். அதன்பின் கீழே விரைந்து, கோட்டை எடுத்துக் கொண்டு  பின்கதவு வழியாக வெளியேறி தோட்டத்தைக் கடந்து,  தெருவை எட்டினாள். மணி ஆறுகூட ஆகியிருக்கவில்லை. பலசரக்குக் கடையில் இன்னமும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

“ஹலோ சாம்,” கல்லாப் பெட்டிக்குப் பின் நின்று கொண்டிருந்தவனைப் பார்த்து புன்னகைத்தபடியே, உற்சாகத்துடன் கூறினாள்.

“மாலை வணக்கம் திருமதி மலோனி? எப்படி இருக்கிறீர்கள்?”

“எனக்கு கொஞ்சம் உருளைக்கிழங்குகள் வேண்டும் சாம். அப்படியே ஒரு டப்பி பட்டாணியும்.”

பின்னால் திரும்பிய கடைக்காரன்  எம்பி பின் அலமாரியிலிருந்து பட்டாணியை எடுத்தான்.

“பாட்ரிக் தனக்கு களைப்பாக இருக்கிறதென்று முடிவு செய்துவிட்டார். அதனால் இன்றிரவு வெளியே சாப்பிடுவதற்கு அவருக்கு விருப்பமில்லை,” என்று கடைக்காரனிடம் கூறினாள். “வழக்கமாக வியாழனன்று வெளியேதான் உணவருந்துவோம். அதனால் வீட்டில் காய்கறிகளில்லாத இக்கட்டில் மாட்டிக் கொண்டேன்.”

“இறைச்சி நிலைமை எப்படி, திருமதி. மலோனி?”

“வேண்டாம். வீட்டில் இறைச்சி இருக்கிறது. ஃப்ரீசரில் நல்ல குறும்பாட்டுக்குட்டி காலொன்று வைத்திருக்கிறேன்.”

“அப்ப சரி.”

“பொதுவாக எனக்கு உறைந்த பொருட்களை சமைப்பது பிடிக்காது. இம்முறை ஒரு சான்ஸ் எடுத்து செய்து பார்க்கப் போகிறேன். சரியாக வந்துவிடும், இல்லயா சாம்?”

“என்னைப் பொறுத்தமட்டில் இரண்டு விதமான சமையலுக்கும் அப்படியொன்றும் பெரிய வித்தியாசமில்லை. இந்த ஐடஹோ உருளைகள் போடட்டுமா?”

“போடுங்கள். இரண்டு உருளைகள் போடுங்கள்.” “வேறெதாவது?” கடைக்காரன் தலையை ஒருபக்கம் சாய்த்துக் கொண்டு அவளிடம் பூரிப்புடன் கேட்டான். “உணவிற்குப் பிறகு? அவருக்கு உணவுக்குப் பிறகு என்ன கொடுக்க போகிறீர்கள்?”

“என்ன கொடுக்கலாம் சாம், நீங்களே சொல்லுங்களேன்?”

கடைக்காரன் கடையை ஒருமுறை சுற்றிமுற்றி பார்த்துவிட்டு “இதோ இந்த பெரிய சீஸ்கேக் துண்டத்தை? அவருக்கது பிடிக்கும் என்று எனக்குத் தெரியும்.”

“சரியான தேர்வு, அவருக்கது மிகவும் பிடிக்கும்” என்று பதிலளித்தாள்.

அதைப் பொட்டலம் கட்டி வாங்கிக்கொண்டு  எல்லாவற்றிற்கும் பணம் கொடுத்தபின் அவளது மிக உற்சாகமான புன்னைகையுடன் “நன்றி சாம். குட் நைட்” என்று விடைபெற்றுக் கொண்டாள்.

“குட் நைட் திருமதி. மலோனி. மிக்க நன்றி.”

“வீட்டில் கணவன் இரவு உணவிற்காக காத்துக் கொண்டிருக்கிறான். பாவம் அவன் மிகவுமே களைத்திருக்கிறான். எவ்வளவிற்கெவ்வளவு ருசியாக சமைக்க முடியுமோ அவ்வலளவிற்கவ்வளவு ருசி மிக்கதாக அவனுக்கு சமைத்துப் போடுவதற்காகத்தான் இப்போது நான் வீட்டிற்கு விரைந்து கொண்டிருக்கிறேன்; மேலும் வீட்டிற்குள் நுழைகையில் அசாதாரணமான, அசம்பாவிதமான அல்லது கோரமான ஒன்றைக் காண நேரிட்டால்,  அவள் இயல்பாகவே அதிர்ச்சியுற்று சோகத்தால் பீடிக்கப்படுவாள். ஆனால் அப்படியெதையும் கண்ணுறுவதை அவள்தான் எதிர்பார்க்கவில்லையே. காய்கறிகள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு போய்க் கொண்டிருந்தாள். வியாழன் மாலை தன் கணவனுக்கு இரவு உணவு சமைத்து போடுவதற்காக காய்கறிகளுடன் வீடு திரும்பும் திருமதி. பாட்ரிக் மலோனி” என்றெல்லாம் தனக்கே சொல்லிக் கொண்டாள்.

அதுதான் சரி. எல்லாவற்றையும் சரியான விதத்தில் சகஜமாகச் செய். நடிப்பதற்கு அவசியமில்லாதது போல் இயல்பாக நடந்துகொள் என்று  தனக்கே கூறிக் கொண்டாள்.

அதனால்தான், பின்கதவு வழியே சமையலறைக்குள் நுழைகையில், சிரித்துக் கொண்டே சிறிய இசைத்துணுக்கொன்றை அவள் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

“பாட்ரிக்!” என்று அழைத்தாள். “எப்படி இருக்கிறாய், டார்லிங்?”

பார்சலை மேஜை மீது வைத்துவிட்டு, வரவேற்பறைக்குச் சென்றாள்; கரம் உடலுக்கடியே கோணலாக மடங்கியபடி தரையில் அவன் சுருண்டு கிடந்ததைப் பார்க்கையில் அவளுக்கு உண்மையிலேயே அதிர்ச்சியாக இருந்தது. அவனுக்கான தனது பழைய காதலும் ஏக்கமும் அவளுள் பொங்கி எழுந்தது. அவனை அருகாமையில் காண்பதற்காக ஓடினாள். அவனருகே முட்டுக்காலிட்டு நெஞ்சையடைத்த துக்கத்தை வெளியேற்றுவதற்காக அழத் தொடங்கினாள். சுலபமாகவே அழ முடிந்தது. பாசாங்கெதுவும் அவளுக்குத் தேவையாக இருக்கவில்லை.  

சில நிமிடங்களிற்குப் பிறகு எழுந்து, தொலைபேசி இருக்குமிடத்திற்குச் சென்று, போலீஸை அழைத்தாள். எதிர்முனையில் பதில் கிடைத்த உடனேயே “சீக்கிரம்! சீக்கிரம் வாருங்கள்! பாட்ரிக் இறந்து விட்டார்!”

“யார், பேசுகிறது?”

“திருமதி. மலோனி. திருமதி. பாட்ரிக் மலோனி. “

“என்ன, பாட்ரிக் மலோனி இறந்துவிட்டாரா?”

“அப்படித்தான் நினைக்கிறேன்” அவள் விம்மினாள். “அவர் தரையில் விழுந்து கிடக்கிறார். இறந்துவிட்டது போல்தான் இருக்கிறது.”

“அங்கு உடனே வருகிறோம்”

கார் விரைவிலேயே வந்துவிட்டது, அவள் கதவைத் திறந்தவுடன் இரண்டு போலீஸ்காரர்கள் உள்ளே நுழைந்தார்கள். இருவரையுமே அவளுக்குத் தெரியும் – அந்த வட்டாரத்தின் அனைத்து போலீஸ்காரர்களையும்- சேரில் தொம்மென்று தன்னை இருத்திக் கொண்டாள். பின்னர் சடலத்தருகே முட்டியிட்டிருந்த ஓ’ மாலியிடம் சென்றாள்.

“அவர் இறந்துவிட்டாரா?”

“ஆமாம், என்ன நடந்தது?”

பலசரக்குக் கடைக்கு சென்றதையும் அங்கிருந்து திரும்பியவுடன் கணவன் கீழே கிடந்ததையும் சுருக்கமாக சொல்லி முடித்தாள். அவள் அழுகையும் பேச்சுமாக இருந்த போது, நூனன்  இறந்தவரின் மண்டையில் உறைந்துவிட்டிருந்த சிறு ரத்தப் பத்தையொன்றை கண்டுபிடித்தார். அதை அவர் ஓ’மாலிக்கு காண்பிக்க, ஒ’மாலி தொலைபேசி இருக்குமிடத்திற்கு விரைந்தார்.

விரைவில்,  வீட்டிற்குள் மற்ற ஆட்கள் வரத் தொடங்கினார்கள். முதலில் ஒரு டாக்டரும், அவரையடுத்து இரண்டு துப்பறிவாளர்களும் வந்தார்கள். ஒரு துப்பறிவாளரின் பெயரை அவள் அறிந்திருந்தாள். அதன் பிறகு போலீஸ்துறை புகைப்படக்காரர் ஒருவர் வந்து புகைப்படங்கள் எடுத்தார். அவருடன் கைரேகை நிபுணரும் வந்திருந்தார். குசுகுசுப்பும் முணுமுணுப்புமாய் சடலத்தருகே அவர்கள் குழுமியிருந்தார்கள். துப்பறிவாளர்கள் அவளைத் துருவித் துருவி பல கேள்விகள் கேட்டார்கள். அவள் மீண்டும் தன் கதையை சொல்லத் தொடங்கினாள், இம்முறை முதலிலிருந்தே ஆரம்பித்தாள், பாட்ரிக் உள்ளே வந்தது, அவள் தைத்துக் கொண்டிருந்தது, அவனது களைப்பு, இரவு உணவிற்காக வெளியே செல்வதை விரும்பாத அளவிற்கு மிகுந்திருக்கும் அவன் களைப்பு என்று எல்லாவற்றையுமே விவரித்தாள். அவன் அடுப்பில் இறைச்சியை இட்டதைப் பற்றியும் – “அது இன்னமும் சமைந்து கொண்டிருக்கிறது” – அவசர அவசரமாக பலசரக்குக் கடைக்குப் போனதையும், அங்கிருந்து திரும்பி வந்த போது அவன் தரையில் கிடந்ததையும் பற்றி கூறினாள்.

‘எந்த பலசரக்குக் கடை?” துப்பறிவாளர்களில் ஒருவர் கேட்டார்.

அவள் கூறியபின் அவர் திரும்பி மற்றொரு துப்பறிவாளர் காதில் எதையோ குசுகுசுத்தார். அந்த்த் துப்பறிவாளர் உடனேயே வெளியே தெருவிற்குச் சென்றார்.

பதினைந்து நிமிடத்திற்குக்குள் அவர் திரும்பினார், கையில் குறிப்புகள் நிறைந்த ஒரு தாளுடன். குசுகுசுப்பு தொடர்ந்தது, விம்மலினூடே அவளால் குசுகுசுக்கப்பட்ட சில வாக்கியத் துண்டங்களை கேட்க முடிந்தது – “மிக இயல்பாகத்தான் நடந்து கொண்டார்… மிக உற்சாகமானவராகத்தான் தெரிந்தார்…நன்றாக சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்… பட்டாணி… சீஸ்கேக்… ஒருகாலும் அவள் செய்திருக்க முடியாது…”

சிறிது நேரத்தில், புகைப்படக்காரரும் டாக்டரும் கிளம்பினார்கள். வேறு இரு ஆட்கள் உள்ளே வந்து, சடலத்தை ஸ்டிரெச்சரில் எடுத்துச் சென்றார்கள். அதன்பின் கைரேகை ஆளும் வெளியேறினார். இரண்டு துப்பறிவாளர்கள் மட்டும் இன்னமும் அங்கேயே இருந்தார்கள், அவர்களுடன் இரண்டு போலீஸ்காரர்களும். அவர்கள் அவளிடம் மிக அனுசரனையாக நடந்து கொண்டார்கள். அவள் வேறு எங்காவது, தமக்கை வீட்டிற்கோ, ஏன் தன் வீட்டிற்கே கூட- அவன் மனைவி அவளுக்கு அவளுக்கு அனைத்து சவுகரியங்களையும் செய்து கொடுத்து நன்றாக பார்த்துக் கொள்வாள் – போகக் கூடாது என்று ஜாக் நூனன் கேட்டார்.  

இல்லை என்று அவள் மறுத்தாள். தான் இருக்கும் நிலையில் தன்னால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது என்று கூறினாள். மனநிலை சற்று தேறும்வரை அவள் அங்கேயே இருப்பதில் அவர்களுக்கு ஆட்சேபனையேதும் இல்லையே? தற்போது அவளுக்கு உடம்பிற்கு முடியவில்லை, சற்றும் முடியவில்லை. அப்போது படுக்கையில் சற்று படுத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? என்று ஜாக் நூனன் கேட்டார். இல்லை, தற்போது உட்கார்ந்திருக்கும் இந்த நாற்காலியிலேயே இருக்க விரும்புவதாக அவள் கூறினாள். சிறிது நேரத்திற்குப் பிறகு, ஒருகால், உடம்பு சற்றி தேவலையாக இருந்தால், அவளால் படுக்கையறைக்குச் செல்ல முடியும்.

அவர்கள் அவளை அங்கேயே விட்டுவிட்டு, தங்கள் வேலையைத் தொடர்ந்தார்கள். வீட்டை சோதனையிட்டார்கள். அவ்வப்போது துப்பறிவாளர்களுள் ஒருவர் அவளிடம் மேலும் ஒரு கேள்வியைக் கேட்டார். சில சமயம் அவளைக் கடந்து செல்கையில் ஜாக் நூனன் அவளிடம் மென்மையாக உரையாடினார். அனேகமாக கனமான, நிச்சயமாக உலோகத்தால் செய்யப்பட்ட ஒரு மொண்ணையான ஆயுதத்தால் பின்மண்டையில் தாக்கப்பட்டு அவள் கணவன் கொல்லப்பட்டிருக்கிறான். அவர்கள் தற்போது அந்த ஆயுதத்தைத்தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள். கொலைகாரன் ஒருகால் அதை தன்னுடன் எடுத்துச் சென்றிருக்கலாம் அல்லது அவன் அதை அப்புறப்படுத்தி இருக்கலாம். ஏன் இவ்வீட்டிலேயே கூட எங்காவது  ஒளித்திருக்கலாம்.

“அதே பழைய கதைதான். ஆயுதத்தைக் கண்டுபிடி. குற்றவாளி தானாகவே அகப்படுவான்.” என்று அவர் கூறினார். சிறிது நேரத்திற்குப் பிறகு, ஒரு துப்பறிவாளர் அவளிருக்கும் இடத்திற்கு வந்து அவளருகே உட்கார்ந்து கொண்டார். வீட்டிலிருக்கும் பொருள் ஏதாவது ஆயுதமாக பயன்பட்டிருப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா, அவள் என்ன நினைக்கிறாள்? முடிந்தால், அவள் சற்று சுற்றிப் பார்க்க முடியுமா, பெரிய ஸ்பானர் அல்லது கனமான உலோகப் பூந்தொட்டி ஏதாவது காணாமல் போயிருக்கிறதா என்று?

அவர்களிடம் கனமான உலோகப் பூந்தொட்டிகள்  இருந்தது கிடையாது என்று கூறினாள்.

“அல்லது பெரிய ஸ்பானர் ஏதாவது?”

பெரிய ஸ்பானர் ஏதும் இருந்ததாக நினைவில்லை, ஆனால் கராஜில் அது போன்ற சில கருவிகள் இருக்கலாம் என்று பதிலளித்தாள்.

ஆயுதத்திற்கான தேடல் தொடர்ந்தது. வீட்டைச் சுற்றி தோட்டத்தில் மற்ற போலீஸ்காரர்கள் அமர்த்தப் பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்திருந்தாள். சரளைக்கல் மீது அவர்கள் நடக்கும் சத்தத்தை அவளால் கேட்க முடிந்தது. திரைச்சீலை இடைவெளியினூடே அவ்வவப்பொது டார்ச்லைட்டின் வெளிச்சத்தையும் அவளால் பார்க்க முடிந்த்தது. நேரம் ஆகிக் கொண்டிருந்தது, தட்டுமாடத்தின் மீது கடிகாரம் ஒன்பது காண்பித்துக் கொண்டிருந்ததை அவள் கவனித்தாள். அறைகளை சோதனையிட்டுக் கொண்டிருந்த நான்கு ஆட்களும் சோர்வாலும் வீண்முயற்சியினாலும் சிறிது ஏரிச்சலுற்றிருந்தார்கள்.  

அடுத்த முறை சார்ஜெண்ட் நூனன் அவளைக் கடந்து சென்றபோது “ஜாக், கஷ்டமில்லை என்றால் எனக்கு ஒரு டிரிங்க் தயார் செய்து கொடுக்கமுடியுமா?” என்று கேட்டாள்.

“கண்டிப்பாக, இதோ தயார் செய்கிறேன். விஸ்கிதானே?”

“ஆமாம், ஆனால் சின்ன பெக் போதும். ஒருகால் அது என்னை தேற்றக்கூடும்.”

கோப்பையை அவளிடம் நீட்டினார்.

“நீங்களும் ஒன்றை அருந்துங்களேன். மிகவும் சோர்வடைந்த்திருப்பீர்கள். தயவுசெய்து குடியுங்கள். என்னிடம் மிகக் கனிவோடு நடந்து கொண்டிருக்கிறீர்கள்.”

“சட்டப்படி அதற்கு அனுமதியில்லை. ஆனாலும் களைப்பை மறப்பதற்கு ஒரு சொட்டு அருந்தப் போகிறேன்.”

ஒருவர் பின் ஒருவராக அனைவரும் உள்ளே அழைக்கப்பட்டு ஒரு ஷொட்டு விஸ்கி பருக வற்புறுத்தப்பட்டார்கள். விஸ்கியும் கையுமாக அவள் முன்னே வளைய வருவது அவர்களுக்கு கூச்சமாக இருந்ததால் அவளுக்கு ஆறுதல் சொல்ல முற்பட்டார்கள். எதேச்சையாக சமையலறைக்குள் சென்ற சார்ஜெண்ட் நூனன் துரிதமாக வெளியே வந்து “இதைப் பாருங்கள் திருமதி. மலோனி, உங்கள் அவன்-அடுப்பு எரிந்து கொண்டுதான் இருக்கிறது, இறைச்சி இன்னமும் அதில் வெந்து கொண்டிருக்கிறது.” என்றார்.

“அடப் பாவமே! ஆமாம் மறந்தே போய்விட்டேன்” என்று ஆதங்கப்பட்டாள்.

“அப்போ, நான் வேண்டுமானால், அதை அணைத்து விடவா?”

“செய்வீர்களா ஜாக்? மிக்க நன்றி.”

இரண்டாவது முறையாக அவர் மீண்டும் சமையலறையிலிருந்து வெளிவந்த உடன், கண்ணீர் தேங்கிய அவள் கரிய விழிகளைக் கொண்டு அவரைப் பார்த்தபடியே “ஜாக் நூனன்,” என்றாள்.

“என்ன?”

“நீங்களும் இங்கே கூடியுள்ள மற்றவர்களும் எனக்காக ஒரு உதவியை செய்ய முடியுமா?”

“முயற்சிக்கிறோம், திருமதி. மலோனி”

“இதோ இங்கு நீங்களெல்லோரும் கூடியிருக்கிறீர்கள். அனைவருமே பாட்ரிக்கின் நல்ல நண்பர்களும் கூட. அவரைக் கொன்றவனைக் கண்டுபிடிக்க நீங்கள் உதவி செய்து கொண்டிருக்கிறீர்கள். இரவுணவிற்கான நேரம் கடந்து விட்டதால் நீங்கள் எல்லோருமே குலைப் பசியுடன் இருப்பீர்கள். உங்களை நான் சரியாக உபசரிக்கவில்லை என்பது பாட்ரிக்கிற்கு தெரியவந்தால், கடவுள் அவர் ஆத்மாவை ரட்சிக்கட்டும், அவர் என்னை மன்னித்திருக்கமாட்டார் என்பது நிச்சயமாக எனக்குத் தெரியும். அவனில் இருக்கும் அந்த ஆட்டை நீங்கள் சாப்பிடுங்களேன். அது இப்போது வெந்து முடிந்திருக்கும்.”

“கனவில்கூட அப்படிச் செய்யமாட்டேன்,” சார்ஜெண்ட் நூனன் மறுத்தார்.

“ப்ளீஸ், தயவுசெய்து சாப்பிடுங்கள். என்னைப் பொறுத்தவரையில் அவர் இங்கிருந்த போது இருந்த எதையுமே என்னால் உட்கொள்ள முடியாது. ஆனால் உங்களுக்கு அப்படியில்லை. நீங்கள் அதை உண்டு முடித்தால் எனக்கு பேருதவியாக இருக்கும். சாப்பிட்ட பின் நீங்கள் உங்கள் வேலையைத் தொடரலாம்.”

நான்கு போலீஸ்காரர்களுமே முதலில் பலமாக ஆட்சேபித்தார்கள். ஆனால் அவர்களுக்கு பயங்கரமாக பசித்ததால் இறுதியில் சமயலறைக்குள் சென்று தாங்களே பரிமாறிக் கொள்வதற்குச் சம்மதித்தார்கள். அந்தப் பெண்மணி அவள் இருந்த இடத்தில் இருந்தாள், வாய் நிறைய இறைச்சி இருந்ததால், பிறழ்ந்துவிட்ட கனத்த குரல்களுடன் அவர்களுக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்ததை அவளால் கேட்க முடிந்தது.

“இன்னம் கொஞ்சம் சாப்பிடு சார்லி?”

“வேண்டாம். ஒட்ட காலி செய்ய வேண்டாம்.”

“நாம் இதை சாப்பிட்டு முடிப்பதைத்தான் அவள் விரும்புகிறாள். என்னிடம் அவளே இதைக் கூறினாள். பெரிய உதவியைச் நாம் செய்தது போலிருக்கும்.”

“அப்ப சரி. இன்னம் கொஞ்சம் போடு.”

“பாவம் பாட்ரிக், சரியான பெரிய உருட்டுக் கட்டையால்தான் அந்த தாயோழி அவனை அடித்திருக்கிறான். சம்மட்டியடி வாங்கியது போல் அவன் கபாலம் சுக்கு நூறாய் நொறுங்கி விட்டதென்று டாக்டர் கூறினார்,” என்று அவர்களுள் ஒருவர் கூறினார்.  

“அதனால்தான் இதைச் சுலபமாகவே கண்டுபிடித்து விட முடியும் என்று தோன்றுகிறது.”

“எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.”

“யார் செய்திருந்தாலும், அதை மாதிரி ஒரு பொருளை தேவையில்லாமல் தூக்கிக் கொண்டு திரிய மாட்டார்கள்.”

அவர்களுள் ஒருவர் ஏப்பம் விட்டார்.

“என்னைக் கேட்டால், அது இங்கேதான் எங்கேயோ இருக்கிறதென்று கூறுவேன்.”

“ஆமாம் இங்கதான், கைக்கெட்டும் தூரத்தில், நீ என்ன நினைக்கிறாய் ஜாக்?”

வெளியே அடுத்த அறையில், மேரி மலோனி சிரிக்கத் தொடங்கினாள்.


Original: Lamb to the Slaughter, Roald Dahl, 1953

மொழியாக்கம்: நம்பி கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.