இசை வேளாளர்கள்

அரசு நூலகங்களில் இருந்து எதிர்பாராத வகையில் சில பொக்கிஷங்கள் கிடைப்பதுண்டு. அந்த வகையில் சில காலம் முன்பு எனக்குக் கிடைத்தது இசை அறிஞர் தஞ்சாவூர் பி.எம். சுந்தரம் எழுதிய  “மங்கல இசை மன்னர்கள்”. 19 ஆம் நூற்றாண்டின்பிற்பகுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாகஸ்வர மற்றும் தவில் கலைஞர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. ஒவ்வொருவரையும் பற்றிய குடும்பப்பின்னணி, வம்சாவளி, வாசிக்கவந்த காலம், சம காலக் கலைஞர்கள், அவர்களை ஆதரித்த புரவலர்கள், பெற்ற அங்கீகாரங்கள், சுவையான சம்பவங்கள், அவர்தம் பெருமைகள், சிறுமைகள் என்று அவர்களின் இறப்பு வரை பதிவுசெய்யப்பட்ட தனித்தனி கட்டுரைகள். மிகப்பெரிய உழைப்பைக் கோரியிருக்கும் பணி. 

அநேகமாக இதில் குறிப்பிட்டுள்ள “மன்னர்கள்” எல்லோரும் காவிரிக்கரையைச் சேர்ந்தவர்களே. திருவாரூர், கும்பகோணம், திருச்சி, உறையூர், சுவாமிமலை, மாயவரம், செம்பனார்கோவில் என்று. கல்லணையைத் தவிர எந்த ஒரு அணைக்கட்டும் இல்லாத காலம். கடை மடை வரை விவசாயம் செழித்த காலம்.    

காவிரிக்குச் சமமாகக் கலையும் பொங்கித் ததும்பி அலையடித்திருக்கிறது. பயிர் வேளாண்மைக்குச் சமமாக இசை வேளாண்மையும் பொலிந்திருந்த காலம். இசைப் பயிர் வளர்த்த இசை வேளாளர். “பன்னீர் தெளித்தாற்போல” வாசிக்கிற நாயனக்காரர்களும், “பட்டுக்கத்தரித்தாற்போல” வாசிக்கிற தவில் கலைஞர்களும் நிறைந்திருந்த காலம். பி. எம். சுந்தரம் அவர்களின் தந்தை மறைந்த தவில் மேதை நீடாமங்கலம் மீனாக்ஷிசுந்தரம் அவர்கள். நாதஸ்வரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினத்திற்கு இணையான கலைஞர்.  இவ்விருவரையும் அளவுகோலாகக் கொண்டால் இவர்களுக்குச் சமமான பத்து நாதஸ்வர மற்றும் தவில் கலைஞர்களைக் காட்டுகிறார் ஆசிரியர். அநேகமாக எல்லாமே “விளையும் பயிர் முளையிலே” தான். எல்லோருக்கும் கடுமையான குருக்களின் கீழ் “உருவேற்றம்” நடந்திருக்கிறது.  பெரிய சமஸ்தானங்கள், ஜமீன்கள், ஆதீனகர்த்தர்கள், செல்வந்தர்கள் எனப் புரவலர் கூட்டம். கோயில்கள், விழாக்கள், திருமணங்கள் என்று கலை செழிக்க ஆயிரம் வழிகள். அநேகமாக பலரும் இலங்கை சென்று வாசித்திருக்கிறார்கள். (அதோ..அந்த மண்டபத்தைப்போய்க் காணுங்கோ…. எங்கட முத்துகிருஷ்ணன் வாசிச்ச கல்யாணி தொங்குது..) தங்கத் தோடாக்கள், சாதராக்கள்,  தங்க மெடல்கள், வெள்ளி நாதஸ்வரம், அபூர்வமாக தங்க நாதஸ்வரமும், தந்த நாதஸ்வரமும் கூட. கூறைநாடு நடேச பிள்ளை, நாகப்பட்டினம் வேணுகோபாலபிள்ளை, கும்பகோணம் சிவக்கொழுந்துப் பிள்ளை, மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளை. மாதிரிக்கு சில பெயர்கள். 

இருதார மணம் சாதாரணம். பலர் அக்கா, தங்கை இருவரையும் சேர்த்தே மணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.  அது போக “தொடுப்புகள்”. ஐம்பது நீண்ட ஆயுளாக இருந்திருக்கிறது. மகாமேதைகள் அல்பாயுசில் போயிருக்கிறார்கள். மலைக்கோட்டை பஞ்சாமி (தவில்), திருமருகல் நடேசன் (நாதஸ்வரம்), திருச்சேறை முத்துகிருஷ்ணன் (நாதஸ்வரம்) இறக்கும்போது வயது முறையே முப்பது, இருபத்தொன்பது மற்றும் முப்பத்தேழு. பலர் செய்வினை செய்யப்பட்டு ஒழித்துக்கட்டப்பட்டிருக்கிறார்கள் – பி ஏ படித்துவிட்டு நாதஸ்வரம் வாசிக்க வந்து மகோன்னதமான இடத்தை அடைந்த ராஜா மடம் ஷண்முகசுந்தரம்(நாதஸ்வரம்), பொதுச்சாமி பிள்ளை (தவில்) போல. அநேகமாக அனைவருமே பிராமணர்களிடமே வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டிருக்கிறார்கள், நூலாசிரியர் உட்பட. சிலர் மிகப் பிரமாதமாக பாடவும் செய்திருக்கிறார்கள். மலைக்கோட்டை பஞ்சாமிப்பிள்ளை தவிலை தூக்கி வைத்துவிட்டு இரண்டு வருடம் பாட்டுக்கச்சேரி மட்டுமே செய்து வந்துள்ளார். அவருக்கு முந்தைய தலைமுறையில் அம்மாசத்திரம் கண்ணுஸ்வாமிப்பிள்ளை சகலகலா வல்லவர் ஆக இருந்திருக்கிறார்.

வாய்ப்பாட்டுக் கலைஞராகத்தான் ஆரம்பித்தார் நாகஸ்வர ஏகச் சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை. பல வித்துவான்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கலைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருந்துள்ளனர். மலைக்கோட்டை பஞ்சாமிப்பிள்ளை தவில், கஞ்சிரா மற்றும் வாய்ப்பாட்டு முதலிய மூன்றிலும் உச்சத்தைத்தொட்டவராக இருந்திருக்கிறார். மதுரை பொன்னுசாமிப்பிள்ளை (நாதஸ்வரம்) வீணை தனம்மாள் மெச்சக்கூடிய வீணைக்கலைஞராகவும், ஜி என் பி பொறாமைப்படும் அளவிற்கு பலரும் வாய்ப்பாட்டில் சிறந்த கலைஞர்களாகவும் இருந்துள்ளனர்.  கிடிகிட்டி என்றொரு முழவு வாத்தியத்தைப் பற்றிக் கூறுகிறார் ஆசிரியர். அது ஏனோ பிரபலமாகவில்லை.     

ஒரு தவில் கலைஞனுக்கு வரக்கூடாத நோய் தாக்கியது திருவழப்புத்தூர் பசுபதிப்பிள்ளையை. தவில் வாசித்தாலே நகக்கண்களிலிருந்து ரத்தம் கொட்டவாரம்பித்துவிடும். இனிமேல் வாசிக்க முடியாத நிலைமை. பசுபதிப்பிள்ளை அசரவில்லை. நான்தானே வாசிக்க முடியாது. மற்றவர்களை வாசிக்கச் செய்கிறேன் என்று ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு கற்பிக்கும் சீரிய பணியை மேற்கொண்டார். இவ்வளவுக்கும் தவிலைக் கையால் கூடத் தொட மாட்டார். தரையிலோ, வெற்றிலைப் பெட்டியிலோ வாசித்தும், சொற்களை வாயால் சொல்லியும் சீடர்களுக்கு புரிய வைத்துவிடும் ஆற்றல் இவருக்கு மட்டுமே அமைந்த சிறப்பாகும். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பல கலைஞர்கள் இவரிடம் சில காலமாவது பயிற்சி பெறத் தவறியது இல்லை. பல மகோன்னத கலைஞர்களை உருவாக்கிய இன்னொருவர் கோட்டூர் சௌந்திரராஜபிள்ளை. 

இதில் மன்னார்குடி சின்னபக்கிரி(1869-1915) ஒரு ஒரு அதிமானுட நாகஸ்வரக்காரர்(Legend). ஜீவனோபாயத்திற்காக ஆதிச்சபுரம் வேலுப்பிள்ளை நாகஸ்வரக்காரரிடம் “ஒத்து” ஊதுபவராகச் சேர்ந்தார். அதன் பின் மன்னார்குடி வீரசாமிப் பிள்ளையிடம் மூன்று மாதத்திற்கு இருபத்தியொரு ரூபாய்க்கு “ஒத்து”. அங்குதான் உறையூர் முத்துவீருசாமி பிள்ளை (கச்சேரிக்கு இவரோடு வந்த இடத்தில் மகாராஜா வாசிக்கச்சொல்லி தன் பிள்ளை பெயர் வாங்கி விட்டான் என்று தெரிந்தவுடன் அவனை வீட்டை விட்டு விரட்டிய “பெரிய” மனிதர்) யைப் பற்றி கேள்விப்படுகிறார். நாதஸ்வரம் கற்றுக்கொண்டால் அவரிடம்தான் கற்றுக்கொள்ளவேண்டும் என்று முதல் இருபத்தியொரு ரூபாய் வந்தவுடனேயே கிளம்பி விடுகிறார். கடும் குருகுல வாசம். ஒரு வருடம் வீட்டுப்பெண்கள் காலால் இட்ட பணியை தலையால் செய்து முடிக்கிறார். சாதகத்துக்கு எழுந்திருப்பது போல் ஒரு நாள் காலையில் எழுந்து கைக்கு கிடைத்த ஒரு நாகஸ்வரத்தை எடுத்துக்கொண்டு நீடாமங்கலம் கிளம்பி விடுகிறார். சின்னப்பக்கிரியை பொறுத்த வரை குருகுல வசம், அப்பியாசம் எல்லாம் ஒரு பேருக்குத்தான். அவரிடம் இயற்கையாக இருந்த வித்தை தெறித்துக் கிளம்புகிறது. நீடாமங்கலத்தில் சின்ன சின்ன கச்சேரிகள். பின்னாளில் கொன்னக்கோல் லய மேதையாக விளங்கிய “பல்லு” பக்கிரிப்பிள்ளை இவரிடம் தவில் விதவானாக சேர்ந்து கொள்கிறார். வெகு விரைவில் புகழ் உச்சிக்கு ஏறிய சின்னபக்கிரி தாராசுரம் சக்ரபாணி நாகஸ்வரக்காரரின் மகளான பக்கிரியம்மாளை மணக்கிறார். ஒரு காலகட்டத்தில் இவர் “மேள”த்தில் எல்லாருடைய பெயரும் பக்கிரிதான்.

ஆசிரியர் கூறுகிறார்.” துத்துக்காரம், தன்னக்காரம்,  அகாரம், விரலடி என்று நாகஸ்வரத்தில் பல வாசிப்பு முறைகள் உண்டு. சிலர் கீர்த்தனைகளில் வல்லவர்களாய் இருப்பார்கள். சிலர் ராக ஆலாபனைகளில், மற்றும் சிலர் பல்லவி போன்ற லய விசேஷங்களில் நிபுணர்களாய் இருப்பார்கள். இவையெல்லாம் ஒன்று சேர்ந்து ஒருவரிடம் இருந்ததென்றால் எனக்குத் தெரிந்தவரை மன்னார்குடியாரிடம்தான்..” என்று திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை என்னிடம் அடிக்கடி சொல்லியதுண்டு. “ஏறுசக்கரம், இறங்குசக்கரம் போன்ற பிருகாவோ, விரலடியோ ஆகட்டும். வந்தது வராத கல்பனையாகட்டும்.. பக்கிரி நாகஸ்வரக்காரரோடு அதெல்லாம் போய் விட்டது. மேல்காலஸ்வரம் வாசிப்பதில் அவருக்கிணை எவருமில்லை. அவர் ஒரு யுகபுருஷர்” என்று என் தந்தையாரும் கூறுவார். “

“கச்சேரி பேச யாராவது திருமண வீட்டார் இவரிடம் வந்தால் “மூவாயிரம் கொடு, ஐயாயிரம் கொடு” என்று கேட்பது கிடையாது. கல்யாணத் திட்டமென்ன என்பதைக் கேட்டு அதில் பன்னிரெண்டில் ஒரு பங்கை சன்மானமாகக் கேட்பார். பேரம் பேசுகிற வழக்கமே கிடையாது. திருநெல்வேலி மாவட்டம் ஏழாயிரம் பண்ணை என்ற கிராமத்தில் ஒரு  திருமணம். ஒரு வார காலத்திற்கு விழா. மூன்றே நாள் வாசிப்பதற்கு ஐயாயிரம் ரூபாய் சன்மானம், பன்னிரண்டு பேருக்கு போக வர “இன்டெர்கிளாஸ்” ரயில் டிக்கெட், அங்கே தன் குழுவினருக்கு தனிச்சமையல், சாப்பாடு – இதெல்லாம் போக ஒரு யானை. இதற்கெல்லாம் “அக்ரிமென்ட் ” எழுதிக்கொண்டு அந்த ஊருக்குச் சென்று வாசித்தார். அந்த யானைக்கு செங்கமலம் என்று பெயரிட்டு மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி ஆலயத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்.”

தன்னுடைய குதிரை வண்டி ஓட்டுபவரின் பெண்ணிற்கு கல்யாணம் என்று பத்திரிகை வைத்தவுடன் மாங்கல்யம் செய்து போட்டதோடு மட்டுமல்லாது திருமணத்தன்று போய் வாசித்துவிட்டும் வருகிறார் என்று பாராட்டும் ஆசிரியர் சக தவில் கலைஞர் பெற்ற அங்கீகாரத்தைக் கண்டு இவர் படுகிற பொறாமையையும் கா ட்டத்தவறவில்லை. கருப்பாக குட்டையாக இருந்தாலும் சின்னப்பக்கிரிக்கு நிறைய “ரசிகைகள்” உண்டு. ஒரு முறை தன் ஷட்டகரின் தந்தையிடம் நாயகி ராகத்தில் ஒரு சந்தேகம் கேட்க, அவர் நீ போகும் இடமெல்லாம் அதுதான் வாசிக்கிறயாமே? என்று சிரித்தாராம். சின்னப்பக்கிரிக்கு இரண்டு மனைவியர். வாரிசு கிடையாது. சின்னபக்கிரியின் நாயனத்தின் அணைசுக்கு மேற்புறத்தில் கட்டப்பட்டிருந்த, வைரம் இழைக்கப்பட்ட சிறிய தங்க மணி, வடுவூர் ராமபிரான் கரத்தில் உள்ள கோதண்டத்தின் மேல் நுனியில் சி ப என்ற எழுத்துக்களோடு இன்றும் அலங்கரித்துக்கொண்டுள்ளது. 

நாகஸ்வர மேதை திருச்சேறை முத்துக்கிருஷ்ணபிள்ளையை (1892-1929) கடவுளின் அவதாரமாகவே கூறுகிறார் ஆசிரியர். தந்தை ஸ்ரீனிவாச பிள்ளை. குருகுல வாசத்தை முடித்துவிட்டு வாய்ப்புக்காக காத்திருக்கும் நண்பர் ராஜாமணியிடம் தவில் கற்றுக்கொண்டு, ஒரு மேளத்தை நிர்வாகம் செய்யும் திறமையோடு காத்திருந்தவர் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்பம். ஒருநாள் நண்பர்களிடையே நாகஸ்வரம் பெரிதா? தவில் பெரிதா? என்று விவாதம். சண்டை பெரிதாகப்போய்விட்டது. இவர் ஏதோ சொல்லப்போக, இவரைக் கற்றுக்குட்டி என்று கேவலமாகப் பேசி விட்டார்கள். அழுகையும் ஆத்திரமுமாக வீட்டுக்கு வந்தவர் அந்தக்கணமே தந்தையின் நாகஸ்வரத்தை எடுத்து வாசிப்புப்பயிற்சியை ஆரம்பித்து விட்டார். வீட்டில் வாசித்தால் அக்கம் பக்கத்தில் இடைஞ்சலாக இருக்கும் என்று தென்னந்தோப்புக்குள் போய் பயிற்சியை முடித்து இரவு பத்து மணியானதும்தான் வீடு திரும்புவார். ஒரே குறிக்கோள். இடையறாத பயிற்சி. மிகக் குறுகிய காலத்தில் நாகஸ்வர உலகின் முடிசூடாச் சக்கரவர்த்தியானார் “சுயம்பு” முத்துக்கிருஷ்ணபிள்ளை. நாகஸ்வரத்தில் அழகு மிளிர கீர்த்தனை இசைப்பவர்கள், பல்லவி முதலிய லய நுணுக்கங்களில் திறமை மிகுந்தவர்கள் போன்ற பல அம்சங்களும் ஒருங்கே அமைந்தவர் முதலில் மன்னார்குடியார்(சின்னபக்கிரி) அடுத்து முத்துகிருஷ்ணன் தான், என்கிறார் ஆசிரியர். 

இவருடைய மேதமையை விளக்க இரண்டு நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறார் ஆசிரியர். பல கலைஞர்களைப் போல் இவரும் மதுவின் பிடியில் சிக்கியவர். ஒருமுறை குழிக்கரை பெருமாள் நாயனக்காரர் வீட்டில் விசேஷம். திருவாரூருக்கு ஒரு கச்சேரிக்கு சென்ற முத்துகிருஷ்ணன் போதையில் குழிக்கரையில் இறங்கி ரயில் நிலையத்தில் ஒரு பெஞ்சில் படுத்துவிட்டார். பார்த்தவர்கள் பெருமாள் நாயனக்காரரிடம் சொல்ல, அவர் நேராக வந்து தன்னுடைய வீட்டுக்கு முத்துகிருஷ்ணபிள்ளையை அழைத்துச் சென்றுவிட்டார். பெருமாள்பிள்ளை முதல் அனைவருக்கும் அவருடைய வாசிப்பைக் கேட்க ஆவல். இதையறிந்த அவரும் தனக்கொரு நாகஸ்வரம் தருமாறு கேட்டார். யாரோ நாகஸ்வரத்தை தேடி அடுத்த அறைக்குச் செல்ல, இவர் இதே போதுமே என்று சுவரில் மாட்டியிருந்த ஒரு நாகஸ்வரத்தை எடுத்து விட்டார். பெருமாள் பிள்ளை “வேறு நாயனம்.. ” என்று ஏதோ சொல்ல, அதே நாயனத்திலேயே வாசிக்க ஆரம்பித்துவிட்டார் முத்துகிருஷ்ணபிள்ளை. ஆசிரியர் கூறுகிறார் “அந்த நாகஸ்வரமோ எங்கு பார்த்தாலும் விரிசல்கள் விழுந்த, சரளி வரிசை பயிலும் மாணவர்கள் உபயோகத்திற்கான நாகஸ்வரம். நாகஸ்வரத்தைப் பற்றியோ சீவாளியைப் பற்றியோ கவலைப்படுபவரா முத்துகிருஷ்ணன். துளித்துளியாய் சொட்டத்தொடங்கி தூறலாய், பெருமழையாய் பெய்யத்தொடங்கியது ஷண்முகப்ப்ரியா ஆலாபனை. காலை ஆறுமணிக்கு ஆரம்பித்த “அடை மழை” முடியும்போது மணி பதினொன்று. இது மிகை அல்ல. கேட்டவருக்கும் அறிந்தவருக்கும்தான் தெரியும் இது உண்மையென்று.”

இன்னொரு நிகழ்ச்சி திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை கட்டுரை ஆசிரியரிடம் பகிர்ந்துகொண்டது. நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள கீவளூரில்(கீழவேளுர்) கோயில் தர்மகர்த்தாக்கள் திருவிழாவில் யாரை நாயனத்துக்கு அமர்த்துவது என்று கலந்தாலோசிக்கிறார்கள். அவர்களில் ஒருவர் “நம்ம முத்துகிருஷ்ணன்தான் இருக்கிறாரே …” என்று சொல்ல மற்றவர்கள் “வாசிப்பைப் பொறுத்தவரை அவரை ஏற்பாடு செய்வது நமக்குப் பெருமைதான்.   ஒவ்வொருமுறையும் அவர் படுத்துக்கொள்வதும், நாம் போய் எழுப்புவதும், சுவாமி புறப்பாட்டை தாமதமாக்கி விடுகின்றன…அவருக்குச் சுயநினைவு திரும்புவதற்குள் நமக்கு போதும் போதுமென்றாகி விடுகிறதல்லவா…நம்ம ராஜரத்தினம் இருக்கிறாரே” என்று சொல்ல ராஜரத்தினத்தை (இவர் கதை அப்போது வெளியில் தெரியவில்லை) ஏற்பாடு செய்யப்பட்டது. வழக்கமாக வரும் முத்துகிருஷ்ணனை வேண்டாமென்று ஒதுக்குவதைக் கண்ட தர்மகர்த்தா ஒருவர் தன்னுடைய சொந்த செலவில் முத்துகிருஷ்ணனை ரகசியமாக ஏற்பாடு செய்தார். திருவாவடுதுறையார் வந்திறங்கினார். பிற்பகல் மூன்று மணிக்கு அதே தெரு வழியாக முத்துகிருஷ்ணபிள்ளை  வந்து கொண்டிருப்பதைக் கண்ட திருவாவடுதுறையாருடைய ஆள் அவரிடம் வந்து சொல்ல, அவருக்கு கிலி பிடிக்க ஆரம்பித்தது. உடனே அவரை அழைத்து வரச்செய்து விசாரிக்க அவரும் வாசிக்க வந்த விஷயத்தைக் கூறினார். ” கெடுத்தானே பாவி” என்று யோசித்தார். ஒரே வழி “அது” தான். தன்னுடைய ஆள் கையில் பணத்தைக்கொடுத்து அண்ணனுக்கு தெளிய தெளிய ஊற்றிக்கொண்டே இருக்கவும் காலை வரை அண்ணனை எழுந்திருக்காமல் பார்த்துக்கொள்ளவும் பணித்தார். இரவெல்லாம் ராஜரத்தினத்தின் தேன் மழை. முத்துகிருஷ்ணனை ஏற்பாடு செய்த தர்மகர்த்தா காத்திருந்து காத்திருந்து பார்த்து “சரிதான். எங்கே விழுந்து கிடக்கிறாரோ, அட்சயலிங்கசுவாமி இந்தமுறை ராஜரத்தினத்தின் இனிய இசையைத்தான் அனுபவிக்கட்டுமே” என்று சமாதானப்படுத்திக்கொண்டார். பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. வீதியுலா முடிந்து ஸ்வாமி ராஜகோபுரத்தருகே திரும்பியாய் விட்டது. இனிமேல் முத்துகிருஷ்ணபிள்ளை தெளிந்து விழித்தாலும் பரவாயில்லை என்று நினைத்த ராஜரத்தினத்தின் ஆள் தன்  பொறுப்பு செவ்வனே முடிந்தது என்ற மன நிறைவுடன் ஓய்வெடுக்க சென்று விட்டார். தொலைவில் சன்னமான ஒலியாக, இனிமையான நாகஸ்வர இசை முத்துக்கிருஷ்ணப்பிள்ளையின் காதுகளில் பாய்ந்தது. திடுக்கிட்டு எழுந்தார். மூலையில் படுத்திருக்கும் ஒருவரைத் தவிர யாரும் இல்லை. ராஜரத்தினம் எங்கே? வீட்டின் வெளிப்புறம் வந்து பார்த்தார். கம்பீரமான மங்கல இசை காதை நிறைத்தது. முத்துக்கிருஷ்ணபிள்ளைக்கு விஷயம் விளங்கிவிட்டது. வேகமாக கோபுரவாசலை ஓட்டமும் நடையுமாகச் சென்றடைந்தவரைப் பார்த்து எரிச்சல், மனஉளைச்சல் என்று பலருக்கும் பலவித எண்ணங்கள். அருகில் நின்று கொண்டிருந்த “கக்காயி” நடராஜ சுந்தரம்பிள்ளையின் (ராஜரத்தினத்தின் சகோதரி மகன்) கையிலிருந்து நாகஸ்வரத்தை முத்துக்கிருஷ்ணபிள்ளை வாங்கிக்கொண்டவுடன் தன் வாசிப்பை நிறுத்தினார் ராஜரத்தினம். அதுவரை அவர் “சரக்கூடு” கட்டி வாசித்த அதே ராகத்தை ஆலாபனை செய்ய ஆரம்பித்தார்முத்துக்கிருஷ்ணபிள்ளை. கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் தம்மை மறந்தனர். அடுத்த நான்கு மணி நேரத்துக்கு யாரும் இந்த உலகத்தில் இல்லை. காலை சுமார் ஐந்து மணிக்கு ஆரம்பித்த தேன் “அடைமழை” ஓயும் போது மணி ஒன்பது. அட்சயலிங்கேஸ்வரர் மனசுகொள்ளா சந்தோஷத்தோடு தீபாராதனையை ஏற்றுக்கொண்டு ஆலயம் புகுந்தார். இந்த சம்பவத்தை ஆசிரியரிடம் கூறும் ராஜரத்தினம் கூறுகிறார். “அது என்ன வாசிப்போ எனக்கு சொல்லத் தெரியவில்லை. நான் எப்படி வாசித்திருப்பேன் என்று உனக்குத் தெரியும். அத்தனையும் அழித்து மெழுகிவிட்டார் முத்துக்கிருஷ்ண அண்ணன். மாலையிலிருந்து விடியும் வரை நினைவற்றுக் கிடந்ததற்கு வஞ்சம் தீர்ப்பது போல், எங்களையெல்லாம் ஒரு நான்கு மணிநேரம் நினைவற்றுப் போகுமாறு வாசித்துத் தள்ளிவிட்டார்”

முத்துக்கிருஷ்ணபிள்ளை பல விதங்களில் தனித்துவமான கலைஞர். எந்த கச்சேரிக்கும் கையை வீசிக்கொண்டு தனியாகத்தான் செல்வார். தனக்கென்று ஒரு “செட்” வைத்துக்கொள்ளாதவர். அவரை ஏற்பாடு செய்பவர்கள் மற்ற வாத்தியக்காரர்களை தனியாக ஏற்பாடு செய்வதுதான் வழக்கம். அவ்வளவு ஏன், அவருக்கென்று தனி நாகஸ்வரம் கூட வைத்துக்கொள்ளாதவர். எந்த மோசமான நாகஸ்வரமாக இருந்தாலும் அவரிடம் வந்துவிட்டால் தெய்வீக இசையைப் பொழியவேண்டியதுதான் அதன் வேலை (“நாகஸ்வரத்தில என்ன இருக்கு. நாபிக்கமலத்திலிருந்து நாம கொடுக்கற காத்திலயும் ஆண்டவன் அனுகிரஹத்திலயும்தான் எல்லாம் இருக்கு” என்று மனோரமாவிடம் சிவாஜி “தில்லானாமோகனாம்பாள்” படத்தில் பேசும் வசனம் காதில் ஒலிக்கிறது) யாருக்கும் இவர் நாகஸ்வரம் கற்றுக்கொடுக்கவில்லை. யாராவது இதைப்பற்றிக் கேட்டால் ” நான் யாரிடமாவது முறையாகக் கற்றுக்கொண்டால் அல்லவா, கற்றுக்கொடுப்பதற்கு” என்று கூறிவிடுவார். இவர் இலங்கையிலும் ஒரு “சூப்பர்ஸ்டார்”. இலங்கையில் இவர் வாசித்த சில இடங்களில் வேறு வித்வான்களை வாசிக்க அந்த ஊர் ரசிகர்கள் அனுமதிப்பதில்லையாம். அங்குள்ள ஒவ்வொரு தூணும் முத்துக்கிருஷ்ணபிள்ளையின் ஒவ்வொரு ராகத்தால் எழுப்பப்பட்டதாக நம்பினார்களாம். இவர் ஏனோ கடைசி வரை கல்யாணம் செய்து கொள்ளவில்லை. இவர் மணப்பதாக இருந்த பெண் இறந்துபோனதுதான் காரணம் என்று ஆசிரியர் இன்னொரு கட்டுரையில் கூறுகிறார். “காலா என் காலருகே வாடா..” என்று கூப்பிட்டு மிதிக்கத்தான் தோன்றுகிறது. இவ்வுலகம் நீத்தபோது முத்துக்கிருஷ்ணபிள்ளைக்கு வயது வெறும் முப்பத்தியேழு.

பல நாகஸ்வர வித்வான்களும் கேட்க ஆசைப்பட்ட உயர்ந்த வாசிப்பைக் கொண்டிருந்த திருமருகல் நடேசபிள்ளைக்கு (1874-1903) வாரிசு இல்லாதது பெரிய குறையாக இருந்தது. தனது தமக்கை கோவிந்தம்மாள் மகனை ஒருநாள் மடியில் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார். அப்போது அவரைப் பார்க்க வந்திருந்த மன்னார்குடி சின்னப்பக்கிரிப்பிள்ளை குழந்தையைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தார். நடேசபிள்ளை “எனக்கோ இனி புத்திரபாக்கியம் கிடையாது. இதோ இவனுக்குத்தான் என் சொத்தெல்லாம்.. ” என்று கூற, “லக்ஷ்மியை மட்டுமா கொடுக்கப்போகிறீர்கள்?..சரஸ்வதியையும் அல்லவா கொடுக்கப்போகிறீர்கள்…யானையின் காதுகளைப்போல் இருக்கும் இவன் காதுகளைப் பாருங்கள்…அதுவும் சிம்ம லக்னக்காரன்..என்று பதிலிறுத்தார் சின்னபக்கிரிப்பிள்ளை. அந்த “ஞானக் குழந்தை”யே நாகஸ்வர ஏகச் சக்ரவர்த்தி திருவாவடுதுறை டி என் ராஜரத்தினம்பிள்ளை (1898-1956). அந்தக் குழந்தையின் கல்யாணத்திற்கு தான்தான் நாகஸ்வரம் வாசிக்கப்போகிறோம் என்று நினைத்துப் பார்த்திருப்பாரா சின்னப்பக்கிரி?       

திருக்கோடிக்காவல் வயலின் கிருஷ்ணய்யரிடம் வாய்ப்பாட்டு கற்று தன் ஏழாவது வயதில் பாட்டுக்கச்சேரிகள் செய்யத்தொடங்கிய ராஜரத்தினம்பிள்ளை பிற்காலம் புல்லாங்குழல் விற்பன்னராக விளங்கிய திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளையுடன் சேர்ந்தும் சில காலம் பாட்டுக்கச்சேரிகள் நடத்திவந்தார். திருவாவடுதுறை மடத்தில் நாயனக்காரர் இல்லாதிருந்த காரணத்தினால் இவரை வாய்ப்பாட்டு மற்றும் நாகஸ்வரத்தில் பெரும்புலமை வாய்ந்த அம்மாசத்திரம் கண்ணுசாமிபிள்ளையிடம் நாகஸ்வரம் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தார் திருவாவடுதுறை சர்வாதிகாரியான பொன்னுப்பிள்ளை. சிலவருடங்களில் ராஜரத்தினம் எல்லோரும் வியக்கத்தக்க அளவில் நாகஸ்வர வல்லுனரானார். ஆசிரியர் கூறுகிறார் ” குருகுலவாசம், சாதகம் எல்லாம் ஒரு வியாஜ்ஜியமே தவிர, உண்மையில் முன்ஜென்ம நற்கருமங்களின் பலனாக, அக்கலை அவருக்கு இயற்கையாகவே லபித்திருந்தது. துரிதமான, வக்ரமான பிருகாக்கள், ஸ்ருதிசுத்தமும், வன்மையும் நிறைந்த ஒலி, ஆற்றலான பிரயோகங்கள், மணிக்கணக்கில் ராக ஆலாபனை செய்யும் திறமை இவையெல்லாம் ராஜரத்தினம் பிள்ளையிடம் தாமாகவே வந்து சேர்ந்தன. அதிகமான ஸ்வரம் மற்றும் பல்லவி வாசிப்பதில் அவருக்கு விருப்பம் குறைவு. ஒரு சில கீர்த்தனைகள் மட்டுமே வாசிப்பார்.  ஆனால் அமானுஷ்யமான கற்பனை செறிந்ததாகவும், அதற்கு ஈடு கூறமுடியாத விதத்திலும், அவருடைய ராக ஆலாபனைகள் அமைந்திருக்கும். ராஜரத்தினம் பிள்ளையின் வாசிப்பினை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. எவ்வளவு கூறினாலும் அவை குறைவானவையாகத்தான் இருக்கும்.”   “கவி காளமேகம்” படத்தில் நடித்த ராஜரத்தினம் அந்த படத்தில் பாடிய பாடல்கள் இன்றும் இசைத்தட்டுக்களில் அவருடைய புகழைப் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. 

குடுமி மற்றும் கதர்வேட்டி சட்டைகளை ஒழித்து, மேல்கோட்டு, ஷெர்வானி அணிந்து கொண்டு, சில கோவில் விழாக்கள் தவிர மற்ற இடங்களில் மேடை இல்லாமல் கச்சேரி செய்யமாட்டேன் என்று நாகஸ்வரக் கலைஞர்களை தனி இடத்தில் அமரச் செய்தார். நாகஸ்வர வடிவமைப்பிலும் இவர் பல புதுமைகளைச் செய்தார் (இவர் சீவாளியை வசக்குகிற விதத்தை அருமையாகக் கட்டுரையில் வடித்திருக்கிறார் கி.ரா “அழிந்துபோன நந்தவனம்” என்ற கட்டுரையில் – சொல்வனத்தில் உள்ளது). பிற கலைஞர்களைத் தகாத வார்த்தைகளைக் கூறி இழிவு படுத்துவது, எடுத்தெறிந்து பேசுவது, கச்சேரிக்கு குறித்த நேரத்தில் வராமை என்று பல மோசமான குணங்களையும் கொண்டிருந்த ராஜரத்தினத்தை அவருடைய கலையின் மேன்மைக்காக அனைவரும் பொறுத்துக்கொண்டனர் என்கிறார் ஆசிரியர். தன் மாமனைப் போலவே தன் சகோதரி மகன் “கக்காயி” நடராஜ சுந்தரத்தை சிறந்த வித்வானாக உருவாக்கினார். இவருக்கு ஐந்து மனைவியர். நேரடி வாரிசு இல்லை. சிவாஜி என்ற வளர்ப்பு மகன் இவருக்குண்டு.

நாகஸ்வரத்திற்கு இன்னொருபெயர் TNR (திருமருகல் நடேசபிள்ளை ராஜரத்தினம் பிள்ளை) . இவருடைய நூற்றாண்டுவிழாக் கட்டடம் சென்னையில் இவர் வாழ்ந்த அடையாறில் உள்ளது.  

வெல்வேறுகாலங்களில் வாழ்ந்த “பல்லவிச் சுரங்கம் ” சிதம்பரம் வைத்தியநாதபிள்ளை (இவருடைய ரெண்டுங்கெட்டான் காலப்பிரம்மாணம் இவருடைய தனிச்சொத்து), திருவலஞ்சுழி மாணிக்கம்பிள்ளை, மதுரை பொன்னுசாமிபிள்ளை ( “தில்லானா மோகனாம்பாள்” புகழ் மதுரை சேதுராமன், பொன்னுசாமியின் தாத்தா), கீரனூர் சஹோதரர்கள், திருமெய்ஞ்ஞானம் நடராஜ சுந்தரம் பிள்ளை (“நாகஸ்வர யமன்” என்று “தவில்காரர்” மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையால் பாராட்டப்பட்டவர்),கோட்டூர் ராஜரத்தினம் பிள்ளை  போன்றவர்களை கலையின் உன்னதம் தொட்ட நாகஸ்வர விதவான்களாகக் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

 அம்மா சத்திரம் கண்ணுஸ்வாமிப்பிள்ளை  (1876-1927) ஒரு சகலகலா வல்லவர். இளம் வயதில் எதிர் வீட்டிலிருந்த கோவிந்தசாமி நட்டுவனாரின் வெத்திலைப்பெட்டியில் ஏதேனும் தட்டிக்கொண்டிருப்பார். இவர் ஆர்வத்தை வளர்க்கிற வகையில் நட்டுவனாரும் ஜதிகளையும் சொற்கட்டுகளையும் சொல்லிக்கொடுத்தபடி இருப்பார். வெத்திலைப்பெட்டியின் இடத்தை தூண்களும் மரப்பெட்டிகளும் பிடித்துக்கொள்ள ஆரம்பித்தன. இவருடைய அறிவைக்கண்டு மலைத்துப்போன நட்டுவனாரின் சிபாரிசின் பேரில் தவில் ஒன்று வாங்கித்தரப்பட்டது. முழுத்தவில்வித்வானாக கண்ணுஸ்வாமிப்பிள்ளை  களத்தில் இறங்கியபோது வயது பன்னிரெண்டு. இயற்கையிலேயே நல்ல குரல்வளமும் கொண்டிருந்ததால் நட்டுவனார் அவருக்கு சங்கீதமும் கற்பித்து வந்தார். மகா வைத்தியநாதய்யர்(வாய்ப்பாட்டு), திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர்(வயலின்), சரபஸாஸ்திரிகள் (புல்லாங்குழல்), திருமருகல் நடேச நாயனக்காரர் என்று அவரவர் கலைகளில் உச்சம்தொட்ட கலைஞர்களைப் போட்டி போட்டுக்கொண்டு  அந்தக் காலத்தில் சமஸ்தானங்கள் அழைத்து கௌரவிப்பார்களாம் (தன்னுடைய “சக்தி” கட்டுரையில் கூறுகிறார் திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை.) இவர்கள் அனைவருடனும் பக்க வாத்தியக்காரராக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இருந்தவர் கண்ணுஸ்வாமிப் பிள்ளை. கோயம்புத்தூர் தாயம்மாள் வீட்டுத் திருமணத்தில் திருமருகல் நடேசபிள்ளையோடும், “நாகஸ்வர சிம்மம்” சின்னப்பக்கிரியோடும் இவர் வாசித்த சிறப்பான வரலாறு பிரசித்தமானதாகும். ஒருமுறை சரபசாஸ்திரிகள் புல்லாங்குழல் கச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மிருதங்க வித்வான் வராமல் போகவே, இவர் தவிலை மிருதங்கம் போலவே ஒலிக்கச்செய்து கச்சேரியை சிறப்பித்தார். சரப சாஸ்திரி தனக்கிடப்பட்ட மாலையை இவருக்கிட்டு கௌரவித்தார். 

மிருதங்கம், கஞ்சிரா, டோலக், நாகஸ்வரம் என்று கண்ணுஸ்வாமிப்பிள்ளை கரைகாணாத வாத்தியங்களே இல்லை. நான்கு வருடம் ஜலதரங்கம் கச்சேரியும் செய்துள்ளார். கோனேரிராஜபுரம் வைத்தியநாதய்யர் லய சம்பந்தமான விவரங்கள் பவற்றை இவரிடம் கற்றறிந்திருக்கிறார். மிகப் பிரபலமான சீடர்கள் இவருக்குண்டு. முடிகொண்டான் வெங்கட்ராமய்யர் (வாய்ப்பாட்டு), திருவாழப்புத்தூர்  பசுபதிப்பிள்ளை, திருமுல்லைவாயில் முத்துவீரப்பிள்ளை (தவில்) வழிவூர் வீராஸ்வாமிபிள்ளை, திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை(நாகஸ்வரம்). திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளையின் முதல் நாகஸ்வரக்கச்சேரி திருக்கோவிலூர் தபோவனத்தில் நடைபெற்றபோது தவில், மற்றும் மறுநாள் அதேஇடத்தில் ராஜரத்தினம் பாட்டுக்கச்சேரி செய்தபோது மிருதங்கம் வாசித்து சுவாமிகளால் கௌரவிக்கப்பெற்றார். தமிழ், வடமொழி, தெலுங்கு என்று பல மொழிகளில் தேர்ச்சி பெற்று விளங்கிய கண்ணுசாமிப் பிள்ளை சிறந்த சாஹித்ய சங்கீத கர்த்தாவாகவும் விளங்கினார். பல பாடல்களையும் தில்லானாக்களையும் புனைந்துள்ளார். அதிசயமாக இவருக்கு புத்தக வாசிப்பு பழக்கமும் இருந்திருக்கிறது. கைவல்யநவநீதம், பகவத்கீதை இவருக்குப் பிரியமான நூல்கள். இவருக்கு அடுத்த தலைமுறையில் இவரைப்போலவே “சகலகலா வல்லவராக” விளங்கியவர் மலைக்கோட்டை (இலுப்பூர்) பஞ்சாமிப்பிள்ளை.   

தவில் வாத்தியத்தில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லையென்ற மகோன்னத ஸ்தானம் வகித்தவர் நீடாமங்கலம் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை (1894-1949) (ஆசிரியர் பி.எம். சுந்தரம் அவர்களின் தகப்பனார்). “தவில்காரர்” என்ற சொல் இவரை மட்டுமே குறிப்பதாக விளங்கியது. நாகப்பட்டினம் நாகஸ்வர மகாமேதை வேணுகோபாலப் பிள்ளையிடம் முதலில் தவில்காரராகச் சேர்ந்து வேணுகோபாலப் பிள்ளை காலமாகும்வரை பதினோரு ஆண்டுகள் அக்குழுவில் இருந்தார். இது அவருக்கு சம்பளத்தோடு கூடிய ஒரு குருகுல வாசமாகத்தான் இருந்தது. ஏராளமான ஜதிகள் மற்றும் லய விவகாரக்கணக்குகளை தினமும் கற்பித்து அவரை இணையற்ற தவில் மேதையாய் ஆக்கிய குருவாகத்தான் இருந்தார் வேணுகோபாலப் பிள்ளை. இதன் காரணமாகவே தன் இறுதி மூச்சு உள்ளவரை “நாகப்பட்டினம்” என்றாலே எழுந்து நின்று வணங்கும் வழக்கம் மீனாக்ஷிசுந்தரம்பிள்ளைக்கு இருந்தது. ஸ்ரீவாஞ்சியம் கோவிந்தப்பிள்ளை, வழிவூர் முத்துவீர்ப்பிள்ளை, அம்பகரத்தூர் மலைப்பெருமாள் பிள்ளை (ஜதி மன்னன்), அம்மாசத்திரம் கண்ணுஸ்வாமிப்பிள்ளை, அம்மாபேட்டை பக்கிரிப்பிள்ளை போன்ற தவில் மேதைகளின் வாசிப்பை அடிக்கடி கேட்கவும் அதைத் தன் தொழில் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ளவும் மீனாக்ஷிசுந்தரம்பிள்ளைக்கு வாய்ப்புகள் அமைந்தன. 

நாகப்பட்டினத்தார் மறைவுக்குப்பின் செம்பொனார்கோயில் ராமஸ்வாமிப் பிள்ளையின் குழுவில் ஒன்றரை ஆண்டுகள் வாசித்தார். அதன்பின் திருவீழிமழலை சகோதரர்கள் குழுவில் முப்பது ஆண்டுகள் தன்னுடைய தவிலை மூன்றாம் நாகஸ்வரம் போல் ஒலிக்கச் செய்தார். ஒரு மனஸ்தாபத்தில் “செட்”டிலிருந்து பிரிந்து சென்ற இவர் அதன்பின் “தனித்தவில்” ஆகவே இறுதிவரை வாசித்தார். முதன்முறையாக “தனித்தவில்” வித்வானாக வாசித்தவர் இவரே. இவர் வாசித்த நாகஸ்வர வித்வான்களின் வரிசையைப் பார்த்தால் ஒருவர் மலைத்துத்தான் போகவேண்டும். எவ்வளவு பெரிய தவில் வித்வானுடன் வாசிக்கும் போதும் பிள்ளையே தலைவராக இருந்து “லய வின்யாசத்தை” நடத்துவார். “நம்” எனும் சொல்லை அவர் கையாண்ட விதத்தில் வேறு ஒருவரும் வாசித்ததில்லை என்று முதிர்ந்த தவிற்கலைஞர்கள் கூறுவார்கள். அதுபோல் “நடைச்சொல்” என்பதும் அவருடனேயே போய்விட்டது என்பார்கள். இப்போதெல்லாம் சிறிது நேரம் வாசித்துவிட்டு தவிலைக் கழற்றி சீடனிடம் கொடுத்துவிட்டுச்செல்லும் வித்வான்களைப்போல் இல்லாமல், சுவாமி ஆலயப்புறப்பாட்டின்போது தவிலைப்போட்டுக்கொண்டாரானால் சுவாமி இறங்கும் வரை அதைச் சிறிது நேரம் கூட கழற்றாமல், முற்காலக் கலைஞர்கள் தொழில் செய்த மாண்பினை மதித்து, அம்மரபைப் பின்பற்றி நடந்தவர். சக போட்டியாளராக இருந்தாலும் இவரைத் தன் குருவாக மதித்தவர் மலைக்கோட்டை (இலுப்பூர்) பஞ்சாமிப் பிள்ளை. இரண்டு வருடங்கள் தவிலைத்தொடாமல் இருந்த பஞ்சாமிப்பிள்ளை இவர் வற்புறுத்தலுக்குப் பின்தான் மறுபடியும் தவில் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்.   பசுக்களிடம் இவருக்கு அதிகமான பிரியம் இருந்தது. தன் மகன் ஷண்முகவடிவேல் திருமணம் முடிந்த அன்று பசுக்களைப் பார்வையிட்டுவிட்டு படுத்தவர் மீளாத்துயிலில் ஆழ்ந்தார். இவருடைய வாரிசு நீடாமங்கலம் என் டி எம் ஷண்முகவடிவேல் எல்லோராலும் “தம்பி” என்றழைக்கப்பட்டு தந்தையின் வழியில் பெரும் வித்வானாக விளங்கினார். “தாளப்ரவீணா”, “அபிநவ நந்தீசர்” (சென்னை), “தவில் அரசு” (இலங்கை), “படகவாத்யப்பிரவீண” (பெங்களூர்) முதலியவை மீனாட்சிசுந்தரம்பிள்ளை பெற்ற பட்டங்களில் சில.    “மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையைப் பற்றி மட்டும் பேசினால் போதும், தவில் வாத்தியத்தின் முழுச் சரித்திரத்தையும் பேசியதாகும்” என்கிறார் சர் சி பி ராமஸ்வாமி ஐயர். 

பொன்னிப்புனல் பாயும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நாகஸ்வர தவில் கலைக்குடும்பங்களுள் பல இலங்கை யாழ்ப்பாணத்தில் குடியேறி வாழ்ந்து, அந்நாட்டவராகவே இருந்து வந்துள்ளன. அப்படி ஒருவர் தான் விஸ்வலிங்க தவில்காரர். உரிய பேரும் புகழும் தனக்குக் கிடைக்கவில்லையே என்ற குறை அவருக்கு இருந்தது. அதைத் தன் பிள்ளை தட்சிணாமூர்த்திப் பிள்ளையின் (1933-1975) மூலம் தீர்த்துக்கொண்டார். இணுவில் சின்னத்தம்பிப்பிள்ளையிடம் போய் பயிற்சிக்கு விட்டார். காலை ஐந்து மணிக்கு குருவின் வீட்டுக்குச் சென்று சுமார் எட்டு மணி நேரம் பயிற்சி செய்து இரண்டு மணிக்கு வீடு திரும்பும் பையனிடம் வந்ததும் வராததுமாக தவிலைக் கொடுத்து வாசிக்கச்செய்வார். சுற்றுப்புற கிராமங்களில் எங்கு நாகஸ்வரக் கச்சேரி நடந்தாலும், பையனைத் தோளில்   தூக்கிக் கொண்டு மணிக்கணக்கில் நின்று லயவின்யாசத்தைக் கேட்கச்செய்வார். வீடு திரும்பியதும், தாம் கேட்ட வாசிப்பின் நுட்பங்களையும், சிறப்புகளையும் தன் மகனை வசிக்குமாறு பணிப்பார். இவ்வாறு ஒரு நாளைக்கு பதினாறு மணிநேரம் பயிற்சியில் கழிவதாக சில காலம் சென்றது. என்னதான் இலங்கையிலே பயிற்சி பெற்றாலும் இசைக்கு மூலஸ்தானமாக அமைந்த தஞ்சை மண்ணில் தகுந்த ஒரு விதவானிடம் மேற்பயிற்சி அவசியம் என்று கருதிய விஸ்வலிங்க தவில்காரர் தன் மகனோடு இந்தியாவுக்கு வந்து நாச்சியார் கோயில் ராகவப் பிள்ளையிடம் பையனை ஒப்படைத்துவிட்டுச் சென்றார். ஒன்றரை ஆண்டுகள் முடிந்தபின் “உனக்குச் சொல்லிக்கொடுக்க இனி எதுவும் பாக்கி இல்லை. ஒரு அபிப்ராயம் காதில் விழுவதற்குள்ளாகவே உன் கைகளில் ஒலித்து விடும்படியான அளவுக்குக் கடவுளின் வரப்ப்ரசாதத்தை பெற்றுள்ள நீ ஊருக்குத் திரும்பலாம். மகோன்னதமான பேரும் புகழும் உன்னை வந்தடைய அதிகக்காலம் இல்லை,” என்று ராகவப்பிள்ளை உளமார ஆசீர்வதிக்க இலங்கைக்குத் திரும்பினார் தட்சிணாமூர்த்திபிள்ளை. அங்கு முன்னணி வித்வான்களுக்கு வாசித்து மிக விரைவிலேயே பெரும் புகழ் பெற்றார். ஆனால் சக கலைஞர்களின் பொறாமைத்தீ அவரை நாட்டை விட்டே விரட்டியது. அளவெட்டி என்னும் ஊரில் வசித்துவந்த அவர் குடும்பத்தோடு வந்து தஞ்சை மண்ணில் குடியேறினார். காமாட்சி பிள்ளை, பி.எஸ்.ராஜகோபாலபிள்ளை, திருமுல்லைவாயில் “லயப்பிண்டம்” முத்துவீர்பிள்ளை, நாச்சியார் கோயில் ராகவப்பிள்ளை, திருவிழந்தூர் ராமதாஸ் பிள்ளை, வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளை, வடபாதிமங்கலம் தட்சிணாமூர்த்தி பிள்ளை, நீடாமங்கலம் ஷண்முகவடிவேல் பிள்ளை போன்ற ஏராளமான தவில் மேதைகளுடன் தவில் வாசித்து மிக விரைவிலேயே புகழுச்சியை எட்டினார் தட்சிணாமூர்த்தி பிள்ளை. “பலரிடம் நான் தவில் பயின்றேன். பல மேதைகளின் வாசிப்பைக்கேட்டேன். ஆனால், லய சம்பந்தமான விவகாரம் என்ற அம்சத்தில் என் கண்களைத்திறந்த மானசீக குருநாதர் திருமுல்லைவாயில் முத்துவீர்ப்பிள்ளை தான்” என்று ஆசிரியரிடம் கூறியிருக்கிறார் தட்சிணாமூர்த்தி பிள்ளை.        

 “தவில் வித்வான்களின் திறமை பலவகைப்பட்டது. சில பேருக்கு லய சம்பந்தமான “கணக்கு” களில் நிறைந்த புத்திசாலித்தனமிருக்கும். ஆனால், கரத்திலே “வேகம்” மற்றும் “பேச்சு” குறைவாக இருக்கும், திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளையைப்போல. பலருக்கும் “பேச்சு” அதிகமாகவும், விவகாரப்புலமை குறைவாகவும் காணப்படும். சிலர் உருப்படிகளுக்குப் பிரமாதமாக வாசிப்பார்கள். இதர நுட்பங்களில் போதிய திறமை இருக்காது. மேற்படி எல்லா விஷயங்களிலும் அசாத்தியமான அறிவும், “அறங்கை புறங்கை” (விரல்களின் அதிதுரிதத் தோய்மானம்) பேசுகிற வேகமும் நிரம்பப்பெற்ற வித்வான்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அவ்வகைப்பட்ட வெகு சிலரில், நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை வரிசையில் விளங்கிய ஒரே வித்துவான் தட்சிணாமூர்த்தி பிள்ளை. அசுர சாதகமும், திறமை செறிந்த நாகஸ்வரக் கலைஞர்களுக்கு வாசித்து அடைந்த பழுத்த அனுபவமும், இதற்கெல்லாம் மேலாக இறைவனின் அருட்கொடையும் தட்சிணாமூர்த்திக்கு ஈடிணைல்லாத பெரும் ஸ்தானத்தைத் தேடித்தந்தன. எந்தத் தாளத்திலும் எப்பேர்ப்பட்ட லய விசேடங்களையும், எத்தனை வேகத்தில் வேண்டுமானாலும் மணிக்கணக்கில் வாசிக்கும் வல்லமை பெற்றிருந்தவர். சாதாரணமாக தட்சிணாமூர்த்தியின் லயவின்யாசம் குறைந்தது இரண்டு மணிநேரமாவது இருக்கும். ஒருமுறை புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமெய்ஞ்ஞானம் நடராஜ சுந்தரம் பிள்ளை (இவர் ஸ்வரம் வாசிப்பதை ஒரு சுற்று கேட்டால் போதும். பத்து பாட்டில் சரக்கினால் கிடைக்கும் போதை உடனே தெளிந்து விடும் – புல்லாங்குழல் மாலி) 

யின் நாகஸ்வரக் கச்சேரியில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கி ஐந்து முறை லயவின்யாசம் செய்தார் தட்சிணாமூர்த்தி. அன்றைய தினம் முதல் லய வின்யாசம் “இந்த பராகா” (நாதநாமக்கிரியா) என்ற கீர்த்தனையின் அதிதுரித கால ஸ்வரப்ரஸ்தாரத்திற்குப்பிறகு நடைபெற்ற லயவின்யாசம் கேட்டுய்த்தவர்கள் பாக்கியவான்கள்.  கண்டமோ, சங்கீர்ணமோ, எந்தக் கதியை அமர்த்திக் கொண்டாலும், கடைசிவரை மோஹரா, கோர்வையுள்பட அந்தந்த கதிக்கான சொற்களைக் கொண்டே தட்சிணாமூர்த்தி வாசித்து முடிப்பார். சங்கீர்ணகதி அவருக்கு விருப்பமான ஒன்று. கடுமையான சந்தத்தாளங்களில் லயவின்யாசம் செய்வது அவருக்கு தேனில் ஊறிய பலாச்சுளை. “சங்கீர்ணம்” என்ற தாள ஜாதியை மகேந்திரவர்மபல்லவன் தோற்றுவித்ததாகவும் அதன் காரணமாக “சங்கீர்ண ஜாதிப்புலி” என்று சிறப்புப் பெயர் பெற்றதாகவும் கூறப்படுவதுண்டு. மற்றொரு மகேந்திர வர்மனாக பதினோரு அட்சரமுடைய தாள ஜாதியை உருவாக்கிப் பலமுறை அதில் தனி வாசித்திருக்கிறார். அரித்துவாரமங்கலத்தில் நடைபெற்ற ஒரு கச்சேரியில், இந்த “ருத்ரகதி” யில் சுமார் மூன்று மணி நேரம் தட்சிணாமூர்த்தி தவில் வாசித்தத்தைக் கேட்ட வித்வான்களும், ரசிகர்களும் தட்சிணாமூர்த்தியின் மேதாவிலாசத்தையும் சிறப்பையும் இன்றளவும் புகழ்ந்து கூறுகின்றனர். இதைப் போன்றே பதின்மூன்று மற்றும் பதினேழு அட்சரங்களைக் கொண்ட கதிகளையும் உருவாக்கி மிகச் சரளமாக தவில் வின்யாசம் செய்வார் தட்சிணாமூர்த்தி” என்கிறார் ஆசிரியர்.                      

திருச்சேறை முத்துகிருஷ்ணபிள்ளையைப் போன்றே வாத்தியங்களின் தன்மையைப் பற்றியெல்லாம் கவலைப்படாதவர் தக்ஷிணாமூர்த்தி. சாதாரண கோயிலில் “தட்டு”கிற தவில் போதும் அவருக்கு தெய்வீகஇசையைப் பெருக்க. இதைப் பல இடங்களில் நிரூபித்தும் இருக்கிறார். அவருடைய வாசிப்புத் திறமையைச் சோதனை செய்து பார்க்கவெண்ணி, எத்தனையோ பல்லவி மேதைகள் எந்தக் கலைஞரும் எளிதாக புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு கடினமான பல்லவிகளை தயார் செய்து கொண்டு வந்தபோதெல்லாம் தட்சிணாமூர்த்தி ஒரு முறை பல்லவியை காதில் வாங்குவார். பின்பு அது அவரால் தயாரிக்கப்பட்ட பல்லவி போலாகிவிடும். திருமெய்ஞ்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை, தருமபுரம் கோவிந்தராஜபிள்ளை போன்ற பல்லவி வல்லுநர்கள் தட்சிணாமூர்த்திக்கு “கற்பூர மூளை” என்று போற்றியிருக்கிறார்கள். “ரெண்டும் கெட்டான் காலப்பிரமாணத்திலும் “தண்ணீர்பட்ட பாடாய்” தட்சிணாமூர்த்தி வாசிப்பதை எண்ணுகையில், அந்தப் பையனின் லாயக்கணிசம், மூளைவேகம், கரவேகம் எல்லாம் பிரமிப்பைத்தான் உண்டுபண்ணுகின்றன” என்று மூத்த நாகஸ்வரக்கலைஞர் சிதம்பரம் ராதாகிருஷ்ணபிள்ளை வியந்து பாராட்டியதுண்டு. லய வாத்தியமான மிருதங்கத்தில் ஒப்பற்ற ஸ்தானம் வகித்த பாலக்காடு மணிஐயர் “தட்சிணாமூர்த்தி உலகத்தின் எட்டாவது அதிசயம்” என்றும், மற்றொருவரான பழனி சுப்ரமணியபிள்ளை “ஒரு முறை மனதால் நினைத்தாலே நம்மை வியப்பிலாழ்த்தும் மேதை” என்றும் பாராட்டியுள்ளனர். ஒருசமயம் திண்ணையில் அமர்ந்து சில கலைஞர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். பேச்சு தட்சிணாமூர்த்தியைப் பற்றித் திரும்பியது. “நம்மை அவருடைய வாசிப்பு பிரமிக்கச்செய்கிறது. ஆனால், சட்டென்று புரிவதில்லை” என்று ஒருவர் கூறினார். அப்போது அவ்வீ ட்டினுள்ளிருந்து   வெளியே வந்த திருத்துறைப்பூண்டி சொக்கலிங்க நாகஸ்வரக்காரர் “அவன் வாசிப்பு தெய்வீ கமானது. அவனே கடவுளின் அவதாரம். தெரியுமா?” என்றார். அவருக்கு சற்றுப் பின்னால் வந்த “லயப்பிண்டம்” தவில் வித்வான் திருமுல்லைவாயில் முத்துவீர்ப்பிள்ளை “தட்சிணாமூர்த்தியின் வாசிப்பைப் புரிந்து கொள்ளும் படியான தவிற்காரன் இப்போதைக்கு எவரும் இருப்பதாக எனக்கே தெரியவில்லை. உனக்குப் புரியாததில் அதிசயம் என்ன?” என்று கூறினார்.   

மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலெல்லாம் தவில் வாசித்து பெரும் புகழும், விருதுகளும் பெற்றார் தட்சிணாமூர்த்தி. “கற்பனைச்சுரங்கம்” , “கரவேக கேசரி”, “தவில் வாத்திய ஏகச்சக்ராதிபதி”, “லயஞான குபேர பூபதி ” போன்றவை இவர் பெற்ற சில பட்டங்கள். சிலகாலம் உடல் நலமில்லாமல் இருந்த இவர், யாழ்ப்பாணம் சென்று, மூளாய் என்ற ஊரில் தன்நாற்பத்திரெண்டாம் வயதில் காலமானார். சக்கரவர்த்தி அக்பரின் அவையில் இருந்த தான்ஸேனைப் பற்றி எழுதும்போது அபுல்பசல் “ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் தான்ஸேனைப்போல ஒருவர் இருந்ததில்லை இனி வரும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் இருக்கப்போவதுமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். அது தட்சிணாமூர்த்திக்கும் பொருந்தும். தவில் என்ற சொல் இவ்வுலகில் இருக்கும் வரை தட்சிணாமூர்த்தியின் பெயரும் விளங்கும் என்பதில் ஐயமில்லை. 

ஆசிரியர் வித்வான்களின் மறுபக்கத்தையும் காட்டத் தவறவில்லை. விதிவிலக்குகள் தவிர, அநேகமாக அனைவரும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாய் இருந்திருக்கிறார்கள். கிட்டப்பாவுடனான ராஜரத்தினத்தின் சந்திப்பு திருநெல்வேலி ஜங்க்ஷனில் உள்ள “ஸ்பென்சர்ஸ் ரூமில்” தான் நடந்திருக்கிறது. மாதர் மயக்கில் விழாத கலைஞர்கள் அரிதினும் அரிது. அநேகமாக எல்லோருமே முன்கோபிகளாக இருந்திருக்கிறார்கள். பலரும் சக கலைஞர்களை மற்றவர்களுக்கு முன் கடுமையாகப் பேசி அவமானப்படுத்தியிருக்கிறார்கள். பொறாமைத்தீயில் வெந்து பொசுங்கியிருக்கிறார்கள். மேதைகளும் தப்பவில்லை. பக்க வாத்தியக்கலைஞர்களுக்கு, நியாயமாகக் கொடுக்கக்கூடிய கூலியைக் கூட கொடுக்காத வித்வான்கள் அதிகம் பேர். இதில் பெருங்கலைஞர்களும் அடக்கம். ஒருமுறை திருவாரூர் ஸ்டேஷனில் கையில் கத்தியோடு ராஜரத்தினத்தை விரட்டிக் கொண்டு வந்த தவில் வித்வான் பொதுச்சாமிபிள்ளையை ஸ்டேஷன் மாஸ்டரும் மற்றவர்களும் பிடித்து ஒரு வழியாக நாகஸ்வர சக்ரவர்த்தியைக் காப்பாற்றியிருக்கிறார்கள். மலைக்கோட்டை பஞ்சாமிப் பிள்ளையும் இப்படித்தான் பாக்கியை வசூல் பண்ண வேண்டியிருந்தது. நிறைய தவில் வித்வான்கள் “குஸ்தி” விளையாட்டில் ஆர்வமாக இருத்தது தற்செயலான விஷயமாகத் தெரியவில்லை.   

இந்நூலுக்கு மிகச்சிறந்த அணிந்துரை வழங்கியிருக்கிறார் பொள்ளாச்சி டாக்டர் நா. மகாலிங்கம் அவர்கள். எழில், நாகச்சின்னம், நாகஸ்வரம் என்று பெயர் வழங்கிய வரலாற்றை ஆராய்ந்து எழுதியுள்ளார். பாணர்கள்தான் இன்றைய இசை வேளாளர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பின் பெயர் மாற்றம் எங்கனம் நிகழ்ந்தது என்று ஆராயவேண்டும் என்று கூறுகிறார். 

ஆசிரியர் பி எம் சுந்தரம் அவர்கள் சங்கீத பாரம்பரியம் மிக்கவர். பல மொழி அறிஞர். மெலட்டூர் நாராயணஸ்வாமி ஐயர், வையச்சேரி ஜானகிராமன், டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா முதலியோரிடம் முறையாக சங்கீதம் பயின்றவர். சங்கீத ஆராய்ச்சியாளர். இவருடைய தந்தை “தவில்காரர்” நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தவில் வாத்தியத்தின் பிதாமகர். “தம்பி” என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட நாடறிந்த தவில் வித்வான் நீடாமங்கலம் என்.டி எம் ஷண்முகவடிவேல் இவருடைய சகோதரர்.  இந்த நூலை எழுத இவரை விட பொருத்தமானவர் இருக்கமுடியாது. இவர் எழுதிய வித்வான்களில் பலரோடு இவருக்கு நேரடித் தொடர்பு இருந்திருக்கிறது. பலருடைய தனிப்பட்ட நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் இருந்திருக்கிறார். மூத்த கலைஞர்களின் நினைவுகள் அவர்தம் பேச்சு வழக்கிலேயே பதிவாயிருப்பது சிறப்பு. அந்த இசைக்கலைஞர்களுக்கு நடுவே புழங்கும் மொழியிலேயே மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ள காலம்கடந்த இந்நூல் இசை மற்றும் பண்பாட்டு ஆர்வலர்களுக்கு ஒரு பொக்கிஷம் என்றால் மிகையாகாது. இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள வித்வான்கள் பலருடைய ஒலிப்பதிவுகள் இணையத்தில் கிடைப்பது நாம் பெற்ற பேறு.

 சின்னபக்கிரி முதல் திருமெய்ஞ்ஞானம் நடராஜசுந்தரம்(நாகஸ்வரம்) வரை அம்மாசத்திரம் கண்ணுஸ்வாமிப்பிள்ளை முதல் யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி வரை(தவில்) அந்தந்த காலகட்டங்களில் மேதைகள் தோன்றிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். இப்பொழுதும் இவர்கள் வரிசையில் யாராவது இருக்கக்கூடும். “பி எம் சுந்தரம் அமரர்களான கலைஞர்களைப் பற்றி எழுதி அற்புதம் செய்திருக்கிறார். இது போல் வாழ்கின்ற கலைஞர்களைப் பற்றியும் அவரே எழுதவேண்டும்” என்று வேண்டுகோள் விடுக்கிறார் அமரர் நா. மகாலிங்கம் அவருடைய அணிந்துரையில். நமது விருப்பமும் அதுவே. இந்நூலைப் படிக்கும்பொழுது பல இடங்களில் நமக்கு தில்லானா மோகனாம்பாள் சிவாஜி ஞாபகத்திற்கு வருகிறார். டி எஸ் பாலையாவும் கூட. இந் நூலை மெய்யப்பன் தமிழாய்வகம் சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளது. முதற்பதிப்பு 2001ஆம் வருடம். இந்நூல் பதிப்பில் இருக்கிறதா எனத் தெரியவில்லை. சொல்லகராதியோடு கூடியதொரு மேம்படுத்தப்பட்ட பதிப்பு நிச்சயம் இந்நூலை காலம்கடந்து பல தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும்.       

3 Replies to “இசை வேளாளர்கள்”

  1. This is an extremely interesting and informative article about the musicians of a certain instrument- Nadaswaram & Thavil. Kudos to the author for making this information available to people like me who are interested in music. I may never have had the opportunity to get the books he refers to in this article and read them. Once again, thanks a lot.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.