மேசன்களின் உலகம்

இன்று காலை
வீட்டை விட்டு வெளியேறி
சாலையில் இறங்கியதும்

கருப்புக் கண்ணாடியுடன்
மோதி விடுவதுபோல் வந்த மேசன்

எவர் செய்த புண்ணியமோ, என்று எண்ணும்படி
லாவகமாய் வாகனம் திருப்பி
நொடிப்பொழுதில் இடிக்காமல் சென்றார்.

நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
காதிகிராப்ட் கைத்தடியில்
வெள்ளை ஜிப்பாவுடன்

சந்தனத்தை திருநீறாய் அணிந்து
மிதமான வேகத்தில் நடைபயின்ற முதிய மேசன்
புன்னகைத்து முகமன் கூறி வழி செல்ல

மேற்சட்டை இல்லாத மெலிந்த உடல் பெண் மேசன்
தலைக்குமேல் கூடையில் வைத்து
சுமந்து செல்கிறார், எதையோ.

மஞ்சள் நிறத்தில் முங்கி எழுந்தது போல்
முடியாத கூந்தலுடன்
எதிரில் எழுந்தருளிய பெண் மேசன்

கோலவிழியம்மன் ஆலயத்துக்கு வழி கேட்க,
துரு துரு விழிகளுடன் கையில் குச்சி மிட்டாயை சப்பியபடி
குட்டைப்பாவாடையில், கூடவே ஒரு குட்டி மேசன்.

கிளிப்பச்சை நிறக் காலணியும்
கையில்லாத கருப்பு நிற பனியனும்
அணிந்த வாலிப மேசன்

காதில் பொருத்திய பாட்டுப்பேழையுள்
உரத்து பாடிச் செல்கிறார்
தன் காதல் பாடலை, வழி நெடுக்க.

உலக அமைதி, அல்லது அதை விடவும்
ஆகப் பெரிது எதைப் பற்றியோ
தீராக் கவலையுற்று,

வயர் கூடையுள் பால் பாக்கெட்டுடன்
சென்றுகொண்டிருந்த நடுவயது பெண்மேசன்
பதறி, அலறி வழி விட,

சீறி வரும் பாம்பை நம்பினாலும்
சிரித்து வரும் பெண்ணை நம்பாதே
கண்மணிகள் -குமார் & மதுரேகா

என்ற வாசகம் தரித்த ஆட்டோவை
ஆவின்பால் கடை வாசல் வழி
அதிவேகத்தில் ஓட்டிச்சென்ற மேசன்,

கடற்கரைச் சாலை சந்திப்பின்
சிகப்பு விளக்கு சிக்னல் கண்டும்
சீறிப்பாய்ந்து செல்கிறார், நிற்காமல்.

அவர் சென்று மறைந்த திசையில்
அழகான புள்ளிமானுக்காய்
அழுகும் காதலனின் கதையை ஒலிபரப்பி

கடற்கரைச் சாலையின்
கரையில் நிற்கும்,
குமரகுருபரன் தேநீர் நிலையம்.

அதன் வாசலில்
வித்தியாசமாய் மீசை வைத்து
மீன்பாடி வண்டியில் கால் வைத்து

சுருட்டுப்பிடிக்கும் செகுவேராவுடன்
கண்ணாடி தம்ளரில் டீ குடிக்கும்
கட்டுமஸ்தான மேசன்

இடக்கையில் ஏந்திய ஏதோவொரு பண்டத்தை
அவசரமாய்ப் பிட்டு
தன் திருவாயில் இட்டு மெல்லுகிறார்.

நூலை விடவும் அதிகமாய்
அழுக்கு கொண்ட ஆடையில் காலை நீட்டி,
பக்கத்து கடை வாசலில் படுத்திருந்த மேசன்

காலிப்புட்டிகளினால் ஆன தன் தலையணையை
சரியாக வைத்தபடி, தாடியை சொறிந்து கொண்டு
திரும்பிப் படுத்த பின்னும்,

அற்புதமும் எதுவும் இன்றி.
அதே போலவே இருந்து கொண்டிருக்கும்
அவ்விடம், எப்பவும்.

அன்றொரு நாள்
டாஸ்மாக் கடையின் உள்ளிருந்து
தடுமாறியபடி வந்த மேசன்

தீப்பெட்டி இருக்கா, என்ற கேள்விக்கு
இல்லை என்றதும், சுதந்திரத்திற்குப்பிறகு
இந்த நாட்டில் எல்லாமே இப்படித்தான்

எனக் குறைபட்டு, குப்பைதொட்டியில்
உணவருந்திக்கொண்டிருந்த
கால பைரவரை உதைக்கச்சென்று

வலக்கால் தூக்கிய நடராசரைப்போல
விழுகாமல் நின்ற பின்
சுதாரித்து திரும்பிச் சென்றார்.

நம்மை சுற்றிலும்
எங்கும் எப்போதும்
நீக்கமற நிறைந்திருக்கிறார்கள், மேசன்கள்.

நான் ஒரு மேசன்.
இதுவரையும் விடாது இதைப் படித்துவிட்டமையால்
நீங்களும் ஒரு மேசன் தான்.

யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் தலையைத் தூக்கி
சற்று மேலே பாருங்கள்,
தெரிகிறதா?

அருந்ததி நட்சத்திரத்திற்கு பக்கத்தில்
அந்த பிரம்மாண்டமான
பிரமிடு முத்திரை?

மற்றும் அதற்குள் இருந்தபடி
சகலத்தையும் சதா கண்காணித்துக்கொண்டிருக்கும்
மர்மமான, அந்த ஒற்றைக் கண்?

இல்லுமினாட்டிகள் எங்கும் நிறைந்திருக்கும் திருநாட்டில்
இது பற்றி மேற்கொண்டும்
நாம் பேச வேண்டாம். ஆமாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.