மகரந்தம்: #மீ டூ இயக்கம்: பெண்கள் நிலை


இயக்குநர்களின் தனிமனித நடத்தை திரைப்படத் தரத்தைப் பாதிக்குமா?

சமீபத்தில் இந்தியாவில் #மீ டூ இயக்கம் என்ற ஒன்று பிரபலமாகி வருகிறது. இது வழக்கம்போல மேற்கில் துவங்கி அங்கு பிரபலமான பிறகு இந்தியாவிலும் துவங்கி இருக்கிறது. அனேக மேலைப் பிரதி இயக்கங்களைப் போல இதுவும் பெருநகர இங்கிலிஷ் மட்டுமே பேசும் மக்களிடம் மட்டும் உலவும் கருத்தியலா, இல்லை, இதன் பல உருமாற்றங்கள் இந்திய மொழி சமூகங்களிலும் பரவி ஒரு பண்பாட்டு மாற்றத்தை உந்துமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டி இருக்கும். மேற்கிலேயும் இதற்கு பரபரப்பான ஊடக வெளிப்பாட்டைத் தாண்டி பெரிய அளவில் நிறுவன/ அமைப்பு சார் மாறுதல்கள் இராது என்று தோன்றுகிறது.

இன்று அமெரிக்க உச்ச நீதி மன்றத்துக்கு ஒரு நீதிபதி நியமிக்கப்பட்டதன் குறுஞ் சரிதை, இந்த மாற்றம் நிகழப் போவதில்லை என்பதை சம்மட்டியடியாக நிறுவி இருப்பதாக அமெரிக்க இடது சாரிகள் கருதுகிறார்கள். வலது சாரியினர் தம் இரும்புப் பிடியில் சீரழிவெனும் துரு, பிடிக்கத் துவங்கி இருக்கிறது என்று அச்சத்தைத் தம் சார்பாளர் நடுவே பரப்பி வருகின்றனர். ஆக இரு தரப்புகளும் தம் பாரம்பரிய ஓலங்களையே மறுபடி ஒளி/ ஒலி பரப்பி அதில் தினவைத் தீர்த்துக் கொள்கிறதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.
இந்தியாவில் இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்று ஊகிக்க ஊடகங்களுள் இயக்கம் கொண்டவர்கள்தான் சொல்ல முடியும்.  பொதுவாகச் சொன்னால், நிறுவனங்களில், அமைப்புகளில் அதிகாரம் கொண்டவர்களின் அராஜகம் தொடரும், அழிக்கப்பட்டவர்களின் சீற்றம் ஓரளவுக்கு மேல் பொங்கி இவர்கள் நடுவே கொணரும் மாற்றங்கள் பழைய பேயைத் துரத்திய இடத்தில் புதுப்பேய் வந்து அமர்வதையே சாத்தியமாக்கும். உலகம் எப்போதும்போல எதையும் லட்சியம் செய்யாது, அதிகாரம், பொருளாதாரம், வாழ்நிலை எல்லாவற்றிலும் எப்போதும் போல மலைகளையும், மடுக்களையும் கொண்டு சுற்றி வரும்.
இவற்றை யோசிக்க உந்தியது ஒரு கட்டுரை. இதன் வடிவாளருக்கு புத்தியில் ஏதோ வண்டு குடைகிறது. அது எளியதொரு கேள்வி. கடந்த ஐம்பதாண்டுகளில் உலகெங்கும் பற்பல கலைத் திறனாளர்கள் படைக்கும் ‘அற்புதப் படைப்புகளை’ நாம் விதந்தோதிக் கொண்டிருந்தோம். சமீபத்தில் இந்த #மீ டூ இயக்கத்துப் பெண் போராட்டக்காரர்கள், இந்த கலைஞர்கள் உண்மையில் வேட்டைக்காரர்கள், பெண்களை வேட்டையாடி அழிப்பதில் மிக்க வன்முறையைக் கடைப்பிடித்த கொடூரர்கள், இவர்கள் ஹாலிவுடில் துவங்கி மேற்கின் பல ஊடகங்களில் ஆதிக்கத்தில் உள்ளார்கள், இன்றைய உலகில் இவர்களை இனியும் சமூகம் பொறுத்துக் கொண்டிருப்பது ஆபாசம் என்பதோடு, சமூகம் இவர்களுக்கு அதிகாரம், பெருவளம் தவிர பெருமை கொடுத்துப் பீடத்தில் வைத்திருப்பது பெரும் அநீதி என்று தம் தயக்கங்களை உடைத்துக் கொண்டு பொதுவில் வந்து  உரத்துக் குரல் கொடுக்கிறார்கள்.
அந்தக் குரல் இன்றுதான் கேட்கிறதா என்றால், வரலாற்றில் ஆங்காங்கே கேட்டிருக்கிறது, ஆனால் இன்று இக்குரல் ஒரு நாட்டில் ஒரு பகுதியில் மட்டும் கேட்காமல் உலகச் சமூக ஊடகங்கள் என்ற நின்று கொல்லும் நோய்வெளியால் உலகம் பூராவும் பரவி இருக்கிறது.
பொதுவாக இந்தியப் பொதுவெளி ஆண் வெளி. இதில் பெண்கள் ஏதோ பொறுத்துக் கொள்ளப்படுகிறார்களே தவிர சுதந்திர இயக்கம் கொண்டிருப்பதாக நினைத்தார்களானால் தவறு செய்தவர்கள் என்றும், இதற்கு அவர்களுக்கு அவர்கள் வாழ்வில் பல முறை நிரூபணங்கள் கொடுக்கப்பட்டு விடும் என்றும் வாதிட முடியும். இத்தகைய வாதங்கள் திரளில் உள்ள பாணியைப் பற்றியவை, தனி நபர்கள் தம் அனுபவத்தை மட்டும் வைத்துக் கொண்டு இவற்றை நிராகரிப்பது அவர்களுக்குச் சாத்தியமாக இருக்கலாம், ஆனால் அது பொது வெளியின் தன்மையை மாற்றி வேறு உண்மையை நிறுவியதாக இருக்காது.
இங்கு பேசப்பட்ட கட்டுரை பிரிட்டிஷ் பத்திரிகையான த கார்டியனில் வெளியானது, ரயன் கில்பே என்ற திரைப்பட விமர்சகரின் கட்டுரை இது. இவர் புரட்சி என்று வாயில் நுரை கக்க முழங்கும் ஆவேசக்காரர் அல்ல, நாயகர்கள்/ நாயகிகளின் படங்களுக்கு பாலபிஷேகம் செய்து மேள தாளத்தோடு தியேட்டர்களுக்கு முதல் நாள் போகும் வழக்கமும் இவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. [யார் கண்டது. முதல் நாள் திரைப்படக் காட்சியன்று இவர் தியேட்டரில் யார் கண்ணிலும் படாமல் வைன் திரவத்தைத் தரையில் தெளித்துக் கொண்டாடுவாரா என்று இவரை நேரில் சந்தித்துப் பேசிப் பழகியவர்களுக்கே தெரிய வாய்ப்பு உண்டு. நீங்கள் லண்டன் வாசியானால் இதைக் கண்டு பிடிக்க முயலலாம். நமக்குத் தெரிந்த வரையில் இவர் நகைச்சுவையுடன் எழுதக் கூடிய விமர்சகர், அதனால் ஏதும் கேலிக்கூத்தாக நடந்து கொள்ள இவரால் முடியும்.]
இவர் கட்டுரையில் சுட்டுவன நம் கவனத்தை ஈர்க்க வேண்டியவை. இந்தக் கருத்துகளின் சில வடிவுகள் தமிழ் இலக்கிய உலகில் பல பத்தாண்டுகள் முன்பே பேசப்பட்டிருக்கின்றன. அப்போதும் எந்த முடிவும் தெளிவாக இலக்கிய உலகில் நிலைப்பாகவில்லை. பொது சமூகத்தின் விருப்பு வெறுப்புகள்தான் தமிழ்/ இந்திய இலக்கிய உலகிலும் ஆட்சி செய்கின்றன. தமிழகத்தில் உலகெங்கும் தோற்றுப் போயிருக்கிற பழைய காடிப் புரட்சிக்கான முழக்கங்களும், இனவெறிப் ஃபாசிஸத்தில் வேரூன்றிய திராவிடிய அரசியல் கருத்துகளும் ஊடக வெளியை ஆக்கிரமிக்கிற போது தமிழ் இலக்கிய உலகில் சுய சிந்தனையோ, வளமான மாற்றுக் கருத்துகளோ உலவும் என்று நாம் எதிர்பார்ப்பது பிழையாகத்தான் இருக்கும்.
ரயன் கில்பே 60களில் துவங்கி, 2000க்கள் வரை மேலைத் திரைப்பட உலகில் பெரும் இயக்குநர்கள் அல்லது படைப்பாளிகள் என்று கருதப்பட்ட ரோமன் போலான்ஸ்கி, உடி ஆலன், மிச்செய்ல் ஹானெகெ, டெர்ரி கிலியம் போன்றாரின் சமீபத்துக் கருத்துகள் அவர்களின் மனோபாவங்களை நமக்குத் தெளிவாக்குவதாகவும், இவர்களுடைய படைப்புகளில் நமக்குக் கிட்டும் சமூகச் சித்திரங்களை இனி நாம் ஏற்க முடியாத நிலை வந்திருப்பதாகவும் சுட்டுகிறார்.
இதே பட்டியலில் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக், பெர்னார்டோ பெர்டோலுச்சி, க்வெண்டின் டாரெண்டினோ போன்றாரும் அடங்குவர். பெட்ரோ ஆல்மடோவர் எனும் ஸ்பானிய மொழிப் பட இயக்குநரின் ஒரு நிறுவனம், சமீபத்தில் பிரபலமான ஊழல் விவகாரத்தின் பட்டியலான பனமா பேப்பர்ஸ் என்ற விஸ்தாரமான பட்டியலில் இருக்கிறதாகவும் கில்பே தெரிவிக்கிறார். இந்தப் பட்டியல் வரி கொடுக்காமல் எத்துவதற்கு பனமா என்ற நாட்டில் தம் நிறுவனத்தை வைத்துக் கொண்டு தப்பிக்கும் உலகப் பெரும் பணக்காரர்களின் பட்டியல்.  தம் சமூகப் பொறுப்பின்மையை நடத்தை மூலமும், தேர்வுகள் மூலமும், தம் நசிவு நிறைந்த மதிப்பீடுகள் மூலமும் வெளிக்காட்டும் இத்தகையோர், தம் கலைப்படைப்புகள் மூலம் சித்திரிக்கும் சமூகமோ, அதில் வெளிப்படும் பண்பாட்டு விமர்சனங்களோ எந்த அளவுக்கு நாம் ஏற்கக் கூடியவை என்பது ரயன் கில்பேயின் கேள்வி.
கலைப் படைப்பும் படைப்பாளரும் வேறு வேறு என்பதை நாம் அறிவோம். படைத்ததை எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வது என்பது வாசகரின்/ பார்வையாளரின் உரிமை என்பதும் தெரிந்ததே. ஆனால் படைப்புகள் அனேகமாக எப்போதுமே அவற்றின் பின்புலச் சமூகத்தின் அமைப்பு நியதிகளுடன் தொடர்பு கொண்டவை. அதி புனைவுகளுமே கூட அனேகமாக அவை படைக்கப்பட்ட காலத்தின் வரலாற்றுச் சூழல்/ சமூக மதிப்பீடுகள் ஆகியவற்றின் எச்சங்களான சுத்திகளால் தட்டி நிமிர்த்தப்பட்டவையே. எனவே படைப்பாளர் படைப்பில் முற்றிலும் இல்லாமல் போய் விடுவதில்லை. அவரை விலக்க வேண்டும் என்று கருதுவது மிகச் சரியாக இருந்தாலும் சாத்தியமாக இராது. இதனால் படைப்பு குறைப்பட்டதாக ஆகும் என்ற வாதம் செல்லுபடியாகலாம்.
இவை எல்லாமே கேள்விக்குட்படுத்தப்படக் கூடிய கருத்துகள், வாதங்கள்.
ரயன் கில்பேயின் கேள்விக்கு உங்கள் பதில் என்ன? எழுதித் தெரிவியுங்களேன்.

https://www.theguardian.com/film/2018/mar/23/the-end-of-the-auteur


கருப்பின அமெரிக்கர்களின் படைப்புகளை எப்படி சீர் தூக்குவது?

ஆ, அடுத்தது, முந்தைய குறிப்போடு தொடர்பு கொண்ட இன்னொன்று. இது தற்செயல் நிகழ்வு என்று நம்ப முடியாவிட்டால் போங்கள். உலக ஊடகங்களிடையே ஏதோ விதங்களில் இப்படிக் கருத்து இணைவுகள் நிகழ்கின்றன. அவை பெரும்பாலும் ஒரே விதமான சமூக/ அரசியல் நிகழ்வுகளுக்கு மறுவினைகளாக இருப்பதால் அப்படி அமைகின்றனவா என்று கேட்டால் அதற்குப் பதில் எளிதில்லை. உலகில் பல நாடுகளில், மேற்கில் துவங்கப்பட்ட ஒரு #மீ டூ இயக்கத்தின் எதிரொலி கேட்கத் துவங்கக் காரணம் உலகளாவிய சில சமூக ஊடகங்கள் என்பது எதன் மூலம் இப்படி ஒரு கருத்தியல் பரவல் ஏற்பட்டது என்பதை விளக்கலாம். ஆனால் எதனால் நேற்று வரை பற்பல நாடுகளிலும் அதிகம் எதிர்ப்பில்லாது நிலவிய ஒரு சூழல் இன்று கேள்விக்குட்படுத்தப்படுகிறது என்று நாம் கேட்கலாம்தானே?

இந்தியாவில் கடந்த பத்தாண்டுகள் அல்லது அவற்றுக்கும் மேலாகவே சக்தி வாய்ந்த பிரமுகர்களுக்கெதிராகப் பெண்கள் குரலெழுப்பி அவர்களின் அக்கிரமச் செயல்களைப் பற்றிப் பேசி எதிர்ப்பு தெரிவிப்பது நடந்து வந்திருக்கிறது. ஆனால் அவை இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்து வருவதால் அவற்றுக்கு ஓர் ஒட்டு மொத்தத் தாக்கம் கிட்டியதில்லை. இன்று இந்த ஊடகங்களின் உபயத்தால் அப்படி ஒரு ஒட்டு மொத்தத் தாக்கம் கிட்டுகிறது என்று தோன்றுகிறது.
இந்தத் தாக்கத்தின் ஒரு அம்சத்தை ரயன் கில்பே என்பாரின் கட்டுரையில் முந்தைய பதிவில் பார்த்தோம். அது கலைப் படைப்புகளின் நம்பகத்தன்மையை படைப்பாளர்களின் மனோ நிலைகளில் உள்ள கோணல்கள் குறைக்கின்றனவா என்ற கேள்வியை எழுப்புகிறது. கில்பே அப்படித்தான் என்று நினைக்கிறார், ஆனால் தெளிவான முடிவைச் சொல்லவில்லை என்று தோன்றுகிறது. இதே போன்ற கேள்வியை தமிழில் சில விமர்சகர்கள் 60களில் துவங்கி, கடந்த பத்தாண்டுகள் வரையும் கூட வாதிட்டு வந்திருக்கின்றனர். அதைத் தவிர்க்க, தமிழகத்து ‘முற்போக்குகள்’, எதிர்ப்பு தெரிவிப்பவரை சாதித் துவேஷக்காரர் என்றோ, வலது சாரிக்காரர் என்றோ, அன்னிய ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி என்றோ பழி சாட்டிப் புறக்கணித்து வந்திருக்கின்றனர். அடுத்த சில பத்தாண்டுகளில் இந்தப் பழிகள் பெரிய பொய்கள் என்றும், பழி சாட்டியவர்களின் தரப்பு உலகெங்கும் கொடுமைகளைச் சுமத்திய ஒரு கருத்தியல் என்பதும் நிறுவப்பட்டு விட்டன. இன்று வேறு விதமான பழிகளை உற்பத்தி செய்து வருகிறார்கள்.
முதலில் சந்தேகத்தின் பேரில் கேள்வி எழுப்பியவர்கள், வழிமுறை நேர்மையில்லாதே முன்வைக்கப்படும் இலக்குடைய சாத்தியப்பாடு அழியும் என்றும், அப்படிப்பட்டஇலக்குகள் வெறுமே குறைப்பட்டவை மட்டுமல்ல, நம்பகத்தன்மையே அற்றவை என்றும் சொல்லிச் சென்றிருக்கின்றனர். இந்த முடிவு சரியா தவறா என்ற வாதம் முற்றுப் பெறவில்லை.
ஆனால் கேள்வி இன்னமும் நிற்கிறது. படைப்பாளியின் அற்பத்தனங்கள் படைப்பில் ஊடுருவாமல் இருக்குமா? ஊடுருவினாலும், ஆங்காங்கே படைப்பாளியின் திறமை உச்சத்தில் இருந்து வெளிப்பட்டால் படைப்பை மதிக்க அது போதுமா என்பன போன்ற கேள்விகள் உதிரியானவை என்பதாகத் தள்ளப்படுகின்றன. ஆனாலும், அவை தொலைந்து போவதில்லை. எதிரே நிற்கிறவரை நாம் அவற்றுக்கு ஒரு அல்லது சில தீர்வுகளாவது காண வேண்டி இருக்கும்.
கீழே உள்ள கட்டுரையின் ஆசிரியர் அப்படிச் சில கேள்விகளை அமெரிக்கப் பண்பாட்டுப் பின்னணியிலிருந்து எழுப்புகிறார். இது உலகளாவிய பிரச்சினை என்பதை இன்று உலகளாவிய ஊடகங்களின் வெளியில் உலவும் நாம் உடனே தெரிந்து கொள்கிறோம்.
இவர் ஒரு கருப்பின அமெரிக்கர். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் எழுத்தாளர்களில் ஒருவர். விமர்சகர், தனியாகவும் பாட்காஸ்ட் ஒன்றை நடத்துகிறார். இவர் இந்தக் கட்டுரையை எழுதக் காரணம் இதுதான்: எத்தனையோ நூற்றாண்டுகள் கழித்து இப்போதுதான் அமெரிக்க ஊடக வெளியில் கருப்பின மக்களின் படைப்புகளுக்கு ஓரளவு நிலையான, நம்பகமான திறப்புகள் தொடர்ந்து கிட்டுகின்றன. இவற்றை இத்தனை காலம் கோலோச்சிய பல விமர்சன மதிப்பீடுகளால் எடை போடுவது தகுமா? அல்லது கருப்பின மக்களின் வெளிப்பாடு முற்றிலும் வேறு வகையான மதிப்பீடுகளையே கோருகிறதா? இது, அனைத்து உலக மக்களும் ஒரு வகையான ஜீவராசிகளே, இவர்களிடையே உலகளாவிய ஒற்றுமை பண்பாடு, வாழ்நிலை, கருத்துகள் ஆகிய தளங்களில் எழுவதே மானுட விடுதலை என்ற மதியொளி காலத்து மதிப்பீடுகளை நிராகரிக்கவில்லையா? அப்படி என்றால் என்ன மதிப்பீடுகளை வைத்து கருப்பின மக்களுக்கு விடுதலை வேண்டும், சமநிலை வேண்டும் என்ற கோரிக்கைகளை மற்றவர்கள் ஏற்க வேண்டும்?
இப்படி ஒரு பாட்டம் கேள்விகள் இவருடைய கட்டுரையிலிருந்து கிளைக்கும்.
முன்பும் பல கருப்பினப் படைப்பாளிகளின் படைப்புகள் வெளியானதோடு வரவேற்பையும் பெற்றிருக்கின்றன. சிலருக்கு முக்கிய ஸ்தானமும் அமெரிக்க இலக்கியத்தில் கிட்டி இருக்கிறது. உதாரணமாக டோனி மாரிஸன், ரால்ஃப் எல்லிஸன், ஆலிஸ் வாக்கர், ஆக்டேவியா பட்லர் என்று பலரை நாம் சுட்ட முடியும்.
சமீபத்துப் பத்தாண்டுகளில் பிரபலமான எழுத்தாளர்களில் ஒருவரான பால் பெ(ய்)ட்டி (Paul Beatty- Novel: The Sellout) அமெரிக்கப் பொது ஒளிபரப்பு நிறுவனத்திற்குக் கொடுத்த பேட்டி ஒன்று இங்கே.

இவரே போல சமீபத்தில் பெயர் பெற்றவர்களாக  தேஜு கோல், டா நெஹிஸி கோட்ஸ் என்று துவங்கி சில பத்து கருப்பின எழுத்தாளர்களை நாம் சுட்ட முடியும். இதே போல பிரிட்டனில் ஜேடி ஸ்மித், மோனிகா அலி போன்றாரைத் தவிரப் பலர் ஓரளவு புகழும் அங்கீகாரமும் பெற்றவர்களாக இருக்கிறார்கள். (பார்க்க: https://writingtipsoasis.com/21-top-black-british-authors-you-should-read/ )  உலகெங்குமிருந்தே கருப்பின எழுத்தாளர்கள் இப்போது எழுச்சி பெற்று வருவதை இந்தக் கட்டுரை தெரிவிக்கிறது- பார்க்க: https://offtheshelf.com/2017/02/15-black-writers-we-should-all-be-reading-in-2017/

ஆனால் இன்றளவு எண்ணிக்கையிலும், பிராபல்யத்திலும், வாய்ப்புகளிலும் கருப்பின மக்களுக்கு இங்கிலிஷ் பேசும் உலகில் திறப்புகள் முன்னெப்போதும் கிட்டியதில்லை. இதுவுமே அவர்களின் எண்ணிக்கையோடோ, அல்லது அவர்களுக்கு இத்தனை காலம் மறுக்கப்பட்ட வாய்ப்புகளுக்கு ஈடாகும் வகையிலோ கிட்டுகின்றனவா என்றால் இல்லை. அதே நேரம் இன்று கிட்டி இருக்கிற திறப்பு மதிப்பில்லாததும் அல்ல. எனவே இவர்கள் தமக்குக் கிட்டிய வாய்ப்பை எப்படிப் பயன்படுத்தி மேன்மேலும் வளர்ச்சி அடையப் போகிறார்கள்? துவக்கத்திலிருந்தே விமர்சனங்களை ஏற்க மறுத்தாலோ, அல்லது தாம் தொடர்ந்து கேள்வியற்ற மரியாதையோடு மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்த்தாலோ தம் வளர்ச்சியை, மேம்படுதலை இவர்களே துவக்கத்திலேயே பொசுக்கி விடுவார்களா?  இவருடைய கேள்விகள் முக்கியமானவை, ஏனெனில் இவருமே கருப்பின எழுத்தாளர்தான், விமர்சகர்தான்.
எழுத்தை விட இதர கேளிக்கை ஊடகங்களில் கருப்பின கலைஞர்களின் தாக்கம் மிக்க வலுவானது. குறிப்பாக இசையில் இன்று அவர்களின் தாக்கம் மிக வலுவானது. சமீபத்தில்தான் திரைப்படங்களில் இயக்குநர்களாகவும், மையப் பாத்திரங்களில் நடிப்பவர்களாகவும் இருபால் ஆஃப்ரிக்க இனத்தவர்களும் பெருமை பெறத் துவங்கி இருக்கிறார்கள்.
மிகச் சமீபத்தில் சில திரைப்படங்கள், ஹாலிவுடின் பண எந்திரத்தின் பிடிக்கப்பால் துவங்கப்பட்டு, இயக்கி முடிக்கப்பட்ட பின்னர், அமைப்பு சாராத தனிப் படங்களாக பல வெளீயிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. [ ஸ்ட்ரெய்ட் அவுட்டா காம்ப்டன், கெட் அவுட், மூன் லைட், பீஸ்ட்ஸ் ஆஃப் த சதர்ன் விண்ட், ப்ளாக் க்ளான்ஸ்மான், ஸாரி டு பாதர் யு, ப்ளைண்ட் ஸ்பாட்டிங் போன்றன விமர்சகர்களிடமும் பாராட்டுப் பெற்று, வணிக வெற்றியும் ஓரளவு அடைந்திருக்கின்றன.]
சுருக்கமாகச் சொன்னால், இவற்றின் கலைத் தன்மையை சீர் தூக்கலாமா கூடாதா என்ற அளவுக்குக் கூட சர்ச்சைகள் எழுகின்றன என்பதுதான் இந்தக் கட்டுரையின் கருத்து. இப்போதுதான் வெளிப்பட்டு அங்கீகாரம் பெறத் துவங்கி இருக்கிறார்கள், இவர்களை பொது மதிப்பீடுகளைக் கொண்டு அளவிடுவது சரியில்லை என்பது ஒரு கட்சி. இன்னொரு கட்சி இவர்களை மதிப்பிடும் அளவுக்கு விவரம் தெரிந்த விமர்சகர்களே இல்லை என்பது. இந்த வகையில் பல கட்சிகளைக் கட்டும் நபர்களின் மனோநிலையையும், தன் போன்ற கருப்பின விமர்சகர்களுடைய நிலையையும் அலசும் கட்டுரை கீழே. இதில் உள்ள கருத்துகளைப் பற்றிய உங்கள் மறுவினை ஏதும் இருப்பின் எழுதித் தெரிவியுங்கள்.  இவை போன்ற நிலைகள் தமிழிலும் உள்ளதா என்றும் கருத்து தெரிவிக்கலாமே.

https://www.nytimes.com/interactive/2018/10/03/magazine/morality-social-justice-art-entertainment.html


ஹாலிவுடின் #மீ டூ இயக்கத்தின் குறைகள்- ரோஸ் மக்கோவனின் பொருமல்

மறுபடியும் #மீ டூ இயக்கம் பற்றி.  ஒரு விதத்தில் இது நிஜமாகவே புது யுகம்தான். இதற்கு முந்தைய பத்தாண்டுகள் முன்பு வரை கூட பெண்கள் தம் மீது வன்முறை செலுத்தப்பட்டது என்பதைச் சொல்வதற்குக் கூசி,  தாமே ஏதோ குறை செய்தது போல ஒதுங்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். இந்தப் பத்தாண்டுகளில்தான், தாம் அதில் பிழை செய்யவில்லை, பிழை செய்தவர்கள் உலகில் பகிரங்கமாகப் பொதுவெளியில் எந்தக் குற்ற உணர்வும் இல்லாது உலா வருகையில், அவமானப்படுத்தப்பட்ட தாம் குற்ற உணர்வோடு இருப்பது தகாது என்ற தர்க்க ரீதியான சரியான மனோபாவத்தைப் பெறுவதோடு, அதை ஒட்டி, குற்றவாளிகளே தண்டிக்கப்பட வேண்டும் என்று குரலெழுப்பவும் தைரியம் வேண்டும் என்ற தர்க்கத்தையும் உணர்வதோடு அதன் மீது செயல்படவும் முன் வருகிற பெண்கள் தெரிய வருகிறார்கள். முன்பு அங்கொன்றும் இங்கொன்றும் தீரர்களான பெண்கள் செய்ததை, இன்று பரவலாகப் பெண்கள் செய்ய முன்வருகிறார்கள்.

இந்த இயக்கம் அமெரிக்காவில் துவங்கியபோது அதில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் பலருண்டு என்றாலும் பொது ஜனங்களின் கவனத்தில் சட்டெனப் படுபவர்கள் ஊடகங்களில் ஏற்கனவே நன்கு தெரிய வந்தவர்கள்தான். அப்படித் தெரிய வந்தவர்களில் ரோஸ் மக்கோவன் என்ற நடிகர்  (சரி, நடிகை) முக்கியமானவர். ஹாலிவுடில் பல பத்தாண்டுகளாகக் கோலொச்சி வந்து, மிக வெற்றிகரமான தயாரிப்பாளர் என்று பெயர் எடுத்த ஹார்வி வைன்ஸ்டீன் பல நடிகைகளைப் பலாத்காரம் செய்திருக்கிறார் என்றும் தன்னை வன்புணர்வு செய்தார் என்றும் சில நடிகைகள் முன்வந்து அறிக்கை வெளியிட்டனர். அந்த எட்டு நடிகைகளில் ஒருவர் ரோஸ் மக்கோவன்.
வைன்ஸ்டீன் பணபலமும், ஊடக பலமும் ஹாலிவுடில் நிறைய செல்வாக்கும் உள்ளவர் என்பதால் அவர் மீது வைக்கப்பட்ட குற்றச் சாட்டு முறையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆயிற்று. இந்த எட்டு பேருக்குப் பிறகு பல நடிகைகள் முன் வந்து தாமும் இப்படி வன்புணர்வு அல்லது பலவந்த முயற்சிகளுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கத் துவங்கினர்.
இதற்குப் பிறகு இப்படி அறிக்கை விடுவோர் தம்மை #MeToo இயக்கம் என்று பெயர் வைத்துக் கொண்டு அதன் மூலம் சமூக ஊடகங்களில் வெளிவரத் துவங்கினர். இந்தக் கட்டத்தில் வெளிவருவோர் பல நிறுவனங்கள், பல அமைப்புகள், பல்கலைகள் என்று சமூகத்தின் பற்பல தளங்களிலிருந்தும் புறப்பட்டிருக்கின்றனர். இது ஓரளவு அமெரிக்காவிலும், இதர சில மேலை நாடுகளிலும் சமூகப் பண்பாட்டு அமைப்பை உலுக்கி இருக்கிறது.
துவக்கத்தில் இது எப்போதும்போல பரபரப்புக்கு அப்புறம் அடங்கும் என்று எல்லாரும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த முறை பல நிறுவனங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் எல்லாம் பெண்களின் கூக்குரலுக்குச் செவி மடுக்கத் துவங்கி இருக்கின்றன. இதன் விளைவாக இந்தக் குற்றச் சாட்டுகளால் பல பிரபலஸ்தர்கள் ஹாலிவுடில் தம் ஸ்தானத்தை இழக்கவும், ஒதுக்கப்படுதலைச் சந்திக்கவும் நேர்ந்திருக்கிறது. [ இங்கே ஒரு பட்டியல் கிட்டும்; https://www.vox.com/a/sexual-harassment-assault-allegations-list ] பலர் விசாரணைக்குப் பிறகு குற்றச்சாட்டு நிரூபணமாகவில்லை என்று நிரபராதியாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஜூனாட் டயஸ் என்ற எழுத்தாளர் ஒருவர் இப்படி விடுவிக்கப்பட்டார்.

https://www.nytimes.com/2018/06/19/books/junot-diaz-cleared-of-misconduct-by-mit.html

பில் காஸ்பி எனப்பட்ட ஒரு பிரபல நகைச்சுவை நடிகர்  ஒரு வருடத்துக்கும் மேற்பட்ட வழக்கு விசாரணைக்குப் பிறகு சிறைத் தண்டனை பெற்று சமீபத்தில் சிறைக்குச் சென்றிருக்கிறார்.

இந்தச் செய்தி ரோஸ் மக்கோவனின் பேட்டி ஒன்றைப் பற்றியது. நியுயார்க் டைம்ஸின் வாரச் சஞ்சிகை இவரது பேட்டி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. முழுதும் படித்தால் ரோஸ் எத்தனை வருடமாகத் தனக்கு நேர்ந்த இழிவால் பாதிக்கப்பட்டு இருந்தார், அதற்கு நியாயம் கிட்ட வேண்டுமென்று எத்தனை வருடமாகத் திட்டம் தீட்டி இறுதியில் அவருடைய முயற்சிக்குச் சிறிதாவது பலன் கிட்டி இருக்கிறது என்பது புரியும்.
பேட்டியின் சில முக்கியப் புள்ளிகள்:
ரோஸ் தன் பால்யப் பருவத்தில் பல தார மணங்களைப் பழகிய ஒரு தீவிர நம்பிக்கையாளர் குழுவில் பிறந்து வளர்ந்த பெண். பதின்ம வயதில் அவர் இந்தக் குழுவிலிருந்து தப்பித்து ஓடிப் போய் விடுகிறார். பதின்ம வயதில் போதை மருந்து அடிமைகளுடன் உலவியவரைப் பல ஆண் நண்பர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஹார்வி வைன்ஸ்டைனை  ஒரு திரைப்பட வாய்ப்பு கேட்கப் போன இடத்தில் இவரை வைன்ஸ்டைன் வன்புணர்வு செய்தார் என்பது ரோஸ் மக்கோவனின் தரப்பு.
வழக்கு தொடுக்கப்பட்ட பின் ரோஸ் மக்கோவன் ஒரு முறை போதை மருந்து வைத்திருந்தார் என்று கைது செய்யப்பட்டு வழக்கு நடக்கிறது. இது வைன்ஸ்டைனின் தூண்டுதலால் தன் மீது திணிக்கப்பட்ட சூழ்ச்சி வழக்கு என்பது ரோஸின் வாதம்.
இதனால் தனக்கு வந்திருக்க வேண்டிய பல திரைப்பட நடிப்பு வாய்ப்புகள் நழுவிப் போயின என்றும் தான் இப்போது தன் சேமிப்புப் பணத்தில் வாழ்வதாகவும், அதுவும் மேற்படி வழக்கின் செலவுக்குப் பெருமளவு கரைந்து விட்டது என்றும் சொல்கிறார். ஆனாலும் தன் பிடிவாதத்தையோ, பெண்களுக்கு நீதி கிட்ட வேண்டும், ஹாலிவுடின் ஆணாதிக்க, பெண் இழிவு நோக்க நடத்தை ஒழிக்கப்பட வேண்டும் என்பதும் இவரது கொள்கையாக இப்போது உள்ளன, இவற்றைத் தான் என்ன ஆனாலும் கைவிட முடியாது என்று பேட்டியில் தெரிவிக்கிறார்.
ஒரு முக்கியமான வாதம்:
ஹாலிவுடில் என்ன ஆனால் என்ன, என்னை அதெல்லாம் பாதிக்காது என்பது ஏராளமானவர்களின் அணுகலாக இருக்கும். அப்படிக் கருதினால் உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் எல்லாரும் எத்தனை பிழை செய்கிறீர்கள் என்று? உங்கள் வீடுகளுக்குள்ளும் ஊடகங்களிலும் வெளியாகி எங்கும் மக்களுக்கு ‘கேளிக்கை’யாகக் கிட்டுவன எல்லாம் இந்த ஹாலிவுடின் தயாரிப்புகள்தாம். அவை உங்கள் வாரிசுகளின் மனங்களை எல்லாம் வளைத்துத் தம் மதிப்பீடுகளை அவர்களிடம் பதிக்கின்றன.  உங்கள் பெண்களின் உடல் வடிவு, ஆண்களின் உடல் வடிவு ஆகியவை குறித்த பொது எதிர்பார்ப்புகள், சமூக உறவுகளில் நம் நடத்தைகள், எதிர்பார்ப்புகள், உறவுகளின் நியதிகள் என்று என்னென்னவோ ஹாலிவுட் படங்களால் மாற்றி அமைக்கப்படுகின்றன என்று தொடர்ந்து விளக்குகிறார்.  ஹாலிவுடின் தயாரிப்புகளைப் பார்க்க மறுக்கச் சொல்லி நம்மிடம் வாதிடுகிறார்.
இவற்றோடு #மீடூ இயக்கத்தில் உள்ள பல பெண்களையும் சாடுகிறார். அவர்கள் எல்லாம் தம் வாழ்வில் வசதிகளைப் பெற அதே ஹாலிவுட் உலகில் இயங்கிக் கொண்டு இப்போது தாம் பலியானதைப் பற்றிச் சொல்லி விளம்பரமும் தேடிக் கொள்கிறார்கள். தான் முதலில் வெளி வந்து குற்றச் சாட்டுகளைப் பொதுவில் வைத்த போது ஒரு பெண் அமைப்போ, பெண்களின் பத்திரிகைகளோ தனக்கு ஆதரவு தரவில்லை என்று பழி சொல்கிறார்.
இப்போது பல அமைப்புகளும் பிரபலஸ்தர்களும் பெண்கள் மேற்படி ஆண்களை மன்னித்து விட்டு வருங்காலத்தில் நல்ல நடத்தையை எல்லா நிறுவனங்களிடமும் கோரலாம் என்று சொல்லத் துவங்கியுள்ளனர். ரோஸ் இதைக் கேட்டு பொங்குகிறார். மன்னிப்பதா எதற்கு. அதே ஆண்கள் இன்னமும் அதே நடத்தையைத்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய தேவைகளை நான் நிறைவு செய்யத் தேவை இல்லை. இதன் மூலம் நீங்கள் என் போன்றவர்களின் வாயை அடைக்க முயல்கிறீர்கள் அவ்வளவுதான். பெண் என்றால் அடங்கி இருக்க வேண்டும், மரியாதையோடு பழக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறீர்கள். எனக்கு 80 வயதான பிறகு வேண்டுமானால் நான் மன்னிப்பேனோ என்னவோ, அதுவும் எனக்கு அப்போது அது சரி என்று தோன்றினால்தான். என்கிறார்.
கட்டுரை சாரமுள்ள கட்டுரை. படித்து விட்டு இந்தியாவில் இதே போன்ற என்னென்ன அநீதிகள் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கின்றன என்று கொஞ்ச நேரமாவது யோசித்தால் நம் சமூகங்கள் இன்னும் எத்தனை தூரம் போக வேண்டி இருக்கும் என்று நாம் புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கும். செய்வோமா என்பதுதான் கேள்வி. அதற்குள் இப்போது இருக்கும் அரசியல் அமைப்பு  அமைப்புக்குள் ஏற்கனவே இருக்கும் போர்களில் ஆயுதங்களாகப் பெண்களைp பயன்படுத்த முயன்றால், பெண்களின் உரிமைப் போராட்டங்கள் எப்படி எல்லாம் குறைப்பட்டுப் போகும் என்றும் நாம் யோசிக்க வேண்டி இருக்கும்.
[பின் குறிப்பு: இதை எழுதியபின்னர், இந்தியாவிலும், தமிழகத்திலும் நிறைய பெண்கள் முன்வந்து பல இயக்குநர்கள், நடிகர்கள் மேலும் இதர கலைஞர்கள் தம்மை இப்படித் துன்புறுத்தியதாக, வன்புணர்வு செய்ததாக அறிவித்திருக்கின்றனர். இந்த அறிவிப்புகளுக்கு ஏதும் பலன் இருக்கிறதா, இந்தியத் திரைப்பட உலகு சிறிதாவது கண்ணியமானதாக மாறுகிறதா என்று பார்ப்போம். ]

https://www.nytimes.com/1983/12/25/magazine/on-language-stine-or-steen.html

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.