யாதும் ஊரே – யாவரும் கேளிர் (குடிபுகல் – பாகம் 4)


அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என்று பல கண்டங்களுக்குள் புகுந்து ஆங்காங்கே நிலவும் சூழல்களை ஆய்ந்ததின் மூலம், எல்லைகள் இல்லாதபோதும்கூட குறிப்பிட்ட ஒரு பகுதியை வெற்றிடமாக்கி இன்னொரு பகுதியை மூச்சுத் திணறச் செய்யும் அளவு பெருந்திரள் குடியேற்றம் நிகழ்வதில்லை என்று முந்தைய பகுதிகளில் நிறுவி விட்டோம். ஆனால் அத்தனை நல்நோக்கங்கள் இருந்தாலும் மிக வேகமாக எல்லைகளைத் திறப்பது நிச்சயம் குடிமக்கள் நிம்மதியாக வாழத்தேவையான அமைப்புக்கள் பலவற்றை  திக்குமுக்காடச் செய்யும். அதிலும் குறிப்பாய், குடியேறுபவர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும் அளவு பெரிய பொருளாதார மற்றும் நிர்வாக கட்டமைப்பு இல்லாத ஒரு தேசம் தீடீரென்று தன் கதவுகளைத் முழுக்கத் திறப்பது புத்திசாலித்தனமல்ல. ஈக்வடார் தேசம் இதற்கு தக்க உதாரணம். விக்கிலீக்ஸ் புகழ் ஜூலியன் அஸான்ஜ் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் சிக்கிக் கொண்டிருப்பது பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். பல ஆண்டுகளுக்கு முன் அவர் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தபோது, மேற்கத்திய நாடுகளைச் சீண்டும் நோக்கத்தில்தான் ஈக்வடார் அவருக்கு உதவுகிறது என்று மேம்போக்காக நினைத்தேன். ஆனால் என் எண்ணம் மிகவும் தவறானது என்று பின்னால் புரியவந்தது. உலகின் மிகத் தாராளமான எல்லைக் கட்டுபாடு ஈக்வடாரில்தான் உள்ளது. அதன் அதிபர் ரஃபேல் கொர்ரியா (Rafael Correa) முன்னிறுத்தும் மனித சுதந்திரங்களை மிகவும் மதிக்கும் மென்மையான தேசம் என்ற ஆதரசத்தின் முக்கியமான கூறாக இதனை அந்த தேசம் கருதுகிறது.

ஈக்வடாரின் எல்லைக் கட்டுப்பாட்டு கொள்கை பற்றிய விரிவான கட்டுரை தி அட்லாண்டிக் பத்திரிகை  தளத்தில் உள்ளது – இந்தக் கட்டுரையில் அந்த கொள்கையின் எதிர்பாராத பின்விளைவுகளையும் விவாதிக்கிறார்கள் என்பதால் கட்டுரையைப் படித்தால் உங்களுக்கு இந்த விஷயம் குறித்த முழுமையான சித்திரம் கிடைக்கும். ஈக்வடார் பரிசோதனையிலிருந்து ஒரே ஒரு நாடு மட்டும் தன்னிச்சையாக தன் எல்லைகளைத் திறந்து விடுவது அறிவீனம் என்று நிச்சயம் தெரிகிறது. ஆனால் பிற தேசங்களுடன் இணைந்து மெல்ல மெல்ல இதைச் செய்வது நிச்சயம் சாத்தியம்தான். யூரோப்பியன் யூனியனில் உள்ளது போல் ஆப்பிரிக்க தேசங்களை மெல்ல மெல்ல ஒரு குடையின் கீழ் கொண்டு வர ஆப்பிரிக்க யூனியன் என்றும் ஒரு முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. அது எல்லைகளை அழிக்க விரும்புகிறது, தர்க்கத்துக்கு உட்பட்டு புரிந்து கொள்ளத்தக்க வகையில் ஒரு மிகப்பெரிய, ஒன்றுபட்ட பொருளாதாரத்தை உருவாக்க  நினைக்கிறது. இதில் வெற்றி கிட்டுமெனில், சமூக மாற்றங்கள் நிகழ்ந்து அதன் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். இதில் 55 தேசங்கள் தற்போது உறுப்பினர்களாய் உள்ளன. இவ்வாண்டின் துவக்கத்தில் விசா எதுவும் இல்லாமல் ஆப்பிரிக்க பிரதேசத்தில் உள்ள தேசங்களுக்கு பயணம் செய்யும் வகையில் விமானப் பயண ஒருங்கிணைப்பு துவங்கப் போகிறது. இன்றைய யூரோப்பியன் யூனியன் அளவு இது இன்னும் ஒருங்கிணைக்கப்படவில்லை எனினும் அத்தகைய நோக்கங்களுடன் மெல்ல முன்னேறிக் கொண்டிருக்கிறது.

எனவே இந்தப் பிரச்சினைகளை பெரிய அளவில் தீர்க்க தேசீய அமைப்புகளின் புதிய வடிவங்களை நாம் உருவாக்க முடியும்- இதன்படி, மக்கள் தாம் விரும்பும் இடத்தில் வசிக்கலாம், வேலை செய்யலாம்; அங்கு வாழ்பவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்களையும் சேவைகளையும் அளிக்கும் அமைப்புகளை பாதுகாக்கவும் இயலும். உலகில் உள்ளவர்கள் அனைவரும் ஏதோ ஒரு மூலைக்குச் சென்று வசிக்க விரும்புவார்கள் என்று நாம் பயப்படத் தேவையில்லை. இப்படி உலக அளவில் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க நமது சிந்தனையே தற்காலத்திய தளைகள் எதற்கும் கட்டுப்படாமல் முற்றிலும்  மாறுபட்ட வகையில் வளர வேண்டும். அதன் முதல் படியாக நாடு அல்லது தேசம் என்ற சொல்லையே தொலைத்துவிட்டு ஐக்கியம் (Union) என்று இந்த சுதந்திர, எல்லைகளற்ற பிரதேசங்களை அழைப்போம்.  அத்தகைய ஐக்கியங்கள் மூலம் 21ஆம் நூற்றாண்டு சமூகங்களுக்கு ஏற்ற புவியாதாரங்கள் அமைப்பை எப்படி உருவாகுவது என்று யோசிக்கலாம்.

– பூமியில் உள்ள இயற்கையான எல்லைகளுடன் ஒட்டி ஐக்கியங்களை அமைக்கலாம். அப்போது ஆஸ்திரேலியா ஒற்றை ஐக்கியமாக இருக்கும். வட அமெரிக்கா, தென் அமேரிக்கா, ஆப்பிரிக்கா பிற ஐக்கியங்களாக அமையும். இவை கண்டங்கள்தான் என்றாலும், ஐக்கியம் என்ற சொல்லை நான் பயன்படுத்தக் காரணம், இவற்றின் நிலப்பரப்பில் இன்றுள்ள தேசங்கள்  செயல்படுவது போல் கிட்டத்தட்ட ஒரே “நாடு” என்ற முறையில் இவை இயங்கும் என்பதை வலியுறுத்துவதுதான். இமயமலை போன்ற, யாரும் வாழ முடியாத இயற்கை எல்லைகளையோட்டி ஆசிய கண்டத்தில் உள்ள தேசங்களும் இரண்டு அல்லது மூன்று யூனியன்களாய் வரையறுக்கப் படலாம்.

– குடிமக்கள் எங்கு இருந்தாலும் அங்கு தேவைப்படும் பொருட்களையும் சேவைகளையும் வழங்கும் வகையிலும் யார் எங்கு இருக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கும் வகையிலும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தும் அமைப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இது ஒன்றும் அசாத்தியமான விஷயமல்ல. மாபெரும் மக்கள்தொகையினுள் தகுதியுள்ளவர்களை அடையாளம் கண்டு சேவையாற்ற பெரிய அளவில் செயல்படுத்தப்படக்கூடிய பணிக்கட்டமைப்புகள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று சான்று என்று பொருள்படும் ஆதார் அல்லது UIDAI (Unique Identification Authority of India) அமைப்பின் நடைமுறை. இணையத்தில் இந்த திட்டத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஏராளமான விவாதங்கள் காணப்படுகின்றன. விவாதங்கள் என்ன சொன்னாலும், 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், மிகக் குறைவான செலவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடையாள அட்டை வழங்கி அதைச் சரி பார்க்கும் தொழில்நுட்பம் என்ற வகையில் பத்தாண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட திட்டம் இது என்பதை நாம் மறக்க முடியாது. இடையில் ஆளும் கட்சிகளும் அரசுகளும் மாறியிருந்தும்கூட இந்தத் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. வங்கிகள் கிரெடிட் ஸ்கோர்கள் அளிப்பது போல், குடிமக்களின் நன்னடத்தையைப் பேண சீனா இன்னும் மகத்தான் சோஷல் ஸ்கோர்கள் (Social Score) அளிப்பது என்று இன்னும் பிரம்மாண்டமான திட்டம் ஒன்றைத் துவங்கியுள்ளது. தனி நபர் வாழ்வில் குறிக்கிடும் இத்தகைய திட்டங்கள் எவ்வளவு மோசமான உலகுக்கு இட்டுச் செல்லக்கூடும் என்பதை நீங்கள் இந்தக் கட்டுரையில் வாசிக்கலாம். ஆனால் ஒன்று, உலகின் மொத்த மக்கள் தொகையையும் கணக்கில் வைத்துக்கொண்டு சேவைகள் வழங்குவது நடைமுறையில் நிச்சயம் சாத்தியம். இன்று இது போல் அரசாங்கங்களால் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களாலும்  நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் (உ-ம்: Facebook) உலகிலுள்ள அனைவருக்கும் தேவைப்படும் சேவையை வழங்க உதவும் தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

– ஒவ்வொரு யூனியனிலும் வருமான ஏற்றத்தாழ்வுகள் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ள வரி மற்றும் செலவின அமைப்புகளை வடிவமைக்கலாம். இப்படிச் செய்யும்போது பொருளாதார காரணங்கள் யூனியன் நிர்வாகத்தின் எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியையும் (உ-ம்: வேலைவாய்ப்புகள், மருத்துவ உதவி) சிதைப்பதைத் தவிர்க்கும். காலப்போக்கில், இந்த யூனியன்கள் அனைத்தும் ஒன்றிணைந்து கோளலவு பரந்த மிகப் பெரும் ஒற்றை ஐக்கியம் ஒன்று உருவாகவும் உதவலாம்.

அத்தகைய ஐக்கியங்கள் சாத்தியம் என்றால், அவற்றால் உருவாகும் பிரச்சினைகள் என்னென்ன என்ற கேள்வி எழும். எனவே, முதல் பகுதியில் விவாதிக்கப்பட்ட கவலைகளைப் பற்றியும் இங்கு நாம் பேச வேண்டும். அப்போதுதான் திறந்த எல்லைகள் கொண்ட அமைப்புக்கு இந்த கவலைகள் ஏன் தடைகளாய்  அமைய வேண்டியதில்லை என்று புரியும். எனவே அந்தக் கவலைகளை ஒவ்வொன்றாக எடுத்து அலசுவோம்:

– மேற்கூறிய மாதிரி அமைப்புகளை சமூக அளவில் விவாதிப்பது முதல்கட்ட நடவடிக்கை. தொடர்ந்த விவாதங்கள் ஒரு புரிதலுக்கு கொண்டு செல்லும். திறந்த எல்லைகளுக்கு எதிரான சிந்தனையற்ற எதிர்ப்பு தணிக்கப்படும். புவியியல் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஐக்கியங்கள், முறையான வகையில் சிந்தித்து ஒருங்கிணைக்கப்படும்போது அவை வெற்றி பெறுகின்றன என்பதை பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் செவிவழிச் செய்திகள் வாயிலாய் இதற்கு எதிராய்ப் பேசப்படும் உதாரணங்கள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவை, உணர்வுபூர்வமாய் வசீகரிப்பவை. எண்கள், அட்டவணைகள் மற்றும் ருசியற்ற கொள்கை விவாதங்களுக்கு இந்த அளவு வசீகரம் இல்லை. உதாரணமாக, எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்று சொல்லும்போது குடிமக்களின் முதன்மையான கவலை பாதுகாப்புத்தான். இது நியாயமான, முக்கியமான கவலை. ஆனால் உலகெங்கும் உள்ள வலதுசாரி தலைவர்கள் சொல்வதற்கு மாறாய், அமெரிக்காவில் மட்டுமல்ல உலகெங்கும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை கடந்துபோகும் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் கணிசமாகக் குறைந்து வருகிறது.

– மேற்கூறிய பத்தியில் பட்டியலிடப்பட்ட பொதுமைப்படுத்தப்பட்ட எண்கள்/ வரைபடங்கள்/ நிரூபணங்கள் போன்றவற்றைச் சித்தரிக்கும் முழு அளவு விவாதங்கள் மட்டுமல்ல, பிரச்சினையின் தன்மையை மக்களும் கொள்கைத்திட்டம் தீட்டுவோரும் புரிந்து கொள்ள உதவும் வகையில் நுண்மையான தனி நபர் சார்ந்த சான்றுகளும் அளிக்கப்படுவது மிக முக்கியம். ஐநா சபையில் நூற்றுக்கணக்கான மணி நேரங்கள் நிகழ்த்தப்படக்கூடிய கொள்கை விவாதங்கள் சாதிக்க இயலாததை, ஆம்புலன்சில் உள்ள இந்த சிரிய சிறுவனின் புகழ்பெற்ற புகைப்படம் சாதித்தது – இதைக் கண்டவர்கள் பலர் மனமாற்றம் அடைந்தனர்.

– மாறாய், இதன் எதிர் முனையில், தனி நபர் கதையைப் பயன்படுத்தி அதிபர் ட்ரம்ப் குடியேறிகளுக்கு எதிரான பொதுக் கருத்தை உருவாக்குகிறார்- “அழகான கேட்” (Beautiful Kate)என்று அவர் அழைக்கும் இளம் அப்பாவி வெள்ளையினப் பெண் சட்டத்துக்குப் புறம்பாய் குடியேறிய அந்நியன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்ட கதையை திரும்பத்திரும்பச் சொல்கிறார் அவர். இது மிகவும் சக்தி வாய்ந்த கதை. அமெரிக்காவினுள் சட்டத்தை மீறி நுழையும் கருப்பு/பழுப்பு நிற குண்டர்கள் தம் இளம் பெண்களைத் தாக்குகிறார்கள் என்று வெள்ளை குடிமக்களை எளிதாய்க் கோபப்படுத்தக்கூடிய கதை இது. அந்தக் கதையில் உள்ள பல்வேறு பிறழ்வுகள் பற்றி புரிந்து கொள்ள இந்த ஸ்லேட் கட்டுரை உதவும். (உ-ம்: கேட் என்ற அந்த இளம்பெண்ணை நோக்கி யாரும் சுடவில்லை. மனநிலை சரியில்லாத ஒருவன் எங்கேயோ சுட்ட குண்டு, தரையில் பட்டு திசைமாறி தூரதிஷ்டவசமாக அவளைத் தாக்கி இருக்கிறது.) நேர்மறை விஷயங்களைவிட எதிர்மறை விஷயங்கள் வாசகர் கவனத்தை கவர்கின்றன என்பது தெளிவு. ஆக, நேர்மறை கதைகள் பெரிய அளவில் பகிரப்படுவதில்லை. ஆனால் உண்மையான வகையில் விவரிக்கப்படும்போது, குடியேற்றத் தடைகள் காரணமாய் ஏற்படும் அழிவு மக்களின் புரிதலை மாற்றலாம். இந்தச் சிரியா தேசத்துச் சிறுவனின் ஆம்புலன்ஸ் கதை அதைத்தான் செய்தது.

– அந்நியர்களை சுதந்திரமாக உள்ளே வர விடுவது தீவிரவாதிகளுக்கும் கற்பழிப்பாளர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் விடுக்கப்படும் அழைப்பாக போய்விடும் என்பதற்கு உண்மையான சான்று எதுவும் இல்லை. குடியேற்றம் பெற்றவர்கள் ஒரு நாட்டில் பிறந்து வளர்ந்த குடிமக்களைவிட சட்டத்தை அதிகம் மதிப்பவர்களாக இருக்கிறார்கள் என்றும் ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலேயே குற்றம் இழைக்கிறார்கள் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த வாதம் நிச்சயம் அமெரிக்காவுக்கு பொருந்தும். அமெரிக்காவில் 9/11 அல்லது இந்தியாவில் மும்பை நகரில் நவம்பர் 2008ல் நிகழ்ந்த  தாக்குதல்  முதலியவற்றை நிகழ்த்திய தீவிரவாதிகள் போன்றவர்கள் திறந்த அல்லது தளர்வான பாதுகாப்புள்ள எல்லைகளைக் கடந்து தங்கள் நாட்டுக்குள் நுழைந்து விடுவார்கள் என்ற பொதுமக்களின் அச்சம் புரிந்து கொள்ளத்தக்கதே. ஆனால் இன்னும் நெருங்கி கவனித்தால் அந்த தீவிரவாதிகள் அத்தனை சோதனைகளையும் கடந்து சட்டப்படி நுழைந்தார்கள் அல்லது  அத்தனை சோதனைகளையும் எளிதாய் தவிர்த்தார்கள் என்பது புலப்படுகிறது. எனவே, லட்சிய வெறி கொண்ட தீவிரவாதிகளை எல்லைப் பாதுகாப்பு தடுப்பதில்லை என்பதும் சாதாரண மக்களை எல்லைகளுக்கு அப்பால் நிறுத்துவதில்தான் அது வெற்றி பெறுகிறது என்பதும் தெளிவு.

– மாறாய், எண்ணிக்கை கணக்கு மட்டும் பார்த்தால், தம் தாயகத்தில் தீவிரவாதச் செயல்கள் மற்றும் வன்முறையில் ஈடுபடும் குடிமக்களின் எண்ணிக்கை வெளிநாட்டினரால் நிகழ்த்தப்படும் குற்றங்களை விட பன்மடங்கு அதிகம் என்பது தெரிகிறது. அமெரிக்காவில் குடிமக்களின் வன்முறை, தீவிரவாத தாக்குதல் (Terrorism) என்று சட்டப்படி அடையாளப்படுத்தப் படுவதில்லை. எனவே ஊடகங்களும் அவற்றை பொது வன்முறை (General Violence) அல்லது வெறுப்பினால் இழைக்கப்பட்ட குற்றம் (Hate Crime) என்றே விவரிக்கின்றன. எனவே தீவிரவாதம் என்றாலே வெளிநாட்டினர் நம்நாட்டில் நடத்துவது என்பது போன்ற ஒரு தவறான புரிதல் உலகெங்கும் நிலவி வருகிறது.

– டென்மார்க்கில் இளம் இஸ்லாமிய ஐஎஸ்ஐஎஸ் (ISIS) ஜிகாதிக்களை சிறையில் அடைத்து சாவியை தூக்கி எறிவதற்கு பதில், அவர்களின் மன எரிச்சல்களை குறைத்து நல்வாழ்வு அளிக்கும் சோதனை முயற்சி வெற்றி பெற்று வருவது தீவிரவாதத்துக்கான காரணங்கள் இல்லாத உலகை உருவாக்குவதே தொலைநோக்கு பார்வையில் வெற்றி பெறும் உத்தியாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது. மேலும், உறுதியான லட்சியம் கொண்ட தீவிரவாதிகளை வெற்றிகரமாக தடுத்து நிறுத்த முடியாத காவல் படைகளுக்கும் எல்லைகளுக்கும் வலுப்படுத்த செய்யப்படும் பலநூறு கோடி பணத்துடன் ஒப்பிட்டால் இந்த அணுகுமுறை இன்னும் செலவு குறைவானதாக இருக்கும் என்பதும் தெரிகிறது.

– அடுத்ததாக பொருளாதாரச் சீரழிவை எண்ணி பயப்படும் குடும்பங்களை  BIG (Basic Income Guarantee) போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்களைச் சிறந்த வகையில் நிர்வகிப்பதைக் கொண்டு கரையேற்றலாம். முன் சொன்னதுபோல் மேற்கு வர்ஜினியாவில் நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்யும் பணியாளர் ஒருவர் வேலை போனவுடன் கலிபோர்னியாவில் குடியேறி, நிரலி எழுதக் கற்றக் கொண்டு, கூகுள் நிறுவனத்தில் பணியாற்றுவது கடினம் என்பதில் சந்தேகமில்லை. எனவே முன்னர் விவரித்தது போல் பாதிக்கப்பட்ட அல்லது அச்சுறுத்தப்படும் மக்களுக்கு உதவுவதே எல்லைகள் இல்லா சுதந்திரத்தை உலகிற்கு கொண்டுவரும் திட்டங்களின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்.

– மற்றுமொரு பரவலான பெருங்கவலை, ஒரு தேசத்தினுள் உள்ள சிறுபான்மையினர் பெரும்பான்மையினருக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்பது. இந்த பூமியின் இரு புறங்களிலும் இந்த அச்சம் பெரும்பான்மையினர் மனதில் உள்ளது என்று எனக்கு வியப்பளிக்கிறது. முதல் பகுதியில் பார்த்தது போல், கிறித்தவராய் அல்லாதவர்கள் குறித்து அமெரிக்காவின் பெரும்பான்மையினரான கிறித்தவர்கள் (சுமார் எழுபது சதவீதத்திற்கு மேல்) அஞ்சுகிறார்கள். இந்தியாவில் உள்ள இந்துக்கள் அல்லாதவர்கள் எண்ணிக்கையைக் கண்டு பெரும்பான்மையினரான இந்துக்கள் (சுமார் எண்பது சதவீதம்) அஞ்சுகிறார்கள். ஆனால் இந்த இரு தேசங்களிலும் இரு சமயங்களும் தொய்ந்து அழிந்து கொண்டிருப்பதாய் தெரியவில்லை.  இது விஷயத்தில், பிற சமயங்களைச் சார்ந்தவர்களுடன் தனிப்பட்ட முறையில் நெருங்கிப் பழகுவதுதான் இந்த தேவையற்ற பயத்தைப் போக்கும் என்பது என் கருத்து. எனக்கு இந்த நபரை தனிப்பட்ட முறையில் நன்றாகத் தெரியும் என்று சொல்பவர்களில் வெகுச் சிலரே அந்த நபரின் கலாசாரம், தேசம் அல்லது மொழி மோசமானது, எனக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். மூடப்பட்ட  வீடுகளுக்குள்  நம்மவர்களோடு மட்டுமே நாம் பேசிக் கொண்டிருப்பதில் இருக்கும் வசதியும் பழகிப்போன சுகமும் நம்மைப் போன்றவர்கள் இல்லாத பிறரோடு நெருங்கிப் பழகுவதில் இருக்காது. ஆனால் இது போல் வெளியாரோடு பழகுவது மனமாற்றத்தை உருவாக்குவதில் வெற்றி பெறுவதால், இதை ஊக்குவிக்க வேண்டும்.

– திறந்த எல்லைகள் உலகெங்கும் பயணிக்கும் மக்கள் ஒருவரோடொருவர் பழகுவதை ஊக்குவிப்பதால் உலகின் பிற பகுதிகளில் உள்ளவர்களின் பழக்க வழக்கங்கள் குறித்த ஒரு புரிதலை அது உருவாகும். உலகின் பிற பகுதிகளில் இருந்து பலர் எங்கள் வீட்டிற்கு வந்து என்னுடன் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் எவராய் இருப்பினும் அமெரிக்காவை அதன் கட்டுப்பாட்டுக்கும், நேசமுள்ள மக்களுக்கும், சுத்தமான பொது வெளிகளுக்கும் பாராட்டவே செய்திருக்கிறார்கள். அதே போல், என் அமெரிக்க நண்பர்கள் வெளிநாட்டு பயணங்களுக்குப் பின் அங்கு அவர்கள் சந்தித்த மனிதர்களின் நேசவுணர்வு, சுவையான உணவு போன்ற பல நல் விஷயங்களுக்காக பாராட்டுகிறார்கள்.

– மக்களை ஈர்க்கும் உலகளாவிய தலைவர்கள் திறந்த எல்லைகளை ஆதரித்து விளக்கிப் பேசுவது மிகவும் உதவியாக இருக்கும். இயக்கங்கள் எப்படி உருவாகின்றன, அவை எப்படி தம் போக்கில் வளர்கின்றன, ‘எனக்கு ஒரு கனவு உண்டு,” (I have a Dream) என்று உரையாற்றிய மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்களிடம் இருந்த தொடர்பாடல் திறன்கள் என்ன, இவை மக்களை எவ்வகையில் செயலாற்றத் தூண்டின என்பதை அலசும் TED Radiohour பாட்காஸ்ட் இங்கு இருக்கிறது, கேட்டுப் பாருங்கள். 1960களின் அமெரிக்க சிவில் ரைட்ஸ் இயக்கம் குறித்து உங்களுக்கு தெரியாது என்றால் தயவு செய்து அது குறித்து அறிந்து கொள்ளுங்கள், அதிலும் குறிப்பாக, மார்ட்டின் லூதர் கிங்கின் உரைகளைக் கேளுங்கள், அவை இணையத்தில் இருக்கின்றன. அது ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவமாக இருக்கும். என்னைப் போன்ற கட்டுரையாளர்கள் வரிந்து வரிந்து எழுதுவதைவிட வசீகரம் மிகுந்த பிரபலங்கள் எல்லைகளில்லா உலகம் பற்றி எடுத்துரைப்பது லட்சக்கணக்கில் மனங்களை எளிதிலும் விரைவிலும் மாற்ற உதவும்.

– மீண்டும் பொருளாதார கவலைகளை அலசிப்பார்த்தால், அமெரிக்காவில் குடியேறுபவர்கள் அதிக அளவில் சொந்தத் தொழில் செய்கிறார்கள். தம் தேசத்தில் முடியாத வகையில் அவர்கள் அமெரிக்காவில் புதிய தொழில் துவங்கி அதற்கு சொந்தக்காரராக இருப்பது எளிதாய் இருக்கிறது என்பதைக் கண்டு கொள்கிறார்கள். புதிய தொழில் நிறுவனங்கள் அனைத்தும் ஒரு கூகுள் அல்லது இன்டெல் அளவு வளர முடியாது என்றாலும் (இந்த இரு நிறுவனங்களும் வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்களால் துவங்கப்பட்டவை), அவற்றில் ஆயிரக்கணக்கானவை வெற்றிகரமான சிறு தொழில் நிறுவனங்களாக வளர்ந்து உள்ளூரில் வேலை வாய்ப்பையும் வரி வருமானத்தையும் அளிக்கின்றன.

– மெய்நிகர் (Virtual) உலகில் வேகம் குறையாத தொழில்நுட்ப முன்னேற்றம் தேசிய எல்லைகளை அழித்து வருகிறது, பொருள் போக்குவரத்துச் செலவுகள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன. எனவே திறந்த எல்லைகளுக்கு மாற்று என்பது வெறும் மூடிய தேசிய எல்லைகள் இல்லை. உலகில் செலவு குறைவான இடங்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிப்பதும், அங்கே உருவான பொருட்கள் மற்றும் சேவைகளை தேவைப்பட்ட இடங்களுக்கு எடுத்துச் செல்வதுமாக அந்த மாற்று உலகம் இருக்கும். கடந்து சென்ற பொற்காலம் திரும்புவதற்கு மாறாய், மூடப்பட்ட சமூகங்கள் இதன் எதிரிடை விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

– நாம் முன்பு பார்த்ததுபோல் நார்வே, ஸ்வீடன், ஜப்பான் போன்ற தேசங்கள் நன்றாக இயங்குகின்றன என்பது உண்மைதான் என்றாலும், ஒத்த மக்கள் தொகை கொண்ட சின்னஞ்சிறு தேசங்களை உலகெங்கும் உருவாகுவது என்பது நீண்ட கால நோக்கில் நிலையான தீர்வாக இருக்காது. ஒத்த மக்களைக் கொண்ட சிறு தேசங்கள் பல பிரச்சினைகளைச் சந்திப்பதும் நாம் அடிக்கடி பார்ப்பதுதான். ஆப்பிரிக்காவில் உள்ள ருவாண்டாவை இதற்கு ஓர் எடுத்துக்காட்டாய்ச் சுட்டலாம், அதுவும் மிகச் சிறிய தேசம்தான். இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சொற்ப மக்கள்  தொகையாக 110 லட்சம் பேர்தான். பார்க்கப்போனால் சென்னை வாசிகளின் எண்ணிக்கையைவிட 10 லட்சமே அதிகம். ஆனாலும் அந்நாட்டு மக்கள்  ஹூட்டூ மற்றும் டூட்சி உபகுழுக்களாக தம்மைப் பிரித்துக் கொண்டு (இது பெல்ஜிய காலனிய காலகட்டத்தின் கொடையாக இருக்கலாம்) தொண்ணூறுகளின் இடைக்காலத்தில் மிகக் கொடூரமாக ஒருவரோடுவர் மோதி கொலை செய்து கொண்டனர். இப்போது இந்த வன்முறை குறைந்திருக்கிறது என்றாலும் உருப்படியான வளமான நாடுகளின் பட்டியலில் ருவாண்டா சேர இன்னும் பல்லாண்டுகள் ஆகும். எனவே சின்னச்சின்ன தேசங்களை உருவாக்கி ஒரே இன/மாதிரி மக்களை சேர்ந்து வாழ வைத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்தது என்று முடித்துவிட முடியாது.

– அதற்கு மாறாய், சிங்கப்பூர் ஒரு மிகச் சிறிய நகர-தேசம். சீனர்கள், மலாய்கள், இந்திய வம்சாவழியினர் பெரும் சதவிகிதத்தினராய் கலந்திருப்பினும் மிகவும் வளமாய் இருக்கிறது. சென்ற ஆண்டு ஒரு மாநாட்டில் கலந்துகொண்டு பேசுவதற்காக அங்கே ஒரு வாரம் போயிருந்தேன். உள்ளூர் மக்களிடம் நிறைய பேசினேன், அந்த ஊரைப் புரிந்து கொள்ள பல இடங்களுக்கும் சென்றேன். ஒரு குறையும் இல்லாத சொர்க்கம் என்றெல்லாம் சொல்ல முடியாது என்றாலும், அது நன்றாக நிர்வகிக்கப்படும் அமைப்பு, நல்ல வாழ்க்கைத் தரத்தைக் கொடுத்து மக்களை முடிந்த அளவு சந்தோஷமாகவே வைத்திருக்கிறது என்ற உணர்வையே அடைந்தேன்.

எனவே, ஒரு சிறிய தேசம் எவ்வளவு வளமாக இருக்கிறது என்பது அது சிறியதாக இருக்கிறதா, அதன் மக்கள் ஒத்த பிறப்பு கொண்டவர்களாய் இருக்கிறார்களா என்பதைக் கொண்டல்லாமல், அது எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது, அதில் உள்ளவர்கள் அதன் சமூகத்தின் உறுப்பினர்களாய் உணர்கிறார்களா என்பதையொட்டியே தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாகவே பெரிய அளவு, உயர்ந்த எண்ணிக்கை போன்றவை வலுவூட்டும் தன்மைகள். இதனால்தான் ஐரோப்பிய யூனியன் உருவாக்கப்பட்டது. அதன் நோக்கம் அமெரிக்கா அளவு பெரிய பிரதேசமாகவும் சக்தியும் கொண்ட ஒரே அமைப்பாய்ச் செயல்படுவதுதான். உலகில் உள்ள தேசங்கள் எல்லாமே மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட சிறிய தேசங்களானால், எந்த ஒரு தேவைக்கும் ஒரே தரம் (Common Standards) என்பதை உருவாக்குவது கடினம், மிகப்பெரிய செயல்திட்டங்கள் வடிவமைப்பதில் பிரச்சினைகள் எழும், இவற்றுக்கான அனைத்து செலவினங்களும் அதிகரிக்கும். அதையெல்லாம் மீறி ஏதாவது செய்ய முடிந்தாலும் நடைமுறை சிக்கல்கள் மிகவும் அதிகரிக்கும்.

குடியேறுபவர்கள், தாமிருக்கும் சமூகத்தில் தமக்கு இடமில்லை என்ற உணர்வுடன் தங்கியிருப்பதைக் காட்டிலும், அவர்களை தமக்கு விருப்பப்பட்ட இடத்தில் நிரந்தரமாக வசிக்க அனுமதிப்பது என்பது மிகவும் முக்கியம். உதாரணமாக, துபாய், சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகள் குடியேறிகள் தங்கியிருந்து வேலை செய்ய பெருந்திறள் எண்ணிகையில் அனுமதிக்கின்றன. ஆனால் அவர்களின் உழைக்கும் வயது கடந்ததும், தம் சொந்த தேசங்களுக்குச் செல்ல கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் படித்தவர்களாக இருந்தாலும் சரி, திறமையானவர்களாய் இருந்தாலும் சரி, கல்வி கற்காத தொழிலாளிகளாய் இருந்தாலும் சரி, அதே கதிதான்.  இதன் காரணமாய், அவர்கள் எத்தனை காலம் அங்கெல்லாம் தங்கியிருந்தாலும் அந்தச் சமூகத்தில் தமக்கு இடமில்லை என்ற உணர்வுடன்தான் வசிக்கின்றனர். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் சிலிகான் பள்ளத்தாக்குக்கு நிகரான ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்க ஜெர்மனி மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததற்கான காரணங்களில் இந்த அணுகுமுறையும் ஒன்று என்று சொல்லப்படுகிறது. உலகெங்கும் உள்ள ஐடி தொழிலாளர்களை, அதிலும் குறிப்பாய் இந்தியாவிலிருந்து அவர்கள் தீவிரமாக பணியில் அமர்த்தினாலும்கூட, ஆறு ஆண்டுகளுக்குப்பின் அவர்கள் ஜெர்மனியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. எனவே தற்காலிகமாய் தங்கியிருந்த குடியேறிகள், தாம் தங்கியிருந்த காலத்தில் சந்தோஷமாக இருந்தாலும், நிறையை பணம் சம்பாதித்தாலும், ஆறு ஆண்டுகள் ஆனதும் ஊர் திரும்பினர். ஜெர்மனியில் வீடு இடம் என்று எதுவும் வாங்கவில்லை, அதன் குடிமை அமைப்புகளில் பங்கேற்கவில்லை, ஜெர்மன் மொழியைக்கூட முழுமையாய் கற்றுக் கொள்ளவில்லை.

ஒப்பீட்டளவில், வழமையாகவே அமெரிக்கா தன்னிடம் வருபவர்களை குடியுரிமை பெற்று அதன் சமூக அமைப்பில் உறுப்பினராக ஊக்குவிப்பதால், குடியேறிகள் தாம் அமெரிக்கர்கள் என்ற உணர்வுடன் இருக்கின்றனர். அதன் உள்ளூர் சமூக அமைப்பின் செயல்பாடுகளிலும் நிறைய பங்கேற்கின்றனர்.

மேற்கூறிய முன்னெடுப்புகள் பல வாசகர்களுக்கு ஏற்றுக் கொள்ளக் கடினமாக இருக்கலாம், இவை உடோபிய கனவு (Utopian Dream) போல் தெரியலாம். ஆனால் அந்த எண்ணத்தை என்னால் பல கோணங்களில் இருந்து எதிர்கொள்ள முடியும். நான் சொல்லும் தீர்வுகள் வெற்றிகரமாக நடைமுறையில் செயல் படுத்தப்பட்டிருக்கும் பல உதாரணங்களை அளித்திருக்கிறேன். இப்போது இந்த உதாரணங்களுக்கு அப்பால், நம் புரிதலுக்கு வலு சேர்க்கக்கூடிய சில விஷயங்களைப் பார்க்கலாம்.

நான் பணிபுரியும் நிறுவனமான இன்டெல் கார்ப்பரேஷன் நிறுவனர்/CEO ஆண்டி க்ரோவ் எண்பதுகளின் துவக்கத்தில் நிறுவனத்தின் இருப்புக்கே ஏற்பட்ட ஒரு சவாலை (Existential Threat) எதிர்கொள்ள வேண்டியிருந்தது. துவக்கப்பட்ட காலம் முதல் இன்டெல் நிறுவனம் தான் வடிவமைத்த மெமரி சிப்புக்களை விற்பனை செய்வதன் மூலமே லாபம் ஈட்டியது. ஆனால் எண்பதுகளில் அது ஜப்பானிய போட்டியாளர்களின் மலிவு விலை சிப்புகளிடம் விலையில் போட்டிபோட முடியாமல் தோற்கத் துவங்கியது. இன்டெல் கண்டுபிடித்த தொழில்நுட்பம் மற்றும் வணிகத்தைக் கைவிடுவது என்பது நிறுவனத்தின் சுய கௌரவத்தை  நிலைகுலையச் செய்யும் முடிவு. ஆனால் க்ரோவ் தன் சகாக்களிடம், புதிய CEO ஒருவர் வந்தால், இன்டெல் நிறுவனத்தைக் காப்பாற்ற என்ன செய்வார் என்று கேட்ட கேள்வி பிரசித்தம். மெமரி வர்த்தகத்தைக் கைவிட்டு வேறொரு துறையில் இயங்குவதே வளர்ச்சிக்கு உதவும் என்ற விடை சரியான தர்க்க விவாதங்களின் வழியே அடையப்பட்டது. அந்த முடிவு சரியாகப்பட்டவுடன், “சரி, நான் இந்த அறையிலிருந்து இப்போது வெளியே போய் விட்டு, புதிய CEOவாக திரும்ப உள்ளே  வந்து அந்த மாற்றத்தைச் செயல்படுத்துகிறேன்”, என்று அவர் கூறியதாய்ச் சொல்லப்படுகிறது. க்ரோவ் சொன்னது போல் செய்தார். நிறுவனம் பிழைத்துக் கொண்டது. இந்தக் கதையின் மையம் என்னவென்றால், சில சமயம் நம் முடிவுகளையும் அச்சங்களையும் கைவிடுவதும், புதிய மாறுதல்களை ஏற்றுக்கொள்வதும் நம்மை மிகவும் உணர்வுபூர்வமாக சங்கடப்படுத்தும் விஷயமாகவே இருக்கும். ஆனால் இன்றுள்ள நிலவரம் நமக்கு சாதகமாக இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ளும்போது, அதைச் சரி செய்யத் தேவையான துணிகர முடிவுகளை எடுக்கத்தான் வேண்டும்.

புத்தம் புதிய பூமி ஒன்றை வடிவமைக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். நாம் இப்போது தவித்து சகித்துக் கொண்டிருப்பது போன்ற கோளைக் குறுக்கும் எல்லைகள் மற்றும் மக்களின் போக்குவரத்து தடைகள் மிகுந்த ஒரு குழப்பமான அமைப்பை வடிவமைப்போமா? அல்லவெனில், செயல் விரயமான பழைய முறைமைகளைக் கைவிட்டு, செயல்படக்கூடிய புதிய முறைமைகளைக் கைகொள்ளக்கூடிய துணிச்சல் வேண்டும். இதற்கான உத்வேகம் அடைய, மகாத்மா காந்தியின் அகிம்சை வழி சுதந்திரப் போராட்டத்தைச் சான்று கொள்கிறேன். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்க்க அவர் ஆயுதம் ஏந்தி போராடியிருந்தால் அவர் போராட்டத்தில் வெற்றி பெற்றிருப்பாரா, இந்தியாவுக்கு உலகின் நன்மதிப்பைப் பெற்றுத் தந்திருப்பாரா என்பதெல்லாம் எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது. துவக்க நிலையில், பிரிட்டிஷ் பேரரசின் மாபெரும் இயந்திரத்தின் முன் அவரது அகிம்சை முறைமை முட்டாள்தனமாகவே தோன்றியது. ஆனால் அவர் எவ்வளவு சிறப்பாக வெற்றி பெற்றார் என்பது நமக்கு தெரியும், இன்றுவரை அந்த போராட்டம் அவருக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்ப்பதாகவே இருக்கிறது.

தற்போதைய சூழலில் உலகின் எல்லைக் கோடுகள் இறுக்கமான வேலிகளாக மாறி வருகின்றன, மானுட இடப்பெயர்வை கட்டுப்படுத்துகின்றன என்றாலும், விலகி நின்று பல பத்தாண்டுகள் அல்லது ஓரிரு நூற்றாண்டுகளின் மாற்றத்தைக் காணும்போது இது ஒரு தற்காலிக போக்கு என்றுதான் நான் எண்ண விரும்புகிறேன். ‘Clash of Civilization’, ‘In Defense of Globalization’, ‘The Rational Optimist’, முதலான புத்தகங்கள் இங்கு விவாதிக்கப்படும் விஷயங்களைத் தொடும் சுவையான புத்தகங்கள். தொழில்நுட்ப வளர்ச்சி, மக்கள்தொகை மாற்றம் போன்ற கூறுகள் பொருள் மற்றும் சேவையின் உற்பத்தி, நுகர்வு ஆகியவற்றில் ஆழமான தாக்கம் செலுத்தும் தன்மை கொண்டவை. புவியெங்கும் மானுட இடப்பெயர்வை தடையின்றி அனுமதிப்பது என்பது இத்தகைய மாற்றங்கள் நிகழும் சூழலை எதிர்கொள்ள எந்த வகையில் உதவும், உலகில் உள்ள அனைவர் வாழ்விலும் வளம் சேர்க்கும் என்பதை திட்டம் வரைபவர்கள் சிந்திக்க வேண்டும். இதன் நன்மைகளை அவர்கள் உணர்ந்தால் மட்டும் போதாது, உலகளாவிய மக்களிடம் இதன் விளைவாய் எழக்கூடிய நன்மை குறித்து தகவல்கள் பகிர்ந்து, மாற்றங்களை ஆவனப்படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும். இந்த மாற்றங்களின் உடனடி எதிர்மறை விளைவுகளைச் சந்திப்பவர்களுக்குத் தேவையான உதவிச் சேவைகளை அளிக்கும்போது, அது தேவைப்படும் அடிமட்ட மக்களின் ஆதரவு பெற உதவும். சொல்வது எளிது, செய்வது கடினம் என்பது உண்மைதான். ஆனால் துவக்கம் என்று ஒன்று இருக்கவேண்டும். உலகின் மரிசெலாக்களும் கைரோ ஹாஸன்களும் இன்னும் ஒரு நாள்கூட காத்திருக்க கட்டாயப்படுத்தப்படக் கூடாது. ஒருவனுக்கு உண்ண உணவில்லாதபோது, பாரதியார் சொன்னது போல், அவனுக்கு உணவளிக்கத் தவறிய உலகு வாழத்தக்கதல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இன்னுமொரு தமிழ் கவிஞரான கணியன் பூங்குன்றனார் பாடினார்:

யாரும் ஊரே, யாவரும் கேளிர்.

ஆம், ஒவ்வொரு ஊரும் நம்மூர், எல்லா மக்களும் நம் மக்கள். இந்த உண்மை நாம் வாழும் காலத்திலேயே மெய்ப்பட வேண்டும், அன்றாட நடப்பாக வேண்டும் என்று நம்புவோம்/வேண்டுவோம்.
(முற்றும்)
சான்றாதாரங்கள்:

  1. Ecuador: https://www.theatlantic.com/international/archive/2014/07/how-not-to-design-a-world-without-borders/374563/
  2. African Union: https://au.int/en/au-nutshell
  3. https://uidai.gov.in/your-aadhaar/about-aadhaar.html
  4. https://www.theatlantic.com/technology/archive/2018/02/chinas-dangerous-dream-of-urban-control/553097/
  5. http://www.pewresearch.org/fact-tank/2018/01/30/5-facts-about-crime-in-the-u-s/
  6. Basic Income Guarantee (BIG): http://www.usbig.net/whatisbig.php
  7. https://player.fm/series/ted-radio-hour-1324381/inspire-to-action
  8. https://www.npr.org/templates/transcript/transcript.php?storyId=612154435
  9. http://www.nber.org/papers/w13229.pdf
  10. https://www.theguardian.com/world/2014/nov/12/deradicalise-isis-fighters-jihadists-denmark-syria
  11. Samuel P. Huntington, Clash of Civilization and the Remaking of World Order
  12. Jagdish Bhagwati, In Defense of Globalization
  13. EconTalk Podcast: The Rational Optimist

7 Replies to “யாதும் ஊரே – யாவரும் கேளிர் (குடிபுகல் – பாகம் 4)”

  1. இத்தொடரில் நாம் பார்த்த பல விஷயங்கள் நிறைய விவாதங்களைத் தூண்டக்கூடியவை என்பதால், சொல்வனம் வாசகர்கள் இந்த தொடர் குறித்த பல கருத்துக்களை கீழே பதிவிடுவார்கள் என்று நம்புகிறேன். குறிப்பாக, சான்றாதாரங்களில் சுட்டிக்காட்டப்பட்ட ஆவணப்படங்கள், கட்டுரைகள், ஒலிச்சித்திரங்கள் (Podcasts), புத்தகங்கள் முதலியவற்றில் எதையெல்லாம் சுவைத்தீர்கள், நான் தர முயன்றிருக்கும் தீர்வுகளில் உங்களுக்கு உடன்பாடில்லையெனில், இந்தப் பிரச்சினைக்கான உங்கள் தீர்வுகள் என்னென்ன என்பதை அறிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.
    இந்தக் கட்டுரைத் தொடரை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துதவிய அன்பர் சதானந்தனுக்கு எனது நன்றிகள் பல.
    -சுந்தர்.

  2. வேறுநாட்டிற்கு வந்து குடி புகுபவர்கள் சில குறிப்பிட்ட தொழிலையே செய்பவர்களாக இருப்பது நல்ல விளைவுகளை ஏற்படுத்துமா? இதைப் பற்றி ஏதேனும் ஆய்வு விவரங்கள் (அதாவது அதன் விளைவுகள்) இருக்கின்றனவா? உதாரணமாக, மோட்டல் நடத்தும் தொழில், கணினித் துறை, ஆசிரியத் தொழில் இதுபோன்று ஏதேனும் ஒன்றில் ஒரு குறிப்பிட்ட “இனத்தவரே/தேசத்தினரோ” இருப்பது உள்ளூர் வாசிகளின் அதிருப்தியை சம்பாதிக்குமா?

  3. பொதுவாக கடன் கொடுக்கும் தொழிலில் இருப்பவர்களுக்கு எப்போதும் கெட்ட பெயர்தான். யூதர்கள், மார்வாடிகள், அடகு கடை நடத்தும் செட்டியார்கள், …மற்ற தொழில்களில் அதிக கோபம் கிடையாது.
    மிகவும் கடின உடல் உழைப்பு அல்லது அதிக பட்ட படிப்பு உள்ள துறைகளுக்கும் பொறாமை கிடையாது. மெக்சிகோ மக்கள் அமெரிக்காவில் செய்யும் அறுவடை வேலை வேறு யாராலும் அந்த குறைவான கூலிக்கு செய்ய முடியாது. மூளை அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மீதும் பொறாமை வராது.
    பொதுவாக அமெரிக்காவில் இந்நாள் வரை சட்டம் போலீஸ் காவல் நீதி துறை மீது நம்பிக்கை உள்ளது. தவறாக சொத்து சேர்த்தால் ஜெயிலுக்கு போயிருப்பான், எனவே பணம் படைத்தவன் அநேகமாக நியாயமாகத்தான் சம்பாதித்திருப்பான் என்று பரவலாக நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை குறைய தொடங்கி இருக்கிறது, 2008 க்கு அப்புறம்.

  4. நடிகர்களின் குழந்தைகள் நடிகர்கள் ஆவதும், மருத்துவர்களின் குழந்தைகள் மருத்துவர்கள் ஆவதும்போல் ஒரு குடும்பம் அல்லது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு துறையில் நிறைய ஆதிக்கம் செலுத்துவது உலகெங்கிலும் வழக்கமாக இருக்கிறது. அமெரிக்காவில் சில வடகிழக்கு மாகாணங்களில் ஐரிஷ் வம்சாவளியினர் போலீஸ்காரர்களாக இருப்பது, பல மாநிலங்களில் குஜராத்தி குடும்பங்கள் மோட்டல்கள், காப்பி கடைகள் (Dunkin Donuts போன்றவை) நடுத்துவது, யூத குடும்பங்கள் வங்கிகள், பங்குசந்தை, பொழுதுபோக்கு துறைகளில் நிறைய காணப்படுவது, கறுப்பின மக்கள் விளையாட்டு வீரர்களாய் பரிமளிப்பது எல்லாம் ரொம்ப சகஜம். மெக்ஸிகோ – அமெரிக்கா போலில்லாமல், இந்தியா – அமெரிக்காவுக்கு இடையே இருக்கும் தூரம் நிறைய என்பதால், அமெரிக்காவில் குடிபுகும் இந்தியர்கள் பெரும்பாலும் வாழ்வில் கஷ்டப்பட்டு உயிர்பிழைக்க தப்பிவந்து சேரும் அகதிகளாக இல்லாமல், தாங்களாகவே விரும்பி வரும் (Self-selected) படித்த, நல்ல வேளைகளில் பணி புரிந்து நிறைய சம்பாதிக்கும் (மருத்துவர்கள், கணினித்துறைகளில் பணி புரிபவர்கள் போன்றவர்கள்), பொதுவாக சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.
    ரவி சுந்தரம் சொல்வது போல், ஐரிஷ் வம்சாவளியினரோ, இந்தியர்களோ, ஆப்ரிக்காவில் இருந்து வந்தவர்களோ, அவர்கள் வழங்கும் சேவைகளை நுகர்வோர், சேவையின் தரம்/விலை எல்லாம் சரியாக இருக்கிறது அத்துடன் சேவைகளை வழங்குவோர் நல்லவர்கள்/அன்பானவர்கள் என்று நம்பும் வரை பிரச்சினைகள் ஏதும் வருவதில்லை. இந்த மதிப்பீடுகளில் எது ஒன்று குறைந்தாலும் (அது தவறான மதிப்பீடாக இருந்தாலும்), அந்த சமூகத்தினர் எல்லோரையும் சேர்த்துப் பழிக்கும் நிலை உருவாகி விடுகிறது. 9/11 தாக்குதல்களுக்கு அப்புறம், நல்லவர்களான முஸ்லீம்கள் பலர் அமெரிக்காவில் தாக்கப்பட்டதுடன், சீக்கியர்கள் பலரை முஸ்லீம்கள் என்று தவறாகப் புரிந்துகொண்டு அவர்களையும் பலர் தாக்கியதைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
    இன்னொரு நுட்பமான வித்தியாசம் ஒரு சமூகத்தினர் அவர்களாக புதிய தொழில்கள் தொடங்கி ஒரு துறையில் ஆதிக்கம் செலுத்துகிறார்களா அல்லது முன்பே இயங்கிவரும் நிறுவனங்களில் சேர்ந்து சம்பளம் பெற்று பணி புரிகிறார்களா என்பதாகும். புதிதாக தொடங்கப்படும் தொழில்களும் நிறுவனங்களும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்பதால், அவற்றை யாரும் குறை சொல்வதில்லை. புதிதாக தொடங்கப்பட்ட தொழில் நஷ்டமடைந்து மூடப்பட்டாலும் நஷ்டம் தொழில் தொடங்கியவருக்குத்தான் என்றால் யாரும் அவற்றை வெறுப்பதில்லை. மனமுவந்து வரவேற்கிறார்கள். குஜராத்தி குடும்பங்கள் நடத்தும் மோட்டல்கள், சீனக்குடும்பங்கள் நடத்தும் உணவு விடுதிகள் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். ஆனால் முன்பே இயங்கி வரும் நிறுவங்களில் இருக்கும் நல்ல வேலைகளை ஒரு சமூகத்தினர் நிறைய எடுத்துக்கொண்டு dominate செய்வதாகத் தெரிந்தால் வெறுப்பு வந்து சேருகிறது. இதெல்லாம் அமெரிக்காவுக்கு மட்டும்தான் என்றில்லை. உலகெங்கிலும் இதே கதைதான் என்பதுதான் எனது எண்ணம்.
    -சுந்தர்.

  5. மானுடரின் மகத்தான கனவு.எல்லைகளற்ற புதியதோர் உலகம், ஐக்கிய புவி அமைப்பு. பொருளாதார ஏற்ற இறக்கங்களை கட்டுக்குள் வைப்பதால் சாத்தியப்படலாம். தொழில் நுட்பங்கள் அதற்கு உதவலாம்.
    கட்டுரை தேசீயவாதத்தையும், ஒருமைப் போக்கினையும் அவற்றின் பண்புகள், இயல்புகள் அவற்றின் பலங்கள், பலவீனங்கள் பற்றி தரவுகளுடன் ஆராய்ந்து பேசுகிறது. செறிவு என்ற மன நிலைக்கு மனிதர்களைச் செலுத்தச் சொல்கிறது.
    மதம், மொழி, இனம், பழக்கம்,வாழ்வியல் முறைகளை இவ்விதம் செம்மைப்படுத்தமுடியுமா? எடுத்துக்காட்டாக மதமற்ற மனித இனத்தை அல்லது தன் மதமே உயர்ந்தது என்ற எண்ணம் அற்ற மனிதன் வருவானா? மதம், மொழி, பழக்கம், இனம் இத்தனை சிடுக்குகளில் மனிதன் மாட்டியுள்ளான். என் மதம் பெரிது என்று அந்த மதத்தைப் பற்றி அறியாத மனிதர்களும், அரசுகளும் ஆணவத்தால் அழிவைக் கொண்டுவருகின்றன.
    மொழி சார்ந்தே பங்களாதேசத்தின் பிரிவினை நிகழ்ந்ததே! கடலில் எல்லையைக் காட்டி, எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக உயிர்க் கொலைகள் இன்றும் நடக்கின்றவே. அரசுகள் இவற்றை உணர்ந்தாலன்றி மாற்றம் சாத்தியமில்லை. ஆனால், அரசுகளுக்குப் புரிய வைப்பது எளிதா?
    எல்லைப் பாதுகாப்பு சாதாரண மக்களை சந்தேகிக்கிறது. அஸ்ஸாமின் NCR பற்றி அறிந்திருப்பீர்கள். Micro levelலில் இப் பிரச்னையை கோடிட்ட ‘தனித்தலைந்தது நிலவு'(சொல்வனம்-02-07-18 இதழ்) முடிந்தால் பாருங்கள்.
    ஒரே தேசத்தில் ஒரு மானிலத்தில் ஒரே மாவட்டத்தில் புலம் பெயர மீனவர்கள் படும் துன்பத்தைப் பற்றிய கதை அது.
    பி பி சி ஆவணங்களும், பாட்காஸ்டுக்களும், மற்றக் குறிப்புகளும் மிகவும் அருமை. உங்கள் அணுகுமுறை நிறைவாக இருக்கிறது. இந்தக் கட்டுரையை,உங்களுக்கு விருப்பமானால், ஐ நாவிற்கு அனுப்பிப்பாருங்களேன்.உங்கள் சிந்தனையும், உழைப்பும் அபாரம்.கனவு மெய்ப்படவேண்டும்.

  6. வந்தே மாதரம். அருமை. ஆனால் பல நாடுகளே பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் வளர்க்கும் வேலைகளை ஒழிக்க வேண்டும். முடிந்தால் உலகம் முழுவதிலும் ஆதார் கொண்டுவந்தால் பணப்பரிமாற்றம் என்பது முழுக்க இணையவழித் தொடர்பால் மட்டுமே என்று கொண்டுவந்தால் நாடுகள் தனிமனிதர்கள் கணக்கில் காமிக்காமல் பணம் வைத்துக்கொள்ள முடியாத நிலை இருந்தால் கிட்டத்தட்ட எல்லாமே ஒரு ஒழுங்குக்குள் வந்து விடுமல்லவா?. அப்போது மிக அருகேயுள்ள நாடுகள் இணைந்து பணியாற்ற மட்டுமல்லாது பண்டைய கால பாரதம் போல ஆக முடியும், என நினைக்கிறேன். வாழ்க பாரதம். ஜெய்ஹிந்த்.

  7. சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் ஒரு சுற்று பேசிமுடித்தபின் இவங்க சொல்லுரதும் நியாயமாத்தான் இருக்கு, அவர்சொல்லுரதும் நியாயமாத்தான் இருக்கு என்பது போல ஒவ்வொரு பகுதியை படித்து முடித்ததும் தோன்றியது.
    இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள தீர்வும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே உள்ளது.
    இப்படிப்பட்ட விஷயங்களில் – பெரிதாக பாதிப்புகள் எதையும் அனுபவித்திடாததால்தானோ என்னமோ தமிழகத்திலுள்ள தமிழ் வாசகர்கள் அதிகம் ஆர்வம்காட்டி படிப்பதில்லை என்பது வருத்தமான ஒரு விஷயம்.
    இப்படி ஒரு கட்டுரையை எழுத எவ்வளவு உழைப்புதேவை என்பதை உணரமுடிகிறது. நல்ல ஒரு கட்டுரையை எழுதியமைக்கு நன்றி, பாராட்டுக்கள்.
    இன்றைய வாசகர்களுக்கு light reading என்று சொல்லப்படும் பொழுதுபோக்காக படிக்ககூடிய திரு.சுகா போன்ற(நானும் அவர் விசிறிதான்)வர்களின் எழுத்தைப்படிப்பது போல இதுபோன்ற serious topic கட்டுரைகளை படிக்கும் பழக்கம் இல்லை. எழுத்தாளர் சுஜாதாவின் serious topic கட்டுரைகளின் ஒவ்வொரு அத்யாயத்திலும் density of the content குறைவாக படிப்பதற்கு எளிதாக இருக்கும் அதுபோல infutre எழுதும் கட்டுரைகளின் பாகங்களை அதிகரித்து கொஞ்சம் easy to read ஆக எழுதினால் அதிகமான வாசகர்களை அடையலாமென நினைக்கிறேன்.
    இவ்வளவு உழைப்பு, reference links, podcasts link களோடு உள்ள தரமான கட்டுரை இன்னும் நிறையபேர் படிக்கவேண்டும்.

Leave a Reply to வாஞ்சிநாதன்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.