குளக்கரை


[stextbox id=”info” caption=”ஊழலின் சரித்திரம்”]

ஊழலெல்லாம் இந்தியாவுக்கு அன்னியமானவை என்று நாம் சொல்லவில்லை. ஊழல் என்பது மனித நாகரிகத்தின் ஒரு தவிர்க்க இயலாத பகுதி. ஆனால் வறிய நாடாகும்போது ஊழல் பிரும்மாண்டமாக ஆகிறது. இதில் இடது சாரிகளின் குற்றச் சாட்டுகள் வழக்கமான பொய்களைக் கொண்டவை. வறியவர்கள் ஏதோ உன்னதப் பிறவிகள் என்பதாகக் காட்ட இ.சா முயல்வர். அவர்களின் வழக்கமான பொய்களில் முக்கியமான பொய் அது. வறியவர்கள் கொடும் தீமை உள்ளவர்கள் என்றும் இல்லை. வறுமை எப்படியாவது தப்பிப் பிழைக்கணும், அல்லது மேலே போகணும் என்ற உந்துதலைக் கூட்டுகிறது, ஊழலுக்கு அது தோற்றுவாயாக ஆவதில் வியப்பில்லை. வறுமையும் ஊழலும் ஒன்றையொன்று ஆழமாக்குகின்றன.

இந்தியாவில் இன்று நிலவும் கடும் ஊழல் பிரச்சினைக்கு இரண்டு செமிதிய மதப் படையெடுப்புகளும் முக்கியக் காரணங்கள். இந்தியரை, இந்(த)தீயர் ஆக மாற்றிய கொடுஞ்செயல் இந்த காட்டுமிராண்டிகளின் பொறுப்பு. சுமார் ஆயிரம் ஆண்டுகள் கொள்ளையடித்து அழிக்குமளவு இந்தியாவில் செல்வம் இருந்திருக்கிறது என்று நாம் கருதலாம்.
அப்படிக் கொள்ளையடித்த செல்வத்தை ஐம்பது அறுபது ஆண்டுகளில் இழந்து விட்ட நாடாக பிரிட்டன் உள்ளது. இன்று அது உலகக் கருப்புப் பணத்தைப் பதுக்கும் ஒரு நாடாகச் செயல்படுவதில்தான் பெருமளவும் பெயர் பெற்றிருக்கிறது. இந்தப் பதுக்கல் நிதியை நம்பித்தான் அதன் பொருளாதாரம் பெருமளவு செயல்படுகிறது.
இப்படிச் சரிவு நிலையில் இருக்கும் நாட்டின் ஊழல் நிலை எப்படி? பேராசையும் இன்னொரு தோற்றுவாய்தான் என்பதை நாம் நினைவில் கொண்டால் பிரிட்டனில் நிலை எப்படி இருக்கும் என்பது நமக்கு உடனே தெரிந்து விடும். இதையொட்டி, ஒரு செய்தி இங்கே– இன்றைய த டைம்ஸ் பத்திரிகையில் உள்ளது. இது ஒரு வலது சாரிப் பத்திரிகை என்பது நம் நினைவில் இருக்க வேண்டும்.
பல முன்னாள் ஆளும் கட்சித் தலைகள் மற்றும் பல இந்திய ஊழல் பெருச்சாளிகள் ஏன் அடிக்கடி லண்டனில் போய் உட்கார்கிறார்கள் என்று யாராவது யோசித்தால், மேற்படி செய்தி அதற்கு ஒரு காரணத்தைக் கொடுத்திருக்கும்.

https://www.thetimes.co.uk/edition/news/we-allow-the-rich-to-escape-charges-admits-taxman-pb307srkq
[/stextbox]


[stextbox id=”info” caption=”சிரிய யுத்தம்”]

 

சிரிய யுத்தம் மிகவும் குழப்பமானது. மிகப்பெரிய உயிரிழப்பு அங்கு நிகழ்கிறது, இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் வரலாற்றில் இது ஒரு நீங்காக் கறையாக இருக்கும் என்பதை மட்டுமே உறுதியாய்ச் சொல்ல முடியும். மற்றபடி, சிரியாவைச் சுற்றியுள்ள அத்தனை நாடுகள் மற்றும் காலனியாதிக்க தேசங்களான அமேரிக்கா, ஐரோப்பிய நாடுகள், மற்றும் ரஷ்யா என்று எல்லாருக்கும் குற்றத்தில் பங்குண்டு. யார் யாரை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அங்குள்ள மனித உயிர்களைத் துச்சமாகப் பொருட்படுத்திக் கொல்லத் தவறுவதில்லை. சதுரங்கச் சிப்பாய்களின் நிலையில் சிரிய மக்கள் இருக்கின்றனர். நிற்க.
சிரியா யுத்தம் குறித்த விவாதங்களில் இரானைக் குற்றம் சாட்டுபவர்கள் ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டுகிறார்கள்- லெபனான் முதல் சிரியா வரை கூன்நிலவென நீளும் ஷியா மக்கள்தொகை மிகுந்த பகுதிகளை ஒருங்கிணைத்து, ‘ஷியா கிரெசண்ட்’, ஒன்றை உருவாக்க இரான் முனைகிறது என்று.  ருஷ்ய அதிபர் புடின் இரானுக்கு ஆதரவு, இரானின் பரம எதிரியான சவூதி அரேபியா, மேலும் சவுதி அரேபியாவின் முதன்மையை ஏற்கும் சுன்னி தேசங்களின் அணிவரிசைக்கு அமெரிக்கா ஆதரவு.  இந்த விஷயத்தில் அமெரிக்கப் பார்வையில், ரஷ்யாவையும் இரானையும் குற்றம் சாட்டி எழுதப்பட்ட விரிவான கட்டுரை ஒன்று இங்குள்ளது – https://foreignpolicyblogs.com/2018/02/28/the-shiite-crescent/. இந்த யுத்தத்தின் அரசியல் களத்தில் வெற்றி பெறுபவர்கள் ஈட்டக்கூடிய அதிகாரத்தை இது நன்றாகவே விவரிக்கிறது. இந்த விஷயத்தில் அமெரிக்காவையும் சவூதி அரேபியாவையும் குற்றம் சாட்டுபவர்களுக்கும் குறைவில்லை.
இந்த யுத்தம் உலகரங்கில் யார் யாரெல்லாம் எதிரும் புதிருமாக நிற்கிறார்களோ அவர்களை எல்லாம் குழப்பி இருக்கிற யுத்தம். உலகெங்கும் இடது சாரிகள், குறிப்பாக இந்திய இடது சாரிகள் பொதுவாக சுன்னி இஸ்லாத்தை ஆவி சேரத் தழுவி நிற்கும் கூட்டம்.  ஆனால் சிரியா யுத்தத்தில் அவர்கள் சுன்னி இஸ்லாமியரோடு சேர்ந்து நின்றால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர்களாக மாற நேரும். எதிரணியில் உள்ள இரான் உலக இடது சாரியினருக்கு அத்தனை ஆகாததும், வல்லரசு ஆகும் முயற்சியில் உள்ளதுமான நாடு. அதுவோ அமெரிக்காவுக்கு எதிராக நிற்பதால் இடது சாரிகளுக்குப் பிடித்திருக்க வேண்டிய நாடு. இருப்பினும் சல்மான் ருஷ்டி போன்ற இடது சாரிகளின் மனதுக்கினிய எழுத்தாளரைக் கொல்ல முயற்சித்த நாடு என்பதால் அதை எதிர்க்க வேண்டிய சங்கட நிலை இவர்களுக்கு.
வலது சாரிகளுக்கும் இப்படிப் பல குழப்ப நிலைகள் உண்டு என்பதையும் நாம் கவனிக்கலாம்.
சரி, அஸ்ஸாதின் கூட்டமான ஆலவைட்கள் என்ன ஷியாக்களா என்றால் அதுவும் இல்லை. அவர்கள் ஒரு கலப்பு இஸ்லாமியக் குழுவினர். இஸ்லாமின் பல பிரிவுகளில் ஆலவைட்கள் மிகச் சிறுபான்மையினர். சிரியாவில் 90%த்தினர் சுன்னிகள். ஷியாக்களே அங்கு மிகச் சிறுபான்மை. ஆலவைட்கள் அவர்களையும் விடச் சிறுபான்மையினர். (இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்: https://www.thoughtco.com/the-difference-between-alawites-and-sunnis-in-syria-2353572 )
இப்படி ஒரு குழப்படி பிரதேசத்தில் இந்தியாவைப் போன்ற வெளிப் பார்வையாள நாடுகள் என்ன நிலைதான் எடுப்பது? நாம் யார் மீதாவது குற்றத்தைச் சுமத்தி ‘நடுநிலை’ எடுத்து அற நோக்கில் தீர்ப்பு சொல்லும் நிலையில் இருக்கிறோமா என்ன? இல்லை. நம் அரசியல் கொள்கைகளும் பல பத்தாண்டுகளாக பல நாடுகள் நம்மிடம் காட்டிய அரசியல் நிலைகளை மனதில் கொண்டுதான் அமையும். அதுதான் எதார்த்தம், சரியான ராஜ தந்திரம். அங்கு அறம் சார்ந்த பாவலாக்கள், நாடகபாணி நாயக ஆடம்பரங்களுக்குச் சிறிதும் இடமில்லை. சீனாவைக் கவனித்தால் அது தன் நலனைத் தவிர வேறெதையும் கவனிப்பதில்லை என்று நமக்குப் புரியும். அதுதான் மார்க்சிய லெனினிய மாவோயிச தாரகை, இல்லையா? அதாவது சுயநலத்தைத் தவிர மற்றெல்லாம் இரண்டாம் பட்சம் என்ற அரசியல்.
ஏதும் இல்லை என்றால் அதையாவது இந்தியா கற்கலாம். நேருவிய ஆடம்பர அரசியல் நிலைப்பாடுகள் இந்தியாவைத் தொடர்ந்து சேதம்தான் செய்தன, அதன் விளைவாக உலகரங்கில் அனாதையாக விடப்பட்ட நிலைதான் இந்தியாவுக்கு அனேகமாக நேர்ந்திருக்கிறது.  நமக்கொ சிரியாவைப் பொருத்து ஒரு நிலைப்பாடும் எளிதாகக் கிட்டுவது இல்லை.
நீண்ட காலம் நடக்கும் யுத்தத்தில் எந்தக் கரம் குற்றமற்றது என்று சொல்ல முடியும்?
அமெரிக்க ராணுவத்திலும் ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறையிலும் உள்ளவர்களுக்கான இதழ் அமெரிக்கன் ஃபோர்சஸ் ஜர்னல் http://www.armedforcesjournal.com/ .
1863 முதல் நடத்தப்பட்டு வரும் இந்த இதழ் 2014ஆம் ஆண்டோடு ஓய்ந்து விட்டது. ஆனாலும் இன்றும் இது ஒரு நல்ல ஆவணமாக இணையத்தில் கிட்டுகிறது. உதாரணத்துக்கு, சிரியாவின் எண்ணைக் குழாய் அரசியல் பற்றிய இந்தக் கட்டுரையை எடுத்துக் கொள்ளலாம் – http://armedforcesjournal.com/pipeline-politics-in-syria/
ஆனால், அரசியல், அதிகாரம் ஆகியவற்றில் ஆதிக்க முயற்சிகள், வளங்களுக்காக அல்லாமல் வெற்றிடத்தில் நிகழ்வதில்லை. இது மானுட வளமாகவோ, இயற்கை வளமாகவோ, கலாசார வளமாகவோ இருக்கலாம். சிரியா விஷயத்தில் எண்ணை வளத்தைக் கைப்படுவதற்கான போட்டியை அமெரிக்கன் ஃபோர்சஸ் ஜர்னல் விவரிக்கிறது- பிரச்சினையின் துவக்கம் 2009ஆம் ஆண்டு சிரியா மற்றும் துருக்கி வழியே யூரோப்பாவுக்கு எண்ணைக் குழாய்ப் பாதை அமைக்க கத்தார் திட்டமிட்டது. ஆனால், சிரிய அதிபர் அஸாத், கிழக்கு வழி பாதை அமைக்க, இராக் மற்றும் இரானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார் அஸாத் ஆலவைட்கள் என்று சொல்லப்படும் ஷியா உப-பிரிவைச் சேர்ந்தவர், இரானில் ஷியாக்கள் பெரும்பான்மை, இராக்கில் இவர்கள் கணிசமான எண்ணிக்கையினர்); இதனால் சிரியாவின் எண்ணை வளம் சுன்னி தேசங்களான சவூதி அரேபியா மற்றும் கத்தாரின் கைவிட்டுப் போனது. எனவே இவர்கள் அஸாத்தை அதிகாரத்திலிருந்து நீக்கி, சிரியாவைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்து, துருக்கி வழி யூரோப்பாவுக்கு எண்ணைக் குழாய்கள் அமைக்கத் திட்டமிட்டனர். வளைகுடா பகுதியில் அரசாள்பவர்களுக்கே அந்த தேசத்தின் வளங்களும் அவையளிக்கும் செல்வமும் சொந்தமாகின்றன என்பதால் இந்த மோதல் வலுக்குன்ற வாய்ப்பில்லை.
அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த மேஜர் ராப் டெய்லர் 2014ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் மிகத் தெளிவாகவே சர்வதேசச் சூதின் திறத்தை எடுத்துரைக்கிறார்: “பிரதேச அரசியல் மற்றும் பொருளாதாரப் பார்வையில் காணும்போது, சிரியாவில் நிகழும் போர் உள்நாட்டு யுத்தமல்ல, 2016ஆம் ஆண்டு துவங்கப்படவிருக்கும் எண்ணைக் குழாய்ப் பாதையைக் கைப்பற்ற  இவர்களைக் காட்டிலும் பெரிய சர்வதேசச் சூதாடிகள்பிரதேச அரசியல் சதுரங்கப் பலகையில் வலுவான நிலையில் தம்மை நிறுத்திக் கொள்ள நிகழ்த்தும் போராட்டத்தின் விளைவுதான்,” என்று. இதைப் பேசாமல் சிரியாவின் நிலையைப் புரிந்து கொள்ள வழியில்லை, என்கிறார் இவர்.
இனவெறி, மதவெறி, மொழி வெறி,  அதிகாரவெறி போன்றவை வாள் என்றால், ஏந்தும் கரம் எதுவானாலும், அந்த வாளால் வெல்லப்படும் பரிசு வளம். இது எக்காலத்துக்கும் பொருந்தும்.
காலனிய அதிகாரத்துக்குப் பன்னெடுங்காலம் பலியான இந்தியர்களான நாம் இந்த உண்மையை மறப்பது நம் நன்மைக்கல்ல.  காலனியத்தின் பற்பல சூதுகளுக்கும், அற்பப் பரிசில்களுக்கும் பலியாகி சொந்த நாட்டுக்குச் சூனியம் வைக்க நினைக்கும் ஒவ்வொரு இந்தியனும் காலனியாதிக்கத்தின் சிப்பாய்தான்.  இந்தியாவை உடைத்தால் தாம் மட்டும் சுகிப்போம் என்று நினைக்கும் ஒவ்வொரு அரசியல் வாதியும் அறிவிலி மட்டுமல்ல, கைக்கூலியும்தான்.
இந்த வாள்கள் அன்றும் இன்றும் இந்தியாவுக்கெதிராகவும் நிற்கின்றன. அவற்றை வெற்றுக் கரத்தோடு எதிர் கொண்டு நிற்பது இந்தியா மறுபடி பல நூறு ஆண்டுகளுக்குப் பலியாடாக ஆகும் நிலையில்தான் கொண்டு நிறுத்தும். வாட்கள் நம்மை நோக்கி நிற்கின்றன என்றால் அவற்றை எதிர்க்க இந்தியா ஒரு போதும் வாளேந்தக் கூடாது என்று இந்தியாவுக்குள்ளிருந்து கூப்பாடு போடும் கூட்டத்தினருக்கு உலக அரசியலும் தெரியவில்லை, பொருளாதார எதார்த்தமும் தெரியவில்லை. ஆயிரம் ஆண்டு இந்திய வரலாறும் தெரியவில்லை என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

http://armedforcesjournal.com/pipeline-politics-in-syria/
[/stextbox]


[stextbox id=”info” caption=”மத நம்பிக்கை”]

இந்தியாவிலும், தமிழ் நாட்டிலும் கருணை மார்க்கத்தினர் பெரும் முயற்சி செய்து, எப்படி எல்லாமோ நிதி திரட்டி இந்துக்களை மதம் மாற்றி இந்தியாவையே செமிதிய மதத்தின் அடிமை நாடாக மாற்றி விடுவோம் என்று ஆர்ப்பர்த்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் சினிமா உலகு, தொலைக்காட்சிகள், அச்சு ஊடகங்களை எல்லாம் மேற்படி கருணை மார்க்கத்தினர் ஆக்கிரமித்துப் பல வருடங்கள் ஆகி விட்டன.
கிட்டத் தட்ட யூரோப்பிய காலனிய காலம் போல இந்துக்களின் வாழ்க்கை ஆகிக் கொண்டிருக்கிறது. கோவில்களில் திருவிழா நடந்தால், கடவுளர் வீதி உலா போவது பன்னெடுங்காலத்து வழக்கு. அதை எல்லாம் தடை செய்ய வேண்டும் என்று மேற்படி மார்க்கத்தினரின் வாக்கு வங்கிக்கு நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையும், ஆதரவாள அரசியலாளர்கள் இப்போது வழக்கு கூட தொடுப்பதாகக் கேள்வி. அதற்கு தமிழகத்து ஆட்சியாளர்களின் ஆதரவும் பல விதங்களில் கிட்டுகிறதாகவும் செய்தித்தாள்களில் சில சொல்கின்றன.
இந்தியாவைக் கிருஸ்தவ நாடாக ஆக்க காலனியத்தின் சேவகர்கள் இந்தப் பாடு படுகையில், கிருஸ்தவத்தின் மைய நாடுகளான மேலை நாடுகளில் கிருஸ்தவம் தோற்று வற்றி வதங்கிக்  கொண்டிருக்கிறது.
கதோலிக்க சர்ச்சோ பல நாடுகளில் பாலியல் வன்முறைக் குற்றச் சாட்டுகளைச் சந்தித்து நீதி மன்றங்களில் வழக்காடிக் கொண்டிருக்கிறது. சில நாடுகளில் அந்த சர்ச்சின் மேலாளர்கள் வழக்குத் தொடுத்தவர்களுடன் நீதி மன்றத்துக்கு வெளியே உடன்படிக்கை போட்டு மிலியன் கணக்கில் நஷ்ட ஈடுகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் எளியோரின் ஒரே பாதுகாவலனாக மேற்படி மார்க்கத்தினர் தெருத்தெருவாக விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றனர். நம்பிப் பின்னே போகவும் பல லட்சம் இந்தியர் உண்டு. ஆனால் திராவிடியம் என்னும் காலனிய விஷ வித்துக்குப் பலியான கோடிக்கணக்கானோரின் உபயத்தில் ஒரு கூட்டம் தமிழகத்தில் ஆட்சியிலேயே இருக்கிறது என்கையில் இது என்ன, இன்னொரு மாயைதானே?
கதோலிக்கம் தான் இப்படி ஆபத்தில் சிக்கி இருக்கிறது என்றால் எவாஞ்சலியம் தப்பித்ததா என்றால் இல்லை. சீன அரசு, கிருஸ்தவத்துக்கு இப்போது கிடுக்கிப் பிடி போட்டு பெரும் நெருக்கடி கொடுக்கத் துவங்கி இருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன. காரணம் கிருஸ்தவம் சீன தேசியத்துக்கு எதிரானது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி முடிவு கட்டி இருப்பதுதான். கிருஸ்தவம் வெள்ளையர் மதமாகி எத்தனையோ நூறாண்டுகள் ஆகி விட்டன, சீன தேசியம் எப்படி அதற்கு ஒத்து வரும்?
சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு இது புலப்பட இத்தனை பத்தாண்டுகள் ஆயினவா என்றால் இல்லை. கிருஸ்தவத்தைப் பயன்படுத்தி மேற்கிலிருந்து சீன கம்யூனிஸ்டுகள் முதலீடு, வர்த்தக ஒப்பந்தங்கள், திறந்த சந்தை என்று பல சலுகைகளைப் பெற்று நாட்டுப் பொருளாதாரத்தை பெருமளவு உயர்த்தி விட்டு, இப்போது அந்த மதத்தின் ஆதரவு தமக்குத் தேவை இல்லை என்று கருதி அதை ஒழிக்கத் துவங்கி இருக்கின்றனர் என்று நாம் முடிவுக்கு வந்தால் அது சரியாக இருக்கும்.
இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு மாத்திரம் செமிதிய மதங்கள் மீது இன்னும் தீவிரக் காதல் வற்றவோ, அடங்கவோ இல்லை. கேரளாவில் மார்க்சிய அரசு கிருஸ்தவ பாதிரிகளின் மீதான பால் வன்முறைக் குற்றச் சாட்டுகளுக்கு மெத்தனம் காட்டுவதிலிருந்து இதை அறியலாம். இதுவே ஒரு இந்து சாமியாராக இருந்தால் அனைத்து ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் அரசியல் தலைவர்களும் தினம் ஊளையிட்டுக் கொண்டிருப்பார்கள், அந்த சாமியாரைத் தூக்கில் போட வேண்டும் என்று கூட கோரிக்கைகள் எழும். ஆனால் செமிதிய மதத்தினர் என்றால் எல்லாப் போராளிகளும் அடிபட்ட நாய் போல வாலை மடக்கிக் கொண்டு எசமான் ஏதோ பார்த்துச் செய்யுங்க என்று கூழையாக நிற்பார்கள். அப்படி ஒரு தீவிரப் போராளிகள் இவர்களெல்லாம்.
இதற்கிடையில் தென் கொரியாவில் பௌத்தத்தைக் கிருஸ்தவம் கிட்டத் தட்ட ஒழித்து விட்டது என்று தோன்றுகிறது. இங்கே ஒரு செய்தியில் தென் கொரியாவில் நிறைய தனி நபர் உற்சாக சர்ச்சுகள் தோன்றிக் கொண்டிருப்பதாகச் செய்தி கிட்டுகிறது. கொரியர்களில் பாதியாவது கிருஸ்தவர்களாகி விட்டனர். இந்தச் செய்தி எப்படி தென் கொரியாவில் காளான்களாக முளைக்கும் சர்ச்சுகள் வினோதமான விதங்களில் தம் நம்பிக்கையாளர்களை நடத்துகின்றனர் என்பதற்கு ஒரு சான்றைக் கொடுக்கிறது. இந்தச் செய்தி ஜப்பானின் டைம்ஸ் பத்திரிகையில் வெளி வந்தது.
ஒரு தென் கொரிய பாஸ்டர், ஷின் ஓக்-ஜு என்ற பெயருடையவர், க்ரேஸ் ரோட் சர்ச் என்ற ஸ்தாபனத்தை நிறுவி நடத்துபவர், தம் நம்பிக்கையாளர்களில் 400 பேரை ஃபிஜி தீவுகளுக்கு இட்டுச் சென்று அங்கு சிறை வைத்து, கொடுமைப் படுத்திய கதையை இந்தச் செய்தி சொல்கிறது.
மீதிக் கதையை இங்கே படியுங்கள்: https://www.japantimes.co.jp/news/2018/08/01/asia-pacific/south-korea-cult-leader-arrested-holding-hundreds-captive-violent-rituals-fiji/#.W6LV7OhKjIU
[/stextbox]


[stextbox id=”info” caption=”தற்கொலை நகரம்”]

அண்மையில் லான்செட் என்ற மருத்துவ இதழில் பதிப்பிக்கப்பட்ட ஆய்வு ஒன்று (“The Global Burder of Disease Study”) உலக அளவிலான தற்கொலைகள் குறித்து அதிர்ச்சியளிக்கும் புல்லிவிவரமொன்று அளிக்கிறது- 2016ஆம் ஆண்டு உலகெங்கும் தற்கொலை செய்து கொண்ட பெண்களில் 37 சதவிகிதத்தினர் இந்திய பெண்கள் ), ஆண்களில் 24 சதவிகிதத்தினர் இந்திய ஆண்கள். இந்த தற்கொலைகள் பெரும்பாலும் மனித வாழ்வின் ஆற்றல்கள் உச்சத்தை நோக்கி உயரும் பருவத்தில்தான் நிகழ்கின்றன: தற்கொலை செய்து கொள்ளும் இந்தியர்களில் 63 சதவிகிதத்தினர் 15 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள். கிட்டத்தட்ட  ஐந்தே முக்கால் கோடி இந்தியர்கள் மன அழுத்தத்தால் அவதிப்படுபவர்கள் என்பதால் இந்த புள்ளி விவரம் ஆச்சரியப்படுத்தவில்லை என்கிறது, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக் குறிப்பு- https://indianexpress.com/article/lifestyle/health/india-37-per-cent-suicide-death-lancet-5356130/. உலகளாவிய அளவில் ஒரு லட்சம் பெண்களில் ஏழு பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள், என்றால் இந்தியாவில் மட்டும் இதைவிட இரு மடங்கு விகிதத்தில், ஒரு லட்சம் பெண்களில் பதினைந்து பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இவர்களில் மணமான பெண்கள் அதிக அளவில் இருப்பதால் திருமணம் தற்கொலைகளுக்கு காரணமாக இருக்கலாம் என்கிறது ஆய்வறிக்கை- “பெற்றோர்களால் இளம் வயதில் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம், இளம் பருவத்தில் தாய்மையடைதல், தாழ்ந்த சமூக அங்கீகாரம், இல்லற வன்முறை, பொருளாதார சார்புநிலை என்ற காரணங்களால் திருமணம் தற்கொலைக்கு எதிராக குறைந்த அளவு பாதுகாப்பே அளிக்கிறது”. இந்தியாவைவிட எத்தனையோ ஏழை நாடுகள் இருக்கின்றன, போர்களிலும் பிணிகளிலும் அவதிப்படும் நாடுகள் இருக்கின்றன, பெண்களின் உரிமைகள் மறுக்கப்படும் நாடுகள் இருக்கின்றன. ஆனால் அங்கிருப்பவர்களை விட, இந்திய பெண்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வது, பெண்களின் நலவாழ்வுக்கு  உரிய சூழலை வழங்குவதில் இந்திய சமூகம் தவறி விட்டதையே காட்டுகிறது.
“கோபப்படு, சத்தம் போடு, சீற்றம் உனக்கு அழகு சேர்க்கிறது,” என்று சொல்கிறார் சொராயா ஷெமாலி. இவர் எழுதிய “Rage Becomes Her: The Power of Women’s Anger,” என்ற புத்தகம் சமகாலச் சூழலில் குறிப்பிடத்தக்க முக்கியம் வாய்ந்தது, பெண்களின் ஆத்திரத்துக்கான வலுவான நியாயங்களை நிறுவுகிறது. பெண்கள், “அச்சம் தவிர், ரௌத்திரம் பழகு,” என்று பாரதி சொன்னதைப் பின்பற்ற உறுதி பூணலாம்- ஆனால், நம் சமூகம் பெண்களின் கோபத்தை அனுமதிக்கும் முதிர்ச்சி அடைய இன்னும் பல காலம் ஆகக்கூடும்.
[/stextbox]


[stextbox id=”info” caption=”ப்ளாஸ்டிக் உலகம்”]

மனிதர் என்னென்னவோ விதங்களில் தம்மை அழித்துக் கொள்ள பெருமுயற்சி செய்கிறார்கள். கடந்த சில பத்தாண்டுகளில் இந்த முயற்சி முன்னெப்போதையும் விட வேகமெடுத்திருக்கிறது. ஒரு காரணம் மனிதர் பெட்ரோ- கெமிகல் பொருட்களை நம்பி வாழ்வு நடத்துவது.
பெட்ரோல்/ டீசல் / எரி வாயு போன்றனவற்றை மட்டும் இங்கு சொல்லவில்லை. பெட்ரோலியத்திலிருந்து கிட்டும் இன்னொரு பொருள் ப்ளாஸ்டிக். நிறைய பேருக்கு ப்ளாஸ்டிக் என்பது எங்கிருந்து கிட்டுகிறது என்பதே தெரியாது. செடிகளில் விளைகிறது என்று சொன்னால் நம்பக் கூட நம்புவார்கள்.  அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. ரப்பர் என்பது ரப்பர் மரத்தின் பிசினிலிருந்து தயாரிக்கப்படுவது என்றாலும், அது அடிப்படையில் ஒரு ப்ளாஸ்டிக்தான். அதே போல தாவரங்களின் செல்லுலோஸிலிருந்துதான் முதல் முதலில் ப்ளாஸ்டிக் தயாரிக்கப்பட்டது. இன்று ஆனால் ப்ளாஸ்டிக் என்பது அனேகமாக எரிவாயு, நிலத்தடி எண்ணெய், கரி போன்றனவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ப்ளாஸ்டிக்குகளின் பற்பல வகைகள் அவை எப்படித் தயாரிக்கப்படுகின்றன, எதெதற்கு ஒவ்வொரு வகை ப்ளாஸ்டிக்கும் பயன்படும் என்பனவற்றை கீழ்க் கண்ட சுட்டியில் காணும் தளத்தில் சுலபமாகப் படிக்கக் கூடிய கட்டுரைகளாகப் பார்க்கலாம்.
https://www.plasticsmakeitpossible.com/about-plastics/types-of-plastics/what-are-plastics/
ஆனால் இங்கு சொல்ல வந்ததோ அழிவைப் பற்றி இல்லையா? ப்ளாஸ்டிக்குகளில் மைக்ரோப்ளாஸ்டிக் என்ற ஒரு பொருள் மனித அழிவைத் துரிதப்படுத்த வந்திருக்கிறது.
முகப்பூச்சு, பற்பசை போன்ற ஒப்பனை/ பராமரிப்புப் பொருட்களில் இந்த மைக்ரோப்ளாஸ்டிக் உருண்டைகளைச் சேர்ப்பதை ஒரு வழக்கமாக தொழிற்துறை ஆக்கி இருந்தது. இவை பாலிப்ரொபைலீன், பாலிமெதைல் மெதக்ரைலேட் போன்ற பலவகை ப்ளாஸ்டிக் மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்டிருந்தன.
(https://www.plasticsmakeitpossible.com/about-plastics/types-of-plastics/what-are-plastics/) இவை நாம் முகம் கழுவும்போதோ, வாய் கொப்பளிக்கும் போதோ கழிவு நீரில் கலந்து அங்கிருந்து ஏரிகள், ஆறுகள், கடல் ஆகியவற்றில் கலக்கின்றன.
அங்கு இவை மீன்களின் உணவோடு கலக்கின்றன. அந்த மீன்களை மனிதர் உண்ணும்போது மனிதரின் உணவுச் சுழற்சியில் இவை ஒரு பங்காகின்றன. இறுதியில் மனிதக் குடலிலேயே இவை சேர்கின்றன. அதே போல கடற்பிராணிகள், ஏரிப் பிராணிகளின் உடலிலும் சேர்கின்றன.
சமீபத்துச் செய்தி இன்னும் கூடுதலான கவலையை நமக்குக் கொணர்கிறது. கொசுக்கள் குளம், குட்டைகளில் நீரில் முட்டை இடுகின்றன. அந்த முட்டைகளிலிருந்து வெளிவரும் லார்வா எனப்படும் இளம் குஞ்சுகள் இந்த மைக்ரோ ப்ளாஸ்டிக் முத்துக்களை உணவோடு சேர்த்து உண்கின்றன. இந்தக் கொசுக்களை உண்ணும் பறவைகள், வௌவால்கள் போன்ற இதர உயிரினங்களை உணவுச் சங்கிலியில் மேல்நிலையில் உள்ள பிராணிகள் உண்ணும்போது அவை படிப்படியாக மேலே உயர்ந்து, மனிதரின் உணவுச் சுழற்சிக்குள் வந்து விடுகின்றன.
இந்த ஆய்வைச் செய்தவர்கள் ரீடிங் பல்கலையாளர்கள். அது பற்றிய செய்தியை இங்கே காணலாம்: https://www.japantimes.co.jp/news/2018/09/19/world/science-health-world/microplastics-may-enter-food-chain-via-mosquitoes-scientists/#.W6Lav-hKjIU
[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.