விழியின் சேல் உகள் வால் நிற வெள்ளத்து முழுகி

இராமனின் முடிசூட்டை எதிர்நோக்கியிருந்த கற்பில் சிறந்த அயோத்தி நகர் பெண்கள் கோசலை அடைந்த மகிழ்ச்சியை அடைந்திருந்தனர். அந்தணர்கள் வசிட்டனைப் போல் மகிழ்ந்திருந்தனர். யுவதிகள் சீதையைப் போல் மகிழ்ந்திருந்தனர். மக்கள் தசரதனைப் போல் மகிழ்ந்திருந்தனர்.
‘கொற்றவர், முனிவர், மற்றும் குவலயத்து உள்ளார், உன்னைப்
பெற்றவன் தன்னைப் போல பெரும் பரிவு இயற்றிநின்றார்;
சிற்றவை தானும் ஆங்கே கொணர்க எனச் செப்பினாள்; அப்
பொன் தட மகுடம் சூடப் போதுதி விரைவின் ‘என்றான். (1664)
“மன்னர், முனிவர், மற்றும் உலகத்தவர் யாவரும் மகிழ்ந்திருக்கின்றனர். தசரதன் அடையும் மகிழ்ச்சியை அனைவரும் அடைகின்றனர். சிற்றன்னை கைகேயி தங்களை அழைத்து வரச் சொன்னார்’’ சுமந்திரர் இராமனிடம் தெரிவித்தார்.
‘ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இரும் சடைகள் தாங்கித், தாங்க அரும் தவம் மேற் கொண்டு,
பூழி வெம் கானம் நண்ணிப், புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ் இரண்டு ஆண்டின் வா ‘என்று இயம்பினன் அரசன்‘‘ என்றாள். (1690)
உலகம் என்பதே பெரியது. கடலால் சூழப்பட்ட உலகம் எனக் கூறும் போது அது இன்னும் பெரியதாக தோற்றம் தருகிறது. அவ்வார்த்தையைக் கூறியவுடன் ‘பரதனே ஆள’’ எனக் கூறி மகிழ்கிறாள் கைகேயி. நீ போய் நீள்முடி வளர்த்து காட்டில் கடுமையான தவத்தை மேற்கொண்டு புண்ணிய நதிகள் பலவற்றுக்கும் சென்று நீராடி பதினான்கு ஆண்டுக்குப் பிறகு வா என அரசன் கூறினார் என்றாள்.
பதினான்கை ஏழிரண்டு ஆண்டுகள் என சொல்வது அது அளவில் பெரியது என்ற திகைப்பு உண்டாகி விடக் கூடாது என்பதற்காக.
அரசன் சொன்னான் என்பது அது அரசகட்டளை; மீற முடியாதது என்பதை உணர்த்துவதற்காக.
இப்பொழுது எம் அனோரால் இயம்புதற்கு எளிதே! யாரும்
செப்ப(அ)ரும் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கில்
ஒப்பதே முன்பு; பின்பு அவ்வாசகம் உணரக் கேட்ட
அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா! (1691)
கம்பர் இச்சூழ்நிலையில் இராமனின் முகத்தைக் காண்கிறார். கைகேயி கூற்றுக்கு முன்பும் பின்பும் செந்தாமரையைப் போல இருந்தது இராமனின் முகம். கைகேயி கூற்றின் பொருள் உணர்ந்த கணத்தில் அப்பொழுது மலர்ந்த செந்தாமரையினும் மலர்ச்சியுடன் இருந்து அச்செந்தாமரையை வென்றது என்கிறார் கம்பர்.
யுகாந்தரங்களுக்கும் ஒளி வீசக் கூடிய அக்கணத்தில் கவிஞன் இராமனின் முகத்தைக் காண்கிறான்.
‘மன்னவன் பணி அன்று ஆகில் நும் பணி மறுப்பனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?
என் இனி உறுதி அப்பால்? இப்பணி தலைமேல் கொண்டேன்;
மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன். ‘ (1693)
அரசகட்டளை என்றல்ல அன்னையின் கட்டளை என்றாலே ஏற்பேனே!
பரதன் பெறும் செல்வம் யாம் பெறும் செல்வமன்றோ!
ஒளிரும் வனத்துக்கு இப்போதே செல்கின்றேன்!
இதை விட மகிழ்ச்சி வேறேது?
என்று கொண்டு இனைய கூறி, அடி இணை இறைஞ்சி மீட்டும்,
தன் துணைத் தாதை பாதம் அத்திசை நோக்கித் தாழ்ந்து,
பொன் திணி போதினாளும் பூமியும் புலம்பி நையக்,
குன்றினும் உயர்ந்த தோளான் கோசலை கோயில் புக்கான். (1694)
இராமன் அரசாளப் போவதில்லை என உணர்ந்த திருமகளும் நிலமகளும் வருந்தியிருக்க கைகேயியின் இரு பாதத்திலும் பணிந்த இராமன் தன் தந்தை இருக்கும் திக்கு நோக்கி வணங்கி கோசலை அன்னையைக் காணச் சென்றான்.
குழைக்கின்ற கவரி இன்றிக், கொற்ற வெண் குடையும் இன்றி,
இழைக்கின்ற விதி முன் செல்லத்,தருமம் பின் இரங்கி ஏக,
மழை குன்றம் அனையான் மௌலி கவித்தனன் வரும் ‘என்று என்று,
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்முன், ஒரு தமியன் சென்றான். (1695)
குழைக்கின்ற கவரி இன்றி கொற்ற வெண் குடையும் இன்றி இராமன் கோசலை அன்னை முன் சென்றான் என்கிறார் கம்பர்.
மகவாய்ப் பிறந்த நாள் முதலே இராமனைக் கண்டு மகிழ்பவள் கோசலை அன்னை. முடிசூடும் தினத்தில் அவன் வெண் கொற்றக் குடையின் கீழ் கவரி வீசப்படும் மனச்சித்திரத்தை கற்பனை செய்து கொண்டு இருக்கிறாள் கோசலை. அவள் முன் கவரி இன்றி குடை இன்றி இராமன் செல்கிறான் என்பதைக் காட்டுகிறார் கம்பர்.
அத்தருணத்தில், விதி முன்னால் செல்ல அறம் அதன் பின்னால் வர மகன் மகுடம் சூடப்போகிறான் என மகிழ்ந்திருக்கும் அன்னையின் முன் வீசப்படும் கவரி இன்றி வெண் கொற்றக் குடை இன்றி தன்னந்தனியனாய் சென்றான் இராமன்.
“முறைமை அன்று என்பது ஒன்று உண்டு; மும்மையின்
நிறை குணத்தவன் நின்னினும் நல்லனால்;
குறைவு இலன்;“ எனக் கூறினள், நால்வர்க்கும்
மறு இல் அன்பினில் வேற்றுமை மாற்றினாள். (1698)
மூத்தவன் இருக்க இளையவன் பட்டமேற்கக் கூடாது என்ற முறைமையை மீறினாலும் பரதன் ‘’நின்னினும் நல்லன்’’- உன்னை விட நல்லவன் என கோசலை கூறினாள்.
நாம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இராமாயணக் கதை கேட்கிறோம். நம்மைப் போன்ற கோடானுகோடி மனிதர்கள் உலகியல் வாழ்வையே வாழ்வு எனக் கருதுகிறார்கள். லாப நஷ்டங்களும் விருப்பு வெறுப்புகளும் வெற்றி தோல்விகளும் கொண்ட வாழ்க்கை அது. பலருக்கும் சாத்தியமாகும் வாழ்வும் அஃதே. யாரோ சில யுகபுருஷர்கள் உலக வாழ்க்கை என்ற சேற்றிலிருந்து செந்தாமரை என எழுகிறார்கள். சாமானியர்கள் அந்த யுகபுருஷர்களின் வாழ்வையே மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். தோன்றி மறையும் வாழ்வின் ஒளி மிக்க சில தருணங்கள் காவிய ஆசிரியனால் சொல்லில் வடிக்கப் பெற்று அமரத்துவம் பெறுகிறது.
அன்று அரசபட்டம் ஏற்க தயாராகும் ஒருவனிடம் வனத்துக்குச் செல் என கட்டளையிடப்படுகிறது. அப்போதே விடை பெற்று புறப்படுகிறான். அவன் அன்னை தன் வயிற்றில் பிறக்காத மகனை ‘’நின்னினும் நல்லன்’’ என்கிறாள்.
என்று பின்னரும் “மன்னவன் ஏவியது
அன்று எனாமை மகனே! உனக்கு அறன்;
நன்று நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து
ஒன்றி வாழுதி ஊழி பல“ என்றாள். (1699)
கோசலை இராமனிடம் பரதன் நாடாள்வதை அரசகட்டளை என்பதற்காக மட்டும் ஏற்காதே; பரதனுக்கு துணையாக நீ இருப்பது உன் அறம் என எண்ணுவாய் என்கிறாள்.
‘ஈண்டு உரைத்த பணி என்னை? ‘என்றவட்கு
’’ஆண்டு ஒர் ஏழினொடு ஏழ் அகன் கான் இடை
மாண்ட மாதவரோடு உடன் வைகிப் பின்
மீண்டு நீ வரல் வேண்டும் என்றான்“ என்றான். (1701)
தந்தை என்னை ஏழிரண்டு ஆண்டுகள் கானேகச் சொல்லியிருக்கிறார் என கோசலையிடம் இராமன் கூறினான்.
ஆங்கு அவ் வாசகம் என்னும் அனல் குழை
தூங்கு தன் செவியில் தொடரா முனம்
ஏங்கினாள் இளைத்தாள் திகைத்தாள் மனம்
வீங்கினாள் விம்மினாள் விழுந்தாள் அரோ. (1702)
அச்சொல் நெருப்பென அவள் செவியில் விழுந்தது. அதைக் கேட்டு துயருற்றாள்; திகைத்தாள்; மனம் விம்மினாள்; தரையில் விழுந்தாள்.
கையைக் கையின் நெரிக்கும்; தன் காதலன்
வைகும் ஆல் இலை அன்ன வயிற்றினைப்
பெய் வளைத் தளிரால் பிசையும்; புகை
வெய்து உயிர்க்கும்; விழுங்கும்; புழுங்குமால். (1704)
கோசலை செய்வதறியாது திகைத்து கைகளை நெரித்தாள். தன் வயிற்றைத் துக்கத்தால் பிசைந்தாள். துயரமாய் நீள்மூச்சு இட்டாள். மனம் சோர்ந்தாள்.
‘அறம் எனக்கு இலையோ? ‘எனும்; ‘ஆவி நைந்து
இற அடுத்தது என்? தயெ்வதங்காள்! ‘எனும்;
பிற உரைப்பது என்? கன்று பிரிந்துழிக்
கறவை ஒப்பக் கரைந்து கலங்கினாள். (1707)
கன்றை இழந்த பசுவைப் போல் கோசலை கலங்கினாள்.
‘விண்ணும், மண்ணும், இவ் வேலையும், மற்றும் வேறு
எண்ணும் பூதம் எலாம் இறந்து ஏகினும்,
அண்ணல் ஏவல் மறுக்க அடியனேற்கு
ஒண்ணுமோ? இதற்கு உள் அழியேல்! ‘என்றான். (1711)
இயற்கை நிலை மாறலாம். ஆனால் தந்தையின் விருப்பத்தை நான் என்றும் நிறைவேற்றாமல் போக மாட்டேன். இராமன் கூற்று.
‘சித்தம் நீ திகைக்கின்றது என்? தேவரும்
ஒத்த மா தவம் செய்து உயர்ந்தார் அன்றே?
எத்தனைக்கு உள ஆண்டுகள்? ஈண்டு அவை
பத்தும் நாலும் பகல் அலவோ? ‘என்றான். (1715)
இராமன் கோசலையிடம் கூறியது: தவமியற்றுவது மகத்தான செயல் அல்லவா? இன்னும் எத்தனை ஆண்டுகள்? அவை பத்தும் நாலும் பதினாலு பகல் பொழுதாய் விரையாதோ?
‘மான் மறிக் கரத்தான் மழு ஏந்துவான்
தான் மறுத்திலன் தாதை சொல் தாயையே
ஊன் அறக் குறைத்தான்; உரவோன் அருள்
யான் மறுப்பது என்று எண்ணுவதோ? ‘என்றான். (1719)
தன் தந்தை தன் அன்னையைக் கொல்ல இட்ட கட்டளையையே செய்து முடித்தவன் பரசுராமன். நான் என் தந்தையின் கட்டளையை மீறுவேனா?
ஆவும் அழுதன; கன்று அழுத; அன்று அலர்ந்த
பூவும் அழுத; புனல் புள் அழுத; கள் ஒழுகும்
காவும் அழுத; களிறு அழுத; கால் வயப் போர்
மாவும் அழுதன; அம் மன்னவனை மானவே. (1793)
இராமனின் பிரிவை எண்ணி அயோத்தியின் பசுக்கள் அழுதன. கன்றுக்குட்டிகள் அழுதன. அன்று மலர்ந்த தூய அழகிய மலர்களும் அழுதன. நீர்ப்பறவைகள் அழுதன. இனிய சோலைகள் அழுதன. அரண்மனையில் இருந்த ஆனைகள் அழுதன. தொழுவத்தில் இருந்த குதிரைகள் அழுதன.
‘மண் செய்த பாவம் உளது ‘ என்பார்; ‘மாமலர் மேல்
பெண் செய்த பாவம் அதனில் பெரிது ‘என்பார்;
’புண் செய்த நெஞ்சை, விதி ‘என்பார்; ‘பூதலத்தோர்
கண் செய்த பாவம் கடலில் பெரிது ‘என்பார். (1796)
சிலர் இராமன் பிரிந்து செல்வது மண் செய்த பாவத்தால் என்றனர். மாமலர் மேல் அமரும் திருமகள் செய்த பாவத்தால் என சிலர் சொல்லினர். விதியால் என்றனர் சிலர். இராமன் பிரிந்து செல்வதைக் காணும் கண்கள் செய்த பாவம் கடலை விடப் பெரியது என்றனர் சிலர்.
‘நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது? ‘என்றான். (1824)
நீரற்றிருப்பது நதியின் பிழை அல்ல
என்னை வனமேகச் சொன்னது தந்தையின் பிழை அல்ல
அன்னையின் மதியின் பிழையும் அல்ல
தம்பி பரதன் பிழையும் அல்ல
அது விதியின் பிழை
நீ இதற்கு யாரை வருந்துவாய்?
‘நல் தாதையும் நீ; தனி நாயகன் நீ; வயிற்றில்
பெற்றாயும் நீயே; பிறர் இல்லை; பிறர்க்கு நல்கக்
கற்றாய்! இது காணுதி இன்று ‘ எனக் கை மறித்தான்,
முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அன்னான். (1827)
எப்போதும் தன்னிடம் இருப்பதை மிச்சமின்றி பிறர்க்குக் கொடுப்பவனே! என் அன்னை நீயே! என் தந்தையும் நீயே! என் தலைவனும் நீயே! சற்று பொறு. உனக்கு அரசை நான் மீட்டுக் கொடுக்கிறேன்.
ஆகாதது அன்றால் உனக்கு அவ் வனம் இவ் அயோத்தி;
மா காதல் இராமன் நம் மன்னவன்; வையம் ஈந்தும்
போகா உயிர்த் தாயர் நம் பூங்குழல் சீதை என்றே
ஏகாய்; இனி, இவ் வயின் நிற்றலும் ஏதம் என்றாள். (1841)
சுமித்ரை இலக்குவனிடம் கூறினாள்: மகனே! பெருங்காடே இனி உனது நகரம். இராமனே உன் மன்னன். சீதையே இனி உன் அன்னை.
பின்னும் பகர்வாள், ‘மகனே! இவன் பின் செல்; தம்பி
என்னும்படி அன்று; அடியாரினில் ஏவல் செய்தி;
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா; அது அன்றேல்
முன்னம் முடி; ‘ என்றனள் பால் முலை சோர நின்றாள். (1842)
தன் மகனிடம் சுமித்ரை சொன்னாள்: மகனே! இராமனைப் பின்தொடர். ஒரு பணியாளனாக. இராமன் நாடு திரும்பும் போது அவன் உடன் வா. இராமன் நாடு திரும்ப இயலாமல் போகுமெனில் அவனுக்கு முன் நீ உயிர் துறப்பாய்.
‘நீர் உள எனின் உள, மீனும் நீலமும்;
பார் உள எனின் உள,யாவும்; பார்ப்புறின்,
நார் உள தனு உளாய்! நானும் சீதையும்
ஆர் உளர் எனின் உளம்? அருளுவாய் ‘என்றான். (1847)

குவளை மலரும் மீன்களும் பொய்கையில் நீர் இருந்தால் இருக்கும். பொருட்கள் யாவும் உலகம் இருந்தால் இருக்கும். நீ இருப்பதால் நானும் அன்னை சீதையும் இருக்கிறோம்.
சுற்றிய சீரையன்; தொடர்ந்த தம்பியன்;
முற்றிய உவகையன்; முளரிப் போதினும்
குற்றம் இல் முகத்தினன்; கொள்கை கண்டவர்
உற்றதை ஒருவகை உணர்த்துவாம்; அரோ. (1861)
மரவுரி அணிந்த இராமன் தன் இளவல் பின்தொடர தாமரையினும் மலர்ந்த முகத்துடன் துயரம் ஏதுமற்று நிறைவான மகிழ்ச்சியுடன் சென்றான்.
விழுந்தனர் சிலர்; சிலர் விம்மி விம்மி மேல்
எழுந்தனர்; சிலர் முகத்து இழி கண்ணீர் இடை
அழுந்தினர்; சிலர் பதைத்து அளக வல்லியின்
கொழுந்து எரி உற்று எனத் துயரம் கூர்கின்றார். (1865)
துயரில் விழுந்தனர் சிலர். விம்மியழுதனர் சிலர். முகம் பொத்தி கதறினர் சிலர். எப்போதும் நீரில் இருக்கும் கொடி தீயில் எறிவது போல துயருற்றனர் சிலர்.
உயங்கி அந் நகர் உலைவு உற, ஒருங்கு உழை சுற்ற,
மயங்கி ஏங்கினர் வயின் வயின் வரம்பு இலர் தொடர,
இயங்கு பல் உயிர்க்கு ஓர் உயிர் என நின்ற இராமன்
தயங்கு பூண் முலைச் சானகி இருந்துழிச் சார்ந்தான். (1908)
உலகின் ஜீவராசிகளுக்கு உயிராக விளங்குகின்ற இராமன் தனக்கு உயிராய் விளங்குகிற சீதையின் அரண்மனையை அடைந்தான்.
அழுது, தாயரோடு அருந்தவர், அந்தணர், அரசர்,
புழுதி ஆடிய மெய்யினர், புடை வந்து பொருமப்
பழுது சீரையின் உடையினன் வரும்படி பாரா,
எழுது பாவை அன்னாள் மனத் துணுக்கமொடு எழுந்தாள். (1909)
சித்திரம் போன்ற அழகு மிக்க சீதை மரவுரி அணிந்து புழுதி படிந்த உடலுடன் இருந்த இராமனைக் கண்டாள்.
அன்ன தன்மையள் “ஐயனும் அன்னையும்
சொன்ன செய்யத் துணிந்தது தூயதே;
என்னை என்னை? ‘இருத்தி ‘என்றாய்” என்றாள்
உன்ன உன்ன உயிர் உமிழா நின்றாள். (1915)
சீதை இராமனிடம் என்னை ஏன் இங்கே இருக்கச் சொல்கிறீர்கள் என்று கேட்டாள்.
‘பரிவு இகந்த மனத்தொடு பற்று இலாது
ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு நின்
பிரிவினும் சுடுமோ பெருங்காடு? ‘என்றாள். (1917)
உம்மைப் பிரிந்திருக்கும் துயரினும் சுடுமோ அப்பெருங்காடு?
முன்பு நின்று இசை நிறீஇ முடிவு முற்றிய
பின்பும் நின்று உறுதியைப் பயக்கும் பேர் அறம்;
இன்பம் வந்து உறும் எனில் இயைவது, அயிடைத்
துன்பம் வந்து உறும் எனில் துறக்கல், ஆகுமோ. (1957)
அறவழியை மேற்கொள்பவனுக்கு இம்மையில் புகழ் கிடைக்கிறது. மறுமையில் நன்மை கிடைக்கிறது. அப்பாதையில் செல்லும் போது இன்பம் வரும் போது மகிழும் நாம் துன்பம் வரும்போது அதனை துறக்க முடியுமா?
நிறப் பெரும் படைக்கலம் நிறத்தின் நேர் உற,
மறப் பயன் விளைக்குறும் வன்மை அன்று; அரோ
இறப்பினும், திரு எலாம் இழப்ப எய்தினும்,
துறப்பிலர் அறம் எனல் சூரர் ஆவதே. (1958)
செருகளத்தில் படைக்கலம் ஏந்தி நிற்பது வீரம் அன்று; எதை இழந்தாலும் சாவே வந்தாலும் அறத்தைக் கைவிடாமல் இருப்பதே வீரம் ஆகும்.
அஞ்சனக் குன்றம் அன்ன அழகனும், அழகன் தன்னை
எஞ்சல் இல் பொன் போர்த்து அன்ன இளவலும், இந்து என்பான்,
வெம் சிலைப் புருவத்தாள் தன் மெல் அடிக்கு ஏற்ப வெள் நூல்
பஞ்சு இடை படுத்தால் அன்ன வெள் நிலாப் பரப்பப் போனார். (1980)
கருங்குன்றை ஒத்த இராமனும் அவனைப் பொன்னால் போர்த்தியது போன்ற இலக்குவனும் வில் போன்ற அழகிய புருவத்தை உடைய சீதையும் நடக்கும் பாதையில் மென்பஞ்சைப் பரப்பினாற் போல மதி தன் வெண்மையான ஒளியைப் பரப்பியது.
சிறு நிலை மருங்கின் கொங்கை ஏந்திய செல்வம் என்னும்
நெறி இருங் கூந்தல் நங்கை சீறடி நீர்க் கொப்பூழின்
நறியன தொடர்ந்து சென்று நடந்தன; நவையுள் நீங்கும்
உறுவலி அன்பினூங்கு ஒன்று உண்டு என உணர்வது உண்டோ? (1981)
இராமன் மீது கொண்ட பெருங்காதலால் சிற்றிடையும் திரண்ட முலைகளும் கொண்ட சீதையின் ஒவ்வொரு பாத அடிகளும் நீர்க்குமிழி போன்று மிக மெல்லியதாயிருந்தது.
நாயகன் பின்னும் தன் தேர்ப் பாகனை நோக்கி, ‘நம்பி
சேயனோ? அணியனோ? ‘என்று உரைத்தலும், தேர் வலானும்,
‘வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும்
போயினன் ‘என்றான்; என்ற போழ்தத்தே ஆவி போனான். (1988)
இராமன் காட்டுக்குப் போனான் என்ற செய்தி கேட்டு தசரதன் உயிர் பிரிந்தது.
கிட்டத்தட்ட ஒரு நாள். தகுதியும் திறனும் உடைய ஒருவன் அரசனாவதற்கான ஏற்பாடு நடக்கிறது. கைகேயி தசரதனிடம் வரம் பெறுகிறாள். இராமனிடம் நீ நாட்டைத் துறந்து காட்டுக்குச் செல் என்கிறாள். அன்றலர்ந்த தாமரை முகத்துடன் தங்கள் விருப்பம் அதுவென்றாலே நான் நிறைவேற்றுவேன் என்கிறான். தன் தாயிடம் செல்கிறான். கோசலை பரதன் ‘நின்னினும் நல்லன்’ என்கிறாள். சுமித்ரையிடம் செல்கிறான். தன் மகனை இராமனுடன் செல்லுமாறு கட்டளையிடுகிறாள். சீதை அரச வாழ்வைத் துறந்து மகிழ்ச்சியுடன் இராமனுடன் வனத்துக்குச் செல்கிறாள்.
கோடானுகோடி மனிதர்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளும் வந்து போகிறது. இராமாயணம் காட்டும் அந்த ஒரு நாள் யுகாந்திரங்களுக்கு ஒளி விடக் கூடியது.
இராமனும் கோசலையும் சுமித்ரையும் சீதையும் எதை உணர்ந்திருந்தார்கள்? பொருள் வாழ்வின் எல்லைகளை எவ்விதம் பொருள் வாழ்வின் உள்ளிருந்தே அறிந்தார்கள்? அடைவதை விட துறப்பது அவ்வளவு மகிழ்வானதா? அறத்துக்காக எதையும் துறக்கலாம் என்பதுதான் இராமாயணம் காட்டும் பாதையா?
வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறையப்
பொய்யோ எனும் இடையாெளாடும இளையானொடும் போனான்;
மையோ! மரகதமோ! மறிகடலோ!மழை முகிலோ!
ஐயோ! இவன் வடிவு என்பது ஒர் அழியா அழகு உடையான். (2016)
மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ ஐயோ என்ற அழகுடைய கதிரினும் ஒளிரும் இராமன் இல்லையோ என ஐயுறும் சிற்றிடை கொண்ட சீதையோடும் தம்பியோடும் வனத்தில் போனான்.
அளி அன்னது ஒர் அறல் துன்னிய குழலாள், கடல் அமுதின்
தெளிவு அன்னது ஒர் மொழியாள், நிறை தவம் அன்னது ஒர் செயலாள்,
வெளி அன்னது ஒர் இடையாெளாடும் விடை அன்னது ஒர் நடையான்
களி அன்னமும் மட அன்னமும் உடன் ஆடுவ கண்டான். (2017)
அளி அன்னது ஓர் அறல் துன்னிய குழலாள் : கடல் மணல் போன்ற நெருக்கமான வண்டைப் போல் அடர் கருநிறம் கொண்ட கூந்தலைக் கொண்டவள்
கடல் அமுதின் தெளிவு அன்னது ஓர் மொழியாள்: பாற்கடல் கடைந்த போது திரண்டு வந்தது அமுதம். கடையப்பட்டதே விண்ணளந்தான் பள்ளி கொள்ளும் பாற்கடல். அதன் சாறாய் இறுதியில் திரண்டு வந்தது அமுதம். அந்த அமுதம் போன்ற இனிமையான மொழியை இனிமையாகப் பேசக்கூடியவள்.
நிறை தவம் அன்னது ஓர் செயலாள்: மேலான ஒன்றை உணர்ந்து அதை அடைவதற்காக மாறா நெறி கொள்வதே தவம். உறுதியான அச்செயலை இயற்றும் உறுதியான மனம் கொண்டவள்.
வெளி அன்னது ஓர் இடையாள்: ஆகாயம் போன்ற காண முடியாத இடை
இயற்கையும் பெண்ணுடலும் கம்பன் சித்தரிப்புகளில் வெவ்வேறு விதத்தில் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. ஒரு படைப்பு மனம் இயற்கையின் அழகைக் கண்டு மனம் வியக்கும் போது கட்டற்று வெளிப்படும் மொழிப் பாய்ச்சல்களே அவை. ஒரு குழந்தையைக் கொஞ்சும் போது எப்படி எல்லா விதமான உலகியல் அறிதல்களும் உலகியல் புரிதல்களும் சில கணங்களுக்கேனும் எல்லா மனிதர்களுக்கும் நீங்கி மகத்துவத்தின் அற்புதம் நிகழ்கிறதோ அதுவே எந்த அழகையும் காணும் கலைஞனிலும் நிகழ்கிறது.
சமூகப் பழக்கங்கள், அரசியல் சரிநிலைகள் ஆகியவை குறைகாலம் கொண்டவை. அவ்வப்போது மாறக் கூடியவை. மாறுவதையே தம் இயல்பாய் கொண்டவை.
அழகும் அறமும் என்றும் மாறாது. அதை காலந்தோறும் படைப்பு மனம் கலையாய் வெளிப்படுத்தியபடியே இருக்கும்.
மணல் போன்று நெருக்கமான மென்மையான கருநிறக் கூந்தல் கொண்ட அமுதினும் இனிய மொழி கொண்ட காண முடியாத சிற்றிடை கொண்ட வியக்கத்தக்க உறுதியான மனம் கொண்ட சீதையுடன் செல்லும் போது இராமன்
காட்டில் ஆண் அன்னமும் பெண் அன்னமும் சேர்ந்து நடப்பதைக் கண்டான்.
அஞ்சு அம்பையும் ஐயன் தனது அலகு அம்பையும் அளவா
நஞ்சங்களை வெலல் ஆகிய நயனங்களை உடையாள்,
துஞ்சும் களி வரி வண்டுகள் குழலின்படி சுழலக்
கஞ்சங்களை மஞ்சன் கழல் நகுகின்றது கண்டாள். (2018)
நஞ்சை வெல்லும் இனிமை கொண்ட சீதையின் பார்வையுடன் மலரம்புகளோ இராமபாணங்களோ ஒப்பிட முடியாதவை. வேய்குழலிசை போல் ரீங்கரிக்கும் களிப்பின் மயக்கத்திலாழ்ந்த வண்டுகள் சுற்றிச் சுழலும் தாமரைகளை இராமனின் பாதமலர்கள் பரிகசித்து மெல்ல நகுவதை சீதை கண்டாள்.
ஒப்பு சொல்ல இயலாத சீதையின் கண்கள் ஒப்பு இல்லா இல்லா அழகு கொண்ட இராமனின் பாதங்களைக் கண்டன.
மா கந்தமும் மகரந்தமும் அளகம் தரும் மதியின்
பாகம் தரும் நுதலாெளாடு பவளம் தரும் இதழான்
மேகம் தனி வருகின்றது மின்னோடு என மிளிர் பூண்
நாகம் தனி வருகின்றது பிடியோடு என நடவா. (2019)
நிலவென ஒளிரும் நுதலும் மலர் மணக் கூந்தலும் கொண்ட சீதையுடன் இராமன் நடந்து செல்வது மேகமும் மின்னலும் சேர்ந்து நடப்பது போன்றும் களிறும் பிடியும் சேர்ந்து நடப்பது போன்றும் இருந்தது.
அருப்பு ஏந்திய கலசத் துணை, அமுது ஏந்திய மத மா
மருப்பு ஏந்திய எனலாம் முலை, மழை ஏந்திய குழலாள்,
கருப்பேந்திரம் முதலாயின கண்டாள்; இடர் காணாள்;
பொருப்பு ஏந்திய தோளானொடு விளையாடினாள் போனாள். (2021)
பொழியும் மழை போன்ற விரிந்த கூந்தலையும் ஆனைத் தந்தம் போன்ற முலைகளையும் உடைய சீதை இராமனுடன் மகிழ்ந்து விளையாடிச் சென்றாள்.
செல்லும் வழியில் கரும்பு எந்திரங்களைக் கண்டாள்.
எதிர் கொடு ஏத்தினர் இன் இசை பாடினர்
வெதிர் கொள் கோலினர் ஆடினர் வீரனைக்
கதிர் கொள் தாமரைக் கண்ணனைக் கண்ணினால்
மதுர வாரி அமுது என மாந்துவார். (2027)
முனிவர்கள் ஸ்ரீராமனாகிய தாமரைக் கண்ணனை ஆடிப் பாடி எதிர்கொண்டழைத்தனர். அமுதம் அருந்துவது போன்று தங்கள் கண்களால் இராமனின் அழகை அருந்தினர்.
பொழியும் கண்ணீர்ப் புதுப் புனல் ஆட்டினர்
மொழியும் இன் சொலின் மொய்ம் மலர் சூட்டினர்
அழிவு இல் அன்பு எனும் ஆர் அமுது ஊட்டினர்
வழியின் வந்த வருத்தத்தை வீட்டினர். (2029)
உணர்வு மேலிட்ட விழிநீரால் இராமனை நீராட்டினர். இனிமையான சொற்களை மலரென சூட்டினர். அன்பின் ஆரமுதை அளித்தனர். நெடுந்தூரம் நடந்த களைப்பைப் போக்கினர்.
காயும் கானில் கிழங்கும் கனிகளும்
தூய தேடிக் கொணர்ந்தனர்; ‘தோன்றல்! நீ
ஆய கங்கை அரும் புனல் ஆடினை
தீயை ஓம்பினை செய் அமுது ‘என்றனர். (2030)
காட்டில் அகழ்ந்த கிழங்குகளையும் மரத்தில் பறித்த கனிகளையும் இராமனுக்காகத் தேடிக் கொண்டு வந்தனர். இராமனைக் கங்கையில் புனலாடி நெருப்பை வணங்கி விட்டு உணவருந்த வருமாறு அழைத்தனர்.
மங்கையர்க்கு விளக்கு அன்ன மாதையும்
செங்கை பற்றினன் தேவரும் துன்பு அறப்
பங்கயத்து அயன் பண்டு தன் பாதத்தின்
அம் கையின் தரும் கங்கையின் ஆடினான். (2031)
பெண்ணிற் சிறந்த சீதையை ஒரு கையால் பற்றியிருந்த இராமன் விஷ்ணுவின் பாதத்தை நனைத்து வரும் நதியிற் சிறந்த கங்கையில் நீராடினான்.
வெம் கண் நாகக் கரத்தினன் வெள் நிறக்
கங்கை வார் சடைக் கற்றையன் கற்பு உடை
மங்கை காண நின்று ஆடுகின்றான் வகிர்த்
திங்கள் சூடிய செல்வனில் தோன்றினான். (2033)
கயிலையில் சங்கரன் உமையொடு ஆடுகிறான். கங்கையில் இராமன் சீதையொடு புனலாடுகிறான்.
தள்ளும் நீர்ப் பெருங் கங்கைத் தரங்கத்தான்
வள்ளி நுண் இடை மா மலராெளாடும்
வெள்ளி வெள் நிறப் பாற்கடல் மேலை நாள்
பள்ளி நீங்கிய பான்மையில் தோன்றினான்.(2034)
கங்கையில் இராமனும் சீதையும் இருப்பது பாற்கடலில் பெருமாளும் திருமகளும் இருப்பது போல் இருந்தது.
தேவர்தேவன் செறி சடைக் கற்றையுள்
கோவை மாலை எருக்கொடு கொன்றையின்
பூவும் நாறலள் பூங் குழல் கற்றையின்
நாவி நாள் மலர் கங்கையும் நாறினாள். (2036)
சிவனின் சடைக்கற்றையிலிருந்து வெளிப்படுபவள் கங்கை. அவள் சிவனுக்கு சூட்டப்படும் கொன்றையின் மணத்தையும் எருக்கின் மணத்தையும் அறிந்தவள். சீதை நீராடிய போது அவ்வாசம் இல்லாமல் சீதையின் பூங்குழல் பூ மணத்தை கங்கை அறிந்தாள்.
மங்கை வார் குழல் கற்றை மழைக் குலம்
தங்கும் நீரிடைத் தாழ்ந்து குழைப்பன
கங்கை யாற்றுடன் ஆடும் கரியவள்
பொங்கும் நீர் சுழி போவன போன்றவே. (2038)
சீதை நதியில் மூழ்கும் போது சுழலும் அவள் கருங்கூந்தல் வெண்ணிற கங்கையும் கரிய யமுனையும் பிரயாகையில் சுழித்துச் சங்கமிப்பது போல் இருந்தது.
சுழி பட்டு ஓங்கிய தூங்கு ஒலி ஆற்றுத் தன்
விழியில் சேல் உகள் வால் நிற வெள்ளத்து
முழுகித் தோன்றுகின்றாள் முதல் பால் கடல்
அழுவத்து அன்று எழுவாள் என ஆயினாள். (2039)
தன் கண்களைப் போன்ற மீன்கள் துள்ளும் நீர்ச்சுழல் நிறைந்த கங்கை ஆற்றில் மூழ்கி எழுந்த சீதை பாற்கடலில் இருந்து எழுந்த திருமகள் போல் இருந்தாள்.
ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு
நாயகன் போர்க் குகன் எனும் நாமத்தான்
தூய கங்கைத் துறை விடும் தொன்மையான்
காயும் வில்லினன் கல் திரள் தோளினான். (2043)
திரள் தோளினன்
சீறும் வில்லினன்
ஆயிரம் படகுகளின் தலைவன்
கங்கைத் துறையின் தொல்குடியான்
மாவீரனான குகன்
துடியன் நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர்
அடியன் அல் செறிந்த அன்ன நிறத்தினான்
நெடிய தானை நெருக்கினன் நீர் முகில்
இடியினோடு எழுந்தால் அன்ன ஈட்டினான். (2044)
வேட்டைநாய்கள் சூழ
பறையொலிக்க
வருபவன்
தோல் செருப்பு அணிந்தவன்
கருநிறத்தவன்
இடிபோல் முழங்கும் படை கொண்டவன்
கச்சொடு ஆர்த்த கறைக் கதிர் வாளினன்
நச்சு அராவின் நடுக்கு உறும் நோக்கினன்
பிச்சர் ஆம் அன்ன பேச்சினன் இந்திரன்
வச்சிராயுதம் போலும் மருங்கினான். (2049)
ஒளிரும் குருதி படிந்த வாளேந்தியவன்
சினப் பார்வையில் பிறரை நடுங்கச் செய்பவன்
பயிலா மொழி கொண்டவன்
ஊற்று மொய் நறவு ஊனொடு மீன் நுகர்
நாற்றம் மேய நகை இல் முகத்தினான்
சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான்
கூற்றம் அஞ்சக் குமிறும் குரலினான். (2050)
இறைச்சி மீன் நாற்றம் உடையவன்
புன்னகைத்துப் பழக்கமில்லாதவன்
சினம் இல்லாத போதும் அனலெனப் பார்ப்பவன்
எமன் அஞ்சும் குரல் கொண்டவன்
சிருங்கிபேரம் எனத் திரைக் கங்கையின்
மருங்கு தோன்றும் நகர் உறை வாழ்க்கையன்
ஒருங்கு தேனொடு மீன் உபகாரத்தன்
இருந்த வள்ளலைக் காண வந்து எய்தினான். (2051)

கங்கைக்கரை நகர் சிருங்கிபேரம் ஆளும் குகன்
தேனும் மீனும்
எடுத்துக் கொண்டு
இராமனைக் காண வந்தான்
கூவா முன்னம் இளையோன் குறுகி ‘நீ
ஆவான் யார்? ‘என அன்பின் இறைஞ்சினான்
‘தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்
நாவாய் வேட்டுவன் நாய் அடியேன் ‘என்றான். (2053)
இலக்குவன் குகனிடம் ‘நீ யார்’ என்று கேட்டான். குகன் இலக்குவனை இராமன் என்று எண்ணி “உனது பாதம் பணிய வந்த வேட்டுவன்’’ என அறிமுகப்படுத்திக் கொண்டான்.
‘நிற்றி ஈண்டு ‘என்று புக்கு, நெடியவன் தொழுது, தம்பி,
‘கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன்; நிமிர்ந்த கூட்டச்
சுற்றமும் தானும், உள்ளம் தூயவன், தாயின் நல்லன்,
எற்றும் நீர்க் கங்கை நாவாய்க்கு இறை, குகன், ஒருவன் ‘என்றான். (2054)
அரசே! தங்களைக் காண தன் சுற்றத்துடன் ஒருவன் வந்துள்ளான். எளிய தூய உள்ளம் கொண்டவன். அன்னையினும் அன்பு செய்பவன். கங்கைப் படகுகளின் இறைவன். குகன் என்ற பெயர் கொண்டவன்.
இத்தருணம் கம்பனின் மகத்தான நாடகத் தருணங்களில் ஒன்று. இராமனைக் காண வரும் வேட்டுவ குகனின் கடும் வெளித்தோற்றம் முதலில் கூறப்படுகிறது. இலக்குவன் அவனைக் கண்டு இராமனிடம் அவனைப் பற்றி தெரிவிக்கும் போது முதலில் ‘உள்ளம் தூயவன்’ என்கிறான். பின்னர் ‘தாயின் நல்லன்’ என்கிறான். அதன் பின்னர் ‘கங்கை நாவாய்க்கு இறை’ என்கிறான். கடுமையான தோற்றத்திலிருந்து குகனின் இறைத் தன்மை வரை சில கணங்களில் வெளிப்படுகிறது.
‘தாயின் நல்லன்’ என்ற வார்த்தை தமிழ் இலக்கியத்தின் மகத்தான வரிகளில் ஒன்று.
அண்ணலும் விரும்பி, ‘என்பால் அழைத்தி நீ அவனை ‘என்னப்
பண்ணவன் ‘வருக ‘என்றான்; பரிவினன் விரைவில் புக்கான்;
கண்ணனைக் கண்ணின் நோக்கிக் கனிந்தனன் இருண்டகுஞ்சி
மண்உறப் பணிந்து மேனி வளைத்து வாய்புதைத்து நின்றான் (2055)
கனிந்த இராமனின் கண்களைக் கண்ட குகன் இராமன் அடி பணிந்தான்.
‘இருத்தி நீ ‘என்னலோடும் இருந்திலன்; எல்லை நீத்த
அருத்தியன், ‘தேவனும் மீனும் அமுதினுக்கு அமைந்த ஆகத்
திருத்தினென், கொணர்ந்தேன்; என் கொல திரு உளம் ‘? என்ன, வீரன்,
விருத்த மாதவரை நோக்கி முறுவலன், விளம்பலுற்றான். (2056)
தங்களுக்கு உணவாக தேனும் மீனும் கொண்டு வந்துள்ளேன்.
‘அரிய, தாம் உவப்ப, உள்ளத்து அன்பினால் அமைந்த, காதல்
தெரிதரக் கொணர்ந்த, என்றால் அமுதினும் சீர்த்த! அன்றே
பரிவினில் தழீஇய என்னில், பவித்திரம்; எம் அனோர்க்கும்
உரியன; இனிதின் நாமும் உண்டனெம்; அன்றே ‘என்றான். (2057)
மாசற்ற உனது உள்ளன்பு அரியது. மகிழ்ந்து அன்புடன் நீ அளிப்பவை அமிழ்தினை ஒத்தவை. இனிதான அவற்றை ஏற்கிறேன்.
கோதை வில் குரிசில் அன்னான் கூறிய கொள்கை கேட்டான்,
சீதையை நோக்கித் தம்பி திரு முகம் நோக்கித் ‘தீராக்
காதலன் ஆகும் ‘என்று கருணையின் மலர்ந்த கண்ணன்,
‘யாதினும் இனிய நண்ப! இருத்தி ஈண்டு எம்மொடு ‘என்றான்.(2060)
சீதையிடமும் இலக்குவனிடமும் குகனை என் மீது தீரா அன்பு கொண்டவன் என இராமன் சொல்கிறான். தனது இனிய நண்பனான குகனை தன்னுடன் இருக்குமாறு கூறுகிறான்.
இராமன் மீது தீரா அன்பும் காதலும் கொண்டவர்கள் சீதையும் இலக்குவனும். அவர்களைப் போன்றே பிரியம் கொண்டவன் குகன் என்பதால் அவர்களிடம் குகனைப் பற்றி இராமன் ’தீராக்காதலன் ஆகும்’ என்கிறான். பார்த்த சில கணங்களிலேயே குகனை இராமன் இனிய நண்பன் என்கிறான்.
மாலை வாய் நியமம் செய்து, மரபுளி இயற்றி, வைகல்
வேலை வாய் அமிர்து அன்னாளும் வீரனும் விரித்த நாணல்
மாலைவாய்ப் பாரின் பாயல் வைகினர், வரி வில் ஏந்திக்
காலை வாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து நின்றான். (2063)
அந்தியின் பொழுதிணைவு வணக்கம் செய்து இரவில் தர்ப்பைப் புல்லால் வேயப்பட்ட பாயில் இராமனும் சீதையும் உறங்கினர். விடியும் காலை வரை இலக்குவன் ஒரு கணமும் விழி மூடாமல் அவர்களைக் காத்து நின்றான்.
தும்பியின் குழாத்தில் சுற்றும் சுற்றத்தன், தொடுத்த வில்லன்,
வெம்பி வெந்து அழியாநின்ற நெஞ்சினன், விழித்த கண்ணன்,
தம்பி நின்றானை நோக்கித் தலை மகன் தனிமை நோக்கி
அம்பியின் தலைவன் கண்ணீர் அருவி சோர் குன்றில் நின்றான். (2064)
குகன் தம்பி உறங்காமல் காவலிருக்க சீதையும் இராமனும் மட்டும் இருப்பதைக் கண்டு விழிநீர் உகுக்கிறான்.
செம் செவ்வே சேற்றில் தோன்றும் தாமரை, தேரில் தோன்றும்
வெம் சுடர்ச் செல்வன் மேனி நோக்கின விரிந்த; வேறு ஒர்
அஞ்சன ஞாயிறு அன்ன ஐயனை நோக்கிச் செய்ய
வஞ்சி வாழ் வதனம் என்னும் தாமரை மலர்ந்தது அன்றே. (2066)
சேற்றில் இருக்கும் செந்தாமரைகள் வானின் செங்கதிர்த் தேவனைக் கண்டு மலர்ந்தன. சீதையின் முகமாகிய அழகு தாமரை கருஞாயிறான இராமன் முகம் கண்டு மலர்ந்தது.
‘பொய்ம் முறை இலரால் எம் புகலிடம் வனமேயால்;
கொய்ம் முறை உறு தாராய்! குறைவு இலெம்; வலியேமால்;
செய்ம் முறை குற்றேவல் செய்குதும்; அடியோமை
இம்முறை உறவு என்னா இனிது இரு, நெடிது எம் ஊர். (2069)
எம் வாழிடம் காடேயாகும். எம் மக்கள் எளிய மனம் படைத்தவர்கள். பகை வெல்லும் திறன் கொண்டவர்கள். உமக்கு அடிபணிந்து ஏவல் செய்கிறோம். எம்மையே உமது உறவினராய் ஏற்று இவ்வினிய பகுதியில் இருப்பீராக.
எம் அரசும் மக்களும் உமக்கு குற்றேவல் செய்வோம் நீ இங்கேயே இருக்க வேண்டும் என்று கேட்கிறான். இனிமையான இப்பகுதியில் நெடிய நாள் நீ இருக்க வேண்டும் என்கிறான் குகன்.
‘தேன் உள, தினை உண்டால், தேவரும் நுகர்தற்கு ஆம்
ஊன் உள, துணை நாயோம் உயிர் உள, விளையாடக்
கான் உள, புனல் ஆடக் கங்கையும் உளது, அன்றோ
நான் உள தனையும் நீ இனிது இரு; நாட, எம்பால் ‘. (2070)
இங்கே காட்டில் தேன் உள்ளது. நிலத்தில் தினை பயிரிடுகிறோம். வானவர்களுக்கு தீயில் அளிக்கும் ஊன் அவி இருக்கிறது. உங்களுக்குத் துணையாக உங்களுக்காக உயிரையும் கொடுக்கும் எம் மக்கள் இருக்கிறார்கள். நீங்கள் மகிழ்ச்சியுறும் காடு இருக்கிறது. நீராட இன்னரு நீர்க்கங்கை இருக்கிறது. என் உயிர் உள்ளவரையும் நீங்கள் இனிதே இங்கு இருக்க வேண்டும்.
அண்ணலும் அது கேளா அகம் நிறை அருள் மிக்கான்,
வெள் நிற நகை செய்தான், ‘வீர! நின் உழை யாம் அப்
புண்ணிய நதி ஆடிப் புனிதரை வழிபாடு உற்று
எண்ணிய சில நாளில் குறுகுதும்; இனிது ‘என்றான். (2073)
இராமன் மகிழ்ந்து முறுவலித்து குகனிடம் இன்னும் சில புண்ணிய நதிகளில் ஆடி மாமுனிவோர் பலரை வணங்கி மீண்டும் இங்கே வருகிறேன் என்றான்.
‘துன்பு உளது எனின் அன்றே சுகம் உளது; அது அன்றிப்
‘பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது ‘என உன்னேல்;
முன்பு உளெம் ஒரு நால்வேம், முடிவு உளது என உன்னா
அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம். ‘ (2084)
இப்பிரிவு இப்போது துன்பம் அளித்தாலும் பின்னர் இன்பம் அளிக்கும். இனி நாம் சந்திக்க முடியுமோ என எண்ணாதே. முன்னர் நாங்கள் நான்கு சகோதரர்கள். இனி முடிவேயில்லாத அன்பு கொண்ட நாம் ஐந்து சகோதரர்கள்.
வெயில் இளம் நிலவே போல் விரி கதிர் இடை வீசப்
பயில் மரம் நிழல் ஈனப் பனி புரை துளி மேகம்
புயல் தர, இள மென் கால் பூ! அளவியது எய்த,
மயில் இனம் நடம் ஆடும் வழி இனியன போனார். (2089)
கதிரொளி நிலவென மென்மையாய் வீச
வன மரங்கள் நிழல் தர
மேகம் சிறு தூறலிட
இளம் காற்றடிக்க
மயில்கள் நடனமிடும்
இனிமையான பாதையில்
சென்றனர்
‘மன்றலின் மலி கோதை மயில் இயல் மடமானே!
இன் துயில் வதி கோபத்து இனம் விரவின எங்கும்
கொன்றைகள் சொரி போதின் குப்பைகள், குலம் மாலைப்
பொன் திணி மணி மானப் பொலிவன பல காணாய். ‘ (2090)
இளமயிலே! பொன் ஆபரணத்தில் பதிக்கப்பட்ட இரத்தினங்களைப் போல் வனத்தில் குவிந்து கிடக்கும் கொன்றை மலர்களைக் காண்பாயாக!
‘பாண் இனம் ஞிமிறு ஆகப் படும் மழை பணை ஆக,
நாணின தொகு பீலி கோலின நடம் ஆடல்,
பூண் இயல்! நின சாயல் பொலிவது, பல கண்ணில்
காணிய எனல் ஆகும் களி மயில் இவை காணாய். (2091)
வண்டுகளின் ரீங்காரம் பாடலாகவும் பெய்யும் மழையொலியை பறை ஆகவும் கொண்டு உனது அழகின் சாயல் கொண்ட தோகைகளை விரித்தாடும் மயில்களின் நடனம் காண்பாயாக!
‘சேந்து ஒளி விரி செவ்வாய்ப் பைங்கிளி செறி கோலக்
காந்தளின் மலர் ஏறிக் கோதுவ, கவின் ஆரும்
மாந் தளிர் நறுமேனி மங்கை! நின் மணி முன்கை
எந்தின எனல் ஆகும் இயல்பின இவை காணாய்! (2092)
மாந்தளிரை ஒத்தவளே! செங்காந்தள் மலரைக் கிளி கொத்துவதைக் காண்பது உனது கையில் கிளி இருப்பதைப் போல் இருக்கிறது.
‘நெய்ஞ் ஞிறை நெடு வேலின் நிறம் உறு திறம் முற்றிக்
கைஞ் ஞிறை நிமிர் கண்ணாய்! கருதின இனம் என்றே
மெய்ஞ் ஞிறை விரி சாயல் கண்டு நின் விழி கண்டு
மஞ்ஞையும் மட மானும் வருவன இவை காணாய். ‘ (2093)
மென்னுடலும் வேற்கண்ணும் கொண்டவளே! உனது அழகைக் கண்டு மயில்களும் மான்களும் உன்னை நோக்கி வருவதைக் காண்பாயாக!
‘அருந்ததி அனையாளே! அமுதினும் இனியாளே!
செருந்தியின் மலர் தாங்கும் செறி இதழின் அசோகம்,
பொருந்திய களி வண்டில் பொதிவன, பொன் ஊதும்
இருந்தையின் எழு தீ ஒத்து எழுவது ஒர் இயல் பாராய். ‘(2095)
கற்பின் வான்மீனே! அமுதினும் இனியவளே! தீயென நிமிர்ந்திருக்கும் மலர்களைக் காண்பாயாக!
‘ஏந்து இளம் முலையாளே! எழுதரும் எழிலாளே!
காந்தளின் முகை கண்ணில் கண்டு, ஒரு களி மஞ்ஞை,
‘பாந்தள் இது ‘என உன்னிக் கவ்வியபடி பாராத்,
தேம் தளவுகள் செய்யும் சிறு குறு நகை காணாய். (2096)
தீட்டுதற்கரிய அழகுள்ளவளே! ஒரு மயில் காந்தள் மொக்கை பாம்பென நினைத்துக் கவ்வுவதைக் கண்டு மெல்ல நகும் முல்லை அரும்புகளைக் காண்பாயாக!
‘குன்று உறை வய மாவின் குருளையும் இருள் சிந்திப்
பின்றின எனல் ஆகும் பிடி தரு சிறு மாவும்
அன்றல பிரிவு ஒல்லா அண்டர்தம் மனை ஆவின்
கன்றொடு விளையாடும் களியன பல காணாய். ‘(2097)
முனிவர்களின் தவக்குடில்களில் புலிக்குருளையும் குட்டி யானையும் பசுங்கன்றும் ஒத்து விளையாடிக் களிப்பதைக் காண்பாயாக!
‘அகில் புரை குழல் மாதே! அணி இழை எனல் ஆகும்
நகும் மலர் நிறை மாலைக் கொம்புகள், நதி தோறும்
துகில் புரை நுரை நீரில் தோய்வன, துறை ஆடும்
முகிழ் இள முலையாரில் மூழ்குவ பல காணாய். ‘ (2098)
மணக்கும் கூந்தல் உடையவளே! இளமகளிரின் நதியாட்டைப் போல நீரலைகளில் மிதக்கும் பொன்னணி போன்ற பூங்கிளைகளைக் காண்பாயாக!
‘முற்றுறும் முகை கிண்டி முரல்கில சிறு தும்பி,
வில் திரு நுதல் மாதே! அம் மலர் விரி கோங்கின்
சுற்று உறும் மலர் ஏறித் துயில்வன சுடர் மின்னும்
பொன் தகடு உறும் நீலம் புரைவன பல காணாய். ‘ (2099)
நீண்டிருக்கும் நெற்றியைக் கொண்டவளே! பொன்னில் பதிக்கப்பட்ட நீலம் போல மலரில் மயங்கி மூழ்கியிருக்கும் வண்டினைக் காண்பாயாக!
‘கூடிய நறை வாயில் கொண்டன, விழிகொள்ளா
மூடிய களி மன்னும் முடுகின, நெறி காணா,
ஆடிய சிறை மா வண்டு அந்தரின் இசை முன்னம்
பாடிய பெடை கண்ணா வருவன, பல காணாய். ‘(2100)
தேனுண்ட மயக்கத்தில் பெண் வண்டுகள் செல்லும் வழியில் தள்ளாடிப் பறந்து செல்கின்ற ஆண் வண்டுகளைக் காண்பாயாக!
‘கன்னியர் அணி கோலம் கற்று அறிகுநர் என்னப்
பொன் அணி நற வேங்கை கோங்குகள் புது மென் பூ,
அன்னம் மெல் நடையாய்! நின் அளி வளர் அளகப் பூம்
சின்ன நல் மலர் மானச் சிந்துவ பல காணாய். ‘(2101)
அன்னம் போன்ற அழகியே! உனது நெற்றியிலும் கூந்தலிலும் சிறு பூக்களை வெவ்வேறு விதத்தில் சூட்டும் கொன்றை மலர்கள் இளம் கன்னியர் புதிதாக அணிக்கலை கற்பதைப் போல கற்கின்றனவா!
‘மணம் கிளர் மலர் வாரும் மாருதம் வர, வாசக்
கணம் கிளர்தரு சுண்ணம் கல் இடையன கானம் அத்து,
அணங்கினும் இனியாய்! உன் அணி வடம் முலை முன்றில்
சுணங்கு இனம் அவை மானத் துறுவன பல காணாய். ‘ (2102)
இனிய தேவதையே! உன் முலைகளுக்கு இடையே இருக்கும் சிறு தேமலைப் போல பாறைகளுக்கு இடையே விரவிக் கிடக்கும் மலர்களின் மகரந்தங்களைக் காண்பாயாக!
‘அடி இணை பொறை கல்லா என்று கொல், அதர் எங்கும்,
இடையிடை மலர் சிந்தும் இனம் மரம் இவை காணாய்!
கொடியினொடு இள வாசக் கொம்புகள், குயிலே! உன்
துடி புரை இடை மானத் துவள்வன இவை காணாய்! ‘ (2103)
குயிலினும் இன்மொழியாளே! உன் பாதங்களுக்கு இதமாக மகரந்தங்களைத் தூவியிருக்கும் மரக்கூட்டங்களைக் காண்பாயாக! உன் இடை துவள்வதைக் கண்டு வெட்கமுறும் தாவரக் கொடிகளைக் காண்பாயாக!
‘வாள் புரை விழியாய்! உன் மலர் அடி அணி மானத்
தாள் புரை தளிர் வைகும் தகை ஞிமிறு இவை காணாய்!
கோள் புரை இருள் வாசக் குழல் புரை மழை காணாய்!
தோள் புரை இளம் வேயின் தொகுதிகள் இவை காணாய்! (2104)
வாள் விழியாளே! உன் பாத ஆபரணம் போல் மென்மையான தளிரில் மயங்கியிருக்கும் வண்டுகளைப் பார். உன் மணம் மிக்க அடர்ந்த கூந்தலைப் போன்ற மழைமேகங்களைப் பார். உனது தோள்களின் அழகை ஒத்த இளமூங்கிலைப் பார்.
‘பூ நனை சினை துன்றிப் புள் இடையிடை பம்பி,
நால் நிற நளிர் வல்லி கொடி நவை இல பல்கி,
மான் இனம் மயில், மாலைக் குயில் இனம் வதி கானம்,
தீ நிகர் தொழில் ஆடைத் திரை பொருவன பாராய்! ‘ (2105)
மானும் மயிலும் குயிலும் அலையும் காந்தள் மலர்ந்திருக்கும் இந்த செங்காடு ஒரு திரைச்சீலையில் பல வடிவங்கள் வரையப்பட்டதைப் போல் அழகாய் இருப்பதைக் காண்க.
என்று, நல் மடவாேளாடு இனிதினின் விளையாடிப்
பொன் திணி திரள் தோளான் போயினன் நெறி; போதும்
சென்றது குடபால்; அத் திருமலை இது அன்றோ?
என்றனன், வினை வென்றோர் மேவு இடம் எனலோடும் (2106)
சீதையுடன் மகிழ்ந்து பேசி நடந்து சென்ற இராமன் மாலை அந்தியில் தவத்தோர் வாழும் சித்ரகூட மலையைக் கண்டு சீதைக்குக் காட்டினான்.
காட்டில் சீதையும் இராமனும் நடந்து வருவதை கம்பன் வெவ்வேறு காட்சிகளில் காட்டுகிறான். சீதையின் இயல்பையும் அழகையும் வெவ்வேறு வார்த்தைகளில் இராமன் சொல்கிறான். அவற்றை சீதையிடம் இராமன் கண்டடைந்த இயல்புகளைக் குறிப்பிடுவதாய் – இராமனின் அழகுணர்ச்சி கொண்ட அகத்தின் காட்சியாக- சீதை மீது கொண்ட தீராக் காதலின் சொல் வெளிப்பாடாக – எடுத்துக் கொள்ளலாம்.
சில தினங்கள் முன்னர் அரசுரிமையை இழந்தவர்கள் அது குறித்து எள் முனையளவும் நினைவின்றி மகிழ்ந்து நடந்து செல்வதை அவர்களின் எளிய மனம் என்று கொள்ளலாம்.
அருத்தியன் அகம் விம்மும் அன்பினன், ‘நெடும் நாளில்
திருத்திய வினை முற்றிற்று இன்று ‘எனல் தரெிகின்றான்,
பரத்துவன் எனும் நாமப் பரமுனி பவ நோயின்
மருத்துவன் அனையானை வரவு எதிர்கொள வந்தான். (2107)
மானுடத் துயர் தீர்ப்பவனாகிய இராமனை நெடுநாள் தவமியற்றிய பரத்வாஜர் தன் தவப்பயனாய் எழுந்த தெய்வமெனக் கண்டு அகமகிழ்ந்து வரவேற்றார்.
குடையினன், நிமிர் கோலன், குண்டிகையினன், மூரிச்
சடையினன், உரி மானின் சருமன், நல் மர நாரின்
உடையினன், மயிர் நாலும் உருவினன், உயிர் பேணும்
நடையினன், மறை நாலும் நடம் நவில்தரு நாவான். (2108)
தவக்குடை உடையவன். கருணையின் கோல் கொண்டவன். ஆற்றலின் கமண்டலம் ஏந்தியவன். கடுமையான நோன்பின் அடையாளமான சடைமுடி கொண்டவன். மான் தோல் போர்த்தியவன். எளிமையான மரவுரி ஆடை அணிந்தவன். மழிக்கப்படாத தாடியைக் கொண்டவன். தவநெறியில் உறுதி படைத்தவன். நாக்கில் எப்போதும் வேதச்சொல் இருப்பவன்.
‘நிறையும் நீர் மலர் நெடுங்கனி கிழங்கு காய் கிடந்த;
குறையும் தீயவை; தூயவை குறைவு இல; எம்மோடு
உறையும் இவ் வழி, ஒருங்கினில் உயர் தவம் முயல்வார்க்கு
இறையும் ஈது அலாது, இனியது ஓர் இடம் அரிது; இன்னும். (2117)
நீர் நிறைந்திருக்கும் எளிய உணவுகள் மிகுதியாய்க் கிடைக்கும் முனிவர்கள் பலர் இருக்கும் இவ்விடம் தவத்திற்கு மிகவும் பொருத்தமானது. நீவிர் இங்கேயே இருப்பீராக!
“கங்கையாெளாடு கரியவள் நாமகள் கலந்த
சங்கம் ஆதலின் பிரியலென்; தாமரைச் செங்கண்
அம் கண் நாயக! அயனுக்கும் அரும் பெறல் தீர்த்தம்
எங்கள் போலியர் தரத்தது அன்று; இருத்தி ஈண்டு‘‘ என்றான். (2118)
கங்கையும் யமுனையும் சரஸ்வதியும் சங்கமிக்கும் பிரயாகை சிறந்த புண்ணியத் துறையும் ஆகும்.
ஆறு கண்டனர், அகம் மகிழ்ந்து இறைஞ்சினர், அறிந்து,
நீறு தோய் மணி மேனியர், நெடும் புனல் படிந்தார்,
ஊறும் மென் கனி கிழங்கினோடு உண்டு நீர் உண்டார்;
‘ஏறி ஏகுவது எங்ஙனம்? ‘ என்றலும் இளையோன்.(2122)
பயணத்தின் புழுதி படிந்த உடல் கொண்ட மூவரும் யமுனையில் நீராடினர். கனிகளையும் கிழங்குகளையும் உண்டனர். யமுனையை எவ்வாறு கடப்பது என்று யோசித்தனர்.
(தொடரும்)

ஓவியங்கள் உதவி: The Story of Rama (depicted via paintings) – khadoo – Medium

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.