விசுவாமித்திரரிடம் வேள்வி நிறைவுறும் வரை இராம லட்சுமணரின் தாய் தந்தை நீரே எனக் கூறி அனுப்பி வைத்தான் தசரதன்.
ஏக வெம் கனல் அரசு இருந்த காட்டினில்
காகமும் கரிகளும் கரிந்து சாம்பின
மாக வெம் கதிர் என வடவைத் தீச் சுட
மேகமும் கரிந்து இடை வீழ்ந்து போலுமே (353)
வெம்கனல் ஆளும் காடு. கனலில் ஆனைகளும் காகங்களும் எரிந்து வீழ்கின்றன. மேகமும் சுட்டெரிக்கப்படுகிறது.
அண்ணல் முனிவர்க்கு அது கருத்து எனினும் ‘ஆவி
உண்’ என வடி கணை தொடுக்கிலன் உயிர்க்கே
துண் எனும் வினைத் தொழில் தொடங்கி உளல் ஏனும்
பெண் என மனத்திடை பெரும்தகை நினைந்தான் (395)
பெரும் தகைமை கொண்டவனான இராமன் தாடகை பெண் என்பதால் அம்பு செலுத்த யோசித்தான்.
ஐயன் அங்கு அது கேட்டு அறன் அல்லவும்
எய்தினால் அது செய்க என்று எய்தினால்
மெய்ய நின் உரை வேதம் எனக் கொடு
செய்கை அன்றோ அறம் செய்யும் ஆறு என்றான்.
விசுவாமித்ரர் கட்டளை என்பதால் தாடகையை வதைப்பேன் என்கிறான்.
பொன் நெடும் குன்றம் அன்னான் புகர் முகப் பகழி என்னும்
மன் நெடுங் காலவன் காற்று அடித்தலும் இடித்து வானில்
கல் நெடு மாரி பெய்ய கடை உகத்து எழுந்த மேகம்
மின்னொடும் அசனியோடும் வீழ்வதே போல வீழ்ந்தாள் (414)
இராமபாணங்கள் காற்றைப் போல் வீசின. தாடகை மேகம் மழையென மண்ணில் விழுவது போல வீழ்ந்தாள்.
முப்புரி நூலினன் விஞ்சியன் விஞ்சை
கற்பது ஓர் நாவன் அனல்படு கையன்
அற்புதன் அற்புதரே அறியும் தன்
சித் பதம் ஒப்பது ஓர் மெய்க்கொடு சென்றான் (440)
வாமன உருவம் கொண்டு திருமால் மாவலியிடம் செல்கிறான்.
நின்ற கால் மண் எலாம் நிரம்பி அப்புறம்
சென்று பாவிற்று இலை சிறிது பார் எனா
ஒன்ற வான் அகம் எலாம் ஒடுக்கி உம்பரை
வென்ற கால் மீண்டது வெளி பெறாமையே (454)
வாமனனின் சிறிய கால்கள் மண் முழுதும் நிரம்பின. இனி இடமில்லை என விண்ணகத்தையும் வென்றன. மூன்றாவது அடிக்கு இடம் இல்லாமல் மீண்டன.
கவித்தனன் கரதலம் கலங்கலீர் எனச்
செவித்தலம் நிறுத்தினன் செவியின் தெய்வநாண்
புவித்தலம் குருதியின் புணரி ஆக்கினன்
குவித்தனன் அரக்கர்தம் சிரசின் குன்றமே (469)
கரதலம் – உள்ளங்கை, செவித்தலம் – செவி, புணரி – கடல்
இராமன் முனிவர்களை தன் உள்ளங்கையைக் காட்டி அமைதிப்படுத்தினான். வில்லின் நாணை செவி வரை இழுத்து சரங்களை செலுத்தினான். புவியை அரக்கர்களின் இரத்தக்கடல் ஆக்கினான். அவர்கள் தலைகளை குன்றெனக் குவித்தான்.
கரதலம் – செவித்தலம் – புவித்தலம்.
நிறுத்தினன் – ஆக்கினன் – குவித்தனன்
வெருவும் ஆலமும் பிறையும் வெள் விடையவற்கு ஈந்து
தருவும் வேறுஉள தகைமையும் சதமகற்கு அருளி
மருவு தொல் பெரு வளங்களும் வேறுஉற வழங்கித்
திருவும் ஆரமும் அணிந்தனன் சீதர மூர்த்தி (503)
பாற்கடல் கடைந்த போது வந்த ஆலமும் பிறையும் சிவனுக்கு. கற்பகத் தருவும் மற்றவையும் தேவர்க்கு. திருமகளும் கௌஸ்துப மணியும் திருமாலுக்கு.
தையலாள் நயன வேலும் மன்மதன் சரமும் பாய
உய்யலாம் உறுதி நாடி உழல்பவன் ஒருநாள் உற்ற
மையலாள் அறிவு நீங்கி மாமுனிக்கு அற்றம் செய்து
பொய்இலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான் (552)
*
எல்லையில் நாணம் எய்தி யாவர்க்கும் நகை வந்து எய்தப்
புல்லிய பழியினோடும் புரந்தரன் போயபின்றை
மெல்லியலாளை நோக்கி விலைமகள் அனைய நீயும்
கல்இயல்ஆதி என்றான் கரும் கல்ஆய் மருங்கு வீழ்வாள் (465)
*
கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல் துகள் கதுவ
உண்ட பேதைமை மயக்குஅற வேறுபட்டு உருவம்
கொண்டு மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்பப்
பண்டை வண்ணமாய் நின்றனள் மாமுனி பணிப்பான் (548)
*
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவது உண்டோ
மைவண்ணத்து அரக்கி போரின் மழைவண்ணத்து அண்ணலே உன்
கைவண்ணம் அங்குக் கண்டேன் கால்வண்ணம் இங்குக் கண்டேன் (559)
அகலிகை சாபம் பெற்றதும், இராமனின் பாததூளி பட்டதும் அகலிகை சாப விமோசனம் பெற்றதும் விசுவாமித்திரர் இராமரின் வீரத்தையும் கருணையையும் விதந்தோதுவதும் மேற்படி பாடல்களில் கூறப்பட்டுள்ளது.
நெய்திரள் நரம்பில் தந்த மழலையின் இயன்ற பாடல்
தைவரு மகரவீணை தண்ணுமை தழுவித் தூங்கக்
கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்ல
ஐயநுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார் (572)
கைவிரல்கள் காட்டும் முத்திரைகளை பார்வையாளர்களின் கண்கள் கற்பனையில் விரித்துக் காண்கின்றன. நடனம் ஆடும் பெண்களின் கண்களின் அபிநயத்தின் பின்னால் பார்வையாளர்களின் மனம் செல்கிறது.
பூசலின் எழுந்த வண்டு மருங்கினுக்கு இரங்கிப் பொங்க
மாசுஉறு பிறவி போல வருவது போவது ஆகிக்
காசுஅறு பவளச் செங்காய் மரகதக் கமுகில் பூண்ட
ஊசலில் மகளிர் மைந்தர் சிந்தையோடு உலவக் கண்டார் (573)
முக்தி பெற ஒரு பிறவி போதும். ஆனால் அறியாமையின் மாசு ஜீவனின் மீது படியப் படிய மீண்டும் மீண்டும் பிறக்க நேர்கிறது. இளம்பெண்கள் ஊஞ்சலில் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் ஆடி வருவது ஜீவன் ஒரு பிறவியிலிருந்து இன்னொரு பிறவிக்கு முடிவில்லாமல் சென்று கொண்டேயிருப்பது போல் இருக்கிறது. ஊஞ்சலின் அலைவு நீளமும் அலைவு நேரமும் மிக அதிகம் என்பதை அடுத்தடுத்த பிறவிகள் போல என்கிறார்.
வரம்புஅறு மணியும் பொன்னும் ஆரமும் கவரி வாலும்
சுரத்துஇடை அகிலும் மஞ்சைத் தோகையும் தும்பிக் கொம்பும்
குரம்புஅணை நிரப்பும் மள்ளர் குவிப்புஉற கரைகள் தோறும்
பரப்பிய பொன்னிஅன்ன ஆவணம் பலவும் கண்டார் (574)
காவேரி பாயும் நெல் வயல்களின் நீண்ட வரப்புகள் போல மிதிலை நகரில் மணியும் பொன்னும் முத்தும் சந்தனக்கட்டைகளும் மயில்தோகையும் யானைத் தந்தமும் கடைத்தெரு நெடுகிலும் குவிக்கப்பட்டுள்ளன.
வாள்அரம் பொருத வேலும் மன்மதன் சிலையின் வண்டின்
கேளொடு கிடந்த நீலச் சுருளும் செம்கிடையும் கொண்டு
நீள்இரும் களங்கம் நீக்கி நிரைமணி மாட நெற்றிச்
சாளரம் தோறும் தோன்றும் சந்திர உதயம் கண்டார் (577)
வேற்கண்களும் வில் போன்ற புருவமும் கொண்ட நிலவு போல் ஒளி வீசும் பெண்கள் தென்படுவது ஒவ்வொரு சாளரத்திலும் சந்திர உதயம் நிகழ்ந்தது போல இருக்கிறது என்கிறார் கம்பர்.
நாம் பண்டைய இலக்கியங்களை வாசிக்கும் போது அதன் அணிமொழி யதார்த்தத்துக்கு வெகு தொலைவில் இருப்பதாய் எண்ண முற்படுகிறோம். அது ஒரு குறைப் பார்வையே. வாழ்வின் ஒவ்வொரு கணமும் மகத்தானது. புத்தம் புதியது. மகத்தான அவ்வாலயத்தின் கதவை கவிஞன் திறக்கிறான். நாம் கற்பனையில் உணர்வில் அந்த மகத்துவத்தின் முன் நிற்போம் என்றால் நம்மை கரையச் செய்யும் அனுபவத்தை அடைவோம்.
வேல் போன்ற கண்கள் கொள்ளும் இலக்கு என்ன? சாளரம் தோறும் தோன்றும் மதிகள் மிதிலை நகரத்துப் பெண்கள் என்றால் அவர்களைக் கொண்டிருக்கும் நகரம் பாற்கடலென ஒளிவிடுகிறதா?
*
பங்கயம் குவளை ஆம்பல் படர்கொடி வள்ளை நீலம்
செங்கிடை தரங்கக் கெண்டை சினைவரால் இனையத் தேம்பத்
தங்கள் வேறுஉவமை இல்லா அவயவம் தழுவிச் சாலும்
மங்கையர் விரும்பி ஆடும் வாவிகள் பலவும் கண்டார் (581)
மலர்களும் மீன்களும் நிறைந்திருக்கும் மிதிலையின் தடாகங்களில் பெண்கள் புனலாடுகின்றனர். மலர்களும் மீன்களும் தாம் புனலாடும் பெண்களின் அழகுக்கு எவ்விதத்திலாவது ஒப்புமை ஆவோமோ என ஏங்குகின்றன.
பொன்னின் சோதி போதினின் நாற்றம் பொலிவே போல்
தென் உண் தேனில் தீம்சுவை செம்சொல் கவி இன்பக்
கன்னிமாடத்து உம்பரின் மாடே களி பேடோடு
அன்னம் ஆடும்முன் துறை கண்டு அங்கு அயல் நின்றார் (586)
நறுமணம் மிக்க இனிய மலர் போன்ற சீதை பொன்னொளி மின்ன கவி இன்பம் போல் காட்சி தருவதை மூவரும் கண்டனர்.
கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவை
எல்லாம் வெல்லும் வெல்லும் என மதர்க்கும் விழி கொண்டாள்
சொல்லும் தன்மைத்து அன்று அது குன்றும் சுவரும் திண்
கல்லும் புல்லும் கண்டு உருகப் பெண்கனி நின்றாள் (595)
சீதையின் கூரான விழிகள் வேலை விடக் கூர்மையாக உள்ளன. கூற்றுவனை விடத் துல்லியமாக உள்ளன. சீதை அருகிருக்கும் போது குன்றும் பாறைகளும் புல்லும் கூட அவள் கருணையால் உருகி விடும் எனும்படியாக சீதை கனிந்து நின்றிருந்தாள்.
அவளது ஆற்றலுக்கு வேலையும் கூற்றையும் வெல்லும் அவள் கண்கள் காட்ட்ப்படுகின்றன. அவள் கண்களில் வெளிப்படும் கருணையால் மலையும் உருகும் என்கிறார் கம்பர். ஆற்றலும் கனிவும் ஒருங்கே பெற்ற அன்னை சீதை.
இழைகளும் குழைகளும் இன்ன முன்னமே
மழைபொறு கண்இணை மடந்தைமாரொடும்
பழகிய எனினும் இப்பாவை தோன்றலால்
அழகு என்னும் அவையும் ஓர் அழகு பெற்றவே (597)
தாம் அணியப்படும் போது பிற பெண்களுக்கு அழகு தரும் அணிகலன்கள் சீதையால் அணியப்படும் போது சீதையின் அழகைப் பெற்றுக் கொண்டன.
எண்அரும் நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் (598)
இராமனும் சீதையும் பார்த்துக் கொண்ட போது விழிகள் சந்தித்தன. இருவரின் உணர்வும் ஒன்றென ஆனது.
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணைத்து
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்
வரிசிலை அண்ணலும் வாள்கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார் (600)
விழிகளில் உருவான காதல் இராமனின் இதயத்தில் சீதையையும் சீதையின் இதயத்தில் இராமனையும் இடம்பெறச் செய்தது.
இந்திரநீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணி வரைத் தோளுமே அல
முந்தி எம்உயிரை அம்முறுவல் உண்டதே (619)
சைவத்தில் சிவபெருமான் நகைமுகன் எனப்படுகிறார். வானில் தன் மீது படை கொண்டு வந்த அசுரர்களைக் கண்டு மெல்லப் புன்முறுவல் பூக்க அப்படை சிதறி உடைந்தது. அப்பர் பிரான், கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் என்கிறார்.
இராமனின் மென்முறுவல் தன் உயிரை உண்டது என்கிறாள் சீதை. இராமனின் மென்முறுவலிடம் சென்று சேர்கிறது சீதையின் அகமும் உயிரும்.
இந்திர நீலம் போன்ற சிகையும் பிரகாசிக்கும் சந்திரனைப் போன்ற முகமும் நீண்ட கைகளும் மலை போன்ற தோள்களும் முதலில் என் உயிரைக் கவரவில்லை; மாறாக இராமனின் புன்னகையே தன் உயிரைக் கவர்ந்தது என்கிறாள் சீதை.
அன்ன மெல்நடை அவட்கு அமைந்த காமத் தீத்
தன்னையும் சுடுவது தரிக்கிலான் என
நல் நெடும் கரங்களை நடுக்கி ஓடிப் போய்
முன்னை வெங் கதிரவன் கடலில் மூழ்கினான் (624)
இராமனைக் கண்ட சீதையைக் காமத்தீ சுடுகிறது. அத்தீயின் வெம்மையைக் கண்டு அஞ்சிய கதிரவன் மேலைக் கடலில் மூழ்கி அஸ்தமித்தான்.
கடலோ மழையோ முழுநீலக் கல்லோ காயா நறும்போதோ
படர்பூ குவளை நறுமலரோ நீலோற்பலமோ பானலோ
இடர்சேர் மடவார் உயிர் உண்பது யாதோ? என்று தளர்வாள் முன்
அடல்சேர் அசுரர் நிறம் போலும் அந்திமாலை வந்ததே (628)
நீக்கம் இன்றி நிறைந்த நிலாக்கதிர்
தாக்க வெந்து தளர்ந்து சரிந்தனள்
சேக்கை ஆகிஅலர்ந்த செம்தாமரைப்
பூக்கள் பட்டனள் பூவையும் பட்டனள் (642)
அந்த இரவில் எங்கும் நிறைந்திருந்த நிலவொளி காமத்தீயாக சீதையைச் சுட்டது. சீதை படுத்திருந்த மலர்ப்படுக்கையும் அச்சூட்டால் சுடப்பட்டது.
முனியும் தம்பியும் போய்முறையால் தமக்கு
இனிய பள்ளிகள் எய்தினர் போய் இருள்
கனியும் போல்பவன் கங்குலும் திங்களும்
தனியும் தானும்அத் தையலும் ஆயினான் (702)
இராமன் தன் அறையில் இருக்கிறான். அங்கே இரவு இருக்கிறது. நிலவு இருக்கிறது. இருட்கனி போன்ற இராமன் இருக்கிறான். அவனது தனிமை இருக்கிறது. தனிமையில் சீதை பற்றியே எண்ணுகிறான். தானும் தனிமையும் என இருந்த இராமன் சீதை மட்டுமேயான நினைவால் சீதையாகவே ஆகிறான்.
வள்ளச் சேக்கைக் கரியவன் வைகுறும்
வெள்ளப் பால்கடல் போல் மிளிர் கண்ணினாள்
அள்ளல்பூ மகள் ஆகும்கொலோ எனது
உள்ளத் தாமரையுள் உறைகின்றதால்(704)
பாற்கடலைப் போன்ற கண்களைக் கொண்ட சீதை இராமனின் உள்ளத்தாமரையில் அமர்ந்திருக்கிறாள். தாமரையில் வீற்றிருக்கும் சீதை திருமகள் தானோ என இராமன் ஐயுறுகின்றான்.
பூண் உலாவிய பொன் கலசங்கள் என்
ஏண் இன்ஆகத்து எழுதல என்னினும்
வாள்நிலா முறுவல் கனிவாய் மதி
காணல் ஆவதுஆம் காலம் உண்டோ கொல் (706)
இராமன் எண்ணுகிறான்: அணிகள் அணியப்பெற்ற பொற்கலசங்கள் போன்ற முலைகளை உடைய சீதையைத் தழுவ முடியாமல் போனாலும் ஒளி வீசக் கூடிய நிலவைப் போன்ற புன்னகையையும் கனி போல சிவந்த உதடுகளையும் கொண்ட சீதையின் முகத்தையாவது மீண்டும் பார்க்க முடியுமா? பார்க்க முடியாமல் போகுமா?
கன்னல் இன் கருப்புச் சிலையான் விரைப்
பொன்னை முன்னிய பூங்கணை மாரியால்
என்னை எய்து தொலைக்கும் என்றால் இனி
வன்மை என்னும் இது ஆரிடை வைகுமே (708)
மாறன் அம்புகள் இராமனைத் தாக்குகின்றன. இராமன் அத்தாக்குதலால் நிலையழிந்து மாறன் அம்புகளால் வீழ்த்தப்படும் தான் இனி எவ்விதம் வீரன் என எண்ணுவேன் என வருத்தமுறுகிறான்.
கொள்ளை கொள்ளக் கொதித்து எழு பாற்கடல்
பள்ள வெள்ளம் எனப் படரும் நிலா
உள்ள உள்ள உயிரைத் துருவிட
வெள்ளை வண்ண விடமும் உண்டாங் கொல்லோ(709)
நிலவின் வெள்ளொளி பாற்கடல் போல இராமனைச் சூழ்கிறது. அவ்வொளி சீதையின் நினைவால் வருந்தும் இராமனின் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாக நீக்குகிறது. வெண்ணிறத்தில் விடம் இருக்கக் கூடுமா என இராமன் திகைக்கிறான்.
விசை ஆடல் பசும் புரவிக் குரம் மிதிப்ப உதயகிரி விரித்த தூளி
பசை ஆக மறையவர்கை நறை மலரும் நிறைபுனலும் பரந்து பாய
அசையாத நெடு வரையின் முகடு தொறும் இளங்கதிர் சென்று அலைந்து வெய்யோன்
திசைஆளும் மதகரியைச் சிந்தூரம் அப்பிய போல், சிவந்த மாதோ(714)
பிரிவுத் துயரால் நீண்ட இரவு முடிந்து காலை மலர்கிறது. அக்காலை விடியல் கருநிற யானை மேல் சிவந்த குங்குமம் பூசியது போல கருமையும் செம்மையும் கொண்ட பொழுதாக இருந்தது.
பொழிந்த நெய்ஆகுதி வாய் வழி பொங்கி
எழுந்த கொழும் கனல் என்ன எழுந்தான்
‘அழிந்தது வில்’ என விண்ணவர் ஆர்த்தார்
மொழிந்தனர் ஆசிகள் முப்பகை வென்றார் (775)
வேள்வித் தீ எழுவது போல இளந்தீயென எழுந்தான் இராமன். கொழும் கனல்- இளம் கனல். அவன் எழுந்த விரைவில் ‘அழிந்தது வில்’ என மகிழ்ந்தனர் தேவர்கள். முனிவர்கள் ஆசி கூறினர்.
தூய தவங்கள் தொடங்கிய தொல்லோன்
ஏயவன் வல் வில் இறுப்பதன் முன்னம்
சேயிழை மங்கையர் சிந்தை தொறு எய்யா
ஆயிரம் வில்லை அனங்கன் இறுத்தான் (776)
வில்லை எடுக்க எழுந்த இராமனை மண்டபத்தில் உள்ள பெண்கள் காண்கின்றனர். இராமன் சிவவில்லை எடுப்பதற்கு முன்பே மன்மதன் வில்லிலிருந்து புறப்பட்ட மலரம்புகள் அப்பெண்களின் மனத்தில் தைத்தன.
தோகையர் இன்னன சொல்லிட நல்லோர்
ஓகை விளம்பிட உம்பர் உவப்ப
மாக மடங்கலும் மால் விடையும் பொன்
நாகமும் நாகமும் நாண நடந்தான் (781)
இராமன் வில்லை நோக்கி நடந்து செல்லும் பாங்கு மேருமலையும் யானையும் காளையும் நடப்பது போல் இருந்தது.
ஒருவரின் நடை என்பது அவரவரின் மன அமைப்பின் வெளிப்பாடே. காளை சாதாரண சூழ்நிலையில் எவ்வித அவசரமும் காட்டாது. மெல்ல உறுதியாக முன்னே நடப்பது என்பது அதன் இயல்பு. அதில் ஓர் அரசகளை இருக்கும். யானை அழகுற நடப்பது. அதன் நடை பார்ப்பவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தரும். மலை நடப்பது என்பது ஓர் அரிய கற்பனை. யாரும் பார்த்தறியாதது.
இராமனின் நடை இதுவரை யாரும் பார்த்தறியாததாகவும் பார்ப்பவர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதாகவும் மெல்ல உறுதியாக முன்னேறிச் செல்வதாகவும் இருந்தது என்பதை ‘’மால் விடையும் பொன் நாகமும் நாகமும் நாண நடந்தான்’’ என்கிறார்.
பெருமலை போன்ற வில்லை சீதையின் மீதான காதலால் சீதைக்கு அணிவிக்கும் மலர்மாலை என இராமன் எடுக்கிறான்.
மலை போன்ற வில் சீதை மீதான பெருங்காதலால் இராமனுக்கு மலர்மாலை போன்று எளிதானதாயிற்று.
மலையை மலர்மாலை போல் எடுக்கும் அளவு வலிமையாயிருக்கிறது இராமனுக்கு சீதை மீதான காதல்.
தடுத்து இமையாமல் இருந்தவர் தாளின்
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால்
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார் (783)
அந்நிகழ்வு அரிதானது என்பதால் அதன் எந்த ஒரு துளியையும் தவறவிட்டுவிடக் கூடாது என இமைக்காமல் அதனை நோக்கியிருந்தனர். அப்படியிருந்தும் இராமன் கையில் வில்லை எடுத்ததைப் பார்த்தனர். அது முறியும் சத்தத்தை கேட்டனர். இமைப்பொழுதுக்கும் குறைவான நேரத்தில் இராமன் வில்லை முறித்தான்.
பூமழை சொரிந்தார் விண்ணோர் பொன்மழை பொழிந்த மேகம்
பாம மா கடல்கள் எல்லாம் பல் மணி தூவி ஆர்த்த
கோமுனிக் கணங்கள் எல்லாம் கூறின ஆசி கொற்ற
நாமம் வேல் சனகன் இன்று என் நல்வினை பயந்தது என்றான் (785)
அப்போது வானிலிருந்து பூக்கள் சொரிந்தன. பொன் துளிகளான மழை பெய்தது. முனிவர்கள் ஆசி கூறினர்.
ஐயன் வில் இறுத்த ஆற்றல் காணிய அமரர் நாட்டுத்
தையலார் இழிந்து பாரின் மகளிரைத் தழுவிக் கொண்டார்
செய்கையின் வடிவின் ஆடல் பாடலில் தெளிதல் தேற்றார்
மைஅரி நெடுங்கண் நோக்கம் இமைத்தலும் மயங்கி நின்றார் (790)
மணத் தன்னேற்பைக் காண வான்மகளிர் வந்திருந்தனர். அங்கிருந்த பெண்களின் நடனத்தைக் கண்டு அவர்களுடன் இணைந்து ஆடி மகிழ்ந்தனர். அப்போது அப்பெண்களின் கண்கள் இமைப்பது கண்டு திகைத்தனர்.
பெண் இவண் உற்றது அன்னும் பெருமையால் அருமை ஆன
வண்ணமும் இலைகளாலே காட்டலால் வாட்டம் தீர்ந்தேன்
தண் நறுங் கமலங்காள் என் தளிர்நிறம் உண்ட கண்ணின்
உள்நிறம் காட்டினீர் என் உயிர் தர உலோவினீரே (795)
தாமரை மலர்களே! நீங்கள் இராமனை நினைவுபடுத்தினீர்கள்; ஆனால் இராமனை என்னிடம் கொண்டு சேர்க்கவில்லை. இராமன் இப்போது வந்து சேர்ந்தான்.
பஞ்சு அரங்கு தீயின் ஆவிபற்ற நீடு கொற்ற வில்
வெம் சரங்கள் நெஞ்சு அரங்க வெய்ய காமன் எய்யவே
சஞ்சலம் கலந்த போது தையலாரை உய்ய வந்து
அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மை என்ன ஆண்மையே (798)
சீதை நினைக்கிறாள்: இராமன் என்ன பெரிய வீரன்! அவன் நினைவு மனத்தில் இருந்த போது மன்மதனின் அம்புகள் பஞ்சு போன்ற என் உயிரைத் தீயென எரித்தன. அப்போது ஆறுதலாய் என் அருகில் இராமன் இருக்கவில்லையே!
மாறு காண்கிலதாய் நின்று மழை என முழங்கும்
தாறு பாய் கரி வன கரி தண்டத்தைத் தடவிப்
பாறு பின் செலக் கால் எனச் செல்வது பண்டு ஓர்
ஆறு போகிய ஆறு போம் ஆறு போன்றதே (902)
முன் சென்ற தடத்தை மீண்டும் கண்டு அதில் பாய்ந்து செல்லும் ஆற்றைப் போல ஆனைக்கூட்டத்தின் மோப்பம் கண்டு அவற்றுடன் மோத ஒரு தனியானை விரைந்து சென்றது.
உய்க்கும் வாசிகள் இழிந்து இள அன்னத்தின் ஒதுங்கி
மெய்க் கலாபமும் குழைகளும் இழைகளும் விளங்கத்
தொக்க மெல் மர நிழல்படத் துவன்றிய சூழல்
புக்க மங்கையர் பூத்த கொம்புஆம் எனப் பொலிந்தார் (907)
அணிகளால் அழகு செய்யப்பட்டிருந்த இளம்பெண்கள் மரத்தின் அடியில் நின்றிருந்தனர். அவர்கள் அங்கே நின்றிருப்பது மரக்கிளை பூத்திருப்பது போல் இருந்தது.
நீர் திரை நிரைத்த என நீள் திரை நிரைத்தார்
ஆர்கலி நிரைத்த என ஆவணம் நிரைத்தார்
கார்நிரை எனக் களிறு காஇடை நிரைத்தார்
மாருதம் நிரைத்த என வாசிகள் நிரைத்தார் (911)
மறைப்புக்கான திரைகள் கடலில் இருக்கும் அலைகள் போல எங்கும் அமைக்கப்பட்டிருந்தன. கடைவீதி கடல் போல பெரிதாக இருந்தது. யானைகள் மேகக்கூட்டம் போல ஆங்காங்கே கட்டப்பட்டிருந்தன. குதிரைகள் காற்றைப் போல எங்கும் நிறைந்திருந்தன.
பானல்அம் கண்கள் ஆடப் பவளம் வாய்முறுவல் ஆடப்
பீன வெம் முலையின் இட்ட பெருவிலை ஆரம் ஆடத்
தேன் முரன்று அளகத்து ஆடத் திரு மணிக் குழைகள் ஆட
வானவர் மகளிர் ஆடும் வாசம் நாறு ஊசல் கண்டார் (947)
இளம் பெண்கள் ஊஞ்சல் ஆடுகின்றனர். குவளை மலர் போன்ற கண்கள் உற்சாகத்தில் இங்கும் அங்கும் ஆடுகிறது. மார்பில் அணிந்திருக்கும் ஆரம் ஆடுகிறது. அவர்களின் மலர் மணக்கும் கூந்தல் அசைகிறது. அதனை வண்டுகள் சுற்றுகின்றன. அப்பெண்கள் அணிந்திருக்கும் தோடு அசைந்து ஆடுகிறது. வானத்துப் பெண்களின் களியாட்டெனத் தோன்றுமாறு இளம்பெண்கள் ஊஞ்சல் ஆடினர்.
இளம் பெண்கள் ஊஞ்சல் ஆடுவதை கவிஞன் ஏன் இவ்வளவு வர்ணிக்கிறான் என்று தோன்றும். யோசித்துப் பார்த்தால் வாழ்வின் அழகு என்பது நோக்குபவனின் அகம் சார்ந்தது. கோடிக்கணக்கான மக்கள் ஒரு நாளில் ஒரு கணம் கூட வானத்தை நோக்காத வாழ்க்கை வாழ்கின்றனர்.
எனினும் ஒவ்வொரு நாளும் நிகழும் கதிரெழுகையும் கதிர் மறைவும் புலரும் இருளும் அந்திகளும் எவ்வளவு அழகானவை! அதன் அழகு யாரோ சிலரால் மட்டுமே உணரப்படுகிறது. ஒரு குழந்தைக்கு ஒரு துறவிக்கு காதல் உணர்வில் அகம் கனிந்திருக்கும் காதலர்களுக்கு ஒரு கவிஞனுக்கு வானம் அழகின் கொண்டாட்டமாக இருக்கிறது.
கவிஞன் படைப்பவன் ஆதலால் அவன் காணும் அழகை வெவ்வேறு விதமாக வெவ்வேறு முறையில் கூறிப் பார்க்கிறான். அவன் அழகை வெவ்வேறு விதமாகக் கூறுவது அவன் படைப்பியக்கத்தின் உயிர்.
மேலே உள்ள பாடலில் இளம் பெண்கள் ஊஞ்சலாடும் காட்சி கவிஞன் மனதில் தோன்றும் போது எப்போதும் ஆடும் அவர்கள் கண்கள் அவன் நினைவுக்கு வருகிறது. ஒரு விரைவான திரும்பலில் அசையும் மணியாரம் அவன் நினைவில் வருகிறது. எதிர்பாராமல் எப்போதும் அசையும் தோடு நினைவில் வருகிறது. இவை அனைத்தையும் தன் சொல்லில் அழகுற அடுக்கிப் பார்க்கிறான் கம்பன்.
நஞ்சினும் கொடிய நாட்டம் அமுது என நயந்து நோக்கிச்
செஞ்செவே கமலக் கையால் தீண்டலும் நீண்ட கொம்பர்
தம்சிலம்பு அடியில் மென்பூச் சொரிந்து உடன் தாழ்ந்த என்றால்
வஞ்சிபோல் மருங்குலார் மாட்டு யாவரே வணங்கலாதார் (981)
இப்பாடலில் கம்பன் கூறுமுறையில் ஒரு யுக்தியைக் கையாள்கிறான். பெண்கள் தங்கள் கண்கள் வழியே தங்கள் மனதின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடியவர்கள். அவர்களால் வெறுப்பையும் ஓர் எளிய நோக்கில் வெளிப்படுத்திட முடியும். கனிவையும் வெளிப்படுத்திட முடியும்.
அமுதும் நஞ்சும் பாற்கடலில் ஒன்றாகவே இருந்தன. அப்பெண்களின் கண்கள் நஞ்சாகவும் இருக்கின்றன. அமுதாகவும் இருக்கின்றன. சமயத்தில் நஞ்சென நோக்குகிறார்கள். சமயத்தில் அமுதென நோக்குகிறார்கள்.
தம் அமுதக் கண்களால் மரத்தை நோக்கி அதன் கிளையைத் தீண்டுகிறார்கள். அவர்களின் மென்பாதங்களில் அம்மரம் பூவைச் சொரிகிறது. அப்பெண்களைக் காணும் யார்தான் அவர்களை வணங்காமல் இருப்பார்கள்?
அம்புயத்து அணங்கின் அன்னார் அம்மலர்க் கைகள் தீண்ட
வம்புஇயல் அலங்கல் பங்கி வாள்அரி மருளும் கோளார்
தம்புய வரைகள் வந்து தாழ்வன தளிர்த்த மென்பூங்
கொம்புகள் தாழும் என்றல் கூறல்ஆம் தகைமைத்து ஒன்றா (982)
இளம்பெண்களின் தீண்டலுக்கு மலை போன்ற தோள்களையுடைய ஆடவர்களே பணிகின்றனர். மரங்களின் கிளைகள் பணிவதை சிறப்பாகக் கூற வேண்டுமா?
நதியினும் குளத்தும் பூவா நளினங்கள் குவளையோடு
மதிநுதல் வல்லி பூப்ப நோக்கிய மழலைத் தும்பி
அதிசயம் எய்திப் புக்கு வீழ்ந்தன அலைக்கப் போகா
புதியன கண்ட போழ்து விடுவரோ புதுமை பார்ப்பார் (983)
தாமரை போல் மலர்ந்திருந்தன இளம் பெண்களின் முகங்கள். அம்முகத்தில் குவளை போல் பூத்திருந்தன அவர்கள் கண்கள். இப்புதிய மலர்கள் கண்டு வண்டுகள் நீங்காமல் அவர்களைச் சுற்றின.
ஊக்கம் உள்ளத்து உடைய முனிவரால்
காக்கல் ஆவது காமன் கை வில் எனும்
வாக்கு மாத்திரம் அல்லது வல்லியில்
பூக் கொய்வாள் புருவக் கடை போதுமே (1009)
மன்மதனின் மலர்க்கணைகள் முனிவர்களின் உள்ளத்தை அசைக்க முயன்று தோற்கின்றன. மன்மதன் மலர்க்கணைகளுக்கு இல்லாத ஆற்றல் இளம்பெண்களின் கடைக்கண் பார்வைக்கு இருக்கிறது.
ஆம் குவளை எல்லாம் மாதர்கள் மலர்க்கண் பூத்த
கைய ஆம் உருவத்தார் தம் கண்மலர் குவளை பூத்த
செய்ய தாமரைகள் எல்லாம் தெரிவையர் முகங்கள் பூத்த
தையலார் முகங்கள் செய்ய தாமரை பூத்த அன்றே (1016)
தடாகத்தில் குவளை மலர் பெண்களின் கண்களைப் போல பூத்திருந்தது. செந்தாமரை பெண்களின் முகத்தைப் போல பூத்திருந்தது.
பண்உள பவளம் தொண்டை பங்கயம் பூத்தது அன்ன
வண்ணவாய் குவளை வாள்கண் மருங்குஇலாக் கரும்பின் அன்னார்
உள்நிறை கயலை நோக்கி ஓடும் நீர்த் தடங்கட்கு எல்லாம்
கண்உளஆம் கொல் என்று கணவரை வினவுவாரும் (1020)
இல்லை என்று சொல்லத்தக்க- நுண்ணிய இடை கொண்ட கரும்பென இனிக்கும்-மலர்க்கண்களைக் கொண்ட- இளம் பெண்கள் நீராடுகையில் கண்ட கயல்மீன்களை இவை தடாகத்தின் கண்களா என அவர்கள் கணவர்களிடம் கேட்டனர்.
தேர்இடைக் கொண்ட அல்குல் தெங்கு இடைக் கொண்ட கொங்கை
ஆர்இடைச் சென்றும் கொள்ள ஒண்கிலா அழகு கொண்டாள்
வார் இடைத் தனம் மீது ஆட மூழ்கினாள் வதனம் மை தீர்
நீர்இடைத் தோன்றும் திங்கள் நிழல் எனப் பொலிந்தது அன்றே (1030)
ஓர் இளம்பெண் நீராடுகிறாள். அது சந்திரனின் நிழல் நீராடுவது போல் இருக்கிறது.
ஆறு எலாம் கங்கையே ஆய ஆழிதாம்
கூறு பால் கடலையே ஒத்த குன்று எலாம்
ஈறுஇலான் கயிலையை இயைந்த என்இனி
வேறு யாம் புகல்வது நிலவின் வீக்கமே (1049)
தூ வெண் மதி ஒளி வீசுகிறது. அவ்வெண்ணொளி வீச்சில் ஆறுகள் அனைத்தும் கங்கையென ஒளிர்கின்றன. ஆழி பாற்கடலென ஒளி வீசுகிறது. மலைகள் அனைத்தும் வெள்ளிப் பனிமலை கயிலையைப் போல ஒளி வீசுகின்றன. அந்நிலவொளியைப் பற்றி வேறு என்ன சொல்ல?
குங்குமம் உதிர்ந்தன கோதை சோர்ந்தன
சங்கினம் முரன்றன கலையும் சாறின
பொங்கின சிலம்புகள் பூசல் இட்டன
மங்கையர் இளநலம் மைந்தர் உண்ணவே (1109)
காதலர்கள் கூடுகையில் குங்குமம் உதிர்ந்தது. மலர்மாலைகள் கசங்கின. வளையல்கள் ஓசையிட்டன. ஆடைகள் நெகிழ்ந்தன. சிலம்புகள் ஒலி எழுப்பின.
மான்இனம் வருவ போன்றும் மயில்இனம் திரிவ போன்றும்
மீன்இனம் மிளிர்வ போன்றும் மின்இனம் மிடைவ போன்றும்
தேன்இனம் சிலம்பி ஆர்ப்பச் சிலம்புஇனம் புலம்ப எங்கும்
பூநனை கூந்தல் மாதர் பொம்மெனப் புகுந்து மொய்த்தார் (1148)
மிதிலை நகர்ப் பெண்கள் மான் கூட்டங்கள் வருவது போலவும் திரியும் மயில்களைப் போலவும் மினுக்கும் விண்மீன்கள் போலவும் மின்னற்கூட்டம் போலவும் தேனீக்களைப் போலவும் பறவைக்கூட்டங்களைப் போலவும் நகரில் நிரம்பினர்
விரிந்துவீழ் கூந்தல் பாரார் மேகலை அற்ற நோக்கார்
சரிந்தபூம் துகில்கள் தாங்கார் இடை தடுமாறத் தாழார்
நெருங்கினர் நெருங்கிப் புக்கு நீங்குமின் நீங்குமின் என்று
அரும்கலம் அனைய மாதர் தேன்நுகர் அளியின் மொய்த்தார் (1149)
அழகிய பெண்கள் இராமன் அழகைக் காண விரும்பி இராமனை நெருங்கிச் சூழ்ந்தனர்.
தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக் கை கண்டாரும் அஃதே
வாள் கண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார் (1166)
இறை என்பது அனைத்துமாக இருப்பது. எனினும் ஒவ்வொரு சமயத்தவரும் ஒவ்வொரு விதமாகவே காண்கின்றனர். அடுத்த சமயத்தவர் காணும் முறையில் காண்பதில்லை. எனவே அனைத்து இறை வடிவங்களையும் கண்டவர் எவருமில்லை.
அது போலவே இராமனின் தோள் அழகை முதலில் கண்டவர்கள் தோளையே கண்டு கொண்டிருந்தனர். தாமரைப்பாதங்களைக் கண்டவர்கள் பாதங்களையே கண்டு கொண்டிருந்தனர். நெடிய கைகளைக் கண்டவர்கள் கைகளையே கண்டு கொண்டிருந்தனர். இராமனின் முழு அழகைக் கண்டவர்கள் எவருமில்லை.
அருப்பு மெல் முலையாள் அங்கு ஓர் ஆய்இழை
இருப்பு நெஞ்சினையேனும் ஓர் ஏழைக்காய்
பொருப்பு வில்லைப் பொடி செய்த புண்ணியா
கருப்பு வில் இறுத்து ஆள் கொண்டு கா என்றாள் (1169)
இராமனிடம் ஒரு பெண் கூறுகிறாள்: சீதைக்காகக் கடினமான சிவதனுசை ஒடித்த இராமனே உன் நினைவால் வாடும் என் மீது மலரம்புகளை வீசும் மன்மதனின் கரும்பு வில்லை எனக்காக ஒடித்து என்னைக் காப்பாற்று.
அமிழ் இமைத் துணைகள் கண்ணுக்கு அணி என அமைக்குமா போல்
உமிழ் சுடர்க் கலன்கள் நங்கை உருவினை மறைப்பது ஓரார்
அமிழ்தினைச் சுவை செய்து என்ன அழகினுக்கு அழகு செய்தார்
இமிழ் திரைப் பரவை ஞாலம் ஏழைமை உடைத்து மாதோ (1204)
பெண்களின் கண்கள் அழகானவை. ஆனால் இறை சிருஷ்டியில் சீதையின் இமைகளும் கூட அழகானவையாக உள்ளன. சீதையின் அழகை அணிகள் மறைக்கும் என்பது தெரியாமல் அமிழ்தத்துக்கு சுவையூட்ட செய்யும் முயற்சி போல சீதைக்கு அழகூட்ட முயன்றனர்.
வெள்ளத்தின் சடிலத்தான் தன் வெம்சிலை இறுத்த வீரன்
தள்ளத் தன் ஆவி சோரத் தனிப் பெரும் பெண்மை தன்னை
அள்ளிக் கொண்டு அகன்ற காளை அல்லன் கொல் ஆம் கொல் என்பாள்
உள்ளத்தின் ஊசல் ஆடும் குழை நிழல் உமிழ இட்டார் (1207)
மனதைப் போல இங்கும் அங்கும் அலையும் இயல்பு கொண்ட தோடினை சீதை செவிகளில் அணிவித்தனர்.
கோன் அணி சங்கம் வந்து குடி இருந்த அனைய கண்டத்து
ஈனம்இல் கலன்கள் தம்மில் இயைவன அணிதல் செய்தார்
மான்அணி நோக்கினார்தம் மங்கலக் கழுத்துக்கு எல்லாம்
தான்அணி ஆன போது தனக்கு அணி யாது மாதோ? (1208)
எல்லாப் பெண்களும் கழுத்தில் அணியும் திருமாங்கல்யம் சீதை. அச்சீதையின் கழுத்துக்கு எதனை ஆபரணமாக அணிவிப்பது?
கோண் இலா வான மீன்கள் இயைவன கோத்தது என்கோ
வாள்நிலா வயங்கு செவ்வி வளர்பிறை வகிர்ந்தது என்கோ
நாணில் ஆம்நகையில் நின்ற நளிர்நிலாத் தவழ்ந்தது என்கோ
பூண்நிலாம் முலைமேல் ஆர முத்தை யான் புகல்வது என்னோ (1209)
சீதை அணியும் முத்து மாலை விண்மீன்களின் ஒளியால் கோர்க்கப்பட்டதா? நிலவொளியால் செய்யப்பட்டதா? இராமனைக் காண நாணும் சீதையின் முகத்தின் ஒளியிலிருந்து பெறப்பட்டதா? அம்முத்தின் அழகை என்னென்று சொல்வேன்?
மொய்கொள் சீறடியைச் சேர்ந்த முளரிக்கும் செம்மை ஈந்த
தையலாள் அமிழ்த மேனி தயங்கு ஒளி தழுவிக்கொள்ள
வெய்ய பூண் முலையில் சேர்ந்த வெண்முத்தம் சிவந்த என்றால்
செய்யரைச் சேர்ந்துளாரும் செய்யராய்த் திகழ்வர் அன்றே (1210)
செந்தாமரை மலர்கள் தாமரையின் பாதத்தில் சரணடைந்து கிடக்கின்றன. அப்போது சீதையின் சிவந்த பாதங்களிலிருந்து சிவப்பு நிறத்தைப் பெறுகின்றன. அமிழ்தம் போன்று ஒளிர்கின்ற சீதையின் சிவந்த மார்பில் இருந்த வெண்முத்தும் சிவந்தது.
ஐயஆம் அனிச்சப் போதின் அதிகமும் நொய்ய ஆடல்
பைஅரவு அல்குலாள் தன் பஞ்சுஇன்றிப் பழுத்த பாதம்
செய்யபூம் கமலம் மன்னச் சேர்த்திய சிலம்பு சால
நொய்யவே நொய்ய என்றே பல பட நுவல்வது அம்மா (1215)
சீதையின் சிவந்த பாதங்கள் அனிச்ச மலரைப் போல மென்மையானவை. தாமரை போன்ற அப்பாதத்தில் அணிவிக்கப்படும் சிலம்பு மெல்லிய ஒலி எழுப்புகிறது. அவ்வொலி சீதையின் பாதத்தின் மென்மையை மெல்ல அறிவிக்கிறதோ?
நஞ்சுஇடை அமிழ்தம் கூட்டி நாட்டங்கள் ஆன என்னச்
செஞ்செவே நீண்டு மீண்டு சேய்அரி சிதறித் தீய
வஞ்சமும் களவும் இன்றி மழை என மதர்த்த கண்கள்
அஞ்சன நிறமோ அண்ணல் வண்ணமோ அறிதல் தேற்றாம் (1216)
சீதை அன்னையின் கண்கள் மழை என கருணையைப் பொழிபவை. யார் மீதும் எவ்விதமான வஞ்சமும் மனதில் எந்த கள்ளமும் இல்லாத மழையைப் போன்ற கருணை மட்டுமே கொண்ட கண்கள் சீதையுடையவை.
மொய் வளர் குவளை பூத்த முளரியின் முளைத்த முந்நாள்
மெய் வளர் மதியின் நாப்பண் மீன் உண்டேல் அனையது ஏய்ப்ப
வையக மடந்தைமார்க்கும் நாகர் கோதையர்க்கும் வானத்
தெய்வ மங்கையர்க்கும் மேலாம் திலகத்தை திலகம் செய்தார் (1217)
பெண் குலத்திற்கு திலகம் போன்றவள் சீதை. அப்பெண் குலத் திலகத்துக்கு திலகமிட்டு அழகுபடுத்தினர்.
சின்ன பூச் செருகும் மென்பூச் சேகரப் போது கோதுஇல்
கன்னப் பூக் கஞல மீது கற்பகக் கொழுந்து மான
மின்னப் பூச் சுரும்பும் வண்டும் மிஞிறும் தும்பிகளும் பம்பும்
புன்னைப் பூந் தாது மானும் பொன்பொடி அப்பிவிட்டார் (1218)
சீதைக்குப் பூச்சூடி பூப்பொடிகளைத் தோழியர் தூவினர்.
கஞ்சத்துக் களிக்கும் இன்தேன் கவர்ந்து உணும் வண்டு போல
அம்சொற்கள் கிள்ளைக்கு எல்லாம் அருளினாள் அழகை மாந்தித்
தம் சொற்கள் குழறித் தம் தம் தகை தடுமாறி நின்றார்
மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனம் என்பது ஒன்றே அன்றே (1220)
சீதை கிள்ளைகளினும் இனிய மொழியைக் கொண்டவள். அவளை அழகு செய்த பெண்கள் அவளுடைய நிறை அழகைக் கண்டு அவள் அழகில் மனம் மயங்கினர். ஆணாயினும் பெண்ணாயினும் மனம் ஒன்றுதானே!
இழை குலாம் முலையினாளை இடை உவா மதியின் நோக்கி
மழை குலாம் ஓதி நல்லார் களி மயக்குற்று நின்றார்
உழை குலாம் நயனத்தார் மாட்டு ஒன்று ஒன்றே விரும்பற்கு ஒத்த
அழகு எலாம் ஒருங்கே கண்டால் யாவரே ஆற்ற வல்லார் (1221)
எல்லா அழகும் பொலிய இருக்கிறாள் சீதை. அந்த அழகின் பேருருவைக் காணும் ஆற்றல் யாருக்குத்தான் உண்டு?
சிந்தொடு குறளும் கூனும் சிலதியர் குழாமும் தெற்றி
வந்து அடி வணங்கிச் சுற்ற மணி அணி விதான நீழல்
இந்துவின் கொழுந்து விண்மீன் இனத்தொடும் வருவது அன்ன
நந்தல்இல் விளக்கம் அன்ன நங்கையும் நடக்கல் உற்றாள் (1224)
இளந்திங்கள் வான்மீன்களுடன் வருவது போல சீதை அன்னை தன் தோழியருடன் நடந்து வந்தாள்.
வல்லியை உயிர்த்த நில மங்கை இவள் பாதம்
மெல்லிய உரைக்கும் என அஞ்சி வெளிஎங்கும்
பல்லவம் மலர்த் தொகை பரப்பினள் எனத் தன்
நல் அணி மணிச் சுடர் தவழ்ந்திட நடந்தாள் (1225)
சீதையின் பாத மென்மையை அறிந்த மண்மகள் சீதை நடக்கும் தடத்தில் மலர்களை மலர வைத்தாள். சீதை ஆபரணங்களின் ஒளி எங்கும் நிறைந்திருக்க சீதை மெல்ல நடந்தாள்.
மண் முதல் அனைத்து உலகின் மங்கையருள் எல்லாம்
கண்மணி எனத் தகைய கன்னி எழில் காண
அண்ணல் மரபில் சுடர் அருந்தியொடு தான்அவ்
விண்இழிவது ஒப்பது ஓர் விதான நிழல் வந்தாள் (1227)
உலகின் எல்லாப் பெண்களின் கண்மணி போன்ற சீதை அவைக்கு வந்தாள்.
பொன்னின் ஒளி பூவின் வெறி சாந்து பொதி சீதம்
மின்னின் நிழல் அன்னவள் தன்மேனி ஒளி மான
அன்னமும் அரம்பையரும் ஆர்அமிழ்தும் நாண
மன்அவை இருந்த மணிமண்டபம் அடைந்தாள் (1229)
சந்தனக் குளிர்ச்சியும் மின்னல் ஒளியையும் பூவின் நறுமணத்தையும் கொண்டு பொன்னைப் போல் ஒளிவிடும் சீதை அன்னமும் தேவருலகப் பெண்டிரும் அவள் மென்னடையைக் கண்டு வெட்குமாறு மணிமண்டபம் நோக்கி வந்தாள்.
ஆர்த்தன பேரிகள் ஆர்த்தன சங்கம்
ஆர்த்தன நால்மறை ஆர்த்தனர் வானோர்
ஆர்த்தன பல்கலை ஆர்த்தன பல்லாண்டு
ஆர்த்தன வண்டு இனம் ஆர்த்தன அண்டம் (1338)
பேரிகைகள் முழங்கின. சங்க நாதம் கேட்டது. நான்மறை ஒலித்தது. தேவர்கள் மகிழ்ந்து ஆரவாரமிட்டனர். பலவகை இசைக்கருவிகள் ஒலித்தன.வண்டினங்கள் ஆர்த்தன. அலைகடலும் ஆரவாரித்தது.
அன்னமும் அன்னவர் அம்பொன் மலர்த்தாள்
சென்னி புனைந்தனர் சிந்தை உவந்தார்
கன்னி அருந்ததி காரிகை காணா
நல்மகனுக்கு இவள் நல்அணி என்றார் (1340)
சீதை இராமனின் மூன்று தாயாரின் பாதங்களையும் தன் சென்னியில் சூடினாள். அவர்கள் மூவரும் அருந்ததி போன்ற சீதையிடம் இராமனுக்கு நல் ஆபரணம் போன்றவள் சீதை என்றனர்.
(தொடரும்)