நெருப்பொளி

இந்தச் சிறுகதை பாரிஸ் ரிவ்யூ, பத்திரிகையின் சம்மர் 2018/ இதழ் எண் 225 இல் வெளியானது. அர்சுலா லெ க்வினின் புகழ் பெற்ற ஐந்து இளைஞருக்கான நாவல்களின் தொகுப்பும், ஒரு சிறுகதைத் தொகுப்பும், எர்த் ஸீ எனப்படும் கற்பனை உலகைச் சுற்றி எழுதப்பட்டவை. இந்தக் கதை அந்த எர்த் ஸீ உலகின் சிறுகதைகளில் கடைசிக் கதை என்று பிரசுர நிறுவனங்கள் சொல்கின்றன. அர்சுலா லெ க்வின் இந்த வருடம், ஜனவரி மாதம், தனது 88 ஆவது வயதில் மறைந்தார். இறக்குமுன் அவர் எழுதிய கதை, அவரது முத்திரைக் கதைகளான  ‘எர்த்ஸீ ’நிலத்துக் கதைப் பிரதேசத்துக்கே திரும்புகிறது என்பதும், அவருடைய நாயகர்களில் பிரதானமான பாத்திரங்களான கெட்,  மற்றும் டெனாரின் கதையாக இருப்பதும் நம் கவனத்துக்குரியவை.

நெடுங்காலம் முன்பு ஸெலிடாரின் கடற்கரையில் மணலில் ஏற்றி நிறுத்திக் கைவிடப்பட்டதொலைநோக்குஎன்னும் படகைப் பற்றி அவர் நினைத்துக் கொண்டிருந்தார். இப்போது அவளில் கொஞ்சம்தான் எஞ்சி இருக்கும், மண்ணில் ஒன்றிரண்டு பலகைகள் மீதம் இருந்தால் உண்டு, மேற்குக் கடலில் மிதந்து ஒதுங்கிய மரக்கட்டைகளாகத் தெரியலாம். உறக்கத்துக்கு அருகே மிதந்து போகையில் அவர் அந்தச் சிறு படகில் வெட்ச்சின் துணையோடு பயணம் செய்ததை நினைவு கூரத் தொடங்கினார்.  மேற்குக் கடலில் அல்ல, ஆனால் கிழக்கு நோக்கி, தூரத்து டோலியைத் தாண்டி, தீவுக் கூட்டங்களிலிருந்து நேரடியாக அப்பால்.  அது ஒரு தெளிவான நினைவாக இல்லை, ஏனெனில் அந்தப் பயணத்தை மேற்கொண்டபோது அவருடைய புத்தி தெளிவாக இருக்கவில்லை, பயமும், குருட்டுத்தனமான பிடிவாதமும் அவரைப் பீடித்திருந்தன, அவரை வேட்டையாடிய அந்தநிழல்அவரும் பதிலுக்குத் துரத்தியபோது, எதிரே விரிந்து முற்றிலும் காலியாக இருந்த கடல் மீது ஓடிப் போனதால், வேறெதையும் தன் முன்னே பார்க்காமல் அவர் அந்தக் கடல் பரப்பில் பயணித்திருந்தார். இருந்தும் இப்போது அவர் படகின் முகப்பில் கடலலைகளின் மோதலையும் இரைச்சலையும் கேட்டார். அவர் நோக்கியபோது பாய்மரக் கம்பமும், பாய்களும் அவருக்கு மேலே எழுந்தன. படகின் பின் புறம் நோக்கும்போது, ஒரு கருத்த கை சுக்கான் மீது இருந்ததைப் பார்த்தார், அந்த முகம் அவரைத் தாண்டி பின்னே குத்திட்டு நோக்கிக் கொண்டிருந்தது. உயர்ந்த கன்னத்து எலும்புகள், வெட்ச்சுக்கு இருந்தவை, அவருடைய கருத்த தோல் வழவழப்பாக அவற்றின் மீது இழுத்துப் படர்ந்திருந்தது. அவர் இப்போது உயிரோடு இருந்தால், முதியவராகி இருப்பார். முன்பென்றால் நான்அனுப்பித் தெரிந்து கொண்டிருப்பேன். ஆனால் அவரைப் பார்க்க, கிழக்கு நில நீட்சியில் அவருடைய சிறு தீவில் இருக்கும் அவர் வீட்டில், தன் சகோதரியோடு இருப்பவரைப் பார்க்க எனக்குஅனுப்புதல்தேவை இல்லை. அந்தப் பெண் கை வளையல் போல ஒரு குட்டி ட்ராகனை அணிந்திருந்தாள், அது என்னைப் பார்த்துச் சீறியது, அவள் நகைத்தாள்அவர் படகில் இருந்தார், அவர்கள் கிழக்கே, கிழக்கே போய்க் கொண்டிருந்த போது, தண்ணீர் படகின் பக்கத்து மரத்தை அறைந்தது, வெட்ச் முன்னே பார்த்துக் கொண்டிருந்தார், அவர் முடிவில்லாது நீண்ட நீர்ப்பரப்பைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மந்திரக் காற்றை எழுப்பி இருந்தார், ஆனால் தொலைநோக்குக்கு அது அத்தனை தேவைப்படவில்லை. அவளுக்கு, அந்தப் படகுக்குக் காற்றில் தனக்கான பாதை ஒன்று இருந்தது. அவளுக்குத் தான் எங்கே போகிறோம் என்பது தெரிந்திருந்தது.

அதாவது, ஓரிடத்தில் மேலே போக முடியாமல் அவள் நின்று விடும் வரை. ஆழமான கடல் திடீரென ஆழமற்ற கடல் திட்டாகி, அதில் அவள் மேலேறி, படகின் அடிப்பகுதி பாறையில் உரசி இருக்க, அவள் தரையில் இருந்தாள், அசையாமல் நின்றாள், சுற்றி நாற்புறமும் கருமிருள் தோன்றிச் சூழ்ந்தது.

அவர் படகை விட்டு வெளியே இறங்கினார், ஆழமான நடுக்கடலில், அதல பாதாளம் நாற்புறமும் இருக்க, முன்னே உலர்ந்த நிலம் மீது நடந்தார்.  உலர்ந்த நிலத்தில்.

அது இப்போது போய் விட்டது. அந்த எண்ணம் அவருக்கு மெதுவாக வந்தது. கற்களுக்கு அப்பால் இருந்த நிலப்பரப்பு. அவர் அந்தச் சுவரைப் பார்த்தார்முதல் முறை அவர் பார்த்த போது, அப்பாலிருந்த இருண்ட சரிவில் மௌனமாக இறங்கி ஓடும் குழந்தையைப் பார்த்தார். இறந்து போயிருந்த அந்த நிலம், நிழல்நகரங்கள், நகராமல் நின்ற நட்சத்திரங்களின் கீழே, அக்கறை இல்லாமல், ஒருவரை ஒருவர் மௌனமாகக் கடந்து போன நிழல்மக்கள், அத்தனையையும் அவர் பார்த்திருந்தார். அதெல்லாம் போய் விட்டது. அவர்கள்ஒரு அரசனும், அடக்கம் பொருந்திய மந்திரக்காரரும், அவர்கள் மேலே வானில் மிதந்து பறந்தபடி, உயிரற்ற வான்வெளிக்குத் தன் உயிருள்ள நெருப்பால் ஒளியூட்டிய ஒரு ட்ராகனுமாகச் சேர்ந்துஅதைக் கொத்திக் கிளறி விட்டிருந்தார்கள், பிளந்திருந்தார்கள், திறந்து விட்டிருந்தார்கள். அந்தச் சுவர் சரிந்து வீழ்ந்திருந்தது. அது ஒரு போதும் இருந்ததில்லை. அது ஒரு வசியத்தின் மயக்கப் பிடி, தோற்ற ஜாலம், ஒரு பிழை. அது இல்லாமல் ஆகி விட்டது.

அந்த இன்னொரு எல்லையாக இருந்த, மலைகளும், துன்ப மலைகளும் இல்லாமல் போய் விட்டனவா? அவை, மங்கிய நட்சத்திரங்களின் எதிரே கூர்மையாக, சிறியதாக, கருப்பாகத் தெரிந்தபடி அந்தச் சுவற்றிலிருந்து வெகு தூரத்தில் பாலைவனத்தில் இருந்தன. அந்த வறண்ட நிலத்தின் வழியே அந்த இளம் அரசன் அவரோடு நடந்து அந்த மலைகளுக்கு வந்திருந்தான். அவை மேற்கில் இருந்தாற்போலத் தெரிந்தன, ஆனால் அவர்கள் மேற்கை நோக்கி நடக்கவில்லை. அங்கு திசைகளே இல்லை. முன்னே, தொடர்ந்து அவர்கள் போக வேண்டிய வழி இருந்தது. ஒருவர் எங்கே போக வேண்டுமோ, அங்கேதான் போக வேண்டி இருக்கிறது, அவர்கள் அந்த வறண்ட அருவியின் படுகைக்கு, அப்படி ஒரு அடர்ந்த இருட்டிருந்த இடத்துக்கு வந்தனர். பிறகு அதையும் தாண்டிப் போக வேண்டி இருந்தது. அவர் நீர் வறண்ட அந்தப் பள்ளத்தாக்கில், அவர் அடைத்து மூடி, தேற்றி சரி நிலைக்குக் கொண்டு விட்டிருந்த பாறைகளில், தன் பேறு, தன் வலு, தன் செல்வங்கள் அனைத்தையும் பின்னே விட்டு முன்னே நடந்து போயிருந்தார். நடந்தபடியே இருந்தார், முடமாகியவராக, மேன் மேலும் முடமாகியபடி. அங்கு தண்ணீரே இல்லை, தண்ணீரின் ஒலி கூட ஒரு போதும் அங்கு கேட்டதில்லை. அவர்கள் கடூரமான சரிவுகளில் ஏறிக் கொண்டிருந்தனர். அங்கு ஒரு பாதை இருந்தது, ஒரு வழி, ஆனால் அதிலெங்கும் கூர்மையான கற்கள் இருந்தன, மேலே, மேலே, முழுப்பாதையும் உயரமான சரிவாகவே இருந்தது. கொஞ்ச நேரத்துக்கு அப்பால் அவருடைய கால்கள் அவரைத் தாங்க மறுத்தன, அவர் கைகளையும், கால்களையும் அந்தக் கற்களில் பதித்துத் தவழ முயற்சித்திருந்தார், இப்போது அதை நினைவு கூர முடிந்தது. அதற்குப் பிறகு மற்றதெல்லாம் மறந்து போய் விட்டது. அங்கு அந்த ட்ராகன், துருப்பிடித்த இரும்பின் நிறமுள்ள, வயதான காலெஸ்ஸின் இருந்தது. அந்த ட்ராகனின் உடல் உஷ்ணம், அதன் பிரும்மாண்டமான இறக்கைகள் உயர்ந்தும் கீழ் நோக்கி அடித்தும் இயங்கின. மூடுபனி, கீழே மூடுபனியில் மூடப்பட்டிருந்த தீவுகள். ஆனால் அந்தக் கரும் மலைகள் இன்னும் காணாமல் போகவில்லை, காணாமல் போன இருண்ட நிலத்தோடு போய் விடவில்லை. அவை அந்த வசியக் கனவின், வாழ்வுக்கு அப்பாற்பட்டதின், அந்தப் பிழையின் ஒரு பகுதியல்ல. அவை இன்னும் அங்கே இருந்தன.

இங்கே இல்லை, அவர் நினைத்தார். அவற்றை இங்கிருந்து, இந்த வீட்டிலிருந்து ஒருத்தரால் பார்க்க முடியாது. அறையின் பிறைமூலை ஜன்னல் மேற்கைப் பார்க்க இருக்கிறது. இந்த மலைகள் இருக்குமிடத்திலோ மேற்கு என்பது கிழக்காகிறது, அங்கே கடல் இல்லை. அங்கே நிலம்தான் முடிவே இல்லாமல் நீண்ட இரவுக்குள் மேல் நோக்கி உயர்ந்து கொண்டே போகிறது. ஆனால் மேற்கில், உண்மையான மேற்கில், அங்கே கடல் மட்டும்தான், கடலின் காற்றும் தான் உள்ளன.

அது ஒரு தோற்றம் போலிருந்தது, ஆனால் பார்வையில் தட்டுப்பட்டது என்பதை விட உணரப்பட்டது போல இருந்தது: தன் கீழிருந்த ஆழமான பூமியை அவர் அறிந்திருந்தார், எதிரே இருந்த ஆழ்கடலையும். அது ஒரு வினோதமான அறிதல், ஆனால் அதை அறிந்ததில் ஒரு மகிழ்ச்சியும் இல்லை.

நெருப்பொளி உத்தரங்களின் இடையே நிழலோடு விளையாடியது. இரவு வந்து கொண்டிருந்தது. கணப்பருகே அமர்ந்து நெருப்பைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருப்பது நன்றாக இருக்கும், ஆனால் அதைச் செய்ய அவர் எழுந்திருக்க வேண்டியிருக்கும், ஆனால் அவருக்கு இன்னமும் எழுந்திருக்க விருப்பமில்லை. சுகமான கதகதப்பு அவரைச் சூழ்ந்திருந்தது. பின்புறம், டெனார் எழுப்பிய ஒலிகளை அவர் அவ்வப்போது கேட்டிருந்தார்: சமையலறைச் சத்தங்கள், வெட்டும் ஒலிகள், கெட்டிலின் கீழே ஒரு விறகுக் கட்டையைச் சரி செய்யும் ஒலி. மேய் நிலத்தில் இன்னும் உயிரோடு இருந்த ஓக் மரம் ஒன்று விழுந்திருந்தது, சென்ற குளிர் காலத்திற்கு முன்பு, அம் மரத்தை அவர் வெட்டித் துண்டுகளாக்கி வைத்திருந்தார். அவள் தன் அடிக்குரலில் ஒரு கீதத்தைச் சற்று நேரம் முனகினாள், தன் வேலையிடம் ஏதோ முணுமுணுத்தாள், அதை மேலே செல்ல ஊக்குவிக்கும் வகையில், “இப்ப கொஞ்சம் வேகமாப் போகணும்…”

தாழ்ந்த கட்டிலின் கால்களருகே பூனை மெதுவாக நடை போட்டது, பிறகு எடையே இல்லாதது போல இலேசாக எம்பி அதன் மீது தாவியது. அது சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும். அது உட்கார்ந்தது, தன் ஒரு காலை மறுபடியும் மறுபடியும் பொறுமையாக நக்கி ஈரம் செய்து கொண்டு, அதனால் முகத்தையும் காதுகளையும் நன்கு சுத்தம் செய்து கொண்டது, பிறகு தன் பின் பகுதிகளை துப்புரவாகச் சுத்தம் செய்து கொண்டது, சில சமயம் தன் பின்னக் காலை முன்னங்காலால் தூக்கிப் பிடித்துக் கொண்டு அதன் நகங்களைச் சுத்தம் செய்தது, அல்லது தன் வாலை அழுத்திப் பிடித்துக் கொண்டது, அது ஏதோ தன்னிடமிருந்து தப்பி ஓடி விடும் என்று அது நினைத்தது போலிருந்தது. அவ்வப்போது மேல் நோக்கிப் பார்த்தது, அசையாமல் இருந்தது, நேரே பார்க்காமல் எங்கோ கவனமாக இருந்தது அந்தப் பார்வை, ஏதோ கட்டளைகளைக் கேட்டுக் கொண்டிருந்தது போலத் தோற்றம் தந்தது. கடைசியில் ஒரு சிறு ஏப்பத்தை விட்டது, பிறகு கெட் உடைய கணுக்காலருகே, உறங்குவதற்கு ஆயத்தங்களைச் செய்தபடி படுத்துக் கொண்டது.  சென்ற வருடம் ஒரு நாள் காலையில் ரே ஆல்பியிலிருந்து ஒரு பாதை வழியே உல்லாசமாக நடந்து வந்த, சாம்பல் நிற ஆண் பூனை அது, உரிமையோடு உள்ளே நுழைந்து தங்கி விட்டது. ஃபானுடைய மகளின் வீட்டிலிருந்து வந்திருக்கிறது என்று டெனார் நினைத்தாள். அந்த வீட்டில் இரண்டு பசுக்களை வைத்திருந்தார்கள், பூனைகளும், குட்டிகளும் எப்போதும் கால்களில் தட்டுப்பட்டுக் கொண்டே இருக்கும். அவள் அதற்கு கொஞ்சம் பால் வைத்தாள், கொஞ்சம் கஞ்சி, சில கழிவு மாமிசத் துண்டுகளை எல்லாம் போட்டாள். மற்றபடி அது தன் பாட்டைத் தானே பார்த்துக் கொண்டது; மேய்ச்சல் நிலத்திலிருந்த சிறு கூட்டமான பழுப்பு நிற எலிகள் பிறகு வீட்டுக்குள் வேட்டையாட வருவதை நிறுத்தி விட்டன. சில நாட்களில், இரவுகளில், இணை விழைவு வேகத்தில் வெளியில் அது துள்ளிக் குதிப்பதையெல்லாம் அவர்களால் கேட்க முடிந்தது. காலையில் இன்னமும் கதகதப்பு எஞ்சியிருந்த கணப்படிக் கல்தரையில் நெடுங்கிடையாகப் படுத்துக் கிடந்து, நாள் பூராவும் உறங்கும். டெனார் அதை பரூன்கார்கிஷ் மொழியில்பூனை’ – என்று அழைத்தாள்.

கெட் சில நேரம் அதைப் பற்றி எண்ணும்போது பரூன் என்று எண்ணினார், சில சமயம் ஹார்டிக் மொழியில் அதை மிரு என்றும், சில நேரம் பழம் பேச்சு மொழியில் அதன் பெயராலும் எண்ணினார். ஏனெனில், கெட்டுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தவை இன்னும் மறக்கவில்லை. ஆனால், அந்த வறண்ட கணவாயில் நடந்ததற்கு அப்புறம், அவருக்குத் தெரிந்திருந்தவற்றால் அவருக்குப் பயனேதும் இல்லை. உலகத்தில் ஒரு முட்டாள் ஒரு துவாரத்தை உண்டாக்கிய பின்னர், அந்த முட்டாளின் சாவாலும், தன் உயிராலும் அந்தத் துவாரத்தை அவரே அடைக்க வேண்டி வந்தது. அவர் இன்னமும் அந்தப் பூனையின் நிஜப் பெயரைச் சொல்ல முடிந்தது, ஆனால் அந்தப் பூனை விழித்து அவரைப் பார்க்காது. அவர் அந்தப் பூனையின் பெயரை தன் தாழ்ந்த குரலில் மரமரத்தார். பரூன் தூங்கியபடியே இருந்தது.

அந்த நிஜமில்லாத நிலத்தில், அவர் தன் உயிரைக் கொடுத்திருந்தார். ஆனாலும் அவர் இங்கேயும் இருந்தார். அவருடைய வாழ்வு இங்கிருந்தது, அதன் துவக்கத்தில் இருந்த இடத்தில் மறுபடி வந்து சேர்ந்திருந்தது, இந்தப் பூமியில் வேர் கொண்டிருந்தது. மேற்கு கிழக்காக எங்கே இருந்ததோ, எங்கே கடல் இல்லையோ அந்த உலகின் இருண்ட பள்ளத்தாக்கை விட்டு அவர்கள் நீங்கி விட்டிருந்தார்கள், எங்கே அவர்கள் போக வேண்டி வந்ததோ அதை நோக்கி, கருப்பான வலியோடும், வெட்கத்தோடும் அவர்கள் போனார்கள். ஆனால் இறுதியில் அவர் தன் கால்களாலோ, தன் சொந்த வலுவாலோ செல்ல முடியவில்லை. தனது இளம் அரசனால் சுமக்கப்பட்டும், அந்த முதிய ட்ராகனால் சுமக்கப்பட்டும் அவர் பயணம் செய்தார். செயலற்றுப் போய் இன்னொரு வாழ்வுக்குள் சுமந்து செல்லப்பட்டார். அந்த இன்னொரு வாழ்க்கை, மௌனமாக, ஆணைக்குக் கட்டுப்பட்டதாக, எப்போதுமே அவர் அருகே அவருக்காகக் காத்திருந்திருக்கிறது. அதுதான் அந்தநிழலா’, அல்லது அதுதான் எதார்த்தமா? பிறப்போடு வந்த பேறு ஏதும் இல்லாமல், எந்தசக்தியும் இல்லாது, ஆனால் டெனாரோடும், டெஹானுவோடும் ஒரு வாழ்க்கை. உயிரானவளோடும், மிக்க அன்பு செலுத்தப்பட்ட சிறுமியோடும் ஒரு வாழ்வு. அந்தச் சிறுமி, (டெஹானு), ட்ராகனின் மகள், ஊனப்பட்ட பெண், செகோயின் குழந்தை.

அவர், தான் ஒருசக்திவாய்ந்த மனிதனாக இன்னும் ஆகாத போது, தன் பிறவிப்பேறை ஒரு ஆணாகப் பெற நேர்ந்த போது தனக்கு எப்படி இருந்தது என்பதை யோசித்துப் பார்த்தார்.

கடந்த வருடங்களில் பல முறைகள் என்ன பாதையில் ஓடினவோ அதே வழியில் அவருடைய யோசனைகள் இப்போதும் ஓடின: பாலுறவோ அல்லது மாய நிலையோ, எந்த வகை சக்தியை எடுத்துக் கொண்டாலும், அவற்றிடையே நிலவும் சமன் நிலையோ அல்லது பரிமாற்றமோ எப்படி இருக்கின்றன என்பதை எப்படி ஒவ்வொரு மாயச் சித்தரும் புரிந்து கொண்டிருந்தார் என்பதும், மாயச்சித்துகளில் ஈடுபட்ட எல்லாருக்கும் இது தெரிந்திருந்தாலும், யாரும் இதைப் பற்றிப் பேசுவதில்லை என்பதும் எத்தனை விசித்திரமானவை என்று யோசித்தார். அது பரிமாற்றம் என்றோ பேரம் பேசுதல் என்றோ அழைக்கப்படவில்லை. ஒரு தேர்வு என்று கூட அழைக்கப்படவில்லை. அது என்ன பெயரிட்டும் அறியப்படவில்லை. தெரிந்த, புரிந்த ஒன்றாக இயல்பாக எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

கிராமத்துச் சித்தன்களும், மாயக்காரிகளும் மணந்து கொண்டனர், குழந்தைகள் பெற்றுக் கொண்டனர்அவர்களின் தர நிலை தாழ்ந்தது என்பதற்கு அது அடையாளமாகக் கருதப்பட்டது. மலட்டுத்தன்மை ஒரு மாயச் சித்தன் கொடுக்க வேண்டிய விலை, அவனுடைய பெரும்சக்திகளுக்காகவிருப்பத்தோடு கொடுக்கப்பட்ட விலையாகவும் இருந்தது. ஆனால் அந்த விலையின் தன்மைஅதன் செயற்கைத் தன்மைஅப்படி வெல்லப்பட்ட சக்திகளைக் களங்கப்படுத்தவில்லையா?

மாயக்காரிகள் அசுத்தமான, பூமியின் பண்டை சக்திகளைக் கொண்டு செயல்பட்டனர் என்று அனைவருக்கும் தெரிந்திருந்தது. அவர்கள் கீழ்நிலை வசியவேலைகளை, ஆணையும், பெண்ணையும் இணைத்து வைக்க உதவுவனவற்றைச் செய்தனர். காம விழைவு பூர்த்தியாகவோ, பழி தீர்க்கவோ உதவினர். தங்கள்சக்திகளைசாதாரண விஷயங்களில் செலவழித்தனர், சிறு நலக் குன்றல்களைக் குணமாக்கவோ, பழுதடைந்தவற்றை ஆற்றவோ, காணாமல் போனதைத் தேடவோ பயன்படுத்தினர். சூனியக்காரர்களும் அதையேதான் செய்தனர், ஆனால் புழங்கிய சொலவடையோ, ‘பெண்களின் மாயவேலை போல எளியது, பெண்களின் சூனியம் போலக் கொடியதுஎன்று இருந்தது. அதில் உண்மை எத்தனை, பயத்தால் எழுந்தது எத்தனை?

அவருடைய முதல் ஆசிரியர், ஓகியான், ஒரு மாயச்சித்தரிடமிருந்து தன் வித்தையைக் கற்றுக் கொண்டாரே அந்த மாயர் ஒரு மாயக்காரியிடமிருந்தே தன் வித்தையைக் கற்றுக் கொண்டிருந்தார். ஓகியான் இவருக்கு எந்த இழிவு நோக்கையும் கற்பிக்கவில்லை. ஆனாலும் கெட் துவக்கத்திலிருந்தே இந்த இழிநோக்கைக் கற்றுக் கொண்டிருந்தார், ரோக்கில் இன்னும் ஆழமாக அது மனதிலேறியது. அவர் அதை எல்லாம் மறக்க வேண்டி இருந்தது, மறப்பது அத்தனை எளிதாக இல்லை.

ஆனால், என்ன இருந்தாலும், எனக்கு முதலில் கற்றுக் கொடுத்ததும் ஒரு பெண் தான், என்று அவர் நினைவு கூர்ந்தார், அந்த எண்ணத்தில் ஒரு ஒளிக்கீற்றாக ஏதோ அம்பலமாகியது. எப்போதோ வெகு காலம் முன்பு, டென் ஆல்டர்ஸ் கிராமத்தில். மலையின் மறு பக்கத்தில். என் பெயர் அப்போது டூனி. என் அம்மாவின் சகோதரி ராக்கி ஆடுகளைக் கூப்பிடுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன், அவர் கூப்பிட்ட மாதிரி, அவருடைய வார்த்தைகளைக் கொண்டே, நானும் அவற்றைக் கூப்பிட்டேன், அவை எல்லாம் என்னிடம் வந்தன. அப்போது என்னால் அந்த வசியத்தை நிறுத்த, உடைக்க முடியவில்லை, ஆனால் ராக்கி எனக்கு அந்தப் பேறு இருப்பதைக் கவனித்தார். அப்போதுதான் அவர் முதல் தடவையாக அதைக் கவனித்தாரா? இல்லை, அவர் நான் சிறு குழந்தையாக இருந்த போதே, அவருடைய பராமரிப்பில் இருந்த போதே, கவனித்துக் கொண்டு இருந்தார். அவர் என்னைக் கண்காணித்தார், அவருக்கு அது தெரிந்திருந்தது. மாயாவிக்கு மாயாவியை அடையாளம் தெரியும் அவரை மாயாவி என்று நான் நினைப்பதை அறிந்தால், அவர் என்னை எவ்வளவு மூடன் என்று நினைத்திருப்பார்! அறியாதவளாகவும், மூட நம்பிக்கைகள் கொண்டவளாகவும், பாதி பொய் சொல்பவளாகவும், இருந்த அவள் சில பழங்கதைத் துண்டுகளையும், உண்மையான பேச்சின் சில சொற்களையும், சில பழுதுபட்ட வசிய உச்சாடனங்களையும், தவறான தகவல்கள் மலிந்த அறிவுச் சேமிப்புகளையும் கொண்ட ஒரு கலவையைப் பயன்படுத்தி, எப்படியோ ஒரு நலிந்த வாழ்வை அந்த வறிய இடத்தில் நடத்திக் கொண்டிருந்தாள். ரோக் தீவில் கிராமத்து சூனியக்காரிகள் மீது சாட்டிய பழிகளுக்கெல்லாம் உதாரணமாக அவள் இருந்தாள். ஆனால் அவளுக்குத் தன் தொழில் நன்கு தெரிந்திருந்தது. அவளுக்கு ஒரு பேறு இருந்தது. அவள் மாமணி எது எனத்தெரிந்து கொண்டிருந்தாள்.

கடும் பனிக்காலத்துக் குளிரில் நெடுஞ்சரிவிலிலிருந்த கிராமத்தில், அந்த இருண்ட மரவீட்டின் மண்டும் விறகுப் புகையின் மணமும், மக்கிய வாடை அடித்த படுக்கைகளும் கொண்ட தன் இளம்பிராயத்து வாழ்வை, மெதுவான அலையாக உயர்ந்து எழுந்த, உடலிலேயே பரவியிருந்த நினைவுகளால் அவர் தன் சிந்தனையின் சரட்டைக் கொஞ்ச நேரம் நழுவ விட்டிருந்தார். போதுமான சாப்பாடு என்றாவது கிட்டினால் அந்த நாளை அதிசயமானதாகப் பிறகு பல நாட்கள் நினைவு வைத்திருக்கும்படியாக இருந்த பனிக்காலங்கள் அவை. தன் வாழ்வில் பாதி நாட்களை கொல்லர் பட்டறையில் அப்பாவின் கனமான கைகளால் அடி வாங்காமல் தப்பிப்பதிலேயே கழித்திருந்தார் அவர். அந்த உலையில் நீண்ட துருத்திகளைத் தொடர்ந்து அழுத்தி, அழுத்திக் கொண்டே இருப்பதில் அவருடைய முதுகும், கைகளும் வலியால் நெருப்புப் பற்றியது போல எரியும். கைகளும், முகமும் என்ன முயன்றாலும் தப்பிக்க முடியாதபடி வீசும் உலைப் பொறிகளால் சூடாகி எரியும், ஆனாலும் அவருடைய அப்பா அவரை அடிப்பதோ, இரைவதோ, கொடுக்கும் அறையால் விலக்கித் தள்ளுவதோ நடந்து கொண்டுதான் இருந்ததுஉதவாக்கரை முட்டாளே, நெருப்பைச் சீராக எரிய வைக்க முடியாதா உன்னால்!

ஆனால் அவர் அழ மாட்டார். அவர் தன் அப்பாவைத் தோற்கடிப்பார். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு, மௌனமாக இருந்து விட்டு, ஒரு நாள் அப்பாவைத் தோற்கடிப்பார், அவரைக் கொல்லுவார். அவர் பெரியவனாக ஆன பிறகு, வலுவான ஆளான பிறகு. போதுமான அளவு தெரிந்து கொண்ட பிறகு.

ஆனால், போதுமான அளவு அவருக்குத் தெரிய வந்த போது, அந்தக் கோபம் எல்லாம் எத்தனை விரயமானது என்று அவருக்குப் புரிந்திருந்தது. அவருடைய சுதந்திரத்துக்கு அதுவல்ல வாயில். சொற்கள்தாம்: ராக்கி சொல்லிக் கொடுத்த வார்த்தைகள், அவள் ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொடுத்தாள், கருமியாக, மனமின்றி, பிச்சை போடுவது போல, கடும் உழைப்பை விலையாகக் கொடுத்த பின், இங்கொன்றும் எப்போதோ அங்கொன்றுமாகத்தான் கொடுத்தாள். அதன் பெயரை இன்னொரு சொல்லோடு சேர்த்துச் சொன்னதும் தரையிலிருந்து ஊற்றாக எழுந்த நீரின் பெயர். பருந்தின், மற்றும் நீரெலியின் (ஆட்டர்), கருவாலியின் (ஏகார்ன்) நிஜப் பெயர்கள். காற்றின் பெயர்.

காற்றின் பெயரைத் தெரிந்து கொள்வதில் எழுந்த சந்தோஷம், ! சக்தியில் கிட்டும் கலப்படமற்ற குதூகலம், அவருக்கு சக்தி கிட்டியது என்று தெரிந்து கொண்ட போது! அவர் நேரே உயரமான நீர்வீழ்ச்சியைப் பார்க்க ஓடியிருந்தார், அங்கே தனியாக இருக்க, அங்கு கார்கிஷ் கடலிலிருந்து குறுக்காக வெகு தூரம் மேற்கை நோக்கி வலிவுடன் வீசிய காற்றில் திளைத்து மகிழ. அதன் பெயரோ அவருக்கு இப்போது தெரியும், அவர் காற்றுக்கு ஆணையிட்டார்….

சரி, இப்போது அதெல்லாம் போயாயிற்று. நிறையவே காலம் ஆகி விட்டது. பெயர்கள் மட்டும் அவரிடம் இன்னும் எஞ்சியிருந்தன. குர்ரெம்கார்முக்-கில், ஒதுக்குப்புறமாக இருந்த கோபுரத்திலும், பிறகும் அவர் கற்றுக் கொண்ட அந்தப் பெயர்கள் எல்லாம், வார்த்தைகள் எல்லாம் இருந்தன. ஆனால் நம்மிடம் அந்தப் பேறு இல்லை எனில், பண்டைப் பேச்சில் இருந்த சொற்கள் இப்போது உள்ள வேறெந்த சொற்களிலிருந்தும் மாறுபட்டவை இல்லை. ஹார்டிக் மொழியோ அல்லது கார்கிஷ் மொழியோ, அல்லது பறவைக் கூவலோ அல்லது பரூனின் மோகத் தேடலில் எழுந்த கவலையில் ஊறிய அழைப்புகளோ மட்டுமே.

அவர் பாதி வரை எழுந்தார், கைகளை நீட்டி மடக்கினார். “எதைப் பார்த்துச் சிரிக்கிறீங்க?” டெனார் அவரிடம் கேட்டார், கை நிறைய சுள்ளிகளோடு அவருடைய படுக்கையைத் தாண்டிப் போனார், அதற்குக் கொஞ்சம் குழப்பத்தோடு அவர் சொன்னார், “தெரியல்லை. நான் டென் ஆல்டர்ஸைப் பத்தி நெனச்சுக்கிட்டிருந்தேன்.”

அவள் அவரைக் கொஞ்சம் ஆழ நோக்கினாள், ஆனால் புன்னகைத்தபடி, நெருப்புக்குத் தீனி போடக் கணப்பை நோக்கிச் சென்றாள். அவர் எழுந்திருந்து அவளோடு கணப்பருகே உட்கார விரும்பினார், ஆனால் அவர் இங்கேயே கொஞ்ச நேரம் படுத்திருக்கப் போகிறார். எழுந்திருந்தால் கால்கள் உறுதியாக அவரைத் தாங்காமல் இருப்பதை அவர் வெறுத்தார், அப்புறம் எவ்வளவு சீக்கிரமாகக் களைப்பு வந்து விடுகிறது, அவர் நெருப்பொளியையும், நிழல்களையும் மேல் நோக்கிப் பார்த்தபடி அமைதியாகப் படுத்திருக்கவே விரும்பினார். அவர் பதின்மூன்று வயதில் அவருக்குப் புதுப்பெயரிட்டதிலிருந்து இந்த வீட்டை அறிந்திருக்கிறார். ஓகியான் ஆர் ஊற்றுகளில் அவருக்குப் புதுப்பெயரிட்டார், பிறகு மலைகளைச் சுற்றி இங்கு அழைத்து வந்தார். அவர்கள் மெள்ளவே சென்றார்கள், டென் ஆல்டர்ஸைப் போலவே ஏழ்மையான கிராமங்களில் வரவேற்கப் பட்டார்கள், அல்லது காட்டில் அமைதியில், மழையில் படுத்து உறங்கினார்கள். அப்புறம் இங்கு வந்தார்கள். முதல் தடவை இந்தப் பிறை போன்ற சிறு ஒதுக்கிடத்தில்தான் அவர் உறங்கினார், அவருக்கு மேலே இருந்த ஜன்னலில் நட்சத்திரங்களைப் பார்த்தார், உத்தரங்களில் கணப்பின் நெருப்பொளி நிழல்களோடு விளையாடுவதையும் பார்த்திருந்தார். ஓகியான்தான் எலெஹால் என்பதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. அவருக்கு நிறைய நிறைய கற்க வேண்டி இருந்தது.

ஓகியானுக்குக் கற்பிக்கப் பொறுமை இருந்தது, இவருக்கு மட்டும் கற்கப் பொறுமை இருந்திருந்தால்சரி, அதெல்லாம் போகட்டும். இப்படியோ அப்படியோ அவர் ஒரு தவறிலிருந்து இன்னொரு தவறுக்குப் போய் எப்படியோ முட்டி மோதி இலக்குக்கு வந்து விட்டார். ரோக்கில் அவர்கள் சொல்லிக் கொடுத்த ஒரு வசிய உச்சாடனத்தைக் கொண்டு அவர் இழைத்தது ஒரு பெரும் பிழை, தவறு, தீவினை. ஆனால் அவருக்கு அந்த உச்சாடனம் தெரியும் முன்னரே, அவர் அந்தச் சொற்களை ஓகியானின் புத்தகத்தில், இங்கே, இந்த வீட்டில், ஓகியானின் வீட்டில் கண்டிருந்தார். அவருடைய அறிவற்ற அகங்காரத்தால், அவரிடம் அணுகி, ரகசியக் குரலில் பேசிய அந்த முகமற்ற ஆன்மாவை, கதவுக்குப் பின்னே இருந்த இருளை, அவர் ஆணையிட்டு அழைத்திருந்தார். இந்தக் கூரைக்கடியே, அந்தக் கொடியதை அவர் கொணர்ந்திருந்தார். இதுவோ ஓகியானின் வீடு…. அவருடைய எண்ணங்கள் தெளிவற்றுக் கலங்கின. அவர் மிதந்தார். ‘தொலைநோக்குபடகில் மேகம் சூழ்ந்த இரவில், அடர் இருள் படர்ந்த கடலில், தனியாக, மிதந்தது போலவே இருந்தது. காற்று அடித்த விதத்தை வைத்துத்தான் அவருக்குத் தான் எங்கே போகிறோம் என்பதை ஊகிக்க முடிந்தது. அவர் காற்றின் வழியே போயிருந்தார்.

ஒரு வட்டியலில் சூப் சாப்பிடுவீர்களா?” டெனார் கேட்டார், அவர் விழிப்புற்றார். ஆனால் அவர் இன்னமும் மிகவும் களைப்பாக உணர்ந்தார். “பசியே இல்லை,” என்றார்.

அவள் அந்தப் பதிலை ஏற்று, விட்டு விட்டுப் போவாள் என்று அவர் நம்பவில்லை. அதே போல, சிறிது நேரம் கழித்து, வீட்டின் முன் பகுதியைப் பிரித்த அந்த அரைச் சுவரைச் சுற்றிக் கொண்டு அவள் திரும்பவும் வந்தாள். அந்தச் சுவர் கணப்பறையையும், சமையலறையையும், அந்தச் சிறு ஒதுக்குப் பிறையையும், இந்த இருண்ட பின் பகுதியிலிருந்து பிரித்தது. இங்கு இப்போது படுக்கை அறையும், வேலை செய்யும் அறையும் இருந்தன. ஆனால் முன்பு இந்த இடம் பசு மாடுகள், பன்றி, ஆடுகள், மேலும் கோழிகள் குளிர்காலத்தில் ஒதுக்கப்பட்ட தொழுவமாக இருந்தது. இது ஒரு பழைய வீடு. ரே ஆல்பியில் சிலருக்கே இது முன்னாளில் சூனியக்காரியின் வீடு என்று அழைக்கப்பட்டது என்று தெரியும், ஆனால் அவர்களுக்கும் அது ஏனென்று தெரியாது. அவருக்குத் தெரியும். அவரும் டெனாரும் இந்த வீட்டை எலேஹாலிடமிருந்து பெற்றார்கள், எலெஹால் இதைத் தன் ஆசிரியரிடமிருந்து பெற்றார். அந்த ஆசிரியர் ஹெலெத், தன் ஆசிரியரான சூனியக்காரி ஆர்த்திடம் இதைப் பெற்றார். இது ஒரு சூனியக்காரி வாழத் தகுந்த வீடுதான், தனியாகவும், கிராமத்திலிருந்து பிரிந்தும் இருந்தது, அவளை அண்டை வீட்டுக்காரி என்று யாரும் அழைக்க முடியாதபடி இருந்தது, ஆனால் அவசரத்துக்கு யாரையாவது கூப்பிட முடியாத அளவு தள்ளி இருக்கவில்லை. ஆர்த் தன் வளர்ப்புப் பிராணிகளுக்கு இருப்பிடங்களை அருகிலேயே அமைத்திருந்தார், தன் படுக்கையை சுவற்றுக்கு அருகில் போட்டுக் கொண்டார், அங்குதான் தீவனத் தொட்டி இருந்தது. ஹெலெத்தும், பிறகு எலெஹாலும், இப்போது கெட்டும் டெனாரும் ஆர்த் உறங்கிய இடத்திலேதான் உறங்கினார்கள்.

அனேக மக்களும் அதை முதியவர் மாயனாரின் வீடு என்று அழைத்தனர். நகரத்து மக்களும், ஹாவ்னாரிலிருந்து அயல் நாட்டவர்களும் இவரைத் தேடி வரும்போது, சில கிராமத்தார்கள் அன்னியரிடம் சொல்வார்கள், “தூரத்தில் இருக்கிற ரோக்கில் தலைமை மாயாவியாக இருந்தவர் அவர், இப்போது இங்கே வசிக்கிறார்.”: ஆனால் அதை அவர்கள் நம்பிக்கை இல்லாமலும், சிறிது ஒவ்வாமையோடும்தான் சொன்னார்கள். அவரை விட டெனாரைத்தான் அவர்களுக்குப் பிடித்திருந்தது.  இத்தனைக்கும் அவள் தோல் நிறம் வெள்ளை, நிஜமாக அயல் தேசத்தவள், கார்க் பிரதேசத்தவள், அவள் தங்களைப் போன்றவள் என்று அவர்கள் தெரிந்து கொண்டிருந்தார்கள், சிக்கனமான மனைவி, கடுமையாகப் பேரம் பேசக் கூடியவள், யாராலும் ஏமாற்றப் பட முடியாதவள், கவனமில்லாதவளே அல்ல, சாமர்த்தியமானவள் என்று புரிந்து வைத்திருந்தார்கள்.

ஒரு இளம் பெண், வெள்ளை முகம் கொண்டவள், கருப்பு முடி, திடீரென்று, அதிர்ச்சியோடு, கண் கூசுமளவு மின்னுகிற படிகக் கற்களும், நீரால் அரித்து மெருகேறிய கற்களும், கோமேதகமும், செவ்வந்திக் கற்களும் நிறைந்த நிலத்தடிக் குகை ஒன்றில் தூரத்தில் அவரை உற்று நோக்கிக் கொண்டிருப்பதை அவர் கண்டார்.

அங்கே, அவர்களுடைய மிகப் பெருமிதம் மிக்க வணக்கத்தலத்தில் கூட, பூமியின் பழைய சக்திகளைப் பார்த்து அச்சம் நிலவியது, அவை தவறான முறைகளில் வழிபடப்பட்டன, கொடுமையான முறைகளில் அடிமைகளின் உடல் துண்டிப்புகளும், கொலைகளும், அங்கே சிறைப்பட்ட பெண்களின் நசுக்கப்பட்ட வாழ்வுகளும் பலியாக அளிக்கப்பட்டன. அவரும் ஆர்ஹாவும் தெய்வத்திற்கு எதிரான எந்தக் குற்றத்தையும் செய்திருக்கவில்லை. நெடுநாட்களாகச் சிறைப்பட்டிருந்த பூமியின் பசியையும், சினத்தையும் விலங்குடைத்து வெளிவர வழி கொடுத்திருந்தனர், குவிமாடங்களையும், நிலத்தடிக் குகைகளையும் நொறுங்கச் செய்தனர், சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து விட்டிருந்தனர்.

ஆனால் அவளுடைய மக்கள், பண்டைச் சக்திகளைத் திருப்தி செய்ய விரும்பியவர்களும், அவரது மக்கள், சூனிய வேலைகள் மீது கடும் இழி நோக்கைக் கொண்டிருந்தவர்களும், ஒரே விதத் தவறுகளையே செய்தனர். பூமிக்குள் என்ன மறைந்திருந்ததோ, பெண்களின் உடல்களில் என்ன உறைந்ததோ, எந்த அறிவுக்கு வார்த்தைகளே தேவையில்லையோ, எதை மரங்களும், பெண்களும் சொல்லிக் கொடுக்கப்படாமலே அறிந்திருந்தார்களோ, ஆண்கள் மிக மெதுவாகவே கற்றார்களோ அந்த வார்த்தையில்லாத அறிவைக் கண்டு அச்சத்தால் உந்தப்பட்டு, எப்போதுமே அச்சமேற்கொண்டு அந்தத் தவறுகளைச் செய்தனர். காடுகளின் வேர்களிலும், புற்களின் வேர்களிலும், கற்களின் மௌனத்திலும், பேச்சில்லாது மிருகங்கள் கொண்ட தொடர்பிலும், அந்த பிரும்மாண்டமான அறிவின் சிறு துளிக் காட்சியையே அவர் கண்டிருந்தார். நிலத்தடியில் ஓடும் நீர்களிலும், ஊறி உயரெழும் ஊற்றுகளிலும். ஆர்ஹா, டெனார், அதைப் பற்றி அவள் ஒரு போதும் பேசியதில்லை என்றாலும், அவளிடமே அவர் அது பற்றித் தனக்குத் தெரிந்திருப்பதை எல்லாம் கற்றிருந்தார். அவளிடமிருந்தும், ஒரு ட்ராகனிடமிருந்தும், ஒரு நெருஞ்சியிடமிருந்தும். உயரத்து நீர்வீழ்ச்சி மீது சென்ற பாதையில், கடல் காற்றில், கற்களிடையே தத்தளித்தபடி பிழைத்திருக்கும் நிறமற்ற சிறு நெருஞ்சில் செடி அது.

அவர் எதிர்பார்த்தபடியே, கையில் ஒரு வட்டிலோடு அவள் தடுப்பைச் சுற்றி வந்தாள், படுக்கைக்கு அருகே இருந்த பால் கறக்கையில் உட்காரும் முக்காலியின் மீது அமர்ந்தாள். “எழுந்து உட்காருங்க, ஒரு கரண்டி இல்லை ரெண்டு கரண்டியாவது சாப்பிடுங்க,” அவள் சொன்னாள். “க்வாக்கரோட கடைசி மீதம்.”

இனிமே வாத்துகளே வேண்டாம்,” அவர் சொன்னார். வாத்துகள் ஒரு பரிசோதனையாக வளர்க்கப்பட்டிருந்தன.

வேண்டாம்.” அவள் ஒத்துக் கொண்டாள். “கோழிகளோடு நிறுத்திப்போம். ஆனால் இது நல்ல சாறு.”

அவர் எழுந்து கொண்டார், அவள் தலையணையை அவருக்குப் பின்னே தள்ளி வைத்தாள், அவர் மடியில் அந்த வட்டியலை வைத்தாள். அதன் வாசம் நன்றாக இருந்தது, ஆனாலும் அவருக்கு விருப்பம் ஏதும் இல்லை. “, எனக்குத் தெரியல்லை, எனக்குக் கொஞ்சமும் பசியே இல்லை.” என்றார். அவள் அவரை வற்புறுத்தவில்லை. கொஞ்ச நேரம் கழித்து, சில தேக்கரண்டிகளை அருந்தினார், பிறகு கரண்டியை வட்டியலில் போட்டு விட்டு, தன் தலையைப் பின்னே இருந்த தலையணை மீது வைத்துச் சாய்ந்தார். அவள் வட்டியலை எடுத்துப் போனாள். திரும்பி வந்தவள், குனிந்து அவருடைய நெற்றியிலிருந்து தலைமுடியைத் தன் கையால் ஒதுக்கினாள். “உங்களுக்குக் கொஞ்சம் சுரம் போலத் தெரியறது.” என்றாள்.

என் கையெல்லாம் குளிர்ச்சியா இருக்கு.”

மறுபடி முக்காலியில் அமர்ந்தவள் அவர் கைகளைத் தன் கையில் எடுத்துக் கொண்டாள். அவளுடைய கைகள் உறுதியாக, கதகதப்பாக இருந்தன. அவள் அவர்களுடைய இணைந்த கைகள் மீது தன் தலையைக் குனிந்து வைத்தாள், நீண்ட நேரம் அப்படியே இருந்தாள். அவர் ஒரு கையை விடுவித்துக் கொண்டு, அவள் முடியைத் தடவிக் கொடுத்தார். நெருப்பில் ஒரு மரக்கட்டை வெடித்தது. மேய்ச்சல் நிலத்தில் அந்தி மாலையின் கடைசி நிமிடங்களில் வேட்டையாடிய ஆந்தை தன் ஆழமான, மென்மையான இரட்டைக் கூவலை ஒலித்தது.

அவருடைய மார்பில் மறுபடியும் வலி எடுத்தது. அதை வலி என்பதை விட ஒரு கட்டட வடிவாகத்தான் அவர் பார்த்தார், அவரின் மார்பின் மேல் பகுதியில் ஒரு வளைவு, ஒரு இருண்ட வளைவு, அவருடைய மார்பெலும்புகளால் தாங்க முடியாத வளைவு. சிறிது நேரத்துக்குப் பிறகு அது அடங்கியது, பிறகு முழுதும் போய் விட்டது. அவர் சுலபமாக மூச்சு விட்டார். தூக்கமாக வந்தது. எலேஹால் போல நானும் காட்டுக்குள் போக விரும்புகிறேன் என்று அவர் அவளிடம் சொல்ல நினைத்தார். சாவதற்கு, என்பது அதன் அர்த்தம், ஆனால் அதைச் சொல்ல அவசியம் இராது. காட்டில் இருக்க வேண்டும் என்றுதான் எலேஹால் எப்போதும் விரும்பி இருந்தார். எப்போது முடிந்தாலும் அங்கேதான் இருக்கவும் செய்தார். அவரைச் சூழ மரங்கள், மேலேயும் மரங்கள். அவை அவர் வீடு. அவர் கூரை. அவரைப் போலவே நானும் செய்ய விரும்புவேன் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அப்படி விரும்பவில்லை. எனக்கு எங்கேயும் போக வேண்டி இருக்கவில்லை. நான் சிறுவனாக இருந்த போது இந்த வீட்டை விட்டுப் போகும் நேரத்துக்காக என்னால் பொறுத்திருக்கக் கூட முடியவில்லை. சுற்றி இருக்கும் தீவுகளைப் பார்க்கவோ, எல்லாக் கடல்களையும் பார்க்கவோ என்னால் பொறுக்க முடியவில்லை. அப்புறமோ நான் ஏதுமே இல்லாமல் திரும்பி வந்தேன், எதுவும் மிச்சமில்லாமல். அது துவக்கத்தில் இருந்த நிலை போலவே இருந்தது. அதுதான் எல்லாம். அது போதும்.

பேசினோமா? அவருக்குத் தெரியவில்லை. வீடு மௌனமாக இருந்தது. வீட்டைச் சுற்றி நாற்புறமும் இருந்த பெரும் மலைச் சரிவுகளின் மௌனமும், கடலுக்கு மேலே கவிந்த அந்தி ஒளியும். நட்சத்திரங்கள் வெளியே வரத் துவங்கும். டெனார் இப்போது அவர் அருகே இல்லை. மற்ற அறையில் அவள் இருந்ததை, அவள் அங்கு நெருப்பை மூட்டி விட்டு, பொருட்களைச் சரி செய்து வைத்துக் கொண்டிருந்தாள் என்று மெல்லிய சப்தங்கள் சுட்டின.

அவர் மிதந்தார், மிதந்தபடி இருந்தார்.

வளைந்து உயர்ந்த கூரை கொண்ட சுரங்கப் பாதைகளின் புதிர்ச் சுழலமைப்பில், இருட்டில் அவர் இருந்தார். அது சிக்கலாக வடிவமைக்கப்பட்ட சுரங்கம் ஒன்றில் இருந்த கல்லறைகளினூடே தான் சிறைப்பட்டு, இருட்டில் பார்வையற்ற நிலையில், தண்ணீருக்காக ஏங்கித் தவழ்ந்து நெடுகப் பயணித்த பழைய அனுபவம் ஒன்றை அவருக்கு நினைவூட்டியது. அவர் முன்னேறிச் சென்ற போது, வர வர, வளைவான விலா எலும்பு போன்ற அந்தப் பாறைகள் கீழே தாழ்ந்து, குறுகிப் போன போதும், அவர் முன்னேற வேண்டி இருந்தது. பாறைகளால் சிறைப்பட்டு, கைகளும் முழங்கால்களும் கருத்த, கூர்மையான மலைப் பாதைக் கற்களில் படிந்திருக்க, நகரவும், மூச்சு விடவும் அவர் சிரமப்பட்டார். மூச்சு விடக் கூட முடியவில்லை. அவரால் விழித்தெழவும் முடியவில்லை.

அது பிரகாசமான காலை. அவர்தொலைநோக்குப் படகில் இருந்தார். பாதி உறக்கத்திலும், தடைப்பட்ட தூக்கத்திலும் விழிக்கையில் எப்போதும்போலவே மரத்துப் போய், இறுக்கிக் கொண்ட உடலோடும், குளிரால் சில்லிட்டுப் போயும் படகில் தனியாக இருந்தார். இரவுகளின் கனவுகள் வேக, வேகமாக மறைந்தன. சென்ற இரவு மாயக் காற்றைக் கட்டளையிட்டு அழைக்க வேண்டிய தேவை இருக்கவில்லை; உலகின் காற்றே கிழக்கிலிருந்து சுலபமாகவும், சீராகவும் வீசியது. அவர் தன் படகிடம் தாழ்ந்த குரலில்தான் சொன்னார், “நீ போகிறபடி போ, தொலை நோக்கே,” பிறகு தன் தலையை பின்புறத்துக் கம்பின் மீது சாய்த்துக் கொண்டு நீட்டிப் படுத்தபடி, உயரே இருந்த நட்சத்திரங்களைப் பார்த்தார், அல்லது கண்கள் மூடும் வரை, நட்சத்திரங்களுக்கு எதிரே இருந்த மரத்தில் விரிந்த பாயைப் பார்த்திருந்தார். ஆழங்களில் எங்கும் சிதறிக் கிடந்த வீரியமுள்ள ஒளி வீசிய விண்மீன்கள் இப்போது போய் விட்டிருந்தன, ஆனால் எழுந்து வரும் நாளின் முன், ஏற்கனவே உருகும் நீர்த்திவலை போலக் கரைந்து கொண்டிருந்த கிழக்குத் திசையின் ஒரு பெரும் நட்சத்திரம் மட்டும் எஞ்சியிருந்தது. காற்று நல்ல குளிராகவும், கூர்மையாகவும் இருந்தது. அவர் எழுந்து உட்கார்ந்தார். அவர் கிழக்குத் திசையில் பின்னே நோக்கிய போது அவருக்குச் சிறிது தலை சுற்றியது, மறுபடி திரும்பி முன்னே நோக்கியபோது பூமியின் நீலமான நிழல் கடலுக்குள் இறங்கிக் கொண்டிருந்தது. அவர் அலைகளின் உச்சி மீது பகலின் முதல் ஒளி நெருப்பாக வீசியதைப் பார்த்தார்

ஒளி கொண்ட இயா தோன்றும் முன்னே

ஸெகோய் தீவுகளைத் தோன்றுக எனும் முன்னே

கடல் மீது காலைக் காற்று….

அவர் அந்தப் பாட்டை உரக்கப் பாடவில்லை, அது தானே அவருக்குப் பாடியது. அப்போது ஒரு விசித்திரமான மீட்டொலி அவர் காதுகளில் ஒலித்தது. அவர் தன் தலையைத் திருப்பினார், ஒலி வந்த திசையைத் தேடினார், மறுபடி அந்தக் கிறுகிறுப்பு தலைக்குள் கடந்து போனது. அந்தப் படகு துடிப்பான கடலில் எம்பி எழுந்த போது, பாய்மரக் கம்பத்தைப் பிடித்துக் கொண்டு, அவர் எழுந்து நின்றார், மேற்குத் தொடுவான் வரை பார்வையால் சலித்தார், அப்போது அந்த ட்ராகன் வருவதைப் பார்த்தார்.

ஓ எத்தனை சந்தோஷம், விடுதலையாவதில்!

கடுமையாகத் தோன்றிக் கொண்டு, உலையில் கொதிக்கும் இரும்பின் வாடையோடு, அதன் பறக்கும் பாதையில் காற்றில் புகை அலைந்து நீண்டிருக்க, அதன் இரும்புக் கவசமணிந்த தலையும், பக்கங்களும் புத்தொளியில் பளீரிட, தன் பெரும் இறக்கைகளை வீசி அடித்தபடி, அது அவரை நோக்கிக் கடும் வேகத்தோடு, தடுக்க முடியாததாய், பருந்தொன்று எலியை நோக்கி வருவது போல வந்தது. அது அந்தச் சிறு படகை நோக்கி வீசி இறங்கவும், படகு அதன் இறக்கைகளின் வீச்சுக் காற்றின் வேகத்தில் எம்பித் துள்ளி கட்டுக்கடங்காமல் ஆடியது. அது கடந்து போனபோது, அதன் சீறலான, கணீரென்ற குரலில், உண்மையான பேச்சில், அது அவரிடம் கூவியது, பயப்படுவதற்கு அங்கே எதுவுமில்லை.

அவர் அதன் நீண்ட தங்க நிறக் கண்களுக்குள் நேராகப் பார்த்துச் சிரித்தார். அது கிழக்குத் திசையில் திரும்பிப் பறந்து போகத் தொடங்கியபோது, அதனிடம் பதிலுக்குக் கூவினார், “, ஆனால் அங்கே இருக்கிறது, அங்கே இருக்கிறது!” நிஜத்தில் அங்கே இருந்தது. கருத்த மலைகள் அங்கே இருந்தன. ஆனால், என்ன வருமோ அதை வரவேற்கத் தயாராகவும், அதைச் சந்திப்பதற்குக் காத்திருக்க விரும்பாதவராகவும் இருந்த அவருக்கு இந்த ஒளிமயமான கணத்தில் பயமேதும் இல்லை. அவர் மகிழ்ச்சிகரமான காற்றை பாய்மரத்துக்குச் செல்லப் பணித்தார். படகு மேற்கு நோக்கி எல்லாத் தீவுகளையும் கடந்து ஓடியபோது, ‘தொலை நோக்கின்பக்கவாட்டில் நுரை வெண்மையாகப் பெருகிப் பொங்கியது. இந்த முறை, அவர் போய்க் கொண்டே இருப்பார், மற்ற காற்றிற்குள் அவர் பாய்மரப் படகு புகும் வரை. அங்கு வேறு கரைகள் இருந்தால் அவற்றை அவர் அடைவார். ஒருவேளை கடலும், கரையும் எல்லாம் இறுதியில் ஒன்றேதான் என்றால், அப்போது அந்த ட்ராகன் உண்மையையே பேசியது, பயப்படுவதற்கு அங்கே ஏதும் இல்லை.

***

3 Replies to “நெருப்பொளி”

  1. கதாசிரியர் பற்றிய குறிப்பில் அவருடைய பெயர் உர்சுலா என்றும், தலைப்பில் அர்ஸுலா என்றும் பதியப்பட்டுள்ளது. ஒரே மாதிரியாக இருப்பது நன்று.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.