நெருப்பொளி

கற்களுக்கு அப்பால் இருந்த நிலப்பரப்பு. அவர் அந்தச் சுவரைப் பார்த்தார் – முதல் முறை அவர் பார்த்த போது, அப்பாலிருந்த இருண்ட சரிவில் மௌனமாக இறங்கி ஓடும் குழந்தையைப் பார்த்தார். இறந்து போயிருந்த அந்த நிலம், நிழல்-நகரங்கள், நகராமல் நின்ற நட்சத்திரங்களின் கீழே, அக்கறை இல்லாமல், ஒருவரை ஒருவர் மௌனமாகக் கடந்து போன நிழல்-மக்கள், அத்தனையையும் அவர் பார்த்திருந்தார். அதெல்லாம் போய் விட்டது. அவர்கள் – ஒரு அரசனும், அடக்கம் பொருந்திய மந்திரக்காரரும், அவர்கள் மேலே வானில் மிதந்து பறந்தபடி, உயிரற்ற வான்வெளிக்குத் தன் உயிருள்ள நெருப்பால் ஒளியூட்டிய ஒரு ட்ராகனுமாகச் சேர்ந்து- அதைக் கொத்திக் கிளறி விட்டிருந்தார்கள், பிளந்திருந்தார்கள், திறந்து விட்டிருந்தார்கள்.