புதுமைப் பித்தனின் ‘செல்லம்மாள்’ – ஒரு வாசிப்பனுபவம்

அன்புக்கான ஒரே கதை
செல்லம்மாள் கதையை கல்லூரியில் பாடமாக முதலில் படித்தேன். முதல் வாசிப்புக்குப் பின் கதையை சுருங்கக் கூறுவதில் கவனம் இருந்தது. பின்பு உணர்த்தவியலாத ஒரு வாசிப்பு இன்பத்தை அந்தக் கதை கொடுத்தது. நான் அதிகமுறை வாசித்தக் கதை செல்லம்மாள் தான். என்றாலும் மீண்டும் வாசிப்பேன். செல்லம்மாள் சார்ந்த வாசிப்பு முதல் வீச்சு.
பிரம்மநாயகம் பிள்ளையை தவிர்த்து செல்லம்மாளை மட்டும் எடுத்துக் கொள்வது பெண்ணியம் சார்ந்த வாசிப்பு. இவ்வாறுதான் கல்லூரியில் எங்களால் வாசிக்கப்பட்டது. என்னால் இன்னும் தீவிரமாக பெண்ணியம் சார்ந்து வாதம் செய்யப்பட்டது. அதற்காகவும் மீண்டும் வாசிக்கப்பட்டது.
ஊருக்கே அந்தம்மாவ கூட்டிக்கிட்டு போகல,
தந்தி கொடுக்கல,
என்ன மாதிரியானவரா இருந்தா அந்தம்மா நினைவில்லாம இருக்கறப்ப அவரைத் திட்டும் அந்தம்மா.  கைய காலை கட்டிவைக்கிற மனுசனா இருந்திருப்பாரா?
எவ்வளவு சாவகாசமா சுவாதீனமில்லாம கிடக்கிற அம்மாவக் கைகால் கழுவிட்டு வந்து பாக்கறாரு
கண்ணுலருந்து ஒரு சொட்டு தண்ணி வரணுமே!
பதியாம்…
என்று அன்று பெண்ணியமாக தெரிந்த லட்சணத்தில் பேசி வாதம் என்பது மறந்து கடைசியில்,  “பசங்க இப்படித்தானோ வயசானப்பறம் மாறிடுவாங்க, “ என்று யாரோ சொல்ல அனைவரும் தீவிர முகபாவத்துடன் தலையாட்ட கதை பற்றிய பேச்சு முடிந்தது. கல்லூரி காலத்தில் அதிகமானவர்களால் கவனிக்கப்பட்ட கதை,  ஒரு நாள் கதை பற்றி தீவிரமாக எதையேனும் பேசியது இது ஒன்றுதான் என்று நினைக்கிறேன்.
நான் மீண்டும் தனிமையில் விடுமுறைநாளில் கல்லூரி நடைபாதையில் அமர்ந்து வாசிக்கையில் இப்படி வாசிப்பது கதையின் ருசியைக் குறைக்கின்றது என்று தோன்றியது. அன்றே மீண்டும் இரவில் கார்த்திகை தீபங்களைப் பார்த்தபடி வாசித்து முடிக்கையில் கதையின் ஆகிருதி மங்கலாகத் தெரிந்தது. அவரும் கிராமத்திலிருந்து பிடுங்கப்பட்ட செடி. விவசாய வாழ்விலிருந்து கூலி வாழ்விற்கு வந்தவர். செல்லம்மாளின் அத்தனை சிரமங்களும் இவருக்குண்டு. செல்லம்மாவுக்கு பாலினம் சார்ந்த சிரமங்கள் மேலதிகம் என்றால் இவருக்கு அவள் சார்ந்தவையும் சேர்த்து. அவர் ஒன்றும் நண்பர்கள் படைசூழ சினிமா, களியாட்டங்கள் என்று இருக்கவில்லை. வீடு, கடை என்று ஒருவழிப் பாதையாளர் தான். அவருள் இருக்கும் ‘நான் உனக்குப் பொறுப்பு’ என்ற உணர்வுதான் அவளின் நெஞ்சாங்குலையைப் பிடுங்குவது போன்று அவருக்கே தோன்றக் காரணமாக இருக்கலாம்.
கதையைக் கொஞ்சம் திருப்பி ‘பிரம்மநாயகம் பிள்ளை’யாகவும் வாசிக்கலாம். அவர் மனம் தடுக்கி உளறினால் செல்லம்மாள் அவரின் குரல்வளையை பிடிப்பதாகத் தோன்றலாம். என்றும் தனிமனிதன் கையில் தொலைத் தொடர்புகள் இல்லை. அனைவரின் கையில் அலைபேசி இருக்கையிலேயே இணைப்பு, தொடர்புகள் கைவிடுகையில் தந்தி குளறுபடிக்கு பிள்ளை என்ன செய்வார்? உண்மையில் அவர்மீது அவளுக்கு முரண்கள் இருக்கும். அதே தான் அவருக்கும். எப்போது சாவு வரும் என்று எதிர்பார்க்கும் நிலையில் அழுகை வராது.  கடமை பற்றிய எண்ணமே வரும்.   எனக்கே அண்மையில் அம்மாச்சி இறப்பு அப்படியானதாக இருந்தது அதிர்ச்சியாக இருந்தது.
மூன்றுநாட்கள் அம்மாச்சி கடைசிப் படுக்கையில் விழிமூடாமல் அந்தரத்தைப் பார்த்தபடியிருக்கையில் மீண்டும் கதை எழுந்து வந்தது. வீடுமுழுக்க மாற்றி மாற்றி உறவினர்கள், பழகியவர்கள். இரவிலும் ஒரு பதினைந்து ஆட்கள் இருந்தோம். என்றாலும் மனம் பதறிக் கொண்டிருந்தது. அனைவரும் நள்ளிரவில் அசந்துவிட்டாலும் யாராவது எழுந்து அம்மாச்சி அருகில் மூச்சைக் கவனித்தபடியிருந்தோம். இது போன்ற ஒரு வாழ்க்கைமுறையிலிருந்து தன்னை அறுத்துக் கொண்டு, தூரத்து ஊரில் பணமில்லாமல் மனிதர்களில்லாமல் இறப்பை வேறெப்படி பிரம்மநாயகம் பிள்ளை எதிர்கொள்வார். பாலைச் செடியாகிவிட்டபிறகு வெயில் நோக்கி நின்றிருந்தால்தான் வாழ்க்கை என்றாகிவிட்ட பிறகு முட்கள் தானாகத் தோன்றிவிடும். ஆனால் அவை முட்கள் அல்ல கவசம்.
இது எழுதப்பட்ட காலத்தில் இருந்த இருத்தலியல் சார்ந்த வாசிப்பாக இருந்தால் கதை முழு வீச்சோடு எழுந்து வரும். இருத்தலியல் பற்றியெல்லாம் கதையை முதலில் வாசிக்கையில் தெரியாது. வாழ்தல் சார்ந்து மங்கலான புரிதலாக இருந்திருக்கக் கூடும். அதுசார்ந்து ஆண், பெண் எதிர் கொள்ளும் உளவியல், உடலியல், நடைமுறைச் சிக்கல்கள். ஒரு ஏழைக்கு பெருநகரில் அன்றைக்கு இருந்த வாழ்வு சார்ந்த வாசிப்பாக இருந்தால் கதை முழு வீச்சோடு எழுந்து வரும். முதல் தலைமுறை கூலி வாழ்விற்கான மனநிலை. இன்றும் நான் கடைசியில் சிந்திப்பது அவரிடம் காசு வாங்கிக் கொண்டு தகவல் சொல்ல ஓடும் மனிதரின் வாழ்வு என்னவாக இருந்திருக்கும் என்பது. இந்தக் கதையின் வீச்சு ஒருதிசையில் இருக்குமாறு தலைப்பு இருக்கலாம். எழுதியவரே எண்ணாத தளங்களை கதை கொண்டிருக்கச் சாத்தியமிருக்கலாம். செல்லம்மாளைச் சார்ந்து வாசிப்பது ஒரு பார்வை. அதோடு இந்தக் கதை குறுகிவிடும் என்று எனக்குத் தோன்றவில்லை. பின் எதற்கு பிள்ளை நடையாய் நடப்பதையும், பழஞ் சோற்று மூட்டையையும், அவரின் பெருமூச்சையும் எழுத வேண்டும். இயங்களை மீறி மனிதநேயம் சார்ந்த வாசிப்புக்காக எழுதப்பட்ட கதையாக எனக்குத் தோன்றுகிறது. புதுமைப்பித்தன் கசப்புகளைக் கிண்டல்களாக மாற்றியவர். அவர் நம்பிக்கைவாதியில்லை என்றெல்லாமில்லை அதைத்தாண்டி மனிதமனதை எதிர்திசையில் இருந்து நேயம் நோக்க அங்குசம் குத்தியவர்.
இன்றும் சென்னையில் இருந்தபடி தன் ஊரை நினைத்து ஏங்கும் பிரம்மநாயகம் பிள்ளைகளின் கூட்டம் அதிகம். அதில் செல்லம்மாள்கள் அனைத்துச் சிக்கல்களோடும் வேலைக்களத்திற்கும் செல்கிறார்கள். பொருளியல் சார்ந்து இடம் பெயர்வதன் சிக்கல்கள், மனநிலைகள். அனைத்திற்கும் அடியில் புதுமைப்பித்தனே சொல்வதைப் போல ‘பதி’யின் பேரன்பைம் காட்டும் இடங்கள் அதிகம். ஒரு வறண்ட கதைச் சூழல் இருந்தாலும் பச்சைநிறச் சேலை,  புளிப்பு தோசை,  பதிக்குப் பிடித்த கானத்துவையல் என்று அன்றாட ருசியும் தெரிகிறது. இறப்பு என்பது வாழ்வில் அனைத்து தளங்களிலும் தத்துவங்களிலும், விவாதங்களிலும்,   அன்றாடத்திலும் பேசப்பட்டுக் கொண்டயிருக்கிறது. இந்தக்கதை இறப்பை துன்பத்தின் முடிவாக பேசுகிறது. கல்லூரி வயதில் மரணத்தைப் பற்றிய இந்த மறுபக்கம் புதியதாக இருந்தது.
அறைத் தோழிகள்,”இவ்வளவு பெரிய கதையை எப்படி படிக்கிறது கதையாச் சொல்லு எக்ஸாமில் வந்தால் எழுதிக்கிறோம்,” என்றதும் எப்படிச் சொல்வது என்று நினைத்தபடி சொன்னேன்.”செல்லம்மா இறந்துட்டாங்க,”என்றதும்,”கதை எடுத்ததும் முடிஞ்சிடுச்சே,” என்றாள் ஒரு தோழி. சொல்லிக் கொண்டிக்கையில் லயித்துக் கேட்டவர்கள் சிலர். ஆனால் இந்தக் கதையைச் சொல்லி விட முடியாது என்பதே என் எண்ணம். மனதால் வாசிக்க வேண்டிய கதை. வழக்கமாக நான் சொல்வதைப் போல பலமுறை வாசிக்கத் தோன்றும் கதை.
கதையை முடித்ததும் இதை ரசித்துக் கேட்ட அன்பு புன்னகையோடும், ஒருவித பார்வையோடும், “காதலப் பத்தி நாங்க பேசினா , ‘அத இயல்பான ஒன்னு தானே அத ஏன் பெரிசு பண்றீங்கன்னு’ கண்டுக்காம போற நீயா!…இந்த மாதிரி சாவுக்கதைய இவ்வளவு ரொமாண்டிக்கா சொல்ற. இதுவர சிக்கலல்ல நீ. . .” என்றாள். நான் பதற்றத்துடன்,“ஏய் இது…புதுமைப்பித்தனோட ஃபீலிங்ஸ்,“ என்றேன்.
அன்பு, வீட்டில் கதைப்புத்தகங்கள் வாசிப்பது பாவம் என்று சொல்லி வளர்க்கப்பட்டவள். பக்கத்துப்படுக்கையில் தலைமாட்டிலிருக்கும் என் கவிதை, கதை புத்தகங்கள் அவளுக்கு மனஒவ்வாமையை முதலில் ஏற்படுத்தியது.  என்மீது கொண்ட அன்பால் மன்னித்து, நான் கலைத்து வைத்திருப்பதை அடுக்கி வைப்பாள். பின் நான்கு ஆண்டுகளில் விடுதியின் முற்றத்தில், புங்கைமரத்தடியில்,  நீண்டபடிகளில், படுக்கையில் என்று பலமுறை,“ பிரம்மநாயகம் பிள்ளை கதை சொல்லு,” என்று கேட்டிருக்கிறாள். கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவாகக் கைத்தறிச் சேலை உடுத்தி அமைதி ஊர்வலத்திற்குச் செல்கையில் மொட்டை வெயிலில் ,“இந்தமாதிரி தானே செல்லம்மாளின் பச்சை புடவை இருந்திருக்கும். அந்தக் கதையை சொல்லேன்,” என்று தார்சாலையில் வெயிலில் கேட்டுவிட்டு குளிர்பானம் வாங்கித் தந்தாள். சமீபத்தில் அலைபேசியில், “ஸ்டீபன் கிட்ட பிரம்மநாயகம்பிள்ளை கதையை சொல்லு, “ என்றாள். “ஐயோ! கட் பண்ணு. வேணுன்னா அனுப்பறேன்,” என்றேன். அவள் அடிக்கடி பிரம்மநாயகம் பிள்ளையை ஸ்டீபனிடன் சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவளின் வாழ்நாள் கதை இது.
பின்நாட்களில் காலச்சுவடு பதிப்பகத்தின் புதுமைப்பித்தன் கதைகள் முழுத் தொகுப்பு கைக்கு கிடைத்த போது சுந்தரராமசாமியின் முன்னுரையில் செல்லம்மாள் கதையை ‘ஆக சிறந்த காதல் கதை’ என்று குறிப்பிட்டிருந்தார். இதுவும் இந்தக்கதை கொடுக்கும் ஒரு சாத்தியம் என்று கதையை மீண்டும் வாசிக்கையில் அன்பை நினைத்து புன்னகைத்தேன்.  அவள் மீண்டும் என்றோ ஒருநாள் அலைபேசியில், “கதையைச் சொல்,” என்று கேட்கக்கூடும். சிலரின் வாழ்விற்கு ‘ஒரு சொல், ஒரு வாக்கியம்’ என்று கேள்விப்பட்டதுண்டு. அதே போல் இது வாழ்விற்கு ஒரு கதையாக ஆகக்கூடியதாக இருக்கலாம் அல்லது அன்பிற்கு அப்படியாக ஆகிவிட்ட கதை இது.
புதுமைப்பித்தனை வணங்கி
கமலதேவி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.