உயிரெச்சம்

அந்த விபத்தில் அவர்கள் இறந்து போனார்கள்.  இறப்பதற்கு முந்தைய கணத்தின் உல்லாசம் அவர்கள் முகத்தில் உறைந்திருந்தது.  அவள், சோனா, ‘கு’என்று சொல்வது போல் உதடு குவிந்திருக்க வாடாத மலர் போல மடிந்திருந்தாள்; அவன், சந்துரு, முகம் திரும்பி அவளைப் பார்த்திருக்க சிரித்துக் கொண்டே செத்திருந்தான்.  திரவ நைட்ரஜன் ததும்பியுள்ள குளிர் ஊட்டுக் கூட்டில்(Cryo preservator) பனிக் குழந்தைகள் இரண்டு அறுபது நேனோ நொடிகள் உயிர் அச்சம் கொண்டன.
“சாகும் வயதா இது?” என்றுஅனுதாபப்படும் மனிதர்கள், ஆம்புலன்ஸ்,   போலீஸ், வாகனத்தடை, மார்கிங், சிதறிப் பரவிய இரத்தம், கதறும் குரல்கள்,  தூய வெள்ளைப் போர்வைகள், சூழலில் கூடிய கனம்- இன்னும் எத்தனையோ- நீங்கள் அந்த நிலைமையை நன்றாக ஊகித்துவிடுவீர்கள்.  உயிர் பிரியும் அத் தருணத்தில் வாழ்வின் சில இனிய கணங்கள் அவர்களுக்கு நினைவில் வந்தன.
‘ஊதா ரிப்பன் நன்னால்ல, மஞ்ச ரிப்பன் கட்டிக்கோடி’
“போடா, உன் பல்லு மாரி இருக்கணுமா என் ரிப்பனும்”
‘என்னடிசொன்ன?’
“சொன்னேன்டா, நீயும், உன் நாயும் பல்லும் தேய்க்கறதில்ல,   குளிக்கறதுமில்ல.”
‘டாமிய ஏதாவது திட்டின, அவ்ளவ்தான்!’
‘வெவ்வெவ்வெ,’ என்று பழித்துவிட்டு அவள் வீட்டிற்குள் ஓடிவிட்டாள்.  
மறு நாள் எமிலி டீச்சர் அவளை முட்டி போட வைத்துவிட்டாள். அவன்தான் லதாவின் ஹோம் வொக் நோட்டில், ‘எமிலி ஒரு எலி, பிரம்பெடுத்தா புலி,  பாடம் எடுத்தா கிலி,’ என்று எழுதிவைத்துவிட்டான். லதாவின் முட்டி கன்னிப்போயிற்று. அவனுக்கே கூட பாவமாக இருந்தது. உண்மையைச் சொன்னால் இங்கு மட்டுமல்ல, அப்பாவும் பெல்ட்டால் அடி பின்னிடுவார்.  
“இருடா, இரு,   நீ மாட்டாமயா போப்போற”
“சந்த்ரு,  வானத்தைப் பாரேன்.  மடிப்பு மடிப்பா ரோஸ் கவுன் போட்டுண்டுஒரு பொண்ணு நிக்கறா.  அவ பக்கத்தல ஹேட் வச்சிண்டு ப்ளூ ஷார்ட்ஸும், ஆலிவ் க்ரீன் கலர்ல டிஷர்ட்டுமா ஒரு பையன் தெரியறான் பாரு,”
‘சோனா, நீ ப்ளஸ் டு தாண்டமாட்ட, சினிமாவுக்கு கதை எழுதப் போய்டுவ’
“நீ சுத்த ரசன கெட்ட ஜென்மம்.  உங்கிட்ட சொன்னேன் பாரு.”
கல்யாணப் பரிசோடு எமிலி டீச்சர் வந்தபோது மூவருமே சொல்லிவைத்தது போல் சிரித்தார்கள்.  டீச்சருக்குப் பாவம் புரையேறிற்று. பி. டெக் வகுப்பு ரங்கனாதன் சார் புரியாமல் இவர்களின் சிரிப்பில் தானும் கலந்து கொண்டார்.  இவர்களின் பி ஹெச் டிக்கும் அவர் தான் வழிகாட்டி.
“உங்கள சண்டக் கோழிகள்ன்னு நெனைச்சேன்.   ஒரே படிப்பு, ஒரே இடத்ல வேல, ஒரே வயசு… என்ன சொல்ல, ஒக்க வார்த்த, ஒக்க பாணம், ஒக்க மனைன்னு ராமர் சீதையாட்டம் திவ்யமா இருக்கணும்,”என்று அவர் வாழ்த்துகையில் கண்கள் குளமாகின.  
“நீ ஒண்ணு கவனிச்சயா, சந்த்ரு, இப்பல்லாம் பதினாறும் பெத்து பெரு வாழ்வு வாழணும்னு யாருமே சொல்றதில்ல.”
‘நீ எப்படி கன்ட்ரியா பேசற; உன் ரோபாடிக்ஸ் டாக்டரேட்டிற்கும்,   உன் லுக்குக்கும், நீ போடற மாடர்ன் ட்ரெஸ்ஸுக்கும், உன் பேச்சுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?’
“கூல்,   கூல்டா கண்ணா,  ரண்டு குழந்தை போறும்;என்ன மாரி அம்சமா,   அழகா ஒண்ணு, போனாப் போறது உன்ன மாரி பேக்குத்தனமா,  கள்ளவிழி விழிச்சுண்டு ஒண்ணு”
‘கள்ளனா நானு;இப்ப நா எப்படித் திருடறேன் பாரு.’
மற்றொரு நாள்
‘சந்த்ரு,  ஏன் அந்த ஃப்ராக்கையே பாத்துண்டிருக்க?’
‘என் நித்யாவுக்கு அது எவ்ளோ நன்னாருக்குமில்ல?’
‘அந்த வாட்டர் ஸ்போர்ட்ஸ் கிட்டப் பாரேன்.  ஆத்ரேயா சறுக்கி வெளயாட்ற மாரி இல்ல?’
‘நித்யா என்னவா வரப் போறா?’
‘ஸ்பேஸ் சைன்டிஸ்ட்டா. ஆத்ரேயா ?’
‘அவன் மெடிகல் ரிசர்ச்ல உலகத்ல நோயே இல்லாம பண்ணிடுவான் பாரேன்.’
அவர்கள் அதையெல்லாம் நினைத்து இப்பொழுது சிரித்தார்கள்.  

அன்று வாரவிடுமுறை.  அவள் ஆசைப்பட்டாள் என்று பூங்காவிற்குப் போனார்கள்.  அவள் சிறுவர்களுடனும், சிறுமியருடனும் குதித்துக் களித்தாள்.  அந்த போட்டோக்களை நடுங்கும் விரல்களால் தடவிக்கொண்டிருந்த சோனாவின் அன்னை அடக்கமுடியாமல் கதறி அழுதாள்.  அவர்களது பர்சனல் கணினியில் அவர்கள் பதிந்திருந்த விவரங்கள், வாக்குவாதங்கள், சந்தோஷங்களைப் படித்துக்கொண்டிருந்த சந்துருவின் அப்பா தன் கண்களில் திரண்ட கண்ணீரை அடக்கமுடியாமல் தடுமாறினார்.  
அவள் குடும்பமும்,  அவன் குடும்பமும் மூன்றே ஃப்ளாட்ஸ் கொண்ட ஒரு அடுக்ககத்தில் வசித்தார்கள்.  கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாக தோழர்கள். இரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு வாரிசுதான்.  சோனா, சந்துரு திருமணத்திற்குப் பிறகு இரு குடும்பங்களும் மேலும் நெருங்கின. இரு வாரிசுகளை இழந்த சோகம் அந்த வயதான பெற்றோர்களால் தாங்கமுடியாத துக்கம்.  கல்யாணம் ஆகி மூன்று வருடங்களில் அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்பது இலேசான கவலையை அளித்தாலும், சிறு வயது, காலம் இன்னும் இருக்கிறது என்பதும் சமாதானமாக இருந்தது. ஆனால், விபத்தில் போன அந்த இரு உயிர்கள் நினைவைத் தவிர எதை எஞ்சவிட்டன?
பெற்றோர்கள் இவர்களின் கல்யாணக் காணொளியைப் பார்த்துப்பார்த்து தங்களின் மன ரணங்களைக் கீறிக்கீறி ஆற்றிக்கொண்டிருந்தார்கள்.  
‘காசியாத்திரை’ பொய்யாகப் போய்விட்டு மணமேடையை நோக்கி நடந்த அவன்  இடுப்பில் வெண் பட்டும், மயில்கண் மேலாடையுமாக நடந்த அழகு, என்ன அழகு,   என்ன அழகு! கூறைப்புடவையுடன் பாற்கடலிலிருந்து புறப்பட்ட தேவியென அவள் வந்த போது,  மங்கள வாத்யம் முழங்க, மலர்மாரி பொழிய, வேத மந்திரங்கள் நெகிழ்த்த, இளமையும், அழகும் ததும்பித் ததும்பிப் பொங்கின.  அவையெல்லாம் பொய்யா, மெய்யா? பொய் என்றால் யார் சொன்ன பொய்? மெய் என்றால் ஏன் நிலைக்கவில்லை? துல்லியமான ஆனந்தத்தைக் காட்டிவிட்டு நீளும் சோகத்தில் வயதான நால்வரை ஆழ்த்திய அது என்ன விளையாட்டு? சிவன் தன் மனைவியோடும்,  குழந்தைகளோடும்தானே இருக்கிறான்; ஆனால், அவன் குழந்தைகளுக்குப் பிள்ளைகள் இல்லை அல்லவா?அந்த சோகம் இங்கே சாபமாக வருகிறது போலும். சிவனே, நீ என்றும் இருப்பவன் அல்லவா, உன் குடும்பமும் என்றும் இருக்கிறதல்லவா, பின் ஏன் மனிதனின் கனவுகளோடு விளையாடுகிறாய்?’மூப்பின் தனிமை, நோக்கங்களற்ற வாழ்க்கை நால்வரும் பேசிப்பேசி மாய்கிறார்கள்.  
ஒரு சில வாரங்கள் சென்ற பிறகு ஒருமெயில்வந்தது,  ’யுகந்தரா’விலிருந்து.
“அன்புப் பெற்றோர்களே, பன்னிரெண்டு வாரங்கள் வளர்ந்த நிலையில்,  யுகந்தராவின் மூலம் ஏகாகினி எழுதுகிறேன். மிகச் சுருக்கமாகச் சொல்ல ஆசைப்படுகிறேன். கருக்குடையின் கீழ் பாதுகாப்பாக இருக்கிறது.   தெரியுமா, மூக்கு, வாய், காதுகள், கைகள், கால்கள் வடிவம் பெறத் தொடங்கிவிட்டன. ஈறுகளில் பாற்பல் படுக்கை. மூளை திறம்பட இருக்கிறதாம்-யுகந்தரா சொல்கிறாள்.  கை ரேகைகள் கூட அமைந்து விட்டதாம். தொப்புள் கொடி வழி வரும் உணவின் இருப்பை ஏற்ற வேண்டுமென அவள் கேட்டுக் கொள்கிறாள்; உங்களைப் பார்க்கவும் விழைகிறாள். உங்கள் குரல் கேட்கும் ஆவலை தூண்டிவிட்டுவிட்டாள்.  வருவீர்கள் அல்லவா?”
பெரியவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.  யார் இந்த யுகந்தராவும், ஏகாகினியும்? சோனாவும், சந்துருவும் உயிரோடு இல்லையே?அவர்களுக்கு வந்திருக்கும் மெயில் ஏதும் பொய்யோ?பணம் பறிப்பதற்கான தந்திரமோ? போலீஸுக்குப் போகலாமா? தூதரகத்திற்குப் போனால் உதவுவார்களா?
இவர்கள் சந்தேகித்தப்படியே எதிர்விளைவுகள் இருந்தன.  ’நம்ம டென்ஷனுக்கு இந்த மாரி ஒண்ணுரண்டு வேணும் சார்.  இதுக்கெல்லாம் பதில் போடாத சார், அதுதான் பேஜாரு,’ ஏரியா போலீஸின் தீர்வு இது.
‘இதெல்லாம்ஃபேக் ஐ டி சார், மேட்டர்ல்ல சீரியஸ்ஸா ஏதும் இருந்தா விசாரிக்கலாம்.  இது ஏதோ கம்ப்யூட்டர் பைத்தியம் செஞ்சிருக்கும். ’ஜிஹாத்’ கும்பல்னா அவங்க டார்கெட்டே வேற; மால்வேர்ன்னா இத்தன நேரத்ல தெரிஞ்சிருக்கும்.   அடுத்த மெயில் வந்தா ஓபன் பண்ணாம எடுத்துட்டு வாங்க,’ இது சைபர் க்ரைம்.
தூதரகம்,’எங்க ஏரியா இல்ல சார் இது,’ என்றது.  
சில வாரங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு மெயில். ‘அதான் பர்சனல் டேட்டாவெல்லாம் எடுத்துட்டோமே.  நாமே தொறந்துதான் பாப்போமே,’ என்றாள் சந்துருவின் அம்மா. ’தெரிஞ்சா சைபர் க்ரம்ல நம்மள போட்டுப்பாத்துடுவாடி,’ என்றாள் சோனாவின் அம்மா.  
பாலையில் அலைந்து திரிகையில் தென்படும் ஊற்றா அல்லது கானல் நீரா? மறைந்த உயிர்களின் ஏக்கங்களா அல்லது விதியின் சீண்டல்களா? இப்போது இவர்கள் செய்ய வேண்டியதுதான் என்ன?
“செத்த சும்மா இருங்கோளேன்,  ஏண்டா, வைத்தி ப்ரொஃபெசர் ரங்கனாதனக் கூப்பிட்டுக் காட்டுவோம், என்ன சொல்ற?”
“பிரியப் பெற்றோரின் பெற்றோர்களே,  
எத்தனை பெரிய இழப்பு நமக்கு.  அவர்கள் இருவரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்.  நீங்களாவது வர மாட்டீர்களா? எலும்புகள் வளரத் தொடங்கிவிட்டன,  ஜெனிடல்ஸ் அமைந்துவிட்டன, கண்களை மூடித் திறக்கப் பயிலுகிறேன்.  நுரையீரலும் தசைகளும் வலுவாக ஆரம்பித்திருக்கின்றன. யுகந்தராவும் நானும் ஏங்குகிறோம்.  எங்கள் உணவை நாங்களே தயாரித்துக் கொண்டிருக்கிறோம், ப்ரசன்னாவின் உதவியோடு. ஆனால் எவ்வளவு நாள்?”
ரங்கனாதன் படித்துவிட்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்தார்.  விரல்களால் காற்றில் ஏதோ எழுதினார். மூன்றுமுறை காஃபி கேட்டுவிட்டு எதையுமே குடிக்காமல்,  ’ஸ்மோக் பண்ணலாமா?’ எனக் கேட்காமல் சிகரெட்டை பற்ற வைத்து அசடு வழிய அணைத்தார், முடி இல்லாத தலையில் தாளம் போட்டார்.  ”ப்ரசன்னாவைப் பார்க்கப் போகலாம். அவன் அனேகமாக சந்த்ரு, சோனா ஆய்வகக்கூடத்தில் வேலை செய்யலாம்,’ என்றார்.
பல ஏக்கர் பரந்து காணப்பட்ட அந்த ஆய்வகம் மரக் கூட்டங்களினிடையே மறைந்திருந்தது.  பாதுகாப்புப் பணியிலிருந்த ரோபோக்கள் கடித நகல்களைப் பார்த்தவுடன் நகரும் படிக்கட்டுகளில் அவர்களை அழைத்துச் சென்று மூன்றடுக்குகளாக இருந்த அடித்தளத்திற்கு அழைத்துச் சென்றன.   ரோபோக்கள் தங்களுக்குள் ‘என்ன விஷயம்?’எனக் கேட்பதைப் போலவும், உதட்டைப் பிதுக்குவது போலவும் நடந்து கொள்வதை ரங்கனாதன் கவனித்தார்.
‘சார்,  நீங்களா? இங்கேயா இருக்கிறீர்கள்?’ என்றான் ப்ரசன்னா.  அவருடைய பி. ஹெச். டி மாணவன் அவன்.
‘பொண்ணு இங்க இருக்காப்பா; உன்னப் பாத்ததுமே எனக்கு பாதி கவல போயிடுத்து.  உன்னால ஒரு காரியம் ஆகணும்.’
அவனுக்கும் சந்துருவின் வயதுதான் இருக்கும்.  பளிச்சென்று இருந்தான். சிரிக்கையில் ஒழுங்கற்ற பல்வரிசை தெரிந்தது.  கண்களும், முகமும் கூடச் சேர்ந்து நட்பாகச் சிரித்தன. மெயில் நகல்களைப் படித்துவிட்டு’நாட்டி’ என்றான்.  குரலை வெகுவாகக் குறைத்து ‘கடவுள் தவிர்த்துவிட்ட ‘எக்ஸ்’ கட்டடத்திற்கு நீங்களும், வைத்தி சாரும் இந்த மறைப்பானை அணிந்து இரவு ஒரு மணிக்கு வாருங்கள், ’ என்றான்.  
‘நாங்களும் வருகிறோமே.  டிஸ்டெர்ப் செய்ய மாட்டோம்.’
‘அப்படியா? மேலும் மூணு மறைப்பான்கள் தருவது பெரிய விஷயமில்ல.  கவனமாக வர வேண்டும். ’
இரவில் கண் எதிரே பார்த்த யுகந்தரா கொள்ளை கொண்டாள்.   கச்சிதமான வடிவம், தங்க ரேகை ஓடிய உடல், எடுத்துக் கட்டிய கூந்தல்,  அப்பழுக்கற்ற மனுஷி. சிரித்த முகத்துடன், இனிமையாக வரவேற்றாள்.
’குனிந்து வணங்க ஆசை; ஆனால்,   வயிறு இடிக்கிறது,’ என்றாள்.
‘அம்மா,   நீ… நீங்கள் சோனாவின் கரு சுமக்கும் வாடகைத் தாயா?’ என்றார் நேரடியாக ரங்கனாதன்.  அவள் மறுப்பாகச் சிரித்தாள்.
“அப்போ, ஏகாகினிதான் வாடைகத் தாயோ?” பாட்டியின் குரல் கேட்டு ஏகாகினி சிலிர்த்து உள்ளே புரண்டாள்.  
அதற்கும் சிரிப்புதான் பதில்.  
‘அப்ப,  மெயில் பொய்யா?’
‘பொய்யில்லம்மா’
“இன்னொருதரம் கூப்பிடு,  அம்மான்னு கூப்பிடு”
‘அம்மா,  அம்மா’
“தெய்வமே,  சோனா குரலாட்டமே இருக்கே.”
‘அவங்கதானே என்ன அமைச்சதில பாதி.’
“அப்படின்னா?”
“மீதி சந்துரு”
“என்னது அவாளுக்கு இவ்ளோ பெரிய பொண்ணா?கர்ப்பமா வேற இருக்கே?”
‘ப்ரசன்னா என்னதுப்பா இதெல்லாம்? ஏதாவது விஆர் ஷோவா?’
“முன்னறைக்குப் போய் பேசலாம் வாங்க”
“நீங்க பாத்தது மனுஷியில்ல, ரோபோ பேரு யுகந்தரா. மிகவும் செறிவூட்டப்பட்ட செயற்கை அறிவும்,  நுண்ணுணர்வும், இயந்திர மொழித் திறனும் உள்ளவள். நம்மைப் போலவே சிந்தித்து, பதில் சொல்லி,  கேள்விகள் கேட்டு, சிரித்து, அழுது, தூங்கக்கூட செய்பவள். ”
“சாப்பாடு கூட நம்மப் போலவா?’’
அவன் சிரித்தான்.  ’சக்தி அவளுக்கு சிப் மூலமாக.  நேநோ டெக்-ஆடோ சார்ஜ். நம் நரம்பமைப்பைப் போல் மூளையில் வைஃபை ஸ்டென்ட் பையாக பாட்ஸ்’
“அப்படின்னா,   கர்ப்பம் எப்படிப்பா?”
‘கருவ வெளில வளர்த்து கர்ப்பப்பைல வச்சு குழந்த பெத்தாங்க இல்லியா அதாவது,  இயற்கையா கரு வளர வாய்ப்பு இல்லாதவங்க. ஏன் ஒரு ரோபோ வயித்ல கர்ப்பப்பை அமைச்சு வளர்க்கக்கூடாதுன்னு யோசிச்சோம்.  வாடகைத் தாய் விஷயத்ல சில மைனஸ்ஸும் இருக்கில்ல அதனால வந்த ஐடியா இது. அதுல தான் சோனா சந்துரு பெரிய ரெவல்யூஷன் கொண்டுவந்திருக்காங்க.  கருக்குடை அமைச்சு, அதுக்குள்ள தங்களுடைய உறைசெய்யப்பட்ட முளைக்கருவ வச்சாங்க;கரு வளர வளர பெரிதாகுமில்ல, அதனால அதுக்குள்ள சென்சர்கள வைச்சாங்க குட விரியறத்துக்கு,   பாரசுட் மாரின்னு புரிஞ்சுக்கோங்கோ. அதுக்கு சக்திக்குன்னு கரையக்கூடிய மைக்ரோ மாத்திரைகள், ஏ டு இசெட் விடமின்களும், மினரல்களும் சரியான கலவையில் அமைந்த மாத்திரைகள்.  இதைத்தவிர ரோபோவிலிருந்து தொப்புள்கொடி மாரி ஒண்ணு வரும். இதில ப்யூட்டி என்னன்னா மைக்ரோ மாத்திரைகள் குறைஞ்சாலோ, தொப்புள்கொடிலேந்து சரியா சக்தி போகலேன்னாலோ ரோபோவே கண்டுபிடிச்சு சொல்லிடும்,   சரியும் செஞ்சுண்டுடும்.”
“அப்ப,  ஏகாகினிங்கறது?”
‘அதுதான் சார் குழந்த, பிறக்கப்போற குழந்த. அபிமன்யு, ப்ரஹ்லாதன்,  துருவன் மாரி கருவில திரு அமஞ்ச உயிர். ’
‘அதுவா லெட்டெர் போட்டுது?’
“ஆமாம்மா, எனக்குத் தெரியாமலே பண்ணிருக்கு”
‘இந்த பரிசோதனையெல்லாம் ஏன் ரகசியமா பண்ணனும்?’
மிகச் சிறிய குரலில், ‘மதம், அரசு, போட்டி, செலவுக் கணக்கு’என்றான்
’எப்போ குழந்த பொறக்கும்? எந்த டாக்டரும் வேண்டாமா? குழந்த மனுஷக் குழந்தையாத்தானே இருக்கும்?அப்ப அதுக்கு பாலெல்லாம் வேணாமா? ரோபோவே பால் குடுத்துடுமா?’
‘நான் இப்ப செயற்கையாக பால் சுரப்பிகள் தயார் செய்து இயங்க வைக்கப் பார்க்கற ‘ரிசர்ச்’தான் செய்றேன்.  இப்போதைக்கு யுகந்தரா இன்ஃபன்ட் புட் ஆர்டர் செய்துவிட்டாள். ”
‘அடேங்கப்பா,  என்ன ப்ளானிங்.   சார், ஏகாகினி பொறந்த உடனே எங்ககிட்ட தந்துடுவேளா?’
‘பர்த் சர்டிஃபிகட்டோட தருவோம்- மூன்று மாதங்கள் கழித்து.’
“அப்படியா,  அவ்ளோ நாள் ஆகுமா? நாங்க பாக்க வரலாமோல்யோ?”
’மாசம் ஒரு தரம் ரண்டு பேர் மட்டும் சுத்திகரிக்கப்பட்ட ஆடை அணிந்து அரை மணி பார்க்கலாம்.”
‘ப்ரசன்னா,   நீங்க ரோபோ இல்லியே?’
‘கிள்ளிப் பாருங்கம்மா.’
‘குழந்த அழற மாரி இருக்கே?’
‘அவளே டெலிவரி செஞ்சுண்டுட்டா.’
“பொறந்த நேரம் வேணுமே? ஜாதகம் எழுதக் கேப்பாளே.”
‘அதெல்லாம் கவலப்படாதீங்க.  யுகந்தரா ஜாதகமே துல்லியமா தந்துடுவா’
ரோஜாப்பூ போல ஏகாகினி இருந்தாள்.  மூன்று மாதங்களில் வீட்டிற்கும் வந்துவிட்டாள்.  ’பிந்துமாதவன்’ எனப் பெயரிட்டு சோனா சந்துருவின் மற்றொரு முளைக்கருவை ‘ஏகாகினி’யோடு கருவில் வளர்த்த யுகந்தரா தனக்குள் சொல்லிக் கொண்டாள்.  ’நான் சுமந்த கருவில் ஒன்றாவது எனக்கில்லையா? நான் தாய் அல்லவா? ப்ரசன்னாவின் மறைப்பான் இருக்கவே இருக்கிறதே! மேலும் அவன் ஆராய்ச்சிக்கு நானும் வேண்டும்,   குழந்தையும் வேண்டும், சமாதானப்படுத்திவிடலாம். சோனா, சந்துரு நீங்கள் தேர்ந்தெடுத்த பெயர்களை நான் மாற்றிவிட்டேன். வருத்தப்படாதீர்கள். மனித உணர்ச்சிகள் வந்த பிறகும் நான் நியாயமாக நடந்து கொண்டேன்.  ஒன்றைக் கொடுத்துவிட்டேனே! கண்ணான பூ மகனே, இன்னமும் ஏகாகினியைத் தேடாதே!’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.