முறுக்குக்கம்பிகளும் ஷாம்புக்களும் கோ ஸ்பான்ஸர்ட் பை தருணங்களும் – கவிஞர் இசையின் கவிதை குறித்து.

தமிழ்க் கவிதைகள் பற்றிப்பேசும்போது கவிஞர் இசையின் கவிதைகள் பற்றி நண்பர் குழாமில் பேச்சு திரும்பியது. மிக மிக எளிமையான கதை, நக்கல் நையாண்டியைத் தவிர ஒன்றுமில்லை, ஒரு நொடிக்கு நம் நாவில் ஒட்டிக்கொண்டு கரைந்துபோகும் இனிப்பைப் போல் எனப் பலதரப்பட்ட கருத்துகள். பொதுவாகவே கவிதையில் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் எனும் திசையில் விவாதம் சென்றபோது ஆழமற்றவை எனும் தளத்தில் மட்டுமே வைத்து இசையின் கவிதைகள் பேசப்பட்டன. கவிதையின் பேசுபொருளோ, சொல்முறையோ, சுட்டப்படும் படிமங்களோ எதுவுமே ஆழமான தளங்களுக்குச் செல்வதில்லை, மிக மேலோட்டமான வரிகள் என்பதுவே பொதுவானப் பார்வையாக இருந்தது.

சிறு பிராணிகளான நாயும், பூனையும், முயலும் தத்தமது வயிற்றில் குட்டி வளர்கிறது எனும் போலியான உணர்வை சில சமயம் அடையும். அதை ஃபால்ஸ் பிரெக்னன்ஸி – போலிக்கருப்பம் என கால்நடை மருத்துவர்கள் அழைக்கிறார்கள்.  மரபணுவின ஞாபகம் அவர்களது மாதவிலக்கு காலங்களுடன் விளையாடுவதால் நடக்கும் விந்தை. தனியே வாழும் பிராணிகள் கூட இந்த உணர்விலிருந்து தப்ப முடியாது. இக்காலகட்டத்தில் அவை மிகையான பாதுகாப்புணர்வோடும் இருக்கும். வளர்ப்பவர்களிடம் மிதமானப பாசத்தைக் காட்டும். உலகில் பிற எதுவும் முக்கியமல்ல என்பது போல பிறக்கச்சாத்தியமற்ற குட்டிகளுக்குத்தேவையான இருப்பிடங்களை மிகத் தீவிரமாக உருவாக்கத் தொடங்கும். இந்த மனநிலை மூன்று நாட்கள் நீடித்தபின்னர் பழைய நிலைக்குத் திரும்பிவிடும்.

நாமும் கவிதை படிக்கப்போகிறோம் என்றதும் ஒருவிதமான எதிர்பார்ப்புக்குத் தயாராகிறோம். மொழியளவில், கவிதையாக்கத்தில், படிமத்தொகை உருவாக்கத்தில். இப்படி மரபான இலக்கிய வகைமைகளை நாம் அணுகும்தோறும் சம்பிரதாயமான எதிர்பார்ப்புகளோடு அணுகப்பார்க்கிறோம் எனத் தோன்றுகிறது. வானம்பாடி காலத்தில் கவிதைகளில் இருந்த வடிவம் சார்ந்த எதிர்பார்ப்பு, நவீன கவிதைகளின் வரவின்போது மிகை உணர்ச்சிகளின் மீதான எதிர்பார்ப்பு என நாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் முந்தைய அமைப்புகளைப் புது வகைகள் மீது போட்டுப்பார்க்கிறோம்.

கவிதையாக்கம் குறித்து நமக்கிருக்கும் மயக்கங்களைத் தாண்டி கவிஞர் இசையின் வரிகளைப் பார்க்க வேண்டியுள்ளது. இவை வார்த்தைகளின் வரிசை மீதும், கவிதை இலக்கணம் மீதும் மதிப்புள்ள கவிதைகள அல்ல. இயல்புக்கும் கற்பனைக்கும இடையே சஞ்சரிக்கும் வேடிக்கை உலகத்தைப் பற்றிப்பேசுபன. மரபு வழி மனது கொண்டவர் என்றாலும் அதை மறுதலித்து சற்றேனும் தளர்த்திக்கொள் என எதிர் தரப்பிலிருந்து தன் கவிதை உலகை அமைத்துக்கொள்பவராகக் கவிஞர் தெரிகிறார். அவர் மனம் இயங்கும் முறை அப்படி இருக்க வேண்டும், இல்லாவிட்டால் ஏதேனும் ஒரு சொல்லேனும் நீ எங்கள் உலகவாசி அல்ல எனத் தள்ளிவிட்டுவிடக்கூடும்.

ஹஸ்தினாபுரம் ரயில்வண்டி

ஹஸ்தினாபுரத்திலிருந்து

சோமனூர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கினேன்.

ஒரு கணம் ஒன்றுமே  விளங்கவில்லை.

காலம் திகைத்து முழித்தது.

பிளாட்பாரத்தின் சிமெண்ட் பெஞ்சில்

மல்லாந்து படுத்திருந்த குடிகாரன்

சத்தமாகப் பாடிக்கொண்டிருந்தான்.

ஐஸ் வண்டிக்கு கை நீட்டிய

அழுக்குக் குழந்தையை அவள் தாய்

அடித்து இழுத்துப் போனாள்.

பக்கத்து பள்ளிவாசலில் இருந்து பாங்கு ஒலிக்கிறது.

நான் என் தொடையைத் தட்டி

“ஊசி முனையளவு இடம் கூடக் கிடையாது”

என்று சொன்னேன்

அப்போது என் மீது பூமாரி பொழிய

போலீஸ்காரர் விசில் ஊதுகிறார்.

பெரிதும் எதார்த்தத் தளத்தைச் சார்ந்த துவக்கம். நேரடியான ஒரு இந்திய சிறுநகர் வர்ணனை. முதல் பத்து வரிகள் எந்த ஊருக்கும் பொருந்தும் ஒன்று. வாழ்வனுபவமோ மன உணர்வு நகர்வுகளோ அற்றது. “ஊசி முனையளவு..” எனும் வரி தலைப்புடன் ஒன்று சேர்கிறது. மகாபாரத கதை அறிந்தவர்களுக்கு ஹஸ்தினாபுரம் பெரிய கனவுத்திடல். மரபுலகில் அத்தொல் நகரம் பலவற்றின் குறியீடாக நிற்கிறது. இறப்பு, பேராசை, இழப்பு, மண்ணாசை, பெண்ணாசை, கர்வம், அகங்காரம், துச்சம் என எதைக் கொண்டாலும் நாம் அறிந்த ஹஸ்தினாபுரம் நகரின் இயல்புக்குள் பொருத்திவிடலாம். ஒரு பிரம்மாண்டமான காலகட்டத்தில் குறிப்பிட்ட ஒரு மையத்தை இக்கவிதை ஸ்தூலமாக எழுப்பியிருக்கிறது. அடுத்து வரயிருக்கும் வரிகள் ஒரு பழங்கனவின் நிகழ்களமாக இருக்கலாம், பழைய நாயகர்களின் ஒப்பாரியாக மாறியிருக்கலாம், அல்லது இதிலிருந்து எழும்பிச் சென்று வாழ்வின் அர்த்தமின்மையைப் பற்றிய ஒரு சொல்லாக எஞ்சியிருக்கலாம்.

இசை தேர்ந்தெடுத்தது ஒரு காட்சிப்படிமத்தை. தன்னை துரியோதனனாக எண்ணிக்கொண்டு “ஊசி முனையளவு கூடக் கிடையாது” , எனத் தொடை தட்டிப் பேசியபடி ஒரு நடிகனாகிறான் கவிஞன். இங்குதான் இயல்புக்கும் கற்பனைக்கும் இடையே ஒரு வேடிக்கை நிகழ்கிறது. சிறு இனிப்பாகக் கரையும் வேடிக்கையல்ல. நம் முன்னே இருக்கும் யதார்த்தத்துக்கும் வரலாற்றுக்கும் இடையேயான தூரத்தைக் காட்டும் சித்திரம். பூமாரி விசில் பொழியும் போலீஸ்காரர் நம்மை அவலத்திலிருந்து காக்கிறார். வரலாற்றில் வாழும் கலைஞனுக்கு இது ஒரு மிகப் பெரிய தருணம். துரியோதனனாக மாறிவிடச்சாத்தியமுள்ள அனைத்தும் அளிக்கப்பட்டிருக்கிறது. சூழல் அதற்கு ஏதுவாக இல்லை, கேலிக்குரியதாக மாறியிருக்கிறது என்றாலும் அவன் அதை அஞ்சவில்லை. இனி ஒரு வாய்ப்பு கிடைக்காது எனும் எண்ணத்தில் ரயில்வண்டி பிளாட்பாரத்திலேயே தொடைத் தட்டுகிறான்.

வானிலிருந்து பூமாரிப்பொழியும் கணத்தை அவன் எதிர்பார்த்திருந்தான். ஏனென்றால் அவனைச் சுற்றியிருக்கும் தொலைக்காட்சியும், சினிமாவும் அப்படித்தான் அந்த நொடியை அவனுள் விதைத்திருக்கின்றன. ஒரு காவிய தருணமாக அல்ல, முறுக்குக்கம்பிகளும் ஷாம்புக்களும் கோ ஸ்பான்ஸர்ட் பை சிமெண்டு விளம்பரங்களும் சேர்ந்து உண்டாக்கிய பிரேக் தருணம். அந்த வரியும் அந்த பூ சொறிதலுமே அவனைப் பொருத்தவரை அவ்வூரின் மையம். ஆனால் அவனுக்கு வாய்த்திருப்பதோ ஒரு போலீஸ்காரரின் விசில் சத்தமும், பள்ளிவாசலின் பாங்கு ஒலியும் மட்டுமே.

இது ஒரு மிக எளிமையான கேலிச்சித்திரம் இல்லையா? இருக்கலாம். அவரைக் கேட்டால் அப்படிச் சொல்லுவாராக இருக்கும். ஆனால் அந்த எளிமை ஆழமான படிமத்தை சர்வசாதாரணமாகத் தாண்டுவதை இக்கவிதையில் காணலாம். கவிஞர் இசையின் ஆதார மனம் இயங்கும் திசை எனச் சொல்லமுடியாவிட்டாலும் பொதுவாக நம்மைச் சூழ்ந்துள்ள சூழலின் மொழிக்கட்டமைப்புகள் உருவாகும் விதத்தை இது காட்டுகிறது.

ஜெயமோகன் ஒரு கட்டுரையில் நித்தி சொல்வதாக எழுதியிருப்பார் – “இமையத்தை காளிதாசனின் சல்லியம் இல்லாமல் காண முடியாது” என. நம் முன்னே இருக்கும் தருணங்களை மொழி உருவாக்கும் கட்டமைப்புகளையும் மீறி பல்லூடக ஆக்கிரமிப்பு இல்லாமல் காண முடியாது என்பதுதான் இன்றைய காலம். அங்கதச்சுவைக்கும் அவலத்துக்கும் இடையே எங்கோ மறைந்திருக்கும் பாதச்சுவடுகள்.

இதை ஒரு விலகல் கொண்டவர்களின் மனநிலை என எடுத்துக்கொள்ளத்தேவையில்லை. தேவையானயளவு ஆழமும் மொழி அனுபவமும் கொண்ட இப்பாணிக்கவிதைகள் மிஞ்சிப்போனால் ஐந்தாறு விஷயங்களை எழுதும் நம் கவிதை உலகில் வேறொரு பார்வைக்கோணத்தைக் காட்டுகிறது.

மிகைப்படுத்தல்கள் மேலும் மிகைப்படுத்தப்படும்போது கேலியாகத்தெரிகின்றன.

Mr. சஷ்டிக்கவசம் நம் அன்றாடத்தை அதற்குரிய மிகைப்படுத்தலின்றி சொல்லும் கவிதை. அதை மிதமிஞ்சிய கேலியாக நாம் எடுத்துக்கொள்ளமுடியும். எளிமையாக அவர் முன்வைக்கும் உலகம் நமக்கு அறிமுகமான அதே சமயம் நாம் எதிர்பாராத கோணத்திலான அனுபவத்தைக் கொண்டது.

Mr. சஷ்டிக்கவசம்
அலுவலகத்திற்கு நேரமாகிவிட்ட படியால்
பூஜை அறையிலிருந்து
அவசர அவசரமாக வெளியேறி
இப்பெரு நகர வீதிக்கு
வந்துவிட்டது சஷ்டிக்கவசம்
உடல் மறைய வாகனங்களை
அணிந்திருக்கும் நகரத்தினூடே
வேகமெடுத்து நடக்கத்துவங்கியது
ஒரு தேநீர் அருந்தலாமா
என யோசித்துக்
காலமின்மையைக் கருதித் தொடர்ந்து நடந்தது
நெருக்கடிகளில் உடல் நுழைத்து
நடக்கும் அது வாகன ஓட்டிகள்
தன்னை ஏற்றுவது போல்
வருகையில் திகைத்து நின்றது
அம்மன் சந்நிதியைக் கடக்கையில்
கன்னத்தில் போட்டுக்கொண்டது
பேருந்து நிறுத்தத்தில் ஒரு காதல் ஜோடி நெருங்கி
நின்று குலவுவதை ஒற்றைக் கண்ணால்
முறைத்து நடந்தது
அலுவலகத்தின் முதல்படி நெருங்கவும்
சஷ்டிக்கவசம் முற்றவும் சரியாக இருந்தது

“உடல் மறைய வாகனங்களை/அணிந்திருக்கும் நகரத்தினூடே”, “வாகனஓட்டிகள்../../திகைத்து நின்றது”, போன்ற வரிகளில் அன்றாட தருணம் சாதாரணமாக வருவதாலேயே அதிகப்படியான கேலியாகிவிடுவதைக் காணமுடிகிறது.

இசை கவித்துவமற்ற உரைநடை வரிகளை எழுதுகிறார் எனும் குற்றச்சாட்டும் உண்டு. கவித்துவம் எனும்போதே அதில் மிகைத்தன்மையும் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குப் பொருந்தவைக்கும் வேலைப்பாடுகளும் வந்துவிடுகின்றன. இசையின் வரிகளில் அப்படி தாவிச்செல்லும் படிமங்கள் இருப்பதில்லை. இதனால் உண்மையும் உக்கிரமும் இல்லாமல் இல்லை. அங்கு கவிதை காட்டும் உண்மையின் அதே இடத்தை பொய்யும், கற்பனையற்ற காட்சியும், அன்றாடத்தன்மையும் சேர்ந்து ஆக்கிரமிக்கின்றன. இரண்டுக்கும் சமமான இடமே அவரது கவிதையில் தரப்பட்டுள்ளது. நம் நிகழ்கால உலகம் போல.

சமயவேலின் ஒரு கவிதையில்

சுயமரணமோ

சூன்யகிணற்றுக்குள்

பேரபத்தமாக மின்னுகிறது

சுயமரணம் என ஒன்று இருக்க முடியுமா எனக் கேள்வி கேட்கும்படியான அர்த்தமின்மையை வாழ்வில் பிணைத்திருக்கும் கவிஞனின் தற்கொலை ஒரு பேரபத்தம் இல்லாது என்னவாம்? இதையே இசை தனது “தயங்கித் தயங்கி செல்லும் பேருந்து”, கவிதையில் கவிஞன் பிறரது மரணத்தை எதிர்கொள்வதைக் காட்டும் பேருந்து நகர்வில் அர்த்தமின்மையை எளிமையாகக் காட்டிவிடுகிறார். மரணமும், ஜனனனும் பேரபத்தமாக ஆகும் தருணங்கள் சிலவற்றை இசை எழுதிவிடுகிறார். மரபான படிமங்களைம் அன்றாடத்தை உள்ளது உள்ளபடியே காட்டுவதாலும் மிகைப்படுத்தும் கேலிச்சித்திரிக்காரராக ஆகிறார். அதனால் எளிமையான இணைப்புகள் மூலம் நவீன கவிழ்பாக்க முறையில் வாழ்வின் அர்த்தமின்மையைக் கொண்டு வரமுடிகிறது. மரபான சொல்லடுக்குகள், காட்சிகளின் இடையே இன்றைய எதார்த்தத்தைச் சட்டென சேர்க்கும்போது கவிதை நிகழ்ந்துவிடுகிறது. “அந்தக் காலம் மலையேறிப்போனது” அப்படி பல கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு.

பொதுவாக கவிதைகள் தனி அனுபவ எல்லையைக் கடக்கும்போது உலகப்பொதுவான அனுபவமாகிறது என்கிறார்கள். In my personal epic, i am the hero என்பதுபோல ஒவ்வொருவரும் அவரவர்அனுபவமாகக் கைகொள்கிறார்கள். சில சமயம் அது நம்மை உயர்த்தும் அனுபவமாகிறது, சில சமயம் அது குல்லாவைப் போட்டுக்கொள்ளும் குரங்குகளின் அனுபவமாகிறது. இசையைப் பொருத்தவரை ரெண்டு அனுபவங்களுக்கும் அதிக வித்தியாசமில்லை. அவரது கவிதைகள் காட்டும் சித்திரங்களும் அப்படிப்பட்டவையே.

*
உறுமீன்களற்ற நதி – சுவடு பதிப்பகம்
அந்தக் காலம் மலையேறிப்போனது – காலச்சுவடு பதிப்பகம்
சிவாஜி கணேசனின் முத்தங்கள் – காலச்சுவடு பதிப்பகம்