எம். எல். – அத்தியாயம் 9

9

சோமு சரோஜாவைக் கையில் பிடித்துக் கொண்டான். மீனாட்சியுடன் பேசிக் கொண்டே வந்தான். மாமா அவனைக் கடைக்கு வரச் சொன்னார்கள் என்றாள் மீனா.

“மீனா! அப்பா என்னைக் கடைக்கு வா, கடைக்கு வான்னு தொந்தரவு பண்ணுதா. அங்க போயி சும்மாவே உக்காந்திருக்க வேண்டியிருக்கு. கல்லாவுல அப்பா உக்காந்திருவா. அண்ணன், கிட்டு மாமா, தட்சிணா, ரங்கனாதன்னு சேல்ஸுக்கும் ஆட்கள் இருக்காங்க. பேங்குக்கெல்லாம் அண்ணன் போயிட்டு வந்திருதான். இதுல நான் போயி என்ன செய்யிறது?”

“நீங்களும் ஆளோட ஆளாப் போயி உக்காந்துட்டு வந்தா என்ன? எப்பமும் பொஸ்தகம் படிச்சுக்கிட்டே இருந்தா போதுமா? மாமாவும் நீங்க கடையில வந்து இருக்க மாட்டிஹன்னு வருத்தப்படுதாஹல்லா… நம்ம வீட்டுத் தொழில். அதைக் கவனிக்க வேண்டாமா?”

“எத்தன தடவச் சொல்லுதது… கடையக் கவனிக்கத்தான் அத்தன பேரு இருக்காங்களே…”

“நீங்களும் கூடமாடச் சேர்ந்து ஒழைச்சீங்கன்னாதான் நமக்கு மரியாதை. இல்லேன்னா சும்மா உக்காந்து திங்காங்கன்னு யாராவது சொல்லிட்டா என்ன பண்ணுதது?”

“மீனா … மத்தவங்க என்ன நெனப்பாங்கன்னு நாம வாழ முடியாது…”

அதற்கு மேல் மீனாட்சி பேசவில்லை. சரோஜாவை இறுக்க அணைத்துக் கொண்டே நடந்தாள். அவளுக்கு அழுகை வந்துவிடும் போலிருந்தது. தொண்டையை அடைத்தது. ஏதோ சிறைக்குள் வந்து மாட்டிக் கொண்ட மாதிரி இருந்தது. அத்தை, மாமா, ராஜி அக்கா, அத்தான் எல்லாரும் அவளிடம் பிரியமாகத்தான் இருக்கிறார்கள். என்றாலும் சோமு வேலையில்லாதவன் போல் வீட்டிலேயே அடைந்து கிடப்பது அவளுக்குத்தான் உறுத்தலாக இருந்தது.

“நான் எங்கியாவது வேலைக்கிப் போகட்டுமா?” என்று கேட்டாள் மீனாட்சி.

சோமு சிரித்தான். “வேலைக்கிப் போகணுமா? எந்த வேலைக்கிப் போவே?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

“ஏன் எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ்லே போயி எழுதி வச்சா வேலை கெடைக்காதா?”

“அம்மா, அப்பாவெல்லாம் உன்னை வேலைக்கு விட மாட்டாங்க. எதுக்கு உனக்கு இந்த யோசனை எல்லாம்?…”

“நீங்களும் எங்கியும் போக மாட்டேங்கிறீங்க… எனக்கு ரெண்டு பேரும் வீட்டுல சும்மா உக்காந்து தின்னுக்கிட்டு இருக்க மாதிரி இருக்கு…”

“மொதல்ல ஒங்க அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சுதுன்னா வீட்டுல பெரிய சண்டையே வந்துரும்…”

“எங்க அப்பா கேட்டா நான் சொல்லிக்கிடுதேன்…”

“கூத்தியார் குண்டு பண்ணையார் மக நீ…. ஒன்னை யாரு வேலைக்கு விடுவா?… பேசாம இரு மீனா.” என்றான் சோமு. சோமுவுக்குத் தான் கடைக்குப் போகாமல் வீட்டிலேயே இருப்பது உறுத்தலாக இல்லை. இது நம் வீடு. நம் வீட்டில் நாம் இருக்கிறோம் என்று உரிமையுடன் நினைத்தான். சீதா பவனத்தை நெருங்கும்போது, காம்பவுண்டுக்குள் கள்ளபிரான் மாமா சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திப் பூட்டிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் சோமுவுக்குச் சந்தோஷமாக இருந்தது. கள்ளபிரான் மாமா கோச்சடையில் இருந்தான். மாசத்துக்கு ஒன்றிரண்டு நாள் சீதா பவனத்துக்கு வந்து விட்டுப் போவான். அப்படி அவன் வந்தால் அன்று அவனுக்கு நைட் டூட்டியாக இருக்கும். கோச்சடை மில்லில்தான் வேலை பார்த்தான். ஒரு காலத்தில் பெரிய கம்யூனிஸ்ட்டாக இருந்தவன், இப்போது அதையெல்லாம் விட்டு விட்டான். நெற்றியில் எப்போதும் குங்குமப் பொட்டு இருக்கும். சிவாஜி படத்துக்கு முதல் நாளே போய் விடுவான். கல்யாணமே செய்து கொள்ளவில்லை. முகத்தில் உதடுகளிலும், கைகளிலும் வெண் குஷ்டம் பரவி இருந்தது. அதனால்தான் அவன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பேச்சு உண்டு.

அவனுக்கும், சோமுவுடைய அப்பா சுப்பிரமணிய பிள்ளைக்கும் சேதுவாய்க்கால்தான். சுப்பிரமணிய பிள்ளை அவனுக்கு மாமா முறை. அவர்தான் கள்ளபிரானுக்கு கோச்சடை மில்லில் வேலை வாங்கிக் கொடுத்தார். அந்த விசுவாசம் அவனுக்கு எப்போதும் இருந்தது. அவன் சோமுவும், மீனாட்சியும், சரோஜாவும் வருவதைப் பார்க்கவில்லை. அழிக் கதவுக்கு வெளியே நின்று, “அத்தை.. அத்தை …” என்று கூப்பிடவும், அவனுடைய தோளில் சோமு கையைப் போடவும் சரியாக இருந்தது. கள்ளபிரான் திரும்பிப் பார்த்தான். சோமு. பக்கத்தில் மீனாட்சியும் சரோஜாவும். அவர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, “மாப்பிள்ளே!… எங்க ரெண்டு பேரும் போயிட்டு வாரீங்க?…” என்று கேட்டான்.

“நான் கோபால் பிள்ளைத் தாத்தா வீட்டுக்குப் போயிட்டு வந்துக்கிட்டிருந்தேன். வார வழியிலே இவ சரோஜாவைத் தேடி வந்துக்கிட்டிருந்தா,” என்றான் சோமு. சரோஜா கள்ளபிரானைப் பார்த்து எச்சில் வடியச் சிரித்தாள். அதற்குள் வீட்டிற்குள்ளிருந்து ராஜி வந்து அழிக் கதவுத் தாழ்ப்பாளைத் திறந்தாள். கள்ளபிரானைப் பார்த்து, “வாங்க” என்றாள். இரண்டாம் கட்டிலிருந்து சீதாவும் வந்தாள். “வாப்பா…” என்றாள்.

சோமுவின் தோளில் கையைப் போட்டவாறே கள்ளபிரான் வந்தான். மீனா சரோஜாவைப் பார்த்து, “யார் கிட்டேயும் சொல்லாமக் கொள்ளாம எங்கியும் போகக் கூடாது..” என்றாள். ராஜி உள்ளே போய் விட்டாள். சீதா, “எங்கம்மா இவளைத் தேடிக் கண்டுபிடிச்சே?..” என்று மீனாவிடம் கேட்டாள். “பாக்கியத்து சித்தி வீட்டுக்குப் பேப்பர் ரோஸ் பூவப் பாக்கப் போயிருக்கா அத்தை..” என்றாள் மீனா. “இன்னம அழிக் கதவப் பூட்டித்தான் வைக்கணும்.” என்றாள் சீதா.

கள்ளபிரானும், சோமுவும் மாடிக்குப் போய்விட்டார்கள். மாடி ஹாலில் பெரிய ஊஞ்சல் உண்டு. இரண்டு பேரும் அதில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்கள். மாடி வராந்தா கைப்பிடிச் சுவரில் ஒரு காகம் தன் அலகைச் சுவரில் தேய்த்துக் கூர்மைப்படுத்திக் கொண்டிருந்தது. எங்கேயோ வெங்காய வியாபாரி கூவிக் கொண்டு போனான். மீனா படியேறி கள்ளபிரானுக்குத் தண்ணீர் கொண்டு வந்தாள். “அப்பா என்ன வெயில்!.. காலையிலேயே இப்படி அடிக்குதே…” என்று சொல்லிக் கொண்டே அண்ணாந்து தண்ணீரைக் குடித்தான். தம்ளரை மீனாவிடம் கொடுக்கும்போது, “கூத்தியார் குண்டுல அப்பா, அம்மா, தங்கச்சி எல்லாம் சௌக்கியமா மீனா?” என்று கேட்டான்.

“எல்லாரும் நல்லா இருக்காங்க சித்தப்பா.. ஒங்க அப்பா, அம்மா எல்லாம் சௌக்கியம்தான?” என்று கேட்டாள்.

“இருக்காங்க… இருக்காங்க… ரெண்டு பேருக்கும் வயசாயிட்டுது. கால்வலி எல்லாம் இருக்கு. என்ன செய்ய?… ஏன் நின்னுக்கிட்டே இருக்கே?… அந்தச் சேரை எடுத்துப் போட்டு உக்காரேன்..” என்றான் கள்ளபிரான்.

“இல்ல சித்தப்பா… துணியெல்லாம் அப்பிடி அப்பிடியே கெடக்கு. தொவைக்கணும். பத்தரை மணிக்கு மேல ஆச்சுன்னா, ராஜி அக்காவே எல்லாத்தையும் எடுத்துப் போட்டுத் தொவைக்க உக்காந்துருவா.. என்ன சாப்பிடுதீய? … இட்லி எடுத்துட்டு வரட்டா?…”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்மா… வீட்டுல சாப்பிட்டுட்டுத்தான வாரேன்.. இன்னக்கி நைட் ஷிப்ட்.. அதான் கெளம்பி வந்தேன்.”

“சரி, சித்தப்பா.. சித்தப்பா கிட்டே பேசிட்டுச் சாப்பிட வாங்க…” என்று சோமுவிடம் சொல்லி விட்டு மாடிப்படியை நோக்கிச் சென்றாள் மீனா. அந்தக் காகம் “கக்… கக்…” என்று சொல்லிக் கொண்டிருந்தது. சோமு காலைத் தரையில் ஊன்றி ஊன்றி ஊஞ்சலை ஆட்டி விட்டான். ஊஞ்சலின் வேகத்தில் லேசான காற்று வீசியது. மாடியில் கூரை முழுதும் இரட்டை ஓடுகள் வேயப்பட்டிருந்தன. அதனால் வெக்கை குறைவாக இருந்தது.

“ஏ.. நீ இன்னும் சாப்பிடாமயா இருக்கே.. போயிச் சாப்பிட்டுட்டு வாடே…” என்றான் கள்ளபிரான்.

“சாப்பிட்டுக்கிடலாம் மாமா…”

“மார்க்ஸியம் எல்லாம் படிச்சுட்டு இருந்தியே? … படிச்சு முடிச்சிட்டியா?”

”எங்க முடிக்க?… முடிக்கிற சமாச்சாரமா அது?”

“ஒனக்கு எதுக்குடே இதெல்லாம்?… பேசாம அண்ணனை மாதிரி கடைக்கிப் போக வேண்டியதுதான?… கடைக்குப் போகப் பிடிக்கல்லைன்னா ஏதாவது வேலைக்கிப் போ…”

சோமு பதில் பேசாமல் தரையில் மிதித்து மிதித்து ஊஞ்சலை ஆட்டிக் கொண்டிருந்தான். ஊஞ்சல் சங்கிலிகள் உராய்ந்து சத்தம் எழுப்பின. சிறிது நேரம் கழித்து கள்ளபிரானிடம், “மாமா நீயும்தான் அதை எல்லாம் படிச்சிருக்கே… தத்துவத்தைப் பத்தி என்ன நெனக்கே மாமா?…” என்று கேட்டான் சோமு.

“தத்துவமா? … எது, மார்க்ஸீயமா?”

“ஆமா?…”

“ஒரே வரியில சொல்லணும்னா ஏட்டுச் சொரக்கா கறிக்கி உதவாது.”

“அப்பம் இதை வச்சித்தான ரஷ்யா, சீனாவிலே எல்லாம் புரட்சி நடந்திச்சு?..”

“ஒனக்கு எதுக்குடே புரட்சி, தத்துவம் அது இதெல்லாம்?… நீ என்ன அரசியல்வாதி ஆகப் போறீயா? அதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வருமா?…”

“ஏன் கோபால் பிள்ளை தாத்தா இருக்காளே?…”

“அவுஹ காலம் எல்லாம் முடிஞ்சு போச்சு.. அவுஹ கட்சி கட்சின்னு அலைஞ்சு போட்டு வீட்டுக்கு என்ன செஞ்சா? ஏதோ அவுஹ அப்பா வீடு, வியாபாரம்னு முன்யோசனையா ஏதோ செய்யப் போயி தாத்தாவோட ரெண்டு பையன்களும் தப்பிக் கரை சேந்தாங்க. அவுஹ, குடும்பத்துக்காக ஒரு துரும்பக் கிள்ளிப் போட்டுருப்பாஹளா? சரி, அந்தக் கட்சியிலயும் அவுஹ என்ன பெரிய பதவியிலயா இருந்தாஹ?… ஒண்ணுமில்ல…” என்றான் கள்ளபிரான்.

“மாமா… தாத்தாவை நீ ரொம்பக் கொறச்சு மதிப்பிடுதே.. அறுபது எழுபது வருஷமா கொள்கைப் பிடிப்போட ஒரே கட்சியிலே இருந்திருக்காக. ஜனங்களுக்கு நல்லது செஞ்சிருக்காங்கன்னா அது லேசான சமாசாரமா மாமா?…”

“தாத்தா ஜனங்களுக்கு என்ன நல்லது செஞ்சுட்டா?…”

“எவ்வளவு கூட்டங்கள், போராட்டங்கள்லே தாத்தா கலந்துக்கிட்டுருக்காங்க?…”

“எல்லாக் கட்சிக்காரனும்தான் கூட்டம் போடுதான், போராட்டம் நடத்துதான். இதனாலே ஜனங்களுக்கு என்ன நன்மை? அவன் அவன் ஒழைச்சுச் சம்பாதிக்கான். வேலை பாக்கான். தொழில் செய்தான். இதிலே கட்சிக்காரன் ஜனங்களுக்கு என்ன செய்யக் கெடக்கு?….”

“அப்போ கோபால் பிள்ளை தாத்தா ஜனங்களுடைய பிரச்னைகளைப் பத்திப் பேசினதுக்கு எந்த அர்த்தமும் இல்லியா மாமா?…”

“பேசினா போதுமா? வெறுங்கையாலே மொழம் போட்ட மாதிரிதான். … ஏதோ பதவிக்கு வந்து ஆட்சியப் பிடிச்சாலாவது ஏதாவது செய்யலாம். கம்யூனிஸ்ட் கட்சி என்னைக்காவது பதவிக்கு வந்துருக்கா? வெறும் பஞ்சாயத்து, முனிசிபல் வார்டு கவுன்சிலராவதுக்கே கட்சி ததிங்கிணத்தோம் போடுது… மாப்ளே.. நமக்கு எதுக்கு இந்த அரசியல் எளவெல்லாம்… இதனாலே சல்லிக் காசுக்குப் பிரயோசனம் இல்ல மாப்ளே… நீ போயிக் குளிச்சிச் சாப்புட்டுட்டு கடைக்கிப் போ… இதெல்லாம் பேசித் தீரக் கூடிய வெசயமில்லே… நான் கீழே போயி அத்தை கிட்டப் பேசிட்டு வாரேன்..” என்று சோமுவின் தோளில் தட்டிச் சொல்லி விட்டு எழுந்தான். சோமுவும் யோசனையுடன் எழுந்து நின்றான். ஊஞ்சல் லேசாக ஆடிக் கொண்டே இருந்தது. அந்தக் காகம் எப்போதோ பறந்து போயிருந்தது.

~oOo~

நாராயணன் மண்டையன் ஆசாரிச் சந்திலுள்ள கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸுக்குள் நுழையும்போது சாரு மஜும்தாரும், கிட்டனும் ஆபிஸின் முன் வராந்தாவில் கிடந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்த கந்தசாமியிடம் கோபால் பிள்ளையைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்கள். கந்தசாமிக்கு வயதாகி விட்டது. அவ்வளவாகக் காது கேட்காது. பழைய மில் தொழிலாளி. பக்கத்தில் தலை விரிச்சான் சந்தில்தான் அவருடைய வீடு. கிட்டன் ஏதோ கேட்க, அவர் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். நாராயணன் வந்ததும் கிட்டனிடம் என்னவென்று விசாரித்தான்.

“கோபால் பிள்ளை வீடு எங்க இருக்கு?” என்று கேட்டான் கிட்டன்.

“பக்கத்துலதான். நேரே போய் வலதுகைப் பக்கம் திரும்பினா மேலமாசி வீதி வரும். அதிலே ஸ்வீட்லேண்டுக்கு எதிர்த்தாப்பிலே சமையல் பாத்திரம் வாடகைக்கு விடுற கடையும் வீடும் சேர்ந்தாப்பிலே இருக்கும். அந்த மாடியிலேதான் இருக்காங்க… நீங்க யாரு?…” என்று கேட்டான் நாராயணன்.

கிட்டன் சாரு மஜும்தாரைப் பார்த்தான். அவர் ஆங்கிலத்தில், ‘கோயமுத்தூர்லிருந்து வருகிறோம்’ என்று சொல்லி விட்டு, ‘நன்றி’ என்றார்.

சாரு மஜும்தாரும் கிட்டனும் கோபால் பிள்ளையுடைய வீட்டை கந்தசாமியிடம் விசாரித்துக் கொண்டிருக்கும்போதே பீட்டர் கோபால் பிள்ளையுடைய வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டான். அங்கேதானே அவர்கள் வர வேண்டும் என்ற நிச்சயம். சாரு மஜும்தாரும் கிட்டனும் நாராயணன் கை காட்டிய வழியில் நடக்க ஆரம்பித்தார்கள். நாராயணன் யோசித்துக் கொண்டே உள்ளே போய் விட்டான்.

நாராயணனும், சோமுவும் போன பிறகு கோபால் பிள்ளை ஸ்டூலின் மீது சின்ன மருமகள் வைத்து விட்டுப் போயிருந்த இரண்டு இட்லியைச் சாப்பிட்டார். அவர் சாப்பிட்டு முடிக்கவும் கஸ்தூரி காபியை எடுத்து வரவும் சரியாக இருந்தது. கோபால் பிள்ளை தட்டிலேயே கையைக் கழுவினார். கஸ்தூரி காபியை நுரை பொங்க ஆற்றிக் கொண்டே, “மாமா!… சும்மா வார போற ஆட்கள் கிட்டே எல்லாம் பேசிக்கிட்டே இருக்காதீங்க. பேசாமே கதவைச் சாத்திட்டுப் படுங்க… எப்ப பாத்தாலும் யாராவது வந்துக்கிட்டேதான் இருப்பாங்க…” என்றாள்.

“இப்பம் தூக்கம் வரலைம்மா.. வேற யாரு? சோமுவும் நாராயணனும்தான் வந்துட்டுப் போறாங்க..” ஈஸிசேரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார். அவர் குடித்து விட்டு வைத்த காபித் தம்ளரை கஸ்தூரி எடுத்துக் கொண்டு உள்ளே போனாள். டவுன் பஸ் போகிற சத்தம் கேட்டது. தெருச் சத்தத்தை எல்லாம் கேட்டுக் கொண்டு கண்ணை மூடியிருந்தார். ஏதேதோ ஞாபகங்கள் எல்லாம் ஓடிக் கொண்டிருந்தன.

“ஐயா! வரலாங்களா?” என்ற குரல் கேட்டுக் கண்ணை விழித்தார். வாசலில் துரைப்பாண்டியும், புரொபஸர் பாலகிருஷ்ணனும் நின்று கொண்டிருந்தனர். “அடடே… வாங்க… வாங்க…” என்றார்.

“ஐயா தூக்கத்தைக் கெடுத்துட்டமோ?” என்றார் பாலகிருஷ்ணன்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல, சும்மா கண்ணை மூடிச் சாஞ்சிருந்தேன்.  வேற ஒண்ணுமில்ல… உக்காருங்க… உக்காருங்க.”

துரைப்பாண்டியும், பாலகிருஷ்ணனும் கட்டிலில் உட்கார்ந்தனர். சுவரில் சாய்த்து வைத்திருந்த மடக்கு நாற்காலிகளைக் காட்டி, “அதை எடுத்துப் போட்டுக்கிடுங்க.” என்றார் கோபால் பிள்ளை. “சும்மா இதிலயே உக்காந்துக்கிடுதோம்…” என்றார் பாலகிருஷ்ணன்.

இரண்டு பேரையும் பொதுவாகப் பார்த்து, “எப்படி இருக்கீங்க?” என்று கேட்டார்.

“நல்லாத்தேன் இருக்கேன்.” என்றான் துரைப்பாண்டி. பாலகிருஷ்ணன் உதடு பிரிய முறுவலித்தார். துரைப்பாண்டி அவனியாபுரத்துக்குப் பக்கத்தில் இருந்தான். தியாகராஜா காலேஜில் படித்து முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தான். துரைப்பாண்டியுடைய அப்பா ராஜாபாண்டி தெற்குவெளி வீதியில் மிட்டாய்க்கடை வைத்திருந்தார். அவர் திராவிடர் கழகத்தில் தீவிரமாக இருந்தார். எப்போதும் கருப்புச் சட்டைதான் போடுவார். துரைப்பாண்டியைத் தவிர இன்னொரு பெண்ணும் அவருக்கு இருந்தது. பெண் பத்தாவது படிக்கிறாள். அப்பாவைப் போல துரைப்பாண்டிக்கும் கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லை.

பாலகிருஷ்ணன் தியாகராஜா காலேஜில்தான் வேலை பார்த்தார். பிஸிக்ஸ் ப்ரொபஸர். திருமணம் செய்து கொள்ளவில்லை. மேலமாசி வீதியில் ஆ. ஜெகவீரபாண்டியனாரின் கண்ணகி அச்சகத்துக்கு அடுத்த வீடுதான் அவருடையது. வீட்டில் வயதான தாயும், தம்பியுடைய குடும்பமும் இருக்கிறது. அவருடைய தம்பி கோலப்பன் லோகல் பண்ட் அக்கவுண்ட்ஸில் வேலை பார்த்தான். ஒரே ஒரு பெண் குழந்தை இருக்கிறது. துரைப்பாண்டி படித்த காலேஜில் அவர் வேலை பார்த்ததால் கல்லூரி காலத்திலிருந்தே அவருக்கும் அவனுக்கும் நல்ல பழக்கம். இரண்டு பேரும் ஒன்றாகவே சார்மினார் சிகரெட் பிடிக்கிற அளவுக்கு நெருக்கம். பாலகிருஷ்ணனுக்கு எப்போதும் வேர்த்துக் கொட்டும். அதனால் சட்டையிலுள்ள மேலிரண்டு பொத்தான்களையும் போடவே மாட்டார். இரண்டு பேருமே எப்போது நேரம் கிடைத்தாலும் கோபால் பிள்ளையைப் பார்க்க வந்து விடுவார்கள். இரண்டு பேருக்குமே அவர் மீது நல்ல மரியாதை இருந்தது.

அவர்களைப் பார்த்ததும் சாப்பிட்டதும் ஏற்பட்ட அயர்ச்சி கோபால் பிள்ளைக்குப் போய் விட்டது. மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கிற திருவிழாவைப் பற்றிப் பேச்சு வந்தது.

“பெரியார் எவ்வளவோ பிரச்சாரம் பண்ணியும் கோயில்ல கூட்டம் கொறயலையே..” என்றான் துரைப்பாண்டி.

“இவ்வளவு தூரத்துக்கு விஞ்ஞானமெல்லாம் வளர்ந்திருக்கு… ஆனால் ஜனங்களுக்கு நாளுக்கு நாள் பக்தி கூடிக்கிட்டேல்லா போகுது!…” என்றார் பாலகிருஷ்ணன்.

“விஞ்ஞான வளர்ச்சி அதிகரிச்சா பக்தி குறைஞ்சிரும்னு சொல்ல முடியாது. ஐரோப்பா, அமெரிக்காவிலே இல்லாத விஞ்ஞான வளர்ச்சியா? ஏன் ரஷ்யாவிலே புரட்சி நடந்த பூமி. அங்கேயே மக்களுடைய மத நம்பிக்கைகள் குறையலியே!…” என்றார் கோபால் பிள்ளை.

“அதனாலேதான் சைனாவிலே மாசேதுங் கலாச்சாரப் புரட்சின்னு தனியா ஒரு புரட்சியை நடத்த ஆரம்பிச்சிட்டார்,” என்றான் துரைப்பாண்டி.

“ஜனங்களோட நம்பிக்கைகளை அவ்வளவு லேசிலே மாத்திர முடியாது. கடவுள் நம்பிக்கையை வளர்க்கிற மாதிரி விஞ்ஞான நம்பிக்கையை வளர்க்கணும். மக்களுக்கு விஞ்ஞான அறிவை கத்துக் குடுக்கணும், இதுக்கு ஒரு தனி இயக்கமே வேணும்.” என்றார் கோபால் பிள்ளை.

“ஒங்க யூனியன்லே இருக்கற மில் ஒர்க்கர்ஸ்ஸே, ஒரு பக்கம் கம்யூனிஸ்ட்டாகவும் இருந்துக்கிட்டு, குடும்பத்தோட கோயிலுக்கும் போறாங்களே…” என்றார் பாலகிருஷ்ணன்.

“எங்க வீட்டிலேயே என் மகன்கள், மருமக்கமார்கள் எல்லாம் சாமி கும்பிடுதாங்க. எல்லா விரதங்களும் இருக்காங்க… என்னாலே என் குடும்பத்தையே மாத்த முடியலியே.. என்ன செய்யிறது?..” என்றார் கோபால் பிள்ளை. அதைக் கேட்டு அவர்கள் இருவருமே சிரித்தனர். “யாரையும் அவ்வளவு லேசுல மாத்திர முடியாது.” என்றார் கோபால் பிள்ளை. துரைப்பாண்டியும், பாலகிருஷ்ணனும் அவர் கூறியதை ஒப்புக் கொண்டனர்.

பீட்டர் கோபால் பிள்ளை இருந்த மாடிக்கு ஏறுகிற படிக்கட்டின் கீழ்ப்படியில் யாரோ வழிப்போக்கனைப் போல உட்கார்ந்திருந்தான். சாரு மஜும்தாரும் கிட்டனும் எதிர்ச்சாரியிலிருந்த ஸ்வீட்லேண்டில் விசாரித்து விட்டு சாலையைக் கடந்து அங்கே வந்தனர்.

பீட்டர் எதிர்பார்த்தபடியே அவனிடன் வந்து கோபால் பிள்ளையைப் பற்றி விசாரித்தனர். பீட்டர் மாடியைக் கைகாட்டி, உடம்பை ஒதுக்கி வழிவிட்டான். சாரு மஜும்தார் முதலில் ஏறினார். அவர் பின்னால் கிட்டன் சென்றான். யாரோ படியில் வருகிற சத்தம் கேட்டு மூவருமே வாசலைப் பார்த்தனர். சாரு மஜும்தார் வாசலருகே நின்று, ஆங்கிலத்தில், கோபால் பிள்ளையைப் பார்க்க வேண்டும் என்றார். கோபால் பிள்ளை, “உள்ளே வாங்க… நான்தான் கோபால் பிள்ளை.” என்று ஆங்கிலத்தில் பதில் சொன்னார். சாரு மஜும்தார் வேகமாக உள்ளே வந்து கோபால் பிள்ளையின் கழுத்தைச் சுற்றிக் கைகளைப் போட்டுத் தழுவினார்.

“நான்தான் சாரு மஜும்தார்.” என்றார். பாலகிருஷ்ணனும் துரைப்பாண்டியும் ஆச்சரியத்தில் எழுந்து நின்றனர். கிட்டன் கதவோரத்தில் நின்று கொண்டிருந்தான். துரைப்பாண்டியும், பாலகிருஷ்ணனும் சுவரில் சாத்தியிருந்த மடக்கு நாற்காலிகளை விரித்துப் போட்டு, அவர்களை உட்காரச் சொன்னார்கள்.

(தொடரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.