அறிவும் அறியாமையும் – அருண் ஷௌரியின் ‘டூ செயிண்ட்ஸ்’ நூலை முன்வைத்து

அருண்  ஷௌரியின் வாழ்வு துயர் தோய்ந்தது. அவரது மகன், cerebral palsyயாலும் மனைவி Parkinson’s Diseaseஆலும் அவதிப்படுகின்றனர். செரிப்ரல் பால்ஸி, உடல் இயக்கங்களை மெல்ல மெல்லச் சீரழிக்கிறது. பார்க்கின்சன்ஸ் டிசீஸ் மூளையின் செயல்பாட்டை மெல்லச் சீர்குலைக்கிறது. இரண்டுமே தொடர்ந்து முற்றி, முடிவில் மரணத்துக்கு இட்டுச் செல்லும் நோய்மை நிலைகள். அருண் ஷௌரி தன் மகனின் உடல் நிலை குறித்து அவனது இளம் பருவத்திலேயே அறிந்து கொள்கிறார். அமெரிக்காவில் உலக வங்கி அமைப்பில் பணியாற்றிக் கொண்டிருப்பவர், தன் மகன் வளர்வதற்கு ஏற்ற இடம் என்று தாயகம் திரும்புகிறார். அதன் பின், அவரது மனைவிக்கு, 42ஆம் வயதில் ஒரு விபத்துக்குப்பின் மூளை பாதிக்கப்படுகிறது.

ஒரு கோணத்தில், மூவரின் வாழ்விலும் நாம் முடக்கப்பட்ட சாத்தியங்களைப் பார்க்கிறோம். ஆனால் கூட, அருண் ஷௌரி முதன்மை பத்திரிக்கையாளராக, அரசு நிர்வாகத்தில் உயர் பதவிகள் வகித்த சாதனையாளராகிறார். தன் மகனையும் மனைவியையும் இன்று வரை உடனிருந்து கவனித்துக் கொள்கிறார். இப்படிப்பட்ட வாழ்வில் எதற்கும் தளராத முனைப்பைக் கண்டு அருண் ஷௌரியின் மன வலிமையை நாம் வியக்கக்கூடும். ஆனால் வேறொருவர், அருண் ஷௌரியின் வாழ்வைச் சபிக்கப்பட்ட ஒன்று என்றும் கருதக்கூடும்.

அருண் ஷௌரியும் அவ்வாறே நினைத்திருக்கலாம். தன் மகன் மற்றும் மனைவியின் நிலை அவரை ஆன்மீகம் நோக்கிச் செலுத்துகிறது. விதி, துன்பம், துயரம், பிரக்ஞை, சுயாதீனம் முதலான கேள்விகளுக்கு விடை காணும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. மூளை மற்றும் நரம்பு மண்டலங்கள் குறித்த அறிவியலில் ஆர்வம் ஏற்படுத்துகிறது. சுருக்கமாய்ச் சொன்னால், ஆன்மீகம் அளிக்கும் உறுதிகளுக்கும் அறிவியல் எழுப்பும் ஐயங்களுக்கும், ஆன்மீகத்தால் சாத்தியப்படும் உறவுகளுக்கும் அறிவியலால் இயக்கப்படும் கருவி நிலைக்கும் ஆட்பட்டு, இவற்றின் முரண்பாடுகள் வாழ்வனுபவ தடுமாற்றங்களாய்ப் பிணிக்கும் நவீனத்துவ வியாதியான “மானுட நிலை” (The Human Condition), அருண் ஷௌரியின் மைய அக்கறையாகிறது. அதன் சிகரமே, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் ஸ்ரீ ரமண மகர்ஷி ஆகிய இருவரின் வாழ்வு, வாக்கு மற்றும் தரிசனங்களை அறிவியல் ஆய்வு முடிபுகளின் வெளிச்சத்தில் விசாரிக்கும் அவரது ‘டூ செயிண்ட்ஸ்’ என்ற நூல். எழுபது ஆண்டுகளைக் கடந்துள்ள அருண் ஷௌரி, இத்தனை அனுபவங்களுக்குப் பின்னும் அறிவுத் தேடலும் எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டவருமாய் இதில் வெளிப்படுகிறார். அவரது வாழ்வு குறைபட்டதாய் இருக்கலாம், ஆனால் நிறைவற்றதல்ல.

ஸ்வராஜ்யா தளத்தில் அரவிந்தன் நீலகண்டன் இந்தப் புத்தகத்துக்கு ஒரு விரிவான மதிப்புரை எழுதியிருக்கிறார். அருண் ஷௌரி எப்படி அடிப்படையில் ராமகிருஷ்ணரையும் ரமணரையும் ஞானிகளாக ஏற்றுக்கொண்டு மரியாதை கெடாத வகையில் அவர்களைக் கூர்மையாக விமரிசிக்கிறாரோ, அது போலவே அரவிந்தன் நீலகண்டனும் அருண் ஷௌரியை சக அறிபுலத்தவராய் ஏற்றுக்கொண்டு மரியாதை கெடாத வகையில், ஆனால் கூர்மையாக விமரிசித்திருக்கிறார் (இங்கு விமரிசனம் என்பது அடியறுப்பது என்ற பொருளில் கையாளப்படவில்லை, வெளிச்சம் பாய்ச்சுவது என்று பொருள்படுகிறது). அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டிய ஒன்று.

இந்தப் புத்தகத்தின் 26ஆம் பக்கத்தில் அருண் ஷௌரி இவ்வாறு எழுதுகிறார்:

ஆனால் ஸ்ரீ ராமகிருஷ்ணர் மற்றும் ஸ்ரீ ரமணர் விஷயத்தில் அவர்களது நல்லியல்பே அதிசயம். வாழ்க்கை குறித்த அவர்களது தரிசனங்கள், அவர்களது கூர்மையான அவதானிப்புகள், ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வில் அவர்களால் ஏற்பட்ட மாற்றங்கள், ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பொறி பறக்கும் சொற்கள், ஸ்ரீ ரமணரின் மௌன உரையாடல்- இவையே அதிசயங்கள். அவர்களது அனுபூதியின் உச்சம் என்றால் அது அவர்களது மறைஞான நிலைதான். வேறு சூழல்களிலும் முக்கியமற்றவை பலவும் நிலவ முடியும், பிற சாமானியர்களுக்கும் இந்த அனுபவங்கள் ஏற்பட முடியும் என்பதைப் புரிந்து கொண்டால் நாம் அவற்றை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு, பக்தி நிறைந்த நம் பார்வையை இந்த ஞானிகளின் மையத்தில் கூர்ந்து நோக்கலாம்- இவர்களது நல்லியல்பு, கரைபுரண்டோடும் கருணை, மானுட நிலை குறித்த இவர்களது ஆழமான தரிசனங்கள்- அது போக, இவர்களின் மைய அநுபூதி- மறைஞான நிலையில் நாம் கவனம் செலுத்தலாம்“.

இந்த நூலில் உள்ள பல விஷயங்கள் மற்றும் விளக்கங்கள் இவ்விருவரையும் மிகச் சாதாரண மானுடர்களாகவும், சில சமயம், நோய்மைப்பட்ட மானுடர்களாகவும் சித்தரிக்கிறது உண்மைதான். ஆனால், அருண் ஷௌரியின் விமரிசனம் அடியறுப்பதை அல்ல, வெளிச்சம் பாய்ச்சுவதை நோக்கமாய்க் கொண்டது. தன் தனி வாழ்வில் தான் எதிர்கொண்ட துயரங்கள், அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கேள்வி எழுப்புகிறது. தன் கேள்விகளுக்கு பதில் காண, ஷௌரி மூவரை அணுகுகிறார்: “விதியினால் தாக்குண்டு, துயரத்தில் தம்மை நோக்கி ஆறுதல் அடைய வந்தவர்களுக்கு என்ன பதில் தந்தார்கள் என்று என் வழிபாட்டுக்குரிய மூவரை அணுகினேன் – ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீ ரமண மகர்ஷி, மகாத்மா காந்தி“.

இவர்கள் அளிக்கும் பதில் ஷௌரிக்கு திருப்தியாய் இல்லை. ஆனால் ராமகிருஷ்ணர் மற்றும் ரமணர் மீதுள்ள ஈர்ப்பும் பக்தியும் கூடுகிறது- “எப்படி பார்த்தாலும், அவர்களது நல்லியல்பு, அவர்களது வாழ்க்கை, அவர்களின் கருணை, அவர்களது வசீகர ஆற்றல், பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்விலும் நம் தேசத்தின் போக்கிலும் அவர்கள் ஏற்படுத்திய மாற்றம் இமாலய அளவிலானது”, என்கிறார் அவர். எனவே ஆங்கிலத்தில் இவ்விருவர் குறித்து பதிப்பிக்கப்பட்டுள்ள அனைத்து நூல்களையும் வாசிக்கிறார். மேற்கத்திய அறிவியல் விளக்கங்களைக் கொண்டு அவர்களது ஞான அனுபவ நிலையைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்.

இதில் உள்ள நகைமுரண், இந்த ‘ஞான அனுபவ நிலைகளை, அவர்கள் யார், அவர்களது பங்களிப்பு என்ன, என்பது போன்ற மையக் கேள்விகளுடன் தொடர்பற்ற “துணையம்சங்கள்” என்றே அருண் ஷௌரி அழைத்தாலும், இந்தப் புத்தகம் முழுதும் இந்த துணையம்சங்கள் குறித்தே! உளவியலாளர்களும் நியூரோசயின்டிஸ்ட்டுகளும் இவற்றுக்கு அளிக்கும் விளக்கங்களே இப்புத்தகத்தின் விஷயமாக இருக்கிறது. இதில் என்ன பயன் என்றால், ஞானியர்கள் விஷயத்தில் கதிரிலிருந்து பதர்களைப் பிரிக்க இது உதவும் என்று அவர் நினைக்கிறார்.

எனவே, 35ஆம் பக்கத்தில் இப்படி எழுதுகிறார் ஷௌரி:

இந்த (அறிவியல்) முன்னேற்றங்களை நாம் அறிந்து கொள்வோமானால், ஆன்மீக அனுபவங்கள் குறித்தும் நமக்கு இன்னும் பல விஷயங்கள் தெரிய வரலாம் என்பது ஒரு புறம்- அதிலும் குறிப்பாக, மாபெரும் சாதனைகள் புரிந்தவர்களும் ஞானியர்களும் மீண்டும் மீண்டும் இந்த எண்ணங்கள் புலன்களுக்கு அப்பாற்பட்டவை, விவரிக்கப்பட முடியாதவை என்று கூறியிருக்கிறார்கள்.

“சுருக்கமாய்ச் சொன்னால், நாம் நம் இதயங்களை உண்மைத் தகவல்களுக்குத் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும், நம் தெய்வங்களையும் ஞானிகளையும் இவ்வளவு பாதுகாக்க வேண்டியதில்லை – நம் ஞானிகளின் நல்லியல்பும் கருணையும் ஞானமும் எப்போதும் பிரகாசிக்கும், அவர்கள் எப்போதும் நமக்கு வழிகாட்டும் ஒளிப்பிழம்பாய் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் இதைச் செய்யலாம்“.

சமயங்கள், அவற்றின் மரபார்ந்த பழக்க வழக்கங்களின் அடிப்படையில் இரு கூறுகள் உள்ளன- ஒன்று, அமானுடத்தன்மை கொண்ட நம்பிக்கைகளும் தொன்மங்களும். இரண்டாவது, ஒரு சமூகமாக இணைந்தியங்குவதற்கான நெறிமுறைகள். அமானுடத்தன்மை குறித்த அபரித நம்பிக்கைகள் சிலபோது சமயங்கள் மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் இழைக்கக் காரணமாகின்றன, தனி மனிதர்களை அதீத பிரமைகளில் ஆழ்த்துகின்றன. அருண் ஷௌரி இப்புத்தகத்தில் பெருமளவு ராமகிருஷ்ணர் மற்றும் ரமணர் வாழ்வில் நிகழ்ந்ததாக நம்பப்படும் அமானுட, அசாதாரண சம்பவங்களை நிராகரிக்கிறார். ஒன்று, அது ஒரு நோய்மை அல்லது மயக்க நிலையின் வெளிப்பாடாக இருக்கலாம் என்று சொல்கிறார். அப்படியில்லை என்றால், அது அவ்வளவு அசாதாரண மனநிலையல்ல என்று நிறுவ முற்படுகிறார். இதன் மூலம் அருண் ஷௌரி சமயங்களின் அறநெறிகளையும், துன்பத்திலும் துயரத்திலும் உழல்பவர்களுக்கு அது நம்பிக்கையைக் கொண்டு அளிக்கக்கூடிய ஆறுதலையும் மீட்சியையும் முன்னிலைப்படுத்துகிறார்.

ஷௌரி இந்தப் புத்தகத்தில் ராமகிருஷ்ணர் மற்றும் ரமணரை பகுத்தறிவாளர்களுக்கு இணக்கமானவர்களாய்ச் சலவை செய்கிறார்- மிகக் கடுமையாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு இணையான மனநிலையை இவர்களிடம் காணலாம்; எனும்போதும் அதிலிருந்து மீண்டு நல்லியல்பு, கருணை, ஞானம் முதலானவற்றில் உதாரண புருஷர்களாக இவர்களால் இருக்க முடிந்தது, துயரிலும் குழப்பத்திலும் துன்பப்பட்டவர்களுக்கு வழிகாட்டி அவர்களை மீட்க முடிந்தது, ஒரு சமூகமாக பாரதத்தின் நிலை உயரவும் அதன் ஆன்மீக, பண்பாட்டு மரபுகள் பாதுகாக்கப்படவும் காரணமாக இருக்க முடிந்தது என்பது போன்ற விஷயங்களையே அவர் முக்கியமாய் காண்கிறார். சித்திகள் என்று அழைக்கப்படக்கூடிய அசாதாரண ஆற்றல்கள், பராதீத அனுபவங்கள், இறைநிலை, ஆசாரிய நிலை போன்றவை மரபார்ந்த ஞான லட்சணங்களாய் பொது மனதில் இடம் பெற்றுள்ளன. அறிவியல் ஆய்வுகளைக் கொண்டு இவற்றின் சராசரித்தன்மையை நிறுவுவதன் வழியே ஷௌரி மண்ணிலும் சராசரி மக்கள் வாழ்விலும் வேர்கொண்ட ஒரு ஆன்மீகத்தை அடையாளப்படுத்துகிறார். பகுத்தறிவுக்கு ஏற்ற வகையில் ஆன்மீகத்தை அணுகும் ஷௌரியின் முயற்சி பகுத்தறிவுவாதிகளுக்கும் பண்பாட்டு இந்துத்துவர்களுக்கும் இடையே ஒரு பொதுத்தளம் உருவாகக்கூடியதன் சாத்தியத்தைச் சுட்டுகிறது என்றும்கூட ஒரு சிறு தயக்கத்துடன் சொல்ல முடியும் (ராமகிருஷ்ணரின் சரிதை எப்படி எழுதப்பட வேண்டும் என்று விவேகானந்தர் விளக்கும் கடிதமொன்றை மிக நீண்ட அளவில் மேற்கோள் காட்டுகிறார் அருண் ஷௌரி. அதன் ஒரு பகுதி அடிக்குறிப்பில் உள்ளது. விவேகானந்தர் தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறும் விஷயங்களை ஷௌரி சரியான முறையில் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று சொல்கிறாரே தவிர, அடிப்படையில் இருவரின் நோக்கத்திலும் இங்கு பெரிய அளவில் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை).

புத்தகம் குறித்து இவ்வளவு சொல்லலாம் என்றாலும் இதை வாசித்தபின் சில எண்ணங்கள் எழுகின்றன.

ராமகிருஷ்ணரும் ரமணரும் உலகின் இயல்பு என்ன, அகத்தின் இயல்பு என்ன, இரண்டுக்கும் என்ன உறவு என்பது குறித்து அளித்த உபதேசங்களே அதிகம். ரமணரின், “நான் யார்” விசாரம் பிரபலம். ஆனால் ஷௌரியின் புத்தகம் இக்கேள்விகளுக்கான விடைகளைப் பெறுவதில் இருக்கக்கூடிய தடைகள், திரிபுகள், குறைகளையே பெருமளவு பேசுகிறது. ‘யார்’, என்ற கேள்வியின் இடத்தை, ‘எப்படி’, என்ற கேள்வி எடுத்துக் கொள்கிறது என்று சொல்லலாம். ராமகிருஷ்ணர் இறைநாமத்தைக் கேட்டதும் சமாதி நிலை அடைபவர் என்று சொன்னால், அப்படிப்பட்ட நிலைகள் ஏற்பட மூளையின் எந்தப் பகுதிகள் காரணமாகின்றன, அங்கு என்ன நடக்கிறது என்று விளக்கம் அளிக்கிறார் ஷௌரி. ரமணர் தான் உடலல்ல என்பதை நேரடி அனுபவமாய் உணர்ந்தவர் என்று சொன்னால் அதற்கும் மூளையின் எந்தப் பகுதிகள் காரணமாகின்றன, அங்கு என்ன நடக்கிறது என்று விளக்கம் அளிக்கிறார் ஷௌரி. பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை அனைத்தையும் இவ்வாறு அவர் உலர்த்தி விடுகிறார். அன்றாட நடவடிக்கைகள், தனி மனித உறவுகள், கருணை, பரிந்துணர்வு போன்றவற்றில் மட்டுமே அவர் ஞானத்தின் வெளிச்சத்தைக் காண்கிறார்.

இரண்டாவதாக, ராமகிருஷ்ணரும் ரமணரும் ஒரே உண்மையைத்தான் கூறுகிறார்கள் என்ற கருத்து. இந்து, கிறித்தவ, இசுலாமிய சமயங்களின் உண்மை ஒன்றே என்று விவேகானந்தர் சொல்வதைப் போன்றது இது. உரையாசிரியர்களின் துணையின்றி இருவரும் பேசிய உண்மை ஒன்றே என்று உணர்வது கடினம். இதைச் சொல்வது அவர்களின் ஞானத்துக்கு இழுக்கு செய்வதாகவோ அவர்களிடையே பேதம் கற்பிப்பதாகவோ ஆகாது. ஒரு சிறிய உதாரணம் சொல்வதானால், எந்த விசார சார சங்கிரகம் என்ற அத்வைத பெரு நூல் விறகு போல் ஈரமற்றது என்று ராமகிருஷ்ணர் கூறினாரோ அதே நூலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை ரமணர் தமிழாக்கம் செய்து விளக்கம் அளித்திருக்கிறார். தெய்வீக அனுபவங்கள், தரிசனங்களில் ராமகிருஷ்ணருக்கு இருந்த நாட்டம் ரமணரிடம் கிடையாது. சாதனை குறித்து, சாதக மனநிலை குறித்து, குருவருள் குறித்தும்கூட இருவரும் வேறுபட்ட விளக்கங்கள் அளிக்கின்றனர். ராமகிருஷ்ணர், ரமணர் என்றல்ல, இந்தியாவில் ஒவ்வொரு ஞானியும் வெவ்வேறு வகையில் உண்மையை வெளிப்படுத்துகின்றனர். இது வெவ்வேறு சம்பிரதாயங்கள் மலரக் காரணமாகிறது.

ஆனால் தவிர்க்க முடியாத வகையில், இவற்றில் எது உண்மை என்ற கேள்வி எழுகிறது. மாயையின் கலப்பின்றி சிருஷ்டி இல்லை என்பது எளிய விடை. அதைவிட, வேறொன்றை யோசிக்கலாம். அறியவும் அறியப்படவும் தனக்கு அந்நியமாய் பிரிதொன்று இல்லாததால் அறிவும் அறியாமையும் அற்றது அறிவு, என்கிறார் ரமணர். நம் அகம் குறித்தும் இவ்வுலகு குறித்தும் நாம் அறியும் ஒவ்வொன்றையும் உண்மை என்று உறுதி செய்யும் உணர்வொன்று உள்ளது. இறுதியில், எது உறுதி செய்யப்படுகிறது என்பதல்ல, எது உறுதி செய்கிறதோ அதுவே உண்மையாகிறது. அதன் அறிவொன்றே அறிவாகிறது. ராமர் ஒரு பாலகனாய் தன்னோடு விளையாடிக் கொண்டிருந்தார் என்பதை ராமகிருஷ்ணருக்கு உறுதி செய்வது இந்த உணர்வே. தன் உடலிலிருந்து தான் தனித்திருப்பதாய் ரமணருக்கு உறுதி செய்வது இந்த உணர்வே. இது போல் உறுதி செய்யப்படுவது எந்த அளவுக்கு உண்மையானது, அது எப்படிப்பட்ட மனநிலையில் தோன்றுவது, அதன் பின்னணியில் இயங்கும் மூளைச் செயல்பாடுகள் என்ன என்ற கேள்விகள் அறிவியலுக்கு உரியவை. அவற்றை ஷௌரி அங்கீகரிக்கவும் செய்கிறார். அவற்றுக்கு பல்வேறு விளக்கங்களும் இருக்கலாம். ஆனால், உறுதி செய்யும் உணர்வு, அறிதல் அறியாமை ஆகிய இரண்டுக்கும் அப்பாற்பட்ட அறிவு, அதை என்னவென்று புரிந்து கொள்வது? ‘டூ செயிண்ட்ஸ்’ இந்த இடத்துக்குச் செல்லத் தவறிவிட்டது என்று நினைக்கிறேன். ஆனால் நியாயத்தைச் சொன்னால் இது அறிவியலுக்கான கேள்வியல்ல, தத்துவமே இதைப் பேச முடியும்.

(அடிக்குறிப்பு: ராமகிருஷ்ண சரிதை குறித்து விவேகானந்தர்- “These people want to know God who see in Shri Ramakrishna nothing but jugglery!… Now let Kidi translate his love, his knowledge, his teachings, his eclecticism, etc. This is the theme. The life of Shri Ramakrishna was an extraordinary searchlight under whose illumination one is able to really understand the whole scope of Hindu religion. He was the object-lesson of all the theoretical knowledge given in the Shastras (scriptures). He showed by his life what the Rishis and Avataras really wanted to teach. The books were theories, he was the realisation. This man had in fifty-one years lived the five thousand years of national spiritual life and so raised himself to be the object-lesson for future generations. The Vedas can only be explained and the Shastras reconciled by his theory of Avastha or stages- that we must not only tolerate others, but positively embrace them, and that truth is the basis of all religions. Now on these lines a most impressive and beautiful life can be written. Well, everything in good time. Avoid all irregular, indecent expressions about sex, etc., because other nations think it the height of indecency to mention such things, and his life in English is going to be read by the whole world”)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.