மகரந்தம்


[stextbox id=”info” caption=”மாயப் பெண்”]

இங்கே கொடுக்கப்படுவது பழைய செய்தி. எத்தனை பழசு? சுமார் 73 வருடங்கள் பழசு! விலியம் மௌல்டன் மார்ஸ்டன் என்ற எழுத்தாளர் அமெரிக்கன் ஸ்காலர் என்ற பத்திரிகையின் 1943 ஆம் ஆண்டு பனிக்கால இதழில் பிரசுரித்த கட்டுரை இது. (1944 பனிக்காலம் என்றும் இதைப் பார்க்கலாம்.) இதை அந்தப் பத்திரிகை சமீபத்தில் முதல் தடவையாக வலைப்பதிவாகப் பிரசுரித்திருக்கிறது. காலம் மாறி விட்டது என்று அங்கலாய்க்கிறோமில்லையா, அப்படி சலித்துக் கொள்ளாமல், காலம் எப்படி மாறிவிட்டது, அடேயப்பா என்று வியக்கும் வகையிலும் சில நடப்பதுண்டு. இதய மாற்று அறுவை சிகிச்சை, துணைக் கோள்கள் மூலம் உலகில் எந்த மூலையில் இருப்பவரோடும் தொலைபேசியில் உடனடியாக நாம் பேச முடிவது என்று பட்டியலிட ஆரம்பித்தால் ஏராளமாக இருக்கும். ஆனால் அன்றாட வாழ்வின் உபாதைகளில் சிக்கி மாயும் நமக்குப் படிப்படியாக அந்த மாய்ப்பின் மாயமாலங்களிலேயே புத்தி சிக்கி விடுவதால், நம் வாழ்வு எத்தனை தூரம் மேன்மைப்பட்டு விட்டது என்பதைப் பற்றி சிலாகிக்க முடிவதில்லை, அல்லது அத்தனை தீவிரமாக நம் புத்தி இயங்குவதில்லை. உப்பைத் தேடி வன விலங்குகள் நெடுந்தூரம் பயணிப்பதையும், மேய்ச்சல் நிலங்களை நாடி வருடா வருடம் வன விலங்குகள் இடமாற்றப் பயணம் மேற்கொள்வதையும் நாம் தொலைக் காட்சிகளில் சித்திரங்களாகப் பார்க்கிறோம், ஒரு காலத்தில் நாமும்- அனைத்து மனிதர்களும் இப்படி உப்புக்காக அலைந்ததுண்டு, உணவுக்காக தினமும் அலைந்ததுண்டு. இன்று உப்பு என்ன, என்னென்னவோ உணவுப் பண்டங்கள் வீட்டிலேயே இருக்கின்றன, அல்லது தெருமுனையில் கிட்டுகின்றன, அல்லது வலைவெளியில் விரல் தொடுகையில் ஓரிரு தினங்களில் நம் வீட்டுக்கு வரக் கூடிய நிலையில் தயாராக இருக்கின்றன. [கணிசமான எண்ணிக்கை மனிதருக்கு இந்த அளவு வசதி இல்லை என்பதை மண்டையில் அடித்துச் சொல்லித் தரத் தேவையில்லை. அது தெளிவாகவே தெரிகிறது. ] இங்கு சாதகமான விஷயங்களை மட்டும் கவனிப்பதால் இவற்றைச் சொன்னோம்.

விலியம் மார்ஸ்டன் அன்றைய நிலைபற்றிய ஒரு சுருக்கச் சித்திரத்தைக் கொடுக்கிறார். சமீபத்தில் வெளியான ‘ஒண்டர் உமன்’ என்கிற திரைப்படத்தை ஒட்டி அமெரிக்கன் ஸ்காலர் பத்திரிகை இந்தக் கட்டுரையைப் பிரசுரித்திருக்க வேண்டும். இந்தப் படம் ஒரு காமிக் பத்திரிகைப் பாத்திரம். காமிக் பத்திரிகைப் பாத்திரங்களை வைத்துப் படம் எடுத்து ஏராளமாக நிதி அள்ளும் சில அமெரிக்க திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களைப் பற்றி நமக்குத் தெரியும். மார்வெல் காமிக்ஸ், டிஸ்னி, வார்னர் பிரதர்ஸ், 20த் செஞ்சுரி ஃபாக்ஸ் என்று பல. இவை சமீபத்துப் பத்தாண்டுகளில் எடுக்கும் இத்தகைய படங்கள் ஒரு பிலியன் டாலர்களுக்கு மேல் கூட ஈட்டுகின்றன. (ஆயிரம் மிலியனுக்கு மேல் வருமானம்.) சமீபத்தில் வெளியான ஒண்டர் உமன் படத்தின் ஒரு சிறப்பு அம்சம்- படத்தின் நாயகப் பாத்திரம் ஒரு பெண். பெண் ‘சூப்பர் ஹீரோ’க்கள் இருந்திருக்கிறார்கள் என்றாலும் அவர்களை மையப் பாத்திரமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மிகக் குறைவு. ஒண்டர் உமன் என்ற பாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு தொலைக் காட்சி வரிசை 70 களின் இரண்டாம் பாதியில் பரவலான பார்வையாளர் ஆதரவோடு ஒளி பரப்பப் பட்டிருந்தது. அது ஒரு திரைப்படமாக வெளிவர சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருக்கிறது. இத்தனைக்கும் 1938 இலேயே இந்தப் பாத்திரம் படைக்கப்பட்டு, மிகச் சிறப்பான காமிக் புத்தக வெளியீடாக வாசகர் மத்தியில் பாராட்டைப் பெற்றிருந்திருக்கிறது. இப்படி ஒரு கதா பாத்திரத்தைத் திரைப்படமாக ஆக்க ஏன் இத்தனை காலம் ஆயிற்று என்பதைப் பற்றி சமீபத்தில் அமெரிக்கப் பத்திரிகைகள் ஏராளமான பக்கங்களைச் செலவழித்துப் பேசி இருக்கிறார்கள்.

உளவியலாளரான விலியம் மார்ஸ்டன் இந்தப் பாத்திரத்தை உருவாக்கி முதல் புத்தகத்தை வெளியிடக் காரணமாக இருந்தவர். ஒரு பெண் பாத்திரம் ஏன் அவசியம், அந்தப் பாத்திரத்துக்கும் இதர சூப்பர் ஹீரோ பாத்திரங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன, 1940களிலேயே இந்தத் தேவையை உணர்ந்து அவர் ஏன் இப்படி ஒரு பாத்திரத்தை மையமாகக் கொண்ட காமிக் புத்தகங்களை உருவாக்க முயற்சி செய்தார் என்ற விவரங்களை இந்தக் கட்டுரை கொடுக்கிறது. படிப்பது உதவும். கடைசியாக ஒரு தகவல். இத்தனை பத்தாண்டுகள் கழித்து வெளியான ஒண்டர் உமன் திரைப்படம் எப்படி வரவேற்பு பெற்றது? சமீபத்தில் வெளியான பாட்மான், ஸ்பைடர்மான், எக்ஸ் மென் படங்கள் அளவு பிரும்மாண்டமான வருமானம் இல்லை என்றாலும் 700 மிலியன் டாலர்களுக்கு மேல் சம்பாதித்திருக்கிறது இந்தப் படம்.

விலியம் மார்ஸ்டனும் பெண்களைப் பற்றி யோசிக்கையில் இதரரிடம் அன்பாக இருத்தல், பராமரிப்பில் கவனம் செலுத்துதல், இனிமையாகப் பழகுதல் என்ற சில குணங்களை முன்வைக்கிறார் என்று ஒரு குற்றச் சாட்டு இருக்கிறது. அதாவது ஆண்/ பெண் என்ற பாகுபாட்டை இறுகலாகப் பார்க்கிறார். வலுவான, முரடான, கரடான, சினம் கொண்ட, போர்க்குணம் கொண்ட பெண்களும் உண்டு, அது ஏதும் இல்லாத ஆண்களும் உண்டு என்று நம் அனுபவத்தில் நமக்குத் தெரிந்ததை அவர் எப்படித் தெரிந்து கொள்ளாமல் இருப்பார்? அதுவும் அவர் ஒரு உளவியலாளர் வேறு. இங்கு பேசப்படுவன கோட்டுச் சித்திரங்களைப் போன்ற கதை சொல்லல் பற்றி. காமிக் பாத்திரங்களின் சிறப்புக் குணமே அவை சில குணங்களை உயர்த்திக் காட்டி, வேறு சிலவற்றை அதிகம் வெளிக்காட்டாமல் இருப்பதுதான். அவை நம் கற்பனையில்தான் எழுப்பப்பட வேண்டும், என்பது ஒரு மறு வாதமாக இருக்கலாம். ஆனாலும் இக்கட்டுரை 40களின் துவக்கத்தில் எழுதப்பட்டது என்பதை இன்றைய பண்பாட்டுச் சூழலோடு ஒப்பிட்டு நாம் எத்தனை மாறி இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளத்தான் இந்தக் கட்டுரை மறுபிரசுரமாகி இருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

https://theamericanscholar.org/wonder-woman/
[/stextbox]


[stextbox id=”info” caption=”காஃப்காவின் எழுத்துலகு”]

இந்தப் பதிவு ஒரு இலக்கியப் பதிவு. புத்தக விமர்சனம் ஒன்றைப் பற்றியது. காஃப்காவின் மொழி என்ன? ஜெர்மன் என்று உடனே நாம் சொல்லுவோம். அது உண்மைதான். அவர் ப்ராஹா நகரத்தில் வாழ்ந்தவர். அது இன்றைய செக் நாட்டுத் தலை நகர். ஆனால் முன்பு அது ஆஸ்ட்ரோ-ஹங்கேரியன் சாம்ராஜ்யத்தில் இருந்த மாநகரம். அவருடைய தகப்பனார் தம் குடும்பத்தைப் ப்ராஹா நகருக்கு அழைத்து வந்து ஓரளவு செழிப்பான வியாபாரியாக இருந்தவர். அவருடைய வியாபாரத்துக்குச் சின்னமாக இருந்தது ஜாக்டா என்கிற பறவை. இதை செக் மொழியில் ‘காவ்கா’ என்று எழுதி, காஃப்கா என்று உச்சரிக்கிறார்களாம். விக்கி சொல்கிறது.) ஜாக்டா என்பது நம் ஊரில் உள்ள காக்கை. ஆக காஃப்கா என்ற எழுத்தாளரின் பெயர் ஒரு காக்கையைக் குறிக்கிறது. இதை இன்று அறிகையில் எனக்கு வியப்புதான். இந்தச் சிறு விஷயம் தெரியாமல் பல பத்தாண்டுகளாகக் காஃப்காவைப் படித்துள்ளவன் நான். அதே போல காஃப்கா பற்றி நிறைய விவரங்கள் நமக்குத் தெரியாமல் போயிருக்கின்றன. அவற்றில் ஒரு முக்கியமான விவரம் காஃப்காவின் மொழி என்ன என்பது. அவர் ஒரு செக் சமுதாயப் பிரஜை. நிச்சயம் செக் மொழியில் படித்து, புழங்கி அன்றாட வாழ்வை அதில் நடத்தி இருப்பார். ஆனால் அன்றைய ஆஸ்ட்ரியப் பேரரசில் ஜெர்மன் ஆட்சி மொழி, பள்ளிப் படிப்பை ஓரளவு வசதி படைத்த பள்ளிகளில் ஜெர்மன் மொழியில் நடத்தி இருப்பார்கள். நம் ஊரில் இங்கிலிஷ் மீடியம் பள்ளிகளில் பலர் படித்து விட்டுத் தாய் மொழியில் எழுதப் படிக்கத் தெரியாமல் இருப்பதைப் போன்றது இது.

ஆனால் காஃப்காவுக்கு செக் மொழியிலும் திறமை இருந்தது. அதற்கு மேல் போய் அவருக்குத் தன் சமூகத்தின் மொழியான ஹீப்ரூ/ யிட்டிஷ் இரண்டிலும் பரிச்சயம் இருந்தது என்பதுதான் விமர்சனத்துக்கு ஆளான புத்தகத்தின் உள்ளீடு. அது ஏன் முக்கியம் என்றால், இந்த இரு மொழிகள் அவருடைய ஜெர்மன் மொழி ஆளுமையின் கீழே நீரோட்டமாக இருந்து அவருடைய எழுத்தைச் சிறப்பித்தன என்று ஆசிரியர் டேவிட் ஸசாஃப் தன் புத்தகத்தில் குறிக்கிறார். காஃப்கா அகால மரணமடைந்ததும் அவருடைய எழுத்துகளைத் தொகுத்து, பதிப்பு வேலை செய்து பிரசுரிக்கக் காரணமாக இருந்த அவருடைய நண்பர் மாக்ஸ் ப்ராட் இன்று பின்னோக்கில், தேவைக்கதிகமாக இடையீடு செய்து பல விதமாக காஃப்காவின் எழுத்து வெளியைச் சிதைத்திருக்கிறார் என்று கருதப்படுகிறது. காஃப்காவின் யூத அடையாளம் அவருக்கு முக்கியமாக இருந்தது என்பதை அவருடைய ஹீப்ரூ/ யித்திஷ் மொழி ஈடுபாடு உடனே காட்டி இருக்கும். அந்த ஈடுபாடுகளை மாக்ஸ் ப்ராட் கூடிய மட்டிலும் குறைத்துப் பேசி இருக்கிறார். அந்த மொழித் தாக்கத்தில் காஃப்காவின் ஜெர்மன் எழுத்து மாறும்போது அவற்றை அவர் மொழித் தவறுகள் என்றே சொல்லி வந்திருக்கிறார் என்பது ஸசாஃபின் கருத்து.

இந்த விமர்சனம் ஸசாஃபின் ஆய்வுகள் எத்தனை தூரம் காஃப்காவின் எழுத்துலகை வெளிச்சம் பாய்ச்சிக் காட்டுகின்றன என்று மெச்சுகிறது. காஃப்காவின் எழுத்தில் யூதப் பண்பாட்டில் பண்டைப் பழக்க வழக்கங்களுக்கும், நவீனப் பழக்கங்கள்/ எதிர்பார்ப்புகளுக்கும் இடையே இருந்த இழுபறி வெளிப்படுகிறது என்று ஸசாஃப் கருதுகிறாராம். பலர் ஹீப்ரூ மொழிதான் இஸ்ரேலில் பல்கலையில் போதனை மொழியாக இருக்க வேண்டும் என்று 1913 ஆம் ஆண்டு நடந்த மாநாட்டில் பேசியபோது காஃப்கா மொழி பற்றி எந்த தேசிய உணர்வும் இருக்கக் கூடாது என்று அடித்துப் பேசி இருக்கிறார்.

மேலும் விவரங்களுக்கு இந்தச் சுட்டி கொடுக்கும் கட்டுரையைப் பார்வையிடலாமே?

http://scholarworks.umass.edu/cgi/viewcontent.cgi?article=1051&context=edge
[/stextbox]


[stextbox id=”info” caption=”மானுடர் துவங்கியது எங்கு? எப்போதிலிருந்து?”]

இந்தச் செய்தி மேற்கின் பல மன உளைச்சல்களில் ஒன்றைப் பற்றியது. அந்த உளைச்சல் அவர்களுக்கு முதல் புத்தகமாக இன்னமும் தோன்றும் ஒரு நூலின் மையக் கருத்தை ஒட்டியோ, விலகியோ அவர்களுக்கு எழும் ஐயப்பாடுகளில் வேர் கொண்டது.

மனிதனை அனைத்து வல்லமையும் கொண்ட யாஹ்வே நேராக உருவாக்கினாரா, இல்லை நவீன காலத்துச் சிந்தனையாளர்கள் அடித்துச் சொல்வது போல ஒற்றை உயிரணுவிலிருந்து படிப்படியாக வளர்ந்து பூமியில் சகல ஜீவராசிகளும் தழைத்தோங்கியதில் இருந்து வெளிப்பட்டுத் தனியொரு அறிவு பூர்வமான உயிரினமாக மனிதர் எழுந்தனரா என்ற இரு நிலைப்பாடுகளிடையே மேற்கின் மனிதர் சிக்கித் திண்டாடுகிறார்கள்.
இந்தப் பதிவு சமீபத்திய அகழ்வாராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு பல்லைப் பற்றியது. அதைப் பேசுமுன், முந்தைய ஆராய்ச்சிகளைப் பற்றி ஒரு துரிதப் பார்வை கொடுக்கிறது செய்தி அறிக்கை. அதன்படி 70ஆயிரம் வருடங்களுக்கு முன்பு (வருடங்கள் எல்லாம் சுமாராகத்தான் அனுமானிக்கப்படுகின்றன) மனிதர் ஆஃப்ரிக்காவிலிருந்து வெளிப் போந்து பல கண்டங்களுக்கும் பயணித்து மற்ற வகை மக்களாக மாறினார்கள் என்பது மேற்கில் அனேக ஆய்வாளர்களின் கருத்து. இதற்கு அவ்வப்போது சவால்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. ஆஃப்ரிக்காவில்தான் மனிதர் முதலில் தோன்றினார் என்பதையே கூட சில ஆய்வாளர்கள் மறுக்கிறார்கள்.

ஆனால் பெரும்பான்மை அபிப்பிராயம் இன்னமும் ஆஃப்ரிக்காவைத்தான் மனிதருக்குத் தொட்டிலாகப் பாவிக்கிறது.

சமீபத்திய ஆய்வு ஒன்று இந்த ஆஃப்ரிக்க வெளிநடப்பை 70 ஆயிரம் இல்லை, ஆனால் 270 ஆயிரம் வருடங்கள் முன்பு நடந்ததாகச் சொல்கிறது. அதாவது இன்னமும் ஆஃப்ரிக்கா தொட்டில் என்ற கருத்தை யாரும் கைவிடத் தயாராக இல்லை. ஒரு 200 ஆயிரம் வருடங்கள் பிந்தி நடந்ததாக விஷயத்தை இன்னும் பின்னே தள்ளுவது நடக்கிறது.

யூரோப்பில் அவர்கள் அன்று வாழ்ந்த நியாண்டர்தால் இனத்தவரோடு கலந்து இனப்பெருக்கம் செய்கிறார்கள். அப்படி வெளியே போய் பிற நிலப்பரப்புகளுக்குப் பரவிய இனத்தவர் சில காலத்துக்குப் பிறகு காணாமல் போய் விடுகிறார்கள். ஆனால் அவர்களது மரபணு நியாண்டர்தால் மக்களிடையே பரவி பிற்காலத்திலும் காணக் கிட்டுகிறது- அகழ்வாராய்ச்சியில் கிட்டும் எலும்புகளில்.

நியாண்டர்தால் இனத்துக் குழுக்கள் யூரோப்பில், 430,000 வருடங்கள் முன்பு கூட இருந்திருக்கிறார்கள். ஆனால் 40 ஆயிரம் வருடங்கள் முன்பு இவர்கள் முற்றிலும் தடயமற்றுப் போகிறார்கள்.

சைபீரியக் குகை ஒன்றில் கிட்டிய விரல் எலும்பும், ஒரு பல்லும் க்ரௌஸ் என்னும் ஆய்வாளரைக் குழப்புகின்றன. அந்த விரலுக்குரியவரை டெனிஸோவா மனிதர் என்று அவர் போன்றவர்கள் கருதுகிறார்கள். இவர்கள் நியாண்டர்தால் மக்களும் இல்லை, ஆஃப்ரிக்க மனிதர்களும் இல்லை, மூன்றாவது குழுவினர் என்பது துவக்க நிலையாக இருந்தது. டெனிஸோவர்களும் நியாண்டர்தாலியர்களும் மரபணு அளவில் நெருங்கியவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது பிற்பாடு காணப்பட்டது.

சமீபத்திய ஆய்வுகளின்படி டெனிஸோவர்கள், நியாண்டர்தால்கள் ஆகியோருக்கெல்லாம் முந்தைய ஓர் குழுவினர் சுமார் 765 ஆயிரத்திலிருந்து 550 ஆயிரம் வருடங்களுக்குள் இருந்திருக்கிறார்கள் என்று ஒரு கருத்து வெளிப்பட்டிருக்கிறது.

இந்த ஊகங்கள் அவற்றளவிலேயே சுவாரசியமானவை. அறிக்கையை மேலும் படித்தால் நவீன மனிதர்களின் துவக்கம் எங்கே எப்படி நேர்ந்திருக்கலாம் என்பது பற்றிச் சில அனுமானங்கள் கிட்டியதைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். சுட்டி கீழே:

https://www.nytimes.com/2017/07/04/science/neanderthals-dna-homo-sapiens-human-evolution.html?_r=0
[/stextbox]


[stextbox id=”info” caption=”சாத்தானின் சீடர்களின் பலிகள்”]

இஸ்லாமிசத் தீவிரவாதம் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான பேர்களைக் கொன்று குவித்திருக்கிறனர் ஐஸிஸ் என்ற குழுவைச் சேர்ந்த சாத்தானின் சீடர்கள். இவர்கள் ஈராக்கில் இருந்த முஸ்லிம் அல்லாத பல சமூகக் குழுவினரைக் குறிப்பாகத் தம் கொடுமைகளுக்கு இலக்காகக் கொண்டு கொன்று, அல்லது கொடுமைப்படுத்தி அல்லது அடிமைப்படுத்தி மகிழ்ந்திருக்கின்றனர். இதைப் பற்றி விவரமாக இந்தியப் பத்திரிகைகளில் நமக்குச் செய்தி கிட்டுமா என்றால் கிட்டாது. அந்த அளவுக்கு செகுலரியம் என்ற பொய்மை நம் பத்திரிகைகளில் செய்தியாளர்களைக் கையையும், மெய்யையும் கட்டிப் போட்டிருக்கிறது. இந்து ஃபாசிசம் பற்றித் தினம் பத்திகளும், கவிதைகளும், மேடைப் பேச்சுப் பேருரைகளும், தொலைக்காட்சிக் கருத்துரைகளும் கொட்டித் தீர்க்கும் திராவிடியர்களோ, இதர பகுத்தறிவுக் கொழுந்துகளோ, அல்லது அரிவாள் சுத்திக் கொடிக் கட்சியினரோ இந்த அழித்தொழிப்புகள் பற்றி ஏதும் விலாவாரியாகப் பேசித் தள்ளுவார்களா என்றால் மூச்சு விடுவார்களா என்ன? அத்தனை தூரம் திம்மித்தனம் ஊறி இருக்கிறது இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில்.

இந்தச் செய்தி பிரிட்டிஷ் பத்திரிகையான த கார்டியனில் வெளியாகி இருக்கிறது. ஜோராஸ்ட்ரியனியம், யூதம், இஸ்லாம் என்று பல மதங்களின் கருத்துகளைக் கலந்த ஒரு நம்பிக்கை போலத் தோற்றமளிக்கும் ஒரு மதத்தை யஸீதிகள் கடைப்பிடிக்கிறார்கள். இவர்களும் ஒரு இறை வணக்கம் கொண்டவர்களே, ஆனால் தம் மதக் குழுவைத் தாண்டி வெளியில் மண உறவுகள் கொள்வதில்லை. வேறு சில விலக்கும் பழக்கங்கள் கொண்ட இவர்களை, சுன்னி இஸ்லாமியர்கள் குறிப்பாகக் கடுமையாக ஒடுக்கி இருக்கிறார்கள். இருந்தும் பல நாடுகளில் வாழும் யஸீதிகள் இத்தனை நூறாண்டுகளாகப் பல வகை அடக்குமுறைகளைத் தாண்டி பிழைத்து வந்திருக்கின்றனர். 21 ஆம் நூற்றாண்டில் இவர்களுக்கு கெட்ட காலம் ஆரம்பித்திருக்கிறது. சாத்தானின் உண்மையான சீடர்களான ஐஸிஸ் குழுவினர் யஸீதிகளைச் சாத்தான் வழிபாடு செய்பவர்கள் என்று பழி சாட்டிக் கொன்று குவித்து, பெண்களை, குழந்தைகளை அடிமைகளாக்கி, சந்தையில் விற்றிருக்கின்றனர்.

இந்தச் செய்தியில் ஒரு பெண் தான் ஏழு முறை விற்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார். இந்தப் பெண் சமீபத்தில் யஸீதிக்களின் சமூகத்திற்குத் திரும்பியபோது பண்டை வழக்கத்துக்கு மாறாக இந்தக் குழு இவரை ஒரு சுத்திகரிப்புச் சடங்குக்குப் பிறகு மறுபடி குழுவோடு இணைத்துக் கொண்டிருக்கிறது. இவரோடு சேர்ந்து ஒரு சிறு குழுவான பெண்களும் இப்படி இணைக்கப்பட்டனர்.

இது ஏன் ஒரு செய்தியாயிற்று என்றால், யஸீதிக்கள் இத்தனை காலமாகத் தம் குழுவினரைத் தவிர்த்த வேறு யாருடனும் மண உறவு வைத்த யஸீதிக்களை மறுபடி யஸீதியாக அங்கீகரித்ததில்லை. இது ஒருவேளை முதல் தடவையாக இருக்கலாம். அதுவும் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு ஏழு நபர்களாலோ அதற்கும் மேற்பட்ட நபர்களாலோ வன்புணர்வு செய்யப்பட்ட பெண்கள் நிச்சயமாக பழைய வழக்கங்களின்படி மறுபடி குழுவில் இணைக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

பன்னெடுங்காலமாக இருந்த ஒரு வழக்கத்தை இன்றைய குரூர நிகழ்வுகளால் தம் சமூகத்துக்கு நேர்ந்த பேரழிப்பையும் அவலத்தையும் கருதி யஸீதிக்கள் மாற்றிக் கொண்டது பெரும் முன்னேற்றம் என்று இன்றைய யஸீதிக்கள் கருதுகின்றனர். செய்தி அறிக்கையில் ஐஸிஸ் மிருகங்கள் என்னென்ன விதங்களில் யஸீதிக்களைத் தாக்கி, அழித்தனர் என்பது விளக்கப்படுகிறது. இந்த மிருகங்களுக்குத் தமிழகத்திலிருந்தும், இந்தியாவிலிருந்தும் நிதி உதவி செய்ய முனையும் இந்தியர்களை என்னவென்று அழைக்கலாம்?

https://www.theguardian.com/global-development/2017/jul/01/i-was-sold-seven-times-yazidi-women-welcomed-back-into-the-faith

[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.