அம்ரிதா ப்ரீத்தம் – பஞ்சாபிக் கவிதாயினி

20-ஆம் நூற்றாண்டின், பஞ்சாபி மொழியின் தன்னிகரில்லாக் கவிஞராகவும் எழுத்தாளராகவும் கொண்டாடப்படுபவர் அம்ரிதா ப்ரீத்தம். இந்திய சுதந்திரத்துக்கு முன் 1919-ல், பிரிக்கப்படாத பஞ்சாபின் குஜ்ரன்வாலா எனும் சிற்றூரில் (தற்போது பாகிஸ்தான்), சீக்கியக் குடும்பத்தில் ஒரே குழந்தையாக, அம்ரிதா கௌர் எனப் பிறந்தவர். அப்பா பள்ளிஆசிரியராகவும், சீக்கிய மதப்பிரச்சாரகராகவும் வாழ்க்கை நடத்தினார். கொஞ்சம் கவிதையும் எழுதியிருக்கிறார். பிற்காலத்தில் அப்பாவை விட்டுவிட்டு மகளைப் பிடித்துக்கொண்டுவிட்டாளோ கவிதாதேவி? தன் 11-ஆவது வயதில் அம்மாவை இழந்தார் அம்ரிதா. அப்பா தன் மகளைக் கூட்டிக்கொண்டு லாகூருக்கு இடம் மாறினார். சிறுவயதிலிருந்தே வீட்டுவேலையே அம்ரிதாவுக்கு சரியாக இருந்தது. தோழியரில்லை; போக்கிடம் தெரியவில்லை. தனிமையின் நிழல் எப்போதும் அவர்மீது படிந்திருந்தது. ஏகாந்தச் சிந்தனைகள் அவரிடம் எழுத்துவடிவம் பெற்றன. கவிதை புனைய ஆரம்பித்தார் அம்ரிதா. 16-ஆவது வயதில் அவரது முதல் கவிதைத்தொகுப்பு ‘அமிர்த அலைகள்’ வெளியானது. தன் 17-ஆவது வயதிலே, ப்ரீத்தம் சிங் என்பவரை திருமணம் செய்ய நேரிட்டது. அம்ரிதா ப்ரீத்தம் என்கிற பெயரில் எழுதுவதைத் தொடர்ந்தார். முதல் ஏழெட்டு வருடங்களுக்குள் சில கவிதைத் தொகுப்புகள் வெளியாகின.
இரண்டு குழந்தைகள் தந்த மணவாழ்வு இனிக்கவில்லை அம்ரிதாவுக்கு.

அவருடைய இளம் பருவம் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை என்கிற கொடூர சரித்திரத்தை நேரிடையாக எதிர்கொண்டது. அது அவரது வாழ்வில் பெரும் மனஅழற்சியை உண்டுபண்ணிவிட்டது எனத் தெரிகிறது. ஆகஸ்டு 14-ல் பிறந்தது பாகிஸ்தான். அந்தநாள் அங்கு இதுகாறும் வாழ்ந்துவந்த இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும் கொடும்நாளாய் மாறிவிட்டது. அமைதியான வாழ்வு நொடியில் துவம்சமானது. ஹிந்து, சீக்கியக் குடும்பங்களின் சொத்துபத்துக்கள் இரவோடு இரவாகப் பிடுங்கப்பட்டு அவர்கள் ஹிந்துஸ்தானுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். அனைத்தையும் ஒரேயடியாக விட்டுவிட்டு அம்போ என்று, தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொண்டால் போதுமென்று ஹிந்துக்களும், சீக்கியர்களும் அகதிகளாய் ஹிந்துஸ்தானை நோக்கி ஓடிவந்தனர்.. பிரிவினையின் தவிர்க்கமுடியாத விளைவான இனக்கலவரம் வெடித்தது. சாமானியமக்களின் வாழ்வை சிலதினங்களிலேயே பலிகொண்டது. பெண்கள் சீரழிக்கப்பட்டனர். கால்நடையாகவும், மாட்டுவண்டிகளிலும் ஹிந்துஸ்தான் நோக்கி ஓடிவந்தவர்களில் பலர் வருகிற வழியிலேயே அதிர்ச்சியாலும், நோய்வாய்ப்பட்டும் இறந்துபோயினர்; கொடூரமாகத் தாக்கி அழிக்கப்பட்டனர். தன் உயிருக்கு உயிரான பஞ்சாப் பிரதேசம், தன் கண்முன்னாலேயே பிளக்கப்பட்டு சிதைவதைக் கண்டு துடித்தார் அம்ரிதா. லாகூரிலிருந்து இந்திய பஞ்சாபிற்கு விரட்டப்பட்ட அம்ரிதா நல்லவேளை, தாக்கப்படாமல் தந்தையுடன் பாதுகாப்பாக இந்தியா வந்துசேர்ந்துவிட்டார்.

கொடூரக் கதையாகிவிட்ட பஞ்சாப் பிரிவினையின் தாங்கவொண்ணா அவலத்தைக் குறிப்பிடுகிறது ‘ வாரிஸ் ஷா! நான் உனை அழைக்கிறேன் !’ எனும் அம்ரிதா ப்ரீத்தமின் புகழ்பெற்ற கவிதை ஒன்று. அம்ரிதாவின் இலக்கிய வருகைக்கு முன்பே, 18-ஆம் நூற்றாண்டில் பஞ்சாபின் சிறந்த கவியாகப் புகழ்பெற்றிருந்தவர் வாரிஸ் ஷா. ஹீர்-ராஞ்சா காதல் காவியத்தை பஞ்சாபி இலக்கியத்துக்கு வழங்கிய மகாகவி. அம்ரிதா அவரை தன் ஆதர்ஷ கவியாக மனதில் கொண்டிருந்தார். இளம் வயதில் விதவையாகிப்போன, சிதைக்கப்பட்ட பஞ்சாபிப்பெண்களின் துக்கத்தைத் தாளமாட்டாது வாரிஸ் ஷாவை அழைத்து முறையிடுவதாக அமைந்திருக்கிறது அம்ரிதா ப்ரீத்தமின் புகழ்பெற்ற அந்தக் கவிதை. மொழியாக்கம் கீழே :

பஞ்சாபின் ஆகச்சிறந்த காதல்கவிஞனே
வாரிஸ் ஷா!
உனை நான் இன்று அழைக்கின்றேன்
உன் கல்லறையிலிருந்து நீ பேசுவாய்
உன்னால் எழுதப்பட்ட
காலந்தாண்டிய காதல்காவியத்தில்
இன்னுமொரு பக்கத்தை
இன்று நீ சேர்த்துவிடலாம்

பஞ்சாபின் பெண்ணொருத்தி
துக்கம் தாளாது அழுதாள் என்பதற்காக
சோகக் காவியம் ஒன்றை எழுதினாய் அன்று
இன்றோ பஞ்சாபின் ஆயிரமாயிரம் யுவதிகள்
ஆற்றமாற்றாது அழுது துடிக்கிறார்கள்
துக்கமுற்றோரின் துணைவனே!
கல்லறையிலிருந்து நீ எழு!
உன் பஞ்சாபிற்கு நேர்ந்துவிட்ட அவலத்தைப் பார்
சேனாபில்* ரத்தம் வெள்ளமாய் ஓடுகிறது
வயல்வெளிகளில் எறியப்பட்ட பிணங்கள்
கோரமாய்க் காட்சி தருகின்றன
பஞ்சாபின் ஐந்து நதிகளிலும்
விஷத்தைக் கலந்துவிட்டார்கள் யாரோ
விஷந்தான் நிலமெங்கும் பாசனமாகிறது

என்னவாயிற்று இந்த பஞ்சாபிற்கு?
ராஞ்சாவின்** சகோதரர்கள்
புல்லாங்குழல் இசைக்க மறந்துவிட்டார்களா?
இனிய காதல்கீதங்களெல்லாம் என்னவாயின
அவற்றை இசைத்த புல்லாங்குழல்கள்தான் எங்கே
ரத்தமே மழையாகப் பெய்திருக்கிறது எங்கும்
இடுகாடுகளிலும் ரத்தக்கொப்பளிப்புகள்
இதயமே நொறுங்குமாறு கதறுகிறார்கள்
காதல் இளவரசிகள் அங்கே அமர்ந்து.
குவாய்தோக்கள்*** இன்று நாட்டில்
காதலையும் இளமையையும்
குதறிச் சிதைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
வாரிஸ் ஷாவைப்போல் ஒரு கவிஞன்
இனி மீண்டும் வருவானா?

வாரிஸ் ஷா!
நீ படைத்த அந்தக் காதல்காவியத்தில்
இன்னுமொரு சோகப்பக்கத்தை
இன்று நீ எழுதிச் சேர்த்துவிடு !
————————————————————————

*சேனாப் (Chenab): பஞ்சாபின் ஒரு நதி. **ராஞ்சா: ஹீர்-ராஞ்சா காதல் காவியத்தின் நாயகன். ***குவாய்தோ: நாயகியான ஹீர் (Heer)-ஐ விஷம்வைத்துக் கொன்ற பெண்

 

தேசப்பிரிவினை பெண்களுக்கு இழைத்த கொடூரம்பற்றிய தாக்கத்தில் பஞ்சாபி மொழியில் அம்ரிதா 1950-ல் எழுதிய நாவல் ‘பிஞ்சர்’ (எலும்புக்கூடு). வாழ்வின் எத்தகைய துயரத்திலும் பெரிதும் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாய் நிற்பவர் பெண்களே. எப்போதும் துன்பப்பட்டுக்கொண்டு, குடும்பத்தாரின் ஆதரவும் இல்லாமல், பாரத்தையெல்லாம் வாழ்நாள் முழுதும் சுமக்கும் நிலையில் இருக்கும் இந்தியப் பெண்ணின் அவலத்தைக் கண்டு கலங்கியிருக்கிறார் அம்ரிதா. அனுபவங்களை அபாரமான எழுத்துச் சித்திரமாக்கியிருக்கிறார். இந்தியப் பிரிவினைபற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த படைப்பாக இது கருதப்படுகிறது. பிஞ்சர் என்ற பெயரிலேயே ஒரு ஹிந்தி படமாகவும் பின்னர் இது வெளிவந்தது.

இந்தியா திரும்பிவிட்ட அம்ரிதாவின் மணவாழ்க்கை நாளுக்குநாள் அர்த்தமின்றி ஓடிக்கொண்டிருந்தது. சோககீதமே தன்னுடைய வாழ்வின் அடிநாதமாக ஆகிவிட்டிருந்ததை சின்னவயதிலிருந்தே உணர்ந்திருந்தார் அம்ரிதா. நெடும்வாழ்வில் தொடர்ந்த காதல் அம்ரிதாவைக் கொஞ்சம் ஸ்பெஷலாகவே கவனித்து அவரை சோக இளவரசியாய் மாறிவிட்டிருந்தது.

இளம் கவியான சாஹிர் லூதியான்வி (லூதியானா, பஞ்சாபின் ஒரு சிறுநகரம்.அங்கே பிறந்தவராதலால் சாஹிர் லூதியான்வி- நம்ம பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்போல) புகழின் வாசலுக்கு வந்திருந்த சமயம். அம்ரிதா சாஹிரைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். அம்ரிதாவின் கவிதைத் தொகுப்புகள் சிலவும் ஏற்கனவே வெளிவந்திருந்தன. 1944-ல் பஞ்சாபின் கிராமம் ஒன்றில் ஒரு மாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முஷாய்ராவில் (Mushaira-கவியரங்கு) இருவரும் முதன்முதலாக சந்தித்துக்கொண்டனர். சாஹிர் லூதியான்வி தீவிரமும், லட்சியநோக்கும் கொண்ட இளம் கவி. வார்த்தைவீச்சு, கருத்தாழமிக்க தன் கவிதைகளுக்காக அறியப்பட்டிருந்த இளம்பெண் அம்ரிதா. கண்டதும் காதலோ? அப்படித்தான் தோன்றுகிறது. இரவின் நிழலில், மெல்லொளியில் அவர்கள் கண்கள் அடிக்கடி சந்தித்து மீண்டன. ஆயினும் அந்த சந்திப்பில் வார்த்தைப் பரிமாற்றம் என்பதாகப் பெரிதாக ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை. சாஹிர் பொதுவாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத் தயங்குபவர். இந்த விஷயத்தில் பஞ்சாபிகளுக்கு நேரெதிரான குணம் கொண்டவர்!

அந்த நாசூக்கான மாலைச்சந்திப்புக்குப்பின் இருவரிடையே கடிதப் பரிமாற்றம் நிகழ்ந்தது. லாகூரில் லூதியான்வியும் டெல்லியில் அம்ரிதாவும் இருந்த காலமது. தன் கடிதங்களில் அம்ரிதா ப்ரீத்தம், சாஹிர் லூதியான்விமீது தான் கொண்டிருக்கும் காதலைத் தெளிவாக்குகிறார். ’என் கவியே!’ என்கிறார். ’தேவதையே!’ என்கிறார். வரிக்குவரி ‘காதலனே, கடவுளே…’ என்றெல்லாம் உருகுகிறார் அம்ரிதா. கனல்பறக்கும் காதலில் தன்னைக் கரைத்துக் காணாமற்போகிறார் அவர். எவ்வளவுக்கெவ்வளவு அம்ரிதா தன்னை வார்த்தைகளாக வெளிப்படுத்திக்கொண்டாரோ, அவ்வளவுக்கவ்வளவு சாஹிர் லூதியான்வியிடமிருந்து வெளிப்பட்டது ஆழ்ந்த அமைதி! வார்த்தைகளுக்கு வேலை இல்லை என நினைத்தாரோ? Platonic love ?

இருவரும் அவ்வப்போது காதல்கடிதங்களை எழுதிக்கொண்டார்கள். தன் குடும்பத்தினருடன் டெல்லியில் வசித்தார் அம்ரிதா. அங்கே ஒரு அறிவுஜீவியாக, கவிஞராகப் புகழடைந்துகொண்டிருந்தார். சாஹிர் லூதியான்வி பம்பாய் வந்து திரைப்படங்களில் பாடல்கள் எழுத ஆரம்பித்த காலகட்டம். சாஹிருக்காகத் தன் கணவரைத் துறக்கத் தயாராக இருந்தார் அம்ரிதா. ஆனால் சாஹிரிடமிருந்து உறுதியாக எந்த ஒரு பதிலும் இல்லை. இருவரும் அவ்வப்போது சந்திக்கும் வாய்ப்புகள் வந்தன. அப்போதும் இருவரது கண்களும் மட்டுமே மும்முரமாய் இருந்தன. உதடுகளுக்கு வேலை இருந்திருக்கவில்லை! மொழி என்பது அவர்களிடையே தலைகாட்டவில்லை. இருவரும் மௌனமே சாட்சியாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்க, சாஹிர் புகைத்துத் தள்ளுவாராம். பின்னர் ஒன்றுமே நடக்காததுபோல் எழுந்துபோய்விடுவாராம். அவர் போனபின் அவர் புகைத்துபோட்ட சிகரெட் துண்டுகளை எடுத்துத் தன் உதட்டில் பொருத்தி புகைப்பாராம் அம்ரிதா! அப்படி ஒரு கண்மண் தெரியாக் காதல் அம்ரிதாவுக்கு. இதனைப்பற்றி அவரே தன் சுயசரிதமான ‘ரசீதி டிக்கெட்’’(Rasidi Ticket-ரெவின்யூ ஸ்டாம்ப்)-இல் எழுதியுள்ளார். அவருடைய வாழ்வின் அவஸ்தைகள், நிறைவேறாக்காதலின் சோகம் ததும்பும் படைப்பு இது.

சாஹிர் உள்ளூர அம்ரிதாவின் மீது ப்ரேமையாகியிருந்திருக்கிறார். ஏனோ அதனை அடுத்தகட்டத்துக்கு அவர் நகர்த்தவில்லை. அல்லது அவரால் முடியவில்லை. ஒருமுறை அம்ரிதா தன் வீட்டுக்கு வந்தசென்றபின், தன் தாயிடம் (கணவரிடமிருந்து பிரிந்த தாய்தான் சாஹிரை வளர்த்து ஆளாக்கியவர்), சாஹிர் லூதியான்வி சொன்னாராம்: ‘அம்மா! அதுதான் அம்ரிதா ப்ரீத்தம்! உன் மருமகளாக வரக்கூடியவள்!’ அம்ரிதாவுக்கு மிகவும் அருகில் வந்த சாஹிர் லூதியான்வியின் நிலை இதுதான்! அம்ரிதா, தான் முதன்முதலாக சாஹிரை சந்தித்ததைக் கருவாகக்கொண்டு ஒரு சிறுகதையும் எழுதியிருக்கிறார். அதனைப் படித்தபின்பாவது ஏதாவது சொல்வாரா சாஹிர் லூதியான்வி என்று எதிர்பார்த்திருக்கிறார் அம்ரிதா. ஆனால் அவரிடமிருந்து எந்த ஒரு எதிர்வினையும் இல்லை. அதிலும் ஏமாற்றம்தான் அம்ரிதாவுக்கு. சாஹிர் லூதியான்விக்கு என அவர் நினைத்து எழுதிய சிறுகடித வடிவிலான கவிதைகளின் தொகுப்பு ‘சுனேஹ்ரே’(Sunehre –messages) சாஹித்ய அகாதமியின் விருது பெற்றது. யாருக்காக எழுதினேனோ அவர் பார்த்ததாகத் தெரியவில்லை, உலகம் பார்த்திருக்கிறது – என்று மனம் கனத்ததாம் அம்ரிதாவுக்கு.

அது நிகழுகிறவிதமாக நிகழட்டும்; எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலே காதல் இருந்துவிட்டுப்போகட்டும், அதன் சக்தியை, அதன் போக்கை உள்வாங்கிக்கொள்ளலாம்; வேறென்ன நாம் செய்துவிடமுடியும் என்கிற முடிவுக்கு அம்ரிதா வந்திருக்கக்கூடும். அவருடைய கவிதைகளில் இந்த நிதர்சனம், தொடரும் ஏக்கம் ஆகியவை வெளிப்படுகின்றன. பிற்காலத்தில் தன்னைவிட இளையவரான பஞ்சாபி ஓவியரும், கவிஞருமான இம்ரோஸ்(Imroz) மீது அம்ரிதாவுக்கு ஒரு இனந்தெரியாப் பிடிப்பு ஏற்பட்டது. ஒரு ஆன்மநெருக்கம் என்று அதனைக் குறிப்பிடலாமோ? அது கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலம் அம்ரிதாவை அம்ரோஸின் அருகாமையில் வைத்திருந்தது. அந்த சமயத்தில் தன் கணவரிடமிருந்து அம்ரிதா பிரிந்துவந்துவிட்டார் எனினும், அம்ரோஸ்-அம்ரிதா இடையேயான நட்பு, நெருக்கம் அவர்களை திருமணம் என்கிற பந்தம்வரை கொண்டுசெல்லவில்லை. இம்ரோஸ் தாங்களிருவரும் ஒரே வீட்டில் தனித்தனி அறைகளில், நண்பர்களாய் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சமூகம் என்ன நினைக்கும் என்கிற கவலை இருவருக்கும் இருந்ததில்லை. தெற்குடெல்லியின் ஹோஸ்-காஸ் எனும் இடத்தில் இருக்கும் ஓவியர் இம்ரோஸின் வீட்டில், முகப்பறை, வாசிப்பு அறை என எங்கு பார்த்தாலும் அம்ரிதாவின் படங்கள்தான். ‘என் வீட்டில் அம்ரிதா இல்லாத இடமில்லை!’ என்று இன்றும் மகிழ்ச்சியோடு கூறுகிறார் இம்ரோஸ். இருவரிடையேயான ஏக்கம், மனநெருக்கம் இவற்றை வெளிப்படுத்தும் ‘இம்ரோஸ்-அம்ரிதா கடிதங்கள்’ புத்தகவடிவில், முதலில் பஞ்சாபி ஒரிஜினலாகவும், பிற்பாடு ஹிந்தி பதிப்பாகவும் வெளியாகியது. ‘Amrita-Imroz : In the times of Love and Longing’ என்கிற ஆங்கிலப் பதிப்பாகவும் இது வெளியாகியுள்ளது.

சிலகாலம் உடல்நலம் இல்லாதிருந்த அம்ரிதா ப்ரீத்தம், 2005 அக்டோபரில் டெல்லியில் காலமானார். தன் கடைசி வருடங்களில் ஷிர்டி பாபாவின் பக்தராக அவர் இருந்ததாகத் தெரிகிறது. ஒரு அதிகாலையில் பாபாவின் உருவப்படத்துக்கு முன்பு அகர்பத்தி ஏற்றிக் காண்பிக்கையில் தனக்கு அந்த அனுபவம் உண்டானதாகக் குறிக்கிறார் அம்ரிதா. அகர்பத்தி புகையை பாபாவுக்குக்காட்டி கண்முடி தியானித்திருக்கையில் தான் தானாக இல்லாமல், அந்த வாசனைப்புகையாகவே மாறி பரவியிருந்ததாக உணர்ந்திருக்கிறார் அவர். சீக்கியர்கள் ஹிந்துக்களைப்போலவே மறுபிறப்பில் நம்பிக்கை உடையவர்கள். தன் இறுதிக்காலம் நெருங்குகிறது என்பதை உணர்ந்த அம்ரிதா, இம்ரோஸை இனி எங்கு, எப்போது காண்போம் என ஏங்கியிருக்கவேண்டும். இம்ரோஸ்பற்றிய சிந்தனையில் அவர் இப்படி எழுதுகிறார்:

சந்திப்பேன் உனை நான்
மீண்டும் ஒருமுறையாவது
எங்கே எப்படி
என்பதெல்லாம் தெரியாது
ஒருவேளை உன் மனதின்
கற்பனைப் பாத்திரமாய்
நான் மாறிவிடுவேனோ
உனது கேன்வாசில்
ஒரு புதிரான கோடாக நீண்டு
உனையே பார்த்தவாறு இருப்பேனோ
உனது வண்ணங்கள் தழுவி மகிழும்
சூரியக்கதிராக மாறித்தான் நிற்பேனோ
அல்லது உனது கேன்வாசில்
எனை நானே வரைந்துகொள்வேனோ
எங்கே எப்படி என்பதெல்லாம் தெரியாது
சந்திப்பேன் உனைநான் ஒருநாள்
வசந்தருதுவாக ஒருவேளை நான் மாறி
நீர்த்திவலைகளாய் உன்மீது தெறிப்பேன்
தகிக்கும் உன் மார்பின்மீது
என் இளமையின் குளுமையை
ஓய்வுகொள்ளவைப்பேன்
இந்த வாழ்க்கை எப்போதும்
என்னோடு நடந்துவரும்
என்பதைத் தவிர
வேறொன்றும் தெரியாது எனக்கு
உடம்பு அழியும்போது
எல்லாம் அழிந்துவிடும்தான்
ஆனால் நினைவிழைகளோ
காலந்தாண்டிய அணுத்துகள்களால்
வடிவம் கொள்கின்றன
அத்தகைய துகள்களைப்
பொறுக்கி எடுப்பேன்
இழைகளாய் நெய்து நெய்து
சந்திப்பேன் உனைநான்
மீண்டும் ஒருநாள்

**

காதலின் நிலைகொள்ளா ஆழமும் அது காட்டிச்செல்லும் மனித வாழ்வும் அவரை பிரமிக்கவைக்கின்றன. அவரைத் தொடர்ந்து புடம்போடுகின்றன. இன்னொரு கவிதையில் எழுதுகிறார் அம்ரிதா:

காலி இடம்
இரண்டு ராஜ்யங்கள்தான்
அப்போதிருந்தன உலகில்
என்னையும் அவனையும்
விரட்டிவிட்டிருந்தது முதல் ராஜ்யம்
இரண்டாவது ராஜ்யத்தை
விட்டுவிட்டு
நாங்களே வந்துவிட்டோம்
நிர்வாண வானத்தின் நேர்கீழே
என் மேனி எனும் சுடுமழையில்
நெடுநாட்களாக நனைந்திருந்தேன் நான்
தன்னுடம்பின் ஈரத்தில்
தொப்பலாகியிருந்தான்
அவனும் வெகுநாட்களாய்
இப்படிப் போகையில் ஒரு சமயம்
பலநாட்களின் மோகத்தை
ஒருவிஷம்போல்
குடித்துவிட்டான் அவன்
நடுங்கும் கையால்
என் கையைப் பிடித்தவன்
சொன்னான்:
வா! நமக்காக ஒரு வீடு
கட்டிக்கொள்வோம்!
அதோ, அங்கே தொலைவில். .
மெய்யுக்கும் பொய்யுக்குமிடையே
ஒரு சிறு காலி இடம் தெரியுது பார் !

 

**

 

ஆரம்பத்தில் காதல் கவிதைகள் எழுதிய அம்ரிதா ப்ரீத்தம், இந்திய சுதந்திரத்துக்குமுன், பிரிட்டிஷ் இந்தியாவில் அமைக்கப்பட்ட ‘முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்க’த்தில் சேர்ந்துகொண்டார். அந்தக் காலகட்டத்தில் அவருடைய எழுத்து தீவிரமும், பரந்துபட்ட வீச்சும் கண்டது. சோக இழையோடும் சுகமான இசைநயம் கொண்ட மொழி; பாசாங்கில்லாத பளிச்சென்ற நேர்மொழி அம்ரிதாவுடையது. கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், சுயசரிதம், நாவல் என 100-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றி பஞ்சாபி இலக்கியத்தின் முன்னணி எழுத்தாளர், கவிஞர் என்கிற கௌரவத்தை அடைந்தவர் அம்ரிதா ப்ரீதம். 1943-ல் நிகழ்ந்த வங்காளப் பஞ்சம் (Bengal famine)பற்றி ’லோக் பீட்( Lok Peed – மக்களின் துயரம்) என்கிற கவிதைநூலை 1944-ல் எழுதினார். போரினால் சிதைந்த பொருளாதாரத்தை அதில் கடுமையாக விமரிசித்திருந்தார் அம்ரிதா. ’’காகஸ் தே கான்வாஸ்’ (காகிதமும் கான்வாஸும்) என்கிற நூலிற்காக பாரதிய ஞானபீட விருது 1982-ல் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இறப்பதற்கு ஒருவருடம் முன்பு 2004-ல் பத்மபூஷன் விருதினால் இந்திய அரசு அவரை கௌரவித்தது. பிரிவினைக்குமுன் தன் இளம் வயதில் லாகூரில் இருந்தபோது லாகூர் ரேடியோ ஸ்டேஷனில் சிறிதுகாலம் பணிபுரிந்துள்ளார். 1961-வரை சிலவருடங்கள் ’ஆல் இந்தியா ரேடியோ’வின் பஞ்சாபி மொழிப்பிரிவில் பணியாற்றியவர் அம்ரிதா ப்ரீத்தம். அப்போது இந்திய சமூகத்தில் பெண்ணின் நிலைமை பற்றி எழுதியும், குரல் கொடுத்துமிருக்கிறார். 60-களில் அவர் எழுதிய எழுத்துக்கள் பெண்ணியம் சார்ந்து அமைந்திருந்தன. பின்னாளில் ‘அக்யத் கா நிமந்த்ரன் (Agyat ka nimantran-அறிந்திராதஒன்றின் அழைப்பு), அக்‌ஷரோன் கே சாயீ (Aksharon ke sayee -வார்த்தைகளின் நிழல்கள்), காலா குலாப் (Kaalaa ghulab-கறுப்பு ரோஜா) ஆகிய அழுத்தமான படைப்புகள் அவரிடமிருந்து வெளிப்பட்டன.

 

எல்லாப் பொறுப்பையும் தன் தலைமேல் சுமந்து, வாழ்நாள் முழுதும் வாய்திறக்காது வாழ நேர்ந்த இந்தியப் பெண்களுக்கு சோகமே வாழ்வானதை இப்படி ஒரு கவிதையாக வடித்திருக்கிறார் அம்ரிதா ப்ரீத்தம் :

அவன் சொல்வான்
அவள் கேட்டுக்கொள்வாள்
சொல்வது – கேட்பது என ஒரு விளையாட்டு
ஆரம்பமாகியிருந்தது அவர்களிடையே
எழுதிப் போடப்பட்டிருந்தன
இரண்டு சீட்டுகள்
ஒன்றில் எழுதப்பட்டிருந்தது `சொல்!`
இன்னொன்றில் `கேட்டுக்கொள்!`

 

இது விளையாட்டில் ஒரு நியதியா
இல்லை இருவருக்கும் தரப்பட்ட வாய்ப்பா?
ஒவ்வொரு விளையாட்டின்போதும்
அவள் கையில் கிடைத்தது அதே சீட்டு
எதில் `கேட்டுக்கொள்` என்றிருந்ததோ அது

 

உத்தரவுகளிட்டான் அவன்
உபதேசங்களும் செய்தான்
கேட்டுக்கொண்டாள் அவள்
மறுக்கப்பட்டவையும்
மறந்தும் செய்யக்கூடாதவையும்
அவளுக்கென பட்டியலிடப்பட்டிருந்தன
சொல்வதும் கேட்பதும் மட்டுமல்ல வாழ்க்கை
அந்தப் பேதையும் இதை அறிந்துதானிருந்தாள்

 

உத்தரவிட்டான் மன்னன்
விஷத்தைக் குடி !
அவள் மீராவானாள்

 

முனிவர் சாபமிட்டார்
கல்லாகப்போ!
அவள் அகலிகை ஆனாள்

 

ராமனும் கட்டளையிட்டான்
காட்டுக்குப் போ !
அவள் சீதையானாள்

 

எரியும் சிதையின் ஈனக்குரல்
எவரின் காதிலும் விழவில்லை
அவள் சதியானாள்*

 

அவளது அபயக்குரலும் வெளியே கேட்காமல்
அமுக்கப்பட்டிருந்தது காலங்காலமாய்
வார்த்தைகள் தொண்டையில் திணற
வாயும் அழுந்த மூடப்பட்டிருந்தது
அவள் கையில்மட்டும் சிக்கவேயில்லை கடைசிவரை
அந்தப் பாழாய்ப்போன சீட்டு
எதில் `சொல்` என எழுதப்பட்டிருந்ததோ அது

___________________________________________________

*19-ஆம் நூற்றாண்டுவரை வடஇந்தியாவில் புழக்கத்தில் இருந்த `உடன்கட்டை ஏறல்` எனும் பெண்களுக்கெதிரான சமூகக்கொடுமை. கணவன் இறந்த பிறகு அவள் வாழ விரும்பவில்லை, வாழமாட்டாள் என்றெல்லாம் கற்பித்து இளம் விதவைகளைத் தூண்டி, வற்புறுத்தி கணவனின் உடல் எரியும் தீயிலேயே தள்ளிக் கருகவிட்டு `அவள் `சதி`யாகிவிட்டாள்!` என ஊர், உலகத்துக்குக் கதைசொல்லிய காலம்.

***

வாழ்வின் இறுதிக்கட்டங்களில் தன் மாநிலம், தாய்நாடு என்கிற எல்லைகளையெல்லாம் தாண்டிப்பயணித்த அம்ரிதாவின் மனம் அவரை எங்கும் நிரவிநிற்கும் ஒரு சுதந்திர ஜீவனாகக் கண்டுகொண்டது. அத்தகைய மனம் இப்படி எழுதியது :

 

என் வீட்டின் இலக்கத்தை
இன்று நான் அழித்துவிட்டேன்
தெருவின் நெற்றியில் காணப்பட்ட
அடையாளத்தையும் நீக்கிவிட்டேன்
என் வீட்டைநோக்கித் திரும்பும்
கிளைத்தெருவின் பெயரையும்
தடயமின்றிக் கலைத்துவிட்டேன்
நானில்லை இனி
அப்படியும் என்னை
சந்திக்க விரும்பினால், போங்கள்:
எந்த நாடோ நகரமோ
தெருவோ வீடோ
சுதந்திர ஜீவன் ஒன்று இங்கே வாழ்கிறது
என்பதற்கான அறிகுறி எங்கே தெரிகிறதோ
அங்கேபோய்த் தட்டுங்கள் கதவை
அதுவே நான் வாழும் வீடு

**

One Reply to “அம்ரிதா ப்ரீத்தம் – பஞ்சாபிக் கவிதாயினி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.