மகரந்தம்


[stextbox id=”info” caption=”சுவர் இருந்தால் சித்திரம் வரையலாம்”]

உலக தேக நலப் பராமரிப்பு முன்னெப்போதையும் விட விரிவான வலையில் சிக்கியிருக்கிறது. இன்று எந்த நாட்டிலும் உடனடியாகக் கிட்டும் சிகிச்சை முறைகளும் சரி, சிகிச்சைக்கான மருந்துகளும் சரி, அனேகமாக மேற்கிலிருந்துதான் துவங்கியனவாக இருக்கும். ஓரளவு பழம் பண்பாடுகளில் அந்தக் கலாசாரங்களில் பன்னெடுங்காலமாக நிலவிய சிகிச்சை முறைகள் மிஞ்சி இருந்து மக்களுக்கு உதவலாம். ஆனால் பரந்து விரிந்து ஆதிக்கம் செலுத்துவது மேலைச் சிகிச்சை முறைகள்தாம்.

இந்தச் சிகிச்சை முறைகளின் வலுவான அடித்தளம் தொழில் முறையில் பெரு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மருந்துகள். இந்த மருந்துப் பொருட்களின் பின்னிருப்பவை ஏராளமான அறிவியலாளர்களும், பொறியியலாளர்களும் அடங்கிய ஆய்வு அமைப்புகளும், உற்பத்தி நிறுவனங்களும். கடந்த இருபதாண்டுகளில் ஆய்வுகள் மேன்மேலும் செலவு கூடிய வகையான அணுகுமுறைகளாலேயே வழி நடத்தப்படுகின்றன. இதே சமயத்தில் மேன்மேலும் எளிதில் தீர்வு காண முடியாத நோய்கள் உலகெங்கும் எழுந்து வரவும் செய்கின்றன. பல துறைகளில் இருந்து பெருநிறுவனங்கள் இப்போது மருந்துத் தயாரிப்பு அல்லது உடல் நலப் பராமரிப்புத் துறைகளில் முதலீடு செய்யவோ, அல்லது தம் தொழில் திறனை வைத்து பொறிநுட்ப உதவி கொடுக்கும் கருவிகளையோ தயாரித்து பங்கெடுக்கவோ முற்பட்டு வருகின்றன.

தகவல் துறையில் பெருநிறுவனங்களான கூகிள், ஐபிஎம், ஆப்பிள், ஃபேஸ்புக் போன்றன இந்த உடல்நலப் பராமரிப்புத் துறையில் இறங்கி உள்ளன. அவற்றில் ஒன்று ஆல்ஃபபெட் என்ற நிறுவனத்தின் ஒரு கிளை நிறுவனமான வெரிலி என்பது. (முன்பு கூகிள் என்று அறியப்பட்ட நிறுவனத்தின் பல வேறு கவனங்களை எல்லாம் ஒன்று சேர்த்து நிர்வகிக்க அமைக்கப்பட்ட பெருநிறுவனமே ஆல்ஃபபெட்.) வெரிலி யில் முதலீடு செய்ய சிங்கப்பூரின் சீன முதலீட்டு நிறுவனம் (டெமஸெக்) முன்வந்திருப்பதோடு, அதன் நிர்வாக அமைப்பிலும் பங்கெடுக்கவிருக்கின்றது என்று இச்செய்தி தெரிவிக்கிறது. டெமஸெக்கின் முதலீடுகளில் கால் பங்கு சீனாவில் உள்ள சொத்துகளில் அடங்கி இருப்பதையும் செய்தி கவனிக்கிறது. அந்த அளவில் டெமஸெக் சீன அரசின் நிறுவன முயற்சிகளில் ஒன்றாக இருக்க வாய்ப்பு உண்டு.

ஒப்பீட்டில், இந்தியா இந்த வகை உலகளவு பங்கெடுப்பில் இன்னும் கவனம் செலுத்தாமல் இருப்பதை இங்கு நாம் சிறிது கவனித்தல் உதவும்.

http://www.bostonglobe.com/business/2017/01/26/google-life-sciences-spinout-raises-million-asia-play/C1Dcud4CIZ2CANo41WyOBL/story.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”தேவாலயம் இருந்தால் பணம் பண்ணலாம்”]

உலகெங்கும் பரவியுள்ள ஒரு மத அமைப்பு இந்தியருக்கு அனேகமாக அதன் இயல்பெயரால் தெரிய வந்திராது. மார்மன் இயக்கம் என்பது தொடர்ந்து அமெரிக்காவில் பரவி வருகிறதோடு, அமெரிக்காவின் பெரும் நிதிநிறுவனங்கள், ஹோட்டல்கள், வங்கிகள் என்று பற்பல தொழில் அமைப்புகளையும் ஆள்கின்றது. இதன் கணக்கு வழக்குகள் சாதாரணருக்கு மட்டுமல்ல, அமெரிக்காவின் ஊடகங்களுக்குமே எட்டாத ரகசியங்கள். இதன் சில ரகசியங்கள் இப்போது புலப்படத் துவங்கி உள்ளன. கார்டியன் பத்திரிகை இந்த மார்மன் கிருஸ்தவ இயக்கம் எப்படிப் பல பெருநகரங்களில் ஏராளமான நிலங்களை வாங்கிப் போட்டிருக்கிறது, அமெரிக்காவின் சில மாநிலங்களில் மார்மன் கிருஸ்தவர்களுக்காகத் தனிநகரங்களையே கட்டத் திட்டமிடுகிறது என்பதை வெளியிட்டுள்ளது. இந்த சர்ச்சுக்கு 2012 ஆம் ஆண்டின் கணக்குப் படி சுமார் 35 பிலியன் டாலர்கள் மதிப்புள்ள கட்டிடங்களும் நிலங்களும் சொந்தமானவையாக இருந்தனவாம். ஆண்டொன்றுக்கு இந்தச் சர்ச்சின் உறுப்பினர்கள் தம் வருட வருமானத்தில் 10% த்தைக் கொடுக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. இதனால் இந்த சர்ச்சுக்கு ஆண்டு தோறும் சுமார் 7 பிலியன் டாலர்கள் வருமானமாக வருகிறது. இந்த வருமானத்தை சர்ச் என்ன செய்கிறது என்ற தகவல்கள் இதன் உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லையாம்.

மேலும் இதன் ரகசிய நடவடிக்கைகள் பற்றிய தகவல்களுக்கு கார்டியனின் இந்த செய்தி அறிக்கையைப் படியுங்கள்.

2013 ஆம் ஆண்டு இந்தியப் பத்திரிகை ஒன்றில் வெளியான விவரங்களின் படி இந்தியாவில் சுமார் 11,000 உறுப்பினர்கள் இருப்பதாகத் தெரிகிறது. இந்த 4 ஆண்டுகளில் மார்மன் சர்ச்சின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்திருக்கவே வாய்ப்பு அதிகம். இப்படி ஒரு ரகசிய அமைப்பு இந்தியாவில் வளர்வது குறித்து இந்திய அரசு என்ன யோசிக்கிறது என்பதை எந்த ஊடக அமைப்பும் இதுவரை கவனித்து ஏதும் எழுதியதாகத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்திருந்தால் சொல்வனம் வாசகர்களுக்குத் தெரிவிக்க, வாசகர் குறிப்புகளில் பதிவிடுங்கள்.
[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.