தீராத கதைசொல்லி

20 வருடங்களுக்கு முன், பள்ளி பருவத்தில், என் தாத்தாவின் புத்தக சேகரிப்பிலிருந்து ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தோம். அது எனக்கு ஒரு புதிய பார்வையை, வாசலைத் திறந்து காட்டியது. அது எட்வர்ட் ஸ்டைகன் (Edward Steichen) தொகுத்த த ஃபாமிலி ஆஃப் மேன் (‘The family of man’) என்ற புகைப்படக் கண்காட்சியின் புத்தக வடிவம். காதல், திருமணம், குழந்தை பிறப்பிலிருந்து குழந்தைப் பருவம், வாலிபம் முதுமை, இவற்றிற்கு நடுவில் போர், வறுமை என்று மனிதனின் அத்தனை பருவங்களின்/உணர்வுகளின் வெளிப்பாடும் புகைப்படங்களாக ஒரு தொகுப்பு. இதில், விசேஷம் என்னவென்றால், பல்வேறு நாடுகளிலிருந்து புகைப்படங்கள் அருகருகே பதிவு செய்யப்பட்டிருக்கும். குழந்தை பிறப்பு என்பதோ, திருமணம் என்பதோ, முதுமை என்பதோ இந்தியாவிலும், சைபீரியாவிலும், அமெரிக்காவிலும் ஜப்பானிலும் ஒரே விதமான உணர்சசிதான், வெளிப்பாடுகளில் சற்று வேறுபாடு இருக்கலாம். கருப்பு வெள்ளை புகைப்படங்களாலான அந்தப் புத்தகத்தை பல நூறு முறைகளாவது புரட்டிப் பார்த்திருப்பேன். ஆஃப்ரிக்காவின் கிராமத்தில், விசித்திரமான சிகையலங்காரம் அணிந்த, ஆடைகள் அணியாத மனிதர்களுக்கு நடுவே, கண்களை விரித்துக் கைகளை ஆட்டி, இரவு நேரக் கதை சொல்லும் மனிதனும், யூரோப்பின் சொகுசான வீட்டில், சீட்டு விளையாட்டில் ஏமாற்றும் சிறுமியின் முகபாவங்களும் என அத்தனை விதமான முகங்கள், ஆடைகள், கலாசாரங்கள்..ஆனால் பார்த்ததும் புரிந்துகொள்ளக்கூடிய உணர்வுகள், ‘மனிதன் ஒரு குடும்பம்’ என்று அவை அளித்த விகசிப்பும் கனிவும், வாழ்க்கையில் முக்கியமானவை.

என்னுடைய சின்ன வட்டத்திலிருந்து, இணையம் வளர்ந்திராத, தொலைக்காட்சி அதிகம் பார்க்கப்படாத அந்தக் காலத்தில் அது அளித்த பரவசம் விசேஷமானது. இப்போது, நான் இந்தியாவில் இருந்துகொண்டு நியூ யார்க்கில், ரஷ்யாவிலிருந்து அங்கு வந்தேறிய பெண்ணுடன் வேலை செய்கிறேன். நானும் அவளும் சேர்ந்து சீனாக்காரரான எங்கள் ‘லீட்’ ஐப் பற்றிப் பேசிக்கொள்கிறோம். இந்தச் சூழலில், அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துக்கள் எனக்கு அதே விதமான விகசிப்பையும், புரிதலையும் அளிப்பது மட்டுமல்லாமல், உலகக் கலாசாரங்களை என் தாய் மொழியில் அணுக முடிகின்ற பரவசத்தையும் அளிக்கிறது. எங்கு சென்றாலும், அங்கு நமக்கு நன்கு தெரிந்த நம்ம ஊர் நண்பர், சுற்றி அழைத்து காண்பிப்பதுபோன்ற உணர்வு. அதிலும் ஒரு தேர்ந்த கதை சொல்லி. அவர் கதையாடல்கள், விளக்கணைக்கப்பட்ட சினிமா அரங்கம் போல, கவனம் சிதறாத ஒரு தனி உலகத்திற்கு நம்மை அழைத்து சென்றுவிடுகின்றன. எங்கே இருக்கிறோம் என்ற பிரக்ஞை தொலைந்துபோய், கதைக்குள் சென்றுவிடுகிறோம்.

அ.முத்துலிங்கம் அவர்களின் கதைகள் இரண்டு இடங்களில் நடக்கின்றன. தன் கிராமமான கொக்குவிலில் நடக்கும் கதைகள் ஒரு பகுதி, மற்ற நாடுகளில், கனடாவிலும் அமெரிக்காவிலும் ஆஃப்ரிக்க ஆசிய நாடுகளில் நடக்கும் கதைகள் இன்னொரு பகுதி. முதல் பகுதியான கொக்குவில் என்பதையே அவர் தன் குழந்தைப் பருவத்தின் ஒரு கதாபாத்திரமாக மாற்றிவிட்டார். அந்த குழந்தைப் பருவ காலத்தை அங்கே எப்போதைக்குமாக சுழன்றுவிட வைத்துவிட்டார். குழந்தைப் பருவம் என்பதில் முக்கியமாக சொல்ல முடியாத உணர்வு என்பது, முடியவே முடியாது, நீண்டுகொண்டே இருப்பது போலத் தோன்றும் நேரம். ஆனால், அதே நேரத்தில்தான் ஆயிரம் புதிய அறிதல்கள் நிகழ்ந்துகொண்டேயிருக்கும். ‘ஒன்றைக் கடன்வாங்கு’ என்ற கதையில் அம்மாவின் பிரசவ வலி ஆரம்பிக்கும் போது, பையனை மருத்துவச்சியை அழைத்து வரச் சொல்லி அனுப்புகிறார் அப்பா. சிறுவன் வெளியே புறப்படுகிறான்; ஏரோபிளேனைப் பார்ப்பதுபோல அண்ணாந்து பார்க்கவேண்டிய பெரியவரைச் சந்திக்கிறான்; அடுத்த கொலைக்காகத் தயாராகும் ஊர் ரவுடியை சந்திக்கிறான்; உடன் படிக்கும் பையன் குரங்கு பெடல் அடித்து வாடகைக்கு எடுத்து செல்லும் சைக்கிள்; புதுத் தம்பதி; பள்ளிக்கூட வாத்தியார் என்று அவன் ஒரு உலகத்தையே அன்று புதிதாக எதிர்கொள்கிறான், எல்லா இடமும் சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது, அம்மாவுக்கு குழந்தை பிறந்திருக்கிறது!

சில சமயம், சில விஷயங்களை ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. ஒரு மூன்று தலைமுறைக் கதையாவது சொல்லியாக வேண்டும். சரி, அதிலிருந்து என்ன சொல்ல வருகிறாய் என்றால், மீண்டும் அதே கதையை அதே கதியில் சொல்லத்தான் முடியும். ஆனால், அப்படி ஒரு கதை சொல்லவும் நுட்பமான கலை தெரிந்திருக்க வேண்டும். அதில் ஒரு வடிவக் கச்சிதம் வேண்டும். அ.மு -வுடைய அத்தனை கதைகளும் அதன் வடிவக் கச்சிதத்தால் ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. ‘தாத்தா விட்டு போன தட்டச்சு மஷீன்’ இல் ஒவ்வொரு விவரணையும் அப்படித்தான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றி என்று தோன்றினாலும், அவை கோர்த்து அளிக்கும் வாழ்க்கை சித்திரம் முழுமையானது. கனகவல்லிக்கு மூக்குத்தி மீது இருந்த மோகம், கதைசொல்லிக்கு தன் தாத்தாவின் தட்டச்சு மஷீன் மேல் இருந்த மோகம், அதில் ரத்னசிங்கம் கனகவல்லிக்குக் கொடுப்பதற்காக, கதைசொல்லி, தன் தாத்தாவின் தட்டச்சு மெஷீனில் டைப் அடித்துக் கொடுத்த காதல் கடிதம், அதற்காக வாங்கிய அடி. அதன் பின் ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஒவ்வொரு கதியில் சென்றுவிடுகிறது. மண வாழ்வு கைவிட்டு மீண்டும் கிராமத்திற்கு வந்த கனகவல்லிக்குத் தட்டச்சு செய்யும் வேலை கிடைத்து, அதற்காகக் கதை சொல்லி வீட்டிற்கு அவள் தட்டச்சு மெஷீனை விலைக்கு வாங்க வருகிறாள். ஊரிலேயே அவர்கள் வீட்டில்தான் அந்த தட்டச்சு மெஷீன் இருந்தது. தாத்தா விட்டு சென்றது. ஆனால், முன்பு கனகவல்லிக்கு நார்த்தை முள்ளில் மூக்கு குத்திவிட்ட, கதை சொல்லியின் அம்மா, அன்று அவளை வீட்டிற்குள் வரவிடாமல், தட்டச்சு மெஷீனின்வி லையும் கூட்டி சொல்லும்போதுதான், காலம், அது நான்கு வருடங்களே என்றாலும், மாறிவிட்டது உறைக்கிறது.

ஒரு நொடிப்பொழுது நினைவு (ஊர்வலம்), எடுக்கமுடியாத முடிவு (ரோறாபோறா சமையல்காரன்), வெறும் சிகிச்சைக் குறிப்புகளால் எழக் கூடிய மனப் பதட்டம் (அடுத்தபுதன்கிழமைஉன்னுடையமுறை), ஆச்சரியமான ஆனால் மிக மிக உண்மையான மனித அவதானிப்புகள் ( கடவுளை ஆச்சரியப்படுத்து, வேட்டை நாய்), கடைசிக் கணங்களின் அழுத்தமான சித்திரம் (ஆதி பண்பு) என்று இன்னும் எத்தனை எத்தனை விதமான கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவம்.

கதைகளுக்கான அவரது அடங்காத தேடலும் காதலும் நம்மை முடிவிலாது உற்சாகப்படுத்துகின்றன. அவரது நேர்காணலிலிருந்து, ஆப்பிரிக்காவைப் பற்றிய ஒரு விஷயம் படித்தேன். ஆப்பிரிக்கர்கள், இறந்தவர்களை மூன்று நாட்களாவது தங்கள் வீட்டில் வைத்து துக்கம் அனுசரித்துவிட்டுதான், தகனம் செய்வார்கள் என்று. அதுவும், மிகவும் நெருக்கமானவர்கள் என்றால், அவர்களது மாமிசத்தை கொஞ்சம் எடுத்து சமைத்துச் சாப்பிடவும் செய்வார்கள் என்று. இதை என் அலுவலக நண்பர்களிடம், மத்திய உணவின் போது பகிர்ந்துகொண்டேன். அதில் ஒரு பெண், மேகாலயாவில் காசி பழங்குடியை சேர்ந்தவள். சற்றும் ஆச்சரியபடாமல் , ‘ஆம் , எங்கள் பழக்கமும் அப்படித்தான். அந்த மூன்று நாட்களுக்குள் இறந்தவருடைய ஆவி வீட்டை விட்டு செல்லும். அதற்காக நாங்கள் வாசல் படியில் சாம்பல் தூவி வைத்திருப்போம். அங்கு இறந்தவருடைய காலடி தெரியும். அப்போது ஆவி வெளியேறிவிட்டது என்று புரிந்துகொள்வோம்’ என்றாள். எத்தனை சுவாரஸ்யமான விஷயம். நம்மை சுற்றி தெரிந்துகொள்ள எங்குதான் கதைகள் இல்லை என்று நினைக்க வைத்தது!

உலகம் எத்தனை குரூரமானதாக இருந்தாலும், அ.மு-வின் கதைகள் மனதைப் பிழிந்து மென்னடைக்கும் சோக முடிவுகளுடன் இருப்பதே இல்லை. எல்லாவிடங்களிலும் நம்பிக்கையும் புன்னகையும் இருந்துகொண்டே இருக்கின்றன. அதே சமயம் அவை வெறும் உணர்ச்சிப் பெருக்கும் இல்லை. வாழ்க்கையின் இயல்பான ‘கதி’ மீது நம்பிக்கை கொண்டவை; அதன் விசித்திரங்கள் மீது தீராத ஆர்வம் கொண்டவை. அசோகமித்திரன் அவர்களின் கதைகளில் இருப்பதுபோல, நம்மை சுற்றிய அன்றாடத்தை, இறகு போல வேறு ஒரு தளத்திற்கு எழுப்பி சென்றுவிடுகிறார். ஆனால், அ-மி யின் கதைகளின், எழுத்தாளனின் குரலும் ஒரு கதாபாத்திரமாகிவிடும். அமு வின் கதைகளில், கதைசொல்லியாக அவரது மென்மையும் புன்னகையும் எங்கும் நிறைந்திருக்கின்றன.அவரது கதைகள், அவரது கடைசி சொல்லுக்காக இன்னும் இன்னும் காத்திருக்க வைக்கின்றன!

2 Replies to “தீராத கதைசொல்லி”

  1. மிக நல்ல விமர்சனம் நான் தனித்தில்லை என்ற உணர்வோடு உலகெங்கும் இருக்கும் மக்களை தேசம், இனம், மொழி ஆகியவற்றிருக்கு அப்பால் நம்மவரி என்று உணர வைக்கும் கதைகள்தான் அ.முத்துலிங்கம் அவர்களின் கதைகள்.

    ம.பத்மநாபன்
    கோவை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.