ஷோபாசக்தியுடன் ஒரு மாலை

shoba-shakti_3
இன்று நான் நரிமுகத்தில் விழித்திருக்கிறேன். எழுத்தாளர் ஷோபாசக்தியுடன் பொழுதுபோக விதிக்கப்பட்டிருந்திருக்கிறது. நான் ஷோபாசக்தியின் எழுத்துகளில் இதுவரை வாசித்திருப்பவை ஜெயமோகன் இலங்கையில் நடந்தது இன அழிப்பு அல்ல என்று எழுதியிருந்த கட்டுரையை அவர் கேள்விகேட்டிருந்த ஒரு கட்டுரை, கண்டிவீரன் என்றொரு சிறுகதை இவ்விரண்டுமட்டும்தான். நவீனத்தமிழிலக்கியத்தின் முக்கியமான படைப்பாளி இவர் என்பதை இன்று அனைவரும் ஒரேகுரலில் ஏற்றுக்கொள்கிறார்கள்.
காலையில் தேசிய கலைகள் கழகம் நடத்தும் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் விழா (4 முதல் 13ம் தேதிவரை, நவம்பர் 2016) வின் ஓர் அங்கமாக விமர்சனத்தைக் குறித்த ஒரு கலந்துரையாடலுக்குச் சென்றுவிட்டு, பெனின்சுலா பிளாசாவில் உள்ள ‘கறிவில்லேஜ் வாழையிலை’ உணவகத்தில் ஷாநவாஸ், எம்கேகுமார், அருண்மகிழ்நன், சுபா ஆகியோருடன் சாப்பிட்டு மேசை உரையாடலில் இருக்கும்போது அங்கு எதிர்பாராமல் ஷோபாசக்தியும் சாப்பிட வந்தார். அவருக்கு 49 வயதென்று எனக்கு நம்பவியலவில்லை.
வெகு இயல்பாக உரையாட ஆரம்பித்த சக்தியின் கண்கள் அலைபாய்ந்தபடியே இருந்தன. கைகளில் தேநீர் கிளாசை எடுப்பதும் உறிஞ்சுவதும்கூட ஒரு பதட்டத்திலேயே நடந்ததுபோலத்தான் எனக்குத்தெரிந்தது. அது அவரது புலிவாழ்க்கையின் எச்சமாக இருக்கக்கூடும் என்பது என் ஊகம். இங்கு தேநீர் மட்டும்தான் கிடைக்கும் என்று எம்கே குமார் சொன்னபோது புரிந்துகொண்டவர் தான் பகலில் குடிப்பதில்லை என்றார். ஹேங் ஓவருக்காக அடுத்தநாள் காலையில் கொஞ்சம் குடிப்பது கணக்கில்வராது என்பது அவர் கருத்து. அதை எங்க ஊரில் ‘தெளிதண்ணி’ என்போம் என்றேன் நான். கேட்டு சிரித்துக்கொண்டார்.
யாழ்ப்பாணத்திலிருந்து பாரீசில் குடியேறி 23 வருடங்களாக வாழ்ந்துகொண்டிருப்பதால் அதைப்பற்றிய கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. பாரீசிலிருக்கும் பாண்டிச்சேரி தமிழர்கள், இலங்கைத்தமிழர்கள் இவர்களுக்கிடையே உள்ள ஒவ்வாமை குறித்து பதில்சொல்ல வந்தவர், “ரெண்டுபேருமே வரும்போது நாலு பேண்ட் நாலு சட்டை ஒரு லிஃப்கோ டிக்‌ஷ்னரியோட வந்தவங்கதான்” என்று ஆரம்பித்து மேலே விளக்கிக்கொண்டுபோனார். உங்கள் அடையாளம் என்ன என்ற கேள்விக்கு யோசித்துவிட்டு, “தெரியல…அப்படி எதுவும் யோசிக்கல..என் நண்பன் ஒரு புத்தகம் எழுதியிருந்தான். அதோட பின்னட்டையில் ஆசிரியர் குறிப்பாக அவன் பெயர், ஊர் யாழ்ப்பாணம் ஆகிவற்றைப்போட்டுவிட்டு அடுத்ததாக மேலதிக விவரம் எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் கிடைக்கும் என்று போட்டிருந்தான். என்னுடைய அடையாளமும் அந்தமாதிரிதான் என்றார்”.
அப்போதே அவருடைய பதில்கள் அனைத்தும் உடனடியாக, மேலோட்டமாக ஒரு சிரிப்பைக் கிளப்பத்தக்கதாயும் அதைத்தொடர்ந்து மெல்லமாக, ஆழமான சோகத்தை விதைக்கத்தக்கதாகவும் இருந்ததை உணர்ந்தேன்.
மாலை 5:30க்கு கவிஞர் நெப்போலியன் ஷோபாசக்தியுடன் உரையாடும் ‘ஆன்மாவின் அகதி’ நிகழ்ச்சிக்கு சென்றேன். ஒருமணி நேரம் நடந்த நிறைவான நிகழ்ச்சி. அவர் நினைவில் நிற்கக்கூடிய துரோகங்களும் விசுவாங்களும் குறித்து நெப்போலியன் கேட்டபோது தமிழீழம் மலரப்போகிறது என்று வாக்குறுதிகொடுத்து புலிகளுக்காக ஆட்கள் சேர்த்ததை தமிழ் மக்களுக்குத் தான் செய்த துரோகமாகச் சொன்னார். விசுவாசம் தனக்கு எம்ஜிஆர், பிரபாகரன் இருவர் மேலிருந்ததாகக் கூறினார்.
தான் ஏன் பாரீஸைத் தேர்ந்தெடுத்தேன் என்றால் அப்போது எனக்கு ஒரு போலி பிரான்ஸ் பாஸ்போர்ட்தான் கிடைத்தது அதனால்தான் என்றார். ஒருமனிதன் மூன்று மூலகங்களால் ஆனவன்; ஆன்மா, உடல், பாஸ்போர்ட். ஆன்மா, உடல் சிதைந்தாலும் பாஸ்போர்ட் இருந்தால் எந்த எல்லையையும் தாண்டமுடியும் என்று அவர் வாசித்ததைப் பகிர்ந்துகொண்டார். தன்னிடம் தற்போது சிதைந்த உடலும், போலி பாஸ்போர்ட்டும் ஆனால் இலக்கியத்தால் காக்கப்பட்ட ஆன்மாவும் இருப்பதாகச்சொன்னார்.
அரங்கத்திலிருந்து வந்த கேள்விகளுக்கு சக்தி அளித்த பதில்கள் கூர்மையானவை; முக்கியமானவை.
முதலில் ஆன்மா(?) குறித்து எழுந்த ஒரு தத்துவார்த்தமான கேள்விக்கு இது ஜெயமோகனிடம் கேட்கவேண்டிய கேள்வி என்று பதிலளித்து அடுத்தகேள்விக்குப் போய்விட்டார்.
ஒருபதிலின்போது தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்களிடம் நெருக்கமான தொடர்பிருப்பதாகச்சொல்லி சாரு, எஸ்வி ராஜதுரை, மோகன் இன்னும் சில பெயர்களையும் சொன்னார். மதுவருந்தும் பழக்கமுள்ள அத்தனை எழுத்தாளர்களிடமும் தனக்கு நல்ல தொடர்புண்டு என்றார்.
போருக்குப்பிந்தைய ஈழ இலக்கியம் மொத்தமாகவே போர்தொடர்பான இலக்கியமாகவே ஆகிவிட்டதே என்ற கேள்விக்கு நாற்பது வருடங்களாகப் போரிலேயே பிறந்து, வாழ்ந்தவன் வேறு எதைப்பற்றி எழுதுவான் என்றார்.
லட்சக்கணக்கில் உயிர்ப்பலி வாங்கிவிட்ட போர் தோல்வியில் முடிந்ததால் அவ்வளவு இழப்பும் வீணாகிவிட்டதே, மீண்டும் என்றாவது போர் துளிர்க்குமா என்ற கேள்விக்கு – எங்கள் பிள்ளைகளும் உங்கள் பிள்ளைகளைப்போல் பள்ளிக்குப் போகவேண்டும், மாலையில் நாங்கள் வீட்டில் குடும்பத்துடன் அமர்ந்து டிவி பார்க்கவேண்டும் இதெல்லாம்தான் எங்களுக்குவேண்டும். 12 வயதில் சயனைட் குப்பியைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, சத்தத்தைவைத்தே தலைக்குமேலே செல்லும் விமானம் என்ன ரகம் என்று சொல்லும் வாழ்க்கை வேண்டாம் என்று அவர் சொன்னபதில்தான் இன்றைய ஈழத்தின் குரலாக நான் நினைக்கிறேன்.
நான் நினைப்பது என்னவென்றால் – போரும் வீரமரணமும் மற்ற நாட்டுத்தமிழர்களுக்கு ஒரு மாபெரும் கனவு. சாகசம். சாதாரண வாழ்க்கையை வெந்ததைத்தின்று விதிவந்தால் சாவதாக கீழாக எண்ணிக்கொண்டு போரின் கற்பனைப் பரவசங்களுக்கு ஆளாகிறோம். ஏனெனில் போர் என்னமாதிரி மிருகம் என்று நமக்குத்தெரியாது. ஆனால் போரையே தங்கள் தினப்படி வாழ்க்கையாக சுமார் நாற்பது வருடங்கள் வாழ்ந்து நைந்துபோன கனவுகளையும், தொலைந்துபோன உறவுகளையும் கொண்டவர்களுக்கு, நிம்மதியாகக் குடும்பத்துடன் உண்டுறங்கி வெடிச்சத்தம் கேட்காத வாழ்க்கை வாழ்வதே மாபெரும் சொர்க்கம்.
இலங்கையிலிருந்து ஐரோப்பாவின் பல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் அடுத்த தலைமுறை தமிழை ஒரு மொழியாக மட்டுமே அறிந்து இருக்கும் அதுவும் தமிழ்சினிமாவில் வருவதைப்போன்ற பேச்சுவழக்கில் என்றும் அவர்கள் மனதளவில் அவ்வந்த நாடுகளின் பிரஜைகளாகத்தான் இருப்பார்கள் என்றும் சொன்னவர் அதைத்தவிர்க்க முடியாது என்றார். பாரீஸில் வாழும் தன் உறவினர் குழந்தைகளை உதாரணமாகக் காட்டினார். தமிழ்சினிமாவைப்பார்த்து வளைகாப்பு போன்ற ஈழத்தமிழரிடத்தில் வழக்கத்திலில்லாத பண்பாட்டுக்கூறுகளும் மெல்ல ஊடுருவி வருவதைச்சொன்னார்.
என்னதான் குறைசொன்னாலும் பலநாட்டுத் தமிழர்கள் ஐம்பதாண்டுகள் கழித்து சந்திக்கையில் அவர்களுக்குள் இருக்கப்போகும் ஒரே பொதுவான விஷயம் தமிழ்சினிமாவாகத்தான் இருக்கும் என்பது என் கணிப்பு. அந்தவகையில் இலக்கியத்தைவிட சினிமாவைக் கவனமாகப் படைப்பது நம் எதிர்கால சந்ததிகளுக்கு நல்லது.
ஒரு போராட்டத்தில் நம் ஆயுதத்தை எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள் என்பதை சக்தி ஏற்றுக்கொள்ளவில்லை. உலகத்தில் பல இனங்கள் சேர்ந்து வாழும் நாடுகளில் எல்லாம் சிறிதும் பெரிதுமாக பிரச்சனைகள் இருக்கத்தானே செய்கின்றன? அவை எவ்வாறு புரட்சியின்றி அணுக்கமாகச் செயல்பட்டுத் தீர்த்துக்கொள்ளப்படுகின்றன? அதே வழியில் ஈழமும் தீர்த்துக்கொள்ளட்டும் என்பதையே தன் விடையாக முன்வைக்கிறார்.
பலமுறை மரணத்துக்கு அருகில் சென்றும் பிழைத்துக்கொண்டதற்கு கடவுளை ஒரு காரணமாகத் தான் நினைக்கவில்லை என்றவர் அவை தற்செயல்களே என்றார். நான்கு வருடங்கள் பாரதியார் கவிதைகள், பைபிள் இவ்விரண்டை மட்டுமே வாசித்துக்கொண்டிருந்ததை நினைவுகூர்ந்தார்.
நானும் ஒரு கேள்வி கேட்டேன். ஆயுதப்புரட்சி ஆகாவழி என்று புலிப்போராட்டத்தின் ஆரம்பகட்டத்திலேயே உணர்ந்தபின்னும் அடுத்ததாக ஏன் கம்யூனிஸத்துக்குள் போனீர்கள்? அங்கும் change comes by force என்ற தத்துவம்தானே முன்வைக்கப்படுகிறது என்று. ஆமாம் என்று அதற்கு பதிலளித்த ஷோபாசக்தி கம்யூனிஸத்திலிருந்தும் தான் முன்பே விடுபட்டுவிட்டதாகச்சொல்லி தற்போது காந்தியை வாசித்துவருகிறேன், முடிவைக்குறித்த கவலையின்றி வழி செம்மையானதாக இருக்கவேண்டும் என்ற கவலைகொண்ட அவரது தத்துவமே சிறந்ததாகப்படுகிறது என்றார். சிலிர்த்துப்போனது எனக்கு.
Change comes by force என்ற மார்க்ஸிய சித்தாந்தத்திற்கு ஜெயகாந்தன் ஒருமுறை இங்கு force என்பதற்கு பலவந்தமாக என்ற பொருளல்ல; மக்கள் சக்தி என்ற பொருள் என்றார். அதாவது மாற்றம் மக்கள் சக்தியைத் திரட்டுவதால் வரும் என்ற அர்த்தத்தில். அது ஒரு பழைய அறிவிஜீவி கம்யூனிஸ்ட்டின் திறமையான விளக்கமாகத்தான் எனக்குப்படுகிறது. ஒரிஜினலான அர்த்தம் நேரடியானதுதான். அதை ஷோபாசக்தி நிராகரித்துவிட்டதில் எனக்கு மகிழ்ச்சி.
ஷோபாசக்தியின் எழுத்துக்களை சலிக்கும்மட்டும் வாசித்துத் தள்ளிவிடவேண்டும் என்ற முடிவோடுதான் வெளியேவந்தேன்.

One Reply to “ஷோபாசக்தியுடன் ஒரு மாலை”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.