காவிரியிலிருந்து கங்கை வரை – மோட்டார் சைக்கிள் பயணம்

முன்சொல்

மோட்டார் சைக்கிளுடனான பந்தம் எனது எட்டு வயதிலிருந்து துவங்குகிறது. நாங்கள் அப்போது பாபநாசத்தில் குடியிருந்தோம். காவேரி தாலாட்டும் பிரதேசம். அழகிய சிறு வயல்களில் நெல்லும், கரும்பும், மல்லிகையும், சாமந்தியும் பாகலும் காவேரி நீரருந்தி மணியாக சோலையாக மலராக காயாக பெருகும் நிலக்காட்சியை பல நாட்கள் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கண்டிருக்கிறேன். பாபநாசத்திலிருந்து ராஜகிரி, கபிஸ்தலம், சுந்தர பெருமாள் கோவில், சுவாமிமலை மற்றும் கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு அப்பாவின் ஹீரோ ஹோண்டா சிடி 100 பைக்கில் பெட்ரோல் டேங்க் மேல் அமர்ந்து பயணிப்பேன்.செல்லும் ஊர்களைப் பற்றி அவற்றின் வரலாறு பற்றி நாட்டு நடப்புகள் குறித்து அப்பா என்னிடம் ஏதேனும் கூறியபடி வருவார். நான் முக்கியம் என நினைக்கும் விஷயங்கள் குறித்து பேசுவேன். பல காட்சிகள் நினைவில் பதிந்துள்ளன. காவேரியில் புதிதாக தண்ணீர் வரும். வெம்மணல் பரப்பின் மீது நீர் பாயும் போது மணல் துகள்களுக்கு இடையே உள்ள காற்று குமிழிகளாக கொப்பளிக்கும். குபுக் குபுக் என்ற சத்தம் பேரோசையாக எழும். ஆற்றில் பள்ளமாக உள்ள பகுதிகளில் நுரைக்கும் புது வெள்ளம் பாய்ந்து சென்று நிரம்பும். சிறு கிராமங்களின் கடைத்தெருக்களில் மக்கள் கூடி நின்றிருப்பர். காவேரி, குடமுருட்டி, திருமலைராஜன், அரசலாறு மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரைகளில் நாங்கள் இருவரும் பைக்கில் பயணிப்போம். கொள்ளிடக் கரையில் வெல்லம் காய்ச்சுவார்கள். வெல்லத்தின் மணம் அப்பிராந்தியம் முழுவதும் இருக்கும். மிகப் பெரிய அண்டாக்களில் வெல்லம் காய்ச்சப்பட்டு பாகாக இருக்கும் பதத்தில் கண்டிருக்கிறேன். அங்கு பணி புரியும் மனிதர்கள் எங்களை இன்முகத்துடன் வரவேற்றிருக்கின்றனர். பிரியத்துடன் உரையாடியிருக்கின்றனர். எனக்கு உண்ண வெல்லம் தருவார்கள். அம்மனிதர்களின் முகங்கள் துல்லியமாக நினைவில் இருக்கிறது. அவர்களையும் அவர்களைச் சந்தித்த பொழுதினையும் இப்போதும்  நினைத்துக் கொள்கிறேன். சக மனிதன் மீது கொள்ளும் பரிவிற்கான உதாரணமாய் அவர்கள் உள்ளனர். சக மனிதர்கள் மீதான பிரியமும் அக்கறையும் எனக்கு அங்கிருந்தே துவங்கியது. பின்னர் மிதிவண்டி ஓட்ட கற்றுக் கொண்டேன். தந்தையுடன் பயணித்த அனுபவம் இருந்ததால் நாங்கள் குடியிருந்த பகுதியிலிருந்து அருகிலும் தொலைவிலும் உள்ள பகுதிகளுக்கு சைக்கிளில் செல்வேன். கண்ட புதிய பகுதிகளை வீட்டில் வந்து சொல்வேன். ராஜகிரியில் உள்ள திருமலைராஜன் தலைப்பிற்கு சென்று குடமுருட்டி திருமலைராஜன் ஆறுகள் பிரிந்து செல்வதைக் காண்பேன். பொறுமையுடன் அமைதியாக உறுதியாக நடந்து செல்லும் சமவெளி நதிகள் பால்யத்தின் நினைவுகளின் பதிவுகளாக உள்ளன.

kaviri-river-today-500-111

பாபநாசத்திலிருந்து மயிலாடுதுறை வந்தோம்.ஊரின் கிழக்குக் கோடியிலிருந்தது எனது வீடு.ஊரின் மேற்கு கோடியில் ரெயில்வே சந்திப்பும் மேம்பாலமும்.சனி ஞாயிறு விடுமுறை தினங்களில் அப்பா வெளியில் சென்றவுடன் நானும் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பி விடுவேன்.வேகவேகமாக மிதித்து ரயிலடி செல்வேன்.பிளாட்ஃபாரங்களில் அலைவேன்.ரயில் வருவதை நிற்பதை புறப்பட்டுச் செல்வதைக் காண்பேன்.பாஸஞ்சர் வண்டிகள் மீது தான் எனக்கு நிரம்ப ஆர்வம் இருந்தது.ரயில் பெட்டியின் ஒவ்வொரு அறையும் ஒரு வீடு போல தோன்றும்.ரயில் கிளம்பும் வரை அதிலேயே இருப்பேன்.பிளாட்ஃபாரத்தில் ஒரு பெரிய அரசமரத்தடியில் ஓர் ஆனைமுகன் சிலை இருக்கும்.அங்கு சைக்கிளை வைத்து விட்டு சிறிது நேரம் ஓய்வெடுப்பேன்.அரச இலைகள் காற்றில் சலசலக்கும் வரப்போகும் ரயிலின் எஞ்சின் ஓசை தொலைதூரத்தில் கேட்கும் ஒரு சிலரே நடமாடும் அந்த ரயில்வே பிளாட்ஃபாரம் மனதில் ஒரு படிமமாக உள்ளது.வீட்டிலிருந்து ரயில் நிலையம் சென்று வந்து விட்டாலே ஏதோ அசாத்தியமானதை செய்து விட்டதாகத் தோன்றும்.நகரின் பிரதான சாலைகள் மட்டுமன்றி சிறு சாலைகளினூடாகவும் பயணிப்பேன்.விரவிக் கிடக்கும் நெல் வயல்களினூடாக பயணித்து புதிய ஊர்களுக்குச் சென்றடைவேன்.போன புதிய ஊர்களைப் பற்றி வீட்டில் வந்து சொல்வேன்.வார இறுதி நாட்களில்காலாண்டு அரையாண்டு விடுமுறையில்கோடை விடுமுறையில் என எப்போதும் அலைவேன்.

ஐந்தாம் வகுப்பு கோடை விடுமுறையில் கல்கியின் பொன்னியின் செல்வனை வாசித்தேன்.’ஆதி அந்தம் இல்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி பயணிக்குமாறு வாசகர்களை அழைக்கிறேன்என்ற முதல் வரியிலிருந்தே அப்புனைவுக்குள் நுழைந்தேன்.வந்தியத்தேவனும்,அவனது குதிரையும்,வீர நாராயண ஏரிக்கரையும்,குடந்தை ஜோதிடரும்,வானதியும்,பூங்குழலியும் மனதுக்கு மிகவும் பிரியமானவர்கள் ஆனார்கள்.தினமும் வீட்டுக்கு வெளியில் அலைதல்வீட்டில் இருக்கும் போது கற்பனை உலகில் சஞ்சாரித்தல் என்பது வழக்கமாகிப் போனது.வீர நாராயண ஏரி,கடம்பூர் மாளிகை,ஆழ்வார்க்கடியான் நம்பி,அரசலாற்றங்கரை,கெடில நதி,குழகர் கோவில் ஆகியவை மிகப் பழக்கமானவையாயின.பொன்னியின் செல்வன் வாசித்ததும் பலமுறை மீண்டும் வாசித்தேன்.தந்தை ஒருமுறை என்னை ஒரு கல்லூரிக்கு அழைத்துச் சென்றிருந்தார்.செண்டர் ஸ்டாண்ட் போட்ட எங்கள் ஹீரோ ஹோண்டா மீது ஏறி அமர்ந்து பொன்னியின் செல்வன் வாசித்துக் கொண்டிருந்தேன்.அப்போது அங்கே சில கல்லூரி ஆசிரியர்கள் வந்தனர்.நான் வாசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சிறு பையனாயிருக்கிறாயே என்ன வகுப்பு படிக்கிறாய் என வினவினர்.ஆறாம் வகுப்பு என பதில் சொன்னேன்.உன்னால் படித்து புரிந்து கொள்ள முடிகிறதா என்றனர்.நான் புத்தகத்தை அவர்கள் கையில் கொடுத்தேன்.நீங்கள் புத்தகத்திலிருந்து எந்த கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள்;நான் பதில் சொல்கிறேன் என்றேன்.ஒருவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சரியாக சொன்னேன்.இன்னொருவர் சோழர் பரம்பரையை வரிசையாகக் கூற முடியுமா எனக் கேட்டார்.விஜயாலய சோழன் தொடங்கி வரிசையாகச் சொன்னேன்.சற்று கடினமாகக் கேளுங்கள் என்று ஒருவர் சொன்னார்.சோழ அரசர்கள் சந்தித்த போர்கள் பற்றி ஒருவர் கேட்டார்.அதற்கும் பதில் சொன்னேன்.கல்லூரி ஆசிரியர்கள் மிகவும் ஆச்சர்யப்பட்டனர்.அதற்குள் அப்பா வந்து விட்டார்.அப்பாவிடம் என்னைப் பற்றி பாராட்டிச் சொன்னார்கள்.

பள்ளியில் படித்த ராபர்ட் ஃபிராஸ்டின் கவிதை வரிகள் ஒரு மந்திரம் போல் மனதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

எனக்கான கடமை காத்திருக்கிறது

நான் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டும்

அவனுக்காக காத்திருந்த கடமைகள் என்ன என எண்ணுவேன்.ஓர் அழகிய பகுதியைக் கடந்து செல்வது என்பது எவ்வளவு துயர் மிக்கது என எண்ணிக் கொள்வேன்.ராபர்ட் ஃபிராஸ்டின் கவிதை வரிகளை ஒரு தாளில் எழுதி என் மேஜை மேல் வைத்திருப்பேன்.

எனது பள்ளிப் பிராயத்தில் சுவாமி விவேகானந்தர் சிகாகோ சொற்பொழிவுகளுக்குப் பின் தாயகம் திரும்பியதன் நூற்றாண்டு விழா நடைபெற்றது.அலங்கரிக்கப்பட்ட விவேகானந்தர் ரதம் தமிழகம் முழுதும் வந்தது,மயிலாடுதுறையில் நண்பர்களுடன் சென்று வரவேற்றேன்.அதனுடன் இணைந்து கொண்டு பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன்.ரதத்துடன் பயணித்து திருவாவடுதுறை மடத்திற்கு சென்றேன்.திருமடத்தின் சார்பில் விவேகானந்தர் ரதத்துக்கு வரவேற்பு தரப்பட்டது.ரதம் ஒவ்வொரு கிராமமாக சென்றது.ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் இளநீரும் மோரும் கொடுத்தனர்.அது மிகப் புதிய அனுபவமாயிருந்தது.

பள்ளி இறுதி வகுப்பு முடித்ததும் தந்தையின் சிடி 100 வாகனத்தை ஓட்டுவதற்கான பயிற்சியை இரண்டு நாட்களில் அடைந்தேன்.பழகுநர் உரிமமும் பின் ஓட்டுநர் உரிமமும் பெற்றேன்.கல்லூரி நாட்களில் ஒரு புதிய உலகம் திறந்ததாக உணர்ந்தேன்.வாகனத்தை இயக்கியவாறு சிதம்பரம்,கும்பகோணம்,தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டிணம்,வேதாரண்யம்,திருச்சி என பல ஊர்களுக்கும் செல்வேன்.வீட்டிலிருந்து கிளம்பி ஏதேனும் ஓர் ஆலயத்திற்குச் சென்று நாள் முழுக்க அங்கு அமர்ந்திருப்பேன்.மண்டபங்களும்,சிற்பங்களும்,கோபுரங்களும் நிறைந்த ஆலயங்கள் தனிமையால் நிரம்பியிருக்கும்.வௌவாலின் நெடி நிரம்பிய பேராலயங்களில் அகல் விளக்கின் ஒளியில் அமர்ந்திருக்கும் கருவறைத் தெய்வங்களின் முன்னால் அமர்ந்து கொள்வேன்.கொந்தளிப்புகளும் உள எழுச்சிகளும் வடிந்து மனம் அமைதி கொள்ளும்.தஞ்சைப் பிரதேசம் சோழர் கட்டிடக் கலையின் மிக அதிக ஆலயக் கட்டுமானங்களைக் கொண்டது.ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டருக்கும் ஓர் ஆலயம் இருக்கும்.

மாலை நேரங்களில் வண்டியை எடுத்துக் கொண்டு மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ஆலமரத்தடி மற்றும் அரசமரத்தடிகளுக்கு செல்வேன்.யோகத்தில் ஆழ்ந்த முனிகளைப் போல மண்ணில் அமர்ந்து விண்ணில் விரிந்து நிற்கும் அம்மரங்களிடம் சென்று அப்பிரமாண்டங்களுக்கு முன்னால் ஒரு எளியவனாக உணர்ந்து அவற்றின் மடியில் அமர்ந்து கொள்வேன்.அவற்றின் பரந்து விரிந்த நெடிய கிளைகளில் சிட்டுக்களும் மைனாக்களும் கரிச்சான்களும் அமர்ந்திருக்கும்.இருளில் மின்மினிகள் மரத்தைச் சுற்றி ஒளிவட்டமாய் ஒளிரும்.சோர்வாக உணரும் போது துயருற்றிருக்கும் போது அங்கே சென்று சில மணி நேரம் அமர்ந்தால் சோர்விலிருந்தும் துயரிலிருந்தும் விடுபடுவேன்.சோழ சக்கர நல்லூர்,மொளப்பாக்கம்,வடகரை,மறையூர்,மல்லியம் மற்றும் திருவாவடுதுறை ஆகிய ஊர்களில் உள்ள ஆலமரங்கள் மிக மிகப் பெரியவை.ஆலயங்கள்,மரத்தடிகள்,கடற்கரைகள் என எங்கு சென்றாலும் மோட்டார் சைக்கிளில் செல்வது என்பது பழக்கமானது.

பின் நாட்களில் படித்த ராகுல்ஜியின் ஊர்சுற்றிப் புராணமும்,எழுத்தாளர் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் முதலான படைப்புகளும்,அவர் விகடனில் எழுதிய சங்கச் சித்திரங்களும் எஸ்.ராமகிருஷ்ணனின் உப பாண்டவமும் துணையெழுத்தும், ஜெயமோகன் தன் இணையதளத்தில் எழுதிய பயணக் கட்டுரைகளும் ஒரு பெரும் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற வேட்கையை உருவாக்கின.

சில ஆண்டுகளுக்கு முன்னால்,ஆனந்த விகடன் இதழில் சுற்றுலா சிறப்பிதழ் என்ற இணைப்பில் பெங்களூரைப் பூர்வீகமாகக் கொண்ட இரு பெண்களைப் பற்றிய குறிப்பைக் கண்டேன்.அவர்கள் ராயல் என்ஃபீல்டு வாகனத்தில் இந்தியா முழுமையும் சுற்றி வந்தனர் என்ற தகவலை அறிந்தேன்.அவ்வாறு பயணிக்க விரும்புபவர்களுக்கு அவர்கள் ஒரு அறிவுரையை வழங்கியிருந்தனர்: காலை 6 மணிக்கு பயணத்தை துவங்க வேண்டும்.மாலை 6 மணிக்கு பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.எக்காரணம் கொண்டும் இரவில் பயணிக்கக் கூடாது.வாய்ப்பு அமையுமானால் அப்படி ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற பேராவல் மனதில் உருவானது.

மோட்டார் சைக்கிள் எவ்வகையான பாதைகளிலும் செல்வதற்கு ஏற்றது.தேசிய நெடுஞ்சாலைகள்,மாநிலச் சாலைகள்,கிராமத்துச் சாலைகள்,வயல்வெளிகள்,மலைப்பாதைகள்,கடற்கரைகள் என பலவிதமான நிலப்பகுதிகளிலும் பயணிப்பதற்கு உகந்தது.எளிதில் நிறுத்த முடியும்எளிதாக மக்களைத் தொடர்பு கொள்ள முடியும்.பயணத்திட்டத்தில் சிறு மாற்றங்கள் செய்து கொள்ள உதவிகரமாயிருக்கும்.இவை அனைத்துக்கும் மேலாக மோட்டார் சைக்கிளே எனக்கு திருப்தியாக உள்ளது.

இராமநாதபுரம் திரு.மா.ஜீவா என் நெருங்கிய நண்பர்.ஓவிய ஆசிரியர்.இலக்கிய வாசகர்.நுண்கலைகளில் ஈடுபாடு கொண்டவர்.அவரும் நானும் 2015ம் ஆண்டுபாரத் தர்ஷன்என்ற பெயரில் 4000கி.மீ நீண்ட மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டோம்.பதினாறு தினங்கள் நிகழ்ந்த அப்பயணம் பலவிதங்களில் எங்களை மாற்றியமைத்தது.பாரத நிலம் காண முற்பட்ட எங்கள் முயற்சி எங்கள் ஆளுமையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது மிகையல்ல.பாரதம் மிகப் பிரம்மாண்டமான ஒரு தேசம்.அதனை முழுமையாய் காண்பது என்பது சாத்தியமல்ல.நமது பார்வைகள் விரிவாக விரிவாக புரிதல்கள் விரிவாக விரிவாக அழகுணர்ச்சி விரிவாக விரிவாக பாரதமும் விரிவாகும்.உண்மை ஒன்றே;அது பலவிதங்களில் கூறப்படுகிறது என்னும் வேத வாக்கியம் போன்றது பாரதம்.உலகின் இயல்பும் அதுவே!

பயணம் முடிந்து ஊர் திரும்பியவுடன் பயண அனுபவத்தை எழுதிப் பார்த்தேன்.பயணத்துக்கு சமமான அனுபவமாய் அது இருந்தது.மின்னஞ்சலில் அதனை நண்பர்களுக்கு அனுப்பினேன்.’பாரத் தர்ஷன்சொல்வனத்தில்(solvanam.com/?p=40385) பிரசுரமானது.பயணக்கட்டுரையை வாசித்த பலர் தொடர்பு கொண்டனர்.பிரியத்தையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.எனக்கு கூச்சமாகக் கூட இருந்தது.இத்தனை ஆண்டுகள் பைக்கில் பயணித்திருந்தாலும் இன்னும் எனது மாவட்டத்திலேயே செல்ல வேண்டிய ஊர்களும் பார்க்க வேண்டிய இடங்களும் கணிசமாக இருக்கக் கூடும்.தமிழ்நாட்டில் நான் சென்றிராத மாவட்டங்களே சில உள்ளன.ஓர் எளிய பயண ஆர்வலனாக மட்டுமே என்னைப் பற்றி நான் எண்ணிக் கொள்கிறேன்.அலைதலையும் பகிர்தலையும் வாழ்க்கையாகக் கொண்டவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

2015ம் ஆண்டு நாங்கள் நிகழ்த்திய பயணத்திலும் அதற்கான ஆயத்தங்களிலும் ஏற்பாடுகளிலும் எங்கள் திட்டமிடலைத் தாண்டிய பல விஷயங்கள் நிகழ்ந்தன.வண்டி புறப்பட்டு காட்சிகள் மாறும் போது யதார்த்த சூழ்நிலையை ஏற்றுக் கொள்வதை பழக்கமாக்கிக் கொண்டோம்.எங்களுக்குள் ஒருங்கிணைப்பு சாத்தியமானதால் பல விஷயங்களை இலகுவாகச் செய்து கொண்டோம்.நெருங்கிய நண்பர்களாயினும் புதிய சூழல்களில் இருவர் இணைந்து செல்லும் போது முரண்களும் அபிப்ராய பேதங்களும் எழுக்கூடும் என்ற பிரக்ஞை இருவரிடமும் இருந்தது.எனினும் அவ்வாறான நிலை ஏற்படாமல் இனிமையாகவே பயணம் அமைந்தது.தேவ்கட்டிலிருந்து கோலாப்பூர் பயணித்த போது அந்தியின் மழை,மலைப்பாதை,அழகிய சிறு கிராமங்கள் இவற்றால் ஜீவா தூண்டப்பட்டு உணர்ச்சிகரமாகி நிகழ்த்திய விபத்தால் அவரது கைவிரல் எலும்பு முறிவுக்கு ஆளான போது கிட்டத்தட்ட 2500 கி.மீ மேல் நான் மட்டுமே வண்டி ஓட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.எங்கள் நட்பாலும் பிரியத்தாலும் புரிதலாலும் அதனை எளிமையாகத் தாண்டினோம்.இன்று எவ்வாறான சூழலையும் இணைந்து எதிர்கொள்ளும் திறனைப் பெற்றுள்ளோம்.

இந்தியா என்பது எவ்வளவு பெரியது!தானியங்களும் காய்கறிகளும் வெங்காயமும் குவிந்து கிடக்கும் திருச்சி சந்தை,சரக்குந்து நிறுத்தங்கள்  நிறைந்த சத்தியமங்களம்,கறிக்கடைகள் மலிந்து கிடக்கும் சாமராஜ் நகர்,திபெத்தியர்கள் அதிகம் வாழும் கர்நாடக பொற்கோவில்,புராதானமான சிருங்கேரி,சில்வண்டுகளின் ரீங்காரம் மனதை நிரப்பும் குதிரைமுகே,தென்னைத் தொழிலால் நிறைந்த தும்கூர்,கடற்படையினர் அதிகம் தென்படும் கார்வார்,பணியாளர்களாலும் தொழிலாளர்களாலும் ஆன மட்கவான்,சுற்றுலா பயணிகள் மொய்க்கும் கோவா,நிசப்தமாயிருக்கும் மராட்டிய வாடிகள்,வீதிகள் வெங்காய உருளைக்கிழங்கு மூட்டை குவியல்களால் அடைக்கப்பட்டிருக்கும் கோலாப்பூர் என நாங்கள் கண்ட ஒவ்வொரு பகுதியுமே ஒவ்வொரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறது.இந்த நாடு அதன் பன்மைத்தன்மையை அறிந்தவர்களால்அப்பன்மைகள் இணைக்கப்படும் பொதுச்சரடை உணர்ந்தவர்களால் மட்டுமே வழிநடதப்பட வேண்டும் என்ற புரிதலை நேரடி அனுபவமாக எங்களுக்கு அளித்தது.தேச ஒருமைப்பாட்டுக்கு வாழ்நாள் முழுவதும் உழைத்த மகத்தான ஆளுமைகளைமகாத்மா காந்தி,அம்பேத்கர்,நேரு,ஜெயப்பிரகாஷ் நாரயணன்,ராம் மனோகர் லோகியாஅவர்களின் தொலைநோக்கைதியாகங்களை எண்ணி வியந்தோம்.அடுத்தவனை எதிரியாக எண்ணாமல் தனது வளர்ச்சிக்கு தடையாக எண்ணாமல் நியாயத்துக்கு உட்பட்டு தனது வாழ்க்கைப்பாடை பார்த்துக் கொள்ளும் கோடிக்கணக்கான மக்கள் இங்கே வாழ்கிறார்கள்.இந்த தேசம் அவர்களுக்குரியது.அவர்களின் பொறுமையாலும் சகிப்புத்தன்மையாலும் கட்டமைக்கப்பட்ட தேசத்தில் ஓர் ஆயுதப் போராட்டம் நிகழ வேண்டும் என செயல்படுவர்கள் இந்தியாவிற்கு மட்டுமல்ல மனித குலத்துக்கே விரோதமானவர்கள்.

மனித சக்தி மிகுந்த இத்தேசம் ஒற்றுமையால் இணைக்கப்பட வேண்டும்.உலகம் ஒரு குடும்பம் என்ற உணர்வுடன் வாழ்ந்த தேசம் இது.அரசும் அரசியலும் பொருளாதாரமும் மட்டுமே இத்தேசத்திற்கு பொதுவானதாக இருக்க முடியும் என்ற நிபந்தனை இங்கு இருக்கவேண்டியதில்லை.பயணம் பல கேள்விகளை எங்களுக்குள் எழுப்பியது.அதன் விடைகளையும் சிந்திக்கச் செய்தது.புதுதில்லியில் தீட்டப்படும் திட்டங்கள் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.நிதியை மட்டுமே ஓர் அளவுகோலாகக் கொள்ள முடியுமா என்ற ஐயம் மெக்காராவையும் மன்னார்குடியையும் இணைத்து யோசித்துப் பார்க்கும் போது எழுந்தது.என்னுடைய பார்வையில் குடிமைப் பண்புகளில் தேர்ந்த ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட இளைஞர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் பொது நன்மைக்காக இணைந்து செயல்படுவார்களாயின் நமது தேசம் ஒரு புதிய பாதையில் பயணிக்க முடியும் என்பது மிகையல்ல.

பாரத தரிசனம்

மகாத்மா காந்தி தென்னாப்ரிக்காவில் வாழ்ந்த காலங்களில் அங்கிருந்த தமிழர்களுடன் நெருக்கமான தொடர்பும் பழக்கமும் கொண்டிருந்தார்.காந்தி அடிகளின் தென்னாப்ரிக்க சத்தியாகிரகத்தில் முக்கிய பங்காற்றியவர்கள் தமிழர்கள்.அவர்களின் பழக்கத்தின் விளைவாக தமிழ் எழுத்துக்களை எழுதவும் தமிழ் வாசிக்கவும் ஓரளவு பயிற்சி பெற்றிருந்தார் மகாத்மா.ஒரு தமிழர் காந்தியிடம் ஆட்டோகிராஃப் கேட்ட போது –”நீரில் எழுத்தாகும் யாக்கை”-என எழுதி அதன் கீழ் மோ..காந்தி என கையெழுத்திட்டார்.அது ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்து திருச்சீரலைவாய் ஆறுமுகப் பெருமான் மீது பெரும் பக்தி கொண்டு தருமபுரம் ஆதீனத்தில் மாசிலாமணி தேசிகரிடம் ஞானோபதேசம் பெற்று காசியில் கேதார கட்டத்தில் குமாரசுவாமி மடம் கண்ட குமரகுருபரரின் செய்யுள் வரி.

நீரிற் குமிழி இளமை நிறைசெல்வம்

நீரிற் சுருட்டு நெடுந்திரைகள்நீரில்

எழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னே

வழுத்தாத தெம்பிரான் மன்று.

என்பது முழு செய்யுள்.

ஸ்ரீகுமரகுருபரர் வாழ்வில் மிக முக்கியமான ஊராக விளங்கிய தருமபுரத்தின் தருமபுரீஸ்வரரை வணங்கி காவிரிக்கரையிலிருந்து கங்கைக்கரை வரை செல்லும் எனது மோட்டார் சைக்கிள் பயணத்தைத் துவங்கினேன்.வாகனம் ஹீரோ ஹோண்டா சி.டி டீலக்ஸ்.வாகனத்தை எனது நண்பர் திரு.வெங்கடேஷ் அவர்கள் வழங்கினார்.ஆர்வமும் துடிப்பும் பரவசமும் சென்ற ஆண்டு சென்று வந்த பயணத்தின் அனுபவமும் உடனிருந்தன.

எனினும் ஒவ்வொரு பயணம் துவங்குவதற்கு முன் உள்ள மனநிலை சில தயக்கங்கள் கொண்டதாக இருக்கும்.ஊரில் முடிக்க வேண்டிய பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதா என்ற ஐயம் எழும்.சிறுசிறு உலகியல் பணிகள் கூட விஸ்வரூபமெடுத்து நிற்கும்.புறப்படுவதற்கு ஒரு வாரம் முன்பே செய்ய வேண்டியவற்றை அட்டவணையிட்டுக் கொண்டேன்.ஒவ்வொரு பணியாக செய்து அவற்றை அட்டவணையிலிருந்து நீக்கினேன்.இவைதான் வேலை என முடிவு செய்து அவை முடிந்த பின் ஏற்படும் நிறைவு ஒரு மன நிம்மதியைக் கொண்டு வரும்.அது விடுபடலின் துவக்கம்.ஒரே விதமான வாழ்முறைக்கும் சூழலுக்கும் உடலும் மனமும் பழகியிருப்பதால் ஏற்படும் தடைகளை இவ்வாறான செயல்முறைகள் மூலம் நீக்கிக் கொள்ளலாம் என்பது என்னுடைய புரிதல்.

தருமபுரத்திலிருந்து காவேரியைத் தாண்டி கல்லணைபூம்புகார் சாலையில் சிறிது தூரம் பயணித்தேன்.இச்சாலை தமிழகத்தின் தொன்மையான சாலைகளில் ஒன்று.பூம்புகார் சோழர்களின் துறைமுகமாகவும் உறையூர் தலைநகராகவும் இருந்த போது அவ்விரு நகரங்களையும் இணைக்கும் பொருட்டு காவேரியின் தடத்தையொட்டி அமைக்கப்பட்ட தொன்மையான சாலை அது.கோவலனும் கண்ணகியும்வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பமதுரை சென்ற போது இந்த பாதையின் வழியே சென்றிருக்கக் கூடும்!அச்சாலையில் சிறிது தூரம் பயணித்து மணல்மேடு செல்லும் சாலையை அடைந்தேன்.

இளம்பெண்கள் பேருந்து நிறுத்தங்களில் நகரப் பேருந்துக்காக காத்து நின்று கொண்டிருந்தனர்.மயிலாடுதுறையின் கடைகளிலும் நிறுவனங்களிலும் பணி புரியும் விவசாயக் குடும்பத்துப் பெண்கள்.காலை உணவு உண்டு மதிய உணவு கையில் எடுத்துக் கொண்டு இரவு உணவுக்கு வீடு திரும்பும் வகையிலான பணிகளைப் பார்ப்பவர்கள்.கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள்,கடைகளில் கணக்கர்கள்,பொருள் விற்பனை செய்பவர்கள்.பட்டப்படிப்பு படித்திருப்பர்.கல்லூரி வாழ்வு முடிந்ததும் வாழ்வின் யதார்த்தத்தை உணர வேண்டிய நிர்ப்பந்தம் ஏதேனும் பணிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தை உருவாக்கும்.அதன் பின்னர் ஏதேனும் பணியில் இணைந்து அப்பணி கோரும் திறமைகளை வளர்த்துக் கொள்ள முயல்வர்.தமிழ்நாட்டின் கல்வித்துறை மிகப் பெரியது.மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது இங்கே கல்வி பரவலாக்கப்பட்டுள்ளது.தட்டச்சு,கணிணி ஆகியவற்றுக்கான பயிற்சியையும் தேர்வுகளையும் பள்ளிகளிலேயே அளித்தால் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பெரும் பயன் அளிக்கும்.தட்டச்சும் கணிணி பயிற்சியும் பள்ளிக்கல்வியுடன் இணைந்து  இயங்குமாயின் நல்ல பலன் இருக்கும்.

மணல்மேட்டை அடைந்தேன்.தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான கல்கி.இரா.கிருஷ்ணமூர்த்தி மணல்மேட்டுக்கு அருகில் உள்ள புத்தமங்களம் என்ற ஊரைச் சார்ந்தவர்.அவர் மயிலாடுதுறையில் தான் கல்வி பயின்றார்.அவரது வீடு அவரது உறவினர்களால் பராமரிக்கப்படுகிறது.பொன்னியின் செல்வனில் கொள்ளிடம் பற்றிய சித்தரிப்பு மிக அதிக அளவில் இருக்கும்.மணல்மேடு கொள்ளிடக் கரையில் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்!

காட்டுமன்னார்கோவிலில் வீர நாராயண பெருமாள் ஆலயத்துக்கு சென்றேன்.ஸ்ரீ  நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகள் பிறந்த ஊர்.படைப்பாளிகளிடமும் இலக்கிய வாசகர்களிடமும் எப்போதும் கேட்கப்படும் ஒரு கேள்வி: இலக்கியத்தால் என்ன பயன்?.ஒருவர் ஈட்டும் பொருள் என்பது அவர் குடும்பத்தாருக்கு சில ஆண்டுகளுக்கு உதவக் கூடும்.ஆனால் சொல் என்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் முளைத்து எழும் திறன் கொண்டது.தமிழ் அவ்வாறு முளைத்து எழுந்த ஒரு மொழி..வே.சா அவர்களால் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பதிப்பிக்கப்பட்ட போது சிலப்பதிகாரமும் திருக்குறளும் புறநானூறும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இம்மண்ணில் மனிதர்கள் எவ்வாறான வாழ்க்கையை மேற்கொண்டனர் என்பதை அறிய வைத்தன..வே.சா வை வாழ்த்தி பாரதி பாடியிருக்கிறார்.

நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி இன்பவகை நித்தந் துய்க்கும்

கதியறியோம் என்றுமனம் வருந்தற்க குடந்தைநகர்க் கலைஞர் கோவே!

பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும் காலமெல்லாம் புலவோர் வாயின்

துதியறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய் இறப்பின்றி துலங்குவாயே

என்று வாழ்த்துகிறார்.

கடந்த நூற்றாண்டின் தமிழர் வாழ்வை நேரடியாகவும் மறைமுகமாகவும் அப்புராதானத் தொன்மையும் அதையொட்டிய விவாதங்களுமே தீர்மானித்தன என்பது மிகையல்ல.தேவாரமும் ஸ்ரீ நாலாயிர திவ்யப் பிரபந்தமும் கடவுளிடம் லௌகிக நலன் கோரி மேற்கொள்ளப்பட்ட வழிபாடுகள் அல்ல.உலகு தழுவிய பெரும் மனவிரிவு கொண்ட நுட்பமான உணர்வும் மனமும் கொண்டவர்களால் இயற்றப்பட்டு இன்னும் பிறக்காத தலைமுறைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள பண்பாட்டுக் கருவூலங்கள்.தமிழ் அறிந்த ஒவ்வொருவருமே பண்டைத் தமிழ் இலக்கியங்களையும் தேவாரம் திவ்யப்பிரபந்தம் பற்றிய அறிமுகத்தைப் பெற்றிருப்பது ஒரு வரலாற்றுக் கடமை.இராஜராஜ சோழன் வாழ்வில் மிக முக்கியமான ஊராக காட்டுமன்னார்கோவில் இருந்துள்ளது.அவர் நீண்ட காலம் இவ்வூரில் வசித்திருக்கிறார்.இன்றும் சென்னைக்கு குடிநீர் அளிக்கும் வீர நாராயண ஏரி,இப்பகுதியின் விவசாயிகளின் நன்மைக்காக சோழர்களால் அமைக்கப் பெற்றது.ஒவ்வொரு ஆண்டும் அனேகமாக பருவமழையின் போது ஏரி  நிரம்புகிறது.அவ்வாறான காலங்களில் தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் அதனை ஒரு முறையாவது காண வேண்டும்.அவ்வாலயம் மனதில் இந்த எண்ணங்களை உருவாக்கியது.நாதமுனிகள் எந்த வசதியும் இல்லாத ஒரு காலத்தில் பல ஊர்களுக்கும் சென்று சேகரித்துத் தொகுத்ததே ஸ்ரீ நாலாயிர திவ்யப் பிரபந்தம்.தேவாரத்தைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி காட்டுமன்னார் கோவிலுக்கு அருகில் உள்ள திருநாரையூரைச் சேர்ந்தவர்.இவர்கள் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் ஆற்றியுள்ள தொண்டு மிகப் பெரியது.

காட்டுமன்னார்குடியிலிருந்து ஸ்ரீமுஷ்ணம் என்ற ஊருக்கு சென்றேன்.அங்கே பூவராக சுவாமி ஆலயம் உள்ளது.இராமரும் கிருஷ்ணரும் இந்தியா முழுவதும் நிரம்பி விட்டனர்.ஆனால் அவர்கள் வைணவத்தில் மிகப் பிந்தி வந்தவர்கள்.அவர்களுக்கு முன்பிருந்தே வைணவத்துக்குள் பல்வேறு விதமான வழிபாடுகள் இருந்துள்ளன.வராக சுவாமி,நரசிம்ம சுவாமி,ஹயக்ரீவர் போல. அன்றைய தினம் விஜயதசமி ஆதலால் மக்கள் கணிசமாக கூடியிருந்தனர்.பூவராக மூர்த்தியை வழிபட்டேன்.அங்கிருந்து உளுந்தூர்பேட்டை பயணமானேன்.

உளுந்தூர்பேட்டை ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா குருகுலம் பள்ளியுடன் கடந்த சில ஆண்டுகளாக எனக்கு அறிமுகம் உண்டு.எனது நண்பரின் மகள் அங்கே சில ஆண்டுகள் படித்தாள்.இப்போது எனது மற்றொரு நண்பரின் மகன் அங்கே படிக்கிறான்.நண்பர்கள் அவர்கள் குழந்தைகளை காணச் செல்லும் போது என்னையும் உடன் அழைத்துச் செல்வார்கள்.அப்போது அங்கே இருக்கும் துறவிகள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் உரையாடியிருக்கிறேன்.தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும் அங்கே மாணவர்கள் படிப்பதால் பல்வேறு மாவட்டத்துக்காரர்களை அங்கே காண முடியும்.திருவண்ணாமலை,சென்னை,பாண்டிச்சேரி,சேலம்,மதுரை மற்றும் திருவாரூரிலிருந்தும் பெற்றோர்கள் வருவார்கள்.அவர்களிடம் பேசிக் கொண்டிருப்பேன்.தூய்மையான சுற்றுப்புறம்,அழகான தோட்டம்,மென்மையான ஆசிரியர்கள் மற்றும் பிரியமான மாணவர்கள் என ஆர்வமான சூழ்நிலை அங்கே இருக்கும்.இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே நடைபெறும் கல்விப் பணியால் அப்பகுதியில் லேசான ஒரு சமூக மாற்றம் நிகழ்ந்துள்ளது.சுவாமி விவேகானந்தரின் நூற்று ஐம்பதாவது பிறந்த தினம் 2013ம் ஆண்டு கொண்டாடப்பட்ட போது தமிழகமெங்கும் விவேகானந்தர் ரதம் சென்றது.அந்த ரதத்திற்கு உளுந்தூர்பேட்டையில் அளிக்கப்பட்ட வரவேற்பு ஒரு வரலாற்றுச் சாதனை.தமிழகத்தின் எப்பகுதியையும் மிஞ்சும் அளவிற்கு ஒரு மாபெரும் வர்வேற்பு அளிக்கப்பட்டது.பள்ளி சார்பில் சிறிய ரதங்கள் வடிவமைக்கப்பட்டு அருகில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்றன.ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த மாபெரும் வரவேற்புக் கூட்டத்தில் சுவாமிஜியின் நினைவாக நூற்று ஐம்பது பாரம்பரிய நெல் வகைகளின் விதைவங்கி உருவாக்கப்பட்டது.அதனை திரு.வெ.இறையன்பு,..ப அவர்கள் துவங்கி வைத்தார்.உணர்வுபூர்வமான அந்நிகழ்வில் ஒரு பார்வையாளனாக நானும் பங்கேற்றேன்.அப்போதிலிருந்து குருகுலத்திற்கு அடிக்கடி செல்வதுண்டு.இந்திய ஆன்மீகத்தின் முக்கிய சக்தியான ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கத்தின் கல்விப் பணியும் சேவைப் பணியும் நடைபெறும் உளுந்தூர்பேட்டை குருகுலம் செல்வது ஒரு முக்கியமான பாரத தரிசனம் என்பதால் அங்கு சென்றேன்.அங்கே ஸ்ரீராமகிருஷ்ணர்,அன்னை சாரதா தேவி மற்றும் சுவாமி விவேகானந்தரின் ஆலயத்திற்கு சென்று அவர்களின் திருஉரு முன் அமர்ந்திருந்தேன்.

பல நினைவுகள் அலை மோதின.சுவாமி விவேகானந்தரின் மொழிகள் அடங்கியவீர இளைஞருக்குஎன்ற சிறுநூலை என்னுடைய பால்ய பருவத்தில் எப்போதும் பாக்கெட்டில் வைத்திருப்பேன்.’இந்த உலகம் மிகப் பெரிய உடற்பயிற்சிக் கூடம்;இங்கு நாம் நம்மை வலிமையுடையவர்களாக ஆக்கிக் கொள்ளவே வந்திருக்கிறோம்.’’பலமே வாழ்வு;பலவீனமே மரணம்’,’பலவீனத்துக்கான பரிகாரம் பலவீனத்தைப் பற்றி சிந்திப்பதல்ல;மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பதே.’எவன் ஒருவன் இதயம் ஏழைகளுக்காக கண்ணீர் சிந்துகிறதோ அவனையே நான் மகாத்மா என்பேன்.மற்றவர்கள் அனைவரும் துராத்மாக்களே’’நான் ஆத்ம ஞானியுமல்லேன்;தத்துவ ஞானியுமல்லேன்;ஏழை;ஏழைகளை நேசிக்கிறேன்.அவ்வளவுதான்போன்ற சொற்களை அடிக்கடி எடுத்து வாசிப்பேன்.பின்னர் வாசித்த சுவாமி சித்பவானந்தரின்ஸ்ரீ விவேகானந்தர் ஜீவிதம்நூலின் பல பகுதிகள் மனப்பாடமாகச் சொல்வேன்.அந்நினைவுகள் எழுந்தன.அன்பும் கருணையும் மிக்க சுவாமிஜியின் முகம்.அவரது வாழ்க்கை நினைவுகள்.மனிதன் தன் சுயநலத்துக்காக எவ்வளவுதான் வேலியிட்டுக் கொண்டாலும் உலகம் ஒரு குடும்பம் என்பதே இந்திய நெறி என சிகாகோவில் முழங்கியது என அனைத்தையும் நினைத்தேன்.நினைவுகள் சுழன்று மனம் பொங்கியது;பின்னர் அடங்கி அமைதியானது.துக்கம் மேலிட சுவாமிஜி திருஉரு முன்னர் கண்ணீர் சிந்தினேன்.பாரத நிலம் காண முற்படும் பயணத்துக்கு சுவாமிஜியின் ஆசியைக் கோரினேன்.

குருகுலத்தில் மதிய உணவு அருந்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.திண்டிவனம் சென்று அங்கிருந்து காஞ்சிபுரம் பயணமானேன்.ஒவ்வொரு கிராமத்திலும் ஆலும் அரசும் செழித்து வளர்ந்திருந்தன.அச்சாலையின் ஒவ்வொரு ஊரிலும் நாடக மேடை என்று மைதானங்களில் அமைத்திருந்தனர்.கலை அரங்கம் என்ற வார்த்தை பரவலாக வழக்கத்திற்கு வந்துவிட்ட சூழலில் நாடக மேடை என்ற சொல் புதிதாக இருந்தது.”உலகமே ஒரு நாடக மேடைஎன்ற ஷேக்ஸ்பியரின் வரி நினைவுக்கு வந்தது.இப்பகுதிகளில் நடைபெறும் பாரதக் கூத்து பற்றி உபபாண்டவத்தின் முன்னுரையில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருப்பார்.அவை நினைவுக்கு வந்தன.காஞ்சியின் வீதிகளுக்கு தூய தமிழில் பெயர்கள் இருந்தது.செங்கழுநீர் ஓடை தெரு,காவலன் தெரு,சாலைத் தெரு ஆகிய பெயர்கள் நூதனமாக இருந்தன.கலிங்கத்துப் பரணியில்முருகில் சிவந்த கழுநீரும் முதிரா இளைஞர் ஆருயிரும் திருகிச் செருகும் குழல்மடவீர் செம்பொற் கபாடந் திறமினோஎன்ற வரி வரும்.செங்கழுநீர் ஒரு மலர்.காஞ்சிபுரத்தில் சிருங்கேரி சங்கர மடம் எங்கே இருக்கிறது எனக் கேட்டறிந்து அங்கு சென்றேன்.பயணத்தின் நோக்கத்தைக் கூறினேன்.சென்ற ஆண்டுபாரத் தர்ஷன்போது சிருங்கேரி சென்றதையும் அங்கே தங்கியதையும் கூறினேன்.மடத்தின் மேலாளர் ஒரு பெரிய அறையை எனக்கு வழங்கினார்.எனது பயணப்பையையும் ஹெல்மட்டையும் அங்கே வைத்து விட்டு காமாட்சி அம்மன் ஆலயத்துக்கும் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்துக்கும் சென்று வந்தேன்.காமாட்சி அம்மன் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.ஆலயத்தில் திருப்பணிகள் நிகழ்ந்து கொண்டிருந்தன.ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்.ஆலயத்தில் வழிபட்டு விட்டு இரவு உணவுண்டு அறைக்குத் திரும்பினேன்.முதல் நாள் எந்த சிக்கலும் இல்லாமல் நிறைவு பெற்றதை எண்ணி மகிழ்ந்து உறங்கினேன்.

மறுநாள் காலையிலேயே கிளம்பி வரதராஜ பெருமாள் ஆலயத்துக்கு சென்றேன்.காஞ்சிபுரத்தின் பேராலயங்கள் பிரமிக்க வைத்தன.காஞ்சியைச் சுற்றியுள்ள ஆலயங்களைக் காண்பதற்கே ஒரு வாரம் அளவுக்கு தேவைப்படும் என்ற அளவுக்கு ஆலயங்கள் உள்ளன.அங்கே நடை திறக்கவில்லை.அதற்காக காத்திருந்தேன்.அப்போது ஒரு தென்கலை வைணவரான ஓய்வு பெற்ற பொறியாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.அவரது சொந்த ஊர் அன்பில்.வைணவத்தின் நூற்று எட்டு திவ்ய தேசத்தில் ஒன்று.தனது இளம் வயதின் ஆலய நினைவுகள் பற்றியும் ஸ்ரீரங்கம் ஆலயம் பற்றியும் திருவையாற்றில் நடைபெறும் தியாகராஜர் உற்சவத்திற்கு செல்வது குறித்தும் பரவசத்துடன் கூறிக் கொண்டிருந்தார்.ஆலயத்தில் வழிபாடு முடித்து கைலாசநாதர் ஆலயம் சென்றேன்.பல்லவர் சிற்பக்கலையின் அழகான வடிவம் இக்கோயில்.தென்னிந்திய ஆலயங்களுக்கு ஒரு தனித்தன்மை உண்டு.ஓர் ஆலயம் தனியான சிற்பங்களாகவும் அவை அனைத்தும் இணைந்து பெரும் படிம வெளியாகவும் மாறக்கூடிய தன்மை உடையன.உமா மகேசனின் வெவ்வேறு சிற்பங்கள் ஆலயத்தைச் சுற்றிலும் அமைக்கப் பெற்றிருந்தன.பேராற்றலும் பெருங்கருணையும் இணைந்திருக்கும் காட்சியாக அச்சிற்பங்களைக் கண்டேன்.சில மணி நேரங்கள் அங்கே அமர்ந்திருந்தேன்.காலை உணவு அருந்தி விட்டு மடத்தின் மேலாளருக்கு நன்றி கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.எனது வாகனத்தின் ஸ்பீடா மீட்டர் கேபிள் இயங்கவில்லை.அதனை ஒரு பணிமனையில் சரி செய்து கொண்டேன்.அடுத்து நான் செல்ல உத்தேசித்தது மதனபள்ளி.

காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜா,ராணிப்பேட்டை வழியாக சித்தூர் செல்லும் சாலையில் சென்றேன்.ராயலசீமா பகுதிக்குள் நுழைந்தேன்.நாம் வசிக்கும் பகுதிகளின் நிலக்காட்சிகளுக்கு நமது கண்களும் மனமும் பழகியிருக்கும்.முற்றிலும் புதிதான நிலக்காட்சிகள் மனதிற்கு பழகும் வரை ஒரு திகைப்பு உருவாகும்.ராயலசீமா என்பது கற்பாறைகளால் ஆனது.மலைகள்,குன்றுகள் என அனைத்திலும் பெரிதும் சிறியதுமான பாறைகள்.நிலத்திலும் பாறைகள்.வயல்வெளிகளில் வரப்பாக கற்களை எடுத்து அடுக்கியிருப்பர்.பாறைகளை வெவ்வேறு விதங்களில் பார்க்கும் நிலமே ராயலசீமை.வேப்பமரமும் அரசமரமும் சாலை ஓரங்களில் உள்ளது.அம்மரங்களைச் சுற்றி இருக்கைகள் அமைத்து பேருந்து நிறுத்தங்களாக உருவாக்கியிருப்பர்.மதிய உணவு அருந்தாமல் பயணித்துக் கொண்டே இருந்தேன்.சித்தூர் தாண்டி மதனபள்ளி பாதையைக் கேட்டு தெரிந்து கொண்டு சென்று கொண்டிருந்தேன்.ஒரு மரத்தடி பேருந்து நிலையத்தில் வண்டியை நிறுத்தி விட்டு சிறிது நேரம் படுத்திருந்தேன்.சற்று தள்ளி கூட்டமாக அக்கிராமத்தின் பெண்கள் நின்று கொண்டிருந்தனர்.சிறிது நேரம் கழித்து எரிவாயு சிலிண்டர் வண்டி வந்தது.பெண்கள் சிலிண்டர்களை பெற்றுக் கொண்டு வீடுகளுக்குச் சென்றனர்.சிலிண்டர்களை சைக்கிளில் மோட்டார்சைக்கிளில் ஆட்டோவில் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.சிறு இளைப்பாறலுக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றேன்.

மாலை ஆறு மணியளவில் மதனபள்ளி ரிஷிவேலி பள்ளியை அடைந்தேன்.இவ்வூரும் இப்பள்ளியும் ஜே.கிருஷ்ணமூர்த்தி வாழ்வில் அவர் மிகவும் விரும்பிய இடமாக இருந்திருக்கிறது.கல்வி பற்றிய பல விஷயங்களைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி அங்கே உரை நிகழ்த்தியிருக்கிறார்.மரங்கள் அடர்ந்த சிறுகாடு அப்பள்ளி வளாகம்.அலுவலகம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு எனது பயண நோக்கத்தைக் கூறினேன்.விருந்தினர் மாளிகையில் ஓர் அறையை ஒதுக்கித் தந்தனர்.அவ்வளாகத்தில் சுற்றினேன்.அங்கே ஒரு பேரால மரம் இருக்கிறது.அதன் நிழலில் கிருஷ்ணமூர்த்தி பல உரைகளை நிகழ்த்தி யிருக்கிறார்.விழுதுகள் மண்ணைத் தொட்டு அவை வேர்களாக மாறியிருப்பதால் அம்மரத்தின் சில பகுதிகள் உயிர்ப்போடும் சில பகுதிகள் முறிந்து போயும் இருந்தன.அப்பெருமரத்தைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்.இரவு உணவை அங்குள்ள குழந்தைகளுக்கான கேண்டீனில் உண்டேன்.பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணாக்கர் அங்கே பயில்கின்றனர்.ஒரு குழந்தை அன்று கற்றுக் கொண்ட ஒரு பாடலை உற்சாகமாக பாடிக் கொண்டிருந்தது.அவர்களிடம் உரையாடினேன்.பின்னர் அறைக்குச் சென்று உறங்கினேன்.

காலை ஐந்து மணி அளவில் விழித்து மாளிகைக்கு வெளியே வந்தேன்.விடிந்தும் விடியாத அக்காலைப் பொழுதில் புள்ளினங்கள் ஒலியெழுப்பத் துவங்கியிருந்தன.விருந்தினர் மாளிகையின் பொறுப்பாளர் ஓர் இனிமையான தேனீரை அளித்தார்.ஏற்றமும் இறக்கமும் கொண்ட பாதைகளில் நடந்தேன்.மரங்கள் அடர்ந்த பகுதிகளில் குரங்குகள் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தன.கால்பந்து,ஹாக்கி மற்றும் வாலிபால் மைதானங்கள் இருந்தன.மைதானத்தில் ஒரு நாயும் அதன் குட்டியும் ஒன்றையொன்று கவ்வி துரத்திப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன.குட்டி மண்ணைக் கிளறி ஒரு வஸ்துவைக் கண்டறிந்தது.ஆர்வத்துடன் அதனை ஒரு பத்தடி தொலைவில் கொண்டு போய் போட்டு ஆராய்ந்தது.நாய் வேகமாகச் சென்று அதுவும் ஆராய்ச்சியில் இணைந்து கொண்டது.மீண்டும் விளையாடத் துவங்கின.அங்கே இருந்த பால் பண்ணைக்குச் சென்று அங்கிருந்த நாட்டு மாடுகளைக் கண்டேன்.அவை புங்கனூர் என்ற நாட்டு மாட்டு வகையைச் சேர்ந்தவை.மீண்டும் பேரால மரத்திற்கு வந்தேன்.ஆலமரத்தின் கிளையில் ஒரு காகம் வந்து அமர்ந்தது.காகம் பறந்து சென்றதும் அக்கிளை அசைந்து கொண்டிருந்தது.கிருஷ்ணமூர்த்தியின் பிரபலமான கவித்துவமான அவ்வரியின் காட்சி வடிவத்தை அங்கே கண்டது உணர்ச்சிகரமாயிருந்தது.

கல்வி பற்றிய மாற்றுச் சிந்தனையை முன்வைக்கும் ரிஷிவேலி பள்ளியில் விடைபெற்று அங்கிருந்து லெபாக்ஷி புறப்பட்டேன்.ராயலசீமாவின் நெடுஞ்சாலைகளில் பயணித்து எனது வாகனம் சென்று கொண்டிருந்தது.கத்ரி என்ற நகரை அடைந்து அங்கிருந்த ஹார்டுவேர் கடைக்காரர் ஒருவரிடம் லெபாக்ஷி செல்லும் வழியைத் தெரிந்து கொண்டு அப்பாதையில் சென்றேன்.பெங்களூரிலிருந்து காசி வரை பாத யாத்திரையாக செல்லும் ஒரு குழுவைக் கண்டேன்.கோரண்ட்லா என்ற ஊருக்கு அருகில் வண்டி ரிசர்வுக்கு வந்தது.டேங்க்கின் முழு கொள்ளளவுக்கும் பெட்ரோல் நிரப்பிக் கொண்டேன்.மதிய நேரத்தில் லெபாக்ஷி சென்றடைந்தேன்.சுற்றுலாத்துறையின் விடுதி வாடகை மலிவாக இருந்தது.அங்கே தங்க ஏற்பாடு செய்து கொண்டேன்.பயணப்பையை அங்கே வைத்து விட்டு ஆலயத்துக்கு சென்றேன்.சிவன் வீரபத்திரராக காட்சி தரும் ஆலயம்.கருவறைக்கு முன்பிருக்கும் மண்டபத்தில் தத்தாத்ரேயர்,ஹயக்ரீவர்,நடராஜர்,நந்தி,பிரம்மா,நாராயணன் மற்றும் பிட்சாடனரின் சிற்பங்களைக் கண்டேன்.நாகலிங்கமும் விநாயகரும் பெரும் உருவத்தில் இருந்தன.ஆலயத்தை பலமுறை சுற்றி வந்தேன்.முஸ்லீம்கள் சிலர் குடும்பத்துடன் ஆலயத்திற்கு வந்து சிற்பங்களைக் கண்டு கொண்டிருந்தனர்.ஆலயத்திலிருந்து சற்று தொலைவிலும் விடுதிக்கு அருகிலும் இருக்கும் ஒற்றைக்கல்லால் ஆன பெரிய நந்திக்கு அருகாமையில் வான் நோக்கி அமர்ந்திருந்தேன்.குடும்பம் குடும்பமாக அந்நந்திக்கு அருகில் அமர்ந்து சிரித்து மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.சிலர் நந்திக்கு அருகில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டு.சிலர் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துக் கொண்டு.அந்தாக்ஷரி நிகழ்ச்சி நடத்திக் கொண்டு.இருள் கவ்வும் மாலை முடிவுக்கு வந்து இரவு நிரம்பத் தொடங்கியது.லெபாக்ஷி ஒற்றைக்கல் நந்தியின் பின்னணியில் மாலையின் முதல் நட்சத்திரம் வானில் தென்பட்டது.ஓஷோ வேதாந்தத்தை மாலையின் முதல் நட்சத்திரம் என்பார்.ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் உதித்து வானின் கோலத்துக்கு அழகு சேர்க்கப் போவது போல இந்திய சிந்தனையின் பல்வேறு வளர்ச்சி நிலைகளுக்கு கட்டியமாய் விளங்குவது வேதாந்தம்.நேரமானதை தொல்லியல் துறையின் காவலர் நினைவுறுத்தினார்.அங்கிருந்து விடுதிக்கு சென்றேன்.அங்கே சஞ்சய் என்பவரை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தேன்.எனது பயண நோக்கம்,பயண அனுபவங்கள்,ஆந்திராதமிழகம் ஒப்பீடு,ஆந்திர மாநில பிரிவினை என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம்.விடைபெறும் போது கண்கலங்கி விட்டார்.

மறுநாள் காலை ராயல்சீமாவின் கற்பாறை பிரதேசங்களைத் தாண்டி பேணுகொண்டா பயணித்தேன்.நான் பயணித்தது ஒரு தேசிய நெடுஞ்சாலை.’செல்வம் சாலைகளை உருவாக்கவில்லை;மாறாக சாலைகள்தான் செல்வத்தை உருவாக்குகின்றன’’ என்பது தாமஸ் ஜெபர்சனின் கூற்று.இந்த பயணத்தின் போது தங்க நாற்கரச் சாலை என்ற தனது கனவுத்திட்டத்தின் மூலம் கடந்த பதினைந்து ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள இந்தியாவின் வளர்ச்சிக்குக் காரணமாயிருந்த முன்னாள் இந்தியப் பிரதமர் திரு.அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பங்களிப்பை பற்றி எண்ணினேன்.சாலைகளில் முதலீடு செய்ததன் மூலம் சரக்கு போக்குவரத்தை எளிதாக்கினார்.அம்மாற்றம் உற்பத்தி மற்றும் சேவைத்துறையில் இருக்கும் பல்லாயிரம் பேரின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வந்தது.1991ம் ஆண்டு இந்திய நாடு ஒரு பெரும் இக்கட்டில் இருந்தது.அன்னியச் செலாவணி கையிருப்பு காலியாகக் கூடிய நிலைமை.தேசத்தின் பெரிய கட்சியின் பிரதமர் வேட்பாளர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருந்தார்.மத வேறுபாடுகள் இந்திய நிலமெங்கும் கசப்பின் வெறுப்பின் சுவடுகளை மக்கள் மனதில் விதைத்திருந்தது.கொந்தளிப்பான ஒரு காலகட்டத்தில் திரு.பி.வி.நரசிம்ம ராவ் நாட்டை வழிநடத்தினார்.பொருளாதாரத்தில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே தேசம் அமைதியாகவும் வளர்ச்சியை நோக்கியும் நகரும் என்ற புரிதலோடு துணிச்சலான பல முடிவுகளை எடுத்தார்.அப்போது நிதியமைச்சராக இருந்த திரு.மன்மோகன் சிங் பிரதமருக்குத் துணை நின்றார்.அவர்கள் இருவரின் கூட்டுச் செயல்பாடும் ஒருங்கிணைப்புமே இந்தியப் பொருளாதாரத்தை வீழாமல் காத்தது.விமரிசனங்கள் இருக்கலாம்.மாற்றுத் திட்டங்கள் இருக்கலாம்.ஆனால் அவர்கள் பங்களிப்பின் ஆக்கபூர்வமான பலன்களை யாரும் மறுத்து விட முடியாது.நான் ஏழாம் வகுப்பு மாணவனாயிருந்த போது பூம்புகாருக்கு திரு.மன்மோகன் சிங் அவர்கள் வந்திருந்தார்.அந்த நிகழ்ச்சிக்கு எனது தந்தையுடன் நானும் சென்றிருந்தேன்.மண்டல் கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்த உத்தரவிட்ட திரு.வி.பி.சிங் அவர்கள் பல்லாயிரம் இதர பிற்பட்ட வகுப்பினர் வாழ்வில் ஒரு திருப்பத்தை உருவாக்கியவர்.நெடுஞ்சாலைப் பயணம் அவர்களைப் பற்றிய நினைவுகளை மனதில் கிளறி விட்டது.எண்ணங்களை கவனித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தேன்.

பேணுகொண்டா விஜயநகரப் பேரரசின் இரண்டாவது தலைநகராகவும் ராணுவ ரீதியில் முக்கியமான கேந்திரமாகவும் விளங்கியுள்ளது.பெரும் மதில்களுக்குள் நகரம் அமைந்திருக்கிறது.இப்போது உள்ள நகரம் கோட்டை மதில்களுக்கு வெளியே உள்ளது.பழைய கோட்டையின் பல்வேறு பகுதிகள் தெருக்களாக மாறி நூற்றுக்கணக்கில் மக்கள் வசிக்கின்றனர்.ஓர் உயரமான குன்றை கோட்டைக்குத் தக்கவாறு அமைத்திருந்தனர்.குன்றின் ஒரு பகுதியில் ஒரு பெரிய ஏரி இருக்கிறது.முன்பிருந்த ஒரு ஜைன ஆலயம் சிதிலமானதை இப்போது புதிதாக கட்டியிருக்கின்றனர்.அஜிதநாத சுவாமி ஆலயம்.அங்கே ஒரு தமிழர் தற்காலிக அர்ச்சகராயிருந்தார்.அவருடைய தாத்தா காலத்தில் திருவண்ணாமலையிலிருந்து இங்கே வந்து குடியேறி விட்டனராம்.எனது வாகனத்தின் பதிவெண்ணை கவனித்து என்னிடம் தமிழில் பேசினார்.நான் கேட்டிராத ஒரு தொனியில் அது இருந்தது.உண்பதற்கு வாழைப்பழங்களை பிரசாதமாக அளித்தார்.காலை உணவாக அவற்றை எடுத்துக் கொண்டேன்.கோட்டையின் உச்சிக்கு செல்வதற்கு தார்ச்சாலை அமைத்திருந்தனர்.அதில் வாகனத்துடன் மேலேறினேன்.இறங்கும் போது வண்டி தானாக இறங்கியது.ககன மகால் என்ற மாளிகை இருந்தது.அதனைப் பார்த்தேன்.பின்னர் புதிய நகரைத் தொடர்ந்து சென்று குன்றின் மறுபக்கத்தில் இருக்கும் கோட்டையின் தடங்களைப் பார்த்துவிட்டு தாத்பத்ரி பயணமானேன்.

எனது வாகனத்தின் ஸ்பீடா மீட்டர் கேபிள் மீண்டும் வேலை செய்யவில்லை.அனந்தபூர் ஹீரோ வாகன சர்வீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்று புதிதாக மாற்றினேன்.மதிய உணவு அருந்தி விட்டு தாத்பத்ரி கிளம்பினேன்.பயணம் நிகழ்ந்தது ஒரு மாநில நெடுஞ்சாலையில்.எந்த ஆள் அரவமும் அற்ற பிரதேசமாக அது இருந்தது.எப்போதாவது டெம்போக்கள் எதிர்ப்படும்.லாரிகள் வரும்.பெரிய கூடம் ஒன்றில் ஒற்றை எறும்பு ஊர்ந்து செல்வது போல சென்று கொண்டிருந்தேன்.

தாத்பத்ரி சென்று வெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம் எங்குள்ளது எனக் கேட்டு சென்றேன்.வழி சொன்னவர் தமிழ் அறிந்தவராயிருந்தார்.சென்னையில் வங்கி மேலாளராக இருபது ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்திருக்கிறார்.

விஜயநகரக் கலையின் பாணி தூணில் செதுக்கப்படும் சிற்பங்கள்.தூண் அவர்களின் சிறு அலகு.ஒரு தூணில் அழகான சிற்பங்களை வடிப்பர்.பின்னர் தூணின் மற்ற பக்கங்களை அழகாக செதுக்குவர்.பல தூண்களை உருவாக்கி ஒரு மண்டபத்தை நிர்மாணிப்பர்.தூண்களின் அழகு தனியாகவும் அவை இணைந்த மண்டபத்தின் அழகு தனியாகவும் இருக்கும்.தூண் என்பதால் நரசிம்ம சுவாமி ஹிரண்ய கசிபுவின் குடலை உருவும் சிற்பம் இருக்கும்.தாத்பத்ரி ஆலயத்தில் இராமாயணக் காட்சிகள் செதுக்கப்பட்டிருந்தன.பென்னாற்றங்கரையில் அமைந்திருந்த சிவாலயத்துக்கும் சென்றேன்.அங்கே இசைத் தூண்கள் இருந்தன.

தாத்பத்ரியிலிருந்து கூடி என்ற ஊருக்குச் சென்றேன்.அங்கே ஒரு கோட்டை குன்றின் உச்சியில் இருக்கிறது.கூடி நான்கு சாலைகள் இணையும் சந்திப்பு.மாலைத் தேனீரை கூடியில் அருந்தி விட்டு பெல்லாரி கிளம்பினேன்.கூடிபெல்லாரி ஓர் அழகான பிராந்தியம்.ராயலசீமாவின் வறட்சி மாறி பசுமை விழிகளில் நிறையத் துவங்கியது.பருத்தியும் மிளகாயும் நெல்லும் பயிரிடப்பட்டிருந்தன.நெல் வயல்களைக் காணாமல் இருந்த எனக்கு அப்பிராந்தியம் உற்சாகம் அளித்தது.அன்று இரவிலும் பயணிக்க வேண்டியதாயிருந்தது.சாலை குண்டும் குழியுமாக இருந்தது.சமாளித்து வாகனத்தை இயக்கினேன்.இரவு எட்டு மணிக்கு பெல்லாரி சென்றடைந்தேன்.அங்கே சிருங்கேரி சங்கர மடம் இருக்கும் இடத்தை விசாரித்து அங்கே சென்றேன்.மடத்தின் மேலாளர் காசி சென்றிருந்தார்.அங்கே அர்ச்சகராயிருப்பவர் இரவு உறங்குவதற்கான ஏற்பாடுகளை அக்கறையுடன் செய்து கொடுத்தார்.விடிகாலையில் புறப்பட்டு ஹம்பி சென்றேன்.

ஹம்பி:நிலவைக் காட்டும் விரல்

(தொடரும்)

7 Replies to “காவிரியிலிருந்து கங்கை வரை – மோட்டார் சைக்கிள் பயணம்”

  1. மயிலாடுதுறை பிரபு அவர்களின் ஆற்றொழுக்கு நடையும், இலக்கிய புலமையும் சிறப்பாக உள்ளது. இப்படியொரு பயண கட்டுரைப் படிப்பது மிகவும் பத்துணர்வு தருகிறது
    சொ பிரபாகரன்

  2. ஐந்து வயதில் பொன்னியின் செல்வன் – ஆச்சர்யமளிக்கிறது.உங்கள் பயணத்துக்கான விதை உங்கள் தந்தையிடமிருந்து தொடங்குவதை உணர்கிறேன்.சாமானிய (வெல்லம் காய்ச்சுபவர்கள்)மனிதரிடம் நீங்கள் கண்ட பரிவை நானும் கண்டதுண்டு.எனக்கான கடமையும் காத்திருக்கிறது.சரியான நபரிடம் (நீங்கள்) ஆலோசனை பெற்றதை உங்கள் தொகுப்பிலிருந்து உணார்கிறேன்.உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  3. ஐந்து வயதில் பொன்னியின் செல்வன் – ஆச்சர்யமளிக்கிறது.உங்கள் பயணத்துக்கான விதை உங்கள் தந்தையிடமிருந்து தொடங்குவதை உணர்கிறேன்.சாமானிய (வெல்லம் காய்ச்சுபவர்கள்)மனிதரிடம் நீங்கள் கண்ட பரிவை நானும் கண்டதுண்டு.எனக்கான கடமையும் காத்திருக்கிறது.என் கடமையை நிறைவேற்ற சரியான நபரிடம் (நீங்கள்) ஆலோசனை பெற்றதை உங்கள் தொகுப்பிலிருந்து உணர்கிறேன்.உங்கள் பயணம் தொடர என் வாழ்த்துக்கள் .

    1. அன்புள்ள ஸ்ரீராம் தமிழன் அவர்களுக்கு,
      தங்கள் குறிப்பைக் கண்டேன். மகிழ்ச்சி.
      தந்தை காட்டித்தானே நாம் உலகம் பற்றி முதலில் அறிகிறோம்! பாபநாசம் நாட்கள் மறக்க இயலாதவை. தங்களுக்குப் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
      ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது- பொன்னியின் செல்வன். ஐந்து வயதில் அல்ல. பத்து வயது இருந்திருக்கும்.
      ராபர்ட் ஃபிராஸ்ட் வரிகள் எப்போதும் விருப்பத்துக்குரியதாயிருக்கிறது.
      தங்களை தொடர்பு கொண்டது சந்தோஷம் தருகிறது.
      அன்புடன்,
      பிரபு மயிலாடுதுறை
      (திரு.பிரபு மயிலாடுதுறை அனுப்பிய பதிலை இங்கு பதிவிடுகிறோம்./ ஆசிரியர் குழு)

  4. அன்புள்ள ராகவேந்திரன் மாதவன்,
    பயணக்கட்டுரையின் இரண்டாம் பகுதி ஹம்பி:நிலவைக் காட்டும் விரல் என்ற தலைப்பில் solvanam.com/?p=47436 பக்கத்தில் வெளியாகி உள்ளது.
    அன்புடன்,
    பிரபு மயிலாடுதுறை

Leave a Reply to சொ பிரபாகரன்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.