ஸெரங்க்கெட்டியில் மூன்று நாட்கள்

serengeti_wildebeest_zebra

ஸெரங்க்கெட்டியில் முதல் நாள்
ஒருவழியாக, வண்டியைக் கிளப்பினார் ஜெர்ரி.  அனுமதி வாயிலைத் தாண்டும்போது காவலர் முன் சக்கரத்தை நோக்கி ஸ்வாஹிலியில் என்னவோ சொன்னார். “என்ன ஜெர்ரி”,  என வினவினேன் – ஜெர்ரியும் பதற்றமாகக் கீழே இறங்கி முன்சக்கரத்தை நோட்டமிட்டார். பின் வண்டியை, அங்கே இருந்த ஒரு காற்று மானி நிலையத்தை நோக்கித் திருப்பினார். அருகில் நிறுத்தி முன்சக்கரத்தின் காற்றழுத்தத்தை சோதித்தார். சரியாக இருந்தது. “நல்லாக் கெளப்பறாங்க்ய்யா… பீதிய” என வடிவேலுவின் மாடுலேஷனில் மனதில் சொல்லிக் கொண்டேன்.
வண்டி, மீண்டும் சாலையேறி, தட தட தட தட.. பத்து நிமிடங்கள் கழித்து தூரத்தில் ஒரு ஸஃபாரி வாகனம் நின்று கொண்டிருந்தது. அதன் மேற்கூரையைத் திறந்து ஒரு சுற்றுலாப்பயணி தொலைநோக்கியில் பார்த்துக் கொண்டிருந்தார்.. நாங்களும் நிறுத்தி அண்ணல் நோக்கிய திசையை நோக்கினோம். தொலைவில், அக்கேசியா மரங்களின் குடுமியைக் கொய்து கொண்டிருந்தன சில ஒட்டகச்சிவிங்கிகள்.  முதல் முறை பார்க்கும் போது ஒரு காட்சிப் பிழையெனத் தோன்றும்- மரத்தை விட உயரமான விலங்கு – நமது நனவிலியில் இருப்பதில்லை.  முதன் முதலில்,  ஜூராஸிக் பார்க் பார்த்த போது, இது போன்ற காட்சிகள் வந்தது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் போரடித்து விட்டது. ஆனால், அண்ணல் தொலைநோக்கியைக் கோந்து போட்டு ஒட்டியது போல், சிவிங்கி மேயும் காட்சியில் ஐக்கியமாகி இருந்தார். ‘போலாம்.. ஜெர்ரி’ என்றதும், மீண்டும் தட தட தட..
வெகு தொலைவுக்கு வெறும் புல்வெளி. மருந்துக்கு ஒரு பறவை கூட இல்லை. ஜெர்ரியும் கொஞ்சம் கவலையுற்றவராய் வண்டியில் இருந்த வயர்லஸ் கருவியை உயிர்ப்பித்து, சக சஃபாரி ஓட்டுனர்களிடம் விசாரித்தார். பெரிதாய் ஒன்றும் பெயரவில்லை என்பது அவர் முகத்தில் தெரிந்தது. வண்டி ஸெரெங்கெட்டியின் மேற்கெல்லையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.  திடீரென தொலைவில் கொஞ்சம் மரங்களும், பசுமையான செடிகளும் இருந்தன. அவற்றை நோக்கி வண்டியைச் செலுத்தினர். தொலைவிலேயே குன்றுகளென மத்தகங்கள் தென்பட்டன.  அந்த இடத்தில் நிலப்பரப்பு கொஞ்சம் சரிந்து, ஒரு நீர்நிலை உருவாகியிருந்தது.  20-25  யானைகள் இருக்கலாம். சாலையில் வாகனம் மெல்லச் சென்றது. சாலையும் அச்சரிவில் இறங்கியது. அந்த நீர்நிலையைத் தாண்டிச் செல்ல ஒரு சிறு பாலம். வண்டி மெல்ல இறங்கத் துவங்கியதும் நெடுநெடுவென வளர்ந்திருந்த புல்லின் பின்னால் ஒரு தாய் யானையும் குட்டியும் மேய்ந்து கொண்டிருந்தன.  ஒரு வித்தியாசம் – இங்கே பெண்யானைக்குக் கொம்பிருந்தது. கொஞ்சம் சிறிது.  வண்டியை நிறுத்தினார் ஜெர்ரி. புஸ் புஸ் என மூச்சின் ஒலி மிகத் தெளிவாகக் கேட்டது. குட்டியானை சமத்துச் செல்லமாக சிறு புட்களை மேய்ந்து கொண்டிருந்தது. இரண்டும் எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
மெல்ல மாலை மயங்கத் துவங்கியது. அங்கிருந்து விலகி வெளியேறினோம்.  சிம்பா என்றழைக்கப்படும் சிங்கங்கள் இன்னும் தென்படவில்லை. இதுவரை சஃபாரி சென்று வந்த அனைவரும் ஒரு முறையேனும் வேட்டையை பார்த்ததாகச் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்து. கிர்ர்ர்..
மீண்டும் சீரான தட தட..   சற்று நேரத்தில், ஒரு மாடுமுக மான்களின் பெரும் மந்தை ஒன்று தென்பட்டது. மெல்ல மெல்ல அதைக் கடந்தோம். அம்மந்தையின் முன்பகுதியில் வரிக்குதிரைகள் இருந்தன.  ’வரிக்குதிரைகள் ஊணுன்னிகளை மிக வேகமாகக் கண்டுகொள்ளும். எனவே, அவை தான் மாடுமுக மான்களை வழிநடத்தும். அதே போல், மாடுமுக மான்கள் நீர்நிலைகளை எளிதாக கண்டுகொள்ளும். எனவே  இது ‘ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ளும் நட்பு’, என்றார் ஜெர்ரி.  துரதிருஷ்டவசமாக அப்போது எடுத்த எல்லாப் புகைப்படங்களும் அழிந்து விட்டன.
மந்தையைக் கடந்து சில நிமிடங்கள் சென்றதும். வாகனத்தை நிறுத்தினார் ஜெர்ரி. ‘என்ன ஜெர்ரி’ –  என்றேன். பதில் சொல்லாமல் கீழிறிங்கினார் ஜெர்ரி. இடதுபுறம் சென்று உதட்டைப் பிதுக்கினார் ஜெர்ரி. இம்முறை இடது பக்க டயர் உயிரை விட்டிருந்தது.  ‘என்ன செய்ய?” – இப்போது நிஜமாகவே பயம் வந்தது. கிட்டத்தட்ட 5:30 மணி.  நாங்கள் அன்றிரவு சென்று தங்கவேண்டிய இடம் – ஸெரினா கிராவெரா. ’எவ்வளவு தூரம் ஜெர்ரி?’ என்றேன். “பதினைந்து நிமிடத் தொலைவு”  என்றார்.  ‘பயப்பட வேண்டாம் – பின்னால் ஸெரினா செல்லும் வண்டிகள் வருகின்றன’ என்றார்.  10-15 நிமிடங்கள் கழிந்த பிறகு, இரண்டு வண்டிகள் வந்தன. அவற்றை நிறுத்தி, டயரை மாற்றி, மெதுவாகக் கிளம்பினோம். ஒரு உபரி டயர் கூட இல்லாமல் சஃபாரி சாத்தியமேயில்லை. ஒருவேளை ஸெரினாவில் டயர்கள் இருக்கும் என சொல்லிக் கொண்டோம்.
விடுதி சென்று சேரும் போது இருட்டிவிட்டது. வரவேற்பு பானமாக ஷாம்பெயினும், பழச்சாறும் கொடுத்தார்கள். வெள்ளைக்காரர்கள் ஸ்டைலே ஸ்டைல்தான்.  அறைகளை ஒதுக்கி ஒரு காவலருடன் அனுப்பி வைத்தார்கள். ஏனெனில், வரவேற்பறையில் இருந்து ஒவ்வொரு அறையும் ஒரு டெண்ட். நடந்து செல்லும் வழியில் வனவிலங்குகள் எதுவும் இருக்கலாம். எனவே காவலர். காவலருடன் சென்று அறையில் ஆசுவாசம் கொண்டு, இரவுணவு உண்ண மீண்டும் காவலர் துணையுடன் சென்று உண்டு வந்து படுத்தோம். நேரே சொர்க்கம்.
ஸெரெங்கெட்டியில் நாள் இரண்டு – ஏமாற்றம்
காலை ஆறு மணிக்கு விழிப்பு வந்தது. 8 மணிக்குக் கிளம்ப வேண்டும். “அருணா ஏந்திரி” எனக் குரல் கொடுத்தேன். “டாட்,  குளிச்சிட்டு என்ன எழுப்புங்க” ந்னு திரும்பிப் படுத்துவிட்டான். விஜிக்கும் மதுராவுக்கும் இன்னொரு டெண்ட். டெண்ட் ஜிப்பைத் திறந்தேன,  வெளியே ஒரு சிங்கம் படுத்திருந்தால் எப்படி எனக் கற்பனை செய்தபடி. ஒரு சுக்கும் இல்லை. பக்கவாட்டில் ஒரு மரக்கிளையில், துப்பறியும் சாம்பு போன்ற மூக்குடன் ஒரு பறவை அமர்ந்திருந்தது. பக்கவாட்டுத் தோற்றத்தில் பழுப்பு நிற விழிகளை உறுத்துப் பார்த்தது.  வெட்ட வெளியின் குளிர் தாக்கியதில் உடல் நடுங்கியது.  இவ்விடுதி, ஒரு சிறு குன்றின் உச்சியில் இருந்தது. பறவைப்பார்வையில், கண்ணுக்கெட்டிய தூரம் வரை சிறு மரங்களும், புல் வெளிகளும்.
உள்ளே வந்து, குளித்து, அருணைக் கிளப்பி, சிற்றுண்டி முடிக்கையில் 8:15. ஆச்சரியமாக ஜெர்ரியைக் காணவில்லை. கைபேசி கிடைக்கவில்லை. வாகன நிறுத்துமிடம் சென்று விசாரித்தேன். டயர் மாற்றச் சென்றிருக்கிறார் என்றார்கள். 9:30 வரை வரவில்லை. கவலையுற்று, எனது அலுவலகம் சென்று விசாரித்தேன். மெல்ல மெல்ல அன்று ஒன்றுமே நடக்கப் போவதில்லை எனப் புரிந்தது. கசந்தது.  11 மணி வாக்கில், ஜெர்ரி, வந்து அந்தச் செய்தி சொன்னார் – மாற்று டயர்கள் இன்று வருவது கடினம். ஸெரெங்கெட்டியில் உள்ள ஒரு விமான ஓடுதளத்துக்கு நாளை காலை வரும் என.  எனது உதவியாளரை விளித்து, பிரச்சினையைச் சொன்னேன். அவர், இவ்வேற்பாட்டைச் செய்த நிறுவனத்துக்குத் (அவர்கள் நான் பணிபுரியும் நிறுவனத்தின் பயண ஏற்பாட்டாளர்கள்) தொலைபேசி, பதில் கொணர்ந்தார்.
ஸெரெங்கெட்டி நிகழ்ச்சியை கட் செய்து விட்டு, நேரே நாளை காலை கிளம்பி, ங்கோரங்கோரொ  சென்று விடலாம் என.  நுகர்வோர் பாதுகாப்பு என்னும் ஒரு விழுமியம் உலகில் எங்குமே இல்லை என்பதுதான் நிஜம்.  இந்த மொத்த ஸஃபாரியின் முக்கிய நோக்கமே ஸெரெங்கெட்டி தான். இதை விடத் தயாரில்லை. அதைச் சொன்னேன். அப்படியெனில், ஒரு நாள் அதிகமாகும் அதற்கான செலவை நான் ஏற்க வேண்டும் என ஸஃபாரி ஏற்பாட்டாளர் சொன்னதாக உதவியாளர் சொன்னார்.   பதில் சொல்லாமல் போனைக் கட் செய்து விட்டு சில நிமிடங்கள் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் என் உதவியாளரை அழைத்தேன்.     “நான் ஸெரெங்கெட்டி பார்த்தே ஆக வேண்டும். என் குடும்பம் இதற்காகவே இந்தியாவில் இருந்து வந்திருக்கிறது. ஒரு நாளுக்காகும் செலவை ஏற்றுக் கொள்கிறேன்.  நான் திரும்பி வந்ததும் என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள். அவர்களின் வரவு செலவுக் கணக்கைத் தீர்த்து விடலாம். இதை நான் சொன்னேன் எனச் சொல்லவும்” எனச் செய்தி அனுப்பினேன்.  
இதைத் தனிப்பட்ட முறையில் செய்ய வெட்கமாக இருந்தது. ஆனால், இது போன்ற பதிலடிகள் மிகவும் தேவை.   (ஸஃபாரி செல்லும் முன், கொஞ்சம் செலவு அதிகமானாலும் பரவாயில்லை – நல்ல பயண ஏற்பட்டாளர்களா என சோதித்த்துச் செல்லவும். அந்த அதிகப்படியான செலவு நன்மை தரும்). நுகர்வோர் பாதுகாப்பின் முதலடி எங்கிருந்து துவங்கியது என யோசித்தேன். அலாவுதீன் கில்ஜி. தில்லியில், தானிய மண்டி (அனாஜ் மண்டி), துணிச் சந்தை மற்றும் குதிரை/விலங்குகள் சந்தை என மூன்றை ஏற்படுத்திய கில்ஜி, தானியங்கள் விற்பனைக்கான எடைகளை ஒழுங்குபடுத்தினார். எடைகளில் ஏமாற்றுவோரைத் தண்டிக்க எவ்வளவு எடை குறைவோ, அந்த அளவு ஏமாற்றியவர்களின் உடலில் இருந்து சதைகளை வெட்டியெடுக்கும் கடுமையான தண்டனைகளை ஏற்படுத்தினார்.  இன்றும் நமது சட்டங்கள் உணவு தொடர்பான விஷயங்களில் மிகக் கடுமையானவை. ஆனால், சேவைக் குறைவுகளைத் தண்டிக்கும் சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப் படவில்லை.  பத்து நிமிடங்களில் பதில் வந்து விட்டது. ”சேவைக்குறைவுக்காக, ஏற்பாட்டாள நிறுவனத்தின் தலைமை அதிகாரி மன்னிப்புக் கோருகிறார். உங்கள் பயணம் ஒரு நாள் நீட்டிக்கப்படுகிறது. Enjoy your safari.” என. சீறாத பாம்புக்கு மதிப்பேயில்லை.
அம்மணியின் முகத்தில் எள்/கொள் இன்னும் பல விஷயங்கள் வெடித்தன. no man is a hero to his wife என்னும் அரிஸ்டாட்டில் கால உண்மையை, உலகியலில் இதெல்லாம் சகஜமப்பா என்னும் புரிதலுடன் ஏற்றுக் கொண்டு, வரவேற்பறைக்குச் சென்று, எங்களது தங்கலை இன்னுமொரு நாள் நீட்டித்தேன். இப்போது, வேறு டெண்ட்கள்.  மதியத்தில் இதுபோன்ற டெண்ட்களில் தங்குவது பெரும் சுமை. வேர்த்து விறுவிறுத்தது. பெட்டியை உள்ளே வைத்து விட்டு, பாத்ரூம் ஸ்க்ரீனைத் திறந்தேன். வெட்டியான இன்றைய தினத்தைச் சிறப்பாக்கிய ஒரு புகைப்படம் இருந்தது. என்றோ ஒரு நாள், வேட்டைக்கு வந்த எர்னஸ்ட் ஹெமிங்வே இங்கே தங்கிச் சென்றிருக்கிறார். வாவ்! எனத் துள்ளிக் குதித்து அருணுக்குக் காட்டினேன். “ஓகே “ என்றான் அசுவாரஸ்யமாக.
மிக மிக மெதுவாக நகர்ந்த அந்த நாள், வாழ்வில் மறக்கக் கூடிய நாளே. மாலை வந்து இரவுணவு உண்டு உறங்கச் சென்றோம். இரவுணவின் போது, அருணைப் பார்த்து பரிசாரகன், “நீ ஷாருக் கான் போலே இருக்கே’ என்றான். அருணுக்கு வெட்கம். இந்திப் படங்கள் தான்ஸானியாவில் பெரும் ஹிட். குச் குச் ஹோத்தா ஹே தான்ஸானியாவின் தேசிய கீதத்துக்கு அடுத்தபடியாகப் பிரபலமான பாடல் என தான்ஸானியாவின் ஏடுகள் சொல்கின்றன.
ஸெரெங்கெட்டி – நாள் முன்று – கடவுள் இருக்கான் குமாரு
ஐந்து மணிக்கே விழிப்பு விட்டது.  “முருகா.. உனக்கு வேற வழியே இல்லை.  better make things work today “  எனச் செல்லமாக மிரட்டி விட்டு, உணவகத்தை அழைத்து இரண்டு காஃபிகள் ஆர்டர் செய்தேன். செய்து விட்டு, பல் விளக்கி விட்டு, நீர் குடித்து, டெண்ட் ஜிப்பைத் திறந்தேன், அசுவாரஸ்யமாக. அங்கே கண்ட காட்சி, இன்றைய நாள் நல்ல நாள் எனச் சொன்னதுவாசலில், ஒரு காட்டெருமைக் குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, உள்ளே போய் அருணை எழுப்பினேன். “போப்பா..” ந்னு சொல்லிட்டுத் திரும்பிப்படுத்துட்டான். பக்கத்து டெண்டுக்குப் போன் செய்து எச்சரித்தேன்.  வெளியே வந்து புகைப்படும் எடுக்கும் முன்பு போய் விட்டது.
காலையுணவை முடித்துடன், ஜெர்ரி உற்சாகமாக வந்தார். 12 மணிக்கு மாற்றுச் சக்கரங்கள் வந்துவிடும். நாம் விமான ஓடுதளத்துக்குச் சென்று எடுத்துக் கொள்ளலாம். அதுவரை, மிக ஜாக்கிரதையாக ஓட்டிவிடலாம். கவலைப் பட வேண்டாம்.  பட்டுமே பிரயோசனமில்லை எனப் புறப்பட்டோம்.
குன்றிறங்கியதும், பெரும் மாடுமுக மான் கூட்டத்தை எதிர் கொண்டோம். இப்போது, ஸெரெங்கெட்டியின் மேற்கெல்லையில் இருந்து திரும்பி தென் திசை நோக்கி வந்த வழியே திரும்புகின்றோம். இக்கூட்டம் நாம் நேற்று மாலை கண்ட கூட்டமா என ஜெர்ரியிடம் கேட்டேன்.  இருக்கலாம் என்றார்.
கூட்டத்தின் முன்னணியில், வரிக்குதிரைகள்.  வலதுபுறத்தில் காட்டெருமைகள்.

serengeti_wildebeest

மாடுமுக மான்களின் கூட்டத்தில், குட்டி மான்கள் அதிகம் இருந்தன. இந்தச் சூழலுக்கேற்ப, மாடுமுக மான்களின் தகவகமைப்பை, ஆண்டனி பெரும் வியப்பான தகவலாகச் சொல்கிறார். ஜனவரி / பிஃப்ரவரி மாதங்களில், மழைக்காலத்தில் ஒரு சிறு இடைவெளி உண்டு. பெரும்பாலான மாடுமுக மான்கள் இந்தப் பருவத்தில் கன்றுகளை ஈனுகின்றன.  இப்பருவத்தில் கன்றுகளை ஈன வேண்டுமெனில்,  அவை மே / ஜூன் மாதங்களில் கருத்தரிக்க வேண்டும். இந்தக் கருத்தரிக்கும் காலத்தை, 1960ல் இருந்து, 1970 வரை ஆராயும் ஆண்டனி, ஒரு பேட்டர்னை (pattern) காண்கிறார். ஒவ்வொரு வருடமும், கருத்தரிக்கும் காலம் 10 நாட்கள் தள்ளிப் போகின்றன. மூன்று வருடங்களுக்கு ஒரு முறை அக்காலம் ஒரு மாதம் முன்னே வருகின்றது.   கணிக்கையில், இக்கருத்தரிக்கும் காலம் சந்திரனைப் பின்பற்றுகின்றது என்கிறார். நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. இதை ஒரு அறிவியல் கட்டுரையாகச் சமர்ப்பித்துள்ளார்.
மாடுமுக மான்கள், மே, ஜூன் மாதங்களில் காடுகளில் கருத்தரித்து, கருவைச் சுமந்து கொண்டு, வெளியேறி நடந்து, மழைக்கால இடைவேளையில் புல் பரப்பை அடைந்து,  4 வார இடைவெளியில் 5 லட்சம் கன்றுகளை ஈன்று ( ஒரு நாளுக்கு 17 ஆயிரம் கன்றுகள்), அவற்றில் பலவற்றை ஊணுன்னிகளுக்குப் பலியிட்டு, மீந்தவை தான் நான் இன்று காண்பது.
கன்றுகள் ஈனும் காலம் தான் ஊணுன்னிகளுக்குக் கொண்டாட்டம். ஆனால் ஊணுன்னிகளிடம் இருந்து தம் கன்றுகளைப் பாதுகாக்க மாடுமுக மான்கள் சில தகவமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளன.
அதில் முதல் படி – கன்று ஈனும் நேரம். 95% அதிகமான கன்றுகள் காலை 9 மணியிலிருந்து 11 மணிக்குள்ளாக ஈனப்படுகின்றன. வழக்கமாக ஊணுன்னிகள் தம் வேட்டையை இரவில் நடத்தி விட்டது, இந்நேரத்தில் வெயில் காரணமாகவும், வெளிச்சம் காரணமாகவும் வேட்டையாடுவதில்லை.  இதனால் இந்நேரத்தில் பிறக்கும் கன்றுகள் உயிர் பிழைக்கும் சாத்தியங்கள் அதிகம்.  
இரண்டாவது – கன்றுகளின் agility – பிறந்த 15 நிமிடங்களில், அவற்றால் ஓட முடியும். பிறந்த 24 மணி நேரத்தில் தன் தாயின் வேகத்தோடு ஒடும் திறனைக் கன்றுகள் அடைகின்றன.  எனவே, பிறக்கும் போது பிழைத்து கொண்டால் அவை அடுத்த நாளே தப்பித்து ஓடும் திறனை  அடைந்து விடுகின்றன.
இதில் முக்கியமாக விஷயம் என்னவெனில், இது போன்ற புள்ளி விவரங்களைச் சேகரித்து இவ்வளவு கன்றுகள் கிடைக்கும் என அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் உணவு பதனிடும் ஆலைகள் அமைத்து மாடுமுக மான்கறி ஆலைகளை அமைக்கும் சிறுமதி இல்லா விலங்குகளாய் ஊணுன்னிகள் இருப்பது நல்லூழ்.
(தொடரும்)
 
 

2 Replies to “ஸெரங்க்கெட்டியில் மூன்று நாட்கள்”

  1. என்னதான் இயற்கையின் நியதி என அறிவு சொன்னாலும், ஒரு எளிய உயிர் கொல்லப்படுவதை பார்ப்பது மனதை பதறச்செய்யும் நிகழ்வுதான், அந்தப்பதட்டமே அதில் அதீத ஆர்வத்தையும் தருகிறது. இது ஒரு பதட்டம் தான்.
    அருமையான எளிய நகைச்சுவை நடையில் சொல்லப்படும் இந்தக்கட்டுரை பின்புலத்தில் இந்த பதட்டதை கடத்தியபடியே இருக்கிறது. முடிவில் உச்சத்தை இயல்பாக அடைகிறது.
    கட்டுரையாளருக்கு நன்றி.

  2. நான் பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்த காலங்களைப்போல் இல்லாமால் இப்போதெல்லாம் உலகெங்கும் சுற்றுலா போவது நம்மில் பலருக்கு சாத்தியமாகி இருந்தாலும், இந்தத்தொடர் விவரிக்கும் இடங்களும் விலங்குகளும் வெகுதூரத்தில் இருக்கும் அதிசயங்களாய்த்தான் படுகிறது. Exotic!
    “என்றோ ஒரு நாள், வேட்டைக்கு வந்த எர்னஸ்ட் ஹெமிங்வே இங்கே தங்கிச் சென்றிருக்கிறார். வாவ்! எனத் துள்ளிக் குதித்து அருணுக்குக் காட்டினேன். “ஓகே “ என்றான் அசுவாரஸ்யமாக.” வரிகள் பெரும்பாலான அப்பாக்களுக்கு பரிச்சயமான (சிரிப்பூட்டும்) அனுபவம்.
    பகிர்வுக்கு நன்றி. இன்னும் நிறைய படங்களையும் பகிருங்கள்.

Leave a Reply to அன்புச்செல்வன்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.