வெண்முரசு வரிசையில் – பன்னிரு படைக்களம்: ஒரு பார்வை

panirupadai_2

ஜெயமோகனின் மஹாபாரதப் பயணம் பன்னிரு படைக்களத்தில் தொடர்கிறது  (இந்த மதிப்பீட்டை எழுதி முடிப்பதற்குள் இதற்கு அடுத்த நாவல், ‘சொல்வளர்க்காடு’, இதுவும் எழுதி முடிக்கப்பட்டு விட்டது). இதுவரை  வந்த அனைத்து நாவல்களையும் பார்க்க, இந்த நாவலிலேயே ஜெயமோகன் மஹாபாரதத்தை தொடராக எழுதுவதன் நோக்கம் துல்லியமாகத் துலங்குகிறது என்று சொல்லலாம். இதுவரை வந்த நாவல்கள் அனைத்தும் சில இடங்களை விரித்தெடுத்தன, சில இடைவெளிகளை அபாரமான கற்பனைகளால் நிரப்பின, கவித்துவமான மொழியாலும் புதுப்புது சொல்லாக்கங்களாலும் உவகையூட்டின. ஆனால் பன்னிரு படைக்களமென்னும் இந்த நாவலில், ஜெயமோகன்  எதை அடிப்படையாக வைத்து இதை எழுதத் தொடங்கினாரோ அந்த நோக்கத்தை நோக்கி ஒரு தீர்மானகரமான திரும்புதலை நிகழ்த்துகிறார் என்றே சொல்லவேண்டும்.
இந்த நாவல், ஜராசந்தன் கதையில் துவங்குகிறது. சொல்லப் போனால் ஜராசந்தனின் ஆளுமையில் உள்ள இருமைக்கு ஒரு பீடிகையாக ரம்ப கரம்பர் கதையுடனும், துரியோதனனின்  வீழ்ச்சியை உருவகப்படுத்தும் விதமாக, தாயுடனான ஈர்ப்பும் முரணும் பகையும், தவிர்க்கவியலாத அழிவுப்பாதையை  நோக்கிய பயணமும் கொண்ட ரக்தபீஜன் கதையுடனும்  தொடங்குகிறது. பௌண்டரிக வாசுதேவன் வதம், ஜராஸந்த வதம், சிசுபால வதம் போன்ற களங்கள் வழியாக இறுதி உச்சமாக, அஸ்தினபுரியில் நிகழும் சூதாட்டப் படைக்களத்தில் பாண்டவர்களின் தோல்வியுடனும் பாஞ்சாலியின் வஸ்திராபரணத்துடனும் முடிகிறது. இடையில் நிச்சயமாக, ராஜ சூய யாகமும் நிகழ்கிறது.
இப்படி ஏராளமான சம்பவங்களும் மூலத்துக்கு இன்னும் துலக்கம் சேர்க்கும் கிளைக்கதைகளும் உருவகக் கதைகளுமாக ஒன்றுக்கும் வேறுபட்ட பல திரிகள் இருந்தாலும் பன்னிரு படைக்களத்தில் முக்கியமாக ஜெயமோகன் காட்டுவது இதுதான் என்று சொல்லலாம்:  மண்ணாசை, தாயாதிக் காய்ச்சல் மற்றும் தனிமனித அறம் சம்பந்தப்பட்ட சிக்கலான கேள்விகளே மகாபாரதத்தின் அடிப்படை என்பதிலிருந்து வேறுபட்டு, மிக விரிவான தத்துவப் பின்னணி கொண்ட  பல்வேறு சமூகங்களுக்கிடையே நிகழும் மேலாதிக்கத்துக்கான போட்டி, பல்வேறு வாழ்க்கை நோக்குகளின்  பூசல் என்று நிலைநாட்டுவது வெண்முரசு. இவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம் எனினும் முதலில் ஒன்று சொல்ல வேண்டும்- ஒவ்வொரு வாழ்க்கை நோக்குக்கும் பிரதிநிதியாக பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார் ஜெயமோகன்.
முதலில் ஜராசந்தனுக்கு அவர் அளித்திருக்கும் நாக, அசுர மற்றும் அரக்க பின்னணி. தொல்வேதம் எனும் நாகவேதத்தை மீண்டும் பாரதத்தில் நிலைநாட்ட வந்திருப்பவனாக தன்னை எண்ணிக்கொண்டு, அன்றைய காலகட்டத்தில் கருத்து தளத்தில் நிலைகொண்டிருக்கும் நால்வேதத்தை எதிர்ப்பவனாகவும் அரசியல் களத்தில் நிலை பெற்றிருக்கும் க்ஷத்ரிய மேலாதிக்கத்தை தகர்க்க முயற்சிப்பவனாகவும், அதற்காகவே நூறு க்ஷத்ரிய அரசர்களை வென்று அவர்களை பலி கொடுத்து நாகவேதத்தின் அடிப்படையிலான ஒரு யாகத்தை செய்பவனாகவும் அவனை படைத்திருக்கிறார் ஜெயமோகன்.
அடுத்து, சிசுபாலன்.  சிசுபாலன் அன்று நிலை பெற்றிருந்த க்ஷத்ரிய மேலாதிக்கத்தைப் பாதுகாக்கவும், அதற்கு சவாலாக எழுந்து வரக்கூடிய யாதவ குடிகளுக்கு, குறிப்பாக கிருஷ்ணனின் வளர்ச்சிக்கு எதிரானவனாகவும் கட்டமைக்கப்படுகிறான்.
மூன்றாவதாகவும் மிக முக்கியமாகவும்  கிருஷ்ணன். வெண்முரசுத் தொடரில் இந்த நாவலுக்கு முன் கிருஷ்ணன், துவாரகையை அமைப்பது குறித்து பேசும் ஒரு இடத்தைத் தவிர, தன்  வாழ்நாள் குறிக்கோளையோ, தன்னைப் பற்றியோ நேரடியாக எதுவும் பேசுவதே இல்லை. பிறர் அவனைப் பற்றி பேசுவதைக் கொண்டே அவனது பாத்திரம் எழுப்பப்பட்டிருந்தது. பன்னிரு படைக்களத்தில்தான் அவன் தன் வாழ்நாள் குறிக்கோளை, புதியதொரு தத்துவத்தின் அடிப்படையில் பாரத சமூகத்தை அமைப்பது குறித்து, நேரடியாகப் பேசுகிறான். இருந்து மறைந்த தொல்வேதமெனும் நாகவேதம் மீண்டும் உயிர்த்தெழுவதைத் தடுப்பவனாகவும், நிலைபெற்றிருக்கும் நால்வேத மேலாதிக்கத்தை தகர்த்து வேதாந்தத்தின் பார்வையை நிலைநாட்டுபவனாகவும் அவனது பாத்திரம் கட்டப்படுகிறது. இவற்றை ஜராசந்தனுடனான வாதத்திலும் ராஜசூய யாகத்தின்போது சிசுபாலனின் கேள்விகளுக்கு பதில் உரைக்கும் போதும் கிருஷ்ணன் விளக்கமாகக் கூறுகிறான்.

  நான் அனைத்தையும் ஒளிகொள்ளச் செய்யும் சாந்தீபனி குருகுலத்தின் மாணவன். வேதமுடிவே மெய்மை என்றுரைக்கும் கொள்கை கொண்டவன். வேட்டும் வென்றும் கொண்டு எவரும் நிறையமுடியாதென்றும், அறிந்தும் ஆகியும் அவிந்துமே அமையமுடியும் என்றும் சொல்பவன். அழியாத வேதமுடிவெனும் மெய்ப்பொருளை இங்கும் நிலைநிறுத்தவே வந்தேன்என்றார்.
 மேழிபிடிப்பது வேள்வி. ஆழிகொண்டு கலம் வனைவதும் வேள்வியே. ஆபுரப்பது வேள்வி. மீன்பிடிப்பதும் வேள்வியே. செயலென்று தன்னை முழுதுணரும் அழிவிலா வேள்வியால் இனி இப்புவி தழைக்கட்டும். அனைவருக்குமென சமைக்கப்படும் அன்னமெல்லாம் வேள்விமிச்சமேவேள்வியென ஆற்றப்படும் செயல்களன்றி பிறவற்றால் சிலந்திவலையில் சிறகுள்ள பூச்சிகள் என சிக்கிக்கொண்டிருக்கின்றனர் மானுடர்.  எனவே வேள்வி நிகழ்க! நிகழ்வனவெல்லாம் வேள்வியென்றே ஆகுக!”/ 

 இதுவே கிருஷ்ணனின் பிரகடனம். இதை அண்மைக் காலத்தில் ஜெயமோகன்  நிகழ்த்திய கீதை பேருரைகளோடும்  ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
இந்தப் பார்வையே பன்னிரு படைக்களத்தின் மையமாகவும்,   மிக சர்ச்சைக்குரிய பகுதியாகவும் விளங்குகிறது. இந்தப் பார்வைக்கான அடிப்படை பாரதத்தில் உண்டா என்பது இயல்பான கேள்வி. ஜெயமோகன் பாரதத்தின் மௌனமான பகுதிகளைத்  தன் விருப்பம் போல், தான் நம்பும் வரலாற்றுப் பார்வையின் அடிப்படையில், கற்பனையைக் கொண்டு இட்டு நிரப்புகிறார் என்ற குற்றச்சாட்டு வலுவாக எழுவதற்கு வாய்ப்புள்ளது. அதற்கு அளிக்கப்படும் விடையாக, இது ஒரு புனைவு என்றும் இதைச் செய்வதற்கான சுதந்திரம் தனக்கு உண்டு என்றும் ஒரு புனைவில் பேசப்படும் விஷயங்களின் நம்பகத்தன்மைக்கு ஆராய்ச்சி செய்து கண்டடையப்பட்ட வரலாற்று உண்மைகள் அவசியமில்லை, அவற்றுக்கான மெல்லிய முகாந்திரங்கள் இருந்தாலே போதும் என்றும் ஜெயமோகன் சொல்லக்கூடும். அப்படிச் சொல்லியிருமிருக்கிறார். ஆனால் இங்குள்ள பிரச்னை, வெண்முரசு இதுவரை மறைக்கப்பட்ட ஒரு மாற்று வரலாற்றையும் பண்பாட்டையும் வெளிப்படுத்துகிறது என்று பல இடங்களில், பல்வேறு சமயங்களில் அவர் கூறுவதுதான். மாற்று வரலாறு, பண்பாடு ஆகியவற்றை முன் வைப்பது என்றால் அவற்றுக்கான ஆதாரங்கள் கேட்பது தவிர்க்கவியலாததாகிறது. எனினும், சந்தேகத்தின் பலனை ஆசிரியருக்கு அளித்துவிட்டு, சர்ச்சைக்குரிய இந்தப் புள்ளிகள், நாவலில் உள்ளார்ந்த தர்க்கத்துடன் புனையப்பட்டுள்ளதா என்று பார்க்கலாம். அதாவது, இதில் பேசப்படும் விஷயங்களுக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய புறத்தகவல்கள் பற்றி கேள்வி எதுவும் எழுப்பாமல், புனைவினுள் காணப்படும் அகத்தகவல்களும் அவற்றுக்கிடையே உள்ள உணர்வுத் தொடர்புகளும் திருப்தியளிக்கும் வகையில் ஒன்றுகூடி மேற்கண்ட புள்ளிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் இணைகிறதா என்று பார்க்கலாம்.  அப்படிப் பார்த்தாலும், அது திருப்திகரமாக வரவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.
பன்னிரு படைக்களத்தின் கதைப்படி சிசுபாலனும் ஜராசந்தனும் நெருங்கிய  நண்பர்களாகக் காட்டப்படுகிறார்கள். ஜராசந்தன் மரணத்துக்காக கிருஷ்ணனைப்  பழிவாங்கவும் பாண்டவர்களின் இந்திரப்ரஸ்தத்தின் மீது படையெடுக்க பிற க்ஷத்ரிய மன்னர்களின் உதவி கேட்பவனாகவும் சிசுபாலன் சித்தரிக்கப்படுகிறான். இங்கு எழும் முக்கியமான கேள்வி, நால் வேதத்தை மறுக்கும், தொல் நாகவேதத்தை உயிர்த்தெழச் செய்து, க்ஷத்ரியர்களை வேரறுக்க விரும்பும் ஜராசந்தனும், நால் வேதத்தின் நெறியினைப் பாதுகாக்கத் துடிக்கும், க்ஷத்ரிய மேலாதிக்கத்தை நிலைபெறச் செய்யும் எண்ணம் கொண்ட சிசுபாலனும், எப்படி நெருக்கமான  நண்பர்களாக இருக்க முடியும் என்பதுதான். இவர்களிடையே  இது குறித்து, எந்த ஒரு அறிவுபூர்வமான  விவாதங்களும் நிகழ்வதாகக் கதையில் இல்லை. இப்படியொரு விவாதம் நிகழாத காரணத்தால் எதிரெதிர் நோக்கங்களும் செயல்திட்டங்களும் கொண்ட இவ்விருவரும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதில் உள்ள முரண்பாடு நாவலில் வெளிப்படையாகப் பேசப்படும் வாய்ப்பு தவிர்க்கப்பட்டு விடுகிறது. க்ஷத்ரிய மேலாதிக்கத்தை கருவறுக்கத் துடிப்பவனாக கிருஷ்ணனை அடையாளம் கண்டு கொதிக்கும் சிசுபாலன், 100 க்ஷத்ரியர்களை சிறையிலடைத்து தான்  நடத்தும் தொல் நாகவேத யாகத்தில் பலி கொள்ள இருந்த ஜராசந்தனை மட்டும் எப்படி நண்பனாகக் கருத முடியும்? ஜராசந்தனும் க்ஷத்ரிய மேலாதிக்கத்தை தொடர்ந்து நிலைபெற வைக்க விரும்பும் சிசுபாலனை  நெருங்கிய நண்பனாகக் கொள்ள முடியும்? கதையாடலில் உள்ள இந்த முரண்பாட்டை ஜெயமோகன் கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது. இது தர்க்கப்பிழை மட்டுமல்ல, ஒருவரையொருவர் கொன்றொழிக்கும் நோக்கங்களைக் அடிப்படையாகக் கொண்ட  இருவர் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர் என்பது, பாத்திரப் படைப்பின் ஒருமைக்கு கேடு செய்கிறது, அவர்களின் நோக்கங்களுக்கு ஊறு செய்கிறது. கொலைக்களத்தில் எதிரெதிர் நிற்கக்கூடிய  இவர்கள் அந்த உணர்வு சிறிதும் இல்லாமல் அருகிருந்து உறவாடுகின்றனர் (வெய்யோன் நாவலில்).
ஜராசந்தன்- சிசுபாலன் நட்பு மட்டுமல்ல, அந்த உறவுக்கு வெளியே ஜராசந்தன் பாத்திர படைப்பு, அவன்  செய்யும் யாகம், மற்றும் அவனது வாழ்க்கை நோக்கு ஆகிய எல்லாமே சர்ச்சைக்குரிய வகையில், படைப்பின் உள்ளார்ந்த தர்க்கத்துக்கும் மாறாகவே உள்ளது. முதலில் ஜராசந்தன் நடத்தும் யாகம் தொன்மையான நாகவேதத்தின் அடிப்படையிலானது என்று சொல்லப்படுகிறது. ஆனால் நால்வேதத்திலேயே அவன் நடத்தும் யாகத்துக்கு இடம் உள்ளது. புருஷ மேத அல்லது நரமேத யாகம் எனும் இது, சுக்ல யஜுர் வேதத்தின் வாஜசனேயி சதபத பிராமண ,-காத்யாயன சிரௌத சூத்திரத்தில் (Vajasaneyi Samhita-Sataphana Brahmana-Katyayana Srauta Sutra)  சொல்லப்பட்ட ஒன்றுதான். நால்வேத மரபுக்கு எதிரானதாக இதைக் கட்டமைத்திருக்கிறார் ஜெயமோகன். புனைவில் அவ்வாறு இருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்டாலும், மரபில் உள்ள ஒன்று மரபுக்கு எதிரானது என்று புனையப்படும்போது கதைப்போக்கு மற்றும் ஆசிரிய கூற்றுக்கு அப்பால் அத்தகைய வாதத்துக்கான நியாயம் கதையில் நிறுவப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இயல்பானதே.

panirupadai_1

மேலும் முக்கியமாக, ஜரையினால் ஒன்றாக்கப்பட்டதானாலேயே ஜராசந்தனுக்கு ஒரு அரக்கப் பின்னணியை அளித்திருப்பதும் அவனது வரலாறும் கேள்விக்குரியவை. ஜராசந்தன் பிள்ளையில்லாமல் தவித்துத் தவமியற்றிய பிருஹத்ரதனின் மனைவிகளுக்கு  இருபாதிகளாகப் பிறந்தவன் என்பதும், ஜரை என்ற அரக்கியினால்  ஒன்றாக்கப்பட்டு ப்ருஹத்ரதனிடம் மீட்டளிக்கப்பட்டவன் என்பது நாம் அறிந்தது. ஆனால் இங்கு அந்தக் கதையிலிருந்து ஒரு படி மேலே சென்று, ஜரையை ஜராசந்தனின்  வளர்ப்பு அன்னை என்றும் அவளது முலைப்பால் உண்டு அவளிடமே சில காலம் வளர்ந்ததால் அவன் பாதி அரக்கன் என்றுமே புனைவைக் கட்டுகிறார் ஆசிரியர். இது போதாதென்று, தன் சகோதரர்களைக் கொன்று தன்  தந்தையையும் அன்னையரையும் நாடு கடத்திய பின்னர்  நாடாண்டவன் ஜராசந்தன் என்றும் இந்நாவலில் சொல்லப்படுகிறது. சாம்ராட் அசோகன் மற்றும், சுல்தானிய கதைகளை எதிரொலிக்கும் இக்கதைக்கான அடிப்படை பாரதத்தில் உண்டா என்ற கேள்வியைக் கூட புனைவுச் சுதந்திரத்தின் அடிப்படையில்  விட்டுவிடலாம். ஆனால், ஜராசந்தன் ப்ரஹத்ரதன் தவமிருந்து பெற்ற ஒரே மகனா, அல்லது அவனுக்கு முன் ப்ருஹத்ரதனுக்கு மகன் உண்டா, அவனுக்கு அடுத்தும் மகன்கள் உண்டா  என்பதிலெல்லாமே கூட இந்தப் பிரதியில் தெளிவு இல்லை. ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொன்று சொல்லப்படுகிறது.
வெய்யோன் நாவலின் 54ம் பகுதியில் ஜராசந்தன் தனக்கு முன் தன் தந்தைக்கு ஒரு மகன் இருந்து இளவயதில் இறந்ததாகக் கூறுகிறான். தனக்குப் பின் தன் அன்னையர் தந்தைக்குப் பிறந்த தன் சகோதரர்களைக் கொல்வதாகவும் வருகிறது. ஆனால், ப்ருஹத்ரதர் பிள்ளையில்லாக் குறையினால் தவம் புரிந்து, மிகவும் முதிர்ந்த வயதில்,  சண்ட கௌசிக ரிஷியிடம் வரம் பெற்று அதனால் ஜராசந்தன் அவர் பெற்ற ஒரே மகனாகப் பிறந்ததாகவும் வருகிறது. இதை பகுதி 9ல் பார்க்கலாம். ப்ருஹத்ரதரும் இவ்வாறே புலம்புகிறார்.
 “அரசனையும் அரசியரையும் முதுமை வந்தணைந்தது. அரண்மனை மருத்துவர் சூத்ரகர், “மைந்தரைப்பெறும் அகவையை தாங்கள் கடந்துவிட்டீர்கள் அரசே. அரசியரும் அவ்வெல்லையை கடந்துவிட்டனர்என்று அறிவித்தார். அன்றிரவு பிருஹத்ரதன் அரசியர் மாளிகையில் துணைவியருடன் இருக்கையில் துயர் தாளாது கண்ணீர்விட்டார். “வாழ்நாளெல்லாம் கடலோடி ஈட்டிய செல்வமனைத்தையும் கலமுடைந்து நீரில் விட்ட வணிகன் போலிருக்கிறேன். செல்வமென்பது இப்பிறப்பின் இன்பங்களையும் மறுபிறப்பின் நல்லூழையும் பெற்றுத்தரக்கூடியதென்று இளமையில் கற்றேன். என் கருவூலச் செல்வமனைத்தையும் வேள்வியறங்களுக்கு அளித்துவிட்டேன். வெறுங்கையுடன் விண்செல்லப்போகிறேன். புத் என்னும் இழியுலகுக்குச் சென்று இருளில் அமைவேன்என்றார்.”
 இங்கே அவருக்கு ஏற்கெனவே ஒரு பிள்ளையிருந்து அவன் இறந்தது போல் வரவில்லை. மேலும் மிக முதிர்ந்த வயதில் முனிவர் அருளால் ஜராசந்தனைப் பெறும் அருள் பெற்ற  அரசத் தம்பதியினர், ஜராசந்தன் ஜரையுடன் காட்டுக்குச் சென்றபின்னர், மேலும் பிள்ளைகளை பெற்றனர் என்று நம்புவதற்கான தேவை கதைபோக்கில் இல்லை, இது ஒரு முரணாக துருத்திக் கொண்டு தான் நிற்கிறது.
ஜராசந்தனுக்கு உடன்பிறந்தோர் உண்டா என்பது ஒரு கேள்வி. அதில் ஒருவர்  அவன் பிறக்கும் முன்னர் இறந்துவிட்டவரா, அவனுக்குப் பின் பிறந்த தம்பியர் அவனால் கொல்லப்பட்டனரா என்பது ஒரு கேள்வி. இத்தனையும் ஒரே படைப்பில் வரும்போது ஜராசந்தன் பாத்திரப்படைப்பில் குழப்பம் ஏற்பட்டு அவனது சித்திரம் பழுதுபடுவதுடன், சம்பவங்களின்  நம்பகத்தன்மையும் குலைகிறது .
ஜராசந்தனுக்கு ஒரு அரக்கப் பின்னணி அளித்து அவனை நால்வேத மறுப்பாளானாகக் காட்ட இது தேவைப்படலாம். ஆனால் எழுதப்பட்ட வகையில், கவனக்குறைவும் தர்க்க ரீதியிலானப் பிழைகளும், ஜராசந்தன் பாத்திரம் முழுமை அடையாமல், ஆசிரிய நோக்கத்தில் அசைக்கப்படும் வேறொரு நூலிலாடும் பாவையாய்த் தோன்ற காரணமாகின்றன.
அதே போல அவனது மகள்கள் விஷயத்திலும் இப்படியே.  ஜராசந்தன் மகள்களான அஸ்தி, பிராப்தி இருவருமே கம்சனின் மனைவியர் என்பதும் அவர்களின் கணவனான கம்சனைக் கொன்றதினாலேயே ஜராசந்தனுக்கு கிருஷ்ணன் மீது தீராப்பகை என்பதுமே பாரதத்தில்  வருவது. இங்கு இதிலும்  குழப்பம்.
ஜராசந்தன் தன்  மகள்களான அஸ்தி, பிராப்தி பற்றி வெய்யோன் பகுதி 54ல் இப்படி சொல்வதாக வருகிறது.
“மீசையை முறுக்கியபடி “தங்களுக்கு முதல் மனைவியில் இரண்டு மகளிர் அல்லவா?” என்றான் கர்ணன். “மதுராவை ஆண்ட கம்சரின் மனைவியர்.” ஜராசந்தன் “ஆம்” என்று சொன்னான். மகதத்து குலமுறைமைப்படி அவர்களை என் மகள்கள் என்று சொல்லவேண்டும். அவர்களின் அன்னை என் மனைவி அல்ல.” துரியோதனன் நோக்க ,“என் தந்தையின் முதல் மைந்தர் இளமையிலேயே போரில் இறந்தார். அவரது மனைவி என்னைவிட இருபது வயது மூத்தவர். அவரது மகள்களை நான் தந்தையென நின்று கம்சருக்கு கையளித்தேன். எனக்கு அப்போது பதினாறு வயதுஎன்றான்.”
இதன்படி இருவரும் ஜராசந்தரின் மகள்களாகின்றனர்.
வெய்யோனில் அவ்வாறிருந்தால் இங்கு, பன்னிரு படைக்களத்தின் ஒரு  பகுதியில் கம்சனின் மனைவியர் பற்றி  இப்படி வருகிறது.

அவனுக்கு (கம்சனுக்கு) மகத மன்னன் பிருஹத்ரதரின் தங்கை மகளின் புதல்விகளை மணம் புரிந்து வைக்கப்போவதாக செய்தி உள்ளதுஎன்று தேவவாகர் சொன்னார். “ஆம், அது ஒரு அழியா முடிச்சு. ஆனால் அப்பெண்கள் அரசரின் நேரடிக்குருதியினர் அல்ல. பிருஹத்ரதரின் தந்தைக்கு சூத்திரப்பெண்ணில் பிறந்த மகளின் புதல்விகள். ஆஸ்தி, பிராப்தி என அவர்களுக்கு பெயர்.”

அஸ்தி பிராப்தி இருவரும், ஜராசந்தனின் தந்தையான பிருஹத்ரதரின் தந்தைக்கு சூத்திரப்பெண்ணில் பிறந்த மகளின் புதல்விகள் என்பதால் அவர்கள் பன்னிரு படைக்களத்தில் ஜராசந்தனுக்கு அத்தை மகள்கள் என்ற முறையாகின்றனர்.
ஜராசந்தனுக்கு ஒரு அரக்கப் பின்னணி அளித்து அவனை நால்வேத மறுப்பாளானாகக் காட்ட இது உதவலாம். ஆனால் இது போன்ற முரண்பாடுகள் வெறும் தகவல் பிழைகள் என்ற நிலைக்கு அப்பால், கதையை அதுவரை கொண்டு சென்ற தர்க்கத்தை உடைத்து, நடந்தது நடக்கப்போவது என்று அனைத்தையும் கேள்விக்குறியாக்குகின்றன. ஒரு கதையில் உறவுமுறைகளே மாறுவதைக் கடந்து செல்வது அவ்வளவு சுலபமல்ல. உணர்வுகளைப் பிணைக்கும் கண்ணிகள் அவை.
வெண்முரசின் பலங்களான அழகிய மொழி நடை, உவகையூட்டும் புதிய சொல்லாக்கங்கள் இந்த நாவலிலும் ஏராளமாக  உண்டு. ஜெயமோகனின் பாரத நாவல்கள் எல்லாவற்றுக்குமே  பொருந்தப் போகும் அவற்றை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கு முந்தைய கட்டுரைகளில் நிறையவே சொல்லியுமிருக்கிறேன். இன்றும் அவை ஒவ்வொரு நாளும் மிக அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றன. எனவே, தற்போதைக்கு அதைப் பேசாமல், நாவலின் பொருள் குறித்தும் அமைப்பு குறித்தும் பேசுவது அவசியமாகிறது.
பன்னிருப் படைக்களத்தின் இன்னொரு சிறப்பாக,சம்பவங்கள் நடைபெறும் மாதங்களும் அவற்றின் பருவ நிலைகளும் பாத்திரங்களின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் வெளிப்படும் அழகு என்று சொல்லலாம்.
ஆனால் இதிலும் சில நெருடும்  பிழைகள் வந்துவிடுகின்றன. முக்கியமாக, ராஜக்ருஹத்தில் ஜராஸந்த வதம் நடப்பது ஐப்பசி மாதத்தில் என்று வருகிறது. பெருமழைக்கிடையே அந்தச் சம்பவங்கள் விவரிக்கப்படுகின்றன. ஐப்பசி மழைக்காக அஸ்தினாபுரம் ஏங்கிக் காத்திருக்கிறது என்றும் வருகிறது. ஐப்பசி மழை என்பது கடலோர ஆந்திரம், மற்றும் தமிழ்நாட்டு நிலப்பகுதிக்குரியது. வட இந்தியாவின் மழைக்காலம், ஆவணியோடு முடிவடைவது. மிஞ்சிப் போனால் புரட்டாசியின் முதல் பாதிவரையே  அங்கு மழைக்காலம். புராண காலகட்டத்தில்  எப்படியோ தெரியாது. ஆனால் இந்த பருவநிலை கிட்டத்தட்ட கடந்த பனியுகம் முடிவு பெற்றதிலிருந்தே  இப்படித்தான் உள்ளதாக அறிவியல் மற்றும் வானியல் கணிப்புகள் உள்ளன. (வெண்முரசு நடைபெறும் காலம், சிந்து சமவெளி வெளி நாகரீகத்தின் அழிவுக்குப்  பின் என்று மழைப்பாடல் நாவலில் ஒரு காட்சி உண்டு). ஆனால் ஜெயமோகன் அவரது அநேக கட்டுரைகளிலும்கூட , இந்தப்  பருவ  காலத்தை தவறாகவே எழுதுகிறார். படைப்புக்கு  நம்பகத்தன்மை அளிக்கும் பின்னணித் தகவல்கள் தவறாக அமைந்து விடும்போது  அது நம்பகத்தன்மையை இழக்கிறது. கதைதானே என்று சொல்லலாம். ஆனால் புனைவென்பதோர் அறிதுயில் கனவென்றால், இது போன்ற முரண்பாடுகள் நம்மை அதிலிருந்து வெளியே தூக்கி வீசி விடுகின்றன. வாழ்வனுபவத்தை மட்டுமல்ல, வாசிப்பனுபவத்தையும் மறந்து, கணத்துக்குக் கணம் காணும் தோற்றத்தை ஏற்கும் மனமயக்கம்தான் (புனைவுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தல் ) இலக்கியப் புனைவுகளை அணுகுவதற்குரிய மனநிலை என்ற கோரிக்கை ஏற்கத்தக்கது என்று எனக்குத் தோன்றவில்லை.

panirupadai_3

பன்னிரு படைக்களம்  மிக நீண்டதொரு நாவலாகத் தோன்றுவதற்கு, அதன் உள்ளே இருக்கும் பல உச்சங்கள் ஒரு காரணம். பௌண்டரீக வாசுதேவன் வதம், ஜராஸந்த வதம், சிசுபால வதம், ராஜசூய யாகத்தின் முழுநீள விவரணைகள், அஸ்தினபுரியின் சூதாட்டக் காலத்துக்கான விரிவான விவரிப்புகள், சூதாட்டம், பின் பாண்டவர்கள் அடிமையாதல், இதையெல்லாம் தாண்டி, இந்த நாவலின் உண்மையான உச்சமாக அமைந்திருக்க வேண்டிய பாஞ்சாலி சபதம் வருவதற்குள் பல தீவிர உணர்வு நிலைகளுக்கு ஆட்படுத்தும் கட்டங்கள் வந்து விடுவதால், பாஞ்சாலி சபதம், அது ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. இத்தனைக்கும் இந்தப் பகுதியில் ஜெயமோகனின்  உரையாட்சி ஓர் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
இங்கு விவாதத்துக்குரிய இன்னொன்றையும்   முன்வைக்கிறார் ஜெயமோகன். பாஞ்சாலி துகிலுரியப்படுகையில், அதிலிருந்து அவளைக் காப்பாற்றுவது யார் என்பது பாரதம் வாசிக்கும் யாருக்கும் தெரியும். ஆனால் ஒரு நவீன வாசகனுக்கான இந்த நாவலில் அமானுஷ்ய சம்பவங்களைத் தவிர்க்கும் பொருட்டு கிருஷ்ணன் அருள் என்று அல்லாமல், அந்தத் தருணத்தில் அவனை நினைக்கும் துரியோதனனின் மகளான லக்ஷ்மணையின் தலைமையில் கௌரவர் இல்லப் பெண்கள் காப்பதாக மாற்றியிருப்பது அவ்வளவு பொருத்தமாக எனக்குத் தோன்றவில்லை. மேலும், துரியோதனன் மகளான லக்ஷ்மணை கிருஷ்ணை என்று திரௌபதியின் பெயரால் அழைக்கப்டுவதும், அவளைப் போலவே தோற்றம் கொண்டவளாகக் காட்டப்படுவதும் எல்லாம், ஒரு வாசகன் பிரதி மீது வைக்கும் எளிய நம்பிக்கையை (credulousness ) ரொம்பவே சோதிக்கிறது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, பாஞ்சாலி சபதம் அவள் வாயால் அவையில் உரைக்கப்படாமல் அவளது அணுக்கத் தோழியான மாயையின் வாய்மொழியாக வருவதுகுறித்து என்ன சொல்வது என்று தெரியவில்லை. திரௌபதியை பேரன்னையாக உருவகித்து எழுதி வருவதால், இந்தப் பகுதியில் வஞ்சினம்கூட அவளால் உரைக்கப்படாமல் இருப்பதாகப்  பாராட்டி ஒரு நண்பர் எழுதியிருந்தார். அப்போது, எனக்கு அந்த சபதத்தையும் தோழியே முடித்து வைக்க வேண்டும் என்று அந்த நண்பர் எதிர்பார்க்கிறாரோ என்ற சந்தேகத்தை அளித்தது. வஞ்சினம் உரைத்தலே அன்னைக்கு ஊறு எனில், அவள் அதைத் தீர்த்தல் எவ்வாறு? (ஆனால் இது ஜெயமோகனின் கருத்து என்று நம்புவதற்கு, அவர் ஏதும் இது பற்றிக் கூறவில்லை. படைப்புக்கு இணக்கமான வகையில் வாசகன் தன்னை மிதமிஞ்சிய அளவில் ஒப்புக்கொடுத்தல் அவனது வாசிப்பை எங்கு கொண்டு செல்கிறது என்பதைச் சுட்டவே இதைச் சொல்கிறேன்).
 முடிவாக இப்படிதான் சொல்ல வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு அற்புதமான தருணங்கள் உள்ளனவோ அதே அளவிற்கு கேள்விக்குரிய, நம்ப முடியாத, பலவீனமான பாத்திரங்களும் சம்பவங்களும் கொண்ட படைப்புதான் பன்னிரு படைக்களம். எப்போதும் உள்ள இடையறாத விவாதங்கள் போதாதென்று கூடுதலாக, இடையறாத பயணங்களும் வேறு பல பணிகளும் ஜெயமோகனை பற்றிக்கொண்டிருக்கும் இந்நாட்களில் அவர் இந்த அளவு எழுதுகிறார் என்பதே பிரமிப்புக்குரிய ஒன்று. இதற்கு இணை என்று மட்டுமல்ல, இது போன்ற முயற்சியும்கூட பிறர் கற்பனைக்கும் சாத்தியமில்லாமல் இருக்கிறது. ஆனால் இத்தனை வசீகரங்களும் அலைக்கழிப்புகளும் கவனக்குலைப்புகளும் இல்லாத இன்னும் அமைதியான காலத்தில், இன்னும் ஓய்வும் அமைதியும் இன்னும் ஒருமையும் கூடிய உலகில் ஜெயமோகன் இருந்திருக்கக்கூடாதா என்று ஏக்கமாகவே இருக்கிறது. அப்போது அவர் எழுதியிருக்கக்கூடிய நாவல்களின் இக்குறை வடிவங்கள்தான் இப்போதைக்கு நமக்கு கிடைப்பது.

~oOo~

முந்தைய பதிவுகள்:
1. வெ.சுரேஷ்: வெய்யோன் வரை – சொல்வனம்
2. வெ.சுரேஷ்: வெண்முரசு – ஒரு பார்வை – சொல்வனம்

26 Replies to “வெண்முரசு வரிசையில் – பன்னிரு படைக்களம்: ஒரு பார்வை”

  1. ஒரு திருத்தம் தேவைப்படுகிறது. அஸ்தி பிராப்தி இருவரும், ஜராசந்தனின் , தந்தையான, பிருஹத்ரதரின் தந்தைக்கு சூத்திரப்பெண்ணில் பிறந்த மகளின் புதல்விகள். ஆஸ்தி, பிராப்திஎன அவர்களுக்கு பெயர்.” எனும்போது ஜராசந்தனுக்கு, அவர்கள் அத்தை மகள்கள் முறை ஆகின்றனர். என்று இருக்க வேண்டும்.வெ சுரேஷ்

  2. வெண்முரசு வழியாக இந்த தளத்தை கண்டடைந்தேன். ஆனால் சிறிய ஏமாற்றம். இந்த கட்டுரை எதைக் கண்டடைகிறது என தெளிவில்லை. விவாதிக்க ஏற்ற தளம் என்ற நம்பிக்கையில் சில கருத்துக்களை முன்வைக்கிறேன்.
    பொறுமையாகக் கட்டுரையைப் படித்தபின் கடைசி பாரா எதிர்பாரத திருப்பம். மூன்று விஷயங்களை முதலில் சொல்லலாம் என நினைக்கிறேன்.
    1.கிசுகிசு பாணி.
    திரொபதி துகிலுரிப்பு பற்றி சொல்லும்போது “லக்ஷ்மணையின் தலைமையில் கௌரவர் இல்லப் பெண்கள் காப்பதாக மாற்றியிருப்பது அவ்வளவு பொருத்தமாக எனக்குத் தோன்றவில்லை.” என்று சொல்கிறார். ஏன் சொல்கிறார் என எதிர்பார்பது வாசகனின் இயல்பாக கேள்வி. ஏன் என விளக்குவார் என்று தொடர்ந்து படித்து எதிர்பார்த்தால், அதற்கு மாறாக கிசுகிசு பாணியில் அவரது நண்பர் சொன்னார் என இன்னொன்றை சொல்லி அதற்கு ஒரு கருத்து சொல்கிறார். இது விமர்சனமா கிசுகிசுவா?
    பெஸ்புக் ரக எழுத்தில் அடிக்கடி காணப்டும் “ஒரு நண்பர்” வகை கிசுகிசு இது.
    2. ”என்றே தோன்றுகிறது”
    சூதாட்டம் உச்சம் என்ற போதிலும், இன்னும் பல உச்சங்கள் நாவலில் இருப்பதால் இந்த விமர்சகருக்கு அது உச்சம் அல்ல “என்றே தோன்றுகிறது” என்கிறார். விமர்சனம் என்பது “என்றே தோன்றுகிறது” வகையறா இல்லை என்றே தோன்றுகிறது.
    3. கட்டுரையின் கண்டடைதைதல்
    விவாதங்களும், பயணங்களும் ஒரு எழுத்தாளரின் படைப்பை எதிர்மறையாக பாதிக்கும் என (“முடிவாக இப்படிதான் சொல்ல வேண்டும்”)கடைசி பாராவில் கண்டடைகிறார். இது வரை creativity and innovation பற்றி எழுதப்பட்டதை எல்லாம் மறுக்கும் புதுமையான சிந்தனை இந்த விமர்சகருக்கு இருக்கிறது என புரிகிறது. இந்தக் கருத்து எப்படி கண்ணடைந்தப்பட்டது என இந்தக் கட்டுரையில் எந்த தகவலும் இல்லை. ஒரு விமர்சனக் கட்டுரையின் கடைசி பாரா முக்கியமானது அது விமர்சனம் சொல்ல வந்ததை தொகுக்க வேண்டும், சம்பந்தம் இல்லாத கண்டுபிடிப்பு இது.
    கடைசி இரண்டு வரிகள் மிக அபத்தம்.
    விமர்சனம் என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த பகுதி objective ஆக இல்லாமல் தனது தனிப்பட்ட விஷயங்கள், எழுத்தாளரின் தனிப்பட்ட விஷயங்கள், பெயர் தெரியாத நண்பரின்(கிசுகிசு பாணி) தனிப்பட்ட கருத்து என நீள்கிறது. விமர்சனம் பிரதியின் இல்லாமல் எப்படி அலைபாய்கிறது என சுட்டிக்காட்டவே இவை. இவை ஆக்கப்பூர்வமாக உதவும் என நம்புகிறென்
    அன்புடன்
    அன்புச்செல்வன்

  3. முடிந்தால் இந்த கட்டுரைக்கு அளிக்கப்பட்டிருக்கும் படத்தையும் மாற்றவும் அல்லது நீக்கி விடவும்.
    ஒரு தகவல், இந்த நாவலில் வரும் துகிலுரிப்பு இந்த படத்துக்கு முற்றிலும் மாறானது.எனவே இந்த நாவலைப் பற்றி பேசும்போது இந்தப் படம் சிறிதும் பொருத்தம் இல்லாமல் இருக்கிறது.
    இந்தப் படம் ஒரு வகையில், இந்த நாவலை புரிந்துகொள்ள முயற்சிக்காமல் தனக்குத் தெரிந்த மகாபாரதத்தை இந்த நாவலில் தேடும் வாசகர்களை/’விமர்சகர்களை’ சுட்டிக்காட்டுவது போல இருக்கிறது.

  4. பருவநிலை மாற்றம் பற்றிய தகவலும் ஜராசந்தன் பற்றியும் தங்களின் கருத்துடன் உடன்படுகிறேன் ஆனால் பாஞ்சாலி துயில் உரியும் சம்பவத்தில் நேரடியாக கிருஷ்ணன் வராமல் துரியோதனின் மகள் மூலம் ஆடை பெறுவது மிக சரியானது ஏனெனில் இந்த கதையில் எங்கும் கிருஷ்ணன் கடவுளாக காட்டப்படவில்லை அதேபோல் பாஞ்சாலி சபதம் மாயை மூலம் உரைத்தது சரியே காரணம் பாஞ்சாலி பாத்திரம் எதற்கும் கலங்காத நிகர்நிலை கொண்ட பேர்ரரசியாக படைக்கப்பட்டள்ளார் எனவே அவர் கலங்கி சபதமிட்டாள் அது அந்த பாத்திரத்தை பாதிக்கும். இதுவே எனது கருத்து.

  5. நண்பர் அன்புச்செல்வன் எழுதியிருப்பதைப்போல ஒரு நண்பர் சொன்னார் என்று கிசு கிசு பாணியில் எழுதவில்லை. நண்பர் எழுதியிருந்தார் என்றே குறிப்பிட்டிருக்கிறேன் .அதை இந்தத் தளத்தில் இந்தப் பக்கத்தில் ” கொற்றவையின் அவதாரம்” என்ற தலைப்பின் கீழ் காணலாம்.. https://mail.google.com/mail/u/0/#inbox/1545b6ab65de427e?compose=new.அது எல்லோருக்குமான திறந்த தளம் தான்,பார்த்துக் கொள்ளலாம்.ஜெயமோகன் அவர்களது தளத்திலிருந்தே அந்தத் தளத்துக்குச் செல்லலாம்.
    வெ .சுரேஷ்.

  6. நண்பர் அன்புச்செல்வன் எழுதியிருப்பதைப்போல ஒரு நண்பர் சொன்னார் என்று கிசு கிசு பாணியில் எழுதவில்லை. நண்பர் எழுதியிருந்தார் என்றே குறிப்பிட்டிருக்கிறேன் .அதை இந்தத் தளத்தில் இந்தப் பக்கத்தில் ” கொற்றவையின் அவதாரம்” என்ற தலைப்பின் கீழ் காணலாம்.. அது எல்லோருக்குமான திறந்த தளம் தான்,பார்த்துக் கொள்ளலாம்.ஜெயமோகன் அவர்களது தளத்திலிருந்தே அந்தத் தளத்துக்குச் செல்லலாம்.http://venmurasudiscussions.blogspot.in/2016/07/89.html

  7. அன்புச்செல்வன்,
    1. கிசுகிசுபாணி
    “படைப்புக்கு இணக்கமான வகையில் வாசகன் தன்னை மிதமிஞ்சிய அளவில் ஒப்புக்கொடுத்தல் அவனது வாசிப்பை எங்கு கொண்டு செல்கிறது என்பதைச் சுட்டவே இதைச் சொல்கிறேன்” என்று சுரேஷ் எழுதியிருக்கிறார். தனது நண்பர் யார், எங்கு அவ்வாறு சொன்னார் என்பதற்கு ஆதாரம் கொடுக்காதது ஒரு குறையா? அதனால் அது கிசுகிசு ஆகிவிடுமா?
    2. என்றே தோன்றுகிறது
    ‘என்றே தோன்றுகிறது’ என்று எழுதுவதை, ‘ஏற்கத்தக்க மாற்று கருத்துகள், தகவல்கள் இருந்தால் இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்கிறேன், இப்போது இப்படி தோன்றுகிறது,’ என்று பொருள் கொள்கிறேன். விமரிசனம், என்றே தோன்றுகிறது வகையறா அல்ல என்றால் வேறென்ன?
    3. கட்டுரையின் கண்டடைதல்
    எல்லா கட்டுரைகளும் ஒரு சில விஷயங்களைக் கண்டடைந்து அவற்றை எல்லாம் கடைசி பத்தியில் தொகுத்துக் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உண்மை கண்டறியும் குழு அறிக்கைகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஒரு படைப்பை விவாதத்துக்கு திறந்து கொடுப்பதும் விமரிசனக் கட்டுரைகளின் பணியாக இருக்கலாம், இல்லையா?
    பொதுவாகச் சொன்னால், விமரிசனம் என்பது எப்போதும் தீர்ப்பாகவே இருக்க வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது 🙂

  8. எனது கருத்தை கவனத்தில் கொண்டு பதிலளித்த சுரேஷ் மற்றும் பாஸ்கர் அவர்களுக்கு நன்றி,
    //விமர்சனம் என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த பகுதி objective ஆக இல்லாமல் தனது தனிப்பட்ட விஷயங்கள், எழுத்தாளரின் தனிப்பட்ட விஷயங்கள், பெயர் தெரியாத நண்பரின்(கிசுகிசு பாணி) தனிப்பட்ட கருத்து என நீள்கிறது//
    மேற்கண்ட பகுதிகளே ஏன் இந்தக் கட்டுரை அபத்தமாக இருக்கிறது என்று நான் சொல்லிய விளக்கம். மீண்டும் கட்டுரையாளர் அவரது அந்த நண்பரின் இணைப்பை இங்கு தருவது வேடிக்கையாக இருக்கிறது. விமர்சனம் பிரதியின் அடிப்படையில் இல்லாமல் எப்படி அலைபாய்கிறது என சுட்டிக்காட்டவே இவை என்றே சொல்லியிருக்கிறேன்.
    ..
    பன்னிரு படைக்களம் நாவலில் வரும் துகிலுரிப்பு சம்பவத்தில் பாஞ்சாலியை காப்பாற்றும் சம்பவம் பற்றி பேசும் விமர்சனம் ““லக்ஷ்மணையின் தலைமையில் கௌரவர் இல்லப் பெண்கள் காப்பதாக மாற்றியிருப்பது அவ்வளவு பொருத்தமாக எனக்குத் தோன்றவில்லை.” என்று கூறுகிறதே தவிர அதற்கான objective காரணம் இல்லை என்று தானே சொல்லியிருக்கிறேன், அது தானே இந்தக்கட்டுரையின் குறைபாடு. இந்த முடிவுக்குக் காரணமாக இவரது நணபரின் கருத்தை சொல்வது அபத்தம் என்று தானே எனது கருத்து சொல்கிறது.
    (இணைப்பில் இருக்கும் கட்டுரையப் பார்த்தேன், ஏற்றுக்கொள்ள முடிகிறதோ இல்லையோ, அந்தக்கட்டுரை ஏன் அந்தத் தோழி சபதம் உரைப்பது சரியாக இருக்கிறது என்பதற்கு ஒரு காரணத்தை சொல்ல முற்படுகிறது, ஆனால் சுரேஷ் அவர்களின் கட்டுரை எந்தக்காரணமும் சொல்லாமல் தீர்ப்பளிக்கிறது(நினைக்கிறது).)
    பாஸ்கர் அவர்களுக்கு, ”என்றே தோன்றுகிறது” என்பதை நான் விமர்சித்ததும் இதே நிலைப்பாட்டில் இருந்துதான். ஏன் அப்படித்தோன்றுகிறது என்று ஒரு காரணத்துடன் என்று சொன்னால் அது விமர்சனம். கட்டுரையாளருக்கு தோன்றுவதை காரணம் சொல்லாமல் சொல்வது விமர்சனம் அல்ல என்பது இந்த கருத்தின் நிலைப்பாடு.
    //பொதுவாகச் சொன்னால், விமரிசனம் என்பது எப்போதும் தீர்ப்பாகவே இருக்க வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது // எழத்தாளர் செய்யும் பயணமும் இலக்கிய விவாதங்களும் இந்த நாவலை பாதிக்க்கிறது என்று தீர்ப்பு சொல்லும் கட்டுரையைக்காக கட்டுரையாளரிடம் சொல்கிறார் என தோன்றுகிறது. :))
    இந்த தகவல் இந்த நாவல் விவாதத்தில் தேவை இல்லை தான். இருந்தாலும் இதை மிக முக்கியமாக இந்தக் கட்டுரையாளர் கருதுவதால் இரு தகவல். எழுத்தாளர் ஜெயமோகன் செய்யும் பெரும்பாலன பயணங்கள் மற்றும் விவாதங்கள் இலக்கியம் சார்ந்தவை(அவரது தளத்தில் வரும் தகவல்கள்படி). இந்தக் பதில் எழுதும் இன்று கூட அவர் வெண்முரசு நாவல் எழுதும் மனநிலைக்காக ”கேதார்நாத்” செல்வதாக அவரது தளத்தில் பதிவு செய்துள்ளார். இவை கண்டிப்பாக படைப்புக்கு உதவும் என்பதே இயல்பான கருத்து.
    ஆனால், ஒரு எழுத்தாளர் செய்யும் பயணம் நாவலைப் பாதிக்கும் என்பது கட்டுரையாளரின் பொருந்தாத/காரணம் சொல்லப்படாத கருத்தாகவே இருக்கிறது.
    அன்புடன்
    அன்புச்செல்வன்

  9. “ இரண்டு சுழி “ன” விற்கு பதில் மூன்று சுழி “ண” வந்துள்ளது, ‘க’ விற்கு பக்கத்தில் கால் வாங்கவில்லை”… நண்பர் சுரேஷின் அடுத்த விமர்சனத்தில் அநேகமாக இது எல்லாம் வரும் என்று நினைக்கிறேன்.
    முதலில், அவரின் விமர்சனதிற்கு வருவோம்:
    அ) ஷத்ரிய மேன்மை பேசும் சிசுபாலனுக்கும், ஷத்ரியர்களை கொன்று நாக வேதங்களை முதன்மைபடுத்தும் ஜராசந்தனுக்குமான நட்பு முரனாக உள்ளது.
    ஆ) ஜராசந்தன் செய்யும் யாகமும் நான்கு வேத கட்டமைப்புக்குள்ளேயே வருகிறது. இரண்டையும் தனியாக பிரிப்பது மரபுக்கு முரணாக உள்ளது.
    இ) கம்ஸனுக்கு கல்யாணம் செய்து கொடுக்க பட்டுள்ள பெண்கள் ஜராசந்தனின் அண்ணன் மகள்கள் என்று ஒரு பகுதியிலும், மற்றொரு பகுதியில் ஜராசந்தனின் அத்தை மகள்கள் என்றும் முரனாக வந்துள்ளது.
    ஈ) வட இந்தியாவில் ஐய்ப்பசியில் மழை வருவது போல் காட்டப்படுவது நடைமுறைதன்மைக்கு முரனாக உள்ளது.
    உ) நாவலின் கடைசி பகுதியான “சூதாட்ட களம்” பகுதி சரியாக வரவில்லை. துரியனின் மகள் வந்து திரௌபதியை காப்பாற்றுவது, திரௌபதிக்கு பதில், அவள் தோழியான “மாயை” சபதம் எடுப்பது போல் வருவது முற்றிலுமாக பொருந்தவே இல்லை என்றும்,இதனால் “பாஞ்சாலி சபதம்” என்ற முக்கியமான பகுதி அதன் உச்சதிற்கு செல்லாமல் சாதாரனமாக வந்துள்ளது.
    இதற்கு என் பதில்:
    அ)வெண்முரசு அல்ல, அசல் பாரதத்தை படித்தாலே விளங்கும் சிசுபாலனிற்கு இருப்பது கிருஷ்ணன் மீது இருக்கும் தீரா வெறுப்பு என்று. ராஜசூய யாகத்தில் அவன் உரைக்க கூடிய சொற்களில் இருந்தே அது புரியும். வெண்முரசிலும் முதலில் இருந்தே அவ்வாறாக தான் வருகிறது. கிருஷ்ணனை முதன் முதலில் பார்க்கும் பொழுதே அவன் மீது தீரா வெறுப்பு வருகிறது சிசுபாலனிற்கு. இந் நாவலிலும் “இதோ இவ்வழி” , “இதோ இவ்வழி” என்று அவன் வெறுப்பே அவனை அழிவுக்கு கொண்டு செல்கிறது. கடைசியில் கிருஷ்ணனின் பேராழியால் வெட்டப்பட்டு அவன் தலை விழுகும் பொழுதும் அதுவே அவன் வழி என்று உணர்த்தி விடுகிறது. மற்றபடி ஷத்ரிய மேன்மை பற்றி அவன் பேசுவது எல்லாம் ஒரு நடிப்பு தான் என்பதை நாவல் மிக தெளிவாகவே புரிய வைக்கிறது.சிசுபாலனின் அன்னையும் அவன் கவர்ந்து வரும் முதல் மனைவியுமே யாதவர்கள் தான் என காட்ட படுகிறது. (இது பாரதத்தில் வருகிறதா என்ற கேள்விகளுக்குள் செல்ல நான் விரும்பவில்லை, ஆனால் அவன் முதல் நோக்கம் கிருஷ்ணன் மீது இருக்கும் அதீத வெறுப்பே தவிர ஷத்ரிய மேன்மை அல்ல என்பதையே நான் சொல்ல வருவது). அதனால் கிருஷ்ணன் மேல் பகையாயிருக்கும் ஜராசந்தன் மேல் அவனுக்கு நட்பு என்பது இயல்பாகவும் முற்றிலும் பொருந்தி வருவதாகவும் தான் எனக்கு தோன்றுகிறது.
    ஆ) “விழைவே வேதங்களின் முதல் படி. பாரதவர்ஷத்தின் அனைத்து பகுதிகளில்/குலங்களில் இருந்தும் வேதம் கிளர்ந்து எழுகிறது. விரிந்து கிடக்கும் அனைத்து வேதங்கலும் நான்கு வேதங்களாக சீரமைக்கபடுகிறது. (இதை செய்ததும் வியாசர் தான் என்று நினைக்கிறேன்). அதாவது தொல் வேதங்களில் இருந்து சீர் அமைக்க பட்டதே நான்கு வேதங்களும். தொல் வேதங்களில் இருக்கும் மனித பலி மெதுவாக மிருக பலியாக உருமாறுகிறது. தொல் வேதங்களில் இருப்பது அடங்கா விழைவு, நான்கு வேதங்களில் விழைவு நெறிபடுத்த படுகிறது. கிருஷ்ணர் செல்வதோ இந்த இரண்டின் அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு. அதானாலே அவன் இந்திரனின் பலியை எதிர்க்கிறான். (இது கோவை கீதை உரையில் ஜெ சொல்வதாக நான் புரிந்து கொண்டது). ஜெ இந் நாவலில் அதையே தான் சொல்ல வருகிறார். ஜராசந்தன் நூறு ராஜகுமாரர்களை கொன்று யாகம் செய்ய விழைவதை ஜெ தொல் வேதத்தின் அடங்கா விழைவோடு இணைக்கிறார். இம் மாதிரி மனித பலிகள் நான்கு வேதங்களிலே வருகிறது என்று சொல்கிறிர்கள் .(நீங்கள் குறிப்பிட்ட வரி) .வேண்டுமானால் அதர்வ வேதத்தில் வந்து இருக்கலாம். வேதத்தை பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி கொண்டு இருக்கும் பொழுது,ஜராசந்தனின் மனித பலிகளை இயற்கையாகவே கிருஷ்ணர் எதிர்க்கிறார். இதுவே இந் நாவல் வைக்கும் வரலாற்று ஊகம். கீதையின் வரிகளை சான்றாக கொண்டு இந்த வியூகங்களை ஜெ அமைக்கிறார். இது சரியோ தவறோ , இம் மாற்று வரலாறை நிரூபிப்பது புனைவு எழுத்தாளரின் வேலை அல்ல அதை வரலாற்று ஆய்வாளர்கள் செய்ய வேண்டியது.
    இ) இது தவறு தான். எனக்கும் அப்பிடிதான் தோன்றுகிறது. இதை கவர்னர் சீனுவிடம் சொல்லி இருந்தார் அவரே மாற்றி இருப்பார். நிறைய எழுதி கொண்டு இருப்பதால் இம் மாதிரி தவறுகள் (textual errors) வருவது சகஜமே. இதை எல்லாம் விமர்சனமாக எடுத்து கொள்வது சரியா என்று தெரியவில்லை.
    ஈ) இது typical suresh’s statement. பன்னிரெண்டு மாதங்கள், பன்னிரெண்டு ராசிகள். ஒவ்வொரு மாதத்திலும் அதற்கேற்ற களத்தில் ஆடல். உதா: கடக மாதத்தில் கணிகரின் எழுச்சி, மேட மாதத்தில் இந்திரன் மேடமாக வருதல். பாரதத்தின் முக்கியமான திருப்பம் வரும் பகுதி இது. அனைத்து கதாபாத்திரங்களும் சமநிலையில் இருக்க, அவர்களுக்குள் ஊழ் மெல்ல ஊடுருவிகிறது. இந் நாவல் இப்பன்னிரு படைகள காய்கள் ஒன்றை ஒன்று எதிர்த்து, வெட்டி ஊழுடன் சேர்ந்து விளையாடுவதையே விவரிக்கிறது. இது இதையுமே சொல்லாமல் ஐய்ப்பசியில் மழை வராது என்பதை மட்டும் சொல்வது என்ன வகையில் நியாயம் என்றே தெரியவில்லை.
    உ) வெண்முரசு நாவல் வரிசை முழுக்க கிருஷ்ணருக்கும் பென்களுக்கும் உள்ள இணக்கம் வந்து கொண்டே இருக்கிறது. பகடை களத்தில் திரௌபதியின் அனைத்து வார்த்தைகளும் ஒதுக்க பட, அவள் கடைசியில் கிருஷ்ணரை நினைக்கிறாள். “கிருஷ்ணர்” என்ற வார்த்தையை கேட்ட உடன் அப்பெண்கள் தங்களை உனர்கிறார்கள். புடவை இழுக்க பட, அனைவரும் தங்கள் புடவைகளை வீசி திரௌபதியை மறைத்து கொண்டே இருக்கிறார்கள். அதனால்தான் புடவை இழுக்க பட அது வந்து கொண்டே இருக்கிறது. இதற்கு மேலும் அந்த துகிலுரிப்பை logicalஆக எப்பிடி விவரிக்க முடியும். தங்கள் விமர்சன பகுதியில் வரும் படத்தை போல் கிருஷ்ணர் கையில் இருந்து graphic design யில் புடவை வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று எழுத சொல்கிறிர்கிளா, எனக்கு புரிய வில்லை.
    வெண்முரசில் திரௌபதி அன்னை மகாகாளியாகவே வர்ணிக்க படுகிறாள் என்பது உங்களுக்கு தெரியும் என்றே நினைக்கிறேன். “பிரியாகை” யில் திரௌபதி அறிமுகத்தில் இருந்தே “மாயை” அவளுடன் சேர்ந்து வர்ணிக்க பட்டே கொண்டு இருக்கிறார். “மாயை” என்பதே திரௌபதியின் “Alter Ego” வாகத்தான் வர்ணிக்க படுகிறது. தன் ஒவ்வொரு துளி ரத்தத்திலும் ரக்த பீஜன் பெருகி கொண்டே இருக்கிறான் , ஆயிரம் ஆயிரம் ரக்த பீஜங்கள் உருவாகி அன்னையை அழிக்க உருவாகி கொண்டே இருக்கிறார்கள். சிவன் அன்னை இரண்டாக பிளந்து தான் அவனை வெல்ல முடியும் என்று சொல்கிறார். அதுவே ‘ சுக்லம்” மற்றும் “கிருஷ்ண” வர்ணம் என்பது. ‘சுக்லம்’ அதாவது வென் நிறத்தில் வரும் அன்னை அன்பை பொழிந்து கொண்டே இருக்கிறாள், அனைவரையும் அனைத்து அனைத்து சென்று கொண்டே இருக்கிறாள். “கிருஷ்ண” அதாவது கருப்பு நிறத்தில் இருக்கும் அன்னை அழித்து கொண்டே இருக்கிறாள், அழித்து அழித்து ரத்தத்தில் தொய்ந்து அவள் சென்று கொண்டே இருக்கிறாள். திரௌபதி மற்றும் மாயை வேறு வேறானவர்கள் அல்ல, அவர்கள் ஒரே அன்னையின் இரு பக்கங்கள். எனவே அச் சபதத்தை உரைப்பது திரௌபதியே தான் , மாயை மூலமாக. அன்பே உருவான பேரன்னை காளியாக உருமாறி துரியன் என்னும் ரத்த பீஜனை அழிக்க போவதின் குறியீடு இது.
    சுரேஷ் தொடர்ந்து பல வகையான நாவல்களை வாசித்து கொண்டே இருக்கிறார். பல முக்கியமான நாவல்களும், எழுத்தாளர்களும் எனக்கு அவர் மூலமாகவே அறிமுகம் ஆகி கொண்டு இருக்கிறார்கள். எனக்கு தோனுவதுண்டு இப்பிடி பல நாவல்களையும், புத்தகங்களையும் வாசித்து வாசித்து அவர் எல்லா படைப்பையும் வெறும் “Text” ஆகவும், “Data” ஆகவும் தான் அனுகிறாரோ என்று.ஆனால் அவரின் வாசிப்பே இந் நாவலின் தரம் என்று நிருபிக்க முயலும் பொழுது தான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.
    சுரேஷ், கடைசியாக ஒன்று சொல்லி கொள்கிறேன், “தராசு தட்டில் எந்த பக்கம் எடை இருக்கிறதோ அப்பக்கமே துலா முள் சாய வேண்டும், வலிந்து எல்லா நேரமும் ஒரே நடு நிலையில் தான் நிற்பேன் என்றால் அது துலா முள்ளே அல்ல”.
    அன்புடன்
    ரகு ராமன்

  10. அன்புச்செல்வன் அவர்களுக்கு,
    தன்மையான பதிலுக்கு நன்றி. இது போல் நட்புணர்வுடன் நிகழ்த்தப்படும் உரையாடல்கள்தான் இச்சூழல் வேண்டுவது.
    நண்பர் சுரேஷ் சில பிழைகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். அவை பிழைகளே அல்ல என்று சொல்லலாம், அல்லது அந்தப் பிழைகள் முக்கியமானவை அல்ல என்று சொல்லலாம். ஆனால் அதை விட்டுவிட்டு வேறு எதையோ சொல்லி அவர் எழுதியதை discredit செய்வது அவ்வளவு ஆரோக்கியமான போக்கல்ல என்று தோன்றுகிறது.
    இறுதியில்கூட, இந்த நாவல்கள் இன்னும் கவனமாக எழுதப்பட்டிருக்கலாம் என்று அவர் சொல்வதாக நினைக்கிறேன். எண்பதுகளுக்கு முன் வந்த நாவல்கள் பல தொடர்கதைகளாக வந்தவற்றின் தொகுப்புகள் மட்டுமே என்ற ஒரு விமரிசனம் இருப்பதை மறந்திருக்க மாட்டீர்கள். அன்றாடம் வெளிவரும் வெண்முரசு நாவலில் பிழைகள் இருந்தால் நிச்சயம் அது பெருமையாகாது. பல அலைக்கழிப்புகளின் காரணமாக இப்பிழைகள் நேர்கின்றன என்று சுரேஷ் எழுதுவது பொருந்தாது என்றால், வேறென்ன சொல்ல முடியும்?

  11. ஒரு படைப்பைப் பற்றி எந்தப் பார்வையிலும் விமர்சனம் எழுதப்படலாம்.ஆனால் ஒரு விமர்சனம் எந்த அடிப்படையில் முன்வைக்கப்படுகிறது என்ற தெளிவு விமர்சிப்பவருக்குத் தேவை. வாசகராக ஒரு விமர்சனக் கட்டுரையை நாம் அணுகுவதும் அப்படித்தான்.
    இந்தக் கட்டுரையும் அப்படி ஒரு அறிமுகத்துடன் ஆரம்பிக்கிறது, ஆனால் இந்தக் கட்டுரையில் அந்த அடிப்படை இருக்கிறா எனப்பார்க்கலாம்.
    வழக்கமான அறிமுகத்துக்குப்பின் இப்படி சொல்கிறார் கட்டுரையாளர். இதுவே இந்தக் கட்டுரைக்கான தர்க்கமாக முன்வைக்கிறார்.
    சர்ச்சைக்குரிய இந்தப் புள்ளிகள், நாவலில் உள்ளார்ந்த தர்க்கத்துடன் புனையப்பட்டுள்ளதா என்று பார்க்கலாம். அதாவது, இதில் பேசப்படும் விஷயங்களுக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய புறத்தகவல்கள் பற்றி கேள்வி எதுவும் எழுப்பாமல், புனைவினுள் காணப்படும் அகத்தகவல்களும் அவற்றுக்கிடையே உள்ள உணர்வுத் தொடர்புகளும் திருப்தியளிக்கும் வகையில் ஒன்றுகூடி மேற்கண்ட புள்ளிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் இணைகிறதா என்று பார்க்கலாம்
    எனவே இந்து புறத்தகவல்களின் சரிபார்ப்புகள் இன்றி பிரதியைப் பற்றிய விமர்சனம் என நம்மைத் தயார்செய்கிறார். ஆனால் இரண்டு மூன்று பத்திகளிலேயே அதை மறந்து அதற்கு நேர்மாறாக எழுதுகிறார்.
    இந்தக் கட்டுரையில் இருக்கும் தர்க்கப்பிழைகள் இவை.
    1. அறைகுறை ஆராய்ச்சி
    ஒரு ஆராய்ச்சித்தகலைத் தருபவர் அந்தச் சொல்ல தனக்கு தகுதி இருந்தால் அதைச் சொல்லிவிட்டு சொல்லலாம், இல்லையெனில் ஒரு குறிப்பிட்ட மூலத்தை மேற்கோளாக்கிச் சொல்லலாம், இவை இரண்டுமின்றி ஆராய்ச்சி முடிவுகளை இந்தக் கட்டுரை அளிப்பது தவறானது
    // வட இந்தியாவின் மழைக்காலம், ஆவணியோடு முடிவடைவது. மிஞ்சிப் போனால் புரட்டாசியின் முதல் பாதிவரையே அங்கு மழைக்காலம்//
    பன்னிரு படைக்களம் நடந்த ஆண்டு எது என கண்டுபிடித்து அந்த ஆண்டில் அங்கு ஐப்பசியில் மழை இருந்ததா இல்லையா என கண்டிபிடித்த போலித் தோரணை இந்த கட்டுரையில் இருக்கிறது. காலநிலை மாற்றங்கள் அவ்வளவு மாறாமல் கால அட்டணைப் படி நடக்கிறது என்ற இவரது அதீத தன்னம்பிக்கை வேடிக்கை.
    இது இவர் ஆரம்பத்தில் சொன்ன தர்க்கத்துக்கு நேர்மாறானது. புறத்தகவல் பற்றி கேள்வி எழுப்பாமல் எனச் சொல்லிவிட்டு ஒரு நிறுபிக்கப்படாத ஒரு புறத் தகவலைப் பேசி கவலைப்படுகிறது இந்தப் பகுதி.
    2. மகாபாரத பக்தி
    //பாஞ்சாலி துகிலுரியப்படுகையில், அதிலிருந்து அவளைக் காப்பாற்றுவது யார் என்பது பாரதம் வாசிக்கும் யாருக்கும் தெரியும்//
    மறுபடியும் தான் சொன்னதை மறந்து விடுகிறார். ஆரம்பத்தில் தானே இந்த நாவலைப் பற்றிமட்டும் விமர்சிப்பதாகச் சொன்னார். இப்போது ஏன் மகாபாரம் வாசிப்பவர்கள் எல்லோரும் என்கிறார் என்ற குழப்பம் வருகிறது.
    இந்த நாவலில் வரும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு தனக்குத் தெரிந்த மாகாபாரதக் காட்சி வரவில்லை என்ற எளிய ஏமாற்றம் மட்டுமே இந்த பகுதியில் தெரிகிறது.
    3. வாசகர்களைப் காப்பாற்றும் தோரணை
    //படைப்புக்கு இணக்கமான வகையில் வாசகன் தன்னை மிதமிஞ்சிய அளவில் ஒப்புக்கொடுத்தல் அவனது வாசிப்பை எங்கு கொண்டு செல்கிறது என்பதைச் சுட்டவே இதைச் சொல்கிறேன்//
    இது ஒரு போலித் தோரணை. எல்லா வாசகர்களை விடவும் தனக்கு சிறந்த வாசிப்பு இருக்கிறது எனவும் அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்தும் கடமை தனக்கு இருக்கிறது எனவும் நம்பும் போலித் தோரணை.
    படைப்பை விமர்சிக்கும்போது தனிப்பட்ட வாசகர்களைப் பற்றி சொல்வது திசைதிருப்பும் செயலே.இதுவும் இந்தக் கட்டுரை ஆரம்பத்தில் சொன்ன தர்க்கத்தை மறந்து சொல்லப்படுகிறது.
    இந்தக் கட்டுரையில் ஒரு இடத்தில் ”இதை அண்மைக் காலத்தில் ஜெயமோகன் நிகழ்த்திய கீதை பேருரைகளோடும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்” என்கிறார். ஏன் என்கிறோம், நாம். கட்டுரையாளர் தனது தனிப்பட்ட தொடர்பு, சுற்றி நடக்கும் சமகால சர்ச்சைகள், அவருக்குத் தெரிந்த நண்பர்களின் தகவல்கள் என பல விஷ்யங்களைக் குழப்பி எழுதியிருக்கிறார். தானே சொன்ன தர்க்கத்தை மறந்தும் எழுதியிருக்கிறார்.
    இந்தக் கட்டுரையில் 19 இடங்களில் ஜெயமோகன் என்ற பெயர் வருகிறது. இவர் பிரதியை விமர்சிக்கிறாரா அல்லது எழுதாளரை விமர்சிக்கிறாரா? ஒரு உரையைப் பற்றி பேசும்போது அவர் சொல்வது போலவே நினைவில் வைப்பது பொருத்தமாக இருக்கும். ஒரு புனைவைப் படிக்கும் மனநிலை அது அல்ல.
    சொல்வனம் போன்ற ஒரு பொதுவெளியில் வரும் கட்டுரை ஒரு குறைந்தபட்ச தரம் கொண்டிருக்கவேண்டும். சுட்டிக்காட்டப்பட்ட இந்தப் புள்ளிகள் அனைத்துமே வெண்முரசு படிக்காமல், இந்த கட்டுரையை மட்டும் படித்தால் கூட பொருள்கொள்ள முடியும்.
    அடுத்த கட்டுரை இன்னும் தரமானதாக வரவேண்டும் என்ற நேர்நிலை எண்ணத்தில் இவை எடுத்துக்கொள்ளப்படும் என நம்புகிறேன்.
    அன்புடன்
    அன்புப்செல்வன்
    [பதிப்புக் குழுவின் குறிப்பு: இக்கடிதத்தில் தெரிய வரும் தட்டச்சுப் பிழைகளை நீக்கிப் பிரசுரிக்க நேர அவகாசம் இல்லை என்பதால் அப்படியே பிரசுரிக்கிறோம். கடிதம் எழுதுபவர்கள் தம் கடிதங்களைப் பிழை நீக்கி அனுப்புதல் நல்லது. இங்கு குறிப்பை இங்கு கொடுத்தாலும், இந்தக் குறிப்பின் உள்ளடக்கம் சொல்வனத்துக்குக் கடிதம் எழுதுவோர் அனைவருக்கும் சொல்லப்படுவது என்றே எடுத்துக் கொள்ளக் கோருகிறோம்.]

  12. அன்புள்ள பாஸ்கர்,
    ஒரு கறாரான விமர்சனம் என்ற அளவில் மட்டுமே இங்கு எழுதினேன். தனிப்பட்ட முறையில் விமர்சகரை discredit செய்யும் எண்ணம் இல்லை. அப்படி தோற்றம் இருந்தால் மன்னிக்கவும்.
    அன்புடன்
    அன்புப்செல்வன்

  13. 🙂
    இந்தச் சொற்கதம்பம் மிக அழகாக இருக்கிறது 🙂
    ‘அவர் இந்த அளவு எழுதுகிறார் என்பதே பிரமிப்புக்குரிய ஒன்று. இதற்கு இணை என்று மட்டுமல்ல, இது போன்ற முயற்சியும்கூட பிறர் கற்பனைக்கும் சாத்தியமில்லாமல் இருக்கிறது’ என்று எழுதி, ‘அவர் எழுதியிருக்கக்கூடிய நாவல்களின் இக்குறை வடிவங்கள்தான் இப்போதைக்கு நமக்கு கிடைப்பது’ (‘இப்போதைக்கு’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை கவனிக்க வேண்டும்), என்றெல்லாம் எழுதியுமே குறை சொன்ன காரணத்துக்காக இக்கட்டுரையை முற்றிலுமே அடியறுக்கப் பார்க்கிறீர்கள் என்பது சிறிது வருத்தமாகத்தான் இருக்கிறது.
    ஆனால், “அடுத்த கட்டுரை இன்னும் தரமானதாக வரவேண்டும் என்ற நேர்நிலை எண்ணத்தில் இவை எடுத்துக்கொள்ளப்படும் என நம்புகிறேன்”- என்ற வாக்கியத்தில் உள்ள அறியாமையைப் பார்க்க அப்படிச் சொல்ல முடியவில்லை. உங்கள் எழுத்தாற்றலுக்கு நீங்கள் எந்த அரசியல் மேடையையும் வென்று வருவீர்கள், வாழ்த்துகள்.

  14. அன்புச்செல்வன் அவர்களுக்கு,
    நான் புறத்தகவல்கள் சரிபார்ப்பு இன்றி உள்ளார்ந்த தர்க்கத்துடன் என்று சொல்வது , ஜராசந்தன் கதை, ஜராசந்தன்-சிசுபாலன், கிருஷ்ணன் முக்கோண உறவு குறித்தும் .அதன் குழப்பங்கள் குறித்தும் . அது பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லையே ஏன்?மேலும் தனி மனிதப் பகைகளை கொள்கை அடிப்படையிலான போராக மாற்றுமிடத்து தர்க்கம் பிழைத்துவிடுகிறது என்றும் சொல்கிறேன். அங்குதான் ஆசிரியரின் கீதை உரையோடு தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டி உள்ளது.
    அந்தப் பகுதியை முடித்துவிட்ட பிறகே வடஇந்தியாவின் பருவ மழைக் காலம் பற்றிய தகவல் பிழைக்கு வந்துள்ளேன்.உங்கள் பதிவிலிருந்து நீங்கள் பன்னிரு படைக்களம் படித்திருக்கிறீர்களா என்று என்னால் திட்டவட்டமாக அறியமுடியவில்லை. அதைப் படித்திருந்தால், அந்த ஐப்பசி மழை ஒரு one off event ஆக இல்லாமல், மழைக்காலம் என்று சித்தரிக்கப்பட்டிருப்பது புரியும்.அதில்தான் பிழை என்கிறேன்.
    பாஞ்சாலி துகிலுரியப்படும் காட்சி பற்றி வருவதற்கும் நான் முன்னே சொன்னதுதான். அந்த முதல் புத்திக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பாரதம் படிக்கும் யாருக்கும் யார் என்று தெரியும் என்று சொல்வது, வெண்முரசில் அது அவ்வாறல்லாமல் இருக்கும் வேறுபாட்டைச் சுட்டத்தான்.வேறுபடக்கூடாது என்று நான் எங்குமே சொல்லவில்லை. நான் சொல்வது அந்தக் காட்சி convincing ஆக வரவில்லை என்றுதான். நீங்கள் பன்னிரு படைக்களம் படித்திருந்தால் எளிதாக ஒரு கேள்வி வரும். சூதாட்டத்திற்காக, பீஷ்மரையும்,திருதராஷ்டிரனையும், போரில் கொன்று தன் இச்சையை நிறைவேற்றிக் கொள்ளுமளவுக்கு உன்மத்த நிலையில் இருப்பதாகக் காட்டப்படும், துரியன், அவன் இல்லத்துப் பெண்களையா மதிக்க போகிறான்? வெகு சுலபமாக அவர்களை விலக்கிவிட முடியுமே?
    ஒரு விமரிசனத்தில் படைப்பின் ஆசிரியர் பெயரைக் குறிப்பிடுவது குற்றம் அல்ல என்றே இதுவரை நினைக்கிறேன்.
    மற்றபடி என் அடுத்த கட்டுரையை நீங்கள் எதிர்பார்க்கும் தரத்துக்கு எழுத முயல்கிறேன் நன்றி.

  15. ரகுராமன் அவர்களுக்கு,
    //இரண்டு சுழி “ன” விற்கு பதில் மூன்று சுழி “ண” வந்துள்ளது, ‘க’ விற்கு பக்கத்தில் கால் வாங்கவில்லை”… நண்பர் சுரேஷின் அடுத்த விமர்சனத்தில் அநேகமாக இது எல்லாம் வரும் என்று நினைக்கிறேன்./
    இந்த வரிகளில் உள்ள அவமதிப்பை நான் விழுங்கிக்கொள்கிறேன், நீங்கள் நண்பர் என்பதால். ஆம், ஒரு அளவுக்கு மேல் இம்மாதிரிப் பிழைகள் வருமென்றால் அதையும் சொல்லித்தான் ஆகவேண்டும். பல விமரிசனங்களில், இம்மாதிரியான, குறைகள் சொல்லப்படுவதை (படிக்க முடியாதபடி எரிச்சலூட்டும் அச்சுப் பிழைகள்) நான் படித்திருக்கிறேன்.மேலும் ஓர் எழுத்து மாறினாலும், சொல்லும் அதன் பொருளுமே மாறிவிடும் அபாயம் இருப்பது உங்களுக்குத் தெரியாதா? போகட்டும்,
    அ ) சிசுபாலன், ஜராசந்தன், கிருஷ்ணன் ஆகியோரின் தனிப்பட்ட மோதல்களை, ஒரு clash of clans or ideologies என்று மாற்றம் செய்வதன் பொருந்தாமையைத் தான் நான் சுட்டிக் காட்டுகிறேன்.அதுதான் இந்தப் புனைவின் முக்கியமான தர்க்கப் பிழை.சிசுபாலன், கிருஷ்ணன் மேல் உள்ள பகையைத்தான், க்ஷத்ரிய மேன்மை என்று நடிக்கிறான் சரி, ஆனால்,, க்ஷத்ரியர்களை வெறுக்கும், ஜராசந்தன் ஏன் சிசுபாலனிடம் நட்பு பாராட்ட வேண்டும், 96 மன்னர்களிலிருந்து லிருந்து 100க்குப் போக மிக எளிதாக சிசுபாலனை கொன்றிருக்கலாமே.. மஹாபாரதக் கதையாடலில், இன மோதல் இன மேட்டிமை போன்றவை இருக்கலாம். ஆனால் இங்கு ஆசிரியர்,தனி மனிதர்களுக்கிடையேயான மோதலை,வலிந்து ஜராசந்தன் மூலமாக, பொருந்தாத,ஒரு இன மோதலை உருவாக்குகிறார்.That lacks Conviction அதற்காகவே அவனுக்கு ஒரு அரக்கப் பின்னணியை வலிந்து உருவாக்குகிறார். (நிறையத் தவறுகளுடன்).இதைத்தான் நான் சுட்டிக் காட்டுகிறேன். அதனால் இதில் வரும் ஜராசந்தன் மகள்கள் பற்றிய விவர பிழைகள், அவன், அவன் தந்தைக்கு ஒரே மகனா போன்றவற்றையெல்லாம், சகஜமாக என்று எடுத்துக் கொள்ள முடியாது.மீண்டும் உங்களுக்கும் பிழை என்று தோன்றுவதாலேயே அவை பிழைகள் என்று உணர்ந்து அச்சில் வருவதற்குள் மாற்றப்படுமா என்ற ஒரு கேள்வியும் உள்ளது.மேலும்,எந்த மாதிரிப் பிழை வந்தால் சகஜத்தைத் தாண்டியது என்று நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.ஒருவேளை, ஒரு flowல் திரௌபதி துரியோதனன் மனைவி என்று வந்து விட்டால் தானோ? ஒரு Magnum Opus என்பதை உருவாக்குவதில், இவ்வளவு அசிரத்தை வரலாகாது.
    ஆ) புருஷ மேத யாகம், சுக்ல யஜுர் வேதத்தில்வருகிறது.(விக்கியில் பார்க்கலாம்). அதர்வத்துக்கெல்லாம் போக வேண்டாம்.இந்தத் தொல்வேதம் போன்றவற்றுக்கெல்லாம் ஏன் ஆதாரம் கேட்கவேண்டியுள்ளது என்றால், இங்கு ஒரு புனைவாகக் கட்டப்படுவது, கீதை உரையில், ஒரு உண்மையாக வைக்கப்படுகிறது.புனைவு உண்மையாக மாற்றப்படும் போது ஆதாரம் அவசியம்.அதனாலதான் அதற்கு ஒரு குறைந்தபட்ச ஆதாரம் உள்ளதா என்று கேட்க வேண்டியுள்ளது. அதைச் சொன்னால் அதில் உள்ளதையே திருப்பி நீங்கள் ஒப்பித்தால் நான் என்ன செய்ய. உங்கள் credulousness என்னை அசர வைக்கிறது.கவர்னர் சீனுவிடம் சொல்லி எவ்வளவு மாற்றப்பட்டது மாற்றப்படவில்லை என்பது நாம் அனைவரும் அறிவோம். விவாதங்கள் அங்கு எந்த அளவுக்குப் போய் விலகுவதிலும், விலக்குவதிலும் முடிகிறது என்பதையும் நாம் அறிவோம். அதனாலேயே நான் விமர்சனங்களைத் தனியாக எழுதுவது என்று முடிவுக்கு வந்தேன்.
    ஈ) அந்த வீமர்சனத்தில் எல்லாமே சுரேஷ் சொல்வதுதான்.ஒன்னு டிபிக்கல் இன்னொன்று untypical என்றெல்லாம் ஒன்றுமில்லை. மீண்டும் நீங்கள் வெண்முரசில் என்ன உள்ளதோ அதையேதான் திருப்பி சொல்கிறீர்கள்.நான் அதைத் தாண்டி அங்கு எது பொருத்தமில்லாமல் இருக்கிறது என்று சொல்கிறேன். நான் ஒவ்வொரு குறை சொல்லும் போதும் அதை ஒரு நிறையால் balance செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.. அப்படித் துவங்கினால், வெண்முரசு, அளவுக்கு நானும் எழுதவேண்டும்.அதனால்,நான் எழுதியது தவறு என்றால் அதை நீங்கள் ஆதாரத்தோடு மறுக்கலாம்.மேலும் நீங்கள் உயர்வாகச் சொல்லும் விஷயங்களில் பலதையும் நானும் இவை எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறேன். அதற்கென்றே வெண்முரசு விவாதத் தளமும் இருக்கின்றது.மேலும் அதில் வருபவைக் கூட மிகப்பெரும்பாலும் ஆசிரியர் சொல்வது எனக்குப் புரிந்துவிட்டது.என்பது போன்ற மகிழ்ச்சிக் கடிதங்கள் தவிர, படைப்பை புற வயமாக ஆய்ந்து சொல்லப்படுபவை அல்ல.
    அப்புறம் பொதுவாகவே இந்த கன்னி அன்னை விஷயம் வெண்முரசுவில்,ஒரு template ஆகிவிட்டது.சிங்கப்பூர் இலக்கிய விஷயத்தில் ஜெ சொல்லும் கண்ணகிச் சீக்கு அளவுக்கு போய்விடுமோ என்று பயமாக உள்ளது ஒரு பாத்திரம்,நினைத்தால், அடக்கி ஆளும் ஆசை மிக்க பேரரசி, பின் வஞ்சினம் கூட உரைக்காத , பேரன்னை, இதிலெல்லாம் ஒரு consisitency இல்லை., … மாயை alter -ego என்றால் அவளின் எல்லைகள் என்ன? நாளை, துச்சாதனன்,மார் பிளந்து ரத்தம் வரும்போது அவள்தான் அதைப் பூசி கூந்தல் முடிவாளா?அப்படி முடிந்தாலும் அதில் பிழை இல்லை என்றே நீங்கள் நினைக்கலாம். எனக்குத் தாங்காது.
    பிறகு இந்த Text, Data விஷயம். நீங்களே என் நிறைய விமர்சனங்களை பிடித்திருப்பதாக சொல்கிறீர்கள். சமீபத்தில், போகன் சங்கரின், சிறுகதைகளைபி பற்றி எழுதியிருக்கிறேன்… அதில் எங்காவது இந்த மாதிரிக் குறைகள் சுட்டிக் காட்டியிருக்கிறேனா சொல்லுங்கள். நான் , தி.ஜா. சு,ரா.அ .மி. இ.பா போன்ற தமிழின் முக்கியமான அனைத்துப் படைப்பாளி களையும் வாசித்துள்ளேன், அங்கெல்லாம் எங்குமே இந்த மாதிரியான தர்க்க, தகவல் பிழைகள் சுட்டிக்காட்ட சந்தர்ப்பம் அமைந்ததே இல்லை. அவை இருக்குமிடத்தில் சொல்லத்தானே வேண்டும்.Flaw is in the Text not with the Reader. அதற்கு வாசகனுக்கு என்ன , எவ்வளவு தெரிந்திருக்கிறது என்பது முக்கியமான விஷயம்.நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று நீங்கள் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
    இதில் உள்ள சோகம் என்னவென்றால், நீங்கள் எயதும் அம்பெல்லாம், என்மீது.ஆனால் நான்எய்துவது எல்லாம், உங்கள் மீதல்ல, படைப்பாளியின் மீது இதில் தனிப்பட்ட வகையில் ஒரு இழப்பு நேரலாம் என்றாலும் கூட சிலவற்றை சொல்லித்தானே ஆகவேண்டியிருக்கிறது..

  16. ரகுராமன் மற்றும் அன்புச்செல்வன் அவர்களுக்கு,
    முடிவாய் நானும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.
    புறத்தகவல்கள், உள்ளொழுங்கு என்று எதைப் பற்றியும் கேள்வி கேட்காமல் ஒரு மாயாஜாலக் கதையை வாசிப்பதற்குரிய மனநிலையில் புனைவு வாசித்துவிட்டு அதைப் பேசுகையில் அதிலுள்ள முரண்களைத் தவிர்த்து உள்ளடுக்குகளை விதந்தோதுவது மட்டுமல்லாமல், அதன் சமூக, பண்பாட்டு, வரலாற்று யதார்த்தத்தை நிறுவுவது நவீன வாசிப்புக்கு உரிய மனநிலையா? புறத்தகவல்கள் மற்றும் உள்ளொழுங்கு பற்றி பேச வேண்டாம், அல்லது இவை முக்கியமில்லை என்றால், “கற்பில் சிறந்தவள் சீதையா மண்டோதரியா?” என்பது போன்ற கேள்விகளுக்குத்தானே நாம் இன்னும் விடை தேடிக்கொண்டிருக்க வேண்டும்?
    (மாயாஜாலக்கதைகள் இலக்கியமாகாது என்றில்லை. கிறித்தவ நம்பிக்கை மெலிந்து வந்த காலத்தில் புதிய தலைமுறை வாசகர்கள் கிறித்தவ இறையியலில் நம்பிக்கை கொள்ளும் வகையில் நவீன தொன்மங்கள் படைக்கும் நோக்கத்தில், C.S. Lewis மற்றும் J.R.R. Tolkien எழுதிய நாவல்கள், விமரிசக அங்கீகாரம் பெற்றது மட்டுமல்லாமல் இன்றும் மிகச் சிறந்த திரைப்படங்களாய் நம்மை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றன.)
    தனியொரு கட்டுரை ஒரு படைப்பை என்ன செய்து விட முடியும்? இல்லை, அது குறித்த விவாதங்கள் மட்டுமே அந்தப் படைப்பின் இடத்தையும் எழுத்தாளரின் முக்கியத்துவத்தையும் நிறுவி விட இயலுமா? அதிகபட்சம், நம் இலக்கிய வாசிப்பில் எவை முக்கியம் என்பது குறித்த ஒரு உணர்வை ஏற்படுத்தலாம், அவ்வளவுதான். சொல்லப்போனால், இது போன்ற கட்டுரைகள் ஒரு படைப்பை இன்னும் பல வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி, அது பேசுமளவு முக்கியத்துவம் கொண்டது என்ற உணர்வளித்து அதை வாசிக்கும் ஆர்வத்தையே ஏற்படுத்துகின்றன. இது எதுவும் உங்களுக்கு தெரியாததல்ல.
    வெ சுரேஷ், புறத்தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், ஒரு படைப்பின் உட்கட்டமைப்பு அதன் தர்க்கத்துக்கு இசைவாய் அமைந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார், அவ்வளவே. இதை ஆக்கப்பூர்வமான வகையில் அணுகினால் அது நம் வாசிப்பைச் செறிவாக்கும். மாறாய், சொற்கதம்பத்தால் நிறைத்தல், வலுவற்றதாய்த் தோன்றும் வாதங்களைத் தேர்ந்தெடுத்து கட்டுரையை நிராகரிக்க முயற்சி செய்தல் போன்றவை அரசியல் செயல்பாட்டுக்குரியவை- அதிகாரத்தைக் கட்டிக்காக்க முற்படுபவர்களுக்கு மட்டுமே அவை உதவுகின்றன, நமக்குத் தேவையில்லை.
    நன்றி.

  17. [பதிப்புக்குழுவின் குறிப்பு:
    இந்த வாசகரின் மறுவினை பிரசுரத்திற்கு ஏற்றதல்ல என்று விலக்கப்பட்டிருக்கிறது. நடக்கும் உரையாடல்/ சர்ச்சைக்கு ஏதும் வளம் அல்லது மாற்றுப் பார்வைகளைக் கொடுக்காமல் உள்ள பதிவுகளை அனுமதிப்பதால் தேவையற்ற பகைமைகள்தான் வளரும். வாசகர்கள் பொதுக் கருத்து வெளியில் செழுமையான கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும் விதத்தில் தம் கருத்துகளை வெளிப்படுத்துமாறு கோருகிறோம்.]

  18. அன்புள்ள மித்திலன்,
    நான் குறிப்பிட்டு சொன்ன எந்த விமர்சனத்தையும் எதிர்கொள்ளாமல், நான் இந்த விமர்சனங்களை எழுதுவது எதற்கு என உங்கள் முதல் கமெண்ட்டில் உள்நோக்கம் கற்பிக்கிறீர்கள். அரசியல் நோக்கம் இருக்கிறது அதிகாரத்தைக் கட்டிக்காக்க எழுதப்படுகிறது என முத்திரை குத்துகிறீர்கள். இவையிரண்டும் அறிவுத்தள செயல்பாட்டுக்கு எதிரானது என பணிவுடன் சொல்லிக்கொள்கிறேன்.
    படைப்பை காப்பது எனது நோக்கமென்றோ, அல்லது சுரேஷ் அவர்களின் விமர்சனத்தை காப்பது உங்கள் நோக்கமென்றோ நினைப்பது ஒரு எளிய பார்வை மட்டுமே, இலக்கிய வாசகர்கள் இந்த பார்வையை கருத்தில்கொள்வதில்லை, விமர்சனப் பிரதியில் என்ன இருக்கிறது என்பது குறித்தே இங்கு விவாதித்து வருகிறோம். எனது விமர்சனம் சில குறிப்பிட்ட புள்ளிகள் குறித்தே. உண்மையில் இந்தக் கட்டுரைகூட எழுத்தாளரின் படைப்புக்கு வெளியில் எழுத்தாளரைப் பற்றி கேள்விப்படும் விஷயங்களை ( பயணம்/இலக்கிய விவாதம்) படைப்புடன் தொடர்பு படத்துகிறது, அது தங்கள் பார்வையில் அரசியலாகத் தெரியவில்லை, ஆனால் எனது விமர்சனம் கட்டுரையாளரின் எந்த தனிப்ப்ட்ட விஷயம் பற்றியோ நோக்கம் பற்றியோ விமர்சிக்கவில்லை என்பதை யாரும் கவனிக்கலாம்.
    முன்னரே குறிப்பிட்டது போல நான் கட்டுரையாளரை discredit செய்யவில்லை, ஆனால் கண்டிப்பாக இந்தக் கட்டுரையை ஏற்கவில்லை. இந்தக் கட்டுரையின் தரத்திலும், தர்க்கத்திலும், ஒழுங்கிலும் குறிப்பிட்ட கேள்விகளை எழுப்பியுள்ளேன். அதற்கான தன்தரப்பு விளக்கங்களும் கட்டுரையாளரால் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை படித்து முடிவுக்குவரவேண்டியவர்கள் வாசகர்களே.
    ”இந்த படைப்பைப் பற்றி இவராவது கட்டுரை எழுதிகிறாரே”என்பது போன்ற சலுகைகள் விமர்சனத்தைத் தடுக்க மட்டுமே உதவும். இதுபோன்ற எளிய உணர்ச்சிகள் விமர்சனத்தில் தேவையில்லை என நினைக்கிறேன். கட்டுரையாளர் இதுபோன்ற சலுகைகளை எதிர்பார்க்கிறார் என நான் நம்பவில்லை.
    தனிமனித விமர்சனம் இன்றி படைப்பைப் பற்றியும் விமர்சனத்தைப் பற்றியும் விவாதிப்பது விவாதத்தில் இருக்கும் அனைவருக்குமே சில புரிதல்களைத் தரும் என நம்புகிறேன்.
    அன்புடன்
    அன்புச்செல்வன்

  19. அன்புள்ள சுரேஷ்,
    மிகப் பொறுமையான தங்கள் விளக்கங்களுக்கு நன்றி.
    எனது கருத்துகளும் தங்கள் கருத்துக்களும் இலக்கிய வாசகர்களின் பார்வைக்கு திறந்திருக்கின்றன. அவரவர் புரிதலின் அடைப்படையில் எடுத்துக்கொள்ளட்டும்.
    கடைசியாக, வெண்முரசு விமர்சனத்துக்காக இவ்வளவு நேரம் செலவிடும் நான் வெண்முரசு வாசகன் என்பதில் தங்களுக்கு சந்தேகம் வேண்டாம். ஒரு சம்பவம் நடக்கும்போது ஏன் இப்படி நடந்தது என படைப்பில் இருக்கிறதா என உள்நோக்கிப் பார்ப்பது ஒருவகை வாசிப்பு. மகாபாரதத்தில் நமக்குத் தெரிந்தது இதில் இல்லையே இதில் நாம் பார்க்கத் தேவையில்லை.
    துகிலுரிப்புக்கு முன்னரே வரும் பல பகுதிகள் இந்த உச்சத்துக்கான மனநிலையை உருவாக்குகின்றன. வெண்முரசில் ஆரம்பத்தில் இருந்தே பெண்கள் இளைய யாதவனை விரும்புவது, துரியன் திருமண நேரத்திலேயே பானுமதி தனக்கு கிருஷ்னன் மீது இருக்கும் மாறா மதிப்பைச் சொல்வது (இது நினைவில் இருப்பவர்களுக்கு அவரது மகள் கிருஷ்ணை என பெயர் இருப்பது வியப்பளிப்பதில்லை), கிருஷ்னையின் அறிமுகம், அவளின் நடவடிக்கைகள், பாஞ்சாலியை அழைத்துச்செல்ல போனவர்கள் மாயையுடன் நடக்கும் சம்பவங்கள்(இதைப் படித்த பின்னரும் மாயையை எளிய சேடிப்பெண் என நீங்கள் நினைப்பது வியப்பு), எருமையனுடன் விகர்ணன் அனுபவம் (ஆண்களின் பலம்/பலவீனம்), பெருகும் துரியன், ஆகியற்றை ஒருமுறை நினைவில்கொள்ள வேண்டுகிறேன். இதோடு வெண்முரசில் இதற்கு முன்வந்த மக்கள் எழுச்சிகளையும் ஒப்பிடுவது ஒரு நல்ல கட்டுரைக்கான கரு.
    அன்புடன்
    அன்புச்செல்வன்

  20. அன்புச்செல்வன்,
    //மகாபாரதத்தில் நமக்குத் தெரிந்தது இதில் இல்லையே இதில் நாம் பார்க்கத் தேவையில்லை.// , இந்த உங்கள் வரிகள் நான் மஹாபாரத்திலிருந்து வெண் முரசு மாறுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாமல், எழுதுகிறேன் என்ற அர்த்தத்தில் சொல்வது போல் உள்ளது.அது அப்படி அல்ல. .முதற்கனல் நாவல் குறித்த எனது பதிவுகளை நீங்கள் பார்க்கலாம்.விழாக்களும், விரித்தலும், பொருத்தம் என்று எனக்குத் தோன்றுமிடத்து நான் பாராட்டியிருமிருக்கிறேன். பொருத்தமில்லை என்று தோன்றுமிடங்களை சுட்டிக் காட்டியிருக்கிறேன். இந்த இடம் அப்படி நான் நினைக்கும் இடங்களில் ஒன்று.கண்டிப்பாக எல்லோருக்கும் அப்படி இருக்க வேண்டுமென்பதும் இல்லை.இறுதியாக நீங்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன்
    எனது கருத்துகளும் தங்கள் கருத்துக்களும் இலக்கிய வாசகர்களின் பார்வைக்கு திறந்திருக்கின்றன. அவரவர் புரிதலின் அடைப்படையில் எடுத்துக்கொள்ளட்டும்.
    நன்றி.

  21. அன்புச்செல்வன் அவர்களுக்கு,
    இந்தக் கட்டுரையை எடிட் செய்தவன் என்ற வகையில் இதன் வடிவம் குறித்து மட்டுமே நான் பதில் சொல்ல முடியும். கட்டுரையின் உள்ளடக்கம் குறித்து சுரேஷ் விளக்கம் தெரிவித்திருக்கிறார்.
    கட்டுரையில் சுரேஷ் சுட்டிக்காட்டியவை (i) தகவல் பிழைகள், (ii) இந்த நாவல் மகாபாரதத்திலிருந்து முரண்படும் சில இடங்கள், (iii) வெண்முரசு வரிசையில் உள்ள முந்தைய நாவல்களிலிருந்து வேறுபடும் இடங்கள், மற்றும் (iv) நாவலின் பொதுப்பார்வையுடன் பொருந்தாததாய்த் தோன்றும் பாத்திரப் படைப்பும் கதையமைப்பும்.
    இதில் தகவல் பிழைகளைத் திருத்துவது எளிது, அது ஒரு பெரிய விஷயமில்லை. வெண்முரசு வரிசையில் உள்ள முந்திய நாவல்களிலிருந்து முரண்படும் இடங்களையும் சிறிது முயற்சி செய்தால் சரி செய்துவிட முடியும். பாரதத்திலிருந்து வேறுபடும் இடங்கள் கதையை மேம்படுத்துவதாய் உள்ளதா இல்லையா என்பது சர்ச்சைக்குரிய விஷயமாகவே எப்போதும் இருக்கும். நாவலின் பொதுப் பார்வைக்கு பொருந்தவில்லை என்று சொல்லப்படும் விஷயங்களுக்கும் விவாதித்து தீர்வு காண முடியாது.
    விவாதம் பின்னிரண்டு விஷயங்கள் குறித்து இருந்திருந்தால் அதில் வெவ்வேறு விமரிசனப் பார்வைகள் வெளிப்பட்டிருக்கும். ஆனால் துரதிருஷ்டவசமாக, இங்குள்ள பின்னூட்டங்களில் பேசப்பட்ட விஷயங்களில் பெரும்பாலானவை, எளிதில் சரி செய்யப்படக்கூடிய முதலிரண்டு விஷயங்களை நியாயப்படுத்தும் விதமாகவே உள்ளன, போகட்டும்.
    உங்கள் முதல் பின்னூட்டம் இந்த நான்கு விஷயமாக பேசப்பட்ட எதையும் எதிர்கொள்ளாமல் கிசுகிசு பாணி கட்டுரை, ‘என்றே தோன்றுகிறது’ வகையறா, கண்டடைதல் இல்லாத அபத்த முடிவு என்ற மூன்று முக்கியமான தலைப்புகளில் கட்டுரையை முழுமையாக நிராகரிக்கிறதா இல்லையா என்பதை பாருங்கள், இது சொற்கதம்பத்தை கொண்டு குவித்தல் அல்லாமல் வேறென்ன?
    பயணங்கள் குறித்து. அதுதான் உங்களைக் காயப்படுத்தியிருக்கிறது என்று நினைக்கிறேன். இதற்கு இரண்டு பதில்கள் சொல்லலாம்: (i) ஒரு படைப்பை பேசும்போது அது எழுதப்பட்ட காலத்தின் புறச்சூழல், எழுத்தாளரின் சமூக பின்புலம், உடல்நிலை மற்றும் உளநிலை போன்ற விஷயங்களைக் கணக்கில் கொண்டு விமரிசனம் செய்து இதுவரை யாருமே எழுதியது இல்லையா, அதையெல்லாம் கிசுகிசு பாணி எழுத்தாகத்தான் நிராகரித்து வந்திருக்கிறீர்களா? இனியும் யாராவது எழுதுபவரின் தனிப்பட்ட விஷயங்களைக் கொண்டு எழுத்தை மதிப்பிட்டால் அதை நிராகரிக்கப் போகிறீர்களா? (ii) இந்த நாவலின் பகுதிகள் தினமும் எழுதி இணையத்தில் இடுகையிடப்படுவதை நாம் பார்க்கிறோம். நேரமின்மை காரணமாகவே முதலில் சொல்லப்பட்ட இருவகை பிழைகளும் நேர்கின்றன, இதற்கு இன்னும் சிறிது நேரம் ஒதுக்கலாம் என்ற ஒரு வாசக கோரிக்கையாக பயணங்கள், விவாதங்கள் பற்றிய குறிப்பைப் பார்க்கக்கூடாதா?
    ஒரு வாசகன், தன் கட்டுரையின் இறுதியில், “… இன்னும் அமைதியான காலத்தில், இன்னும் ஓய்வும் அமைதியும் இன்னும் ஒருமையும் கூடிய உலகில் …. இருந்திருக்கக்கூடாதா என்று ஏக்கமாகவே இருக்கிறது. அப்போது அவர் எழுதியிருக்கக்கூடிய நாவல்களின் இக்குறை வடிவங்கள்தான் இப்போதைக்கு நமக்கு கிடைப்பது,” என்று முடிவாக எழுதுவதில் உள்ள அபிமானம் வெளிப்படை.
    இந்தக் கட்டுரை குறித்து இன்னும் பேச விருப்பமிருந்தால் natarajandotbaskaranatgmaildotcom என்ற மின்அஞ்சல் முகவரியில் என்னை தொடர்பு கொள்ளலாம், அல்லது இங்கு தொடர்ந்து பின்னூட்டமிடலாம். உங்கள் விருப்பம்.
    நன்றி.

    1. இந்தக் குறிப்புக்குப் பதில் வந்தால் அதைப் பிரசுரித்து விட்டு, அத்துடன் இந்தக் கட்டுரைக்கான மறுவினைகள் பகுதியை மூட உத்தேசிக்கிறோம். வந்திருக்கிற மறுவினைகள் பலவும் நீண்டவை. இவற்றைத் தொகுத்து அவரவர் அளிப்பாக ஒரு கட்டுரையாக அனுப்பியிருந்தால் நீண்ட கால நோக்கில் அவை பயனுள்ள கருத்துத் தொகுப்புகளாக இருந்திருக்கும். வாசகர்கள் சுருக்கக் குறிப்பாக ஏதும் சொல்வதற்கு மறுவினை பகுதியையும், பல கருத்துகளைச் சொல்வதானால் அதற்கு கட்டுரையாக அனுப்புவதையும் ஒரு வழி முறையாகக் கொண்டால் நல்லது. இதுவரை பங்கெடுத்தவர்களுக்கு எங்கள் நன்றி.
      பதிப்புக் குழு

  22. அன்புள்ள மித்திலன்,
    எனது இந்த பின்னூட்டங்கள் இங்கி வெளியாகியிருக்கும் விமர்சனப் பிரதி பற்றியே. இந்தக் கட்டுரையாளர் இதற்கு முன் என்ன செய்திருக்கிறார் அவரது நோக்கம் என்ன என்று ஆராயும் நிலையில் எழுதப்பட்டதல்ல.
    நீங்கள் குறிப்பிட்டது போல ”எதோ ஒரு விஷயத்தால் காயப்பட்டு அந்தக் காயத்தை விமர்சனமாக எழுதுபவர்களும் இருக்கலாம், ஆனால் அது அப்படி எழுதுபவர்வருக்கு எந்த ஒரு இலக்கியம் தரும் அறிவார்ந்த முன்னேற்றத்தையும் தராது, அது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” என்பதே தங்களைப்போலவே எனது கருத்தும்.எனது பின்னூட்டம் எந்த தனிமனித காயத்திலும் உருவானது இல்லை. முழுவதும் இந்த விமர்சனப் பிரதியை எந்த ஒரு தனிமனித தாக்குதலும் இன்றி பின்னூட்டம் இடும்போது நான் காயப்பட்டேன் என்று என்னை விமர்சிப்பது சரியல்ல என்பதை பணிவுடன் தெரிவிக்கிறேன்.
    வெண்முரசு நாவலை நான் நியாயப்டுத்துகிறேன் எனபதும் உங்களது முன்முடிவாகவே இருக்கிறது. மாறாக எனது பின்னூட்டங்கள் (6 புள்ளிகள்) இந்தக் கட்டுரை ஏன் தரத்திலும், தர்க்கத்திலும், ஒழுங்கிலும் முழுமையற்று இருக்கிறது என்று மட்டுமே பேசுகிறது, இங்கு வெண்முரசை நியாயப்படுத்தவில்லை. இந்தக் குழப்பம் வரத்தேவையில்லை என்றே குறிப்பிட்ட 6 புள்ளிகளை தலைப்பிட்டு சுட்டுக்காட்டியுள்ளேன். அந்த 6 புள்ளிகளையும் (அதற்கான கட்டுரையாளரின் விளக்கங்களையும்) இலக்கிய வாசகர்கள் (எனது நோக்கத்தை சந்தேகிக்காமல்) கருத்தில் கொள்ளவேண்டும் என்பதே எனது கோரிக்கை.
    வெண்முரசு பற்றி தரமான கட்டுரை வந்தால் இலக்கிய வாசகன் என்ற முறையில் வரவேற்பது எனது கடமை. ஆனால் இந்தக் கட்டுரை அப்படியானதல்ல என்பது மட்டுமே எனது கருத்து.
    அன்புள்ள சுரேஷ்,
    //மஹாபாரத்திலிருந்து வெண் முரசு மாறுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாமல், எழுதுகிறேன் என்ற அர்த்தத்தில் சொல்வது போல் உள்ளது//
    இது தங்களைப் பற்றிய பொது விமர்சனம் அல்ல. இந்தக் கட்டுரையில் இருக்கும் ஒரு துகிலுரிப்பு சம்பவம் பற்றிய முக்கிய புள்ளி பற்றியது. அதற்கான உங்கள் விளக்கத்தை பின்னூட்டத்தில் பார்த்து, நீங்கள் கேட்டுக்கொண்டதால் மட்டும் எனது விளக்கத்தையும் அந்த பின்னூட்டத்தில் அளித்துள்ளேன்.
    இந்தப் கட்டுரையாளரே இன்னொரு பின்னூட்டத்தில் கூறியிருக்கது போல அவரது அம்புகள் படைப்பாளியை நோக்கியதாக இருக்கலாம். ஆனால் எனது பின்னூட்டங்கள் கட்டுரையாளரை நோக்கியது அல்ல, இந்தக் கட்டுரையை நோக்கியது மட்டுமே.
    அன்புடன்
    அன்புச்செல்வன்

  23. போதுமான அளவு சர்ச்சை நடந்து விட்டதாகப் பதிப்புக் குழுவினர் கருதுகிறதால் இந்தக் கட்டுரைக்குப் பின்னூட்டங்கள் இடும் வசதி நிறுத்தப்பட்டிருக்கிறது.

Leave a Reply to மித்திலன்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.