காந்தியின் கருத்துலகு – சில பரிமாணங்கள்

Merina_Madras_Chennai_Gandhi_Statue_MK_Mahatma_Beach_Marina

1915ல் தன் 45ம் வயதில் தென்னாப்பிரிக்காவிலிருந்து நிரந்தரமாக இந்தியா திரும்பியபின், அடுத்த முப்பது வருடங்களில் யங் இந்தியா, நவஜீவன், ஹரிஜன் ஆகிய அவரது ஆங்கில பத்திரிகைகளிலும், மற்ற இந்திய மொழிப் பதிப்புகளிலும், நேர்காணல் மற்றும் மேடைப்பேச்சுகளிலும் எங்கெல்லாம் கல்வியைப்பற்றிப் பேசினாரோ அதெல்லாம் ஆயிரத்துசொச்சம் பக்கங்களில் கட்டுரைகளாகத் தொகுக்கப்பட்ட புத்தகம் ‘கல்வி‘.
பெண்விடுதலை, மதம், கல்வி, அஹிம்சை என்று எதைப்பற்றியும் தன் பரிந்துரையைச் சொல்வதற்குமுன் அன்றைய தேதி வரை அதில் உலகளவில் என்ன செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொண்டு, அதன் முடிவுகளை தன் சொந்த அனுபவங்களோடு ஒப்பிட்டு சரிபார்த்த பின்னரே செய்கிறார். அதன் விளைவுகள் சாதகமாக மட்டுந்தான் இருக்கமுடியும் என்றும் சாதிப்பதில்லை. இன்றைய தேதிக்கு, தனக்குத் தெரிந்தவரை, தன் அனுபவத்தில் இதுதான் சிறந்த வழி என்று மட்டுமே சொல்கிறார். மாணவர்களுக்கு அதிக புத்தகங்கள் தேவையில்லை; ஆசிரியர்களுக்குத்தான் தேவை என்று அதிரடிக்கிறார். ஆசிரியர்களே மாணவர்களின் புத்தகங்கள் என்பது இவர் துணிபு.
ஒவ்வொரு விஷயத்தின் ஆழத்துக்கும் அதன் அத்தனை விவரங்களுக்கும் அவர் செல்வது மலைக்கச்செய்கிறது. உதாரணமாக, ராட்டையைக் கொண்டு கதர் நூற்க முன்வருவோர் – வெறுமனே நூற்பதோடு நின்றுவிடாமல் – தன் சொந்த முயற்சியால் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள் என்றொரு நீண்ட பட்டியல் தருகிறார்;
இந்தியாவில் என்னென்ன ரகமான பருத்தி வகைகள் எங்கெங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன? அந்த ரகங்களின் சாதகபாதகங்கள், விலைகள் என்ன? அதில் எவ்வளவு உள் நாட்டில் உபயோகப்படுத்தப்படுகிறது? எவ்வளவு ஏற்றுமதி? அதில் இங்கிலாந்துக்கும் பிற நாடுகளுக்கும் எவ்வளவு? என்று ஆரம்பித்து ஐம்பதுக்கும் மேலான கேள்விகள். இதில் பதில்கள் சதுர கஜங்களிலும், ரூபாய்களிலும் இருக்கவேண்டும் என்று அடிக்குறிப்புவேறு!
இரண்டரை வயதுக்குழந்தை தாராளமாக ஒரு மைல் நடந்து பள்ளிக்குச்செல்லலாம் என்றொரு தகவல் தருகிறார். எழுத்துகளைப் பழக்குவதற்குமுன் வட்டம், சதுரம், முக்கோணம் போன்ற வடிவங்களை குழந்தைகள் பழகினால் கையெழுத்து முத்துமுத்தாக வரும் என்கிறார். இன்னும் எத்தனையோ நுணுக்கமான செய்திகள்.
பின்ணிணைப்பாக வரும் அவர் சொந்த கல்வி நாட்கள் சுவாரஸ்யமானவை. மருத்துவம் படிக்க அனுப்புங்களேன் என்று கேட்டபோது இவரது அண்ணன் வைஷ்ணவ வழி வந்தவர்கள் பிரேதங்களை அறுப்பது முறையல்ல என்று வக்கீலுக்குப் படிக்க லண்டன் அனுப்புகிறார். அவர் நோக்கம் எப்படியாவது இவரை ஒரு திவானாக்கிவிட வேண்டுமென்பது. பாரிஸ்டர் படிக்கப் போன இடத்தில் லத்தீன் படிக்க நேர்ந்து தேர்வில் தோற்றது, வேதியியலை விருப்பப்பாடங்களில் ஒன்றாக எடுத்து அது சரிப்படாமல் இயற்பியலுக்கு மாறியது, தென்னாப்பிரிக்காவில் அரைகுறைத் தமிழாசிரியராக இருந்தது என்று நிறைய ரசமான தகவல்கள்.
மற்றது எப்படியோ, காந்தியைக் குறித்து இரண்டு விஷயங்கள் புரிகின்றன:
ஒன்று, அவரின் தெளிவான சிந்தனை. மிகுந்த சிந்தனைக்கும் ஆராய்ச்சிக்கும் பிறகு காந்தி பரிந்துரைக்கும் ஒரு வழியை எந்த வித சிந்தனை முயற்சியுமில்லாமல் பெரும்பாலோர் பின்பற்ற முன்வந்து கஷ்டப்பட்டிருக்கிறார்கள். ஓர் ஆசிரியர், தான் அஹிம்சையைக்கடைப்பிடித்து வருவதாகவும் ஆனால் சில மாணவர்களை அடித்துத் தண்டிக்காமல் திருத்தமுடியாது என்ற நிலையில் தான் இக்கட்டான சூழ்நிலையிலுள்ளதாக காந்திக்கு கடிதம் எழுதுகிறார். அதற்கு காந்தி இப்படி பதிலெழுதுகிறார்; “முதலில் நீங்களே உங்களை அவர்கள்முன் தண்டித்துக்கொண்டு அவர்களை மனம் மாறச்செய்யலாம் பிறகு அது வேலைசெய்யாத பட்சத்தில் அவர்களை பள்ளியிலிருந்து நீக்கிவிடலாம். இரண்டும் அஹிம்சை வழிகள்தான். ஆனால் கோபத்தினால் உந்தப்பட்டு இதில் எதைச்செய்தாலும் அது வன்முறைதான்”.
இரண்டாவது, அவரின் பகுத்தறிவு. உலகிலேயே தனக்கு ஆகப்பிடித்த கவிதைகள் துளசிதாசருடையது என்று எழுதும் காந்தி அவரை கண்டிக்கவும் தவறுவதில்லை. டமாரம், முட்டாள், தாழ்ந்தசாதியர், பெண்கள் ஆகியோர் அடிப்பதற்குத் தகுதியுள்ளவர்கள் என்று துளசிதாஸ் ஓரிடத்தில் எழுதியுள்ளது இடைச்செருகலாக இருக்கவேண்டும்; உண்மையிலேயே அவர் எழுதியதுதான் என்றால் அது கண்டிக்கப்படவேண்டியதுதான் என்று எழுதுகிறார். பத்துதலை மனிதன் வருகிறான் என்று வருவதற்காக ராமாயணத்தைத் தூக்கியெறிய வேண்டியதில்லை. சிங்கமும் நரியும் மனிதர்களுடன் பேசும் ஈசாப் கதைகள் குழந்தைகளை முட்டாளாக்குவதில்லை; மாறாக அறிவாளிகளாக்குகிறது என்கிறார். கிணற்று நீரைக்காய்ச்சிக் குடியுங்கள் அல்லது ராட்டையைச்சுற்றுங்கள் என்று நான் சொன்னால் – காந்தி சொன்னார் என்பதற்காக செய்யாமல் – ஏன் எதற்கு என்று கேள்விகேட்டுப் புரிந்துகொண்டு உங்களுக்கும் முழுச்சம்மதம் என்றால் மட்டுமே செய்யவேண்டும் என்கிறார்.
கல்வி‘ தொகுப்பைப்போலவே மற்றொரு தொகுப்பு ‘ஆரோக்கிய வாழ்வு‘. ஒரேயொருவரிகூட தேவையில்லாமல் எழுதியிருப்பதாக உணரமுடியாதது காந்தியின் விவர துல்லியத்தோடு கூடிய எழுத்துநடை. எதையும் எளிமையாக யாரும் அளந்து கொள்ளும் வகையில் செய்துவிடுவதில் காந்தி அதிசமர்த்தர். ஆரோக்கியமான மனிதனென்பவன் ஒரு நாளைக்கு சுமார் பத்து மைல் நடக்கமுடியவேண்டும் என்றும், தான் சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ளும் உப்பின் அளவு ஒரு நாளைக்கு முப்பது அரிசியின் எடைக்குச் சமானமானது என்றும் எழுதியிருப்பது அதற்கு உதாரணங்கள். தினசரி கடைப்பிடிப்பதற்கு கைநிறைய பழக்கங்களை அள்ளியள்ளித் தருகிறார். இவையனைத்தும் அவர் சொந்த அனுபவத்தில் பலன்தருகிறது என்பதை உறுதிசெய்துகொண்டே எழுதுகிறார். சிலவிஷயங்களில் இதில் இவ்வளவுதூரம் வந்துவிட்டேன் மேற்கொண்டு இதையெல்லாம் உங்கள் பொறுப்பில் செய்துபார்த்து நல்லதுகெட்டது தெரிந்துகொள்ளுங்கள் என்றெழுதுவது காந்தியின் ட்ரேட்மார்க்.
ஒரு நாளைக்கு மூன்றுவேளை சாப்பிடலாம். அந்தந்த சீசனில் வரும் பழங்களை காலை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். பாலும் பழமும் எப்படி போதுமான காலை உணவாக இருக்கமுடியும் என்றெல்லாம் விளக்குகையில் அவற்றின் போஷாக்குப் பங்கீடுகளையும் விரிவாக எழுதி அறிவியல் வலுசேர்க்கிறார். காலையில் பல்துலக்கும்போது மூக்கையும் சுத்தம் செய்யவேண்டும் என்று எழுதுபவர் செய்முறைகளையும் விளக்கியிருக்கிறார். 24 மணிநேரத்தில் 5 பவுண்டு (சுமார் 2.25லிட்டர்) தண்ணீர் அருந்தவேண்டும் என்கிறார்.
தேநீர், காபி, கொக்கோ பானங்களை முற்றிலுமாகவே தவிர்த்துவிடச்சொல்கிறார். அதற்குபதில் காய்கறி சூப் சாப்பிடப் பரிந்துரைக்கிறார். டீயைப்பற்றி காந்தி சொல்லியிருக்கும் ஒரு செய்தி எனக்குப்புதிது. சீனாவில் நல்ல தண்ணீர் கிடைப்பது அரிதாக இருந்தபோது நீரைச்சுடவைத்து அருந்தும் வழக்கம் வந்ததாம். ஒரு புத்திசாலி சீனர் தேவையான அளவு நீர் சுட்டுவிட்டதா என்று கண்டறிய தேயிலையை அதில் போட்டு நீர் நிறமாற்றம் அடைவதைக்கொண்டு உறுதிசெய்துகொள்ளும் விதத்தை அறிமுகப்படுத்தினாராம். நீர் தேவையான அளவு சுட்டுவிட்டதை உறுதிசெய்வதோடு அதற்கு ஒரு மணமும் தந்ததால் இதை அனைவரும் விரும்பினார்களாம். இந்த டீ நிச்சயம் நல்லதுதான். நாம் தற்போது சாப்பிடும் டீ இதுவல்ல என்பதால் விலக்கிவிடச்சொல்கிறார்.
பிறப்புறுப்புகளின் முன்பகுதியில் நாளாவட்டத்தில் சேர்ந்துவிடும் அழுக்கை கவனமாகத்தேய்த்துக் கழுவவேண்டும் என்று அவர் அளிக்கும் சுகாதாரக்குறிப்பின் உள்ளே அவர் பரிந்துரைக்கும் பிரம்மச்சரியத்துக்கு உதவிசெய்யும் தன்மையும் ஒளிந்துள்ளது. அதாவது அடிக்கடி தொட்டு உணரப்படும் ஓர் உறுப்பு தன் நுண்ணுணர்வுகளை இழந்துவிடுகிறது என்பதால் பாலுணர்வுத்தூண்டல்கள் குறையும் என்று எதிர்பார்க்கிறார்.
சமைக்காத உணவு வகைகளில் தான் மேற்கொண்ட ஆராய்ச்சிகளை விளக்கும் காந்தி இது உடலுக்கு இயற்கையாகப் பொருந்துவதோடு ஏழை மக்களுக்கு எங்கும் கிடைத்துவிடுவதையும், பெண்களை சமையலறையிலிருந்து விடுவித்து வெளியேற்றத் துணைசெய்வதையும் முன்வைக்கிறார். எந்த ஒரு பரிந்துரையிலும் காந்திக்கு ஒன்றுக்குமேற்பட்ட நோக்கங்கள் இருப்பதாகவே தெரிகிறது.
மீன் சாப்பிடுபவர்களை சாப்பிடாமலிருக்க வற்புறுத்துவது ஹிம்சை என்பதை ஒப்புக்கொள்ளும் காந்தி அவர்களுக்கு மீன் கிடைக்காமல் தடுப்பது சரியல்ல என்கிறார். ஆனால் ஒரேயொரு கோப்பை மதுவை யாருக்கும் எந்தத்தொந்திரவுமில்லாமல் ஒருவன் அருந்தி மகிழ்ந்து உறங்கக்கூடுமாயினும் அதை அவனுக்கு மறுக்கத்தான் வேண்டும், அது ஹிம்சையானாலும் பரவாயில்லை என்று உறுதியாகச்சொல்கிறார். அதற்கு காரணங்கள் நிறைய கூறுகிறார்; அதில் முக்கியமானது மது உடலை மட்டுமல்லாமல் ஆன்மாவையும் பாதிக்கிறது என்பதே.
இந்நூலில் கணிசமான அளவு பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்க சிபாரிசு செய்யும் பக்கங்களே. திருமணம் செய்துகொள்ளாமலிருப்பதல்ல; திருமணத்துக்குப்பின் பிரஜோற்பத்திக்காக (மக்கட்பேறு) அல்லாமல் இன்பம்துய்ப்பதற்கான ஆண்-பெண் சேர்க்கையை விலக்கவேண்டும் என்ற கொள்கையுடைய பிரம்மச்சரியம். இதையும் உடலுக்கு நாம் தரும் ஹிம்சையாக காந்தி கணக்கில்கொள்வதில்லை. சேர்க்கை நிகழ்ந்து ஆனால் குழந்தைபிறப்பை மட்டும் தடுத்துவிடும் எல்லாவகையான கருத்தடை முறைகளுக்கும் காந்தி எதிரியாக இருந்திருக்கிறார். மதுவுக்குச்சொன்ன காரணம்தான் இதற்கும். ஆனால் பகலில் எவ்வளவுதான் கவனமாக இருப்பினும் தூக்கத்தில் கனவில் கண்ட கனவுகளும் ஆக்கிரமித்துத் தன் பிரம்மச்சரியத்தை முழுமையடையவிடாமற் செய்வதாக வருத்தமும்கொள்கிறார்.
பொதுவாக நாம் நமக்குத் தேவையில்லாத விஷயங்களை அறிந்துகொள்ள நேரம் செலவிடமாட்டோம். ஆனால் காந்தியின் ஆராய்ச்சிப்புத்திக்கு எல்லை ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. அசைவம் சாப்பிடாதவராயிருந்தும், உணவுக்காக கொல்லப்பட்ட விலங்கின் இறைச்சி, அதே விலங்கு இயல்பான முறையில் இறந்துவிட்டபின் அதன் இறைச்சி, விஷம் உட்கொண்டதால் இறந்துவிட்டபின் அதன் இறைச்சி, நோய் வந்து இறந்துவிட்டால் அதன் இறைச்சி இவற்றிற்கிடையில் ஏதும் வேறுபாடுகளுண்டா? ஆம் எனில் எவ்வாறு? என்றெல்லாம் கேள்விகள் எழுதி தன் மருத்துவர் நண்பர்களிடம் பதில்பெற்று வைத்துக்கொள்கிறார்.
காந்தியின் எழுத்துக்களை வாசிக்கும்போதெல்லாம் மனதின் ஆழத்தில் ஒரு காரணம்புரியாத சந்தோஷம், திருப்தி, தன்னம்பிக்கை உணர்ச்சி, எதிலும் முயற்சியைக் கைவிடக்கூடாது என்ற உத்வேகம் ஆகியன உண்டாகின்றன. இது சத்தியத்தின் தன்மையாக இருக்கக்கூடும் என்பதென் கணிப்பு. எழுதினால் அனேகமாக நூலிலுள்ள அனைத்தையும்தான் குறிப்பிட்டு எழுதவேண்டும். ஆகவே இங்கே நிறுத்திக்கொண்டு காந்தியை அனைவரும் வாசிக்கப்பரிந்துரைக்கிறேன்.
எனக்கென்னமோ மனிதர் சுதந்திரப்போராட்டத்தையும் ஒரு சோதனைமுயற்சியாகத்தான் செய்துபார்த்திருக்கிறார் என்ற சந்தேகம் மேலும் வலுக்கிறது. ‘கல்வி’, ‘ஆரோக்கிய வாழ்வு’ தொகுப்புகளைப்போலவே வெவ்வேறு தலைப்புகளில் வர்த்தமானன் பதிப்பகம் “மகாத்மா காந்தி நூல்கள்” என்ற தலைப்பில் இருபது தொகுதிகளாக தொகுத்துள்ளது. அந்தக்காலத்துத் தமிழ் மொழிபெயர்ப்பு முதலில் வாசிப்பு வேகத்தைக் குறைத்தாலும் நூறு பக்கங்களுக்குள் பழகிவிடுகிறது. அவர் பேசியதும் எழுதியதும் மொத்தமாக சுமார் 20,000 பக்கங்கள். காந்தியை அறிய நினைக்கும் ஒருவர் இதில் சில ஆயிரம் பக்கங்களாவது வாசிக்க முன்வருவது உசிதம்.
***

One Reply to “காந்தியின் கருத்துலகு – சில பரிமாணங்கள்”

Leave a Reply to Logamadevi AnnaduraiCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.