அறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து

Religion_Science_History_Christianity_Tiffany_Education_Glass_Stained

கிறீத்துவத்தின் வரலாற்றை எழுதிய பால் ஜான்ஸன் அதை ஒரு சர்ச்சையிலிருந்து துவங்குகிறார். அவரது கணிப்பில் கி.பி 50க்கருகில் கூடிய ஜெருசலெம் சங்கம் (Council of Jerusalem1) முதல் அதிகாரபூர்வமான உலகளாவிய நோக்குகொண்ட கிறீத்துவம்.  அதில் ஜெருசலேமை மையமாகக் கொண்ட யூத கிறீத்துவர்களுக்கும் கிரேக்க பகுதிகளில் மதம் மாறியிருந்த ‘டயஸ்பரா’ கிறீத்துவர்களுக்குமிடையேயான சர்ச்சைக்கு தீர்வுகாணப்பட்டது. இதில் இயேசுவுக்குப்பின் கிறீத்துவத்தினை நிறுவி வளர்த்த இரு ஆளுமைகள் இராயப்பர்  (Peter)  மற்றும் சின்னப்பர் (Paul) நேரடியாக விவாதித்து, கலந்தாலோசித்து முடிவுகளை அடைந்தனர். அன்று துவங்கி இன்றுவரை கிறீத்துவம் பல தரப்புகளுக்குமிடையேயான விவாதங்களின் வழியே உருமாறியபடியே உள்ளது. அந்தத் தரப்புகளில் மிக முக்கியமானது அறிவியல்.
கிறீத்துவத்தின் ஆரம்ப காலத்திலேயே அது அன்றைய அறிவியக்கத்தின் உச்சகட்ட கோட்பாடுகளை உள்வாங்கிக்கொண்டது. பிளேட்டோவும் அரிஸ்டாட்டிலும் அதன் அறிவுச்செயல்பாட்டின் பிரதான ஆதாரங்களாகினர். அலெக்ஸாண்ட்ரியாவின் கிளெமென்ட்2 (150-215) துவங்கி அகஸ்டின் 3(345-430), தாமஸ் அக்குவினாஸ் 4(1225-1274) என வரிசையாக கிரேக்க தத்துவத்தின் மீது கிறீத்துவ  இறையியல் கட்டமைக்கப்பட்டது. கூடவே அரிஸ்டாட்டிலின் அறிவியல் கோட்பாடுகளும் உள்வாங்கப்பட்டன. கிரேக்க தத்துவத்தையும் இலக்கியத்தையும் ஏற்பதிலும் மறுப்பதிலும் வெவ்வேறு போப்புகளுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன. சிலர் கிரேக்க இலக்கிய புத்தகங்களை நூலகங்களிலிருந்து அகற்றினர். ஆயினும் கிரேக்க இலக்கியத்தையும் தத்துவத்தையும் நவீன மேற்குக்கு கொண்டு சேர்த்ததில் கிறீத்துவம் முதன்மையான இடத்தை பெறுகிறது. இன்றுவரைக்கும் மேற்கின் தத்துவம் கிரேக்க தத்துவத்தின் நீட்சியாகவே அடையாளம்காணப்படுகிறது. மேற்குலகில் கிறீத்துவம் அக்காலங்களில் மிக முக்கிய, கிட்டத்தட்ட ஒரே, அறிவியக்கமாக இருந்துவந்தது. அரிஸ்டாட்டிலின் அறிவியல் கோட்பாடுகளே 1500களின் பின்பகுதிகள் வரைக்கும் அறிவியல் வல்லுனர்களாலும், பொது சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பைபிள் தீர்க்கமான அறிவியல் எதையும் முன்வைக்கவில்லை. அதன் கதைகளிலிருந்தும் பாடல்கள்/கவிதைகளிலிருந்தும் எடுக்கப்பட்ட வரிகளிலிருந்து, அவை அரிஸ்டாட்டிலின் அறிவியலுடன் இயைந்தவையாக இருந்தமையால், புவிமையக் கொள்கை (Geocentirc Model5) கிறீத்துவ அறிவியல் கொள்கையாக உருவாக்கப்பட்டது. அரிஸ்டாட்டிலின் புவிமையக் கொள்கைக்கு முதல் பொருட்படுத்தத் தகுந்த மாற்றுக் கொள்கை கிறீத்துவத்தின் உள்ளிருந்தே  எழுந்தது. சூரிய மைய வானியல் கொள்கையை (Heliocentrism6) முன்வைத்த கோப்பர்நிக்கஸ் ஒரு கத்தோலிக்க மதப்பணியாளர். அந்த காலத்துக்கு அது பெரும் புரட்சிகர கோட்பாடாக இருந்தது. அன்றைய அறிவியலையும் பொது நம்பிக்கைகளையும் மத நம்பிக்கைகளையும் அது புரட்டிப்போட்டது. அரிஸ்டாட்டிலிய‌ அறிவியலறிஞர்கள் பலராலும் நிராகரிக்கப்பட்டது. வெளியிடப்பட்டு அறுபது ஆண்டுகளுக்குப் பிறகுகூட 15 அறிவியல் அறிஞர்களே சூரியமையக் கொள்கையை ஆதரித்தனர், பின்பற்றினர் என்கின்றனர் வரலாற்றாய்வாளர்கள். அவற்றில் இருவரின் விதிமீது கிறீத்துவம் தீர்ப்பெழுதியது.
ஜியாடர்டொனோ புரூனோ7 கோப்பர்நிக்கஸின் அறிவியலின் மீது பல்வேறு தத்துவ விரிவுகளை செய்தார். கூடவே பல அடிப்படையான கத்தோலிக்க நம்பிக்கைகளையும் கடுமையாக விமர்சித்தார், மறுத்தார். ஏற்கனவே பிரிவினையின் மத்தியில் பதட்டமடைந்திருந்த கத்தோலிக்கத்தின் ‘இன்குயிசிஷனின்’ கரங்களில் சிக்கி சிதையேற்றப்பட்டார். பல வல்லுனர்களும் புரூனோவின் சிதையேற்றம் அவரின் மதக் கொள்கைகளுக்காகவே அன்றி அறிவியலுக்காக அல்ல என்பதை உறுதிசெய்தபோதும் புரூனோ இன்றும் அறிவியலுக்காக உயிர்த்தியாகம் செய்தவராக அறியப்படுகிறார்.
புரூனோவைவிட மிக அதிகம் அறியப்பட்ட தீர்ப்பு கலிலேயோ கலிலிக்கு வழங்கப்பட்டது. கலிலேயோ ஒரு அற்புதமான அறிவியல் வல்லுனார் ஆனால்  நிதானமற்ற ஆளுமையுடையவர். ஆரம்பத்திலிருந்தே அவருக்குப் பல எதிரிகள். அவர் அரிஸ்டாட்டிலின் அறிவியல் கொள்கைகள் பலவற்றையும் நிராகரித்தார். அரிஸ்டாட்டிலை பின்பற்றிய அறிஞர்களுடன் நேரடியாக மோதினார். மிகப் புகழ்பெற்ற பைசா நகரக் கோபுர பரிசோதனையை செய்து கனமான பொருட்கள் பூமியை நோக்கி விரைவாகச் செல்கின்றன எனும் அரிஸ்டாட்டிலின் கொள்கையை பொய்யாக்கினார். அதை மறுத்த அறிஞர்களை எள்ளி நகையாடினார். அவரது கடிதங்களிலும் எழுத்திலும் எள்ளலும், நிராகரிப்பும் அதீத குறைகூறலும் வெளிப்பட்டுக்கொண்டேயிருந்தன. கலிலியோ கோப்பர்நிகஸின் கொள்கையை ஆதரித்தார்.
Sv_Solvanam_150_Mag_Tamil_Sol_Vanam_Issueசூரிய மையக் கொள்கையும் கலிலேயோ அதற்கு ஆதரவாக முன்வைத்த வாதங்களும் அன்றைய அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படாததாய் இருந்தது. அதற்கு கலிலேயோவின் தனிப்பட்ட ஆளுமையும் ஒரு காரணமாய் இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். அவரது கருத்துக்களை மறுத்தவர்கள் எவரும் எளிதில் அவரது எதிரியிகளாயினர். கத்தோலிக்கம் அன்றைய அறிவியக்கத்தின் மையத்தில் இருந்தது என்பதற்கு ‘கலிலேயோ விவகாரம்’ ஒரு ஆதாரம். கலிலேயோவுக்கு எழுதப்பட்ட மறுப்புக்கள் இன்றைய நோக்கில் குறைபாடுள்ளவையாக இருந்தாலும் அன்றைய கணிதவியல், வானியல் சிந்தனைகளின் உச்சங்களிலிருந்து வந்தன. அவை மதவாதிகளின் வெற்று பிதற்றல்களாயில்லை. பிரான்ஸெஸ்கொ இங்கோலி (Francesco Ingoli) எனும் கத்தோலிக்க பாதிரியார் 1616ல் கலிலேயோவுக்கு எழுதிய கடிதத்தில்  ஐந்து இயற்பியல் தர்கங்களும், பதிமூன்று கணிதவியல் தர்கங்களும், நட்சத்திரங்களின் பரப்பளவு குறித்த ஒரு தனிப்பகுதியும், நான்கு இறையியல் கோட்பாடுகளும் இருந்தன. கலிலேயோவுக்கு எதிராக வாதாடிய இறையியலளாளர் கர்தினால் இராபர்ட் பெலார்மின் (Robert Bellarmine) ‘கலிலேயோ முன்வைக்கும் கோட்பாடுகள் நிரூபணமாகி பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகளாக இருந்தால் பைபிளை புரிந்துகொள்ளும் முறைகளை மாற்றியமைப்பதே முறையாகும்’ என்றார். ஆனால் அவரது கோட்பாடுகள் முழுமையான, நிரூபணமான அறிவியலாக அவரது காலகட்டத்தில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதே வரலாறு. இரு அறிவியல்களுக்கு மத்தியில் எதை தேர்ந்தெடுப்பது எனும் தீர்ப்பை எழுதும் பொறுப்பு வந்தபோது கத்தோலிக்கம் பல்வேறு சமூக, அரசியல் காரணங்களுக்காகவும், அன்றைய இறையியல் சிந்தனைகளை பாதுகாக்கவும் எளிதான தீர்ப்பொன்றை வழங்கியது. கலிலேயோவின் நண்பரும் புரவலருமான போப் எட்டாம் அர்பன் (Pope Urban VIII) கலிலேயொவை வீட்டுச் சிறையடைக்க  தீர்ப்பெழுதினார்.  அவரது காலத்தில் பிரிவினை கிறீத்தவம் (Protestant) வலுவாகியிருந்தபோதும் கலிலேயோ இறுதிவரை ஒரு கத்தோலிக்கராகவே வாழ்ந்தார். ‘தூய ஆவி நமக்கு விண்ணுலகம் செல்லும் வழியை காட்டுகிறதே அன்றி விண்வெளி எப்படி இயங்குகிறது என்பதை காட்டவில்லை’ எனும் கர்தினால் பரோனியஸின்(Peroneus) வார்த்தைகளை கலிலேயோ தனது வாதமாக முன்வைத்தார். கடந்த நூற்றாண்டில் போப் இரண்டாம் அருள் சின்னப்பர் சிலுவைப்போர்கள், அடிமை வியாபாரம், யூதப் பேர்ழிப்பு போன்ற  கத்தோலிக்கத்தின் பல்வேறு வரலாற்றுப் பிழைகளுக்கும் பல தருணங்களில் வெளிப்படையாய் வருத்தம் தெரிவித்துள்ளார். அவற்றில் முக்கியமானது கலிலேயோவிற்கு கிறீத்துவம் வழங்கிய தீர்ப்புக்கானது. கத்தோலிக்க கிறீத்துவமும், பாரம்பரிய பிரிவினை கிறீத்துவ சபைகளும் பைபிளை அறிவியல் நூலாக பாவிப்பதையும் அதிலுள்ள எல்லாவற்றையும் நேரடிப் பொருள் கொள்வதையும் பல நூற்றாண்டுகளாக கைவிட்டுவிட்டன. இதற்கான விதைகள் ஆரம்பகால இறையியலர்களான‌  அகஸ்டினிடமிருந்தும், அக்குவினாஸிடமிருந்தும் பெறப்பட்டன எனபதுவும் குறிப்பிடத் தகுந்தது.
கிறீத்துவம் துவக்க காலம் முதலேயே ஒரு முக்கிய அறிவியக்கமாக இருந்துவந்தது. கிரேக்க பகுத்தறிவு தத்துவத் தொகையின்மீது கடவுளை ஏற்றி இறையியலை வகுத்து, கிரேக்க சிந்தனை மரபை, கிரேக்க இலக்கியத்தை தொடர்ச்சியாக கொண்டு சென்றபடியிருந்தது. அறிவியலின் புரவலராகவும் பல நூற்றாண்டுகளாக கிறீத்துவம் செயல்பட்டு வந்தது. முன்பே சொன்னதுபோல கோப்பர்நிக்கஸ் எனும் கத்தோலிக்க மதப்பணியாளரே சூரிய மையக் கொள்கையை உருவாக்கினார். கலிலேயோ ஆரம்பம் முதலே கத்தோலிக்க மதகுருக்களின் ஆதரவில் வளர்ந்தார். கத்தோலிக்க பல்கலைக்கழகங்களில் மதிக்கத்தகுந்த சம்பளத்துக்கு வேலைபார்த்தார். இறுதிவரை அவர்களின் தனிப்பட்ட பேராதரவு அவருக்கு இருந்தது. கத்தோலிக்க குருமடங்கள் அறிவியக்கங்களாகவே இருந்துவந்தன. அவற்றிலிருந்து பல புதிய அறிவியல்கள் உருவாகிவந்தன.
நவீன மரபணுவியலை உருவாக்கிய கிரெகர் மென்டேல் (Gregor Mendel)  ஒரு கத்தோலிக்க பாதிரியார்.  அறிவுச்செயல்பாட்டிற்கு புகழ்பெற்ற பிர்னோ(Brno) ஆசிரமத்தில் வளர்ந்த பீன்ஸ் செடிகளை ஆராய்ந்து அவர் மரபணு கோட்பாடுகளை உருவாக்கினார் சார்லஸ் டார்வின் இவரது ஆய்வைக் குறித்து அறிந்திருந்தார் என்பது பதிவுசெய்யப்பட்டுள்ளது. நிக்கோலஸ் ஸ்டெனோ (Nicolas Steno) எனும் பிஷப்  புவியமைப்பியலை (Geology ) உருவாக்கினார். பெல்ஜியத்தை சார்ந்த பாதிரியார் ஜியார்ஜ் லெமாத்ர் (Georges Lemaître ) நவீன வானியற்பியலின் முக்கிய கோட்பாடான ‘பெரும்வெடிப்பை’ (Big Bang) முதன் முதலில் முன்வைத்தவர். இயேசுசபை பாதிரியார்கள் (Jesuits) தொடர்ந்து பல அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்துவந்தனர். ஐசக் நியூட்டன் தன்னுடன் தனிப்பட்ட தொடர்புகளில் முக்கியமானவர்களாக இயேசுசபை பாதிரியார்களை குறிப்பிடுகிறார். நிலநடுக்கம் குறித்த அறிவியல் (Seismology) இயேசு சபை அறிவியல் (The Jesuit science) என அழைக்கப்படுகிறது. லாஸரோ ஸ்பலன்ஸனி (Lazzaro Spallanzani) எனும் பாதிரியாரின் மனித உடல் செயல்பாடுகள் குறித்த கண்டுபிடிப்புகள் லூயிஸ் பாஸ்டியரின் (Louis Pasteur)புகழ்பெற்ற உயிரியல் கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டன. பல நூற்றுக்கணக்கான அறிவியல் வல்லுநர்கள் கிறீத்துவத்தின் நான்கு சுவர்களுக்குள்ளிருந்தும் வெளியே பொதுக் கிறீத்துவர்களிடமிருந்தும் உருவாகி வந்துள்ளனர். இவர்களில் பலரும் கிறீத்துவத்திடமிருந்து நேரடியாக நிதியும், ஆதரவும் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்த அறிவியல் இயக்கத்தின் நீட்சியாக இந்தியாவில் யூஜின் லெஃபான்ட் (Eugene Lafont) எனும் இயேசுசபை பாதிரியார் 1869ல் அறிவியல் வளர்ச்சிக்கான இந்திய கூட்டமைப்பை மகேந்திரலால் சர்க்காருடன் இணைந்து துவங்கினார். அவரது அறிவியல் உரைகள் இந்திய இளைஞர்கள் பலரையும் அறிவியலின் மின்னீர்ப்புக்குள் இழுத்துவந்தது. இந்தியாவின் பெருமைக்குரிய அறிவியல் அறிஞர்களான சர் சி.வி இராமன், கெ. எஸ் கிருஷ்ணன் மற்றும் ஜகதீஷ் சந்திரபோஸ் போன்றொர் தந்தை. லெஃபாண்டின் மாணவர்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்திய நவீன அறிவியல் இயக்கத்தின் உச்சப் புள்ள அதுவாகத்தான் இருந்திருக்கும்.
யோசித்துப் பார்த்தால் கலிலேயோ தீர்ப்பைப் போன்றதொரு வேறொரு பிழையை கத்தோலிக்கம் செய்ததாக நாம் வரலாற்றில் காணவில்லை. இரண்டாயிரம் வருடப் பாரம்பரியம் கொண்ட ஒரு அமைப்பு அது நானூறு வருடங்களுக்கு முன்பு செய்த ஒரு தவற்றிற்காக இன்றும் தீர்ப்பிடப்படுகிறது.
கலிலேயோவிற்கு 200ஆண்டுகளுக்குப் பின் கிறீத்துவம் வரலாற்றின் வேறொரு சவாலை சந்திக்க நேர்ந்தது.  1859ல் சார்லஸ் டார்வின் பரிணாமக் கொள்கையை முன்வைத்தார். அவருக்கு முன்னரே முழுமையடையாத வடிவங்களில் பரிணாமக் கொள்கை முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுவந்தது. கிறீத்துவ பாதிரி யார் ஜியார்ஜ் மென்டேல்  மரபணு அறிவியலின் முன்னோடியாக கருதப்படுகிறார். டார்வினின் முன்னோடி லமார்க் ஒரு கத்தோலிக்கர்.  டார்வினின் கொள்கைகள் பிரபலமானபோது ஜெருசலேம் சகங்கத்தைப்போல கிறீத்துவம் ஆதரவாகவும் எதிராகவும் பிரிந்து நின்றது. பல படித்த கிறீத்தவர்களும் கிறீத்துவ அறிவியல் வல்லுநர்களும் டார்வினை ஆதரித்தனர். அமெரிக்காவில் அசா கிரே(Asa Grey – https://en.wikipedia.org/wiki/Asa_Gray)  எனும் கிறீத்துவ தாவரவியலாளர் பரிணாமம் கடவுளின் திட்டம் என்பதை முன்வைத்ததோடில்லாமல் டார்வினின் ‘ஆரிஜின்’ புத்தகத்தை அமெரிக்காவில் பதிப்பிக்கும் முயற்சியிலும் இறங்கினார்.  அதிகாரபூர்வமாக ஆங்கிலிக்கன் சபை அதை எதிர்த்தது. அவருக்கு இங்கிலாந்தின் அரசி வழங்கவிருந்த அங்கிகாரத்தை தடுத்தது.. ஆனால் சில பத்தாண்டுகளுக்குள்ளேயே நிலைமை மாறியது. 1884ல் பிரெடெரிக் டெம்பிள் (FrederickTemple  – https://en.wikipedia.org/wiki/Frederick_Temple ) ‘மதத்துக்கும் அறிவியலுக்குமான உறவு’ எனும் தலைப்பில் ஆற்றிய பேருரையில் பரிணாமக் கொள்கை கிறீத்துவ நம்பிக்கைக்கு எதிரானதல்ல என்பதை முன்வைத்து பேசினார். 1896ல் அவர் ஆங்கிலிக்கன் சபையின் தலைமை மதகுருவாக நியமிக்கப்பட்டார்.  டார்வின் இறந்து 126 வருடங்களுக்குப் பிறகு 2008ஆம் ஆண்டு டார்வினிடம் மன்னிப்புக் கோரியது இங்கிலாந்து சபை.
கத்தோலிக்கம் மிக மிக மெதுவாகவே எதிர்வினையாற்றியது. நூறு ஆண்டுகளுக்குப் பின் 1950ல் ஹியூமனி ஜெனரிஸ் (Humani Generis8 ) எனும் தலைப்பிட்ட கடிதத்தில் போப் பன்னிரண்டாம் பயஸ் மனித உடல் பரிணாமவளர்ச்சியின்படி வருவதென்றும் ஆன்மாவை கடவுள் படைக்கிறார் என்றும் நம்புகையில் கிறீத்துவ நம்பிக்கைக்கும் பரிணாமக் கொள்கைக்கும் முரண்கள் இருக்க முடியாது என அறிவித்தார்.  மனிதனை வெறும் விலங்காக மட்டும் காணும் அறிவியலை மதம் ஒருபோதும் ஏற்க முடியாது அல்லவா?  டார்வின் தான் தொகுத்தெழுதிய உண்மையின் கனத்தை நன்குணர்ந்திருந்தார். அதை முற்றிலும்  புரிந்துகொள்ள சிரமப்பட்டார். அவர் மனதின் ஆழத்தில் ஒரு முழுமையின்மை எஞ்சி நின்றது  ‘இந்தக் கொள்கை மனித மனம் சென்றடைய முடியாத அளவுக்கு ஆழமானது. (அதை முழுதாய் புரிந்து கொள்வது) ஒரு நாய் நியூட்டனின் மூளையை யூகிப்பதுபோன்ற செயல் அது.’ என்றார் அவர்.  அந்த வெற்றிடத்தை மதம் நிரப்பியிருக்கக்கூடும்.
இன்றைய அறிவியலை எதிர்கொள்ளும் கிறீத்துவம் அடிப்படையில் இரு வகையானது. ஒன்று நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொண்டு அவற்றின் வழியே இறையியலையும் ஆன்மிகத்தையும் புதுப்பித்துக்கொள்ளும் அமைப்பு. இவற்றில் சிறந்த உதாரணமாக கத்தோலிக்க கிறீத்துவத்தை சுட்டிக்காட்ட முடியும். மேற்சொன்ன பல வரலாற்று உதாரணங்களிலும் திருச்சபை அறிவியலை உள்வாங்கும் ஒரு அமைப்பாக மட்டும் இல்லாமல் புதிய அறிவுத்துறைகளை உருவாக்கிய அமைப்பாகவே இருந்துள்ளது என்பது தெளிவாகும். இன்றும் அதே பணி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ‘போன்டிஃபிக்கல் அக்காடமி ஆஃப் சயின்ஸ்’ (The Pontifical Academy of Sciences) அதற்கான நேரடி உதாரணம். ஸ்டிபன் ஹாக்கிங் (Stephen Hawking) போன்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அறிவியல் நிறுவனம் வத்திக்கானின் நேரடி முதலீட்டிலும் பிற நன்கொடைகளின் மூலமும் செயல்படுகிறது. அதன் தலைவரை போப் முன்மொழிகிறார்.  1603ல் உலகிலேயே முதன்முதலில் முற்றிலும் நவீன அறிவியலுக்கென்று மட்டுமே நிறுவப்பட்ட Academy of the Lynxesன் வழியொட்டி பின் வந்த பல்வேறு போப்புகளால்  புனரமைப்பு செய்யப்பட்டு 1936 முதல் சீராக இயங்கிவருகிறது. அதன் இன்றைய தலைவர், நோபல்பரிசுபெற்ற வெர்னர் ஆர்பர் (Werner Arber) கத்தோலிக்கமல்லாத ‘பிரிவினை கிறீத்துவ’ சபையை சார்ந்தவர். அதன் முக்கிய உறுப்பினர்களாக இந்துக்களும், இஸ்லாமியர்களும், யூதர்களும் உட்பட பல மதத்தினரும், நோபல் பரிசு பெற்ற அறிவியல் வல்லுனர்களும் உள்ளனர்.
தூய அறிவியல் ஆய்வுக்காகச் செயல்படும் வேறெந்த மதசார்பற்ற அமைப்புகளையும் போலவே போப்பின் அறிவியல் அக்காடமியும் செயல்படுகிறது. இதைப்போல வத்திக்கான் விண்ணாய்வகத்தையும் (Vatican Observatory)  சொல்லலாம். அதன் தலைவர் பிரதர். கீ கொன்சால்மங்கோ (Guy Consolmagno)  ஒரு ஏசு சபை துறவியும் 2014க்கான கார்ல் சாகன் விருதுபெற்றவருமாவார். இன்றைய அறிவியக்கத்தில் தூய அறிவியல் ஆராய்ச்சிக்க்த் தன்னை அர்ப்பணித்திருக்கும் வேறொரு மத அமைப்பை காண்பது அரிது.
இன்னொருபுறம் கத்தோலிக்கம் உட்பட்ட கிறீத்துவ சபைகளின் உறுப்பினர்கள் பலரும் பல கிறீத்துவ சபைகளும் இன்றும் பைபிள் முழுமுற்றாக உண்மையானது எபதை நம்பி வருகின்றனர். அமெரிக்காவில் இவர்கள் ஒரு இயக்கமாகவே செயல்படுகின்றனர். படைப்புவாதத்தை  (Creationism) பரிணாமக் கொள்கைக்கு மாற்றாக இவர்கள் முன்வைக்கிறார்கள். புவி வெப்பமாதலை (Global Warming) அறிவியல் அல்ல என மறுக்கிறார்கள், பூமி சுமார் ஆறாயிரம் வருடங்களுக்கு முன்பு பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல படைக்கப்பட்டது என நம்புகிறார்கள், சில கிறீத்துவ சபைகள் நவீன மருத்துவத்தையே மறுக்கிறார்கள். உயிர்போகும் நிலையில்கூட மருத்துவத்தை இவர்கள் நாடுவதில்லை. இதுவும் கிறீத்துவத்தின் இன்னொரு முகமே. நிரூபணவாத அறிவியல் கண்டிருக்கும் உச்சங்களை கணக்கில் கொண்டால் இவை அனைத்துமே மூட நம்பிக்கைகள் என்றே வரையறுக்க முடியும். ஆயினும் இவர்கள் அரசியல் மற்றும் பணபலம் கொண்ட அமைப்புகளாக இருப்பதால் இவர்களும் ஒரு தவிர்க்கமுடியாத தரப்பாக இருந்துவருகின்றனர்.  கிறீத்துவ இறையியலின் பிதாமகன்களில் ஒருவரான அகஸ்டின் நான்காம் நூற்றாண்டிலேயே துவக்கநூலில் (ஜெனஸிஸ்) வரும் படைப்பு கதை உண்மையானதல்ல என குறிப்பிடுகிறார்.  – அவரின் நோக்கில் கடவுள் அனைத்தையும் ஒரே கணத்தில் உருவாக்கினார்.-
அறச்சிக்கல்கள் கொண்ட ஆய்வுகளை அறிவியல் கைகொள்ளும்போது கிறீத்துவம் அதனுடன் நேரடியாக மோதுகிறது. தன்னை ஒரு அறிவார்ந்த அதேநேரம் அறம் பேணும் ஒரு நிறுவனமாகவும் அது அமைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு மதமாக அது அறத்தை காப்பதையே முதன்மையான பணியாக கொள்ளமுடியும். உதாரணமாய் செயற்கையாக ஆய்வகத்தில் கருத்தரிக்கச்செய்து அதைக் கொன்று குருத்தணுவை அறுவடை செய்யும் ஆய்வுகளை கிறீத்துவம் கடுமையாக எதிர்க்கிறது. அதே சமயம் பிற அறவழிகளில் செய்யப்படும் குருத்தணு ஆய்வுகளை கிறீத்துவம் கொள்கை ரீதியாக‌ ஆதரிப்பது மட்டுமல்ல அதற்கு பண உதவியும் செய்துள்ளது. பெண்ணின் முட்டையும் ஆணின் விந்தணுவும் சேர்கையிலேயே ஒரு மனித உயிரும் ஆன்மாவும் உருவாகிவிடுகிறது என்பதை கிறீத்துவம் நம்புகிறது. ஒரு மனித கருத்தரிப்பு எப்போது நடக்கிறது என்பதில் அறிவியலும் இதையே நம்புகிறது.   எனவே ஆய்வகத்திலே உருவானாலும் அக்கரு மானுட இனத்தின் ஒரு பிரதிநிதி என்றே அதைக் காண்கிறது கிறீத்துவம். இதே காரணத்திற்காக கருக்கலைப்பும் தீவிரமாக எதிர்க்கப்படுகிறது. கருத்தடைகூட அறம் சார்ந்த காரணங்களுக்காகவே கிறீத்துவத்தால் மறுக்கப்படுகிறது. மிகக் குறைந்த விலகல்களே கருக்கலைப்பிற்க்கு வழங்கப்படுகிறது. அறிவியலை ஆதரிப்பதற்கும் இவற்றிற்கும் தொடர்பில்லை. உதாரணமாய் இந்தியாவில் குழந்தை ஆணா பெண்ணா என்று அறிவதை அரசு தடை செய்துள்ளது. இது ஒரு அறம் சார்ந்த சட்டம். அது அறிவியலுக்குப் புறம்பானதல்ல மாறாக கருவின், குழந்தையின் உரிமையை பாதுகாக்கும் அறம் சார்ந்தது.
கிறீத்துவத்திற்கு இன்னொரு பக்கமும் உண்டு, அது வெறும் வழிபாட்டு மதமாக மட்டுமே இயங்கும் தன்மையும் கொண்டது. பரவலாக அறிவியல் சூழல் இல்லாத சமூகங்களில் செயல்படும் கிறீத்துவம் இப்படியானது. சமகால இந்திய கிறீத்துவத்தை இப்படி ஒன்றாக வகையறை செய்ய முடியும். அதன் அறிவுச்செயல்பாடு என்பது கல்வி நிறுவனங்களை நடத்துவதும் சில கலாச்சார ஆய்வுகளை செய்வதிலும் நின்றுவிடுகிறது.
‘இறைநம்பிக்கையும், அறிவும் (Reason) உண்மையை தியானிக்கும் பொருட்டு மனித ஆன்மா உயர்ந்தெழ உதவும் சிறகுகள்’ என போப் இரண்டாம் ஜான் பால் (John Paul II) கூறுகிறார். (Fides et Ratio: On the Relationship Between Faith and Reason)  கடவுள்நம்பிக்கை அறிவுக்குப் புறம்பானதாய் இருக்கத் தேவையில்லை மேலும் அறிவியல் மட்டுமே நம் வாழ்வின் எல்லா பக்கங்களையும் நிரப்பிவிடுவதுமில்லை.
ஷசாம் எனும் ஒரு குறுஞ்செயலி(App) உள்ளது. நீங்கள் ஒரு பாடல் துண்டை அதற்கு போட்டுக் காட்டினால் அது அந்தப் பாடலை அடையாளம் கண்டுகொள்ளும். அப்பாடல் குறித்த எல்லா தகவல்களையும் பாடல் வரிகளையும் உங்களுக்குக் காண்பிக்கும். ஆனால் அந்தச் செயலியால் ஒருபோதும் அந்தப் பாடலை அனுபவிக்கவோ உணரவோ முடியாது. எந்த அழகிய காட்சியையும் படம்பிடிக்கும் ஒரு கருவியால் அதன் ரம்மியத்தை மதிப்பிட முடியாது.  கவிதையை ஒரு இயந்திரம் பகுத்தாய்ந்து அதன் பல்வேறு கூறுகளைச் சொல்ல முடியும். அதை அசைபிரிந்த்து அர்த்தம் சொல்லலாம், அதன் வகைமை என்ன என்று கண்டுபிடிக்கலாம். அதன் மொழிபெர்யர்ப்பை, ஏன் அர்த்தத்தைக் கூட சொல்ல லாம் ஆனால் அந்தக் கவிதையை உணர முடியாது. அறிதலும்  உணர்தலும் மனிதனுக்கு இரு பெரும் அனுபவங்கள். அறிதலும் உணர்தலும் ஒன்றை ஒன்று நிறைவு செய்கின்றன. அறிவற்ற உணர்தலும் உணர்வற்ற அறிதலும் முழுமையடையாதவை. தன் தாய் யார் என அறிவியலின் துணை கொண்டு ஒரு மனிதன் அறிய முடியும் ஆனால் அதை அவன் உளமாற உணரும்போதே அந்த உண்மை மழுமைபெறுகிறது. மதமும் அறிவியலும் உண்மையைத் தேடும் மனித ஆன்மாவின் இரண்டு சிறகுகளாய் செயல்பட முடியும் என்பது இதை முன்வைத்துதான். மனித உணர்வென்பது வெறும் நரம்புக்கூட்டுத்தொகையின் எதிர்வினைகள் என்று அறிவியல் சொல்லுமானால் அதை இயக்கும் மென்பொருளாக வரலாறும் கலாச்சாரமும், மொழியும், சிந்தனைப்போக்குகளும் உள்ளன என்பதை ஆன்மிகம் கூறும். அவற்றை தொகுக்கவும் நெறிப்படுத்தவும் மதம் செயல்படுகிறது. அறிவியலையும் ஆன்மிகத்தையும் இணைக்கும் சாத்தியங்களை கிறீத்துவம் கொண்டிருந்தாலும் நடைமுறையில் அந்த ஒருங்கிணைவிற்கான ஒரு உலக சக்தியாக  அது இன்னும் முழுமையடையவில்லை என்பதே உண்மை.

Christian_Scientists_and_Inventors_Tech_Discover_Church

உசாத்துணை

  1. http://www.britannica.com/event/Council-of-Jerusalem
  2. http://www.newadvent.org/cathen/04045a.htm
  3. http://www.newadvent.org/cathen/02084a.htm
  4. http://www.newadvent.org/cathen/14663b.htm
  5. https://en.wikipedia.org/wiki/Geocentric_model
  6. https://en.wikipedia.org/wiki/Heliocentrism
  7. https://en.wikipedia.org/wiki/Giordano_Bruno
  8. http://w2.vatican.va/content/pius-xii/en/encyclicals/documents/hf_p-xii_enc_12081950_humani-generis.html
  9. http://www.casinapioiv.va/content/accademia/en.html
  10. http://www.vaticanobservatory.va/content/specolavaticana/en.html
  11. https://en.wikipedia.org/wiki/List_of_Roman_Catholic_cleric-scientists
  12. https://en.wikipedia.org/wiki/Gregor_Mendel
  13. https://en.wikipedia.org/wiki/Nicolas_Steno
  14. https://en.wikipedia.org/wiki/Guy_Consolmagno

3 Replies to “அறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து”

  1. இது ஒரு சிறந்த கட்டுரை.
    சிறந்த கட்டுரை என்றாலும் இது ஒரு தீவிர மதப் பரப்புரைக் கட்டுரை என்றுதான் சொல்லியாக வேண்டும். சிறில் அலெக்ஸ் நான் மதிக்கும் ஓர் எழுத்தாளர். இந்தக் கட்டுரையில் இருக்கும் ஒரு திட்டமிடல் அவர் எழுத்தாண்மையை விளக்கும் அளவுக்கு அவரது மத நேர்மையை எடுத்துரைக்காது. பதிலாக ஒரு கிருத்துவ மத நேர்மையை தெளிவாக எடுத்துரைக்கும். அறிவியலுக்கான கிருத்துவத்தின் பல காலகட்டங்களின் பங்களிப்பை இக்கட்டுரை சொல்கிறது. அதில் நல்லவனவற்றை வெகுவாக விதந்தோதியும் அல்லனவற்றை சப்பைக் கட்டாகவும் இக்கட்டுரை சொல்கிறது.
    கிருத்துவத்தின் மீது அறிவியல் சார்ந்து வைக்கப்படும் மிக முக்கியமான குற்றச்சாட்டான, சில வரிகளில் கடந்து சென்றுவிட முடியாத, கலிலியோவுக்கான தண்டனையை லாவகமாகக் கடந்து செல்ல முயன்று பல இடங்களில் தடுக்கி விழுகிறார் கட்டுரையாளர். கலிலியோவைப் பற்றி ‘நிதானமற்ற ஆளுமையுடையவர், மறுத்த அறிஞர்களை எள்ளி நகையாடினார், அவரது கடிதங்களிலும் எழுத்திலும் எள்ளலும், நிராகரிப்பும் அதீத குறைகூறலும் வெளிப்பட்டுக்கொண்டேயிருந்தன’, என்றெல்லாம் குறை கூறுகிறார். ஒரு தீவிர கிருத்துவர், கிருத்துவம் குற்றவாளிக் கூண்டிலிருக்கும்போது கிருத்துவத்துக்காக வைக்கும் ஒரு வாதமாக இதைப் பார்க்கலாம். இவர் இவ்வாறு கூறுவதற்கு ஆதாரங்கள் இருக்கலாமென்றாலும் //கலிலேயோவுக்கு எழுதப்பட்ட மறுப்புக்கள் இன்றைய நோக்கில் குறைபாடுள்ளவையாக இருந்தாலும் அன்றைய கணிதவியல், வானியல் சிந்தனைகளின் உச்சங்களிலிருந்து வந்தன. அவை மதவாதிகளின் வெற்று பிதற்றல்களாயில்லை.// என்று கூறுவதால் இவர் அன்றைய மதவாதிகளின் எண்ணங்களிலேயே இன்றும் இருக்கிறாரோ என்றுதான் முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. இவை அன்றைய நிலையிலேயே வெற்றுப் பிதற்றல்கள்தான் என்பதை அன்று கலிலியோ செய்த பல வெற்றிகரமான பரிசோதனகள் நிறுவுகின்றன.
    நல்ல வேளையாக இவர் டார்வினை அவ்வாறு குற்றம் சாட்டிவிடவில்லை. அவரது பரிணாமவியல் கோட்பாட்டை கிருத்தும் நடத்திய விதத்தை சில வரிகளில் கடந்து போய்விடுகிறார்.
    கிருத்துவப் பாதிரியார்களின் அறிவியலுக்கான நேரடி மற்றும் சார்பு தொண்டுகளைப் பரவலாகப் பட்டியலுகிறது இக்கட்டுரை. நவீன அறிவியல் முன்னேற்றங்களுக்கான கடந்த 500 ஆண்டுகளில் மேற்கத்திய சமூகத்தின் மீதிருந்த மத ஆளுமையே இதற்குப் பெருமளவுக்குக் காரணமென்றாலும் இதேப் போன்ற பங்களிப்பை வேறு மதம் சார்தவர்கள் அந்த காலகட்டங்களில் செய்யவில்லை என்ற கட்டுரையின் கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதுதான்.
    இக்கட்டுரையின் திட்டமிடல் இதன் முடிப்பில் பரிமளிக்கிறது. கட்டுரையின் அறிவியல் சார்ந்த அத்தனை முரண்களையும் மழுங்கடிக்கும் விதமாக அறிவியலை உணர்வுபூர்வத்தின் அடிப்படையில், ஆன்மிகத்துக்காகச் சாடி கட்டுரையை தனது கிருத்தவ ஆதங்கத்தோடு இவ்வாறு முடிக்கிறார்.
    //அறிவியலையும் ஆன்மிகத்தையும் இணைக்கும் சாத்தியங்களை கிறீத்துவம் கொண்டிருந்தாலும் நடைமுறையில் அந்த ஒருங்கிணைவிற்கான ஒரு உலக சக்தியாக அது இன்னும் முழுமையடையவில்லை என்பதே உண்மை.//
    இந்தக் கட்டுரை அறிவியல் ஆர்வலர்களின் மத்தியில் கட்டுரையாளரின் எண்ணங்களை செலுத்திவிடுமா என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.
    ஓகை நடராஜன்.
    31-5-2016

  2. Cyril has done a grand research into the compatibility of Christianity with Science. It is a pretty dense article no doubt as I had to read it more than once to understand the thread of thought. I am also richer by a few technical Tamil words after reading through his “Senthamizh” rendition (kurunjeyali, kuruthanu, vaanveli Aayvagam….
    Honestly, I wasn’t sure that the Church had actually accepted Darwin’s evolutionary proposition. Now after reading through Cyril’s article and further research, I realise that indeed it has. “The critical teaching of the Church is that God infuses souls into man—regardless of what process he might have used to create our physical bodies. Science, according to Pope John Paul II, can never identify “the moment of the transition into the spiritual”—that is a matter exclusively with the magesterium of religion.”
    Catholic Church has in all fairness embraced the advances in Science, sometimes delayed, sometimes quick. The fact that even the Big Bang theory finds resonance in the primordial Fiat Lux (Let there be light) through Pius XII exhibits that Church does not want to curb scientific forays into life beyond earth and sun.
    All in all – this article is an eye opener! Well versed!

  3. பன்முகத் தன்மை கொண்ட ஐரோப்பியக் கலாச்சாரங்களை அழித்து ஒருமையான ரோமக் கிறிஸ்தவ உலகியலை கத்தோலிக்கம் நிறுவியது. இதன் காரணமாக உண்டானதே ஐரோப்பிய இருண்ட காலம். இக்காலத்தில் கத்தோலிக்கம் முழுமையாக சமூகத்தை கட்டுப்படுத்தி வந்தது, மக்கள் கல்வியற்றவர்களாக இருந்தனர், லத்தின் மொழியில் பாதிரியார்கள் மட்டும் தான் பைபிள் படிக்க முடிந்தது, பைபிளை மொழிபெயர்த்தவர்கள் நடுவீதியில் கொளுத்தப்பட்டார்கள். இக்காலகட்டத்தில் கிட்டத்தட்ட அறுநூறு ஆண்டுகள் ஸ்பெயின் இசுலாமியர் ஆட்சியில் இருந்தது. அவர்களின் மெய்யியலை முறியடிக்க கிறிஸ்தவம் முதல் முறையாக “அறிவை” வளர்த்தெடுக்க ஆரம்பித்தது. கத்தோலிக்கம் அறிவு சார்ந்த மெய்யியலுக்கு எதிரானது, நம்பிக்கை சார்ந்தது. ஆனால் எப்போதும் அது அறிவியலை சுயபரிசோதனைக்காக அல்லாமல் தன்னை தற்காத்துக்கொள்ளவே பயன்படுத்துகிறது. எப்படி ஏகாதிபத்தியங்கள் அறிவியலை அதிகாரத்தின் கருவியாகப் பயன்படுத்துகின்றனவோ அவ்வாறே கிறிஸ்தவமும் பயன்படுத்தி உள்ளது. கத்தோலிக்கம் பரிணாமவாதத்தை ஏற்பதால் கத்தோலிக்கம் மாற்றத்தை ஏற்கின்றதென்று அர்த்தமில்லை. மேலைசமூகத்தில் பரிணாமவாதம் வேருன்றிவிட்டதால் , அங்கு தன்னை அடுத்த தலைமுறைக்கு ஏற்புடையதாகக் காட்டவே பரிணாமவாதத்தை ஏற்கவேண்டிய கட்டாயம்.
    கிறிஸ்தவப் பாதிரிகள் அறிவியலலர்களாக இருந்ததற்கு காரணம், ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் சாராத கல்வியமைப்புகள் இல்லாததே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.