நெஞ்சில் குடியிருக்கும் காந்தி – மிலி கிரகாம் போலக்கின் ‘காந்தி எனும் மனிதர்’

Millie_Graham_Polak_Gandhi_MK_Biography_Books

லங்கேஷ் பிரகாஷண என்னும் பதிப்பகம் கன்னட மொழியில் மிகச்சிறந்த புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் முக்கியமானதொரு அமைப்பாகும். மறைந்த கன்னட எழுத்தாளர் லங்கேஷுக்குச் சொந்தமான  பதிப்பகம். சமீபத்தில் அப்பதிப்பகம் தொண்ணூறு வயதைக் கடந்த எச்.எஸ்.தொரெஸ்வாமி என்னும் காந்தியவாதியின் தன்வரலாற்று நூலை வெளியிட்டது. புத்தகத்தின் தலைப்பு ‘நினைவுச்சுருளைப் பிரித்தபோது’. 1942ஆம் ஆண்டில் நந்தி மலைத்தொடர் விருந்தினர் விடுதியில் ஓய்வெடுப்பதற்காக காந்தி தங்கியிருந்தபோது இருபத்தி நான்கு வயதே நிரம்பிய இளைஞனான தொரெஸ்வாமி ஒருநாள் காலை பிரார்த்தனைக்கூட்டத்தில் காந்தியைச் சந்தித்தார். அவருடைய எளிமையான தோற்றமும் உரையும் அவரைக் கவர்ந்தன. அவரைப் பின்பற்றி நடக்கும் தீர்மானத்தை அக்கணத்திலேயே அவர் முடிவு செய்துவிட்டார். காந்தியக்கொள்கைகள் அவருடைய வாழ்க்கைக்கும் கொள்கைகளாகிவிட்டன. தன்னுடைய வாழ்க்கையையே அக்கொள்கைகளைச் சோதித்துப்பார்க்கும் களமாக வகுத்துக்கொண்டார். அறுபதாண்டுக்கும் மேலான பொதுவாழ்வில் அவருக்குக் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக இந்தப் புத்தகம் அமைந்திருந்தது. காந்தியத்தின் தொடர்ச்சி காந்தி இல்லாத இந்தியாவில் எவ்வாறு நிலைகொண்டிருக்கிறது என்பதை அறிவதற்கு இது ஒரு நல்ல புத்தகம்.

ஆனால் இப்புத்தகத்தைப்பற்றி எதிர்மறையாகச் சொன்ன நண்பர்களின் சொற்களையும் நான் கேட்டேன். ”காந்தியத்தில் உள்ள முரண்பாடுகளை இவர் ஏன் சுட்டிக்காட்டவே இல்லை?” என்றார் ஒருவர். “இந்தியாவில் நேதாஜியின் தலைமையில் எழுந்த வீரப்போராட்டத்தை கருவிலேயே கொன்றுவிட்டவர் காந்தி” என்றார் இன்னொருவர். “அவர் வாழ்ந்த காலத்தில்தான் கம்யூனிஸ்டுகள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எனப் பலரும் போராடிக்கொண்டிருந்தார்கள். அவர்களையெல்லாம் கடந்து காந்தியை மட்டும் பின்பற்றிச் செல்வதற்கான காரணத்தை அவர் வலிமையாக எழுதவில்லை” என்று குறை சொன்னார் மற்றொருவர். காந்தியைப்பற்றிய நல்ல நினைவுகளையொட்டித் தொடங்கிய அன்றைய உரையாடல் அவரைப்பற்றிய கசப்புகளைக் கொட்டுவதில் சென்று முடிந்தது.

காந்தியக்கசப்பு என்பது காந்தியின் காலத்திலேயே தொடங்கிவிட்ட ஒரு வரலாறு. சிறுகச்சிறுக அந்தக் கசப்பு வளர்ந்து, காந்தியின் ஆளுமையைப்பற்றிய போதிய அறிமுகமே இல்லாத இன்றைய தலைமுறையினர் வழியாக அது வெடித்து வழிவதைப் பார்க்கும்போது பொங்கிவரும் வருத்தம் கொஞ்சநஞ்சமல்ல. காந்திய மதிப்பீடுகள் இன்றைய அரசியல் தளத்தில் எந்த அளவுக்குச் செல்லுபடியாகக்கூடியவை என்று கறாராகச் சொல்லத் தெரியவில்லை. காந்தியின் அடிப்படைக்குணங்களான எளிமையையும் நேர்மையையும் கொண்டவர்கள் வாழ்வின் எல்லாத் தளங்களிலும் அபூர்வ மனிதர்களாகிவிட்டார்கள். தம்முடைய வாய்ப்புகளுக்காகவும் பொருளியல் வெற்றிகளுக்காகவும் எப்படிப்பட்ட சமரசங்களுக்கும் இன்றைய மக்கள் தயாராக இருக்கிறார்கள். இத்தருணத்தில் காந்தியத்தைப்பற்றிய உரையாடல்களும் புத்தகங்களும் ஒருவித ஆறுதலை அளிப்பவையாக உள்ளன. இந்த வரிசையில் சமீபத்தில் எனக்குக் கிடைத்த புத்தகம் ‘காந்தி எனும் மனிதர்’ என்கிற மொழிபெயர்ப்பு நூல். கடந்த நூற்றாண்டில் முப்பதுகளில் வெளிவந்த மிலி கிரகாம் போலக் எழுதிய அனுபவக்குறிப்புகளின் தொகுப்பான புத்தகத்தின் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்திருப்பவர் கார்த்திகேயன்.

Henry_Polak_Left_Gandhi_South_Africa_SA_Race_Blacks_India_Millie_Graham_MG_MK_Gandi

தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்துவந்த இந்தியர்களின் உரிமைகளைப் பெற்றுத் தரும் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த காந்திக்குத் துணையாக நின்றவர்களில் ஒருவர் ஹென்றி போலக் என்னும் ஆங்கிலேயர். அவர் காந்தியின் வீட்டிலேயே தங்கியிருந்தார். அவரைத் திருமணம் செய்துகொள்வதற்காக இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு வந்தவர் மிலி. இருவருக்கும் திருமணத்தைச் செய்துவைத்து தம்மோடேயே தங்கவைத்துக்கொண்டார் காந்தி. அதனால் காந்தியின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அவருக்கு மிக அருகில் வாழ்ந்து கவனிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. ’பாரதியாருக்கு யதுகிரி அம்மாள் எப்படியோ, அப்படி காந்திக்கு மிலி போலக்’ என்று நூலின் முன்னுரையில் சுனில் கிருஷ்ணன் குறிப்பிடும் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை என்பதை புத்தகத்தை வாசித்து முடித்ததும் உணர்ந்துகொள்ளமுடிகிறது.

தென்னாப்பிரிக்க வாழ்க்கைக்குப் பிறகு காந்தி இந்தியாவுக்குத் திரும்பிவிட்டார். மிலியும் லண்டனுக்குத் திரும்பிவிட்டார். நாளடைவில் காந்தி உலகறிந்த ஆளுமையாக மலரத் தொடங்கினார். அவரைப்பற்றிய  உரையாடல்கள் உலகெங்கும் பரவத் தொடங்கிய தருணத்தில் அவருடன் பழகிய காலத்தின் நினைவுகளைத் தொகுத்து எழுதும்படி மிலியை பலர் கேட்டனர். ஆயினும் மிலிக்கு அதில் ஒரு தயக்கம் இருந்தது. தனிப்பட்ட நட்பின் உரையாடல்களை எழுதுவதும் வெளியிடுவதும் சரியல்ல என்னும் எண்ணம் அவரைத் தடுத்துவிட்டது. ஆனால் காந்தியே தன் வாழ்க்கையை ‘சத்திய சோதனை’ என்னும் பெயரில் எழுதி வெளியிட்டதைத் தொடர்ந்து மிலியின் மனத்தடை அகன்றது. அதுவரை பாதுகாத்து வைத்திருந்த பழைய நாட்குறிப்புகள், கடிதங்கள் எல்லாவற்றையும் தேடியெடுத்து, தன் அனுபவங்களை பதினெட்டு அத்தியாயங்களில் தொகுத்தெழுதி வெளியிட்டார். ’நான் அவரை எப்போதும் மகாத்மாகவோ புனிதராகவோ நுட்பமான அரசியல்வாதியாகவோ அறிந்திருக்கவில்லை. இனம், பால்வகை, காலம் என்ற பகுப்புகளைக் கடந்த அன்பை என்பால் வெளிப்படுத்திய, மகத்தான கருணை நிறைந்த மனிதனாகவே அவர் இருந்திருக்கிறார்’ என்று தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார் மிலி.

மிலிக்கும் காந்திக்கும் இடையில் நிகழும் உரையாடல்கள் அற்புதமானவையாக உள்ளன.  இலட்சியங்கள்மீது அழுத்தமான பிடிப்புள்ள காந்தி தம்மைவிட பல ஆண்டுகள் வயதில் இளைய பெண்ணான மிலியின் ஒவ்வொரு கேள்விக்கும் விடை சொல்கிறார். தன் ஐயம் தீரும் வரைக்கும் தொடர்ந்து விவாதிப்பதில் மிலியும் ஆர்வமாகவே இருக்கிறார். அந்த விவாதங்களே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. காந்தியின் எழுத்து மேசையின் மீது ஏசுவின் படமொன்று எப்போதும் இருந்ததாகக் குறிப்பிடுகிறார் மிலி. தன் மேசையில் உட்கார்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் காந்தியை அமைதி ததும்பும் விழிகளுடன் பார்த்துக்கொண்டிருப்பதுபோல ஏசு கிறித்துவின் முகம் அமைந்திருக்கிறது.  அந்தப் படத்தின் முன் அமர்ந்தபடி கிறித்துவத்தைப்பற்றியும் இந்துமதத்தைப்பற்றியும் அவர்கள் இருவரும் விவாதித்துக்கொள்கிறார்கள்.  ஒரு நல்ல இந்து ஒரு நல்ல கிறித்துவனாகவும் இருப்பான் என்று சொல்லும் காந்தியை தொடக்கத்தில் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காலம் செல்லச்செல்ல அக்கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வருகிறார் மிலி.

ஒருநாள் ஒரு தீவிரமான நிகழ்ச்சியைப்பற்றி விவாதிப்பதற்காக ஜெனரல் ஸ்மட்ஸைச் சந்திக்கப் புறப்படுகிறார் காந்தி. அவரை வழியனுப்புவதற்காக ரயில் நிலையத்துக்கு மிலியும் போலக்கும் சென்றிருக்கிறார்கள். “உங்களுக்காக விசேஷமாக ஏதேனும் செய்யவேண்டுமா?” என்று கேட்கிறார் மிலி. அமைதியான குரலில் காந்தி அவரிடம் தனக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார். பிரார்த்தனையை தன் தினசரிக் கடமைகளில் ஒன்றாக வகுத்துக்கொண்ட காந்தியைத்தான் நாம் அறிவோம். தனக்காக பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்ட காந்தியை மிலி நமக்குக் காட்டுகிறார். வாழ்வின் அழியாக் கணங்களில் ஒன்று அது.

புத்தகத்தில் அப்படிப்பட்ட பல கணங்கள் உள்ளன. ஒரு மனிதனாக காந்தி வெளிப்படும் கணங்கள். மிலிக்கு குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை ஆரோக்கியமாக இருந்தாலும், மிலியின் உடல் நாளுக்குநாள் மெலிந்துகொண்டே போகிறது. உறக்கத்துக்காகச் செலவிடும் ஐந்து மணி நேரம் தவிர மற்ற நேரங்களில் பொதுச்சேவைக்காக அலைந்தபடியே இருக்கும் காந்தி மிலியின் நெளிவை அறிந்து வருத்தப்படுகிறார். தூக்கமின்மையே அதற்கான காரணம் என்பதையும் குழந்தையின் பால்குடியை மறக்கவைக்க முடியாததால் இரவெல்லாம் அடிக்கடி எழுந்து தூக்கத்தை இழக்கவேண்டியிருப்பதையும் மிலியின் வழியாக அறிந்துகொள்கிறார். அக்கணமே குழந்தையின் பால்குடியை மறக்கவைக்கும் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாகச் சொல்கிறார். புட்டிப்பால் ஏற்பாடுகளோடு அன்று இரவு தூங்கும் குழந்தையை தன்னருகில் படுக்கவைத்துக்கொள்கிறார். அழும் குழந்தையை அருமையாகக் கொஞ்சி உறங்கவைப்பதில் வல்லவராக இருக்கிறார் காந்தி. அன்று இரவு மிலி நிம்மதியாக உறங்குகிறார். ஒருசில நாட்களிலேயே குழந்தை தாய்ப்பாலை மறந்து புட்டிப்பாலுக்குப் பழகிவிடுகிறது.

ஒருமுறை ஆப்பிரிக்க அரசாங்கத்துக்கும் காந்தியின் அமைப்புக்கும் இடையில் ஏதோ ஒரு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதன் விளைவாக இந்தியர்களுக்கு ஒருசில உரிமைகள் கிடைக்கின்றன. அவற்றை விளக்கிச் சொல்வதற்காக ஒரு கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் காந்தி பேச்சுவார்த்தையின் சாராம்சத்தை விளக்கி உரையாற்றுகிறார். கூட்டத்தின் முடிவில் எல்லோரும் கலைந்து செல்லும் தருணத்தில் கதவோரத்தில் மறைந்திருந்த ஒருவர் காந்தியை நெருங்கிவந்து ஏதோ சத்தமிடுகிறார். காந்தி அவரிடம் விளக்கம் கொடுத்தபடி சிறிது தூரம் வரைக்கும் அழைத்துச் செல்கிறார். அவர்கள் பேசிக்கொள்வதை அந்த அரங்கத்தில் உள்ள மிலியால் சரியாகக் கவனிக்கமுடியவில்லை. புதிய மனிதர் உக்கிரமான உடலசைவுகளோடு உரையாடுவதும் பேச்சின் முடிவில் காந்தியிடம் எதையோ கொடுத்துவிட்டுச் செல்வதையும் மட்டுமே பார்க்கமுடிகிறது. திரும்பி வந்த காந்தியிடம் மிலி அவரைப்பற்றி விசாரிக்கிறார். அவர் தம்மைக் கொல்வதற்காக வந்திருந்தார் என்றும் தம் பேச்சின் உண்மையை உணர்ந்த பிறகு கொல்வதற்காக் எடுத்துவந்த ஆயுதத்தை தன்னிடமே கொடுத்துவிட்டு திரும்பிச் சென்றுவிட்டார் என்றும் அமைதியாகச் சொல்கிறார் காந்தி. மிலி அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார். காந்தியோ தனக்கு ஒரு புதிய நண்பர் கிடைத்திருப்பதாகச் சொல்லி மகிழ்கிறார்.

ஒரு தருணத்தில் காந்தியின் நண்பர்போல தன்னைக் காட்டிக்கொண்ட ஒருவர் இந்தியப்பயணத்தை முடித்துக்கொண்டு ஆப்பிரிக்காவுக்குத் திரும்பி வந்தபோது, பதின்மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியை திருமணம் செய்துகொண்டு அழைத்துவந்துவிடுகிறார். அவரோ நாற்பது வயதைக் கடந்தவர். அதைக் கண்டு காந்தி மிகவும் வேதனையில் ஆழ்ந்துவிடுகிறார். அந்த நடத்தையை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மனம் கொதித்து “இதுபோன்ற திருமணத்தை எந்த நாட்டிலும் அனுமதிக்கக்கூடாது” என்று வாதிட்ட மிலியின் கருத்தோடு அவரும் உடன்படுகிறார். அவர்கள் மணவாழ்வில் ஈடுபடுவதை எண்ணி அஞ்சுகிறார். தன் இதயம் வலிப்பதாகச் சொல்கிறார். குழந்தைத்திருமணத்தை ஒட்டி இருவருக்கும் இடையில் ஒரு நீண்ட விவாதமே நிகழ்கிறது. இத்தகு திருமணத்தில் மணப்பெண்ணுக்கும் அப்பெண்ணின் தாயாருக்கும் சிறிதளவேனும் உடன்பாடு இருந்திருக்கக்கூடும் என்னும் தன் ஐயத்தை வெளிப்படுத்துகிறார் காந்தி. அதைத் தொடர்ந்து சிறுவயதுத் திருமணங்களைத் தடுத்து நிறுத்துவதில் குடும்பப்பெண்கள் ஆற்றவேண்டிய சீர்திருத்தப் பணிகளைப்பற்றிச் சொல்கிறார் காந்தி. பெண்கள் கீழ்ப்படிய மறுக்கும்போது பெண்கள் சொல்வதை ஆண்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும் என்கிறார் காந்தி. அதையொட்டி உருவாகும் வன்முறைகளை எதிர்த்து நிற்க பெண்கள் தயங்கவேண்டியதில்லை என்றும் தேவைப்படின் அதற்காகத் தன் உயிரையும் மாய்த்துக்கொண்டு தன் விருப்பமின்மையை உணர்த்தலாம் என்றும் சொல்கிறார்.

இலட்சியமும் நடைமுறை எதார்த்தமும்  மோதிக்கொள்ளும் சில கணங்களையும் மிலியின் குறிப்புகளில் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம். உடலை வருத்தும் தண்டனைகளில் காந்திக்கு ஒருபோதும் நம்பிக்கை இருக்கவில்லை. அதிலும் குழந்தைகளைத் தண்டிப்பதை அவர் அடியோடு வெறுத்தார். ஒரு குழந்தை குற்றம் செய்யும்போது, அக்குழந்தை தான் செய்த குற்றத்தை தானே உணரும்வகையில் எடுத்துரைத்து வழிகாட்ட வேண்டும் என்பதி காந்தியின் நம்பிக்கை. பதினாலு வயதுள்ள ஒரு சிறுவன் காந்தியின்  கல்விநிலையத்தில் படிப்பதற்காக வந்திருக்கிறான். குரூர உணர்வுள்ள அவன் மற்ற குழந்தைகளை அடிப்பதையும் அவர்களிடம் சண்டைக்குச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறான். அந்த நிகழ்ச்சிகளைப் புகார்கள் காந்தியிடம் சொல்லப்படுகின்றன. காந்தி அவனை அழைத்து பலமுறை அறிவுரைகள் வழங்குகிறார். ஆனால் எதுவும் அவனிடம் செல்லுபடியாகவில்லை. அவன்மேல் மென்மேலும் கருணையையும் அன்பையும் பொழிகிறார். அவனிடம் புரிதலை உண்டாக்க விளக்கிப் பார்க்கிறார். கெஞ்சியும் பார்க்கிறார். ஒரு பயனும் விளையவில்லை. ஒருமுறை அவனைவிட வயதில் குறைந்த சிறுவனொருவனை கிரிக்கெட் மட்டையால் அடிப்பதை காந்தியே நேருக்குநேர் பார்த்து மனம் வருந்துகிறார். அப்போது அங்கே அவருடன் நின்றிருந்த மிலியின் கணவரிடம் அவனுக்கு இரண்டு அடிகள் கொடுக்கும்படி சொல்கிறார். அந்த அடிகள் அவனை மாற்றிவிடுகின்றன. வலி என்றால் என்ன என்பதை அவனுக்கு அந்த அனுபவம் உணர்த்திவிடுகிறது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளத் தொடங்கிவிடுகிறான்.

தான் மிகவும் நம்பியவர்கள் தன்னை திட்டமிட்டு ஏமாற்றுவது காந்திக்கு மிகவும் வேதனையளிப்பதை நேரிடையாகவே பார்த்த அனுபவத்தைக் குறிப்பிடுகிறார் மிலி. தெரியாமல் செய்யப்பட்டது எனச் சொல்லப்படும் பொய்க்காரணத்தை ஒருபோதும் காந்தி ஏற்றுக்கொள்வதில்லை. தன்னைச் சுற்றியிருப்பவர்களிடம் காந்தியின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருந்ததாலேயே, அவர் அடைந்த ஏமாற்றங்களும் அதிக அளவில் இருக்கின்றன என்பது மிலியின் கருத்து. ஆனால் காந்திக்கு அக்கருத்தை ஏற்றுக்கொள்வதில்  மிகவும் தயக்கம் இருக்கிறது. ஒருமுறை தான் ஏமாற்றப்பட்டதை வேதனையுடன் காந்தி விவரித்த சமயத்தில் அவரை அமைதிப்படுத்தும் விதமாக ‘ஒருவேளை அவள் தெரியாமல் அதைச் செய்திருக்கலாம்’ என்று மிலி சொன்னபோது அதை ஒரு பேச்சுக்காகக்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் காந்தி. ஒரு தீங்கை தெரிந்தே செய்பவர்களுக்கு திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தான் செய்யும் செயல் தவறென்றே தெரியாமல் தீங்கு செய்பவர் நல்லவராக மாற வாய்ப்பே இல்லை. ஒருவருக்கு நல்லது கெட்டது தெரியவில்லை என்றால், நன்மையையும் தீமையையும் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை என்றால், அவருக்கு தனக்குள் இருக்கும் கடவுளைத் தெரியவில்லை என்று பொருளாகிவிடும். அப்படிப்பட்டவர்களுக்கும் மேய்ச்சல் நில விலங்குகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று தொடர்ந்து சொல்கிறார் காந்தி. நன்மை தீமையை அறியும் நமது அறிவின் துணையோடுதான் மானுடன் பரிமாணம் என்னும் ஏணியின் ஒவ்வொரு படியிலும் கால் பதிக்கிறான் என்னும் அடிப்படை உண்மையை அந்த உரையாடல் வழியாக தெளிவுகொள்கிறார் மிலி.

ஃபீனிக்ஸ் ஆசிரமத்தில் வாழ்ந்த அனுபவங்களை பல அத்தியாயங்களில் முன்வைத்திருக்கிறார் மிலி. எல்லோருக்கும் ஒரே மாதிரியான வீடுகள். எல்லோரும் உழைக்கவேண்டும் என்பது நிபந்தனை. இயற்கை உணவும் இயற்கை மருத்துவமும் கடைபிடிக்கப்பட்டன. அங்கிருந்தவை மிகமிக எளிய வீடுகள். நல்ல தரைவிரிப்பு இல்லை. ஜன்னல் விரிப்புகள் இல்லை. பாத்திரங்கள் மிகவும் குறைவாக இருந்தன. குளிக்கும் இடங்களிலும் வசதியில்லை. ஒரு லட்சியவாதியாக தன்னை நினைத்துக்கொண்டிருந்த காந்திக்கு இவற்றைப்பற்றியெல்லாம் யோசிக்கத் தோன்றவில்லை. மிலியும் மனைவி கஸ்தூரி பாவும் கேட்டுக்கொண்ட பிறகு, மிகமிக முக்கியமானவற்றை மட்டும் வாங்கித் தருகிறார். அங்கே சரியான குடிநீர் வசதி கிடையாது. மழைக்காலத்தில் விழும் நீரை பெரியபெரிய பாத்திரங்களில் சேகரித்துவைத்துக்கொண்டு, அதையே ஆண்டுமுழுக்க குடிப்பதற்காகப் பயன்படுத்துகிறார்கள். குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை ஆசிரமத்தில் ஒரு கட்டாய விதியாகவே கடைப்பிடிக்கிறார்கள். அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் ஆசிரமத்தை நெருங்கி தாகத்துக்கு குடிநீர் கேட்கும்போது மறுக்கவும் முடியவில்லை. தொடர்ந்து தாராளமாகவும் கொடுக்கமுடியவில்லை. ஆசிரமவாசிகள் குளிப்பதற்கும் துணிகளைத் துவைப்பதற்கும் பயன்படுத்தும் நீரோடையில் கொடிய நஞ்சைக் கக்கக்கூடிய பாம்பொன்று தோன்றி எல்லோரையும் பீதிக்குள்ளாக்குகிறது. காந்தி நம்பும் கொல்லாமைத் தத்துவத்தால் நடுங்கியபடி வாழ்கிறார்கள். காந்தி இல்லாத சமயத்தில் ஒருவர் அதைக் கொன்று தூக்கி வீசிவிடுகிறார். கண்டிப்பாகக் கடைபிடிக்கப்படவேண்டிய விஷயங்களையொட்டி அவர் மிகவும் பிடிவாதமாகவே இருந்தார். அதே சமயத்தில் அவற்றையொட்டிய  விவாதங்களில் முன்வைக்கப்படும் கருத்துகளை காதுகொடுத்துக் கேட்கும் பொறுமையும் அவருக்கு இருந்தது. அவருடைய ஆழ்மனத்தைத் தொட்டு அசைக்கக்கூடிய கருத்தைப் பொருட்படுத்தவும் அதற்கு முன்பாக பின்பற்றி வந்த கருத்தை உடனடியாகத் திருத்திக்கொள்ளவும் அவர் சிறிதளவும் தயக்கம் காட்டியதில்லை.

உள்ளார்ந்த அன்புடன் அருகிலிருந்து கவனித்துக்கொள்ளும் தன்மையில் ஒரு கைதேர்ந்த மருத்துவரைப்போல காந்தி பணியாற்றுகிறார் என்று குறிப்பிடுகிறார் மிலி. மிக மோசமான முறையில் ஆளையே உருக்கிவிடும் ஒரு தருணத்தில், பிழைப்பதற்கு வாய்ப்புகள் குறைந்த ஒரு கொடிய நோயால் தன் மனைவி பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில் வெறும் எலுமிச்சைச்சாற்றை மட்டுமே தொடர்ந்து புகட்டிக் குணப்படுத்தினார். வேறொரு தருணத்தில், குடல்வால் நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஒருவரை எவ்விதமான அறுவைச்சிகிச்சையும் இல்லாமல் குணப்படுத்தி வைக்கிறார்.

காந்தியைப்பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் போக்கில் அன்னை கஸ்தூரிபாய் பற்றிய நினைவுகளையும் அங்கங்கே பதிவு செய்திருக்கிறார் மிலி. போலக்கின் மனைவியாக காந்தியின் வீட்டில் ஓர் அறையில் தங்கியிருந்த சமயத்தில் ஒரு தாயைப்போல பரிவோடு கவனித்துக்கொண்டதையும் உணவு மேசையில் அனைவரையும் அவர் சமமாக நடத்தியதையும் சொல்கிறார். அவருக்கும் காந்திக்கும் இடையில் குஜாராத்தி மொழியில் நடைபெறும் விவாதங்கள் நிகழும் தருணங்களையும் பல விஷயங்களில் காந்தி காட்டிய பிடிவாதங்களையும் எடுத்துரைக்கிறார். வீட்டில் மிகச்சிறிய வசதிகளைக்கூட ஆடம்பரம் எனக் கருதும் மனநிலை காந்திக்கு இருந்ததென்றும் ஜன்னலுக்குத் திரையிடுவதுபோன்ற ஒரு சிறிய சலுகைக்காகக்கூட  அவருடன் நீண்ட நேரம் விவாதிக்க வேண்டியிருந்ததென்றும் சொல்கிறார் மிலி.

காந்தி என்னும் மாபெரும் ஆளுமையின் வரலாற்றை, அவருக்கு அருகில் சில ஆண்டுகளைக் கழிக்க நேர்ந்த மிலியின் வழியாக அறிந்துகொள்ளும்போது காந்தியை இன்னும் நெருக்கமாக உணரமுடிகிறது. எந்த அளவுக்கு சத்தியத்தோடும் லட்சியவாதத்தோடும் காலமெல்லாம் அவர் பின்னிப் பிணைந்திருந்தார் என்பதற்கு மிலி விவரித்திருக்கும் அனுபவங்கள்  ஒவ்வொன்றுமே சாட்சியாக உள்ளன.

மிலியின் புத்தகம் காந்தியத்துக்குக் கிடைத்த மிகச்சிறந்த ஓர் ஆவணம் என்று எவ்விதத் தயக்கமுமின்றிச் சொல்லமுடியும். தெளிவான தமிழில் அதை மொழிபெயர்த்திருக்கும் கார்த்திகேயனுக்கும் வெளியிட்டிருக்கும் சர்வோதய இலக்கியப்பண்ணைக்கும் தமிழ் வாசக உலகம் கடமைப்பட்டிருக்கிறது.

(காந்தி எனும் மனிதர். ஆங்கிலத்தில்: மிலி கிரகாம் போலக். தமிழில்: க. கார்த்திகேயன். சர்வோதய இலக்கியப்பண்ணை, மதுரை. விலை.ரூ.100 )

தொடர்புடைய பதிவுகள்:
1. காந்தி எனும் மனிதர் – முன்னுரை | காந்தி – இன்று
2. ஆம்னிபஸ்: மிஸ்டர்.காந்தி த மேன் – மில்லி கிரகாம் போலக்
3. Mr. Gandhi : The Man – By : Milie Graham Polak – Compiled by : C. F. Andrews
4. காந்தி எனும் மனிதர் – இயல்பு – காந்தி – மிலி போலாக் எழுதிய புத்தகத்தின் தமிழாக்கத் தொடர்

One Reply to “நெஞ்சில் குடியிருக்கும் காந்தி – மிலி கிரகாம் போலக்கின் ‘காந்தி எனும் மனிதர்’”

  1. புத்தகம் வாங்க –
    சர்வோதயா இலக்கியப் பண்ணை
    32/1, மேல வீதி,மதுரை -625001
    Contact No : 0452-2341746
    mail id : sipmadurai@yahoo.com
    மதுரை காந்திய இலக்கியச் சங்கம்,
    மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகம்,
    Contact No : 9444058898
    நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.