நீர் மேலாண்மையில் நாம் விழிப்புணர்வுடன் இருக்கிறோமா?

neer melanmai

 
பெரிய அளவிலான நீர் நிலைகளை எப்படிச் சேமித்து வைப்பது, காப்பாற்றுவது, செலவழிப்பது என்பவைகள் மட்டும் நீர் மேலாண்மை அல்ல. நாம் அன்றாட வாழ்வில் நீரை எப்படிப் பெறுகிறோம், எப்படி சேமிக்கிறோம், எப்படி காப்பாற்றுகிறோம், எப்படி செலவழிக்கிறோம் என்பவைகளும் இதில் அடங்கி விடுகிறது. அதாவது, ஒவ்வொரு தனி மனிதனும் தனிப்பட்ட முறையில் நீர் மேலாண்மையை எப்படிச் சிறப்புற கடைபிடிக்கிறான் என்பவைகளும் அடங்கி இருக்கிறது.
சிறுவயதில் அம்மாயி ஊரான சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர், தென்மாபட்டு பகுதிக்கு, பள்ளி விடுமுறை நாட்களைக் கழிப்பதற்குச் செல்லும் போது கிடைத்த அனுபவங்கள், பசுமை நினைவுகளாக மனத்துக்குள் இன்றும் நிறைந்திருக்கின்றன.
அங்கு பெரும்பாலான வீடுகளில் கிணறுகள் இருக்கும். கிணறு இருந்தால் அது ஒரு கவுரவச் சின்னம். ஒரு மாதிரியான உப்புச் சுவையுடன் இருப்பதால் அந்த நீரைக் குடிநீராகப் பயன்படுத்த முடியாது. மற்ற செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்தக் கிணற்றில் யாருடைய உதவியும் இல்லாமல் குளிக்க ஆரம்பித்த வயதிலிருந்தே நீர் மேலாண்மை பாடம் ஆரம்பித்து விடுகிறது. ஒரு வாளித் தண்ணீரை மேலே கொண்டு வருவதற்குத் தன் உடலுழைப்பைக் கொடுக்கும் அந்தத் தருணத்திலிருந்து நீரை எப்படிச் சிக்கனமாகப் பயன்படுத்துவது என்பதை அனுபவரீதியாகக் கற்றுக் கொள்கிறார்கள் இளையோர்கள். மிகச் சிரமப்பட்டு இழுத்து மேலே கொண்டு வந்த நீரை வீணாக்கக் கூடாது என்ற மனநிலை இயல்பாகவே உருவாகி விடும். நீரை மிகச் சரியாக, சிக்கனமாகப் பயன்படுத்துவது எப்படி என்பதை அனுபவங்களின் மூலம் பழகி விடுவார்கள்.
இது ஒரு பாடம் என்றால், இன்னொரு பாடம் பம்பு செட்டுத் தண்ணீரில் குளிக்கும் போது எதார்த்தமாகக் கற்றுக் கொடுக்கப் படுகிறது. சில சமயங்களில் அருகில் இருக்கும் தென்னந்தோப்பில் பம்பு செட் ஓடிக் கொண்டிருந்தால் கிணற்று உரிமையாளர் குடும்பங்களில் இருந்தும் பலர் அங்கு குளிக்கச் சென்று விடுவார்கள். எந்தவித உடலுழைப்பும் இல்லாமல் நீர் கிடைக்கிறதே! இப்போது ஷவரைத் திருகி விட்டுக் குளிப்பது போல்! ஆனாலும் அங்கும் நமக்கான பாடம் காத்திருக்கும். குளித்த நீர் வீணாகாமல் தென்னைமரங்களுக்குப் பாய்ச்சப் படுகிறது. ஒரே நீர்; இரண்டு பயன்கள்!
சில சமயங்களில் கிணற்றில் நீர் வற்றி மண்டித் தண்ணீராக மாறி விடும். பம்பு செட்டையும் போட்டிருக்க மாட்டார்கள். அது போன்ற சமயங்களில் ஐயா (தாத்தா) எங்களைக் குளத்துக்கு அழைத்துச் செல்வார். அங்கு நீருக்கு எவ்வாறு மரியாதை கொடுப்பது என்பதைப் போகிற போக்கில் கற்றுக் கொடுப்பார். அதாவது நாம் கற்றுக் கொள்கிறோம் என்ற உணர்வு இல்லாமலேயே நமக்குள் அது விதைக்கப்படும். காலணியை போட்டுக் கொண்டு நீரில் இறங்கக் கூடாது. நீரில் எச்சிலைத் துப்பக் கூடாது. நீரில் இறங்கிக் குளித்துக் கொண்டிருக்கும் போது சிறுநீர் கழிக்கக் கூடாது. இன்னும் சொல்லப் போனால் குளத்துக்குள் இறங்குவதற்கு முன் கரையை விட்டுச் சில அடிகள் தூரத்திலேயே எங்களைச் சிறுநீர் கழிக்க வைப்பார் தாத்தா.
’நாம் குளிக்கும் போது வெளியேறும் அழுக்குப் படிமங்கள் குளமெங்கும் விரவிக் கிடக்கிறது. இந்த நீர் நிலைக்கு இத்தனைக் கட்டுப்பாடுகள் தேவையா?’ என்று சமயோசிதமாகக் கேள்வி கேட்டால் அதற்குத் தகுந்த பதிலைக் கூறுவார். ‘இந்த நீரை நாம் குளிப்பதற்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். மற்ற செயல்களெல்லாம் குளிப்பதை விட அசுத்தமானவை. நீரை நாற்றமடிக்கச் செய்து கெடுப்பவை. பலர் குளிக்கும் பொதுக் குளத்தில் நாம் அவ்வாறு செய்யக் கூடாது’ என்பார்.
காலைக் கடனை நீரோடாதக் காலங்களில் கண்மாய்க்குள் இறங்கிக் கழித்து விட்டு, அருகில் இருக்கும் சிறிய நீர் தேக்கங்களில் கால் அலம்பிக் கொள்வோம். இந்தப் பழக்கம் இன்றும் அங்கு பலரிடம் தொடர்ந்தாலும் நிறைய வீடுகளில் இப்போது கழிப்பறை கட்டி இருக்கிறார்கள். கண்மாய், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருப்பதால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத நிலை தான் என்றாலும் கூட இன்றையச் சூழலுக்கு இது ஏற்புடையதல்ல. என்றாலும், நகரங்களைப் போல் இம்மாதிரியான கிராமங்களில் கழிப்பறை கட்டினால் தண்ணீர் செலவு அதிகமாகவே இருக்கும். அதுவும், மேற்கத்திய பாணிக் கழிப்பறை என்றால் சொல்லவே வேண்டியதில்லை.
அங்கு குடிநீர் கிடைப்பதும் சுலபமல்ல. இன்றுள்ள வாட்டர் கேன் கலாச்சாரம் அப்போது இல்லை. இரண்டு கிலோமீட்டர் தூரத்திலிருந்து தலைச் சுமையாகக் கொண்டு வரப்படும் ஊற்றுத் தண்ணீர் தான் குடிக்கத் தகுதியுடைய நீராக இருந்தது. அதற்குத் தனிப்பட்ட மரியாதையே இருந்தது. அதுபோக மழைநீரை தாழ்வாரங்களில் காசிப்(செப்புப்) பானையில் பிடித்துச் சேமித்து வைக்கப்பட்ட நீரை பொத்தி பொத்திப் பாதுகாத்து வெகு நாட்களுக்குப் பயன்படுத்துவார்கள். செப்புப் பானைகளில் பிடித்துச் சேமித்து வைக்கப்படும் மழைநீர் வெகு நாட்களுக்குக் கெடாமல், புழு வைக்காமல் இருக்கும். இதில் ஒரு சுவையான விஷயம் என்னவென்றால், பெரும்பாலும் வீட்டு மருமகன்களுக்குக் கொடுப்பதற்காகவே இந்தச் சேமிப்புப் பயன்படும். இம்மாதிரியான தண்ணீருக்குத் தனிப்பட்ட மரியாதையே உண்டு. சில கட்டுப்பாடுகள் விதிப்பார்கள். உணவருந்திய பின் அந்த நீரில் கை கழுவ அனுமதி இல்லை. இன்றும் பெரும்பாலான கிராமங்களில் இது தான் நடைமுறை. பெருநகரங்களில் மழை நீரைப் பிடித்துப் பயன்படுத்தும் முறையை முற்றிலுமாக யாரும் கடைபிடிப்பதில்லை.
இம்மாதிரி அனுபவங்கள் எல்லாம் திருப்புத்தூர் வாழ்க்கையில் கண்டடைந்தது என்றால், எண்பதுகளில் கிடைத்த திண்டுக்கல் வாழ்க்கை அனுபவம் வேறு மாதிரியானது. முக்கியமாகக் கிணறுகளும் பம்புசெட்டுகளும் இங்கு இல்லை. இப்போதுள்ளது போல் ஆழ்துளைக் கிணறு வசதியும் வீடுகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை. உப்புத் தண்ணீர் அடிகுழாய் சில இடங்களில் மட்டுமே இருந்தன. நகராட்சிக் குடிநீரும் மாதத்துக்கு ஒரு முறை தான் அளிப்பார்கள். பிளாஸ்டிக் குடங்களும் புழக்கத்தில் இல்லை. பித்தளை அல்லது சில்வர் குடங்களைச் சைக்கிளில் கட்டிக் கொண்டு மூன்றிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் சிறு கிராமங்களுக்குச் சென்று தண்ணீர் கொண்டு வருவோம். பாறைப்பட்டி அந்தோணியார் தெருவில், தெருக் குழாயில் இரவு முழுக்கத் தூக்கம் இழந்து வரிசையில் நின்று இரண்டு குடம் தண்ணீர் கொண்டு வந்த காலத்தை இன்றும் திண்டுக்கல் வாழ் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். கஷ்டப்பட்டு உடலுழைப்பினால் கொண்டு வரப்பட்டத் தண்ணீரை வீடுகளில் சேமித்து, அதைச் சிக்கனமாகச் செலவு செய்த காலங்கள் தான் எங்களுக்கு நீரின் அருமையை உணர வைத்தது. இன்றும் நாங்கள் நீரை மிகவும் சிக்கனமாக, எந்தச் செயலுக்கு எவ்வளவு நீரைச் செலவழிக்க வேண்டும் என்ற தெளிவை உருவாக்கியது இது போன்ற அனுபவங்களே.
அதே எண்பதுகளில் நான் முதல் முதலாகச் சென்னைக்கு உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த போது, அவர் வீட்டில் மேற்கத்திய பாணிக் கழிப்பறையைப் பயன்படுத்தும் சூழல் உருவானது. அது ஒரு ஃப்ளெஷ் அவுட் கழிப்பறை என்பது தெரியாமல், தண்ணீரை கப்பில் எடுத்துக் கழிவுக் கோப்பையில் ஊற்றிக் கொண்டே இருக்கிறேன். என்றாலும், அது சுத்தமாகவில்லை. அப்புறம் உறவினர் தான் அதை எப்படிச் சுத்தப்படுத்துவது என்பதைச் சொல்லிக் கொடுத்தார். சுவிட்ச் போன்ற பிளாஸ்டிக் அமைப்பை அமுக்கியவுடன் கழிவுக் கோப்பையில் தண்ணீர் மிக அழுத்தமாகப் பரவி சுத்தம் செய்ததைப் பார்த்த போது, அந்த நவீனக் கண்டுபிடிப்பைக் கண்டு ஆச்சர்யப்பட்டதை விட, ஒரு முறை கழிவுக் கோப்பையைச் சுத்தம் செய்ய இவ்வளவு தண்ணீரைச் செலவழிக்க வேண்டுமா என்ற திகைப்பைத் தான் ஏற்படுத்தியது. இன்னும் அந்த நிகழ்ச்சி நினைவுப் படிமங்களிலிருந்து அகலாததற்குக் காரணம், நீர் சிக்கனத்தை மிகக் கண்டிப்பாக அப்போது கடைபிடித்ததே!
கஷ்டப்பட்டுக் கொண்டு வரப்பட்ட போது, நீரின் அருமை நமக்குத் தெரிகிறது. மேகம் பொழிந்த மழைநீரைத் தனக்குள் சேமித்து வைத்திருக்கும் பூமியைத் துளையிட்டு மின் மோட்டார்களால் உறிஞ்சப்பட்டு மிக இலகுவாக கிடைப்பதால் நீரின் அருமை நமக்குத் தெரிவதில்லை. உளவியல் நோக்கில் தான் இதை ஆராய வேண்டியிருக்கிறது.
ஒரு பட்டனைத் தட்டினால் போதும் மொட்டை மாடியில் நிறுவப்பட்ட கேன்களில் நிறைக்கப்பட்டுக் குழாய் மூலம் சமையலறைக்கும், கழிவறைக்கும் மிக எளிதாகக் கிடைக்கும் பொருளாக குழந்தைகள் மனத்தில் கட்டமைக்கப்படுவதால் தான் அவர்களுக்கு நீரின் அருமை தெரிவதில்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது. இன்றைய சிறார்களின் மனத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் ‘நீர் கிடைக்கும் வழி’ என்ற செயல்முறை இது தான். மிகவும் இலகுவானதாக அவர்களால் பார்க்கப்படுகிறது. இதில் என்ன கஷ்டம் இருக்கிறது என்ற மனோபாவம் உருவாகிறது. பணம் கொடுத்தால் போதும் தண்ணீர் வீடு வந்து சேர்ந்து விடுகிறது என்ற எண்ணமும் இதற்குக் காரணம்.
ஒரு லிட்டர் நீரில் செய்ய வேண்டிய வேலையை மூன்று லிட்டர் நீரை வாஷ்பேசின் குழாய் மூலம் செலவழிக்கிறோம். உதாரணமாகப் பல் துலக்கி வாய் கொப்பளிப்பது. இந்தச் செயலுக்கு இவ்வளவு நீரைத் தான் பயன்படுத்த வேண்டும் என்று நாம் நம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதில்லை. முதலில் பெற்றோர்களிடம் அந்த விழிப்புணர்வு இருக்க வேண்டும். நிலத்தடி நீரைப் பெறுவதற்கு எவ்வளவு மின்சாரம் செலவானாலும், மின் கட்டணம் செலுத்துவதற்குத் தயாராகவே இருக்கிறார்கள். தொலை தூரங்களிலிருந்து ஐநூறு லிட்டர், ஆயிரம் லிட்டர் கேன்களில் கொண்டு வரப்படும் நீருக்குப் பணம் செலவழிக்கத் தயாராகவே இருக்கிறார்கள்.
சென்னை நகரை வெள்ளம் சூழ்ந்த போது, வெள்ளம் சூழாத பகுதி வாழ் மக்கள் கூடத் தங்கள் வீடுகளை விட்டு அண்மை மாவட்டங்களிலுள்ள தங்கள் உறவினர் வீடுகளுக்குச் சென்றதற்குக் காரணம் தொடர்ச்சியான மின் தடை தான். மின்சாரம் இல்லாமல் இருளில் தவித்த சூழ்நிலை ஒரு பக்கம் இருந்தாலும் புழங்குவதற்குத் தண்ணீர் இல்லாத சூழ்நிலை தான் அவர்களை வெகுவாகப் பாதித்தது. ஊர் முழுக்க நீர் நிரம்பியும், வீட்டு உபயோகத்துக்கு நீர் இல்லாமல் சென்னை வாசிகள் மிகச் சிரமப்பட்டனர். இந்தச் சூழ்நிலையிலிருந்தாவது சில உண்மைகளைத் தெரிந்து கொண்டு, வரும் காலங்களில் நீர் சிக்கனத்தை நாமும் கடைபிடித்து வளர் இளம் சிறார்களையும் அதில் பங்கு கொள்ள வைப்பதற்கானத் தொடக்கமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.