கம்பனின் இரணியன்

(19 ஜூலை 2015 அன்று கலிபோர்னியா பாரதி தமிழ்ச் சங்கத்தில் பேசியதின் திருத்தப்பட்ட எழுத்து வடிவம்)

pakrishnan

 
எனது தந்தை கம்ப ராமாயணத்தில் ஊறித் திளைத்தவர் என்பது எனது நண்பர்களுக்குத் தெரியும். அவரிடம் நான் தில்லிக்குச் செல்லும் முன்னால் கம்பனில் அவருக்குப் பிடித்த பாடல்கள் என்ன என்று கேட்டேன். அவர் என்னிடம் “என்னடா, கேள்வி? தங்கக்காசு மாலைல எந்தக் காசு நல்ல காசுன்னு கேக்க முடியுமா?” என்றார். இருந்தாலும் நான் திரும்பத் திரும்பக் கேட்டதினால் சொன்னார். “எனக்கு யுத்த காண்ட பாடல்கள்  மிகவும் பிடிக்கும். அவன் கவித் திறனில் உச்சத்தில் இருந்தபோது எழுதிய பாடல்கள் அவை. சரஸ்வதி அவனுக்கு கைகட்டிச் சேவகம் செய்தாள். யுத்த காண்டத்திலும் எனக்கு இரணியன் வதைப் படலத்தில் இரண்டு பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். திருமகளைக் குறித்த பாடல்கள் அவை. ஒவ்வொரு வரியும் அவனது உள்ளத்தில் பொங்கும் பக்தியில், பேரன்பில் பிறந்தது. என்னைப் பொறுத்தவரை, சரஸ்வதியே கம்பன் வாயால் திருமகளைத் துதிக்கிறாள் என்று தோன்றுகிறது. அழியா அழகு பெற்ற பாடல்கள இவை” என்றார்.

பூவில் திருவை, அழகின் புனை கலத்தை,
யாவர்க்கும் செல்வத்தை, வீடு என்னும் இன்பத்தை,
ஆவித் துணையை, அமுதின் பிறந்தாளை,
தேவர்க்கும் தம் மோயை, ஏவினார், பாற் செல்ல
‘செந் தாமரைப் பொகுட்டில் செம்மாந்து வீற்றிருக்கும்
நந்தா விளக்கை, நறுந் தார் இளங் கொழுந்தை,
முந்தா உலகும் உயிரும் முறை முறையே
தந்தாளை, நோக்கினான், தன் ஒப்பு ஒன்று இல்லாதான்.

வெறும் வார்த்தைகளின் மாலைதானே, கவிதை எங்கு இருக்கிறது என்று எனக்கு அன்று தோன்றியது.   அவரிடம் கேட்ட போது, “என்னடா கவிதை? இந்த கம்யூனிஸ்ட் பிசாசு உன்னை பிடிச்சுண்டிருக்க வரை உனக்குப் புரியாது. ஒரு கவிஞன் கவிதை மலையின் சிகரத்தத் தொட்டு களைச்சுத் திரும்ப வந்து மனசு குளிர்ந்து இருக்கும் போது எழுதினதுடா இது. சாதாரணமானவனால எழுத முடியாது. வார்த்தை மாலையா? இப்படி ஒரு மாலை ஒண்ணு, யார் எழுதியிருந்தாலும் சரி, கொண்டுவா. நான் கால்ல விழுந்து சேவிக்கறேன்.” என்றார். எனக்கு அன்றைக்கு ஒன்றும் புரியவில்லை.  ஆனாலும் பாடல்கள் இத்தனை ஆண்டுகள் கழித்தும் என் கூடவே வந்து கொண்டிருக்கின்றன.  நமது மொழியின் அழகு எவ்வாறு மேதையில் கையால் மெருகு பெருகிறது என்பதற்கு இந்தப் பாடல்கள் உதாரணம்.
எல்லாம் சரி, கம்பன் ஏன் இரணியன் வதைப் படலத்தை எழுதினான்?  இந்தக் கேள்வி அவன் இராமயணம் எழுதி அரங்கேற்றிய போதே கேட்கப்பட்டது என்பது அவனது கதையில் கூறப்படுகிறது.
 
திருவரங்கத்தில் மேட்டழகிய சிங்கர் சன்னிதியின் முன்னால் அவன் இரணியன் வதைப் படலத்தைப் படிக்கும் போது, குறிப்பாக “திசை பிளந்து அண்டம் கீறச் சிரித்தது செங்கட் சீயம்” என்ற வரிகள் வரும்போது மேட்டழகிய சிங்கரே ஆரவாரம் செய்து கர்ஜித்த்தாகக் கதை.
கதை நமது கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை.  வான்மீகத்தில் இல்லாததை கம்பன் ஏன் எழுதினான்?
கம்பன் தனது இராமயணத்தில் வாமன அவதாரத்தைப் பற்றியும் எழுதுகிறான். “ நீல நிறத்து   நெடுந்தகை வந்து ஓர் ஆலமர் வித்தின் அருங்குறளானான்” என்பது அவனது வாக்கு.   வாமன அவதாரப் பாடல்களிலும் அவன் திருமகளைக் கொண்டு வந்து விடுகிறான்.
“உலகெலாம் கடந்த தாள் இணை திருமகள் கைதொடச் சிவந்து காட்டிற்றே”
மகாபலியைப் பற்றி முன்னால் பால காண்டத்தில்  எழுதியவன், அவனது கொள்ளுத்தாத்தாவாகிய ஹிரண்யகசிபுவைப் பற்றி பின்னால் யுத்த காண்ட்த்தில் எழுதுகிறான்.
 
கம்பன் வாழ்ந்த காலத்தில் நரசிம்மர் வழிபாடு பரவலாக இருந்திருக்க வேண்டும்.   “நாடி  நாடி நரசிங்கா என்று வாடிவாடும் இவ்வாணுதலே” என்ற நம்மாழ்வாரையும்” “அந்தியம்போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை” என்ற பெரியாழ்வாரையும், மற்றைய ஆழ்வார்களையும் கம்பன் நன்கு பயின்றிருக்க வேண்டும்.  வட மொழியையும் நன்கு கற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இன்றையத் தமிழகத்தில் சில மூடர்கள் கருதுவதுபோல வடமொழி பிராமணர்களின் தனிச் சொத்தாக என்றுமே இருந்தது கிடையாது. மூர்க்கர்களும் வெறியர்களும் ஒதுக்கித் தள்ளி விட்டதால் வடமொழிக்கும் தமிழ் நாட்டிற்கும் தொடர்பு இல்லை என்று சொல்லுவதைப் போன்ற அபத்தம் வேறு எங்கும் இருக்க முடியாது.
“தென்சொற் கடந்தான், வடசொற்கலைக்கு எல்லை தேர்ந்தான்” என்று அவனே இராமனைக் குறிப்பிடுவது போல, கம்பனும்  தென் சொல்லாகிய தமிழைக் கடந்தவன் வடசொல்லான சமஸ்கிருதத்திற்கு எல்லை தேர்ந்தவன்.  அவன் நிச்சயம் வடமொழியில் பாகவத புராணத்தைப் படித்திருக்க வேண்டும். பாகவத புராணமே தமிழ் நாட்டில் எழுதப்பட்டதுதான்.  நரசிம்மத்தைப் பற்றிச் பேசும் மற்றைய வடமொழி நூல்களையும் அவன் படித்திருக்க வேண்டும். கல்வியில் பெரியவன் கம்பன் என்ற வாக்கு வெறும் புகழ்ச்சியன்று.
கம்பன் எந்த நூல்களைப் படித்திருப்பான்?
வேதங்களில் விஷ்ணுவைப் பற்றி பேசப்பட்டிருந்தாலும்,  நரசிம்ம அவதாரத்தைப் பற்றி தெளிவாகப் பேசப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அறிஞர்கள் சதபதப் பிராமணத்தின் வரும் நமூசியின் கதை முன்னோடி என்று சொல்கிறார்கள். ரிக் வேதத்தில் விஷ்ணு  “பயங்கரமான, மலையில் ஒளிந்து திரியும் வன விலங்கு’ என்று ஓரிடத்தில் அழைக்கப்படுகிறார். மகாபாரதத்தில் நரசிம்மர் (பாதி சுலோகத்தில்) சுருக்கமாகக் குறிப்பிடப் படுகிறார். ஆனால் கோளரியாக அவர் தெளிவாக உருப் பெறுவது புராணங்களில்தான்.
அவற்றிலும் அக்னி புராணம், பிரம்மாண்ட புராணம், வாயு புராணம், போன்றவற்றில் ஹிரண்யகசிபு கொல்லப்படுவது பற்றி குறிப்பிடப்பட்டாலும், பிரகலாதன் குறிப்பிடப் படவில்லை என்று தெரிகிறது. இவற்றிற்கு பின்னால் வரும் பல புராணங்களில் பிரகலாதன் குறிப்பிடப்படுகிறான்.
பிரகலாதன் எவ்வாறு முளைத்தான்?
டெபரா ஸாய்ஃபர் தன்னுடைய Myths of Narasimha and Vamana  என்ற புத்தகத்தில் தெளிவாகச் சொல்கிறார்.

These three versions ( that is Skanda Purana, Bhagavata Purana and Vishnu Purna versions) represent the culmination of that slow transformation from a mythological mode of expression of the Narasimhavatara to a mythologically framed vehicle for the outpourings of Bhakti teachings, coming from the mouth of its most popular Puranic advocate, Prahlada. We have moved from the Narasimhavatara myth to, as the Vishnu Purana aptly titles it, Prahalata Charitra.  The new centrality is enforced in the Bhagavata Purana by the fact that the myth doesn’t appear in a sequence of avatara myths but  as a pick-me-up by Sukha to King Parikshit, whose faith in Hari is plagued by doubts.

கம்பன் தனது இரணியனையும் பிரகலாதனையும்  பாகவத புராணத்திலிருந்துதான் எடுத்திருக்கிறான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் கம்பன் மகாகவி, அவனது கைவண்ணத்தில் இந்தக் கதை எவ்வாறு மெருகேறுகிறது என்பதை வ. வே சு ஐயர்  அவரது  Kamba Ramayanam – A study  என்ற நூலில் தெளிவாக்க் குறிப்பிடுகிறார்:
Potanna in his Prahlata Charitra (Telugu) has not made any change in the story told by Sukha ( in Bhagavata Purana)…He has  added no new trait or colour to the original sketch. But Kamban’s imperial imagination must need remelt even the best minted coins of the other sovereigns in the realm of poetry and put its own impress and superscription on the reminted gold. And so,  we have in this episode Hiranya expanded to even more colossal proportions and a Prahalada more tender than the creations of Vyasa and Sukha.
ம பொ சி போன்றவர்கள் கம்பன் சைவன் என்பதை நிறுவுவதிற்கு மிகவும் முயன்றிருக்கிறார்கள். இவர்கள் இரணியன் வதைப் படலம் கம்ப ராமாயணத்தில் இடைச் சேர்க்கை என்கிறார்கள். ஆனால் கம்பனைச் சிறிது பயின்றவர்களுக்குக் கூட அவன் பரம வைணவன் என்பது தெளிவாகத் தெரிந்து விடும். ஆழ்வார்களின் பாடல்களில் ஆழ்ந்து குளித்தவன் அவன்.   தனது அவையடக்கத்தில்  சொல்கிறான்:
முத்தமிழ்த் துறையின் முறை போகிய
உத்தமக் கவிகட்கு ஒன்று உணர்த்துவன்;
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ?
கம்பன் மற்றொன்றையும் சொல்ல விரும்புகிறான்.  அவன் வாழ்ந்த காலம் பேரரசுக் காலம். சோழ மன்னர்கள் கொடி தென்னகம் எங்கும் பறந்த காலம். அதிகாரத்தின் கொடி அது. கொடி என்றும் உயரப் பறக்காது என்பதை ஆள்பவர்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் கவிஞனுக்கு இருந்திருக்க வேண்டும்.  “நாமார்க்கும் குடியல்லோம்” என்று சொன்ன கவிஞனின் வழித்தோன்றல் அவன். “ பூமிதனில் யார்க்கும் அடிமை செய்யோம், பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்” என்று பாடிய கவிஞனின் மூதாதை அவன். எல்லை இல்லா அதிகாரம் எவருக்கும்- இறைவனைத் தவிர – இல்லை என்பதை தனது கவிதை மூலம் சொல்ல விரும்பியிருக்க வேண்டும்.தன்னை பக்தன் என்று தெளிவாக அடையாளம் காட்டிக் கொள்கிறான்.  எனவே பக்தர்களில் தலை சிறந்தவனாக அறியப்படும் பிரகலாதன் கதையைத் தான் சொல்ல வேண்டும் என்று விரும்பியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அதை தன் கூற்றாக அவன் சொல்ல விரும்பவில்லை. மற்றொரு பெரும் பக்தனாக அறியப்படும் விபீஷணனின் வாயிலிருந்து பிரகலாதன் கதையை அவன் சொல்கிறான்.
.
iraniyanஇரணியன் வதைப் படலம் முக்கியமான இன்னொன்றைச் சொல்ல விரும்புகிறது என்று நினைக்கிறேன். அளவற்ற அதிகாரச் செருக்கு அழிவின் திசையில்தான் செல்லும் என்பதை கம்பன் திரும்பச் திரும்பச் சொல்கிறான்.  பால காண்டத்தில் அவன் அரசன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சொல்வது இது:
தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;
சேய் ஒக்கும். முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால். அறிவு ஒக்கும்;- எவர்க்கும் அன்னான். 

அரசன் எவர்க்கும் அன்னானாக, எல்லோருக்கும் உரியவனாக  இருக்க வேண்டும் என்பதில் அவன் திடமாக இருந்தான். ஆனால் இரணியன் தனக்கு மட்டும் உரியவனாக இருந்தான். அப்படி இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் அவன் மற்றொரு பெரிய தவறைச் செய்தான் என்று என் தந்தை சொல்வார். அவர் தீவிர வைணவர்.  ‘நானே கடவுள்’ என்று சொல்லிக் கொண்டு திரிந்தால், அதாவது  aham brahmasmi என்று தனக்குள் உணர்ந்தால் தவறில்லை மன்னித்து விடலாம். ஆனால் அதை ஊர் முழுவதும் சொல்லி தன்னை மற்றவர்கள் வணங்க வேண்டும் என்று  நினைத்தால் அவர்களுக்கு  நேரும் கதி இதுதான் என்பார் அவர்! அத்வைதிகளுக்கு இரணியன் வதைப் படலத்தை ஒரு எச்சரிக்கையாக கம்பன் அளிக்கிறான் என்று அவர் சொல்வார். நமக்கு இந்த விசிஷ்டாத்வைத அத்வைத சண்டை வேண்டாம். கம்பனுடைய பாடல்கள் என்ன சொல்கின்றன என்பதைப் பார்ப்போம்.
இரணியன் வதைப் படலத்தில் 170க்கும் மேலான பாடல்கள் இருக்கின்றன. மிகச் சில பாடல்களை மட்டுமே எடுத்துக் கொண்டு பேசப் போகிறேன்.
கம்பன் இரணியன் உருவத்தில் எப்படி இருப்பான் என்பதைச் சொல்லவில்லை. அவன் எவ்வாறு வரம் பெற்றான் என்பதைப் பற்றியும் அதிகம் சொல்லவில்லை. விபீடணன் இராவணனிடம் இரணியனைப் பற்றிப் பேசும் போது ‘நின் தரம் அலாப் பெரியோர்’ என்று குறிப்பிடுகிறான். இதற்கு உன்னைப் போல இல்லாவிட்டாலும் என்று பொருள் அல்ல. உன்னை விட பல மடங்கு ஆற்றல் மிக்க பெரியார் என்று பொருள். எவ்வளவு ஆற்றல் என்பதை மிக அருமையாகச் சில பாடல்களில் விளக்குகிறான்.
வேதம் கண்ணிய பொருள் எலாம் விரிஞ்சனே ஈந்தான்;
போதம் கண்ணிய வரம் எலாம் தரக் கொண்டு போந்தான்;
காதும் கண்ணுதல், மலர் அயன், கடைமுறை காணாப்
பூதம் கண்ணிய வலி எலாம் ஒரு தனி பொறுத்தான்
இரணியனுக்கும் வேத்த்தின் பொருளைக் கற்றுக் கொடுத்த்தே பிரமன் என்கிறான் கம்பன். பெற வேண்டிய வரமெல்லாம் பெற்று விட்டான். சிவன், பிரமன், ஐம்பூதங்களில் பலத்தை எல்லாவற்றையும் விடப் பலம் பொருந்தியவனாக இருந்தான்.
அவன் பெற்ற வரங்களையெல்லாம் அடுக்கி விட்டு, எங்கெல்லாம் ஆட்சி புரிந்தான் என்பதை கம்பன் ஒரு பாடல் மூலம் சொல்கிறான்.
மரபின், மா பெரும்புறக்கடல் மஞ்சனம் மருவி,
அரவின் நாட்டிடை மகளிரோடு இன் அமுது அருந்தி,
பரவும் இந்திரன் பதியிடைப் பகற் பொழுது ஆற்றி,
இரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும்.
 
அன்றைய ஏகாதிபத்தியத்தின் வார்ப்புருவாக் இரணியனைக் கம்பன் சித்தரிக்கிறான்.
தாமரைத் தடங் கண்ணினான் பேர் அவை தவிர,
நாமம் தன்னதே உலகங்கள் யாவையும் நவில,
தூம வெங் கனல் அந்தணர் முதலினர் சொரிந்த
ஓம வேள்வியின், இமையவர் பேறு எலாம் உண்ணும்.
 
இது விஷ்ணுவின் எட்டெழுத்து மந்திரமான ஓம் நமோ நாராயணாய சொல்வதை உலகம் தவிர்த்து விட்டு உலகங்கள் எல்லாம் இரணியன் பெயரையே சொன்னது என்கிறான் கவிஞன்.  ஓமத்தில் அளிக்கப் படும் ஹவிஸ் அனைத்தும் அவனிடமே சேர்ந்ததாம். எனது தந்தையார் தாமரைத் தடங்கண்ணினான் பேரவை என்று வாசிக்க வேண்டும் என்பார். அதாவது திருவைகுண்டம். எல்லோரையும் வென்றாலும் விஷ்ணுவை அவன் வெல்லவில்லை என்பதையே கம்பன் குறிக்கிறான் என்பார் அவர்.
மருக் கொள் தாமரை நான்முகன், ஐம்முகன், முதலோர்
குருக்களோடு கற்று, ஓதுவது, அவன் பெருங் கொற்றம்;
சுருக்கு இல் நான்மறை, “தொன்று தொட்டு உயிர்தொறும் தோன்றாது
இருக்கும் தெய்வமும் இரணியனே! நம!”என்னும்.
சூரியன் உதிக்கும் உதயகிரியும் அத்தமிக்கும் அஸ்தமன கிரியும் அவன் இரு காதுகளின் குண்டலங்கள் என்னும் அவன், இந்தப் பாடலில் நான்முகனும் சிவனும் தேவகுருவான பிரகஸ்பதியும் அவன் பெயரையே தினமும் சொல்கிறார்கள் என்கிறான். வேதங்களில் மறைபொருளாக இருக்கும் தெய்வமும் அவன் பெயரையே சொல்லிற்றாம்!
இவ்வளவு அதிகாரம் பெற்றவனுக்கு நேர்மாறாக ஒரு மகன். பிரகலாதனை கம்பன் வருணிக்கும் வரிகள் மிகவும் அழகியவை:
ஆயவன் தனக்கு அரு மகன், அறிஞரின் அறிஞன்,
தூயர் என்பவர் யாரினும் மறையினும் தூயான்,
நாயகன் தனி ஞானி, நல் அறத்துக்கு நாதன்,
தாயின் மன்னுயிர்க்கு அன்பினன், உளன் ஒரு தக்கோன்.
 
மறையினும் தூயனான் என்று கம்பன் சொல்வது மறை இரணியன் பெயர் சொல்வதால் களங்கப்பட்டுவிட்டது என்பதைக் குறிக்கிறது.
மறையிலும் தூயவனை தந்தை வேதம் பயிலக் கட்டளை இடுகிறான். அந்தணன் ஒருவனை அவனுக்கு ஆசிரியனாக நியமிக்கிறான்.
அந்தணன் “உன் தந்தை பெயரைச் சொல்லு, பாடத்தைத் தொடங்கலாம்” என்றதும்
அவன் செய்தது இது:
ஓதம் புக்கு, அவன், “உந்தை பேர்
    உரை “ எனலோடும்,
போதத் தன் செவித்தொளை இரு
    கைகளால பொத்தி,
“மூதக்கோய்! இது நல்தவம்
    அன்று “ என மொழியா,
வேதத்து உச்சியின் மெய்ப்பொருள்
பெயரினை விரித்தான்.
 
என்னையும் கெடுத்து உன்னையும் கெடுத்துக் கொண்டாயே என்று அலறும் அந்தப் பிராமணன் சொல்கிறான்:
முந்தை வானவர் யாவர்க்கும், முதல்வர்க்கும், முதல்வன்
உந்தை; மற்று அவன் திருப்பெயர் உரைசெயற்கு உரிய
அந்தணாளனேன் என்னினும் அறிதியோ? ஐய!
எந்தை! இப் பெயர் உரைத்து, எனைக் கெடுத்திடல்”என்றான்.
 
நான் பிராமணன், என்னை விட உனக்குத் தெரியுமா? என்று கேட்கிறான். பையன் மாறுவதாகக் காணோம் என்றதும் இரணியனிடம் ஓடுகிறான். அவனிடம் அந்தணன் கூறுவதைக் கேளுங்கள்:
 
‘அரசன் அன்னவை உரைசெய்ய, அந்தணன் அஞ்சி,
சிரதலம் கரம் சேர்ந்திடா, “செவித் தொளை சேர்ந்த
உரகம் அன்ன சொல் யான் உனக்கு உரைசெயின், உரவோய்!
நரகம் எய்துவென்; நாவும் வெந்து உகும்”என நவின்றான்.
 
நாராயணன் பெயரைச் சொன்னால் நரகத்திற்குப் போவேன். அது காதுக்குள் நுழைந்த பாம்பு போன்றது, நாக்கு வெந்து போகும் என்று அவன் சொல்கிறான்.
 
இங்கு கம்பன் அதிகாரமும் வாள் பலமும் முறைகளையும் மரபுகளையும் தலைகீழாக மாற்ற வல்லது என்பதைத் தெளிவாகச் சொல்கிறான். இரணியனை முழுமுதலாகக் கொண்ட வேதமோ, நாரயணனை முழுமுதலாகக் கொண்ட வேதமோ அரசு உதவியில்லாமல் படிக்க விரும்புவர்களிடம் சேர்வது மிகவும் கடினம் என்பதை இந்த இரணியன் வதைப் படல நிகழ்ச்சி காட்டுகிறது.  தர்மம் வெல்லலாம். ஆனால் எது தர்மம் என்பது பற்றியே ஒரு மயக்கம் இருக்கும் போது எது வென்றால் நல்லது என்பதைப் பற்றியும் மயக்கம் இருக்கும். அதிகாரத்தின் குடையின் கீழ்  நேரடியாக இயங்குபவர்களுக்கு இந்த மயக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்பதற்கு கம்பனின் இந்த அந்தணன் ஒரு சான்று.
இரணியன் மகனை அழைத்து அந்தணன் ஏன் அலறுகிறான் என்று கேட்கும் போது நான் ஒரு பெயரைச் சொன்னேன் அதனால் அலறுகிறான் என்று அவன் சொல்ல “என்ன பெயர் என்று இரணியன் கேட்க பிரகலாதன் கூறும் பதில் இது:
காமம் யாவையும் தருவதும், அப் பதம் கடந்தால்,
சேம வீடு உறச் செய்வதும், செந் தழல் முகந்த
ஓம வேள்வியின் உறு பதம் உய்ப்பதும், ஒருவன்
நாமம்; அன்னது கேள்: நமோ நாராயணாய
திருமங்கை மன்னனின் பெரிய திருமொழி பத்தாம் திருமொழியில் வரும் ‘நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே’ என்ற அடிகள் கம்பனுக்கு நிச்சயம் நினைவில் இருந்திருக்கும். இந்தப் பத்துப் பாடல்களிலும் இரணியன் வதை சொல்லப்படாததும் அவன் நினைவில் இருந்திருக்கும்.  ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பது – எந்த ஹோமமும் யாகமும் செய்ய வேண்டாம், அவன் பெயரே அதன் பலன்களை அளித்து விடும் என்பது பக்தியின் சாரம்.  இந்தப் பாடல் அந்தச் சாரத்தை அளிக்கிறது.
பிரகலாதன் மேலும் சொல்கிறான்:
உரை உளது உணர்த்துவது; உணர்ந்து கோடியேல், –
விரை உள அலங்கலாய்!-வேத வேள்வியின்
கரை உளது; யாவரும் கற்கும் கல்வியின்
பிரை உளது”என்பது மைந்தன் பேசுவான்:
 
வேத வேள்விகளின் முடிவு அவன் என்று சொல்லும் பிரகலாதன். கல்வி என்ற பாலிற்கு உரையிடுவது போன்றது நாராயணனின் நாமம் என்கிறான். அதாவது பாலின் சாரம் நெய். அது கிடைப்பது பாலை உரைப்பதால்.  அது போன்று கல்வியின் சாரம் நமக்கு கிடைக்க வேண்டுமானால் அது நாராயண சப்தத்தால் உரைக்க வேண்டும் என்கிறான்.
“விறகில் தீயினன் பாலில் படு நெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே”
இது அப்பர் பெருமான் வாக்கு.
மற்றொரு அழகிய பாடல் பிரகலாதன் மூலம் நமக்குக் கிடைக்கிறது
காலையின் நறு மலர் ஒன்றக் கட்டிய
மாலையின் மலர் புரை சமய வாதியர்
சூலையின் திருக்கு அலால், சொல்லுவோர்க்கு எலாம்,
வேலையும் திரையும்போல் வேறுபாடு இலான்.
 
சமயச் சண்டைகள் பல நடந்தாலும் எல்லோரும் சொல்வது அவனே என்கிறான் கம்பன். கடலுக்கும் அதன் அலைக்கும் வேறுபாடு இருக்கிறதா? அவன் கடல், அவனது வேறு வேறு வடிவங்கள் அலைகள். இது ‘தன்னுளே  திரைத்தெழும்தரங்க வெண்  தடங்கடல்,
தன்னுளே   திரைத்தெழுந்தடங்குகின்ற    தன்மைபோல்” என்ற திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்த விருத்தப் பாடலின் தாக்கத்தில் பிறந்தது. தனிமலர் மாலை ஆகுமா? பல பூக்கள் சேர்ந்து மாலையாவது போல, இறைவனைப் பற்றி அறிந்து  கொள்ள பல சமயங்களின் நோக்கும் ஞானமும் அனுபவங்களும் தேவை. இவையில்லாமல் வாதிடும் சமயவாதிகளை ‘pain in the stomach”  என்று கம்பன் ஒதுக்கித் தள்ளுகிறான்.
 
இரணியன் மிகுந்த கோபம் கொண்டு மகனுக்கு மிகுந்த கொடுமைகள் செய்கிறான் என்பதையும் அவன் அழியாததைக் கண்டு  நானே கொல்வேன் என்று புறப்படும் தந்தையிடம் பிரகலாதன் சொல்வது
சாணிலும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன்; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத் தன்மை
காணுதி விரைவின்”என்றான்; “நன்று”எனக் கனகன் நக்கான்.
 
‘கரந்தெங்கும் பரந்துளன்’ என்ற நம்மாழ்வார் வாக்கினை விரிவாக்குகிறது இந்தச் செய்யுள். ‘நீ சொன்ன சொல்லிலும் உளன்’ என்பது ‘final punch’.
இதற்குப் பதிலாகத்தான் இந்தத் தூணில் அவனைக் காட்டு என்கிறான் இரணியன். அதற்குப் பதிலாக பிரகலாதன் சொல்வது இது:

சொன்னவன் தொட்ட தொட்ட இடந்தொறும் தோன்றானாயின்
என் உயிர் யானே மாய்ப்பல்; பின்னும் வாழ்வு உகப்பல் என்னில்
அன்னவற்கு அடியேன் அல்லேன் என்றனன் அறிவின் மிக்கான்.

 
கம்பனின் திருமால் பக்தியை இந்தப்பாடல் எடுத்துக் காட்டுகிறது. பாதகங்களில் மிகக் கொடிய பாதகம் திருமாலைத் தொழாமை என்ற பொருள்படும்படி பிரகலாதனுடைய சூளுறவு அமைகிறது.  பரதனும் இதே போன்று ‘தழைத்த தண் துளவினோன் தலைவன் அல்லன் என்று அழைத்தவன்’ என்று சூளுறவு செய்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
 
‘நசை திறந்து இலங்கப் பொங்கி, “நன்று, நன்று!”என்ன நக்கு,
விசை திறந்து உருமு வீழ்ந்ததென்ன, ஓர் தூணின், வென்றி
இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்; எற்றலோடும்,
திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, செங் கண் சீயம்.
 
என்னுடைய தந்தையின் நண்பரான மகரபூஷணம் தமிழ் ஆங்கில இலக்கியங்களில் திளைத்தவர். அவர் இந்தப் பாடலின் கடைசியடி கம்பன் கவிதை நிகழ்த்தும் அற்புதம் என்று சொல்வார். சிரிப்பிலேயே திசைகள் திறக்கின்றன, அண்டம் கீறுகின்றது என்று கூறுவதன் மூலம் நரசிங்கத்தின் பெருவலியை ஒரு வரியில் உணர்த்தி விட்டான் கம்பன் என்று அவர் கூறுவார்.
ஆர் அடா சிரித்தாய்? சொன்ன அரிகொலோ? அஞ்சிப் புக்க
நீர், அடா, போதாது என்று, நெடுந் தறி நேடினாயோ?
போர் அடா? பொருதிஆயின், புறப்படு! புறப்படு!”என்றான் –
பேர் அடாநின்ற தாளோடு உலகு எலாம் பெயரப் போவான்.
இரணியன் சிரிப்பைக் கேட்டுப் பயந்ததாகத் தெரியவில்லை. மாறாக அவன் ஹரியை அடா என்று அழைத்து எள்ளி நகையாடுகிறான். ‘கடலில் ஒளிந்து கொள்ள முடியவில்லை என்று தூணைத் தேடுகின்றாயோ’ என்கிறான்
‘பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது, சீயம்; பின்னை
வளர்ந்தது, திசைகள் எட்டும்; பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது; அப் புறத்துச் செய்கை யார் அறிந்து அறையகிற்பார்?
கிளர்ந்தது; ககன முட்டை கிழிந்தது, கீழும் மேலும்.
 
சிங்கப்பிரான்  வானமென்னும் முட்டையைக் கீழும் மேலும் கிழித்துக் கொண்டு வளர்கிறான்.
“கேள், இது; நீயும் காண, கிளர்ந்த கோள் அரியின் கேழ் இல்
தோளொடு தாளும் நீக்கி, நின்னையும் துணித்து, பின், என்
வாளினைத் தொழுவது அல்லால், வணங்குதல் மகளிர் ஊடல்
நாளினும் உளதோ?”என்னா, அண்டங்கள் நடுங்க நக்கான்.
இரணியனோ, ‘உன்னை வணங்குவேனா, ஊடல் செய்யும் மகளிரைக் கூட அவர்களைச் சமாதானம் செய்யும் பொருட்டாக வணங்கமாட்டேனே! உன்னைக் கொன்று எனது வாளை வணங்குவேன்’ என்கிறான்.
இரணியனைச் சிங்கப்பிரான் வதை செய்த பின்னர். அவன் பிரகலாதனிடம் என்ன கைம்மாறு செய்வது   என்று கேட்கும் போது பிரகலாதன் சொல்வது இது:
முன்பு பெறப்பெற்ற பேறோ முடிவு இல்லை;
பின்பு பெறும் பேறும் உண்டோ ? பெறுகுவெனேல்,
என்பு பெறாத இழி பிறவி எய்தினும், நின்
அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள்”என்றான்.
இது வைணவ சித்தாந்தத்தின் சாரம் என்று கூறலாம். இரணியனைப் போல அவனது மகன் எனக்கு சாகா வரம் கொடு என்று கேட்கவில்லை. இறைவனின் அன்பைப் பெறும் பேற்றை அருளுமாறு கேட்கிறான். வைணவத்தில் வடகலை தென் கலை என்ற பிரிவுகள் இருப்பது உங்களுக்குத் தெரியும். இதில் வடகலை இறைவன் அன்பைப் பெறுவதற்கு சிறிதளவாவது நம்மிடமிருந்து முயற்சி செய்ய வேண்டும் என்கிறது. தென் கலை ஒரு முயற்சியும் வேண்டாம் அவன் அருள் பெறுவதை அவன்தான் தீர்மானிப்பான் என்கிறது. இங்கு பிரகலாதன் கேட்பது தென்கலை சம்பிரதாயத்தை ஒட்டியிருக்கிறது.
“கற்பார் இராமபிரானையல்லால் மற்றுங்கற்பரோ? புற்பா முதலாப் புல்லெறும்பாதியொன்றின்றியே நற்பால் அயோத்தியில்வாழும் சராசரம் முற்றவும் நற்பாலுக்குய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே” என்பது நம்மாழ்வார் வாக்கு. ஆசார்ய் ஹிருதயத்தில் (அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் எழுதியது) இந்தப் பாட்டைப் பற்றி இவ்வாறு  கூறப்படுகிறது:
புற்பா முதலா புல் எறும்பாதி ஓன்று இன்றியே நற் பாலுக்கு    உய்த்தனன்    என்றும்நாட்டை அளித்து உய்யச் செய்து என்றும், சேட் பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட் பால் அடைந்த என்றும் ஜ்ஞானம் லேசமில்லாத திர்யக் ஸ்தாவரங்களும் ப்ராதி கூல்யத்தில்  முதிர நின்ற சத்ருவுக்குக்கும் ஆம் படி பண்ண வல்ல சர்வ சக்தி யானவன்.
 
என் பாட்டி பெரியாருக்கு மறுபிறவியே கிடையாது என்பார். ‘சிசுபாலன் மாதிரி பெருமாள இந்தத் திட்டு திட்டறாரே. அவருக்கு நேரா வைகுண்டம்தான் என்று சொல்வார்.
 
ஈடு இவ்வாறு சொல்கிறது:
அற்பமான புல்லையும் எறும்பையும் பிரதானமாகச் சொல்லுவான் என்?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘புற்பா முதலா’ என்று தொடங்கி

இவற்றுக்கு ஒரு முதன்மை சொல்லுகிறார் அல்லர்; ‘ஸ்ரீராமபிரானுடைய திருவுள்ளத்துக்கு முற்பட்டன இவை,’ என்கிறார்1வெள்ளமானது தாழ்ந்த இடத்திலே ஓடுமாறு போலே. தாவரங்களில் தாழ்ந்தது புல்; சங்கமங்களில் தண்ணியது எறும்பு; இவை இரண்டனையும் ஒக்க எடுக்கையாலே. ஞானபலம் மோக்ஷம் என்றதனைத் தவிர்க்கிறது.ஞானம் உண்டாகையும் இல்லையாகையும் காரணம் அன்று.
பெருமாள் கிருபைக்கு இவற்றின் கர்மங்களால் வரும் உயர்வு தாழ்வுகள் காரணம் அன்று.’ என்கிறது.
கம்பன் நம்மாழ்வரை திரும்பத் திரும்ப்ப் படித்திருக்க வேண்டும்.
கம்பன் அப்பரையும் படித்திருக்கிறான். “புழுவாய் பிறக்கினும், புண்ணியா உன் அடி என் மனத்தே வழுவாதிருக்க வரம் தர வேண்டும்’ என்பது வாகீசர் வாக்கு.
பிரகலாதனையும் விபீஷணனையும் துரோகிகள் என்று தமிழில் வலிந்து வலிந்து எழுதப் பட்டிருக்கிறது. பாரதிதாசன் இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்று நாடகம் ஒன்று எழுதியிருக்கிறார். இந்தக் கதையில் காங்கேயன் என்று ஒருவர் சிங்கமுகம் அணிந்து கொண்டு இரணியனை எதிர்க்கிறான் இரணியன் அவனை ‘தூணை உதைத்தால் நீ வந்தாய். உன்னை உதைத்தால் தூண் வருமா? என்று கேட்டு உதைத்துக் கொல்கிறான். இரணியனை முதுகில் குத்திக் கொல்கிறார்கள். யார் என்பது  நினைவில் இல்லை. நாடகத்தைப் பார்க்கவில்லை. படித்திருக்கிறேன்.  படித்தால் தமிழ்த் துரோகியாக மாறிவிடலாமா என்ற சபலம் உங்களுக்குத் தோன்றலாம். சமீபத்தில் திரைப்படம் ஒன்றில் நரசிம்மர் வதைக்கப்படுகிறார். இரணியன் கதாநாயகியை மணக்கிறான் என்று ஞாபகம். பிரகலாதன் என்ன ஆனான் என்பது தெரியவில்லை. இவற்றைப் போன்ற படைப்புகள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றினால் அது புரட்சி அல்லது புதுமை என்ற மூட நம்பிக்கையில் விளைந்தவை. இவற்றையெல்லாம் சர்க்கஸில் கோமாளி கைகளால் நடந்து வருவதைப் பார்த்து கைதட்டி சிரித்து விட்டு மறந்து விடுவதைப் போல மக்கள் மறந்து போய் விடுவார்கள்.
நான் முடிக்கும் முன்னால் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். பல வருடங்களுக்கு முன்னால் நான் விசாக.பட்டினத்திற்கு அருகே உள்ள சிம்மாசலம் சென்றிருந்தேன்.  அது சிங்கப்பிரானுடைய தலம். தல புராணம் இந்த இடத்தில்தான் இரணியன் வதை நடந்தது என்று கூறுகிறது.  என் நண்பர் என்னுடன் இருந்தார். தீவிர மார்க்சீயவாதி.
மலை ஏறிப் போகும் வழியெல்லாம் கன்றுகள். காளங்கன்றுகள். பல காலொடிந்து நடக்க முடியாத நிலையில் இருந்தன. நண்பரிடம் கேட்டேன். கண்ணில் நீர்மல்கச் சொன்னார். “இவை எல்லாம் பெருமாளுக்கு  நேர்ந்து விட்டவை. பரமாரிக்க முடியாததால் இங்குள்ளவர்கள் கடவுளிடம் சேர்த்து விடுகிறார்கள்”
“இவற்றிற்கு என்ன ஆகும்?”
“சார், இங்கே கடைகள்ள மட்டன் மிகவும் மலிவு. நான் கவிச்சி சாப்பிடுவேன். ஆனால் இங்க சாப்பிட மாட்டேன்.’
பிறகு பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னார். ‘இது எல்லாம் இந்தக் கோவில்  நிர்வாகிகள் செய்யற வேலை. எல்லாக் கன்னுகளையும் கசாப்புக் கடைக்குத்தான் போகுது.  நரசிம்மர் திரும்ப வரணும் சார். இவங்க குடல உருவி மாலையா போட்டுக்கணும். நிச்சயம் வருவார் சார், நிச்சயம்”
உலகில் அநியாயம் இருக்கும் வரை, அதிகாரம் எந்தத்தடையும் இன்றி கோலோச்சும் வரை, மக்கள் சிங்கப்பிரானை எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பார்கள். இரணியன் கதை திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும். அநியாயம் அறவே இல்லாத,  அதிகாரம் அடங்கி, கைகட்டி வாய் பொத்தியிருக்கும் உலகம் உருவான பின்பும் இரணியன் வதைப் படலம் படிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். அதன் ஈடு இணையற்ற தமிழுக்காக.

3 Replies to “கம்பனின் இரணியன்”

  1. வேதத்தில் விஷ்ணு பற்றி இருக்கிறது ,மகாபாரதத்தில் நரசிம்மர் வருகிறார் என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்.அவைகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட இடைசெருகல்களாக இருக்கும் வாய்ப்புகள் குறைவா
    சிம்ஹாசலம் மட்டுமல்ல ஆந்திராவில் உள்ள அனைத்து விஷ்ணு ஆலயங்களும் புத்த விகாரங்கள் தான்.முழுக்க முழுக்க புத்த மதத்தின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் புத்த பிட்சுக்களை வெற்றி கொண்ட கதை தான் நரசிம்மர் கதை.கடவுள் எங்கே என்ற கேள்விகளுக்கு கேட்பவனை வந்து அழிப்பார் என்ற கதை தான் நரசிம்மர் கதை.மிக பழமையான புத்த விகாரங்கள் அதிக அளவில் இருந்த இடம் இன்றைய ஆந்திரம்.மலைகளில் இருந்த புத்த விகாரங்கள் அங்கு நரசிம்மர் கோவில்களாகவும் தமிழ்நாட்டில் முருகர் கோவில்களாகவும் மாற்றப்பட்டன.

  2. நரசிம்மரால் இரணியன் கிழிக்கப்படும் வகையில் செதுக்கபட்டிருக்கும் மிக பெரும்பாலான சிலைகளை பார்த்தால் புத்தர் உருவம் தான் தெரியும்.
    தன் தந்தையின் மதத்தை,மத நம்பிக்கையை ஏற்க மாட்டேன் என்று சுயமாக முடிவு எடுத்த சிறுவன் பிரஹலாதன் கதையை கொண்டாடி கொண்டே மத மாற்றங்களுக்கு எதிராக கூக்குரலிட ஹிந்டுத்வர்களால் மட்டுமே முடியும். பிரஹலாதனுக்கு இருந்த உரிமை மற்றவர்களுக்கு கிடையாதா
    ஆந்திர ஒரிசா கடல் ஓரங்களில் இருந்த அனைத்து புத்த விஹாரங்களும் விஷ்ணு கோவில்களாகவும் ,பெரும்பான்மையானவை நரசிம்மர் கோவில்களாகவும் மாற்றப்பட்டன.வருடத்திற்கு ஒரு நாள் மட்டுமே சிம்ஹாச்சலத்தின் மூலவரை பார்க்க முடியும்.மற்ற 364 நாட்களும் சந்தனத்தில் முழுவதும் மூடி வைத்திருப்பார்கள்.அந்த ஒரு நாளில் நான் சென்று மூலவரை பார்த்திருக்கிறேன்.புத்த விஹார் எப்படி பூரி ஜெகன்னாதராக மாறினாரோ அதே தான் இங்கும்.மூலவரும் புதர்,புத்த பிச்சு உருவம் தான்.தென் இந்தியாவில் இருக்கும் விஷ்ணு கோவில்கள் பெரும்பான்மையானவை புத்த விகாரங்கள் தான்

  3. பூரி ஜெகன்னாதர் சிலைக்கு மெருகு ஏற்ற அல்லது சிலையை நூறாண்டு நலமாக வாழ வைக்க (சிலையை நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி விடுவர் )பயன்படுத்தபடுவது கஸ்தூரி. நூற்றுக்கணக்கான கஸ்தூரி மான்களை கொன்று தயாரிக்கப்படும் பொருளினால் தான் கடவுள் சிலைக்கு அலங்கரிப்பு .கஸ்தூரி மான்களை கொல்வது தடை செய்யபட்டாலும் நேபாள அரசர்களின் புண்ணியத்தில் கஸ்தூரி கிடைத்து வந்தது. மன்னர் ஆட்சி போனதால் பூரி ஜெகன்னாதருக்கு கஸ்தூரி கிடைப்பதில் சிக்கல் என்பதால் பக்தர்களும் ,கோவில் நிர்வாகிகளும் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.கடவுள் சிலையின் அழகுக்காக கஸ்தூரி மானை கொன்றால் மோட்சம் ஆனால் உணவுக்காக மாடுகளை கொன்றால் நரகமா.
    http://timesofindia.indiatimes.com/…/articl…/4663712.cms

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.