கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்! – தளர்நடை நடவானோ!

தளர்நடை நடவானோ!
krishna
 
பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் ஆறாவது பருவமாக வருகைப்பருவம் அல்லது வாரானைப்பருவம் அமையும். இது குழந்தையை நடந்து வரும்படி அன்னையர் ஊக்குவித்து வேண்டிக்கொள்ளும் பாணியில் அமையும். பெரியாழ்வார் பாசுரங்கள் பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்கு முன்னோடி எனக்கருதப்பட்டாலும், பத்துப் பருவங்கள் என்னும் வரிசைக்கிரமத்தினுள் அடங்கவில்லை. வளரும் குழந்தையின் பல குறும்புகளையும் செய்கைகளையும், தான் கண்டுகளித்தபடி அவர் பத்துக்கும் மேற்பட்ட பல பருவங்களாகப்பாடி மகிழ்ந்துள்ளார்.
மேலும், பிள்ளைத்தமிழ் இலக்கிய முறைப்படி வரையறுக்கப்பட்ட பருவங்களின் நடப்புகள் அப்பருவத்தில் மட்டுமே நிகழ்வதில்லை; உதாரணமாக, பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் அம்புலிப்பருவம் என்பது ஏழாம்பருவமாக வைக்கப்பட்டுள்ளது. சிறு குழந்தையோ, அம்புலிமாமாவுடன், தான் அவனைக்கண்டு ரசிக்கத் துவங்கிய நாள் முதலாகவே ஒரு இணைபிரியாத நட்புறவை ஆயுள்பரியந்தம் ஏற்படுத்திக் கொண்டுவிடுகின்றது! ஆகவே, இதனை மேன்மேலும் ஆராயாமல், சொல், பொருள், கவிதை நயங்களைக் கண்டு களிக்கலாமே!
பெரியாழ்வார் அடுத்ததாகப் பாடிமகிழ்வது, சென்ற அத்தியாயத்தில் கூறியது போன்று கிருஷ்ணனின் கால்வண்ணத்தைப் பற்றித்தான்! தத்தித்தத்தித் தளர்நடை பயிலும் குழந்தையை அருகில் நின்று பார்க்கும் தாயின் உள்ளம் பாசத்தில் விம்முகின்றது. அந்தக்கால்களால் அவன் என்ன செயலெல்லாம் செய்யப்போகிறான், எங்கெல்லாம் செல்லப்போகிறான், அதை எவ்வாறெல்லாம் அழகுபடுத்திப் பார்க்கலாம் என்றெல்லாம் அவள் எண்ணங்கள் சிறகடிக்கின்றன. தன் குட்டனை, குழந்தையை, தத்தித்தத்தி நடக்கும் மயிலாக, அசைந்து நடந்து வரும் அழகு யானைக்குட்டியாக, துள்ளிவரும் மானாக, எனவெல்லாம் பார்க்கிறாள்.
இதனைப் பெரியாழ்வார் திருவாய்மொழியாக நமது மனக்கண்ணில் சித்திரமாகக் காணலாம்!
குட்டியானை ஒன்று அசைந்து அசைந்து நடந்து வருகின்றது. அதனிடமிருந்து மூன்றுவகை மதங்கள் பெருகி வழிகின்றன. அதன் காலில் இட்ட சங்கிலி ‘சலார் பிலார்’ என்று ஒலியெழுப்புகின்றது. அதன் இருபுறத்திலும் கட்டிவிடப்பட்ட பொன்னாலான மணிகள் இனிமையாக ஒலிக்கின்றன. மெல்ல ஆடியசைந்து அது நடை பயில்கின்றது. கிருஷ்ணன் தளர்நடை பழகுவது அவ்வாறு உள்ளதாம். உறுதியாக நடை பயில இன்னும் பழகாத குழந்தையானதால், தனது கால்களை மெல்ல வைத்து அதில் அணிந்துள்ள சதங்கைகள் ஆரவாரிக்க, இடையிலணிந்த அரைநாணின் மணிகள் பறைபோன்று ஒலிக்கத் தனது ஒப்பற்ற கால்களால் சார்ங்கபாணி எனும் இவன் இன்னும் தொடர்ந்து தளர் நடை நடக்க வேண்டும் என ஆசையாக எண்ணுகிறாள் அன்னை.
தொடர்சங் கிலிகை சலார்பிலார் என்னத்
தூங்கு பொன்மணி ஒலிப்ப
படுமும் மதப்புனல் சோர வாரணம்
பைய நின்று ஊர்வதுபோல்,
உடன்கூடிக் கிண்கிணி ஆர வாரிப்ப
உடைமணி பறைகறங்க
தடந்தா ளிணைகொண்டு சார்ங்க பாணி
தளர்நடை நடவானோ!
(பெரியாழ்வார் திருமொழி-8.1)
யசோதையின் மூத்தமகனான பலராமன் உயர்ந்தவர்கள் பாராட்டும் எல்லையற்ற புகழ் படைத்த சமர்த்துக் குழந்தை. அவன் இந்த வெண்ணெய் திருடுவது ஆகியனவற்றைச் செய்து ஆய்ச்சியரிடம் ஏச்சும் பேச்சும் வாங்குவதில்லையாம்! தம்பி கிருஷ்ணன் அவனோடு ஓடிப்பிடித்து விளையாடுகிறான். வெள்ளிமலை போன்ற நிறங்கொண்ட பலராமன் முன்னே ஓட, கறுத்த மலைக்குட்டி போன்ற இவன் அவனைப் பிடிக்க அவன் பின்னால் ‘மொடுமொடு’வென்று ஓடுகின்றான். இவன் தளர்நடை நடக்க மாட்டானோ என யசோதை ஆசைப்படுகிறாள். ஓடும் குழந்தை ஏன் தளர்நடை நடக்க வேண்டும்? அவன் ஓடவில்லை! பலராமன் வளர்ந்த சிறுவன்; தன் கால்களால் ஓடமுடிந்தவன். கிருஷ்ணனோ இன்னும் உறுதியாக நடைபழகவில்லையாதலால், தவழ்ந்த வண்ணமே ‘மொடுமொடு’வென அவன் பின்னால் அவனைத் துரத்திப்பிடிக்க ஓடுகிறானாம்! அழகான கருத்து; நுணுக்கமான விளக்கம்! குழந்தையின் விளையாட்டினை ரசிக்கும் அன்னையைக் காண்கிறோம்.
முன்நல் ஓர்வெள்ளிப் பெருமலைக் குட்டன்
மொடுமொடு விரைந்து ஓடப்
பின்னைத் தொடர்ந்தது ஓர்கருமலைக் குட்டன்
பெயர்ந்து அடியிடு வதுபோல்
பன்னி உலகம் பரவி ஓவாப்புகழ்ப்
பலதேவன் என்னும்
தன்நம்பி ஓடப்பின் கூடச் செல்வான்
தளர்நடை நடவானோ!
(பெரியாழ்வார் திருமொழி-8.5)
பெரியாழ்வாருக்கு கிருஷ்ணன் பரம்பொருள் எனத்தெரியும். அவன் மன்மதனின் தந்தை எனக்கூறி மகிழ்கிறார். இருப்பினும், உள்ளத்தில் ஊற்றெடுக்கும் தாயன்பால், தானே அவனுக்கு அன்னையாக மாறிக் கடல்நிறக் கண்ணனை ஆவிசோர பாசம்தளும்ப, ‘என் சிறுகுழந்தையின் இரு திருவடிகளுள் ஒரு உள்ளங்காலில் சங்குரேகையும் மற்றொன்றில் சக்கரரேகையும் பொறித்துள்ளன. அந்தத் திருவடிகளால் அவன் நடக்கும்போது அவன் அடிவைத்த இடங்கள் எல்லாம் வரைந்து வைத்ததுபோல அந்த சங்கசக்கர அடையாளங்கள் பதியுமாறு தளர்நடை நடக்கவேண்டும்,’ என எண்ணுகிறார். கிருஷ்ண ஜயந்தியின் பொழுது நாம் வரையும் குட்டிப்பாதங்களே நம் உள்ளத்தில் எத்தனை அன்பையும், ஆசையையும், ஆனந்தத்தையும் நிறைத்துவிடுகின்ற? உண்மையாகவே ஒரு குழந்தைக்கண்ணன் தன் உள்ளங்கால்களின் சங்குசக்கரச் சுவடுகள்பதிய வீடுமுழுவதும் ஓடியாடினால், மகிழ்ச்சி வெள்ளம் மேன்மேலும் பெருகாதோ? அதைத்தான் அன்னையின் நிலையில் நின்று ஆழ்வார் வேண்டுகிறார்.
ஒருகாலில் சங்கு ஒருகாலில் சக்கரம்
உள்ளடி பொறித்து அமைந்த
இருகாலும் கொண்டு, அங்கங்கு எழுதினாற்போல்
இலச்சினை படநடந்து
பெருகாநின்ற இன்ப வெள்ளத் தின்மேல்
பின்னையும் பெய்து பெய்து,
கருகார்க் கடல்வண்ணன் காமர்தாதை
தளர்நடை நடவானோ!
(பெரியாழ்வார் திருமொழி-8.6)
“கரிய அலைகடலில் தோன்றும் சந்திரமண்டலத்தைப் போன்றதும், சிவந்த கண்களையுடையதுமான கேசவனின் திருமுகத்தில் நெற்றிச்சுட்டி அசைந்தாடி ஒளிவீசும்படிக்கு, அவன் நடந்துவர வேண்டும். அலைகளை வீசுகின்ற கங்கையின் நீரைக் காட்டிலும் புனிதமான தீர்த்தபலம் தரும் சிறுநீரானது அவனுடைய சிறிய ஆண்குறியினின்றும் துளித் துளியாகச் சொட்டுமாறு அவன் தளர்நடை நடந்து வர வேண்டும்,” எனத் தாய் ஆசைப்படுகிறாள். இயற்கை உபாதைகளை இன்னும் கட்டுப்பாட்டினுள் கொண்டுவராத சிறுமகவு இவன். இருப்பினும் என்ன? அதுவும் தாய்க்குப் புண்ணிய கங்கை நீரினும் உயர்ந்ததாகவே தோன்றும் என்பது மிகையல்லவே? தாயின் அன்பும் எல்லையற்ற பாசமும் அவற்றையெல்லாம் பொருட்படுத்துவதேயில்லை.
திரைநீர்ச் சந்திர மண்டலம் போலச்
செங்கண்மால் கேசவன்தன்
திருநீர் முகத்துத் துலங்கு சுட்டி
திகழ்ந்து எங்கும் புடைபெயர,
பெருநீர்த் திரைஎழு கங்கையிலும்
பெரியதோர் தீர்த்தபலம்
தருநீர்ச் சிறுசுண்ணம் துள்ளம் சோரத்
தளர்நடை நடவானோ!
(பெரியாழ்வார் திருமொழி-8.10)
இவ்வாறெல்லாம் என் குழந்தை நடவானோ எனத் தாய் ஆசைப்படுகின்றாள்.
அரசர்கள் மேலும் (குலோத்துங்கன்) பெரியோர்கள் மேலும் (சேக்கிழார் முதலானோர்) புலவர்களால் பிள்ளைத்தமிழ் நூல்கள் இயற்றப்பட்டன. அவர்கள் புகழ், அழகு, மக்களுக்குச் செய்த நன்மைகள், கொடை, வீரம், ஆண்மை செறிந்த நடையழகு, கம்பீரம் எனப் பலவற்றை அவை பத்துப் பருவங்களில் வருணித்தன. இங்கும் கடவுளர் (திருமால், பார்வதியின் பல வடிவங்கள், முருகன்) மேல் பிள்ளைத்தமிழ் பாடப்புகுந்தவர்கள், அவர்கள் அடியார்களுக்காக செய்த அருட்செயல்கள், அவர்களது திரு அவதாரங்கள், குழந்தைப்பருவத்துக் குறும்புகள் முதலியனவற்றைப் பாடி மகிழ்கின்றனர்.
மகரக்குழைக்காதர் பிள்ளைத்தமிழிலிருந்து ஒரு வருகைப்பருவப் பாடல் தமிழினிமையும், சொல்நயமும் பொங்க அமைந்து கிருஷ்ணனின் (சத்யபாமையிடம் அவன் கொண்ட) காதல் செறிந்த வீரத்தையும், கால்வண்ணத்தையும் புகழ்கிறது! பாம்பின் மீது நடமாடி அவன் கொட்டத்தை அடக்கிய கிருஷ்ணனின் பிஞ்சுக் கால்களின் பெருமையையும் பரவுகின்றது.
“பண்டொருநாள் ஆலிலைமேல் அரங்கத்தின் (ஸ்ரீரங்கத்தில்) பாற்கடலில் கண்வளரும் / வளர்ந்த பச்சை முகில் வண்ணனான திருமாலே!
“நாகரத்தினத்தை மகுடமாகக் கொண்டு படமெடுத்த பாம்பின் (காளியனின்) கண்விழிகள் பிதுங்குமாறு வாசம்மிகுந்ததும் தாமரை போலும் சிவந்ததுமான உனது அடிகளைப் பெயர்த்து அதன் தலைமேல் வைத்துத் தள்ளி, அதன் வாலினைப் பிடித்துக் கொண்டு, நல்ல நெறி நிலைக்கும் வண்ணம் நாட்டி அதன் தலைமேல் நடனமிட்ட தலைவனே!
“கடல்சூழ் உலகம் முழுமையையும் உலக முடிவில் காப்பதற்காக உண்டு, தன் வயிற்றில் வைத்துக் காத்துப் பின் உமிழ்ந்தவனே! ஒளி பொருந்தியவனே! ஒளிரும் மரகதம் போன்றவனே! (பச்சை நிறத்தின் காரணத்தால் வந்த உவமை!),” என ஆனந்தக் களிப்பில் தாய் புளகாங்கிதம் அடைகிறாள்.
“வாள்போலும் நெற்றியையுடைய ஒரு பெண் (சத்தியபாமா) பண்டொருநாள் தனது உள்ளம் களி கொள்ளும் விதத்தில், உயர்ந்த வானின் முகட்டினைக் கிழித்தெழுந்து நின்றதும், வண்டுகள் ஆர்த்ததுமான (பாரிஜாத) தருவின் (மரத்தின்) மலர்தனைக் கொண்டளித்த திருமாலே வருகவே! மகரக்குழையணிந்தவனே! எனது இருகண்களின் மணியாக விளங்குபவனே! வருவாயாக!”
சத்தியபாமா ஆசையுடன் கேட்டதால் கிருஷ்ணன் பாரிஜாதமலரைத் தேவலோகத்தினின்று கொணர்ந்த தொன்மக்கதை இது.
தாயுள்ளம் விசித்திரமானது. வளர்ந்து வரும் தன் சிறுமகனோ மகளோ செய்த செயல்களில் பெருமிதம் அடைந்தும் இனியும் செய்யப்போகும் பெருமை வாய்ந்த செயல்களைப் பற்றிக் கனவுகண்டும், அவ்வாசைகளைப் பாடல்கள் மூலமாகக்கூறித் தன் உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தும் வெள்ளைமனம் அது. பிஞ்சுக் கால்களால் தன் சிறுகுழந்தை காளியன் எனும் பெரும் பாம்பின் மீது நடமாடியபோது அவள் உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும்? இருப்பினும் அவன் காளியனை வதம்செய்ததை அழகான ஒரு வருணனையாகத் தாய் கூறுவதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.
பண்டா லிலையிலரங் கத்துப்
பாதாழியிற் கண்டுயில் கூரும்
பச்சைப் புயலே பணா மகுடப் படப்
பாந்தளின் கண்பிதுங்க நறுந்
தண்டாமைரச் செஞ்சரண் பெயர்த்துத்
தள்ளிக் கடைவால் பிடித்து நெறி
தழைக்கும் படிக்கு நடம்புரிந்த
தலைவா கடல் சூழ் உலகமுழு
துண்டாதர வோடுமிழ்ந் தளந்த
வொளியே வொளிரு மரகதமே
ஒரு வாணுதல் பண்டுளங்களிப்ப
உயர்வான் முகடு கிழித்தெழுந்து
வண்டார் தருவின் மலர் கொணர்ந்த
மாலே வருக வருகவே
மகரக் குழையே யென்னிருகண்
மணியே வருக வருகவே
(மகரக்குழைக்காதர் பிள்ளைத்தமிழ்: வருகைப்பருவம்)
பிள்ளைத்தமிழால் மட்டுமின்றி, மற்ற இலக்கியங்களும் கிருஷ்ணனான அத்திருமாலின் திருவடிச் சிறப்பினை பெருமைபடப் பேசுகின்றன எனக்காணலாம்.
இளங்கோவடிகள் சிலப்பதிகாரம்- ஆய்ச்சியர் குரவையில் கூறுகிறார்:
“தேவர்கள் தொழுது வணங்கும் உனது திருவடியால் இரண்டடிவைத்து மூவுலகங்களையும் இருள்நீங்குமாறு செய்வித்து அளந்தாயே! அந்த அடிகளால் மேலும் பஞ்சபாண்டவர்களுக்காக துரியோதனாதிகளிடம் தூதுசென்றாயே! பின்பு நரசிங்கமாகிப் பகைவனை அழித்தனையே! இது என்ன மாயமோ! வியப்பினை உண்டுபண்ணுகின்றதே!
“அறியாமை நிறைந்த உள்ளத்தை உடையவனாகிக் கம்சன் செய்த வஞ்சக்கொடுமையை அழித்தான்; பின்பு வேதங்கள் அவனைத் தொடர்ந்துவர, பாண்டவர்களுக்காக, நான்கு திசைகளிலும் உள்ளோர் புகழும்வண்ணம் நூற்றுவரான கௌரவர்களிடம் தூதுசென்றான். திருவடிக்கமலங்களால் இத்தகைய செயல்களைச் செய்த கிருஷ்ணனை, திருமாலை, “நாராயணா,” எனப் போற்றாத நாவால் என்ன பயன்?” என்கிறார் இளங்கோவடிகள்.
திரண்டமரர் தொழுதேத்தும் திருமால் நின் செங்கமல
இரண்டடியால் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்த அடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்த அடி
மடங்கலாய் மாறு அட்டாய் மாயமோ மருட்கைத்தே!
மடந்தாழும் நெஞ்சத்து கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்ற
படர்ந்தாரணம் முழங்க பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா என்னா நாவென்ன நாவே
(சிலப்பதிகாரம்- ஆய்ச்சியர் குரவை- இளங்கோவடிகள்)
உந்திபறத்தல் எனும் விளையாட்டை விளையாடியபடி, சிறுமியர் ஆடிப்பாடுவதாக அமைந்த மற்றொரு அழகிய பெரியாழ்வார் பாசுரமும் உண்டு; இதிலும் கிருஷ்ணனின் திருவடித் தாமரைகள் போற்றப்படுகின்றன.
Krishna_carries_Nandas_shoes.256123310_std
ஸ்ரீராமனாகவும், கிருஷ்ணனாகவும் அவதரித்து, அவன் திருவடிகளால் செய்த கால்வண்ணங்களைப் பாடிப்பாடி மகிழ்கின்றார் பெரியாழ்வார். இதுவும் அரசனின் வீரச் செயல்களைப் புகழ்ந்துரைப்பது போன்றதே.
‘திருமுடி தாங்கி மூன்று உலகங்களையும் ஆண்டு எமக்கு அருள் செய்வாயாக,’ எனக் கானகம் சென்ற காகுத்தனைத் தொடர்ந்து சென்று வேண்டி நின்றான் அவன் தம்பி பரதன். ராமபிரானோவெனில் அவனுக்குத் தனது திருவடி நிலைகளை (பாதுகைகளை)க் கொடுத்து அருளினான்; அவனைப் பாடிப்பரவி உந்தீபற,’ என விளையாடுகின்றனர் சிறுமியர்.
‘காளியன் இருந்த நச்சுப்பொய்கை குழம்பிக் கலங்குமாறு அவனுடைய ஐந்து படங்களின் உச்சியிலும் நின்று நர்த்தனமாடினான் நம் கிருஷ்ணன். அவன் தனது திருவடிகளில் பணிந்ததும் அவனுக்கு அருளையும் செய்தான். அந்த நீலமணி நிறத்தவனின் கால்வலிமை மட்டுமன்றித் தோள்வலிமையையும் வீரத்தையும் பாடி உந்தீபற,’ என்பது இன்னொரு பாடல்.
முடியொன்றி மூவுலகங்களும் ஆண்டு,உன்
அடியேற் கருளென்று அவன்பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரதநம் பிக்கு,அன்று
அடிநிலை ஈந்தானைப் பாடிப்பற
அயோத்தியர் கோமானைப் பாடிப்பற.
காளியன் பொய்கை கலங்கப்பாய்ந் திட்டு,அவன்
நீள்முடி ஐந்திலும் நின்று நடஞ்செய்து,
மீளஅவனுக்கு அருள்செய்த வித்தகன்,
தோள்வலி வீரமே பாடிப்பற,
தூமணி வண்ணனைப் பாடிப்பற.
(பெரியாழ்வார் பாசுரம்- உந்தி பறத்தல்)
ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் என்ற மகான்,
‘அசைந்தாடும் மயிலொன்று கண்டால் நம்
அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்.
……………………………..
ஒருபாதம் வைத்து மறுபாதம் தூக்கி நின்றாட
மயிலின் இறகாட மகரக் குழையாட மதிவதனமாட
மயக்கும் விழியாட மலரணிகளாட………..’ என அப்பாதங்கள் ஆடும் நடனத்தை உன்மத்தராகிப் பாடிக்களிக்கிறார்.
கிருஷ்ணனுடைய பாதங்களில் ஆழ்ந்துவிட்ட லீலாசுகர் ஆனந்த பரவசமாகி அவற்றை வர்ணிப்பது படிக்கின்ற நமக்கும் களிப்பைத் தருகின்றது:
‘மூன்று உலகங்களுக்கும் இன்பத்தைத் தருகின்ற கிருஷ்ணன் தனது திருவடிகளில் ஒளிவிடும் ஆபரணங்களை அணிந்து கொண்டுள்ளான்; இவனுடைய திருவடிகள் காணக்காண உள்ளத்தைக் குளிர்வித்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகின்றன. இவை தெய்வீக லீலைகள் நிறைந்து விளங்குகின்றன.
‘வேறு புகல் இல்லாதவர்களுக்கு இத்திருவடிகள் ஒன்றே புகலிடமாக ( அசரண-சரணாப்யாம்) உள்ளன. குழலூதியபடி கிருஷ்ணன் இத்திருவடிகளால் நடந்து வருகிறான் (ஆயாதி),’ என நெகிழ்கிறார்.
த்ரிபுவன- ஸரஸாப்யாம் தீப்தபூஷாபதாப்யாம்
த்ருசி த்ருசி சிசிராப்யாம் திவ்யலீலாகுலாப்யாம்
அசரண-சரணாப்யா-மத்புதாயாம் பதாப்யா-
மய-மய-மனுகூஜத்-வேணு-ராயாதி தேவ:
(ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்:1.80)
கிருஷ்ணனின் கல்யாண குணங்களில் ஆழ்ந்துவிட்ட நாராயண பட்டத்ரி நாராயணீயத்தின் ஈற்றயல் ஸ்லோகத்தில் கிருஷ்ணனின் திருவடிகளை வழுத்தி ஆத்மார்ப்பண லயிப்பில் உருகிக் கரைந்து தன்னையே இழந்து விடுகிறார்.
‘உனது சரீரத்திலேயே யோகிகளால் மிகவும் விரும்பப்படுவன உனது திருவடிகளே! ஆதரவற்றவர்களுக்கு அவையே புகலிடம். அடியார்களுக்கு அவை வேண்டியன அனைத்தையும் தரும் கற்பகத்தரு. கிருஷ்ணா! குருவாயூரில் உறைபவனே! (பவனபுரபதே) கருணைக்கடலே! இந்த உனது திருவடிகள் எனது இதயத்தில் எப்போதும் பதிந்து நின்று, எனது துயரங்களை விடுவித்து என்னை மிக உயர்வான பேரின்பச் செல்வத்தில் ஆழ்த்தட்டும்.’
‘வேண்டிக்கொள்ள வேண்டிய’வற்றின் உச்சநிலை வேண்டுதல் இது!
பி. லீலா எனவொரு பாடகி இருந்தார். அவருடைய இனிய குரலில் உள்ளத்தை உருக்கும் இந்த ஸ்லோகத்தினைக் கேட்கும்போது பட்டத்ரியின் தேடுதலை, லயிப்பை ஒருவாறு புரிந்துகொள்ள இயலும். ‘ஒருவாறு’ என்றதன் காரணம், நாமே அந்த நிலைக்குச் சென்றால் தான் துல்லியமாக உணர இயலும். நாமெங்கே, பட்டத்ரி எங்கே?
யோகீந்த்ராணாம் த்வதங்கேஷ்வதிக ஸுமதுரம் முக்திபாஜாம் நிவாஸோ
பக்தாநாம் காமவர்ஷ த்யுதரு கிஸலயம் நாத தே பாதமூலம்
நித்யம் சித்தஸ்திதம் மே பவநபுரபதே க்ருஷ்ண காருண்யஸிந்தோ
ஹ்ருத்வா நிச்சேஷதாபான் ப்ரதிசது பரமாநந்த ஸந்தோஹலக்ஷ்மீம்
(நாராயணீயம்- 100-10)

(கிருஷ்ணலீலைகள் வளரும்)

One Reply to “கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்! – தளர்நடை நடவானோ!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.