தந்தையும் மகளும் போல் – இலக்கிய உறவு

ஆயுதபூஜை என்று கூறப்படும் சரஸ்வதி பூஜை அன்று திறனாய்வின் பிதாமகர் என்று பலரால் போற்றப்படும் திரு வெங்கட் சாமிநாதன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது எண்பத்திரண்டு. தம்  வாழ்வின் இறுதி மூச்சு வரை கலை, இலக்கிய விமர்சகராக அற்புதமான பணி ஆற்றினார். தமிழகத்தில் பலர் அவர் மறைவுக்கு  இரங்கல் தெரிவித்துப் பல இணையப்பக்கங்களில் எழுதிவருகின்றனர். சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியங்களும் அவருடைய விமசர்சனப்  பார்வைக்கு உள்ளாகியுள்ளன. அந்த நன்றிப்பெருக்கின் விளைவாகவே இந்த அஞ்சலிக்கட்டுரை இடம்பெறுகிறது.

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் ஆழமும் அகலமும் என்னும் என்னுடைய ஆய்வு நூல் மருதா பதிப்பக  வெளியீடாகச் சென்னையில் 2005 இல் வெளிவந்திருந்தது.  அவர் அந்த நூலைப் படித்துத் திண்ணையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையை என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பியும்  இருந்தார். அக்கட்டுரையில் என்னைப் பற்றியும், என்னுடைய நூலின் தேவை பற்றியும், என்னுடைய துணிவையும் பாராட்டியிருந்தார். அப்படியெல்லாம்  எளிதில் வெ.சா. பாராட்டிவிட மாட்டார்.  தகுதியான படைப்புக்கள் அவருடைய கண்களிலிருந்து  தப்பியதே இல்லை. அவருடைய உண்மையான பாராட்டுமொழிகள்  எனக்குப் பேரளவில்   ஊக்கம் தந்தன. இவ்விடத்தில் திரு.வெ.சா.அவர்களின் உயர்ந்த  பண்பை நாம் நினைவுகூர்ந்தே  ஆகவேண்டும். பெரியவர் சிறியவர் என்ற பேதம் இன்றி, நல்லதைப் பாராட்டும் அவர், முன்பின் அறிமுகம் இல்லாத எனக்கு மின்னஞ்சல் அனுப்பிவைத்தார். நான் நன்றி  தெரிவித்து அவருடன் தொலைபேசியில் பேசினேன். பின்னர் அவரைச்சந்திக்கும் பொருட்டுச்  சென்னை சென்ற போதெல்லாம்  மடிப்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்துக்குச்சென்று அவரைக் கண்டு அளவளாவுதல் வழக்கமான நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது.

ஒரு தந்தை மகளிடம் அன்பு காட்டுவதைப்போல என்னிடம் அன்பு காட்டினார். நான் முதலில் அவரைச் சந்தித்தபோது மாமியும் இருந்தார். என் மகனையும் அழைத்துச் சென்றிருந்தேன். உண்மையில் வெ.சா அவர்களும் அவர் மனைவியும் பொழிந்த  அன்புமழையில் திக்குமுக்காடிப் போனேன். image00சிங்கையிலிருந்து  தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்திச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்  எனது  நூலை  வெளியிடக்கூடாது என எதிர்ப்புக்குரல்  கொடுத்தது. சிங்கையில் இயங்கும் ஓர் அமைப்பு தனிநபர் வெறுப்பின் உச்சமாக இக்கேவலமான செயலைச் செய்த போதும் , தொலைபேசி வாயிலாகத் தொல்லைகள்  கொடுத்தபோதும்  டில்லி தமிழ் சங்கம் அந்த எதிர்ப்புக்களைக் குப்பையை ஒதுக்குவதுபோல் ஒதுக்கிவிட்டு என்னுடைய சிங்கப்பூர்த்  தமிழ் இலக்கியம் ஆழமும் என்னும் நூலை உறுதியுடன் மிகச்சிறப்பாக வெளியிட்டது.அப்போதைய அமைச்சர்களான திரு ரகுபதி, திரு வேங்கடபதி ஆகியோரை அழைத்திருந்தது. அந்நிகழ்வில் உரையாற்றும்படிப்     புலிநகக்கொன்றை என்னும் நாவலை எழுதிய திரு பி.. கிருஷ்ணன் ( P A krisnan ) அவர்களையும், திரு பென்னேஸ்வரன் அவர்களையும்  டில்லி தமிழ்ச்சங்கத்தின் அப்போதைய செயலர் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கேட்டுக்கொண்டார். தமிழ் முனைவர்கள் மீது நம்பிக்கையில்லாதிருந்த திரு பி..கிருஷ்ணனிடம்  திரு வெ.சா. அவர்கள்  முனைவர் எம் எஸ்  ஸ்ரீ லக்ஷ்மி மற்ற தமிழ் முனைவர்கள் போலில்லை; இவர் வித்தியாசமானவர். நீங்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்என்று கூறியதாக அவர் அன்றைய கூட்டத்தில் தெரிவித்தார். உண்மையை அவர் தெரிவிக்கும் பணியே அலாதியானது. தன்னடக்கம் மிக்க அவருடைய பண்பு எல்லாரிடமும் அமைவதில்லை.

ஒவ்வோர் ஆண்டும் அவரைச் சந்திக்கும்போதேல்லாம் அவர் என்னுடைய இலக்கிய முயற்சிகள் பற்றியும், சிங்கைத்தமிழ் இலக்கியம் பற்றியும், குறிப்பாக இளங்கோவன் பற்றியும் விசாரிப்பார். உண்மையில் சிங்கை இளங்கோவன் மீது ( நவீன நாடக ஆசிரியர், புதுக்கவிதை முன்னோடி )  அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அவரை வானளாவப் புகழ்ந்தார். எனக்கு மிக மகிழ்ச்சியாயிருந்தது. கடல்கடந்த முயற்சிகளை எல்லாம் அவர்  அறிந்து வைத்திருப்பது எனக்குப் பெருமகிழ்வு அளித்தது.அதே வேளையில் உண்மையான அறிவாளிகளைத் தமிழ் அமைப்புகள் ஓரங்கட்டுவதன் விளைவு குறித்து அவர் தம் ஆழ்ந்த  கவலையை   என்னிடம் தெரிவித்தார்.

எனது  அடுத்த ஆய்வுமுயற்சியான  புதுமைப்பித்தன் இலக்கிய சர்ச்சை 1951-52 என்னும் நூலுக்கு அவரிடம் அணிந்துரை வாங்கினேன். ஒருசிலர் நூலைப் படிக்காமல்  எழுதுவர். ஆனால் அவரோ நூலை ஆழமாகப் படித்துவிட்டு மனத்தில் பட்டதை ஒளிவுமறைவின்றி எழுதியிருந்தார். என்னுடைய நூலுக்கு அடுத்தபடியாகச்   சிங்கை மா. இளங்கண்ணனின் நினைவுகளின் கோலங்கள் என்னும் நூலுக்கு அவர் அணிந்துரை வழங்கினார். அவ்வுரையில் தமிழ்நாட்டில் அயலக எழுத்துக்களைப் பரஸ்பரம் பரிமாறிக்கொள்வதன் அவசியத்தைத் தெளிவுபடுத்தியிருந்தார். அதனைத்தொடர்ந்து ஜெயந்தி சங்கரின் சீனப்பெருஞ்சுவருக்குப்பின்   என்னும் நூலைப்பற்றி அவர் எழுதிய கட்டுரை சிங்கைத்தமிழ் இலக்கியத்துக்குப்  பங்களித்தோரைக் கௌரவிக்கும் முயற்சியில்  ஒன்றாகும். இதனைத் தொடர்ந்து கமலாதேவி அரவிந்தனின்  சூரியகிரஹணத்தெரு என்னும் சிறுகதைத் தொகுப்புப்  பற்றியும்  அவர் எழுதியிருந்தார்

சிங்கைத்தமிழ் இலக்கியத்தின் அரிய வாசகர் ஒருவரையும், சிங்கைத்தமிழ் எழுத்தாளர்களாகிய எங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்த  திறனாய்வுப்பிதாமகர் ஒருவரையும் இழந்து நிற்கிறோம். கலைத்தாயின் தவப்புதலவராகிய அவர் தம் தீட்சண்யமான பார்வை  கொண்ட  கண்களையும் தானமாக  அளித்துள்ளார் என்று கேள்விப்பட்டபோது அப்பிதாமகர் பூதவுடலை நீங்கினாலும் என்றென்றும் எங்கள் நினைவில் அழியாமல் வாழ்வார் என்று எங்களைத் தேற்றிக்கொண்டோம். சரஸ்வதியின் பரிபூர்ணகடாட்சம் பெற்ற அவர்  ஏறத்தாழ அறுபத்தைந்து ஆண்டுக் காலம்  படித்தும் எழுதியும் வந்தார். சரஸ்வதி பூஜை அன்று   கலைமகளே அப்பெருமகனாரைத் தம்மிடம் அழைத்துக்கொண்டாள்!.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.