குளக்கரை

[stextbox id=”info” caption=”அமெரிக்க முதலியத்தின் சிறப்பம்சம்”]

studentவிளையும் பயிரை முளையிலேயே கருக்குவது பற்றி இந்திய தார்மீக சிந்தனை கடுமையான விமர்சனம் கொண்டதாகத் தோன்றுகிறது. ஆனால் அமெரிக்க முதலியத்தின் சிறப்பம்சமே இதுதான். எப்படி புதுப் பயிர்களைக் கருக்குவது என்று ரூம் போட்டு யோசித்துத்தான் அவர்களின் பொருளாதாரத்தையே ‘வளர்த்திருக்கிறார்கள்’. ஒட்டகத்தைக் காட்டி சிகரெட் விற்க வேறு யாருக்குத் தோன்றி இருக்க முடியும்? இளம் பெண்கள் கடற்கரைகளில் மதுவருந்திக் கோலாகலப்படுத்துவதாகக் காட்டிக் கல்லூரி மாணவர்களை ஒழிப்பதை யோசித்துச் செய்து ஒழித்தும் இருக்கிறார்கள். அதே போல கிட்டாத கானல் நீரான பெரும் வளம் என்பதைப் படிப்பினால் அடையலாம் என்று ஒரு பொய்மையைப் பரப்பி, லாபத்துக்கு நடத்தப்படும் கல்லூரிகளில் சேரத் தூண்டி, கடனை அள்ளிக் கொடுத்து படிப்பு முடிந்து வெளியே வந்ததும் இரும்புச் சுத்தியலால் தலையில் அடித்துக் கடனைத் திருப்பச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். இந்த ஒபாமா நிர்வாகம் இந்தக் கொடுமையை ஆதரிக்கும் ஒரு நிர்மூடனைத்தான் கல்விக் காரியதரிசியாக இத்தனை ஆண்டுகள் நியமித்து இருந்தது.

[/stextbox]

[stextbox id=”info” caption=”பிரான்ஸின் ஃபாசிசம்”]

franceமேற்கின் அறிவுத் தாரகையும், இந்திய இடதுசாரிகளின் அபிமான பூமியுமான ஃப்ரான்ஸ் படிப்படியாகக் கீழிறங்கித் தரைக்கு வருகிறதா, இல்லை எப்போதுமே அதன் இயல்பான ஃபாசிசத்தை இப்போது வெளிப்படையாக நமக்கெல்லாம் காட்டுகிறதா என்று நாம் யோசிக்கலாம். இந்திய அறிவு ஜீவிகள் ஃப்ரான்ஸின் இந்த நடவடிக்கையைப் பார்த்து ஒப்பாரி வைப்பார்களா, ஓலமிடுவார்களா என்றும் நாம் யோசிக்க வேண்டி இருக்கும். அப்படி என்ன செய்திருக்கிறது ஃப்ரான்ஸ்.

உலக வெப்ப தட்ப நிலையின் கோளாறுகளுக்காக எதிர் நடவடிக்கை எடுக்கக் கோரிப் போராட்டம் நடத்தும் ‘பெருவீரர்களை’ ஃப்ரான்ஸ் வீட்டுக் காவலில் வைத்து அவர்கள் எந்தப் போராட்டமும் நடத்தவொண்ணாமல் ஒடுக்கி இருக்கிறதாம்.
இப்போது இந்திய அரசின் ஃபாசிஸத்தை உலகுக்கு டமாரம் அடித்துக் காட்ட முயலும் உலக இடதுசாரிகள் ஃப்ரான்ஸின் ஃபாசிஸத்தைத் தாக்குவார்களா என்றும் நாம் பார்க்கலாம். அனேகமாக அப்படி ஏதும் இராது. இருந்தாலும் ஏதோ அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், அழுவது போல அழு என்று ஃப்ரெஞ்சு அரசுக்குச் சொல்வார்களாயிருக்கும். ஃப்ரெஞ்சுப் பிரதமரைக் கைது செய்ய நியுயார்க் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பார்களோ என்று ஐயம் இருந்தால்… உங்களுக்கு உலக இடதுசாரிகள் பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்க வேண்டி வரும்.

[/stextbox]

[stextbox id=”info” caption=”அமெரிக்காவில் முஸ்லிம்களுடனான உரையாடல்”]

usஅமெரிக்காவில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான பொதுவெளி உரையாடல் வலுத்து வருகிறது. இதற்கு ஒரு காரணம் அடுத்த வருடம் அமெரிக்க அதிபர் பதவிக்கு நடக்கவிருக்கும் தேர்தலில் நிற்கத் தகுதி பெறும் முனைப்பு கொண்ட அரசியல்வாதிகளின் ஆர்ப்பாட்ட உரைகள்.  இனவெறி அரசியல் சூதாட்டத்தைப் பற்பல வருடங்களாக நடத்தி வரும் ஒரு கேபிள் தொலைக்காட்சி நிறுவனமும் (ரூபர்ட் மர்டாக் என்பாரின் கைவசம் உள்ள பல ஊடக அமைப்புகளில் இது ஒன்று), சில பத்திரிகைகளுமாக இப்படி ஒரு பதட்டத்தை உருவாக்குவதில் ஆதாயத்தைத் தேடுகின்றன. எதிராக நிற்கும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களின் ‘அமைதி, அமைதி’ என்கிற கூக்குரலை பொருட்படுத்தும் கூட்டம் அத்தனை இல்லை என்றுதான் தோன்றுகிறது. இது தெரிந்துதான் உலகைப் பிளந்தால் தமக்கு ஆதாயம் என்று கருதும் இஸ்லாமிசத்தின் பயங்கரவாதக் கூட்டமான ஐஸில் என்னும் கொலைகாரக் கும்பல் மேன்மேலும் கொலைகளைப் பற்பல நாடுகளில் நடத்துவதோடு பாரிஸிலும் சமீபத்தில் ஒரு 150+ பேர்களைக் கொன்று யூரோப்பியருக்குப் பீதியைக் கொடுத்திருக்கிறது. உலகில் பீதியையும், படுகொலைகளையும், யுத்தத்தையும் பரப்புவதில் ஏகபோக அதிபத்தியம் தமக்கெ உண்டு என்று இறுமாந்து இருந்த யூரோப்பியரும், வெள்ளையரும், அமெரிக்கரும் இன்று தமக்கு ஈடான பயங்கரச் சம்பவங்களை நிகழ்த்த இன்னொரு கூட்டம் எழுந்திருப்பதைக் கண்டு சற்று அயர்ந்திருக்கின்றனர் என்று சொல்லலாம். இந்த நிகழ்வுகளின் கூட்டு விளைவுகளில் முக்கியமானது அமெரிக்கரிடையே எழுந்து உயரும் இஸ்லாமியருக்கெதிரான கடும் சினம். ஆனால் வழக்கம்போல அமெரிக்க நடுநிலைவாதிகளிடமிருந்து சில தகவல்கள் திடீரென்று கசிந்து அமெரிக்கர் நடுவே சிறிதாவது யோசிப்பது அவசியம் என்று கருதுவாருக்கு ஒரு தடுப்பூசியைப் போட முனைகின்றன. அப்படி ஒரு தடுப்பூசி இந்தத் தகவல். அமெரிக்காவின் புகழ் பெற்ற சுதந்திரப் பெண் சிலை அமெரிக்கர்களால் அமெரிக்காவின் இயல்புக்கு ஒரு எடுத்துக்காட்டாகக் கருதப்படுவது. நலிந்தோருக்குப் புகலிடம் கொடுக்கும் நாடு என்பது அந்த இயல்பு என பெருவாரி அமெரிக்கர்கள் கருதுகின்றனர். இது உண்மையா, பொய்யா என்று ஆராய்வது இங்கு நோக்கமல்ல. மாறாக இந்த நம்பிக்கைக்கு எதிரான செயல்களை மேற் சொன்ன அரசியலாளர்கள் முக்கிய அரசியல் நடவடிக்கையாக முன்வைத்து ஆரவார உரைகள் நிகழ்த்துகிறார்கள் என்பதை மட்டும் சுட்டுவோம். இந்த மோசடி நடத்தைக்கு ஒரு எதிர்ப்பாக ஸ்மித்சோனியன் பத்திரிகை ஒரு சிறு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. முஸ்லிம்களைப் பார்த்தாலே அச்சம் கொள்ள வேண்டும் என்ற கருத்தைப் பரப்ப முனைந்து வெற்றியும் கண்டு வரும் ஐஸில் பயங்கரவாதத்துக்கு இரையாகாமல் இருக்கும்படி அமெரிக்கர்களைத் தூண்டுவது இந்தக் கட்டுரையின் நோக்கம். இது சுட்டுவது ஒரு வரலாற்று உண்மை, புதிர், அதே நேரம் அதிசயமும். அதுதான் என்ன?

இந்த சுதந்திரப் பெண்ணின் சிலை முதல் கட்டத்தில் ஒரு எகிப்தியப் பெண்ணின் உருவாகத்தான் கற்பனை செய்யப்பட்டிருந்ததாம். அந்த எகிப்தியப் பெண் யாராக இருக்கும்? ஒரு விவசாயியாம். அதுவும் ஒரு முஸ்லிம் பெண் வேறு. அந்தச் சிலையை சூயஸ் கால்வாயின் முனையில் வைப்பதாகத் திட்டம். அதுதான் சிலையின் முன்மாதிரிகளை வரைந்து வடிவமைப்புத் திட்டத்தை உருவாக்கிய ஃப்ரெஞ்சு சிற்பியின் கற்பனை. ஆனால் சிலைக்கான செலவு பெரும் செலவு என்று எகிப்திய அரசர் அதைக் கொடுக்க மறுத்த பின்னர், அமெரிக்காவின் சுதந்திரம் பெற்று நூறாண்டுகள் ஆன வருடக் கொண்டாட்டத்திற்கு அணியாக இந்தச் சிலையை மறு உருவமைப்பு செய்ய முன் வந்தார் இந்த ஃப்ரெஞ்சு சிற்பி என்று இந்தப் பத்திரிகை தகவல் அளிக்கிறது.
அதனால் அமெரிக்கச் சுதந்திரப் பெண்ணின் சிலை ஒரு முஸ்லிம் பெண் சிலை என்று சொல்வதாக நாம் முடிவு கட்ட வேண்டியதில்லை. ஆனால் அந்தச் சிலையின் கற்பனை வடிவு அப்படி ஒரு மூலாதாரம் கொண்டது என்பது மட்டுமே சொல்லப்படுகிறது. ஸ்மித்சோனியன் கட்டுரையைக் கீழுள்ள திரியில் காணலாம்.

[/stextbox]

[stextbox id=”info” caption=”அமெரிக்கா சுதந்திர தேவி சிலையின் வரலாறு”]

statue_of_liberty_13அமெரிக்க அரசியலும், பொருளாதாரமும், ஏன் பண்பாடுமே பெரும் செல்வந்தர்களின் சூதுகளில் சிக்கி அழிந்து வருகிற நிலை இன்று. அமெரிக்க ஏழை பாழைகளும், ஏன் மத்திய வர்க்கமுமே பற்பல விதங்களில் மூளை சலவை செய்யப்பட்டு இந்தச் செல்வந்தர்கள் மேன்மேலும் தம்மைச் சுரண்டிக் கொழுக்க வழி வகுக்கும் அரசியலுக்கே வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் மேற்படி சுதந்திரச் சிலைக்கு அமெரிக்க பெரும் செல்வந்தர்கள் ஏதும் நிதி உதவி அளித்தனரா என்று பார்த்தால் அவர்கள் ஒரு சல்லிக் காசு கொடுத்ததாகத் தகவல் இல்லை. பெரும்பங்கு ஃப்ரெஞ்சு மக்கள் கொடுத்த நிதி என்றும், மீதிப் பகுதி அமெரிக்கக் கருப்பர்களும், மிக நலிந்த நிலை வாழ்வைக் கொண்ட அமெரிக்க உழைக்கும் மக்களும், ஏராளமான அமெரிக்கக் குடியேறி மக்களுமே ஒரு டாலர் இரண்டு டாலர்கள் என்று நன்கொடை கொடுத்து இந்தச் சிலை உருவாகி, பீடமேற உதவி இருப்பதாக அடுத்த கட்டுரை தெரிவிக்கிறது. அன்றும் இன்றும் அமெரிக்க பெரும் செல்வந்தர்கள் ஒட்டுண்ணிகள் என்பது இந்தக் கட்டுரையில் தெளிவாகும்.

[/stextbox]

[stextbox id=”info” caption=”அமெரிக்கா ராணுவத்தின் நிலை”]

chinaஎந்த நாடும் நெடுங்காலம் தன்னிலையை இழக்காமல் சுதந்திரமாகவும், உறுதியானதாகவும் இருக்கத் தேவையான பற்பல குணங்களில் முக்கியமான ஒன்று தொலைநோக்கு. பொருளாதாரம், தொழில் நுட்பம், அறிவியல் என்று வாழ்வாதாரத்துக்கு அவசியமான நடவடிக்கைகளில் மட்டுமல்ல, பண்பாடு, கலை, தத்துவம், வரலாற்றியல் போன்ற வேறு பல நுண் சிந்தனைத் துறைகளிலும் அந்நாட்டினர் தொலை நோக்குடன் செயல்படுவது அவசியம். இவை எல்லாமே பிழைத்திருக்க அவசியமான பாதுகாப்பு. அந்தப் பாதுகாப்பை நாட்டுக்கு அளிக்கும் ராணுவம் தன் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற நிச்சயம் தேவையானது தொலை நோக்கு. இந்தத் தொலை நோக்கு எத்தனை தூரம் இந்திய ராணுவத்திடம் இருக்கிறது என்பது குறித்து நமக்கு அதிகம் தகவல் கிட்டுவதில்லை. ஒரு அரசு அமைப்பாக இருக்கும் இந்திய ராணுவம், அனேக இந்திய அரசு அமைப்புகள் போலவே தகவல் இல்லாப் புகை மூட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அமெரிக்க அமைப்புகள் தொடர்ந்து பொதுமக்களிடம் தகவல் கொடுத்த வண்ணம் இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன. அமெரிக்க அரசு உலகின் ஆகப் பெரும் ரகசிய அமைப்புகள் நிறைந்த ஒரு அரசு என்றாலும், அப்படி ஒரு மறைப்பு இல்லாதது போலவும், தன் இயக்கம் மக்களுக்கு முழுதும் தெரிவிக்கப்பட்டு அவர்கள் ஆதரவோடு நடப்பதாகவும் ஒரு பொதுவெளிப் பிம்பத்தைப் பாடுபட்டுக் கட்டி வைத்திருக்கிறது அமெரிக்க அரசு. அமெரிக்க ஊடகங்களில் ஏராளமானவை இந்தப் பிம்பக் கட்டுமானத்துக்குத் துணை போகும் சாதனங்கள்.
என்றாலும், ஒப்பீட்டில் அமெரிக்க ராணுவம் மட்டுமல்ல, அரசு கூட ஓரளவு தகவல் அளித்தலில் முனைப்பு காட்டுவதால் அமெரிக்க மக்களுக்கு இந்த அமைப்புகள் மீது ஓரளவு நம்பிக்கை கூடுதல் என்பது இத்தனை காலமாக அமெரிக்க வல்லரசுக்கு ஒரு வலுவான அடித்தளமாக இருந்திருக்கிறது. 1960களின் நடுவிலிருந்துதான் இந்த நம்பிக்கை சேதமடைந்து படிப்படியாக அமெரிக்கர்கள் தம் அரசை நம்பாத நிலைக்கு வந்து சேர்ந்திருக்கின்றனர். இந்தியருக்கோ அரசை நம்புவது என்பது துவக்கத்திலிருந்தே சாத்தியமாக இல்லை. காலனிய அரசின் நீட்சியாகவே இந்திய அரசு அமைந்தது ஒரு காரணம், அன்றிலிருந்து இன்று வரை ஒரு ஒட்டுண்ணி அமைப்பாகவே இந்திய அரசு இயங்கி வருவது என்பது இன்னொரு காரணம். இந்திய மக்களிடம் சரியான தகவலைக் கொடுப்பதற்கு இந்திய அரசு அமைப்புகள் என்றுமே முனைப்பு காட்டியதில்லை என்பது மூன்றாவது. இவற்றில் அனேக அமைப்புகளுக்குச் சிறிதும் இல்லாதது தொலைநோக்கு என்பது இந்திய அரசு அலுவலகங்களின் அவல நிலையைப் பார்த்தாலே உடனே புலப்படும். தம் ஊழியரின் அன்றாட அலுவலகச் சூழலைக் கூட நன்கு அமைக்கத் திராணி இல்லாத ஒரு அரசு மக்களின் வாழ்வை எப்படி நன்கு வடிவமைக்கப் போகிறது?
இன்று அமெரிக்க மக்கள் கிட்டத் தட்ட இந்திய மக்கள் தம் அரசைப் பார்க்கும் அதே நம்பிக்கையற்ற மனோபாவத்துக்கு வந்து சேர்ந்திருக்கின்றனர் என்று சொல்வது சற்று அதிகப்படுத்தலாக இருக்கும். ஆனால் நம்பிக்கையின்மை பெருத்து விட்டது என்பது உண்மை. இருந்தும் அமெரிக்க அமைப்புகளுக்கு இன்னும் தொலைநோக்கு என்பது இருக்கவே செய்கிறது. அமெரிக்க ராணுவம் குறிப்பாகத் தொடர்ந்து தன் தேவைகளை முற்படுத்துவதில் நிறைய முனைப்பு காட்டுவதாகத்தான் உலகில் பல நிபுணர்களும் கருதுகிறார்கள்.
இருந்தும் கீழே கொடுக்கப்படும் கட்டுரையாசிரியர் சுட்டுவதைப் பார்த்தால் அமெரிக்க ராணுவமுமே இன்று ஒரு முச்சந்தியில் நின்று எப்படி முன் செல்வது என்ற தவிப்பில் இருப்பது புலனாகிறது. தொடர்ந்து ஆயுதங்களை மேம்படுத்தும் தொழில் நுட்பத் திறனால்தான் அமெரிக்க ராணுவம் இன்னும் உலகில் முன்னணி ராணுவமாக இருக்கிறது. அதன் வீரர்கள் படிப்படியாக ஆயுதங்களுடைய உதவியாளர்களாக மாறிவருகிறார்கள். இப்படி ஆயுதங்கள் பெரும் எட்டு முன்னே எடுத்து வைக்க அவற்றிற்குத் தேவையாக இருப்பது என்ன, அந்த வகைக் கனிமங்கள் எப்படி பெருமளவு சீனாவின் கைப்பிடியில் உள்ள சுரங்கங்களில்தான் கிட்டும், அப்படிச் சீனாவுக்கு அமெரிக்க ராணுவத் தொழில் நுட்பத்தை அடகு வைப்பது அமெரிக்க ராணுவத்தை செல்லாக் காசாக்கி விடும் என்று புலம்புகிறார் இந்த அமெரிக்க ராணுவத் தொழில் நுட்பத் துறையில் ஆய்வு செய்பவர்.
மேலும் தகவல் அறியக் கட்டுரையை இங்கு படியுங்கள்.

[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.