செத்தும் கொடுக்க வைக்கும் சீரிய தொழில்நுட்பம்

படித்துவிட்டு அதிர்ச்சியோ, அருவருப்போ அடையாதீர்கள். மத, நம்பிக்கைகளைத் தாண்டி சிந்திக்க வேண்டிய விஷயம் இது. உலகெங்கும், மக்கள்தொகைஅதிகமாகிவருவதோடு, குளிர்தேசங்களில், இறந்தவர்களின் உடல்கள் எளிதில் மட்குவதில்லை என்ற தலைவலி வேறு.  உடல்களைத் தோண்டியெடுத்து,புதிய உடல்களைப் புதைப்பது இன்னும் வருத்தத்தை அளிப்பதாக இருக்கிறது. அதோடு இடம் கிடைப்பதும், பெரும்பொருட்செலவாவதும் ஒரு கவலையாகஉருவெடுத்து வருகிறது.

உடல்களின் மட்கும் தன்மை குறைந்தால் என்ன ஆகும்? என்பதற்கு ’வெல்ல கோவா’ எனப்படும் பழைய கோவா நகரம் ஒரு சான்று. 1700களின் இறுதிவரை வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த அந்நகரம், எங்கிருந்தோ வந்த ப்ளேக் போன்ற தீவிர தொற்றுவியாதியால் மக்கள் ஈக்களாக இறக்க, பெரும் இறப்பு விகிதத்தை திடீரென எதிர்கொண்டது. நகரில்  புதைக்க இடமின்றி, அடுக்கடுக்காகப் புதைத்ததில், உடல்கள் அழுகி, நிலத்தடி நீரை மாசுபடுத்த, கிணற்று நீரைப் பயன்படுத்தியவர்களும் இறந்தனர். போர்ச்சுகீசியர்கள், நகரைவிட்டே அகன்று, சில கிமீ தொலைவில் இருக்கும் பனாஜியைத் தலைநகராகக் கொண்டனர். கிட்டத்தட்ட 30 வருடங்களாகத் தலைநகர் கொஞ்சம்கொஞ்சமாகப் பெயர்ந்தது..இன்று வெல்ல கோவா பெரிய கிராமமாக மட்டுமே காட்சியளிக்கிறது.

corpஇறந்தவர்களின் உடலங்களைப் புதைப்பது போல சடங்குகள் நடத்தி, அதன்பின்  ஒரு ரசாயனக் கலவையில் விரைவில் மட்க வைத்து, அதனைகம்போஸ்ட் உரமாகப் போடும் வழிமுறையை ஒரு இயக்கமாகச் செயல்படுத்த சில அமைப்புகள் முன்வந்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று urbandeathproject.orgஎன்னும் அமைப்பு.   அன்பானவர்கள் இறந்தபின்னும் உரிய மரியாதையுடன் அமைதியாக நீளுறக்கத்தில் ஆழ, அதே நேரம், சுற்றுப்புறச் சூழல்பாதிக்காதவாறு ஒரு நல்லடக்கம் செய்ய ஏதுவாக ஒரு தொழில்நுட்பத்தை அவர்கள் கொண்டுவந்திருக்கிறார்கள்.

இது எந்த அளவிற்கு மக்கள் முதலில் ஏற்றுக்கொள்வார்கள் எனத் தெரியவில்லை மத உணர்வுகளும், பாசத்தின் வீச்சும் பலமாக இருக்கும் ஒரு மிகசென்ஸிடிவான சடங்கு, அறிவியல் துணை கொள்ளுமா? என்பது இப்போது கேள்விக்குறியாக இருப்பினும், ஏற்றுக்கொள்வதை விட வேறு வழியில்லைஎன்றே தோன்றுகிறது.

எரித்தல் என்ற சடங்கை எடுத்துக்கொள்வோம். பல மரக்கட்டைகள், மண்ணெண்ணெய், நெய், எண்ணெய், எனப் பல பொருட்களின் விரயம், அதோடு, புகைமண்டி, சுற்றுப்புறச் சூழலின் மாசு. மக்கள்தொகை அடர்ந்த வட இந்தியா, கங்கையில் கரைத்தல் என்ற நம்பிக்கை, கங்கையை மாசுபடுத்துவது நாம்அறிந்ததுதானே?  ஒரு நாளைக்கு முன்னூறு எரியூட்டுதல்கள் நிகழும் வாரணாசியில் வேண்டிய அளவுக்கு தீவிர எரியூட்டு நிலையங்கள் இல்லாததாலும், ஒரு உடல் எரிய ஏழு எட்டு மணி நேரம் ஆவதாலும், அவசரமாக உடலங்கள் கங்கையில் இழுத்துவிடப்படுகின்றன.

உடல் எரியும் நிலைகளை சற்று நிதானமாகப் பார்ப்போம். உடலில் வெளிப்புறப்பாகங்கள், சில உள்ளுறுப்புகள் 700 டிகிரி செண்டிகிரேடில் எரிந்துவிடுகின்றன.ஆனால், சில பகுதிகள், நீர் , கொழுப்பு நிறைந்தவை எரிய அதிக வெப்பம் தேவை. அவை பகுதி வெந்து, நச்சுப் பொருட்களை 700 டிகிரியில் வெளியிடுகின்றன.எனவே, இருமடங்கு வெப்பநிலையில் உடல் எரிக்கப்படவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.  இது, கட்டைகளால் எரிக்கப்படும் முறையில் அதிக வெப்பநிலை ,எரிபொருட்களால் பல படிகளில் ஏற்படுத்தப்பட்டுவிடுகிறது. எனவேதான், திறந்தநிலை எரியூட்டுநிலையங்களில் உடல்களின் எரிதல் முழுமையாகிறது. மின்எரியூட்டகங்கள் முதலில் சற்றே தோல்வியடைந்தது இந்த வெப்பநிலை தகறாரில்தான்.
மின் எரியூட்டு நிலையங்கள் குறைந்தபட்சம் ரூ 50 லட்சம் செலவில், மின் கட்டங்கள் ( Grid) இணைப்புகளுடன்  அமைக்கப்படுகின்றன. மின்சாரம் போதியஅளவில் இல்லாது போனால், சங்கடம்தான். மின் எரியூட்டகங்களில், முதலில் 700 டிகிரி செண்டிகிரேடில் எரிக்கப்பட்டு, அதன்பின் மிச்சமிருக்கும் பாகங்கள்1200-1500 டிகிரி செ. வெப்பநிலைக்கு உட்படுத்தப்படுகின்றன. முழுதும் எரிவதற்கு, பெருமளவில் மின்செலவும் ஆகிறது. இது சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பிற்குநெடுநாளைய நோக்கில் உகந்ததல்ல.
மின்சார எரியூட்டகங்களும் அதிகம் பயன்படாத நிலையில், சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு எரியூட்டும் கருவிகளை வடிவமைத்தார்கள். இவற்றில்கட்டைகளை வைத்து எரிப்பதும் , மின்சாரத்தை சேர்த்துப் பயன்படுத்தும் hybrid technology வெற்றிபெறுவதாக நம்பப்படுகிறது. இவ்வாறு புதிய எரியூட்டுநிலையங்களை வடிவமைப்பதில்  முக்கியமானவர் மேகாலயாவைச் சேர்ந்த பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காத காம்பெல் சூலை என்பவர். பொற்கொல்லராகபணிபுரியும் இவர் சுயமாக வடிவமைத்த எரியூட்டகம், சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் வெளிநிலைத் தகன நிலையங்களை விட 90% குறைவான புகையைவெளியிடுகிறது. எரியூட்ட ஆகும் மரக்கட்டைகளின் செலவு ரூ 300 மட்டுமே. இத்தோடு, முழுதும் எரிந்து முடிக்க ஒன்றரை மணி நேரத்திலும் குறைவானநேரம் போதும். சில எலும்புகளும், முழுதும் சாம்பலுமே கிடைக்கும், சூழல் பாதிக்கப்படாத இந்நிலையங்களை அமைக்க ரூ 15 லட்சம் மட்டுமே செலவாகிறது.காம்பெல் சூலைக்கு முதலில் அவரது சமூகத்தில் கடும் எதிர்ப்பு இருந்தது. அதனைப் பொறுமையாக எதிர்கொண்டு, ஒரு பைலட் முயற்சியாகச் செய்துபார்த்தார்கள். மழைக்காலத்திலும் பயன்படும் தொழில்நுட்பம் என்பதால் சமூகம் இதனை ஏற்றுக்கொண்டது.

சூரிய ஒளியின் சக்தியால் சடலங்களை எரியூட்ட சில ப்ராஜெக்டுகள் துவங்கப்பட்டன. இதில் சமீபத்தில் தில்லி டெக்னாலஜி யூனிவர்ஸிடியின் ஷெஃப்லர் ரிஃளெக்டர் கொண்டு சூரிய ஒளியைக் குவித்து எரியூட்டும் ப்ராஜெக்ட் இட கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. இதன் பைலட் ப்ராஜெக்ட்கள் வெற்றி பெறுமானால், அதிகம் சூரிய ஒளி கொண்ட , மரக்கட்டைகள் கிடைக்காத ராஜஸ்தான் போன்ற இடங்களில் பெருமளவில் பயன் தரக்கூடும்.

கங்கைக்கரையில் இதுபோன்ற எரியூட்டகங்கள் பல அமைக்கப்பெறுமானால், கங்கைச் சுத்தப்படுத்துவது சற்று எளிதாகும்.

சரி, புதைக்கும் சடங்குகள் கொண்ட சமூகங்களுக்கு?   முன்பே பார்த்த urbandeath project போன்றவை, உப்புகளும், வேதிப்பொருட்களுமான கலவையை உடல்மீது வைத்து, 60 டிகிரி செண்டிகிரேடு வெப்பநிலையில் சில மாதங்கள் வைக்கும் முறையை முன்வைக்கின்றன. இதில் உடல் அழுகும்போது வெளிவரும்நச்சுப் பொருட்களும், நுண்ணுயிரிகளும் அழிக்கப்படுகின்றன. துர்நாற்றமும் வருவதில்லை. அதோடு, முக்கியமாக, உடல் மட்கி , உரமாகிறது. இந்த உரத்தைவயல்களிலும் , வெளியிடங்களிலும் காடுகளிலும் தூவி தாவரங்கள் செழித்து வளர உதவ முடியும்.

இவ்வாறு தூவப்படும் உரங்களில் அதிக அளவு கனிம நச்சு இருப்பதாக புரளி கிளம்பி அமெரிக்காவை அச்சுறுத்த, அந்த உரங்களை ICPMS என்ற கருவி மூலம்  ஆராய்ந்த அறிவியலார்கள் , கனிம நச்சு என்பவை வெகுகாலமாக நாம் உண்ணும் உணவு, நீர், காற்று மூலம் உடலில் படிந்து செறிவடைகிறது, இது , உடல்மீது இடப்படும் ரசாயனககலவைமூலம் வருவதல்ல” என்பதாக  சமீபத்தில் அறிவித்தார்கள். எங்கள் கம்பெனியின் கருவி அந்த ஆய்வில்  பயன்படுத்தப்பட்டதாகக் கிடைத்த தகவல் இது.

இறந்தவர்கள் ஏதோ ஒரு வழியில் நம்மோடு தொடர்புகொள்கிறார்கள் என்ற நம்பிக்கையும் வளருமானால், தொழில் நுட்ப உதவி கொண்டு  புவி மேலும்சிலகாலம் பிழைக்கும்.

_______________________________________

உசாத்துணைகள்

http://www.urbandeathproject.org

http://nif.org.in/innovation/wood_based_low_cost_environment_friendly__cremetorium/306

http://rsisinternational.org/Issue4/01-09.pdf

2 Replies to “செத்தும் கொடுக்க வைக்கும் சீரிய தொழில்நுட்பம்”

  1. Though this topic often makes people uncomfortable, it is certainly worth exploring. If you are intrigued, you may want to read Stiff: The Curious Lives of Human Cadavers by Mary Roach for an in depth exploration of all the related aspects/fields. More detailed review can be found at:
    http://sundarvedantham.blogspot.com/2015/09/book-review-stiff-by-mary-roach.html
    My Last Will says my mortal remains can go to a lab for study/research.
    -sundar.

  2. Thanks a lot for the detailed , interesting blog on this, Sundar! I wish I could get that book here. The impact of such studies in Forensics is profound.
    NGC ( or Discovery?) showed a series of episodes on the open decay study of bodies in US. I have forgotten the place/ name of it. People donate their bodies for such studies. One interesting thing I got to learn.. blue files come when the bodies start releasing the malodorous compounds. So, presence of blue flies mean, the body was exposed to open air.
    Great to know you have taken such a generous stand. I know of an old woman who insisted in giving her body for local medical college in Gujarat. It is more of conviction and mental attitude.
    Sudhakar Kasturi

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.