வி ராம்நாராயணன் – ஒரு முதன்மை மனிதனின் கிரிக்கெட் நினைவுகள்

Spinner_Hyderabad_V_Ram_Narayan_Cricketer_Players_SPorts_Pitching

இந்தியா 1983ல் உலகக் கோப்பையை வென்று கிரிக்கெட் மிகப்பெரிய அளவில் பணம் கொழிக்கும் கேளிக்கைத் தொழிலாக உருவாவதற்கு முன் இந்தியாவின் சர்வதேச கிரிக்கெட் அட்டவணை இன்றுபோல இவ்வளவு நேர நெருக்கடி மிகுந்ததாக இருக்காது. 70களில் ரஞ்சி கிரிக்கெட் ஆட்டங்களுக்கே 20-30 ஆயிரம் பேர் மைதானத்துக்கு வருவதுண்டு. மாவட்ட அணிகளுக்கு இடையே நடக்கும் எஸ்.எஸ். ராஜன் கோப்பை போட்டிகளுக்கே கிரிக்கெட் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் வருவதுண்டு.ஒரு முக்கியமான காரணமாக தொலைக்காட்சி என்பது இல்லாமல் இருந்ததாக இருக்கலாம். ரஞ்சி ஆட்டங்கள் தவிர தமிழக இலங்கை அணிகளுக்கு இடையே மட்டும் நடைபெறும் எம். ஜே. கோபாலன் கோப்பை ஆட்டமும் உண்டு.இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணிகளுள் ஒன்றாக மாறும் வரை இந்தக் கோப்பைக்கான ஆட்டங்கள் நடைபெற்று வந்தது.
1974 அல்லது 75ல் என்று நினைக்கிறேன், கோவையில் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்குமான ஒரு போட்டி நடைபெற்றது. அப்போது இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணியல்ல. ஆனாலும் அந்த அணியின் பந்துல வர்ணபுர, வெட்டிமுனி, அனுரா டெனிகூன் போன்ற வீரர்கள் தமிழகத்தில் பிரபலம். மென்டிஸ் மற்றும் டயஸ் இருந்தார்களா என்று நினைவில்லை. இந்திய அணி என்றழைக்கப்பட்ட கலந்து கட்டிய அணியில் பிரதானமாக தமிழக வீரர்களே இருநதாலும், நட்சத்திர அந்தஸ்து பெற்ற விஸ்வநாத், சலீம் துர்ரானி உள்பட சில முக்கியமான, பிரபல இந்திய வீரர்களும் உண்டு. ரசிகர்கள் எந்தப் பக்கமிருந்து சிக்சர் கேட்டார்களோ அந்தப் பக்கம் எல்லாம் துர்ரானி சிக்சர் அடித்தது இன்னமும் நினைவில் உள்ளது.
அந்த ஆட்டத்தைப் பார்த்த பிறகு, ஓரிரண்டு ஆண்டுகள் கழித்து நான் முதன்முதலாக ஒரு ரஞ்சிக் கோப்பை பந்தயத்தைக் கோவையில் பார்த்தேன். ஆந்திரா- தமிழ்நாடு அணிகளுக்கிடையேயான ஆட்டம் அது. அந்த ஆட்டமே தமிழகத்தின் வி.வி. குமார் எனும் பந்து வீச்சாள மேதையின் கடைசி ஆட்டங்களில் ஒன்று என்பது அப்புறமாகத்தான் தெரிந்தது. அவரைவிட அன்று எனக்கு அதிகம் பிடித்த ஆட்டக்காரர்கள் வெங்கட்ராகவன், மைக்கேல் தால்வி, வி. சிவராமகிருஷ்ணன், பரத் ரெட்டி மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர்தான்.
70களின் ரஞ்சிக் கோப்பை பந்தயம் இப்போது போல இரண்டு குழுக்களாக பிரித்து விளையாடப்படவில்லை. மண்டல ரீதியாக விளையாடப்பட்டது. தென் மண்டலத்தில் மூன்று ஜாம்பவான் அணிகள்- தமிழ்நாடு, ஐதரபாத், மற்றும் கர்நாடகா. கேரளமும் ஆந்திரமும் நோஞ்சான் அணிகள்.கோவா அணி அப்போது இல்லை. போட்டி முதலில் சொன்ன மூன்று அணிகளுக்குள்தான். இவற்றில் ஏதாவது இரண்டு அணிகள்தான் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். தமிழ்நாடு அணி அப்படித் தகுதி பெறாவிட்டால் அந்த ஆண்டு சோபை குன்றிவிடும். இதில் வேடிக்கை என்னவென்றால், ஓரிரு ஆண்டுகள் தவிர பெரும்பாலும், தமிழக அணி கர்நாடகத்தை வெல்லும், ஐதரபாதிடம் தோற்கும். தமிழகத்தை வெல்லும் ஐதராபாத் அணி கர்நாடகத்திடம் தோற்கும்.
நான் கவனித்த தமிழ்நாடு- ஐதராபாத் ஆட்டங்களில் தமிழகத்தின் தோல்விக்குக் காரணமான ஒரு பந்து வீச்சாளர் வி.ராம்நாராயண். தமிழ்நாட்டுக்கு வெங்கட்ராகவனும், வி.வி. குமாரும் என்றால், கர்நாடகத்துக்கு பிரசன்னாவும், சந்திரசேகரும். ஆனால், ஹைதராபாத்துக்கு என்றால் என் நினைவில் வி.ராம்நாராயண் மட்டும்தான். கர்நாடகத்தின் பிரசன்னா, சந்திரசேகர் போன்ற ஜாம்பவான் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு தண்ணி காட்டிவிடும் தமிழக மட்டையாளர்களான வி. சிவராமகிருஷ்ணன், டி .ஈ. ஸ்ரீநிவாசன், ஜப்பார் ஆகியோர் ஏனோ ராம்நாராயணிடம் பதுங்கினர். அப்போது அவர் ஒரு இடதுகை சுழல் பந்து வீச்சாளர் என்றே நினைத்திருந்தேன். தமிழகத்துக்கு எதிராக நிறைய விக்கெட்டுகள் வீழ்த்தியதால் அவரை எனக்குப் பிடிக்காது. சிறிது காலம் கழித்தே, சொல்லப் போனால் அவர் விளையாட்டிலிருந்து ஒய்வு பெற்ற பின்னரே, அவர் ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர் என்று தெரிந்து கொண்டேன். அதை விட முக்கியமாக, அவர் என் மிக விருப்பத்துக்குரிய ஆட்டக்காரர்களின் ஒருவரான தமிழகத் துவக்க ஆட்டக்காரர் வி. சிவராமகிருஷ்ணனின் அண்ணன் என்பதையும் தெரிந்து கொண்டேன். சிவராமகிருஷ்ணனைப் போலவே ராம் நாரயணும் மிக அழகாக இருப்பார். சற்றே டெனிஸ் லில்லியின் சாயல் உண்டு.
இதையெல்லாம் இப்போது சொல்வதற்குக் காரணம், அந்த வி.ராம்நாராயண் எழுதியுள்ள “Third Man- Recollections from a Life in Cricket”, எனும் மிக சுவாரசியமான புத்தகத்தைப் படிக்க நேர்ந்ததுதான். இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நிறைய சாதனைகள் புரிந்த சச்சின், காங்குலி, காவஸ்கர், கபில்தேவ் ஆகியோரின் சுயசரிதைகளில் இருக்கும் சுவாரசியங்கள் ஒருவிதம். எவ்வளவோ முயன்றும், போதுமான திறன் இருந்தும், ஏனோ இந்திய அணியில் இடம்பெற முடியாத நூற்றுக்கணக்கான வீரர்கள் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலுமுண்டு. அவர்கள் சிந்திய வியர்வையும், கொடுத்த உழைப்பும் வெற்றி பெற்ற எந்தவொரு வீரர்களுடையதையும்விட குறைந்ததில்லை. விரும்பிய உயரத்தை அடைய முடியாமல் போய்விட்ட இந்த வீரர்களின் சுயசரிதையின் சுவாரசியம் வேறொரு விதம். சொல்லப்போனால் இந்திய அணியில் இடம் பெற்ற ஒவ்வொரு வீரருக்கும் இணையான திறன் பெற்ற நூற்றுக்கணக்கான ரஞ்சி வீரர்கள் உண்டு என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை இந்த இடத்தைக்கூட அடைய முடியாமல் போய்விட நேரும் வீரர்கள் ஆயிரக்கணக்கில் உண்டு என்பதும்.
இந்த வலி தரும் வேதனையை வைத்துப் பார்க்கும்பொழுது ராம்நாராயணனின் இந்தப் புத்தகம் மிக கசப்பான நினைவுகளின் பட்டியலாக மாறிவிடக்கூடிய அபாயத்தைத் தவிர்த்திருப்பதே அதன் முதன்மைச் சிறப்பு. வருத்தம் தெரிகிறது, ஆனால் கசப்பு இல்லை இவரது புத்தகத்தில். அதற்கான காரணங்கள் என்றால் கிரிக்கெட் ஆட்டத்தின் மீதான அவரது காதலும், அவரது குடும்பப் பின்னணியும், புகழ்பெற்ற மனிதர்களின் அண்மையும், அவர்களின் மென்மையான பக்கத்தையும், மேன்மையான குணநலன்களையும் இனம் கண்டுகொள்ளும் அவரது திறனும் என்று சொல்லத்தோன்றுகிறது. தவிர, இன்றைய தினங்கள் அளவுக்குப் பணம் அவ்வளவு வராத ஆட்டமாக கிரிக்கெட் இருந்ததும், அது அளிக்கக்கூடிய ஒரு விச்ராந்தியான மனநிலையும் விளையாட்டை விளையாட்டாகவே பார்க்கும் ஒரு மனநிலையும்கூட ஒரு காரணம் என்று சொல்லலாம்.
சென்னையில் மைலாப்பூருக்கும் தேனாம்பேட்டைக்கும் இடையே உள்ள ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் (இன்றைய வீனஸ் காலனி) அமைந்திருந்த அவரது வீட்டின் அருகே அவரது சகோதரர்களுடனும், பல கசின்களுடனும் ஆடி மகிழும் கிரிக்கெட் ஆட்டத்துடன் துவங்குகிறது ராம்நாராயணின் நினைவுகள். அந்தக்காலத்து சென்னையில் அவர் வாழ்ந்த பகுதிகளை அழகாக எழுத்தில் கொண்டு வந்துவிடுகிறார். அங்கிருந்து சென்னையின் பல்வேறு கிளப்களின் போட்டிகளில் விளையாடி பின் கல்லூரி அணிகளில் இடம் பிடித்து சென்னைப் பல்கலைக்கழக அணியில் இடம் பெறுவது வரையிலான போராட்டத்தை நல்ல நகைச்சுவையுடன் தருவதோடு, அந்த நாளைய சென்னை கிரிக்கெட் சூழலின் விரிவான ஒரு வரைபடத்தையும், பலதரப்பட்ட ஆளுமைகளையும், ரசனையோடு சொல்கிறார் ராம்நாராயண்.
1960களும் 70களும் பல்கலைக்கழக அணிகளில் இடம்பெறுவதே கனவாக இருந்த காலங்கள். இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான ரோஹின்டன் பாரியா கோப்பை மிகப்பிரபலமானது. அந்தக் கோப்பைக்கான ஆட்டத்தில் நிகழ்த்திய சாதனைகளின் அடிப்படையில்தான் சுனில் காவஸ்கர் 1971ல் மேற்கிந்தியத் தீவுகளோடு விளையாடுவதற்கான அணியில் தேர்வு செய்யப்பட்டார். பின் நிகழ்ந்தது வரலாறு.
அத்தகைய பெருமைபெற்ற ஒரு கோப்பைக்காக விளையாடும் சென்னைப் பல்கலைக்கழக அணியில் இடம்பெற்றதே ராமின் முதல் சாதனை. அங்கும் அவருக்கான இடம் அவ்வ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. ஏனென்றால், ராமின் கிரிக்கெட் வாழ்வு முழுவதும் அவருக்கு முன்னால்  நந்தி போல நின்ற வெங்கட்ராகவன் பல்கலைக் கழகங்களிருந்து வெளியேறும்வரை ராம் காத்திருக்க வேண்டியதாகிறது. இது அவரது கிரிக்கெட் வாழ்வில் மறுபடி மறுபடி நிகழும் விஷயமாக மாறிப்போவதே ராம் இந்திய அணியில் இடம்பெறாமல் போனதன் பின்னணி. தமிழ்நாட்டு அணியில் வெங்கட் என்றால் தென்மண்டல அணியில் பிரசன்னாவும் சேர்ந்து கொள்கிறார். போதாதற்கு சந்திரசேகர் வேறு.
பல்கலைக்கழக அணிகளில் பங்கு பெற்று பலரது கவனத்தைக் கவர்ந்து சென்னையின் முக்கியமான கிரிக்கெட் கிளப்புகளில் இடம் பெற்றாலும், தமிழக ரஞ்சி அணியில் இடம் பிடிப்பது ராமைப் பொருத்தவரை ஒரு கனவாகவே போய்விடுகிறது. காரணம் வெங்கட்டும், வி.வி. குமாரும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலை கிடைப்பதன் மூலம் ஆந்திரத்துக்கு செல்லும் ராம் அந்த அணிக்கு விளையாடக் கிடைக்கும் வாய்ப்பால் ஹைதராபாத் வந்து சேர்ந்து தன் இருபத்து எட்டாம் வயதில் ஹைதராபாத் ரஞ்சி அணிக்கு தேர்வாவது வரை உள்ள பகுதிகள் வலியும் சுவாரசியமும் மிகுந்தவை. இவை இந்தப் புத்தகத்தின் முதற் பகுதி.
ஹைதராபாத் அணிக்கு விளையாடும் அனுபவங்களை விவரிப்பதே இந்தப் புத்தகத்தின் இரண்டாவது பகுதி என்று சொல்லலாம். இதில் ஓரளவுக்கு ராமின் கனவுகள் நிறைவேறுவதைப் பார்க்க முடிகிறது. அவர் தன் கலையின் மதிப்பை இந்தியாவின் மிகத் திறமையான பல ஆட்டக்காரர்களோடுப் பொருத்திப் பார்க்க முடிகிறது. தவிர, பட்டோடி, ஜெயசிம்மா, அபித் அலி, அப்பாஸ் அலி பெய்க் போன்ற நட்சத்திர இந்திய ஆட்டக்க்காரர்களோடு தோளோடு தோள் உரசி விளையாடவும் அவர்களால் மதிக்கப்படுவதுமான ஒரு அற்புத வாய்ப்பைத் தரும் இந்தப் பகுதியில், ராமின் உற்சாகத்தையும், விளையாட்டின் சூழ்நிலையை வர்ணிக்கும் விதங்களில் ஆட்ட நுணுக்கங்களில் அவருக்கு இருக்கும் பரந்த அறிவுத் திறனையும் ரசிக்க முடிகிறது. தன் புகுந்தவீடான ஹைதராபாதுக்காகத் தன் பிறந்தவீடான தமிழ்நாட்டுடன் மோதும் ஆட்டங்களில் தன்னை நிரூபிக்க அவர் முனையும் கூடுதல் முனைப்பையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது, அந்த ஆட்டங்களில் எல்லாம் அவர் சோபிக்கவே செய்திருக்கிறார். நான் முன்னே சொன்ன மாதிரி அதுவே அவரை அன்றெல்லாம் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காமலிருக்கக் காரணம்.
இந்தப் புத்தகத்தின் மூன்றாவது சிறு பகுதி தன் கலையான ஆஃப் ஸ்பின் பந்து வீச்சைக் குறித்து அவர் விளக்கும் அற்புதமான பகுதி. ஒரு சுழல் பந்து வீச்சாளரின் அளவு தீர்மானிக்கப்பட்டது, திசை மட்டுமே தெரிவு என்ற பிரசன்னாவின் புகழ்பெற்ற வாசகத்தினை (For a spinner, length is mandatory and Line is optional) எடுத்துக்கொண்டு, அவர் அதை எந்த அர்த்தத்தில் சொல்லியிருக்க வேண்டும் என்று தன் அனுபவங்களின் அடிப்படையில் தடுப்பு வியூகங்களின் அமைப்பையும் விளக்கி ராம் எழுதுவது இளம் ஆஃப் ஸ்பின்னர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். தரமான ஆஃப் ஸ்பின்னருக்கான மிகச் சிறந்த ஒரு தடுப்பு வியூகம் என்பது தென்னிந்தியாவில்தான் உருவாகி வந்திருக்க வேண்டும் என்று ராம் சொல்கிறார். ஆங்கிலேயரின் விளையாட்டிற்கு தென்னகத்தின் கொடை என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ராம் சுழல்பந்து வீச்சை, கலை என்று சொல்வதில்லை, அதற்கு பதில் வித்தை (கிராஃப்ட்) என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்.
தன் சக ஆட்டக்காரர்கள் மற்றும் இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர்களைக் குறித்தும் ராம் எழுதுவது இந்த நூலின் நான்காம் பகுதி. இதில்தான் எத்தனை விதமான விளையாட்டு வீரர்கள்! நாம் முன்பே பார்த்திருந்த பட்டோடி, ஜெயசிம்மா, அபித் அலி, அப்பாஸ் அலி பெய்க் தவிர, கோவிந்தராஜ், நோஷிர் மேத்தா, கிருஷ்ணமூர்த்தி, அப்பாஸ் அலி பெய்கின் சகோதரரான முர்தாசா அலி பெய்க், நரசிம்ம ராவ் முதலான பல ஹைதரபாத் ஆட்டக்காரர்களைப் பற்றி அழகான சித்திரங்களைத் தருகிறார்.
பின் தனியாக, ஹனுமந்த் சிங், சலீம் துர்ரானி ஆகியோரைப் பற்றி எழுதிவரும் ராமின் எழுத்து, அந்தக் காலகட்டத்தின் தலைசிறந்த சுழல் பந்து விற்பன்னர்கள் பேடி, பிரசன்னா, வெங்கட், சந்திரசேகர் போன்றவர்களைப் பற்றி எழுதும்போது ஒரு தனி உயரத்தை அடைகிறது. குறிப்பாக சந்த்ரசேகரையும், அனில் கும்ப்ளேவையும் ஒப்பிட்டு அவர் எழுதியிருக்கும் பகுதி இந்த நூலின் சிகரம் எனலாம். அதேபோல், கிரிக்கெட் விளையாட்டின் வர்ணனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் சொற்தேர்வினைக் குறித்தும் ராம் வியந்து பாராட்டுகிறார். பேடியை ஆங்கிலத்தில், “A poetry in motion,” என்று சொன்னவரையும், மைக்கேல் ஹோல்டிங்கை, “The Whispering Death,” என்று சொன்னவரையும் சுட்டி, இருவரில் யார் சிறந்த வர்ணனையாளர் என்று வியந்து கேட்கிறார். கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வர்ணனையாளர்கள் என்று கருதப்படும் ஜான் ஆர்லட் (John Arlott), நெவில் கார்டஸ் (Neville Cardus) ஆகியோரையும் ராம் ரசித்து மகிழ்ந்திருக்கிறார்.
இந்தியச் சுழல்பந்து வீச்சாளர்கள் மட்டுமல்ல, ஆங்கிலச் சுழல்பந்து வீச்சாளரான (ஒரு பந்தயத்தில் மிக அதிக விக்கெட்டுகள் எடுத்த சாதனையை இன்னமும் தக்க வைத்துக் கொண்டிருக்கும் (19 விக்கெட்டுகள்)) ஜிம் லேக்கரைப் பற்றியும் ஒரு அழகான சித்திரத்தை ராம் கொடுத்திருக்கிறார். ராமைப் போலவே அசாத்தியமானத் திறமை இருந்தும் இந்தியாவுக்காக என்றுமே விளையாட முடியாமற்போன மிகச் சிறந்த சுழல்பந்து வீச்சாளர்களான ராஜீந்தர் கோயல், ஷிவால்கர், ராஜீந்தர் சிங் ஹான்ஸ் ஆகியோர் குறித்தும் இரண்டே இரண்டு டெஸ்ட் ஆட்டங்களில் மட்டுமே ஆடிவிட்டு, அதற்குப்பின் வாய்ப்பே தராமல் மறுக்கப்பட்ட, தமிழக லெக் ஸ்பின்னர் வி.வி. குமார் குறித்த சொற்சித்திரங்களும் உண்டு.
இன்றைய காலகட்டத்தில் நடைபெறும் டெண்டுல்கர்- திராவிட் விவாதத்தைப் போலவே, சொல்லப்போனால் இன்னும் அதிக வீரியத்துடன் 70களில் இருந்த விஸ்வநாத்-காவஸ்கர் விவாதத்தையும் குறிப்பிட ராம் தவறவில்லை. என்னதான் காவஸ்கரின் சாதனைகளை ராம் மதித்தாலும் அவரையே இதுவரை வந்த இந்திய மட்டையாளர்களில் தலைசிறந்தவர் என்று சொன்னாலும், பெரும்பாலான தென்னிந்தியர்களைப் போல காவஸ்கரைவிட விஸ்வநாத்தையே ராமுக்கும் அதிகம் பிடிக்கும் என்பதும் தெரிகிறது. ஒரு ரஞ்சி பந்தயத்தில் விஸ்வநாத்தின் விக்கெட்டை வீழ்த்தியதை பெருமகிழ்ச்சியுடன் விவரிக்கிறார்- அந்தக் காட்சிதான் இந்த நூலின் அட்டைப்படம்கூட.
Third Man என்ற தலைப்பே அழகானது. கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தத் தேர்ட் மேன் என்னும் இடத்தில் அதிகம் பந்துகள் வராது (நான்கு நாள் ஐந்து நாள் போட்டிகளில்; ஒரு நாள் மற்றும் 20/20 போட்டிகளில் அல்ல). அதனால் ஆட்டத்தில் இருந்து சற்றே விலகி நின்று பார்க்கும் ஒரு வாய்ப்பு அளிக்கும் இடம். ஒருவிதத்தில் ராம் அந்த இடத்தில் நின்று சொல்கிறார் எனலாம். இன்னொரு விதத்தில், அவர் ஆடிய காலத்தில் தென் மண்டல கிரிக்கெட் அணியில் பிரபலமான இரு ஆஃப் ஸ்பின்னர்களான பிரசன்னா, வெங்கட் இருவருக்குப் பின்னால் (தரத்தில் அல்ல, கிடைத்த வாய்ப்பில்) இருந்த மூன்றாவது ஆஃப் ஸ்பின்னர் ராம் என்பதைச் சொல்லும் தலைப்பு என்றும் கொள்ளலாம்.
ராமின் இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்படும் கிரிக்கெட் விளையாட்டு, இன்றைக்குச் சற்றும் சம்பந்தமில்லாத ஒரு காலவெளியில் விளையாடப்பட்ட அந்த ஒரு ரொமாண்டிக் காலத்துக்கு கூட்டிசெல்லும் கால யந்திரம் என்று சொல்லலாம். அதனை மேலும் சிறப்பாக்குவது, இழந்த, கிடைக்காத வாய்ப்புகளின், சோகங்களைவிட, கிடைத்த வாய்ப்புகளின் சந்தோஷங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் இது அமைந்திருப்பது. அவர் விவரிக்கும் காலங்களின் கிரிக்கெட்டை நேரில் கண்டவர்களுக்கு இது ஒரு அற்புதமான மலரும் நினைவுகள் அநுபவத்தைத் தரும். புதியவர்களுக்கு கிரிக்கெட்டின் களங்கமில்லாத ஒரு காலகட்டத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும், இந்தியாவின் கடந்தகாலத்துக்குரிய மகத்தான ஆட்டக்காரர்களையும் அறிமுகப்படுத்தும்.
நிச்சயமாக இன்றைய நாட்களைப் போலவே அன்றும் கிரிக்கெட் விளையாட்டில், அரசியல் உண்டுதான். அந்த இருண்ட பக்கங்களையும் ராம் சொல்கிறார். ஆனால் காலம் அந்தப் புண்களை ஆற்றியதன் விளைவாக மென்மையாகவே சொல்கிறார். சமயங்களில் ஒரு ஆட்டக்காரருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகளில் விளையாடும் வாய்ப்புகள் கிடைக்கும்போது அவரது தேர்வு மிகவும் முக்கியம் வாய்ந்ததாகிறது, அது சரியானதா என்பதைக் காலமே தீர்மானிக்கிறது. ராம் வாய்ப்பு கிடைத்தும் பெங்கால் அணிக்காக விளையாடாமல் மீண்டும் சென்னைக்குத் திரும்பி வர முடிவெடுத்தது அவ்வளவு சரியானதல்ல என்பதைக் காலம் சொல்கிறது. ஆனால் தேர்வு செய்யும் வாய்ப்பு ஒரு முறைதானே வருகிறது? இதையும் ராம் தனக்கே உரித்தான விலகி நின்று பார்க்கும் பார்வையில் நிதானத்தோடு சொல்கிறார்.
இறுதியாக, உயர்நிலைக் கிரிக்கெட்டில் தான் பயணம் செய்யக்கூடிய தூரம் இனி அதிகமில்லை என்பதைத் தெரிந்து கொண்டு மீண்டும் சென்னைக்கே வந்து கிரிக்கெட்டின் மீதுள்ள காதலினால் மட்டுமே தன் 49வது வயது வரை கிளப் கிரிக்கெட்டில் ஈடுபடுவதும், தன் நெருங்கிய உறவினரான பி.என். சுந்தரேசன் நடத்தி வந்த ஸ்ருதி இதழுக்கு ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டு செயல்படுவதையும் அதில் தனது மனைவி கௌரி- ஆம், கல்கியின் மகள் (ஆனந்தி) வயிற்றுப் பேத்தியும் எழுத்தாளருமான கௌரி ராம்நாராயண்தான்- அவர்களின் ஒத்துழைப்புடனும் பங்களிப்புடனும் ஒரு திருப்தியான வாழ்வினை மேற்கொண்டு வருவதனை விவரித்து முடிகிறது ராம்நாராயணின் இந்தப் புத்தகம்.
பொதுவாக முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் நூல்கள் மற்றொருவரால் எழுதப்படுபவை. ஆனால் ராம்நாராயணுக்கு அந்த அவசியமில்லை. அவரே ஒரு சிறந்த பத்தி எழுத்தாளர். தவிரவும், ஸ்ருதி இசை இதழின் ஆசிரியர, மற்றும் கிரிக்இன்ஃபோ இணையதளத்தில் கிரிக்கெட் பற்றித் தொடர்ந்து எழுதுபவர். அவரது ஆங்கில நடையின் சரளமும் அழகும் இந்த நூலின் சிறப்புகள். இந்த நூலுக்கு, தற்கால கிரிக்கெட் வர்ணனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களில் சிறந்த இருவரான, ஹர்ஷா போக்ளே மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோரின் முன்னுரைகள் குறிப்பிட்டுச சொல்லப்பட வேண்டியவை.
ராம் நாராயண் ஸ்ருதி இசை இதழின் ஆசிரியராவதில் அவரது அறியப்படாத இன்னொரு முகம் துலக்கம் பெறுகிறது. புத்தகத்தின் இறுதியில் கர்நாடக இசை மற்றும் ஹிந்தித் திரைப்பட இசை மீதான ஆர்வத்தையும், கிரிக்கெட் புத்தகங்கள் படிப்பதில் உள்ள ஆர்வத்தையும் சுருக்கமாக விளக்குகிறார். ராமின் தாயார், ருக்மிணி அவர்களே ஒரு தேர்ந்த கர்நாடக சங்கீதப் பாடகி. இள வயதில் ராமின் குடும்பத்தில் அனைவருக்குமே வாய்ப்பாட்டு கற்றுக் கொடுக்கப்பட்டாலும், கிரிக்கெட் விளையாடும் நேரமும் பாட்டு வகுப்பும் ஏககாலம் வந்ததால், கிரிக்கெட் விளையாடுவதையே தான் தேர்ந்தெடுத்ததாகக் குறிப்பிடுகிறார் ராம். இருப்பினும், சங்கீதத்தின் மீதான ஆர்வத்தையும் விடாமல் தொடர்ந்து வந்திருக்கிறார். பீட்டில்சிலிருந்து ரவிசங்கர், நௌஷத், மதன் மோகன் ஆகியோரின் ரசிகராகவும் தான் இருப்பதைச் சொல்கிறார் ராம்.மேலும், அவரது மனைவி கௌரி அவர்களும் ஒரு கர்நாடக இசைப் பாடகி என்பதும் இதில் அவருக்கு உதவியிருக்கிறது.
எழுத்தின் மீதான தன் ஆர்வத்துக்கு தன் நெருங்கிய உறவினர்கள் பலரின் புத்தக ஆர்வத்தைக் கண்டு தானும் கையில் கிடைத்த புத்தகத்தை எல்லாம் படித்ததாகச் சொல்கிறார் (அவை சாதாரணமானவை அல்ல- பெர்னார்ட் ஷா, பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், ஸ்டீபன் லீகாக், ஆகியோரின் புத்தகங்கள், இந்தப் புத்தகங்களில் அடக்கம்). இது தவிர, 1992ல் சென்னை வரலாற்றாசிரியர் எஸ். முத்தையாவின் அறிமுகம் கிடைத்ததையும் முக்கியமான காரணமாகச் கூறுகிறார்.
இந்த நூலின் இறுதியில், சோபர்ஸ் அருகில் அமர்ந்து அவர் வாயால் அவரின் சில கிரிக்கெட் அனுபவங்களைக் கேட்டதும், எம். எஸ். சுப்புலட்சுமி, செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர் ஆகியோரின் இசையை நெருக்கத்தில் அமர்ந்து கேட்பதற்கான நல்லூழ் அமையபெற்றதும் தனக்குக் கிடைத்த வரம் என்று ராம்நாராயண் சொல்லும்போது வரலாற்றில் தன் இடம் குறித்த கசப்பற்ற தன்னடக்கம் புலப்படுகிறது- ஆனால் வேறொரு காலத்தில், வேறொரு இடத்தில் ராம்நாராயண் மிகவும் கொண்டாடப்பட்டவராக இருந்திருப்பார். அதற்கான அத்தனை தகுதிகளும் அவருக்கு உண்டு.

V_Ram_Narayan_Cricketer_Players_SPorts_Pitching

_________________________________________

புத்தக விவரங்கள்:

காகித அட்டையில்: 380 pages/ பிரசுரகர்: Westland; Revised Edition edition (10 January 2015)/ மொழி: English /ISBN-10: 9384030821/ISBN-13: 978-9384030827

One Reply to “வி ராம்நாராயணன் – ஒரு முதன்மை மனிதனின் கிரிக்கெட் நினைவுகள்”

 1. அன்புள்ள சுரேஷ்,
  ஒரு நல்ல கட்டுரை படிப்பது என்பது நினைவு குளத்தில் கல்லெறிவது போல் (தயவு செய்து இந்த அரத பழசான நினைவு குள அலைகள் உதாரணத்தை மன்னியுங்கள்!) என்று எடுத்துகொண்டோமானால் உங்கள் புத்தக அறிமுக கட்டுரை, நல்ல கட்டுரை.
  கிரிக்கெட்டின் கொடூர விதிகளில் ஒன்று, பதினோரு பேர்தான் ஆட முடியும். எத்தனை நூறு திறமையாளர்கள் இருந்தாலும்.
  இப்போதாவது ஒருவரின் கிரிக்கெட் திறமையை வெளிக்காட்ட பல வழிகள் இருக்கின்றன.
  70, 80களில் அவ்வாறெல்லாம் இல்லை என்று நினைக்கின்றேன்.
  தாராபுரத்தில் எங்கள் கிரிக்கெட் அணிக் கேப்டன் தாஸ் அண்ணா என்று கூப்பிடுவோம். பழைய பாதி விரிப்பில்(half mat), ஒற்றைக்காலுக்கு மட்டும் pad வைத்துக்கொண்டு ஆடும் அணியில் அவர் சொல்லிக்கொடுத்த தடுப்பாட்டங்கள் – எப்படி ஒரு பந்தை short, good length, over pitch முடிவு செய்வது, கண நேரத்திற்கும் குறைவாக – ஆப் ஸ்பின் – என்ன தெளிவான அறிவு.
  நான் வெறுமே அதிகப்படுத்திச் சொல்லவில்லை. பின்னர் சென்னையில், இங்கே இங்கிலாந்தில் கண்ட க்ளப் ஆட்டக்காரர்களுக்கு நிச்சயம் குறைவில்லாதவர் அவர்.
  அவரை பின்னர் ஈரோடு – பவானி ரூட்டில் 3B பஸ்ஸில் ட்ரைவராக பார்க்க மனம் ஒப்பவே இல்லை.
  அந்த நாட்களில் உடுமலைப் பேட்டையிலிருந்து செந்தில் நாதன் என்ற ஒரு பையன் பெயர் நினைவிருக்கிறது. அந்த ஏரியாவில் நம்பிக்கை ஏற்படுத்திய பெயர்கள். காலப்போக்கில் கேள்விப்படவே இல்லை.
  இது போன்று எத்தனையோ வெளியே தெரியாது போய்விட்ட நட்சத்திரங்கள். கிரிக்கெட்டில் மட்டுமல்ல.
  நீங்கள் சொல்வது போல் கட்டுரையின் தலைப்பு Third man! என்ன ஒரு அழகான இடம், விச்ராந்தியாக மேட்சை கவனிக்க! (வெங்கட்ராகவன் ரிடையர் ஆன பின் அம்ப்யராக மாறினதிற்கு காரணம் “மேட்சை இன்னும் பக்கத்தில் பார்ப்பதற்குத்தான்” என்று விளையாட்டாகச் சொன்னதாக நினைவு!)
  மைக்கேல் ஹோல்டிங்கை, “The Whispering Death,” செம!
  நான் போத்தம் , அம்ப்யர் டிக்கி பேர்ட் இவர்களின் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். வெளிநாட்டவரின் அனுபவங்கள் நாமறியா உலகின் சுவாரசியமான பக்கங்கள் (சச்சின் பதின்ம வயதில் இண்டெர்நேஷனல் மேட்ச் ஆட ஆரம்பிக்கும் சமயங்களில் டிக்கி பேர்டை ஒரு ஷார்ஜா மேட்சில் சந்தித்து ஆட்டோ க்ராப் வாங்கியிருக்கிறார்! “எப்படிப்பா விளையாட வந்தாய்?” “தலைமைஆசிரியரிடம் பர்மிஷன் வாங்கிக்கொண்டு ஸார்!”)
  (1985 செமி பைனலில் இங்கிலாந்து ஜெயித்ததை இந்தியப்பத்திரிக்கைகள் மிராக்கிள் என்று எழுதியதிற்கு இவருக்கு கோபம்!)
  போத்தம்- இன்னும் ப்ரமாதம். இங்கிலிஷ் காரர்களின் நாசூக்கான (போலி) பிம்பத்தை உடைக்கும் போத்தம்…
  இப்படி மிகப்ரபலங்களின் அனுபவங்களைப் படிப்பது ஒரு சுவாரசியமெனில் வெளி வராத நட்சத்திரங்களின் இன்னொரு பக்கத்தைப் பார்ப்பது இன்னொரு வகை.
  நன்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.